கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

தொகுப்பாக்கமும் சமகால உரையாடலும் – ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ நூலை முன்வைத்து..

ஞா.தியாகராஜன்

பகிரு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ என்னும் பொருண்மையிலான கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாக நிகழ்வில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் தமிழவன் அவர்களால் தொகுக்கப்பெற்று அதே தலைப்பில் சாகித்ய அகாடெமி வெளியீடாக நூலாக்கம் பெற்றுள்ளது.

தமிழின் நவீன இலக்கியம் சார்பாக எடுக்கப்படும் பலதரப்பிலான முயற்சிகளில் தமிழவனை ஒரு சிந்தனைப்பள்ளியாகக் கொள்ளலாம். பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி அதில் ஒரு தொடர்ச்சியைத் தோற்றுவித்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் முயற்சி ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

நவீன இலக்கியத்திற்குக் கல்விப்புல வழியாகப் பல பங்களிப்பை செய்திருப்பவர்கள் என்ற அடிப்படையில் தி.சு.நடராசன், க.பஞ்சாங்கம், ராஜ்கௌதமன், க.பூரணச்சந்திரன் போன்றோரையும் தமிழவனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் இலக்கியத்திற்கு வைத்துக்கொள்ளும் கொள்கைகள், ஆதர்சங்கள் வேறாக இருப்பினும் தொடர்ந்து உரைநடை இலக்கியத்திற்குத் தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் அதனை இயக்கமாகச் செய்யக்கூடிய வாய்ப்பு தமிழவன் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதன் சமீபத்திய விளைவுதான் ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ என்னும் கட்டுரை நூல்.

அறிவுத்துறைகளில் எதிர்கால நகர்வுகளுக்கு அதன் சமகால மற்றும் கடந்தகால முன்னெடுப்புகளைத் தொகுத்துக்காண்பது அவசியமாகிறது. மேலும் அத்தகைய முயற்சிதான் அறிவுசார் புலத்தில் ஒரு அசைவை எப்போதும் செய்து வருகிறது. அதிலும் இலக்கியம் போன்ற கலைத்துறைக்குப் பலரின் பங்களிப்பை தொகுப்பாக்கும் செயலானது அடுத்தடுத்த உரையாடலுக்கு வழிவகுக்கும்.

இந்நூலை வைத்தும் அண்மைக்கால நாவல் போக்குக் குறித்த சில உரையாடலை தொடங்கலாம். உரைநடை வடிவங்களில் ‘நாவல்’ நீண்ட தொடர்ச்சியான வாசிப்பை கோரக்கூடியது. சமயங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு. அப்படியான நிலையில் நாவல்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு நூல் மதிப்புரையோ விமர்சனமோ மிகவும் கைகொடுக்கிறது. இந்நூலில் எண்வர் வாசித்தளித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நவீன இலக்கியத்தைச் சிறுபத்திரிக்கை சார்ந்த முயற்சி, வளாக ரீதியிலான முயற்சி என்று பிரித்தே இனங்காணலாம். கல்விப்புல முயற்சிகள் எண்பதுகளுக்குப் பிறகே வீரியமாகச் செயல்பட்டன என்பது தரவுகளின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய உண்மை.

இவ்விரு பிரிவினருக்கிடையே கொடுக்கல் வாங்கல் காணப்பட்டாலும் இன்றும் தனித்தனி திசையிலேயே இயங்குகின்றனர் என்பதை மறுக்க முடியாது. இந்நூலும் அதற்கொரு சாட்சியமாக நிற்கிறது.

சிறுபத்திரிக்கை வழியாகப் படைப்பு, வாசிப்பு என்னும் அறிவுச்செயல்பாட்டில் பங்கெடுப்பவர்கள் பதிப்பக நிழல்களில் ஒதுங்கி விடுவது சமகாலத்தில் பரவலாகவே காணப்படுகிறது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளிடையே செயல்படும் ரகசிய ஒப்பந்தம் போலவே இது சரியாக இயங்கிவருகிறது. மேலும் பலசமயங்களில் இங்கே சமகாலம் எனக் குறிக்கப்படுவது குறைந்தது கடந்த இருபது ஆண்டுகளைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது.

‘சமகால’ என்னும் பிரயோகத்துடன் தொடங்கும் எந்தவொரு பிரதி செயல்பாடும் இன்னும் புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜாவிடமே போய் நிற்கின்றன. இன்னும் கொஞ்சம் முயன்றால் தமிழவன், கோணங்கி, ஜெயமோகன் வரை இழுத்து வர முடிகிறது.

அதன் பிறகான தொடர்ச்சியை இன்னும் சிந்திக்கவே முற்படவில்லை என்பது நடப்பிலக்கிய உண்மை. தமிழவனின் தேர்வாக வெளியாகியுள்ள ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ இத்தகைய சிந்தனைகளுக்கெல்லாம் வழிவகுக்கிறது. கட்டுரை எழுதியுள்ள எண்வரில் குமார செல்வா, ஜி.குப்புசாமி தவிர்த்து ஏனையோர் ஆய்வுப்புலத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது சிந்தனை முறையிலும் தமிழவனை மூலவராக ஏற்பவர்கள்.

இந்நூலின் மீதான விமர்சனத்தை இரு பிரிவாகப் பகுத்துக்கொள்ளலாம். ஒன்று இந்நூலில் காணப்படும் தமிழவன் அவர்களின் மேலாண்மை மற்றொன்று கட்டுரைகளில் காணப்படும் கருத்து முரண்பாடு.

முதல் கட்டுரையான தமிழவன் அவர்களின் கட்டுரை தொகுப்பிற்கு நிச்சயம் வலுசேர்ப்பதுதான். தமிழ் நாவல் தோற்றம் குறித்து அவர் முன்வைக்கும் சிந்தனா முறைமை நாவல் வரலாற்றில் கைகொள்ள வேண்டிய ஒன்றுதான். மேல்நாட்டு சரக்காக மட்டுமே இவ்வடிவத்தை அடையாளப்படுத்தாமல் அதன் தமிழ் மரபு தொடர்ச்சியை இனங்காண வலியுறுத்தப்படுகிறது.

அதற்கான காரணமாகத் தமிழவன் கூறும் அரசியல் பின்புலமும் அவருக்குச் சமகால இலக்கியம் மீது செயல்படும் ஒர்மையை வெளிப்படுத்துகிறது. இதுவொருபுறமிருக்க நூலை தொடர்ந்து வாசிக்கும்போது சிறிது நெருடலும் தோன்றுகிறது. எண்வர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு நாவல் எழுத்தாளர்கள், நாவலின் செல்நெறிகள் அதன் வகைப்பாடு, கோட்பாட்டு ரீதியிலான அணுகுமுறை என்றெல்லாம் பல பரிணாமங்களைக் கொண்டிருந்தாலும் இதன் அனைத்து மையங்களும் தமிழவன் என்ற ஒற்றைப் புள்ளியைச் சுற்றியே இயங்குகின்றன. நாவல்களில் மொழிபெயர்ப்பின் தாக்கம் குறித்துப் பேசும் ஜி.குப்புசாமியின் கட்டுரையில் கூடத் தவறாமல் தமிழவன் ஓரான் பாமுக்குடன் இணைத்துச்சொல்லப்படுகிறார்.

அதன் சரித்தன்மையைக் ஆராய்வதைக் காட்டிலும் ஜி.குப்புசாமி வேறெங்கும் இதைக் குறிப்பிட்டிருக்கிறாரா.. என்று கேள்வி எழுகிறது. குமரி வட்டார நாவல் குறித்துப் பேசும் குமாரசெல்வா உட்படக் கட்டுரையாளர்கள் யாரும் தமிழவன் அவர்களைத் தவறாமல் குறிப்பிட்டிருப்பது மீண்டும் நவீன இலக்கியம் ஒரு குழு மேலாதிக்கத்தின் கீழ் இயங்குவதையே நினைவுறுத்துகிறது. பொதுவாகப் பல கட்டுரையாளர்களின் சிந்தனை முறையைத் தொகுப்பதன் நோக்கம் பிரதி செயல்பாட்டில் நிகழும் ஒற்றைத்தன்மையைக் களைவதேயாகும்.

ஆனால் மீண்டும் பக்க சார்பான தன்மையுடனே சமகாலச் செயல்பாடுகள் நிகழ்கிறது. நூலில் குறிப்பிட தவறிய நாவல் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக ஜெயமோகனின் கருத்தியல் நிலைப்பாடு மேலும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அடையாளப்படுத்தும் படைப்பாளர்கள் அவற்றின் தரம் போன்ற எல்லைகளையெல்லாம் தொடாது கல்விப்புலத்திற்குரிய தற்காப்பு வளையத்திற்குள்ளாகவே அண்மைக்காலப் போக்குகள் பேசப்பட்டுள்ளன.

இவையெல்லாம் ‘அண்மைக்காலம்’ என்ற சொற்றொடரில் அடங்காது எனில் அதில் தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ மட்டும் எந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது உபகேள்வி.

தமிழவனின் நாவல் பங்களிப்பு மறுக்க முடியாததென்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலும் இந்நூல் மூலமும் அவரின் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத புனைவுலகிற்கான பல்வேறு திறப்புகள் கிடைப்பதும் படைப்புச்செயல்பாட்டிற்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் அது ‘அண்மைக்காலப் போக்குகள்’ என்பதாகத் தொகுக்கப்பட்டிருப்பதுதான் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது.

சிறுபத்திரிக்கை சார்ந்த செயல்பாட்டாளர்களைவிட வளாகப் பின்புலமுள்ள படைப்பாளர்களுக்கு ஆக்கப் பூர்வமான பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பும் சூழலும் விரிவாகவே அமைகிறது. ஆனால் அதனுள் செயல்படும் இத்தகையை ஒற்றைத்தன்மையிலான செயல்பாடுகள் இலக்கியத்தை மீண்டும் சிறிய சிமிழில் அடைக்கிறது. தமிழினி ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனப் புதுக்கவிதைகளைத் தொகுத்தால் அதில் யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் விடுபடுவதும் இப்படிதான் நிகழ்கின்றன. இதெல்லாம் தொகுப்பாசிரியர் தொடர்பான விவகாரங்கள் எனில் அடுத்தபடியாகக் கட்டுரைகள் மீதான மதிப்பீட்டைப் பார்க்க வேண்டியுள்ளது.

நூலில் ‘அண்மைக்காலப் போக்குகள்’ என்ற சொல்லாடலுக்குச் சற்றாவது நெருக்கமாகக் காணப்படுவது ந. முருகேச பாண்டியன், மேலும்.சிவசு இருவரின் கட்டுரைகளாகும். ஆனால் இந்த ‘அண்மைக்காலம்’ என்பதனுள் யாரெல்லாம் அடக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தமிழின் ஆரம்பகால முதலான வாசிப்பனுபவமும் இலக்கியத்தின் மீதான வரலாற்று ஓர்மையும் உடையவர்கள் இருவரும். முருகேச பாண்டியன் நவீன இலக்கியத்தின் விமர்சகராக அறியப்படுபவரும் கூட.

இந்நிலையில் விநாயக முருகன், சரவணச் சந்திரன் வரை இவர்களின் கட்டுரை பேசுவதைக்கொண்டே நூலின் தலைப்புக்கு நெருக்கமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறேன். ‘வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள்’ என்னும் பொருண்மையில் அமைந்துள்ளது முருகேச பாண்டியன் கட்டுரை. தமிழில் வரலாற்று நாவல்கள் என்பதாகச் சுருங்க விளங்கிக்கொள்ளலாம். கல்கியிலிருந்து தொடங்கும் கட்டுரை வரலாற்று நாவல்கள் ஆரம்பக் காலங்களில் எவ்வாறு வெகுஜன ரசனையுடன் புனையப்பட்டதெனத் தொடங்கி அவற்றிலிருந்து நவீன இலக்கியத்தைப் பிரித்தறியும் விவரிப்புடன் பேசிச் செல்கிறது.

சாகித்ய அகாடெமி விருதுபெற்ற ‘காவல் கோட்டம்’ நாவலானாலும் தன் விமர்சனப்பார்வையைச் சரியாக வைத்துச் செல்கிறார் முருகேச பாண்டியன். ஆனால் இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் விநாயக முருகன், சரவணச் சந்திரன் போன்றவர்கள் சேர்க்கப்படுமிடத்தில் சற்று நிதானிக்க வேண்டியுள்ளது. தமிழின் சமகாலம் குறித்துச் சரியாகச் சிந்திக்கவில்லையென முதலில் குறிப்பிட்டிருந்தேன்.

பொதுவாக அத்தகைய எத்தனிப்பை வெளிப்படுத்தும் அண்மைக்கால விமர்சனங்களும் உயிர்மை,காலச்சுவடு போன்ற பெரும் பதிப்பகங்கள் வெளியிடும் இலக்கிய ஆக்கங்களைச் சரியென நிரூபிக்கவே முற்படுகின்றன. ‘அண்மைக்காலம்’ என்பதன் மீதான நிதானம் இங்கேதான் விழிப்படைய வேண்டியிருக்கிறது.

இலக்கியத்தின் தொடர்ச்சியைக் கூர்ந்து அவதானிக்கையில் படைப்பாக்கம் என்பது தொடக்ககாலத்தில் இயல்பூக்கம் சார்ந்து மதிப்பிடப்பட்டதையும் இன்று மதிப்பிடுதலுக்குப் பிரதியை மட்டுமே தரவாக எடுத்துக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. இலக்கியத்தில் கட்டங்கடைசியாகத் தோன்றிய பின்நவீனத்துவம் படைப்பாளனை கழித்துவிடச்சொல்வதிலிருந்து இத்தகைய விமர்சனம் நோக்கி நகர்ந்திருக்கிறோம்.

ஆனால் இது இயல்பூக்கம் என்பதைப் படைப்புச் செயல்பாட்டில் மறுதளித்திருப்பதையும் சிந்திக்க வேண்டியதுள்ளது. இது தமிழின் காத்திரமான விமர்சகர்களையும் மயக்குவதுதான் சமீபகால நிதர்சனமாக உள்ளது. பூமணியின் அஞ்ஞாடி நாவல் குறித்தெல்லாம் பேசிவரும் கட்டுரை விநாயக முருகனின் ‘வலம்’ நாவலையும் அதன் தொடர்ச்சியாக வைப்பதை இப்பின்னனியில்தான் புரிந்துகொள்கிறேன்.

சமீபமாகப் பெரும் பதிப்பக நிழலில் எழுதும் இத்தகைய எழுத்தாளர்களைப் போகிற போக்கில் முன்னோடி எழுத்தாளர்களுடன் வைத்து மதிப்பிடுவது சற்று நெருடலாகவே உள்ளது. ஏனெனில் தன் புனைவுலகிற்கு லௌகீக வாழ்க்கை சார்ந்தும் எத்தகைய அர்ப்பணிப்புடன் இயங்குகிறார்கள் என்ற கேள்வியுடன் மதிப்பிடும் போது இந்த அண்மைக்கால எழுத்தாளர்களை முன்னோடிகளுடன் பொருத்த முடியாது என்பது விளங்கிவிடும். அப்படியும் ‘படைப்பை மட்டுமே பார்க்க வேண்டும்’ என்ற கொள்கையுடன் அணுகினாலும் கூட இத்தகைய படைப்புகள் உயிர்ப்புடன் இயங்குவதில்லை என்பதே நிதர்சனம்.

வாசிப்பில் தீவிரமான சம்பவங்களையோ, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையோ அசலான மாந்தர்களையோ காண்பது சமீப வரவுகளில் எதிர்பார்க்க இயலாத ஒன்றாக உள்ளது. ஆனால் இதுவரை தொடாத கதைக்களங்களையும் புதிய கதைப்பின்புலங்களையும் கொண்டு எழுதப்படும் போது இவை தவிர்க்க முடியாத இலக்கியம் என்ற மயக்கத்தைக் கொடுக்கின்றன.

சரவணச் சந்திரன் நாவல்கள் பெரும்பாலும் செல்வம் சேர்ப்பதை குறியாகக்கொண்ட ஒரு நாயகனின் சாகசத்தை மையமிட்டு புனையப்பட்டவை. சாதாரணக் கதாபாத்திரம் சந்திக்கும் பணமுதலைகளின் கருப்பு சந்தைகளையும் அதில் ஊடாடும் அரசியலையும் பேசுபவை. பொதுவாக இடதுசாரிய படைப்புலகத்தின் மீது வைக்கப்படும் ‘செய்யப்பட்ட நாவல்கள்’ என்பதே இத்தகைய நாவல்களுக்கும் பொருந்தும்.

ஆனால் சகலத்திலும் ஊடுருவியிருக்கும் ‘நுகர்ச்சிப் பெருக்கம்’ இத்தகைய எழுத்துகளுக்கு இலக்கியப் பெறுமானத்தைப் பெற்றுத் தருகின்றன. அதனை முன்னோடி படைப்பாளர்களும், விமர்சகர்களும் தெரியாமலும் சில சமயங்களில் தெரிந்தும் மேற்கொள்கின்றனர்.

ஜி.குப்புசாமியின் கட்டுரை தமிழ் நாவல்களில் மொழிபெயர்ப்பின் தாக்கம் குறித்துப் பேசுகின்றன. வரலாற்று நாவல்களிலிருந்து தொடங்கிச் சமகாலம் வரை மொழிபெயர்ப்பு வழியிலான தாக்கங்களைக் குறிப்பிட்டுச் செல்கின்றன. ஆனால் அவையும் சமீபத்திய ஐந்து அல்லது பத்து ஆண்டுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனினும் மேலும் விரிவான தளத்தில் ஆராய்வதற்கான அறிமுகத்தை வழங்கியுள்ளது.

மேலும் சில கட்டுரையாளர்களை வாசிக்கும்போது ஆய்வுப்புலம் தவிர்த்து பிற இலக்கிய வெளிகளில் இவர்களையேன் காணமுடிவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழில் நவீன இலக்கியம் குறித்து அறியக்கிடைக்கும் ஏராளமான தகவல்களையே இவற்றிலும் காண்பது சற்று அயர்ச்சியூட்டுகிறது. சமகாலத்தில் நிலவும் ஒற்றைத்தன்மையிலான இலக்கியப்போக்கினை சுட்டிக்காட்டாது முன்னைய தரவுகளைக் கொண்டு உரையாடலை வளர்த்திச்செல்வது பெரும் தேக்கத்தையே காட்டுகிறது.

எஸ்.ரா, ஜெ.மோ, சாருநிவேதிதா, கோணங்கி, மற்றும் இந்நூலில் தொடர்ச்சியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழவன், ரமேஷ்-பிரேம் ஆகியோரை எடுத்துக்கொள்வோம் இவர்கள் வழியாகவும் இலக்கியம் இருபது ஆண்டுகள் கிளைபிரிந்து வளர்ந்திருக்கிறது. அப்போக்கு குறித்த விமர்சன முறைகளை வளர்ப்பதே எதிர்வரும் காலத்திற்கான இலக்கியப் பங்களிப்பாகக் கருத இயலும்.

அதிகப்படியான நுகர்ச்சியினைச் சரியான திசையில் செலுத்தவும் சமகால ஓர்மையுள்ள விமர்சன முறைமை தேவை. அத்தேவையைப் பூர்த்திச் செய்யும் இடத்தில் இத்தொகுப்பானது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழவன் படைப்புலகம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் அளவுக்கு ‘அண்மைக்காலம்’ என்பதன் மீதான கவனம் செலுத்தப்படவில்லை. ஒற்றை நபரின் மேலாதிக்கம் இல்லாது நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

குறிச்சொற்கள்

மேல் செல்