கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்: ஒரு வாசிப்புரை

யவனிகா ஸ்ரீராம்

பகிரு

ஒரு வெள்ளையன் கடல்வழியாக ஒரு கறுப்பனுடன் இணைக்கப்படாதவரை இருவருக்கும் தங்களது நிலப்பரப்பு என்பது ஒரு கிரகமாகவும் மற்றொரு நிலப்பரப்பு அந்நிய கிரகமாகவும் மட்டுமே புனைவாகிறது…

(தனது கட்டுரைத் தொகுப்பிலிருந்து ஜமாலன்)

மொழியும் நிலமும் என்ற கட்டுரைத் தொகுப்புக்குப் பிறகு 2010இல் வெளிவந்த ஜமாலனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற புலம் வெளியீட்டுப் புத்தகம்.

ஏறக்குறைய உலகின் அனைத்து நிகழ்வுகளும், புதிய கட்டமைப்புகளும் நிகழ்ந்துவிட்ட 19ஆம் நூற்றாண்டு தொடங்கி சமகாலம் வரை உருவான பல்வேறு மாற்றங்களின் ஊடாக கருதுகோள்களையும், சம்பவங்களையும், பிரதிகளையும், நவீன அரசியல் எழுச்சிகளையும் கலை இலக்கியத்தோடு சினிமாவரை எழுதிச் செல்கிறது இத்தொகுப்பு.

உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், சினிமா, ஈழம் எனும் வகைப்பாட்டில் கடந்த அறுபது வருட உரையாடல் மற்றும் போராட்டங்கள் யாவற்றையும் மனித மறுமதிப்பீடு செய்யும்வகையில் எதன் பிரதிநிதியாகவும் இல்லாமல், தனக்குமுன் பேசியவர்களின் குறிப்புகளையும் தோதான இடத்தில் இணைத்து வாசகர்களோடு ஒரு உரையாடலை நிகழ்த்திய விதத்தில் உழைப்புக் கூடிய மிக முக்கியமானதொரு அறிவு நூலாக இதைக் கருதலாம்.

இயற்கையை நனவிலியாகக் கொண்டு பரந்துபட்டு மனித மனம் தங்கள் புகலிடங்களை உருவாக்கிக் கொள்வதற்காக போராடிய வரலாறு மதம், தேசியம், காதல், யுத்தம் எனும் இவை மறுமலர்ச்சி யுகத்தில் எவ்வாறு குதர்க்கத்துடன் கட்டமைந்தது என்பதை அல்லது இப்பூமண்டலம் எவ்வாறு மனிதமையவாதமாகத் திரிந்தது என்பதையும் ஞாபகப்படுத்துகிறது இப்புத்தகம்.

அதிகார நிர்வாகத்துக்காக கெட்டிதட்டிப்போன நிறுவனங்கள், சீர்திருத்தப் போலி அமைப்புகள், தீவிர அரசியல் முயற்சிகள், வன்முறைகள், பாலியல் நம்பிக்கைகள் யாவும் தத்தம் யதார்த்தத்தை எப்படி இன்று இழந்துநிற்கின்றன, லட்சியவாதங்கள் எப்படி, எதற்காக திரிக்கப்பட்டன. மதம் மற்றும் அரசுப்பிடியில் இன்னும் அலைக்கழிக்கப்படும் சாமான்ய மக்களின் விளிம்புநிலை அவலங்கள், மரணங்கள், பெண்களின் நவீன இருப்பு, கலை இலக்கிய ஆதார உணர்ச்சிகள் போன்றவற்றை வர்க்கப் பார்வையோடு அணுகும் ஜமாலன், இத்தொகுப்பை ஒரு பின்மார்க்சியத் தளத்தில் அலசிப் பார்க்கிறார்.

’கலச்சார கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள்’, ‘குடிக் கலாச்சாரமும் கலாச்சாரக் குடிகளும்’, ‘மண்டோ பற்றிய வெள்லை அறிக்கையும் பெண் எனும் பேரச்சம்’, ‘வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள்’, ‘கற்றது தமிழ் கற்காதது’, ‘உலகமய காலனியத்தின் சோதனை விளையாட்டுகள்’ போன்ற கட்டுரைகள், மிகச் சமகால முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஜூடித் பட்லரின் பாலினமாதலில் தொடங்கி இஸ்லாமிய பெண்ணியம் வரை நீளும் விவாதங்கள், சமப்பால் தன்மைக்கான சீரிய ஆய்வாகவும் பகுத்தறிவு மற்றும் சூஃபியியல் சார்ந்த ஒரு பற்றற்ற தன்மையையும் பெண்களிடத்தே காண விழைகிறது. தொன்மங்களும் கதையாடல்களும் மறைவதில்லை என்ற பிரடெரிக் ஜேம்ஸனின் ஆய்வுக்கொப்ப, பெண்களுக்கு ஒரு தொன்ம அரசியல் வெளியை உருவாக்குவதில் ஜமாலன் கடினமாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். மிகப் பொறுப்பான, ஆண்நீக்கம் செய்துகொண்ட பன்மைத்துவமான கோர்ப்பு தொகுப்பின் இப்பகுதிகள்.

‘கலவரம் என்பது பெண்ணுக்கு அதீத பாலியல் ஆற்றல் உள்ளது என்பதையே தனது நினைவாகக்கொண்ட ஒரு வாக்கியம் ஆகும்’ என்ற, தனது முத்தாய்ப்புக்குள் ஆண்+பெண் இருமை எதிர்வுகளின் நெடிய போராட்டத்தை ஆதிக்க வெறுப்பின் அரசியலை, அமுக்கப்படும் பாலினத்தின் துயரங்களை உள்ளடக்குகிறார். இங்கே காலகாலமான மொழி, எழுத்து, பேச்சு யாவும் தற்காலிகமானது என்பதும் நம் ஞாபகத்தில் நிழலாடுகிறது. இத்தொகுப்பு முழுவதும் உடலரசியலின் தொடர்பாடல் என்றும்கூட கவனப்படுத்தலாம்.

‘பயங்கரவாதம் என்கிற பக்கவாதம் – வரலாறு நிகழ்த்தும் வன்முறை விளையாட்டுகள்’ என்ற கட்டுரை ஜமாலனின் ஆழ்ந்த உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடு. இந்திய இஸ்லாமியர்கள் தங்களின் அன்றாட லெளகீக யதார்த்த வாழ்வின் பாத்திரங்களின்மீது சுமத்தப்படும் பயங்கரவாத அடையாளத்தை எதிர்கொண்டு வாழவேண்டிய அவலத்தை இன்னுமான பலவேறு எண்ணங்களை வாசிப்பவருக்காகத் தூண்டும் இக்கட்டுரைகள் வாசிக்க எளிதான மொழியிலும் ஞாபகத்தின் அடுக்குகளில் பறக்கும் விடுதலைப் புள்ளினங்களின் நீட்சியாகவும் இருக்கிறது.

‘மண்ட்டோவின் கடித இலக்கியம்’ வழியாக அமெரிக்கமயம் என்னும் உலகமயப்போக்கு அதன்மீது அபத்த ஆசைகொண்ட உலக நடுத்தர மக்களின் வெட்கங்கெட்டத் தன்மையை மட்டுமல்ல; அமெரிக்காவின் சந்தை தொடாத இடமே இல்லை என்றளவில் பூரித கலசாரமும் எவ்வாறு பரவி வருகிறது, அது மற்றைய பூர்விக கலாசார வேறுபாடுகளை சீரழித்து மறையச் செய்கிறது என்பது நீளக்கூடிய பெரும் அச்சுறுத்தலையும் விவரிக்கிறது.

குறிப்பாக கவனிக்கும் பட்சத்தில், இக்கட்டுரைகளில் பெண் உலகின் முதிர்ந்த பேசப்படாத மொழித் தொனிகள் மறைந்திருப்பதைக் காணலாம். உரத்துப் பேசாத உலகின் பாதிப் பேச்சொலிகளை எழுத்துகளை பெண் மொழியின் வாயிலாகவே ஜமாலன் நிறுவ முயல்கிறார். மேலும் ‘ஒரு மனிதனின் நடோடி உணர்வு எல்லா கலாசார விழுமியங்களையும் தூக்கிப்போட்டு உடைப்பதன்மூலம் மட்டுமே நிலையான குடிமக்களை எதிர்க்கமுடியும்’ என்றும் இந்த நூற்றாண்டை அகதிகளின் நூற்றாண்டாகவும் வரையருக்கும் ஜமாலனின் கதையாடல்கள் சுவாரசியமானவை. வேறொரு மாற்றுக் கோட்பாட்டுக்கான முன்நகர்வுகள் எனவும் கூறலாம்.

தமிழவனின், ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பாலியல் வரலாறு பற்றிய அரசியல் புனைவையும் ஐரோப்பிய ரொமான்டிச, கீழைத்தேய மீட்சியையும் லூயிபுனுவலின் சினிமாவையும் இணைத்துப் பேசியிருப்பது அருமை. பல இடங்களில் கட்டுரையாளர் முதலாளித்துவ சமூகத்தின் நவீன கருத்துருவாக்கங்களின் செயலூக்கமற்ற முடிவு மூலதனத்தால் தள்ளிப்போடப்பட்டிருப்பதையும் நவீன முதலீட்டியப் பார்வைக்கும் பின்நவீன விளிம்புநிலைக் கதையாடல்களுக்கும் இடையே நிலவும் சமகாலத்தையும் பிரதிகளாக்குகிறார்.

பலவகையான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தொகுத்து பலதையும் உடைத்துக்காட்டும் கட்டுரையாளர், மார்க்சியநோக்கில் இந்திய வரலாறு காலத்தில் தவிர்த்திருக்கக்கூடிய, சுலபமான ஒரு வேலை இன்று எவ்வளவு மோசமான மதவிரோத, விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் புள்ளிவிபரங்களாக்குகிறார். பிரிட்டிஷ் சூழ்ச்சி தொடங்கி நவீன இந்திய ஆளும் வர்க்கத்துக்கு மத அடிப்படைவாதங்கள் எப்படித் துணைபோகின்றன என்பதை துல்லியமாக விளக்கும் இக்கட்டுரை பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்விஷின் (இத் தொகுப்பில் உள்ள மற்றொரு கட்டுரையின்) தொடக்க வரிகளுக்கு நம்மை கொண்டுசேர்க்கிறது.

‘நான் பன்மைவாதத்தை நம்புகிறேன். எல்லா மதத்துக்கும் பாலஸ்தீனத்தில் இடமுண்டென்று நம்புகிறேன். நான் ஜியோனிஸத்துக்கு எதிரானவன். அதே சமயத்தில் நம்பிக்கை இருப்பின், அடிப்படைவாதிகளைவிட மதச்சார்பற்றவர்கள் வலுவாகலாம் என்று நினைக்கிறேன். பார்க்கப்போனால், இப்போது மதச் சார்பற்றவர்கள் அடிப்படைவாதிகளைவிட வலுவாகவே உள்ளனர். நம்பிக்கை இருந்தால் அவர்கள் இதைவிடவும் வலுவாகக்கூடும். இதுவே இஸ்ரேலுக்கும் பொருந்தக்கூடிய உண்மை’

இந்த பரந்துபட்ட உணர்வின் நனவிலி மனிதன்தான் ஜமாலன். வாதப் பிரதிவாதங்களையும் தர்க்கங்களையும்விட வாழ்ந்துகாட்ட எத்தனிக்கும் பண்புநிலை நோக்கமே அறமாகும் என்பதன்வழி எதன்மீதும் குழு மனப்பான்மையற்று, அதைத் தூண்டாமலும் எழுதும் வலிமை ஒரு மார்க்சியருக்கு அன்றி யாருக்கு வாய்க்கும். அன்பின் வழியது உயிர்நிலை.

இப்படியாகத்தான் ‘மனிதமையவாதத்தின்’ அழுக்காறுகள், ஆவலாதிகள் கரைக்கப்பட்டு, பன்மைத்துவமான, எவ்வுயிர்க்குமான இடமாக பூமியை விட்டுச் செல்லும் வழிகளை எதிர்காலத்தில் இடப்படுத்தமுடியும். யாவும் வர்க்கத்தின்பாற்பட்ட நலன்களுக்கான முன்யூகமேயன்றி முரணியக்கத்தின் மனம் ஆதியில் கட்டமைக்கப்படாத உற்பத்திக்கான தொன்மம்தான். இதில் புத்துயிர்ப்புக் காணாத மனிதம் என்ன மனிதம். இந்த உலகை உடமைச் சமூகத்தின் பெருவளர்ச்சி என்றும் அதன் சொத்துகள் மிகப் பிரம்மாண்டமானதாக, சாதனையாக, ஒளி நிறைந்ததாக ஆக்கியிருப்பது எது, எதற்கு, ஏன் இப்படி என்ற கேள்விக்கு அதை உண்டாக்கியவர்கள் சிறுத்து நிற்கத்தான் வேண்டும்.

ஜமாலனின் இத்தொகுப்பு மேற்கு மற்றும் கிழக்கு, கூடவே அராபியத் தொன்மங்களின் நாகரிகக் கலவையாகவும் வித்தியாசங்களின் பன்மைத்தன்மைகளுக்குரிய செவ்வியல் பண்புகளையும் அவற்றின் உற்பத்தி உறவுகளுக்குமான இருத்தல் பற்றிய அவதானங்களையும் பன்மைக் கலாசாரங்களின் நுண் அரசியல் பிடிமானங்களையும் ஆவணப்படுத்துகிறது. சோசலிச வீழ்ச்சியெனும் மாயையை நீக்கி கம்யூனிசத்தின் லட்சிய பாவங்களின் நடைமுறையை பலவற்றுக்கும் விசாலப்படுத்துவதோடு, அதற்கான தொன்வரைவுகளையும் ஆய்ந்து செல்கிறது. நவீனத்துவ காலகட்டத்தின் தலையாய எழுச்சி மார்க்சியமே!

வளைகுடா, இந்தியர்களின் உழைப்பு பூமியாகவும் அதன்வழியே உண்டாகும் எதிர்கால நம்பிக்கைகள் மற்றும் பாதுகாப்பின்மைகள் பற்றிய விவரணைகள் சொல்லில் எழுதமுடியா சிக்கல்களை கொண்டிருப்பதாகக் காண்கிறோம். யூரோவும், டாலரும் காரைக்குடி இந்தியர்களை தினாரில் கவலைப்படவைக்கும் கதைகளைப் படிக்கிறோம். அமீரகமயமாக்குதல், சவுதிமயமாக்குதல் போன்றவற்றால் எதிர்கால கூலி இந்தியர்களின் வீடு திரும்புதல் என்னவாகும் என்பதும் டாலர் கேள்விதான். ஹேராம் படம் நாவலில் இருந்து சினிமாவாக இல்லாமல் சினிமாவே நாவலாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நுட்பமான அவதானிப்பு. நவீன வாழ்வின் பிரமாண்டத்தின்முன்பு தனது ஆற்றலை இழந்துவரும் மனிதன் மனப்பிறழ்வு மற்றும் வன்முறை பழமைக்கான ஏக்கம் முதலியவற்றால் பீடிக்கப்படுகிறான் என்பதையும் கொலை, பாலுறவு வன்முறை போன்றவை பின்நவீன காலத்தின் கேளிக்கையாகவும் மூலதனத்துக்கு முன்பான வேடிக்கையாகவும் மாறி வருவதை ‘கற்றது தமிழ்’ பட விமரிசனம் மூலம் ஜமாலன் நிதர்சனப்படுத்துகிறார்.

இந்த முழு நூலையும் படிப்பது சமகாலத்தில் தனி மனிதத் தன்னிலைக்கு ஒரு வரலாற்று அறிவைக் கொடுக்கிறது. இன்றைய புத்தகச் சந்தைகளின் நூலகங்களின் புழங்குமிடங்கள், கலை இலக்கியம், அரசியல், உலக நடத்தைகள், அதன் பண்பாட்டு விஞ்ஞான வளர்ச்சிகள், பயங்கரவாதங்கள், ஏகாதிபத்திய சக்திகள் வழியாக ஒரு பிரதேச மனிதனை உலக மனிதனாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த உலக மனிதன் யார் எனும் இடத்தில்தான் தொடங்குகிறது ஜமாலனின் இக்கட்டுரைகள். மிக விரிவாக எழுதவேண்டிய பல அம்சங்கள் இதில் இருக்கின்றன என்றாலும் இத்தகைய தொகுப்புகள் கவனம்பெறாமல் போவது தமிழ்ச்சூழல் பற்றிய அயர்ச்சியத்தான் தருகிறது.

ஏறக்குறைய 1990களில் தொடங்கி 2010 வரை சுமார் இருபதாண்டுகளில் ஜமாலனால் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் மதம், பாலியல்பு, பெண், பொருளாதாரம், கலை போன்றவற்றின் பூர்ஷ்வா மாயைகளைக் களைந்து மார்க்சிய அறிவுத்தோற்ற விளக்கத்தில் நவீன மனிதமையை மீளுருவாக்கம் செய்வதாகக் கூறலாம். நவீனத்துக்கான அறம் பற்றிய உரையாடல்கள்.

மனிதன் தன் இறப்பை முன்கூட்டியே அறிந்தவன் என்ற முறையில், அதன் இடைவெளியில் ஏதோ கோட்பாட்டுக்கு உள்ளாகவேண்டிய நிரூபணமும் அனைத்துக்கும் பிறகு ‘நான் யார்’ என்ற கேள்வி மீள்வதும் மனிதன் மீது ஒரு ஆன்மீகத் தீர்ப்பை எழுதுவதற்கு காரணமாகிவிடுகிறது. ஆன்மீகத்தின் தர்மகர்த்தா முறையை வர்க்கநலனில் வைத்து கருவறுத்த மார்க்சின் விஞ்ஞானப் பார்வையை நடைமுறைக்குக் கொண்டுவரவும் நவீன கோட்பாடுகளை அரசியலில் அறத்துக்கு நிபந்தனையாகவும் மக்கள்வழி பூமியின் யதார்த்தத்துக்கு ஒரு பாலமாக செயலாற்றுவதற்கும் இத்தகைய நூல்கள் வழி செய்கின்றன.

மிக விரிவான எடுத்துரைப்புகள், பின்நவீனத்துவ நியாயப்பாடுகளின், எடுகோள்கள், நவீன புதிய சமூகத்துக்கான அறிவுஜீவித ஒத்துழைப்புகள் என விரிந்தாலும் கிரிக்கெட், நீலப்படங்கள் (சாருவின் பனுவலாக்கம் என) இளைஞர்களின் ஈடுபாட்டின் மீதான விஞ்ஞானப் பார்வையோடு இன அழிப்புதான் என்றும் ஏகாதிபத்திய வெறிகளால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலம், சாதிய உள்முரண்களின் கோளாறுகள் என பருந்துப் பார்வைகளும் இதில் இருக்கிறது. குடியைப் பற்றி இவ்வளவு விரிவான செய்திகள் வாசகர்களை ஆச்சரியப்படுத்தும். நிதானமாக உள்வாங்கவேண்டிய புத்தகம். பல்வேறு உலகச் சிந்தனையாளர்களின் எண்ணங்களை கலைத்து அடுக்கி நமது நவீன இருப்பைத் தூண்டும் ஜமாலனின் இத்தொகுப்புக்கான மதிப்புரை அவரின் சொற்களில் முடிவதுதான் பொருத்தம்.

‘வானம் பொய்த்துவிட்டது என்பதைப்போல மார்க்ஸியம் பொய்த்துவிட்டது என்ற தவளைக்கூச்சலில் எனக்கு நம்பிக்கையில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறையும் இருக்கும்வரை மார்க்ஸியத்தின் இருப்பு என்பது தவிர்க்கமுடியாதது. உண்மையில் சோவியத், சீனா சீஸோலிங்க்விஸ்புக் வரை அல்தூஸர் முதல் ஃபூக்கோ, தெல்யூஸ் கத்தாரிவரை மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள்தான்’

‘பன்னாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியிருக்கும் அரைக்காலனிய பண்பாட்டுச் சூழலில் நாம் பழைய வகையில் இன்றைய பிரச்னைகளை எதிர்கொள்ளமுடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப் பிரச்சினைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்ஸிய நோக்கிலிருந்து பேசவேண்டியதுள்ளது’

பின்குறிப்பு: வாழ்வுறுதி, விருப்பவேட்கை போன்றவற்றில் தாபத்துடன் இயங்கும் ஒரு தன்னிலையின் மீது லட்சியவாத பெருஞ்சுமையை சுமத்தி வழிநடத்துவது, அதன் நடத்தையின் மீதான கண்காணிப்பு ஆகிறது. அரசு வடிவம் என்பது குற்றம், தண்டனை, உற்பத்தி, காதல், பொருட்சேதம் அனைத்திலும் ஒரு ரெவின்யூ இன்கம் வருகிறதா எனப் பார்க்கும் நிறுவனமாகவும், மக்கள் உளவியலின் மீது பாராமுகத்தையும் கொண்டு இயங்குவதால், அனைத்துக்கும் எதிர்வடிவம், விளையாட்டுத்தனம், அனார்க்கிசியப்பண்பு உருவாகிக்கொண்டு வருவது, விளக்கத்தை மறுத்தல் போன்றவற்றின் மூலம் நவீனத்துவத்தின் பல நூற்றாண்டுகால முழுமையை, பின்நவீன தன்னிலைகள் நிராகரிக்கின்றன. மக்களின் வாழ்வை ஒழுங்கின்மை என்று வர்ணித்த, மதமரபான அரசுகளே மிகக் கேவலமாக இழிந்தபின்பு, அவை குற்றங்களை ஒடுக்கும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதற்கிடையே தோன்றும் பின்நவீனத்துவப் பகடிகளை ஜமாலனின் கட்டுரையில் மெலிதாகக் காணமுடிகிறது. இத்தகைய பகடிகளை இன்றைய விளிம்புநிலை மனிதர்கள் கூட்டிணைவின்றி உலகின் பல இடங்களில் நிகழ்த்துகிறார்கள். முழுமையடைய விரையும் நவீனத்துக்குள்ளேயே அதன் அதிகாரம் விரிசல்விடும் போக்குகளைத்தான் பின்நவீனத்துவம் அரசியல்படுத்துகிறது. மற்றபடி, அது எதையும் முழுமைப்படுத்துவதில்லை என்பது அதற்கான குற்றச்சாட்டு இல்லை.

குறிச்சொற்கள்

மேல் செல்