கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

அம்பரம் - தகர்ந்த பிம்பங்கள்.

பிரேம்

பகிரு

நாம் நம் சிறுவயதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் உடைந்து போகும் கணங்கள், பல நேரம் வலிமிகுந்ததாக இருக்கும். அப்படி உடையும் போது, உண்மைக்கும் நம் மனதிலிருந்த பிம்பத்துக்கும் இருக்கும் வேறுபாடு, பிரமிக்க வைக்கும்... இவ்வளவு காலம் இத்தனை பெரிய வேறுபாட்டை எப்படி கவனத்தில் கொள்ளாமல் இருந்தோம் என்று வியப்பாகவும் வலியோடும் பிறகு எண்ணிப்பார்த்துக் கொள்வோம்.

தீவிர திராவிட உணர்வோடு இருந்த என் தாய்வழி தாத்தா எனக்கு பெரியாரையும் அண்ணாவையும் அடையாளம் காண்பித்தார். மாறாக என் தந்தை  வழியில், தேசிய உணர்வோடு இருந்த குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் சொந்த ஊரில் எங்கள் தாத்தா வீட்டில், உள் கூடத்தில் ஒரு பக்க சுவரில் சாமி படங்கள் மாட்டப்பட்டு  இருக்கும். அதற்கு மேலே காந்தி, நேரு, மற்றும் நேதாஜி படங்கள் இருக்கும்.

இருந்தபோதும், நேதாஜியை பற்றிய அதீதமான பார்வைகள் எங்கள் மூத்த உறவினர்களிடம் இருந்தது. காந்தியை விட நேதாஜியைத் தான் அவர்கள் உயர்வாகச் சொல்வார்கள். அந்த வயதில் அவர் வாழ்வே ஒரு பெரும் சாகசமாகவும் ஒரு உன்னதமாகவும் தெரிந்தது வியப்பொன்றுமில்லை. வளர வளர வாசிப்பும், விசாரணைகளும், காந்தியை, சிறு வயதில் இருந்ததை விட   கனிவான பார்வையோடும், மரியாதையோடும், அணுகவைத்தது என்ற போதும், நேதாஜி மீது  இருந்த கவர்ச்சி சற்றும் குறையவில்லை. குறிப்பாக, அவரைப் பற்றி சொல்லப்பட்ட அவர் மீதான ஜப்பானியரின் மரியாதை பற்றிய கதைகளும் அவர் அஸ்தி, ஜப்பானின் ரென்கோஜி ஆலயத்தில் இன்னும் வைத்து மரியாதை செய்யப்படுவதாக சொல்லப்படும் செய்திகளும், ஒரு வித பெருமிதமான உணர்வை ஏற்படுத்தியது உண்மை.. அத்தோடு சேர்த்து அதன் தொடர்ச்சியாக அக்கால ஜப்பானிய போர் சரித்திரத்தின் மீதும் ஒரு மரியாதையாக படிந்திருந்தது.

பணி  சம்பந்தமாக ஜப்பானுக்கு முதன் முதலாக பயணம் செய்தபோது, அந்த உணர்வு இன்னும் இறுகி இருந்தது. அங்கே, ஒருமுறை ரெயில் பயணத்தின் போது, பக்கத்து இருக்கையில் ஒரு பெங்காளி  வந்தமர்ந்தார். பொதுவாக நான் பழகிய பல பெங்காளிகளிடம் ஒரு பழக்கத்தை நான் கண்டிருக்கிறேன். உரையாடும் போது, நாம் கூறும் பொதுவான  செய்திகளை, மறுத்துப்  பேசுவதும், அதை எதிர்பார்க்காத வேறு கோணத்தில் முன்வைப்பதும் தான் அது. பல நேரங்களில் நாம் சிந்தித்திராத புது உண்மைகள் புரியும். சில நேரங்களில் அது வெறும் விதண்டாவாதமாகத் தோன்றும். ஆனால் அவர்கள் நம்மைப்போலவே அடையாளம் பற்றிய விஷயங்களில் அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்து பார்த்ததில்லை.

சுவாரசியமாக சென்ற எங்கள் உரையாடலில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தது மற்றும் நேதாஜி மேல் வழக்கமாக பெங்காளிகளுக்கு இருக்கும் பெருமிதம், இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தது. அப்போது மிக இளைஞனான என்னைவிட உத்தேசமாக 10 வயது மூத்தவராக காணப்பட்ட அவர், நேதாஜி பற்றி பெருமிதமாக நான்  பேச ஆரம்பித்தவுடன் அமைதியாக என்னை கவனிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நான் ஓய்ந்ததும், பெரு மூச்சுடன் பேச்சை ஆரம்பித்தார் அவர்.

“நேதாஜி ஒரு மிகப் பெரிய ஆளுமை. அவருடைய தலைமை இந்திய இளைஞர்களை கவர்ந்ததில், பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பும் அதன் தலைமையையும், குறிப்பாக நேதாஜியின் போர்த்தலைமையை  அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏனோ சரி என்று தோன்றவில்லை. ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். ஒரு அரசியல் தலைமை என்ற ஆளுமைக்கும், ராணுவத்தலைமை என்ற ஆளுமைக்கும், அடிப்படையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டுக்கும் தேவைப்படும் திறன்கள் வேறு வேறானவை. ஒரு ராணுவத்தலைவருக்கு, ராணுவத்தை வழிநடத்த, போர் பயிற்சியும், போர் நுணுக்கங்கள் தெரிந்திருப்பதும் மிக அவசியம். உலகம் முழுதும், வெற்றிகரமாக இயங்கிய, இயங்கும் குழுக்களை பாருங்கள். அவர்கள் தலைமை என்பது போர் பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள். அப்படி இல்லை என்றால், அவர்கள் வெற்றி பெறுவது இயலாது என்பதோடு அவர்களை நம்பி வந்தவர்களுக்கு அது அழிவையே தேடித் தரும். அரசியல் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு பெரும் ஆளுமை என்பதில் எந்த முரண்படும் இல்லை. ஆனால்., ராணுவத்தலைமை என்ற வகையில் எனக்கு முரண்பாடு உண்டு. அவர் எந்த வகையிலும் போர் பயிற்சி இல்லாதவர். INAவின் ராணுவத்தலைமை என்பதும் அப்படிப்பட்ட்து தான். அவர்கள் பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றிகள் அனைத்தும் அவர்களை கூடவே சேர்த்துக்கொண்டு சென்ற ஜப்பானிய ராணுவத்தின்  வெற்றிகள் தான் எனத் தோன்றுகிறது. அவர்களின் வீரத்தின் மீது எந்த கேள்வியும் இல்லை. ஆனால், அவர்களுக்கு தேவையான போர் நுணுக்கமும், யுக்திகளும் , ஜப்பானிய ராணுவத் தலைமை வகுத்துக்கொடுத்ததே ஒழிய அவர்களுக்கென்ற எந்த நுணுக்கமும் இல்லை என எண்ணுகிறேன். அதனால், போரின் முடிவு வேறாக இருந்திருந்தாலும், இந்தியர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும் என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. ஒரு வேளை, ஆங்கிலேயர்கள் தோற்றிருந்து, ஜாப்பனிய படையெடுப்பு வென்றிருந்தால், இந்தியா, ஆங்கிலேயருக்கு பதில், ஜப்பானியர்களின் கீழே இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.”  என்றார்.

அதைக்கேட்ட எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எதிர்பாராத அந்த அதிர்ச்சி என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். அதனால், தொடர்ந்து, அவர், “ பிரேம், நான் சொன்னது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஜப்பான் போரில் தோற்றவுடன், இந்திய தேசிய ராணுவம் எப்படி, வீழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள். அத்தோடு, இதைப்பற்றி நீங்கள் நிறைய வாசித்து பாருங்கள். அப்படி வாசித்து ஜப்பான் ஒவ்வொரு ஆசிய நாட்டிலும், படையெடுத்து எவ்வாறு செயல்பட்டது, அந்த நாட்டில் மக்களின் நிலை என்ன என்று  அறிந்து, நீங்களாக ஒரு முடிவு எடுங்கள். அதற்குப்  பின், நான் சொன்னதில் உண்மை இல்லை என கருதினால், இந்த உரையாடலை நீங்கள் ஒரு வயதானவனின் உளறலாக நினைத்து மறந்து விடலாம்.” என்று கனிவான புன்னகையோடு மெதுவாக சொன்னார். தொடர்ந்து வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிய நாங்கள், இறங்கும் இடம் வந்ததும் பிரித்துவிட்டோம்.

ஆனால், அவர் சொல்லிய விஷயங்கள் எனக்குள் ஒரு எதிரொலியை ஏற்படுத்தி, தொடர்ந்தது என் வாசிப்பின் இலக்கை அது செலுத்தியது. தொடர்ந்து, கொரியா, சீனா போன்ற நாட்டின் ஜப்பானிய ஆக்ரமிப்பு பற்றிய ஆவணங்களும், சரித்திர எழுத்துக்களும், எனக்கு பல புதிய கோணங்களை புரிய வைத்தது.

தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை, நேதாஜியின் சரித்திரத்தின் வாயிலாகவே அது பெரிதும் காட்சிப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகளில் ஜப்பானிய ஆக்ரமிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, அதன் விளைவுகள் என்ன என்ற நேர்மையான உரையாடல்களை நிகழ்த்திய எழுத்துக்கள் மிகக்  குறைவே.

கிருஷ்ணா நாகரத்தினம் அவர்கள் எழுதிய சைகோன் புதுச்சேரியில் இது விரிவாக பேசப்பட்டாலும், அது அந்தப் பாத்திரங்களின் வழியே நேதாஜியின் மீது பரிவான ஒரு பார்வையை வெளிப்படையாக முன்வைத்தத்து. ஆனால், அதிலும் கூட, வியட்நாமியர்களுக்கு ஜப்பானிய ஆக்ரமிப்பாளர்கள் மீது இருந்த முரண்பாடு மற்றும், வியட்நாமியர்களின் மீது ஜப்பானிய ஏகாதிபத்திய ராணுவத்தின் நடத்தை ஆகியவை அந்நாட்டுப் பாத்திரங்கள் வழியே  குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் நான் வாசித்த ரமா சுரேஷ் அவர்கள் எழுதிய அம்பரம் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியிருந்தது. அதில் அவர் பதிவு செய்திருந்த வரலாற்று நிகழ்வுகள் மிக கூர்மையாக  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக சிங்கையின் போர்க்கால நிகழ்வுகளும், அதில் தமிழர், சீனர், மலாய் என்று அனைத்து இனங்களும் அனுபவித்த கொடுமைகள் மிக உணர்வுப் பூர்வமாக படைக்கப்பட்டிருந்தது.

தமிழர்கள் மீது ஜப்பானிய ஆக்ரமிப்பு ராணுவம் எப்படி நடந்தது, குறிப்பாக சிங்கையில் எவ்வாறு அவர்கள் நேதாஜி உட்பட இந்திய போராட்ட தலைவர்களால் கைவிடப்பட்டனர்  என்பது மிக அழுத்தமாக ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. அதை விரிவாக பேசும் நாவல் அம்பரம்.

இந்திய  இஸ்லாமிய பெண்ணுக்கும்,பர்மிய பௌத்த ஆணுக்கும் பர்மாவில் பிறந்து, ஒரு தாழ்த்தப்பட்டவராக தமிழகத்தில் கருதப்பட்ட  இந்துத் தமிழரால் மகனாக வளர்க்கப்படட  யூசுப் என்ற இளைஞனின் வாழ்வாக ஆரம்பிக்கும் இந்த நாவல், யூசுப்பை இந்திய பர்மிய இனக்கலவையாக, இந்து மற்றும் இஸ்லாமிய மத அடையாளத்தோடும் உலவ விட்டிருப்பதின் மூலம் அன்று பர்மாவில் இருந்த இன  ஒற்றுமை மற்றும்  மத நல்லிணக்கத்தை மிக விரிவாக காட்டியிருக்கிறார், ரமா சுரேஷ்.

‘கடைசியாக இந்தியா செல்லக் கப்பலில் ஏறுவதற்கு முன்பு கூட இதைத்தான் சொல்லிச்சென்றார். “உன்னைய, நான் தம்பி, ஐயா, ராசா, யூசுப், என் குலசாமி என்று எப்படிக்கூப்பிட்டாலும் அத்தனை பெயர்களும் உன்னைத்தான் வந்து சேரும். அதுபோலத்தான் சாமியும். எப்படிக் கூப்பிட்டாலும் அவன் ஒருத்தன்தான். எங்க போயி உக்காந்தாலும் கண்ண மூடிட்டுதான் உக்காரப்போறோம். அது மடமா இருந்தா என்ன? மசூதியா இருந்தா  என்ன! மனசப் போட்டுக் குழப்பிக்காதய்யா, எதச் செஞ்சா நீயும் உன்னைச் சுத்தி இருக்கவங்களும் சந்தோசமா இருப்பாங்களோ அதையே செய். அம்புட்டுத்தான் வாழ்க்கை” அன்று அப்பா என்னைத் தழுவிக்கொள்ளும் போதுப் புது வாசனை, அந்த வாசம் என் உடல் முழுவதும் பரவி என் மனதில் புதுவித உணர்வை உண்டாக்கியது. ஏனோ அப்பா கப்பல் ஏறும் வரை என் கையை விடவே இல்லை. அன்று நான், அப்பா, அப்பாயி மூவருமே சொல்லி விளங்க முடியாத தவிப்புடன் பிரிந்தோம். இந்தத் தவிப்பை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.’

அதேசமயம் பர்மாவில் தமிழர்களின் இடையே இருந்த சாதீய மற்றும் வர்க்க அடிப்படையிலான சுரண்டலையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழர் மற்றும் பர்மிய சாமானியர்களின் நிலையையும் மிக செம்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்தோடு பர்மியர்களின் சாமானிய வாழ்வு மற்றும் அவர்களின் பௌத்த  அற  உணர்வுகள்  எப்படி ஆங்கிலேயரில்  துவங்கி அனைத்து ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்திய சூறையாடல்களுக்கு வசதியாகப் போனது  என்று ஆரம்பத்தில் இருந்து பதிவு செய்திருக்கும் விதம் அபாரம். ஒரு கண்டா மணியில் இருந்து எப்படி பௌத்தமும்  அதன் அமைதியும் அவர்கள் வாழ்வின் திசையை முடிவுசெய்தன என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். கதை முழுவதும், யூசுப்பின் பர்மிய அடையாளம் அந்த அடிப்படையிலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

"ங்குவே! நீ வளர்கிறாய் என்பது உனக்குப் புரிகிறதா? நீ பொறுப்புள்ள மகன் என்பதை நிரூபணம் செய்வதற்கு இதுதானே அறிகுறி. நேற்றைப்போல இன்று விடிவதில்லை என்பது எப்படி உண்மையோ அதே போன்றுதான் எந்தத்துயரமும் அப்படியே இருந்துவிடாது. அது வலுவிழந்து மகிழ்வாக உருமாறுவது உறுதியான உண்மைதானே. மரணம் நீயும் நானும் அறிந்த ஒன்று. இத்தனை வருடம் கடந்தும் நீ அதையே நினைத்துத் துயருற்றால் எங்களின் மரணம் காரணமற்ற ஒன்றாகிவிடும். அதையும் நீ அறிந்தவன்தானே. சகல உலகத்திலும் நீ ஒருவனே துயரத்துடன் இருப்பது போல் வாழ்வது அறிவற்ற செயலாக உனக்குப் புரியவில்லையா ங்குவே! நான் ஏற்கனவே உன்னிடம் கூறிய வார்த்தைகள்தான். இந்தப் பூமியில் மிச்சம் இருக்கும் அத்தனை ஜீவன்களின் உயிர் அதனதன் கர்மாவின் படி வலுவிழந்து உருமாறிக்கொண்டிருக்கும். இது ஒரு சுழற்சி. எழுந்து உன் கர்மாவைப் பின் தொடர். உனக்கான எல்லாம் அதன் இயல்புநிலை மாறாமல் காத்திருக்கிறது.”

நாவலின் இடையிலேயே சிங்கைக்கு திசை திரும்பும் கதை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஆக்ரமிப்பு எவ்வாறு சிங்கையை சின்னாபின்னமாகியது, எப்படி ஆங்கிலேயர்கள் சிங்கை மக்களை நிர்கதியாக விட்டுவிட்டு தப்பித்துப் போயினர், சிங்கை முழுவதும்  மக்கள் எப்படி எந்த இன வேறுபாடும் இன்றி ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமையை அனுபவித்தனர், அதிலிருந்து ஒன்றுபட்டு சிங்கை மக்களாக அதை எப்படி எதிர்கொண்டனர் என்று மிக விரிவாகவும், உணர்வுப்பூர்வமாகவும்  வடித்திருக்கிறார், ரமா சுரேஷ்.

யூசுப்பின் சிறு குடும்பத்திற்குள்ளும் கூட, போரும், ஆங்கிலேய மற்றும் ஜப்பானிய அரசுகள் அதற்கு முன்பாக விளையாடிய பூனை - எலி விளையாட்டு எப்படி புயல் வீச வைத்தது என்பதை மிக அழகாக வடித்திருக்கிறார் ரமா.

நான் சிறு புன்னகையுடன் "உன்னிடம் வெளிப்படையாக ஒன்று சொல்லவா? சொன்னால் கோபிக்க மாட்டாயே?"

“நானா உங்களிடமா!விளையாடாமச் சொல்லுங்க மாமா”

"நாம தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நிறைய இருக்கு குதாஃபக், ஒரே ஒரு புள்ளியை வச்சுட்டுக் கோடு வரஞ்சுட்டேன்னு சொல்லுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதே போலத்தான் ஒரு செயல் இல்ல ஒரு மனிதரைப் பார்த்தவுடன் முழுமையாக எல்லாவற்றையும் தெரிந்துகொண்டேன் அல்லது புரிந்துகொண்டேன்னு சொல்வது. உன்னைப் போன்று நானும் பேட்ரிக்கின் வீரத்தைப் பார்த்து வியந்துபோனேன். சொல்லப்போனால் நான் பார்த்துப் பயந்த முதல் வீரனும் கூட, அதற்காக அவரை என் ஆசானாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த மரியாதை அவர் மீது எப்போதும் இருக்கும். அவருடைய கதையும், நம்மைப் போன்றே போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைதான். அவரைப் பார்த்து அனுதாபப்படுவதும் நம்மைப்பார்த்து நாமே பாவம் என்று சொல்லிக்கொள்வதும் ஒன்னு. நீ வீட்டுக்குள் இருக்கும்வரைதான் சின்னப்பிள்ளை. இந்த வாசலைத் தாண்டிவிட்டால் உன் நிழலைக் கூடச் சந்தேகப்படவேண்டும்.” என் முகமும் அவன் முகமும் மிக அருகில் இருந்தது. என் கண்களுக்குச் சிறு குழந்தையாகத் தெரிந்தான். அவன் கன்னங்களைத் தடவி "நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்கான காரணம் நாம எடுக்கற முடிவுகள்தான், கவனமா இரு குதாஃபக்." அன்று ஏன் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை. கண்ணீர் காதுகளில் நிறைந்து முதுகின் வழிப்பெருக்கெடுத்து ஓடியது.

சிங்கையில் இருந்தாலும், பல்வேறு இனங்களின் இடையே  தமிழர்களுக்கு ஏற்பட்ட  அடையாள சிக்கலையும், பின் அதுவே பேரிடர்காலத்தில் அனைத்து இனங்களோடு இணைந்து சிங்கை மக்கள் என்ற ஒற்றை புள்ளியில் இணைவதும், சிறப்பாக வடித்திருக்கும் விதம் அருமை.

“என் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவன்,  "நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். ஆனால், பிறந்தது வளந்தது பர்மாவில். இப்ப வாழ்வது சிங்கப்பூரில். அப்ப எனக்கு எந்த நாடு சொந்தம் மாமா" என் முகத்தை உற்றுப்பார்த்தான். இதற்கான பதில் தெரியாமல் தானே நானும் சுற்றித்திரிகிறேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியை எந்த மனிதனாவது கேட்டிருப்பானா? இல்லை தனக்கான அடையாளம் நாடா மதமா என்று தேடியலைந்தானா? அவன் பதிலுக்காக என் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் கைகளில் அத்தாப் ஓலைகள் கொண்டு உமர் செய்து கொடுத்த கிளுகிளுப்பாட்டித் தன்னிச்சையாகக் குழந்தைகள் முன் ஆடிக்கொண்டிருந்தது.

"உன் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை குதாஃபக். ஆனால் ஒன்று மட்டும் எனக்குப் புரியுது. அதுவும் என் அபெ, சிவராமன் அப்பா, உன் வாப்பா இவர்கள் எல்லோரிடம் பேசும்போது நான் தெரிந்துகொண்ட ஒன்று எந்த மண்ணில் அவர்கள் சந்தோசமாக இருந்தார்களோ, மனிதர்களாக மதிக்கப்பட்டார்களோ அந்த நிலமே அவர்களுடையதாகக் கருதினார்கள். இதில் இன்னொரு குளறுபடியும் உண்டு. அவர்கள் சந்தோசமாக இருந்த நிலத்தில் மனிதர்களாக நடத்தப்படவில்லை” நான் விரக்தியுடன் சிரித்தேன்.”

எப்படி முதலில் ஜப்பானிய ராணுவத்தலைமை  நைச்சியமாக பேசி, ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட இந்திய வீரர்களில் சிலரை இணைத்து, ஆரம்பித்த  இந்திய தேசிய ராணுவம், பிறகு நேதாஜி வந்து தலைமையேற்றதும் எப்படி விரிவடைய ஆரம்பித்தது என்று பேசுகிறது  இந்நாவல். ஆரம்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மீது  சிங்கை தமிழர்களுக்கு இருந்த அபிமானமும் அதன் காரணமாக அவர் படைக்கு சாமானியரும் தங்கள் கைப்பொருளை காணிக்கையாக்கியதும்,. அதன் வழியே எப்படி மேலும் பல ஆதரவற்ற இந்திய வீரர்கள்  அவர் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்  என்பதும் சிறப்பாக பதியப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் பிரிட்டிஷ் இராணுவத்தில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இருந்தது. INA உருவாக அதுவே மிகமுக்கியக் காரணமாக அமைந்தது. கைதிகளாகச் சிறைபட்டிருந்த வலிமையான இந்திய வீரர்களிடம் முதல் கட்டப் பேச்சுவார்த்தையாகப் பிப்ரவரி 17 அன்று போர்ப் படைத் தளபதிகளான ஃபுஜிவாராவும், மோகன்சிங்கும் ஜப்பானியர்களுடன் இணைந்து இந்தியாவை மீட்டெடுப்போம் என்று வீரம் முழங்கப்பேசி இந்திய இராணுவப் படைக்கு அடிகோலிட்டார்கள். ஏற்கனவே பிரிட்டிஷ் அரசு போரில் தங்களைக் கைவிட்டதாக எண்ணிக் குழம்பியிருந்த வீரர்களுக்கு அதிகாரிகளின் பேச்சு அவர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியது.”

“தீவு முழுவதும் சுபாஸ் சந்திரபோஸ் என்கிற பெயர் பெரும் அதிர்வைக் கொடுத்தது. இந்தியர்களின் வீடுகளில் சுபாஸின் புகைப்படம் ஒரு பாதுகாப்புக் கருவியாகத் தொங்கியது. 1943 ஜூலை 9 படாங் திடல் கடல்வரை நீண்டு நிறைந்திருந்தது. அந்த கூட்டத்திற்குக் காஜியாவும் வந்திருந்தாள். "எள்ளுப் போட்டா, எள்ளு விழுவாது யூசுப்! இத்தனை மக்களும் இந்தத் தீவுக்குள்ளதான் இருந்தாங்களா?” வாய் பிளந்து நின்றாள். தங்கள் குடும்ப விசேசத்திற்கு வந்திருப்பதுபோல் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பிள்ளைகளைத் தோளில் தூக்கிகொண்டு அதோ அந்த வீரனைப பார் என்று தெய்வத்தைக் காட்டுவதுபோல் காண்பித்தார்கள். அந்த குரல் ஒலிக்கத்துவங்கியது. கர்ஜனையாக அல்ல கம்பீரமாக. அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டல் தீவை அதிர வைத்தது. அவர் பேச்சில் இந்தியாவின் சுதந்திர தாகம் பரவத் துவங்கியபோது கைதட்டல்ஒலி நின்று அனைவரின் கண்களிலும் தீ பரவியது. அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை ‘நீங்க ரத்தம் கொடுங்க! நான் சுதந்திரம் தருகிறேன்!" என்றபோது ஒட்டுமொத்த மக்களும் தங்கள் கைகளில் இருந்த உடமையை அவர்முன் வைத்தார்கள். காஜியா அவள் காதில் கிடந்த வளையத்தைக் கழட்டிக் கொடுத்துவிட்டு வந்தாள்.”

ஆனால் அதன் பின், ஜப்பான் எதேச்சாரதிகார ஆக்ரமிப்பு ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்ட போது,  பொது மக்கள் ஆரம்பத்தில் அத்தோடு சமரசம் செய்ய முயன்றதும், அதுவும்  எல்லைமீறி அளவுகடந்த கொடுமைகள் நிகழத்துவங்கிய போது அவர்கள்   திக்கற்று நிற்பதும் காட்சிப்படுத்தியுள்ள விதம் மனதை கலங்கவைக்கிறது.

“ஜப்பானியர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இராணுவ அதிகாரிகளே ஒவ்வொருதுறைக்கும் பொறுப்பேற்றிருந்தனர். அத்தகைய நிர்வாகத் துறைகளுக்குத் தொழிலாளர்களைக் கொடுப்பதற்காகவே கம்பெனிகளும், பூத்தாய்களும் உருவாகினார்கள். நாகத்தை விடக் கொடிய நஞ்சைப் பூத்தாய்கள் உடல் முழுவதும் மறைத்து வைத்திருந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனிதர்களின் இரத்தத்தை ஈவு இரக்கமின்றி உறிஞ்சிகொண்டார்கள். 'கொக்குபு' மிகவும் கண்டிப்பானவர், வார்த்தைகளை விடப் பார்வையைச் சொற்களாகப் பயன்படுத்துவார். பொது மக்கள் தவறு செய்யும்போது கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவர். ஆனால், தன் சகாக்களும், கம்பெனிப் பூத்தாய்களும் செய்யும் அட்டூழியங்களை, அவர்களின் கடமையின் செயல்பாடு என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார். என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட கொடூரமான மனிதர்களுடன் பயணிப்பதை எனக்கான தண்டனையாக உணர்ந்தேன், அவர்கள் கொடுக்கும் பாவச் சம்பளத்தில்தான் என் வீட்டில் நான்கு ஜீவன்கள் ஒரு வேளையாவது சாப்பிடுகிறார்கள்.”

“குழந்தையை வைத்திருந்தவன் தலைக்கு மேலே குழந்தையை வீசிப் பிடித்து விளையாடவே குழந்தை வீறிட்டு அலறியது. தாத்தா வேண்டாம் குழந்தை பயந்துடும் என்று கெஞ்சத் துவங்கினார் இதற்கு மேல் வேடிக்கைபார்ப்பது நல்லதல்ல, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நான் கீழே ஓடிவந்து அவர்கள் அருகில் நின்றேன் குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கி வீசியவன் அவன் கையில் இருந்த துப்பாக்கியைக் குழந்தைக்கு நேராக நீட்டிப் பிடித்தான். துப்பாக்கி முனையில் இருந்த கத்தி குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இருந்து முதுகுப்பக்கம் நுழைந்திருந்தது. பெரும் அலறலுக்குப் பிறகு வீதி தன்னை ஆசுவாசப்படித்துக் கொண்டிருந்தது. தெரு முனையிலிருந்த மாரியம்மன் எதையும் பார்க்கவில்லை என்பதைப்போல நின்றுகொண்டிருந்தாள். ஜப்பானிய வீரர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் வரை பெண்கள் யாரும் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. பலமுறை என் கைகளைக் கழுவியும் பாலின் வாசம் அகலவில்லை. மெல்லிய வயிற்றுக்கொடி என் கைகளைச் சுற்றிக்கொண்டிருப்பது போன்ற உணர்வில் கைகளை உதறி, நெஞ்சில் கையை முன்னும் பின்னுமாகத் துடைத்தபடித் திரிந்தேன். எங்கு சென்றாலும் பிணங்களின் அழுகிய வாடையும் இரத்தக் கவுச்சியின் வீச்சமும் என்னைத் துரத்தியது. என்னால் மனிதர்களின் வாடையைக் கடக்கமுடியவில்லை, நான் வீரன் அல்ல கோழை அதனால் வாயைப் பொத்திக்கொண்டு கதறினேன்.”

போர் என்ற மிருகம் எப்படி மனிதர்களை மிருகத்திலும் கீழாக ஒரு புழுவைப்போல் நசுக்குகிறது என்ற உண்மையும், அதன் உண்மையும், யூசுப்பின் குரல் வழியே முகத்தில் அறைகிறது.

“மிருகங்கள் வேட்டையாடும் போது மனிதன் காவலுக்குச் செல்வது விந்தையான ஒன்று. அப்படித்தான் என் வாழ்க்கையும் இருந்தது. மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடும்போது நான் மிருகங்களின் பின்னால் ஓடினேன். அவர்கள் வீசும் எச்சங்களைப் பொறுக்கி உண்ணக் கற்றுக்கொண்டேன். தலையில்லாத முண்டங்களைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொண்டேன். கண்ணீர் சிந்துபவர்களை அலட்சியமாகக் கடந்தேன். முன்பை விட வேகமாக ஓடி ஒளிய என் உடலும் மனமும் பழகியிருந்தது. யுத்தம் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்து சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு நாளையும் வாழ்ந்தாக வேண்டிய நெருக்கடி சூழ்வதால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே லட்சியமாகிவிட்டது. இந்தத் தீவில் உயிர் பிழைத்திருக்கும் எல்லா மனிதரையும்போல் தான் நானும் நம்புவேன், 'நாளை விடியலில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்போவதில்லை, குண்டுகள் வெடிக்கப் போவதில்லை, மரண ஓலங்கள் கேட்கப்போவதில்லையென...' ஆனால் அந்த நம்பிக்கைக்கு கடவுள்கள் அத்தனை சீக்கிரம் செவி சாய்த்திருக்கவில்லை”

இறுதியில், யூஸுபின் வாழ்வு, அவனுடைய பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே தொடர்கிறது.

"ஙகுவே! செடியை எங்கு எப்படி நட்டு வைத்தாலும் சூரியனை நோக்கித் திரும்பிவிடும். அப்படித்தான் இந்தப் பிறவி. நாம் எங்கு, எந்த நிலையில் வாழ்ந்தாலும் அந்த நிலத்தை நோக்கியே பயணம் செய்யவேண்டும். அந்த நிலம்கொடுக்கும் இன்ப துன்பத்தை உடனே கடந்துவிட நினைக்காதே. நின்று நிதானித்து அனுபவித்து, திளைத்த பிறகு துறந்துவிடு! துறப்பது மட்டுமே நீ எடுக்கும் முடிவாக இருக்கவேண்டும். இடைப்பட்ட அனைத்தும் அதன்படியே நடக்கும். அதை நீ அனுபவி. அப்படியே அனுபவி! அதுதான் இந்தப் பிறவியில் நீ வாங்கி வந்த வாழ்க்கை”

மிகச்சிறப்பாக வந்திருக்கும் இந்த நாவலில் சிறு குறைகள் இல்லாமல் இல்லை. யூசுப்பின் மணவாழ்வும், நண்பனின் மரணமும் இடம்பெறும் கட்டத்தில் அத்தியாயங்கள் மாறி அச்சிடப்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அத்தோடு ஆரம்பத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தை பற்றிய குறிப்புகள், அந்த நாடுகள் உருவாகியிராத  அன்றைய சரித்திரத்தோடு இணங்காமல் தனித்து தெரிவதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இவை இரண்டும் சிறு குறைதான். நாவலின் காத்திரத்துக்கும், சிறப்புக்கும், பெரிய பாதிப்புகளை இவை ஏற்படுத்தவில்லை. அடுத்த பதிப்பில் இவற்றை சரி செய்து விடுவார் ஆசிரியர் என்ற நம்பிக்கையோடு, நாம் கண்டிப்பாக  வாசிக்க வேண்டிய குறிப்பிடத்தக்க புதினம் என்று எந்தவித தயக்கமுமின்றி உறுதியாக கூறுவேன்.

மேல் செல்