கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நா.வே.அருள் படைப்புகளும் பார்வைகளும்

ஜமாலன்

பகிரு

தோழர் கவிஞர் நா.வே. அருள் அவர்களின் கவிதைகள் எனக்கு முதன்முதலாகப் பரிச்சயமானது சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான்.  அவரது பச்சை ரத்தம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச அழைத்திருந்தார்.  அது புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஒரு பெரிய விழா.  அந்நூல் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.  பொதுவாக, கவிதை தமிழ் சமூகத்தின் ஒரு இலக்கிய உணர்வு மட்டுமல்ல உணவும் போன்றது. 

தமிழவனின் “சரித்திரத்தில் படிந்துள்ள நிழல்கள்” என்ற நாவலில் ஒரு காட்சியை சித்தரித்திருப்பார்.  இரண்டு தமிழர்கள் ஒரு மைதானத்தில் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு மலஜலம் கழிக்கும்போது, ஆளாளுக்கு ஒரு கவிதை வரியைச் சொல்லிக் கவிதை எழுதிக் கொண்டிருப்பார்கள்.  இது ஒரு உருவகம் என்றாலும், அதில் ஒரு உண்மை உள்ளது.  எந்த கோட்பாடுகளையும், திறனாய்வுகளையும், உலகளாவிய புதிய சிந்தனைகளையும் வாசிக்காமல், மலஜலம் கழிப்பதைப்போல கவிதைகளை எழுதித் தள்ளுவதில் தமிழருக்கு நிகர் தமிழர்கள்தான்.  காரணம் கவிதை தமிழர்களின் மற்றொரு மொழி.  அதில் அவர்களது இயல்பான மிகை நவிற்சி, பிம்பங்களின் இருத்தலில் சுகம் காணுதல், தன்னால் முடியாத ஒன்றை கனவாக மாற்றிக் காணுதல் என்பது அவர்களுக்கு கைவந்தக் கலை. 

கவிதை ஒரு உயிர்ப்புள்ள மொழி.  ஆனால் நடிகர்கள் பின்னால் சுற்றித் திரியும், திரை இருட்டில் அரசியல் தலைவனைத் தேடும் ஒரு உயிர்ப்பற்ற சமூகம் இன்று மத வெறியின் பின்னால் அணிதிரண்டுக் கொண்டு, கவிதைகளில் குடிசைப் போட்டு அமர்ந்துள்ளது. அதனால் கவிதை என்ற உணவு இல்லாமல் தமிழ் உயிர்வாழ முடியாது என்ற அளவிற்கு கவிதைகள் தமிழின் ஒரு அகமாக மாறியுள்ளது.   நான் கவிதைகளை குறைவாக மதிப்பிடுவதாகக் கருதவேண்டாம்.  சங்க அகப் புறப் பாடல்கள்தான் தமிழர்களை உருவாக்கியது.  இன்றும்கூட கவிதைகள் ஒரு மாற்றுத் தமிழரை, புரட்சிகரத் தமிழரை உருவாக்க முடியும்.  ஒரு புதிய மனிதரை உருவாக்கும் ஒன்றாக இலக்கியங்களே உள்ளது.  அதனால் இலக்கியங்களின் உச்ச வடிவமான கவிதை ஒரு மாபெரும் சமூகப் பணியை ஆற்றக் கூடியது. இலக்கியத்தின் பணி ஒரு புதிய உலகை வாசிப்பவருக்கு கண்டுபிடித்து காட்டுவதாகவும், தருவதாகவும், மறைந்துபோன, மறந்துபோன மக்களை கண்டுபிடித்து தருவதாகவும் இருக்க வேண்டும் என்பார் ஜீல் டெல்யுஸ் – பிளிக்ஸ் கத்தாரி என்ற இரண்டு பிரஞ்சு தத்துவ சிந்தனையாளர்கள்.  இலக்கியம் ஒரு சமூகத்தின் நோய்க்குறியை வெளிப்படுத்துவதாகவும், அந்நோயை தீர்ப்பதற்கான அருமருந்தாகவும் அமைய வேண்டும் என்பார்கள் அவர்கள். ஆனால், மலங்கழிப்பதைப் போல முக்கினால் கவிதை, முனுகினால் கவிதை “மூன்று புள்ளிகள், ஒரு ஆச்சரியக் குறி” என்று மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் கூறுவதைப்போல கவிதையை எழுதித் தள்ளக்கூடாது. கவிதைகள் என்ற பெயரில் குப்பைகளைப் பெருக்குவதால் சமூகத்திற்கு சீரழிவே தவிர சீரமைப்பாகாது என்பதைச் சொல்லித் தொடரலாம். 

நண்பர்களே, தமிழ்க் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகமான நவீனத்துவத்தின் பாதிப்பில் புதுக்கவிதை என்ற பெயரைப் பெற்றாலும், தமிழ்க் கவித்துவப் பாங்கு என்பது சங்ககாலந் தொட்டு நம்ம காலம்வரை ஒன்றுதான்.  அது ஒரு உணர்வுசார்ந்த அகமொழி என்பதே.  ஆனால், இசைக்கேடாக தமிழில் உருவானப் புதுக்கவிதை என்பது கலை உன்னதம் குறித்தும், ஆக்கத்தின் அதி உச்ச வெளிப்பாடாகவும் இங்கு உயர்சாதி பிராமணர்களின் வரவால் மாறியது.  இதன் பின் ஒரு ஆதிக்க ஆளும் வர்க்க அரசியல் உள்ளது.  அந்த அரசியலால் இலக்கிய இயக்கம் என்பது ரசனைவாதம் சார்ந்த கலை உன்னதம் சார்ந்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதன் பின்னிருப்பது தமிழுக்கு புறமான அதாவது அந்நியமான சமஸ்கிருத வேதமத ஆதிக்கம்.  இதற்கு எதிராக உருவான மக்கள் வாழ்வியல் குறித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை பதிவு செய்த கவிதைகள் பிரச்சாரக் கவிதைகள் என்று முத்திரையிடப்பட்டு கலை அடிப்படைவாதிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக செய்தனர்.  இவர்களிடம் கலை குறித்த முக்கியம், தீவிரத்தன்மை ஒரு மதவாத நம்பிக்கையாக மட்டுமே இருந்ததே ஒழிய, உண்மையில் கலை இலக்கியத்தின் சமூகப் பணி குறித்த பார்வை ஆழமாக இல்லை.  காரணம், கலை இலக்கியம் என்பது சமூகத்தின் மொழி வினை என்ற அடிப்படையில் சமூகத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைகளில் ஒன்றாக உள்ளது என்ற பார்வை இல்லை.

உண்மையில், கலை இலக்கியத்தை ஒரு பிரச்சாரமாக, முழக்கமாக முன்வைப்பவர்களே சமூகத்தை கலை இலக்கியமே கட்டமைக்கிறது என்ற பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள்.  அவர்களோ, கலையை தெய்வமாக்கி கல்லாக சமைத்து அதனை பூசிப்பவர்களாக இருந்தார்களே ஒழிய, கலையின் முக்கியமான விளைவு குறித்து அவர்களிடம் பார்வையே இல்லை.  இந்த சூழலில்தான் முற்போக்கு கவிதைகள் ஒரு இயக்கமாகத் தமிழகத்தில் பரவலாகியது. இதனை முன்னெடுத்தவர்கள் இரண்டு போக்கினர். 

1. இடதுசாரிகள்

2. திராவிடத் தமிழ் தேசியர்கள். 

இந்த வரலாற்றை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அருள் அவர்களின் கவிதை இயக்கம் குறித்த கருத்துக்களை பகிரலாம் என நினைக்கிறேன்.

தமிழில் கவிதை இயக்கத்தை நான்கு காலகட்டங்களான அதன் கருத்தியல் மற்றும் அரசியல் பின்னணியில் முன்வைக்க முடியும். 

1. பெருந் தேசியக் கவிதைகள்

2.  திராவிடத் தமிழ் தேசியக் கவிதைகள்

3. உலகளாவிய இடதுசாரிக் கவிதைகள்

4. தனிச்சிறப்பான தலித் கவிதைகள். 

இந்த நான்கு பிரிவுகள் என்பது நான்கு முக்கியமான வரலாற்றுக் காலங்களைக் குறிப்பது மட்டுமின்றி நான்கு முக்கியமான மக்கள்திரளை பிரதிநிதித்துவம் செய்யக் கூடியவை.  இதனை உடலரசியல் அடிப்படையில் கூறினால், இந்திய, தமிழக மனித உடல்களை நான்கு விதமான அரசியல் மற்றும் கருத்தியல் முதலீடுகளாக அதாவது, political investment ஆக மாற்றிய வரலாறு என்று சொல்லலாம்.  அதாவது சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த மனித உடல்கள்,  தேசியம் என்ற கருத்தியலால் கட்டப்பட்ட சொல்லாடலால் வழிநடத்தப்பட்டது.  அனைத்து உடல்களும் தேசிய உடல்களாக மாறின.  இன்று இத்தகைய பெருந்தேசியக் கவிதைகள் உயர்சாதி, பிராமண மக்கள்திரளின் குரலாக மாறிவிட்டது.  சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் தேசிய உடல்களுக்குள் ஒரு விழிப்பை உருவாக்கியது திராவிடத் தமிழ் கருத்தியலால் வழி நடத்தப்பட்ட திராவிடச் சொல்லாடல்.  அதன் ஒரு விளைவாக தமிழில் திராவிடத் தமிழ் உடல்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.  இன்று இது பிற்படுத்தப்பட்டோர் என்கிற மக்கள்திரளின் குரலாக மாறிவிட்டது.  திராவிட இயக்கம் தீவிரமடைந்த காலங்களில் இடதுசாரி மரபு ஒரு தனித்துவமிக்க பாதையை தேர்வு செய்துகொண்டது.  இடதுசாரி உடல் உருவாக்கம் என்பது இடதுசாரிக் கருத்தியலால் வழி நடத்தப்பட்ட சொல்லாடல் வழி நிகழவில்லை என்பது ஒரு வரலாற்றுச் சிக்கல்.   காரணம், மற்றவை பொதுபுத்தி சார்ந்தவை என்றால், இடதுசாரி மரபு விமர்சனச் சிந்தனை சார்ந்தது.  சமூகமாற்றம் குறித்த பொறுப்புணர்வு கொண்டது.  இது எக்காலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்படுவது.  90களில் உலகமயமான இந்திய ஒன்றியத்தில் தலித்  விழிப்புணர்ச்சி உருவாக்கிய தலித் கருத்தியலால் வழிநடத்தப்பட்ட சொல்லாடல் தலித் உடல் உருவாக்க நிகழ்வுப்போக்கு தற்காலக் கவிதை இயக்கத்தின் மையமாக மாறியுள்ளது.  இது தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக வெளிப்பட்டு வருகிறது.

இந்த சுருக்கமான வரலாற்றுச் சூழலில் கவிஞர் நா. வே. அருள் அவர்களின் இடதுசாரி மரபின் முக்கியத்துவத்தை முன்வைத்துப் பேச வேண்டியதாக உள்ளது.  காரணம், தமிழ் படைப்பிலக்கியத்தில் இம்மரபு அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதானதாக மாறியுள்ளது.  தமிழில் இம்மரபு தொ.மு.சி. ரகுநாதன், விந்தன், தமிழ்ஒளி, ஜீவானந்தம், ஜெயகாந்தன், தணிகைச் செல்வன், கந்தர்வன் எனத்தொடர்ந்து கவிஞர் இன்குலாபில் உச்சம் பெற்றது.  அதன்பின் தமிழ் இலக்கியச் சொல்லாடல் புலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களால், அதனைத் தொடரும் ஒரு போக்கு அரிதாக மாறியது.  அப்போக்கில் கிளைத்து நின்று தனது தனித்தன்மையை விடாமல் எழுதிவரும் ஒரு கவிஞரே நா.வே. அருள்.

அவரது பச்சை ரத்தம் கவிதைநூல் விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு கவிதைப் பதிவாக வெளிவந்தது.  தற்போது வெளிவந்துள்ள இக்கவிதை நூல்கள், அதன் தொடர்ச்சியாகவும், அதை மீறிய ஒரு புதிய மொழித் தடத்தில் கிளைப்பதகாவும் வெளிவந்துள்ளது.  புதிய மொழித்தடம் என்று நான் கூறுவது, கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராம், பாலைவன லாந்தர், தேன்மொழி தாஸ் போன்றவர்களின் படிமம் சார் மொழிநடையையே.  (எனது பார்வைக்கு வந்த கவிஞைர்களையே ஒரு சான்றுக்காக சுட்டுகிறேன்.  இன்னும் பலர் இருக்கக் கூடும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.)  இவர்கள் அரசு எதிர்ப்பு, இடதுசாரிச் சார்பு, மதவாத எதிர்ப்பு, இந்துத்துவ பாசிச எதிர்ப்பு ஆகியவற்றை அரசியல் சார்பற்ற ஓர்மையுடன் ஒரு புதிய படிமமாக மாற்றி எழுதி வருபவர்கள்.  இதே படிமம் சார்ந்த மொழிநடையை தனது புதிய கவிதைகளில் நுட்பமாக எழுதிச் செல்பவராகவும், அதேவேளையில் அரசியல் சார்புடன்மக்கள் கவிதை என்ற ஓர்மையுடன் எழுதுபவராக நா. வே. அருள் உள்ளார்.  தமிழ் ஒளி, இன்குலாப் போன்று வெளிப்படையான அரசியல் சார்பு இவருக்கு உண்டு.  அதேநேரத்தில் தனது அரசியலை பிரச்சாரம் என்று கலை அடிப்படைவாதிகள் கூறுவதைப்போல வெளிப்படையாக வைப்பவராகவும், அவர்கள் கூறும் உணர்வுசார் உத்திகளைப் பயன்படுத்துபவராகவும் உள்ளார்.

மனிதர்களின் அகஉலகை புத்தாக்கம் செய்வது ஒருவகை அழகியல் என்றால், புறஉலகை திறனாய்வுச் சிந்தனையுடன் அணுகி, அகஉலகின் அழகியலில் உள்ள பொய்மைகளை அம்பலப்படுத்துவது மற்றொரு வகை.   கவிதை வெறும் அழுகுசாதனப் பொருள்போல மனித உணர்வுகளுக்கு ஒப்பனைப் போடுவதாக அமையாமல், சமூகத்தின் ஒப்பனையற்ற நிலையை அரசியல் அறத்துடன் பேசவேண்டியதும் அவசியம்.  அத்தகைய கவிதைகளின் ஒன்றாக அமைவதையே சமூக உணர்வு சார்ந்த கவிதைகள் என்கிறேன். 

தமிழ் கவிதைகளில் சமூக உணர்வு சார்ந்த கவிதைகளின் பாரம்பரியத்தில் தன்னை தகவமைத்துக் கொண்டு தனித்துவமான  கவிதைகளை இடதுசாரி உணர்வுடன் எழுதக்கூடியவர் கவிஞர் நா.வே. அருள்.  இந்தியாவில் வளர்ந்துவரும் பெருமுதலாளியப் பாசிசம் தின்றதுபோக, மிச்சமுள்ள இந்திய விவசாயத்தை முழுமையாக தனது உணவுத்தட்டிற்கு கொண்டு வர முயன்று போடப்பட்ட கடுமையான விவசாய சீர்திருத்தச் சட்டம் என்கிற புதிய கொடுங்கோண்மையான சட்டத்தை எதிர்த்து வீரச் சிங்கங்களான பஞ்சாபிய விவசாயிகள் வருடக் கணக்கில் தெருவில் அமர்ந்து வெட்டவெளியில் அறத்துடன், அஹிம்சையுடன் போராடியபோது, அதனை தனது “பச்சை ரத்தம்” என்ற கவிதை நூலாக, ஒரு இலக்கிய சாட்சியமாக பதிவு செய்தவர்.   விவசாயிகளின் ரத்தம் சிவப்பு நிறமல்ல இயற்கை உயிர்ப்பதின் பச்சை ரத்தம் என்ற படிமத்தை முன்வைத்து அக்கவிதை நூல் அரசியல் பார்வையுடன் அந்த போராட்டத்தையும், அதனை அடக்கி ஒடுக்கிய அரசு பாசிசத்தையும் கவிதைகளாக பதிவு செய்திருந்தது.  சமகாலப் பதிவுகளை அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை ஒரு இலக்கியம் சாட்சியாக நின்று பதிவு செய்வதையே நாளைய வரலாறு தனக்கான ஆவணமாக எடுத்துக் கொள்ளும்.  சங்கக் கவிதைகள் தமிழ் வரலாற்று எழுத்தியலுக்கு ஒரு அடிப்படையாக அமைந்திருப்பதைப்போல.  கவிஞர் நா. வே. அருள் அவர்களின் கவிதையுலகம் எனக்கு அந்நூல் வழிதான் அறிமுகமாகியது.  இடதுசாரி கவிதைகளில் ஒரு நம்பிக்கைத் தரும் கவிஞராக அவரை அதில் அடையாளம் காணமுடிந்தது.

“அந்தோனியா கிராம்சி புரண்டு படுக்கிறார்“ என்று இன்றைய கம்யுனிஸ இயக்கங்கள் குறித்த பதிவாக ஒரு கவிதை உள்ளது.  அதில், “கவிதைக் கண்ணாடியில் / முகம் பார்க்கையில் / ஒரு கம்யூனிஸ்டின் சாயல்!” தென்படுவதை பதிவு செய்கிறார்.  இந்த சாயல் என்ற சொல் முக்கியமானது.  இக் கவிதை எதிர்மைகளின் புரிதலில் எழுதப்பட்டுள்ளதை வாசிக்க முடிகிறது. 

“மருந்து நோய்களால் செய்யப்பட்டிருப்பதைப் போல

விருந்து பசியினால்

ஆக்கப் பட்டிருப்பதைப் போல

பார்வை குருட்டுத் தனத்தினால்

முடையப் பட்டிருப்பதைப் போல

பாதை முட்டுச் சந்தினால் போடப் பட்டிருப்பதைப் போல

ஆடை அம்மணத்தால் உடுத்தப் பட்டிருப்பதைப் போல

அன்பு சர்வாதிகாரத்தால் ஊடுருவப் பட்டிருப்பதைப் போல

வார்த்தை மௌனத்தால் உச்சரிக்கப் பட்டிருப்பதைப் போல

சுதந்திரம்

எதிர்மறைகளால் மறைக்கப்பட்ட

சாதுரியம்.“

இவர் சுயவிமர்சனமாக கவிதைகள் தனக்குள் ஏற்படுத்தும், உருவாக்கும் உணர்வுகள், அதனால் தனது தன்னிலைக் கட்டப்படும் விதம் குறித்து எழுதுகிறார்.  கவிதைகள் பற்றிய கவிதைகளாக உள்ள அவை ஒருவகை சாட்சியங்களாக  வெளிப்படுகிறது.

“சொற்களின் புண்கள் சொறிந்து / வடுக்களைக் காயங்களாக்கும் / கவிதைக் குரங்கு.” இப்படி சமூகம் உருவாக்கிய அக வடுக்களை சொறிந்து சொறிந்து புண்களாக ஆக்கிவிடும் குரங்குத்தனம் கவிதைகளுக்கு உண்டு என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது இவ்வரிகள்.  தற்கால பேரவலங்களில் ஒன்றான, இவ்வுலகின் இயக்கத்தை நிறுத்தி, புதிதாக இயக்கத் துவங்கிய Global Reset என்று உருவாகியுள்ள உலக பேராபத்தின் ஓர் ஆரம்பமே கோவிட் என்கிற நோய் பரவலாக்கம்.  அந்நோய் குறித்த ஒரு கவிதையும் இத்தொகுப்பில் உள்ளது. “அரசு / பிணத் தொழிற்சாலையானால் / உற்பத்திப் பொருளாகும் / மரணம்.” என்று உலகளாவிய மரண வியாபாரிகளாக மாறிவிட்ட கார்ப்பரேட் முதலாளியத்தினை அம்பலப்படுத்துவதாக இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் உள்ளார்ந்த பாடுபொருள் அமைந்துள்ளது. 

எல்லாவற்றிற்குப் பின்னும் ஒரு வர்க்கநலன் இருப்பதை வெளிப்படுத்த, பல்வேற சமூக நிகழ்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகளாக்கி உள்ளார்.  உணர்வுகள் முதலாளியப் பொருளியலின் ஒரு மனிதார்த்த வடிவமாக மாறியுள்ளது.  இனி அந்த உணர்வுகளால் இந்த உலகை அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது.  நாம் புதிய உணர்வுகளுக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அதற்கு இன்றைய உணர்வுகளின் பின்னுள்ள பொருளியல் நலனை அறிவது அவசியம்.  அந்த அறிதலை கவிதை வழி உணர்தலாக மாற்ற முயன்றுள்ளார் கவிஞர் நா. வே. அருள்.

தொகுப்பின் ஒரு கவிதைக் கூறுவதைப்போல  எழுதுகோல் ஒரு குறியீடாக அவருக்கு உள்ளது.  அதன்வழி ஒரு சமூகக் குறித்தலை செய்ய முயல்கிறார்.  கவிதைகளில் மொழியின் மௌனமும், முனுமுனுப்பும், உரக்க பேசுதலும், அரற்றலும், ஆக்ரோசமான கத்தலும் என பலவித குரல்களின் ஏற்ற இறக்கங்களை வாசிக்க முடிகிறது.  சில இடங்களில் மொழியின் மௌனம் உடையும் இடத்தில் கவிதைக்கான ஓசையைக் கேட்க முடிகிறது.  நிலமிழந்த விவசாயிகளின் நிலை, வீடிழந்த பாட்டாளிகளின் நிலை, நகர்மயத்தில் விளிம்பிற்கு தள்ளப்பட்ட மனிதர்கள், சாதிய, மத, குடியுரிமை பறிப்பு என சர்வாதிகார அரசினால் கொன்றொழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் குரல்களை பதிவு செய்வதாக அமைந்துள்ளது இவரது கவிதைகள்.

தமிழ்ச் சூழலில் கவிதைகள் முழக்கங்களாகக் கூடாது என்று கலை அடிப்படைவாதிகள் ஒரு கலைத் தடையை உருவாக்கியுள்ளனர்.  அதற்கு காரணம் அன்றைய திராவிட இயக்க கவிதைகள் அரசியல்  முழக்கங்களாக வெளிப்பட்டதால் அரண்டுபோன பிராமணியம், முழக்கம் என்பதே கலைத் தன்மையற்றது என்ற ஒரு எழுதாக் கிளவியாக கோட்பாட்டை உருவாக்கி, அதனை தமிழ் இலக்கியக் கோட்பாடாக தமிழ் இலக்கியச் சூழலின் நனவிலிக்குள் கட்டமைத்துவிட்டது.  அதன் விளைவு, துவக்கத்தில் கூறியதைப்போல, சமூக உணர்வு சார்ந்த, இடதுசாரி, புரட்சிகரக் கவிதைகளை கலை உணர்வுக்  கொம்புகளால் தீண்டத்தகாத ஒன்றாக மாற்றியுள்ளனர்.  அதனைமீறிய எதிர் மற்றும் மாற்றுக் கவிதையாடலாக கவிதை எனும் பேராயுதத்தை கையில் ஏந்தக்கூடிய ஒரு மரபு இங்கு உண்டு.   அம்மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிதைகள் இவை.  இக்கவிதைகளை முழக்கங்கள் என ஒதுக்குபவர்கள்தான் தங்கள் முழக்கங்களை அதிகாரத்துடன் உரத்து முழங்குபவர்களாக உள்ளனர் என்பதே கண்கூடு.

கவிதை முழக்கமாகாது, ஆனால், முழக்கங்கள் கவிதையாகலாம் என்று இடதுசாரி புரட்சிகரக் கவிஞர்கள் செயல்படுத்திக் காட்டிக் கொண்டுள்ளார்கள்.  அவ்வகையில் இன்றைய சர்வாதிகாரத்தின் ஒப்பனை அறையாக மாறிவிட்ட தேசத்தின் அரசியலை எதிர்ப்பு கவிதைகள் வழி முழக்கமாக முன்வைப்பவராக உள்ளார் கவிஞர் நா. வே. அருள்.  இன்று ஒப்பனைகளால் இந்திய ஒன்றியத்தை ஒரு மதவெறி நாடக அரங்காக மாற்றிவிட்ட தற்போதைய சர்வாதிகார அரசியலை தனது கவிதைக் களனாகக் கொண்டு வெளிப்படுகிறது இக்கவிதைகள்.  தோழரும் கவிஞருமான நா. வே. அருள் தனக்கென்று ஒரு அடையாளமாக உருவாக்கியுள்ள இம்மரபில் பல்வேறு தடங்களை உருவாக்குபவராக தொடர்ந்து இயங்க வேண்டும். 

மேல் செல்