கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையே இயங்கும் மீமெய்மைகளின் பிரதி (தேவேந்திரபூபதியின் வாரணாசி கவிதைத் தொகுப்பை முன்வைத்து...)

யவனிகா ஸ்ரீராம்

பகிரு

எந்தவொரு தேசத்தின் கவிதைகளையும் அது எந்த மொழியில் இருப்பினும் இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, காலகாலமான மனிதனின் வரலாற்றுத் தடங்கள் மிகுந்தவை. இன்னொன்று, அருகிவிட்ட விலங்குகளின் தடங்களைத் தேடி அவற்றை எண்ணிக்கையிடுவது. முதல்வகைக் கவிதைகளுக்கு எப்போதும் ஆவணங்கள் உண்டு.அவை பெரும்பாலும் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை நம்பியிருப்பவை. மனித உயிர்  உணர்ச்சிகளை அல்லது மனிதனாக இருப்பது குறித்து பிரலாபித்துக்கொள்பவை. அவை இடம், காலம் போன்றவற்றில் தன் புழங்கும் மொழியை அற்புதமாக்குபவை. மிகையுணர்ச்சிக்கும் தனது மனிதப்பார்வைகளுக்கு இடையே சாராம்சத்தை நிலைநிறுத்த முயல்பவை. மரணமும் காதலும் இறப்பும் அவற்றில் ஊடாடும் அவஸ்தைகளும் குதூகலங்களும் இப்படி ஏதும் இல்லாமலும்கூட மனித யத்தனம் என்ற அளவில்கூட அவை நிலைபெற்றுவிடுகின்றன.

அப்படியான அவற்றின் இருப்புக்கு வாஞ்சையும் அன்பும் அவற்றை கொஞ்சி மகிழவும், எடுத்தியம்பவும், அவற்றை மக்கள்வழி மான்மியங்களாகப்  பாதுகாக்கவும் குறிப்பான ஒரு பிராந்தியம், அதன் மொழி, இருத்தல் யாவும் தங்களின் அடையாளங்களாகவும்கூட அவற்றைத் தக்கவைத்துக் கொள்கின்றன. ஒரு கட்டத்தில் கவிஞர்கள் எல்லோரும் நாடு, மொழி என்ற அம்சத்தில் தங்களை இனம் காண்கிறார்கள். இங்குதான் வல்லுனர்கள் கவிதைக் கான அழகியல், தொனி, இறைச்சி என அதற்கு ஒரு  இலக்கணம் வகுக்கிறார்கள்... இப்படித்தான் கவிதை  களுக்கான அடிப்படைகளை தமிழ் தன் இரண்டாயிரம் வருட மரபாக இன்றைய சமகால நவீனக்கவிதை வரை கொண்டு செலுத்துகிறது.

சாராம்சத்தில் தமிழில் தத்துவ மரபானது, ‘உண்ணநாழி உடுத்த இரண்டு’ என்ற நிலைப்பாட்டில் இருந்து தொடங்குகிறது. சங்க இலக்கியத்தின் அத்தனை  கவிதைகளும் காதலுக்கான பொருள்வயின் வறுமையிலேயேயும் கூட அழகியலாகவும் பிரிவாகவும்  காமமாகவும் இயற்கை எழில்களாகவும் தம் வாழ்வை  மொழியாக்கி வந்திருக்கின்றன.

இங்கிருந்து தொடங்கி விரியும் தொல்காப்பியனின் உரைகளை இன்றைய கல்விப்புலங்கள் பாடத்திட்டங்களாக்கிக் கொண்டதும், அதன்வழியே தமிழ்  நிலத்தை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாக வகுத்துக் கொண்டதும் ஒரு மன அமைப்புசார்ந்த யதார்த்தம்  எனில், இப்போது நாம் இரண்டாம்வகை கவிதைகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் கவிஞர் தேவேந்திரபூபதி கவிதைகளை வைத்து ஒரு வாசிப்புரையை முன் வைக்கலாம்.

தமிழின் தத்துவார்த்த பிரச்சினைகள் மெல்ல மங்கி  மறைந்து மொழியின் இருப்புக்கான அரசியலாக அவை, குறிப்பான லௌகீக வடிவமெடுத்த இடத்தில் அதை மீறி அதன் நவீன மாற்றங்களை மீண்டும் தத்துவத்தை மீளாக்கம் செய்யும் இடத்தை அசாதாரணமாக, தேவேந்திரபூபதியின் கவிதைகள் இட்டு நிரப்புகின்றன. தத்துவப் பிரச்சினை என்பது வானத்தில்  புல் முளைப்பதுபோல் அல்ல. அவை அருகிப்போன  விலங்குகளையும் விழுமியங்களையும் எண்ணிக்கையிடுவது போலத்தான்.

ஜீவ நடமாட்டம் 

நல்ல நிலங்கள்
யாரின் பார்வையில் இருக்கின்றன 
உதிர்ந்த மரச்சருகுகளை தீமூட்டி சாம்பலாய் 
உரமிடும் அல்லது பருவத்தில் மழைபெற்றுவிடும்  
நல்லநிலம் 
உயிர் சம்பவத்தில் காதலை விரும்பித்தான் 
ஜீவ நடமாட்டம் 
அதற்குள் ஒரு கோடி மலர்கள் வாடி விழுந்து 
விடுகின்றன 
ஆதவன் தோன்றி எத்தனை ஒளியாண்டுகள் 
இப்போதும் ஓரிரண்டு சொற்களை 
இறுகப்பிடித்துள்ளேன் 
நம்பிக்கைகளை விதைக்க முடியவில்லை 
அவற்றின் ஓடு கடினமாயிருக்கிறது 
கடலில் இருந்து வீடுவரும் மீன் 
உணவிற்கு மேல் என்ன செய்தி சொல்கிறது 
ஒரு அலையைத் தின்றுவிட்டு 
ஓராயிரம் அலைகளை வேடிக்கை பார்க்கிறேன் 
நீதியின் நிமித்தம் ஒரு நல்ல நிலத்தை 
எனக்கு சிபாரிசு செய்யுங்கள் 
ஒரு நாற்றையேனும் நட்டு விடலாம்.

இந்தக் கவிதையில் ‘உயிர் சம்பவத்தில் காதலை  விரும்பித்தான் ஜீவ நடமாட்டம்’ என்ற ஒரு வரியை  போகிறபோக்கில்ழுதியிருக்கிறார். தத்துவத்தின்  பரிணாமம் எப்படியேனும் தன்னை தகவமைத்துக்  கொள்கிறது. இனி, நீதியின் நிமித்தம் ஒரு நல்ல  நிலத்தை தனக்கு சிபாரிசு செய்யும்படி கேட்கும்போது  நமது அகன்ற வாழ்வின் பொருள் மங்கி, துயரம்  மேலேறுகிறது. ஒரு கவிஞன் தனக்குள் ஒடுங்குகிற  இடமும் முன்வைக்கும் அரசியல் வெளியும் இதுதான்.

இந்த வாசிப்புரைக்காக மீண்டும் ஒருமுறை  ‘வாரணாசி’ தொகுப்பை கையிலெடுத்தபோது, ஒரு பக்கத்திலிருந்து இன்னொருபக்கம் செல்ல நெடுநேரமானது. பொதுவாக, மௌனங்களை பேச்சாக்குவதும்  பேச்சை மொழியாக்குவதும்தான் என்றாலும் மஹாவாக்கியங்கள் நம்மை மீண்டும் மௌனத்திலேயே தள்ளிவிடுகின்றன. ‘நடுமனத்தின் பயம் ஊர்ந்து மறைந்தது.’ ‘நாளை மறுநாள் யுகம் என்றது அறிவு’. யுகங்களின் பெரும்பாலும் எந்தக்காலக்  கண்ணியில் நடமாடுகிறோம். தேவேந்திரபூபதியின்  கவிதைகள் நா.பிச்சமூர்த்தி தொட்டு ஞானக்கூத்தன்  வரையிலான கவிதைகளில் காணப்படும் ஒரு தொகுப்பறிவையும் அந்நியமாதலின் நவீனத்தையும் ஞாபகப்படுத்துவதோடு அதிலிருந்து வெளியேறி சமகால தகவமைப்புகளை அரசியலாகப் பேணிக்கொள்வதாகவும் இருக்கிறது.

பொதுவாக தமிழ்நிலங்கள், ஊர்கள், பட்டிகள்  யாவற்றிலும் அங்கு வாழும் மக்கள் தொகுதியிலிருந்து அந்நியப்பட்டுத்திரியும் ஒரு பிச்சாண்டி மனிதனை  அல்லது அவரது சமாதியையேனும் கொண்டிருப்பதைக்  காண்கிறோம். அதை தமிழின் சித்தர் மரபு என்று கொண்டால், ஏறக்குறைய இவரது கவிதைகள்  அத்தகைய தன்மையை நோக்கிப் பயணிக்கின்றன,  அதாவது தன் சுயத்தை அவை பரிசீலனைக்கு வைப்பதில் ஒருவித தாமதத்தை மேற்கொள்கின்றன  என்றே தோன்றுகிறது அல்லது லௌகீகத்தை ஒத்திப் போடுகிறது. இயங்காற்றலில் விரைந்து முயல்கிறது.

சருவம் செய் மனம்

கனகாலம் மெய் வளர்த்தேன் 
சிலகாலம் மையலுற்றேன் 
உருவம் உருவம் என்றே உலகளந்தாலும் 
உடன் வரும் நிழலும் சுடுகிறது 
காற்றைப் பிரித்து ஊற்றைக் குடித்து 
சோற்றைக் கடப்பார் 
நேற்று இன்று நாளை என்பார் 
சகவாசம் வெளிவேசம் 
என் பெயர் உருவமா அருவமா 
செய்யுடலை சருவம் செய்கிறது மனம் 
சகதியில் அகதியில் தன்னகத்தே 
உயிர் மெய்ஞானம் கண்டு 
உழல்வது ஓர் பௌதீகம் 
ஒட்டைப் படகும் ஆற்றில் அழகு 
ஓடும் மீனுக்கு ஒய்யாரக் காத்திருப்பு  
கருவாய்ப் பிறந்து தருவாய் 
தருவாய் தக்க பதிலெனில் 
கேள்வியாய் மிஞ்சாதே என்கிறது அகம்.

இதில் ‘உயிர் மெய்ஞானம் கண்டு உழல்வது ஒரு  பௌதீகம்’ என்றுவிட்டு ‘ஓட்டைப்படகும் ஆற்றில்  அழகு’ என்கிறார்.

இது, கீழைத்தேயக் கவிதைக்கிடையில் ஆசிரியர்  கூற்று என்பது,  யற்கையின்மீதான சாகசமாக இருக்கக் கூடாது. அதனளவில் அதிலிருந்து விலகியிருப் பதைத்தான் தரிசனம் எனலாம், ஜென்நிலை எனவும்  துணியலாம். ‘பார்க்க ஆளில்லையென்றால் வானம் நீலமாக இருக்காது’ என்ற தமிழ்ச் சிந்தனைமரபுக்கு எதுவாகவே இத்தொகுப்பின் விதைகள் பலவும் இயங்குகின்றன. இன்றைய நவீனத்துவ மாற்றங்களுக்கு பெரும்பாலும் மனம்கொடுக்காத தேவேந்திர பூபதியின் கவிதைகள் ‘வாரணாசி’ என்ற தலைப்பை இந்தத் தொகுப்புக்கு வைத்ததன் மூலம் ஒருவகையான பிரபஞ்சக் குறுக்குவெட்டாக அதன் காண்  பரப்பாக தன் மொழியை விரித்து எழுதிச்செல்கின்றன  என்றும் சொல்லலாம்.

வரலாற்றைத் தொகுப்பது என்பதைவிட்டு நிகழ்காலத்தின் பிடிமானங்களைப் பற்றி பேசும் இக்கவிதைகளில் குறிப்பிடத்தகுந்ததாக  ‘குளிர்காலத் தேநீர்’, ‘அன்றாடம் தேடும் முட்டை’  ‘ஊர் சுற்றிவந்த மண்’, ‘எதுவும் தேங்வதில்லை’,  ‘ஆள்காட்டி விரல்’, ‘சூட்டுக்கோல்’ போன்ற  கவிதைகள் தமிழுக்கு மிகவும் புதியவை என்றும்  இன்னும் பிரயோகித்துப் பார்க்காத தனிவகையானவை  என்றும் சொல்லலாம்.

இன்னொருபக்கம், காதலின் இடத்தில் இக்கவிதைகள் உருவாக்கும் தற்சார்பான சுயம் தனது மற்றமையை பாலியல் ஈர்ப்பிற்கான விளையாட்டாய் வெளியே நிறுத்தி விசாரிப்பதாகவும் அனுமதிப்பதாகவும் நீங்குவதாகவும் அதன் சாராம்சத்தைச் சீண்டி தப்பிப்பதாகவும் தனித்துவம் கொள்கிறது. கால காலமாக சித்தர்கள் உச்சரித்த பெண்வெளி இக்கவிதைகளில் பேரியக்கமாகத் தொடர்கிறது.

இருபாலருக்கும் இயங்கும் லிபிடோ எனும்  பாலியல் உந்தம் தத்துவார்த்த லோகாதாயத்தின் புற விளைவுகளில் ஒரு வரலாற்று வாதமாகவும், வடிவெடுத்து அதில் ஆணிய சிறப்பம்சமே அழகியலாக  மேலோங்கி வந்திருப்பதாக நம்மை உணரவைக்கிறது.

நவீனத்துவத்திற்கு பெருகிவிட்ட பிரச்சினைப்பாடுகள் அதிகம் என்றும் பழங்காவியங்களுக்கு  அழகியலே போதும் என்பார் ஞானக்கூத்தன். அவ்வகையில் இத்தொகுப்பு பல தத்துவக் கேள்விகளுடன்  உரையாடுவதாகவும் எடுத்து மேற்செல்வதாகவும்  ளனத்தில் விடப்பட்ட பல தோற்றுவாய்களை  தேடிக் கண்டடைவதாகவும் ஒரு வாசிப்புத்தளத்தை  எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புகளில் ஒன்றான ‘வாரணாசி’  சொல்முறையில் பல ஆச்சர்யங்களையும், காட்சிப்படுத்தலில் தனக்கேயான ஆளுமையுடன், தமிழ்  வாழ்வின் அடையாளமாக மட்டுமல்ல பழமையின் வெற்றுண்மைகளை புறம்தள்ளி, புதிய திறப்புகளோடு வந்திருக்கிறது. மொழியில் அற்புதமான  சொல்லாட்சியுடன் கவித்துவத்தில் எந்த உலகக் கவிதைகளுக்கு ஈடாகவும், வாசிப்பில் சூரியக்கதிர்கள் ஊடுறுவிப் பாய்ந்து நிற்கும் தடாகத்தின் ஆழ்ந்து  அமைதியைக் கொண்டவையாக இருப்பது ஒரு  புறம் என்றால், உயிர் வாழ்வின் நவீன அறங்களை  அளித்து நிறுவனத்தின்றும் விலக்கி அவற்றின்  விடுதலையை பரிந்துரைப்பதாகவும் ஆன்மீகத்திற்கும்  கலைக்கும் ஆன மரபுகளில் குறுக்கிட்டு அவற்றிற்கு  புத்துயிர்ப்பைக் கொடுத்து ஒரு மாற்று உருவவெளியை  மீபுனைவாக ஆக்கித் தருகின்றன.

மேல் செல்