கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ராஜ்குமார் ஸ்தபதி -வண்ணங்களே மனிதராம்

இந்திரன் ராஜேந்திரன்

பகிரு

நிறமே ஒளியை வெளிப்படுத்த உதவுகிறது, இயற்பியல் நிகழ்வல்ல, ஆனால் இருக்கும் அந்த ஒற்றை ஓளி, கலைஞனின் மூளையில் உள்ளது - ஹென்றி மாத்தீஸ்.

தென்னிந்திய கோயில்களின் இருண்ட கூடங்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுவரோவியங்களை வரைந்த பழம்பெரும் ஓவியர்கள் பெரும்பாலும் பெயரடையாளமற்று இருப்பதொன்றும் ஆச்சர்யமானதல்ல. அச்சுவரோவியங்கள் ஒரு தனி நபரால் அல்லது பண்டையகால ஓவியர் குழுவால் உருவாக்கப்பட்டதா என்பது நமக்கு தெரியவில்லை.

ஆனால் இப்போது கதை வேறு. இன்று நாம் அக்கலைஞனை ரத்தமும் சதையுமாக அவன் கித்தான் முன்பு இழுத்து வருகிறோம். நிறைய ஆற்றலும் உள்ளுணர்வும் சர்வதேசிய அங்கீகாரம் கொண்ட ஒரு புதிய தலைமுறை கலைஞனோடு நாம் இருப்பதை, ஒரு சர்வதேச நகரமான ஆரோவில்லிலுள்ள ராஜ்குமார் ஸ்தபதியின் ஸ்டூடியோவில் இருக்கும் போது உணர்ந்தேன். ஸ்டூடியோவிலுள்ள பெரும்பான்மையான அவரது வேலைப்பாடுகள் அவரது தனித்த முத்திரையுடன் பற்பல இன அடையாளத்துடன் பல்வேறு இந்திய முகங்களின் உருவப்படங்கள் தத்ரூபமான நீர் வண்ணங்களால் ஆனதாக உள்ளன.

கும்பமேளா மற்றும் பிற திருவிழாக்களில் பல்வேறு இனக்குழுக்களில் தனது ஓவியத்துக்கான மாதிரிகளைத்தேடி மக்கள்தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் தன் வண்ணமயமான ஆசிய துணைக்கண்டத்தின், இந்தியாவின் பல பகுதிகளில் தனியாக பயணித்திருக்கிறார். கும்பமேளா வரிசை, வர்காரி வரிசை, தமிழ் முகவரிசை, பல்வேறு ஒளி வரிசை, மகாபாரத நினைவு வரிசை போன்ற அவரது ஓவிய வரிசைகளில் வித்தியாசமான ஒளி மற்றும் வண்ணச்சாயல்களை கொண்ட நீர்வண்ண உருவப்படங்களை பரிட்சித்துப் பார்த்துள்ளார். குங்குமச் சிவப்பை முகத்துக்கு பயன்படுத்துவது, ப்ருஸ்ஸியன் நீலத்தை பழுப்பு நிறத்தோடு கலப்பது, கருப்போடு குங்குமச்சிவப்பை கலந்து பழுப்புச் சாயலை பெறுவது மற்றும் வானுக்கு முரண் நிறங்களையிடுவது, கண்களின் வெண்ணிற வெளிக்கு பதிலாக சிவப்பு அல்லது பழுப்புச்சாயலையிடுவதன் மூலம் ராஜ்குமார் தன் வேலைப்பாடுகளில் தான் விரும்பும் இனவியல் விளைவுகளை அடைகிறார். தனது அடையாள பாங்கையும் ஓவியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறார். தனது ஓவியச்செயல்முறையில் எப்போதும் அடர் பகுதிகளிலிருந்து வெளிச்சமான பகுதிக்கு பயனிக்கிறார். பெரும்பாலும் அவர் கண்களிலிருந்து தொடங்கி கித்தானின் வெளிச்சமான பகுதியை நோக்கி நகர்கிறார்.

ஏனென்றால் இன்று கலாச்சார உலகமயமாக்கலில் இனக்கலப்பை இந்தியா எதிர்க்கொண்டிருக்கிறது, ராஜ்குமார் ஸ்தபதி உருவாக்கும் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் தனி நபரது நீர் வண்ண உருப்படங்கள் இனவியல் மற்றும் அர்த்தம் குறித்த பிரச்சனைப்பாடுகளை எதிர்கொள்ள முக்கிய பங்குவகிக்கிறது. உலகமயமாக்கலின்பொருட்டு நம் பண்பாட்டு அடையாளங்களை தொலைத்து விடுவோம் என்கிற உணர்வில் ராஜ்குமார் ஸ்தபதி தனது அற்புதமான நீரோவியங்களால் நமது முகங்களை தீவிரமாக ஆவணப்படுத்தி வருகிறார். எனினும் ராஜ்குமார் ஸ்தபதியின் ஓவியங்களில் நீரோவியத்தினாலான சோதனை முயற்சிகளுக்கு தன் அழகியல் விழைவே முதன்மைக்காரணம் என்பது உட்கிடையானது.

ராஜ்குமார் ஸ்தபதி தன் தோள்களில் ஒரு கனமான கலை வரலாற்றை சுமக்கிறாரென்பதில் ஐயமேதுமில்லை. தன் தூரிகையை தண்ணீரில் - ஒரு வண்ண ஊடாக நனைக்கும்போது, இந்திய நீரோவிய மரபைச்சேர்ந்த கலை வரலாற்றின் கைத்தடம் தானாக வந்து அமர முயற்சிக்கிறது.

இரண்டு நீரோவிய பெருமரபுகள், ஒன்று பிரித்தானிய மரபு (மதராஸ் பள்ளியால் பெரும்பாலும் பின்தொடரப்பெற்றது) இன்னொன்று ஜப்பானைச் சேர்ந்தது (வங்காளத்தில் அவனீந்திரநாத் தாகூரால் முன்னெடுக்கப்பெற்ற கலை இயக்கத்தால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது) வந்து இந்திய கலைஞர்களின் நீரோவிய உத்திகளில் இருபக்க உந்துதலை அளிக்க முயன்றது. தன்னுடைய, மேற்கை விலக்கும் அவனீந்திரநாத் தாகூரின் பாணியில், மேற்கு பாணியிலிருந்து விலகிநிற்கும் தன் நோக்கிற்காக ஆசிய முழுமைக்குமான அழகியலை கட்டமைக்கும் தன் முயற்சிக்காக அவர் ஆசியாவை நோக்கித் திரும்பினார், குறிப்பாக ஜப்பானுக்கு.

Okakaura Kakuza, one of the founders of the first Japanese Fine Arts Academy has researched and redefined the traditional Japanese art of “wash technique.”

ஜப்பானின் முதல் கவின்கலை மையத்தை நிறுவியவரில் ஒருவரான ஒகாகரா ககுசா (Okakaura Kakuza), ஜப்பானிய மரபுக்கலையான கழுவும் உத்தியை (Wash technique) ஆராய்ந்து மறுவரையறை செய்தார். இந்தியாவில் அவனீந்திரநாத் தாகூரால் இந்த உத்தி மேம்படுத்தப்பட்டது. ஒரு மெல்லிய ஊடுபாவான நீர்வண்ண அடுக்கிற்கு பிறகு ஓவியம் நீரில் அமிழ்த்தப்படுகிறது அப்போது சில வண்ணத்தை அது கழுவிச் செல்லும் (ஜப்பானியர்கள் இதை என்றுமே செய்யவில்லை) மீண்டும் ஒரு வண்ணக்கழுவல் அதன் மீது செய்யப்படுகிறது. அடுத்தடுத்து பற்பல வண்ணமற்றும் நீர் கழுவல்கள் கித்தானுக்கு மென்வண்ணச்சாயல்களை கொண்டு வந்துவிடுகிறது. இதைப்பின் தொடர்ந்து ஆசிட் ஹால்தர், சுக்தாய் , சமரேந்திரநாத் குப்தா போன்ற வங்காள கலைஞர்கள் நீரோவியத்தில் கழுவல் உத்தியை மாற்ற முற்பட்டனர். மதராஸ் மாகாணத்தில், மதராஸ் கலைகள் மற்றும் கைவினைகள் பள்ளியின் முதல்வராக இருந்த தேவி பிரசாத் ராய்  சௌத்ரி நீர்வண்ணங்களில் பல்வேறு வழிகளில் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். உதாரணத்திற்கு ‘அந்தபுரத்தின் கைதி’ (An inmate of the harem)  என்ற தலைப்பிட்ட தன்னுடைய நீரோவியத்தில் அவர் நீர்வண்ணங்களோடு பென்சில், பேனா மையையும் பயன்படுத்தியதோடு காகிதத்தில் தங்கம் மற்றும் வெண்ணிறங்களால் அழுத்தமாகக் குறித்திருப்பார். அச்சமயத்தில் நிறைய மதராஸ் கலைஞர்களும் நீரோவிய வேலைப்பாடுகளில் விரிவாக ஈடுபட்டிருந்தனர்.

வங்காளத்தைச்சேர்ந்த டி.பி.ராய் சௌத்ரி, கோபால் கோஷ், கேரளத்தைச்சேர்ந்த கே.சி.எஸ்.பணிக்கர், ஆந்திராவைச் சேர்ந்த நாராயண ராவ், ராம் கோபால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களான ஜி.டி.பால்ராஜ், ஜி.டி.அருள்ராஜ், ஜி.டி.தியாகராஜ், பி.பி.சுரேந்திரநாத், மாசிலாமணி, எம்.எஸ்.தேவ சகாயம், எஸ்.பி.ஜெயகர் போன்றோர் நீரோவிய வேலைப்பாடுகளில் சோதனை முயற்சிகளைச் செய்ய முன்வந்தனர். இயைபு பரிசுத்தத்தை தேடும் விதமாக (Compositional purity) அவர்கள் பிரித்தானிய மற்றும் ஜப்பானிய நீரோவிய உத்திகளை ஒன்றிணைக்க முயற்சித்தனர். ஜி.டி.பால்ராஜ் போன்ற கலைஞர்கள் அவர்களின் நீரோவிய வேலைப்பாடுகளுக்காக பெரிதும் அறியப்பட்டனர்.

சேப்பாக்கம் மைதானத்தைச் சித்தரிக்கும் அவரது நீரோவியம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் சேகரித்துக்கொண்டது. கோபால் கோஷின் நீரோவியங்கள் வருடத்துக்கு பனிரெண்டென தொடர்ந்து பதினைந்து வருடத்துக்கு பர்மா ஷெல் காலண்டரில் அச்சிடப்பட்டது.

ஒரு ஓவியராக ராஜ்குமார் ஸ்தபதி இன்று நீர் வண்ணங்களை ஊடகமாக பயன்படுத்துவதிலுள்ள வசதியை முழுசுதந்திரத்தோடு அனுபவிக்கிறார். நீர்வண்ணங்களில் உள்ளடங்கிய ஒரு எதிர்பாராத்தன்மையை கண்டறிந்தது அவரது உருவ ஓவியங்களில் உள்ளார்ந்த பதிலைத்தேட ஊக்குவிக்கிறது நீர்வண்ண ஊடகத்தின் எதிர்பாராத்தன்மை (ஆலன் லீயீன் சொற்களில்) ‘ஈரப்பதம், ஈர்ப்புவிசையால் அதிகம் பாதிக்கப்படுவது, கழுவலில் கணமான பொருட்கள் காகிதத்தின் அலைதலோடு படிந்துக்கொள்ளும் விதமாக’ தன்னுடைய தத்ரூபமான உருவப்படங்கள் கலைப்படைப்பாக உருக்கொள்ள ஊக்கமளிக்கிறது. ராஜ்குமார் ஸ்தபதியின் பெரும்பான்மையான வேலைப்பாடுகள் கும்பகோணம் கலைக்கல்லூரியில் முறையான கலைக்கல்வியை முடித்தபின்பு வரைந்த, அதனளவில் தனித்தன்மையும் ஒளிரும் நிலைத்தன்மையும் கொண்ட, நீரோவிய உருப்படங்களேயாகும்.

தென் தமிழகத்தினினுள்ள பொள்ளாச்சியில் பிறந்த கலைஞரான இவர், தமிழ்க்கலைப்பண்பாட்டின் இருப்பிடமான தஞ்சாவூரில் கலையைப் படித்தார், அங்குதான் உலகப் புகழ்பெற்ற சோழ சுவரோவியங்களின் கருவூலமான பிரகதீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. ராஜ்குமார் ஸ்தபதி ‘பேரரசர் ராஜராஜனும் அவர் குரு கருவூராரும்’ என்ற உலகப்புகழ் வாய்ந்த சோழர்கள் காலத்து (கி.பி.1000) அரச உருவ ஓவியத்தினால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.

நீண்ட கண்கள், கச்சிதமான மூக்கு, கனிவான உதடுகள், அழகான தாடை, முழுமையான கன்னங்கள், மேலும் மயிர்ச்சுருள்கள், ஆடை அலங்கார நுணுக்கங்கள் என கூரிய ஆர்வத்துடன் சித்தரித்த அந்த பெயர் தெரியா சோழ ஓவியனைப்போல ராஜ்குமார் ஸ்தபதியும் உருப்படத்தின் நுணுக்கங்களை சித்தரிப்பதற்கு சிறப்புக்கவனம் எடுத்துக்கொள்கிறார்.

உருப்படத்தின் நுணுக்கங்களைக்கொண்டு வரமிகவும் மெனக்கெடும் அதே வேளையில், அசாதாரண நீரோவியராகிய ராஜ்குமார் ஸ்தபதி, தன்னுடய தன்னிச்சையான ஊடகத்தன்மையின் நன்மையை முழுவதுமாக பெற எப்போதுமே தவறியதேயில்லை. அவரது அனைத்து நீரோவிய உருப்படங்களிலும் அர்த்தமுள்ள தன்னியக்கம் இயங்குவதையும் நாம் காணலாம். கித்தானில் சில பகுதிகளை தன் தூரிகையைச் செலுத்தாமல் விடுவதன் மூலம் மனித முகங்களில் உள்ளார்ந்த யதார்த்தமான சித்தரிப்பை அவரால் கொண்டுவரமுடிகிறது. அந்த வெள்ளொளி மூக்கிற்கு இருபுறம் விழுந்து மணிச்சிதறலாகி ஒரு வெண்சுடர்மையை உண்டு செய்வது உடலின் வளமைக்கு பெரிதும் ஏற்புடையதாகிறது. அதையே தலைமயிருக்கும் ஆடைகளுக்கும் கூட கைக்கொள்கிறார். ராஜ்குமார் ஸ்தபதி என்ற கலைஞனுக்கும் நீர்வண்ணமென்ற வண்ணத்திற்கும் இடையிலான உரையாடல்முறையில் ஆழமான அழகியல்தன்மைக் கொண்ட ஆக்கப்பூர்வமான ஒரு உருவப்படம் பிறக்கிறது. அவர் ஊடகத்திற்கு மறுவினையாற்றும்போது, ஊடகமும் தன் முறையில் அவருக்கு மறுவினையாற்றுகிறது. அவரது அனைத்து நீரோவிய உருப்படங்களும் மக்களின் சாயலிலுள்ள உருவப்படங்களின் மேல் கொண்ட திருப்தியின்மையின் விளைவே என உறுதியாக எண்ணுகிறேன்.

சுருக்கமாக நாம் இப்படிச்சொல்லலாம், ராஜ்குமார் ஸ்தபதியைப் பொறுத்தவரை ‘வண்ணமே மனிதராகும்’.

ராஜ்குமார் ஸ்தபதி குறிப்பு:

நீரோவிய கலைஞர், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவியக்கலைப்பயின்றவர். சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், மொரிசியஸ், பெல்ஜியம், பாரிஸ், செர்பியா என்று இவரது படைப்புகள் சர்வதேச அளவிலும், காலிகட், ஹைதராபாத், பெங்களூர், நாக்பூர், மும்பை, புதுடெல்லி என இந்திய அளவிலும் காட்சிக்குட்படுத்துப்பட்டுள்ளது. அண்மையில் செக் குடியரசு “ஹானரபிள் மாஸ்டர் ஆஃப் வாட்டர் கலர்” என விருதளித்து கௌரவித்திருக்கிறது, பிரான்ஸின் மோண்டியா கலை சங்கத்தின் தூதுவராகவும் இருக்கிறார்.

மேல் செல்