கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

யாம் சில அரிசி வேண்டினோம் -அழகிய பெரியவனின் நாவலை முன்வைத்து…

கமலாலயன் - ஒரு வாசக அனுபவம்

பகிரு

தகப்பன் கொடி, வல்லிசை –ஆகிய இரு நாவல்களை அடுத்து அழகிய பெரியவனின் மூன்றாவது நாவல் இப்போது வந்துள்ளது. வட மாவட்டப் பகுதிகளில் இருந்து நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் ஒரு சிலருள் அழகிய பெரியவனும், கவிப்பித்தனும் முன்னோடிகளாக விளங்குகின்றனர். ஏழு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், நான்கு கவிதைத் தொகுதிகள் –ஆகியவற்றைத் தந்திருக்கும் படைப்பாளியான அழகிய பெரியவன், இப்போது தன் மூன்றாவது நாவலையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

இவரெழுதியவற்றுள் மிகப்பெரும்பான்மையான எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருப்பவன் என்ற முறையில், இந்த நாவலையும் வந்த உடனேயே வாசித்தேன். தமிழ்க்கனவு என்ற அமைப்பின் சார்பில் நவம்பர் எட்டாம் நாளன்று இந்த நாவலுக்கான அறிமுகக் கருத்தரங்கு இணையவழியில் நடைபெற்றது. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் முனைவர் கு.சின்னப்பன், கவிஞர் யாழன் ஆதி, ஆவணப்பட இயக்குனர் பாலா, எழுத்தாளர் கம்பீரன், கமலாலயன் ஆகியோர் இந்த நாவல் குறித்து அவரவர் பார்வைகளை முன்வைத்தனர். ஐ.ஜ.மா. இன்பகுமார் தலைமை வகித்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

நாவல் வகைமைகளில் சுயசரிதைத் தன்மை வாய்ந்த நாவல் வகை ஒன்று உண்டு. பயோ ஃபிக்‌ஷன் என்ற அந்த வகை நாவலாக இதைக்கொள்ளலாம். அழகிய பெரியவன் மேற்கண்ட நிகழ்வின் இறுதியில் ஆற்றிய ஏற்புரையில் இந்த அம்சம் பற்றிக் குறிப்பிட்டார். பொதுவாக இந்தவகை நாவலை எழுதுவதற்கு அசாத்தியமான மனவலிமை வேண்டும். குறிப்பாக, மனதுக்கு மகிழ்ச்சி தராத, நினைத்தாலே மனம் குன்றி, அவமானமாக உணர வைக்கும் கசப்பான அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. அது ஒரு சவால். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாக இந்த நாவலைத் தந்திருக்கிறார் அழகிய பெரியவன்.

நாவலின் தலைப்பே ஒரு புறனானூற்றுப் பாடல் வரியிலிருந்து பெறப்பட்டதாக அமைந்து, கதையின் கருப்பொருளை ஒரு விதத்தில் சுட்டி நிற்கிறது. 140- வது பாடலில் அவ்வை எழுதிய பாடல் வரி இது. வறுமையும், இல்லாமையும் உந்தித்தள்ள, உணவுக்கு வழிகேட்டு ஆளுகிற மன்னன் முன் போய் நிற்கும் ஏழைக்கவிஞர்களிடம் யானையையும் குதிரையையும் வாரி வழங்கும் வள்ளல்களை என்ன சொல்வது?” நாங்கள் வயிற்றுக்குச் சோறு பொங்குவதற்குக் கொஞ்சம் அரிசி கேட்டால் யானையைக் கொடுக்கிறாயே, இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்கிறார் அவ்வை. நாம் வாழ்கிற இந்தச் சமகாலத்து மன்னர்களும், சக்கரவர்த்திகளும் இதே போல்தானே மக்களிடம் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்? அதிகாரம் என்கிற விக்கிரமாதித்தன் சிம்மாசனம், மேலே ஏறி உட்கார்ந்ததும் அந்த ஆள்வோரின் பண்புகளைத் தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. அது செய்யும் மாயம் அப்படி!

நாவலின் களம் கோட்டையூர் வேலைவாய்ப்பு நிலையம். அங்கே போய்த் தனது கல்வித்தகுதி, பிற தகுதிகள் தொடர்பான சான்றிதழ்களைச் சரிபார்க்கக் கொடுக்கிறான் கவசிநாதன். மிகவும் தயக்கமும், கூச்சமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட ஓர் எளிய, சராசரி இளைஞன் அவன். கல்லூரிக்குப் போய் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவு கண்டவன். வீட்டின் சூழல் அந்தக் கனவை நனவாக்க உதவும் நிலையில் இல்லை. எப்படியோ போராடிப் படித்து, இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவன் அவன். பி.எட். படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படாதபாடுபட்டு ஆசிரியர் வேலைக்கான அந்தத் தகுதியுடன் வேலைக்காகக் காத்திருக்கிறான். செய்தித்தாளில் வரும் அறிவிப்பு, தூர்ந்து போய்க் கிடக்கும் அவனுடைய மனக்கேணியின் ஊற்றுக்கண்களைத் திறந்து விடுகிறது. அரசு அறிவிப்பின்படி, ஐந்தாயிரம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அதற்கான முதல்படியாகத் தகுதியுள்ள, ஆசிரியப் பயிற்சி பெற்ற போட்டியாளர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடக்க இருப்பதாகச் செய்தி சொல்லுகிறது. எனவே, இந்தத் தடவையாகிலும் அந்த வேலை வாய்ப்பு நிலையத்தின் மூலம் ஒரு வேலை கிடைத்து விடாதா என்ற நப்பாசையுடன் அங்கே போய் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரின் முன்னால் நிற்கிறான் கவசி.

இம்மாதிரி அலுவலகங்களில், கவசிநாதன் போன்ற தலை காய்ந்த இளைஞர்களுக்கு என்ன நேருமோ அதுதான் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், தன் மனதில் எழுந்த ஓர் எளிய கேள்விக்கு அந்த அதிகாரியிடம் மறுமொழி கிடைக்கும் என்ற ஆவலில் உரையாட முற்படுகிறான் அவன். அவ்வளவுதான்; அங்கே ஒரு கலவரமே மூண்டு விட்டது என்று ஒரு சித்திரத்தைத் தீட்டும் வகையில் அதிகாரியின் எதிர்வினை அமைகிறது. கவசிநாதனைத் திட்டி, ‘யூஸ்லெஸ், யூஸ்லெஸ்’ என்று கத்திக் கூப்பாடு போட்டு முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டு விடுகிறார் அதிகாரி. அதோடு விடாமல் தாக்கவும் செய்கிறார். அலுவலகப் பணியாளர்கள் ஓடி வந்து கவசிநாதன் எங்கே எதிர்த்துத் தாக்கி விடுவானோ என்ற அச்சத்தில், அவனைப் பிடித்து உட்கார வைத்து ஓர் இரண்டு மணி நேரம் வரை அங்கேயே அலுவலகச்சிறையைப் போல அவனை முடக்கி விடுகின்றனர்.

கவசிநாதன், குடிபோதையில் அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து, ரகளைச் செய்ததாகவும், தகாத வார்த்தைகளால் அதிகாரியை ஏசியதாகவும், தாக்கியதாகவும், சுமார் இரண்டு மணி நேரம் தனது கடமையைச் செய்ய விடாமல் அவரைத் தடுத்து ரவுடித்தனம் செய்ததாகவும் போலீசில் புகார் தருகிறார் அந்த அதிகாரி. மாவட்ட நிலையில் உள்ள அதிகாரியின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவர்கள்தாமே காவல் துறையினர்? தந்திரமான முறையில் நீதிமன்றம் மூலம் கவசிநாதனுக்கு இரண்டு சம்மன்களை முதலில் அனுப்பாமலே அனுப்பியதாக ஜோடனை செய்கின்றனர். அவன் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாகக் கூறி மூன்றாவது சம்மனுடன், பிடி வாரண்ட்டையும் எடுத்துக்கொண்டு ஒரு கான்ஸ்டபிள் கவசிநாதனின் சொந்த ஊரான கோலப்பேட்டைக்கு வருகிறார். முந்தின இரண்டு சம்மன்களை சர்வ் செய்யாமலேயே நேரடியாகப் பிடி வாரண்ட்டுடன் வந்து நிற்கும் காவல்துறை ஆளிடம்,கவசிநாதனைப் போன்ற ஓர் எளிய மனிதன் எப்படி எதிர்வினையாற்றுவான்? பயந்து நடுங்கி, வீட்டில் மனைவி, அப்பா, அம்மா எல்லாருடனும் சேர்ந்து மனம் கலங்கித் தவித்து மாய்கிறான் அவன்.

நாவல் தொடங்குவது, கவசிநாதன் மனைவி பூரணியுடன் டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பும் போது போலீஸ்காரர் வழி மறித்துச் சம்மனை சர்வ் செய்யும் இந்த இடம்தான். வேலைவாய்ப்பகத்தில் அவமானப்பட்டு, அடிவாங்கி, நொந்து நூலாகி வந்து தவித்துக் கொண்டிருக்கும் தன்னையே குற்றவாளியாக்கி, அதிலும் ’தலைமறைவாக’ இருப்பவனாகச் சித்தரிக்கும் இந்தச் சம்மனை எப்படி எதிர்கொள்வது? வீட்டில் விஷயம் தெரிந்ததும் அம்மா குமுறி வெடிக்கிறாள் : “ கேள்வி கேட்டதுக்கா எம்புள்ளயப் போலீசு புடிக்கும்? கொறப்பாட்ட ஆபீசருங்க கிட்டதான சொல்ல முடியும் ? என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு கீதுல்ல? எம்புள்ள அப்பாவி…”

‘பரிவு மிகுந்த ஓர் அம்மாவின் சொற்கள் மட்டுமா இவை? மனித மனம் நாடும் நீதியின் குரலா? பரிவும் நியாயமும் அம்மாவுக்கு ஒன்றுதானே?’ – என்று கவசிநாதனின் உள்ளே எதுவோ சுரந்து தளும்புகிறது. இங்கே இருந்து அந்தப் பஞ்சப்பராரிக் குடும்பம் நடத்தும் நீண்ட நெடிய போராட்டமே நாவலாக விரிந்து செல்கிறது. இவர்களின் சொந்த ஊர்- ஒன்றல்ல; மூன்று ஊர்கள் ! லட்சுமியாபுரம், நல்லச்சேரி, கோலப்பேட்டை … எல்லா உழைக்கும் மக்களைப்போல, இந்தக் குடும்பமும் ஊர் ஊராய்ப் புலம்பெயர்ந்து பிழைப்புத் தேடித் திரிவதுதான். அப்படி இடம்பெயர்ந்து போகையில், வழியெல்லாம் விசாரிக்கிறவர்களிடம் அழுகையையே மறுமொழியாகத் தந்து போகிறவர்கள்.

அழகிய பெரியவனின் கதைமாந்தர்கள் மிகவும் எளிய மக்கள். ஓடுக்கப்பட்டு வாழ்பவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வயிற்றுப்பாட்டுக்காக வழி தேடி மல்லுக்கட்டுகிறவர்கள். ஏதேனும் ஒரு வழி கிடைத்து, அந்தப் போராட்டக் களத்திலிருந்து மீண்டு வர முடியுமா என்று ஏங்கித் தவிப்பவர்கள்.

கவசிநாதன், இந்த நெருக்கடியிலிருந்து தான் விடுபட்டு வந்து விட்டால் போதும் என்று மட்டும் நினைத்து அதோடு நின்று விடவில்லை. எந்தத் தவறும் இழைக்காத தன்னைத் தாக்கி, அவமானப்படுத்தி, இப்போது குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்தும் அளவுக்கு அந்த அதிகாரிக்கு அப்படியென்ன வன்மம் என்று விசாரித்து விட வேண்டும் என உறுதி கொள்கிறான். அன்று நடந்ததை நினைத்துப் பார்க்கிறான். அவன் மனதை இந்த நொடி வரை அசைப்பது ஒன்றே ஒன்றுதான் : “மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், இவனைப் பிடித்துத் தள்ளி, திட்டி, தாக்கியபோது, கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் நின்றபடி வேடிக்கை பார்த்த அந்தக் கண்கள்! படித்த கண்கள். உதவி செய்வதற்கு ஓடி வராத, ஏனென்று ஒரு வார்த்தையும் கேட்காத கண்கள். ..” இந்தச்சமூகம், என்னைத் திரும்பிப் பார்க்க, நான் என்ன செய்திருக்க வேண்டும் ? அதன் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்க வேண்டுமா?” –என்று அவன் மனம் உளைகிறது. வேலை இல்லாமல் வாழ்கிறவர்களின் வயிற்றுச்சுமை அதிகம்; புழுக்கள் கூடத் தம் மீதான தாக்குதலை எதிர்த்து முடிந்தவரையில் அசைகின்றன. இந்த மனிதர்களும், கவசிநாதனும் கூட எதிர்த்து நின்றார்கள்தாம்! ஆனால், அந்த எதிர்ப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை.

கவசிநாதனின் முப்பத்தி ஆறாண்டு கால வாழ்க்கையின் மீது, கனத்த காலணிகளால் நடந்து போன வடுக்களும் உண்டு; பூங்கால்களால் தவழ்ந்த பதிவுகளும் ஏராளமாயிருக்கின்றன. அவன், தனக்காகவும் குடும்பத்திற்காகவும் கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் செய்துதான் வந்திருக்கிறான். தோல் பதனிடுவோர் கூட்டுறவுச் சங்க வேலை, ஆங்கில நர்சரிப்பள்ளி ஆசிரியர், பெற்றோர் –ஆசிரியர் சங்க வேலை, சாலைகளில் கடந்து போகும் வாகனங்கள் கணக்கெடுப்பு, அரசியல் கட்சிகளுக்குப் பூத் சிலிப் எழுதுவது, ஸ்க்ரீன் பிரிண்டிங், சுவரெழுத்து விளம்பரங்கள் எழுதுவது, ஃபைனான்ஸ் கடையில் பில் போடுவது … இப்படி, செய்யாத வேலையில்லை.

ஆனால், இவன் நீதி கேட்டுப் போகும் இடங்களில், அதிகாரிகள் இவனுடைய அவல நிலைக்கு இவனேதான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். சம்மன் சர்வ் செய்ய வந்த கான்ஸ்டபிள், முதல் இரு சம்மன்களையும் கொண்டு வந்ததாகவும், இவன் எங்கேயோ போயிருந்ததால் வீடு பூட்டி இருந்ததாகவும் கூசாமல் பொய் சொல்கிறான். “இல்லை சார், இப்ப நீங்க இந்தச் சம்மன் சர்வ் செய்யனும்னு என்னோட வீட்டு அடையாளம் கேட்டுத் தேடினதா ஜிட்டான் சொன்னாரே?” என்று கவசிநாதன் தயக்கத்துடனே கேட்டு விடுகிறான். “இதானே மாணான்றது ! இந்தத் திமிர் பேச்சுதான்…இப்பிடிதான அங்க போயும் பேசியிருப்ப? அதான் கேசு! திருந்த மாட்டீங்கபா…”

அதோடு விடவில்லை; “புத்தி எதுனா கீதா? வேல போட்டுத் தர்ற எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்கே குடிச்சிட்டுப் போயி கலாடா பண்ணிக்கிற? அதான் உம்மேல கேசு” என்று குற்றப்பத்திரிகையை நீட்டுகிறான் அந்தக் கீழ்நிலை அதிகாரி.

மாவட்ட வேலை வாய்ப்பு நிலைய அதிகாரி தன்மீது தாக்குதல் நடத்தியதைப் பற்றி, பெரியவர் செங்குட்டுவன் தந்த அறிவுரையின்படி மாநில வேலை வாய்ப்பு நிலைய ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கவசிநாதன் புகார்களை அனுப்புகிறான். கோட்டையூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போகிறான். அங்கே அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் கவசிநாத னிடம் மாவட்ட அதிகாரி மீதே புகார் கொடுக்கிற அளவுக்கு வந்து விட்டாயா என்பது போலப் பேசி, புகார் தர வேண்டாம் என்கிறார். சமரசம் செய்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்குகிறார். கவசிநாதனின் நண்பன் முனிரத்தினம் வாதாடியபின் வேண்டாவெறுப்புடன் புகாரைப் பெற்றுக் கொண்டு ஒப்புகை தருகிறார் அவர்.

மாநில ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் நடந்தது என்ன என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியதால், வேறு வழியின்றிக் கலெக்டரும் கவசியைக் கூப்பிட்டு விசாரிக்கிறார். முன்முடிவுகளுடனும், அதிகார தோரணையோடும் விசாரிக்கிற அந்தக் கலெக்டர், இவன் வேலையில்லாமல் இருப்பதற்கே காரணம், இவனுடைய சோம்பேறித்தனமும், திறமைக் குறைவும் தான் என்று சொல்கிறார். அங்கேயும் பெரியவர் செங்குட்டுவன் குறுக்கிட்டு கவசிநாதனுக்கு ஆதரவாக வாதிடும் போது, “இந்த மாதிரி உபயோகமற்ற ஆளுங்களுக்குச் சப்போர்ட் பண்ணிகிட்டு வராதீங்க”  என்று கலெக்டர் மறுக்கிறார்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து, எண்ணற்ற வாய்தாக்கள், விசாரணைகள் என்று மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன. வழக்குரைஞர் முருகையன், பெரியவரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவருடைய வாதத்திறமையால், குறுக்கு விசாரணைகளால் இறுதியில் கவசிநாதனை நீதிபதி விடுதலை செய்து விடுகிறார். ஆனால், கவசிநாதன் மாவட்ட அதிகாரி மீது கொடுத்த புகார், கிடப்பில் போடப்பட்டு விடுகிறது. நிராகரிக்கப்பட்டு விடுகிறது. மாநில வேலை வாய்ப்பு நிலைய ஆணையர் ஒருவர் குறுக்கிடாமல் இருந்திருந்தால் கவசிநாதனுக்கு நியாயம் கிடைத்திருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்… அதிகாரம் என்பது, ஒருபோதும் எளிய மக்களின் பால் அனுதாபமுடையதாக இருப்பதில்லை என்பதை இந்த நாவலில் வருகிற எல்லா அலுவலகங்களும் நிரூபிக்கின்றன.

கவசிநாதனின் மனைவி பூரணி, ஒரு முழுமை பெற்ற பாத்திரமாக வார்க்கப் பட்டிருக்கிறாள். குழந்தைகள் இருவரும், அப்பா அம்மாவும், மாமா தனகோட்டியும் கவசிநாதனுக்குத் துணையாக உறுதியுடன் நிற்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகம் முன்னால், கவசிநாதனுக்கு நீதி கேட்டு ஓர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெரியவரின் நண்பரான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அங்கு வந்து உரையாற்றுகிறார். “ஏழைகள் எங்குப் போனாலும் பல நேரங்களில் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நமக்கு முன்னால் ஒரு மர்மக் கோட்டையைப் போல் நின்று கொண்டிருக்கும் இந்த அலுவலகத்தில் கவசிநாதன் என்ற இந்த இளைஞர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். கூடவே ஓர் அவமான உணர்வும் தோன்றியது. அது எல்லா ஏழைகளுக்குள்ளும் பரவக்கூடிய அவமானம். இங்கு ஒரு மனிதன் ஏன் மனிதனாகவே பார்க்கப்படுவதில்லை? ஏன் சாதியாக, மதமாக, ஏழையாக, பெண்ணாக, கருப்பனாகப் பார்க்கப்படுகிறான்?

நமது நாட்டின் ஜன நாயகம் அனுமதித்திருக்கின்ற ஆகக்குறைந்த எதிர்ப்புணர்வின் வடிவம் இந்த ஆர்ப்பாட்டம். ஆனால், இதை நடத்துவதற்குக் கூட இரண்டு முறை நீதிமன்றத்தை பெரியவர் நாட வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்த அளவில் இந்தப் போராட்டம், குணாம்சத்தில் மிக மிக எளிய போராட்டம். ஆனால், இதையே நம்மால் தன்னியல்பாக நடத்திட முடியவில்லை. வேதனையோடு வெளியில் நின்று நாய்களைப் போலக் குரைத்து விட்டுப் போவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி மிச்சமிருக்கிறது?”

இந்த உரையின் வழியே, இந்த நாட்டின் அதிகார அமைப்புகள் எளிய மக்களை நடத்தும் ‘லட்சணத்’தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது நாவல். ‘கோலப்பேட்டையிலிருந்து நல்லூர் பதினைந்து கி.மீ. தூரம். சாலைகள் மிக நெருக்கடியானவை. இப்போது நல்லூரில் இரண்டு பேருந்து நிலையங்கள். சுற்றிலும் புதிய கட்டடங்கள். முன்னேற்றம் என்பது இப்படிக் கட்டடங்கள் கட்டு வதுதான் என்று மனிதர்களுக்கு யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை’ என்று விமர்சிக்கிறது.

நாவல் நெடுக அழகிய பெரியவனின் பேனா உயிர்ச்சித்திரங்களைத் தீட்டிச்செல்கிறது. வழியில் தென்படும் இயற்கைக் காட்சிகள், சந்திக்கும் மனிதர்களின் குணாம்சங்கள், இடங்களும் – நில வெளிகளும் உணர்த்துகிற வாழ்க்கை அம்சங்கள் எல்லாவற்றையும் நெஞ்சைத் தைக்கும் விதத்தில் விவரிக்கிறார்அவர். “எங்கள் வாழ்வில், பூனையைப் போல் அலைந்தது துர்காலம். அப்பா அதை எவ்வளவு தூரத்தில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாலும் அது எங்கள் வீட்டுக்கே திரும்பத் திரும்ப வந்தது …” என்று கவசிநாதன் நினைவு கூர்கிறான்.

“இந்த அலுவலகத்திலிருந்து உயிரோடு திரும்பிப் போக மாட்டாய்” என்று மிரட்டப்படும் போது துணுக்குறாத மனம், வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற மிரட்டலுக்குப் பயந்தாக வேண்டியிருக்கிறது. “உயிரிழக்கும் பயத்தை விடவும் உயிர் வாழும் பயம் கொடூரமானது” எனக் கவசிநாதன் மனம் சோர்ந்து நினைக்கும் இடம் முக்கியமானது. ஒரு நிரந்தர வேலை இல்லாமல், மனைவி- குழந்தைகள்-குடும்பம் என்று அல்லாடித் தவித்திருக்கும் ஒவ்வொரு மனுஷியும், மனுஷனும் கவசிநாதனின் நினைப்போடு தங்களையும் பொருத்திப் பார்த்துக் கொள்வதைத் தவிர்க்கவே முடியாது.

கவசிநாதனின் அப்பா, தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கப் படும் பாடுகளைப் பற்றிக் கவசிநாதனின் நினைவுகள் எழுப்பும் உணர்வலைகள் மிகவும் கொடுமையானவை. பீடி சுற்றும் வேலையின் போது, புகையிலைத் தூளைச் சுற்றிக் கட்டுவதற்கான இலைகள் தூளுடன் கொடுக்கப்படும். அவற்றை நீரில் ஊற வைத்து அளவாக வெட்டி, தூளை உள்ளே வைத்துச் சுற்றி, நூலால் பீடியைக் கட்டுவார்கள். இலைகள் காய்ந்து உடைந்தோ, பூஞ்சை பிடித்துப் போயிருந்தாலோ அவை வீணானவையாகி விடும். எனவே பீடி எண்ணிக்கை குறையும். அப்போது அதற்கான பணம் கூலியில் பிடித்துக் கொள்ளப்பட்டு விடும். கிடைப்பதே அற்பத்திலும் அற்பமான கூலி. அதிலும் இப்படி வெட்டு! அப்போதெல்லாம்,  “இலைகளின் உடைசலுக்கும், சிதறும் புகையிலைத் தூளுக்கும் ஈடாகத் தன் சதையிலிருந்து கொஞ்சத்தை முதலாளிகளிடம் பிய்த்துக் கொடுத்து விட்டு வந்தார் அப்பா…” என்கிறான் கவசிநாதன்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு மவுனமான, ஆனால் உயிர்த்துடிப்பு மிக்க நாடகம் அந்தக் கூட்டத்தின் நடுவே அரங்கேறுகிறது : “நாங்கள் மாலை ஐந்து மணி வரை எதிர்ப்புணர்வைத் தெரிவித்திடும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைப் பிடித்துக் கொண்டு அப்படியே மவுனமாக நின்றிருந்தோம். கூட்டத்தின் நடுவே நிற்க வைக்கப்பட்ட நான் அங்கிருந்து ஓர் அங்குலமும் நகரவில்லை. என்னருகில் பூரணியும், பிள்ளைகள் இரண்டு பேரும் நின்றிருந்தனர். எல்லாரும் பேசி முடித்த பிறகு அங்கு நெடுஞ்சாலை இரைச்சலையும் மீறி உருவான அமைதியில் பூரணியின் கண்களை நான் சந்தித்தேன். மெல்லிய அன்பு கசியும் கண்கள். என் தோள்களைத் தொடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் மகள் கரிசனையோடு பார்க்கிறாள். இடுப்பு வரையே வளர்ந்திருக்கும் சின்ன மகன் அவ்வப்போது நிமிர்ந்து இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாத பரிதவிப்புடன் என்னைப் பார்த்து விட்டு நெடுஞ்சாலையைப் பார்க்கிறான். என்னை அவன் அப்படிப் பார்த்து விட்டுத் திரும்புகையில், அவன் கையில் பிடித்திருக்கும் அட்டையின் வாசகம் என்னால் படிக்கும்படியாகத் தெரிகிறது. ‘ எங்களின் எளிய கூட்டைப் பிய்த்து எறிய வேண்டாம் அதிகாரிகளே…’ நான் உடைகிறேன். என் தலை கவிழ்கிறது. கழிவிரக்க உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகுந்த சிரமமாக இருந்தது. “

நாவல் நேர்கோட்டில் கதை சொல்கிறது. எளிய வாசகர் ஒருவரும் கூட, இந்த நாவல் முன் வைக்கும் வாழ்க்கையைத் தனது வாழ்க்கை அம்சங்களோடு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயன்றாராயின், மிக எளிதாகப் புரிந்து கொண்டு பாத்திரங்களின் வாழ்வனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். இன்றைய நவீன இலக்கியப் போக்கின் செல்நெறிகள் குறித்துப் பேசுகிற எந்த ஒருவரும், சமகால வாழ்வின் நெருக்கடிகளைப் பற்றி எழுதப்படும் இத்தகைய நாவல்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சொல் முறையும், மொழிநடையும், உத்திகளும் இன்ன பிற தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் உடல்தாமே? உயிர் எதுவெனில், நாவலின் மையச்சரடாகப் பின்னப்பட்டிருக்கும் மனித வாழ்க்கையே. இந்த நாவல் ஓர் எளிய மனிதனின் துயர அனுபவத்தை மையமாக வைத்து இன்றைய அரசு அலுவலகங்களின் அதிகாரப் போக்கை அம்பலப்படுத்துகிறது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிலவ வேண்டிய ஆழ்ந்த அன்பின் புரிதலைப் பேசுகிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அநியாயமாகத் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு மனிதனின் மன உளைச்சலைக் காட்டுகிறது. அந்த மனிதனின் போராட்டத்திற்கு, உடனிருந்து உதவும் நண்பன் முனிரத்தினம், பெரியவர் செங்குட்டுவன், வழக்குரைஞர் முருகையன் ஆகியோரின் சொல்லும், செயல்களும் எப்படி ஒருமித்து ஒத்திசைந்து தோன்றாத் துணையாகத் திகழ்கின்றன என்பதை ஆவணப்படுத்துகிறது.

நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி, வாய்தாக்கள் படுத்தும் பாடுகள் பற்றி நாவல் நம்பகத்தன்மை மிக்க ஒரு சித்திரத்தைத் தந்திருக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்து வரும் ஸ்டெனோகிராபர் பெண், கடைசி வாய்தாவில் கவசினாதன் வயதில் தனக்கும் ஒரு மகன் இருப்பதாலும், மனசாட்சிக்கு விரோதமாக, நடக்காத எதையும் நடந்ததாகச் சொல்லத் தன்னால் முடியாது என்று உண்மையின் ஒளி துலங்க சாட்சி சொல்லும் போது, அந்தப் பாத்திரம் விசுவரூபம் எடுத்து நிற்பதைக் காண்கிறோம். கவசிநாதன் விடுதலையாகி வெளியே வந்து கண்னீர் மல்க முருகையனின் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி சொல்லும் போது, எளிய மக்கள் தரப்பில் நின்று வாதாடும் மனிதர்களின் ஆகச்சிறந்த வகைமாதிரிகளாக அந்த வழக்குரைஞரும், பெரியவர் செங்குட்டுவனும், ஸ்டெனோகிராபரும் மிளிர்கின்றனர்.

கவசிநாதனின் அம்மா கதாபாத்திரம் பற்றி மட்டுமே ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். மகனின் மீதும், கணவனின் மீதும் எல்லையற்ற அன்பும், பாசமும், அக்கறையும் கொண்டவர் அவர். அதே அக்கறையின், அன்பின், பாசத்தின் மறுபக்கமாக, கடுமையான கண்டிப்பின் சிகரத்தில் சட்டென்று ஏறிப் போய் நின்று விடும் முரண்பட்ட ஆளுமையாகவும் இருக்கிறார். அந்த முரண், பகை முரண் அன்று; நட்பு முரண். அன்பின், அக்கறையின் மறுபக்கம் அந்தக் கண்டிப்பு.

இசையும், நூல்களும், இயற்கையின் மீதான் நேசமும் – என இவையெல்லாம் தான் கவசிநாதனின் பலங்கள். தயக்கமும், கூச்சமும், ஏழ்மையிலேயே வாடி வதங்கிப்போய்க் காலமெல்லாம் மூன்று வேளை வயிறார உண்ணக்கூட வழிவகையற்ற ஒரு சராசரி இளைஞனின் வகைமாதிரிப் பாத்திரமே கவசிநாதன். அவன் சில அரிசி வேண்டிப் போய் நின்றான். அதிகாரமோ அவனைக் கீழே தள்ளி மிதித்து நசுக்கவே முயன்றது. திமிறி எழுந்து நின்று நிமிர்ந்தான் அவன். சில கரங்கள் அவனுக்குக் கை கொடுத்தன. சலிக்காத ஒரு நெடிய போராட்டம் அவனை விடுதலை செய்தது. நம் காலத்து நாயகர்கள் இம்மாதிரி எளிய மனிதர்கள்தாம்! நாம் எழுத வேண்டிய காவியங்கள் இத்தகைய மனிதர்களின் வாழ்க்கைகளைத்தாம்! அழகிய பெரியவன் எழுதி விட்டார்!

மேல் செல்