கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

முடிவிலியின் ஆதார சுருதியை மீட்டும் மீனும் பண்பாடும்

ஆகாசமுத்து

பகிரு

“இசையில் ஒரே ஒரு ஆதார ஸ்ருதிதான் இருக்கிறது. அதுதான் முழுமையானது” என்றார் கர்தர் ஹோம். “ அந்த ஆதார ஸ்ருதியைக் கேட்டுவிட்டவர் எவரும் வேறு எதையும் கேட்கத் தேவையில்லை. என்னுடைய பாட்டெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தை நீ எப்பொழுதுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட பிறகு, புகழின் ஈவு இரக்கமற்ற நுகத்தடி உன் தோளில் ஏற்றப்பட்டு, மிகக் கொடிய குற்றவாளியின் மீது பதியப்படுவது போல் அதனுடைய குறி உன் புருவ மத்தியில் அழியாத அளவுக்குக் குத்தப்பட்டு விட்ட பிறகு – அப்போது நினைவிறுத்திக் கொள் – இந்த ஒரே ஒரு பிரார்த்தனைய தவிர வேறு அடைக்கலம் உனக்கிருக்கப் போவதில்லை: ஆண்டவனே! என்னிடமிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுவிடு! அந்த ஒரே ஒரு ஆதார ஸ்ருதியைத் தவிர.!”

ஹால்டர் லேக்ஸ் நஸ்சின் மீனும் பண்பாடும் நாவலில் முக்கியப் பாத்திரங்களான சிறுவன் அல்ஃப்க்ரைமுரும் ஐஸ்லாந்தின் புகழ் பெற்ற பாடகாரான கர்தர் ஹோமுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்த் நாட்டின் நிலப்பரப்பு எப்படி இருக்கும். பண்பாடு மொழி தத்துவம் பொருளாதாரம் வாழ்வாதாரம் எப்படி இருக்கும். இந்த நாவல் முழுக்க எளிய மனிதர்களின் பங்களிப்போடு அதை எடுத்து இயம்புகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் வாழ்நிலையில் பலதரப்பட்ட மாறுதல்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் வருகைக்குப் பிறகு பணமும் அந்தஸ்தும் முன்னிறுத்தப்படும்போது, first come first serve என்ற அமலாக்கத்திற்குப் பிறகு சொந்த நிலத்தின் மீது உரிமைகள் மறுக்கப்படும் அவலம்.

இந்த நாவலின் ஆதார ஸ்ருதியைத் தேடும் ஆன்ம கலையாக்கம் தீவிர கதியோடு இயங்கும் அதே வேளையில் நவீன வாழ்வின் உப்புச் சப்பற்ற மானுடப்புரிந்துணர்வு மழுங்கடிக்கப்படும் அரசியலையும் அனாயசமாகப் பகடி செய்கிறது இந்த மீனும் பண்பாடும்.

மொழி பெயர்ப்பு என்பது மூல ஆசிரியரின் நாடி பிடித்துப் பரிசோதித்து முன் வைக்கும் அற்புதக் கலை. எத்திராஜ் அகிலன் அதைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார். தமிழின் கவித்துவம் குலையாத சொற்களின் வழி ஹால்டர் லேக்ஸ் நஸை புரிந்து கொள்ள வகைச் செய்திருக்கிறார். நான் வாசித்துப் பிரமித்த மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கிறார். மூல ஆசிரியருக்கு நியாயம் செய்து நற்புனைவுக்குச் சாட்சியமாகியிருக்கிறார். இந்த நாவல் நோபல் பரிசு பெற்றவருடையது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நோபல் பரிசே பெறாவிட்டாலும் அந்த விருதின் பெருமைகளைக் குன்றச் செய்யும் விதத்திலான எழுத்து ஆளுமைகளான ப. சிங்காரம், எம்.வி. வெங்கட்ராம், வண்ணநிலவன், ஜோ. டி. குரூஸ், பூமணி, சி சு செல்லப்பா போன்றவர்கள் நெடும் வரிசை தமிழில் உண்டு. தொடர்ந்து கொன்டிருக்கிறது.

அற்புதங்களை வாரி வழங்க எளிய சம்பவங்களின் கோர்வை போதுமானதாக இருக்கிறது. சிறிய மீனின் கண்களால் பிரபஞ்சம் அளாவிய ஈரப் பார்வை இந்த நாவலில் விரவி கிடக்கிறது. பொதுவாக நாவல் பரப்பிற்கு நிறையக் கதாப்பாத்திரங்கள் தேவை. அவர்களின் உடல் மொழி, மதம், இருப்பிடம், உணவுமுறை, அவரவருக்கான தனித்த அறக் கோட்பாடுகள், வாழ்க்கைப் பாடுகள், லட்சியங்கள், கனவுகள், தனிமை, அழுகை, உயிர்களிடத்தில் அன்பு, மெல்லப் பெருகி விழுங்கக் காத்திருக்கும் உலகமய அறிவு எல்லாமும் இதில் உண்டு. நாம் காணாத தேசத்திற்கு எழுத்தின் வழி கற்பனைக் கதவுகளைத் திறந்து அழைக்கும் வாஞ்சையான வரவேற்புகள் இதில் உண்டு. எந்த மொழிபெயர்ப்பும் உடனே புரிந்துவிடக் கூடியதல்ல. மூல ஆசிரியரின் மொழி நமக்குத் தெரியாது. அவரின் மொழியைத் தன் வயப்படுத்திக் கொண்டு அழைத்துச் செல்லும் மொழிபெயர்ப்பாளர் ஒரு டூரிஸ்ட் கைடு அல்ல. நாம் அவரின் மொழியையே பின்பற்றுகிறோம். மொழிபெயர்ப்புப் பணி அழகான ஞானச் சேகரிப்புகளால் விஸ்தாரப்படுகிறது.

ராம்ஸ் எனும் ஐஸ்லாந்தின் திரைப்படம். அதற்குப் பிறகு அப்படியான மென் உணர்வுகளைத் தீண்டிய காவியத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. 2015 வாக்கில் சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் ஒத்திக் கொள்ளும்படியானது. . மக்கள் அடர்த்திக் குறைவான பெரும் பண்னை நிலங்களும் பனிப்பிரதேச வாசிகளும் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தன. ஆனால் யதார்த்தத்தில் நிச்சயமாக ஒரு சிறிய வெப்ப நிலப்பரப்பில் பெரும் மக்கள் அடர்த்திக்குள் வாழும் இந்தியன் ஒருவனால் அங்கு வாழ்வது கடினம். குப்பைக் கூளங்களும் ஊழல் பெருச்சாளிகளும் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டிருந்தாலும் நமக்குப் புண்ணியத் தினங்களை, ஈர நெஞ்சங்களை அனுதினமும் வழங்கத் தவறுவதேயில்லை. அப்படி இந்த நிலத்தின் சோகை படிந்த கருத்த மனிதர்களை நாவலின் கதாப்பாத்திரங்களோடு தொலைதூர தேசமான ஐஸ்லாந்தில் அரசல் புரசலாக உலவவிட்டுத் தரிசித்துக் கொண்டிருந்தேன்.

ராம்ஸ் திரைப்படத்தில் இரண்டு பிரதான கதாப்பாத்திரங்கள். கிட்டியும் கும்மியும் சகோதரர்கள். பூர்வீகச் சொத்தாக ஒரு பண்ணை நிலத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள். 40 வருடங்களாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. இவர்களுக்கு உறவாக இருப்பது செம்மறி ஆடுகள் மட்டுமே. கிட்டி அதிகமாகக் குடிப்பழக்கம் உடையவர்.

ஒரு போட்டியில் கிட்டியின் செம்மறி உடல் திறனில் வெற்றிப் பெறுகிறது. கும்மி பொறாமை கொள்கிறார். இருவருக்கும் அடிக்கடி சண்டை மூள்கிறது. ஒரு கட்டத்தில் ஜன்னல் வெளியே துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சுட வருகிறார் கும்மி கிட்டியை. ஊரில் கொள்ளை நோய் பரவுகிறது. நோய்க்கு காரணமான செம்மறி ஆடுகளை ஐஸ்லாந்த் அரசாங்கம் சுட்டுக் கொல்கிறது. தன் சகோதரர் உட்படக் கிராமத்தில் உள்ள அனைவரும் ஆடுகளைக் கொல்லும் அணியினரிடம் ஒப்படைக்கிறார்கள். கும்மி மட்டும் வீட்டின் ஒரு பாதாள அறைக்குள் செம்மறி ஆடுகளைஅடைத்து பாதுகாக்கிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்கவே விரைகிறார்கள்.

சகோதரர்கள் இறுதிக் காட்சிகளில் ஒன்றாகச் சேர்ந்து மிஞ்சிய ஆடுகளைக் காக்கப் போராடுகிறார்கள். இருளும் பனிப்புயலும் சூழ இருவரும் ஒரு மலைச் சரிவில் மாட்டிக் கொள்கிறார்கள். இருவருக்குமான சகோதார பாசம் 40 வருட பிணக்கை ஒட்டுமொத்தமாகச் சரிகட்டும் விதமாக அமைந்த தருணம். இக்கட்டான அந்தச் சமயத்தில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்னியோன்யம்தான் திரைக்கதையின் ஆதார ஸ்ருதி. அப்படியொரு காவிய காதலைஇதற்கு முன் யாரும் கண்டிருக்க முடியாத நெகிழ்ச்சியான முடிவு.

மீனும் பண்பாடும் நாவலுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் உள்ள சம்பந்தம் அதன் எளிய சம்பவங்கள். அனாதரவான மனிதர்களின் உளவியலும், அறமும் தவிர வேறில்லை. ஐஸ்லாந்தின் கடலோர கிராமமான ரேய்க்ஜாவின் நகரமயமாக்கலுக்கு முந்தைய மக்களின் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. சிறுவன் அல்ஃப்க்ரைமுர் தனது தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான். இந்த நாவலின் கதை அவனது பார்வையில் நகர்கிறது. அம்மா நிராதரவான நிலையில் ப்ரக்குகாட் பியோர்ன் கையில் ஒப்படைத்துவிட்டு மரணமடைகிறாள். பரக்குகாட் அக் கிராமத்தின் ஒரு பண்ணையின் பெயர். சிறுவனின் பாட்டியும் கூட இளமையில் கைவிடப்பட்ட நிலையில் ப்யோர்ணுடன் வாழ்பவர். ப்யோர்ணின் முதல் மனைவி உறவுக்குக் காரணமானவர். சில நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்கின்றனர். தன் மனைவியின் மரித்தலுக்குப் பிறகு அவளது சகோதரியான இந்தப் பாட்டி இவரோடு திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்கிறார். இவளும் கூட ஏற்கனவே திருமணமானவர்தான். கணவர் ஒரு வசந்த கால மீன்பிடி பருவத்தில் கடலில் மரணிக்கிறார். மூன்று மகன்களும் கூட வரிசையாக மரணிக்கிறார்கள். அப்போது ஐஸ்லாந்தில் பரவியிருந்த தொண்டை அழற்சி நோய்தான் காரணம்.

நாவலின் முன் பகுதியில் வரும் இந்தமூவரும் இரத்த உறவில்லாதவர்கள். என்றாலும் அதற்கும் மேம்பட்ட அன்பினால் பிணைக்கப்பட்டவர்கள். ஒரு தாயும் தந்தையும் தரக்கூடும் அன்பையும் ஆதரவையும் இருவரும் பேரன் அல்ஃப்க்ரைமுருக்கு வழங்குகிறார்கள். பாட்டிதான் சிறுவனது தாய் இட்ட அல்ஃபர் பேருடன் ஒட்டாகக் கிரைமுர் இணைத்தது. கிரைமுர் அவளது மகன்கள் மூவருக்கும் சூட்டி வைத்திருந்த பெயர்.

ப்ரெக்குக் காட்டில் இருக்கும் இவர்களது பண்ணை வீடு ஒரு தேவாலயத்திற்கு அருகில் இரண்டு மரச்சட்டங்கள்கொண்டு இணைக்கப்பட்ட புற்கரண்கள் பாவிய கற்குடிலாகும். பண்ணை கவனிப்பு, தாத்தாவுக்கு மீன் பிடித்தல் தொழில் போக அந்த வீடு கைவிடப்பட்ட முகவரியற்ற நபர்களின் புகலிடமாகவும் விளங்குகிறது. வாடகை என்பது பெயரளவில்தான். இரண்டு மூன்று அடுக்குகள் கொண்ட ஒடுக்கமான படுக்கையறைகள் உண்டு. தாத்தாவின் மீன்பிடி சாதனங்கள். கல்கடிச்சான் மீன்களின் நாற்றம். வெள்ளியென மின்னும் அதன் செதில்களால் சிதறிக் கிடக்கும் சுற்றுப்புறம். மீன்பாடு குறைந்த நாட்களில் ப்யோர்ன் மீன்களைப் பதப்படுத்தும் வேலையில் ஈடுபடுவார். அதைச் சிப்பங்களாக்கி டென்மார்க் செல்லும் கப்பலில் ஏற்றுமதி செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தார். இவைபோக மாடு வளர்ப்பது இவர்களின் உப தொழிலாக இருந்து வருகிறது.

ப்ரெக்குக்காட்டின் ப்யோர்ன் கதாப்பாத்திரம் கருணையும், நேர்மையுமாக வடிக்கப்பட்டிருக்கிறது. கடலின் வெகுதூரத்திற்குச் சென்று மீன் பிடிப்பவர்களையே மீனவர்கள் என்று அழைப்பதுண்டு. தாத்தா ப்யோர்ன் வழக்கமாகச் செல்லும் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே மீன் பிடிக்கும் வழக்கம் கொண்டவர். சிறுவனையும் உடன் அழைத்துச் செல்வதுண்டு. கல்கடிச்சான் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் போதும் சரி, குறைவாகக் கிடைக்கும் போதும் சரி. அவரிடம் ஒரே விலைதான். ஆனால் சந்தையில் வேறு விதமாக இருக்கும். உரிமைப்படி தன்னுடையது என்று கோரப்படும் ஒருவரின் பணம் உழைக்கும் மனிதன் ஒருவனின் சராசரி வருமானத்தைவிடக் கூடுதலாக இருக்குமென்றால் அது சட்டத்துக்குப் புறம்பான வகையில் குவித்ததாகவோ அல்லது கள்ளப்பணமாகவோதான் இருக்கும். இது தாத்தாவின் அசைக்க முடியாத கொள்கை. விவிலியத் திருநூல் வாசிப்பது அவரது அன்றாடக் கடமைகளில் ஒன்று. மேடைப் பிரசங்கம் போல வாசிக்க மட்டுமே அவருக்குப் பிடிக்கும். ஊன்றிப் படிப்பவரல்ல.

ஒரு கட்டத்தில் இவர்கள் கற்குடிலுக்கு வருகை தரும் பண்டகசாலை வைத்திருக்கும் குட்மன்சன் ப்யோர்னின் எளியதும் பண்பட்டதுமான வாழ்க்கையை வியக்கிறார். பேச்சு வாக்கில் அவரிடம் அந்த அழகான பண்ணையை அதிகமான விலைக்குக் கேட்கிறார். ப்யோர்ன் அதற்கு மறுதளிக்கிறார். தாத்தாவைப் போலவே பேரன் அல்ஃப்க்ரைமுருக்கும் அந்தக் கிராமத்தை விட்டு அகல மனமில்லை. அவர்கள் பண்ணைக்கு அருகில் இருக்கும் தேவாலய கல்லறையில் அவனது தனியான விளையாட்டு. தாத்தாவுடன் மீன் பிடிப்பது. கழுவுவது, அதைத் தெருக்களில் கொண்டு வீடுகளில் விற்பது என்று சகலத்திலும் உடனிருப்பான். படகில் துடுப்பு வலிப்பது, பதப்படுத்துவது, கோடைகாலத்தின் பிற்பகுதியில் ஸ்க்யால்டா என்று பெயரிடப்பட்ட மாட்டைத் தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது என இயங்கிக் கொண்டிருப்பான்.

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அவனை லத்தீன் மொழி கற்றுத் தரும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கவும், டென்மார்க்கின் கோப்பென் ஹேகனுக்கு அனுப்பி, மேல்படிப்பும் பயிற்சி பெறச் செய்து பண்டிதராக்கவும் விருப்பம். அந்த விருப்பத்திற்கு ஒத்துக் கொள்வதைத் தவிர அல்ஃப்க்ரைமுருக்கு வேறு மார்க்கம் இல்லை. சொர்க்கத்தின் புதல்வனாக இருக்க நினைத்தவனுக்கு இடியாக விழுகிறது.

தேவலாயக் கல்லறை வெளியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது மணியோசை ஒலிக்கத் தூரத்திலிருந்து கருப்புக் குதிரைகள் இழுத்து வரும் சவ ஊர்வலம் நெருங்கி வருகிறது. தள்ளாத முதியவரான நல்லாயர் ஜோகன் ‘ஒரு உண்மையான மலர்’ பாடலை பிணத்தின் புதைகுழிக்கு முன்னே பாடுவது வழக்கம். சிறுவன் மறைவாக இருந்து பார்க்கிறான். இவனைக் கண்டுகொண்டவர் அருகில் அழைக்கிறார். நல்லாயர் ஜோகனோடு கீச்சுக் குரலில் பாடத் துவங்குகிறான். தனக்குச் சரியாகப் பாட வராது. என்றாலும் அதில் ஒரு ஆதார ஸ்ருதி இருப்பதாகச் சொல்கிறார். அந்த ஆதார ஸ்ருதிக்கான விளக்கத்தைத்தான் ஐஸ்லாந்தின் புகழ்பெற்ற பாடகர் கர்தர் ஹோம் சிறுவன் அல்ஃப்க்ரைமுருக்குச் சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள். நல்லாயர் ஜோகன் அன்று முகமழிந்த ஒருவனுக்கு இறுதிச் சடங்கு நடத்தியது போல்தான் கைவிடப்பட்ட முகவரியற்ற மனிதர்களின் சடலங்களை அடக்கம் செய்வதைத் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை செய்து கொண்டிருந்தார்.

நலிந்த நிலையில் இருக்கும் அயல் நாட்டவர்களுக்கு உயர் பொறுப்புகள் தருகிறது டென்மார்க் அரசாங்கம். ப்ரேய்தாஃயோதூர் விரிகுடாவில் டென்மார்க் நாட்டு நோட்டம் விடும் கப்பல்களுக்கு வழிகாட்டும் பொறுப்பானவராகத் தளபதி ஹோகென்ஸன் நியமிக்கப்படுகிறார். டென்மார்க் அரசு பெரும் வலைகளையும், இயந்திர இழுவைப் படகுகளையும் கொண்டு மீன்களை அறுவடை செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. ப்யோர்ன் போன்ற பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்பவர்கள் இதனால் காணாமல் போகிறார்கள். இந்த நிலையில் பதவியிலிருந்து விலகுகிறார். ப்ரெக்குக்காட்டின் பண்ணை வீட்டில் அவரது இறுதிக் காலத்தைக் கழிக்கிறார். ஐஸ்லாந்தின் நல்லாயர், மாவட்ட மணியக்காரர்கள், கவிஞர்கள் வம்சாவழியில் உதித்தவர். டென்மார்க் அதிகாரிகளிடமிருந்து நயந்து பெற்ற குதிரை முடிகளைப் பின்னுவது அவரது பொழுதுபோக்கு. நரையோடிய முதிய காலத்தில் தவறி விழும் மயிர்களை எடுத்துக் கொடுப்பது சிறுவனின் பொறுப்பாக இருக்கிறது.

வீட்டுப் பரணின் இடைத் தளத்தில் வசித்துக் கொண்டிருந்தவர் ஸ்காகி ஜோன் என்றழைக்கப்படும் கண்காணிப்பாளர். சிறுவனின் பாட்டிக்கு தூரத்து உறவு இவர். வெட்டித் தின்பதற்கென்றே ஆட்டை வளர்க்கும் தொழிலை விட்டுவிட்டு, ஆக்ரேன்ஸ் எனும் ஊரில் தனக்கென்று சொந்தமாக இருந்த வஞ்சிர மீன் நிறைந்த ஆற்றை விற்றுவிட்டு தலைநகருக்குக் குடிபெயர்ந்து கண்காணிப்பாளர் பணியில் அமர்ந்திருக்கிறார்.

கண்காணிப்பாளரோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் இன்னொரு நபர் ருனால்ஃபர் ஜான்சன். இவரும் நாட்டின் உயர் வம்சாவழியில் வந்தவர்தான். முதன்மை நீதியரசருக்கும் ஒரு வழியில் உறவுக்காரர்தான். அதிகமாகக் குடிப்பவர். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். நவீன கழிவுநீர்க் கொள்கலன்களில் சேகரமாகும் எருக்களை எடுத்து பண்ணைகளுக்கும், தோட்டங்களுக்கும் சென்று வினியோகிக்கும் வேலையைச் செய்து கொன்டிருந்தவர். கண்காணிப்பாளர்தான் ஜான்சனுக்கு உற்ற தோழர். அவரது தலைமுடி தாடியை மழித்துச் சுத்தமாக்குவதை வேலையாகக் கொன்டிருந்தார். போர்க்கப்பல்களில் அவ்வப்போது வேலை வாங்கித் தரும் உதவியையும் கண்காணிப்பாளர் செய்து கொண்டிரு ந்தார்.

மீனும் பண்பாடும் நாவலில் இதுபோன்ற சாதாரணத்துவம் பேணும் மனிதர்களின் குணாதிசயம் பேசப்பட்டிருக்கிறது. கவித்துவம் நிரம்பிய, ஐஸ்லாந்தின் சொலவடைகள், பழமொழிகள், உலகத் தத்துவப் போக்குகள், தொன்மங்கள், கலைகள் குறித்தெல்லாம் நாவல் பரப்பெங்கும் விவாதிக்கப்படுகிறது. விலகி இருந்து ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விருப்பு வெறுப்பற்ற நேசத்தோடு சிறுவனது பார்வையில் எடுத்துச் சொல்கிறது.

இன்னொரு முக்கியமான விருந்தாளிகளான தம்பதிகளை வாசிக்கும் போது என்னால் அந்தப் பக்கத்தை விட்டு நகர முடியவில்லை. இந்த நாவலில் ஐந்து அத்தியாயங்களில் அவர்கள் வருகிறார்கள். அவளுடைய பெயர் க்ளோயி. வடக்கே இருக்கும் மிகப் பழமையான குடும்பத்தின் வழிவந்தவள் என்று ப்யோர்னிடம் அவள் கணவன் சொல்கிறான். அந்தப் பெண் தீராத நோய்வாய்ப்பட்டவள் என்றபோதும் பேரழகி. யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள். சாகும் தறுவாயில் அவள் கண்டறிந்த ஆன்மீக நெறிகள் பிரமிக்கத்தக்கதாக வடிக்கப்பட்டிருக்கிறது. அவளது கணவன் எபிநேசர் ட்ரெளம்மான் கணப் பொழுதும் விலகாமல் அவளுக்குப் பணிவிடைகள் செய்கிறான்.

தனக்கென்று ஒரு இல்லத்தை அமைத்துக் கொடுக்க முடியாத, ஒரு தாம்பத்ய உறவைக்கூடக் கொடுக்க முடியாத அந்தக் கணவர், அவளுடைய நிர்வாணத்தை மறைக்கப் போதிய உடை வாங்கிக் கொடுக்க இயலாதவர் இப்பொழுது இங்கே ப்ரெக்குக்காட்டில் வந்து நடுப்பரணில் தங்க வைத்திருக்கும் அவல நிலையில் இருக்கிறார். என்றாலும் க்ளோயிக்கு அவளுடைய கணவர் ஒரே அடைக்கலமாகவும் முழுமையான பாதுகாப்பாகவும் தோன்றுகிறார். அவளைக் குணப்படுத்த கைதேர்ந்த மருத்துவர்களை உலகெங்கிலும் நாடி சோர்ந்த நிலையில் உண்மையான மருத்துவக் கலை என்பது அமானுஷ்யமாகவும் மந்திர சக்தி உடையதாகவும் இருக்குமென தம்பதியர் நம்புகிறார்கள். ட்ரெளம்மான் தன் மனைவிக்குப் பாரம்பரிய இந்திய சிகிச்சை முறைகளான யோக சாஸ்திர அடிப்படையிலான மூச்சுப் பயிற்சி, மூக்கின் வழியாக உப்பு நீரை உறிஞ்சுதல், தொடு சிகிச்சை முறை, மந்திர சூத்திர முறைகளையும் அயரமால் முயன்று பார்க்கிறார்.

ஒருவகையான விசித்திர துயரமான வாழ்க்கை முறைக்குள் அகப்பட்டு நீண்ட காலமாக அதிலிருந்து வெளியேற எத்தனிக்கும் மனிதர்களின் தவத்திற்கும், சகிப்பிற்கும் தர்க்க நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய நம்பிக்கைகள் தேவைப்படுகிறது. அதன் வழியேதான் க்ளோயி என்ற இந்தக் கதாப்பாத்திர சித்திரம் காவியச் சுவையேற்றப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் ஆதார ஸ்ருதி வாழ்வின் ஆதார ஸ்ருதி. இந்த தம்பதியர் வரும் இடங்களில் நாவலாசிரியர் ஆதார ஸ்ருதி சொற்களைப் பயன்படுத்தவில்லை. வாசிக்கும்போது அதை வரிக்கு வரி உள்ளுக்குள் ஒப்பித்துக் கொண்டிருந்தேன். தளபதி ஜோகன்ஸன், ருனால்ப் ஜான்சன் ப்யோர்ன், ஆகிய மூவரிடமும் தங்கள் கதையை ட்ரெளம்மன் விவரிக்கும்போது மர்ம வாழ்வின் முடிச்சுகளை அவிழ்க்க புனையப்பட்ட ஜென்மாந்திர சம்பவங்களாக இருக்கின்றன.

ஒரு நாள் குளிர் காலப் பருவத்தின் பிற்பகுதியில் சிறுவன் அல்ஃப்ரைக்முர் நடுப்பரணுக்கு படியேறிக் கொண்டிருக்கும்போது க்ளோயி நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள். இவனைக் கவனித்ததும் படுக்கைக்குச் சென்று போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறாள். அவளது செதுக்கிய சிலை போன்ற பேரழகில் சிறுவன் பிரமிக்கிறான். கொஞ்சம் பெரியவனான பிறகு நடக்கும் இந்தச் சம்பவத்தில் அவன் அவளை உலக இதிகாசங்களில், வரலாறுகளில் வாசித்த பாத்திரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதில் ஒன்று இந்தியாவின் இமய நாட்டு இளவரசி எனும் கற்பனைக் கதாப்பாத்திரம். ஒரு நூற்புக் கதிருக்குக் கூட வழியற்று இருக்கும் இந்த நிர்வாணப் பெண் குறித்து ஐஸ்லாந்தில் ஒரு பழமொழி கூட இல்லையே என வருத்தம் கொள்கிறான்.

மற்றொரு நாள் அல்ஃப்க்ரைமுர் என்று திரும்பத் திரும்ப அழைக்கிறாள். கீழே போய்க் குளிர்ந்த தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்துவரச் சொல்கிறாள். தலை சூளை மாதிரி தகிக்கிறது. நெற்றியில் கைவைத்துப் பார் என்கிறாள். உண்மையில் தலைக்குள் கொதித்துக் கொண்டிருப்பதை நெற்றிக் குளிர்ச்சியில் உணர்ந்து கொள்கிறான்.

“இதோ இங்கே கையை வைத்துப் பார். தெரியும்” என்று அவனது கையை எடுத்து போர்வைக்குள் நுழைத்து அவளுடைய மார்பில் வைக்கிறாள். “என்ன தெரிகிறது” என்கிறாள். அவனுக்கு ஒரு ஆணின் மார்பை விடப் பெண்ணின் மார்பின் மிருதுவான தன்மைதான் தெரிகிறது.

“உன் கையைக் கொஞ்சம் மேலே நகர்த்தி இதயத் துடிப்பைக் கேட்கும் வரை பொறுத்திரு” என்கிறாள் அவனிடம். சொன்னபடி செய்கிறான். அவளுடைய முலைக்காம்பு கையில் விரைத்து நின்றதைத் தவிர வேறெதையும் அவனால் உணர முடியவில்லை.

ஆன்மீகத்துக்கும் மீறிய சக்தி அல்ஃப்க்ரைமுரிடம் இருப்பதாகத் தம்பதியர் நம்புகிறார்கள். க்ளோயி குணமாகிறாள். இந்தச் சம்பவத்தில் நாவலாசிரியர் அதிகப்படியான வார்த்தைகள் எதையும் சேர்க்கவில்லை. வாசகன் ஒருவித அதிர்ச்சியோடு கடக்க முடியாமல் திணறச் செய்கிறார் நாவலாசிரியர் ஹால்டர் லேக்ஸ் நஸ். ஆனால் ட்ரெளம்மான் சிறுவனைக் கடவுள் விஷ்ணுவாகக் காணும் இடம் ஒன்று வருகிறது. கிரேக்கம், சீனம், எகிப்து, ப்ரெஞ்ச், லத்தின், டென்மார்க் போன்ற நாடுகளின் முக்கியக் கவிஞர்கள், ஆளுமைகள், தத்துவச் சிந்தனைகள் பற்றியெல்லாம் மேற்கோள் காட்டப்படும் வரிசையில் இந்திய தத்துவஞான மரபில் விஷ்ணுவைமட்டும் ஏன் இங்கே பிரதானப் படுத்துகிறார்.

இந்தியாவில் யோக சாஸ்திரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கிய தன்வந்திரி என்னும் முனிவர் விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். உலகம் முழுதும் இந்தியபுராண கால அவதாரப் புருஷராக விஷ்ணு பெருமளவில் பிரதானமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இந்தநாவலில் வெளிப்பட்டிருக்கிறது.

ஐஸ்லாந்தின் ஒரே மதமான கிறித்தவப் பைபிளின் வாசகங்கள் கூட விதந்தோதப் படவில்லை. சாதாராணத்துவக் கட்டுமானத்தில் எழுந்த, எளியபழங்குடி தன்மை கொண்ட மனிதர்களின் மென்மையான அறங்களைப் புனைவின் வழியே கோடிட்டுக் காட்டும் அதே வேளையில் பிற்காலத்திய கடவுளான விஷ்ணுவுக்கும் ஆயுர்வேத, இயற்கை மருத்துவத்தின் தொன்ம காலத் தொடர்பு என்ன என்பது குறித்து மேலான விவரிப்புகள் நாவலில் இல்லை.

க்ளோயி பிரியும் போது கதைசொல்லியான அல்ஃப்ரைக்முர் உதிர்க்கும் வார்த்தைகள் அனுபவம் கற்றுக் கொடுத்த தத்துவம். “பெண்ணின் வடிவில் வந்த முடிவிலியை அதனுடைய சொர்க்கத்திலிருந்து இழுத்து வந்து பிறவியென்னும் தளைகள் மீது கிடத்தி சதை எனும் சிறைக்குள் திணித்து விட்டேன். இனி எப்போதுமே திரைச்சீலை மீது படியும் நிழலைப் பார்க்கும் நம்பிக்கை எனக்கில்லை. அந்தக் கானல் நீர் மறைந்துவிட்டது.”

கர்தர் ஹோமின் தீவிரமான ரசிகனாக உருமாறி சிறுவன் அல்ஃப்ரைக்முர் அவரைப் பின் தொடர்கிறான். பாடகனுக்குரிய திறன் அவனுக்கு இருப்பதாகக் கர்தர் ஹோம் நம்புகிறார். சிறுவனின் செய்கைகளிலும் திறமைகளிலும் தன்னையே பார்ப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அவனிடம் வாழ்வின் நிலையாமை தத்துவத்தைப் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதைக்கான செறிவுடன் வருகிறது.

உனது கச்சேரியை கேட்க வாய்க்கவில்லையே என்ற முதிய தாயாரை கைத்தாங்கலாகக் கூட்டி வந்து தேவலாயத்தின் முன் வரிசையில் அமரச் செய்கிறார். இசைக்கத் தெரியாத சிறுவனை ஹார்மோனியத்தை வாசிக்கச் சொல்கிறார். அவன் தயங்குகிறான். நீ எப்படி வாசித்தாலும் எனது பாடலுக்குத் தடை நேராது என்கிறார். ஹார்மோனியம் நாராசமாய் ஒலிக்கிறது. ஆனால் அதை அழுத்தி மேலெழும் வகையில் ஏழுகட்டைக் குரலில் பாடுகிறார் கர்தர் ஹோம். கச்சேரி முடிந்து வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது சிறுவன் அல்ஃப்ரைக்முர் கூறும் வார்த்தைகள் வாழ்வின் தத்துவார்த்தம் பொதிந்தவை.

மீனும் பண்பாடும் எனும் இந்த ஐஸ்லாந்த் நாவல் அதன் எளிய தன்மையால் இங்குப் பேசப்பட்டிருக்கிறது. இந்த நாவலின் முக்கியப் பாத்திரங்கள் அனைத்துக்குமான ஒற்றுமை அவர்கள் அனாதையாக்கப்பட்டவர்கள் அல்லது செல்வச் செழிப்பான வாழ்க்கையில் இருக்கும் ஊழலையும், அதிகாரத்தையும் வெறுத்து ஒதுங்கி வாழ்பவர்கள். ஆனால் அறிவாளிகள். ஐஸ்லாந்தின் நிலமும், கடலும், மீன்களும், நீண்ட நாட்களுக்குச் சேகரித்துக் குளிர் பிரதேசத்தில் கெடாமல் இருக்கும் பண்டங்களுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. (அவ்வளவு தானா)

குறிச்சொற்கள்

மேல் செல்