கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மரக்கறி - சாதாரணத்தை அசாதாரணமாக்கும் கருப்பு அற்புதம்

ஷாராஜ்

பகிரு

மரக்கறி – கொரிய நாவலாசிரியை ஹான் காங்கின் நாவல். 2016-ல் சர்வதேச மேன்புக்கர் விருது பெற்றது.

ஆங்கில மொழிபெயர்ப்பு: டெபோரா ஸ்மித். தமிழில்: சமயவேல்.

வெளியீடு: தமிழ்வெளி. பக்கங்கள்: 224. விலை: ரூ.220.

தமிழில் வெளியான முதல் கொரிய நாவல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கொரிய இலக்கியம் அவ்வளவு பிரபலமானதல்ல. ஆனால், மில்லேனியம் வாக்கிலிருந்து கொரியக் கலைத் திரைப்படங்கள் உலக அளவிலும், தமிழக கலைத் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். நமது இலக்கியவாதிகளில் பலரும் கொரிய இயக்குநர் கிம் கி-டுக் ரசிகர்களாக இருப்பார்கள். நானும். இந்த நாவல் என் கைக்கு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியே கிம் கி-டுக் மொழியிலிருந்து ஒரு நாவல் வாசிக்கக் கிடைத்திருக்கிறதே என்பதுதான்.

நாவலை வாசிக்க வாசிக்க எனக்கு மிகுந்த ஆச்சரியம். அது கிம் கி-டுக் எழுதியது போலவே இருந்தது. அவரது படங்களின் பல அம்சங்கள் இந்த நாவலுக்கும் பொருந்துவதால் ஒப்பீட்டு ரசனை வகையில் அவை பற்றி சில முக்கிய அம்சங்களை மட்டும் சுருக்கமாக கவனப்படுத்துகிறேன்.

கிம் கி-டுக் திரைப்படங்களின் கதைகள் பொதுவாக மாறுபட்ட கதைக் களங்களும், வினோத எதார்த்தங்களும் கொண்டவை. முதன்மைப் பாத்திரங்கள் உளவியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், விசித்திரமான நடத்தைகள் அல்லது குணச்சித்திரங்கள் கொண்டவையாகவும், புற மற்றும் அகவயத் தனிமையோடும் இருக்கும். பூடகமான அந்தப் பாத்திரங்களைப் புரிந்துகொள்வது கடினம். பொதுப் பார்வையில் மட்டுமன்றி மீறல் என்பது பழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கே அவர்களது செயல்களை அவ்வளவாக ஏற்க இயலாது. ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”, ‘அதற்காக இதைச் செய்வதா?’ என்ற கேள்விகளும் எழும்.  

அவரது படங்களின் மென்னுணர்வு, திரைக் கதை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அழகியல் நம்மை வசியப்படுத்தக் கூடியது. சில படங்கள் அழகியலின் உச்சம் எனலாம். ஆனால், அதே அளவுக்கு அவரது படங்களில் உள்ளார்ந்ததும் வலுவானதுமான வன்முறையும், குரூர அழகியலும் இருக்கும். எனினும், அதை அதிகமாகவோ, சில சமயம் வெளிப்படையாகவோ காட்ட மாட்டார். ஆயினும், சிறு தீவு (Isle) படத்தில் இடம்பெறுகிற சுய வதைக் குரூரக் காட்சி போல, அது என்ன என்பது உணர்த்தப்படுவதிலேயே நம்மைக் குலை நடுங்க வைத்துவிடும்.

மரக்கறியும் இது போன்ற அம்சங்கள் கொண்டதே. இந்த நாவலை ஒரு வகையில் கருப்பு அற்புதம் (Dark Fantasy) என்றே வகைப்படுத்தலாம்.

திருமணம் ஆன இளம் பெண்ணான இயாங் ஹை, இனி மேல் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கணவனிடம் சொல்வதோடு, வீட்டில் இருந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் அனைத்தையும் வெளியே கொட்டி விடுகிறாள். அதன் பின் அசைவம் உண்ண மறுத்துப் பிடிவாதமாகவும் இருக்கிறாள். அதனால் என்ன ஆகிறது என்பதுதான் நாவல்.  

கேட்க மிக சாதாரணமாக இருக்கிறது அல்லவா? ஒரு பெண் அசைவம் சாப்பிடாமல், சமைக்காமல் இருப்பதால் பெரிதாக என்ன ஆகிவிடப்போகிறது? இந்தக் கேள்வி எழுவது இயல்பானது. ஆனால், நாவலில் நடப்பதோ, நாம் எதிர்பாராத ஒன்று. அடுத்தடுத்து இயல்பாக நிகழும் சம்பவங்களும், இயாங் ஹையின் மனநிலையும், தற்கொலை முயற்சி, மணமுறிவு, தகாத உறவு, மனப் பிறழ்வு, உயிர் போகும் நிலை ஆகிய நிலவரங்களுக்குக் கொண்டு செல்கின்றன.  ஆக, புலால் மறுப்பு என்னும் சாதாரண விஷயம் அவளைப் பல வித அசம்பாவிதங்களுக்கு ஆட்படுத்தி, இறுதியில் மரண அபாயத்துக்கே கொண்டு சென்றுவிடுகிறது.  

ஆனால், இது வெறும் புறக் கதை மட்டுமே. இயாங் ஹை ஏன் அசைவத்தை மறுத்து சைவளாக மாறுகிறாள், அசைவம் உண்ணவும், சிகிச்சை மேற்கொள்ளவும் ஏன் பிடிவாதமாக மறுக்கிறாள், உடல் தொடர்பான அவளது சுதந்திரச் செயல்பாடுகள் எதனால் ஏற்படுகின்றன, அவளின் துர்க் கனவுகளுக்குப் பொருள் என்ன, எந்த குறிப்பிடத் தக்க அம்சமும் இல்லாதவள் என்று நாவல் தொடங்கியதுமே அவளின் கணவனால் நமக்கு அறிமுகப்படுத்தப்படுத்தப்படும் மிக சாதாரணமான பெண்ணான அவளை அசாதாரணமானவளாக ஆக்குவது எது, அவள் ஏன் மரமாக மாற வேட்கை கொள்கிறாள் என்பதெல்லாம்தான் நாவலின் உள்ளார்ந்ததும் உண்மையானதுமான கதை.  அந்த அகவயத்துக்குள் பயணிப்பதே இந் நாவலின் மையம்.

புலால் உணவு மறுப்பு இயக்கம் மேற்கத்திய நாடுகளில் உருவானது. கிழக்கு நாடுகளில் அதற்கு வரவேற்பு இல்லை. மூன்று சதவிகித மக்கள் மட்டுமே கொரியாவில் சைவர்கள் எனத் தெரிய வருகிறது.  அஹிம்சை மற்றும் புலால் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட பௌத்தம் அங்கு சிறிய அளவிலேயே உள்ளது. புலால் உண்ணி மதங்களே அதிகமும். இவை நமக்கு தேடலில் கிடைக்கக் கூடியவை. நாவலில் இவை எதுவும் பேசப்படுவதில்லை.

இயாங் ஹை, புலால் உண்ணும் மதம் மற்றும் குடும்பத்தைச் சேந்தவள்தான். திடீரென அவள் புலால் உண்ண மறுப்பதற்குக் காரணம், புலால் மறுப்பு இயக்கமோ, பௌத்த அஹிம்சை நெறியோ அல்ல. கனவுகள் காரணமாகவே புலால் உண்ண மறுப்பதாக அவள் கணவனிடமும், குடும்பத்தாரிடமும் சொல்கிறாள். அவை என்ன கனவுகள் என்பதை அவர்களிடம் சொல்லதில்லை. ஆனால், வாசகர்களுக்கு அவை சொல்லப்படுகின்றன. வாஸ்த்தவத்தில் அவை கனவுகள் அல்ல; நைட்மேர் எனப்படும் துர்க் கனவுகள். குருதி படிந்த இறைச்சிப் படிமங்கள், புதிர்மை, பூடகம் ஆகியவற்றால் ஆனவை.

அவளது துர்க் கனவுகள் வெறும் கனவுகள் மட்டுமல்ல. கனவுகள் என அவள் சொல்வதும், நமக்குக் காட்டப்படுவதும், அவளை பாரமாக அழுத்திக் கொண்டிருக்கிற அவளின் இருத்தல்தான். குடும்பம் மற்றும் சமூகக் கட்டமைப்புகளால் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள பெண் நிலை.

உளவியல் நோயாளிகள், மனச் சிதைவர்கள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் அந்த பாதிப்புகள் ஏற்படக் காரணம் அவர்களின் இளம் வயதின் அவலங்களாக இருக்கும். இயாங் ஹையும் இள வயதில் தனது தந்தையின் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளானவள். அவற்றின் விளைவாகவே அவள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், அந்த அடக்குமுறை மற்றும் வன்முறை அந்த அளவுக்குக் குறிப்பிடத் தக்கதாக இல்லை. தவிர, அவளது அக்காவும் அவளோடு அதே வீட்டில் வாழ்ந்தவள்தான். அவளுக்கு இல்லாத பாதிப்பு இவளுக்கு மட்டும் ஏன்? குணாதிசிய மாறுபாடுகளே அதற்குக் காரணம் எனலாம்.

இயாங் ஹை மென்னுணர்வுகள் மிக்க, சாது. அதிகம் பேசவோ, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவோ செய்யாத, தனக்குள் வாழும் அகவுலகவாசி. எந்த சிறப்பம்சங்களும் இல்லாத, அடையாளமற்ற ஒருத்தி. ஆனால், அவள்தான் ஒரு கட்டத்தில் புலால் மறுப்பு குறித்து திடீரென முடிவெடுத்து, அதில் உறுதியாக நிற்கிறாள். அதற்கு எதிராக என்ன நடந்தபோதும் அவள் மனம் தளர்வதோ, பின்வாங்குவதோ இல்லை. அவளது தந்தை வலுக்கட்டாயமாக இறைச்சி உணவை அவள் வாயில் திணிக்க முற்படுகிறபோதும் அதை எதிர்த்துப் போராடுகிறாள். இதனாலேயே தற்கொலைக்கு முயன்று தன் மணிக்கட்டு நரம்பை வெட்டிகொள்கிறாள். இந்தப் பிரச்சனை மணவிலக்குக்கே கொண்டு செல்கிறபோதும் அவள் மணவிலக்கை ஏற்கிறாளே தவிர, தனது புலால் மறுப்பைக் கைவிடுவதில்லை.

இயாங் ஹையின் வாழ்க்கை, குணச்சித்திரம், அவளது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்க்கையில், மேலே கிம் கி-டுக் பாத்திரங்களுக்குச் சொன்னது போல, ‘அதற்காக இப்படியா?’ என்று தோன்றவே செய்கிறது.

புலால் மறுப்பு அவளது விருப்பம். அதை ஏன் அவளது குடும்பத்தினர் இவ்வளவு மூர்க்கத்தோடு எதிர்த்து, அவளை அடுத்தடுத்த அசம்பாவிதங்களுக்குள் தள்ளுகின்றனர்? குடும்பம் தமது கருத்தியல், பழக்க வழக்கங்கள், விருப்பு – வெறுப்புகள் ஆகியவற்றை எந்த ஒரு குடும்ப அங்கத்தினர் மீதும் திணிப்பது வன்முறையல்லவா! அந்த அராஜகம் இந்த நாவலின் ஒரு செய்தி. 

இயாங் ஹை ஏன் இந்த விஷயத்திற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாள்? தனது தீர்மானம் மற்றும் பிடிவாதத்தால் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் நேரும்போதும் அவள் ஏன் சமரசத்துக்கோ, விட்டுக்கொடுத்தலுக்கோ முன் வருவதில்லை? தனது குடும்ப வாழ்க்கையையும், அமைதியையும் விடவா அவளுக்கு புலால் மறுப்பு முக்கியம்?

ஆம், அவளுக்கு அதுவே முக்கியம். அவளது புலால் மறுப்பு என்பது வெறும் புலால் மறுப்பு மட்டும் அல்ல. மனித வன்முறைகள் அனைத்துக்கும் எதிரான ஒன்று. புலால் மறுப்பு என்பது ஒரு தொடக்கம் மட்டுமே! ஒரு மரமாக மாற விரும்புகிற அவள், பிறகு எதையுமே உண்ண மறுத்துவிடுகிறாள்; தான் உணவு உண்ண வேண்டிய தேவை இல்லை என்கிறாள்.

ஏன் அவள் இப்படி இருக்கிறாள்? ஏன் இவ்வாறு மனப் பிறழ்வுக்கு ஆளாகிறாள்? நிறைவேற சாத்தியமே இல்லாத தனது வேட்கைக்காக மரணம் வரை செல்கிறாள்?

நடைமுறையில் மனப் பிறழ்வர்கள் நடந்துகொள்ளக்கூடிய விதத்தில் எதார்த்தமாக அமைந்த இந்த நாவல், வாஸ்த்தவத்தில் உருவக நாவல். பெண்களை ஒடுக்கும் ஆணாதிக்கம், குடும்ப அமைப்பு, சமூகக் கட்டமைப்பு, பெண்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் ரீதியான வன்கொடுமைகள் ஆகிய அனைத்துக்கும் எதிரானதே அவளின் மரம் ஆகும் வேட்கை.

மலர்கள் பெண்களோடு மிகுந்த தொடர்பு உடையவை. அவர்கள் மலர்களை மிக விரும்புகின்றனர். மலர்களின் வரைகலைகள் கொண்ட ஆடைகளை அணிவதும், சில இனப் பெண்கள் மலர்களைச் சூடிக்கொள்வதும் வழக்கமல்லவா! இயாங் ஹையின் அக்கா கணவனும், பின்னர் இயாங் ஹையோடு தகாத உறவு கொண்டு, மன நல மருத்துவமனைக்கு அவள் கொண்டுசெல்லப்படக் காரணமானவனுமான காணொளிக் கலைஞன், நிர்வாண உடல் ஓவியமாக அவளுடையதும் தன்னுடையதுமான உடலில் வரைந்துகொள்வது செடிகள், மலர்கள் ஆகியவற்றைத்தான். இறுதிப் பகுதியில் இயாங் ஹை தன்னை மரமாக ஆக்கிக்கொள்வதற்காக தலைகீழாக நிற்கிறாள். “கைகளில் வேர்கள் முளைக்கும். கால் கவட்டையில் மலர்கள் பூக்கும்” என்கிறாள். இந்தக் குறியீடு, மலர்ப் படிமங்களையும், அவளின் மரமாகும் வேட்கையையும் அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

மரக்கறி, நாவல் என்று சொல்லப்பட்டாலும், வாஸ்த்தவத்தில் நொவெல்லா எனும் சிறு நாவல்தான்.  அத்தியாங்கள் இன்றி, மூன்று பகுதிகளாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. மூன்றும் முறையே இயாங் ஹையின் கணவன், அவளது அக்கா கணவன், அக்கா ஆகியோரின் கோணத்தில் சொல்லப்படுகிறது. தன்மையில் சொல்லப்படும் முதல் பகுதியில் மட்டும் இடையிடையே இயாங் ஹையின் உணர்வுகள், துர்க்கனவுகள் ஆகியவை தொடர்பான பதிவுகள் ஊடுபாவாக இடம்பெறுகின்றன. அது அவளின் அகவுலகை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவுகிறது. மற்றபடி அவளின் கோணத்தில் கதை சொல்லப்படுவது இல்லை.

நாவலாசிரியர் சொல்ல வேண்டியவற்றை மட்டும் மிக நேர்த்தியாகவும், கூடுமான அளவில் குறைவாகவுமே சொல்லியிருக்கிறார். சொல்லப்படாமல் விடப்படுகிறவை நிறைய. அவை நம் மனதில் தாமே உருத் திரண்டு, இடைவெளிகளைப் பூர்த்தியாக்கும்.

மிகத் தொந்தரவு படுத்தக்கூடிய நாவல். எனவே, இதமான வாசிப்பை மட்டுமே விரும்புகிற மெல்லியல் வாசகர்களுக்கு இதை வாசிப்பது கடினம். மெதுவாக நகரும் தன்மை காரணமாக சிலருக்கு அலுப்பும் தோன்றலாம். ஆனால், கதை அம்சம், கதை சொல்லும் முறை, கவித்துவமான மொழி நடை, துல்லியமான அக – புறச் சித்தரிப்புகள் ஆகிய யாவற்றிலும் உள்ள அழகியல் அம்சங்கள், அழகியல் ஆராதகர்களைக் கவரும். குரூர அழகியலின் பண்பே அதன் குரூரத்தால் நம்மைத் தொந்தரவுபடுத்துவதும், அதன் அழகால் நம்மைக் கவர்ந்து இழுப்பதுமான தன்மைகளை ஒருங்கே கொண்டிருப்பதுதான். இந்த நாவலிலும் அவ்வாறான குரூர அழகியலிலிருந்து நம்மால் தப்ப முடியாமல், கருப்பு மாந்தரீகம் போன்ற வசியத்தன்மையான ஈர்ப்புக்கு ஆட்பட்டுவிடுகிறோம்.

நாவலில் பாலியல் அம்சங்களும், பாலுறவுச் சித்தரிப்புகளும் இடம்பெறுகின்றன எனினும், அதைக் கலை நயத்தோடு வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. தமிழ் இலக்கிய பாலியல் கதைஞர்களின் பாலியல் எழுத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் தோன்றுகிறது.

இந்த நாவல் குறித்த மதிப்பீடு, ஒவ்வொருவரின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால், வாசித்த எவராலும் இயாங் ஹையை மறக்க இயலாது.

*******

கொரியக் கலாச்சாரம், வாழ்வியல் ஆகியவை தொடர்பான பதிவுகள் இருக்கக் கூடும், இருக்க வேண்டும் என எதிர்பார்த்தே நாவலை வாசித்தேன். ஏமாற்றம். குறிப்பிடத் தக்க விதமாக அத்தகைய பதிவுகள் எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக சந்தையைப் பிடிப்பதற்காகவே எழுதப்பட்ட ஆங்கில பாணி நாவல் என்பது போல உள்ளது.

இந்த நாவலுக்காக சர்வதேச மேன் புக்கர் விருது ஹான் ஹாங்கிற்கு வழங்கப்பட்டதாக முன் உள்ளட்டைக் குறிப்பிலும், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித்திற்கு வழங்கப்பட்டதாக பின் உள்ளட்டைக் குறிப்பிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டில் எது சரி? அல்லது இருவருக்குமே அப் பரிசு / பரிசுகள் வழங்கப்பட்டதா?

டெபோரா ஸ்மித்தின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்ததாக ஆங்கில விமர்சனங்கள் சிலவற்றில் பார்த்தேன். ஆனால், விரைவில் வரவிருக்கும் திருத்தப்பட்ட ஆங்கிலப் பதிப்புக்கான பிரதியிலிருந்தே தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. எனக்கென்னவோ நாவலின் துவக்கத்தில் சில இடங்களை வாசிக்கையில் பேச்சு வழக்குகள் ஆங்கிலமயமாக்கப்பட்டதாகவே தோன்றியது.

தமிழ் மொழிபெயர்ப்பும் சிறப்பு. கவித்துவ நடையிலான இந்த நாவலை மொழிபெயர்க்க, சீரிய இலக்கியக் கவிஞரான சமயவேல் சரியான தேர்வு. ஆனால், சிற்சில இடங்களில் சிறு குறைகள் தென்பட்டன. செப்பனிட்டிருக்கலாம்.  உதாரணமாக, தூரிகைத்தட்டு மற்றும் ப்ரஷ்களை (ப.108) என்னும் வாசகத்தில் உள்ள ப்ரஷ்களை என்னும் சொல். சில வரிகளுக்கு முன்னோ பின்னோ அப்படி இருந்தாலும் அவ்வளவாகத் தெரியாது. தூரிகைத்தட்டு என்று சொல்லிவிட்டு, ஒரு வார்த்தைக்கு அடுத்ததாகவே ப்ரஷ்களை என்று சொல்வது மிக உறுத்தல். தூரிகைகளை என்று எழுதியிருக்கலாமே! இது போல ஆங்காங்கே சில இடங்களில் ஓரிரு குறைகள் இருக்கும். அது பரவாயில்லை. முன் உள் அட்டையில் நாவலாசிரியை பற்றிய குறிப்பில், முதல் பத்தியில் வாக்கியங்கள் கடந்த காலம், நிகழ் காலம், கடந்த காலம், நிகழ் காலம், கடந்த காலம் என மாறி மாறி வருகின்றன. இதுவும் மொழிபெயர்ப்பாளர் எழுதியதுதானா, வேறு எவரேனும் எழுதியதா என்பது தெரியவில்லை. சிலர் இப்படித்தான், ‘நான் 1965-ல் பிறக்கிறேன். 1971ல் முதல் வகுப்பு படிக்கிறேன்’ என கடந்த காலத்தை நிகழ் காலத்தில் எழுதுவார்கள். அதுவே வாசிப்பில் எரிச்சல் மூட்டக்கூடியது. இந்தக் குறிப்பில் நிகழ்காலமும் கடந்த காலமும் மாறி மாறி வந்து கடுப்பேற்றுகின்றன.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்டால், இல்லைதான்! இருந்தாலும், வாசிப்பில் இடறுகிறதே; செய்வன திருந்தச் செய்யலாமே என்பதற்காக சொல்கிறேன்.

*******

பின் குறிப்புகள்:

இந்த நாவல் குறித்த இணையத் தேடலில் படைப்பாக்கம் சார்ந்து சுவையான ஓரிரு தகவல்கள் கிடைத்தன. அவை:

  1. ஃப்ரூட் ஆஃப் மை வுமன் என்ற தலைப்பில் 2007-ல், தான் எழுதிய சிறுகதையின் தாக்கத்திலேயே இந்த நாவலை 2015-ல் ஹான் காங் எழுதியிருக்கிறார்.
  • இந்த நாவலில் உள்ள மூன்று பகுதிகள் கொரிய மொழியில் தனித் தனியே மூன்று குறுநாவல்களாக வெளியானவையாம்.

*******

ஆங்கில மொழிபெயர்ப்பு: டெபோரா ஸ்மித். தமிழில்: சமயவேல்.

வெளியீடு: தமிழ்வெளி. பக்கங்கள்: 224. விலை: ரூ.220.

மேல் செல்