கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மனிதம் நிரம்பிய கதைகள் – ‘உவர்’ தொகுப்புக் குறித்து

ஞா.தியாகராஜன்

பகிரு

மணல் வீடு சிற்றிதழில் சிவசித்துவின் ‘உறைதல்’ கதை முதலில் பிரசுரமானது. சிறுகதைக்கான சமகால வரையறைகள் எதையும் தன்மீது சுமத்திக்கொள்ளாமல் இயல்பாக எழுதப்பட்ட ‘உறைதல்’ முதல் கதை என்பது போன்ற எந்தச் சாயலுமின்றித் தரமானதாகவே எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து மணல்வீட்டில் அடுத்தடுத்து சில கதைகள் வெளியானது. ஒன்பது கதைகளுடன் தற்போது அவை தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. தற்காலச் சிறுகதைகளில் பாய்ச்சல் நிகழ்த்துவதாக அறுதியிடப்படும் எவரிடமிருந்தும் சித்துவின் சிறுகதைகள் வேறுபட்டவை. உண்மையில் படைப்பு குறித்த கருத்துரைகளைத் தன்மீது சுமத்திக்கொள்ளாதிருப்பதே அவற்றின் படைப்பூக்கத்தைத் தக்க வைப்பதற்குச் சரியான காரணமாகக் கூறலாம். எழுத்தை ஒரு தவமாகச் செய்தவன் தானல்ல என்று குறிப்பிடும் இதன் ஆசிரியரே உண்மையில் தற்போதான சூழலுக்கு வேண்டியிருப்பவர். ஒரு தவமாக எதைச் செய்யும் போதும் அதன் வரம் குறித்த கவலையும் முளைத்துக்கொள்கின்றன. படைப்பை படைப்பாளன் காப்பாற்ற வேண்டுமெனில் இந்தத் தளையை முதலில் களைய வேண்டியுள்ளது.

எவ்வித ஒப்பனையுமற்ற மனிதர்கள் இத்தொகுப்பில் பதிவாகின்றனர். அறிவுலகம் குறிப்பிடும் எந்தக் கோட்பாடும் இவர்கள்மீது செயலாற்றுவதில்லை. சமுதாயத்தை மதிப்பிடும் அலகுகளிலிருந்து விலகி தங்கள் நிலத்தில் கால்பதித்தவர்களாக வலம் வரும் இவர்களிடமும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. அது உலகமயமாக்கப்பட்ட என்ற சொற்றொடருக்குள் அடங்காத ஆனால் இன்னும் சக மனிதர்களாக நம்மிடம் நடமாடிக்கொண்டிருப்பவர்கள். இந்தக் கதையின் அழுத்தத்தை உணர்வது ஒரு வாசகனின் அயலுலகத்துடனான தொடர்பை பொறுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதைகளுக்கான மூலங்கள் அந்தரத்திலிருந்து பெறப்பட்டதல்ல. உண்மையில் இது ஆசுவாசமான வாசிப்பை சாத்தியப்படுத்துகிறது. இதன் மாந்தர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பவர்களாகக் கூறலாம். நவீன மனதை மட்டும் காட்சிப்படுத்தும் படைப்பாக்க முயற்சிகளில் இறங்கி இன்றவை ஒற்றைத் தன்மையுடையதாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில் சித்துக் காட்சிப்படுத்தும் எந்த மாந்தர்களும் தங்களுக்குப் புலப்பாடத ஒன்றை தேடியடையும் முயற்சியில் இறங்கி இருப்பவர்களாக இல்லை. வயது பார்க்காமல் மணியுடன் நட்பு பேணும் சங்கரன் உறைதலில் அப்படிதான் வலம் வருகிறார். ‘உவர்’ கதையின் நீலமேகம் மாமாவும் அப்படியான ஒரு நபர்தான். தமிழ்ச் சிறுகதைகளில் சமீபமாக மனிதர்களின் நடமாட்டம் பெரும்பாலும் அருகிவிட்டது என்றே கூற வேண்டும். மேலும் அவர்களை ஆட்படுத்துவது இம்மண்ணிற்குரியவையகளாக இருப்பதில்லை. அவற்றுள் ஏதோ ஒரு மேட்டிமையைச் செயல்படுகிறது. ஆனால் அவைதான் சிறுகதைகளில் பாய்ச்சல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகின்றன.

தமிழ்ச் சூழலுக்கு இவை புதிதொன்றுமில்லையென வாசக மேதாவிகள் பலரும் சொல்லக்கூடும் (அதுவே பெரிய விஷயம் என்பது ஒரு புறமிருக்கட்டும்). படைப்பின் ஊக்கத்தைத் தக்க வைத்தல் என்பதிலிருந்து இதனை அணுகினால் இவற்றின் திறம் ஒருவேளை புரியலாம். எப்படிக் கதையின் மகத்துவத்திற்காகச் சிவசித்து மெனக்கெடவில்லையோ அதே போலவே தனது கதைமொழிக்கும் அத்தகைய சுமையை எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கான நிலத்தின் மொழியை இக்கதைகளைக் கலைத்துவமாக்க போதுமானவையாக இருக்கின்றன. தன்னளவில் அவை நிறைவுற்றவையாகவே காணப்படுகின்றன. எல்லா வயது பாத்திரங்களும் அவரவருக்கான தரப்பிலிருந்து வலம் வருகிறார்கள். யாரையும் வயதுக்குமீறிய முதிர்ச்சியடைய வைக்கும் எத்தனிப்புகள் இல்லை.

வாழ்வில் நேர்கொள்ளும் அபத்தங்களை அதன் தன்மையோடு கடக்க முனைகின்றனர் சித்துவின் மாந்தர்கள். அவர்கள் யார்மீதும் புகார் வைத்துக்கொள்வதில்லை. மாறாக அதைக் கடந்து போக முயற்சிக்கிறார்கள் ‘உறைதல்’ கதையில் அப்படியான ஒரு அபத்த நிகழ்வை கடக்கவும் செய்கிறார்கள். இதனை மையப்படுத்தும் விதமாகவே ‘உவர்’ கதையில் படைக்கப்படும் நீலமேகம் மாமாவின் மனைவி பாத்திரம் எங்கும் பேச வைக்கப்படாமல் கதையின் நாதகமாக மாற்றப்படுகிறார். இரண்டு கதைகள் சிறுவர்களின் உலகத்திலிருந்து எழுதப்பட்டது. இதில் ‘ENGLISH IS A FUNNY LANGUAGE’ கதையைக் காட்டிலும் ‘வெளம்’ அதிலிருந்து சற்று வித்தியாசப்படுகிறது. வெளத்தில் மறைமுகமாக அதிகாரத்தின் பொறுப்பற்ற தன்மை பதிவாகிறது. எதற்கோ பொங்கியெழும் வெளம் இறுதியில் அதிகாரத்தின் மீதான ஆற்றாமையோடு முடிகிறது. இறுதியில் தூக்கியெறிந்த சத்துணவை மீண்டும் உண்ண வைப்பதன் மூலம் கதை வேறொரு கோணத்தில் தன்னை விளங்கிக்கொள்ள வழிசெய்கிறது. நேரடியான அரசியலைக் கொண்டிருக்கும் கதையாக ‘சக்திக்கெடா’வினைக் கூறலாம். என்றாலும் சக்திக்கெடாவின் கதையம்சம் சில தமிழ் திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இலக்கியப் பிரதிகளில் வேறெங்கேனும் ‘வெள்ளத்துரை’ போன்ற கதாபாத்திரங்கள் பதியப்பட்டிருக்கிறார்களா எனில் சற்று சந்தேகம்தான்.

சித்து ஒரு கைதேர்ந்த படைப்பாளி போல தெரிவது ஆச்சர்யமான ஒன்று தான். தன் பாத்திரங்களின் தேர்வில் அதிகம் கவனம் செலுத்துகிறார். கதைப் பின்னல் அமைப்பும் இயல்பாகக் கைகூடுகிறது. கதையின் பிரதான பாத்திரங்கள் யாவரும் தடுமாற்றமில்லாமல் கதையை நகர்த்திச்செல்கிறார்கள். கதையை எடுத்துச் செல்வதிலும் சித்துவிற்குச் சிக்கலில்லை. பொதுவாகக் கரிசல் வட்டாரத்தைப் பதியும் எந்தப் படைப்பாளர்களிடமும் சில கதாபாத்திரங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாகத் தன்னைச் சுற்றிய சமூக நடவடிக்கைகள், தன் அண்டை மனிதர்கள், தனது சாதிய பின்புலம் ஆகிவற்றின் மீதான ஓர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சித்துவிடமும் இது பதிவாகிறது. கதையின் துணைப் பாத்திரங்களும் குறுகிய காட்சிகளில் தோன்றினாலும் அவர்களும் மனதில் எங்கோ பதிவாகிறார்கள். மேலும் மென்மையான உணர்வுகளின் மேன்மை பொருந்தியவர்களாக இவர்கள் இருப்பதில்லை. ஆனாலும் இவர்களின் வாழ்விலும் நெகிழ்ச்சி மிகு தருணங்கள் நிரம்பியே காணப்படுகின்றன. விடியல் கதையில் அப்படிதான் சிவா வருகிறான். அவனது உற்சாக மிகுதி கதையை வாசிக்கும் போதே நம்மைத் தொற்றிக்கொள்கிறது. எங்கோ ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கிய கதாபாத்திரம் நமக்கு நினைவுக்கு வருகிறது.மேலும் ஓட்டுனர் வழியாகச் சிவாவும் சிவா வழியாக மற்ற பாத்திரங்களும் கேலி செய்யப்படுகிறார்கள். சித்துத் தன் கதைக்கு நாடிப்போகும் மனிதர்கள் இயல்பானவர்கள். ஒரு ரைஸ் மில் தொழிலாளியோ, ஒரு பேருந்து நடத்துனனோ, ஒரு சிறுவனோ, ஒரு முப்பிடாதியோ சித்துவிற்குப் போதுமானவர்களாக இருக்கிறார்கள். படைப்பு தளத்தின் மீது கவனமற்றவன் என்பது ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருப்பினும் சித்துவின் படைப்பு திறனிற்கு அதுவொரு முக்கியக் காரணமாக இருக்கலாம். மரணித்துப்போன கதாபாத்திரங்களைச் சித்து உயிர்ப்பித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் பாத்திரங்கள் மட்டும்தானா என்றால் இல்லை. சூழலமைவுகளிலும் தனித்த சுவை இருக்கிறது. கதைகளில் பல இடங்களில் இதனை அனுபவிக்க முடிகிறது. சக்திக்கெடா கதையில் மச்சினன் உறவு முறைக்குள்ளிருக்கும் ரசபாசமான உரையாடலை வெற்றிகரமாக எழுத்தில் படம் பிடிக்கிறார். தனது வட்டார எல்லைகளின் பேச்சு மொழியிலிருக்கும் பரிச்சயம் கதையில் பெருமளவில் கைக்கொடுக்கிறது. அதனால் தான் எந்தச் சூழலையும் அதன் அடர்த்திக் குறையாமல் கடத்த முடிகிறது. நடைமுறையில் அணுக சிக்கலான சம்பவங்களை வெற்றிகரமாகக் கதையில் வடித்துத் தருகிறார். மேலும் வளயம் கதையினை ஒரு இனவரைவியல் நோக்கில் அணுக வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. முயல் வேட்டையில் ஈடுபடும் சாதியினர் அவர்களிடையேயான முரண்கள், பழக்க வழக்கங்கள், ஒரு விலங்குடனான தொடர்பாக இல்லாமல் தனது வேட்டை நாய்கள் மீதான கரிசனம் அவற்றைத் தனது தன்மானமாகக் கருதும் மனப்போக்கு ஆகியவை ஒரு இனவரைவியலுக்கான தோதுபாதுகளுடன் அமைவது குறிப்பிடதக்கது. நிச்சயம் நமது சமகாலப் புனைவெழுத்தாளர்களிடம் இதைக் கொடுத்திருந்தால் அதில் நாய்களும் இருந்திருக்காது. மனிதர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

சித்துவின் இந்த ‘உவர்’ தொகுப்பில் இடம்பெறாத ஒரு கதை ‘ஊமச்சி’ ஆகும். என்ன காரணம் கருதி ஆசிரியர் தவிர்த்தார் என்பது விளங்கவில்லை. ஊரில் தன் உடலின் மீது எந்தப் பாலியல் மதிப்பும் கொள்ளாத ஊமச்சி ஒருத்தியின் கதையாகப் புனையப்பட்ட இக்கதை இன்னமும் நினைக்கும் போது ஒரு குரூர வாசிப்பின்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கதையின் மையப்பாத்திரத்தை சூழ்ந்திருக்கும் நண்பர்கள் வழியாகவும், ஊரின் வாய்மொழி வழியாகவும் ஊமச்சி எனும் பாத்திரம் நமக்கு அறிமுகமாகிக்கொண்டே வருகிறது. ஊமச்சி புரோட்டாவிற்குத் தனது உடலை எடுத்துக்கொள்ள அனுமதிப்பவளாக இருக்கிறாள். நண்பன் ஒருவன் வீட்டில் ஆளற்ற போது அவளை அழைத்து வந்திருப்பதாக நாயகனிடம் தெரிவிக்கிறான். பிறகொரு காட்சியில் அவனே ஒரு புதர் மறைவில் ஊமச்சி பாலியலில் ஈடுபடுவதை நேரடியாகக் காண்கிறான். ஒரு சமயம் தெருவோரத்தில் ஒரு தந்தை தனது குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்தக் குழந்தையிடம் அத்தந்தை விளையாடுவது அவரது தோற்றத்திற்கு மீறியதாக இருப்பினும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் குழந்தைமை பற்றி நாயகன் சிந்திக்கிறான். அந்தக் கருணை வாசகரையும் கவர்கிறது. ஒருநாள் கதையின் மையப் பாத்திரமும் அவனது நண்பர்களும் சீட்டு விளையாடிக்கொண்டு கேலிக்கையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு எதிரில் ஊமச்சியின் மயிர்க்கற்றையைக் கோர்த்து பிடித்த வண்ணம் கன்னத்தில் மாறிமாறி விழும் பலத்த அறையுடன் இழுத்து வரப்படுகிறாள். சூழல் பதட்டமாக மாறுகிறது. இவர்கள் அங்கே குழுமியிருந்தாலும் ஊமச்சிக்குத் தொடர்ச்சியாக அந்த முரட்டு கைகளால் அடி விழுகிறது. அவர்கள் வசவின் ஊடாக ஒருவருக்குரிய பணம் கொடுத்துவிட்டு இருவர் புணர முயல்கையில் ஊமச்சி அதற்கு இணங்க மறுத்திருப்பது தெரிய வருகிறது. அந்த ஆத்திரம் அவர் கன்னத்தில் விழும் அறையில் வெளிப்படுகிறது. மாராப்பை இழுக்கும்போது கைகளால் மார்பை மறைத்துக்கொண்டு ஊமச்சி அடியை வாங்கிக்கொண்டு அழுவதும் மேலுமேலுமான இழிசெயல்களில் பேசமுடியாத வார்த்தைகளுடன் அவர்களுடன் போராடுவதும் கதையின் உச்சபட்ச ஒரு துன்பியல் சம்பவம் என்றால் சித்து அத்துடன் வாசகரை விடுவதாக இல்லை. ரெண்டு எட்டு முன்னே போய்விட்டு மீண்டும் ஆத்திரம் பொறுக்க முடியாமல் தனது முரட்டு கையால் மீண்டும் வந்து ஊமச்சியின் கன்னத்தில் ஓங்கி அறையும் நபரை முன்னர்க் குழந்தையுடன் தானும் குழந்தையாக விளையாடிய தந்தையாக அறிமுகம் செய்கிறார். பாலியல் தொடர்பான சங்கேதங்களைக் காட்டிலும் அதில் வெளிப்படும் மனிதனின் அகந்தையான முகத்தை இவ்வளவு துல்லிதமாய்ச் சித்தரிப்பது அரிதான முயற்சியாகும். அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக இக்கதை எழுதப்பட்டிருக்குமாயின் கதை இத்துடன் நிறைவுற்றிருக்கும். ஆனால் கதையின் முடிவு அவ்வாறாக அமையவில்லை. அன்பின் பிணைப்போடு கதை முடிவை எட்டுகிறது.

இப்படியாக சித்துவின் கதையில் மானுடம் பேசப்படுகிறது. இன்னும் இந்த நவீன வாழ்வில் மிச்சமிருக்கும் மனிதர்கள் பதிவுசெய்யப்படுகிறார்கள். உரையாடல்கள் வழியாய் கதை நகர்த்திச் செல்வது படைப்பில் சவாலான விஷயம். அதனைப் பல இடங்களில் சாத்தியப்படுத்தியதின் மூலம் சித்து தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி பல அம்சங்களுடன் இச்சிறுகதை தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சமகால வாசகர்கள் இதனை அடையாளங்கண்டு வாசிப்பது வாசிப்பின் கடமையாகும்.

மேல் செல்