கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

பீஃப் கவிதைகள்
பச்சோந்தியின் வேடிக்கைகள் குறித்து...

வசுமித்ர

பகிரு

கால் நடைகள் நமது நண்பர்கள்; பெற்றோர்களைப் போலவும், உற்றார் உறவினர்களைப் போலவும் விளங்கும் இவைகளே உழவுத் தொழிலுக்கு அடிப்படை. இவை உணவையும் பலத்தையும், உடற்பொலிவையும், இன்பத்தையும் அளிக்கின்றன. இதை அறிந்த பண்டைய பிராமணர் கால்நடைகளைக் கொல்வதில்லை.

புத்தர்.

முன்னுரையில் தனது பாடுகளையும் பெற்ற பாராட்டுகளையும் சொல்லிச் செல்லும் பச்சோந்தி, தனது பீஃப் கவிதைகள் முழுக்கவும் வேடிக்கை பார்க்கவும், சொல்லவும், விவரிக்கவுமாகவே இருக்கிறார். அவரது கவிதைகள் உருவத்தில் மட்டுமே தன்னைக் கவிதைகளாக அறிவிக்கிறது. உள்ளடக்கத்தில் விவரணைகளைத் தாண்டி வேறு எதுவாகவும் மிஞ்சவில்லை என்பதே எனது வரையறை. சொற்களை கொஞ்சம் உரசிப் பற்ற வைக்க அவருக்கு கவிதை மொழி கைகூடவில்லை. கவிதையைச் செய்யலாம். அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் செய்யும் வித்தையை இப்படித்தான் செய்தேன் என ஒளிவுமறைவின்றி காட்டுவது மிகச்சிறந்த வித்தைக் கலைஞனுக்கு அழகல்ல. ஒளித்து வைப்பதில்தான் மாயாஜாலக்காரனின் வித்தையும், வாழ்க்கையும், கனவும் இருக்கிறது. பச்சோந்தி தனது கவிதை வெளியை கண்டுபிடிக்க உரையாடியவர்களாக சொல்பவர்கள் பச்சோந்தியிடம் என்ன கற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நா.முத்துக்குமாரிலிருந்து தொடங்கி கணையாழி என பல பெயர்களைச் சொல்லுகிறார். கற்றுக்கொடுத்தவர்கள் பச்சோந்திக்கு என்ன கைவரும் என அவரிடம் கண்டுபிடித்திருந்து உரையாடியிருந்தால், அவர் தன் கவிதையில் இன்னும் கொஞ்சம் தூரத்தை எட்டியிருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. சகோதரத்துவத்திலும், நட்பிலும் அணைப்பைப் பெறுவது நல்லதுதான். ஆனால் பாசாங்கான அணைப்புகளின் மூலம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

பீஃப் கவிதைகளை வாசித்தேன். கவிதைகள் முழுக்க முழுக்க வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையில் மட்டுமே உள்ளது. செய் நேர்த்திக்காக வெற்றுச் சொல்லாடல்களை அங்கும் இங்கும் சிதற விட்டிருக்கிறார். பார்ப்பவனுக்கும் காட்சிக்கும் இருக்கும் தூரம் மட்டுமே அவரது கவிதைகளில் காணக்கிடைக்கிறது. அந்த தூரம் சற்று மங்கலான சித்திரத்தையே தருகிறது.

சி.சி.டி.வி என்பது வெறுமனே கருவியல்ல. அதிகாரத்தின் மிக மோசமான, வெட்கங்கெட்ட விசுவாசமான நாய். அனைவரையும் திருடராக்கும் அதன் குரைப்பொலி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் அதைக் கருவியாகவே பச்சோந்தி பதிவு செய்கிறார். மாறாக சி.சி.டி.வி கேமாராவின் மூலமாக உலகத்தைப் பார்ப்பவர்கள் குறித்து அவர் தன் கவிதையில் பதிவு செய்ய இடமிருந்தும் தவிர்த்துவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் அது அவரது உள்ளுணர்வை எட்டவே இல்லை.

இந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் கவிதை எழுதக் கூடாதா என்கிற கேள்வியைக் கேட்கும் வாசகருக்கும், திறனாய்வாளருக்கும் நான் ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவாவது மிஞ்சட்டும் என்பதுதான்.

பச்சோந்தி கற்றுக்கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார் என்பது மட்டுமே அவரது கவிதைத் தொகுதியில் நான் கண்ட மிக மிக முக்கியமான அம்சம். அவரிடம் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்வதற்கு அவரது கவிமனம் இன்னும் கொஞ்சம் தயாராக வேண்டும். உதாரணத்திற்கு,

“மேலத் தெரு பெண் தூக்கில் தொங்கியதாக

செய்திவந்தது.

அவளைக் காதலித்த

பறையடிக்கும் பெருமாளின் தலையைத் தண்டவாளத்தில்

சேரியே தேடியலைந்தது அன்று.

ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு

அவசரமாய் ஓடுகிறோம்.

பறையைக் காய்ச்ச தீப்பெட்டி கேட்டு நின்றேன்

உதட்டைப் பிதுக்கிச் செல்கிறாள்

மேலத் தெருக்காரி

பின்பு

அடித்துக்களைத்த பறை

அவள் வீட்டுத் திண்ணையில் இளைப்பாறியது.

நீர் தெளித்த அவ்விடத்தை

விளக்கமாற்றால் அடித்து அடித்துக் கழுவினாள்

பறையடிக்கும் அதிர்வில் விம்மிவிம்மிப் புடைக்கும்

என் மார்பை

எலும்புச் சாற்றை உறிஞ்சுவது போலே

வெச்ச கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.”

(பக்கம்- 64)

இக்கவிதையில்

அவசரமாய் ஓடுகிறோம்... என்பதோடு அக்கவிதை தன் பயணத்தை முடித்திருக்க வேண்டும். கொல்லப்பட்டவனின் பேரால் பழிவாங்குவதாய்ச் சொல்லி மேலத்தெருக்காரியின் புணரும் சித்திரத்துக்குள் சென்று விடுகிறார் பச்சோந்தி. கொந்தளிக்கும் மனம் வசைகளையும், பழி தீர்ப்பையும் கொட்டுமென்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதே சமயம் அவ்வசைகள் கவிதையாகும் பட்சத்தில் உள்ளடக்கத்திற்கேற்ப சாவுக்கவுச்சியுடனே இருக்க வேண்டுமென்பேன் நான். ஆயுதம் என்றால் அது ஆயுதம்தான். சமரசம் கூடாது. அது மொழியாக இருப்பினும் கூர்மையுடன் பாய வேண்டும்.

காமத்துக்கு சாதி கிடையாது என் தோழனே. அது சொத்துடைமைக்கு முதல் போடும் திருமண சம்பந்தத்தில்தான் தன் ஆகிருதியைக் காட்டும். அங்கு சாதியால் ஒரு ஆண் பழிதீர்க்கப்படுவதைப் போல, இங்கு நீங்கள் ஒரு பெண்ணை பழி தீர்க்கிறீர்கள். அவள் காமத்தோடு பார்த்திருந்தால் அதிலென்ன குற்றம் இருக்கப் போகிறது. அதைக் குற்றமெனச் சொல்ல உங்கள் மனம் துடிக்குமா என்ன? அவள் அப்படிப் பார்ப்பதற்கு சாதி அங்கு ஒரு தடையாய் இல்லை என்பதை உங்கள் கவி மனமும் வரலாற்றுணர்வும் அறியும் பட்சத்தில்,

“பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.”

என்ற சிவவாக்கியனின் உடுக்கை உங்களுக்குள் ஒலிக்கும். ஒலிக்கும் உடுக்கைக்குள் உதிரும் வரலாற்றை அறிவீர்கள் நீங்கள். உங்களோடு நானும்?

மேற்கொண்டு மொழிரீதியாக அக்கவிதையை கொஞ்சம் அணுகிப்பார்த்தோமென்றால், அக்கவிதையின் மொழியும் சற்று இடறலாக இருக்கிறது. விளக்கிச் சொல்ல வேண்டுமெனில்,

“மேலத் தெருக்காரி

நாண்டுகொண்டதாக

கிசுகிசுத்தது

ஊர்

பறையடிக்கும் பெருமாளின் தலையை

தண்டவாளத்தில்

தேடியலைந்தது

சேரி

ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு

அவசரமாய் ஓடுகிறோம்.

பறையை இறுக்கிக் காய்ச்ச

நெருப்பைக் கேட்டு நின்றேன்

உதட்டைப் பிதுக்கிச் செல்கிறாள்

மேலத் தெருக்காரி

அடித்துக்களைத்த பறை

அவள் வீட்டுத் திண்ணையில் அதிர்ந்து கிடந்தது

நெருப்பை மறுத்த கை

நீர் தெளித்து

அவ்விடத்தை விளக்கமாற்றால்

அடித்து அடித்துக் கழுவிக்கொண்டிருந்தது

கண்களோ

பறையடித்துத்  துடிக்கும்

என் மார்பை

எலும்புச் சாற்றை உறிஞ்சுவது போலே

பார்த்துக்கொண்டே இருந்தது.”

இவ்விடத்தில் பார்த்துக் கொண்டே இருக்கும் பெண் திருமணம் ஆனவளாயிருந்தால் இங்கு நான் சொல்லிய சேதி பொருத்தமாக இருந்திருக்கும். இல்லையேல் தூக்கிட்டுச் சாவதில் இன்னொரு பெண்ணாக இருப்பாள். அதுகுறித்து உங்களது கவி மனம் சொல்வது என்னவாக இருக்கும்? இன்னும் ஒன்று சொல்வேன் நாண்டுகொண்டவளில் குரல்வளையில் உறுமும் பறை குறித்தும் எழுத இக்கவிதையில் இடமிருக்கிறது. எழுதியிருக்கலாம். இது எதிர்பார்ப்புகள்தான். உங்கள் கவிதையின் களத்தை சற்று தள்ளி நின்று காண்பதுதான்.

கவிதைகளை அதன் துறை சார்ந்தவர்களிடம் கொடுத்து தணிக்கை (Editing) செய்யும் மரபு இன்னும் தமிழுக்கு வாய்க்கவில்லை. அதை இங்கு ஒரு பெரும்பாவமாகவே எழுத்தாளர்கள்- கவிஞர்கள் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட ‘என் எழுத்துக்கு நான்தான் முதலாளி’ என்பதைப் போலவே அது பார்க்கப்படுகிறது. உண்மையில் அது அவ்வாறில்லை. அது மொழியை கூர்மை செய்யவும், தேர்ந்தெடுத்த விசயம் குறித்தான பதிவில் அதன் பாய்ச்சல் சரியாக சென்றிருக்கிறதா என்ற தடங்களை உற்றுக் கவனிப்பதற்கும் உதவுகிறது. பச்சோந்தி அது குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம்.

செய்தி சொல்பவர்களின் பாவனைகளையும், வேடிக்கை பார்ப்பவர்களின் மனநிலையையும் தள்ளிவிட்டு ரத்தமும் சதையுமாக அதன் அர்த்தங்களைக் கண்டுபிடிக்க பச்சோந்தி நிச்சயம் எத்தனிப்பார் என நம்புகிறேன். “என்னை நானே சுயதணிக்கை செய்கிறேன். என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்று செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன்” என்று முன்னுரையில் அவரே கூறியது போல் அவரது பிடிவாதம் அவரை உறங்கவிடாது என்பதைப் புரிந்து கொள்கிறேன். அவரது தேடலும் அத்தகையதே. அதே சமயம் சில விமர்சனங்கள், பற்கடிப்புக்களைக் கூட சகியாத ஒருவராகவும் அவர் தன்னை முன்னிருத்துகிறார். அதன்பொருட்டு அவர் தன்னை அழிக்கும் அளவுக்குச் சென்றதாகவும் பதிவு செய்கிறார். அதைத் தவிர்த்துவிட்டு அதற்கான வீரியத்தை அவர் தன் கவிதையில் வரவைக்க வேண்டும். அவரால் முடியும். இது ஆருடம் அல்ல. அவரது தரமான பிடிவாதத்தின் மேல் நான் வைத்திருக்கும் இயல்பான மரியாதை.  இன்னும் ஒன்று, எங்கும் தங்காத அவரது மனநிலை அவரது படைப்பூக்கத்துக்கும் தனித்தன்மைக்கும் வழிவகுப்பதாக தான் உணர முடிவதாகக் கூறுகிறார். இது வெறும் இலக்கியகாரானாக அவர் உணர்வற்றுச் சொன்ன வரிகள் என்றே எண்ணுகிறேன். இந்த மனநிலையை வைத்துக்கொண்டு மாட்டுக்கறிக்காகக் கொல்லப்படும் மனிதர்கள் குறித்த பிரச்சினையை அவரால் அணுகியிருக்க முடியாது. பச்சோந்தி மக்களோடும் அவர்களது பாடுகளோடும் இருக்கவே விரும்புவதாகவே அவரது கவிதைக்கான கச்சாப் பொருட்கள் அறிவிக்கிறது. அவர் அவ்வாறே இருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன்.

அவரது கவிதைகளுக்கான தொடங்கு முகமாக, ஏன்? அவரது கவிதைகள் குறித்து விவாதிக்கவுமாக அவர் எழுத விரும்பும் கவிதைகளின் முன்னோடியும், எவரும் எழுதமுடியாத கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவனுமான என்.டி.ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

பச்சோந்தி நீங்கள் உழ விரும்பும் வயலில் அறுவடை முடித்து வியர்வையோடு காத்திருக்கும் அவனிடம் உரையாடுங்கள். விளைச்சல் குறித்தும், அதற்கு முன்னதாக உழுவது குறித்தும். அவன் உங்களுக்கு பசு மற்றும் பன்றி இறைச்சியோடு பரிமாறுவான். தொழில்முறையில் அவன் ஆசானும் கூட.

“பரந்து மேய்ந்து தெருவோரம் பேண்டு வைத்த

காய்ந்த ரொட்டியைத் தின்று

குப்பைத் தொட்டியில் கிடக்கும் விலை உயர்ந்த

தூமைத் துணியை மென்று அசைபோட்டு

குண்டி கழுவிப் போட்ட

தேங்கிக் கிடக்கும் நீர் குடித்துச் சென்றது கோமாதா.”

இது என்.டி. ராஜ்குமாரின் கவிதைதான். செல்க பச்சோந்தி... அவனருகே சென்றமர்க. ஆசிரியன் அவன்.  அவ்வளவே. தார்க்குச்சி இருப்பினும் அது கவிதையிலான ஒன்றாகத்தானிருக்கும்.

எழுக புலவ.

உங்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

பீஃப் கவிதைகள் - பச்சோந்தி 
நீலம் வெளியீடு, பக்கங்கள் :128, விலை:150

குறிச்சொற்கள்

மேல் செல்