கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல் – பா.ராஜாவின் கவிதைத் தொகுப்பு

ஜீவன் பென்னி

பகிரு

அன்றாடங்களின் எல்லையற்ற வெளி :

கவிதைகளின் சொல்லாடல்கள் ஒரு உலகினை உங்களுக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்து கொள்ள வைக்கின்றன மேலும் மனதின் எல்லையற்ற தூரத்தின் நினைவுகளை ஒரு கவிதையில் தான் மிக நேரடியாகத் துவங்கிக்கொள்ளவும் அனுபவிக்கவும் முடிகிறது. நிகழ்வுகளின் சங்கதிகளையும் அதன் அனுபவப்பரப்பின் நுட்பமான புள்ளிகளையும் செயல்களின் தளத்திலிருந்து மெய்மையின் அடர்த்தியான தீவிரத்தன்மைக்கு அருகாமையில் கொண்டு வந்திடும் புத்துணர்ச்சிகளையே ஒவ்வொரு நல்ல கவிதையும் செய்கின்றன. அறிவின் சூத்திரங்களைப் பின்தொடர்ந்திடும் லாவகமான தன்மையிலிருந்து விலகி வாழ்நிலைகளின் படிமங்களிலிருக்கும் மனவெழுச்சிகளின் எண்ணற்ற வடிவங்களை உணர்ந்து கொள்வதான தேடல்களே ஒவ்வொரு கவிதைக்கான சொற்களாக மாற்றம் கொள்கின்றன. கவிதைகளுக்கான தொடர்ச்சியான இத்தேடல்களும் அவற்றைக் கண்டடையும் மனதின் தருணங்களுமே எப்போதும் மிகத் தனிமையாக அக்கவிதைகளுக்கருகில் நின்று கொள்கின்றன. மேலும் வாசகர்களுக்கான மனநிலைகளில் தவிப்புகளையும், நெகிழ்ச்சிகளையும் அவைகளே உருவாக்குகின்றன. கவிதையின் சொற்கள் வெறுமனே அர்த்தத் தளத்திலிருந்தும், அழகியலின் தன்மைகளிலிருந்தும் மட்டுமே உருப்பெற்று கொள்வதன்று, மாறாக அவைகளில் ஒளிந்துள்ள மகத்தான தன்மைகளின் ஒளிக்கீற்றைப் பிரபஞ்சம் முழுவதற்குமானதாக மாற்றிக் காண்பிக்கும் சாகசத்தின் மிகத்தனிமையான உணர்வுநிலைகளினாலேயே அவை ஒருவருக்கொருவர் மிகுந்த நெருக்கமான அர்த்தங்களாக மாறிக்கொள்கின்றன. ஆன்மத் தேடலுக்கான புள்ளியில் அறிவின் பார்வைகளை முற்றிலுமாகக் கைவிடத்துவங்கும் நுட்பத்தையே ஒவ்வொரு கவிதையும் பிரத்தியேகமாகச் செய்து காண்பிக்கின்றன.

பா.ராஜாவின் ‘நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல்’ தொகுப்பிலிருக்கும் கவிதைகளில் பல அதன் அணுகுமுறை சார்ந்த நுட்பமான அனுபவப் புரிதலின் வழியே மிகத்தீவிரமான தருணத்தின் அமைதியையும் அழகியலையும் நெருக்கமாகக் காண்பிக்கின்றன. எளிய மொழியின் வழியே எண்ணற்ற வாழ்வுகளின் அன்புகளையும், வெறுப்புகளையும், காட்சிப்படிமங்களையும், தினசரிகளின் சிக்கல்களையும், நோய்மைகளையும், அரவணைப்புகளையும் இக்கவிதைகள் உணர்த்துகின்றன. ஒரு புள்ளியின் ஆரம்பத்தையும், முடிவையும் தேடாமல் அதன் இருப்பையும் வாழ்வையுமே பேசிக்கொண்டிருக்கும் இக்கவிதைகள் அலாதியான ஈரம் நிறைந்த சாராம்சத்தைக் கொண்டுள்ளன. வாழ்விற்கும் அதன் மீது படர்ந்திருக்கும் போதாமைகளுக்குமிடையில் தொடர்ந்த படியேயிருக்கும் தேடல்களின் அவஸ்தைகளையும், அவற்றில் தனித்திருக்கும் ஆகச்சிறந்த தருணங்களையும் சிக்கலின்றி ஒற்றைப் புள்ளியில் இணைத்திருக்கும் நுட்பம் மிகத் தனித்துவமானது. இவற்றைக் கடந்துகொண்டிருக்கும் மனதின் விசாலமான தன்மையின் இயல்பையும், அமைதியையும், அதன் பாரபட்சமற்ற உலகையுமே இவை தொடர்ந்து பொதுவெளியில் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

‘மகளுக்கு ஒன்றுமில்லை’, ‘செல்லப்பெயர்’, ‘யானைமார்க் ஓடுகள்’, ‘விபத்து’, ‘பெருவயிறு’, ‘இந்த நாயால்’, ‘உலோக மேலுறை’, ‘கீழ்நோக்கு நாள்’, ‘பேரானந்தம்’, ‘புகைப்படத்திலிருந்து’, ‘மீதமிருப்பவர்களுக்கான ஒரு நட்சத்திரக் கவிதை’, ‘இங்கிருந்து சென்று விட வேண்டும்’, ‘எதிரி’, ‘முன்னொரு காலத்தில்’, ‘தேசிய நெடுஞ்சாலை’, ‘நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு’, ‘டுமீல்’, ‘பிரிபிரியாய் அறுபடும் கயிறு’, ‘உயிர்வலி’, ‘நம்மைச் சூழ்ந்தது பெருவெள்ளம்’, ‘சர்க்கஸ் கோமாளி’ ‘குளிர் காய்தல்’, ‘ஈரப்பதம்’, ஆகிய கவிதைகளில் நிறைந்திருக்கும் அசலான அன்பும், கோபமும், பரிதவிப்பும், நிராதரவின் நோய்மையும், பிதற்றலும் என்றும் நிறைவானவையாக இருக்கின்றன. இக்கவிதைகளின் சில வரிகளின் சூட்சமமானத்தன்மையும் அதில் ஒளிந்திருக்கும் நுட்பமான அழகியலும், அதில் படர்ந்திருக்கும் பெரும் அர்த்தங்களுமே, வெறும் அனுபவங்களாக மட்டுமில்லாமல் அவைகளுக்கிடையிலிருக்கும் கவிதைத்தன்மையின் பொதுவான தளத்திற்கு மிக அருகில் நம்மைக்கொண்டு போய்ச் சேர்க்கின்றன. தீவிரமான மொழியின் தன்மையில் கொஞ்சம் இலகுவான ஸ்பரிசங்களின் வழியே இவற்றைக் கடத்திக்கொண்டிருக்கும் நெகிழ்வுகளின் வடிகால் நன்கு புரியும்படியும் அதன் மீது ஆர்வங்கொள்ளும் படியுமேயிருக்கின்றன. கவனித்து வரும் அன்றாடங்களின், அவற்றின் பிரதான செயல்களின் மீது தொடந்திடும் கேள்விகளையும், பதில்களையும் ஒரு சேரச் சொல்லிக்கொண்டிருப்பதான இக்கவிதைகளின் பிரயத்தனங்கள் ஒவ்வொரு விதத்திலும் அதற்கான பதிலீடாக, குறியீடாக மாறிக் கவனம் கொள்ள வைக்கின்றன. மேலும் திரும்பத்திரும்ப அத்துயரத்தை ஞாபகம் கொள்ளவும், அவ்வுலகை ரசித்திடவும், வெறுமையில் திடுக்கிடவும், மெலிதாக நிம்மதி கொள்ளவும் வைக்கின்றன. உணர்த்துதலின் அர்த்தத்தளங்களை முழுவதும் அடைந்திடாத மிகச்சில கவிதைகளின் மற்றும் அவ்வரிகளின் மீதும் என்னை விடவும் பா.ராஜாவே மிகுந்த அக்கறையும் கவனமும் கொள்ள முடியும். பொதுவாகக் கவிதைகள் அல்லது கவிதை மாதிரிகள் நிறைந்து வழிந்திடும் தமிழ் சூழலில் அதன் அடிப்படையான புரிதல்களையும் நோக்கங்களையும் நன்கு உணர்ந்து, அதன் வடிவம் சார்ந்த பிரக்ஞை மீது மிகுந்த கவனமும் ஈடுபாடும் கொண்டு எழுதப்பட்டிருப்பதினாலேயும், கைக்கொண்டிருக்கும் நேர்த்தியான உலகினாலுமே இவை தனித்திருக்கின்றன. துவங்கி வைக்கும் அசலான ஒரு உலகின் தன்மையினாலும், அச்சொற்களின் கச்சிதத்தினாலும், சிறு முடிச்சுகளின் மௌனங்களினாலும், முடிவுகளின் இயல்பான தேர்வினாலும் இக்கவிதைகளின் வெளி, அதன் எல்லைகளைத் தன்னளவில் அர்த்தப்படுத்திக்கொள்கின்றன.

நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல்’
பா.ராஜா. 
புது எழுத்து வெளியீடு 
2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 
கிருஷ்ணகிரி மாவட்டம்-635112. 
டிசம்பர்-19, / விலை-80.

குறிச்சொற்கள்

மேல் செல்