கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நிஜங்களின் புனைகதையாளர் – எம்.சுகுமாரன் எழுத்துகளை முன்வைத்து..

- ஞா.தியாகராஜன்

பகிரு

அரசியல் அதிகாரத்தின் எல்லா விளைவுகளையும் தீர்க்கமாக ஆராய்வதும் அவற்றை இலக்கியத்தில் பதிவு செய்வதுமான ஒரு போக்கை மலையாள இலக்கியத்தில் அதிகமும் காண முடியுமென நினைக்கிறேன். பல்வேறு மாநிலங்கள் தேசிய கட்சிகள் கோலோச்சுவதாகக் காணப்பட்டாலும் அவற்றிலிருந்து கேரளத்திற்கு மட்டும் தனியொரு சிறப்பு எப்போதும் வாய்த்திருக்கிறது. நம்பூதிரிபாட் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் போராட்டத்திற்கு எதிராகக் காவல்துறையைப் பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தோழர் தியாகு காணொளி ஒன்றில் கூறுகிறார். மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் இதே மண்ணிலிருந்து தோன்றிய எம்.சுகுமாரனின் கதைகளை வாசிக்கும்போது இதற்கு நேரெதிரான எண்ணம் எழக்கூடும்.

இவரது 10 குறுநாவல்களின் தொகுதியானது சாகித்ய அகாடெமி சார்பில் ‘சிவப்புச் சின்னங்கள்’ என்று வெளியிடப்பட்டிருக்கிறது. ‘வரலாறு மாறுவேடத்தில் வந்தடையும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்பு தீட்டி வைத்த சிவப்புச் சின்னங்கள் இனங்காணப்படும் என்கிற எதிர்பார்ப்புடன்’ என்னும் வாசகம் குறிப்பு போன்று நூலினுள் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் தீர்க்க தரிசனம் உண்மையானது. பிற அரசியல் கட்சிகள் போலவே கேரள இடதுசாரி கட்சிகளும் தேர்தல் பாதையில் சில சமரசங்களைச் செய்கொள்வது கொள்கைகளைச் சில இடங்களில் தளர்த்திக்கொள்வது என்று இருந்தாலும் அதிகாரத்தை நோக்கிய தீர்க்கமான குரல்கள் இங்கிருந்தே எழுகின்றன, எழுந்திருக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா குறிப்பிடுவது போன்று ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக எழுதப்பட்ட விமர்சனம் அல்ல சுகுமாரனின் கதைகள். சுதந்திர இந்தியாவின் குடியரசுதினம் அறிவிக்கப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பின் எழுதவந்த எழுத்தாளராகச் சுகுமாரனைப் பார்க்க முடியவில்லை. இன்றைய பாசிஸ இந்தியாவை முன்பே கணித்திருந்த ஆரூடம் போன்றே தோன்றுகின்றன அவரது படைப்புகள்.

இந்திய விடுதலை இயக்கம் அதன் வளர்ச்சி கட்டங்களிலிருந்தே வலதுசாரிய தன்மையிலும், சனாதனப் பார்வையிலும் வேரூன்றியே தோற்றங்கொண்டது. தமிழ் இலக்கியச் சூழலில் அரசியல் என்பது கலையிலிருந்து தணிக்கை செய்யப்பட்ட ஒன்றாகவும் அது எப்போதும் இடதுசாரிகளுக்கான எழுத்தாகவுமே பார்க்கப்படுகிறது. அரசியல் அதிகாரத்தின் மற்றொரு உடன்பிறப்பாகக் கருதப்படும் முதலாளித்துவத்தையும் இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.

சுகுமாரன் குறித்த அறிமுகத்தை ‘மணல்வீடு’ இதழில் வாசிக்கும் போதும் பின்னர் நேரடியாக அவரது படைப்புகளை வாசிக்கும் போதும் தமிழில் நாஞ்சில் நாடனுடன் இணைத்துப் பார்க்க தோன்றியது. இலக்கிய ஆக்கங்கள் சார்ந்து எண்பதுகளுக்குப் பின் எழுந்த கோட்பாட்டுச் சாரங்களை உள்வாங்கிக்கொள்ள மறுத்தாலும் நாஞ்சில் எழுத்தில் எப்படி அதற்கான மாதிரிகள் தென்படுகின்றனவோ ஏறக்குறைய அதேபோல் கோட்பாட்டுப் பயிற்சிகளில் சுகுமாரனுக்கு நம்பிக்கையிருக்கவில்லையென்று கூறப்பட்டாலும் அவரது படைப்புகளில் அதற்கான கதைகளும் கிடைக்கின்றன.

‘அரசியல் கதைகள்’ என்று இதனைக் குவியப்படுத்தினால் சாதாரணப் பிரச்சாரகதைகள் என்று பொருள்படுத்தக்கூடாது. சாதாரண நில எல்லைகள் கடந்து சுகுமாரனின் கதைகள் எங்கு வேண்டுமானாலும் வாசிக்கப்படலாம் கொண்டாடப் படலாம். எந்த எல்லைப் பிரதேசங்களுக்குமான அதிகாரம் சார்ந்த விவகாரங்கள் ஒரே சூத்திரத்தில்தானே இயங்குகின்றன.

பாராளுமன்ற அமைப்பின் மீது சுகுமாரன் அவநம்பிக்கை கொண்டிருந்ததாக நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது. சுதந்திரமடைந்த பிறகும் இந்தியாவில் அதன் தாக்கம் கீழ்மட்ட அளவில் எந்த மாற்றத்தையும் மக்களிடையே கொண்டுவரவில்லை என்பது தமிழில் சில கதைகளிலும், நாவலிலும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், காலனிய ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்புகள் குறித்த பலமான விமர்சனங்களையும் கேள்விகளையும் அவை முன்வைக்கவில்லை. தனிப்பட்ட மனிதனின் பிரச்னையாக அவை குறுக்கி பார்க்கப்பட்டதேயன்றி ‘அமைப்பு’ சார்ந்த விமர்சனங்களாக மேலெழவில்லை. இங்கு அதிகாரம் என்பதை நிறுவன மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்று மட்டும் சுருக்கி பொருள்கொள்ளுதல் கூடாது.

சக மனிதன் மீதான ரகசியமான தாக்குதலும் அவன் உரிமைகளைப் பறிப்பதும், அவன் உழைப்பின் மீது நடத்தப்படும் சுரண்டலுமே முதலாளித்துவத்தின் அடிப்படையாக விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரால் இந்தக் கருத்தியல் ஏகோபித்த வரவேற்புடனே அரசியல் மையங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்தச் சுழலில் எதிர்நீச்சலிடும் மனிதன் ஒரு கட்டத்தில் சுழலின் ஒரு அங்கமாக மாறிவிடுவதும் இயல்பாக நடந்தேறுகிறது. ‘கைவிடப்பட்டவர்களின் வானம்’ இதனைச் சரியாகக் காட்சிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தில் மனிதனின் இயல்பான குணாம்சங்களைக் காவு வாங்குவதில் ‘விற்பனை பிரதிநிதி’ என்னும் அம்சம் கணிசமான பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட மனிதனின் கருத்தியலை வடிவமைக்கும் ‘விளம்பரம்’ என்னும் அதிகார ஆதிக்கத்தின் துணைமைப் பொருள்தான் ‘விற்பனை பிரதிநிதி’ என்பது.

காஃப்கா ஒரு விற்பனை பிரதிநிதியாக இருந்ததை இங்கே நினைவுகூற வேண்டும். ‘எக்காரணத்தைக் கொண்டும் முதலாளியை நேரில் சந்திக்க முற்படக்கூடாது’ என்னும் நிபந்தனையுடன் கிடைக்கும் வேலையிலிருந்து தொடங்குகிறது ‘கைவிடப்பட்டவனின் வானம்’. இன்றைக்குப் பெரும் பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை பேர் தங்கள் முதலாளியை நேரில் பார்த்திருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால் இந்தத் தொடக்கத்தின் அழுத்தம் புரியும்.

கதாபாத்திரத்தின் இளம் வயதில் தொடங்கும் கதையானது அவனின் முதுமை வரை விரிகிறது. முதலில் குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருட்கள் விற்பதுடன் தனது தொழிலை தொடங்குகிறான். அத்தொழில் முடங்கும் நிலை ஏற்படும்போது கம்பெனி வீட்டு உபயோகப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. அதுவும் நஷ்டமடையும் போது கம்பெனி ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் உடனே அவனது வசிப்பிடத்தை நகரத்திற்கு மாற்றுமாறு கூறி கடிதம் அனுப்புகிறது.

அதனுடன் கையுறை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. நகரத்திற்கு மாறிய அவனது பணியில் தனது சக போட்டியாளனை எப்படியேனும் வெல்ல வேண்டும் என்னும் கட்டாயத்தில் தனது மனைவியைக் கூட அவனது ஆசைக்கு இணங்கும்படி கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கு மசியாத சக போட்டியாளனை கொலை செய்வது மட்டுமே ஒரே வழியாக மாறுகிறது. கடிதத்துடன் கம்பெனி நிர்வாகம் அனுப்பி வைத்த கையுறைகள் எதற்கெனத் தெரியாமல் விழித்தவனுக்கு இப்போது புரிகிறது.

பிறகு தனது பணி அபிவிருத்தி அடைவது மதுவிற்கு அடிமையாவது, மனைவியை மறந்து தனிப்பட்ட உதவியாளராய் நியமிக்கப்பட்ட பெண்ணிடம் மயங்குவது என விரிந்துசெல்லும் கதையில் நீதிகேட்டு வரும் தனது மனைவியவே துப்பாக்கியால் சுடுவதற்கு உந்தப்படுகிறான். மெல்ல மெல்ல தன் வாழ்நாளின் வேர்கள் அனைத்தும் களையப்படுவது குறித்த எந்த நிதானமும் இல்லாது போகுமளவுக்கு ஆக்கப்படுகிறான். கொலைகுற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு நன்னடத்தைக் காரணமாக இரண்டாண்டுகள் தண்டனை குறைப்புக் கிடைக்கிறது. ஒரு முறையாவது தன் முதலாளியைப் பார்த்துவிட நினைக்கும் அவனது விருப்பம் மரணதருவாயிலும் நிறைவேறாது போகிறது.

எப்போதோ மறந்தே போன தன் மகனை பார்க்க நினைக்கும் போது அவனது முதலாளியை கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் அவன் கைதாகியிருக்கும் செய்தியே பதிலாகத் தரப்படுகிறது. இன்னும் பல நாடுகளில் இருக்கும் தங்களது வியாபார ஸ்தலங்களைக் கண்காணிக்க அம்முதலாளியும் அவரது மகனும் இந்நாட்டை விட்டுப் புறப்படுகிறார்கள் என்பதுடன் கதை நிறைவடைகிறது. நாடகியல் பாங்கில் அமைந்திருப்பது போலத் தோன்றினாலும் இதில் பொதிந்திருக்கும் உண்மை தன்மையை மறுக்க முடியாது.

கதையின் மெச்சதகுந்த அம்சங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஒரு கையுறையை மட்டுமே வழங்கி ஒருவனைக் கொலைக்குத் தயார்படுத்தும் இடம் முதலாளியத்தின் நடைமுறையில் விரவியுள்ள மனித விரோதப் போக்கினை அப்பட்டமாகப் புனைந்து காட்டுகிறது. சொந்தக் காதல் மனைவியிடமே பிறரின் இச்சைக்கு இணங்கும்படி கேட்க வைப்பதன் மூலம் தொழில் போட்டியில் மனிதனின் அறவுணர்வுகளைச் சந்தைச் சமுதாயம் எவ்வாறு பலியாக்குகிறது என்பதனை வாசிக்க முடிகிறது.

சகலத்தையும் வழங்குவது போலப் பாவனைச் செய்து இறுதியில் அனைத்தையும் எவ்வாறு முத்லாளித்துவச் சமூகம் சுருட்டிக்கொண்டு மனிதனை வெறும் கூடாக மாற்றுகிறது என்பதனை ‘கைவிடப்பட்டவர்களின் வானம்’ அற்புதமாகப் பதிவு செய்கிறது.

பெரும்பாலான கதைகள் வறுமையிலிருந்தே தொடங்குகின்றன. வறுமைக்கும், நோய்மைக்கும் அதிகாரங்களின் இறுகிய வன்மத்திற்குமான இணைவுகள் கதைகளில் சரியாகப் பின்னப்பட்டுள்ளன. சரிவிலிருந்து உச்சத்திற்கும் பின் அதலபாதாளத்திற்குமாகக் கதைகளின் சம்பவங்களைக் கோர்ப்பதன் வழியாக ஒரு மனிதனின் வாழ்வில் இடைக்காலச் சொப்பனமாக மட்டுமே அதிகாரத்தின் வாக்குறுதிகள் தோன்றுகின்றன என்பதற்கான குறியீடாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கிராமத்தில் வசித்து வறுமையில் உழன்றுகொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு அங்கு நிறுவப்படும் அரசு அலுவலகத்தில் சிறிய வேலை கிடைக்கிறது. அப்போது அவனுக்குக் கூறப்படும் நிபந்தனை முக்கியமானது.

‘அரசாங்க ஊழியரான தாங்கள் கிராம மக்களுடன் பேசவோ நெருங்கிப் பழகவோ கூடாது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், கல்வியறிவற்றவர்கள், நிரந்தர நோயாளிகள் எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடையாத பெரும் பசியைக்கொண்டவர்கள்’ ‘இன்றைய இவ்வமைப்பை எத்தகைய விலை கொடுத்தேனும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் நாம்’. முந்தைய கதையில் தனியார் நிறுவனத்தின் அதிகார முகம் பிரசன்னமானது போல இங்கு அரசு என்னும் எந்திரத்துடன் கதை தொடங்குகிறது. இப்படியாகப் பல இடங்கள் கதைகளெங்கும் விரவி கிடக்கின்றன. தனிமனிதன் என்பதிலிருந்து சமூக உருவாக்கத்தில் எப்போதும் கடைக்கோடி வரை அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் அரச கட்டமைப்பை இவ்வளவு நுணுக்கமாக அணுக நேர்ந்த ஒரு படைப்பாளியே தமிழில் காண்பது அரிதாகவே தோன்றுகிறது.

இக்கதையில் தொடர்ந்து தனது இருப்பு நிர்மூலமாக்கப்பட்டுக் கடைசியில் தன்னை நிரூபிப்பதற்கே எந்தச் சாட்சியங்களுமற்று ஜனங்களின் கேலிச் சிரிப்புடன் சிறைக்கு அனுப்பப்படும்போது மனித இருப்பில் சாவினும் மோசமான அம்சமாக இந்த அதிகார நிறுவனங்கள் செயல்படுவதும் அதற்கு மக்கள் ஒத்திசைவதும் அதன் பயங்கரத்துடன் பதிவாகிறது. தனக்குக்கிடைத்த அரசு உத்யோகம் காரணமின்றிப் பறிக்கப்பட்டதும் அவனது மனைவி பொருள் உதவி புரிகிறாள். ஒரு கட்டத்தில் அவள் தன்னை வேலையிலிருந்து நீக்கிய உயர் அதிகாரியுடன் உடலைப் பகிர்ந்தே பொருளீட்டுவது வாசகர்களுக்குப் புரியுமாறு ஒரு சம்பவம் வருகிறது அவன் அதை முன்பே அறிந்தவனாகவும் அதற்கு உடன்பட்டவனாகவும் காட்டப்படுகிறான். ஒரே இடத்தில் வாசகனை ஆயாசமாக்கும் இரண்டு உணர்வுகளைச் சரியாகக் கதையாக்குகிறார்.

மனைவி மூலமும் இச்செயல் எத்தகைய உணர்வுமின்றி வெளிப்படும் போது இன்னும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஒருவகையில் கொஞ்சம் இட்டுக்கட்டுவதாகத் தோன்றினாலும் அதிகார மையங்கள் மனித உடலின் மீது செலுத்தும் அத்துமீறல்கள் எவ்வாறு சூழலுக்கு ஏற்றாற்போல் பழகிப்போகின்றன என்பதாக இச்சம்பவத்தைப் புரிந்துகொள்ளலாம். பிச்சையெடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுப் பிறகு ஒரு வழிப்பறி கும்பலால் கவரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுத் துன்பங்களை மட்டுமே அனுபவிக்க நேர்கிறது. தான் அரசுவேலையில் இருக்கும்போது தன் திருமணத்திற்காகத் தந்தை வங்கியில் கடன்பெற உதவிபுரியுமாறு பெண் ஒருத்தி கேட்டுக்கொள்கிறாள். அவளுக்கு உதவிபுரிய முடிவெடுத்து அலுவலகம் செல்லும் அந்நாளில்தான் அவன் பணியிலிருந்து நீக்கப்படுகிறான்.

அவன் வசித்த கிராமத்திலேயே அவனை நிரூபிக்க முடியாமல் போகிறது. அந்தக் கிராமத்திலேயே அவன் கூறுவது உண்மையென அவனிடம் உதவிபெற முனைந்த பெண் மட்டுமே கூறுகிறாள். ஆனால் கிராம மக்கள் சிரிக்கும்போதுதான் தெரிகிறது – அவள் அங்கே மனநலம் பாதிக்கப்பட்டவளாக இருப்பது. யதார்த்தத்திற்குப் பொருந்தாத சம்பவங்களுடனும், நிகழ்வுகளுடனும் கதை நிகழ்த்தப்பட்டாலும் படைப்பாளர் எடுத்துக்கொண்டிருக்கும் பொருண்மைக்கு அவை வலுசேர்ப்பதாகவே அமைகிறது. ‘ஆதரவாளன்’ என்ற தலைப்பின் மூலம் சுகுமாரன் காட்டும் உலகத்தைப் புரிந்துகொள்ள ஒரு சமூக மனிதனாகவும் நம்மை உணர வேண்டியிருக்கிறது.

ஒரு படைப்பாளராகத் தான் வாழும் காலத்தின் மேல் தீர்க்கமான பார்வையுடையவராகச் சுகுமாரன் விளங்குகிறார். முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் பொய்மைகளையும் அதற்கு அவை உண்மைகளின் சாயைகளைப் பயன்படுத்திக்கொள்வதை மட்டுமே நெடுக தன் கதைகளில் பதிவு செய்திருக்கிறார். ‘செக்குமாடு’ குறுநாவலை எடுத்துக்கொண்டால் அதில் மற்றொரு விதமான அதிகாரத்தின் தன்மையைப் பார்க்க முடிகிறது.

தெருவில் ஏவல் வேலை செய்யும் ஃபல்குணன் பெரிய நிறுவனத்தின் பினாமி என்னும் அளவிற்குத் தன்னை வளர்த்துக்கொள்வது இதன் சுருக்கமாக இருந்தாலும் தன்னை எவ்வாறு முன்னிறுத்துகிறான் என்பது முக்கியமானதாகும். கேரளத்திற்குரிய இடதுசாரிய அரசியல் அடித்தளத்தின் காரணமாகத் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கம் என்பதற்கிடையிலான கருத்தியல் ஊசலாட்டத்தைக் கதையில் வாசிக்க முடிகிறது. எந்தப் பக்கமும் கருத்தியல் சார்பாக நில்லாது சுகுமாரன் அதனைப் பதிவு செய்வதை மட்டுமே ஒரு படைப்பாளனின் கடமையாக இருப்பதைப் படைப்பின் வழியாக உணரலாம்.

நோய்மை முடிவில்லாத அம்சமாக அவரின் பாத்திரங்களைப் பீடித்துக்கொண்டே இருக்கிறது. நோய்மையும், வறுமையும் தவிர்க்க முடியாத பாத்திரங்கள் போலவே சுகுமாரனின் படைப்புகளில் இடம்பெறுகின்றன. இந்திய அளவில் ‘கேரளா’ என்று காட்டப்பட்ட பசுமையான கனவுகளுக்கு முற்றிலும் எதிரானது இக்கதைகள்.

இங்கே சேரி மனிதர்களின் வாழ்வு அசலாகப் பதிவாகிறது. மரணமும் வறுமையும் பிணைந்து வாழ்வின் நேரடியான முகங்களைக் காட்டுகின்றன. சமூக விமர்சனத்தைக் கலையாக்குவதில் அது பிரச்சார எல்லையைத் தொட்டுவிடக் கூடாதென்ற ஒரு கறாரான பார்வை இருக்கிறது. தமிழ்நாட்டளவில் நவீன எழுத்தாளர்கள் பலருக்கும் ‘திராவிட இயக்க’ ஒவ்வாமை இருக்கிறதே ஒழிய அதைக் கலையாக்குவதில் எந்த முனைப்பும் காணப்படுவதில்லை.

சுகுமாரன் மாதிரியான ஒரு படைப்பாளரும், படைப்புலகமும் தமிழ்ச் சூழலில் உருப்பெறவில்லை. பலரும் ‘திராவிட இயக்க’த்தின் போலி தமிழ்ப்பற்றையும் அது உருவாக்கும் மலினமான ரசனையையும் விமர்சித்தார்களே தவிர அதைச் சாதாரண மக்களின் வாழ்வியல் வழியாகக் காட்சிப்படுத்த தவறினார்கள். மத்தியதர வர்க்கத்தின் மேன்மை தங்கிய உணர்வுகளைப் பிரதானப்படுத்துவதையே சீரிய இலக்கியக் கடமையாகக் கருதினார்கள்.

தொண்ணூறுகளுக்குப் பிறகு தலித்திய படைப்பாளர்கள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தபோதும் அவை பொது இலக்கியதளத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாகவே அமைந்தது. அவற்றின் ஒரே தன்மையிலான யதார்த்தவாத புனைவு இலக்கியச் சனாதனவாதிகளுக்கும் அத்தகைய எழுத்தை தனிமை படுத்துவதற்கு வசதியாகப் போனது.

‘அவர்கள் தூய ஆடையை உடுத்தி ஒழுங்காக அலுவலகத்திற்குச் செல்பவர்களாகவும், வளையும் ஓர் அவயவமாக முதுகெலும்பைக் கருதுபவர்களாகவும், தனது மனைவியின் கர்ப்ப கால உபாதைகளில் கவலை கொள்பவர்களாகவும் இருந்தார்கள்’ சுகுமாரனின் ‘தூய காற்று’ என்னும் கதையில் இடம்பெறும் மேற்கூறிய விவரனையைத் தமிழில் எங்காவது படிக்க முடியுமானால் அந்தக் கதாபாத்திரம் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு துறையில் பணிபுரிபவனாகவும் தனது புத்தகவாசிப்பினால் இத்தகைய விசாரங்களில் இறங்கியவனாகவும் காணப்படுவானேயன்றி ஒரு விளிம்புநிலை பாத்திரமாகப் புனையப்படுவதற்கு வாய்ப்பிருக்காது. போற்றத்தக்க இலக்கியத்திற்கு இங்கே சொல்லப்படும் அதீத மன இயக்கமென்பது சுகுமாரன் படைப்புகளில் காணக் கிடைப்பதாக உள்ளது.

‘தூய காற்று’ என்னும் இக்கதையில் மலையில் தனியே குரங்கு வேட்டையாடும் தகப்பனுக்குப் பிள்ளையான ஒருவனின் பார்வையிலிருந்து தொடங்குகிறது. அப்பாவின் மரணம் அவனை மலையிலிருந்து நகரத்திற்குத் தள்ளுகிறது. அங்கேதான் அவன் மேற்குறிப்பிட்ட ஒழுங்குகளையெல்லாம் வியப்புடன் எதிர்கொள்கிறான்.

கதை நெடிய காலப் பரப்பைக்கொண்டது. இறுதியில் ஒரு மிருகக்காட்சி சாலையில் அவனும் ஒரு குரங்காக மாறுவதுடன் நிறைவடைகிறது. நேரடியாக அவன் குரங்காக மாற்றப்படாமல் கதையோட்டத்தின் கதியிலேயே அது இயல்பாக நடக்கிறது. இதுபோன்ற மிகைபுனைவானது தமிழில் மேல்தட்டு வர்க்கத்தினருக்காகப் புனையப்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது.

‘குஞ்ஞப்புவின் தீயக்கனவுகள்’ இந்தியாவின் தேர்தல் முறைமீது வைக்கப்படும் விமர்சனாக விரிகிறது. இப்படியெல்லாம் எந்தத் தொடர்பிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத கதையாக அமைகிறது ‘வஞ்சிக் குன்றம்பதி’. தமிழில் சுகுமாரனின் எழுத்துகளாகச் சாகித்ய அகாடெமி வெளியிட்டுள்ள ‘சிவப்புச் சின்னங்களும்’ காதை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கருவறை’ என்ற நூலும் கிடைக்கிறது. இதில் காதை பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் தற்போது விற்பனையில் இருப்பதாகத் தெரியவில்லை.

என்றாலும் தமிழில் சுகுமாரன் கொஞ்சம் வேறு தரப்பினராலும் அவதானிக்கப்பட்டிருக்கிறார் என்பது இத்தொகுப்பின் வழியாக உறுதியாகிறது. சுகுமாரன் குறிப்பிட்ட கால இடைவெளியுடன்தான் தனது படைப்புகளை எழுதியிருப்பதாக ‘மணல்வீடு’ கட்டுரையில் தெரிகிறது. அது அவரது கதைகளிலும் நிரூபணமாகிறது. இக்கட்டுரையிலும் சுகுமாரன் குறித்து எழுதப்பட்டிருப்பவை எனது புத்திக்கு எட்டியவைதான் என்பதால் வாசகர்கள் நேரடியாக அவரது படைப்புகளை வாசித்துப் பரிச்சயம் செய்துகொள்ளவும். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத வேறுபார்வையிலும் சுகுமாரன் உங்களுக்கு நெருக்கமாகலாம்.

குறிச்சொற்கள்

மேல் செல்