கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெஸின் கவிதைகளும் (பகுதி III)

எம்.டி.முத்துக்குமாரசாமி

பகிரு

முகவிலாசமும் முகத்துலக்கமும் மௌனி போர்ஹெஸை வாசித்திருக்கிறார் என்பதைப் படித்ததால் ஏற்பட்டது என்று பகுதி2 இல் எழுதியதைத் தொடர்ந்து ஏதேதோ யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. மௌனிக்கும் போர்ஹெஸுக்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. தன் அடையாளம்,  பிறன்மை (other) என்பதன் விளையாட்டினைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும் போர்ஹெஸிடமும் காணலாம். தன் அடையாளம் , பிறன்மை என்பவற்றை எதிரிடையாகக் காண்பதன் அபத்தம் கூட இந்த விளையாட்டின் கிரியைகளில் ஒன்று; மாயையின் பூச்சு அடர்ந்து பிளவே இயல்பனெ அறியப்படுவதை என்னவென்று சொல்ல? தன் அடையாளம் எங்கே முடிகிறது? பிறன்மை எங்கே ஆரம்பிக்கிறது?

தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு  (problematic)  தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவிவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட  சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். 

மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். “மீண்டும் உன்னிடம் சிக்கிக்கொண்டேன்’ என்ற ரமேஷ்-பிரேமின் கவிதை வரியும் “மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்” என்ற சுகுமாரனின் கவிதை வரியும் புயுபர் விவரிக்கும் உரையாடல் வகைகளே.

மார்டின் லூதர் கிங் ஜூனியர் தன்னுடைய பிர்மிங்ஹாம் சிறைக்கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டி இன உறவுகளை தான் - மற்றது என பிரித்து தன்னை மனித உலகத்தைச் சேர்ந்தவராகவும் மற்ற இனங்களை உயிரற்ற ஜடங்களின் உலகை சார்ந்தவையாகவும் குறுக்குவதே  இனப்போர்களின் வன்முறைக்கான ஆதரமாகிறது என்று எழுதுகிறார். தமிழர்- சிங்களவர், தமிழர்-இந்தியர், இந்தியர்- ஐரோப்பியர், கீழைத்தேயம்-மேற்குலகு எனப் புழங்கி வரும் சொல்லாடல்களும் கதையாடல்களும் என்ன மாதிரியான உரையாடல் பாங்குகளை ஆதாரமாகக் கொள்கின்றன என்று பார்ப்பது அவசியம். அந்த பிரஞ்காபூர்வமான சிந்தைனையை நோக்கியே தன்னிலையை எழுதிப் பார்த்து அறிதல், மௌனியையும் போர்ஹெஸையும் வாசித்தல் ஆகிய என்னுடைய யத்தனங்கள் இருக்கின்றன. 

முதலில் போர்ஹெஸின் இரு கவிதைகளைப் படித்துவிட்டு போரஹெஸ் மௌனி வாசிப்பிற்கு மீண்டும் வருவோம். தன்னிலையின் நிலைப்பாடுகளை முழுமையாக மறுதளித்துவிட்டு பிற்னமையின் ஆனந்தத்தில் திளைத்த கவிதைகளாக போர்ஹெஸின் ‘இரவின் வரலாறு’, ‘ஒரு பூனையை நோக்கி’ என்ற இரு கவிதைகளைச் சொல்லலாம்.

இரவின் வரலாறு

தொடர்ந்து பல தலைமுறைகளாக

ஆண்கள் இரவினை கட்டமைத்தார்கள்

முதலில் அவள் குருட்டுத்தன்மையாய் இருந்தாள்

வெற்றுப் பாதங்களைக் கிழிக்கும் முட்களாய்

ஓநாய்களுக்கான பயமாய்

இரு அந்திக் கருக்கல்களைப் பிரிக்கும்

இடைவெளி நிழலுக்கான

வார்த்தையைப் போலியாய் சமைத்தது யாரெனெ

என்றுமே அறியப்போவதில்லை

எந்தக் காலத்தில் அது

நட்சத்திர மணித்தியாலங்கள் என 

பொருள்கொண்டதென 

என்றுமே நாம் அறியமாட்டோம்

மற்றவர்கள் அந்த தொன்மத்தை 

உருவாக்கினார்கள்

அவர்கள் அவளை 

நம் தலைவிதியைச் சுழற்றும்

கலைக்கப்படாத விதிகளின் தாயாக்கினார்கள்

அவளுக்கு அவர்கள் பெண் ஆடுகளையும்

தன் சாவினை தானே கூவும் சேவலையும்

 பலியிட்டனர்

சால்டியன்கள்⁠1 அவளுக்கு பன்னிரெண்டு வீடுகளையும்

ஜீனோவுக்கு முடிவற்ற வார்த்தைகளையும் ஒதுக்கினர்

அவள் லத்தீனின் அறுசீர் செய்யுளடியாய் உருவமெடுத்து

பாஸ்கலை பீதி வசப்பட வைத்தாள்

லூயி தி லியோன்⁠2 அவளிடத்து 

தன் அடிபட்ட ஆத்மாவுக்கான 

தாயகத்தைக் கண்டார்

இப்போது நாம் அவளை

தீர்க்கமுடியாத மதுத் தேறலாய் உணர்கிறோம்

யாருமே அவளை தலை சுற்றலின்றி 

உற்று நோக்க முடியாது

மேலும் காலம் அவளின் மேல் நித்தியத்தை ஏற்றிவிட்டது

நம் பலகீனமான கருவிகளான 

கண்களுக்காக என்றில்லாவிட்டால்

அவள் இருக்கவே மாட்டாள் என்பதினை 

நினைக்கும்போது

ஒரு பூனைக்கு

கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லை

ஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை

நிலவொளியில்

நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியான

நீயே அந்த சிறுத்தை

விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படி 

நாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்

கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விட

இன்னும் தொலைவிலானது

உன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு ரகசியம்

உன் இடுப்பு உன்னைச் சீராட்டித் தடவும் என் கையை

அனுமதிக்கிறது

நீண்ட காலமானதால் மறந்துவிட்ட கடந்த காலம்

நம்ப முடியாத கையின் காதலை

உன்னை ஏற்றுக்கொள்ள வைக்கிறது

நீ இன்னொரு காலத்தைச் சேர்ந்தவள்; ஒரு கனவைப் 

போல கட்டுண்ட இடமொன்றின் பிரபு 

நான்கு விதமான தன்னிலை (I) பிறன்மை விளையாட்டுக்கள் மௌனியையும் போர்ஹெஸையும் வாசிப்பதில் தொழிற்படுகின்றன. 

முதன்மையாக இவர்களின் இலக்கியப் பிரதிகள் அவற்றின் விசித்திர வசீகரத்தினால் ‘நம்’ கலை இலக்கிய பாரம்பரியத்தில் அவற்றுக்கு என்ன இடம் என்று உடனடியாக சிந்திக்கத் தூண்டுகின்றன. இரண்டாவதாக எழுதும் தன்னிலைக்கும், எழுதப்பட்ட பிரதிக்குமான உறவு, மூன்றாவதாக அளவிலிக்கும் அளவானதற்குமான உறவுகள், நான்காவதாக கனவு-நனவு, நினைவு-நடப்பு, நிகழ்வு- காலாதீதம் ஆகியவற்றின் ஊடாட்டங்கள். 

  1. பாபிலோனை 625-539 வரை ஆண்ட மக்கள்  சால்டியன்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் வானியல் நிபுணர்களாகவும் ஜோதிடர்களாகவும் விளங்கினர்.
  2. லூயி தி லியோன்; பார்க்க http://www.newadvent.org/cathen/09177b.htm

குறிச்சொற்கள்

மேல் செல்