ஹா! நாட்கள்தான் எப்படி ஓடுகின்றன! கரையும் காலத்தைப் பற்றி பிரக்ஞை ஏதுமின்றி இரண்டாம் பகுதியினை எழுதவேண்டுமே என்ற ஓர்மையில்லாமல், வேற்றுக்கிரகவாசி இவ்வுலக நாட்காட்டியை அலட்சியம் செய்வது போல விச்ராந்தியாய் இருந்துவிட்டேன். சிறு மழைத் தூறல்களுடன் கூடிய மாலை வேளைகள் நாகர்கோவிலுக்கான ஏக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன. மழைக்காலம் என்றில்லாமல் எப்பொழுதுமே அப்பா நாகர்கோவிலில் இருப்பதான பாவனையிலேயே சென்னையிலும் வாழ்ந்தார். வயதாக வயதாக அப்பாவின் பாவனைகள் என்னையும் பீடிக்கின்றன போலும். சீக்கிரத்திலேயே நானும் ப்ரௌனிங் ரசிகனாகிவிடுவேனோ?
அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் அப்பா உப்புக்கு சப்பாணி வக்கீலாய் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள்; வயோதிகத்தில் உடல் பூஞ்சையாகிவிட்டாலும் மனோதிடத்திற்குக் குறைவிருக்கவில்லை. அவரை சந்தித்த என் பெண் நண்பர்கள் அனைவருமே சிறிது நேரத்திலேயே அப்பா பெரிய அழகன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வலுவான சுருள் முடி, மெலிந்து உயர்ந்த உடல் என்று அப்பாவுக்கென்று ஒரு வசீகரம் உண்டு. என் பெண் நண்பர்கள் அவரை அழகன் என்று அவரெதிரிலேயே சொல்லும்போது அவர் முகம் வெட்கத்தில் சிவந்து பிரகாசிப்பதை கவனித்திருக்கிறேன். அதே முகப் பிரகாசம் அவருடைய ஒரே ஒரு புகைப்படத்திலும் இருக்கிறது. வக்கீலின் வெள்ளையுடையும், கருப்புக்கோட்டும் அணிந்து கொண்டு திபெத்திய வண்ணக்குடையை ஒரு கையிலும், கேஸ் கட்டுகளை இன்னொரு கையில் மார்போடு அணைத்துக்கொண்டு அந்தப் புகைப்படத்தில் நிற்கிறார். வாயில் நான் ஐரோப்பாவிலிருந்து வாங்கிவந்த ஸ்வீடிஷ் விவசாயிகள் பயன்படுத்துகிற பைப் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கெல்லாம் அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது திபெத்திய வண்ணக்குடைக்கு அடியில் அப்பாவின் அருகே அம்மாவும் நிற்பதாகத் தோன்றுவது என்ன மாயமோ!
அந்தப் புகைப்படத்தை நான் எடுத்த அன்றுதான் என்று நினைக்கிறேன் அப்பா தான் எழுதிய கேஸ் கட்டு ஒன்றினை மெய்ப்பு பார்த்துத் தரச்சொன்னார்கள். ஏதோ சொத்துத் தகராறு வழக்கு. அதிலும் அப்பாவின் கையெழுத்தில் ஒரு ப்ரௌனிங் மேற்கோள் இருந்தது. அப்பாவுக்கு எழுத்தாளன் என்றால் கவிஞன் என்றால் அவன் எழுதுவது பல சந்தர்ப்பங்களிலும் மேற்கோள் காட்டத்தக்கதாய் இருக்கவேண்டும். எதையும் எழுது என்றவுடன் இந்தாபிடி என்று எழுதித்தந்துவிட வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் எழுதுவதற்கு ஒரு கவிஞனுக்கு இயலவேண்டும். கிட்டத்தட்ட போர்ஹேசின் ‘ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்’ என்ற கவிதையும் ப்ரௌனிங் தன் வாழ்நாளின் எல்லா தருணங்களையும் கவிதையாக்கும் வல்லமையை ப்ரௌனிங் கொண்டிருந்ததையே குறிப்பிடுகிறது. எழுத்தாளனாவதற்கான முயற்சியில் சதா ஈடுபட்டிருப்பவனாகிய நானோ எப்போதோ ஒரு முறைதான் எழுத உட்கார்வது என்பது அப்பாவிற்கு அலுப்பூட்டக்கூடியதாயிருந்தது. வெறுமனே பகல் கனவுகளில் சஞ்சரிப்பவனுக்கு எழுத்தாளன் ஆகப் போகிறவன் என்ற ஹோதா ஒரு சாக்கு மட்டுமே என்று அப்பா நினைத்திருக்கக்கூடும். மார்கழி மாதக் காலையில் பிடித்த சாணியில் பூசணிப்பூ சேர்வது போல ஏதேதோ பொருள்களும் ஏதேதோ பொழுதுகளும் கூடி வருகையில் மட்டும் எழுதுகிற நான் அப்பாவுக்கு வாழ்க்கையைப் பணயம் வைத்த சூதாடியாகத் தோற்றமளித்திருக்கவேண்டும். பல வாசிப்புகளில் நான் போர்ஹெஸ் ப்ரௌனிங்கை உள்ளபடிக்கும் பாராட்டவில்லை என்றே நம்பத் தலைப்பட்டேன்.
உண்மை ஆனால் வேறு விதமாக அல்லவா இருக்கிறது? போர்ஹெசின் ப்ரௌனிங் கவிதையைப் பற்றி எழுதுகையில் பிரம்மராஜன் “ஒரு நிஜமான கவிஞனுக்கு வாழ்தலின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் கவித்துவமானதாகத்தான் இருக்க வேண்டும், ஏன் எனில் சாராம்சத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, இன்றைய நாள் வரை எவருமே இவ்வுயர்ந்த பிரக்ஞை நிலையை அடையவில்லை. வேறு எவரையும் விட ப்ரௌனிங்கும் (Browning) பிளேக்கும் (William Blake) இந்த நிலையை நெருங்கிச் சென்றிருக்கின்றனர். விட்மன் அந்தத் திசையினை நோக்கி குறி வைத்த போதிலும், அவருடைய கவனமான எண்ணியெடுத்துச் சொல்லுதல் ஒரு வித கரடுமுரடான பட்டியலிடுதல் என்பதற்கு மேல் எழும்புவதில்லை.” என்று போர்ஹெஸ் Preface to The Gold of Tigers இல் எழுதியிருப்பதைக் குறிப்பிடுகிறார்1.
அப்பாவின் ப்ரௌனிங் போல (போர்ஹெஸின் ப்ரௌனிங் போல) என்றென்றைக்கும் நான் ஆக முடியாது என்பதை அப்பாவிடம் ஒரு நாள் சொன்னேன். என் கண்களில் நீர் மல்கியிருந்திருக்க வேண்டும் இல்லை குரல் கம்மியிருக்கவேண்டும். அவருக்கு நான் யதார்த்தம் எது கற்பிதம் எது என்று அறியாத அடூர் கோபாலகிருஷ்ணணின் ‘அனந்தரம்’ படத்தின் கதாநாயகன் போலத் தோன்றியிருக்கவேண்டும். அப்பா வழக்கம்போல் ப்ரௌனிங் மேற்கோள் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தது ஆறுதலாயிருந்தது. ஏதோ ஒரு கண்ணியில் அப்பாவும் போர்ஹெஸும் இணைந்து விட்டார்கள்.
போர்ஹெஸோடு உணர்வுபூர்மாக என்னை இணைத்த இன்னொரு கண்ணி மௌனி. மௌனியின் கதைகளின் hallucinatory character என்னை வசீகரித்ததுபோல வேறெவருடைய கதைகளும் என்னை வசீகரித்திருக்கவில்லை. தப்பிவிட வேண்டும் தப்பிவிட வேண்டும் என்று மனதிற்குள் அரற்றிக்கொண்டே மௌனியை வாசிப்பவனாக நான் இருந்த போதிலும் மௌனியின் பிடியிலிருந்து விடுபட்டவனாக நான் என்றுமே இருந்ததில்லை. மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதையில் உள்கதையாக வரும் குட்டிக் கதை அப்படியே போர்ஹெஸின் கதை போலவே இருக்கும். படித்துப்பாருங்கள்:
" சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். கோட்டை கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள் எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக் கோட்டையை இது வரையிலும் பார்க்கதவனானாலும், அதைப்பற்றி அனேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டிருந்தான். மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும், பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் நிர்மாணம், ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கற்பனைக்கதிகள், முதலிய என்னவெல்லாமோ அதைப் பற்றி புத்தக ரூபமாகப் படித்து தெரிந்துகொண்டவன். இப்போது தனக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்பு கூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்கரவர்த்தி, தொலைவிலே எதிர்க்கவரும் எதிரிகளை முறியடைக்க, அவர்களின் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப்பாதைகளை அமைத்தான். ஓரு தரம் அவ்வகை செய்யத் தீர்மானித்து, அநேகரை, எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீர தீர பராக்கிரம் செயல்கள் புரிந்து சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று, மறைய நினைத்தபோது எல்லாம் மறந்துவிட்டது. அவர்கள் மத்தியிலே, அவர்களாகவே 'ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து, இவனையே அரசனாக்கி, கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும், சுரங்கப்பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன், பிரும்மஹத்தி தோஷ நிவாரணம், சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ….தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும், அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவந் அவன் மகன் இவன் எனக் கொண்டு, கடல் கடந்து வாணிபம செய்தது இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி, கல்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது. கோவில் கோட்டை குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு, ஒன்றெனத் தோனற, இப் பாழ் தோற்றம் இவெனெதிரில் மௌனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயோ எட்டிய வெளியையும் நாடிப் போகத் துடித்துக்கொண்டிருக்கிறது2.
எதிரி ராஜனோடு சேர்ந்து உங்களுக்கு எதிராக நீங்களே போரிட்டு, வெற்றி பெற்று மீண்டும் ராஜாவாக முடி சூடுகிற கதை அளிக்கிற மன விரிவும், வரலாறு, காலம், தன்னிலை, யதார்த்தம் இவைகளுக்கு இடையே உள்ள உறவினைப் பற்றி கிடைக்கின்ற பார்வையும், அதனால் ஏற்படுகிற மன எழுச்சியையும் சொல்லி மாளாது. மௌனி போர்ஹெசின் கதைகளை வாசித்திருக்கிறார் என்ற செய்தியை வெங்கட் சாமிநாதனின் கட்டுரையில் படித்தபோது என் முகமே எனக்குத் துலக்கமாகி விட்டதுபோல மகிழ்ச்சி இரட்டிப்பாகியது3. இவ்வாறாக முகவிலாசமும், முகத்துலக்கமும் பெறுவதுதானே ஒருவன் கவிதை எழுதுவதற்கான நோக்கமாயிருக்க முடியும்? கவிதையின் கலை என்ற போர்ஹெஸின் கவிதை அதைத்தானே சொல்கிறது?
கவிதையின் கலை
காலத்தாலும் நீராலும் ஆன நதியை உற்றுப் பார்ப்பதென்பது
காலம் இன்னொரு நதியென நினைவில் கொள்வது
நதி போல நாம் வழி தவறுவதை அறிகையில்
நம் முகங்கள் நீரெனவே மறைவது அறிவது
விழித்திருத்தல் இன்னொரு கனவென உணர்வதென்பது
விழிப்பு கனவற்றிருப்பதையும் கனவாய் காண்கிறதென உணர்வது
எந்தச் சாவினை நாம் நம் எலும்புகளில் உணர்ந்து பயமடைகிறோமோ
அந்தச் சாவினையே நாம் ஒவ்வொரு இரவிலும் கனவென்றழைக்கிறோமென்றுணர்வது
ஒவ்வொரு நாளிலும் வருடத்திலும்
ஒரு மனிதனின் அனைத்து நாட்கள் வருடங்களுக்கான
ஒரு குறியீட்டினைக் காண்பதாவது
அந்த வருடங்களின் கோபங்களை
ஒரு இசையாக, ஒரு சப்தமாக, ஒரு குறியீடாக மாற்றுவதாகிறது
மரணத்தைக் கனவில் காண்பதென்பது
சூரிய அஸ்தமனத்தில் ஒரு பொற் சோகம்
என்பதாகவே
கவிதை எளிமையானது சாவற்றது
சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் போல திரும்ப வருவது
அந்தியின் சில வேளைகளில்
கண்ணாடியின் ஆழத்திலிருந்து நம்மைப் பார்க்கும் முகமுண்டு
கலை அது போன்ற ஒரு கண்ணாடியாகவே
நம் முகத்தை நமக்குக் காட்டித்தர வேண்டும்
யுலிசஸ்4 அதிசயங்களால் சோர்வுற்று
எளிமையும் பசுமையுமாயிருந்த இதாகாவைக்
கண்ணுற்று அன்பின் மிகுதியில் அழுதான் என்பார்கள்
கலை அந்த இதாகா
ஒரு நித்திய பசுமை, அதிசயங்களல்ல
கலை ஓடும் நதியைப் போல முடிவற்றது
கடந்து செல்வது, இருப்பினும் இருப்பது
நிலையற்ற ஹெராக்ளிட்டிஸ்5
அவராகவும் வேறொருவராகவும்,
ஓடும் நதியினைப் போலவே
இருப்பதைக் காட்டும் கண்ணாடி