காத்திப் என்றழைக்கப்படும் எழுத்தாளன், ஒரு அகோரியின் உடலில் பாபரின் ஆவி வந்து புகுந்திருக்கும்போது, அதனுடன் உரையாடலாம் என்று திட்டமிட்டிருக்கையில், ஔரங்கஸேப் ஆவி வந்து பேசுகிறது எனும் கற்பனையும் எதிர்பாராமையும், கிண்டலுடன் வரலாறு பார்க்கப்படுவதும், ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு படிப்பவரை தயாராக்கிவிடுகிறது.
ஔரங்கஸேப், உரையாடும் காத்திப், நாவல் எழுதும் சாரு என்று மூன்று வாசகப் பிரதேசங்கள் நாவலில் உள்ளன. முகலாய மன்னன், சமகால விஷயங்கள் கிண்டல் தொனிக்கும் இடங்கள், போன்றவை முன்கதைத் துவக்கத்தில் ‘சோ’ வின் ஒரு நாடகத்தை நினைவூட்டினாலும் பிறகு வெகு விரைவாக அது முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கிறது.
இந்த நாவலை எழுதுவதற்கு, ஔரங்கஸேப் குறித்த நேரடியான தரவுகளுக்கு போகாமல், சம்மந்தப்பட்ட பிற சரித்திர ஆக்கங்களில் சொல்லப்பட்ட ஔரங்கஸேப் குறித்த தகவல்களை பிரித்தெடுத்து, உருவாக்கப்பட்ட ஔரங்கஸேப் வடிவம் இது. அதனால், உயர்நவிற்சிகளின் நிறம் ஏறாத ஒன்றாக இருக்கும் என்று நம்ப இடமுண்டு.
வெவ்வேறு காலங்களை ஊடாட்டமாக வைத்து முன் பின் நகர்த்தி எழுதிப்போதல்; ஒரு ஹெடானிஸ்ட் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் காத்திப், கறாரான தூய்மைவாத முஸ்லீம் ஔரங்கஸேப்பிடம் பேட்டி காணுதல்; வரலாற்றை நிகழின் நையாண்டியுடன் கலைத்துப்போட்டு பேசுதல், பேட்டியின்போது ஔரங்கஸேப் மராத்திய சிவாஜியை ஒருவகையில் தன்னுடைய மற்றைமை (Other) என்று குறிப்பிடல்; கடந்த காலத்தை, நிகழில், கடந்தகால ஔரங்கஸேப் பேசுவது போன்ற அம்சங்கள் ஒரு பின் நவீனத்துவ கூறுகளை கொண்டிருக்கும் நாவலாகவே அணுக வைக்கிறது
சாரு எம் வி வெங்கராமின் மறைவின்போது தினமணியில் எழுதிய பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையில் லூயி போர்ஹேவின் தந்தை சொல்வதாக ஒரு விஷயம் எழுதியிருப்பார். அதில் காலையில் பார்த்த காட்சியை மாலையில் நினைக்கும்போது நமக்குத்தோன்றுவது காலைக் காட்சி அல்ல. அதைப் பற்றி மனம் நினைத்துக்கொண்ட ஞாபகத்தில் படிந்திருக்கும் முதல் காட்சியை என்பதாக. ஒவ்வொரு முறை நினைக்கும்போதும் இறுதியாக நினைவு கூர்ந்ததையே நினைவுகூர்கிறேன் என்பதாக. அது ஒரு பின் நவீனத்துவ அம்சம் எனும்போது ஆவியாக வரும் ஔரங்கஸேப்பின் நாவல் குரல் இதைப் போன்றதாகவே இருக்கிறது. அந்தப் பார்வையும் இறுதிக்கால குரலாக கனிந்து வெளிப்படுகிறது. மேலும், நாவலை ஒருமையை நோக்கி செலுத்தாமல், ஒருவித குற்ற உணர்வின் ஓரிரு சுவடுகளை, வாத பிரதிவாதங்களின் நூற்றுக் கணக்கான சுவடுகள் நடுவே சுண்டித் தள்ளி உலவவிடுகிறார்.
உதாரணமாக, தனது சகோதரன் தாராவின் மனைவி நஸிரா, பாலூட்டுவதற்கு நிகராக, தன் மார்பகத்தைக் கழுவி ஒரு தாய்மை உணர்ச்சியுடன், ஸ்வருப்சிங்கிடம் கழுவிய நீரைத் தந்து ஒரு மகனைப்போல கருதி நடத்துகிறார். அவனிடம் தங்களுக்கான ஆதரவைக் கோருகிறார். ஆனால் பின்னால் அவன் என்னிடம் வந்து சேர்ந்து கொண்டான் என்று கண் கலங்கும் ஆவி ஔரங்கஸேப், அரசோச்சியபோது அவனைக் குற்ற உணர்ச்சி இன்றியேதான் ஏற்றுக்கொண்டார். இவ்வாறாக சம்பவங்கள் நடந்தகாலமும், அதை நினைவில் மீட்டிப்பார்க்கும் காலமும் வெவ்வேறாக இருக்கும்போது, அவற்றின் புரிதல்கள் வெவ்வேறு தரத்தில் வெளிப்படுகின்றன.
***
ஔரங்கஸேப் சரித்திரத்தில் தான் வில்லனாக்கப்பட்டு விட்டதாக சொல்லி, அசோகரை இந்தியா கொண்டாடுவதை ஒப்பீட்டுக் குறிப்புப் புள்ளியாக கொண்டு நாவல் முழுதும் வாதிடுகிறார். மேலும் தனது முந்தைய, மற்றும் பிற அரசர்களை நினைவூட்டியும் வாதிட்டுக் கொள்ளுகிறார் நூறு சகோதரர்களை கொலை செய்துவிட்டுதான் அசோகர் அரசர் ஆகிறார். அவர் உயிரோடு இருக்க விட்ட ஒரே தம்பி அவர் உடன்பிறந்தவன் என்பதுதானே உண்மை என்று கேட்கிறார்.
அவர் பௌத்தம் தழுவியது எல்லாம் போலி. அப்படி என்றால் ஏன் சிறைக் கைதிகளை விடுவிக்கவில்லை. கலிங்கப் போரின் பிறகும் படையெடுப்புகள் இருந்தன போன்ற சரித்திர ஆதாரங்களை வைத்து ஔரங்கஸேப் கேட்கிறார். தன்னை கெட்டவனாக சித்தரித்து, போதாக்குறைக்கு தகுதியற்ற அசோகரை பேராளுமையாக உயர்த்தி வைத்திருக்கும் இந்திய வரலாற்று மற்றும் அரசியல் தலைவர்கள் மேல் தனது ஆதங்கத்தை சொல்கிறார். அசோகரின் சிங்கங்களை சின்னமாக வைத்திருப்பதும், தாஜ்மகால் என்பட்தை காதலி சின்னம் கேலிக்குரியது என்கிறார்.
தாராவை திறனற்றவன் என்றும், ஆளும் தகுதி அற்றவன் என்றும் சொல்லி, அப்துல் லஹோரி வரைந்த ஓவியத்தில், சுதாகர் எனும் யானையை தான் எதிர் நின்று போரிடுகையில், குதிரையில் பயந்து ஒதுங்கும் தாராவை ஓவியத்தில் உள்ள காட்சியின் மூலம் காட்டி ருசுப்படுத்துகிறார்.
தந்தை ஷாஜஹான் - ஆறு கொலைகள் செய்தவர். மகளையே (ஜஹானாரா) மனைவி போல ஆக்கிக்கொண்டவர் என்றும் அதனால் மார்க்த்துக்கு எதிராக செயல்பட்ட அவருடைய நடத்தைக்கு அந்த தண்டனை சரியானதுதான் என்று நிறுவ முயல்கிறார். இப்படியான ஒழுக்க மீறல்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் தகுதி கொண்ட ஒழுக்கமிகு ஆளுமையாகவே அவர் இருக்கிறார். அல் குரானை மனனமாக தெரிந்தவர்.
அக்பர் - மார்க்கத்தை கைவிட்டவர் என்றும், சிவாஜி ஒரு கொள்ளைக்காரன் என்றும் காரணங்களோடு முத்திரையிடுகிறார். ஆனால் சிவாவை (சிவாஜிக்கு, ஜி என்ற மரியாதை விளியை தராமல் எப்போதும் சிவா என்கிறார்) ஏன் தன்னால் இறுதிவரை தீர்த்துக்கட்ட முடியவில்லை என்ற ஆச்சரியம் அவரிடம் இருக்கிறது.
இந்த குரல் மூலம் கூடு பாய்தலில் தன் கருத்துக்களை காத்திப் அல்லது சாரு வைக்கிறார், விளையாட்டாகவே.
***
இன்றும் பொருத்தப்பாடு கொண்டிருக்கும் சில சரித்திர நிகழ்வுகள் நாவலில் சுவார்சியமானதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஏனென்றால் கேளிக்கைக்குரிய ஒன்றாக வரலாற்றைக் கையாளும் நாவல் அல்ல இது.
தகவல்கள்
நாவல்களின் மற்றொரு முக்கிய உபயம், அது நடந்த காலம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும். அப்படி இந்த நாவலின் போக்கில் பல தகவல்கள் வெளிப்படுகின்றன.
ஆன்மீகம்
நாவலின் பாத்திர உரையாடல்கள் இடையே, ஆங்காங்கே, தெளிவான ஆன்மீக அம்சங்கள் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.
ஆசிரியரின் குரல்
புனைவுகளில் படைப்பாளனின் இடம் என்பது ஆற்று மணலில் நீர், ஈரத்தின் உருவில் இருப்பது போன்றது. குறிப்பாக வரலாற்றுப் புனைவுகளில், வரலாறு என்பது காலத்தால் அழுத்தப்பட்ட பழமை என்றாலும், பூமிக்கடியில் மறைந்திருக்கும் படிவுப் பழமையாக இல்லாமல், கண்ணில் தெரியும் மலையின் பழமை போல காட்டுவது படைப்பாளியின் கலையாகிறது. வெறும் குறிப்புகளின் தொகுப்பாக இல்லாமல், அது ஒரு படைப்பாக மாறுவது இவ்வித பொருட்படுத்தல்கள்தான். அதற்கான பிரதேசங்கள் அதில் கிடைக்கின்றனவா என்பதே கவனம் கொள்ளத்தக்கது.
ஔரங்கஸேப் சொல்லும் மதநல்லிணக்கம் என்னவென்றால் - நீங்கள் வேறு. நான் வேறு. நாம் இணக்கமாக இருப்போம் என்பதே. ஆனால் அக்பர் முதல் இன்று வரை இதை குழப்பியும் தவறாக சித்தரித்தும் வருகின்றனர் என்று நாவலின் ஔரங்கஸேப் குரலில் சொல்கிறார்.
தன்னைக் கெடு ஆளுமையாக சித்தரிக்க, அசோகரை பொருத்தமற்று பேராளுமையாக மாற்றியதன் வரலாற்றாளர்களின்/ அரசியலின் உள்ளரசியலை சொல்லும் அதே சமயம் - மதப்பிடிப்பு, ஆவேசம் மற்றும் மார்க்க நெறிகளை சமரசமின்றி மேற்கொள்ளும் பாங்குகளால், அவற்றை காக்க குருதி சிந்துவதை, சிந்தவைப்பதை உயர்விக்கும் போக்குகளால், ஔரங்கசீப் - தலிபான்களின் குறியீடு ஆகிறார். ஆகவே இதற்கு எதிராகவும், தமது அடையாளங்களை காத்துக்கொள்ளும் பொருட்டும் எழுச்சி கொள்பவர்களுக்கு, சிவாஜி (அப்சலை கொலை செய்த தீரத்தின் பொருட்டு ) தேசீயவாதத்தின் குறியீடு ஆகிறார். இப்படியான ஒரு பார்வையின் மூலம் சமகால அரசியல் மாற்றுப் புள்ளிகளை கவனப்படுத்துகிறார்.
அக்பர் ரஜபுத்திர பெண்களை மணந்தது நல்லிணக்கம் அல்ல. நல்லிணக்கம் என்றால், பிறகு ஏன் ரஜபுத்திர வீரர்கள் முஸ்லிம் பெண்களை மணந்தால் வீரர்களுக்கு தண்டனை ? என்கிறது ஒரு குரல்.
ஐரோப்பிய அறிவு லௌகீக வெற்றிகளை குறித்தது. ஆனால் இந்துஸ்தானிய அறிவு மனித சாராம்சத்தை நோக்கிய அறிவு; என்றும், மராட்டியருக்கு வெற்றி முக்கியம். ரஜபுத்திரர்களுக்கு வழி முக்கியம் போன்ற, ஒப்புமைப்படுத்தி அறிய முயலும் குரல்கள் அவை குறித்து யோசிக்க வைக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே, தமிழ்திரைப்பட நடிகர்கள், அவர்களது சமூக பிம்பங்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசியல்கள் போன்று, பலவற்றையும் கிண்டல் பண்ணிக்கொண்டு போகும் எழுத்தாளர் - மேலும் சொல்லத்தவிர்த்துவிட்டு, தமிழின தலைவர் இறப்பு - சே குவாரா முகத்தோடு ஒப்பிட்டு சொல்லும் இடத்தில் தனக்கு உயிர் பத்திரமாக வேண்டும் என்கிறார். இந்த எள்ளல் கனம் மிக்கது.
ஔரங்கஸேப் காலத்தில் கிடைத்த நல்ல விஷயங்களாக இருப்பவை பல உண்டு. ஆண்கள் காயடிக்கப்பட்டு கோஜாக்களாக ஆவதை தடை செய்கிறார். செயற்கையாக இப்படி ஆக்கப்பட்டவர்களை உணர்ந்து கொள்ளும் படியான சில இடங்கள் நாவலில் உண்டு.
அரசாங்க கஜானா பணம், ஆள்பவர்களின் விருப்பத்துக்கும், புகழுக்குமாக, ஜோசியர்கள் மற்றும் கவிஞர்களுக்காக செலவழிக்கப் படுவதை, பெரிதும் குறைக்கிறார். இத்தனைக்கும் அவர் ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவராகவே தெரிகிறார்.
மிக முக்கியமாக அவர் மிக எளிமையாக வாழ்ந்தார். குல்லா தைத்து, குரான் எழுதி அதில் வரும் வருமானத்தை வைத்தே தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார். அப்போதிருந்த, பிற முகலாய மன்னர்களை ஒப்பிடுகையில் இவர் மிக ஒழுக்கமானவர். உண்மையாகவே சதி என்ற சமூகக் கொடுமையை தடுக்க முயன்றார்.
மற்றவர்களைப்போல கொள்ளையடித்துக் கொண்டு போக வந்தவர்கள் அல்ல நாங்கள். இங்கே இந்த மக்காளோடு சேர்ந்து வாழும் விருப்பம் கொண்டவர்களே தாங்கள் என்கிறார்.
கலைக்கும் கைகள்
இந்த நாவலில் மிக சுவாரசியமாகவும், விளையாட்டாகவும், கூர்மையாகவும் ஒரு உத்தி செயல்படுகிறது. அகோரியின் உடம்பில் வந்து பேசுவது ஔரங்கஸேப் மட்டுமல்ல. அவர் காலத்திய வேறு சில ஆவிகளும். அவை பேசும்போது, ஔரங்கஸேப் ஒதுங்கி நம்மோடு சேர்ந்து அவற்றுக்கு காது கொடுக்கிறார்.
இதில் ஔரங்கஸேப்பின் குரல் தன் தரப்பை, கோணத்தை, எழுதிச்செல்லும்போது, அவர் காலத்தில் வாழ்ந்த வெறொரு குரலின் கை அவற்றை அழித்துவிட்டு, அதன் மேல் மாற்று உண்மை ஒன்றை எழுதிப்போகிறது. இந்த உத்தியின் மூலம் ஒற்றைப் படையான புரிதல்கள், சார்புகள் கலைக்கப்படுகின்றன. மைக்ரோஸ்கோப் போல வாசகன் நுணுகி கவனிக்க முயலும்போது, கலைடாஸ்கோப் போல அசைவுகளின் மூலம் காட்சியைக் கலைக்கிறார். வெறொன்றை தருகிறார்.
எளிமையாக இருப்பதாகவும் குல்லா விற்று தன் வாழ்க்கையை நடத்துவதாகவும் ஔரங்கஸேப் குரல் சொல்ல, பீம்சிங் சக்ஸேனாவின் குரல் அதைக் கலைத்துவிட்டு, ஔரங்கஸேப் செய்த ஒரு பெரும் கொலைப் பழிக்காக, ஒரு சூபி சாபம் தந்துவிட, அந்த சாபம் நீங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட பரிகார வாழ்க்கை முறைதான் அது என்று எழுதிப் போகிறது.
இந்துக்களுக்கு கோவிலை கட்டினேன் என்று சொல்லி இந்து வெறுப்பு இல்லை என்று ஔரங்கஸேப் குரல் எழுத, அவருக்கு ஆதரவாக இருந்த ஜஹானாரா குரலே அதைக் கலைக்கிறது. சிறுவனாக இருந்தபோதே, இந்துக்கள் மீது இருந்த அக்பரின் கனிவை ஔரங்கஸேப் வெறுத்தார். அதிகமும் ராஜ்புத்திர வீரர்கள் படையில் இருந்ததையும், அவர்கள் பழக்கவழக்கங்கள் இயல்பாக அனைவருக்கும் பரவி இருந்ததையும் குறிப்பிட்டு, ஜஹாங்கிர் போருக்கு செல்லும்போது திலகம் வைப்பதை இவர் வெறுத்தார். கிருஷ்ணர் கதைகளை நாங்கள் கேட்பதை வெறுத்தார் என்று மாற்று உண்மையை எழுதிப்போகிறது.
மேலும், கோவில் முன்னே ஒரு முஸ்லிம் சென்று சிலை வணக்கம் பற்றி அவதூறு பேச, அங்கிருந்தவர்கள் அவனை அடிக்க அவன் இறக்கிறான். அவர்களுக்கு மரண தண்டனை தரும் ஔரங்கஸேப்பிடம் ஜஹானாரா வாதாடும்போது, அப்படி அவர்கள் சொன்னது தப்பில்லை. ஆனால் அதை அவர்கள் கோவிலில் சென்று சொன்னதே தவறு. ஆகவே வெறும் தண்டனை போதும் என்கிறாள். ஆனால் இவர் சாதாரண மரண தண்டனை என்பதை, கழுவேற்றும் தண்டனையாக மாற்றும் குரூரம். மதவெறி இருந்தது எந்த மாற்று உண்மையை மற்றொரு குரல் எழுதிப்போகிறது.
உங்கள் வழிபாட்டை நான் செய்ய முடியாது. என் வழிபாட்டை நீங்கள் செய்ய இயலாது என்று சமாதானமாக சொன்னதாக ஔரங்கஸேப் குரல் சொல்ல, ஜாடுனாத் சர்கார் குரல் அதை கலைக்கிறது.
ஷியா இந்து இருவரையும் அவர் அடியோடு வெறுத்தார் என்று மாற்று உண்மையை எழுதிப் போகிறது.
தன் போட்டி சகோதரன் தாரா திறனன்றவன். போரின்போது யானையில் இருந்து இறங்கி ஓடினான் என்று ஔரங்கஸெப் குரல் எழுதுகிறது. ஆனால் கலிலுல்லா சதி செய்து தாராவை அப்படி இறங்கி ஓட வைத்தான் என்று மாற்று உண்மையை பீம்சென் சக்ஸேனாவின் குரல் எழுதுகிறது. (ஔரங்கஸேப் பற்றி எழுதிய ஒரே இந்து இவர்)
***
நவீன படைப்புகள் படிப்பவனுக்கு அது ஏதேனும் சிறப்பு அந்தஸ்தை தரக்கூடும் என்றால் அது கேள்விகளையோ, பதில்களையோ தேடலையோ, முரணையோ - ஏன் புரிதல்பாற்பட்ட அதிருப்திகளையோ, குறிப்புணர்த்த வல்லதாக இருப்பதே. அவ்வகையில் இந்த நாவலில் ஔரங்கஸேப் குரல் தரப்படுத்திச்சொல்லும் பார்வைகளில், படிப்பவனுக்கு, நாவலை ஒட்டி, அதற்குட்பட்டு, எழும் கேள்விகள் சில உள்ளன.
ஆலம்கிர் ஔரங்கஸேப் ஆவியிடம் சில கேள்விகள்
1. உங்கள் மகள் கவிதாயினி செபுன்னிஸாவுக்கு 21 ஆண்டுகள் சிறை. ஏன் ?
2.முறையற்ற நெறிமீறிய உறவு என்பதால் ஷாஜஹானை சிறை வைத்து மரணத்தை நோக்கி தள்ளிய நீங்கள் அந்த உறவில் பங்கெடுத்த, அவரது பெண் ஜஹானாராவை (ஷாஜஹான் இறந்த பின்) பரிசு பொருள் தந்து வரவேற்றது ஏன்? முறையற்ற இணை உறவுகள் சட்டத்துக்கு முன் வரும்போது பெண் தண்டனைக்கு உள்ளாவதில்லைதான். ஆனால் உங்கள் வரவேற்பு, அங்கீகாரமாகிறதே?
3.தீ விபத்தில் சிக்கி மீண்ட சாஹிபாவிடம், தந்தை ஷாஜஹான் ‘உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க - சகோதரன் ஔரங்கஸேப்பான உங்களை மன்னித்து ஏற்க சொன்னது உங்கள் வாழ்வில் பெரிய திருப்பம் என்று நீங்களே சொன்னீர்கள். ஆனால் அதேபோலவே, சகோதரன் முகம்மது அக்பருக்காக, சாபுனிசா ஆதரித்தால் சிறையா?
4. இந்துக்களை சமமாக பாவிப்பதாக சொல்லும் நீர் - அவர்கள் யானை மீது அமர கூடாது. பல்லக்கு கூடாது. அரேபிய குதிரைமேல் ஏறக்கூடாது என்றதெல்லாம் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது?
5. இந்துக்கள் மேல் நான் ஜிஸ்யா வரி போட்டதாக சொல்வது புரட்டு. நான் முஸ்லிம்களுக்கும்தான் ஜகாத் வரி போட்டேன். அது ஜிஸ்யா விட அதிகம். இந்த உண்மையை கொட்டை எழுத்தில் போடுங்கள் என்று காத்தீபிடம் சொல்ல, ஜீரோ டிகிரியும் உங்களுகு மதிப்பளித்து பதிப்பித்துள்ளது. ஆனால் அக்பர் நீக்கியிருந்த ஜிஸ்யாவை மீண்டும் கொண்டுவந்தது நீங்கள்தானே? உங்களுக்கு பிறகு அது நீக்கப்பட்டதுதானே? அது போகட்டும். முஸ்லிம்களுக்கு ஆறு கடமைகளில் ஜிஸ்யாவும் ஒன்று. அது வரி அல்ல. மதக் கடமை. ஆனால் இந்துக்களுக்கு அப்படியான மதக் கடமை எதுவும் இல்லையே? எப்படி வரியையும், கடமையையும் ஒப்புமைப் படுத்துகிறீர்.? நெறியும் வரியும் எப்படி ஒன்றாகும் ?
6. பக்கீராகத்தான் விரும்பினேன் என்று அடிக்கடி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் இளைய சகோதரன் முராத். தலைமறைவாக இருந்தவனுக்கு ஓலை அனுப்பி, பணம் அனுப்பி, வரவழைத்து அவனிடம் பசப்பு பேச்சுகள் பேசி, நான் பக்கீராக போகிறேன், அரசு உனக்குத்தான் என்று சொல்லி மரணத்தை பரிசாக தந்தீர்கள். அது நம்பிக்கை துரோகம்தானே? வாரிசு போட்டிகளில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால் நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவன், பக்கீராகாவே விரும்பினேன் என்று நீங்கள் சொல்லி வந்ததையெல்லாம் எதில் சேர்க்கவேண்டும் ?
காட்சிச் சிறப்புகள்
நாவலில் ஒருசில சம்பவங்களை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பாக வந்திருக்கிறது.
சம்பா வதைப்படலத்தில் சிவாஜியின் மகன் சாம்பாஜியை விலங்கிட்டு ஔரங்கஸேப் அவையில் கொண்டுவந்து நிறுத்தி, எங்கள் மார்க்கத்துக்கு மாறி விடு, விட்டு விடுகிறேன் என்று சொன்னதற்கு, உன் பெண்ணைக் கொடு, மாறுகிறேன் எனும் சம்பா சித்திரவதை ஆதல் படிப்பவரின் சமன் குலைக்கக் கூடியது. ஒவ்வொரு அங்கமாக துண்டிக்கப்படுகிறான். ஆனாலும் அவன் சிரித்துக்கொண்டே நிற்கிறான். அவனது கண்கள் அவரை நையாண்டி செய்கிறது. ஔரங்கஸேபை தடுமாற வைக்கிறது. அவன் கண்களை தோண்டுங்கள் என்கிறார். கண்கள் தோண்டப் படுகின்றன. அப்போதும் அவன் சிரித்துக்கொண்டே இருக்கிறான். இங்கு சீலேவின் கம்யூனிஸ்ட் ஹாரா நினைவூட்டப்பட்டு , மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட போதும் கிதாரில் வெற்றி நமதே என்று பாடியதை ஒப்பிட்டு காத்திப் உரையாடுகிறார்.
மற்றொரு சம்பவம். ஒரு சூபி சுயம் மறந்து நிர்வாணமாக இருப்பதால், அது குற்றச்செயல் என்று அறிவித்து அவருடைய தலை துண்டிக்கப்பட, வெட்டப்பட்ட தலையுடன் சூபி நடனமாடுதல் அமானுஷ்யமும் ஆன்மீகமும் கலந்த காட்சி (சதாசிவ பிரம்மேந்திரரை நினைவூட்டுவது).
***
இளவயது முதல் வீரனாகவும், துணிந்தவனாகவும், மத நெறி முறையை அணுக்கமாக பின்பற்றுவராகவும், சகோதரர்களுக்கு நடுவே அவர்களை வலுவிழக்கவைத்து, ஆட்சியை நிறுவி, திட்டங்ளும் சூழ்ச்சிகளும் கொண்டவனாக அரசை நிறுவி, நாற்பத்தொன்பது ஆண்டுகள் நெடிய ஆட்சியை தந்தாலும், கெடுமதியாளனாக, மூர்க்கனாக வரலாற்றால் சித்தரிக்கப்பட்டு, தனது 89 வயதிலும் போர்க்களத்தில் நின்று போராடவேண்டிய நிலையே அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
எல்லா வெற்றியாளனும் மரணத்தின்போது அர்த்தமற்றவனாக ஆகிவிடுகிறான் என்றாலும், அதை அவனே உணர்ந்தவனாக சமாதியின் புழுதியில் இருந்து எழுந்துவந்து, தனது வரலாற்றின் பக்கங்களை ஒரு அந்நியனாக பார்த்துவிட்டு பேசும்படியான ஒரு புனைவு, விவரிக்க இயலாத ஒரு உணர்வைத் தருகிறது.
தான் இறந்த பிறகு எந்த ஆடம்பரமும் இல்லாமல் ஒரு சாமானியனின் மண் சமாதி போலவே முழங்கால் உயரத்துக்கு குறைவாக தனக்கு இருக்கவேண்டும் என்று கோரி அப்படி அமைந்திருக்கும் ஔரங்கஸேப்பின் சமாதியை பார்க்கவேண்டும் என்று ஆசையூட்டுகிறது இந்நாவல்.