கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நவீன கவிதைகளில் சமகால அரசியல் உணர்வு

ஞா.தியாகராஜன்

பகிரு

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது.

நவீன இலக்கிய ஆக்கங்களில் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகும். உள்ளொளி, தரிசனம் போன்ற பேறுகளிலிருந்து தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை புதிய கதியில் இயங்க தொடங்கியது. பெண்ணியமும், தலித்தியமும், பிற நவீன கோட்பாடுகளும் மனிதனைச் சுற்றி கவியும் அரசியலை படைப்புக்கான தளமாகக் கண்டறிந்தன. இதன்மூலம் கடந்தகாலங்களில் ‘எழுத்து’ மரபு படைப்பாளர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அம்மரபில் ஆர்வங்கொண்டோரே அழித்தெழுதினர்.

யவனிகாஸ்ரீராமின் கவிதைகள் ஒரு பெரு வெடிப்பு போலச் சர்வதேச அரசியல் பரிவர்த்தனைகளைக் கவிதைகளில் புழங்கு பொருளாக்கின. வெவ்வேறு பாட்டைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட நவீன படைப்பாளர்களிடையையும் அரசியல் விழிப்பென்பது செயல்படத் தொடங்கியது. ‘இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது’ என்ற வரிகள் மூலம் ஆத்மநாம் இந்த மாற்றத்தின் முன்னவராகத் தன்னை நிறுத்திக்கொண்டார். இதன்மூலமே ‘புதுக்கவிதை’ ‘நவீன கவிதையாக’ உருமாற்றம் அடைந்ததெனக் கொள்ளலாம். தேவதச்சன் போன்றவர்களின் தத்துவார்த்த பாதைக்கும் வரலாற்றுக் காரணங்களை முன்வைக்கிறார் சபரிநாதன்.

ஆக, தீவிர சிற்றிதழ் மரபில் தழைத்த கவிதைகள் தன்னொடுக்கமான நசிந்த இலக்கியம் என்ற பழைய விமர்சனத்தைத் தாண்டி தன் மெய்மையை இன்று நிரூபித்துள்ளன. தற்போதைய மார்க்சிய விமர்சகர்களாகக் கருதப்படும் ஜமாலன் போன்றவர்களும் நவீன இலக்கியத்தைச் சரியாக அடையாளப்படுத்தி வருகின்றனர்.

நவீன கவிதைகளுக்குப் பொதுவான அடையாளப்படுத்தல் என்பது சாத்தியமல்ல. அதன் இயங்குகதி எவ்வித மையப்பொருண்மைகளையும் ஏற்க மறுப்பது. வாழ்விற்கு வெளித்தெரியாத எத்தனை நிறங்களும் ஓசைகளுமுண்டோ அந்த எல்லைகளுக்குத் தனது அறிதல்களை விரித்துக்கொள்கின்றன நவீன கவிதைகள்.

என்றாலும் அவை அரசியல் சரி, தவறுகளின் மீது போதுமான கவனம் செலுத்தாதவை என்பது சமூகப் பார்வைக் கொண்டவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனமாகும். ஆனால் ‘நவீன கவிதை’ என்ற வகைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதே இன்று பெரிய அரசியல் செயல்பாடாகக் கருததக்கதாகும்.

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது.

முதலில் ‘சால்ட்’ பதிப்பகத்தின் வெளியீடாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்ரீநேசன், அகச்சேரன் கவிதைகளைப் பார்க்கலாம். இருவரும் சிறுபத்திரிக்கை அளவில் காத்திரமாக இயங்கிவரும் படைப்பாளிகளாவர்.

அகச்சேரனின் ‘கற்கை’ சமீபத்தில் வெளியாகியுள்ள கவிதைப் பிரதிகளில் குறிப்பிடத்தக்கதாகும். அத்தொகுப்பில் இடம்பெறும் ‘சாந்தி’ கவிதை பின்வருமாறு.

சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்

என்றதற்காக முதலில் தொலைத்த என் இரண்டு ரூபாயை

சாதாரணமாகவே எடுத்துக்கொண்டேன்

கூடவே தொலைந்து வரும் இரண்டு ரூபாய்களை

எங்ஙனம் புரிந்து கொள்வேன்

நவீன அரசாங்கம்

கல்விக்கூடங்கள்

மருத்துவமனைகள்

பெரிய பெரிய மால்கள்

ஒருபக்க விளம்பர நகைக்கடைகள்

உறங்குவதில்லை

அவை கபடமற்ற வரவு செலவுக்காரனை

ஏளனம் செய்கின்றன

சொந்த நாணயத்தை ஏவிவிட்டு பரிக

சிக்க வைக்கும் வல்லமைக்குமுன்

எதுவும் புரிவதற்கில்லை

ஆகவே இரண்டு ரூபாயாக வைத்து

விடுங்கள்

என் நெற்றியில்.

பண மற்றும் செலவாணிகள் மின்னணு முறையில் மாற்றப்பட்டுவிட்ட காலத்தில் சுரண்டல்களும் அதே அளவிற்கு நவீனமாக்கப்பட்டுள்ளன. பொதுவாக நவீன பொருளியல் கொள்கைகள் சாமான்யனின் சேமிப்புகள் மீதும் வரவுகள் மீதும் சுதந்திரமான அத்துமீறலை அனுமதிக்கின்றன.

இன்றைய பணமென்பது இயந்திரங்களில் அச்சடிக்கப்பட்டுத் தேவையான முனையங்களுக்கு எடுத்துச்செல்லப்படவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு கணினியில் சில எண்களைத் தட்டுவதன் மூலம் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை வழங்கிவிடமுடியும். ஆனால் அதே வேகத்தில் அதை இந்தியாவின் பெரும் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் எளிதாகத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும் முடியும்.

தொட்டு உணர்ந்து, கண்ணுக்குப் புலப்படும் வகையிலான பரிவர்த்தனையைத் தவிர்ப்பதன் முக்கியப் பின்னணியில் சர்வதேச முதலாளித்துவம் செயல்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அந்த முதலாளிய வர்க்கங்களைத் தேடிச்செல்வது சாமான்யனுக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும்.

மேலும் பொறுப்புகளைத் தட்டிகழிக்கும் வண்ணம் இதன் வலைப்பின்னல்கள் ஒவ்வொரு படிநிலையிலும் மிகக்கவனமாகப் பின்னப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பிரதிபலிக்கின்றன அகச்சேரனின் ‘சாந்தி’ கவிதை. நவீன கவிதை தன் இயல்பு போக்காகவே உரைநடையின் தன்மையை அடைந்திருக்கும் சமகாலத்தில் கவிதையில் சொற்களுக்கான இடத்தை இக்கவிதைகள் திடமாக வலியுறுத்துகின்றன.

சொற்களைக் குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் அழுத்தங்களை அதிகரிக்கிறது கவிதைமொழி. ‘ஒருபக்க விளம்பர நகைக்கடைகள்’ என்ற சொல்லாட்சி முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. ஏனெனில் தினசரிகளில் காணப்படும் விளம்பரங்களை எந்த விழிப்புமில்லாமல் புரட்டுகிறோம்.

ஆனால் அவற்றிற்குச் செலவு செய்யப்படும் தொகையானது லட்சங்களில் புரளக்கூடியது. இன்றைய ஊடகங்களின் முக்கிய அதிகாரம் வாய்ந்ததும் இத்தகைய விளம்பரங்கள்தான். விளம்பரத்திற்குப் பெருந்தொகை செலவு செய்யும் நிறுவனம் தனது எளிமையான வாடிக்கையாளன் மூலமே அதற்கான லாபத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறது.

இப்படியாக ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முன்வைக்கப்படும் கவர்ச்சிகரமான பிற்போக்கு அரசியலின் விளைவுகளைச் சாதாரணப் பிரஜையின் குரலாகப் பதிவுசெய்கிறது அகச்சேரனின் கவிதை.

ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ தொகுப்பில் காணப்படும் ‘கூத்தாட்சித் தத்துவம்’ விளம்பரம் மூலம் உருப்பெருக்கப்பட்ட அரசியல் பிம்பத்தைக் கேலிசெய்வதாக அமைகிறது. கவிஞர் கண்டராதித்தனின் ‘பாடிகூடாரம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘உதுமான் நான் உலகளந்த பெருமான் பேசுகிறேன்’ கவிதை கொரொனோ பெருந்தொற்றுக் காலத்தில் அரங்கேறிய அவலங்களைப் பேசுவதாக அமைகிறது.

கவிதை என்ற பொது மதிப்பீட்டில் இவை சம்பவங்களை விவரிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஸ்ரீநேசனின் கவிதை கூத்தின் தொடக்க முகமாகத் தோன்றி நடைபெறவிருக்கும் கூத்து பற்றிய அறிமுகத்தை வழங்கும் பஃபூன் மூலம் கூறப்படுவதாகத் தொடங்குகிறது. ஆனால் எடுத்துக்கொண்ட துறைசார்ந்த போதிய பரிச்சயமின்மை கவிதையை வெற்றுடலாகக் காண்பிக்கிறது. பிறகவிதைகளில் காணப்படும் பூடகப்படுத்தல், காட்சி மயக்கங்கள், வாசகனுக்குப் பிரதியில் இடங்கொடுத்தல் போன்ற அர்த்தச்செயல்பாடுகளற்ற நேரடி விவரிப்பு முறையுடன் அமைகிறது கவிதை.

கவிதைக்கான ஆழ்ந்த மனவியக்கமோ மனவெழுச்சியோ இல்லாமல் வெறும் உருவகத்தைப் பற்றிக்கொண்டு அதன் உடலில் எண்ணவோட்டத்தைத் திணிக்கும் முயற்சியாகவே எழுதப்பட்டுள்ளது. நேரடியாகத் தனிநபர் ஆளுமையை மட்டுமே முன்னிறுத்தி நடைபெறும் இன்றைய இந்திய அரசியல் குறித்த பதிவாகவே கவிதை நின்றுவிடுகிறது.

தனிநபர் துதி மூலம் முன்வைக்கப்படும் அதீத தேசியவாதம், நடைமுறையில் அவை செயல்படுத்தும் ஃபாஸிச அரசியலின் கருத்தியல் திணிப்பு போன்றவற்றின் கனபரிணாமங்களை ஆழ்ந்துணர்வதற்கான விழிப்புநிலை கவிதையில் தவறுகிறது.

கண்டராதித்தன் கவிதையில் நேர்ந்திருப்பதும் இவ்வாறான பிழைதான். கண்டராதித்தனின் கவிதை பதினோரு பகுதிகளைக் கொண்ட நீள்கவிதையாகப் புனையப்பட்டுள்ளது. தன்மீது சுமத்தப்பட்ட செவ்வியல் தொடர்பான மதிப்பீட்டை எப்படியாவது தக்கவைக்கும் வலிந்த முயற்சியாகவே ‘பாடிகூடாரம்’ அமைந்துள்ளது.

அதன் காரியார்த்தமான எத்தனிப்பு கவிதைச் சுவையைக் குன்றச்செய்கிறது. கொரொனோ பெருந்தொற்றுக் காலத்தில் கங்கையில் மிதந்த பிணங்களும், கால்நடைகளைப் போல மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்பியதும் பெரும் சோகமாகவே அரங்கேறியது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இயல்பு வாழ்க்கையின் நெருக்கடிகளுடன் சேர்த்து சகமனிதர்களுக்குக் கண்ணுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளையும், பொறுப்பினை தட்டி கழிக்கும் ஆணவம் மிகுந்த அரசின் அலட்சியத்தையும் வெறும் சாட்சியாகப் பார்க்க வேண்டியிருந்தது.

‘உதுமான் நான் உலகளந்தப் பெருமான் பேசுகிறேன்’ நீள்கவிதை மூலம் இந்தச் சாட்சியத்தைப் பதிவுசெய்ய முற்படுகிறார் கண்டராதித்தன். ஆனால் செவ்வியல் தன்மையுடன் புனையப்பட்டுள்ள சில பகுதிகளைத் தவிர்த்து நடப்பரசியலை பேச விழைந்திருக்கும் பகுதிகள் இலக்கிய நயமற்றே அமைந்துள்ளன.

புலனுக்குப் பரிச்சயமான தளத்திலிருந்து மொழியை வேறொரு அர்த்தத்திற்கு நகர்த்துவதே கவிதையின் செயல்பாடாக முன்வைக்கப்படுகிறது. மேற்கூறிய கவிஞர்களில் அகச்சேரன் கவிதை அத்தகைய வினைபுரிதலை கொண்டியங்குகிறது.

தான் மையப்படுத்த எடுத்திருக்கும் பொருண்மை மீதான அவதானிப்புச் சரியாக அமைந்துள்ளது. இந்தத் தன்மையின் நீர்த்துப்போன வடிவமாகவே கண்டராதித்தன், ஸ்ரீநேசன் கவிதைகளுள்ளன.

இவ்விமர்சனத்திற்காக மட்டுமே இக்கவிதைகள் இங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. நவீன கவிதைகள் அரசியல் விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கினாலும் பெரும்பாலும் அவை தொழில்நுட்ப பெருக்கம் மழுங்கடிக்கும் மனித உணர்வுகள், நகர உருவாக்கங்கள் மூலம் நடந்தேறும் பண்பாட்டு நசிவுகள், சமூகக் குடும்ப உறவுகளில் நிகழும் அந்நியமாதல் போன்றவற்றை மையப்படுத்தியே இருந்துள்ளன.

நேரடியான அரசியல் கட்சி சார்ந்த விமர்சனங்களை நவீன படைப்பாளர்கள் வானம்பாடிகளின் தரப்பாகவே கருதிவந்துள்ளனர். அதனைப் பிரஞ்ஞைப் பூர்வமாகவே தவிர்க்கவும் செய்துள்ளனர். இவ்வரம்பினை மீறி எழுதப்பட்ட சில கவிதைகளும் திமுக எதிர்ப்பு மனநிலையிலேயே அதிகம் வேரூன்றி இருப்பதைக் காணலாம்.

சிறுபத்திரிகை தரப்பிலிருந்து மெல்ல விலகி வெகுஜன பரப்போடு தன்னை இணைத்துக்கொண்ட மனுஷ்யபுத்திரன் மட்டுமே இதற்கு விதிவிலக்காகத் தென்படுகிறார். றாம் சந்தோஷின் ‘சொல்வெளித் தவளைகள்’ தொகுப்பையும் இங்கு நினைவுகூறலாம். எழுதப்படாத இலக்கிய விதியுடன் தொடருமிந்த கன்னியில் நிகழ்ந்திருக்கும் சிறு விலகலை அல்லது மாற்றத்தை வரவேற்கத்தக்கதாக அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

பொதுவாக ‘கல்குதிரை’ வழியிலான படைப்பாளர்கள் வெகுஜன ஊடகங்கள் பிரதானப்படுத்தும் அரசியலிலிருந்து விலகியே இருந்துள்ளனர். ஆனால் அடிப்படை மனிதவாதத்திற்கு எதிரிடையாக இன்றைய ஒன்றிய அரசு செயல்படுத்தும் மனிதபயங்கரவாத சிந்தனைகளும் கூட்டு நனவிலியில் அவை பதியவைக்கப்படும் விதமும் சிந்திக்க தெரிந்த எந்தவொரு மனிதனையும் உறக்கமிழக்கச் செய்வதாகும். அதன் பாதிப்பு நவீன கவிஞர்களிடையே அங்கங்கே மெல்ல தலை காட்டுகிறது.

மாநில அரசைத்தாண்டி விரியாத அவர்களின் விமர்சனப் பார்வை ஒன்றிய அரசை நோக்கி நீண்டிருப்பது இந்தியா சந்தித்திருக்கும் அரசியல் நெருக்கடிக்கான இலக்கியச் சாட்சியாக இருக்கும். ‘கூத்தாட்சித் தத்துவம்’ என்ற சொல்லாடல் வழியாக மத்திய – மாநில உறவுகள் குறித்த உரையாடல் இன்று பொதுத்தளத்திற்கு நகர்ந்திருப்பதை அறியமுடிகிறது (எனினும் மாநில அரசியல்வாதிகளைச் சாடும் கவிதையும் ஸ்ரீநேசன் தொகுப்பிலுள்ளதுதான்). தமிழ்ச்சூழலில் இதுவொரு இயக்கமாகத் தலையெடுக்குமென்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் அப்படியொரு எதிர்பார்ப்பு எனக்குள்ளது.

உலகளவில் பெரும் மக்கள்தொகை கொண்டிருக்கும் தேசத்தில் வெளிப்படையாக நடந்தேறும் அரசியல் ஃபாஸிச வெறியாட்டத்தை ஒப்பீடும்போது இக்கவிதைகள் அவற்றுக்கெதிரான ஒரு துளிகூடக் கிடையாதுதான். மேலும் மேற்கூறிய கவிதைகளின் போதாமை வழியாக நேரடியான அரசியல் கருத்து மோதலை எழுதுவதில் நவீன படைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கலைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பேற்படுகிறது. இதனைக் களைவதற்கும் சில அழுத்தமான முன்னோடிகள் தேவைப்படுகிறார்கள்.

குறிச்சொற்கள்

மேல் செல்