கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

தமிழ்ச் சமூகத்தில் ஷாமன்கள் ஆளுவோராக இருந்ததில்லை!

கா.விக்னேஷ்.

பகிரு


நூலறிமுக கட்டுரை

‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’ எனும் ஆ.சிவசுப்பிரமனியனின் நூல், தமிழர்களின் தொல்சமயக் கூறுகளை இனங்காணும் குறிப்பிடத் தகுந்த நூலாகும். தற்கால அரசியல் சூழலில் மிக அத்தியாவசியாமான விவாதத்தை முன்னெடுக்கும் வாய்ப்பினை இந்நூல் ஏற்படுத்தித் தந்துள்ளது. தொல்சமயம், இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும், இறந்தோர் வழிபாட்டின் சிதைவும் புராண மூதாதையர், இறந்தோர் வழிபாட்டின் எச்சமென இயல்கள் பகுக்கப்பட்டு அப்பொருண்மைகள் குறித்துக் காரணகாரியங்களுடன் விவாதத்தை மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர்.

நிறுவனவயப்பட்டச் சமயங்களான பௌத்தம், சமணம், ஆசீவகம், சைவம், வைணவம் போன்றவைகளுக்கு முன்பே தமிழர்களிடம் தொல்சயம் என்ற ஒன்று வழக்கிலிருந்தது. அதன் கூறுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன என்றும் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இவருக்கு முன் தொல்சமயங்கள் குறித்து ஆய்வுசெய்த ஆய்வாளர்கள் பலரும் (மறைமலையடிகள், கா.சுப்பிரமணியப்பிள்ளை, க.வெள்ளைவாரணர் போன்றோர்) சைவச் சமயச் சார்போடு இயங்கி ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறினர். சிலரே (கைலாசபதி, சிவத்தம்பி, க.ப.அறவாணன், சிலம்பு நா.செல்வராசு போன்றோர்) தமிழர்களின் தொல்சமயக் கூறுகளை, அடையாளப்படுத்தல் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளனர். என்று முன்னாய்வுகளை வரிசைபடுத்தும் ஆய்வாளர், அதிலிருந்தே தமது ஆய்வு தொடங்குவதாகவும் ஆய்வுச் சிக்கலை மையப்படுத்துகிறார்.

தொல்சமயம்

உலகில் பல தொல்குடிகளின், தொல்சமயம் / புராதான சமயம் (Primitive Religion) ஆவிவழிபாட்டை முன்னிருத்தியதே. மனிதருக்கு அப்பாற்பட்ட ஆற்றல் ஒன்று உலகில் உள்ளது. அவ்வாற்றலே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. மனிதர்கள் மீதும் உயிரற்ற பொருட்களின்மீதும் ஆவி உறைவதாக நம்பினர் எனும் எர்வர்ட் பர்னட் டைலரின் கோட்பாட்டை முன்வைக்கும் ஆய்வாளர், தமிழர்களும் இதே கோட்பாட்டைக் கொண்டிருந்தனர் என்கிறார். அதனை விளக்கும் விதமாக அணங்கை ஆய்விற்கு உபடுத்துகிறார். தமிழர்கள் எவற்றையெல்லாம் கண்டு பயந்தனரோ அவற்றுள் ஆவி / அணங்கு உறைவதாக நம்பினர். அதன் ஆற்றலிலிருந்து தப்பிக்கவும் தன்வசமாக்கிக்கொள்ளவும் அதற்கு பலியும் படையலுமிட்டு வழிபாடு நடத்தினர் என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களில் நிறுவனச் சமயக்கூறுகள் தென்பட்டாலும் அசமத்துவப் பொருளாதாரச் சூழல் நிலவியதால் அவற்றுள் தொல்சமயக்கூறுகளும் தென்பட்டன என்று குறிப்பிடுகிறார். டைலர் கோட்பாட்டின் படி மேல்நிலை ஆவியம், கீழ்நிலை ஆவியம் என்று இருவகைப்படுத்தித் தமிழ்ச் சங்க இலக்கியங்களை ஆய்விற்கு உட்படுத்துகிறார்.

கீழ்நிலை ஆவியம் என்பது மனிதனின் உடலிலும் உயிரற்ற பொருட்களிலும் கண்ணுக்குப் புலனாகா உயிர் உறையும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது உயிர்வேறு உடல்வேறு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். இவ்வுயிரான ஆவி மற்றவிடங்களில் உறையுமென்றும் நம்பினர். மேல்நிலை ஆவியம் என்பது உயிர் என்று தொடக்கத்தில் நம்பி வந்த ஒன்று, நெஞ்சம் என்ற உடலுறுப்பாய் மாற்றமடைந்து அதுவே மனம், ஆன்மா, ஜீவன் என்றும் அது கடவுளோடு இணைக்கப்பட்டதுமே இந்நிலையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார். இவைகளின் வளர்நிலையிலேயே உயிரை எடுக்கும் கூற்றுவனும் உடலைப்பிரிந்த உயிர்கள் உறையும் மேலுலகமும் படைக்கப்பட்டதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார். துஞ்சுதல் என்ற சொல் இறத்தலையும் உறங்குதலையும் குறிப்பதற்கும் கீழ்நிலை ஆவியம் சார்ந்த கருத்தாடலே காரணம் என்றும் குறிப்பிடுகிறார். இயற்கைசார் பொருட்கள் (விலங்குகள் - தாவரங்கள்) குலக்குறியாக அமையும். அவற்றுள் அணங்கு / ஆவி உறைவதாக தொல்தமிழர்கள் நம்பினார்கள். அதனடிப்படையில் தன் குலங்களுக்கு / குடிகளுக்கு, சாதிகளுக்குக் கடவுளராக எண்ணி வழிபட்டனர்.

மேலும் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது, பேகன் மயிலுக்குப் போர்வை அணிவித்தது, சுறாகொம்பையும் பெடை எருமையின் (வளமையின் குறியீடு) கொம்பையும் வழிபட்டது குலக்குறி வழிபாடே என்று கருத்துரைக்கிறார். இதே போன்று பகையரசர்களின் கடிகா, கடிமரம் போன்றவைகளையும் அழித்து தன் அடையாளத்தைப் பதித்தனர். மேலும் அம்மரங்களில் யானைகளைக் கட்டி சிறுமையும் படுத்தினர். அதே மரங்களில் போர் முரசுகளையும் செய்தனர். அரசர்களின் குலக்குறியாக விளங்கிய மரங்களில் உறைந்துள்ள கடவுளர்களின் ஆற்றலைத் தன்வசப்படுத்தும் செயலே இவைகளென ஆய்வாளர் குறிப்பிடுகிறார். மேலும் சிதைந்த மரங்களையும் கந்து என வழிபட்டனர்.

இயற்கை வழிபாட்டை மேற்கொண்ட தமிழர்கள், அவற்றிலெல்லாம் அணங்கு உறைவதாக நம்பியதனைச் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் மன்றங்களிலுள்ள மரங்களில் சூரும் அணங்கும் உறைந்துள்ளதாக எண்ணினர். மேலும் அவற்றிற்கு பலியிட்டும் வழிபட்டனர். அகநானூற்றுப் (309) பாடலில் கடவுள் (அணங்கு / சூர் / ஆவி) உறைவதாக நம்பிய வேப்ப மரத்திற்கு, பசுமாட்டைப் பலிகொடுத்து அதன் இரத்தத்தைத் தூவி வழிபட்டனர். இச்சான்று தமிழர்களின் உணவுப் பண்பாட்டை விளக்கும் ஓர் அம்சம். இவ்வழிபாட்டின் அடுத்தக்கட்ட நிகழ்வாக / வளர்ச்சியான வெறியாட்டு முக்கியமானதாகும். கடவுளின் ஆவியைத் தன்னுடலில் ஏற்றி ஆடுதலே இந்நிகழ்வாகும். இவர்கள் ஷாமன்கள் எனப்பட்டனர். பல பழங்குடியினர்களுக்கு இவர்களே தலைவர்களாகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியங்களிலும் ஷாமன்கள் பற்றியக் குறிப்பு உண்டு. ஆனால் அவர்கள் ஆளுவோராக இருந்தமைக்கானச் சான்றுகளில்லை என்று ஆய்வாளர் குறிப்பிடும் கருத்து, சமகால அரசியல் சூழலில் அடையாளப்படுத்த வேண்டிய கருத்தாகும். இத்தகைய மரபின் பின்னனியிலிருந்து வந்த தமிழர்கள் ஷாமன்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கலே தொடரும்.

இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்

ஆவி நம்பிக்கை அணங்காகவும் கடவுளாகவும் வளர்ச்சி பெற்று, பின்னர் இறந்தோர்களை வழிபடும் நிலைக்கு வளர்ச்சி அடைந்தனர். இறந்தவர்கள் கனவில் வருவதே இதற்கு அடிப்பட்டைக் காரணமென ஆய்வாளர் சுட்டுகிறார். அவர்களுடைய ஆவி இங்கே சுற்றித்திரியும் என்று நம்பப்பட்டது. அவர்களுடைய ஆற்றல் அப்படியே நீடிக்கும் என்றும் நம்பப்பட்டது. மனிதர்களின் உடலில்; உலவும் ஆவி (Free Soul), உடல் ஆவி (Body Soul) என்று இரு ஆவிகள் இருப்பதாக நம்பப்பட்டது. இவற்றுள் உடல் ஆவி உடலைவிட்டு வெளியேறி மீண்டும் உள் நுழையும் தன்மைகொண்டது. மனிதன் மூச்சுவிடுதல், நிழல் தோன்றுதல் போன்றவற்றிற்கு உலவும் ஆவியே காரணம் என்று நம்பப்பட்டது. இவைகளிரண்டிற்கும் இறந்தபின் சடங்குகள் செய்யப்பட்டதாகவும், அம்முறை தற்காலம் வரை நீடிப்பதாகவும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச் சமூகத்திற்கும் பொருந்துவனவாகும். இறந்தவர்களை வழிபட கல் வைத்தல் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். சங்க இலக்கியங்களில் ஆறலைக் கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கர்களுக்குப் பதுக்கு, பதுக்கை ஆகியவைகளை உருவாக்கி பலியிட்டு வழிபட்டனர்.

இதனின் வளர்நிலையாக நடுகல் அமைந்தது. இறந்தோரை புதைக்கும் இடத்தைவிட்டுச் சற்று தள்ளியே இக்கல் நாட்டப்பட்டது, என்பதைச் சங்க இலகியங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றிற்கு பலியிட்டும் வழிபட்டும் வந்துள்ளனர். இம்முறை கொடூரமாக இறந்தோருக்கே செய்யப்பட்டது. அவர்களின் ஆற்றலைக் கல் எனும் வலிமைமிகுந்த பொருளில் அடைத்து வைக்கமுடியும் என்று நம்பினர். அதற்கு பூசை செய்வதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நம்பினர். இதன் விளைவாகவே நடுகல் வழிபாடு தொடங்கியது என்று ஆய்வாளர் கருதுகிறார். “கல்லே பரவினல்லது நெல்லுக்குத்துப் பரவுங் கடவுளு மிலலே”(புறம்.335) இப்பாடல் நிறுவனச் சமயக் கடவுளரை விடவும் நடுகல் கடவுளரையே முன்னிலைப் படுத்துகிறது. இதன்வழி இருவழிபாட்டு முறைகளும் ஒரே சமூகத்தில் நிலவியதை அடையாளம் காணலாம் என்கிறார். “தாழியும் மலர்பல அணியா”(அகம்.369) இப்பாடலிலுள்ள தாழியில் (பானையில்) மலர் சூட்டியிருந்தது, இறந்தோரின் எழும்புகளைச் சேகரித்து வைத்துள்ள தாழியே என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியம் குறிப்பிடும் சடங்குகளையே புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிட்டாலும், குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை அது செய்துள்ளது. ‘இல்கொண்டு புகுதல்’ என்ற சடங்கு முறையை இது அறிமுகம் செய்கிறது. வெட்டவெளியில் நடப்பட்ட நடுகற்கள் மன்றங்களில் சுவர் எழுப்பியும் வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. இதுவே கோவில் தோற்றத்திற்கும் காரணமாய் அமைந்தது என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். மேலும் இல்லுறை தெய்வங்கள் முன்னோர் வழிபாடாகவே இருந்திருக்க வேண்டும். அந்த இல்லில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாகவே இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மானிடவியலாளர்கள் குறிப்பிடும் ஆவியை மனித உருக்கொடுத்து வரைந்து பார்க்கும் Anthropomorphism எனும் முறையும் அவற்றினை வழிபடும் முறையும் சங்க இலக்கியங்களில்,

“காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர் பாவையும் பலிஎனப் பெறா”

(அகம்.369)

என்பதனால் அறியலாம் என்கிறார்.

இறந்தோர் வழிபாட்டின் சிதைவு

இனக்குழுக்கள் அழிப்பு, வேட்டையையும் மேய்ச்சலையும் மேற்கொண்ட சீறூர் தலைவர்கள் அழிப்பு. இதன்வழி பெருவேந்தர்கள் உருவாக்கமும் நாடு எனும் பெருவெளியும் உருவானது. கரும்பு, நெல் போன்றவைகளின் உபரி உற்பத்தி, குடை, கொடை, முரசு போன்ற கருத்தாக்கங்கள் தோன்றிவிட்டச் சமூகத்தில் தொல்சமயத்தின் சிதைவும் தொடங்கியது. அணங்கு கடவுளாகிக் கோட்டத்திலுறைதல். அரசன் உருவாகி அரண்மனையிலுறைதல், இவைகள் இரண்டையும் குறிக்கும் சொற்களாக கோயில் என்பது உருவாதலென தொல்சமயச் சிதைவுகள் உருப்பெற்றன. வடபுல நெறியான வேள்வியைத் தமிழ் மன்னர்கள் இங்கு மேற்கொண்டமையை; இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற மன்னர்களின் அடைகளிலேயே அறியலாம்.

வெட்டவெளியிலிருந்த நடுகற் கடவுளர்கள், கோயிலுக்குள் நுழைந்ததும் அவற்றுள் பிராமணர்கள் நுழைந்ததுமே தொல்சமயச் சிதைவிற்கு முக்கியக் காரணமென்கிறார். கோட்டங்கள் பல கடவுளர்க்கும் இருந்ததாகச் சிலப்ப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மணிமேகலையும் இதனை உறுதி செய்கிறது. பெருவேந்தர்களில் ஆட்சிக்காலத்தில் எழுந்த பிரதியானச் சிலம்பிலும் தொல்சமய எச்சம் இல்லாமலில்லை. சாலினி, தேவந்தி, திருமாலுக்குப் பணிசெய்யும் பெண் ஆகியோர்களுக்கு ஆவி புகுந்து ஆடுதல் எனும் நிகழ்வு, தொல்சமய வெறியாட்டு நிகழ்வோடு தொடர்புடையதே என்கிறார் ஆய்வாளர். மேலும் கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோட்டம் தொல்சமய நடுகல்லின் வளர்நிலையே என்றும், குறிப்பிடுகிறார்.

சைவம், வைணவம் எனும் நிறுவனச் சமய எழுச்சியே தொல்சமயச் சிதைவுக்கு அடிப்படைக் காரணம் என்கிறார் ஆய்வாளர். எல்லாவற்றிற்கும் திருமாலே, சிவபெருமானே என்று ஒற்றைக் கடவுள் தத்துவத்தை முன்னிறுத்தியது. மேலும் வீர மரணமான போர், வேட்டைச் செய்து இறந்தால் மட்டுமே போகமுடியுமென்றிருந்த மேலுலகிற்கு, இறைவனிடம் தவமிருந்தாலே சென்று விடலாம் என்று பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் மக்களைக் கடவுளர்களிடமிருந்து அந்நியப்படுத்தினர். திருவாய்மொழியில் ஒரு தலைவி உடல்மெலிவுறுகிறாள். அவளின் தாய் வெறியாடல் நிகழ்த்தவேண்டுமென்கிறாள். அதற்கு அத்தலைவி அது வீண், “வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே” என்று வேதக்கடவுளரை முன்னிறுத்தி தொல்சமயக் கடவுளை இழிவுபடுத்தும் வண்ணமாய்க் குறிப்பிடுகிறாள்.

வெறியாட்டு நிகழ்வு இடம்பெற்றாலும் அதன் பண்புநிலை மாறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்நிலையே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தொடர்ந்து, தொல்சமயக் கடவுளர்களைச் சிறு தெய்வம் என்றும் இளந்தெய்வம் (அற்பமான தெய்வம்) என்றும் புறக்கணித்தனர். இறந்தவர்களை வழிபட்டு வந்த தொல்சமயத்திலிருந்து மாறுபடும்விதமாக கொலை செய்தவர்களுக்குத் தண்டம் விதித்தனர். பொன், காசு, ஆடு, மாடு, நிலம் போன்றவைகளைத் தண்டமாக கோயில்களுக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் கோயில்களைப் பெரும் பொருளாதார நிறுவனங்களாக மாற்றினர். இது தொல்சமய இறந்தோர் வழிபாட்டைப் புறக்கணிக்கும் முறையே என்கிறார்.


கோயிலில் தற்கொலை செய்துகொண்டு இறந்தோர்களுக்காகச் சிலை வைத்து வழிபடல் என்பது, பொதுமக்களின் எழுச்சியைக் கையாளும் ஒரு உத்தி என்றும் இது விதிவிலக்குகளே என்றும் உரிய தரவுகளின்வழிக் கருத்துரைக்கிறார். இக்கோவில் வழிபாட்டில் பலிகள் நிறுத்தப்பட்டன. “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கு மாதொரு பாகனார்தாம் வருவார்” என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுவதன்வழி பல்வேறு வழிபாட்டு முறைகளை, சைவம் தன்னுள் உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். கல், மரம் போன்ற வழிபாடுகள் முன்னோர் வழிபாடு என்கிற நிலை மாற்றமடைந்து ஐம்பூதங்களின் வழிபாடென நம்பவைத்தது. மேலும் வேதநெறியை உள்வாங்கிக்கொண்ட சைவமும் வைணவமும் ஆகம விதிகளை வகுத்துத் தமிழர்களின், தொல்சமய வழிபாட்டை முற்றிலும் சிதைத்தன. ஆனால் அதனால் அழிக்கமுடியவில்லை என்று ஆய்வாளர் முடிவுரைக்கிறார்.

புராண மூதாதையர்

‘அதிகாரம் மற்றும் ஆற்றல் வாய்ந்த கற்பனையானப் புராணக்கதை மாந்தர்களுடன், சத்தியர்கள் தம்மை இணைத்துக்கொண்டு தம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர்’ எனும் ரொமிலா தாப்பரின் கொள்கையை அடிப்படையாக வைத்து மனுநீதிச் சோழன், சிபிச் சக்ரவர்த்தி, அகத்தியன் ஆகிய பாத்திரங்களை ஆய்விற்கு உட்படுத்துகிறார். சைவமும் வைணவமும் ஆகம விதிகளை ஏற்றுக்கொண்டு வைதீகச் சார்புடைய மதமாக ஈண்டு மாறிப்போனக் காலகட்டத்திலேயே மனுநீதிச்சோழன் அடையாளப்படுத்தப்படுகிறான். புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவைகளில் அம்மன்னன் குறித்தப் பதிவு இருந்தாலும் முதன் முதலில் குலோத்துங்க சோழன் ஆட்சியின்கீழ் வாழ்ந்த சேக்கிழாரே, அவனுக்கு மனுநீதிச் சோழன் என்ற பெயரும் திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற முகவரியையும் கொடுக்கிறார்.

இதன் பின்னரே கோயில் சிற்பங்கள், இலக்கியங்கள் போன்றவைகளில் ஆழமானப் பதிவுகள் காணப்படுகின்றன. சோழர்களின் ஆட்சியில் மனுவே வேதநூலாகவும் நீதி நூலாகவும் கருதப்பட்டமையாளும், தம் மன்னனின் குலத்தைச் சிறப்பிக்கும் பொருட்டும் இவ்வடையாளத்தைச் சேக்கிழார் ஏற்படுத்திக்கொடுத்தார் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். சோழர்கள் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரியார் இவனைப் புராண மன்னன் என்று குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட அரச வம்சத்தைச் சேர்ந்த அடையாளம், வள்ளலாரால் (1854) ‘மனுமுறைக் கண்ட வாசகம்’ எனும் நூலின் வழி ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்குமான அடையாளமாக மாறிப்போனார். பலிவாங்கும் எண்ணத்தை விதைக்கும் எளிய கதையாடலை நீதியின் வடிவமாக்கி இன்று உயர்நீதி மன்றத்திலேயே அம்மன்னனுக்குச் சிலை வைத்திருப்பது வரலாற்று ஆபத்தென ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இதேபோல் புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திரு அவதாரப்படலம் ஆகியவைகளில் குறிப்பிடப்படும் மன்னனான சிபியும் புராண மூதாதையே. அவன் வாழ்ந்ததற்கானச் சான்றுகளும் கிடைக்கவில்லை. இவர்களிருவரும் சோழர் வம்சத்தை உயர்வுபடுத்த உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்களே என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.


தமிழர்களின் வரலாறு, மருத்துவம், இலக்கியம், இலக்கணம் ஆகிய அனைத்திற்கும் முன்னோடியாக அகத்தியரை முன்னிலைப் படுத்துகின்றனர். இதனை ‘இறையனார் களவியலுறை’ முன்னிறுத்துகிறது. இப்பண்பு தமிழர்களுக்குத் தனித்துவமில்லை, ஆரியராகிய அகத்திய முனிவன் கற்பித்ததே என்ற மாயயை உருவாக்குவதே என்கிறார். சிவத்தம்பி ‘அகத்தியர் தொன்மம் தமிழர்களை இந்துவயப்படுத்தும் பண்பே என்கிறார். சாசனம், கல்வெட்டு, இலக்கியம் போன்றவைகளில் அடையாளப்படுத்தப்படும் அகத்தியன், புராண மூதாதையே என்கிறார். சமயச் சார்பில்லாத சங்க இலக்கியங்கள், அவைதீகச் சமயங்களின் பின்னனியில் உருவான காவியங்கள், இலக்கியங்கள் தோன்றிய தமிழ் இலக்கிய மரபினைச் சைவத்தோடு இணைக்கும் தொன்மமாகவே அகத்தியர் அடையாளப்படுத்தப்பட்டார்.

”வடபால் முனிவன் தடவினுள் தோன்றி”

(புறம்.201)

என்பதற்கு உ.வே.சா. சம்பு எனும் முனிவன் என்கிறார். ஐராவதம் மகாதேவன் இவரை அகத்தியரே என்கிறார். தடவு எனும் சொல் பானையைக் குறிப்பதாகும். சங்க இலக்கியங்களில் அதற்கு சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டு, சிந்துவெளி அழிவிற்குபின் தமிழர்கள் / திராவிடர்கள் தெற்கில் பெயர்ந்து வந்ததன் தொன்மமே என்கிறார். இதனை ஏற்க மறுக்கும் ஆய்வாளர் ஆரியரான அகத்தியரை, திராவிடராக மாற்ற முயற்சிப்பதுவே இது என்கிறார். இதற்கான உரிய கருத்தியல் வாதங்கள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை. வடநாட்டில் இரு இடத்தில் அகத்தியர் சிலையும் கோயிலும் இருப்பதாக மேற்கோள் காட்டும் ஆய்வாளர் அதுகுறித்துப் பெரிதும் விவாதிக்காது கடந்து சென்றுவிட்டார். ஐராவதம் மகாதேவனின் கருத்தை மறுப்பதற்குரிய போதியத் தரவுகளோ விவாதமுறைகளோ இவற்றுள் இல்லை. வைதீகச் சமயத்தின் தாக்கமே புராண மூதாதையர்களை உருவாக்கக் காரணமாயின. தொல்சமய இறந்தோர் வழிபாட்டுச் சிதைவின் மாறுதல் வடிவங்களே இவையென ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இறந்தோர் வழிபாட்டின் எச்சம்

சைவ, வைணவக் கடவுளர்களின் வழிபாடும் ஊர் தெய்வம், கிராம தெய்வம், குல தெய்வம் ஆகியவைகளின் வழிபாடுமென இருசமய வழிபாடுகள் தமிழர்களிடத்தில் தற்போது உள்ளதென ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இதனை ஸ்ட்டுவர்ட் பிளாக் பேர்ன் என்ற ஆய்வாளர் வெகுசன இந்துத்துவம் (Popular Hinduism) எனக் குறிப்பிடுகிறார். மேலை நாடுகளில் கிறித்தவத்திலிருந்து பிரிந்த பிற வழிபாட்டு மரபினரை வெகுசன கிறித்தவம் (Popular Christianity) என அடையாளப் படுத்துவதைபோல இதனையும் குறிப்பிடுகிறார். அதற்கும் இதற்கும் வேறுபாடுண்டு எனக்குறிப்பிடும் ஆய்வாளர், வைதீக சமயக் கடவுளர்களுக்கும் நாட்டார் கடவுளர்களுக்கும் எந்தவித ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று அழுத்தமாக மறுப்புரைக்கிறார். ஊர், குல, கிராமத் தெய்வங்களை நாட்டார் தெய்வம் என அழைக்கவெண்டுமெனவும் வலியுறுத்துகிறார்.
நாட்டார் சமயக்கடவுள் வழிபாட்டிற்கு அடிப்படை உயிர் பலி கொடுத்தலாகும்.

மதுப்படையல், சாமியாட்டம் ஆகியவைகளும் இங்கு நிகழும். இது சங்க இலக்கிய தொல்சமய எச்சமென ஆய்வாளர் அடையாளப்படுத்துவது முக்கியமானது. தமிழக நாட்டார் கடவுளர்களும் இறந்தோர்களாகவே உள்ளனர். அவற்றிலும் போர்க்கருவிகளால் தாக்குண்டு இறந்தோரும், அபாய மரணமடைந்தோறுமே உள்ளனர். இது தொல்சமய வழிபாட்டின் எச்சமே. இவைகளை நிறுவனச் சமயக் கடவுளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக இறந்தோரை வழிபடுதல், இறைச்சி படைத்தல், மது படைத்தல், உயிர்ப்பலி கொடுத்தல், ஆவி வயப்படல் போன்றவைகளை. இவைகள் அனைத்தையும் நாட்டார் சமயம் ஏற்றுக்கொள்கிறது. இதே வழிபாட்டு முறை இங்குள்ள

இசுலாத்திலும் கிறித்தவத்திலும் பாதித்துள்ளமையையும் விளக்குகிறார்.
தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு என்பார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. இதுபோன்ற நூற்களே அக்கூற்றினை உறுதிசெய்கின்றன. பெருமதங்கள் தன்னுடைய சர்வாதிகார வெளியை நீட்டிக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய ஆய்வுகள் இன்றியமையாததாகும். சமகாலச் சூழலில் தாய்மதம் என்ற கற்பிதங்கள் உலவுவதைக் காணமுடிகிறது. தமிழர்களின் தாய் மதம் என்ற ஒன்று இல்லை. மாறாக தொல்சமயத்தை அதாவது இறந்தோர் வழிபாட்டைச் சமயமாக, விழுமியமாக முன்னிறுத்தும் நூலாக இது அமைகிறது. ஏற்றத்தாழ்வற்ற வாழ்முறை, வழிபாட்டுமுறை போன்றவைகளை அடையாளப்படுத்தும் நூல் இது. தமிழர்களின் பண்பாட்டு வெளிகளில் பரவியிருக்கும் நரம்பு மண்டலங்களாக உணவு, வழிபாடு, பழக்கவழக்கம், கொள்கை போன்றவைகளை வெளிக்காட்டும் நூலாக இதனை இனங்காணலாம். ஆய்வாளர் மேற்கோள் சான்று காட்டும் பலவிடங்களில், அதற்குரிய சான்றெண் விளக்கம் அளிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

குறிச்சொற்கள்

மேல் செல்