கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கவிஞன் – தரகன் – விற்பனைப் பிரதிநிதி

ராணி திலக்

பகிரு

ஒரு போதும்  வராத அலைபேசி  அழைப்புக்காக வீணாகக் காத்திருக்காதே

- ஜியோங் ஹோ-சியுங்

தொலைக்காட்சி  என்னை ஐந்து நிமிடங்களில் நோய்வாய்ப்படுத்தும்.  ஆனால் ஒரு மிருகத்தை  மணிக் கணக்கில்  என்னால் பார்க்கமுடியும் 

- சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி

டிஜிட்டல் உலகத்தின் மீது மிகுந்த சந்தேகத்துடன் இருக்கிறேன். டிஜிட்டல் உலகம் செவிட்டுத்தன்மை உடையது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அங்கே ஒலி இல்லை.

– w.s.மெர்வின்

இப்போது அனைத்தும் டிஜிட்டல் யுகம் ஆகிவிட்டது. பெரும்பாலான படைப்பாளர்கள் டிஜிட்டல் யுகத்தின் அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது ஒன்றைத் தொடர்ந்தபடி, கண்காணித்தபடி வாழ்ந்துவருகிறார்கள்.  ஆரோக்யமற்ற, பரபரப்பான டிஜிட்டல் ஊடகங்களில் தன்னைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகான டிஜிட்டல் யுகத்திற்கு முன் நாம் எவ்வாறு இருந்தோம்? என்பதைச் சிறிது நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

டிஜிட்டல் யுகத்திற்கு முன் சுதந்திரம் அதிகம் இருந்தது. ஒருவரை ஒருவர் அலைபேசியில் பேசிக்கொள்ளமுடியாது. கடிதம் வழியாகவே அனைத்தும் நடந்தன. ஒரு கவிதையை, ஒரு கதையை, விமர்சனத்தை எழுதிச் சிறுபத்திரிகைகளுக்கு  அனுப்புவது, அந்தப் பிரதி வந்தபின் தன் படைப்போடு, மற்றவர்களின் படைப்புகளையும் வாசித்து  நமக்குள் உரையாடுவது நிகழ்ந்தது.  ஒரு படைப்பாளியைப் பார்க்க விரும்பினால், எந்தவித முன்னறிவிப்புமின்றிப் போய்ப்பார்த்து வந்தோம். வரவேற்பும் இருந்தது. குதூகலத்துடனே வாழ்ந்தோம்.  புத்தகத்தை வெளியிடுவது பற்றியோ, விளம்பரப்படுத்துவது பற்றியோ, அதற்கான விருது பெறுவது பற்றியோ எந்தக் குயுக்தி புத்தியும்  அதிகம் இருந்ததில்லை. அப்படி செயல்படுபவர்களை மெல்லிய புன்னகையுடன் விலக்கினோம்.  ஒரு படைப்பாளியை அவனுடைய படைப்பைக் கொண்டே  மரியாதை செலுத்தினோம்.  தன்னந்தனியாக, சுதந்திரமாக இருந்தோம்.  கொஞ்சம் அடக்கமும், படைப்பின்மீது நிறைய நேர்மையும் இருந்தது.

இப்போது அப்படி இல்லை. டிஜிட்டல்யுகத்தின் அதிக ஊடகமான முகநூல் தொடங்கி அனைத்துவிதமான ஊடகங்களிலும் அடிமைகள்  ஆகிவிட்டோம். பரபரப்பும் தெளிவின்மையும் அதிகம் கூடிவிட்டது.  ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறோம்.. குற்றம் சாட்டுகிறோம்… கட்டி அணைக்கிறோம். பிறகு பிரிந்துகொண்டு, சண்டையிடுகிறோம். நிதானத்தையும் சுதந்திரத்தையும் நாமாகவே இழந்துவிட்டோம். எப்படி?

இதுவரை அறிமுகம் இல்லாத ஒரு கவிஞரைத் தொடர்புகொண்டு அழைக்கும் ஒரு நெருக்கடி நமக்கு ஏன் ஏற்படுகிறது?  தொகுதி வந்த சில மாதங்களிலேயே,  தொகுதி குறித்துப் பேசவேண்டிய நிகழ்வை நாமாக  முன்வந்து செய்வதை நாம் என்னவென்று சொல்வது?  நம் படைப்புக்காக,  நாமே  ஒரு தரகராக மாறும் சூழல் ஏன் உருவாகிறது? நாம் ஏன் உருவாக்கிக்கொள்கிறோம்?   எனக்குத் தெரிந்தவரை, ஒரு படைப்புத்தொகுதி வந்தபின், குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்குப் பிறகே, அதன்மீதான கருத்து,  பரவலாகத் தெரிய வரும். அதைப் பற்றிய விரிவான உரையாடல் ஒரு வருடத்திற்குப் பிறகே நிகழும்.  நம் புத்தகம் பற்றிய உரையாடலை  மிக உடனடியாக, செயற்கையாக, வேகமாக, பரபரப்பாக, பரபரப்பு ஆக்க, ஒரு கவிஞன் ஏன் அதி நுட்பமாகச் செயல்படுகிறான்? என்ற கேள்வி எழுகிறது.  முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கவிதை எழுதிக் கொண்டே நம்  இருப்பை உறுதிப்படுத்துவது, விளம்பரப்படுத்துவது,  பரபரப்பாக்குவது,  தொகுப்பின் அட்டையைப் பதிவிடுவது,  அதையும் பரபரப்பாக்குவது, பிறகு தொகுதி வந்து  விட்டதைப் பதிவிடுவது,  அதைப் பற்றிய மற்றவர்  எழுதிய ஆதரவான  கருத்துகளை   மட்டும்  பதிவிடுவது,  அதற்கு  வெளியீட்டு விழா நடத்துவது,  விமர்சனக்கூட்டம்   நடத்துவது,  விருதுக்குப்  பரிந்துரை  செய்ய   வைப்பது, விருது பெறுவது,  விருதுபெரும் விழாவில் அசடு வழிய அமர்ந்திருப்பது என்கிற தொடர் செயல்பாட்டால் நாம் எதை அடைகிறோம்?   நம்  பயணம்தான் என்ன?  என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஒரு கவிஞனின் பணி,  கவிதை எழுதுவது மட்டுமே. அதைவிட்டுவிட்டு,  இனம், ஜாதி, வர்க்கம் என்ற போர்வையில், ஒரு கவிஞன்  செயல்படும்பொழுது, அவன் எழுத்தின்மீது பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது.  எழுதியதை விற்பனை செய்யும் தந்திரம் வந்தபிறகு அவன்  எழுத்தாளனாக இல்லாமல், தரகனாக,  விற்பனைப் பிரதிநிதியாக மாறும் அவலம்தான் நிகழ்கிறது.  நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பரிந்துரைப்பின் பேரில்   ஒரு கவிஞன்  அல்லது  ஒரு படைப்பாளி விருது பெறும்போது, அவன் புத்தகம், ஒரு பிச்சைப்பாத்திரமாகிவிடுகிறது. அவனும் பிச்சைக்காரனாகிறான். அந்த ருசியில், அவனுடைய அடுத்தடுத்த புத்தகங்கள்  இன்னும் பெரிய பிச்சைப்  பாத்திரங்களாக விரிகின்றன.  இதற்கு எல்லாம் காரணம்,  தன் இருப்பை உறுதிசெய்துகொள்வதா? அல்லது விருது பெறுவது, பிரபலம் ஆவது என்பது வெகுஜன வாய்ப்புக்கான நுழைவாயிலா? என்று தெரியவில்லை. விருது என்பது நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே. சார்த்தர், இன்குலாப் இன்னும் மற்ற சிலர் ஏன் விருதை மறுத்தார்கள்?  என்ற கேள்வி நமக்குள் முளைக்கத்தான் வேண்டும்.

அன்றாடப் பணிகளைக் கடந்து, நாம் நவீன கவிதை குறித்து யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டே இருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்தபடி இருக்கிறோம்.   தொலைக்காட்சியில், நவீன கவிதைப் பற்றித் தெரியாத தமிழகப் பார்வையாளர்களுக்கு,  நம்மையும் நம் எழுத்தையும் நவீன கவிதையைபும் பற்றிப் பேசுகிறோம். நவீன கவிதைக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை? நாம் யாரிடம் பேசவேண்டுமோ அவர்களிடம் பேசுவது இல்லை. யாரிடம் பேசவேண்டியது இல்லையோ, அவர்களிடம் மூச்சுவிடாமல் சாலையில் நடந்தபடி, பூங்காவில் நடந்தபடி தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருக்கிறோம்? வானொலியில் கத்திக்கொண்டு இருக்கிறோம்?  இதற்காக நாம் வெட்கப்படுவதில்லை. தன் படைப்புக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத, படைப்பின் விழுமியத்தை  அறிய இயலாத வெகுஜன ஊடகத்தில் நம் கவிதை வழியாகப் பிரபலப்படுத்திக்கொள்ள ஏன் துடிக்கிறோம்? அதிகாரத்தை,  நிறுவனத்தை எதிர்த்து எழுதியபடி, அதே அதிகாரத்தின் நிறுவனத்தின் மடியில் ஒரு குட்டி நாயைப்போல் வாலைச்சுருட்டிக்கொண்டு ஏன் காவல் காக்கிறோம்?

நான் எதற்காக எழுதுகிறேன்? யாருக்காக எழுதுகிறேன்? மோசமான சமூகத்திற்கு எதிராக என் படைப்பின் செயல்பாடுதான் என்ன?  என்னால் ஏன் மௌமாக இருக்கமுடிவதில்லை? ஏன் போலியாகக் கொந்தளிக்கிறேன்? என்னையும் என் எழுத்தையும் ஏன் விளம்பரத்திக்கொண்டே இருக்கிறேன்? என் புத்தகத்தில் ஏன் மற்ற எழுத்தாளர்களின் புகழுரைகளைச் சேர்க்கிறேன்?   வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் விருதுக்காகவும் ஒரு ஆட்டைப்போல், ஒரு சொறிநாயைப்போல், ஒரு பன்றியைப்போல் ஏன் நான் அலைகிறேன்? நான் விரும்பாத, ஒரு அமைப்போ, ஒரு நிறுவனமோ தருகிற ஒரு விருதை ஏன் என்னால் மறுதளிக்க இயலவில்லை? விருதை ஏன் விரும்புகிறேன்? என்ற பல கேள்விகளை நமக்குள் நாம்  எப்போதும் கேட்டுக்கொள்வதில்லை. 

ஒரு படைப்பாளி எப்போதும் படைப்பாளி மட்டும்தான். தன்னுடைய படைப்புக்கு அவன் தரகனோ, விளம்பரதாரனோ, விற்பனைப் பிரதிநிதியாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை.  அவனுடைய வேலை எழுதுவது மட்டுமே.  தொடர்ந்து ஒருவன் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது ஒரு நோய். இடைவிடாமல் பேசுவது, பேசாமலே இருப்பது, விழித்துக்கொண்டே இருப்பது, தூங்கியபடியே இருப்பது, தொடர்ந்து மலம் கழிப்பது ஒரு நோய் எனில், தொடர்ந்து நம்மையே நாம் பேசிக்கொண்டிருப்பது, பேச வைப்பதும் ஒரு நோய்தான்.  அந்த நோயே நம்மைத் தீர்த்துவிடும்.  ஏறக்குறைய ஒரு சவமாக நம்மை மாற்றும் களமாகத்தான் இப்போதைக்கான டிஜிட்டல் உலகம் திகழ்கிறது.

Facebook, youtube, twitter, Instagram போன்ற சமூக ஊடகங்களின் மாயைகளுக்கு நாம் ஏன் அடிமையாகிவிட்டோம்.? அதை நமக்கான ஒரு கருவியாக ஏன் மாற்றிக்கொண்டோம்?

அப்படியானால் எப்படி அவற்றைப் பயன்படுத்துவது? என்ற கேள்வி எழலாம்.

சமீபத்தில்  அகுதகாவாவின் சுழலும் சக்கரங்கள் கதைத்தொகுதியில் டோக்கியோ குறித்த கதையை வாசித்தேன். ஏன் அக்கதையில் அவர் ஈடோ  காலத்தைக் குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் வரவே, பிறகு இணையத்தில் தேடினேன். போரே வேண்டாம் என்கிற, கலையையும் பண்பாட்டையும் கொண்டாடுகிற காலமாக ஈடோ காலத்தின் மையம் அமைகிறது. தன் கதையை அக்காலத்தின் கொண்டாட்டத்துடன் இணைப்பதை  இணையத்தின் வழிதான்  புரிந்துகொண்டேன்.   ஹோகுக்குரிக்குவின் பெண் கதையில் வரும் அகுதாகவாவின்  காதலியின் முகத்தையும் இணையத்தில்தான் பார்த்தேன்.  எவ்வளவு அழகு!  எவ்வளவு வசீகரம்!  சபரிநாதனின் அல்ச்சி கொம்பாவில் வரும் கொம்பாவின் ஓவியத்தை இணையத்தில் தேடிப் பார்த்த பின்பே கவிதையை இன்னும் ஆழமாகப் உணரமுடிந்தது. வி.என்.சூர்யாவின் சாரங்கிக் கவிதையைப் புரிந்துகொள்ள, சாரங்கியைக் கேட்டபின்பே அதிகமாக உணர்ந்துகொள்ளவும் முடியும்.  அதாவது ஒரு படைப்பில் உள்ள விஷயங்களை, டிஜிட்டல்  ஊடகங்களைக் கொண்டு ஆழப்படுத்திக்கொண்டேன். ஏன் பார்க்கவேண்டும், அவசியமா? என்று கேட்கலாம். இந்த டிஜிட்டல் ஊடகங்களை நீங்கள் உங்கள் சுயத்திற்காக, தம்பட்டம் அடித்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும்போது, நான் ஆழமான வாசிப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதே என் பதில்.

முகநூல் நம்மைப் பைத்தியம்போல் பேசவைக்கிறது. ஒரு துயரமோ, மகிழ்ச்சியோ, கோபமோ எதையும் அது, உங்களைக் கட்டுப்படுத்தாமல்  பதியவைக்கிறது. அது விரிந்துகொண்டே இருக்கும் ஒரு சிறிய குப்பைத்தொட்டி.  அதில் நீங்கள் குப்பையைப் போடலாம். குப்பையையும் பொறுக்கலாம்.  நீங்கள் யார் என்பதை அதுதான் முடிவுசெய்கிறது. உங்களைத் தனிமைக்குள் செலுத்துவதே இல்லை.  ஒரு வருடமாக சமூக ஊடகங்களில் உங்களின் பங்களிப்பை நீங்களே தணிக்கை செய்யுங்கள். நீங்கள் உங்கள் அலப்பறைக்காக மாறி இருப்பதைக் காண்பீர்கள். ஓர் அனுபவம் பெறுவது, அதை உள்ளுக்குள் உரையாடுவது, பிறகு எழுதலாமா? வேண்டாமா? என்று யோசிப்பது, பின்பு நிதானமாக எழுதுவது, எழுதியதைத் திரும்ப திரும்ப வாசிப்பது, பின்பு திருத்துவது, பின்பு வெளியிடுவது என்கிற எந்தவிதமான பொறுமையையும் காத்திருப்பையும் டிஜிட்டல் உலகம் தருவது இல்லை.  அவசரத் தன்மையும், கட்டுப்பாடற்ற வேகத்தையும் தந்துவிடுகிறது.  எதையாவதை எழுத வைக்கிறது. எழுதுகிறோம். அது உண்மை என்கிற போலியை உருவாக்குகிறது. நாம் எழுதும் எழுத்தை அதி உன்னதமானது என்று நம்ப வைக்கிறது.

சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்,  நம்மிடையே  நிதானமும் உரையாடலும் இருந்தன. காத்திருந்தோம். தாமதாக எழுதினோம். அதில் ஓர் உண்மை இருந்தது. பாவனை இல்லை.  எழுதுவதற்கான சுதந்திரமான, மோசமான களங்கள் வருவதற்கு முன் நம்மிடம் இருந்த செல்ப் எடிட்டிங், ஏன் இப்போது இல்லை என்பதை யோசித்துப் பார்ப்போம்.  உண்மையில் முகநூல் ஒரு வெறும் பார்வையாளனை மட்டும்தான்  உருவாக்குகிறது.  நீங்களும் ஒரு பார்வையாளனாக மாறியும் விடுகிறீர்கள்.  உங்களை நோயாளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்,  சுய அரிப்பால் உங்கள் தோல் உரிந்து இரத்தம் சொட்டுகிறது.   நீங்கள் ஒருவரைப் பின்தொடர்ந்து கண்காணிக்கிறீர்கள். அதே போன்று ஒருவர் உங்களைப்   பின்தொடர்கிறார்.  நீங்கள் உங்களை இல்லாமல் ஆக்கிக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கான விளம்பரக் களமாக டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்திய நீங்கள், ஏன் மற்றவர்களின் படைப்புகளைப் பற்றி டிஜிட்டல் ஊடகங்களில் அதிகம் பேசுவதே இல்லை.  நாம் வாசித்த கவிதைகளை, சிறுகதைகளை, நாவல்களை, விமர்சன நூல்களைக் குறித்துத் தனியாக யுடியூப்களில் நாம் ஏன் வெளியிடுவதில்லை? குறைந்தபட்சம் நம்முடைய எழுத்துக்களையாவது அதில் பதிவிடலாமே!  சமூக ஊடகங்களை நமக்கான அலப்பறையாக மாற்றுவதற்குப் பதிலாக, மற்றவர்களின் படைப்புகளைப் பேசும் களமாக மாற்றவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, நம் சுயத்தை இல்லாமலாக்கும் டிஜிட்டல் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறுவதே, எழுத்தாளன் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழி.  மெர்வின் சொல்வதுபோல் “உங்களுக்கான ஒலி இருப்பதே இல்லை. டிஜிட்டல்  உலகத்தில்  இருந்து  நம்மைத் துண்டித்துக் கொண்டால் மட்டுமே நம்மால் நம்முடன் உரையாடமுடியும்”.   பரபரப்பிலிருந்து விலகி இருந்தால் மட்டுமே நம்மையும் நம் சமூகத்தையும் அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கமுடியும். நம்மால் எழுத்தின் வழியாக ஜீவித்து இருக்கமுடியும்.  நகுலன் சொன்னதுபோல், தனியாக வாழத்தெரியாதவன் எழுத்தாளனே இல்லை.

இங்கு நான் கவிஞன் என்று குறிப்பிடுவது கவிஞனை மட்டும் இல்லை. அது ஒரு சிறுகதை ஆசிரியனை, நாவல் எழுதுபவனை, கட்டுரையைத் தயார் செய்பவனை, விமர்சனக் கூச்சலிடுபவனையும் குறிக்கிறது.

குறிச்சொற்கள்

மேல் செல்