கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கலாச்சார காலனிய மையம் அறுக்கும் சிவகாமியின் புதினங்கள்

ஜோ.செ. கார்த்திகேயன்

பகிரு

பார்ப்பன இலக்கியம், பார்ப்பனரல்லாத இடைச் சாதி இலக்கியம், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற சாதிய அடுக்குகளில் வகைப்படுத்தி வாசிக்கப்படுகிறது இலக்கியம். இவற்றில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்களாக அடையாளங் காணப்படுபவை, ஆரியக் கலாச்சாரக் காலனியாதிக்க வடிவங்களாக அறியப்படும் சாதிய அடுக்கதிகாரங்களையும் மத நிறுவனத்தின் பெயரில் நிகழ்த்தப்படும் தீண்டாமை சார்ந்த புனைந்துரை அதிகாரங்களையும் அவை ஐரோப்பியப் புவியியல் காலனியாதிக்க வடிவங்களோடு கை கோர்த்து விளிம்புநிலை மக்களின் மனங்களை மேலாண்மை செய்கிற கருத்தியல் ஆதிக்க அதிகாரங்களையும் சுதேசிய அரசு இயந்திரத்தின் பார்ப்பனவயப்பட்ட மனு தர்ம ஆட்சியதிகாரத்தின் நவீனத் தீண்டாமை வடிவங்களையும் பேசுபொருளாக்குகின்றன. அவ்வதிகாரமையங்களுக்கு எதிரான கலகக்குரல்களோடு தலித்
விடுதலையை மையப்படுத்தி, சமூகச் சமனிலைப்படுத்தலுக்கான போராட்ட அரசியலை முன்னெடுக்கும் இலக்கியங்களாகவும் இருக்கின்றன.

தன் வரலாறுகளாகவும் தன்னின வரலாறுகளாகவும் அடையாளங்காணப்படும் அவ்விலக்கியங்களில் பார்ப்பன, பார்ப்பனரல்லாத சூத்திர இலக்கியங்களில் தொழிற்பட்டிருந்த சாதியத் தீண்டாமைக் காலனிய வடிவங்களுக்கு எதிரான கலகக்குரல்கள் (டேனியல், பூமணி, சோ.தர்மன், இமையம், ராஜ்கௌதமன், அறிவழகன், அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, போன்றோரின் படைப்பாக்கங்கள்) சமூகச் சமத்துவத்திற்கான குரல்களாக வெளிப்படுகின்றன. அத்தகைய இலக்கியங்களில் வெளிப்படும் பெண் விடுதலை ஆண் பார்வையிலான ஒடுக்குமுறையின் வடிவங்களை நவீனப்படுத்தியதாக இருக்கின்றது. மொழியாடல்களில் ஆணாதிக்கம் மட்டுப்படுதலுக்கான குரல்கள் வெளிப்பட்டதே ஒழிய பால்நிலைச் கலாச்சாரக் காலனிய மையம் அறுக்கும் சிவகாமியின் புதினங்கள் சமத்துவம் முழுமையாகப் பேசுபொருளாகவில்லை.
இதை உணர்ந்த பெண் படைப்பாளிகள் தங்கள் நாவல்களில் சாதிய ஆதிக்க அதிகாரங்களையும் ஆண் ஆதிக்கத்தின் நுண்ணரசியல் வடிவங்களையும் பேசுபொருளாக்கிப் புனைய முற்பட்டனர். இதனை, “தலித்தியமும் பெண்ணியமும் சேர்ந்த பெண் படைப்பாளர்களின் எழுத்துகள், எங்களுக்கும்கூட ஆண்களின் பார்வையிலிருந்து மாறுபட்ட அவர்களின் பார்வையை அனுபவத்தைப் புரிய வைத்தது.” (தடம், ப.94) என்ற அர்ஜூன் டாங்ளேயின் கருத்து தெளிவுபடுத்துவதாய் உள்ளது.

தமிழ்ச்சூழலில், ஆண் பார்வையிலான பெண் விடுதலையில் இருந்த குளறுபடிகளை மையமறுத்து பெண்விடுதலைக்கான குரல்களை தலித் பெண் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளில் முன்வைத்தனர். (அவர்களில் ப.சிவகாமி, பாமா, சு. தமிழ்ச்செல்வி போன்றோரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கன.) அத்தகைய படைப்பாக்கங்களில் பால் பேதமற்ற, தலித் விடுதலையை, தலித் பெண் விடுதலையை மையமிட்ட தலித் அரசியலை தொடக்கத்தில் பேசுபொருளாக்கினாலும் (பழையன கழிதலும், கருக்கு) பின்பு, சாதிய மத ஆதிக்க வடிவங்கள் பெண் சமூகத்தின் மீது நிகழ்த்தும் அதிகார வடிவங்களையும் ‘குடும்பம்’ என்ற ஆணாதிக்க மைய நிறுவனம் பெண் மீது கட்டவிழ்த்துவிடும் ஆணாதிக்க வடிவங்களையும் அதற்கெதிரான கலகக்குரல்களையும் படைப்பாக்கங்களின் வழி வெளிச்சப்படுத்தினர்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் சக்தியை ஒன்றுதிரட்டும் விடுதலைக்கான கலகக்குரல்களை முன்னிறுத்தி இலக்கியம் படைத்தனர். தலித் இலக்கியத்தின் மீதான இந்த வாசிப்புப் புரிதலை பின்காலனியப் பெண்ணிய வாசிப்புக்கு உட்படுத்தும்போது தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் உட்கிடையாகக்கொண்ட ஒடுக்கப்பட்டோர் படைப்பாக்கங்களில் வெளிப்படும் விளிம்புநிலை மக்களின் மீதான காலனியப்படுத்தல்களின் வடிவங்கள் அம்மக்களின் மனங்களை எத்தன்மையில் பீடித்துள்ளது என்பதை இனங்காணமுடியும். அப்பொழுதுதான் காலனிய நகல் மனிதர்களாக அந்நியப்பட்டுப்போன, அப்போன்மைச் சமூகத்தின் மனங்களை காலனிய நீக்கம் செய்வதற்கான தேவையையும் வழிமுறைகளையும் அடையாளங்காணமுடியும்.

அவ்வகையில் ப.சிவகாமியின் பழையன கழிதலும் (2013), ஆனந்தாயி (2015) என்ற இரு புதினங்களை பின்காலனிய வாசிப்புக்கு உட்படுத்தி அதன் செயற்தளத்தை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. ‘பழையன கழிதலும்’ நாவல் வெளி வந்த பின்பு அந்நாவல்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் கவனங்கொண்டு படைப்பாளி அவற்றிற்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் உண்மைத்தன்மையை உரசிக்காட்டும் உணர்விலும் விமர்சகர்களுக்குச் சமாதானம் ஏற்படுத்தும் பாங்கிலும் படைப்பாக்கம் செய்த ‘பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பு’ என்ற நாவலை தற்போது அடையாளம் பதிப்பகம் பழையன கழிதலும் நாவலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. அதனை இக்கட்டுரை கவனம் கொள்ளவில்லை.

பிரதிகளின் ஊடாட்டத் தளம்

‘பழையன கழிதலும், ‘ஆனந்தாயி’ ஆகிய நாவல்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக்கொண்ட கிராமங்களில் வாழ்கின்ற எளிய மனிதர்களின் வாழ்வியலை பின்புலமாகக்கொண்டு இயக்கம் பெறுகின்றன. இந்திய விடுதலைக்குப் பிறகான, தலித்துகள் தங்களின் அடிமை நிலையை உணர்ந்துகொள்ளத் தொடங்கிய, மறுக்கப்பட்ட கல்வியுரிமை பரவலாகப் பெறத் துவங்கிய காலகட்டங்களில் உயிர்ப்பிக்கப்பட்ட / வாழ்ந்துகொண்டிருந்த மூன்று தலைமுறை மனிதர்களைக் கதைப்பாத்திரங்களாகக்கொண்டு புனைவாக்கம் பெற்றுள்ளன. ‘பழையன கழிதலும்’ என்ற நாவல், தலித்மக்கள்மீது சாதிக் காலனிய அடுக்கதிகாரத்தையும் சுதேசியப் பின்னைக்காலனிய அரசு இயந்திரத்தின் அச்சாணியாக இயக்கம் பெறுகிற காவல்துறையின் அடக்குமுறை வடிவத்தையும் முன்வைத்து தலித்
அடையாள அரசியலைப் பிரதானப்படுத்துகிறது. அதிகாரத்தின் நுண்ணிய வடிவங்களை எதிர்த்து தலித்மக்கள் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்வதற்கான/ தலித் சமூக விடுதலைக்கான அரசியல் சார்ந்த கலகக்குரல்களையும் நடத்தைகளையும் விவரிக்கிறது.

இத்தகைய விவரிப்பின் ஊடாக இந்தியச் சமூகத்தில் காலனியாதிக்கத் தன்மைகொண்டு இயக்கம் பெறுகின்ற சமூகத் தந்தையாதிக்கமும் குடும்பம் எனும் தளத்தில் இயக்கம் பெறுகின்ற ஆணாதிக்கமும் காலனிய அடிமையாக பெண்ணை இருத்தி, அவள்
உடலை பாலியல் சார்ந்தும் உழைப்பு ரீதியாகவும் தொடர்ந்து சுரண்டிவருவதனைச் சித்திரிக்கிறது. ‘ஆனந்தாயி’ நாவல் விவசாயத்தை மையமாகக்கொண்ட அல்லது முதன்மைத் தொழிலாகக்கொண்ட கிராம நிலவுடைமைச் சமூகம் மெல்ல தொழிற் சமூகமாக, முதலாளியச் சமூகமாக மாறும்போது ஏற்படும் மாற்றங்களைக் குடும்பம் என்னும் தளத்தில் வைத்து சித்திரிக்கிறது. கிராம நிலவுடைமைச் சமூகமாகிய தந்தை தலைமை சமூகத்திலிருக்கும் ஆண், முதன்மைத் தொழிலான விவசாயத்தை விடுத்து‘கான்ட்ராக்டராக’ மாறி முதலாளியத்தின் கீழ், தொழில் செய்யப் புகுவதால் குடும்ப அமைப்பில் ஏற்படுகின்ற விரிசல்களை கவனப்படுத்துவதாகவும் புரிந்துகொள்ள முடியும். நாவலின் கதைப்பாங்கு பின்னைக் காலனிய சுதேசியப் பண்பாட்டு அடையாளங்கள் மீது விழும் கீறல்களை அதன் பாதிப்புகளை சுட்டிக்காட்டுகிறது.

சாதிய காலனிய சுரண்டல் வடிவமும், குடும்பக் காலனியத் தளத்தில் ஆணாதிக்க வடிவமும் விளிம்புநிலை மக்களின் உடல்களைச் சுரண்டி தன்வயப்படுத்திக்கொண்டு தன்னைச் செழுமைபடுத்திக்கொள்ளும் போக்கை விவரிக்கிறது. பாலியல் அத்துமீறல், (அத்தியாயம், 28) ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளங்களில் நிகழ்த்தப்படும் அத்தகைய ஒடுக்குமுறையின் வடிவங்களை புனைவாக்கம் மூலமாக ஆவணப்படுத்துகிறது. தலைமுறைகள் கடந்தும் தொடரும் பெண் ஒடுக்குமுறையின் வடிவங்களை மூன்று தலைமுறையினரின் பின்புலத்தில் விவரிக்கிறது.சமூக, குடும்பத்தளங்களில் இயக்கம் கொள்ளும் ஆணுக்கு இருக்கக்கூடிய பாலியல் சுதந்திரத்தையும் சுதந்திர வெளியற்று பெண் வதைப்புக்குள்ளாக்கப்பட்டு, தொடர்ந்து சுரண்டப்படுவதையும், குடும்பத்தளத்தில் வரையறையின்றி கட்டவிழ்த்து விடப்படும் ஆணதிகார வடிவங்களையும், அவ்வதிகார வடிவங்களில் சிக்கித்திணறும் பெண்ணின் இருத்தலையும் ‘ஆனந்தாயி’ நாவல் கதையாடுகிறது. குடும்ப அமைப்பில் தந்தை மட்டுமின்றி ஆண்பிள்ளைகளும் ஆதிக்க அதிகார குணம்கொண்டவர்களாக இருப்பதனையும் பெண் குழந்தைகள் அவ்வதிகாரங்களுக்குள் ஒடுங்கி, நடுங்கி, அழுது புலம்பி வாழ்வதனையும் (பக்.194 - 196) குறிப்பிட்டுக் காட்டுகிறது.

கதைவெளிகள்

ஆனந்தாயி நாவலில், வீட்டிலிருந்து வெளிச்செல்லும் நபர்கள் எவ்வளவு தூரம் சென்று வீடு திரும்புகிறார்களோ அவ்வளவே கதையாக்கம் பெறுகிறது. அவர்களின் புழங்குவெளி சுருங்கியதாகவே இருக்கிறது. பெரியண்ணனும் மணியும் மட்டுமே
வெளியில் அதிக தூரம் செல்பவர்களாக இருக்கின்றனர். எனினும் அவர்களின் புழங்குவெளியும் படைப்பாளியால் வரையறுக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. பெரியண்ணனின் வெளி, குடும்பம்தாண்டி (லெட்சுமியுடனான உடல் ரீதியான உறவுக்கானதாக) நீண்டாலும் மீண்டும் குடும்பத்துடன் இணைக்கப்படுகிறது. மணியின் புழங்குவெளி கல்லூரியாக இருந்தாலும் பீடி, சிகரெட், தண்ணி பழக்கங்களோடு வீட்டுக்கு வந்து சேர்கிறது. (தலித் மக்களின் நகரத்தோடான தொடர்பும் கல்லூரிகளுக்குள்ளான நுழைவும் சமூகத்தால் குறைகளாக, சீரழிவுக்கான குணங்களாக சுட்டப்படுகிற பழக்கங்களை விரைவில் கற்றுக்கொள்வதாக திறப்பாக இருப்பதாக படைப்பாளர்கள் பதிவுசெய்கின்றனர். ஆதிக்க சாதியினரிடம் அத்தகைய பழக்கங்கள் இவர்கள் மூலமே பரவலாக்கமாவதாகவும் ஆதிக்க சாதியினர், இத்தகைய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதாகவும் பதிவு செய்வதைக் காணமுடிகிறது. பெருமாள்முருகனின் ‘கூளமாதாரி’ நாவலில் ‘மொண்டி’யின் வழி கூளையனை, இத்தகையப் பழக்கங்கள் பீடித்துக்கொள்வதாகப் புனைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இமையத்தின் ஆறுமுகம் நாவலில் ஆறுமுகத்தின் அம்மா நகரத்துடனான தொடர்பிற்குப் பிறகு, சீரழிந்துபோவதாக சித்திரித்துள்ள மையம் இங்கு எண்ணத்தக்கது. இவை கிராமப்புற விளிம்புநிலை மக்களின் நகரத்தோடான தொடர்பு என்பதே சீரழிவிற்கானதாகத்தான் இருக்கிறது என்ற பொதுப்புத்தியை கட்டமைக்கக் கூடியது. இச்செயல்பாடுகள் “ஒருபின்ன அளவு பார்ப்பனியம் அனைவருள்ளும் இருக்கிறது. அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும்.” (அம்பேத்கர், சாதியை அழித்தொழித்தல், (ப.49) என்ற அருந்ததிராயின் கருத்தியலை நினைவுபடுத்துகிறது.) ஆக ஒரு நிலவுடைமைச்சமூக ஆதிக்கம் நிறைந்த குடும்பம் ஒன்றில் பெண் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறாள், உடலாலும் மனத்தாலும் எவ்வாறு சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் ‘ஆனந்தாயி’ நாவல் கதைப்படுத்துகிறது என புரிந்துகொள்ளலாம். அத்தகைய கதைப்படுத்தல்கூட விடுதலைக்கான பேசுபொருள் மங்கிய, “இன்றும் தலித் பெண்கள் நாளும் பாலியல் பலாத்காரத்திற்கும் அடிஉதைகளுக்கும் ஆளாகிச் சீர்குலைந்து வாழ்கின்றனர். இதைத்தான் ஆனந்தாயி நாவலின் வழி ஆசிரியர் சிவகாமி மிக எதார்த்தமாக படம் பிடித்துக்காட்டுகிறார்.” (1998, ப.151) என்று இரா.பிரேமா குறிப்பிட்டுக்காட்டுவதுபோல அமைந்திருக்கிறது. இந்தியச்சமூகத்தில் சாதியத்தீண்டாமை நிறுவனம் எவ்வாறு ஒரு சுரண்டல் நிறுவனமாக இருந்துகொண்டு தொழிற்படுகிறதோ அதுபோலவே இந்தியக் குடும்ப நிறுவனங்களும் சுரண்டல் நிறுவனங்களாக இருந்து பெண்மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. இது, “சுரண்டல் அமைப்பு எப்போதுமே தனக்கு மிகவும் தேவையான உகந்ததான தத்துவத்தை அல்லது அமைப்பை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு மற்ற அமைப்பு முறைகளை, தத்துவங்களை அழித்துவிடும் அல்லது குற்றுயிராக்கிவிடும்” (அர்ஜுன் டாங்ளே, ப.8) தன்மை கொண்டது. உடல் சார்ந்து பாலியல் ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் சுரண்டுவதோடு உளவியல் ரீதியாகவும் சுரண்டி, பெண்களை பண்டங்களாக ஆண்களுக்கேற்ற நுகர்பொருளாக மாற்றி தன்நிறைவு கொள்கிறது.

தன்னை வளமைபடுத்திக்கொள்கிறது. அத்தகைய சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆனந்தாயி என்ற பெண் சமூகக்குறியீட்டின் ஒற்றை அடையாளம் கொண்ட பிரதிநிதியின் வாழ்நிலையைத்தான் ப.சிவகாமி கதையாக்கம் செய்துள்ளார். ‘பழையன கழிதலும்’ நாவலின் கதை, காத்தமுத்து - இரண்டாவது மனைவி நாகமணி என்ற இருவரின் விடியற்காலைப் படுக்கையறையிலிருந்து தொடங்குகிறது. அத்தகைய காட்சிப்படுத்தல் அவ்விருவரின் பாலியல் வேட்கையும் கரைந்துபோன பாங்கை உணர்த்துவதாய் உள்ளது. அறையின் மூலையில்கிடந்த நாகமணியின் புடவையை காலால் தூக்கி, கையால் எடுத்துத்தந்த காத்தமுத்துவின் நடத்தைப் பதிவு, பெண் உடல் சார்ந்த ஆண்மனக் கட்டமைப்பை உணர்த்திவிடுகிறது. நிலவுடைமைச் சமூகத்தின் அறப்படி நிலத்தின் மீதான உரிமையும் சொத்தின்மீதான பாத்தியமும் மறுக்கப்பட்ட ‘தங்கம்’ என்ற பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட ‘பரஞ்சோதி உடையாரின்’ பாலியல் சுரண்டலும் அதனை ஒட்டி அக்குடும்பத்தார் ஏவிய வன்முறையும் அடுத்தடுத்த பக்கங்களில் வலி குன்றாது நிரப்பப்படுகிறது. கையறு நிலையில் செய்வதறியாது, தலித் தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ‘காத்தமுத்து’விடம் ஆதரவு வேண்டி வந்த தங்கம் அந்த தலித் தலைவனாலேயே சுரண்டப்படுவதை விவரிக்கும் பக்கங்கள் தலித் விடுதலை அரசியலில் புதையுண்டு கிடக்கும் ஆதிக்க நுகர்வு வெறியின் ஆணாதிக்கத் தன்மையை சித்திரிக்கிறது. இளங்கோவன் - லலிதாவின் சாதியம் கடந்த காதல், இதனை ஏற்காத லலிதாவின் தாய், வாதம் செய்யும் இடங்களும் பேருந்து பயணத்தின்போது ஏற்பட்ட ஊடலின் காரணமாக ‘சாதிப் புத்தியைக் காட்டிட்டியே’ என்று லலிதா ஏசியதும் இளங்கோவன் மனதில் உண்டான வலி, அவற்றைக் கடந்து இருவரும் மீண்டும் இணையும் தருணங்கள் சாதியம் நீர்த்துப்போவதற்கான அரசியல் செயல்பாட்டை உள்ளடக்கியதாக இருக்கிறது. (அத்தியாயம் 21) பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இருவேறு புனைவாக்கங்களின் கதை சொல்லும் முறைமை, படைப்பாளியின் நனவு மனச்செயல்பாடுகளால் வரையறுக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் செப்பமிடப்பட்டுள்ளமையை உணர்த்துவதாய் உள்ளது. நனவிலியின் உந்தல்களான அடிமை புத்தியையும் ஆதிக்க உணர்வையும் அமுக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளதான வாசக அனுபவங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

குடும்ப நிறுவன ஆதிக்கமும் பெண் ஒடுக்குமுறையும்

ஆனந்தாயி நாவலின் அதிகாரம் கைவரப்பெற்ற பாத்திரமாக முதன்மைபெறும் பெரியண்ணன், ‘லெட்சுமி’ என்ற பெண்ணை இற்பரத்தையாக வீட்டிற்கு அழைத்து வந்து தனது பாலியல் மோகித்தலுக்கான உடலாக்கியும் தனது குடும்ப வளர்ச்சிக்குத் தேவையான உடல் உழைப்பைச் செலுத்தும் உடலாக்கியும் சுரண்டுகிறான். தொடக்கத்தில் விபச்சாரியாக பெரியண்ணனுடன் விரும்பி வந்தவளானாலும் வீட்டிற்கு அழைத்துச்சென்று வைப்பாட்டியாக்கிக்கொண்டு சுரண்டலுக்கு உட்படுத்துவதை உணர்ந்த லெட்சுமி, அச்சுரண்டல் வடிவத்திற்கு எதிரான குரலை உயர்த்துகிறாள். பெண், குடும்பத் தந்தையதிகாரத்திற்கு எதிராகக்குரலை உயர்த்தி அரிவாளைக் கையில் எடுக்கும்போதுதான் ஊட்டி வளர்த்த ஆண் குழந்தை அப்பெண்ணை அடித்து உதைத்து வீழ்த்துவதை லெட்சுமி x மணி, பெரியண்ணன் நிகழ்வு (ப.162) வெளிப்படுத்துகிறது. குடும்ப அமைப்பில் தந்தை x மகன் என்ற இணை முரணாக்கம் மாற்றதிகாரம் தலைதூக்கும்போது ஒன்றிணைந்து ஓரதிகாரமாக வலுப்பெறுவது நிலவுடைமை சமூகத்தில் சாதாரணம் என்றாலும் குடும்ப அமைப்பிற்குள் பெண்ணிடமிருந்து கலகக்குரல் வெளிப்படும்போது அவ்வலிமை இரட்டிப்பாகிறது. தந்தையும் மகனும் லெட்சுமியை அடித்து உதைப்பதாகப் புனையப்பட்டுள்ள பகுதியில் ஆணியத்தின் பலகீனம் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். அதாவது, ஆண் பெண்ணை பலகீனமானவள், தீண்டத்தகாதவள் என்பன போன்ற வசைபாடல்களில்கூட ஆணிய மனதின் பதற்றம் நிறைந்த பலகீனம் உள்ளீடாக இருப்பதனை உணரமுடியும்.

அதாவது அவளை இழிந்தவளாகக் கட்டமைப்பதன் மூலமும் அதனை அவளே ஏற்றுக்கொள்ளும்படி செய்வதன் மூலமுமே ஆண் தன்னை உயர்ந்தவனாகவும் தூய்மையானவனாகவும் முன்னிறுத்த முயல்கிறான் என்பதனை உணரமுடியும். குழந்தைப் பருவத்திலிருந்தே ஆணுக்கு அதிகாரத்தையும் பெண்ணுக்கு அடிமைத்தனத்தையும் குடும்ப அமைப்பு போதித்து வருவதை ஆனந்தாயி நாவல் சுட்டிக்காட்டுகிறது. இப்பண்பு பாமாவின் புதினங்களில் இன்னும் நுட்பமாக வெளிப்பட்டுள்ளமையைக் காணமுடியும். இவை, சிமாமந்தா எங்கோசி அடிச்சி குறிப்பிடும் “பையன்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதற்கு பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கே நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். ஆனால் பையன்களுக்கு இதெல்லாம் கிடையாது. விரும்பத்தகுந்தவர்களாக நடந்துகொள்வது பற்றி நாம் பையன்களுக்குக் கற்றுக்கொடுப்பது இல்லை.

பெண்கள் கோபப்படக்கூடாது, கடுமையாகவோ பிடிவாதமாகவோ நடந்துகொள்ளக்கூடாது, இவையெல்லாம் கெட்டவை என்று பெண்களுக்கு சொல்லித்தருவதற்கு நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். ஆனால், அடுத்த பக்கம் திரும்பி ஆண்கள் இப்படி இருப்பதற்காக புகழ்கிறோம், அல்லது அவர்களை மன்னித்துவிடுகிறோம்…. நம்முடைய பெண் மக்களை வேறுவகையாக வளர்க்கவேண்டும். நம்முடைய ஆண்பிள்ளைகளையும் வேறு வகையில் வளர்க்கவேண்டும். ஆண் பிள்ளைகளை வளர்க்கும் முறையால் அவர்களுக்கு நாம் பெரும் தீங்கிழைக்கிறோம். ஆண்பிள்ளைகளின் மனிதத்தன்மையை வறண்டுபோகச்செய்கிறோம்.

ஆண்மை என்பதை மிகத் தவறாக வரையறை செய்கிறோம். ஆண்தன்மை என்பது ஒடுக்கும் சுவர்களைக்கொண்ட மிகக் குறுகலான ஒரு கூண்டு, இந்தக் கூண்டிற்குள் ஆண் பிள்ளைகளை நாம் அடைத்து விடுகிறோம்.” (2016, பக்.17 - 18). இக்கருத்தினை ஒட்டியதாக இருப்பதனை அறியலாம். குடும்ப நிறுவனம் செப்பனிடப்படவேண்டிய தேவையை அல்லது அந்நிறுவனத்தை தகர்த்து சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டிய தேவையை உணர்த்துகிறது. பெண் உடல்மொழியும் கலக மறுப்பும்
பசித்த உடனே உணவு உண்பது உயிர் நியதி.

ஆனால், அந்த பசித்த வயிறு ஆண் புசித்த பின்னரே உண்ணவேண்டும் என்கிறது ஆணாதிக்கச் சமூகநியதி. இந்த ஆணாதிக்கச் சமூக நியதியின் நுட்பத்தை படைப்பாளி, ஆனந்தாயி தன் மகளுக்கு போதிக்கின்ற ஒரு நிகழ்வின் வழி பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகின்றார். புனைவாக்கப்படி மேட்டாங்கிணற்றுக்குக் குளிக்கச் சென்ற ‘தனம்’ குளித்துவிட்டு பசியோடு வீட்டுக்கு வருகிறாள். வீட்டில் கறி விருந்து விருந்தினர்களுக்கு படைக்கப்படுகிறது. பசித்தவள் உணவு உண்ண எத்தனிக்கிறாள். அதற்கு ஆனந்தாயி, “பொம்பிளப் புள்ள, இப்படிப் பசி பொறுக்காம இருந்தியானா எப்பிடிம்மா? கொண்டாங்குடுத்தான் வீட்டுல எப்படிக் காலந்தள்ளுவ? ஆனந்தாயி
கடிந்தாள்.” (ப.192) என்று பசியை ஒடுக்க கற்றுக்கொடுக்கிறாள்.

சங்க இலக்கியக் காலந்தொட்டே நடைமுறையில் இருக்கும் இந்த இல்லற அறம், “பழங்கால / கல்வி அறிவற்ற சமூகங்களில் ஆண்களோடு பெண்கள் சமநிகராக உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமாகிவிடும் என்ற பயம்தான் இந்நடவடிக்கைகளுக்குக் காரணம். எல்லா ஆணாதிக்கச் சமுதாயத்திலும் அதிகாரம் செய்யும் ஆணே முதலிலும் திருப்திகரமாகவும் சாப்பிடுகிறான். இருபாலரும் சேர்ந்து சாப்பிட்டாலும் ஆணுக்குப்பெண்ணே பரிமாறுகிறாள்.” (மேலும் கட்டுரைகள், 2007, ப.422) என்ற கட்மில்லட்டின் கருத்தோடு ஒப்பவைத்து எண்ணத் தக்கது. இந்நெடிய வரலாற்றில், உடல் தேவை கட்டுப்பாடு என்பது பெண்களிடம் மட்டுமே முன்வைக்கப்படும் ஆணாதிக்கச் சமூகத்தின் நியதியை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தும் பொறுப்பில் பெண்ணை இருத்துகிற செயலை குடும்ப நிறுவனம் தொடர்ந்து செய்துவரும் நுண்ணரசியலை வெளிச்சப்படுத்துகிறது. அதோடு, நிலவுடைமைச் சமூகம் முதலாளியச்சமூகமாக மாறும்போது குடும்பங்களில் கிராமபுறங்களில் அந்நிலவுடைமைச் சமூகப் பண்பாடும் பழக்கவழக்கங்களும் ஒவ்வொன்றாய் கண்முன்னே உதிர்ந்துபோவதும் அவற்றை அறியமுடியாமல் மூன்றாம் உலக மக்கள் கேளிக்கைகளில் மூழ்கிப்போவதுமான காலமாற்றங்களைப் படைப்பாளி வெள்ளையம்மாக் கிழவி என்ற பாத்திரத்தின் ஒளி குன்றிய கண்கள் வழியே வாசகனையும் காணச்செய்கிறார்.

ஆனந்தாயி நாவல், குடும்ப நிறுவனத்தில் கட்டவிழ்த்து விடப்படும் ஆணாதிக்கத்தையும் பெண் ஒடுக்குமுறைகளையும் கடிவாளம் போட்ட குதிரைகளைப்போல பிரதானப்படுத்துகிறது. நேர்கோட்டுத் தன்மையிலான இந்தக் கதை சொல்லல்முறையில் சமூக தந்தையாதிக்கத்தின் அதிகார வடிவங்களையோ ஆரிய ஐரோப்பிய காலனியாதிக்க வடிவங்களின் நுட்பமான ஒடுக்குமுறைகளையோ கதைசொல்லி தவிர்த்துவிட்டார்.

காலனியநீக்கக் கலகக்குரல்

இந்தியச்சமூகம் அடுக்கடுக்கான காலனிய அதிகாரங்களின் ஆதிக்கப்பிடியில் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சிக்கி, அடிமைத்தனத்தையே தன்னுடைய இயல்பானதாக, சுதந்திரமானதாக (பண்பாட்டளவிலும் புவியியல் அடிப்படையிலும்)
மனதளவில் ஏற்றுக்கொண்டு அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்கும் அடிமையுடல்களாக இருந்து வருகின்றது. உளவியல் ரீதியாக மக்களை இப்படி அடிமைப் பண்பு கொண்டவர்களாக உருவாக்கிய காலனியத் தன்மை கொண்ட அரசமைப்புகள், இந்தியச்சூழலில் மன்னராட்சி காலத்திலிருந்தே தொடர்வதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது. அத்தகைய காலனியாதிக்க வடிவங்களில் முதன்மையானதாக ஆரிய, முகலாய, ஐரோப்பியக் காலனிய ஆக்கிரமிப்புகள் சுட்டப்பெறுவதனை அவதானிக்கமுடியும். இதில் ஐரோப்பியக்காலனிய வடிவத்தின் ஒரு பகுதியாகிய கிறித்தவ மதப் பரப்புதல் கீழைத்தேய நாடுகளில் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்.

இன்றைய பின்னைக் காலனியச்சூழலில் மூன்றாம் உலக மக்கள் தங்களைக் காலனிய நீக்கம் செய்துகொண்டு சுதேசிய அடையாளங்களை முன்னிறுத்தும் பொருட்டு அத்தகைய காலனியாதிக்க வடிவங்களையும் அவ்வடிவங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளையும் இனங்கண்டு தூக்கியெறிந்து வருகின்றனர். ப.சிவகாமி ‘ஆனந்தாயி’ நாவலில் கிராமப்புறங்களில் நுழைந்த கிறித்தவ மதத்தின் மீதான மக்களின் மனவோட்டத்தை பன்னிரண்டாவது அத்யாயத்தில் மட்டும் ‘அருள்’ என்ற பாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தினாலும் ஐரோப்பியக் கலாச்சாரக் காலனியம் எவ்வாறு மக்களை தன்வயப்படுத்தியுள்ளது என்பதனை நுட்பமாக விவரித்துவிடுகிறார். கிறித்தவ மதம் மாறிய
அத்தகைய போன்மை மனிதர்களை படைப்பாளி கேலிசெய்து புறந்தள்ளும் பாங்கு பின்காலனியக் கோட்பாட்டின் பின்புலத்தில் பெரிதும் விளக்கப்பட வேண்டியபகுதியாக இருக்கிறது. மதத்தை விளக்க முற்படும் படைப்பாளி அருள் என்ற பாத்திரத்தின் வழிபெரும் கலகத்தை மொழியாடல்கள்வழி அல்லது எளிமையான சொல்லாடல்கள்வழி நிகழ்த்திக்காட்டுகிறார்.

கதைப்படி, ஆனந்தாயியை தண்டிக்க / வெறுப்பேற்ற விரும்பும் ஆனந்தாயியின் மகள் அருள், கிறித்தவமதம் மாறிய செபாஸ்டியன் - தேவமணியம்மாள் வீட்டிற்கு ஜெபத்திற்குச் சென்று வந்து, தன்னுடைய வீட்டில் தொடர்ந்து அந்த ஜெபப் பாடல்களையே
முணுமுணுக்கிறாள். அதனைக் கேட்டு உள்ளுணர்வாகக் கோபம் கொண்டு “அடி வௌக்கமாத்தால! என்று ஊறுகாயெடுக்கப் போன ஆனந்தாயி கூப்பாடுபோட்டாள்.” “பேய்தாண்டி ஒன்னைப் பிடிச்சிருக்கு. இனிமே வேதக்காரன் வீட்டுக்குப் போ, சொல்றேன்... செருப்புப் பிஞ்சுடும்.” (ப.90) என்று தன்னுடைய மகளை வசைபாடுகிறார். இந்நிகழ்வு கிறித்தவமதத்தை உமிழ்ந்து தள்ளுவதான வசைமொழிகளாக இயக்கம் கொள்கிறது. இச்செயற்பாடு, “காலனிய நீக்கக்காலகட்டத்தின்போது மக்கள் இந்த மதிப்பீடுகளை கேலி செய்கிறார்கள். அவமதிக்கிறார்கள். வெளியே துப்பிவிடுகிறார்கள்.” (2002, ப.49) என்று ஃப்ரான்ஸ் பனான் குறிப்பிடுவதற்கேற்ப காலனிய நீக்கக் காலகட்டத்திற்கான கலகத்தன்மை பொதிந்த அல்லது விடுதலைக்கு சற்று முந்தைய காலவெளியைப் பதிவுசெய்வதாக இருப்பதனை உணரமுடியும்.

‘பழையன கழிதலும்’ நாவலில் காத்தமுத்துவின் மகள் கௌரிக்கும் காத்தமுத்துவிற்கும் இடையிலான கடிதம் எழுதும் நடத்தை சற்று ஊன்றி கவனிக்கப்படவேண்டியதாக இருக்கின்றது. கதைப்படி, காத்தமுத்து சொல்லச்சொல்ல கௌரி கடிதம் எழுதவேண்டும். அப்படி காத்தமுத்து சொல்லும்போது, ஜில்லா, தாலுக்கா போன்ற உருதுமொழிச்சொற்களை அதிகம் பயன்படுத்துகிறார். ஆனால் அவற்றை எழுத்தாக்கம் செய்யும் காத்தமுத்துவின் மகள் அந்த வார்த்தைகளை ஏட்டுத்தமிழ் நடைக்குமாற்றி எழுதிக்காட்டுகிறாள். இதனை வாசித்த காத்தமுத்து உள்ளூர மகிழ்ந்தாலும் புறநிலையில்
கடுகடுப்பானவராகக் காட்டிக்கொண்டு தொடர்ந்து எழுதச் செய்கிறார். கௌரிக்கு இப்படி மாற்றி எழுதுவதில் ஆனந்தம். தந்தைக்கு புரிய வைப்பதன் மூலம் தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும். தங்கத்திற்கு ஆதரவாக உடையாரின் மனைவி கமலாமேல் வழக்குத் தொடுப்பதற்காக எழுதப்படும்
இக்கடிதத்தில் (பக். 15 - 17) இரண்டு தலைமுறையினரின் மொழி ஆளுமையை முன்வைக்கிறார்.

அதன்படி முதல் தலைமுறையினரான காத்தமுத்து ஜில்லா தாலூக்கா ஆகிய சொற்களைப் பயன்படுத்துபவராக / கையாளுபவராகக் காட்டப்படுகிறார். இப்பாங்கு காத்தமுத்துவின் உருது, சமஸ்கிருத மொழித்திணிப்பிற்கு ஆட்பட்டிருந்த போக்கை வெளிச்சப்படுத்துகிறது. அவருக்கு அடுத்த தலைமுறையான கௌரி அந்த மொழிக்காலனியத்தை நீக்கித் தமிழ்ப்படுத்துவது காலனிய நீக்கத்திற்கான செயல்பாடுகளாக கவனிக்க வேண்டிய நடத்தைகளாக இருக்கின்றது. அதாவது முதல் தலைமுறையினரான தந்தை என்ற பாத்திரம் காலனியாதிக்கச் சமூகத்திலிருந்து பெயரளவில் விடுதலை பெற்றமைக்கான குறியீடாகவும் ஆட்சியளவில் நீக்கம் செய்யப்பட்ட அவ்வதிகார மையம் பண்பாடு மொழி சார்ந்த நிலைகளில் நீக்கம் செய்யப்படுவது கண்டு மகிழ்வு கொள்வதான சூழலையும் நுட்பமாக வெளிப்படுத்துவதை அறியமுடியும். தந்தையின் மொழிக் கிடங்கை காலனிய நீக்கம் செய்யும் மகளின் இந்த நடத்தை குடும்பம், சமூகம், பால்நிலை எனப் பல்வேறு கோணங்களில் வைத்தும் புரிந்துகொள்வதற்கான அகன்ற திறப்பைக் கொடுப்பதாக இருக்கிறது.

அதேசமயம் தந்தைக்கும் மகளுக்குமான இந்த நடத்தையில் மகள் கௌரியின் தந்தை மீதான வெறுப்பு, வஞ்சம் தீர்த்துக்கொள்ளுதல் என்ற நிலையில் புனைவாக்கம் பெற்றுள்ளமையையும் இங்கு கவனங்கொள்ளவேண்டும். ஏனெனில், இந்த எதிர் இடிபஸ் மனநிலைக்கு நனவு மனமாகிய பண்பாட்டு உணர்ச்சி, அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதாவது, சுதேசிய மண்ணிற்கும் மக்களுக்கும் இருக்கவேண்டிய ஒத்துணர்வு / இணக்கம் காலனியவாதிக்கு இசைந்துகொடுக்கும் சுதேசியத் தன்மையால் எதிர் உணர்வாக மாற்றம் கொள்கிறது. காலனிய அமைப்பு காலனியத்திற்கு உட்பட்ட பிரதேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் அதிகாரத்தை பிரயோகிப்பதோடு அவ்விரண்டின் வளங்களையும் சுரண்டுகிறது. இந்தச் சுரண்டல் நடத்தையால் சுதேசியத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிர்மை இயக்கம்கொள்கிறது.

காலனியத்தின் சுரண்டல் நடத்தைக்கு இரு துருவங்களும் எதிர்ப்பு தெரிவித்தால்தான் இந்த இருதுருவங்களுக்கும் இணக்கம் உருப்பெறும். கலாச்சாரக் காலனிய நீக்கம் செய்துகொள்ளத் துடிக்கும் கௌரியின் மனநிலை இந்தியச்சமூகத்தின் ஆண்மையக் கருத்தியலால் தீர்மானிக்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகளின் கட்டமைப்பு மனஅமைப்பைக் கொண்டுள்ளதை அடையாளங்
காணமுடிகிறது. அதன்படி, கௌரியினுடைய தந்தை வெறுப்பின் பின்புள்ள பண்பாட்டு உணர்வுக்கு, காத்தமுத்துவின் நவீன, ஐரோப்பிய பண்பாட்டுப் பரவலாக்கத்தின் மீதான வெறுப்புணர்வும் அவரின் மனவெளியை ஆக்கிரமித்துள்ள ஆணாதிக்க மனோபாவமும் காரணங்களாக இருக்கின்றன. (ப.13) ஐரோப்பியக் காலனியாதிக்கம் நிகழ்த்தும் நவகாலனிய முறைக்கு தரகு முதலாளிகளாக / பொம்மை அரசுகளாக நியமிக்கப்பட்ட அரசாங்கக் கட்சிகளின் அனுகூலங்களை விரும்பும் காத்தமுத்து அதன் நாகரீகங்களை உமிழ்கிறார்.

ஆதிக்க அதிகார வர்க்கங்களின் நேரடியான, மறைமுகமான ஒடுக்குமுறை வடிவங்களுக்கு உட்பட்டு மீளமுடியாமல் திணறிக்கொண்டிருந்த தலித் மக்கள், ஐரோப்பியக் காலனியாதிக்கம் உண்டாக்கிக் கொடுத்த கல்வி வாய்ப்புகளால் தங்கள் அடிமைத்தனத்தை உணர்ந்து சமூக சமத்துவத்திற்கான விடுதலைக்குரல்களை அதிகார மையங்களுக்கு எதிராக உயர்த்தினர். ‘பழையன கழிதலும்’ நாவலில் தங்கம் என்னும் பெண் ஆதிக்கச் சாதியினனான பரஞ்சோதி உடையாரால் வன்புணர்வு செய்யப்படுகிறாள். தொடர்ந்து தன்னுடலை அவ்வாதிக்க உடலின் பாலியல் வேட்கைக்குப் பலி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாக்கப்படுகிறது.

இவற்றை நேரில் பார்த்துவிட்ட மாணிக்கம் உடையாரின் மூலமாக செய்தி பரஞ்சோதி உடையாரின் குடும்பத்திற்கு எட்டுகிறது. பரஞ்சோதியின் மனைவி கமலம் உட்பட்ட குடும்பத்தார் தங்கத்தை வன்மையாகத் தாக்கி துரத்திவிடுகின்றனர். தங்கம் பக்கத்து கிராமத்திலுள்ள காத்தமுத்துவின் உதவியை நாடி வருகிறாள். தங்கம்தான் தாக்கப்பட்டதற்கான பின்புலத்தைச் சொல்ல, காத்தமுத்து, தங்கத்திற்கு நீதி பெற்றுத்தரும் எண்ணத்தோடும் ஆதிக்க வர்க்கத்தின் ஆதிக்க வெறிக்கு சரியான பாடம் புகட்டும் எண்ணத்தோடும் இந்நிகழ்வைச் சாதிப்பிரச்சினையாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்கிறார். காவல்துறையினர் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவர்கள் உடையாருக்கு சாதகமானவர்களாக இருந்து காத்தமுத்துவின் எண்ணத்தைச் சிதைக்க திட்டம் தீட்டுகின்றனர்.

அதன்படி, தங்கம் ஆதிக்கச்சாதியினனின் வீட்டில் ரேடியோ உள்ளிட்ட விலை மதிப்பான பொருட்களை திருடிவிட்டதால்தான் தண்டிக்கப்பட்டாள் என நிகழ்வை / பின்புலத்தை திரிக்க முயல்கின்றனர். இதனை அறிந்த காத்தமுத்து, தங்கத்தின் வீட்டுக்கு இரவு பகலாக காவலுக்கு ஆள் போட்டதால் திணறிய ஆதிக்கச் சாதியினர், அச்சம்பவத்தைக் கூலிப்பிரச்சினையாக மடைமாற்றி வழக்கை திசை திருப்புகின்றனர். இவ்வாறான புனைவின் கதையமைப்பில் இரண்டு செயல்பாடுகள் கவனிக்க வேண்டியதாக இருக்கின்றன.

1) ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக தலித் சட்டத்தை வளைக்க முயலுதல்.

2)அதிகார வர்க்கம் தலித்துகள் மீது திருட்டுப்பட்டம் கட்டுதல்.

இதில் முதல் நிகழ்வு தலித் அரசியல் சார்ந்து கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. ஏனெனில், எப்போதும் ஆதிக்க வர்க்கம் சார்ந்தே செயல்படும் காவல் துறையினரின் சப்பைக்கட்டை சிறிது அசைத்துப் பார்க்கிறது. இரண்டாவது நிகழ்வு, காலங்காலமாக தலித்துகள் மீது திணிக்கப்படும் ஆதிக்கச்சாதியினரின் திருட்டுக் கற்பிதத்தின் பின்புலத்தை வெளிச்சப்படுத்துகிறது. தலித்துகள் தங்கள் மீது சுமத்தப்படும் இழி கற்பிதங்களையும் ஆதிக்க வடிவங்களையும் உடைத்து கலகம் செய்யும் இன்றைய பின்காலனிய சூழலிலும் இத்தகைய வன்முறைக் கற்பிதங்கள் நிகழ்த்தப்பட்டு தலித்துகள் ஒடுக்கப்படுகின்றதன்மையை உரக்கச் சொல்கிறது. இதே போன்று திருட்டுச் சுமத்தும் ஆதிக்கச் சாதியினனின் நிகழ்வை சோ.தர்மன் தனது ‘கூகை’ நாவலில் காட்சிபடுத்துகிறார்.

இந்த இரு நிகழ்வுகளையும் ஒருசேர வாசிப்பதன்வழி ஆதிக்கச்சாதியினரின் இப்பொதுப்புத்தி உருவாக்கத்தின் பின்னரசியலை இனங்காணமுடியும். இத்தருணத்தில் பாமா தனது ‘சங்கதி’ புதினத்தில் குறிப்பிடும் தலித் மக்களின் திருட்டுசார் நடத்தைகளுடனும் பூமணியின் வெக்கை நாவலுடனும் இதனை இணைத்து வாசிப்பது மேலதிகப்புரிதலுக்கு வலுச்சேர்க்கும். ஆண்வெளியும் பெண்வெளியும் பழையன கழிதலும் நாவலில் தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் தனக்கான வாதப்பொருண்மையாகக்கொண்டு நிலவுடைமைச் சாதியத்தந்தைமை அதிகாரத்திற்கும் குடும்ப ஆணாதிக்க அதிகாரத்திற்குமானதாக தலித்பெண்ணின் இரட்டைக்காலனிய அதிகாரத்திற்காட்பட்ட வாழ்முறையைச் சித்திரிக்கும் படைப்பாளி தனது அடுத்த நாவலான ‘ஆனந்தாயி’ என்ற பிரதியில் ஆணாதிக்கம் ஈய்ந்த குடும்பம் எனும் குறுகிய வெளியைப் புழங்கு வெளியாகக்கொண்ட பெண்ணின் வெளி x சமூகத்தளத்தில் பரந்த புழங்குவெளியைக்கொண்ட ஆணின் புழங்குவெளி என்ற இணைமுரணைத் தனக்கான / கதைக்கான பொருண்மையாக்கிக்கொண்டு ஆணின் கட்டற்ற சுதந்திரத்தையும் அச்சுதந்திரங்களால் ஆணின் மனதில் உருக்கொள்ளும் பெண் பற்றிய பொதுப்புத்தியையும் அப்பொதுப்புத்தி ஆணின் உளவியலில் ஏற்படுத்தும் ஆதிக்க உணர்வையும் அதன் விளைவாக பெண்மீது திணிக்கப்படும் மொழி வாயிலான, உடல் ரீதியான ஆதிக்க நடத்தைகளையும் பேசுபொருளாக்கியுள்ளது.

நாவல்களின் அகப்புறக் கட்டுமானத்தின் இந்தப்பாங்கு பாமாவின் அடுத்தடுத்த நாவல்களின் இயங்குவெளி சார்ந்த படைப்பாக்கத் தளத்தோடு ஒன்றுபடுவதான உணர்வை ஏற்படுத்துகிறது. அதாவது, இருவேறு படைப்பாளிகளுமே தனது முதல் படைப்பாக்கங்களில் தலித்திய, தலித் பெண்ணிய வகைப்பட்ட சிந்தனைகளை நாவல்களுக்கான பேசுபொருளாக்கி தங்களது அடுத்தடுத்த நாவல்களில் தங்களது இலக்கைப்பெண்வெளி சார்ந்து வரையறுத்துக்கொண்டு ஆணாதிக்கம் x பெண்ணடிமைத்தனம் என்ற எதிர்முரணில் பெண்விடுதலைக்கான தேவைகளையும் சாத்தியப்பாட்டையும் கண்டறிய முற்படுகின்றனர். பெண் விடுதலையை வேண்டி நிற்கும் இத்தகைய படைப்பாக்கங்கள் ஆணின் அடக்குமுறையையும் பெண்ணின் அடிமைத்தனத்தையும் ஒருங்கே காட்சிப்படுத்துவதன் மூலம் ஆண்களிடமிருந்து / ஆணாதிக்கத்திடமிருந்து பெண் மீதான அனுதாபங்களை வேண்டி மன்றாடுபவைகளாக இல்லாமல் பெண் சமூகத்தின் தன்நிலை உணர்த்தல் விழிப்புணர்வு பெறுதலுமான தளங்களில் நின்று ஊடுவினையாற்றுகின்றன.

அதாவது, ஆணின் அனுதாபங்களால் கிடைக்கக்கூடிய பிச்சைப்பொருளல்ல பெண் சுதந்திரம் அது சகமனிதரிடம் வெளிப்படுத்த வேண்டிய அடிப்படைப்பண்பு என்று வாதிடுகின்றன. பாலுமை ஒடுக்கமும் தலித் பெண் உளவியலும் பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு நாவல்களிலும் நாவல்களின் நாயகர்களாக பாவனைத் தோற்றம்பெறும் ‘பெரியண்ணன்’, ‘காத்தமுத்து’ என்ற இரு நபர்களும் நனவிலியின் இயல்புந்தல்களான பாலியல் வேட்கையை தனது நனவு நிலையில் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பாத / தெரியாத ஆளுமைத்திறன் குறைவாக (பாலுமை சார்ந்து) உள்ள நபர்களாகப் புனைவாக்கம் பெற்றுள்ளனர். காத்தமுத்து, திருமணம் முடித்த வகையிலும் மணம் செய்யப்படாத வகையிலுமாக மூன்று பெண்களுக்கு உரிமையாளன். ஆனந்தாயி - பெரியண்ணன் விபச்சார நாட்டம் கொண்டவன்.

லெட்சுமி என்ற பெண்ணுடனான தொடர்பு வீடுவரை வந்ததும் இவனது பாலியல் வேட்கை லெட்சுமியிடம் வடிகாலாகிறது. அதேபோல சமூக மேற்கட்டுமான நிலையில் இவ்விருவரும் வளமையின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள். பெரியண்ணன் ‘கான்ட்ராக்டர்’ தொழில் செய்வதன் மூலம் பொருளாதார வலிமை பெற்று சமூக இயங்குவெளியில் தனக்கான தனித்த அங்கீகாரம் பெற்றவர். இந்த அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் மூலதனமாக்கி அரசியலில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டவர். ‘காத்தமுத்து’ தான் சார்ந்த சமூகத்தின் கட்சியில் குறிப்பிடத்தக்க நபராக சட்டத்தை அதன் துணையுடன் வளைத்து, தன் சமூகத்திற்கு உரிய உரிமைகளை போராடி பெற்றுக்கொடுப்பவராக மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பவர். ஆக, இருவருமே தனக்கான சிறு மக்கள் திரளை ஆதரவுக்குரல்களாகப் பெற்ற நபர்கள்.

ஆதலால் இவ்விருவரின் சமூக நடவடிக்கைகளையும் பாலியல்சார் நடத்தைகளையும் தொகுத்து வாசிப்புக்கு உட்படுத்தும்போது பிரதிகளின் மறுபக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதன்வழி இரு பிரதிகளின் இயங்குதளத்தையும் ஒற்றைத்தன்மைக்குள் இருத்திப் புரிந்துகொள்ளமுடியும். அதன்படி முதலில் பிரதிகளில் இயக்கம்பெறும் பாலியல் சார்ந்த நடத்தைகளைத் தொகுத்து அதன் நுண்ணரசியல் செயற்தளத்தைப் விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். ‘பழையன கழிதலும்’ நாவலில் வரும் பாத்திரங்களின் பாலியல் சார்ந்த நடத்தைகளில் அதிக கவனம்பெறும் நடத்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்.

 1. பரஞ்சோதி உடையார் - தங்கம் உறவு
 2. ரெட்டியாரின் மனைவி சாந்தா - கலியன் உறவு
 3. காத்தமுத்து - நாகமணி உறவு
 4. காத்தமுத்து - தங்கம் உறவு

ஆனந்தாயி நாவலில்,

 1. பெரியண்ணன் - லெட்சுமி உறவு
 2. ரங்கசாமி வாத்தியார் - நீலவேணி உறவு
 3. தனம் - டேனியல் உறவு (அத்தியாயம் - 28)

சமூகத்தின் கலாச்சாரக் காவலர்களால் இவ்வுறவு முறைகள் இழிவானதாக - தகாப்புணர்சிகளாக - கூடா உறவுமுறைகளாகக் கற்பிதம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. படைப்பாளியால் முன்வைக்கப்படும் இந்த முறையற்ற பாலியல் உறவுகளின் பின்னுள்ள திரைமறைவு அரசியலான சமூகப்பொதுப்புத்தி எண்ணம்கொண்ட படைப்பாளியின் அரசியலை இவை கவனப்படுத்துவதாக இருப்பதனை உணரமுடியும். இதில் உடையாரின் தங்கம் மீதான வேட்கையும் ரெட்டியார் மனைவியுடைய கலியன் மீதான வேட்கையும் ரங்கசாமி வாத்தியாரின் நீலவேணி மீதான வேட்கையும் நிறைவேற்றம் காண்கிறது.

அவை சமூகத்தின் அற மதிப்பீடுகளை முன்போ பின்போ கடைபிடிப்பதில்லை. ஆனால், அடுத்த இரண்டு
உறவுமுறைகளான காத்தமுத்து – நாகமணியுடனான உறவிலும் காத்தமுத்து - தங்கமுடனான உறவிலும் காத்தமுத்துவின் விருப்பம் நிறைவேற்றம் பெறுகிறது. அதேபோல பெரியண்ணனின் லெட்சுமி மீதான விருப்பமும் நிறைவேற்றம் காண்கிறது. என்றாலும், இவ்வுறவுமுறைகள் சமூக அறமதிப்பீட்டின்படி திருமணமாகப் பரிணமித்து அங்கீகாரத்தைப் பெறுகிறது. சாதிய அடுக்கில் அடித்தட்டில் இருத்தப்பட்ட இருபாலரையும் மேற்தட்டில் இருத்திக்கொண்ட இருபாலரும் உழைப்பு சார்ந்தும் பாலியல் சார்ந்தும் சுரண்டுவதில் உள்ள நிபந்தனையற்ற வெளியை முதலிரு நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அடுத்த இரு நிகழ்வுகள் சாதிய அடுக்கில் அடித்தட்டு நிலைக்குப் புறந்தள்ளப்பட்ட, ஆண் வர்க்கம் பெண்களை உழைப்பு சார்ந்தும் பாலியல் சார்ந்தும் சுரண்டுவதை கவனப்படுத்துகின்றன. ஆக, சாதியம் கடந்து எல்லா ஆண்களுமே காலனியவாதிகளாக இருந்து பெண்ணை உடல்சார்ந்து சுரண்டியும் மனம் சார்ந்து அத்தகைய சுரண்டலுக்குத் தயார்படுத்தியும் வந்துள்ளதை இந்நிகழ்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. பெண்ணை இத்தகைய சுரண்டல் முறைகளுக்கு தானே உடன்பட்டு உடலைச் சிலுப்பித்தலையைக் கொடுக்கும்படியான அதிகார மேலாண்மைக் கருத்தியல்களை குடும்பம் என்ற உடைமைச் சமூக உற்பத்தி நிறுவனம் வழியாக நுட்பமாக திணித்துக் கொண்டிருக்கிறது ஆண்மையச்சமூகம்.

பழையன கழிதலும் நாவலின் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க கதையோட்டத்தைத் துரிதப்படுத்தும் நகர்வும் திட்டமிட்டே அமைக்கப்பட்டுள்ளதைப் ‘பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பு’ என்ற கதைப்பகுதி சான்றுகளோடு நிறுவுவதற்கு வழிகொடுக்கும்படி அமைந்துள்ளது. நாவல் சாதியக் கட்டுமானத்திலுள்ள அடுக்கதிகார ஒடுக்கு முறையின் அமைப்புமுறையை மட்டுமல்லாது அடிக்கட்டுமானத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குக் கீழுள்ள /வலிமை குன்றிய மனிதர்களை /மனிதக்குழுக்களை ஒடுக்க ஒருபோதும் மறுப்பதில்லை என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. இதை நாவலின் நாயகியான கௌரியின் தந்தை காத்தமுத்துவின் நடத்தைகள் வழி பதிவு செய்கிறார். தலித்துகளின் மனவெளியையும் ஆக்கிரமித்துள்ள பார்ப்பனிய ஆதிக்க வேட்கையை பேசுபொருளாக்கிய இமையம் (கோவேறு கழுதைகள்), பெருமாள் முருகன் (கூளமாதாரி) போன்றோரின் கதைவெளியோடு இத்தன்மை ஒட்டியதாக இருப்பதனை அறியமுடியும். ஆதிக்கச்சாதியினர்களிடத்து கலகக்காரர்களாக வெளிப்படும் காத்தமுத்து தன்னுடைய குடும்பம் / சாதியினரிடத்தில் அதிகாரம் மிகுந்த ஒருவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்பவராக படைக்கப்பட்டுள்ளார். மேல்சாதியாக தன்னைக் கருதிக்கொள்ளும் சாதியைச்சார்ந்த ஒரு விதவைப்பெண்ணை (ஆதரவற்றிருந்த நிலையிலிருந்தவள்) திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை கொடுத்ததாகக் கூறிக்கொள்வதும் தங்கம் என்ற பெண் ஆதிக்கச் சாதியினரின் வெறியாட்டத்திற்கு ஆட்பட்டு மிதிபட்டு கருணையையும் அனுதாபத்தையும் எதிர்நோக்கி காத்தமுத்துவிடம் அடைக்கலம் புகுந்தபோது அதை சாதகமாக்கிக்கொண்டு அதிகாரத்திற்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றியும் அதன் பயனால் அப்பெண்ணுக்குக் கிடைத்த சிறுபணத்தையும் தான் அபகரித்ததோடு அப்பெண்ணையும் (தங்கத்தையும்) தனக்கு வைப்பாட்டியாக்கிக்கொண்ட நடத்தைகளும் சான்றுகளாகின்றன. இதில் தங்கத்தின் மீதான காத்தமுத்துவின் சுரண்டல்தன்மை, “மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் தலித் அறிவுஜீவிகள் தாங்கள் பெற்றிருக்கும் அறிவைக்கொண்டு (இவர்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு இவ்வாய்ப்பு கிடைக்கவில்லை) தங்கள் விடுதலைக்குப் பாடுபடுவதை விட்டுவிட்டு அப்பாவி தலித் மக்களை ஏமாற்றும் ஒரு வளமான வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” (2013, பக்.8 - 9) என்று தோழர் அரவிந் குறிப்பிட்டுக் காட்டுவதுபோல் இயக்கம் கொண்டிருப்பதனை உணரமுடியும். அதாவது, தலித் விடுதலைக்காக பாடுபடும் தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் காத்தமுத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்வதற்காக தங்கம் என்ற அப்பாவிப் பெண்ணின் வாழ்வை பயன்படுத்திக் கொள்கிறான் என புரிந்து கொள்ளமுடியும்.

இந்தப் புரிதலை, “தலித் இயக்கம் வருந்தத்தக்கவகையில் தன்னலம் நாடும் தலைவர்களிடம் சிதறுண்டு கிடக்கிறது. இவர்கள் தங்கள் சமூகத்திற்கான ஒரு வகை இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர். எதிரி முகாமிடம் தலித்துகளின் நலன்களை விலைபேசி விற்கும் தரகர்களாக உள்ளனர். இதை தலித்துகள் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு மாற்று இயக்கம் ஏதுமில்லாததால், அவர்கள் இன்னும் இந்தத் தலைவர்கள் பின்னால் வாய்பேசாமல் அணிதிரண்டு, அத்தகையவர்களின் இருப்பை நியாயப்படுத்துகிறார்கள்.” (2014, ப.24) ஆனந் டெல்டும்ப்டெ-வின் இந்த வரிகள் உறுதிபடுத்துவதாக இருக்கிறது. பின்காலனியச் சமூகத்தில் குடும்பவெளி காலனியத்திற்கு ஆட்படுத்தப்பட்டு காலனி ஆதிக்கவாதிகளால் தொடர்ந்து சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகள் இன்றுவரை பொருளாதார, சமூகரீதியில் முன்னேறாமல் இருப்பதற்கான காரணத்தை ஃபனானின் மொழியாடலாக, “காலனியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இன்றுவரை காலனியநாடுகளில் சமூக தளத்திலும் பொருளாதாரதளத்திலும் முன்னேற முடியாததற்குக் காரணம் பிறசமூகங்களைக்காட்டிலும் அவர்கள்மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளே என்கிறார் பனான்” (2017, ப.116) என்று க.இரத்தினக்குமார் சுட்டிக்காட்டுகிறார். ஃபனானின் இந்தக் கருத்தாக்கம் இரட்டைக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட மூன்றாம் உலக நாட்டுப் பெண்களின் வளர்ச்சியின்மைக்கும் பால் சமத்துவமின்மைக்குமான காரணமாகவும் இருப்பதனை உணரலாம். அதாவது, பின்காலனியப் பிரதேசங்களில் வாழும் பெண்கள் (குறிப்பாக இந்தியாவில்) ஐரோப்பிய, ஆரிய, ஆணதிகார ஆதிக்கங்களுக்குக் கட்டுப்பட்ட மும்மைக் காலனியாதிக்கங்களுக்கு உட்படுத்தப்படுவதே பொருளாதார, சமூக ரீதியில் இவர்கள் முன்னேறமுடியாதபடிக்கு அடிமைகளாக இருத்தப்பட்டமைக்கான காரணம் என்பதனை உணர்த்துகிறது. இந்தியச்சமூகத்தில் ‘பெண்’ மும்மைக் காலனியத்திற்கு உள்ளாக்கப்படுவதை பின்காலனியப்பார்வை தெளிவுபடுத்தினாலும் அதீத அடக்குமுறைக் காலனியக் கருவியாக சாதிய தந்தையதிகாரமும் குடும்ப ஆணதிகாரமுமே இருந்து தொழிற்படுவதைக் காணமுடிகிறது. இந்தக் காலனிய வல்லாதிக்கத்தளங்களைத்தான் தமிழ் தலித் நாவல்கள் பெருமளவில் தனக்கான பேசுபொருளாகக்கொண்டு இயக்கம் பெறுவதை அறியமுடிகிறது. அவ்வகைப்பட்ட நாவல்களாகத்தான் ப.சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு நாவல்களும் தம்மளவில் இயக்கம் பெறுகின்றன. அவ்வகையில், ‘பழையன கழிதலும்’ நாவலில் கனகவல்லியும் நாகமணியும் குடும்பம் எனும் தளத்தில் இருத்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களாக இருக்கின்றனர். தங்கம் குடும்பம்
எனும் தளத்திற்கு வெளியே சாதியத் தந்தைமை ஆதிக்கத்தாலும் சாதியம் கடந்த ஆணாதிக்கத்தாலும் சுரண்டப்படுகின்றாள். அதுபோல ஆனந்தாயி நாவலின் கதைநாயகியான ஆனந்தாயி குடும்பம் எனும் தளத்தில் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பாங்கும் சித்திரிக்கப்படுகிறது.

இதில் லெட்சுமியும் தங்கமும் குடும்பத்திற்குப் புறவெளியில் தொடக்கத்தில் பாலியல் சார்ந்து சுரண்டப்பட்டவர்களாக இருந்தாலும் பின்பு குடும்ப நிறுவனத்தின் சுரண்டல் அமைப்புக்குள் வலுவாகத் திணிக்கப்படுகின்றனர். ஆக, இரு நாவல்களிலும் முதன்மைப்பாத்திரங்களாக கவனப்படும் காத்தமுத்துவின் மகள் கௌரியை தவிர்த்த பிற பாத்திரங்கள் குடும்ப வெளியில் எவ்வாறு தன்னிலை சிதைக்கப்பெற்ற பாத்திரங்களாக இயக்கம் பெறுகின்றனர் என்பது நாவலின் கதைக்களமாக உள்ளது. அதாவது, குடும்ப நிறுவனத்தினுள் பெண் உடல்கள் தொடர்ந்து நசுக்கப்படுவதையும் உழைப்பு சுரண்டப்படுவதையும் அத்தகைய சுரண்டல் நடத்தைகள் யாவும் ஆணியத்தின் வளர்ச்சிக்கான / அடுத்தடுத்த தலைமுறை ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அடித்தளங்களாக சேகரிக்கப்பட்டு அவை தொடர்ந்து பெண் உடல் வழியாகவே நகர்த்தப்படுவதையும் இரு பிரதிகளும் வெகுநேர்த்தியாக கவனப்படுத்துகின்றன. பிரதிகளில் தொழிற்படும் இப்பாங்கு, “குடும்பம் என்பது பெண் உடல் அரைபடும் ஒரு எந்திரம்தான்.

இது சொத்தை அல்லது வாரிசை காப்பதற்கான ஒரு கண்காணிப்புக் காவல்எந்திரம். இதுதான் பெண்மீதான அனைத்து ஒடுக்குமுறைகளையும் செயல்படுத்துகிறது.” (2010, ப.149) என்ற ஜமாலனின் மொழியாடலை ஒட்டியதாக இருக்கிறது. ஆனந்தாயி நாவலில் பதினொரு பிள்ளைகளைப்பெற்ற வெள்ளையம்மாக்கிழவியின் (ப.77) வாழ்வு, பெண் உடல்களைச் சட்டத்திற்குற்பட்ட பாலியல்சேவை செய்யும் உடல்களாக மட்டுமே பார்க்கப்பட்டதையும் அது இன்றைக்கும் தொடர்வதையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, நாவல்களில் இடம்பெறும் பெண்களின் வாழ்வானது ஆணாதிக்கச் சமூகத்தின் நுகர்வு உடல்களாக இருந்து ஒட்டுண்ணி வாழ்வு வாழும் பெண்களாக வளர்த்தெடுக்கப்படுவதைச் சித்திரிக்கிறது. இந்தியச் சமூகத்தில் குடும்பம் எனும் அமைப்பு அதற்குத் தகுந்த சட்டகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தந்தைமையச் சமூகத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது. பெண்களின் இத்தகைய சுருக்கப்பட்ட வாழ்முறையை “உயிரினச் செயல்பாட்டுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுவிட்ட அவளால் தன்னை ஒரு தனிமனிதராக வளர்த்தெடுக்க முடியாது.

இத்தகைய ஒட்டுண்ணி வாழ்வு வாழும் பெண்ணின் இருப்பை ‘சட்டத்திற்குட்பட்ட பாலியல் தொழில்’ என அழைக்கலாம்’ (கருப்பினப் பெண்ணியப்பிரகடனம், ப.31) என்று ப்ரான்சஸ் ப்யில் (Frances Beal) ‘இரட்டை இடையூறுகள், கருப்பாயிருத்தலும் பெண்ணாயிருத்தலும்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதே சமயம் இப்பிரதிகள் பெண்ணின் சுயம் குடும்பத்தளத்தில் இத்தகைய சிதைவாக்கத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான காரணகாரியங்களை, பிரதிகள், பேசுபொருளாக்கவோ / அதனைப்பற்றிச் சிந்திக்கவோ சிரத்தை கொள்ளாது ஒடுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்ணின் வலிகளையும் மட்டும் எதார்த்தமாகவும் பதிவு செய்து நகர்கிறது. லெட்சுமியும் தங்கமும் பாலியல் சார்ந்து புறவெளியில் சுரண்டப்படுவதற்கு இரண்டு காரணங்கள் பின்புலனாக இருப்பதனை உணரலாம்.ஆணின் பாலியல் இச்சை / சுதந்திர பாலியல்வெளி.

பெண்வெளியில் சமூகம் உருவாக்கி வைத்துள்ள பயம்சார்ந்த பதற்றநிலை / பாதுகாப்பின்மை. லெட்சுமியும் தங்கமும் புறவெளியில் ஆண்மையச்சமூகம் உருவாக்கியுள்ள சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதால் ஆணின் இச்சைக்கு வளைந்து கொடுத்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அனுமானிக்கமுடிகிறது. தங்கத்தை நினைவிலி நிலைக்கு போதையூட்டி வல்லுறவு கொள்ளும் காத்தமுத்துவின் நடத்தையும் லெட்சுமியை விரும்பி பாலியல் தொழிலாளியாக உடலை விற்பனைக்கு உடையதாக்கும் நடத்தைக்குப்பின்னுள்ள சமூகத்தில் தீர்மானிக்கப்பட்ட பெண்ணின் வெளியும் இதனைத் தெளிவுபடுத்துவதனைக் காணலாம்.

பார்வை நூல்கள்

 1. சிவகாமி.ப (2013). பழையன கழிதலும், (முதல்பதிப்பு). சென்னை. அடையாளம் பதிப்பகம்,
 2. சிவகாமி.ப (2015). ஆனந்தாயி. (முதல்பதிப்பு). சென்னை. அடையாளம் பதிப்பகம்,
 3. அம்பேத்கர்.பி. ஆர். (2016). சாதியை அழித்தொழித்தல், (முதல்பதிப்பு) நாகர்கோவில் 01: காலச்சுவடு பதிப்பகம்.
 4. ப்ரான்சஸ் ப்யில் (திக்ஷீணீஸீநீமீs ஙிமீணீறீ) (2017). கருப்பினப் பெண்ணியப் பிரகடனம் (யாழினி, அரசி,
  கிருத்திகன் மொ.பெ.) (முதல்பதிப்பு) புதுச்சேரி - 605110. அணங்கு பெண்ணியப் பதிப்பகம்.
 5. ஃபனான், ஃபிரான்ஸ். (2002). ஒடுக்கப்பட்டவர்கள்: விடுதலையின் வடிவங்கள் (வி. நடராஜன், மொ. பெ.)
  (முதற்பதிப்பு). கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
 6. சிமாமந்தா எங்கோசி அடிச்சி. (2016). நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்கவேண்டும் (பிரேம்,
  மொ. பெ.) (முதற்பதிப்பு). சென்னை 14: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்.
 7. தோழர் அரவிந். (2013). தலித் அரசியலும் மார்க்சியமும் (வெ. கோவிந்தசாமி மொ. பெ.) (முதற்பதிப்பு).
  சென்னை 05 : புலம் வெளியீடு.
 8. பிரேமா. இரா. (1998). பெண்ணியம் - அணுகுமுறைகள். (முதற்பதிப்பு). சென்னை 17 : தமிழ்ப் புத்தகாலயம்.
 9. அர்ஜுன் டாங்ளே, (2003). தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் (தி.சு. சதாசிவம், மொ. பெ.) (முதற்பதிப்பு).
  சென்னை 78 : நிழல் பதிப்பகம்.
 10. ஜமாலன், (2010). நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும், (முதற்பதிப்பு). சென்னை 05 : புலம் வெளியீடு.
 11. ஆனந்த் டெல்டும்ப்டெ, (2014). ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், (எஸ்.வி.ராஜதுரை, மொ. பெ.).(முதற்பதிப்பு).
  சென்னை 98: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
 12. விகடன் தடம், மாதஇதழ், ஜூலை,2018
மேல் செல்