
நாவலின் அடிப்படை அழகே அது அதீத தகவல்களாலும் செய்திகளாலும் கட்டப்படாமல் உணர்வுகளாலும் தருணங்களாலும் நகர்த்தப்படுதலில்தான் உள்ளது. தகவலோ வேறு கூடுதல் சுவாரஸ்யங்களோ (மொழி, நாவலின் அமைப்பு, வட்டாரம், வரலாறு, கலாச்சாரப் பின்னணி முதலியன) உணர்வுரீதியாக கதை நகர்த்தப்படுதலின் பின்புதான் சோபிக்கக்கூடியது. முதல் தளம் சீராக அமையாவிட்டால் அடியோட்டமாக வரக்கூடிய இரண்டாம் தளம் எத்தனை கவர்ச்சியாக வெளிப்பட்டாலும், அப்படைப்பு வேர்க்கொள்ளாது.
அரிசங்கர் மலையாளம் பேசும் மாகே பகுதியிலிருந்தும் சென்னையிலிருந்தும் பாண்டிச்சேரிக்குப் பிழைக்க வரும் பலதரப்பட்ட மனிதர்களை ’மாகே கஃபே’ எனும் கடையை மையமிட்டு ஒரு புள்ளியில் இணைத்து விரித்திருப்பதே இந்நாவல்.
வினயன் உருவாக்கும் ’மாகே கஃபே’வில், துணி விற்பனை தொழிலில் தோல்வியுற்றதால் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த சந்திரனும், மாகேவிலிருந்து தப்பி வந்த காதல் இணையர்களான அப்புண்ணியும் பாருக்குட்டியும், இடமாறுதலால் பாண்டிக்கு வர நேரிட்ட குரியன் உள்ளிட்ட கதைமாந்தர்களும் அக்கஃபேவுடன் எப்படிப் பிணைக்கப்பட்டுள்ளனர் என்பதன்மீது இந்நாவலை அரிசங்கர் கட்டமைத்துள்ளார்.
ஒவ்வொருவரும் வீழ்ச்சியிலிருந்து எழ முயற்சிக்கும் கணத்திற்காக வாழத் தொடங்குகின்றனரே தவிர நினைத்ததை முழுமையாய் அடைந்தவர் எனச் சுட்டிக்காட்ட முடியாதபடி வாழ்க்கை புரட்டிப் போடுகிறது. சூழ்நிலையின் சுமையால் யாருடைய சக்கரமும் முன்நகராதவாறு வாழ்க்கை நேர்த்தியாகப் பார்த்துக் கொள்கிறது. எல்லோரையும் இணைக்கக்கூடிய மையசரடாக வினயன் இடம்பெறினும், அவன் அந்த இணைப்புக்காக உருவாக்கப்பட்டவனாக வாசிப்பில் தோற்றம் பெறுவதில்லை. அது இந்நாவலின் குறிப்பிடத்தகுந்த அம்சம்.
பாண்டிச்சேரி, சென்னை, மாகே என மூன்று நிலங்களை இந்நாவல் தன் நிகழிடங்களாகக் கொண்டிருந்தாலும், புதுச்சேரியில்தான் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் கால்பாவுகின்றனர். புதுச்சேரியே மையக்களமாகவும் உள்ளது. நாவலில் காலக்கட்டம் சார்ந்த தகவல்கள் எப்படிக் கதையோட்டத்தின் பின் அமைதலுற்ற நதிபோல் துருத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதுபோலத்தான் நிலமும் ஓடுகிறது.
நகர்களின் பெயர்கள், கடற்கரைகள், ஆலைகள், பேருந்து நிறுத்தங்கள், வட்டாரங்கள் ஆகிய நிலங்கள் விவரிப்புகளே இல்லாமல் சொல்லப்படுகின்றன. காலத் தகவல்களைக் கையாண்டதுபோல் நிலத்தைக் கையாளாமல் சிறிது சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதேவேளை நகரின் விஸ்தரிப்புகளை எவ்வளவு சொன்னாலும் சொல்லாதது போலத்தான் இருக்குமோ என்ற மயக்கமும் உண்டாகத்தான் செய்கிறது. குறைவாகச் சொல்லுதல், இடைவெளியால் புரிந்துகொள்ளவோ கற்பனைசெய்து ஒன்றை நிரப்பிக் கொள்ளவோ எழுத்தாளர்க்கு சகல உரிமையும் இருப்பினும்; அத்தகு முயற்சி நாவலை சொன்மைரீதியாக மேம்படுத்துவதாகவே அமைந்திருப்பினும் ஒருசில இடங்களில் அது இட்ட நிரப்ப முடியாத குறையாகவே படுகிறது.
நிலம் போலவே சில கதாப்பாத்திரங்களின் சுருக்கமும் பெருக்கமும் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவும் தவிர்க்கவும் செய்துவிடுகின்றன. சந்திரனின் மனைவி பற்றி விரிவுப்படுத்தாமல் விட்டது நாவலின் பலம் என்றால், வினயின் அம்மா நாராயணி பற்றிப் பேசாதது வினயனின் தரப்பை அணுகமுடியாதபடி செய்கிறது. அம்மாவின் அவமானம் என்ற வலிமையான உந்துதலால் உழைக்க வந்தவனின் வெற்றி, அவனது அம்மாவைப் பற்றிய எந்த நினைவுகூர்தலையும் கருத்தில் கொள்ளாமல் கடந்துபோகிறது. அதனால் வெற்றியடைந்த வளர்ந்த முதலாளியான வினயனைவிட, சிறுவனாகவும் சம்பாத்தியத்துக்காக போராடும் இளைஞனாகவும் வரும் வினயனோடு அண்டிப் பயணிக்க முடிகிறது.
இது இலக்கில் வெற்றியடைந்த அக்கதாப்பாத்திரத்திடமிருந்து ஒதுங்கி நிற்றல் அல்லது அவனது வாழ்க்கையில் அதற்குமேல் சுரத்து இல்லை என ஆசிரியரே பாவிப்பதுபோல் ஒரு பார்வையை வாசிக்கையில் விதைத்துவிடுகிறது. பணவசதி பெற்ற வினயன், விநயமாக மாறும் தருணங்களில் குணமாற்றத்தின் ஆழத்தை விசாரிக்காமல் பிரதி கடந்துபோவது போல் ஆகிவிடுகிறது.
அதேவேளை கணேசன், பாவாடையின் மனைவி, லோக்கல் சேனல் தொகுப்பாளர் பிரியா, பிஜேஷ் முதலானோர் குறைவாக இடம்பெறினும், தன் சித்திரிப்பின் வழி வலுவாக அவர்களைப் பதித்துவிடுகிறார், ஆசிரியர். பிஜேஷுக்கு நாவலில் ஒரு வார்த்தை உதிர்க்கக்கூட இடம் இல்லை. ஆனாலும் மனதில் நின்றுவிடுகிறான்.
வெளியூரிலிருந்து வந்து பிழைப்பவர்களுக்குத் தன் பிழைப்பினாலேயே அந்த ஊர் தன்னையும் சார்ந்தோரையும் வாழ வைக்கிறது என்ற இணக்கம் மிகுந்திருக்கும். ஆனால் ஊரோடு புழங்க வாய்ப்பின்றி வீட்டோடு பிணைக்கப்பட்ட பெண்களுக்கு? அப்படிப்பட்டவர்களின் உளவியலை, நினைவேக்கங்களை, சமாளிப்புகளை, விருப்பங்களை எல்லாம் பாருக்குட்டியைக் கொண்டு அழகுறக் காட்டிவிடுகிறார் அரிசங்கர்.
தன் நாவலில் பெண்களை பைனரிகளாகவும் தரப்புகளாகவும் அரி கையாளாதது கவனத்திற்குரியது.
பிழைப்பு என்று வந்தபின் பெரியார் இனஞ்சுட்டிய இனம், மொழி, குலம் முதலிய அபிமானங்கள் தானாக மறைந்தோ ஒளிக்கப்பட்டோ விடுகின்றன. மாகே கஃபேவில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தன் இருப்பும் தேவையும் சார்ந்த அன்றாடப் போராட்டங்களில் கவனம் சாய்க்கவே காலம் போதுமானதாக இருக்கிறது.
ஈழ இனப்படுகொலையை முன்னிறுத்தி மலையாளியான அப்புண்ணி, தமிழரான சந்திரனிடம், ”பாஷைக்காரனெல்லாம் ஒன்னுமில்ல கேஷியர். உங்கள சிங்களன் சுத்திச் சுத்திச் சுட்டப்ப நீங்க என்ன பண்ணுனீங்க” எனுமிடத்தில் மொழிபந்தமானது நாவலின் பாடுபொருள் எல்லையைக் கடந்து இனத்தின் மீதான வலுவான விமர்சனமாகவே பதிந்துவிடுகிறது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ரமேஷ் பிரதேனின் பல நாவல்களிலும் ஈழ இழப்பிற்கு எதிரான தமிழியக் குரல் ஒலிப்பதைக் காண முடியும். அவர் தொன்மங்களின் மூலம் எழுப்பும் குரலை, அரிசங்கர் யதார்த்தவியல் நாவல் வழி எழுப்புகிறார். இப்படிச் சிதறலாகப் பேசப்படும் அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் நாவலில் நிரம்பிக் காணப்படுகின்றன.
பாண்டி நிலத்தின் வட்டார மொழி உரையாடல்களில் நயமாகப் பதிவாகியுள்ளன. ஆனால் அரிசங்கரின் நேரடியான கதைகூறும் நடை, விவரணை அழகியலை மறுப்பதாக அமைந்துள்ளதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. யதார்த்தவியல் நாவல்களுக்கும் மொழி நடைக்கும் பங்கில்லையா? மொழித் திறம் வெளிப்பட எழுதப்படும் நடப்பியல் நாவல் அலங்காரத்தன்மை அல்லது கற்பனாவாதம் மிகுந்துள்ளதாகச் சுருக்கிப் பார்க்கப்படுகிறதா? அதைத் தவிர்க்கவே ஆசிரியர் இதைச் செய்கிறாரா? போன்ற மேலதிகக் கேள்விகளுக்கு அது இட்டுச் செல்கிறது. அரிசங்கரின் பலதரப்பட்ட படைப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்க்கையில் இயல்பிலே அவரிடம் சுருங்கக் கூறலும் குறைந்த விவரணையைக் கையாளும் நடையும் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்நாவலில் மலையாள உரையாடல் மிகுதி என்றாலும் அது கதையோட்டத்தில் நன்கு புரியும்படியே பதிவாகியுள்ளது.
”அந்த மழைநீர் மட்டும் அவன் உடலிலேயே தங்கிவிட்டது. அது எப்போதும் அவனுள் வழிந்தவாறு அவனைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தது.”
”நூலிழையின் மீது ஏறும் எறும்பைப் போல் பேருந்து ஜாக்கிரதையுடன் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தது” போன்ற கவின்மிகு வரிகளும் நாவலில் உள்ளன. அவை மேலும் இடப்பெற்றிருந்தால், அது புனைவோட்டத்திற்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கும்.
இப்படி விவரிப்பு சார்ந்து வலியுறுத்தி சொல்ல காரணங்கள் உண்டு. பொதுவில் ’பாண்டிச்சேரி கடற்கரை’ என்று ஒற்றை வரியில் ஓர் இடத்தை ஆசிரியர் குறிப்பிட்டுவிடுகிறார். இப்பிரதி அந்நிலத்திற்குத் தொடர்பில்லாத ஒருவரிடமிருந்து வரும்போது, அது சரி. அந்நிலத்திற்கே உரிய படைப்பாளியிடமிருந்து வரும்போது இன்னும் கூடுதலாகக் கடற்கரையை வாசிக்க, நுண்ணிய விபரங்களை அனுபவிக்க மனம் தேடவே செய்கிறது. இவை நாவலின் வாசிப்புக்கோ, கனத்திற்கோ ஊறு செய்யவில்லை எனினும் ஆசிரியர் கடந்துசெல்லும் இடங்கள் என அடையாளம் காண இடம் தருகிறது.
பாரிஸ் நாவலின் தொடர்ச்சியாக அமைந்துள்ள இப்பிரதியை அதை வாசிக்காமலே வாசிக்க இயலும். அதில் இடம்பெறும் பலரும் இதிலும் தலை காட்டுகிறார்கள். இரண்டுக்குமான இணைப்புத் துருத்தலின்றி நிகழ்ந்துள்ளது. பல்வேறு மனிதர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிழைப்பின் பொருட்டு ஊடாடும் இக்கதையில், பலர் ஒரே சிக்கலை எதிர்கொள்பவர்களாக இருப்பினும் யாரும் ஒரேவிதமாக இருப்பதில்லை. எல்லோரும் ஒரே மனப்பாங்கின் வழி தங்கள் சிக்கலை அணுகுவதில்லை. பல தரப்புகளின் குரல்களையும் நியாயங்களையும் சகிப்புத்தனத்தையும் தர்க்கங்களையும் தந்திரங்களையும் மிகுந்த அடங்கிய தொனியோடுகூட இந்நாவலில் கையாண்டிருக்கிறார் அரிசங்கர்.