கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

பிம்பங்களின் வேர்: நரன் கவிதையில் கட்டமைக்கப்படும் உண்மையற்ற உண்மைகள்

மிஹாத்

பகிரு

அண்மையில் நரன் உடைய கவிதை ஒன்றை வாசித்தேன். அது மரணம் பற்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கிவிட்டது. மனித வாழ்வை புதுவித கோணங்களில் நோக்கும் கவிதைகள் தமிழில் பரவலாக எழுதப்படுவதில்லை என்ற குறையை இக்கவிதை தீர்த்து விடுகிறது. இது குறித்த எனது பார்வையைக் கவிதையின் கீழே பதிவு செய்கிறேன்.

O O

மரணம் என்பது வேறொன்றுமில்லை

நான் மண்ணின் கீழ் வாழ்வது

நீ மண்ணின் மேல் வாழ்வது

அவ்வளவு தான்.

நானொரு கல்லறை தாவரத்தின்

வேர்களைத் தரிசிப்பது,

நீயதன் தண்டுகளை, பச்சையை,

மலர்களை,

கனிகளைத் தரிசிப்பது…

உன் கண்கள் மண்ணின் மேல் ஊரும் புழுக்களை அருவருப்பாய்ப் பார்ப்பது.

அதே புழுக்கள் என் உடல் ஆன்மாவிற்குள் துளைத்துக் கொண்டு நுழைவது.

பிடித்த தாவரத்தின் முழு உடலை

ஒரு இறந்தவனும்,

வாழ்பவனும் சேர்ந்து தானே

முழுமையாய் தரிசிக்க முடியும்.

மரணம் என்பது வேறொன்றுமில்லை

நான் மண்ணின் கீழ் வாழ்வது

நீ மண்ணின் மேல் வாழ்வது

அவ்வளவு தான்..//

O O

இந்த வரிகள் மரணத்தை ஒரு முடிவாகப் பார்க்காமல் வாழ்வின் வேறொரு பரிமாணமாக அல்லது இடமாற்றமாகப் பார்க்கின்றன. இக்கவிதையின் தன்னிலை பாத்திரம் முன்வைக்கும் விடயங்களில் முதலில் அக்கறை கொள்ள விரும்புகிறேன்.

பிம்பங்களின் வேர் நரன் கவிதை

மரணத்தை ஒரு பயங்கரமான நிகழ்வாகவோ அல்லது வாழ்வின் முற்றுப்புள்ளியாகவோ கருதாமல் //நான் மண்ணின் கீழ் வாழ்வது, நீ மண்ணின் மேல் வாழ்வது// என்ற வரிகள் மூலம் மரணம் என்பது வெறும் இருப்பிட மாற்றம் மட்டுமே என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது. உயிர் மறைந்த பின்பும் வாழ்வது என்ற சொல்லை பயன்படுத்துவதனால் இருப்பின் தொடர்ச்சியை இது உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

தாவரம் என்ற ஒரே கருப்பொருளை இரண்டு வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதை இக்கவிதை விளக்குகிறது. வாழ்பவன் அல்லது இறக்காமல் இருப்பவனாகக் கருதப்படுபவன் செடியின் தண்டு, இலை, மலர், கனி எனக் கண்ணுக்கு தெரியும் புறத்தோற்ற அழகை ரசிக்கிறான். அதேவேளை இறந்தவன் அல்லது மண்ணறை வாழ்வை அனுபவிப்பவன் அதே தாவரத்தின் ஆணிவேரை, அதன் அக தோற்ற அடிப்படையைத் தரிசிக்கிறான் என்பதான ஒரு விளக்கத்தை இக்கவிதை இரு வேறுபட்ட பார்வை கோணத்தின் மூலம் மரணம் என்ற சொல்லுக்கான அர்த்தமாகத் தாவரம் என்ற சொல்லின் வழியாகக் கட்டமைக்கிறது. அறிவியல் அல்லது ஆன்மீகம் தேடுகின்ற மறைக்கப்பட்ட உண்மையைத் தரிசிக்கும் ஒரு வாய்ப்பை மரணம் என்பது ஏற்படுத்துவதாக இக்கவிதை கருதுகிறது.

வாழ்பவர்கள் புழுக்களை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். ஆனால், இறந்தவனின் தன்னிலை அந்தப் புழுக்களைத் தன் உடலுக்குள் அனுமதிப்பதன் மூலம் இயற்கையோடு ஒன்றி போவதைச் சித்திரிக்கிறது.

//அதே புழுக்கள் என் உடல் ஆன்மாவிற்குள் துளைத்துக் கொண்டு நுழைவது// என்ற வரியானது உடல் மண்ணுக்கு சொந்தமானது என்ற உண்மையை எவ்வித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. இங்கே ஆன்மா என்பது உடலோடு பிணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயற்கையின் சுழற்சிக்கு உட்பட்ட ஒன்றாக மாற்றப்படுகிறது.

ஒரு வாழ்வின் முழுமையை ஒருவரின் உயிருள்ள நிலையில் மட்டுமே காண முடியாது. மேலே இருப்பவன் ஒரு பாதியையும், கீழே இருப்பவன் மறுபாதியையும் பார்க்கிறான். உயிர்ப்பும் மரணமும் இணைந்தால் மட்டுமே வாழ்வு என்ற ஒரு தாவரத்தின் முழு வடிவம் சாத்தியமாகிறது என்பதுதான் இக்கவிதையின் சாரமாக இருக்கிறது.

கவிதையின் தன்னிலையானது மரணத்தைப் பற்றிய பயத்தைப் போக்கி அதை ஒரு மௌனமான தொடர்ச்சியாக மாற்றுகிறது. வாழ்வு என்பது தாவரக் கிளைகளின் கொண்டாட்டம் என்றால், மரணம் என்பது தாவர வேர்களின் தரிசனம் என்ற விளக்கத்தை இக்கவிதை தருகிறது. இந்தக் கொண்டாட்டம் மற்றும் தரிசனம் எனும் இரண்டும் சேர்ந்ததே பிரபஞ்சத்தின் முழுமை என்கிறது இக்கவிதை.

சடப்பொருள் அழியாது, அது சுழற்சிக்கு உட்பட்டது என்பது அறிவியல் ரீதியாக ஏற்கப்படுகிறது. கவிதையில் //நான் மண்ணின் கீழ் வாழ்வது// என்று கூறுவதானது உயிரியல் ரீதியாக அழுகலடைய செய்யும் காரணிகளின் பங்கை குறிக்கிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை உடலைச் சிதைத்து அதிலுள்ள கார்பன், நைட்ரஜன் போன்ற கனிமங்களை மீண்டும் மண்ணுக்கே வழங்குகின்றன.

கவிதையின் தன்னிலையானது இந்த இடத்தில் ஒரு மனிதனாக இல்லாமல் சிதைந்து மண்ணோடு கலந்த ஊட்டச்சத்தாகத் தன்னை உருவகப்படுத்துகிறது.

கவிதையில் வரும் வேர் மற்றும் தண்டு குறித்த வரிகளானவை தாவரங்களின் உடலமைப்பியலைக் கொண்டு வாழ்வின் உயிர்ப்பு மற்றும் மரணம் ஆகியவற்றுக்குப் பிரதியீடாகக் கையாளப்படுகின்றன அல்லது உயிர்த்திருத்தலுக்கான செயலையும், இறப்புக்கு பிறகான செயலையும் உருவகப்படுத்துகின்றன. மண்ணின் கீழ் வேர்கள் மண்ணிலிருந்து நீரையும் தாதுக்களையும் உறிஞ்சுகின்றன. கவிதையில் //வேர்களைத் தரிசிப்பது// என்பது ஒரு தாவரம் உயிர்வாழ தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துப் பரிமாற்றத்தை அதன் பிறப்பிடத்திலேயே கவனிப்பதாகும்.

மண்ணின் மேல் தண்டு, இலை, மலர் ஆகியவை ஒளித்தொகுப்பு மூலம் ஆற்றலை உருவாக்குகின்றன. இது புற உலகுக்குத் தெரியும் வாழ்வின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்ள முடியும். புழுக்கள் உடலைத் துளைப்பதாக வரும் வரிகள் சூழலியலில் பிரிகையாக்கிகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. புழுக்கள் போன்ற உயிரினங்கள் இறந்த தாது பொருட்களைச் சிதைத்து அவற்றை மீண்டும் தாவரங்கள் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றும் மறுசுழற்சி முகவர்களாக இருக்கின்றன. கவிதை கூறுவது போலப் புழுக்கள் உடலைத் துளைப்பது என்பது ஒரு அழிவல்ல, அது ஓர் உயிரினத்தின் ஆற்றலானது மற்றொரு வடிவத்திற்கு மாறுவதற்கான செயல்பாடாகும்.

//ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானே முழுமையாய் தரிசிக்க முடியும்// என்ற வரிகளானவை சூழலியல் தொகுப்பின் முழுமையை விளக்குகின்றன. மண்ணுக்கு அடியில் நடக்கும் சிதைவு நிகழாவிட்டால், மண்ணுக்கு மேலே இருக்கும் வளர்ச்சி சாத்தியமில்லை. உயிரியல் ரீதியாக ஒரு தாவரத்தின் வாழ்வு என்பது மேலே புறத்தில் உள்ள சூரிய ஒளி மற்றும் கீழே உள்பகுதியில் உள்ள சிதைந்த தாது பொருட்கள் ஆகிய இரண்டையும் சார்ந்தது. அதாவது, சிதைவு எனும் மரணம் இன்றி வளர்ச்சி எனும் வாழ்வு இல்லை. அந்த வகையில், மரணம் என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு பௌதிக மாற்றம். கவிதை கூறுவது போல, உயிரியல் ரீதியாக நாம் அனைவரும் இந்த மாபெரும் சுழற்சியின் ஒரு அங்கமே. மேலே இருப்பவன் நுகர்வோனாக இருக்கிறான், கீழே இருப்பவன் உரமாக மாறி மீண்டும் வாழ்வை தொடங்குகிறான்.

ஓஷோ மரணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அதை ஒரு துயரம் என்று சொல்லாமல் வாழ்வின் உச்சக்கட்ட கொண்டாட்டம் என்றே குறிப்பிடுவார். இந்தக் கவிதை ஓஷோவின் பல தத்துவத் தர்க்கங்களோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது. மரணம் என்பது வாழ்க்கைக்கு எதிரானதல்ல, அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்பது ஓஷோவுடைய தர்க்கமாகும். இந்தக் கவிதையானது, //மரணம் என்பது வேறொன்றுமில்லை// என்று தொடங்குவதால், ஓஷோவின் ‘மரணமில்லா தன்மை’ என்ற தர்க்கத்தை வழிமொழிகிறது.

நாம் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்வதைப் போன்றதே மரணம் என்பதுதான் அந்த ஓஷோ தர்க்கமாகும். //நான் மண்ணின் கீழ் வாழ்வது, நீ மண்ணின் மேல் வாழ்வது// என்று கவிதை எடுத்துரைக்கும்போது இங்கே வாழ்வு முடிந்துவிடவில்லை என்பதும் அதன் தளம் மட்டுமே மாறியிருக்கிறது என்பதையுமே அது குறிப்பிடுகிறது.

எதிர்மறைகள் இன்றி எதுவும் முழுமையடையாது. இருட்டு இல்லாமல் வெளிச்சம் இல்லை, மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை என்பது ஓஷோ அடிக்கடி பிரசங்கித்த போதனையாகும். ஒரு மரத்தை பார்க்கும்போது அதன் இலைகளை மட்டும் பார்த்தால் நீங்கள் பாதியைத்தான் பார்க்கிறீர்கள். அதன் வேர்களையும் பார்த்தால் மட்டுமே அது முழுமையாகும் என்று ஓஷோ வழியில் இந்தக் கவிதைக்கான விவரிப்பை நாம் விரிவுபடுத்த முடியும்.

//பிடித்த தாவரத்தின் முழு உடலை ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானே முழுமையாய் தரிசிக்க முடியும்// வாழ்வு என்பது கிளைகளாகப் படர்வது, மரணம் என்பது வேர்களாக ஆழம் செல்வது. இரண்டும் சேர்ந்ததே இயற்கை என்றால் நமது வாழ்வு என்பதை இயற்கை நிகழ்வு என்பதாக வழிமொழியும் ஒரு சமன்பாடு அர்த்தம் ஓஷோ வழியில் இக்கவிதைக்கெனக் கிடைத்து விடுகிறது.

வாழ்பவன் புழுக்களை அருவருப்பாய்ப் பார்ப்பது அவனது அகங்காரத்தின் வெளிப்பாடு எனக் கருத முடிந்தால், அவ்வாறு உணர்பவன் தனது உடலிலிருந்து வேறுபட்டவன் என்கிற அறியாமையே அவனது அந்த அருவருப்புக்கான காரணமாகிறது. உடல் என்பது பிரபஞ்சத்தின் ஒரு கடன். அதை மீண்டும் பிரபஞ்சத்திடம் ஒப்படைத்துப் புழுக்களுக்கு உணவாகும்போது அங்கே ஆன்மா விடுதலையடைவதான ஆன்மீக தர்க்க நியாயம் ஒன்றை இக்கவிதை குறித்து ஓஷோ வழியில் கட்டமைக்க முடியும்.

//அதே புழுக்கள் என் உடல் ஆன்மாவிற்குள் துளைத்துக்கொண்டு நுழைவது// எனும் வரிகளைக் கவனிக்கும்போது, இங்கே தன்னிலை என்பது உடலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. புழுக்கள் உடலைத் துளைப்பதை கவிதை ஒரு தரிசனமாக மாற்றுகிறது. தன் உடல் சிதைவதை தானே ஒரு சாட்சியாக நின்று கவனிப்பதான ஒரு நிலை.

தியானம் என்பது மரணத்தின் ஒத்திகை என்பார் ஓஷோ. தியானத்தில் நாம் மலர்கள், கனிகள் என்ற வெளி உலக அம்சங்களைத் தவிர்த்து, வேர்களாகி உள்நோக்கி செல்கிறோம். இறந்தவன் வேர்களைத் தரிசிப்பதாகச் சொல்வதானது, அவன் வாழ்வின் சாரத்தைத் தெரிந்துகொண்டான் என்பதைக் குறிக்கிறது. மேலே இருப்பவன் சடத்துவத் தோற்றங்களை மட்டும் காண்கிறான், கீழே இருப்பவன் உண்மையை அடைகிறான். ஓஷோ வழி ஆன்மீக தர்க்கப்படி இந்தக் கவிதை மரணத்தைப் பற்றிப் பேசவில்லை, மாறாகப் பயமற்ற நிலையைப் பற்றிப் பேசுகிறது.

//அவ்வளவு தான்// என்ற கவிதையின் வார்த்தையானது மரணத்தின் மீதான மிகப்பெரிய மர்மத்தை உடைத்து அதை ஒரு சாதாரண இயற்கை நிகழ்வாக மாற்றுகிறது. ஆனால், இந்தக் கவிதை தாவரம் அல்லது மண்ணை ஒரு மையப்புள்ளியாகக் கொண்டு, அதன் மேல் மற்றும் கீழ் என இருமைகளை உருவாக்குகிறது. அல்லது ‘மண்ணின் மேல்’ மற்றும் 'மண்ணின் கீழ்' என்ற இரண்டு உலகங்களைச் சமமானதாகக் காட்ட முயல்கிறது. உண்மையில் கவிதையானது மரணம் என்ற கீழே மண்ணுக்குள் இருப்பதை உயர்வாகவோ அல்லது உண்மையான தரிசனமாகவோ முன்னிறுத்துகிறது. வேர்களைத் தரிசிப்பதென்பது ஆழமான அறிவாகவும், மலர்களைத் தரிசிப்பதென்பது மேலோட்டமான ஒன்றாகவும் இங்கே ஓர் அதிகார அடுக்கு மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார அடுக்கை தலைகீழாக்கினால் வேர் என்பது மலரின் ஒரு நீட்சி மட்டுமே, வேர் என்பது ஒரு தொடக்கப்புள்ளியும் அல்ல, மலர் என்பது ஒரு முடிவுப்புள்ளியும் அல்ல என்கிற ஒரு தர்க்கமும் இருப்பதை நினைவில் கொள்ள முடியும்.

வாழ்வு × மரணம்

மேலே × கீழே

தண்டு × வேர்

அருவருப்பு × ஆன்மா

போன்ற பல எதிர்வுகளை இக்கவிதை முன்வைக்கிறது.

//நான் மண்ணின் கீழ் வாழ்வது// என்ற வரியே ஒரு முரண்பாடு கொண்டதுதான். வாழ்வு என்பது மரணத்திற்கு எதிரானது என்றால், மரணத்தில் வாழ்வது என்பது அந்தச் சொல்லின் அர்த்தத்தையே சிதைக்கிறது. ஒருவன் இறந்தபின் வாழ்வதாகச் சொன்னால், அங்கே வாழ்வு என்ற சொல்லுக்கு நாம் வைத்திருக்கும் அகராதி பொருள் அர்த்தமற்றதாகிறது. எனவே, வாழ்வு மற்றும் மரணம் என்ற சொல்களுக்கு இடையிலான எல்லைக்கோடு இங்கே அழிகிறது.

கவிதையானது தரிசிப்பது என்ற சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இறந்தவன் வேரைப் பார்க்கிறான், வாழ்பவன் மலரைப் பார்க்கிறான் என்கிறது. இங்கே முழுமை என்பது ஒரு மாயை. இறந்தவன் வேரைப் பார்க்கிறான் என்றால் அவன் மலரைப் பார்க்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ள முடியும். வாழ்பவன் மலரைப் பார்க்கிறான் என்றால் அவன் வேரைப் பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். அந்த வகையில் இங்குக் கவிதையில் //முழுமையாய் தரிசிக்க முடியும்// என்ற வரி ஒரு பொய். ஏனெனில் பார்ப்பவர் இரண்டு வேறான தன்னிலைகள் என்பதை உணர கூடியதாய் உள்ளது. ஒருவரின் அனுபவம் மற்றவருக்குக் கடத்தப்பட வாய்ப்பில்லை. எனவே, முழுமை என்பது ஒருபோதும் நிகழாத எப்போதும் தள்ளிப்போடப்படுகின்ற ஒரு சொல்லாடலாக மட்டுமே இருக்கிறது.

புழுக்கள் என் உடல் ஆன்மாவிற்குள் துளைத்துக்கொண்டு நுழைவது என்பது மொழியின் வழுக்கல் எனக் கொள்ளவும் முடியும். ஆன்மா என்பது ஒரு மெட்டாபிசிகல் சொல். அதற்கு உருவம் கிடையாது. புழுக்கள் என்பது சடப்பொருள். ஒரு சடப்பொருள் எப்படி உருவமற்ற ஆன்மாவிற்குள் நுழைய முடியும்? இங்கே கவிதையில் மொழி ஓர் அலங்காரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புழுக்கள் உடலுக்குள் நுழைவதை ஆன்மாவிற்குள் நுழைவதாகச் சொல்வதன் மூலம் உடல் - ஆன்மா என்ற பிரிவினையைக் கவிதை கலைக்கிறது. ஆனால் அதே சமயம் ஆன்மா என்ற ஒரு உண்மை இருப்பதாக நம்பவும் வைக்கிறது. இது மொழியின் ஒரு தர்க்கப் பிழையாகும்.

இந்தக் கவிதை மரணத்தை விளக்குவதை விட மரணத்தை விளக்க மொழி எவ்வளவு தூரம் திணறுகிறது என்பதையே காட்டுகிறது. //அவ்வளவு தான்// என்ற முடிவானது உண்மையில் இது எதுவுமே இல்லை அல்லது இதற்கு மேல் சொல்ல மொழியில்லை என்ற அர்த்தத்தையே தருகிறது. கவிதை ஒரு அர்த்தத்தை உருவாக்குவது போலத் தோன்றி அந்த அர்த்தத்தையே இறுதியில் கலைத்துப் போடுகிறது.

இன்று உண்மை என்பதை விட அதைவிட உண்மையான பிம்பங்களின் உலகிலேயே நாம் வாழ்கிறோம். இந்தக் கவிதையில் மரணம் என்பது ஒரு போலி சிமுலேஷன் மூலம் ஒப்பனை செய்யப்படுகிறது. நவீன சமூகம் மரணத்தை ஒரு இயற்கை நிகழ்வாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. மரணம் என்பது ஒரு பிழையாக அல்லது மருத்துவத் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

கவிதையில் //நான் மண்ணின் கீழ் வாழ்வது, நீ மண்ணின் மேல் வாழ்வது// என்பது ஒரு சமநிலையை முன்வைக்கிறது. ஆனால் இதில் எந்த உண்மை மறைக்கப்படுகிறது எனச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இங்கே வாழ்வது என்ற சொல் ஒரு போலியான பிம்பம் போன்ற கட்டமைப்புடன் கையாளப்படுகிறது. அத்துடன் மரணம் என்பது ஒரு முழுமையான முடிவுமாகும். ஆனால் கவிதை அதை ஒரு மாற்று வாழ்வாகச் சித்தரிப்பதன் மூலம் மரணத்தின் கோரமானதும் அறுதியானதுமான உண்மையை மறைக்கிறது. இதன் மூலம் மரணம் என்னும் சம்பவ நிலைமையானது ஒரு உண்மையற்ற உண்மையான விளையாட்டாக மாற்றப்பட்டு அதன் தீவிரத்தன்மை குறைக்கப்படுகிறது.

இறந்தவனும் வாழ்பவனும் சேர்ந்து வாழ்வு எனும் தாவரத்தின் வெளிப்பகுதி மற்றும் வேர்ப் பகுதியைப் பார்ப்பதுதான் ஒரு முழுமை என்று கவிதை கூறுவதில் எப்படி உண்மையற்ற உண்மை கட்டமைக்கப்படுகிறதென நோக்க வேண்டியிருக்கிறது. ஒரு செடியை அதன் வேரோடு பார்ப்பது என்பது இயற்கையானது. ஆனால் கவிதையானது இங்கே வேர் மற்றும் தண்டு என்ற இருமைகளை உருவாக்கி அவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகிறது. உண்மையில் நாம் பார்ப்பது தாவரத்தை அல்ல, தாவரத்தை பற்றிய நம்முடைய கருத்தாக்கத்தையே கிரகிக்கிறோம். இறந்தவன் வாழ்க்கை எனும் தாவரத்தின் வேரைப் பார்க்கிறான் என்பது ஓர் உண்மையற்ற உண்மை புனைவு. மண்ணுக்கு அடியில் சிதைந்து கொண்டிருக்கும் ஓர் உடல் எதையும் தரிசிக்க முடியாது. ஆனால் கவிதையானது மரணத்தை ஒரு கண்காணிப்பு நிலையமாக மாற்றி, இல்லாத ஒரு உண்மையை இருப்பதாக நம்ப வைக்கிறது.

//உன் கண்கள்... அருவருப்பாய் பார்ப்பது// என்பது குறித்துக் கவனிக்க வேண்டும். இங்கே அருவருப்பு என்பதை ஓர் உணர்ச்சியாக நோக்காமல் ஒரு குறியீடாகப் பார்க்க வேண்டியேற்படுகிறது.

வாழ்பவர்கள் புழுக்களை அருவருப்பாய் பார்ப்பதென்பது அவர்கள் நாகரிகம் என்ற போலி உலகில் இருப்பதைக் காட்டுகிறது. உண்மையில் மனித உடலும் புழுக்களும் ஒரே உயிரியல் சங்கிலியின் கண்ணிகள் என்பது இங்கு மறைக்கப்படுகிறது.

புழுக்கள் ஆன்மாவிற்குள் நுழைவதாகக் கவிதை கூறுவதை ஒரு கவித்துவ மாயை என்பதாகவே அழைக்க முடியும். ஆன்மா என்பது ஒரு மர்மமான குறியீடு. உடல் அழியும்போது அங்கே ஆன்மா என்ற குறியீடும் அழிந்துவிடும். ஆனால் ஆன்மாவிற்குள் புழுக்கள் நுழைவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் கவிதையானது ஓர் உண்மையற்ற உண்மைத்தன்மையுடைய ஆன்மீகத்தைக் கட்டமைக்கிறது.

//முழுமையாய் தரிசிக்க முடியும்// என்பதுதான் இந்தக் கவிதை விவரிக்கின்ற ஆகப்பெரிய போலிமையாகச் சித்தரிக்கப்படக் கூடியது. ஒரிஜினல் என்பது இப்போது இல்லை, பிரதிகளின் பிரதிகளே உள்ளன என்ற வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் இக்கவிதையில் தாவரம் என்பது அந்த ஒரிஜினல். ஆனால், ஒருவன் மேலிருந்து பார்ப்பதும் ஒருவன் கீழிருந்து பார்ப்பதும் அந்தப் பிரதியைத் துண்டாக்குகின்றன என்பது வலியுறுத்தப்படுவதைக் கவிதையில் அறிகிறோம்.

முழுமை என்ற ஒன்றே கிடையாது. வாழ்வும் மரணமும் ஒருபோதும் சந்திக்க முடியாது. ஆனால் கவிதை, இந்த இரண்டையும் இணைத்து ஒரு செயற்கையான ஒருமைப்பாட்டை உருவாக்குகிறது. இது உண்மையான பிரிவை மறைக்க ஒரு திரை போலப் பயன்படுகிறது.

நரன் உடைய கவிதை, மரணம் என்ற பயங்கரமான மௌனத்தை மறைப்பதற்காக அதன் மீது வாழ்வு என்ற வண்ணத்தைப் பூசுகிறது, அல்லது மரணத்தின் மீது ஒரு அழகிய போர்வையைப் போர்த்துகிறது. நாம் மரணத்தை ஒப்பனைகளற்று உண்மையாகச் சந்திக்க அஞ்சுவதால் அதை ஒரு கல்லறை தாவரத்தின் வேர்களைத் தரிசிப்பதாக மாற்றிக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

மேல் செல்