கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மொழிபெயர்ப்பு என்னும் இலக்கிய  இன்றியமையாமை


பகிரு

இன்றைய மொழிபெயர்ப்பு உலகில், பிரஞ்சு - தமிழ் - ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடியாக மொழிபெயர்க்கக் கூடிய முன்னணி மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராகச் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக, புகழ் பெற்றப்  பிரஞ்சு எழுத்தாளர்கள் பலரின் நூல்களை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்து வரும் இவர் புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராக 35 ஆண்டுகளாகப் பணியாற்றிச் சென்ற ஆண்டு ஓய்வு பெற்றார். நம் சங்க இலக்கியச் செல்வங்களான "குறுந்தொகை", "ஐங்குறுநூறு"ஆகியவற்றை முழுமையாகப் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு, பிரஞ்சு எழுத்தாளர் தாஹர் பென் ஜெலூன் எழுதிய  "உல்லாசத் திருமணம்"(தடாகம் வெளியீடு) என்னும் நூலை மொழியாக்கம் செய்தார். அது சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகத் தெரிவு செய்யப்பட்டு, பிரஞ்சு அரசின் ரொமன் ரொலன் மொழியாக்க விருதைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு, பாரீசில் நடந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில், பிரான்சில் நிகழ்ந்த பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர் மாநாட்டில், மூத்த மொழிபெயர்ப்பாளராகப் பங்கேற்றார். மும்பை  "ஸ்பேரோ இலக்கிய விருது", "நல்லி திசை எட்டும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது", "பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய விருது" ஆகியவற்றை பெற்றுள்ளவர். 2025 ஆம் ஆண்டில் இவருக்கு பிரஞ்சு அரசின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து மொழியாக்கத் துறையில் இயங்கி வரும் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் "மணல் வீடு" இதழ் சார்பாக நேர்காணலை  நிகழ்த்தியிருப்பவர் புதுச்சேரிப் பாவலர், மொழிபெயர்ப்பாளர் புதுவை சீனு.தமிழ்மணி. இரு கவிதை நூல்களையும்,ஒரு கட்டுரை நூலையும் ஏழு மொழிபெயர்ப்பு நூல்களைத் தனித்தும் மூன்று நூல்களை இணைந்தும் மொழிபெயர்த்து  வெளியிட்டிருப்பதுடன், "கரந்தடி" என்னும் துளிப்பா இதழை  நடத்திய பெருமைக்கு உரிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆவார்.

சீனு. தமிழ்மணி: வணக்கம். தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு, முதலில் "மணல் வீடு" இதழின் சார்பாக வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன். அண்மையில் நீங்கள் ஆல்பர்ட் காம்யூ  எழுதிய "அயலான்"என்ற பிரெஞ்சுப் புதினத்தைத் தமிழாக்கம் செய்து, காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு இருக்கிறீர்கள். அந்த நூலிலிருந்தே  நம் நேர்காணலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அதைப்பற்றிக் கூற முடியுமா?

வெங்கட சுப்புராய நாயகர்: உண்மை தான். உங்களுக்கு விடையளிக்கும் முன் ஒரு திருத்தம். பிரஞ்சு  மூல ஆசிரியரின் பெயர் "ஆல்பர்ட் காம்யூ" அல்ல. பிரஞ்சு உச்சரிப்பின்படி அல்பெர் கமுய்(Albert Camus). அது தான் தமிழுக்கு நெருக்கமாக இருக்கும்.

அப்படியா?  இதே புதினம் 1980 வாக்கில் வெ. ஸ்ரீராம் மொழியாக்கத்தில் "அந்நியன்"என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியீட்டுள்ளது. அதில் இருந்தபடி உங்களிடம் கூறினேன். பெயர் உச்சரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா?

பெயர் உச்சரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி "இலக்கிய விடியல்"  என்ற இலக்கிய இதழில் "அது என் பெயர் அல்ல" என்ற தலைப்பில் விரிவாக ஒரு கட்டுரையில்  விளக்கி இருக்கிறேன்."சீத்தாபதி" என்ற பெயரை " சீத பேதி" என்றோ "கமல்" என்பதை "கேமல்" என்றோ " ஆறுமுகம்" என்று சொல்லாமல் "ஏறுமுகம்" என்றோ சொன்னால் நாம் ஏற்போமா? பல பிரஞ்சு  எழுத்தாளர்களின் பெயர்கள் தவறாகவே உச்சரிக்கப்பட்டு வருவது வருத்தத்துக்குரியது. சிறுகதை வடிவத்தின் முன்னோடியான புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மொப்பசான் (Maupassant) பெயரையும் பெரும்பாலான தமிழ் இலக்கிய இதழ்களில் மாப்பசான் என்றே வழங்கி வருவதைப் பார்த்திருப்பீர்கள். அண்மையில் ஒரு மொழியாக்க  நூலில் அந்த்துவான் தெ சேந்தெக்ஸுபெரி (Antoine de Saint-Exupéry) என்பது "ஆண்டுவான்  டி சான் எக்சுபெரி" என்று பிழையாக வந்துள்ளது.

இன்றைய கணினி யுகத்தில், அப்பெயரை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடினாலே கிடைத்துவிடும். இயன்ற வரை பிரஞ்சுப் பெயர்களை அதே உச்சரிப்பில் தமிழில் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

ஏற்கெனவே வெளியாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு புதினத்தை மீண்டும் மொழியாக்கம் செய்ய வேண்டுமா? செய்வதால் என்ன பயன்? அதைவிட வேறு ஒரு புது நூலை மொழிபெயர்க்கலாமே?

நல்ல கேள்வி. தமிழ் இலக்கியச் சூழலுக்கு வேண்டுமானால் இது புதுமையாக இருக்கலாம். ஆனால், மேலை நாடுகளில், ஒரே நூலுக்குப் பல மொழியாக்கங்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். 19 ஆம் நூற்றாண்டின் குய்ஸ்தாவ் ப்ளோபேர் (Gustave Flaubert) படைத்த "மதாம் பொவாரி"  (Madame Bovary) என்ற புகழ்பெற்றப் பிரஞ்சுப் புதினத்துக்கு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில மொழியாக்கங்கள் உண்டு.  இப்போது நான் மொழி பெயர்த்துள்ள "அயலான்" என்ற நூலுக்கும் ஆங்கிலத்தில் இதுவரை நான்கு மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன.

எனவே, மூல நூலின் பன்முகத்தன்மை, காலந்தோறும் மாறி வரும் மொழிச் சூழல், மொழிபெயர்ப்பாளரின் அணுகுமுறை, அனுபவம், வாசகர்களின் வரவேற்பு எனப் பல காரணங்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழியாக்கங்கள் தோன்றுவதும் புதுப்பிக்கப்படுவதும் இயல்பானது மட்டுமல்ல வரவேற்புக்குரியது.

மொழிபெயர்ப்பைப் புதுப்பிப்பது என்றால் என்ன? மூல நூலை மாற்றியமைப்பதாக ஆகி விடாதா?

இல்லை.மூலநூல் பொதுவாக முடிவான ஒன்று. ஒருவேளை அதை மாற்றி எழுத வேண்டு மென்றால் அதற்கான உரிமை, தகுதி உள்ளவர், அதன் ஆசிரியர் மட்டுமே. அந்த ஆசிரியரும் மறைந்த பின், அந்த நூல் வேறு ஒரு வடிவம் பெறுவதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை. ஆனால், மொழிபெயர்ப்பு அப்படி அல்ல. ஒரு காலத்தில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு, சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப வழக்கொழிந்த சொற்களை நீக்கி, நவீன சொற்களுடன் வாக்கிய அமைப்புகளை மாற்றி அமைத்துச் செம்மைப்படுத்துவது தான் புதிய மொழி பெயர்ப்பாளரின் பணியாகும்.

"அயலான்" தவிர, அல்பெர் கமுய்... (சரியாகச் சொல்கிறேனா?)

சரிதான்.

கமுய் எழுதிய வேறு சில நூல்களையும் நீங்கள் மொழிபெயர்த்துள்ளீர்கள். அந்த நூல்களைப் பற்றியும் கூறுங்கள்.

அவருடைய நூல்களில் முதலில் நான் மொழி பெயர்த்தது "வீழ்ச்சி"(2021). வாழ்க்கையின் அபத்தநிலையை  எதிர்கொள்ள முயலும் மனிதன் சந்திக்கும் சவால்களை விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மற்றவர்களின் மதிப்பீடுகளைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் ஒருவன், தன்னை மற்றவர்கள் மதிப்பிடுவதற்கு முன், முந்திக் கொண்டு தானே அந்த நடவடிக்கையில் இறங்குகிறான். தான் செய்யத் தவறியவை, தன் செயல்களில் வெளிப்பட்ட போலித்தனம் ஆகிவற்றைப் பட்டியலிடுகிறான். தமக்குத் தாமே வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் மாறி விடுகிறான். தான் செய்த தவறுகளுக்குத் தண்டனை கோருகிறான். இதன் மூலம் தன் மீது குற்றம் சாட்டும் மற்றவர்களும் இதே போன்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறான். அன்றைய அரசியல் சூழலில், அல்ஜீரியாவில் பிறந்த பிரஞ்சுக்காரரான கமுய், அங்கு அரேபியர் மீது நிகழ்த்தப்பட்ட பிரஞ்சுக் காலனித்துவ வன்முறைகளை முற்றிலுமாக எதிர்த்த போது, பிரஞ்சுச் சிந்தனையாளர்களான  ஆரோன், சார்த்தர் ஆகியோரின் கண்டனத்துக்குள்ளானார். அவர்களின் மதிப்பீடுகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்த நூல் அமைந்தது.

அடுத்ததாகப் "பெருந்தொற்று" என்ற புதினத்தை 2023 ஆம் ஆண்டு மொழியாக்கம் செய்திருந்தேன். இதுவும் அபத்த நிலைக்குப் பணிந்து போகாமல், அதை ஏற்க மறுத்து, எதிர்ப்புக் குரல் எழுப்பி ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகப் படைக்கப் பட்டது. இந்த இரண்டு மொழியாக்கங்களையும் காலச்சுவடு பதிப்பகம் தான் வெளியிட்டுள்ளது.

உங்கள் மொழியாக்க நூல்களைக் குறித்தும் மொழிபெயர்ப்பில் உங்கள் தனிப்பட்ட   அணுகுமுறை பற்றியும் சில கேள்விகள் உள்ளன. அதற்கு முன் நீங்கள் இந்த மொழிபெயர்ப்புத் துறைக்கு எப்போது வந்தீர்கள்? எது உங்களை இப்பணிக்கு வரவழைத்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அது குறித்து விரிவாகக் கூறுங்களேன்!

கல்லூரியில் படிக்கும் போது, சோதனை முயற்சியாகச் சில மொழிபெயர்ப்புகளைச் செய்து பார்த்தேன். தொடக்கத்தில் சில கடினமான பிரெஞ்சுச் சொற்றொடர்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். அதுபோன்ற முயற்சிகளில் வெற்றி அடையும் போது  கிடைக்கும் மனநிறைவு மேலும் சில சவாலான பகுதிகளை மொழியாக்கம் செய்யத் தூண்டியது. எனினும், என் மொழியாக்கங்கள் எனக்குள்ளேயே தேங்கிக் கிடந்தன. கல்லூரியில் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்த பிறகு தான் அவை வெளி உலகிற்கு அறிமுகமாகின. ஒரு நாள், சில மொழியாக்கங்களை  என் ஆங்கிலப் பேராசிரியர் ராஜாவிடம்(ராஜ்ஜா) காட்டிய போது,என்னை ஊக்குவித்தது டன், இலக்கிய இதழ்கள் சிலவற்றின் முகவரிகளைத் தந்து என் மொழியாக்கப் படைப்பு களை அனுப்பச் சொன்னார்.

நீங்கள் எப்போதும் நேரடி மொழிபெயர்ப்பை வலியுறுத்தி வருவதைக் கவனித்து வந்துள்ளேன். ஏன் அப்படி? ஆங்கிலத்தில் இருந்து தானே பெரும்பாலான  நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தால் அதில் தவறு என்ன? 

எந்த மொழியாக இருந்தாலும் அதை வேறு மொழிக்கு நேரடியாக மாற்றம் செய்வதையே நான் விரும்புகிறேன், வரவேற் கிறேன்,வலியுறுத்துகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு மொழியில் இருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் படுவதே சிறந்த முறை.இதற்குப் பல காரணங்களை என்னால் கூற முடியும்.தமிழில், அண்மைக் காலமாக,பெரும்பான்மையான மொழியாக்க நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் போக்கு நிலவுவதால், ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும்போது  அதில் நேரக்கூடிய சேதாரங்கள் பற்றிச்  சொல்கிறேன்: மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, அந்த ஆங்கில மொழிபெயர்ப்புதான் அவர்களுக்கு மூலநூல்.

நேரடியாக மொழிபெயர்க்கும் போது மூலநூல் மீது யாருக்கும் ஐயம் வருவதில்லை. ஆனால், மூலமாகக் கருதப்படும் இந்த மொழியாக்கத்தைப் பொறுத்த வரை, மொழிபெயர்ப்பாளர் அதனை முறையாகச் செய்துள்ளாரா என்பதும், முழுமையாகச் செய்துள்ளாரா  என்பதும் நமக்குத் தெரியாது. அவ்வாறு ஏதாவது ஒரு சில பகுதிகள் அறியாமலோ, அவசியமிருந்தோ விடுபட்டுப் போயிருந்தாலும் மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. எனவே, ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாக நம்பியே தமிழாக்கத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஏற்பட்டு விடுகிறது. பல ஆண்டுகள் கழித்து மூலமொழியும் தெரிந்த வாசகர் ஒருவர் இத்தகைய தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்க்க நேரும்போது முழுமையற்ற மொழிபெயர்ப்பாக அதனைக் கருதுவதுடன்,  மொழி பெயர்ப்பாளரிடம்தான் அவர் குறை காண்பார்.

சரி, மூல மொழியைத் தெரிந்த ஒருவர் ஆங்கில மொழி பெயர்ப்பைப் பார்த்து, மூல நூலுடன் ஒப்பிட்டு எந்தப் பகுதியும் விடுபடவில்லை என்று உறுதி செய்யப்பட்டால் அப்போது தமிழ் மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்?

சிக்கல் எதுவும் இல்லைதான். ஆனால், நீங்கள் கூறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஒருவேளை, மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் தமிழ்ப் பதிப்பாளர்கள் அதற்காக ஒரு குழுவை வைத்துத் தெரிவு செய்தாலும் கூட சில தடைகள் உண்டு.

விளக்கமாகக் கூற முடியுமா? 

 முதலில், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என எந்த மொழியின்  ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அது தமிழ் வாசகர்களுக்காகச் செய்யப் பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கில வாசகர்களின் தேவையை, பண்பாட்டை, சமூகச்சூழலை எனப் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்ப்பாளர் இயங்கி இருப்பார். மேலும், ஆங்கில மொழியின் அமைப்பு, சொற்களஞ்சியம், மரபுத் தொடர் கள் ஆகியவற்றை நிதானித்துச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக அது இருக்கும். மாறாக, மூல மொழியான பிரஞ்சில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப் படும்போது அந்தப் பிரதியில் உள்ள சில இலக்கணக் கூறு களையும் தமிழில் அதற்கு இணையான இலக்கணகூறுகள் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி மூல மொழியின் அழகு சிதையாமல் தமிழில் கொண்டு வர முடியும். எடுத்துக்காட்டாக, ஒருமை, பன்மை ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டும் நீ, நீங்கள் ஆகிய சொற்கள் தமிழைப் போலவே பிரஞ்சிலும் உண்டு. ஆங்கில மொழியாக்கத்திலோ இவற்றை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததால், மொழி பெயர்ப்பாளர் ஊகத்தின் அடிப்படையிலேயே அவற்றை மொழி மாற்ற இயலும்.

நீங்கள் நேரடி மொழிபெயர்ப்பை விரும்புவதற்கு இவை தவிர வேறு காரணங்கள் உண்டா? உங்கள் மொழிபெயர்ப்பைப் பதிப்பாளர் எப்படி சரி பார்க்க முடியும்? ஆங்கில மொழியாக் கத்தின் துணையோடு தானே முடியும்?

ஆங்கில மொழிபெயர்ப்பின் விளைவாக ஏற்படக்கூடிய சிக்கல்களை நானே சொல்ல வேண்டும் என்று இருந்தேன். அதற்கான முதல் காரணம் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாகத் தமிழில் வரும் மொழியாக் கத்தைப் பார்ப்போம்.

பிரஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள படைப்பைப் பொறுத்தவரை, அதையே மூல நூலாகவும், ஆங்கிலத்தை மூல மொழியாகவும்  கொண்டு தமிழாக்கத்தை வழங்க முயல்வார், மொழி பெயர்ப்பாளர்.ஆங்கில மொழிபெயர்ப்புகள் அனைத்தும் 100 விழுக்காடு சரியானவை, நம்பகமானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.பிழை நேர வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

வெளியாகும் அத்தனை மொழியாக்கங்களும் முறைப்படி சரி பார்க்கப்பட்டவையாக இருப்பதில்லை. அவ்வாறு பழுதுடன் வரும் மொழி பெயர்ப்பை நம்பி அதைத் தமிழாக்கம் செய்யும் போது பிரதியில் ஏற்படும்  சேதத்துக்கு மொழிபெயர்ப்பாளர் மறை முகமாகப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஏனெனில், மூல மொழியான பிரஞ்சும் அறிந்தவர் அத்தகைய தமிழ் மொழியாக் கத்தை வாசிக்கும் போது, தமிழ் மொழிபெயர்ப்பாளர்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழிபெயர்த்து இருக்கிறார் என்று இயல்பாக நினைப்பார்.

"பாவம் ஓரிடம் பழி ஓரிடம்" என்பது போல் ஆகிவிடும்.

ஆங்கில மொழியாக்கத்தால் நேரடி மொழிபெயர்ப்பாளர் சந்திக்கக் கூடிய நெருக்கடிகள் எவை?

நீங்கள் குறிப்பிட்டதைப் போல், பெரும்பான்மையான தமிழ்ப் பதிப்பாளர்கள் ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படை யாகக் கொண்டு பிரஞ்சில் இருந்து வரும் தமிழாக்கத்தைச் சரி பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். அது தவறாகும். உண்மையில் சிறந்த மொழியாக் கங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ள பதிப்பாளர்கள், நேரடித் தமிழாக்கத்தையே ஊக்குவிக்க வேண்டும். மொழியாக்கத்தின் தரத்தை, துல்லியத்தைத்  தகுதி வாய்ந்த மொழி அறிஞர்களைக்  கொண்ட குழுவின் துணையோடு மதிப்பிட்டு,சரிபார்த்து, செம்மைப் படுத்தி வெளியிட முயல வேண்டும். ‍அப்போதுதான் தமிழ் மொழியாக்கத்தின் தரம் உயரும். நம்பகத்தன்மை வாசகரிடையே அதிகமாகும், நீடிக்கும்.சில நேரங்களில், ஆங்கில மொழி பெயர்ப்பாளர் சில பகுதிகளை, சொற்களை, கருத்துகளை விட்டு விட்டு மொழிபெயர்த்து இருப்பார்.அதே போல், சில சொற்களைத் தேவை கருதி சேர்த்திருக்கவும் வாய்ப்பு உண்டு.அவ்வாறு செய்வதற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும்.

அவர் செய்திருக்கும் அந்த மொழியாக்கத்தை அடிப்படையாக வைத்து, தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது நம் மொழிக்கு அது பொருந்தா மல் போகும்.இந்தச் சிக்கல் குறித்தெல்லாம் எதுவும் தெரியாமல், சிந்திக்காமல், ஆங்கில மொழியாக்கத்தை மூல நூலாகக் கொண்டு, நேரடி மொழியாக்கத்தில் குறை காணும் போக்கு வருத்தத்துக்கு உரியது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கது; நகைப்புக்குரியது.

நீங்கள் கூறுவது சிந்திக்க வேண்டிய ஒன்று தான்.அவ்வாறு முழுமையாக இல்லாத ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக் கிறீர்களா?

பார்த்திருப்பதால் தான் என்னால் உறுதியாகக் கூறமுடிகிறது. பதிப்பாளர்களிடமும் இதனைச் சுட்டிக்காட்டிப் புரிய வைத்திருக்கிறேன்.

ஆங்கில மொழியாக்கத்தை மூலமாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்க்கும் போது

எது போன்ற இடங்களில் தவறு நேர வாய்ப்பு இருக்கிறது?

அது அந்தந்தப் பிரதி, மொழிபெயர்ப்பாளர், குறிப்பிட்ட சொல் என மாறுபடும்.சான்றாக, பண்பாட்டுக் கூறுகளைத் தமிழாக்கம் செய்யும் போது, சில நேரங்களில் பிழை நேரும். எடுத்துக்காட்டாக, உயர்நிலைப் பள்ளியைக் குறிக்க Collège ( கொலேழ்) என்ற சொல்லைப் பிரஞ்சு மொழியில் பயன்படுத்துவார்கள். இதை ஆங்கிலத்தில்  'காலேஜ் ' என்ற சொல்லுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. புதுச்சேரியில் கூட  "கல்வே காலேஜ்" என்ற உயர்நிலைப் பள்ளியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். காரைக்கால் பகுதியில் உள்ள "மாடர்ன் காலேஜ்" என்பதும் பிரஞ்சு மொழியின் தவறான ஆங்கில மொழியியாக்கத்தால்  கல்லுரியாகி விட்டது. பிரஞ்சு மொழியை அறியாதவர்கள், எளிதாக இதனைக் கல்லூரி என்று நினைத்துக் குழம்பி விடுவார்கள்.

இதேபோல், பிரஞ்சுப் பாடத் திட்டம் குறித்து விரிவாகத் தெரியாதவர்களுக்கும் குழப்பம்தான் மிஞ்சும். பிரஞ்சுக் கல்வித் திட்டத்தின் படி, "3ஆவது நிலை" என்பது 14 அல்லது 15 வயதுள்ளவர்கள் இருக்கும் வகுப்பு. 

அப்படி என்றால்  ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்யவே கூடாது என்று கூறுகிறீர்களா?

அப்படி இல்லை.  ஒரு மொழிக்கு நேரடி மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத போது,எளிதில் கிடைக்காத போது, வேறு வழியில்லை என்ற நிலையில் மட்டும் அவ்வாறான ஆங்கில வழி மொழி பெயர்ப்புகளை நாடலாம். மேலும், ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள், முனைப்புடன் மூல மொழியின் மொழியியல், அரசியல், வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை  அறிந்து செயல்பட்டால் அத்தகைய மொழிபெயர்ப்புகளை நிச்சயம் வரவேற்கலாம். அகராதிகளை மட்டுமே நம்பி மொழிபெயர்ப்பில் இறங்கும்போதுதான் மொழிசார் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து விடுகின்றன.

அகராதிகள்தானே மொழிபெயர்ப்பாளருக்கு இன்றியமையாத துணை?

ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரம், மொழிபெயர்ப்பாளர் ஒன்றை மறந்து விடக்கூடாது. அகராதி என்பது அந்த மொழியில் உள்ள சொல்லுக்கு இணையான சொற்களையும், உரிய பொதுவான விளக்கத்தையும், அச்சொல்லின் பயன்பாட்டையும் இலக்கணக் குறிப்புகளையும் வழங்க உருவாக்கப்பட்டதாகும். தாம் மேற்கொண்டு இருக்கும் மொழிபெயர்ப்புப் பிரதியில் உள்ள சொல்லுக்குத் தேவை யான சொல் உறுதியாக அங்கு கிடைத்துவிடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நூலாசிரியர் எந்த நோக்கத்தில் எழுதி இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அந்தக் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளை மொழிபெயர்ப்பாளர் கண்டடைய வேண்டும். கிடைக்காத போது, சில நேரங்களில் புதிய சொல் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு மொழிபெயர்ப்பாளருக்கு உண்டு. எனவேதான், தாய் மொழியில் புதிய சொற்களை உருவாக்கி அந்த மொழிக்கு வளம் சேர்க்கும் பணியில் மொழி பெயர்ப்பாளருக்குப் பெரும் பங்கு உண்டு என்பேன்.

நேரடி மொழிபெயர்ப்பு குறித்து மேலும் ஒரு கேள்வியை மறந்து விட்டேன். உங்களைப் போல் பிரஞ்சு மொழியில் இருந்து நேரடியாக மொழி பெயர்ப்பவர்கள் இப்போது நிறைய பேர் இருக்கிறார்களா?

ஏன் இல்லை. ஷெவாலியே சச்சிதானந்தம், வரலாற்று அறிஞர் ஓர்சே மா.கோபாலக் கிஷ்ணன்,மறைந்த  ஷெவாலியேக்கள் திருமதி மதன கல்யாணி, மதன கோபாலன், என் பேராசிரியர் கொமாந்தேர் இரா. கிருஷ்ண மூர்த்தி, ஷெவாலியே ஸ்ரீராம், பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, ஷெவாலியே சு. பன்னீர்செல்வம், பேராசிரியர்கள் ஜெயராஜ் டேனியல், இரா. புகழேந்தி, திருமதி ராதா எனப் பலரும் நேரடி மொழிபெயர்ப்பில்  இயங்குபவர்கள் தான்.

 சில ஆண்டுகளுக்கு முன், "குமுதம்-தீராநதி"யில்  நீங்கள் எனக்கு அளித்த நேர்காணலில் மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழில் அவ்வளவாக வரவேற்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகத் தெரிவித்திருந்தீர்கள். அதில் ஏதேனும் மாற்றம் உண்டா ?

பொதுவாக, மொழிபெயர்ப்பாளர்களைப் படைப்பாளர்களுக்குச் சமமாக  ஏற்றுக்கொள்ளத் தயங்கும் போக்கு இன்றும் சிலரிடம் இருப்பது  வருத்தத்துக்குரியது தான்.மொழிபெயர்ப்பாளர்களும் ஒரு வகையில் படைப்பாளர்கள் தான் என்பதை அந்த நேர்காணலிலும் நான் சில சான்றுகளுடன் சொல்லி இருக்கிறேன்.

யாரோ எழுதிய பிரதி ஒன்றை வேற்று மொழியில் எழுதுவதால் மட்டுமே படைப்பாளர் என்ற தகுதி கிடைத்து விடுமா என்று கேட்பவர்கள் குறித்து?

மொழிபெயர்ப்பை மேலோட்டமாக எடை போடுபவர்கள், அதன் அடிப்படை  அம்சங் களை அறியாதவர்கள், அந்தத் துறையின் மதிப்பு, பயன், வீச்சு ஆகியவற்றை அதாவது, அந்தத் துறையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. கீதை, பைபிள், குரான் போன்ற சமய நூல்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற புகழ்பெற்ற  இதிகாசங்கள், மேலை நாட்டு மெய்யியல் கோட்பாடுகள், உலகம் முழுவதிலும் இருந்து கிடைக்கும் அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், பண்பாட்டு, வரலாற்றுத் தகவல்கள், அன்றாடச்செய்திகள் என நம் வாழ்வை இயக்கும் அத்தனைச் சக்திகளையும் நமக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை இத்துறை தான் செய்து வருகிறது என்பதை நினைவில் கொண்டால் இதன் அருமை புரியும், தவறான மதிப்பீடு, பார்வை ஆகியவை அகலும்.

மொழிபெயர்ப்பை மேற்கொள்ளும் போது, எந்த அளவுக்கு மூல ஆசிரியருக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?

இயன்ற வரை மூலப்பிரதிக்கு விசுவாசமாக இருப்பது தான் முறை. அதே நேரத்தில், இந்த விசுவாசம் என்பது அடிமைத் தனமாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

மொழிபெயர்க்கப்படும் மொழியின் இலக்கண விதிகளுக்கு ஏற்ப வாக்கிய அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உண்டு. என்றாலும் தம் எல்லைகளை மொழி பெயர்ப்பாளர் மறக்கக் கூடாது; தாண்டக் கூடாது. குறிப்பாக, கவிதையை மொழிபெயர்ப்பு செய்யும் போது, இது போன்ற எல்லைமீறல் நேர்ந்து விடுவதைப் பார்க்கலாம். மொழிபெயர்ப்பாளர் தாமும் ஒரு கவிஞராக இருந்து விட்டால், தம்மை அறியாமல் இந்த "ஆக்கப் பிழை"யைச் செய்து விடுவார். எதுகை, மோனை,இயைபு வேண்டி மூலக் கவிதையில் இல்லாத சில சொற்களை, நயத்தைக் கூட்டிக் கவிதையை மெருகூட்டி இருப்பார். எனினும் அதைச் சரியான, நேர்மையான மொழியாக்கமாகக் கருத முடியாது. மொழியாக்கம் செய்ய வந்து சொந்தக் கவிதையை எழுதி விடுவார்.

பிரஞ்சு இலக்கியக் கோட்பாடுகள் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதில் குறைபாடுகள் நிறைய இருப்பதாகப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பிரஞ்சும் ஆங்கிலமும் அறிந்த உங்களிடம் இது போன்ற மெய்யியல் நூல்களின் மொழியாக்கங்களை எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வரும் மொழியாக்க நூல்கள் பல புதிய பிரஞ்சுக் கோட்பாடுகளைப் பரவலான தமிழ் வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ள உதவும். மேலும், திறனாய்வாளர்கள், தமிழ்இலக்கியப் பிரதிகளைப்  புதிய நோக்கில் அலச ஊக்கம் பெறுவர்.

இலக்கிய மொழிபெயர்ப்பை விட இத்தகைய மெய்யியல் கோட்பாடுகளின் மொழியாக்கம் உண்மையில் சவாலானது. மெய்யியல் துறையில் நல்ல பயிற்சி, தேர்ச்சி, அனுபவம் பெற்றவர் மொழியாக்கம் செய்யும் போது தான் அது முழுமையடையும். எனினும், என்னால் இயன்ற வரை அத் துறை சார்ந்த படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்க்கத் தொடங்கி இருக்கிறேன். மேலும் உங்கள் குறை தீரும் வகையில், "பிரஞ்சு  சிந்தனையாளர்கள்" என்ற தலைப்பில் அருமையான நூலொன்றை மறைந்த என் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்துச் சென்றுள்ளார். விரைவில் அந்த நூல் வெளிவரும்.

இது தொடர்பாக, மேலும் ஒரு கேள்வி.

புதுச்சேரி, பிரஞ்சு ஆளுகையின் கீழ் இருந்தும் பிரஞ்சு அறிந்த தமிழர்கள் பலர் இருந்தும், பிரஞ்சில் உள்ள நல்ல படைப்பு களைக் குறிப்பிடப்படும் அளவில் தமிழில் மொழி பெயர்த்து வெளிவராததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்.பிரஞ்சு ஆட்சியில் இருந்து 1954 ஆம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது.72 ஆண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில், நூற்றுக்கணக்கில் மொழியாக்க நூல்கள் வந்திருக்க வேண்டும்.பெரும் அளவில்  பிரஞ்சு,தமிழ் மொழிகளுக்கு இடையில் இலக்கியப் பரிமாற்றம் நடந்து இருக்க வேண்டும்.அப்படி நிகழாமல் போனது வருத்தத்துக்கு உரியதாகும்.அதற்கான காரணங்கள் எனப் பலவற்றை எண்ணிப் பார்க்கலாம்.

முதலாவதாக, அங்கொன்றும் இங்கொன்றும் என நடந்த சில மொழியாக்கங்களுக்கும் வெளியிட இலக்கிய இதழ்கள், நிதி உதவி எனப் போதிய வரவேற்பு கிடைக்காத நிலை,இரு மொழி அறிந்தவர்கள் அதிக அளவில் இலக்கிய மொழியாக்கத்தில் ஆர்வம் காட்டாத போக்கு, அரசும் மொழி அமைப்புகளும் அவர்கள் மீது அக்கறை செலுத்தாத மெத்தனம்.நான் கூறி இருக்கும் இந்தக் காரணங்கள் தனித்தும், ஒன்றை ஒன்று தொக்கி நிற்பதையும் உணரலாம். எது எப்படியோ, இழப்பு இரு மொழி இலக்கியத்துக்கும் தான்.இதில் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். "தொடக்கக் கால மொழி பெயர்ப்பாளர்களில் சிலர், போதிய பயிற்சியும் மொழி அறிவும் இல்லாமல் மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாத தோல்வியைத் தழுவி உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்"என்று  அறிஞர் மருதநாயகம் தன்னுடைய "கிழக்கும் மேற்கும்"என்ற நூலில் குறிப்பிடுகிறார். இக்கருத்தை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி வரும் காலங்களில், மொழிபெயர்ப்புத்துறையில் இத்தகையத் தேக்க நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

தன்னலமற்ற மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் உழைப்பை நல்க முன் வர வேண்டும்; அவர்களை உரிய பதிப்பாளர்கள் ஊக்குவித்துப் பிழையற்ற மொழிபெயர்ப்பை வெளியிட வேண்டும்; மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்வித்துறையும், மொழியியல் நிறுவனங்களும், தமிழ்க் காப்பு அமைப்புகளும் ஆக்கப்பூர்வமான முறையில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்; கல்லூரி மாணவர்களிடையே, மொழிபெயர்ப்புத் துறையின் அவசியத்தையும்,மதிப்பையும் வலியுறுத்தும் வகையில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், போட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும்.இதன் மூலம் புதியவர்கள் இந்த மகத்தான பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவையெல்லாம் நடந்தால் நிச்சயமாக இந்தத் துறை ஏற்றம் பெறும்.

 மொழிபெயர்ப்புக்காகப் பிரஞ்சு அரசு என்னென்ன பணிகளைச் செய்துள்ளது எனக் கூற முடியுமா?

பொதுவாகவே தன் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல பெரும் முயற்சிகளைப் பிரஞ்சு அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பிரஞ்சுப் படைப்புகளின் 

மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட இந்தியப் பதிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. தமிழ், வங்காளம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை பல மொழியாக்க நூல்கள் வெளிவர இது போன்ற உதவி கிடைத்துள்ளது. அத்துடன், இப்படி இந்திய மொழிகளில் வெளியாகும் மொழியாக்க நூல்களில், ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஒன்றைத் தேர்வு செய்து, ரொமன் ரொலன் (Romain Rolland) விருது வழங்கி மொழி பெயர்ப்பாளர் களை ஊக்குவித்து வருகிறது.

ஆமாம். நீங்களும் அந்த விருதை "உல்லாசத் திருமணம்" என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்காக பெற்றீர்கள் என்பதை நான் அறிவேன்.அது எந்த ஆண்டு?

2021 ஆம் ஆண்டுக்கான பரிசு அது. இந்த விருதை என் பேராசிரியர் கிருஷ்னமூர்த்தி  இரு முறை பெற்றுள்ளார் என்பதுடன், இந்த நிதி நல்கையுடன் தமிழ் மொழியில் தான் அதிக அளவில் மொழியாக்க நூல்கள் வெளிவருகின்றன என்பதும் பெருமைக்குரியது.  இந்த விருதில், பரிசுத்தொகை என்று எதுவும் இல்லை. ஆனால், வெற்றி பெற்ற மொழிபெயர்ப்பாளரும், நூலை வெளியிட்ட பதிப்பக உரிமையாளரும் பாரீசில் நடைபெறும் சர்வதேசப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கப்பட்டு, விசா உள்ளிட்ட தூதரகப் பணிகள், பயணச்சீட்டு, தங்குமிடம் என எல்லாவற்றிற்குமான பொறுப்பையும்,  செலவையும் பிரஞ்சு அரசு ஏற்றுக் கொள்ளும்.

 கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற வேண்டிய வழக்கமான சர்வதேசப் புத்தகத் திருவிழா நடைபெறாமல் போகவே, அடுத்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு அந்த புத்தகத் திருவிழாவில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நல்ல வாய்ப்பு அது. மொழியாக்க நூல்கள் வெளிவர  பிரான்சு அரசிடம் இருந்து நிதி உதவி ஏதாவது கிடைக்கிறதா?

பிரஞ்சு மொழியிலிருந்து அதிக அளவில்  மொழிபெயர்ப்புகள்  வெளிவருவதை ஊக்குவிக்கும் வண்ணம், ஆண்டுதோறும் அத்தகைய மொழியாக்கப் பணியில் ஈடுபடும் உலகம் முழுவதும் உள்ள மொழி பெயர்ப்பாளர்கள் சிலரைப் பிரெஞ்சு நிறுவனம் தெரிவு செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிரான்சில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தங்கி அப்பணியை முடித்துத் திரும்ப பிரஞ்சு அரசு நிதி உதவி செய்கிறது. மூல ஆசிரியரைச் சந்தித்துத் தம் ஐயங்களைக் களைய வாய்ப்பாக இந்தப் பயணம் உதவும். சான்றாக, 2018 ஆம் ஆண்டில் நானும் என் மனைவி சிவகாமியும் தென் பிரான்சு பகுதியில் உள்ள ஆர்ல் (Arles) என்ற நகரில்,சர்வதேச இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் மையம் எனும் நிறுவனத்தில் 3 மாதங்கள் தங்கி, அப்போது நான் மேற்கொண்டிருந்த மொழியாக்கப் பணியை முடித்து வந்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட "விரும்பத்தக்க உடல்" என்ற அந்த நூலின் மூல ஆசிரியர் ஹுய்பர் ஹதாத் (Hubert Haddad) அவர்களைப் பாரிஸ் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து உரையாடி, நூலில் உள்ள சிக்கலான பகுதி களைப் புரிந்து   கொண்டேன்.

அந்த இலக்கிய மொழி பெயர்ப்பாளர் மையத்தின் மற்ற சிறப்புகள் குறித்து..

உலகெங்கும் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் இந்த மையத்தில் வந்து தங்கி இங்கு இருக்கும் நல்லதொரு நூலகத்தைப் பயன்படுத்த முடியும். அதே வளாகத்தில்  இயங்கி வரும் அந்த நூலகம், மொழிபெயர்ப்புக் களஞ்சியம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளுக்கான அகராதிகள், ஐரோப்பிய மொழிகள் தவிர உலக மொழிகளுக்கான அகராதிகள், வட்டார வழக்கு அகராதிகள் என எல்லாம் கிடைக்கும். 24 மணி நேரமும் அந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம். அலுவல் நேரத்தில் மட்டும் நூலகப் பொறுப்பாளர்களாக இருவர் பணி செய்வதைப் பார்க்க முடியும். இரவு நேரத்தில் நூல்கள் தேவைப்படுவோர், கடவு எண் ஒன்றின் மூலம் அதனுள் போய் பார்வையிடலாம். அலுவல் நேரமாக இருந்தாலும் மற்ற நேரமாக இருந்தாலும் நூல் தேவை என்றால், மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் சீட்டு ஒன்றில், நூலை வாசிக்க எடுப்பவர் பெயர், கைப்பேசி எண் ஆகியவற்றை அந்த நூல் இருந்த இடத்தில் வைத்து விட்டு, நூலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும். அவசரமாக அதே நூலைத் தேடி வருபவர், அந்தக் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டு நூலைப் பெற இந்த ஏற்பாடு உதவும். புத்தகத்தை எடுத்துச்செல்பவர், தெரிந்தோ, தெரியாமலோ அவ்வாறு சீட்டை எழுதி வைக்க மறந்தால் என்னவாகும் என்று, நூலகப் பொறுப்பாளரிடம் எனக்குள் எழுந்த ஐயத்தை எழுப்பினேன்."அப்படி பொதுவாக நடக்காது. ஒருவேளை, நூல்கள் திரும்பி வராமல் போனாலும் அந்த நூல்கள் உடனடியாக வாங்கி வைக்கப்படும்" என்று விளக்கினார். நூலகப் பராமரிப்பில் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு என்னை வியப்பில் ஆழ்த்தியது.

நீங்கள் பிரான்சு சென்ற போது, ஹுய்பர் ஹதாத் என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சந்தித்து உரையாடியதாகச் சொன்னீர்கள்.வேறு எழுத்தாளர்கள் யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைத்ததா ?

மிக்காயேல் ஃபெரியே (Michael Ferrier) வையும் சந்தித்தேன்.

அவரது நூல் ஒன்றையும் நீங்கள் மொழியாக்கம் செய்துள்ளீர்கள்.

நிலநடுக்கம் குறித்த நூல். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

"ஃபுக்குஷிமா"( Fukushima) என்ற அந்த நூல் சுனாமி, நில அதிர்வு, அணு உலை விபத்து என ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமாவில் நேர்ந்த மூன்று பேரிடர்களை விவரிக்கும் முக்கியமான பதிவாகும். அந்த நேரத்தில், அவற்றை நேரில் கண்ட சாட்சியமான நூலாசிரியர் ஃபெரியே, அங்கு பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.அதே ஃபெரியே தம் பள்ளிப் பருவ வயதை ஓட்டித் தனக்கேற்பட்ட  அனுபவங்களைத் தன் வரலாற்று நூலாக  எழுதியுள்ளார். அந்த நூலை மொழியாக்கம் செய்து, "கலையும் நிலம்" என்னும் தலைப்பில் தடாகம் பதிப்பகம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளேன்.

இப்போது எந்த நூலின் மொழியாக்கப் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர் மொலியேர் படைத்த "கற்பனை நோயாளி"என்னும் நாடகத்தை தமிழாக்கம் செய்து முடித்துள்ளேன். புதுச்சேரி தமிழன்னை ஆய்வகம் விரைவில் அதனை வெளியிடும்.

சென்ற ஆண்டு பணி நிறைவு பெற்று விட்ட நீங்கள், இனிவரும் நாள்களில் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?

பிரஞ்சு நூல்களின் தமிழாக்கம் ஒருபுறம் இருக்க, தமிழின் முக்கியக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைப் பிரஞ்சு மொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளது. நான் பிரஞ்சு மொழியில் செய்து முடித்த  சங்க இலக்கிய மொழியாக்கங்களான குறுந்தொகை, ஐங்குறுனூறு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, சங்ககாலப் பெண் புலவர்கள் படைத்த பாடல்களின் தொகுப்பு ஒன்றைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறேன். ஏற்கெனவே என்னால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் பிரஞ்சு மொழியாக்கத் தொகுப்பு ஒன்றை வெளியிடவும் எண்ணம் உள்ளது. இதே போல், பிரஞ்சு கவிதைகள், நாட்டுப்புறக் கதைகள்,  ஆகியவற்றை மொழிபெயர்க்கவும் திட்டம் இருக்கிறது.

உங்களைத் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபடச் செய்யும் சக்தி எது?

மொழியாக்கங்கள் தரும் அனுபவம், அவற்றில் கிடைக்கும் மன நிறைவு, உங்களைப் போன்ற வாசகர்கள், நண்பர்கள், மாணவர்கள் கூறும் ஊக்க மொழிகள் தான் எனக்குப் புதிய நூல்களை  மொழிபெயர்க்கும் ஆர்வத்தையும்  நம்பிக்கையையும்  அளிக்கின்றன.

ஏற்கெனவே நான் வலியுறுத்திய மெய்யியல் நூல்களின் மொழியாக்கத்தை மறக்க வேண்டாம். உங்கள் மொழியாக்கத் திட்டங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துகள். 

மொழியாக்கத்தில் என் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவும் கேள்விகளை எழுப்பிய உங்களுக்கும்,இந்த நேர்காணலை வெளியிடும் "மணல் வீடு"இதழுக்கும் மிக்க நன்றி.

......

மேல் செல்