எது இயல்பானது, எது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியது, எது அழகற்றது, எது ஒழுக்கம், எது மதிக்கத்தக்கதல்ல போன்றவைகளையே சமூகச் சொல்லாடல்கள் என்கிறோம். சமூகச் சொல்லாடல்கள் என்பன இயற்கையானதல்ல; அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டவை. தமிழ்ச் சமூகத்தில் விளிம்புநிலை சாதிகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்றவர் பற்றிய பொது அபிப்ராயம் தாழ்த்தப்பட்டதாக, தீண்டத்தகாததாக, சுத்தமற்றதாக, ஒழுக்கக்குறைபட்டதாகவும், குற்றம் புரிபவையாகவும் வரையறுக்கிறது. இவை சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரும் கற்றுக்கொண்டுள்ள பயின்றுகொண்டுள்ள சமூகச் சொல்லாடல்களின் தொகுப்பாகும். ஆக இங்குச் சமூகச் சொல்லாடல்கள் என்பவை முழுக்க முழுக்க உண்மையின் மீது கட்டப்பட்டவை அல்ல. மேலும் அது ஒரு நபராலும், ஒரு நாளிலும் கட்டப்பட்டதும் அல்ல. சமூகச் சொல்லாடல்கள் சமூக அதிகாரத்தாலும் சமூக அறிவாலும் உற்பத்தியாவதும் காலத்தால் நிலைபெறுவதும் ஆகும். இவ்வாறான சமூகச் சொல்லாடல்களாகவே சாதியப் பழக்கங்களும் பெண்ணடிமைத்தனமும், தீண்டாமையும் நம் சமூகத்தில் நிலைப்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சமூகங்களைக் கடுமையாக வஞ்சித்து வந்த இந்தக் கொடூரமான, மனிதாபிமானமற்ற சமூகச் சொல்லாடல்களை அந்தந்த சமூகங்கள் பெரும் தண்டனையாகப் பார்த்துவந்தனர்/ வருகின்றனர். அதாவது ஒரு தலித் குழந்தை பிறக்கும்போதே இந்தச் சமூகச் சொல்லாடல்கள் சூழ்ந்த சிறைக்குள் விழுகிறது. இங்கு வஞ்சிக்கும் சமூகச் சொல்லாடல்களினுள் குழந்தைக்கு வளரும் போதே அதன் பால் உறுப்பு மற்றும் மரபு வழித் தொடர்ச்சியைப் பொறுத்து அதற்கான சிறை எழுப்பப்படுகிறது. ஆக, சமூகச் சொல்லாடல்கள் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு வாழ்நாள் தண்டனையை வழங்கும் ஒரு சமூக-பண்பாட்டு-மொழி சார்ந்த பெரிய அமைப்பு. இந்தப் பெரிய அமைப்பிலிருந்து யாரும் விடுபட இயலாது.
விளிம்புநிலைச் சமூகங்களை வஞ்சிக்கும் சமூகச் சொல்லாடல்களை மாற்றுவது எப்படி? இதற்கு முன்னர் இந்த முயற்சியில் யாரேனும் செய்திருக்கிறார்களா? என்று வரலாற்றில் ஆராயும்போது சமூக நீதி, சமத்துவம் சார்ந்த அரசியலின் செயல்திட்டமாகவே சமூகச் சொல்லாடல்களுக்கு எதிரான போராட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அதாவது அடக்குமுறைக்கு உள்ளாகும் சமூகங்களுக்காகச் சமூக அரசியல் செயல்பாடுகளில் மிகப் பொதுவாகக் காணப்படும் ஒரு குணாம்சமாகத் திரும்பச்செய்தலைக் கருதலாம்.
வஞ்சிக்கும் சமூகச் சொல்லாடல்களுடனான போராட்டத்தில் மிக முக்கியமான உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் இரண்டு முக்கியமான ஆளுமைகளை எடுத்துக்கொண்டு இந்தக் கட்டுரை விவாதிக்க விரும்புகிறது. ஒன்று பண்டிதர் க.அயோத்திதாசர், மற்றொருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவ்விருவரும் வஞ்சிக்கும் சமூகச் சொல்லாடல் மீதான போராட்டத்தில் திரும்பச் செய்தலை பிரதானமாகப் போராட்ட ஆயுதமாகக் கையாண்டுள்ளனர்.
போலச் செய்தல் மற்றும் திரும்பச் செய்தல் ஆகிய இரண்டு சமூக நகர்வை இருபதாம் நூற்றாண்டு துவங்கி தமிழ்ச் சாதிகள் செய்யத் துவங்கின. அதாவது படிநிலையில் கீழுள்ள சமூகங்கள் உயர்பிரிவினரைப் போலத் தங்கள் பண்பாட்டுச் செயல்பாடுகளைக் கட்டமைக்கத் துவங்கினர். அருகாமைச் சமூகங்களே அதிகமாகப் போலச் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போலச் செய்தலை அந்தந்த சமூகங்கள் தன்னுணர்வற்ற, பிரஞ்ஞையற்ற செயலாகவே மேற்கொள்கின்றனர். இதற்குச் சற்று தலைகீழாகக் குறிப்பிட்ட சாதியச் சமூகங்கள் தன்னுணர்வுடனும் பிரஞ்ஞையுடனும் பிறசாதியின் சமூக-பண்பாட்டுச் செயல்பாடுகளைப் பிரதிச் செய்கின்றனர். இந்தப் பிரஞ்ஞைப் பூர்வமான செயல்பாட்டைத் திரும்பச்செய்தல் என்றழைக்கபடுகிறது.
செட்டியார் போன்ற வணிகச்சாதிகள் தங்களை வைசியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டதும், ஆசாரி சமூகங்கள் தங்களை விஸ்வகர்மாக்கள் அடையாளப்படுத்திக் கொண்டதும், வன்னியர்கள் தங்களைச் சத்திரியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதும் பார்ப்பனர்களைப் போலச் செய்தல் நடைமுறை. அதாவது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனச் சொல்லாடல்களுக்குள் தங்களைச் சரியாகப் பொருத்திக் கொள்ளும் செயல்பாட்டையே போலச்செய்தல் என்கிறோம். பார்ப்பனச் சொல்லாடல்களில் சூத்திரராக வரையறுக்கப்பட்டிருந்த சாதிகள் தங்களை வணிகர்களாகவோ, சத்திரியர்களாகவோ நகர்த்திக் கொள்ளும் மாற்றத்தை அச்சொல்லாடல் தடுப்பதில்லை. ஆனால், தீண்டத்தகாத சாதிகள் அவ்வாறான நகர்வுக்கு உட்பட இயலாது. வர்ணப்படிநிலைக்குள் தீண்டப்படாத சாதிகள் இடம்கோருவதை மேலாண்மைச் செய்யும் சமூகச் சொல்லாடல்கள அனுமதிப்பதில்லை.
இதே காலக்கட்டத்தில் க.அயோத்திதாசர் திரும்பச் செய்தலைக் கையிலெடுக்கிறார். அதாவது சமூக மேலாண்மைச் செய்யும் சொல்லாடல்களுக்கு மாற்றான சொல்லாடல்களை உற்பத்திச் செய்வதை அடிப்படையாகக் கொண்டு சமூக-பண்பாட்டு-மொழிச் செயல்பாட்டை முன்னெடுக்கிறார். உதாரணமாக இந்திர தேச சரித்திரம் என்ற நூலில் இந்திர தேசம் என்ற பொற்காலத் தொன்மத்தைக் கட்டமைக்கிறார். அந்த நூல் பறையர் தோற்றத் தொன்மத்தை மறுகட்டமைப்பைச் செய்கிறது. அதாவது முன்னொரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் இந்திர தேசம் என அழைக்கப்பட்டது. பௌத்தநெறி தேசமெங்கும் தழைத்திருந்தது. அப்போது சகட, மகட மற்றும் திராவிட மொழிகள் வழக்கத்தில் இருந்தது. யதார்த்த பார்ப்பனர்கள் கல்வி, சமயம் ஆகியவற்றில் தலைசிறந்திருந்தனர். அதன் காரணமாக யதார்த்தப் பார்ப்பனர்களுக்கு நாடெங்கும் மரியாதை பெருகியிருந்தது. அப்போது புதிதாகத் தேசத்திற்குப் பஞ்சம் பிழைக்க வந்த குழுவினர் யதார்த்த பார்ப்பனர்களுக்கு நிலவிய சமுக அந்தஸ்தைப் பார்த்தனர். அவர்களின் சமய செயல்பாடுகளைப் போலச்செய்து கொஞ்சம் கொஞ்சமான மக்களையும் மன்னர்களையும் ஏமாற்றிச் சமூக அந்தஸ்தைப் பெற்றனர். புதிதாகச் சமூக அந்தஸ்தைப் பெற்ற வேசப்பார்ப்பனர்களின் சூழ்ச்சியை மக்களிடம் எடுத்துச்சொன்ன யதார்த்த பார்ப்பனர்களைப் பறையர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுச் சமூகக் கீழ்நிலைக்கு நகர்த்தினர். இவ்வாறான தொன்ம மறுவரையை அயோத்திதாசர் எழுதியுள்ளர். இங்கு அயோத்திதாசர் பார்ப்பனர் அடையாளத்தைப் பூசகர், ஞானியர் என இரண்டாக உடைத்துக் கொள்கிறார். ஞானியர்களான யதார்த்த பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் பறையர்களாக்கப்பட்டனர் என்றும், வேசப்பார்ப்பனர்கள் ஞானமற்ற பூசகர்களாகச் செல்வாக்கு பெற்றனர் என்றும் அயோத்திதாசர் வரையறுக்கிறார்.
இந்திர தேச சரித்திரம் என்ற பறையர் தோற்றத் தொன்மத்தை கட்டமைக்கும் அயோத்திதாசர், மேலாண்மை செய்யும் சமூகச் சொல்லாடலான வர்ண படிநிலையில் இடம்கோராமல் மாற்றுச் சொல்லாடலை உருவாக்குகிறார். இதனையே திரும்பச்செய்தல் என்கிறோம். இந்தத் திரும்பச்செய்தல் என்பது பிரஞ்ஞைபூர்வமானது. அதாவது சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட தொன்மக் கட்டமைப்பு. போலச் செய்யும் சாதிகள் தங்கள் தோற்றத் தொன்மக் கட்டமைப்பில் பார்ப்பனருக்குக் கீழ் என்றும் சத்திரியருக்குக் கீழ் என்றும் அடையாளப்படுவதற்குப் பிரஞ்ஞையோடு நிராகரிக்கவில்லை. மாறாக வர்ணப்படிநிலையில் பார்ப்பனருக்குக் கீழ் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அயோத்திதாசர் வர்ணாசிரம கட்டமைப்பைக்குள் தொன்மத்தைக் கட்டவில்லை. மாறாகத் திரும்பச் செய்கிறார். இங்குத் திரும்பச்செய்தல் என்பது மேலாண்மை செய்யும் சமூகச் சொல்லாடலுக்கு எதிரான போராட்டம். இந்தத் தொன்ம கட்டமைப்பு மட்டுமல்ல, கார்த்திகை தீபம், தீபாவளி போன்ற வெகுசன பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாற்றான மறுவாசிப்புகளையும், திரும்பச் செய்தலையும் அயோத்திதாசர் நிகழ்த்தியுள்ளார்.
அயோத்திதாசரின் தொடர்ச்சியாக ஈ.வே.ராமசாமியின் சுயமரியாதை இயக்கமும் திரும்பச் செய்தலை பரிட்சித்துப் பார்த்தது. திராவிட இயக்க காலக்கட்டத்தில் உருவாகி வந்த திராவிட அடையாளக் கட்டமைப்பின் முதன்மையான செயல்பாடாகச் சமூகச் சொல்லாடல்களுக்கான எதிரிவினை இருந்தது. திராவிடர், தென்னிந்தியர், தமிழர் போன்ற அடையாளங்களுக்கு எதிராகவோ அல்லது அந்த அடையாளங்களை இழிவுப்படுத்தும் தொன்மங்களையும் புராணங்களையும் மறுவாசிப்புக்கு உட்படுத்துவதைப் பெரியார் தன் போராட்டச் செயல்பாடுகளுள் ஒன்றாக வைத்திருந்திருகிறார்.
பெரியார் எழுத்துக்களைத் தொகுப்பாக வாசிக்கும்போது அவர் பேச்சிலும் எழுத்திலும் களச்செயல்பாடுகளிலும் மேலாண்மை செய்யும் சமூகச் சொல்லாடல்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்து எழுந்துவந்ததைப் பார்க்க இயலும்.
இரணியன் என்னும் தலைப்பில் பெரியார் குடியரசு இதழில் 26 பிப்ரவரி 1944ல் இரணியன் எப்படிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறார் என வாசித்துக் காட்டுகிறார். அதில் இரணியன், பண்பாட்டு ஆதிக்கம் செய்த பார்ப்பனர்களுக்கு எதிரான கடுமையான செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். இரணியன் பார்ப்பனர்களின் யாகங்களைச் சீர்குலைத்தது, கோவில்களை இடித்தது, தபசுகளைத் தடுத்தது எனப் பதிவாகியுள்ளதை குறிப்பிட்டு புராண இதிகாசங்களிலும் சாதிக்கு எதிரான, பண்பாட்டு அடக்குமுறைக்கு எதிரான குரல் இருந்துள்ளது என்று ‘இரணியன் ஒரு சுயமரியாதை வீரனேயாவான், இரணியன் கதையை ஒரு சுயமரியாதைக் கதையேயாகும்’ என்கிறார் . இராவணன் எனும் தலைப்பின் திருவொற்றியூரில் 17 ஜனவரி 1952ல் பேசும் போது ‘அந்தக் காலத்தில் பார்ப்பனியத்தின் கொடுமையால் நமது முன்னோர்கள் சாதியை ஒழிக்கப்பாடுபட்டார்கள். இதனால் இராட்சதர்கள், அசுரர்கள் ஆனார்கள். சாதியை ஆதரிப்பவர்கள் ரிஷிகள் மகான்கள் மகாத்மாக்கள் ஆனார்கள்’ என்கிறான். இதன் தொடர்ச்சியாகப் பெரியார் பல கூட்டங்களிலும் இதழ்களிலும் இராமாயண மறுவாசிப்பை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கிறார். அவதாரங்களின் இரகசியம் எனும் தலைப்பில் 30 டிசம்பர் 1958ல் வெளியான கட்டுரையில் பெரியார் ராவணன் பார்ப்பனர்களுக்கு எதிராகச் செயல்பட்டான். ‘அவன் மகாநீதிமான் என்பதாலும் எளிதில் ஒழிக்க இயலாது என்பதாலும் பார்ப்பனர்கள் அவனைப் பிறர் மனைவியைத் தூக்கி வந்தான் என்ற பெயரில் குற்றம் சுமத்தி ஒழித்தார்கள்’ என எழுதுகிறார். அதேபோல் இராமன் என்னும் தலைப்பின் கீழ் 29 ஜூலை 1955 வெளியாகக் கட்டுரையில் ‘ராமாயணக் கதையில் தமிழ்நாட்டு ஆண்களைக் குரங்கு என்றும் பெண்களை அரக்கிகள் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இராமாயணப் போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் கூட இறக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டவர்கள் ஆவார். இராமாயணம் தமிழ்நாட்டவரை இழிவுப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ இராமனையோ வைத்திருப்பது மனித சுயமரியாதைக்கும் இன சுயமரியாதைக்கும் தமிழ்நாட்டுச் சுயமரியாதைக்கும் மிககேடும் இழிவுமானதாகும்’ என்கிறார். இதன் தொடர்ச்சியாக 19 ஏப்ரல் 1956ல் வெளியான ஸ்ரீராமநவமி என்ற கட்டுரையில் பெரியார், வடநாட்டில் கொண்டாடப்படும் ராமநவமியின் போது ராவணன் உருவங்களைக் கொளுத்துவது தொடர்பாக, ‘வடநாட்டில் இராவணனனைக் கொளுத்தினார்கள் என்றால் தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்த கூடாது?... தென்னாட்டு மக்களை அவமானப்படுத்தும் இழிவுபடுத்தும் காரியத்தைப் பார்ப்பனர்களும் வடநாட்டினரும் செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால் அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்திவரும் படியான காரியத்தை அல்லது அதுபோலத் துவேசம் கொண்டது காரியத்தை நாம் ஏன் செய்யக்கூடாது?’ எனக் கேட்கிறார்.
இராமாயணம், பாகவதம் போன்ற பெரும் கதையாடலில் சிதைவுக்குள்ளாகும் தென்னிந்திய, தமிழ் அடையாளத்தைச் சுயமரியாதையுடன் திராவிட இயக்கம் மீள்வரையறை செய்கிறது. பாரதிதாசன் இரணியன் புராணத்தை இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் நாடகமாகப் படைத்தார். அதில் இரணியன் வேத பார்ப்பனர் எதிர்ப்பு கொண்டவனாகவும், சுயமரியாதை கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டான். புலவர் குழந்தை எழுதிய இராவணகாவியம் இராவணனை நேர்மையானவனாகவும் கண்ணியமானவனாகவும் பார்ப்பன எதிர்ப்புக் கொண்ட சுயமரியாதைக்காரனாகவும் சித்தரிக்கிறது.
மறுவாசிப்புக்கு இராமாயணத்தையும் இதர புராணங்களையும் உட்படுத்திவந்த பெரியார் 27 ஜீலை 1956ல் இராமர் பட எரிப்புப் போராட்டத்தை நிகழ்த்துகிறார். இது வெறுமனே மற்ற போராட்டம் போன்ற ஒன்றல்ல ஒருவகையான திரும்பச் செய்தல் காரியமாகப் பார்க்கப்பட வேண்டும். பெரியாரின் இந்தத் திரும்பச் செய்தல் தீவிரமான பிரக்ஞைப் பூர்வமான சுயமரியாதைச் செயல்பாடு. அவர் இந்தச் செயல்பாடு குறித்து எழுதிய பதிவில் ‘இராமர் பட எரிப்பு என்பது பல நூல்களைப் படித்துப் பல கூட்டங்களில் பேசி பல அறிஞர்களுடன் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு’ என்கிறார்.
சமூகச் சொல்லாடல்களை மாற்றுவதற்காக இருபதாம் நூற்றாண்டில் உருவான மாற்றுச் சொல்லாடல் இயக்கமாகவே அயோத்திதாசரையும் திராவிட இயக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. பண்பாட்டு அடக்குமுறை செய்யும் சமூகச் சொல்லாடல்களை மாற்றியமைக்க அச்சொல்லாடல்கள் விளைவிக்கும் அநீதியை எடுத்துரைப்பது, அதற்கு எதிரான சமூகப் பண்பாட்டு அமைப்பைக் கட்டமைத்து புதிய சொல்லாடல்களை உற்பத்தி செய்வது என இருபதாம் நூற்றாண்டில் சமூக-பண்பாட்டுத் தளத்தில் அயோத்திதாசர், பெரியார் போன்றவர்கள் சீர்திருத்தங்களை முன்னிருத்தி விவாதங்களை எழுப்பியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தீவிரம் கொண்ட சமூகச் சொல்லாடல்களுக்கு எதிரான போராட்டமானது சமூகங்களிடமும் தீவிரமாகப் பிரதிபலிக்கத் துவங்கியது. இதற்கு உதாரணமாக மதுரை மணிகுறவன் கதைப்பாடலை எடுத்துக்கொண்டு விவாதிக்கலாம். மதுரையில் 1950களின் வாழ்ந்து மடிந்த மணிகுறவன் என்பவரின் வாழ்வும் மரணம் நாட்டுப்புறக் கதைப்பாடலாக இன்றளவும் மதுரை வட்டாரங்களில் புழக்கத்தில் உள்ளது. அதாவது நாட்டுப்புற மரபில் வரலாற்றுச் சம்பவங்கள், பிரபல அரசியல் நிகழ்வுகள், போர்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவைகளை நாட்டுப்புறக் கலைஞர்கள் கதைப்பாடலாகப் பாடுவது ஒரு மரபாகும். இங்கு நாட்டுப்புற கதைப்பாடல்கள் ஒரு வகையான நினைவுப்பேழையாகச் செயல்படுகின்றன. அவ்வாறு மணிக்குறவனின் கதையையும் பாடலாக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கதைப்பாடலின் படி மணிக்குறவன் என்பவன் ஒரு சண்டியர் மற்றும் கொள்ளைக்காரன். ஒருமுறை சாலையில் பன்றி மேய்த்துக் கொண்டிருந்தபோது டிவிஎஸ் பேருந்து ஒன்று அவன் பன்றி மீது மோதி இறக்கிறது. இதனால் கோபம் கொண்டு மணிகுறவன் அதே இடத்தில் டிவிஎஸ் பேருந்து ஓட்டுனரை வெட்டிக் கொலை செய்கிறான். மதுரையில் நகரப் போக்குவரத்தில் பெரும் அடையாளமாகத் திகழ்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் ஓட்டுனர் கொலை என்பதால் மதுரை பரபரப்பானது. கொலைக்குப் பின்பாக ஓடி ஒளிந்துகொண்ட மணிகுறவனைக் காவல் துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்கிறது. நீதிமன்றம் ஒன்பது வருட சிறை தண்டனை வழங்குகிறது. சிறை தண்டனையின் இடையில் அவன் தாய் ரூபாய் ஐநூறு பிணைத்தொகைக் காட்டி அழைத்து வருகிறாள். சிறையிலிருந்து பிணையில் வந்த பத்தாவது நாள் அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் மதுரை பேருந்து நிலையம் அருகில் குடிபோதையில் பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்கிறான். அதன் தொடர்பான தகராரில் குத்திக் கொல்லப்படுகிறான். இவ்வாறு மரபான கதைப்பாடல் மணிகுறவனின் வாழ்வையும் மரணத்தையும் சித்தரிக்கிறது.
இதற்கு மாற்றாக இன்னொரு கதையைக் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாற்று வரலாற்றை முன்மொழிகின்றனர். அதில் சீமைச்சாமி குறவர் மற்றும் பூரணக் குறத்தி தம்பதிக்கும் மகனாய் 1931 ஆம் ஆண்டு மதுரை திடீர் நகரில் மணிக்குறவன் பிறந்தார். பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டிருந்தாலும் மணிகுறவன் சிறுவயதிலேயே வீர விளையாட்டுக்களில் ஆர்வமாக இருந்தார். மதுரையில் நடந்த தென் மண்டல அளவிலான குஸ்தி போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற்று மதுரை மன்னன் என்ற பட்டத்தை மணிக்குறவன் பெறுகிறார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து மணிகுறவன் கடுமையாகப் போராடுபவராக இருந்திருக்கிறார். குறவர் சமூகப் பிரச்சினைகளுக்கு மணிகுறவன் குரல்கொடுப்பவராக இருந்திருகிறார். சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புச் செயல்பாடுகள் காரணமாக மணிகுறவனுக்குக் கொலைமிரட்டல்கள் இருந்தன. இதனால் தான் கொலை செய்யப்பட்டால் தன் மனைவிக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டும் எனத் தாய் பூரணக் குறத்தியிடம் வேண்டுகோள் வைக்கிறார். அனைவரிடமும் அன்பு பாசமும் கொண்டவராக மணிகுறவன் இருந்து சமூக அவலங்களைத் தட்டிக்கேட்பவராக வெளிப்பட்டுள்ளார். ஒருமுறை மதுரை புறநகர் பேருந்து நிறுத்தத்தில் நிறைமாத கர்ப்பிணி பிரசவ நேரத்தில் பேருந்துக்கு வெகுநேரமாகக் காத்திருந்தாள். அப்போது வந்த டிவிஎஸ் பேருந்து ஒன்று நிற்காமல் செல்வதைப் பார்த்த மணிகுறவன் பேருந்தை வழிமறைத்து வாக்குவாதம் செய்கிறார். வாக்குவாதம் சண்டையாகி மணிகுறவன் பேருந்து ஓட்டுனரை குத்திக் கொலைசெய்கிறார். இந்தக் கொலை மதுரையில் மிகவும் பரபரபாகப் பேசப்பட்டது. கொலைக்குப் பின்பு காவல்துறை சண்டியர் என முத்திரை குத்தி மணிகுறவனைச் சிறையில் அடைக்கிறது. மதுரை நீதிமன்றம் மணிகுறவனுக்கு ஏழு ஆண்டுத் தண்டனை வழங்கியது. மணிகுறவனின் தாய் பூரணக் குறத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து ஐநூரு ரூபாய் அபராதம் செலுத்தி மகனை மீட்கிறாள். சிறையிலிருந்து வந்த மணிகுறவன் குற்றப்பரம்பறை சட்டதை எதிர்த்துப் போராடினார். பல கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தீவிர தொண்டனாக இருந்த மணிகுறவன் அதிலிருந்து வெளியேறி இந்து மகா சபையில் இணைத்துக் கொண்டு மதுரை வட்டார கிராமங்களில் நடக்கும் சாதிய கொடுமைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆதிக்கச் சமூகங்களால் குறவர் சமூக மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைக் களைந்து வந்ததால் மதுரை மட்டுமில்லாமல் சுற்றி உள்ள ஊர்களிலும் மணிகுறவன் புகழ் பரவியது. 1953ஆம் ஆண்டு மணிகுறவனின் உறவினர் இளவட்டக்கல் தூக்கும் வீரவிளையாட்டு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் வெற்றி பெறுபவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதாகச் சொல்கிறார். அப்போது இளைஞர்கள் யாரும் இளவட்டக்கல்லை தூக்க இயலாததால் மணிகுறவனின் மாமா இந்த ஊரில் ஆண்களே இல்லையா என நக்கலாகப் பேசுகிறார். இதனால் ஆவேசம் கொண்டு மணிக்குறவன் கல்லை தூக்கிவிடுகிறார். இதற்குப் பின்பாக மாமாவுக்கும் மணிகுறவனுக்கும் பகை வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக 14 நவம்பர் 1953ஆம் ஆண்டு மாமாவின் ஆதரவாளர்களால் மணிகுறவன் கொல்லப்பட்டார். இறப்பிற்குப் பிறகு அவர் தாயார் பூரணக் குறத்தி மகனுக்குக் கொடுத்த வாக்கின் படி மணிகுறவனின் மனைவியை அவர் நண்பரான பருத்திவீரனுக்கு மறுமணம் முடித்துக் கொடுக்கிறாள்.
இந்த இரண்டு கதையும் ஒரே நபர் பற்றியது. முதல் கதையானது சமூகச் சொல்லாடகள் பொதுவாகத் தலித்துகளை எப்படிச் சித்தரிக்குமோ அவ்வாறே மணிக்குறவனைச் சமூக விரோதி, குற்றவாளி, கொள்ளைக்காரன், இழிவானவன், ஒழுக்கமற்றவன், பாலியல் வன்முறையாளன் என்கிறது. ஆனால் இரண்டாம் கதை மணிக்குறவனைச் சமூகப் போராளி, குஸ்திவீரன், மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவன் எனச் சித்தரிக்கிறது. இந்தக் கதை சுயமரியாதை அடைப்படையில் மணிகுறவனைச் சித்தரிக்கிறது. குறவரின அடையாளமாகத் தாங்கள் கட்டமைக்க விரும்பும் மணிக்குறவன் வரலாற்றைச் சுயமரியாதை பொருந்தியதாகத் திரும்பச் செய்கின்றனர். ஆக, சமூகப் பண்பாட்டுத் தளத்தில் விளிம்புநிலை சமூகங்கள் அடையாளக் கட்டமைப்புக்கு முதலில் இழிவுபடுத்தும் சமூகச் சொல்லாடல்களுக்கு மாற்றான சொல்லாடல்களைக் கட்டமைக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தே செயல்பட்டிருக்கின்றனர்.
இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கக் காலப் பகுதி தமிழகச் சூழலில் புதிய வெகுசன சொல்லாடல்கள், கலை மற்றும் இலக்கியப் போக்குகள், பேசப்படாத திரைக்களங்கள் எனப் பயணித்துள்ளது. இதில் திரைப்படங்களின் பங்களிப்பின்பால் தூண்டப்பட்ட வெகுசன உரையாடல்கள் அதுவும் விளிம்புநிலையினர் பற்றிய உரையாடல்களின் புதிய அலை இயக்குனர்களின் பங்களிப்பு தீர்க்கமானது. சமூக அரசியல்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரை வரலாற்றில் புதியதல்ல என்றாலும் முந்தைய போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டு விளிம்புநிலையினரை மையப்படுத்திய பார்வையுடன் புதியஅலைத் திரைப்படங்கள் களம் காணத்துவங்கின.
இவ்வாறாகச் சமூக அரசியலை பேசும் படங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, வரலாற்று ஆவணங்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவை, மற்றொன்று திரும்பச்செய்யும் திரைப்படங்கள். இவ்விரண்டும் வெவ்வேறு வகையான சொல்லாடலை சமூகத்தில் உற்பத்திச்செய்வதாக இருக்கின்றன.
சமகாலச் சமூகப் பிரச்சினைகளைத் திரையில் உணர்வுப்பூர்வமான ஆவணமாக்கல் என்பது சாதிய வன்முறை சம்பவம், அரச பயங்கரவாதம், மத மோதல் போன்றவற்றை வெகுசன விவாதமாகக் கொண்டு செல்ல ஆவணமாக்கலை திரைப்படங்கள் கையாளுகின்றன. இவ்வகையாக ஆவணமாக்கல், விளிம்புநிலையினரின் சுயமரியாதையைப் பிரதானமாகக் கொள்வதில்லை என்பது பிரதானமான விமர்சனம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரும் தரப்பாக நின்று வாதிடத் துவங்குகிறது அல்லது எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் எனச் சொல்வதற்கு வரலாற்றுத் தருணங்களை மீண்டும் திரையில் உணர்வுப்பூர்வமாகச் சித்தரித்துக் கழிவிறக்கத்தைக் கோருகிறது. இவ்வாறான தன்மை உடையதாகவே ஜெய்பீம், விடுதலை-1 மற்றும் 2 போன்றவற்றைப் பார்க்க இயலும். உதாரணத்திற்கு, விடுதலை முதல் பாகத்தில் திரைப்படத்தில் மக்களைச் சித்திரவதைச் செய்யும் காட்சிகள், பெண்களின் மீதான வன்முறை போன்றவையும் விடுதலை இரண்டாம் பாகத்தில் ஜமீன்தார், இளம் பெண்ணைப் பாலியல் வேட்கைக்காகப் பயன்படுத்திக் கொள்வது போன்ற காட்சிகள் வரலாற்று ஆவணங்களின் சாரம்சம் பெற்றதாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும் அவை விளிம்புநிலையினரின் சுயமரியாதையைக் கருத்தில் கொள்ளாததாகவும் உள்ளன.
இங்கு ஆவணத் திரைப்படங்கள் என்பது வேறு, வெகுசனத் திரைப்படங்களில் காணப்படும் ஆவணமாக்கல் என்பது வேறு. இவற்றின் தேவை எங்கிருந்து உருவாகிறது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விளிம்புநிலை மக்களின் சமூக, பண்பாட்டு பிரச்சினைகளைச் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களால் கவனப்படுத்துவதில்லை என்பது இப்படங்களின் தோற்றுவாய்க்கு முக்கியமான காரணமாகும். அதாவது அறமற்ற இதழியல் சூழல் இயல்பாக்கப்பட்டதே இவ்வகையாகத் திரைப்படங்கள் உருவாதற்காகத் தேவையை அதிகரித்துள்ளன. முறையாக வாசாத்தி மற்றும் கயலாஞ்சி கொடுமைகளை இதழியலாளர்கள் வெகுசன ஊடகங்களில் ஆவணப்படுத்தி நீதியை நோக்கி நகர்த்தியிருந்தால் இங்கு இப்படங்களின் தேவை ஆவணமாகவே சுருங்கியிருக்காது. மேலும் பாதிக்கப்படும் தரப்பினரின் குரல்களை அரசும் சாதிய சமூகமும் ஒடுக்குவதே இப்படங்களின் தோற்றுவாயாக உள்ளன.
திரும்பச் செய்தல் என்பது சமூகப் பண்பாட்டுத் தளங்களில் சமீபகாலங்களாக அதிகமாக நடக்கும் ஒரு செயல்பாடாகும். முன்னர்ச் சொல்லப்பட்ட கதையில்/ வரலாற்று நிகழ்வில் தங்களின் இடம் என்ன என்பதை மறுபரிசீலனை செய்வதாகவும் சுயமரியாதைக்குப் பொருந்தாத கதையை / வரலாற்றைச் சுயமரியாதையோடு மீண்டும் எழுவது / நிகழ்த்து / காட்சிப்படுத்துவது என்பதையே திரும்பச் செய்தல் என்கிறோம். வரலாற்றெங்கிலும் விளிம்புநிலை மக்களிடம் இடம் கேள்விக்குறியாக உள்ளதாலும் எழுதப்பட்ட வரலாறு ஆதிக்க சக்திகளின் மனநிலையில் எழுதப்பட்டதாக இருப்பதாலும் வரலாறு திரும்ப எழுது வேண்டிய அவசியம் எழுகிறது. இவ்வாறான திரும்பச் செய்தலாகவே மெட்ராஸ், கர்ணன், தங்கலான், சார்பேட்டா பரம்பரை போன்றவற்றைப் பார்க்க இயலும். கடந்த காலத்தில் சொல்லப்பட்ட கதைகளை, நிகழ்வுகளை மாற்றி விளிம்புநிலை பார்வையில் படைத்ததளித்தல் என்பது நிகழ்காலத்தின் சொல்லாடல்களை மாற்றியமைப்பதற்கானதாகவே. அதாவது, விளிம்புநிலையினர் வாழ்வு பற்றிய பொது அபிப்ராயம் ஒழுக்கமில்லாதவர்கள், கல்வியறிவற்றவர்கள், சமூகக் குற்றமிழைப்பவர்கள் என்பதாகப் புழங்கப்படுகின்றன. இந்த அபிப்ராயங்களால் அருகாமை சமூகத்துடன் இணைமுடியாமல் இருப்பதற்கான காரணமாகத் தங்களுள் சொல்லிக்கொள்வதாக இருக்கிறது.
உதாரணமாக, காடு பற்றிய சமவெளி வாழ் சமூகத்தின் யோசனையும், சமவெளி பற்றிய காட்டுவாழ் பழங்குடிகளின் யோசனையையும் சொல்லலாம். அதாவது, சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவிற்குத் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் பங்கு பெறுவார்கள். அவ்வாறு சமவெளி மக்கள் வந்து சென்ற பின்னர்ப் பழங்குடிகள் ஒருவிதமான சுத்திகரிப்புச் சடங்கை செய்கின்றனர். அதாவது சமவெளி மக்கள் வரும்போது அவர்களுடன் வந்த பேய்கள் காட்டில் தங்கிவிடக்கூடாது என்பதற்கான சுத்திகரிப்புச் சடங்கு. இதற்குத் தலைகீழாகச் சமவெளி மக்கள் தன் கோவில் தேர் கட்டுமானத்திற்காகக் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்படும் மரத்திற்குத் தட்சுக்கழிப்பு சடங்கு ஒன்றை செய்கிறார்கள். அதாவது கானக மரத்துடன் வந்த பேய் தங்கிவிடக்கூடாது என்பதற்காகச் சடங்கு. ஆக, இவ்விரு சமூகங்களும் ஒருவரை பற்றிய பிரிதொருவரின் அபிப்ராயம் அச்சமாக உள்ளது. அதாவது நன்கு அறியாதவற்றைப் பற்றிச் சமூகங்களிடம் ஒருவகையான அச்ச உணர்வு மரபாகவே காணப்படுகிறது.
பரஸ்பரம் இருக்கும் மரபான அச்சத்தைக் களைவதற்குச் சமூகங்களுக்கு இடையே உரையாடல் ஏற்பட வேண்டும். அந்த உரையாடலின் நோக்கம் ஒருவரை மற்றொருவர் அறிந்துகொள்வதற்கானதாக இருக்க வேண்டும். அவ்வாறான உரையாடல் தான் திரைப்படங்கள் வாயிலாகத் துவங்குகின்றன. இதற்கு முன் இவ்வாறான வெகுசனக் கருவி அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. மேலும், பலதரப்பட்ட சமூகக் குரல்கள் எழும் தளமாகவும் இருந்ததில்லை. சமூக வரலாற்றில் இன்றுதான் நாம் பொதுவான வெகுசனக் கருவியை நாம் பார்க்கிறோம். அதாவது இதற்கு முன் நம்மிடமிருந்த கலைவடிவங்கள் அனைத்தும் வட்டாரத்தன்மை சார்ந்தவை. தெருக்கூத்து வடதமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது. ஸ்பெசல் நாடகம் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் செல்வாக்குப் பெற்றது. வில்லுப்பாட்டு, கணியான் கூத்து ஆகியவை திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் செல்வாக்கு பெற்றவை. இவற்றின் கதைக்களங்கள் பெரும்பாலும் மகாபாரதக் கதைகள், ராமாரயணக் கதைகள், வட்டாரக் கதைகள், கலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கலைவடிவங்களும் வெகுசன ஊடக வடிவங்களும் தமிழ் நிலப்பரப்பிற்குப் பொதுவானவையல்ல. ஆக, சினிமாவிற்கு முந்தைய கலைத் தொழிற்நுட்பங்கள் எவையும் முழுத் தமிழ்பரப்பையும் உள்ளடக்கியவையல்ல. வரலாற்றில் தமிழ் மொழிக்கு அடுத்ததாகச் சினிமாத் தொழிற்நுட்பம் தான் தமிழ் வெகுசனத்தை இணைத்த காரணியாக நமக்குக் கிடைத்துள்ளது. இங்குச் சினிமா தமிழ் வெகுசன அடையாள திரள்வதற்கு ஒரு காரணியாய் இருந்துள்ளது.
திரும்பச் செய்தல் என்பதைப் புதிய அலைத் திரைப்படங்கள் பல்வேறு வகையில் வெகுசனத்தளத்தில் பரிச்சித்துப் பார்க்கின்றன. அவற்றின் பிரதான நோக்கம் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு எதிரான புழங்கப்படும் சமூகச்சொல்லாடல்களுக்கு எதிரான மாற்றுச் சொல்லாடல்களை உருவாக்குதல். ‘தமிழ்படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு மீசைய முறுக்கிகிட்டு லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியார் ஏ கபாலி அப்டின்னு சொன்னவுடனே, சொல்லுங்க எஜமான்னு சொல்லிட்டு நிப்பானே அந்தக் கபாலின்னு நினச்சியாடா, கபாலிடா’ என்ற கபாலி திரைப்படத்தின் பிரபல வசனம் தமிழ் சினிமா திரைச்சொல்லாடல்கள் விளிம்புநிலை சமூக ஆண்களைக் குண்டர்களாகவும் அடியாட்களாவும் காட்சிப்படுத்தியதற்கு எதிரானது. வழக்கமான தமிழ் சினிமா சேரிகளை அசுத்தமானதாகக் காட்டப்பட்டுவந்த தன்மையிலிருந்து விலகி பா.ரஞ்சித்தின் அட்டகத்தி, மெட்ராஸ், சார்பேட்டா பரம்பரை போன்ற படங்களில் காட்சிப்படுத்தப்பட்டதிற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன. பா.ரஞ்சித் திரைப்படங்களில் விளிம்புநிலையினர் வாழ்விடப் பகுதிகள் இயல்பானதாகக் காட்டப்படுகிறது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஆவணமாக்கல் தன்மை கொண்ட இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தின் சேரி காட்சிப்படுத்துதலும் கதைக்களமும் அப்பகுதிவாழ் மக்களின் சுயமரியாதையைச் சீண்டியதாக உள்ளது. வடசென்னை திடைப்படம் வெளியாகி பின்னர்ச் சென்னையில் கூகை மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட விவாத கூட்டத்தில் வெற்றிமாறனை நோக்கி ‘இன்னமும் சேரிவாழ் மக்களைக் கொலைகாரர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவுமே சித்தரிக்கிறீர்கள்’ என விமர்சனம் எழுப்பப்பட்டது. இது ஒருவகையாகச் சுயமரியாதைக் குரல். அப்பகுதிவாழ் மக்களின் திரைப்படப் பார்வையாளர்களின் பார்வை வெகுசன சமூகச் சொல்லாடல்களுக்குள் தலித்துகளின் அடையாள மறுகட்டமைப்பிற்கு உள்ளாகவேண்டிய அவசியத்தையும் வழக்கமான தட்டையான பார்வையைக் கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது.
ஆவணமாக்கல் வகைத் திரைப்படங்களில் விளிம்புநிலை மக்களின் சமூக அரசியல் நிலையிலிருந்து அவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றத்தையும் அதற்காகக் காரணங்களையும் ஆராய்கிறது. உதாரணமாக ஜெய்பீம் திரைப்படம் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்ட குற்றம் எத்தகைய அநீதியானது எனப் பேசும் போது அவர்களைக் காட்சிப்படுத்தும் பாங்கில் சுயமரியாதையை மலுங்கச்செய்கிறது. வடசென்னை திரைப்படம் ஆவணமாக்கல் தன்மை கொண்டது. வடசென்னை மக்கள் வாழ்வியல் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றிலிருந்து அவர்களின் குற்றப்பின்னணியை விவரிக்கிறது. மக்கள் நலம் பேணும் ரவுடி, மக்களுக்காகக் கொள்ளையடிப்பவன் என்னும் பாணியில் வடசென்னை கதை மாந்தர்களைப் பேசவைக்கிறது.
மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள், வாழை போன்றவற்றிலும் ஆவணமாக்கல் தன்மையே மேலோங்கியிருக்கும். பரியேரும் பெருமாளில் தலித் இளைஞனின் மீது சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்டும் காட்சி முழுக்க முழுக்க ஆவணமாக்கல் தன்மை கொண்டது. அது அம்மக்களில் சுயமரியாதையைக் கருத்தில் கொள்ளவில்லை.
ஆவணமாக்கலுக்கும் நேரெதிராகத் திரும்பச்செய்யும் திரைப்படங்களாகக் கர்ணன், சார்பேட்டா, தங்கலான், மெட்ராஸ் போன்ற படங்களை எடுத்துக் கொள்ளலாம். இப்படங்களில் சுயமரியாதை தருணங்கள் உருவாவதை நாம் பார்க்க இயலும். கர்ணன் திரைப்படத்தின் கதாநாயகன் பேருந்தை நோக்கி கல் எறியும் தருணம், சார்பேட்டா பரம்பரையில் உணவகத்தில் நடக்கும் சண்டை போன்றவையைச் சுயமரியாதை தருணங்களுக்கான உதாரணங்கள். மெட்ராஸ் திரைப்படத்தில் சுவருக்கான மோதல் ஒரு சுயமரியாதை தருணம். மரபான சாதிய சமூகத்தில் அரசியல், காதல் போன்ற காரணங்களுக்காகக் கொல்லப்படும் தலி தெய்வமாக்கலுக்கு உள்ளாகிறார். இங்கும் சுவர் பின்னணியில் நடந்த அரசியல் கொலைகள் சுவரை சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் சமயநம்பிக்கையிலான பயத்தை மரபான சமூகச் சிந்தனை கட்டமைத்த சொல்லாடலாகவும் உடைத்து சமூக உரிமை, அதிகாரத்தையும் பெற வேண்டியதை மெட்ராஸ் பேசுகிறது. இவற்றையே திரும்பச்செய்தல் செயல்பாடு என்கிறோம்.
ஆக இங்குப் புதிய அலை திரைப்படங்கள் மரபான சொல்லாடல்களைக் குற்றப்படுத்துகின்றன. சாதியக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் சொல்லாடல்கள் நம்பிக்கையாக, பேச்சாக, நடைமுறையாக, அன்றாடப் பழக்கமாக, காட்சிப்படுத்தலாக விரவிக்கிடப்பதை திரும்பச் செய்யும் திரைப்படங்கள் மறுத்து மாற்றுச்சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன. அவ்வாறாகவே தங்கலான் திரைப்படத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. தங்கலான் நிலம், சமூகம், அதிகாரம் ஆகியவற்றிற்கான உறவை வரலாற்று புனைவாகக் கட்டமைக்க விளைகிறது. அதுவும் அயோத்திதாசர் மாற்றுத் தொன்மங்களைக் கட்டமைத்தது போல ஒரு முயற்சியைச் செய்து பார்க்கிறது.
புதிய அலைத் திரைப்படங்கள் மரபான சொல்லாடல்களைக் கேள்வி கேட்பதுடன், புதிய சொல்லாடல்களை மாற்று வரலாறாக, மாற்றுத் தொன்மமாக, தலித் வாழ்வையும் வாழ்விடத்தைக் காட்சிப்படுத்தலாகச் செய்கிறது. இதன் அடிப்படையில் மரபான சமூக வாழ்க்கைமுறை இன்றளவும் புழக்கத்தில் வைத்திருக்கும் தலித்துகளுக்கு எதிரான நடைமுறைகளைத் திரும்பச் செய்தலின் வழியாகக் கடக்கிறது. இங்கு உண்மையான நீதி என்பது மாற்றுச் சொல்லாடல்களைக் கட்டமைப்பதே. மரபான சொல்லாடல்களில் தலித்துகளின் இடம் என்ன என்பதை இப்படங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு அதற்காக மாற்றை யோசிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தீவிரம் பெற்ற திரும்பச் செய்தல் என்னும் சமூகச் சொல்லாடல்களுக்கு எதிரான போராட்டமானது இருபத்தோராம் நூற்றாண்டின் வெகுசன திரைப்படங்களின் மொழியாக மாறியுள்ளது. இந்தப் புதிய அலை திரைப்படங்களை வெறுமனே சிறு காலம் மட்டும் நிலைத்திருக்கும் பாணியாகச் சுருக்கிவிட இயலாது. இவை மொழி - வணிகம் - சமூக உரையாடல் என்னும் தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவையாகவும் வெகுசனத்தால் பதிலுக்குத் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் உள்ளன. இப்படங்கள் வெகுசனத்துடனான இயங்கியல் உறவில் உள்ளதால் இவற்றின் மீதான ஆய்வு என்பதும் வெகுசனம் பற்றிய ஆய்வாகவே இருக்க முடியும்.