கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

தீவிரமான கேள்விகளும் பலவீனமான புனைவும் – கலைச்செல்வியின் சிறுகதைகள் குறித்து

ஞா.தியாகராஜன்

பகிரு

தீவிரமான கேள்விகளும் பலவீனமான புனைவும்

இரண்டாயிரத்துப் பத்திற்குப் பிறகு எழுத வந்த படைப்பாளர்களிடம் காணப்படும் பல பொதுவான அம்சங்களுடன் பொருந்திச் செல்பவராக உள்ளார் எழுத்தாளர் கலைச்செல்வி. கலைச்செல்வி எழுதப் புகுந்த சூழலை அவரே ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தொகுப்பின் முன்னுரையில் விவரித்துள்ளார். கல்வி, வேலை, குடும்பம் போன்ற அனைத்தும் அவருக்குச் சரியான பருவங்களில் சரியான விதத்தில் கிடைத்துள்ளது. எனினும் அன்றாடங்கள் தரும் சலிப்பும் இதற்குள் தான் முடங்கிப் போக வேண்டியிருக்குமா? என்ற அச்சம் மிகுந்த கேள்வியும் அவரை எழுத்து, இலக்கியம் பக்கம் திருப்பியுள்ளதெனப் புரிந்துகொள்ளலாம். எழுதப் புகுந்த சூழலிலும் பிரசுரம், அதற்கான அங்கீகாரம் எல்லாம் போதுமான அளவு கிடைத்திருப்பதாக அவரே தனது முன்னுரையில் ஒப்புக்கொள்கிறார்.

கலைச்செல்வியின் இந்த முன்னுரை கொண்டு சில விஷயங்களை யூகித்துக்கொள்ளலாமெனத் தோன்றுகிறது. கல்வியில் தொடங்கித் திருமணத்திற்கு முன்பு வரை அவர் எதிலும் பின்னடைவையோ, தோல்வியையோ சந்தித்ததில்லை. தனக்கு விருப்பமில்லையென்றாலும் தந்தை வழிநடத்த விரும்பிய பாதையில் அவர் வெற்றிகரமாகவே பயணித்துள்ளார். எனினும் திருமணத்திற்குப் பின் தனது முனைப்புகள் குறைந்து தான் சுயமின்றி அடையாளமற்றுப் போகிறோம் என்ற உளவியல் நெருக்கடி அவரை இலக்கியத்தின் பக்கம் திருப்பியுள்ளது. மேலும் எழுத்தின் பக்கம் நுழைந்த மாத்திரத்திலேயே அது அவருக்குச் சில அங்கீகாரங்களையும் வழங்கியுள்ளது. தன்னுடைய சுயத்தை மீட்டுக்கொள்ளும் வடிகாலாக அவருக்கு இலக்கியம் அமைந்துள்ளது. ஆனால் தொடர்ந்த இலக்கிய வாசிப்பு மற்றும் படைப்பாக்கம் காரணமாக அவர் பல வகையில் தனது எழுத்தை மேம்படுத்தியுள்ளது அவரின் ‘மாயநதி’ தொகுப்பின் மூலம் வெளிப்படுகிறது. தனது சுயத்திலிருந்து சமூகத்தின் பொதுவான அக்கறை நோக்கி அவர் நகர்ந்துள்ள விதம் இத்தொகுப்புகளின் வழியே முக்கியமாகின்றன.

எழுத்தாக்கத்தில் பல நிறை குறைகள், தேய்வழக்கான பொருண்மைகள், சில தட்டையான பார்வைகள் போன்றவை கலந்து காணப்படும் படைப்புகளாக இருந்தாலும் இரண்டையும் தனித்துச் சுட்ட வேண்டிய அவசியமிருப்பதாகக் கருதுகிறேன். கலைச்செல்வியின் ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’, ‘மாயநதி’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் குறித்த பார்வையாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது. முதலில் கலைச்செல்வியின் எழுத்துகளில் பலமான அம்சமாக நான் உணர்வது அது முழுவதும் தனது சுயம்சார்ந்த கரிசனங்கள் மற்றும் அதற்குரிய குழைவான பாத்திரங்கள் போன்ற ஆபத்துகளில் கரைந்துவிடாமல் சற்றேனும் அரசியல் பார்வையைக் கொண்டிருப்பது முக்கியமானது.

அது மாதிரியான சில சிறுகதைகள் அமைந்திருப்பினும் அது மட்டுமே அவரின் படைப்புகளாக அமையவில்லை என்பது சாதகமான அம்சமாகும். மற்றமையை நோக்கிய கரிசனங்கள் மற்றும் அரசியலார்ந்த பார்வைகள் வெளிப்படும் கதைகளாகச் சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, அவை ஊளையிடுகின்றன, பெல்ஜியம் கண்ணாடி, வயக்காடு, மீட்சி, கனவு, அது போன்ற கதைகளைக் கூறலாம். இரண்டு தொகுப்பிலும் மீட்சி என்ற தலைப்பில் வெவ்வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான அரசியலைத் தொட்டு நகர்கின்றன இச்சிறுகதைகள். வேறெங்கும் இல்லாத இந்திய மண்ணிற்கே உரிய சாதிய ஆணவப் படுகொலைகள் முதல் நவீன குடியாண்மை அரசுகளின் சுரண்டல் வரை பல்வேறு அரசியல் இவற்றுள் பேசப்படுகின்றன. படைப்பாக்க முறையில் அவற்றுள் சில சறுக்கல்களும் காணப்படுகின்றன.

‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்து வரப்படும் சித்ரா என்னும் புலியானது விலங்கின் குணம் மாறாமல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களைத் தாக்கியதால் கொல்லப்படுவதற்கு முடிவாகிறது. அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துவிட்டு வரும் அதன் மேலாளன் வழியாகவே கதையானது சொல்லபடுகிறது. ஆனால் இந்தக் கதைசொல்லி விலங்கைக் காட்சிப் பொருளாக்கும் வணிக நோக்கத்திற்கு எதிரானவனாக இருக்கிறான். குறைந்து வரும் விலங்குகளின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அரசானது அதனைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது சந்தேகத்தையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது சிறுகதை. அவற்றை மீட்டு பாதுகாத்தல் என்னும் பெயரில் அவற்றின் வாழிடம் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், கனிமவள சுரண்டலுக்காகவும் வளைத்துக் கொள்ளப்படுகின்றன. பின்னர்ச் சுற்றுலா வருமானத்திற்காக அவை காட்சிப் பொருளாகவும் மாற்றப்படுகின்றன. இத்தகைய சூழலுக்குப் பணிந்து போகாத அல்லது பழகிப் போகாத உயிரினங்கள் கொலை செய்யப்படுகின்றன. புலியின் நடமாட்டம் தென்படுவதாகக் கூறி அதனை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் வேலையாகவே கதைசொல்லி மலையின் மீது கட்டப்பட்டிருக்கும் அந்த நட்சத்திர விடுதிக்கு வருகை தருகிறான். அவன் எண்ணவோட்டங்களாகவே கதையானது நகர்கிறது. இறுதியில் புலி நடமாடுவதாகக் கூறப்படும் பகுதிக்கு தனது வாகனத்தை ஓட்டி செல்லும் கதைசொல்லி அங்கே வந்ததும் காரின் பின்புறத்திலிருக்கும் மறைவை நீக்குகிறான் அங்குச் சித்ராவின் மூன்று குட்டிகளில் சித்ராவைப் போலவே காட்டின் மூர்க்கம் கொண்ட பெண்புலி மயக்கத்தில் இருக்கிறது. அதனை அந்த இருள் சூழ்ந்த மலைப்பகுதியில் நடமாடும் மற்றொரு புலிக்குத் துணையாக இறக்கிவிடுவதைப் போன்று கதை நிறைவு பெறுகிறது.

பாதுகாப்பு மிகுந்த வனவிலங்கு பூங்காவிலிருந்து இப்படியாக ஒரு விலங்கை எடுத்து வந்து அதனைச் சுதந்திரமாக விடுவித்துவிடுவது எத்தனை தூரம் யதார்த்தத்தில் சாத்தியம் என்ற கேள்விகள் எழுந்தாலும் குரூரமான ஒடுக்குமுறை நிறைந்த அரசு நிறுவனம் அனைத்தையும் எப்படி வளைக்கப் பார்க்கிறது, எப்படி அதனதன் தன்மையிலிருந்து அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறதென்பது கதையின் மையமாக அமைந்து அதனைப் புறந்தள்ளிவிடுகிறது. குறிப்பாக எதுவும் அதன் பிறவி குணங்களுடன் இருப்பதை அரசு நிறுவனம் வெறுக்கிறது. எல்லாம் வீரியம் குறைந்த காட்சிப் பொருளாக மாறுவதை அது விரும்புகிறது. அதன் காரணமாகவே சித்ரா கொல்லப்படுகிறது.

இதனைப் போலவே இரு நாடுகளுக்கிடையே எழும் போர் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே எழும் இனவாத கிளர்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கேள்வி எழுப்புகின்றன மீட்சி மற்றும் கனவு சிறுகதைகள். ‘கனவு’ சிறுகதையில் செழிப்பாக வாழ்ந்த குடும்பத்தின் தலைவனாக அறிமுகமாகிறான் கதைசொல்லி. ஆனால், உள்நாட்டில் கிளர்ந்தெழுந்த இனவாத வெறுப்பு அரசியலால் தனது அமைதியான குடும்பத்தின் குழந்தைகள் மற்றும் மனைவியைக் கலவரத்தில் பறிகொடுக்கிறான். மனைவி வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறாள். கதைசொல்லி உள்ளூரிலேயே அகதியாக்கப்பட்டு முகாமில் அடைக்கப்படுகிறான். துயரம் நிறைந்த முகாம் வாழ்க்கையில் அறிமுகமாகும் பெண்ணும் தனது குழந்தையின் நோய்க்கு மருந்து வாங்குவதன் பொருட்டு உடல்ரீதியாகச் சுரண்டப்படுகிறாள். இறுதியில் அந்தக் குழந்தையும் இறந்துபோகிறது. பொதுவாகப் போர் மற்றும் கலவரங்களின் போதான வன்முறைகள் குறித்து எழுதப்படும் எல்லாப் புனைவுகளிலும் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு இரண்டும் பிரதான இடங்களைப் பெற்றுவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிடுகிறது. எனினும் இச்சிறுகதையில் எந்த நாட்டில் எதன் பொருட்டு இக்கிளர்ச்சியானது நடைபெறுகிறது என்ற குறிப்பிட்ட விவரங்களின்றிப் பொதுமையான சுட்டல்களாகவே கூறப்படுகின்றன. ஒரு நாவலுக்கான கருப்பொருளின் சுருக்கமாகத் தோன்றும் அளவிற்கே கதையின் தன்மை அமைகிறது. ஏனெனில் போர் மற்றும் கலவரங்கள் தொடர்பான எண்ணற்ற படைப்புகளை வரிசைப்படுத்திச் சிந்திக்கும்போது அவற்றுடன் இச்சிறுகதை மங்கலாகி அவற்றின் அருகே நிற்க முடியாமல் போவதை உணரலாம். உதாரணத்திற்கு இந்தியப் பிரிவினையால் பாதிப்பிற்குள்ளாகி வாழ்நாள் முழுவதும் அதனையே தனது எழுத்துக்களாக வடித்த மண்டோவின் படைப்புகள், ஹிட்லரின் யூதர்கள் மீதான அழித்தொழிப்புக் குறித்த படைப்புகள், ஈழம் தொடர்பான படைப்புகள் ஆகியவற்றைக் கூறலாம். அவற்றின் சிறு காட்சியாக மட்டுமே ‘கனவு’ சிறுகதையைப் பார்க்க முடிகிறது. தனித்த நிற்பதற்கான எந்தப் பலமான அடித்தளங்களையும் சிறுகதையில் காண இயலவில்லை.

ஆனால் இதிலிருந்து சற்றே மாறுபட்டதாக அமைகிறது ‘மாயநதி’ தொகுப்பில் இடம்பெறும் ‘மீட்சி’ சிறுகதை. இருநாடுகளுக்கிடையிலான போரில் சிப்பாய் ஒருவன் பயங்கரமான காயங்களுடன் எதிர் நாட்டின் எல்லைப் பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறான். கூடவே அந்த நாட்டின் சிப்பாய் ஒருவனும் எதிரெதிரே சந்தித்துக்கொள்கின்றனர். இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களும் சொந்த நாட்டின் சிப்பாய் மனதில் போர் குறித்து எழும் கேள்விகளுமே சிறுகதையாக அமைகிறது. உண்மையில் பெரும் பொருட் செலவுடனும், ஆரவாரத்துடனும் நடத்தப்படும் இருவேறு நாடுகளுக்கிடையிலான போரில் பங்கெடுக்கும் சிப்பாய்களின் நிலைமை என்ன..? அவர்கள் யாரின் அதிகாரப் பசிக்காகத் தங்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டியுள்ளது..? அந்தத் தியாகத்திற்கான மதிப்பு என்ன..? இத்தகைய கேள்விகளை எழுப்புகிறது ‘மீட்சி’ சிறுகதை. எதிர் நாட்டின் சிப்பாய் அடிபட்ட காயங்களுடன் குடிக்கத் தண்ணீர் கேட்கிறான். மனம் வராவிட்டாலும் மற்றொரு சிப்பாய் நீர் புகட்டுகிறான். அப்போது அவன் முகத்தைப் பார்த்து இப்படிச் சிந்திக்கிறான்.

‘பொருளாதார வசதியற்றவன் போன்ற முகத்தோற்றம் அவனுக்கு. வயதான பெற்றோர்களும்.. இரண்டு பிள்ளைகளைப் பெற்ற மனைவியும் இவனுக்கு இருக்கலாம்.. தம்பி.. தங்கைகள் என்ற பெருத்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு திருமணமாகதவனாகவும் இருக்கலாம்.’

இப்படியாக அவனின் சிந்தனைகள் தொடர்ந்து ஏன் இந்தப் போர்? எதற்கு முகம் தெரியாத ஒருவனின் மீது வெறுப்பைக் காட்ட வேண்டும்? அவனைக் கொல்ல வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது..? என விரிகிறது. அவனை இப்படியே விட்டுச்சென்றாலும் இறந்துதான் போகப் போகிறான் என்பதால் அப்படியே விட்டுச் செல்வதென முடிவெடுக்கிறான். எனினும் இறுதியில் திரும்பி வந்து அவனைச் சுடுகிறான். அந்த நேரத்தில் அவனுக்குச் செய்ய முடிந்த அதிகபட்ச உதவியாக அந்த மரணம் மட்டுமே உள்ளது. அதிக முடிச்சுகளைப் பின்னிக்கொள்ளாவிட்டாலும் போர் தொடர்பாகச் சிறுகதையில் எழுப்பப்படும் கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன. அதிகாரத்தின் பசிக்கு இத்தகைய சிறிய உயிர்களின் தியாகம் மதிப்புமிக்கதாக இருக்கப் போவதில்லை. போரினால் சாமானியர்கள் அடையும் துயரங்களும், இன்னல்களும் பேசப்படும் சூழலில் அப்போரில் பங்கேற்பவர்களின் தியாகங்களுக்கும் என்ன மதிப்பு? என எழுப்பப்படும் கேள்வி முக்கியமானதாகும். தேசப்பற்று என்னும் பெயரில் ஊட்டப்படும் மதவாத, இனவாத வெறுப்புகளுக்கு ஆளாகி பெரும் கும்பல் மனநிலையில் கலவரங்களில் ஈடுபடுவர்களை நோக்கியும் இக்கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமுள்ளது.

அடுத்ததாகச் சாதிய ஆணவப்படுகொலைகளை மையமிட்டு எழுதப்பட்டுள்ள ‘பெல்ஜியம் கண்ணாடி’, ‘அது’ ஆகிய கதைகளைச் சுட்டலாம். இரு கதைகளுமே முறையான பாத்திர வார்ப்பு, யதார்த்தவாத பிரதிபலிப்பு என்றில்லாமல் பாதிப்படைந்தவர்களின் குழம்பிய மனநிலையில் எழும் எண்ணவோட்டங்களைப் போன்றே எழுதப்பட்டுள்ளன. சித்ரலேகா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தாலும் மனதில் நடந்து முடிந்த சம்பவங்களையும் அதனோடு இணைத்துப் பின்னிக்கொண்டே வருகின்றாள். நீதிமன்றத்தில் அவளுடைய பெயர், வயது, தந்தை பெயர் ஆகியவை விசாரிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு சிறிய காட்சியைப் பார்க்கலாம்

“வயசு..”

இருபத்தியோரு வயதிற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தொடக்கமும் அதே வயதில்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே இரண்டு மாத காலங்களிருந்தன. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாளில் நான் தினேஷ் வீட்டில் கழித்த நான்கு மணி நேரத்தை மட்டுமேயும் கணக்காகச் சொல்லலாம்.

பொதுவாகச் செய்திகளில் கேள்விப்படும் தகவல்களைக் கொண்டு கதையானது பின்னப்படுகிறது. சித்ரலேகா முதலில் காதலைச் சொல்லும்போது தினேஷ் மறுக்கவே செய்கிறான். பிறகு இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்கின்றனர். கதையின் நாயகி தினேஷ் உடன் வாழ்வைத் தொடங்கலாமென அவன் வீட்டிற்குச் செல்லும்போது அங்கே சித்ரலேகாவின் குடும்பத்தினர் புகுந்து அவர்களைப் பிரித்து அழைத்து வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுவது போலக் கதையானது நகர்கிறது. சித்ரலேகாவின் தாயார் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியையாக இருக்கிறாள். ஆனால் அவளும் மகளின் காதலைப் புரிந்துகொள்ளாத சராசரி குடும்பத் தலைவியாகவே சுருங்கிப் போகிறாள். பிரச்சினையில் தலையிட்டு அதை முடித்து வைப்பதாக வரும் சாதித் தலைவரின் பாத்திரம் முக்கியமானதாகும். ஏனெனில் அனைவரையும் மரியாதைக் குறைவாகப் பேசும் அப்பாத்திரத்தின் முன்னால் யாரும் மறுத்துப் பேசாமல் அமைதி காக்கின்றனர். கதையின் முடிவில் தினேஷிற்கு என்ன ஆனது என்பது குறித்துத் தெளிவான பதில்கள் இல்லை. ஆனால் சித்ரலேகாவை தாங்கள் நினைத்தது போலவே நீதிமன்றத்தில் சொல்ல வைக்கிறார்கள். இறுதியில் வீட்டிற்கு அழைத்து வந்து அவளை அடைத்து வைக்கிறார்கள். பின்னர் அவளுக்குத் திருமணம் முடிந்ததா..? என்பதற்கும் கதையில் தெளிவான பதில் கிடையாது. சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்து மூன்று வருடங்கள் ஆவதாகக் காட்டப்படுகிறது. இறுதியில் தானும் தினேஷ் செய்த தவறு என்ன என்ற கேள்வியுடன் கதை நிறைவு பெறுகிறது.

இக்கேள்விக்கு உண்மையில் என்ன பதிலிருக்க முடியும். ஓர் இடைநிலை சாதியின் அப்பட்டமான சாதிய வெறியைப் புனைந்து காட்டுகிறது சிறுகதை. அரசுப் பள்ளியின் தலைமையாசிரியையாக இருந்தாலும் சாதிய பிடிமானங்களைத் தளர்த்தாமல் அதை இறுகப் பற்றிக்கொள்ள விரும்புபவளாகவே சித்ரலேகாவின் தாயார் சித்தரிக்கப்படுகிறார். பொதுவாக இவர்களிடையே சுயசாதித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் கதையில் பதிவாகிறது. நிகழ்காலத்தில் கேள்விப்படும் பல ஆணவப்படுகொலை தொடர்பான சம்பவங்களுடன் கதையை இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் நிலவும் பேசப்பட வேண்டிய பிரச்சினை ஒன்றை தொட்டிருக்கிறது என்னும் அடிப்படையில் இச்சிறுகதை முக்கியமானதாக அமைகிறது.

ஆனால் இதே பொருண்மையில் எழுதப்பட்டிருக்கும் ‘அது’ என்னும் சிறுகதை சற்றே சறுக்கியிருப்பதாகவே கூற வேண்டும். இதில் தெளிவாகவே காதலிக்கப்படும் வேற்று சாதி ஆண் கொல்லப்படுகிறான். வீட்டினுள் சிறை வைக்கப்படும் கதையின் நாயகி அலைபேசியில் ஆபத்தான கட்டளைகளைப் பிறப்பிக்கும் ‘நீலத்திமிங்கலம்’ என்னும் வீடியோ கேமை தீவிரமாக விளையாடத் தொடங்குகிறாள். முடிவில் உயரமான நீர்த் தொட்டியின் மீதிருந்து அதனைத் தள்ளிவிட்டுக் கொல்வதாகக் கதை நிறைவுபெறுகிறது. இணையத்தில் ஒரு காலத்தில் பரவலாக அறியப்பட்ட ‘blue whale’ என்னும் வீடியோ கேமை புனைவில் இணைத்து அத்துடன் சாதியப் பிரச்சினையையும் தொட்டுக் காட்ட முயன்றாலும் அது தவறான இணைவாகவே தோன்றுகிறது. முந்தைய கதைக்குப் பலமான அடித்தளம் இருப்பதாகத் தோன்றுகிறது. அதில் காட்டப்படும் சித்ரலேகா சூழ்நிலையால் எதிர்வினையாற்ற முடியாதவளாக முடங்கிப் போவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதில் விரும்பிய ஆணின் மரணத்தை நேரில் சந்தித்து மீண்டிருக்கும் பெண் அலைபேசியில் வீடியோ கேம் கட்டளைகளுக்குப் பணிந்து போவதாகக் காட்டப்படுவது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதாகாவே அமைகிறது. சாதிய அமைப்புக் குறித்தும் அதைக் கட்டிக் காக்கும் குடும்ப அமைப்புக் குறித்தும் புனைவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தாலும் அது பொருந்தாத பரிசோதனை முயற்சியால் பின்தள்ளப்படுவதாகத் தெரிகிறது. முடிவில் அந்தத் திமிங்கலத்தைக் கீழே தள்ளி கொல்வதாகக் கதை முடிந்தாலும் நீலத் திமிங்கலத்தைச் சாதிய அமைப்புடன் பொறுத்த முயன்றிருக்கும் படைப்பாக்கம் அத்தனை சிறப்பாகக் கைகூடவில்லை.

மற்றொரு பலவீனமான முயற்சியாக ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தொகுப்பில் அமையும் ‘மீட்சி’ சிறுகதையைக் குறிப்பிடலாம். புனைவில் தமிழ்நாடு மொத்தமும் பேரழிவினால் அழிந்துபோன நிலப்பகுதியாகக் கற்பனை செய்யப்படுகிறது. அதனையொரு சுற்றுலாவாகச் சென்று பார்த்து வரும் மினூட், ஹெபிஸ் என்னும் இணையரின் நடுவே அலசப்படும் விவாதங்களும், உரையாடல்களுமே புனைவின் மையமாக அமைகிறது. பொதுவாக இதுபோன்ற முற்றிலும் கற்பனையான புனைவுகளைக் கையாளும் போது அதனை முற்றிலும் கேள்வி எழுப்பாத விதத்தில் புனைவது படைப்பாளரின் ஆழமான பரிச்சயங்களைப் பொறுத்தது. ஆனால், யதார்த்தவாத முயற்சிகளுக்கு மாற்றாகப் புனையப்படும் இத்தகைய சிறுகதைகள் அத்தகைய நம்பகமான புனைவுகளாக அமைவதில்லை. இதில் வரும் மினூட் என்னும் பெண் பாத்திரத்தின் கேள்விகள் மட்டுமே புனைவாகக் காட்டப்படுகிறது. மற்றபடி முழுக் கற்பனைக்கும் வலு சேர்க்கும் புறரீதியான தகவல்கள் குறைவாகவே உள்ளன. பழங்காலத் தமிழ்ச்சமூகத்தின் பெருமைகளும் வியப்புகளும் பேசப்பட்டாலும் எதற்காக இப்படியொரு முழுக் கற்பனையான புனைவு என்பது வாசித்து முடித்ததும் எழும் கேள்வியாக உள்ளது.

இதேபோன்ற பரிசோதனை முயற்சியில் சற்றே காரணக் காரியத்துடன் பின்னப்பட்டு இம்மாதிரியான பொருண்மையைக் கையாண்ட மற்றொரு புனைவாகச் சித்துராஜ் பொன்ராஜின் ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்’ சிறுகதையினை உதாராணமாகக் கூறலாம். இதுவும் முற்றிலும் கற்பனையான தளத்தில் பின்னப்பட்டிருப்பினும் அங்கே வெறும் இருவரின் சலிப்பூட்டும் உரையாடல்கள் மட்டுமே இருப்பதில்லை. மாறாகக் கனமான கதைக்கரு அதனுள் இழையோடுகிறது. சில வாய்மொழி மரபுகள் புனைவிற்கு அணிசேர்க்கின்றன. ஆனால் ‘மீட்சி’ அப்படியில்லாமல் வெறும் உரையாடலாக மட்டுமே சுருங்கிப் போகிறது.

யதார்த்தவாதமாக எழுதப்பட்டுள்ளவற்றில் மையம், சவுந்தரி ஆகிய கதைகள் பலமான கதைக்கருவாலும் அதற்கேற்றாற் போல் பின்னப்பட்டுள்ள சம்பவங்களாலும் தனித்து நிற்கின்றன. பிரியாணி, வீடு, ஆழமான பரவல் நடுநிலை பத்திரிகைகளை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளன என்பதாக யூகிக்க முடிகிறது. மொத்தத்தில் கலைச்செல்வியின் படைப்புகளைப் பார்க்கும்போது அது பத்திரிகைகளின் தேவையினையும், தேர்வினையும் மனதில் இருத்தி புனையப்பட்டுள்ளன என்பது கொஞ்சம் புலப்படுகிறது. ஆனால், தனது வாசிப்பின் வழியே அடைந்த தவிர்க்க முடியாத பலமான கேள்விகள் அவர் படைப்புக்கு அடித்தளமாக அமைவதையும் காண முடிகிறது. அதனை வெற்றிகரமான படைப்பாக மாற்றுவதில் சற்று நிதானமும் பயிற்சியும் தேவையெனத் தோன்றுகிறது.

மேல் செல்