இலக்கியப் பிரதிகளை எந்தவித விமர்சனப் பார்வையுமின்றி அழகியல் தளத்தில் மட்டுமே வைத்து வாசிக்கப்படும்போது, அவை தனக்குள் மறைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறைகள் வாசகர்களிடம் இயல்பாக்கம் (normalize) பெறுகின்றன. இலக்கியப் பிரதிகள் அனைத்துமே நம்மைச் செழுமைப்படுத்துபவை; அவை ஆழமான மெய்மைகளை மட்டுமே உணர்த்துகின்றன எனும் முதலாளித்துவ/அழகியல் முன்முடிவுகளுடன் அணுகும்போது, அப்பிரதிகளின் உட்கட்டமைப்புகளுக்குள் பதுங்கியிருந்து இயங்கும் அதிகாரக் குரல்கள் பிரக்ஞைக்கு அகப்படாமலே வாசகரின் மனங்களுக்குள் ஊடுருவி படிந்துவிடுகின்றன.
இப்படிச் சொல்வதை விளக்கி விபரிக்கச் சுகுமாரனின் கவிதையொன்றினை எடுத்துக்கொள்கிறேன். முதலில் அக்கவிதையை வாசித்துவிடுங்கள்.
கணிப்பு
இன்னும்
ஒரு இலை துளிர்த்தால்
முழுமையாகும் இந்த மரம்
இன்னும்
ஒரு துளி மழை விழுந்தால்
பூரணமாகும் இந்தக் கடல்
இன்னும்
ஒரு விண்மீன் சுடர்ந்தால்
விரிவாகும் இந்த வானம்
ஆனால்
அந்த இலை துளிர்க்க
அந்த மழை துளிக்க
அந்த மீன் சுடரக்
கணித்திருப்பது
பதின்மூன்றாம் மணியில்.
-சுகுமாரன்-

சுகுமாரனின் இந்தக் கவிதையினை மேலோட்டமாக வாசிக்கும் போது, எதிர்பார்பின் முரண்நகையையும் (Irony of expectation) மனிதக் கணிப்புகளின் இயலாமையையும் வெளிப்படுத்தும் ஒரு பிரதியாகத் தென்படலாம். நாம் ஒவ்வொன்றிலும் முழுமையை அல்லது பூரணத்தை எதிர்பார்க்கிறோம், அந்தப் பூரணத்துவத்தை அடைவது உண்மையில் அசாத்திய நிலையில் உள்ளது. மனிதன் தன் கணிப்புகளால் எதிர்காலத்தைக் கணக்கிடுகிறான். ஆனால், இயற்கை அல்லது விதி, மனிதக் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட “13ஆம் மணியில்” தான் அந்த முடிவை வைத்திருக்கிறது. நிறைவேறாத ஒரு தருணத்திற்காக மனிதமனம் காலம் முழுவதும் காத்துக் கொண்டேயிருக்கிறது என்பதை இக்கவிதை உணர்த்த முனைவதாக ஒரு வாசிப்பு நமக்குக் கிடைக்கிறது.
கவிதைகள் எல்லாம் நல்லவை; நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஆழமான விடயதானங்களையே முன்வைக்கும் எனும் முன்முடிவுகளுடன் அணுகும்பொழுதே மேற்சொன்ன வாசிப்பு கிடைக்கும். ஆனால் இந்தக் கவிதைப் பிரதி கதையாடும் அடிப்படையினை உற்று நோக்கினால், இப்பிரதி மீள் கட்டமைப்புச் செய்து கதையாட முனையும் வன்முறை கருத்தமைவுகளை நுணாவி அவதானிக்கலாம்.
இக்கவிதைப் பிரதியின் அடிப்படையே பரிபூரணவாதத்தினை எந்தவித விமர்சன நோக்கிற்கும் அப்பால் பேருண்மையாக ஏற்புச் செய்திருப்பதுதான். அப்படி ஏற்றுக்கொண்ட ஒரு கவிதைசொல்லியின் ஆரூடமாகவே இப்பிரதி அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
பரிபூரணவாதம் அல்லது முழுமைவாதம் என்பது அடிப்படையில் தூய்மைவாதத்தின் இன்னொரு வடிவம். தூய்மைவாதம் என்பது “தூய்மை vs அசுத்தம்” என்ற எதிர்வை உருவாக்குகிறது.
பரிபூரணவாதமும் அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி “முழுமை vs குறைபாடு” எனும் இருமை எதிர்வுகளையே நிறுவுகிறது. இத்தகைய தூய்மைவாத; பரிபூரணவாத கருத்தமைவானது அதிகார முனைகளால் தங்களின் மேலிருப்பை நியாயப்படுத்தவும், மற்றமைகளைத் தன்னைப் போன்ற தன்னிலைகளாக மாறும்படியான நிர்பந்தந்தை அவற்றிடம் இயல்பாக்கம் செய்யவும் கையாளும் உத்தியாகவே அமைந்திருக்கும். இவ்விரு கருத்தமைவுகளுமே அவற்றின் சட்டகத்திற்கு வெளியில் இருக்கும் இடைப்பட்ட சாத்தியங்களை நெட்டித் தள்ளிவைக்கின்றன. ஒன்றில் அது முழுமையாக அல்லது தூய்மையாக இருக்க வேண்டும்; இல்லையெனில் அது குறைபாடுள்ள ஒன்றாக அல்லது மாசடைந்த ஒன்றாக மட்டுமே பார்க்கப்படும் எனும் வன்முறையை இரண்டும் ஒரேபோலப் பிரயோகிக்கின்றன.
பொதுவாக நமது உரையாடலின்போது, இந்தச் சினிமாப் படத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் இருந்திருந்தால் முழுமையாகியிருக்கும்; அந்தக் காட்சியை இன்னும் கொஞ்சம் விரிவாகக் காட்டியிருந்தால் பூரணமாகியிருக்கும். அந்தப் பெரிய கட்டடத்தில் இரண்டு கழிவறைகள் கட்டப்பட்டிருந்தால் பூரணமாகியிருக்கும் எனச் சொல்வதில்லையா? அதே போன்றதொரு அர்த்தத்தில் தானே இக்கவிதையும் பேசுகிறது? அதற்குப் போய் வன்முறை என வரிந்து கட்டுவது நியாயமா எனும் கேள்வி உங்களுக்கு எழக்கூடும். அப்படித்தான் இக்கவிதை குறித்து உரையாடும்போது எனது நண்பரொருவரும் கேட்டிருந்தார்.
நாமே உருவாக்கிக்கொண்ட ஒரு விடயத்தின் மீது, அதன் பயன்பாட்டு நோக்கம் கருதி ‘இன்னும் ஒன்று குறைகிறது; இன்னும் முழுமையாகவில்லை’ எனச் சொல்வது வேறு. அதனையே ஒரு மனிதரிடம் பிரயோகிப்பது முற்றிலும் வேறானது. அங்கு எது முழுமை எனும் அதிகார மைய சிந்தனை இயங்குகிறது. எது முழுமை எனும் வரையறைச் சட்டகத்தை வைத்துக்கொண்டு, பன்மையான வித்தியாசங்களின் இருப்பு நிராகரிப்படுகின்றன.
இங்குக் குறிப்பிடும் பூரணமடையவில்லை என்பது, வெளியிலிருந்து திணிக்கப்படும் நெறிமுறை மதிப்பீடு. பன்மித்திருக்கும் இயற்கையான அசைவியக்கத்தைத் தூய்மைவாதமும் பரிபூரணவாதமும் சகித்துக் கொள்வதே இல்லை. அவை ஒரு கற்பனையான ‘நிலைத்திருக்கும் இலட்சியத்தை (static ideal) உருவாக்கி, அதற்குள் எல்லாவற்றையும் அடைக்க முயல்கின்றன.
இடைச் செருகல்: வித்தியாசங்களின் விடயத்தில் ‘சகித்துக் கொள்ளல்’ என்பது ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். ‘சகித்தல்’ என்பது அடிப்படையில் கஷ்டப்பட்டு வலிந்து மேற்கொள்ளப்படும் செயலையே சுட்டுகிறது. அதாவது, சகித்தல் என்பது எதைச் சகித்துக் கொள்கிறோமோ அந்தவிடயத்தை இன்னும் ஒவ்வாமையாகவே கருதிப் பேணுகிறோம் என்பதையே மறைவில் வெளிப்படுத்துகிறது. உண்மையில் பன்மித்திருக்கும் வித்தியாசங்கள் வலிந்து பொறுத்துக்கொள்ள வேண்டியவை அல்ல; மாறாக இயல்பானவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகள். மற்றமைகளின் வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உருவாகிவிட்டால், அங்குச் சகிக்க வேண்டிய தேவைக்கும் இடமில்லாமல் போய்விடும்.
இந்தப் பரிபூரணத்துவம் என்பது மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட கருத்தமைவுதான். அந்தக் கருத்தமைவு மனிதர்களுக்கே பொருந்தாது. பன்மையான மனோநிலைகளை, உடல்வாகுகளை, வாழ்வியல் முறைகளைக் கொண்ட மனிதர்களிடம் பரிபூரணத்துவத்தை முன்வைப்பது, அவர்களின் வித்தியாசங்களைக் குறைபாடாகக் கருதும் வன்முறை மனதின் வெளிப்பாடுதான். அது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், இக்கவிதைப் பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் கவிதைசொல்லி, மனிதரல்லாத ஏனையவைகளிடமும் அக்கருத்தமைவை கவிழ்த்திப் பார்க்கிறார். மனித மைய சிந்தனையான பரிபூரணத்துவத்திற்கும் மரம், கடல், வானம் என்பவற்றிற்கும் என்ன சம்பந்தம்? அவற்றிடம் அது பற்றிய எந்தவித கரிசனையும் இருப்பதில்லை. எது தூய்மையானது, எது முழுமையானது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் எப்போதும் மையத்திலிருக்கும் அதிகார அமைப்புகளிடமே இருக்கும். இப்பிரதியில் அந்த அதிகாரத்தினைப் பிரதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் கவிதைசொல்லியிடம் காண்கிறோம். அதனையே மனித மைய சிந்தனை (anthropocentrism) எனக் குறிப்பிடுகிறேன்.
இக்கவிதை முழுவதிலும் “இன்னும் ஒன்று குறைந்திருக்கிறது, அது நடந்தால் மட்டுமே நிறைவு எட்டப்படும்” என்ற நோக்குநிலையைக் காணலாம். இது மேலைத்தேயத் தத்துவங்களில் ஒன்றான Teleology சார்ந்த சிந்தனை. டெலியொலொஜி முன்வைக்கும் கருத்தியல் என்னவென்றால், பிரபஞ்சத்திலுள்ள அத்தனைக்கும் ஒரு இறுதி இலக்கு உண்டு. அவ்விறுதி இலக்கை நோக்கியே அவற்றின் இருப்பும் அசைவும் அமைகின்றன. ஆனால் எதார்த்தமோ, இயற்கையிலுள்ள எந்த ஒன்றின் வாழ்வும் இறுதி இலக்கை நோக்கியதாக இல்லை. அவற்றின் இயங்கியல் ஒரு முடிவில்லா சுழற்சி இயக்கம் (continuous process).
மரத்திற்கு முழுமையடைவது என்ற இலக்கு எதுவும் கிடையாது. மரம் என்பது நிலையான ஒரு வடிவமல்ல. அது துளிர்க்கிறது, உதிர்கிறது, பூத்துக் காய்க்கிறது. இனப்பெருக்கம் செய்கிறது. மட்கிப் போகிறது. பின் அதன் கனிமங்கள் இன்னொரு வடிவில் உயிர்க்கின்றன. தொடர் இயக்கத்தில் சுழல்கின்றன. அதில் ‘ஒரு இலை குறைந்திருக்கிறது’ என வரையறுப்பதே மனிதன் புனைந்துகொண்ட கற்பிதங்களை இயற்கைமீது திணிப்பதுதான். பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் கவிதைசொல்லி, மரத்திற்கு ஒரு இறுதிப்புள்ளியைத் தீர்மானித்து, அதை நோக்கி இயங்கவேண்டும் என எதிர்பார்ப்பை முன்வைக்கிறார். இயற்கையின் தொடர் இயக்கத்தை நிராகரித்து அவற்றை நிலையான பொருளாகக் குறுக்கிவிடுகிறார். பரிபூரணமடைவதற்கான இலக்கைக் தீர்மானிக்கும்; மேற்பார்வை செய்யும் அதிகார ஏஜென்ட்டாகவே அக்கவிதைசொல்லி பிரதிக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மழைத்துளிகளைப் பெறுகிறது கடல். அதனிடம் ‘இன்னும் ஒரே ஒரு துளி’ விழுந்தால்தான் பூரணமாகும் என்பது, அதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளும் குறுக்கப்பட்ட அளவீடுகளுக்குள்ளும் அடைத்துப் பேண முற்படும் முனைப்பினையே மறைவில் வெளிப்படுத்துகிறது.
இக்கவிதையானது தனது உள்ளலகுகளுக்குள் நுணுக்கமாகச் செய்யும் வேலை அதுதான். இயல்பான மாற்றங்களுக்கும் அசைவுகளுக்கும் உட்பட்ட இயற்கை அமைப்புகள் மீது மனித மையவாதச் சிந்தனையை; அதிகாரமுனையின் கருத்தாக்கமான பரிபூரணவாதத்தினை ஏற்றிவைப்பதனூடாக, அக்கருத்தாக்கத்தினை வாசகர் மனதில் இயல்பாக்கம் (normalize) செய்யப் பங்களிக்கிறது.
இக்கவிதையில் இடம்பெறச் செய்திருக்கும் மரத்தையும், கடலையும், வானத்தையும் பொதுவாகக் குறிப்பிடாமல், ‘இந்த’ மரம், ‘இந்த’ கடல், ‘இந்த’ வானம் எனக் குறிப்பாக்கம் செய்திருப்பதால், நமக்குப் பரீட்சயமற்ற வேறொரு மரத்தை, கடலை, வானத்தைத் தான் இங்குக் குறிப்பிட்டுச் சொல்கிறார். அவை குறிப்பிட்ட நபர்களுக்கான உருவகமாகவும் இருக்கக் கூடும் என்றொரு வாசிப்பையும் செய்து பார்க்கலாம் தான். அப்படி வாசிப்புச் செய்தால், மனிதமற்றவைகள் மீது அவர் பரிபூரணத்துவக் கருத்தமைவை கவிழ்த்திவிடுகிறார் என்ற விமர்சனம் பொருந்தாது. அப்படியாக வாசிப்புச் செய்தாலும் கூட, அங்கும் நெருடிக் கொண்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், அந்த மரமும், கடலும் வானமும் (அந்த நபர்கள்) இன்னும் குறைபாடுகளுடன் இருக்கின்றன என்பதையே வரையறுத்து நிறுவுகிறது. பரிபூரணமடையவில்லை என்றால், அவை குறைபாடுடன் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்? அதனைத் தானே மறைவில் உறுதிப்படுத்துகிறது?
சுருக்கமாகச் சொல்வதென்றால், பரிபூரணவாதத்தின் பிரச்சார ஏஜென்ட் ஒருவரின் கவிதைச் சிந்திப்பினையே மேலுள்ள பிரதிக்குள் அவதானிக்க முடிகிறது. அதிலும் ஒரு பரிபூரணவாத மதச் சாமியாரின் (அல்லது ஜோசியக்காரரின்) தர்க்க சாத்தியமின்மையை முன்வைக்கும் தொணியினையே இப்பிரதிக்குள் பார்க்க முடிகிறது. ஏன் அப்படிச் சொல்லத் தோன்றுகிறது என்றால், அவர் குறிப்பிடும் பரிபூரணங்கள் நிகழக் கணித்திருக்கும் நேரம் பதின்மூன்றாம் மணியிலாம்.
13ஆம் மணியில் கணிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறி, அந்த முழுமை எட்டப்படவே முடியாது என்பதை ஒரு சோகமான அல்லது புதிரான அழகியலாகக் கவிதைசொல்லி மாற்றுகிறார். அடைந்துவிட முடியாத; சாத்தியமற்ற ஒரு பரிபூரணத்தைக் கற்பனையாக உருவாக்கிவிட்டு, ‘அய்யோ, அது கிடைக்கவில்லையே’ என ஏங்குவது மனிதமனத்தின் ஒருவித melancholic trap. இல்லாத ஒன்றை அல்லது பொருத்தமற்ற அளவுகோலை உருவாக்கிவிட்டு, அதற்குள் இயற்கையையோ மனிதனையோ பொருத்திப் பார்த்து ‘எல்லாமே குறைபாடுடையது’ என்ற விரக்தியையும் இயலாமையையும் அழகியலாக்கும் போக்கை தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல வேறுமொழிகளிலான இலக்கியங்களிலும் அவதானிக்கலாம். இலக்கியவாதிகளின் இந்த “இலட்சிய விரக்திக் கற்பனைகள்” கட்டுடைப்புச் செய்யப்பட வேண்டியவை.
இங்கு நேரம் சார்ந்து இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதன் வகுத்துக்கொண்டு கண்டுபிடித்த 12 அல்லது 24 மணி நேரக் கடிகாரக் கணக்கிற்கும், மரத்தின் துளிர்ப்பிற்கும் என்ன தொடர்பு? மனிதனின் கடிகாரத்தைப் பார்த்தா மரம் துளிர்க்கிறது, மழைத்துளி கடலில் வீழ்கிறது, விண்மீன் சுடர்கிறது? உலகில் எதன் கால நேரமும் ஒன்றாக அமைவதில்லை. ஒவ்வொன்றின் காலவெளியும் பன்மையான வித்தியாசங்களுடனேயே அமைந்திருக்கின்றன. அவை அத்தனையினதும் இயங்கியலை மனித கால நேரக் கணக்கிற்குள் அடக்கி அசையவைப்பதும் பூரணத்துவ எதிர்பார்ப்பினை கட்டமைப்பதும் கவிதையின் வேலையாக இருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அது பயன்பாட்டு நோக்கம் கொண்ட முகாமைப் பணியாளர்களின் வேலை.
சுகுமாரனின் இந்தக் கவிதையை வாசித்துப் பார்த்துவிட்டு என்னுடன் உரையாடத் துவங்கிய நண்பர் ‘இந்தக் கவிதை ஒன்றும் பரிபூரணவாதத்திற்கு ஆதரவாகப் பேசவில்லையே, அப்பரிபூரணவாதத்தினை நையாண்டி செய்வதாகத்தானே இருக்கிறது’ என்றார். நையாண்டி செய்வதாக இருந்தால், இக்கவிதையில் சிதைத்துப் பார்த்திருக்க வேண்டிய பகுதி ‘பரிபூரணவாதக்’ கருத்தமைவைத்தான். கவிதையில் வைத்திருக்கும் கவிதை சொல்லிக்கோ, பரிபூரணவாதம் மீது எந்தப் பொல்லாப்பும் இல்லை. அவரின் கவனம் நேரத்தின் மீதே குவியம் கொள்கிறது. சாத்தியமற்ற 13வது மணி சாத்தியமானால்தான் பரிபூரணம் நிகழும் என்றுதான் கவிதை முன்வைக்கிறதே ஒழிய, பரிபூரணத்துவக் கருத்தமைவு தவறு எனச் சுட்ட முனையவில்லை. பரிபூரணத்துவத்தை எட்டமுடியாத இயலாமையைத்தான் கவிதை பிரதானப்படுத்துகிறது. 13வது மணித்தியாலம் என்பது சாத்தியமற்றதால், எல்லாம் (மரமும் கடலும் வானமும்) குறைபாடாகவே உள்ளன என்பதைத்தான் கவிதை முன்வைக்கிறது. ஆக, இக்கவிதை கேலி செய்வது பரிபூரணவாதத்தை அல்ல; பரிபூரணத்தை அடையமுடியாத மனிதனின் அல்லது இயற்கையின் நிலையினைத்தான். ஆனால் எனது வாசிப்பின் அடிநாதமே இயற்கை உயிரிகளும் அவற்றின் வித்தியாசமான அசைவியக்கமும் ‘முழுமைத்துவம் X குறைபாடு’ எனும் அளவுகோலுக்கு வெளியே இருக்கிறது என்பதுதான்.