கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

குறிச்சொற்களால் இயங்கும் கருத்துருவ இயந்திரங்களின் தோற்றநிலை குறித்த இருமையின் உசாவல் - 'ஷம்பாலா'

யாழ் அதியன்

பகிரு

மொழி குறிவயமானதால் மொழியினூடாக இயங்கும், இயக்கப்படும் மனித உடல்களைக் குறிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது அதிகாரத்தின் பல நுண்ணலகுகளால் மூளையை வடிவமைப்பதாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய குறிவயமாக்கல் மொழிக்குறிகளின் பன்மைத்துவக் குறிப்புநிலைகளை அழித்து, தெரிபுகளை முதன்மையாக்கி அதிலும் மாறாத திட்டமிட்ட குறிப்பீடுகளை வடிவமைக்கிறது. இவ்வடிவமைப்புகளிலிருந்து உடல், பால், நிறம், மொழி, இனம், மதம் என்று பண்பாட்டுக் கருத்துருவ இயந்திரம் பல நிலைகளில் இயங்குகிறது. இக்கருத்துருவ இயங்குநிலை குடும்பம், சமூகம், கல்வி – மருத்துவம் – அறிவியல் முதலிய நிறுவனங்கள் என்றும், ஊடகங்கள் – தொழில்சார் நிறுவனங்கள் என்றும் கலை, இலக்கியம் என்றும் ஒழுக்கவியல் கூறுகளை முன்வைக்கும் இன்னபிற செயல்பாடுகள் என்றும் விரிகிறது. அரசு இயந்திரம் வரலாற்றுக் காலந்தோறும் தனது அதிகார மையத்திற்கு ஏற்ப இக்கருத்துருவ இயந்திரங்களை மாற்றி வடிவமைக்கவும் புதுப்பிக்கவும் தொடர்விக்கவும் செய்கிறது. இவ்வாறான செயல்பாடுகளினூடாக மனித உடல்கள் முழுமையும் கருத்தியல் இயந்திரங்களால் சிறையாக்கப்பட்டதாக மாற்றப்படுகிறது. இக்கருத்துருவ இயந்திரங்கள் குறிவயமாக இயக்கப்படுவதால் அதன் நுண்ணலகுகள் குறித்த அவதானிப்பின்றிப் பொதுப்புத்தியின் மந்தைத்தனம் கட்டியெழுப்பப்படுகிறது. இம்மந்தைத்தனங்களை நுண்ணலகுகளால் உருவாக்குவதும் நடைமுறை படுத்தலும் அதிகார இயந்திரங்களின் செயல்திட்டமாக இருக்கிறது. அந்தவகையில் ஷம்பாலா முக்கியத்துவமுடைய நாவலாகிறது. அதிகார இயந்திரத்தின் கருத்துருவ இயந்திரங்களாக இயங்கிய பிரதிகளையும், அவற்றோடு ஊடாடி விவாதித்தும் மறுத்தும் விமர்சித்தும் பகடிசெய்தும் வந்த பிரதிகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பார்க்க முடியும். இந்த இரண்டாம் நிலையில் சித்தர் மரபு முதலியவற்றைக் கூற முடியும். ஷம்பாலாவை அப்படியான ஒரு தொடர்ச்சியில் பார்க்க முடியும்.

மனித மூளையை வடிவமைக்கும் செயல் திட்டத்தை எவ்வாறு அதிகார இயந்திரம் பல நுண்ணலகுகளால் கட்டமைத்துக் கண்காணிக்கிறது என்பதை நாவல் சமகால அரசியலை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அரசியல் அதிகாரம் தொடர்ந்து நிலைபேறாக்கம் செய்வதற்கு, கருத்துருவங்களை உருவாக்கல், நிலைநிறுத்தல் தேவையாகிறது. எனவே அதை நிலைநாட்ட சமூக, பண்பாட்டுத்தளத்தில் மனித உடல்களை வடிவமைத்து ஏற்பைச் செய்ய வேண்டியது தேவையாகிறது. அதன்பொருட்டே சமயம், இலக்கியம், ஊடகம், நுகர்வு பெருக்கப் பொறிமுறைகள் போன்ற கருத்துருவ நிறுவனங்களை இயக்குவதாக மாறுகிறது. இவ்வாறான நிலையில் குறிவயமான நுண்ணலகுகளால் கருத்துருவ இயந்திரம் இயங்குகிறது. அதிகார இயந்திரம் இவற்றை உணரும், விவாதிக்கும், பகுப்பாய்வு செய்யும் மனிதர்களைக் கண்காணிப்பது, அச்சுறுத்துவது, உளவியல்ரீதியான நெருக்கடியைத் தொடர்ந்து உருவாக்குவது என்று பல தளங்களிலும் இணையக் கண்காணிப்பு உட்பட விரிவாக இயங்குகிறது. இத்தகைய அதிகார இயந்திரத்தை இயக்கும் சக்திகள் வரலாற்றில் எவ்வாறு உற்பத்தியாகிறார்கள், அதற்கு மாற்றான மனித விடுதலை குறித்த சிந்தனையாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்ற இருமை நிலையில் நாவல் பயணிக்கிறது. அந்த இருமை நாவலில் ஹிட்லர் X அமர்நாத் என்று கட்டப்படுகிறது.

திபெத்தில் உள்ள ஷம்பாலா என்கிற இடம் உலகின் அதிகார மையம் என்ற பழந்தொன்மத்தை ஹிட்லரின் வழியாகச் சமகால அரசியலுக்கு இடம்பெயர்க்கிறது நாவல். ஹிட்லர் எனும் தனிநபர் அதிகார மையமாக அதிகாரத்தின் பகுதியாக எவ்வாறு உற்பத்தியாகிறார் என்பதை நாவல் விரிவாகச் சொல்கிறது.

குடும்பம், கல்விநிலையம், பொதுவெளி என எங்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக எதையும் துணிந்து செய்யும் ஒரு நபராக ஹிட்லர் பாத்திரம் வருகிறது. பள்ளிக்கு ஏன் வரவில்லை என ஆசிரியர் கேட்டதற்குத் தாய் இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறான் ஹிட்லர். ஆசிரியர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். தன் தந்தை கட்டட வேலை செய்பவர். அவர் வேலைசெய்யும் கட்டடம் தன்னுடைய வீடு என ஆசிரியரிடம் பொய்சொல்கிறான். இவ்வாறான நடவடிக்கைகளால் வீட்டில் மோதல் வருகிறது. பின்பு அரசியலில் நுழைந்த ஹிட்லரை ஜூனியர் அமைச்சராக்கியதை முதலமைச்சரின் மனைவி விரும்பவில்லை. இரண்டாவது மகனை அமைச்சராக்க வேண்டுமென முரண்படுகிறார். அவரையும் அவர் மகனையும், “ என்ன ஸார் என் அமைச்சர் பதவியை நீங்கள் பெறுவது அப்படிப் பெரிய விஷயம்? என் உயிரை உங்களுக்குத் தருகிறேன்” (118) என்று சொல்லி தன் உடலில் பெட்ரோலை ஊற்றி அவர்களை வசப்படுத்துகிறான் ஹிட்லர். குஸ்தியின் மூலம் தோழனாக மாறிய ஏ.பி.சிங் இறுதிவரை உடன் நிழலாகப் பயணிக்கிறான்.

இவ்வாறாக ஹிட்லர் கதாப்பாத்திரம் அதிகாரத்தின் மையத்தை நோக்கிச் செல்வதற்கு அதிகாரத்தின் பகுதியாவதற்கு எதையும் செய்யத் துணிந்ததாகப் படைக்கப்பட்டிருக்கிறது. இதன்வழியாக அதிகாரத்தின் மைய உருவாக்கங்களை நாவல் மொழிகிறது.

இந்த அதிகார இயந்திரத்தின் செயல்படுதளத்தில் இயங்கமுடியாமல் லஷ்மன் போன்றோர் தவிக்கின்றனர். படித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக வந்தாலும் தலித் என்ற காரணத்தால் தன் சொந்த ஊரில் சீருடையுடன், செருப்பணிந்து இன்றும் செல்லமுடியா நிலையில் லஷ்மன் கதாப்பாத்திரம் வருகிறது. அதிகார அமைப்பு என்கௌண்டர் கொலையில் தலித்துக்களைப் பயன்படுத்துவது தொடர்கிறது(175). முதலமைச்சர், லஷ்மனனைப் பார்த்துக் கண்ணடிக்கிறார். அதன் பொருள் ஒருவரைக் கொலைசெய்வது என்பதை அதிகாரிகள் சொல்கின்றர். இங்கும் அதிகாரம் குறிவழியாகத் தனது செயலைச் செய்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள், பசுமாமிசம் சாப்பிடுபவர்களைத் தண்டிப்பதாய்வரும் தொலைக்காட்சி நிகழ்வு (73) போன்றவற்றையும் இதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். ‘ஸ்நூக்கர் கோல் அளவு கூட ஆட்சி சரியில்லை’ (178) என்ற குரல் இவைகளின் வழியாக நாவலில் வெளிப்படுகிறது.

பணமதிப்பிழப்பினால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பழங்குடிகள் அதை ஏற்கவில்லை தனித்துவமாக இயங்குகிறார்கள். பணமதிப்பிழப்பு போன்ற சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை மறைக்கப் பொதுப்புத்தியில் முரண் அரசியலைப் பரப்பிவிட்டு மக்களைக் குழப்பத்திலும் சிந்தனையற்றவர்களாகவும் மாற்றிவிடும் போக்கிற்கு, கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனை அதிகாரிகளும், ஊர்மக்களும் ஆணவக்கொலை, இந்து, முசுலீம் என மாற்றி மாற்றிக் கூறுவதைச் சான்றாக்கலாம்.

பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வல்லாதிக்கம், பொருளாதார நெருக்கடி, இயற்கை, சுற்றுச்சூழல், வேளாண்மை பாதிப்பு, முதலிய பல சிக்கல்களைக் கண்டுகொள்ளாமலிருக்க/ திசைதிருப்ப மதம், சாதி முதலிய குறுங்குழு முரண்களை முன்னிறுத்தியும் நுகர்வுக் கலாச்சாரத்தைத் தீவிரமாக ஊக்குவித்தும் சினிமா, தகவல்தொடர்புச் சாதனங்களினூடாக மனித மூளையை மழுங்கடித்தும் சிதைக்கும் வேலைகளை அதிகார இயந்திரங்கள் பல நுண்ணலகுக் குறியமைவுகளால் செயல்படுவதை இந்த நாவலின் கதைப்போக்கினூடாக உணரமுடியும்.

கல்விசார் அறிவுத்துறைகளிலும் மத அதிகாரம் ஊடுருவி மனித உடல்களை அதிகார விதிகளை ஒழுக்கமாகக் கேள்வியற்றுப் பின்பற்றுவனவாகக் கட்டமைப்பதையும் நாவல் உணர்த்துகிறது. ‘ராபர்ட், விநாயக் என்ற பெயர்களில் உள்ள இளைஞர் மத அதிகார இயந்திரத்தை உண்மையென நம்பி பாதிப்புக்கு உள்ளாகி பின் அதிலிருந்து மீண்டு தெளிவுபெற்றவராகக் காட்டப்படுகிறார். மடாதிபதியின் தம்பி பாலியல் வன்புணர்வுச் சிக்கலில் மாட்டிக்கொண்டதால் ராபர்ட்டை அவனுக்குப் பதிலாகச் சிறைக்கு ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். பின்புதான் ராபர்ட்டுக்குக் காரணம் தெரியவந்தது. இப்படியான நிலையிலிருந்து ராபர்ட்டுக்கு வலதுசாரி அரசியல்மீது வெறுப்பு வந்து பதிப்பக வேலைக்கு வந்துசேர்கிறார்’. இங்கெல்லாம் மதநிறுவனம் எளிய மக்களைக் கருத்துருவப் பொறிமுறையால் மூளைச்சலவைசெய்து ஏமாற்றுகிறது என்பதை நாவல் உணர்த்துகிறது. வரலாறு நெடுகிலும் மதமும் அரசதிகாரமும் கைகோர்த்துப் பயணிப்பதைப் பார்க்கிறோம். அரசதிகாரம் இன்றிச் சமய நிறுவனங்கள் நிலைபேறடையவில்லை. இவ்வாறான பல்வேறு நுண்ணதிகாரப் பொறிமுறைகளின் அலகுகளை நாவல் எடுத்துரைக்கிறது.

சிந்தனைப்போலிஸ் – சொற்களினூடாகக் கட்டுப்படுத்தும் பொறிமுறை

அரசு இயந்திரம் மனித உடல்களைக் கருத்துருவ இயந்திரங்களால் விலகாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக, ‘ நாவலில் இராணுவ டாங்கியைக் கல்வி நிறுவனத்தின் முன் கட்டித்தொங்கவிடல், மதப்பிரச்சாரம் செய்தல், பசுவதை - ராமர் கோயில் கட்டினால் மூலதனம் பெருகும்’ போன்ற செய்திகளை முன்வைத்தல் முதலியனவற்றைக் காணமுடியும். அதைப்போலச் சிந்தனையாளர்களை, விடுதலை அரசியல் பேசுபவர்களைத் தீவிரவாதிகள், புரட்சியாளர்கள் என அடையாளப்படுத்தி ஒடுக்குதல் போன்ற செயல்திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களாக அமர்நாத், சுரேஷ் போன்ற கதாப்பாத்திரங்கள் வருகின்றன.

அமர்நாத் வரலாறு, அரசியல், இலக்கியம், அரசியல் என்று எழுதும் இடதுசாரி எழுத்தாளராக, சிந்தனையாளராக அறியப்படுகிறார். அவர்மீது உளவியல் ரீதியிலான தாக்குதலை மிக நுட்பமாகச் சிந்தனைப்போலிஸ் செய்கிறது. அமர்நாத்தின் மகள் அமரி, வீட்டில் உள்ளபோதே காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது எனப் பொய்த்தகவலைப் பரப்புகிறது காவல் துறை. இதனால் பதற்றத்திற்கு உள்ளாகிறது அமர்நாத்தின் குடும்பம். அமரி படிக்கும் பள்ளியிலும் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். சிந்தனைப்போலிஸ் வீட்டுக்கு வந்து அமர்நாத்தைச் சோதனையின்பேரில், ‘சிறுநீர் சோதனை, ஜட்டியின் அளவு பார்த்தல், மார்பளவு பார்த்தல்’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இவ்வாறான சிந்தனைப் போலிஸின் நடவடிக்கைகள் பகடியாகத் தோன்றினும் உளவியல் நெருக்கடிக்குள் அதிகார இயந்திரம் எவ்வாறு தள்ளுகிறது என்பதை வெளிப்படுத்த தவறவில்லை கதை. மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவர் நூல்களின் வழி ‘சொல் தொகுப்பாய்வு’ செய்தல், மொழி, எழுத்து, கவிதை முதலியவற்றினூடு மனித மூளையின் சிந்தனையை அறிதல் போன்ற நிலைகளில் சிந்தனைப் போலிஸ் மிக நுட்பமாக இயங்குகிறது. ‘வாக்கியங்கள், சொற்கள், சொற்களுக்குக் கீழ் உள்ள சொற்கள், பத்தி என்று மனம் இயங்கும் விதத்தைக் கண்டுபிடிக்கும் முறையில்’ செயல்படுகிறது. பத்திரிக்கை, புத்தகங்கள், டி.வி என எல்லா இடங்களிலும் வார்த்தைகள் வழியாகக் கண்காணிக்கிறது (36). அரசின் கருத்துக்கு எதிராகப் பேசுபவர்களைக் கண்காணிக்கிறது. ‘நட்பு, அன்பு, அறிவு, தோழமை’ முதலிய பலவற்றையும் பயன்படுத்திச் சிந்தனைப் போலீஸ் இயங்குகிறது.

1600 பக்கக் கதை எழுதும் சினிமா எழுத்தாளர் நாவலில் வந்துபோகிறார். எழுத்தை ஒரு பண்டமாக, நுகர்வாக, வணிகமாகக் கருதும் போக்கை இதன்மூலம் நாவல் பகடி செய்கிறது. சினிமா சார்ந்து இயங்குபவர் அறிவுஜீவியாக, தலைசிறந்த எழுத்தாளராகப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்படுகிறார்கள். அதாவது மூளையை மழுங்கடிக்கும் நுகர்வுக்கலாச்சாரத்தின் பகுதியாகச் சினிமா எழுத்தாளர்களின் இலக்கியங்களை நாவல் இனங்காணுகிறது.

சமகாலச் சூழலில் சாதியத்தின் போக்குகளை ஊக்குவிக்கும் சக்திகள் பெருகி, பெரியாரியச் சிந்தனைகள் பின்னடைவு கண்டுவருவதையும் நாவல் முன்வைக்கிறது. இவ்விடத்தில் இன்றைய பின்காலனியச் சிந்தனையினூடே அடையாள அரசியலின் பகுதியாகச் சாதியம், பாலினம் போன்ற நவீனத்துவச் சிந்தனைக்கு முன்பான பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைப் புதிய வடிவில் மீள்கட்டமைப்பு செய்யவிழையும் போக்கு பெருகி வருவதைப் பார்க்கிறோம். அதன் ஒரு பகுதியாகவும் இப்பகுதியைக் காணவியலும்.

குறிப்பான்களின் மோதல்களம்

குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான உறவு இடுகுறித்தன்மையானதாகிறது. ‘ம-ர-ம்’ என்ற ஒலிக்கும் அது குறிக்கும் மரம் என்ற பொருளுக்குமான உறவு என இதைக் கூறலாம். இவ்வுறவு இடுகுறித்தன்மையானது. சொன்மை, பொருண்மைக் கருத்தாக்கங்களும் இவற்றோடு இணைத்துக் காணவேண்டியவை. இங்கே தெரிநிலை- குறிப்பு என்கிற மொழியின் பல்வேறு பொருண்மைவடிவங்கள் சூழல் சாத்தியங்களை உள்ளடக்கி இயங்குகிறது. ஆனால் குறிப்பான்- குறிப்பீட்டு உறவுகளையோ பொருண்மைத் தளங்களையோ அதிகாரக்கட்டமைப்புகள் திட்டமிட்டதாக மாறாததாக வடிவமைக்க முயல்கிறது. அவ்வாறான முயல்தல் முற்றதிகார மாறாத குறிவயமாகக் கட்டமைக்கிறது. அதாவது அதிகார அமைப்புச் சொற்கள், வாக்கியங்கள் என்கிற மொழித்தொகுதியின் பல்வேறு பொருட்சாத்தியக்கூறுகளைப் பின்னுக்குத் தள்ளி தான் கட்டமைக்கவிரும்பும் அர்த்தவடிவங்களை நிலைபேறாக்கம் செய்ய விரும்புகிறது. சமய - பண்பாடுக் குறிகள், கட்சி – அரசியல் குறிகள், நிறுவனக் குறிகள், தனிநபர் குறிகள், ஊடகக் குறிகள் முதலியவற்றின் செயல்தளங்கள் என்றெல்லாம் காணமுடியும். ஷம்பாலா இவ்வாறு அதிகாரக் கட்டமைப்பின் குறிவயப் பொறிமுறை எவ்வாறு கருத்துருவ இயந்திரங்களின் வழியாக இயங்குகிறது என்பதைப் புனைகிறது.

மொழிக்கிடங்கின் முந்தைய குறிவயக் கருத்தாக்க உறவுநிலைகள் மீது புதிய போக்குகள் தாக்குதல் நிகழ்த்தி அவற்றை மறுகட்டமைப்பு செய்யும் நீக்கவும் செய்யும். ஆனால் கருத்துருவ இயந்திரங்களால் நிலைபேறாக்கமடைய விரும்பும் அதிகார இயந்திரம் இம்மொழிக்கிடங்கின் பன்மைச் சாத்தியங்களின் மீது தாக்குதல் தொடுத்து குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான இடுகுறித்தன்மையைப் பின்னடையச் செய்து தான் நிறுவவிரும்பும் காரண நிலைக்கு நகர்த்தவே விரும்புகிறது.

குறிகள் உருவாக்கும் முந்தை மனக்கருத்தின்மீது ஆதிக்க வினைபுரிந்து அதை நீக்கம் செய்து தன் அதிகாரத்தின் வழி புதியதை உருவாக்குகிறது. நாவலில் ஹிட்லர், ஏ.பி.சிங், முதலமைச்சர், மதுசூதனன் போன்ற குறிப்பான்கள் தங்களுக்கிடையில் தாங்கள் உருவாக்கும் குறிப்பீட்டு ஒத்திசைவுகளால் ஒரு அதிகாரத் தொகுதியாக இயங்குகின்றன. இத்தொகுதி மற்றமைகளை இயக்குகிறது. அவ்வொத்திசைவு அதிகாரக் கருத்துருவ இயந்திரத்தின் கூட்டிணைவாகிறது. இதற்கு வெளியேயுள்ள அல்லது முந்தைய நிலைகளை அல்லது இத்தொகுதியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தெரிபு, குறிப்புப் பொருண்மை வடிவங்களைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது. அதாவது நாவலில் அமர்நாத், அமரி, சுரேஷ், ராபர்ட் - விநாயக், கன்னையாவின் அம்மா போன்ற இன்னொரு குறிப்பான்களின் குறிப்பீடுகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டாம் தொகுதி ஒடுக்கப்படும் தொகுதியாகிறது. இந்தவகையில் நாவலுள் குறிப்பான்களின் மோதல்களம் ஏற்படுகிறது. எனவேதான் சொற்களை, சொற்களைக் கையாள்பவர்களை, சிந்தனையாளர்களைச் சிந்தனைப்போலிஸ் வழியாகக் கண்காணிக்கிறது. சொல்தொகுப்பு, பகுப்பாய்வுகள் என நாவலில் முன்வைக்கப்படுகின்றன. மொழிக்கிடங்கின் (Langue) பன்மைச் சாத்தியங்களைப் பேச்சில் (Parole) கட்டுப்படுத்த நெருக்குதலைத் தொடுக்கிறது. அதிகாரக்கருத்துருவ இயந்திரம் உருவாக்கும் திட்டமிட்ட/ புதிய குறிப்பீட்டு வடிவங்களை இனங்காட்டும் இடத்தில் சொற்களைக் கையாளும் சிந்தனையாளர்கள் இருப்பதால் ஒடுக்குகிறது. இவற்றிலிருந்து விலகி தனித்தியங்கும் முந்தைய வடிவங்கள் (பழங்குடி வாழ்தல்) பாதிப்பின்றி இருக்கின்றன. இவ்விரண்டினூடாக ஊடாடும் நிலையும் (கன்னையாவின் அம்மா பணமதிப்பிழப்பால் இறத்தல்) பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவ்வாறு நாவலை, குறிச்சொற்களினூடாகக் குறியியல் மோதல்களமாக வாசிக்க முடியும். சிந்தனைப்போலிஸ், சொற்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் இதற்கான சாத்தியமாக அமைகின்றன.

அமர்நாத் கதாப்பாத்திர நினைவினூடாக முன்வைக்கப்படும் பகுதி இந்நாவல் சவால்களை நோக்கிச் செல்வதன் தேவையை உணர்த்துகிறது. “உலகம் முழுவதும் எதேச்சாதிகாரப் போக்குள்ளவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஜனநாயகப் பண்புகளைத் தோண்டிப் புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் வெற்றி பெற்று வருகிறார்கள். தங்களுக்குக் கஷ்டம் கொடுத்தாலும் மக்கள் அந்த எதேச்சாதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதை விளக்கிக் கூறுவதற்கு இன்றைய அறிவுத்துறை வளரவில்லை போலுள்ளது” (127-128) என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இக்கேள்வி மிக முக்கியமான இடைவெளியை, காரணத்தைக் கண்டறிய வேண்டிய தேவையை உணர்த்துகிறது. சிந்தனையற்ற அறிவுமறுப்பைக் கொண்டாடும் நுகர்வியத்தை ஊக்குவிக்கும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்கள், அதன் பகுதியான தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல்கள், அரசியல் -அதிகார அமைப்புகள், மதம்- சாதி முதலிய குறுங்குழுவாத முரணரசியல்கள் முதலியவற்றின் கூட்டிணைவுவடிவான அகப்புற நுண்ணரசியலின் இயங்கியல் தனிமனித- சமூகத்தன்னிலைகளை அழித்தொழிக்கும் கருத்துருவச் செயல் தளம் என்பதை உணராதவரை ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழாது என்பதை நாவல் உணர்த்துகிறது.

அடால்ப் ஹிட்லரின் நவீன செயல்வடிவமாக ஜுனியர் அமைச்சர் ஹிட்லர் நாவலில் முன்வைக்கப்படுகிறார். அந்த அதிகாரத்தின் நுண்ணியச் செயல்வடிவங்களாக நாவலின் தொடக்கம் அமைகிறது. ஹிட்லர் என்கிற தனிநபர், அதிகார இயந்திரத்தின் பகுதியாகத் தோற்றம் பெறுவதைக் குறித்த ஒரு பின்னோக்குநிலையிலும் சமகாலத் தன்மையிலும் என முன்னும் பின்னுமாக மாறிமாறி கதை பயணிக்கிறது. ஹிட்லருடன் இணைபிரியாது தொடரும் ஏ.பி.சிங்கின் நினைவுகளும் இவ்வாறே கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான ஊடாட்டமாக அமைகின்றன. இவ்வாறான கதைப்போக்குச் சமகாலக் கருத்துருவ அதிகார இயந்திரத்தின் தோற்ற நிலைகுறித்த ஒரு புலனாய்வாகவும் அமைகிறது. அதாவது அமர்நாத் X ஹிட்லரின் நிகழ்காலம் ஒன்றுடனொன்று முரண்பட்டு நின்றாலும் அமர்நாத் எனும் பாத்திரத்தினூடே கதைசொல்லி ஹிட்லரின் கடந்தகாலத்தை ஊடுருவிப் பார்க்கும் புலனாய்வாளர்போல் இயங்குகிறார். ஹிட்லர் எனும் குறிப்பான் அமர்நாத் எனும் குறிப்பானின் குறிப்பீட்டைத் தீர்மானிக்கும் சக்தியாக எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதைக் கதைசொல்லியின் எடுத்துரைப்பு அமைகிறது.

இவ்வாறு நாவல் இருமையின் இயங்கியலை முதன்மையாக முன்வைப்பினும் மதம் – சாதியம் முதலிய முரண்போக்குகள், நுகர்வியப் பண்பாடு, பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நுண்ணிய வடிவங்கள், தகவல் தொழில்நுட்பப் பொறிமுறைகளின் தொகுதி எனப் பன்மைத்துவங்களின் கூட்டிணைவாகவே அதிகார மையங்கள் இயங்குவதைக் கதைப்போக்கினூடாக உணர முடியும். இவற்றைக் கடப்பதற்கான அறிவார்த்த உரையாடலை முன்வைக்கும் நிலையில் ஷம்பாலா முக்கியமான அரசியல் நாவலாகிறது.

மேல் செல்