கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

எழுத்தில் படிந்த நிலம்

ப்ரேம் ரமேஷ்

பகிரு

(கி.ரா. : ஒரு பின் நவீனத்துவ மிகை வாசிப்பு)

பேச்சு முடியும் இடத்திலிருந்து எழுத்து தொடங்குகிறது. எழுத்து தொடங்கும் இடத்திலிருந்து மௌனம் என்பது பேச ஆரம்பிக்கிறது. மௌனம், பேச்சு, எழுத்து என அனைத்தும் ஊடாடும் களத்தில் கதையாக்கம் நிகழ்கிறது.

எல்லா மொழிகளும் புனைவிலிருந்தும் பாவனைகளிலிருந்தும் தொடங்குகின்றன. இந்த புனைவுகளும் பாவனைகளும் மனிதர்களை உற்பத்தி செய்து தருகின்றன.மனிதர்களை உற்பத்தி செய்து உலவவிடும் இந்தப் புனைவுகளும் பாவனைகளும் பெரும் பரப்பாக,சூழ்வெளியாக மனிதர்களைக் கவிந்து கிடக்கின்றன. மனித நிலைகளின், சேர்க்கைகளின் அலைவும் கலைவும் இந்தப் புனைவுகளூடாக நிகழும் பெரும் இடம்பெயர்வாக, தடம் காணல்களாக தொடர்ந்து கொண்டே இருக்கக் கூடியவை.

புனைவால் உருவாக்கப்பட்ட மொழி ஓயாமல் புனைவுகளை உருவாக்குவதன் மூலம் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றிக் கொள்கிறது. இவ்வகையில் மொழியும் மரணமும் எங்கு தொடங்குகின்றன, எங்கு முற்றுப் பெறுகின்றன என்பதை விளக்க முடியாதவை.ஓயாத ஒத்திப் போடுதல் மூலமும் தொடர் முழுமை மறுப்பின் மூலமும் இவை இரண்டும் கதைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. கதையற்ற பரப்பில் மொழியும்;வாழ்வற்ற பரப்பில் மரணமும் இல்லாமல் போவதால் வாழ்வின் கதைப்பரப்பை பெருக்கிப் பெருக்கி இரண்டும் தமது விளையாட்டைத் தொடர்கின்றன.

அரசியல் மொழி என்பதுதான் ஒரு புனைவு என்பதை மறுத்து அனைத்திற்குமான அர்த்தம் தரும் முழுமையத் தன்மையை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் பிற புனைவுகளின் பெருக்கத்தை, பிற கதையாடல்களின் கிளைத்தல்களை ஒடுக்குகிறது. உண்மை என்பதை மொழியின், வாழ்வின் மையத்தில் வைக்கிறது. உண்மை என்பது உருவாவதன் வழிமுறைகளை மறைக்கிறது. உண்மை உருவாக்கப்படும் களம் என்பது சொல்லாடல் களமே என்பதையும் சொல்லாடல் விதிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமே தன்னை மையப்படுத்திக் கொள்ளும் அதிகாரமாக வன்மையடைந்து இருக்கிறது என்பதையும் அது பதுக்கிவிடுகிறது. எல்லாவற்றையும் சாராம்சம், முற்றுண்மை என்ற யூகங்களை நோக்கிக் குவித்து கதையாடல்களின் பரவலை கட்டுப்படுத்தி தன்மைய நிலையை உருவாக்குகிறது. இந்நிலைக்கு எதிராக நிகழ்நிலை கடந்த உண்மை என்பதை மறுத்து; உண்மையின் சாத்தியமின்மையை; வேறொரு வகையில் - உண்மையின் உருவாகி மறையும் நிலைமாறு தன்மையை தொடர்ந்து புலப்படுத்தும் களமாக எழுத்துச் செயல் அமைகிறது. இலக்கிய எழுத்துச் செயலின் மிகமிக ஆக்கப்பூர்வமான பண்பாக இன்றுவரை இதுவே இருந்து வருகிறது.

இவ்வகையில் இலக்கியம் மையமின்மைகளின் புலப்படுகளமாகவும்; உண்மை என்பதன் வன்முறையை மறுத்தெதிர்க்கும் பன்முக உத்தியாகவும்; மாறுபட்ட பிற தன்மைகளின் கலப்புத் தடமாகவும்;வித்தியாசங்களின் உருவாக்க முறைகளை நிகழ்த்திக் காட்டும் மொழிப் பரப்பாகவும் அடையாளம் காணப்படக் கூடியது. பின் நவீனத்துவம் இவ்வகையிலேயே ஆதிக்கச் சொல்லாடலையும் இலக்கியச் சொல்லாடலையும் வேறுபடுத்திக் காண்கிறது.இவை மறுக்கப்பட்ட எந்த எழுத்து மற்றும் செயலையும் அரசியல் மொழிபு, அரசியல் சொல்லாடல் என்றே பின் நவீனத்துவம் அடையாளப்படுத்தும். கதை மறுப்பையும் புனைவு மறுப்பையும் பின் நவீனத்துவம் இவ்வகையிலேயே வாழ்வு மறுப்புச் செயல்களாகச் சுட்டிக் காட்டுகிறது.

'மைய மறுப்பின் அழிகியலே பின் நவீனத்துவ அழகியல்' என்ற தொடரை முன் வைத்து ஒரு உரையாடலைத் தொடங்க நாம் முயற்சித்தோம் எனில்; தமிழில் உள்ள பல்வேறு பிரதிகள், எழுத்துக் களன்கள் இதை கடுமையாக எதிர்ப்பதையே தமது இலக்கியக் கோட்பாடாக முன்வைத்துப் போராடத் தொடங்கும். வாழ்வின் சாரம், உண்மை, ஒருங்கிணைப்பு, தொடரொழுங்கு, மனிதப் பொது எதார்த்தம் என்ற பல்வேறு வன்முறைக் கருத்தாங்கங்களை முன் வைத்து பன்மையின் கவிதையியலுக்கும் வேறுபாடுகளின் அழகியலுக்கும் நிலைமறுப்பின் இலக்கியத் தன்மைக்கும் எதிராக விலக்குதலை, தணிக்கையை செயல்படுத்தும் அரசியல் உபச் சொல்லாடலாகத் தம்மை மாற்றிக் கொள்ளும்.

இலக்கியம் என்பதும் இலக்கியச் செயல் என்பதும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைக்க முடியாத, பொது ஒழுங்கிற்குள் வராத சொல்லாடல்களால் தொகுக்கப்படும் கதையாடல் என்பதை பின் நவீனத்துவம் முன் வைக்கும் பொழுது இது சாதாரணமான ஒரு சொற்பாடாக, வாசகமாகத் தோன்றலாம். ஆனால் அது இலக்கியச் செயலாக வடிவம் கொள்ளும் பொழுது இதுவரை நம்பப்பட்டு வந்தவைகள் கலைந்து பெரும் விபரீதங்கள் நிகழும். நமது அறிதல் முறையும் புலன் முறையும் பொருள்கோள் முறையும் சிதறும். அத்தகைய விபரீதங்கள் சில தமிழில் நிகழ்ந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானதும் தீவிரமானதுமாக நம்முன் தற்போது இருப்பது கி.ராவின் எழுத்துலகம்.

கி.ரா. என்பது எழுத்து - பேச்சல்ல :

எழுத்து வழக்கு பேச்சு வழக்கு என்ற இருமைகளை அடிப்படையாக வைத்து தமிழில் ஓர் இலக்கியப் பிரிவினையும் மொழிப் பிரிவினையும் நிகழ்ந்திருக்கிறது.இவை இரண்டில் எழுத்து வழக்கு என்பது மேலானது என நிறுவப்படும் இடத்தில் பேச்சு வழக்கு என்பது ஓர் எதிர்ப்பு வடிவமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் தமிழ் என்ற மொழித் தொகுதியானது பல்வேறு பேச்சு மரபுகளின் பொதுக் குறிப்பீடு என்ற அளவிலேயே இயங்கும் ஒன்று. இந்த தளத்தில் தமிழ் என்பது ஒரு மொழி அல்ல என்பதும்; அது பல்வேறு மொழிப்பாடுகளின் தொகுப்பு நிலை என்பதும் விளக்கமுறுகிறது. இந்த மொழிப் பாடுகளில் எந்த ஒன்றையும் தமிழுக்கு வெளியே என்று கூறும் உரிமையும், பிழையுடையது என்று கூறும் மேலாண்மையும் எவருக்கும் இருக்க சாத்தியமில்லை.

ஆனால், எழுத்து வழக்கு என்ற மொழியின் ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு பிற பேச்சு மரபுகளை அளவிடுவது என்பது இங்கு பழக்கத்திலுள்ள ஒரு வன்முறையாக உள்ளது. எழுத்து மரபு என்பதுகூட ஒருவகை மொழிபு வகை என்ற அளவிலேயே தமிழின் பகுதியாக இயங்கக் கூடியது. இது பேச்சு மரபுக்கு எதிர்மையாக இயங்க எந்த காரணமும் இல்லை.ஆனால் மொழியரசியலின் ஒரு பகுதியாக இந்த எதிர் இருமைகள் கட்டமைக்கப்படுகின்றன.எல்லா பேச்சுவழக்குகளும் ஒவ்வொரு வகையில் முழுமையான மொழியமைப்பாகவே உள்ளன. இங்கு சாதிய மேலாண்மை மற்றும் ஒதுக்குதல் அடிப்படையில் மொழிபுகளுக்குள் தரம் பிரித்தலும், தரம் தாழ்த்தலும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு பேச்சு வழக்கிற்குள்ளும் உள்ள செயல் வடிவிலான வேறுபாடுகள் அரசியல் மொழி, கவிதையியல் மொழி என்ற இரு நிலைகளாகும்.

கலாச்சாரத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் விதியாகச் செயல்படும் ஒரு மொழியும், விதிகளின் எல்லையை, அமைப்பைக் கலைத்தும் விரித்தும் செயல்படும் ஒரு மொழிபும் என இவை இரண்டாக விளக்கப்படலாம்.விதிகளின் எல்லையையும் சொல்லாடலின் பொது விதியையும் கலைக்கும் மொழியை கவிதையியல் மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் நாம் அடையாளம் காணும் பொழுது கி.ரா வின் கதையாக்க மொழி என்பது வெறும் பேச்சு வழக்கு அல்ல என்பது புரியவரும். எப்பொழுது அது எழுத்தாக மாறுகிறதோ அப்பொழுதே அது தனது களத்திற்குள் ஒரு கவிதையியலை, தொன்மவியலை, கதையாடல் அழகியலை உருவாக்கிக் கொள்கிறது.அது மறுபடியும் ஓர் இலக்கிய எழுத்துக் களத்தைத்தான் உருவாக்க முடியுமே தவிர; தனது முன் வடிவமான பேச்சுக் களத்திற்குத் திரும்பாது. அவ்வகையில் கி.ரா வின் எழுத்துமுறை என்பது ஒரு பேச்சு மரபின் நிலைமாற்றத் தடயமாக, படிவமாக மாறியிருக்கிறது.இதன் கவிதையியல் என்பது அந்த பேச்சு மரபின் ஒருங்கிணைக்கப்படாத, சிதறிய, மறைந்த, மங்கிய, மறதியாக்கப்பட்ட, புலப்படாத சொல்லாடல்களைத் தொகுக்கும் ஒரு செயலாக அர்த்தமடைகிறது. இது முழுக்க முழுக்க ஓர் எழுத்துச் செயல்பாடு. ஏனெனில் எழுத்து என்பது ஒரு வகையில் அடையாளம் அழிப்பின் செயல்பாடாகவும்; பல்வேறு தடங்களின் தொகுப்பு மற்றும் பகுப்பு நிலையாகவும் உள்ளது.இதற்குள் பேச்சும் மௌனமும் கூட தடங்களாக இடம்பெறும். ஆனால் எழுத்துக்கு உள்ள சாத்தியப்பாடு என்பது; அது ஒரே சமயத்தில் எழுத்தாகவும் வாசிப்பாகவும் இருப்பதும்,ஒரே சமயத்தில் பிரதியாகவும் பிரதிகள் பற்றிய பிரதியாகவும் இருப்பதுமாகும்.

அப்படியெனில் எழுத்து என்பது இல்லாத சமூகங்கள், இனக்குழுக்கள் தமக்குள்பன்முகக் கதையாடல் என எதையும் கொண்டிருக்கவில்லையா என ஒரு கேள்வி தோன்றும். அங்கு எழுத்து இல்லாமல் இருக்கலாம்; ஆனால் பிரதி இல்லாமல் இருக்காது.எழுத்துப் பிரதி எனும் நிலையே இங்கு நமது கவனத்திற்குரியது.

இந்த எழுத்துப் பிரதிகள் மொழியலகுகளை அடிப்படையாகக் கொள்ளாமல் கதை அலகுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.அதாவது மொழியால் அமைக்கப்பட்ட கதை என்பதைவிட கதையால் அமைக்கப்பட்ட மொழியென்பது இங்கு பொருத்தமுடையதாக இருக்கும்.அதே வகையில் எழுத்தால் அமைக்கப்பட்ட கதை என்பதைவிட கி.ராவின் பிரதிகளை கதையால் அமைக்கப்பட்ட எழுத்து என்று கூற வேண்டும். அவ்வகையில் கி.ரா இதுவரை அறியப்பட்டிருந்தது போல கதைசொல்லியோ, வாய்மொழி மரபின் வரிவடிவைச் செய்பவரோ அல்ல; இவர் பின் நவீனத்துவம் அடையாளம் காட்டும் கதைவரைபவர் ஆவார். இந்த கதை வரைதல் என்ற நிலையில்தான் தனிப்பட்ட 'ஆசிரியர்' என்ற பழைய கோட்பாடு இல்லாமல் போகிறது. இங்கு எழுதுபவர் யார் என்பதைவிட எவையெவற்றைக் கொண்டு இந்த எழுத்து உருவாக்கப்பட்டது என்பதே முக்கியத்துவம் உடையது.

கி.ரா. தனது எழுத்தை எழுதும் பொழுது தனது நிலத்தின் எழுத்தையும், தனது இனக் குழுவின் எழுத்தையும், தனது சமூக நினைவின் எழுத்தையும், தனது தொன்மத்தின் எழுத்தையும், தனது வரலாற்றின் - வரலாறு மறந்ததின் எழுத்தையும், தன்னைச் சூழ்ந்த வெய்யிலின் எழுத்தையும் எழுதுகிறார். இப்படி எழுதுவதால் அங்கு தான் என்ற நிலை அற்றுப்போக; இந்த கால இட கலாச்சாரக் களத்தில் உள்ள எந்த ஒரு பிறவையும் போல தானும் ஒரு பிறவாக மாறிவிடுகிறார். இப்படி பிறவாக மாறுவதன் மூலம் எல்லா பிறவும் கடந்தும் திரிந்தும் செல்லும்போது வெற்றிடம் போன்ற தன்னிலையை அடைகிறார். இந்தத் 'தன்னிலை' கதையெழுதுதல் என்ற செயலோடே உருவாகி பின் கரைந்து போகிறது. இந்த எழுத்துகள் அவ்வகையில் தான் அற்ற பிற என்பவற்றின் தடயங்களாகப் பதிவாகி விடுகின்றன.

இலக்கியம் குறித்து இதுவரை பல்வேறு பார்வைகளும் நம்பிக்கைகளும் வரையறைகளும் இருந்து வருகின்றன. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும், விலகியும் சில சமயங்களில் சற்றே ஒன்றுபட்டும் இந்தப் பார்வைகள் இலக்கிய மொழியை, இலக்கிய ஆக்கத்தை, இலக்கிய வாசிப்பைக் கட்டுப்படுத்தியும் கட்டவிழ்த்தும் வந்திருக்கின்றன. என்கிற போதும், எழுதுதல் என்பவற்றையும் 'இலக்கியத் தன்மை' என்பதையும் முக்கியக் கூறுகளாகக் கொண்டே நமது கோட்பாடு மற்றும் தத்துவமாக்கலைச் செய்து வந்திருக்கின்றன.

இவ்வகை 'இலக்கியத் தன்மை' குறித்த தத்துவமாக்கம், ' இலக்கியப் பிரதி' குறித்த அணுகுமுறையாக்கம் என்பவை சற்றே கூர்ந்து பார்க்கப்படும் பொழுது இவை அந்த சிந்தனை, அறிவு மற்றும் சமூகவியல் மரபுகளின் உலகு பற்றிய பார்வை மற்றும் உலகை அறிதலுக்கான முறையியல் இவற்றின் மற்றொரு வடிவமாகவும் தொடர்ச்சியாகவும் இருப்பதை அறிய முடியும். ஒரு சமூகத்தின் அமைப்பின் மொழி பற்றிய கோட்பாடும் அதன் இறையியல் கோட்பாடும் வேறுவேறு அடிப்படை அலகுகளால் அமைந்திருக்கும் எனில் அவை ஒரே அமைப்பாக்கச் செயல்பாட்டிற்குள் ஒடுங்காமல் பல்வேறு பிளவுகளை உருவாக்கக் கூடியனவாகவே இருக்கும். இவ்வகையில் எந்த ஓர் அமைப்பையும் ஒத்த கோட்பாட்டு அலகுகளின் வேறுபாட்டு வடிவத் தொகுப்பு மற்றும் இணைப்பு என்று ஒரு வகையில் விளக்க முடியும். அதே சமயம் இவ்வகை தூய ஒத்தத் தன்மைகளின் அமைப்பாக்கம் என்பது ஒரு வகையில் மிகை கற்பனையில் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.

அப்படியெனில் சமூக அமைப்பு, வரலாறு, மரபு, அறிவு என்பவை பல்வேறு முரண்பட்ட கூறுகளின், மாறுபட்ட அலகுகளின் தோற்றம் சார் இணைவியக்கம் என்று பொருள் படுகின்றன. இந்த முரண் மற்றும் மாறுபாட்டுக் கூறுகளை ஒரே மையம் சார்ந்தவைகளாக விளக்குவதும், பொருள்படுத்துவதும் உண்மை பற்றிய சொல்லாடல்களே, தற்போது நிகழ்வில் உள்ள எந்த சமூக அமைப்பும் தூய ஒற்றைத் தன்மையுடைய அலகுகளால்; அதாவது முற்றுண்மை பற்றிய மொழியால் ஆக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் இவற்றை அமைப்பாக்குவது உண்மை பற்றிய சொல்லாடல்களாகவே உள்ளன.

சொல்லாடல் ஒழுங்குகளின் விதிகள் ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்பவையாக, ஒன்றை ஒன்று மறைப்பவையாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் மேலாதிக்கம் கொள்ளும் ஒரு சொல்லாடல் ஒழுங்கு அல்லது சில சொல்லாடல் ஒழுங்குகள் பிற அனைத்தையும் மௌனமாக்கி விட்டதான பாவனையுடன் அனைத்தின் அர்த்தத்தையும் கட்டுப்படுத்துபவனவாகவும், அனைத்திற்கும் பொருளுரைப்பவனவாகவும்; ஒரு வகையில் அனைத்தின் 'பிற' என்ற வேறுபாட்டு சாத்தியங்களை மறுத்து ஒற்றைத் தன்மைக்குள் ஒடுக்குவனவாகவும் சமூகக் களங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

உண்மை பற்றிய சாராம்சம் பற்றிய சொல்லாடல் போராட்டங்கள் மொழியை, கதையாடலை, நினைவை, மறதியை புலன்களை ஓயாமல் ஒழுங்குபடுத்தும் விதிகளின் பின்புலமாக அமைகின்றன. இந்த சொல்லாடல் போராட்டங்களை மறைத்து ஒரு சமநிலை ஒருங்கிணைப்பை உருவாக்குபவற்றை கலாச்சார மொழிபுகள் என்றும், ஓயாத சொல்லாடல் மோதல்களை, இணைவுகளை, கலைவுகளை வெளிப்படையான மற்றும் திறந்த இயக்கத்தில் வைப்பவற்றை இலக்கிய மொழிபுகள் என்றும் நாம் தற்போது அடையாளம் காணும் நிலையை அடைந்திருக்கிறோம். இந்த புரிந்து கொள்ளலுக்கு முன் மிக நீண்ட கருத்தியல் மோதல் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இன்னொரு வகையில் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கோபல்ல கிராமம் நாவலை பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாகப் படிக்க நேர்ந்தது. வாசகர் வட்டம் பதிப்பு. அப்பொழுது அந்நாவலின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு தற்போது அதனுடன் உள்ளதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அப்பொழுது அந்நாவலை முக்கியமான நாவலாக வாசிக்க வைத்தது அதன் நாட்டார் கதையாடல் பண்பு ஆகும். அந்நாவல் கிராமப்புற வாழ்வை அதன் நுட்பங்களுடன் கூறியது என்பதும் முதல் கட்ட ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அந்த நாவலின் கூறுகளாக அடையாளம் காணப்பட்ட சிலவற்றை பின் வருமாறு கூறலாம்.

அது சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் கூறுகிறது. நாட்டார் கதைகள், தொன்மங்கள் என்பவற்றை தனது கதையாக்க மூலங்களாகக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் பற்றி நுட்பமாகவும் விரிவாகவும் விவரிக்கிறது. கிராம இடம், சூழல் என்பவற்றை துல்லியமாகச் சித்தரிக்கிறது. சமூக முரண்பாடுகள் உருவான விதத்தையும்; மனித உழைப்புக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் படிப்படியாக விளக்குகிறது. ஒரு சமூகம் இடம்பெயர்ந்து, புதிதாகத் தொடங்கி, வளர்ந்து, மாறி அமையும் போக்கை சமூகவியல் பார்வையுடன் கவிதையாக்குகிறது. ஓர் இறந்த காலம் பற்றி விவரித்துச் சொல்வதன் மூலம் தற்காலம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சமூகம் தன்னைக் காத்துக் கொள்ள கைக்கொள்ளும் வழிமுறைகளை, நெறிமுறைகளை பதிவு செய்திருக்கிறது - இப்படியாக....

இருந்தும், இந்நாவலின் நேர்க்கோட்டுத் தன்மையற்ற கதையாக்க முறை கவர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் அப்பொழுது இருந்த இலக்கிய நம்பிக்கைகளுக்கு அது உவப்பாகத் தோன்றவில்லை. மார்க்சிய அணுகலுடனும் அதிலிருந்து சற்றே விலகிய இளம் இருத்தலிய அணுகலுடனும் இருந்த அன்றைய காலகட்டத்தில் அதற்குமேல் கூறவும் வாசிக்கவும் எதுவும் இல்லாமல் போனது. அதற்குப் பின் கி.ரா வின் குறுநாவல், சிறுகதைகள் என அவ்வப்பொழுது வாசித்ததும் அவற்றை கோபல்ல கிராமத்துடன் உறவுபடுத்திப் பார்த்ததும் என சந்தர்ப்பங்கள்.

கலை, இலக்கிய தத்துவத் தளத்தில் அனைத்தும் முழு மாற்றத்திற்கு உட்பட்டு அடிப்படைகள், அணுகுமுறைகள், புரிதல்கள், ஆய்வு மற்றும் வாசிப்பு முறைகள், அழகியல் மற்றும் கவிதையியல் புலன்கள், பொருள்கோள் முறைகள் என எல்லாம் வேறு வேறாக ஓர் ஒருங்குபடுத்த முடியாத நிலையை அடைந்து பின் நவீனத்துவ பன்மை தன்மை கொண்டபின் மீண்டும் கி.ரா வின் மொத்த எழுத்துக்களையும் வாசிக்கும்போது எங்கள் முன்பாக மிகச் சிக்கலான ஓர் எழுத்துலகம் விரிந்து கிடக்கிறது.

மையப்படுத்த முடியாத கிளைத்துச் செல்லும் கதைப்பரப்பும் சொல்லாடல் தடங்களும் இந்தப் பிரதிகளூடாக நம்மை அர்த்தங்களின் கானக வெளிகளுக்குள் இழுத்துச் செல்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது தோன்றும் மலைச் சரிவின் ஒரு பொதுப் பசுமையும் நெருங்க நெருங்க தெரியாமல் திகைக்க வைக்கும் சிக்கலான பிரம்மாண்டமும் 'இலக்கியப் பிரதி' களுக்கு உரிய ஒரு தன்மைதான். கி.ரா வின் கதை எழுத்துப் பரப்பை அணுகும் பொழுதும் அதன் வாசிப்புத் திசைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

கி.ரா வின் எழுத்தில் என்ன சிக்கல் இருக்க முடியும்? மிக எளிய கிராம வாழ்க்கை பற்றி மிக மிக 'எளிய' கிராமத்து மனிதர்கள் பற்றி, மிகமிக 'எளிய' பேச்சு மொழியில் எழுதப்பட்டதற்குள் என்ன சிக்கலும் என்ன அர்த்தங்களின் கானகத் தன்மையும் இருக்க முடியும்? என்ற நியாயமான தமிழ் மரபு சார்ந்த கேள்வி எழக் கூடும். ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னுள்ள வன்முறை மிகத் தீவிரமானது.

கிராமமும் கிராமத்து வாழ்வும் மனிதர்களும் கிராமத்து மொழியும் நினைவும் கதையாடலும் மிகமிகச் சிக்கலானவை. எல்லா அமைப்புகளையும் கட்டுமானங்களையும் போலவே எந்த ஒரு மனித இருப்பையும் எத்தனை விவரித்தும், மொழியாக்கியும் முழுமையாக விளக்கிவிட முடியாது. எத்தனை கதைக்குள்ளும் அடங்காமல் விலகிக் கொண்டேதான் இருக்கும் அர்த்தங்கள். சொல்லப்படுபவை எல்லாம் சொல்லப்படாதவைகளின், சொல்ல முடியாதவைகளின், மௌனங்களின் சங்கேதப் பட்டியல்களே. எழுதப் பட்டவைகள் எல்லாம் எழுத்துக்கு வெளியே கிடப்பவைகள் பற்றிய தடயங்களே. மிக மிக எளிமையாகத் தோன்றும் ஒரு வாய் மொழிக் கதைதான் பல சமயங்களில் மிக மிகச் சிக்கலான, மர்மமான அர்த்தத் தளங்களைக் கொண்டிருக்கும். இங்கு மேற்பரப்பில் தோன்றும் எளிமையும், சிக்கலற்ற தன்மையும் வரலாறு, இன நினைவு, கால அடுக்குகள், மூலத்தொன்மங்கள் என பலவற்றைச் சுட்டிவிட்டு மறைந்து போகும் தன்மையுடையது. எழுதப் பட்டவைகள் அனைத்தும் இன்னும் பல எழுத்துப் பரப்புகளைச் சுட்டுவதும், சொல்லப்பட்ட ஒன்று சொல்லப் படாதவைகளின் ஆழங்களை நோக்கி நம்மை இழுத்துச் செல்வதும் மொழியின் தன்மை சார்ந்தது. இந்த இடத்தில் எழுத்துப் பற்றிய பின் நவீனத்துவ முரண் ஒன்றை நினைவு கொள்ளலாம் என தோன்றுகிறது.

மொழி எதைச் சொல்கிறதோ அதைவிட சொல்லாமல் மறைப்பவற்றின் மூலமே அர்த்தத்தை சாத்தியப்படுத்துகிறது.அப்படியெனில் எழுத்தின் வாசிப்பு என்பது எழுதப்பட்டவைகளின் இடையிலுள்ள மௌனங்களை வாசிப்பதாகவே உள்ளது. கி.ரா வின் எழுத்துப் பரப்பில் இந்த அர்த்தம் பெருக்கும் மௌனங்களும் ஆழம் நோக்கி நகர்த்தும் குறிப்பீடுகளும் செரிந்து காணப்படுவதால் வாசிப்பு என்பதும் மறு கதையாக்கமாகவே நிகழ வேண்டியிருக்கிறது.

கோபல்ல கிராமம் நாவலில் இரண்டு கால இணைகளை முதலில் நாம் அடையாளம் காண முடிகிறது.ஒன்று கதை நிகழ்வின் காலம். மற்றது:கதையாடலின் காலம். கதை நிகழ்தலின் காலம் என்பது பிரதிக்கு உள்ளானது. கதையாடலின் காலம் என்பது பிரதியின் அடுக்கு முறை மற்றும் சொல்லுதலின் காலமாக வெளியே இருப்பது.

இதில் கதையாடலின் காலம் என்பது முதல் கட்டத்திலேயே திருகல் தன்மை உடையதாக மாற்றமடைகிறது.ஒருவித நினைவுக் கலைப்பு உடையதாக, கால நெளிவுகள் உடையதாக கதையாடலின் காலம் அமைந்துவிடுகிறது. கதையாடலின் காலத்துடன் கதைவெளியும் வரிசை முறையற்ற அமைப்பாக்கம் பெறுகிறது.

நினைவிலிருக்கும் நினைவுக்கும் இடையிலான ஊசலாட்டம் போல் கதையாடல் மற்றும் சொல்லுதல் தடம் சுழல்கிறது.முதல் அத்தியாயத்தில் கோபல்ல கிராமம் ஆழ்ந்த தூக்கத்தில் லயித்திருக்கிறது.இந்த ஆழ்ந்த தூக்கம் என்பது இறந்த காலம்,நிகழ் காலம்,எதிர்காலம் என கால நினைவுகளை ஒரு தளத்தில் கொண்டு வரும் கனவுச் செயலைக் குறிக்கிறது.தூக்கம் என்பது செயலின்மை அல்ல; மாறாக செயல். உடல் மற்றும் மூளை இரண்டும் செயல்பட்டபடி; ஆனால் செயலற்றதான பாவனை கொண்டிருக்கிறது. மரணம் போலத் தோன்றும்; ஆனால் வாழ்தலுக்கு அவசியமான மௌனம்; அசைவின்மை. இந்த தூக்கச் செயல்பாடு என்பதும் கனவுச் செயல்பாடு என்பதும் கதையாடலின் முக்கியமான ஒரு குறியீட்டு நிலையைச் சுட்டுகிறது.

கோபல்ல கிராமத்தின் நிகழ்காலம் என்பது முதல் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் கதை மொழிதலில்தான் அது நிகழ்காலம்.கதை நிகழ்விலோ அதுவும் இறந்த காலம். பிரதியில் அது ஒரு முற்கால நிலை . இரண்டாம் அத்தியாயம் இறந்த காலத்தில் ஒரு இறந்த காலமாக - அந்த காலத்தில் ஒரு நாள் எனவும் - சரியான கோடைக்காலம் எனவுமாக தொடர்கிறது. இது இரண்டாம் கட்ட சுழல் திருகல்: இரண்டு, மூன்று அத்தியாயங்களில் பாம்படத்திற்காக ஒரு பெண் கொலை செய்யப்படுவதும்; கொலை செய்பவனை கிருஷ்ணப்ப நாயக்கர் பிடிப்பதும் நிகழ்வுகளாகின்றன.நான்காவது அத்தியாயத்தில் கோவிந்தப்ப நாயக்கர் பற்றியும் ஊர் குடும்பன் பற்றியும் அக்கையா பற்றியும் விவரிக்கப்படுகிறது.இவை பல்வேறு காலங்களின் பொதுத் தொகுப்பாக அமைகிறது.

ஐந்தாவது அத்தியாயத்தில் கோட்டையார் வீடு பற்றிய வரலாறும் தகவலும் கூறப்படுவதுடன் நூற்றிமுப்பத்தியேழு வயதான மங்கத்தாயாரு அம்மாள் பற்றியும் கூறப்படுகிறது.இதில் இறந்தகாலம் என்பது இல்லாத காலம் அல்ல என்பதும்; அது நிகழ்காலமாக நிகழ்காலத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறது என்பது பதிவாகிறது. ஆறாம் அத்தியாயத்திலிருந்து எட்டாம் அத்தியாயம் வரை கம்மவார்கள் ஆந்திர நாட்டிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்ததின் கதை சொல்லப்படுகிறது.சென்னாதேவி என்ற பெண்ணின் காரணமாக அந்த மக்கள் இடம் பெயர்ந்து வர நேர்ந்தது பற்றிய பூர்வ கதை நினைவு கொள்ளப்படுகிறது.

இந்த அத்தியாயங்களில் இறந்த காலம் என்பது மாறி தொன்ம,புராணிக நினைவுக் காலங்களாக வடிவம் கொள்கிறது.ஒன்பதாம் அத்தியாயத்தில் அக்கையாவின் பிறப்பும் வளர்ப்பும் பண்புகளும் என மீண்டும் முற்காலம் பற்றிய கதை. பத்து பதினொன்றாம் அத்தியாயங்களில் அக்கையாவின் வேடிக்கை,விவேகம், வீரம் தொடர்பான கதைகள். பன்னிரெண்டாம் பதிமூன்றாம் அத்தியாயங்களில் மீண்டும் மங்கத்தாயாரு அம்மாள் கூறும் பூர்வ கதை.பதினான்காம் பதினைந்தாம் அத்தியாயத்தில் கிராமத்தில் முன்பு ஒருமுறை நடந்த தீவட்டி கொள்ளை முயற்சியும்,அதைத் தோற்கடித்த நிகழ்ச்சியும் கதையாக்கப் பட்டிருக்கிறது.பதினாறாம் அத்தியாயத்தில் மீண்டும் ஒரு நிகழ்காலம் - அதற்குள் நினைவு கூறப்படும் பூர்வ கதையின் முற்காலம். சென்னாதேவியின் மரணமும் அந்த பிரதேசத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்த கதையும் காட்டை அழித்து நாடாக்கி அங்கு ஒரு கிராம சமூகத்தை அமைத்தது என்பது வரையிலான கதை இருபதாம் அத்தியாயத்தின் முற்பகுதி வரை விரிகிறது.அதன் மத்தியில் மீண்டும் ஒரு நிகழ்காலம்; அதாவது, கதையின் இறந்தகாலத்தில் ஒரு நிகழ்காலம் – அதற்குள் நினைவு கூறப்படும் பூர்வ கதையின் முற்காலம்.சென்னாதேவியின் மரணமும் அந்த பிரதேசத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்த கதையும் காட்டை அழித்து நாடாக்கி அங்கு ஒரு கிராமச் சமூகத்தை அமைத்தது என்பது வரையிலான கதை இருபதாம் அத்தியாயத்தின் முற்பகுதிவரை விரிகிறது. அதன் மத்தியில் மீண்டும் ஒரு நிகழ்காலம் மொழியப்படுகிறது.கொலை பற்றி விசாரிக்கக்கூடிய பஞ்சாயத்துக் கூட்டம் பற்றிய விவரிப்பாகத் தொடங்கி கோழியார் சின்னப்ப நாயக்கர் முதல் பஜனை மடம் பார்த்தசாரதி நாயக்கர் வரை ஏறக்குறைய இருபது நபர்கள் பற்றிய நிகழ்வுகள், பண்புகள்,விநோத நடத்தைகள் பற்றிய கதைகள் இருபத்து ஆறாம் அத்தியாயம் வரை தொடர்கிறது. இருபத்தியேழிலிருந்து இருபத்தியொன்பதுவரை கொலைகாரனுக்குத் தண்டனை வழங்குதல், கழுமரம் ஏற்றுதல் தொடர்பான நிகழ்வுகளின் கதை. முப்பதாம் அத்தியாயத்தில் மீண்டும் முதல் அத்தியாயத்தின் இடம் சார்ந்த தொடர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகள் கிராமத்திற்கு வருதலும் அவர்கள் கோவிந்தப்ப நாயக்கரை கம்பெனி ஆட்சி சார்பாக மணியமாக இருக்கக் கேட்டுக் கொள்வதும் என நிகழ்வுகள் தொடர; பிரிட்டிஷ் ஆதிக்கம் ஏற்படுத்திய தாக்கங்கள்,கிராமத்தினர் வெள்ளை ஆட்சியை ஏற்றுக் கொள்ளுதல், அதன் காரணங்கள், விட்டில் பஞ்சம், கிராமத்திற்கு பட்டாளமும் துப்பாக்கியும் வருவது,விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் கிராமம் நலமடையும் என்ற மக்களின் நம்பிக்கை வரை 1858 ஆம் ஆண்டு என ஒரு கால அடையாளத்துடன் நாற்பதாம் அத்தியாயத்தில் கதைகூறல் முற்று பெறுகிறது.

இந்தக் கதையாடலின் காலம் கதை நிகழ்வின் காலம் போலவே முன்னும் பின்னுமாகவும் காலத்திற்குள் இன்னொரு காலம் அதற்குள் இன்னொரு காலம் என பெருங்காலம், சிறு மற்றும் நுண்காலங்கள் என குறுக்கும் நெடுக்குமாக அமைகிறது.இதில் காலத்தின் வரைபடமும் நிலம் மற்றும் பொருள்களின் வரைபடமும் குழப்பப்படுவதுடன்;அவற்றின் இணைவுகள், உடைப்புகள் என்பவை தனித்தனி அமைப்பு அலகுகளாக்கப்படுகின்றன.பெரும் வரலாற்றாக்கம் என்ற காரணகாரிய காலவரிசைக் கிரம கதையாடல் மற்றும் மொழிதல் வன்முறைக்கெதிரானதும், தொடர்பின்மைகளின் தொடர்பற்ற உறவுகள் பற்றிய நினைவாக்கம் சார்ந்ததுமான ஒரு மொழிதல் முறை இங்கு உருவாக்கப்படுகிறது.

வரலாற்றுவாதம் பரிணாமவாதம் என்ற தொடர் வரிசைக் கதையாடல்களுக்கு எதிரான நினைவுக் குழப்பம் மற்றும் மறதித் தெளிவுசார் கதையாடலாக கோபல்ல கிராமத்தின் மொழிதல் முறை அமைந்திருக்கிறது.மொழியின் அடுக்கு முறையும் வைப்பு முறையுமே தொடரொழுங்கு என்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் இதில் தெளிவாக்கப்படுகிறது.வரலாறு என்பது பெரும் கட்டுமானங்களின் கதை, காரணம், மற்றும் தர்க்கம் சார்ந்த இயங்கியல் முறை வளர்ச்சி என்ற போலி வாதத்தை இந்த நினைவு கலைந்த கதையாடல் உடைந்துப் போடக் கூடியது.

எதேச்சைகளின்,இடைவெளிகளின்,மறைமுகத் தொடர்புகளின் நாடகத்தாலும் வரலாறு எனப்படுவது நிகழ்த்தப்படுகிறது என்பதும்;வரலாறுகூறல் என்பது நினைவு கூறல், மறதி,திரிபு,மிகைப்படுத்தல்,புனைதல்,மயங்குதல்,தணிக்கைசெய்தல்,தவிர்த்தல்,விலக்குதல்,கொண்டு கூட்டுதல் என்ற மொழிமனச் செயலின் மூலம் சாத்தியப்படும் ஒன்று என்பதும் இந்த கதையாக்க முறையால் நினைவூட்டப்படுகிறது.

கோபல்ல கிராமத்தில் கூறப்படும் பூர்வகதை என்பது ஓர் இனத்தின் குழுவின் கதையல்ல; அக்குழுவின் இடப்பெயர்ச்சியின் கதை.அதில் புராணத்தொன்மக் குறியீடாக வருவது நாகர்ஜுன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சதப் பெண்ணும் அழகும் வீரமும் கொண்ட பிராமணனும். தாய்மைய இனவியலும் ஆண்மைய அரசியலும் மோதிக் கொள்ளும் களமாக இது எஞ்சி நிற்கிறது. இதில் இருவித சந்ததியினர் பிரிக்கப் படுகின்றனர்.பெண்கள் ராட்சதத் தாயின் சந்ததியினர் எனவே அவளின் ஆபரணத்தை அடையாளமாகக் கொள்ளுவதும்; ஆண்கள் ஆண் அரசு வம்சாவழியானதாக தாய்வழி அடையாளம் அற்று இருப்பதும் சுட்டுதலாக வருகிறது.ஆனால் இது நினைவுக்கு முந்தியதாக உள்ளது.

கோபல்ல கிராமத்து மக்களின் பூர்வ கதையை மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளும் பொழுது சில குறியீட்டுத் தொடர்மங்கள் புலப்படும்.ஆந்திர பிரதேசத்தில் அவர்கள் சென்னாதேவியுடன் நிலத்துடன் வாழ்வது, ராஜா ஒருவன் அவளை மணக்க நிர்பந்திப்பது, திருமணத்திற்கு உடன்பட்டும், பிறகு வெட்டிய பசுவின் தலையைப் பார்த்து பதறி தப்பித்து ஓடி வருவது வரை ஒரு கட்டம். தப்பிவரும் நெடும் பயணமும் அதில் அவர்கள் அடையும் துன்பங்களும் தெய்வ உதவிகளும் இரண்டாவது கட்டம். கோபல்ல கிராமத்தின் பூர்வ காட்டுப் பிரதேசத்தை அடைந்து, அதை அழித்து வாழிடமாக்கி மீண்டும் நிலத்துடன் வாழத் தொடங்குவது மூன்றாவது கட்டம்.

இந்த மூன்று கட்டங்களிலும் நிலம் மற்றும் பூர்வ தாய் என்ற குறியீடுகள் முக்கியமானவை.

பெண் என்ற நிலையும் பெண்மையின் இடமும் வரலாறுகளின், கலாச்சாரங்களின் தளத்தில் அரசியல் மற்றும் அதிகாரச் செயலின் இடக்களமாக மாற்றப்பட்டதின் உருவக நிலைகள் இங்கு பதிவாகின்றன. அரசாதிக்கம், அரசனின் ஆதிக்கம், போர் ஆதிக்கம் என்பவற்றிற்கும் நிலத்தின் உடல், பெண்ணின் உடல் என்பதற்கும் உள்ள உறவு - தாய் ஆதிக்கம் மற்றும் தாய் மையம் என்பதின் அழிவை விளக்கக் கூடியது.

ஆணின் நிலத்தின் மீதான ஆதிக்கம் முதல் கட்டத்தில் தாய் ஆதிக்கத்தையும், தாய் மையத்தையும் குலைக்கிறது. பின் நில உடல் மீது தனது அதிகாரத்தைப் பரப்புவதன் மூலம் நிலத்தில் உள்ள பெண்களின் மீது தனது அதிகாரத்தைப் பரப்புகிறது.

அரசாதிக்கம் தனது முழுமையை எல்லையற்ற ஆக்கிரமிப்புகளால் நிறுவிக் கொள்வதன் குறியீடாக பெண் உடல் மீதான ஆக்கிரமிப்பும் விரிகிறது. இங்கு பெண் உடல் என்பது அரசாதிக்க, ஆண் ஆதிக்கக் களமாகவும்; அரசியல் என்பது பெண் உடல் ஆக்கிரமிப்பின் விரிந்த களமாக வடிவம் கொள்கிறது.

போர் உடல் என்பது தாய்மையின் உயிர் உருவாக்கும் சக்திக்கு எதிரான ஆண்மைய உத்தியாக இருக்கும் பொழுது,பெண் மற்றும் தாய் என்ற நிலைகள் உயிர்ப் பெருக்கும் வினையை தந்திரமான, பூடகமான உத்தியாகக் கைக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இங்கு பெண்மையின் அரசு மற்றும் ஆண் முன்னான பணிவு தமது தாய்மையைத் தொடர ஏற்படுத்தும் ரகசிய தலைமறைவு, மாறுவேட போர்த்தாக்குதல் உத்தியாக உருவாகிறது. இந்த உத்தியின் பல்வேறு வடிவங்கள் இந்த பூர்வகதையின் குறியீடுகளாக இடம் பெறுகின்றன.

சமூக ஆண் - பெண் உடல் இணை என்பது ஒருவகையில் போர்த்தந்திர, உயிர்க்கொலை அச்சுறுத்தல் சார்ந்து அமைக்கப்படுகிறது எனலாம். இனத்திற்குள் இந்த இணை ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் படியும்; இனங்களுக்கு இடையே இந்த இணை ஆக்கிரமிப்புக்குப் பின்னான ஒப்பந்தத்தின்படியும் ஏற்படுகிறது. ஆனால் மனம் மற்றும் இணை என்பது இந்த அச்சுறுத்தலுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாதது. சமூகப் புனைவுகளில் ஒரு கலகக் கூறாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த உள்ளீடான மறுப்பு மற்றும் தலைகீழாக்கம் இந்த இடப்பெயர்ச்சி பற்றிய பூர்வ கதையில் தொடற்கூறுகளாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.இந்த பூர்வ கதையைக் கூறுவது மங்கத்தாயாரு என்ற பெருந்தாய். அவளின் நினைவுகளிலும் புனைவுகளிலும் மொழிபுகளிலும் இக்கதை தங்கி அந்த கிராமத்தைக் கவிகிறது.அவர்கள் அந்த இடத்தில் இப்பெருந்தாயின் புனைவுதான் இவர்களின் வாழிடமாக உள்ளதான ஒரு குறிப்பும், இந்தப் பெருந்தாயின் நினைவில் ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் பூர்வீகத்தையும் அடையாளங்களையும் மாற்றிவிடக்கூடியது என்பதான இன்னொரு குறிப்பும் தட்டுப்படுகிறது.

சென்னாதேவியின் அழகும், அந்த அழகு பற்றிய நினைவும் பூர்வ தேவதை ஒருத்தியின் தடயமாக இடம்பெறுகிறது. அந்தப் பெண்ணின் காரணமாகவே இடப்பெயர்ச்சி ஏற்படுவதும்,அவளைக் காக்க அம் மக்கள் தம் உயிரைப் பணயம் வைப்பதும் நிகழ்கிறது. அவர்களைக் காப்பதும் வழிகாட்டுவதும் ஒரு தாய் தேவதையாக இருக்கிறது.இந்த நெடும்பயணம் முழுக்க வழி நடத்துபவளாக வேறொரு பெருந்தாய் இருக்கிறாள். இவளே புதிதாக தாம் கண்ட நிலத்தில் காட்டை எப்படி மாற்றுவது என்பதிலிருந்து, எப்படி தம்மை நிலைநிறுத்திக் கொள்வது என்பதுவரை ஒவ்வொன்றையும் அறிவுறுத்தும் அறிவுக்களமாக இருக்கிறாள். பூர்வதாயின் பாதுகாக்கும் அதிகாரமாகவும் இன அறிவின் தொகுப்பாகவும் இந்தப் பெருந்தாய் விளங்குகிறாள்.

அந்த மக்கள் குடியேறிய பின் பெரும் பேறாகக் கிடைப்பது சினை கொண்ட காட்டுப் பசு ஒன்று. பசுவின் தலை வெட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவர்களுக்கு இந்த பசு கிடைப்பது என்பது எல்லாவற்றையும் பெறுவதாக அர்த்தமடைகிறது. தாய் விலங்கு ஒன்றின் வரவும் அதன் மிருக வேகத்தை அடக்கி அடக்கி சமூகவயப் படுத்துவதும், அதனுடன் பழகி அதன் நெருக்கத்தைப் பெறுவதும் மிகவும் முக்கியமான உருவக நிலை, கன்று ஈன்ற பிறகு தாய் விலங்கின் கானக மூர்க்கம் உள்ளீடாகத் தணிவதும், அக்கிராமத்தின் பெயருக்கு அப்பசுவே காரணமாக அமைவதும் தாய்மைத் தடையங்களாக அமைவன.

இந்நாவலில் வரும் இக்குழுவின் இடப்பெயர்ச்சிக்கான பூர்வகதை என்பது பிற இன /தேச 'தோற்றப் புனைவு' களுக்கு எதிரானது. இன மேலாதிக்கம் கொள்ளும் பேரினத் தொன்மங்களெல்லாம் இந்த உலகம் தனக்கே அளிக்கப்பட்டதாகவும், தானே ஒரு நிலப்பகுதியின் முதல் தோற்றம் எனவும் நிறுவக்கூடியனவாக அமையும். இடப்பெயர்ச்சித் தொன்மங்களால் மறுக்கப்படக் கூடியது. நிலம் பெயர்தலின் ஒரு நிலையற்ற தன்மையும் அந்த இயற்கையுடன் ஒரு பணிவான உறவும் இதன் பின்புலமாக அமையக்கூடியது.

மேற்குறித்த இரண்டு கூறுகளாக தாய்மையின் இடையீடு சார்ந்த தொன்ம நிலையும், இடப்பெயர்ச்சி சார் சமூக அடையாளமும் ஆண்மைய, இனமைய வன்முறைக்கு எதிரான நெகிழ்வுக் குறிப்பீடுகளாக உள்ளன. நிலைமாற்றக் குறிகளால் அமைந்த இந்த கதை மொழிதல் குறுகிய அடையாள மையவாத மொழிக்கும் கூட எதிரானதாக இயங்குவது மிகவும் குறிப்பிடப் படவேண்டியது.

கோபல்ல புரத்து மக்கள் மற்றும் அந்தமான் நாயக்கர் என்ற நாவல்களும் கோபல்ல கிராமத்தின் தொடர்ச்சிகளாகவும் அதே சமயம் தொடர்ச்சியின்மையாகவும் அமைந்த கதைகள். இரண்டு பாகங்களாக அமைந்த கோபல்லபுரத்து மக்கள் நாவல்; தனி வாசிப்பில் சில அர்த்தங்களும், கோபல்ல கிராமத்துடன் இடை மற்றும் இணைப் பிரதியாக வாசிக்கப்படும் பொழுது வேறு பல அர்த்தத் தளங்களையும் உருவாக்கக் கூடியது. இந்த மூன்று நாவல்களையும் ஒரே சமூக வெளியின் தொடர்கதை மொழிதல்களாக வாசிக்க வேண்டிய தேவை உள்ளது.

தனது பூர்வகதை மற்றும் கடந்த கால நினைவுகளுடன் தொடரும் கோபல்ல கிராமத்தின் வாழ்க்கை மேலும் விரிகிறது.அங்கே நிகழ்ந்த கிட்டப்பன் - அச்சிந்தலு வாழ்க்கைக் கதை, புதிய அரசாங்கம் மற்றும் தேசத்தின் உருவாக்கத்தால் கிராமம் அடைந்த மாற்றங்கள்,புதிய இயந்திரங்கள், கருவிகள், பொருள்களின் மூலம் கிராமத்து வாழ்க்கையும் இயற்கையும் மாறிய விதங்கள், ஆங்கில அரசுக்கெதிரான போராட்டங்கள் பற்றிய கதைகள், இந்திய தேசத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள், இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்ததைப் பற்றிய செய்திகள் என்பவற்றால் நிரம்பியுள்ள கோபல்லபுரத்து மக்கள் கதை; நவீன தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் சமூகக் கருத்தாக்கங்கள் அவர்களின் வாழ்க்கை வெளியை ஊடுருவிய வகைகள் பற்றியும், தேசிய இயக்கங்களின் தாக்கங்கள் பற்றியும், கப்பல்படை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது பற்றியும் விரிவாகச் சொல்லிச் செல்லும் கதையாடல் தொகுப்பு.

அந்தமான் நாயக்கர் கதை சுதந்திர இந்தியாவில் கோபல்ல கிராமம் எதிர்பார்த்தது நடக்காததுடன்; புதிய அடக்குமுறையும் அநியாயமும் நிகழத் தொடங்கிவிட்டது பற்றியது.

இம்மூன்று கதையாடல் தொகுதிகளையும் தொடர் வாசிப்பு மூலமும் உறவாக்க வாசிப்பு மூலமும் அர்த்தப் பெருக்கம் செய்யும் பொழுது பின்வருவனவற்றை நாம் அடையாளம் காணமுடிகிறது:

கோபல்ல கிராமம் என்ற பரப்பில் வாழும் மக்கள் கதைகளுக்குள் வாழ்கிறார்கள். புனைவுகளை,நினைவுகளை,மொழியாக்குவதன் மூலம் தமது வாழ்வைத் தொடருகிறார்கள்.

அவர்கள் பல்வேறு அரசு மற்றும் அரசியல் மாற்றங்களை கதைகளாகவும் வாசகங்களாகவும் எதிர்கொண்டு அதற்கேற்ப தமது நினைவுகளை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

தமக்கான ஒரு அரசியல்,நீதியியல், தண்டனை முறை, சமூக விதிகள், பொருளாதார விதிகள் போன்றவற்றை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பெறப்படும் சொல்லாடல்களால் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

மிகவும் தூரத்தில் நிகழும் அரசியல், சமூக நிகழ்வுகள் கோபல்லபுரத்து வாழ்வை செய்திகளாகவும் தகவல்களாகவும் பாதிப்பதுடன் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.

தேசிய உருவாக்கமும் சர்வதேச அரசியலும் அவர்களுக்கு கதைகளாகவே வந்து சேர்கின்றன. தமது கதைகளுடன் அவற்றையும் சேர்த்தே கதையாடலைத் தொடர்கின்றனர்.

ஏகாதிபத்திய அரசு மாறி இந்திய அரசு உருவானால் தமது வாழ்வு மாறும் என்றும் துயரங்கள் மறையும் என்றும் கோபல்ல புரத்து மக்கள் நினைக்கின்றனர். சிலரோ எதுவும் மாறத்தேவையில்லை எனவும் நினைக்கின்றனர்.

அவர்களுடைய நிலம் கடினமானது, ஈரம் குறைந்தது, தொடர் உழைப்பைக் கோருவது. இந்தச் சூழலில் அவர்கள் தொடர் உழைப்பினைப் போலவே தொடர் கதைகளையும் பெருக்குகின்றனர்.

அதுவரை கதைகளாக மட்டுமே தம்மை வந்தடைந்தவைகள் ஆயுதங்களாக அரசு இயந்திரங்களாக வந்து தாக்கும் பொழுது அவர்கள் கதைகளிலிருந்து வெளியே எறியப்படுகின்றனர்.அரசு ஒடுக்குமுறை இயந்திரத்தின் முன் கதையழிந்த மக்களாக, பேச்சு அற்ற உடல்களாக அவர்கள் நிற்கிறார்கள். உடல் நேரடியாக போர் இயந்திரத்தை எதிர்கொள்கிறது. உயிரழிக்கப்படுகிறது. நம்பிக்கைகளில் தொடங்கி, நம்பிக்கை இழப்புகளில் மாறி, நம்பிக்கை மோசத்தின் மூலம் சிதைக்கப்படும் வாழ்க்கை. நம்பிக்கை எதன்மீது என்பது பற்றி கேள்வி தொடர்கிறது.

இக் கதைகளின் மூன்று உருவங்களாக உடல், நிலம், கதை என்பவை அமைந்திருக்கின்றன. இவற்றிற்கிடையிலான உறவுகளும் பின்னல்களும் வாழ்தல் என்பதை கட்டமைப்பது பற்றிய சொல்லாடல்களாக இக்கதை அலகுகள் அமைகின்றன.

கி.ரா வின் பிரதியாக்கத்தில் குறிப்பிட்டு அறிய வேண்டிய கூறுகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்:

புற எதார்த்தம்' என்பதை மறு ஆக்கம் செய்யும் செயலாக சொல்லாடல்களைக் காணாமல் - சொல்லாடல் மூலம் உருவாக்கப்படும் அறியப்பட்ட, தொகுக்கப்பட்ட எதார்த்தத்தைக் கட்டும் எழுத்து.

அகிலம் சார்ந்ததும் அறியப்படாததுமான பொருளுரைப்பு மற்றும் அறிதல் முறை சாராமல் நில எல்லை வகுக்கப்பட்ட, கால எல்லை வகுக்கப்பட்ட, மிகவும் குறிப்பான கலாச்சார, சமூக நினைவு வெளிக்குள் இருந்து ஒரு மொழி கட்டப்படுகிறது. இதன் உள் மற்றும் வெளி என்பவை தெளிவாக பிரித்து அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுமை என்பதைவிட வித்தியாசம் என்பது பெருக்கப்படுகிறது.

இந்த எழுத்துக்கான மிகத் தெளிவான மொழி நிலப்பரப்பும், மன இடப்பரப்பும், இட நினைவுப் பரப்பும் உள்ளது. நில, இட, உடல் வரைபடத்திற்குள் கதைகளின் நகர்வும், கதைக்கூறுகளுக்குள் நில,இட, உடல் தடங்களும் தொடர்ந்து பாதுகாக்கப் படுகின்றன.

நிலம் என்பது வாழிடம், புழங்குமிடம், வயல், நீர்ப்பரப்பு, தாவரமுள்ள இடங்கள், வெற்றிடங்கள், தூரத்தில் தெரியும் நிலம் எனவும்: உடலைச் சூழ்ந்த, நினைவைச் சூழ்ந்த வெளி எனவும்; உடல் துய்ப்பு, புலன் இன்பம், வலி, நோய், உடல் சேக்கைகள், பின் மரணம் எனவும் இங்கு தொடர்ந்த உருவக மாற்றம் அடைகிறது. பிறப்பு, இருப்பு,உருமாற்றம், கரைவு,உடலின் தருணங்கள் அனைத்தும் நிலம் மற்றும் மண்ணின் மாறுபாடுகளாக வைக்கப்படுகின்றன.

மனிதர்சார் சூழல் என்ற இயற்கையை அழிக்கும் கோட்பாட்டுக்கு மாறாக, சூழல்சார் மனிதர் என்ற அறிதல் முறை கி.ரா எழுத்துக்களின் முக்கியக் கூறாகும். நிலம்,தாவரங்கள்,ஒளி, வெப்பம், நீர், காற்று, பருவங்கள் இவற்றிற்குள் மனிதச் செயல்கள் அனைத்தும் உள்ளடங்கி விடுகின்றன. மனம் என்பது இவற்றின் மிக நுண்ணிய கூறாக நிற்கிறது.விலங்குகள், பறவைகள், தாவரங்கள் இவற்றின் பரந்துபட்ட வெளிக்குள் ஒரு பகுதியாக மனிதக் குழுவின் இருப்பும் அறியப்படுகிறது.

மனித மனம் மற்றும் புலன் செயல்களின் பெரும் பரப்பு விலங்குகளாலும் தாவரங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.இவற்றின் அடுத்த கட்டமாக இயற்கைசார் தேவதைகள், குல மற்றும் குடி தெய்வங்கள் இடம்பெறுகின்றன.

விலங்குகளின் இருப்பும் இயக்கமும் தனித்த ஓர் இணை அமைப்பாக இந்த கதைப்பரப்புகள் முழுக்க வைக்கப்பட்டிருக்கிறது.அவற்றின் நடத்தை, சங்கேதம், உறவுகள், மாறுபாடுகள் என்பவை மனித அமைப்பு போலவே பல்வேறு நாடகத்தன்மையுடன் மொழிப்படுத்தப்படுகின்றன.

தாவர மண்டலமும் விலங்குகளின் மண்டலமும் எப்பொழுதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மௌனமும் மர்மமும் நிரம்பியதாக அறியப்படுவதால் அறிவின் சர்வவல்லமை தலைகீழாக்கப்பட்டு அறியப்படாமைகள் பற்றிய பிரக்ஞையாக மனித அறிவு வைக்கப்படுகிறது.இது பேரழிவு நோக்கிய மனித அறிவின் நகர்வுக்கு எதிரான பிளவுபட்ட அறிதல் முறை.

மனிதப் பண்புகளும் நடத்தைகளும் கனவுகளும் வன்மங்களும் குரூரங்களும் வேட்கைகளும் தாபங்களும் குழப்பங்களும்கூட முற்றறிவின் மூலம் விளக்கப்பட்டு விடமுடியாத, பொதுக்களத்திற்குள் முற்றிலும் கரைத்துவிட முடியாத பூடகங்களாகவே வைக்கப்படுகின்றன.

எந்த ஒரு மனிதர் பற்றியுமான கதையாடல் அவரின் சிலச்சில செய்கைகள்,அங்குமிங்கும் நடந்த நிகழ்வுகள், வேடிக்கையான தருணங்கள், இயல்பு கடந்த சில நடத்தைகளை விளக்கிவிட்டு மற்ற அனைத்தையும் விளக்க முடியாததாக தனித்த பிரிந்து நிற்கும் அறிதலுக்குள் வராத பகுதிகளாக விட்டுவிடுகிறது.இதன் மூலம் ஒவ்வொரு மனிதருமே ஒரு புனைவுத் தொகுதி போலவும் தொன்மைக் குறியீடு போலவும் முழுமையாக ஊடுருவப்பட முடியாத தனித்தனி அமைப்புகளாகவும் வைக்கப்படுகின்றனர்.எவ்வளவு நெருங்கியும் இழைந்தும் இருந்தபோதும் இரண்டு உடல்களும் மனங்களும் முழுமையாக ஒன்றை ஒன்று அறிந்து கடந்துவிட முடியாத நிலை பற்றிய பதிவு கி.ரா எழுத்தின் மிக முக்கியமான பகுதி.

பொதுவெளி, சமூகக்களம் என்று வரும்போழுது ஒவ்வொரு மனிதருடைய ஏதோவொரு பண்புக்கூறும், ஏதோவொரு குணம் மட்டுமே முன்னிலைப்பட்டு அவற்றைத் தொகுத்து ஒரு பொது வடிவம் புனையப்பட்டு விடுகிறது. மற்ற பண்புகள், குணங்கள் எப்பொழுதும் ஒத்திவைக்கப்படுவதாக இரகசியமாகப் பதுக்கப்பட்டதாகவே இருந்துவிடுகின்றன என்பது கி.ரா வின் மனித சித்தரிப்புகள் பற்றிய சொல்லாடலில் தெளிவாக்கப்படுகிறது.

கிராமம் எப்பொழுதும் வெளிப்படையாக இருக்கிறதுஅதேசமயம் மிகவும் மூடுண்டதாகவும் இருக்கிறது.புலப்படக் கூடியதாகத் தோன்றும் அதே தருணத்தில் புலப்படாத பல அடுக்குகளை, மடிப்புகளைக் கொண்டிருக்கிறது.எல்லாராலும் ஊடுருவப்படும் வெளிகளுக்குள்ளாகவே மிக ரகசியமான நாடகங்களும் நடந்தபடியே இருக்கின்றன. பொது வெளி எப்பொழுதும் இந்த ரகசிய வெளிகளால் நிரம்பியே இருக்கிறது.

எவ்வளவு தனித்தபோதும் புலன்களின் களமாக இன்பம் மற்றும் துன்பத்தின் வெளியாக சூழல் இருக்கிறது. புலன்கள் பிற புலன்களுடன் ஊடாடும் பரப்பு பொது நினைவு மற்றும் பொதுக் கதையாடல் பரப்பு மிகத் தனியே உள்ள பொழுதும் ஒருவரின் மௌனத்திற்குள் பொதுக் கதையின், கூட்டுத் தொன்மத்தின் தொடர் மொழியாட்டம் நிகழ்ந்தபடி இருக்கிறது.

இந்த மூன்று நாவல்களிலும் இடம்பெறும் பல இணைக் குறியீடுகள் வேறு மொழிபுகளை உபயோகிக்கக் கூடியவை. உதாரணமாக பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகள் கொண்டு வந்து கோவிந்தப்ப நாயக்கருக்கு அன்பளிப்பாக அளிக்கும் வாள். இந்த வாள் மற்ற இரும்புகளை மரத்தைச் சீவுவது போல் சீவக்கூடியதாக உள்ளது.முதல் நிலையில் இது ஒரு அன்பளிப்பு, ஆனால் போரின் கருவி. ஒப்பந்தம் நிகழ்ந்தால் அன்பளிப்பு;இல்லையென்றால் தண்டனை. இந்த வாளும் சாதாரணமானது அல்ல; உலகை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்தியத்தின் பலமுள்ள, உலோகங்களைச் சீவும் வாள். பயமுறுத்தும் இந்த அன்பளிப்பு பின்னால் நிகழப்போகும் படுகொலைகள், உலகப்போர்களின் முன்னறிவிப்பாக வந்து சேர்கிறது.

இவ்வகையாக மாறுதள இணைப்பிரதிகளையும் உப மொழிபுகளையும் உருவாக்கக்கூடிய கதை அலகுகள் சிலவற்றையும், குறியீட்டுத் தொகுதிகள் சிலவற்றையும் நாம் கி.ரா வின் நாவல்களில் இருந்து மாதிரிக்காக வாசிக்கலாம்.

கோபல்ல கிராமம் நாவலில் வரும் பெண் கொலையானது ஒரு பாம்படத்தைக் காரணமாகக் கொண்டு நடப்பது . இங்கு தங்கம் என்கிற பொருள்சார் குறியீடு கொலை என்பதுடன் நேரடித் தொடர்புடையதாகிறது. போர் என்பதும் தங்கம் என்பதும் கொண்டுள்ள உறவும்; சமாதானம்,ஒப்பந்தம், உறவுமுறை போன்றவற்றில் தங்கம் பெரும் குறியீட்டு இடமும் வரலாறுகளின் கதையாடலை நிரப்பி இருக்கிறது.இங்கு கொலை நிகழும் களத்தில் பெண்ணுடல் என்பது மதிப்பிழந்து தங்கம் என்ற குறியீடு முக்கியத்துவம் அடைகிறது.இங்கு களவு அல்லது பறிப்பு என்பது ஒரு குறியீட்டை, சமூகத் திரையை பறிப்பதாக உள்ளது.கொலை உணர்வை இப்படி ஒரு குறியீட்டுப் பொருளே தூண்டிவிடக்கூடியதாக அமைவதன் அர்த்தப்பாடு குறியீடுகளுக்கும் உயிர் உடல் இருப்புக்கும் இடையே உள்ள இணைப்பைப் புலப்படுத்துகிறது.

கோபல்ல கிராமத்து மக்கள் பெண்ணை கொலைபுரிந்தவனுக்குத் தரும் கழுவேற்றும் தண்டனை அதிர்ச்சியூட்டும் ஒரு குறியீட்டு தளம். குற்றம், தண்டனை, நீதி, ஒழுங்குபடுத்துதல், சமூகப்பாதுகாப்பு என்பவை பற்றிய மிக முக்கியமான பிரச்சினைப்பாடுகளை எழுப்பக் கூடியது. பெண் அல்லது ஆண் கொலை செய்யப்படுதல் கொடூரமானது. அதே சமயம் அதற்காக இன்னொருவர் கொள்ளப்படுதலும் கொடூரமானது. ஆனால் இங்கு இருப்பது ஒரு கூட்டுச் சமூக தண்டனை விதி.அதற்கென்ற குற்ற விதிகளும் தண்டனை விதிகளும் உண்டு.குற்றவியல் பற்றிய 'மிக நாகரீகமான' விதிமுறைகளிலிருந்து 'வளர்ச்சியடையாத' சமூகக் குழுக்களின் விதிமுறைகள் வரை சில பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. 'உடல்' அதன் மையம்; சித்ரவதை,கொலை,தனிமைப்படுத்துதல் அதன் உபாயம். இதில் முடிவு காணப்படாத பல சிக்கல்கள் உள்ளன.ஒருவகையில் கோபல்ல கிராமம் மட்டுமல்ல; எல்லா அமைப்புகளின் மையமாகவும் கழுமரமும் கழுமேடையுமே உள்ளது. இந்தவகை தண்டனை முறையை வெளி அமைப்பு ஒன்று தடைசெய்து நீதி அமைப்பு என்ற பொதுப் பெரும் விதிகளை உருவாக்க முனையும் பொழுது அது ஏகாதிபத்தியமாகவோ,கொடுங்கோன்மையாகவோ,பாசிசமாகவோ இருப்பதை தவிர்க்க முடிவதில்லை.தண்டிக்கும் உரிமை, கொலை செய்யும் உரிமை யாருக்கு என்ற கேள்வி அரசியலின் மிக வலிமையான கேள்வி. இங்கு நிகழும் தண்டனை இந்திய கிராமம் ஒன்றின் அகவய கொடூரத்தின் அடையாளம் என்று கூறும் பொழுது; சமூக உருவாக்கத்தில் இந்தக் கொடூரங்களின் எண்ணிக்கையும் பயங்கரமும் அதிகமாகிறது என்பது நினைவூட்டப்படுகிறது.

நேரடித் தன்மையுடைய இந்தக் கொலை தண்டனையுடன் கட்டபொம்மனுக்கு வழங்கப்பட்ட கொலை தண்டனையும்,ஊமைத்துரை வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று மரத்தில் தொங்கவிடப்பட்டதும் இணை நிகழ்வுகளாக இதே பிரதியில் பதிவாகி இருக்கின்றன.

கோபல்லபுரத்து மக்கள் நாவலில் பல்வேறு ஏகாதிபத்தியப் படுகொலைகள், கொலை தண்டனைகள், போர்கள் பதிவு செய்யப்படுகின்றன.கப்பல் படை போராட்டத்தில் நடந்த கொலைகள், இந்திய தேசிய ராணுவத்தின் அழிவு,பேரழிவாகக் கவிந்த உலகப்போர் என கொலைகளின் பட்டியல் அந்தமான் நாயக்கர் நாவலிலோ போலீஸின் தாக்குதலால் கொலையுறும் அழகிரி நாயக்கர். இந்த தொடர் தண்டனைகள் கொலைகள் பற்றிய உள்ளீடான தர்க்கம் என்ன என்பது இந்த மூன்று கதைகளின் விரிவான கேள்வித் தளமாக உள்ளது.

கழுவேற்றப்பட்டவனையும், புதைக்கப்பட்ட பெண் என இருவரையுமே சேரிமக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள்.முடிவு காணப்படாத பெரும் கேள்வி ஒன்று பூசைக்குறியதாக மாறுவது - சேரி மக்களின் இந்தக் குறியீட்டு நிகழ்ச்சியால்தான்.கொல்லப்பட்ட இருவரையுமே தமது சாதியின் அடையாளமாகக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள, சமூக இருப்பே தண்டனையாக்கப்பட்ட அந்த மக்களின் தெய்வமாக்கல் நிகழ்சசி ஒரு மையக் கேள்வியை மறக்காமல் காப்பாற்றும் வினையாக உள்ளது. கழுவன், கம்மாளச்சி என பெயர் சூட்டிக்கொள்வது தொடர் நினைவூட்டலாக உள்ளது. கழுவன் தான் சார்ந்த இனத்தையோ, சாதியையோ வெளிப்படுத்தாமல் மௌனமாகத் தனது தண்டனையை ஏற்றுக் கொள்வதும், மரணத்திற்கு முன் தன் மக்களை நினைத்துக் கொள்வதும் தனிமனிதக் கொலைக்கும் இனப்படுகொலைகளுக்குமிடையில் ஊடாடும் உறவை நிழலாகக் காட்டுகிறது.

தனது இனத்தின் கதையை நினைவுகளில் கொண்டிருக்கும் முது கிழவி மங்கத்தாயாரு அம்மாள் தாய் அதிகாரம் சார்ந்த குறியீடாக இருக்கிறார். அழகின் குறியீடான சென்னாதேவி, பதினாறு அடி நீள கூந்தலுடைய துளசி, கூட்டத்தைப் பாதுகாக்கும் பாட்டி, பெண் விலங்கான பசு, ராணி மங்கம்மா, விக்டோரியா மகாராணி என பெண்களின் கலைந்துபட்ட வம்சாவழியை நினைவுகூறுவதும்; மங்கம்மாவின் ஆட்சியாகவே நினைத்து விக்டோரியாவின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என்பதும் பொதுக் காரண விதிகளுக்கு உட்படாத தனி விதிகள் உடையது.

பூமாதேவியும் ஒரு பெண்தான். மற்ற பெண்களை மதித்து நடக்கக்கூடியவனிடத்தில் பூமாதேவியையும் ஒப்படைக்கலாம். அவன் இந்த பூமியையும் நன்றாகவே பரிபாலனம் பண்ணுவான் என்கிறாள் மங்கத்தாயாரு அம்மாள். இந்திய சமூகங்களின் ஆண் பெண் அதிகார உறவில் முக்கிய உடைப்பை இந்த வாசகம் நிகழ்த்துகிறது.உண்மையில் அரசு மற்றும் அரசியல் தீண்டாத ஓர் அந்தரங்க வெளியை பெண்மையும் தாய்மையும் பாதுகாத்து வருவதன் மொழித்தடயமாக இந்த வாசகம் உள்ளது. தந்தைசார் ஆண்மைய வரலாற்றுப் புராணிகத்திற்கு எதிரான தாய்மயப்பட்ட பெண்மையக் கதையாடலின் குரலாக இது கிராமத்தைக் கவிகிறது.

கோபல்லபுரத்து மக்கள் நாவலில் இடம்பெறும் மாடுகள் பற்றிய விவரிப்புகளும்; மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம், இணக்கம் பற்றிய சம்பவங்களும்; இயந்திரம் மற்றும் மனிதர் என்ற அழிவுச் சூழலுக்கு எதிரான இன நினைவு சார்ந்தது. காடு, ஊர்,கட்டுத்தறி,மேய்ச்சல் நிலம் என மாறும் மாடுகளின் இடமானது ஒருவகையில் மனிதமயப்படும் விலங்குகளின் குறியீட்டு மாற்றத்தை பதிவு செய்கிறது.

கோபல்ல புரத்து மக்கள் நாவலில்; புதிதாக வெளியிலிருந்து வரும் பொருள்கள், தகவல்கள்,கல்வி,அரசு நிறுவனங்கள் என்பவை சொல்லாடல் மற்றும் கதையாடல் களத்தை மாற்றுவதும் அகிலம்சார் கொடுங்கோன்மைகளின் வன்முறை குறியியல் வழியாகவே அக்கிராமத்தை ஆக்கிரமித்துக் கொள்வதும் நிகழ்கிறது. பேராதிக்கத்தின் பரவல் மொழியூடாக, கதையூடாக,புனைவூடாக விரியும் தளம் இது.

நிலத்தின் மீது மக்களுக்கு, சிறு குழுக்களுக்கு இருந்த உரிமை, உறவு பறிக்கப்படுவதும்; மையப் படுத்தப்பட்ட அரசுருவாக்கமும் கிராமத்து வாழ்க்கையை மட்டுமல்ல - மண்ணை, இயற்கையை, சூழலை, நீரை அழிக்கிறது என கோபல்லபுரத்து மக்கள் கதையும் அந்தமான் நாயக்கர் கதையும் இணைந்து கூறுகின்றன. ஆங்கில ஏகாதிபத்தியமும் இந்திய ஏகாதிபத்தியமும் ஒன்றாகத்தான் இந்த நிலத்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கி.ரா வின் கதையாடலில் மிக முக்கியக் கூறாக இருப்பது மையப்படுத்தப்பட்ட அரசுக்கு மட்டுமல்ல; அரசு, அரசமைப்புகள் என்பவற்றிற்கே எதிரான ஒரு உடைபடு விலகல். மனித, இனக்குழு எதிர்ப்புத் தன்மையுடையவையாகவும் அழிவுத்தன்மை உடையதாகவுமே எந்த வகை அரசும் இருக்கும் என்ற எதிர்க்கதையோட்டம் மிக வெளிப்படையாகவே இந்த கதையாக்கத்தில் அமைந்திருக்கிறது.ராணுவ மறுப்பு, போர் மறுப்பு என்பவை மறு தளவாசிப்பில் தெரிய வருபவை. மங்கம்மா சாலையும் புதிய ரயில் பாதையும் தேசிய நெடுஞ்சாலையும்கூட அழிவின் குறியீடுகளாக, பாட்டைகளாக கோபல்ல கிராமத்தை ஊடுருவிச் செல்வது குறிப்பிடப்படுகிறது.

கி.ரா வின் பிரதிகளில் விரியும் கிராமம் என்பது வன்முறையற்ற இனப்பரப்பு அல்ல. ஆனால் வன்முறைகளின் அளவும் பரவலும் உத்தியும் மாறுவது பற்றிய கேள்விகளையுடைய மனிதப்பரப்பு. பல்வேறு சாதியக் குழுக்களின் இடமான கோபல்ல கிராமத்தில் விலகல் நிறைந்த ஓர் இணைவு காப்பாற்றப்படுகிறது. குடும்பவெளி என்பது சாதியின் தூய நிலையைக் காப்பாற்றுவதாகவும், பிறவற்றை விலக்கும் இடமாகவும் செயல்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கதைகளுக்கு வெளியே இருக்கிறார்கள். ஊர்க் குடும்பனின் போர்த்திறமை தேவைப்படுவது போல பிற மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவித அமைதியான ஆனால் வலிமையான வன்முறை நிகழ்ந்தபடி இருக்கிறது.

கி.ரா வின் எழுத்துக்களில் கிராமம் முழுமையானதாகத் தோன்றினாலும் அது அடையாளம் உடைக்கும் கூறுகளையும் கொண்டிருக்கிறது. தேசத்தை உடைத்து பிராந்தியமும்,பிராந்தியத்தை உடைத்து கிராம வாழிடம் என்பதும் கிராமத்தை உடைத்து சாதியும்- சாதியை உடைத்து குடும்பமும், குடும்பத்தை உடைத்து ஆண் - பெண் நிலைகளும், அதற்குள்ளாகவும் மனம் உடல் பிறழ்ந்த மனிதர்களும் என உடைபடும் பிளவுபடும் அடையாளத்தின் தணிக்கை இன்றிப் பதிவாவதால் முரண்பாடுகளின் எதிர்கொள்ளல் திறந்துவிடப்படுகிறது.

கி.ரா வின் எழுத்தில் குழந்தைகளுக்கான இடம் சாதி அடையாளம் மறுக்கும் தனித்த மொழியுடைய சமூக உறுப்பினர்களின் அடையாளமாக இடப்படுத்தப்படுகிறது. பொது விதிகள் மீறிய இந்த சிறு விதிகளில் அடையாளக் கலப்பும் குலைப்பும் நேர்கிறது (உதாரணம்:பிஞ்சுகள் - குறுநாவல்)

கி.ரா வின் குறுநாவல்கள், சிறுகதைகள் என்பவையும் கூட அவரது மொத்த எழுத்துக்களின் இணைப் பிரதிகளாகவும் தொடர்ப்பிரதிகளாகவும் உள்ளன. இவை அனைத்திற்கும் மிகக் குறிப்பான நிகழ்காலம், வெளி உள்ளது. சாதிய, குடும்ப எல்லைகளுக்குள் உள்ள பிரத்யேக மொழியும்; கிராமம் என்னும் குரும்பொதுக்களத்திலுள்ள கலாச்சார கலப்பு மொழியும் இவரது பிரதியாக்கத்திற்கும் கதையாடலுக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஆனால், இந்த கதையாடலும் சொல்லாடலும் ஒன்றை ஒன்று முரண்பட்டும் மோதியும் வேறு ஒரு பிரதியியல் அறம் நோக்கி நகர்கின்றன. இந்தப் பிறதியியல் அறங்கள் பற்றிய பிரச்சினைப் பாடுகளே கி. ரா வின் எழுத்துப் பரப்புகளை பின் நவீனத்துவ வாசிப்புக்கு உரியவையாக மாற்றுகின்றன.

கி.ரா வின் எழுத்துக்களின் உடைபடும் தன்மைகள், பிறதியியல் எதிரீடுகள் சிலவற்றை அடையாளம் காட்டுவதன் மூலம் இந்த எழுத்துக்களத்தின் சில பொதுப் பண்புகளை நாம் வரிசைப்படுத்தலாம்:

கிடை குறுநாவலில் சில முரண்பாடுகள் விளக்கப்படுகின்றன. துப்பறிதல்,உண்மையறிதல் போன்றவற்றிற்கு ஓர் அமைப்பு தனக்கேயுரிய முறைகளைக் கையாள்வது.

ஆடுகள் பற்றிய கவனிப்புகள் அவை பற்றிய பிரத்யேக அறிவை உருவாக்குவது. கிராமம், குடும்பம் என்ற வெளிகள் சாதி விதிகளை, விலக்குதலைக் காப்பாற்றும் பொழுது காடுகளும் வெளியிடங்களும் சாதிக்கலப்பை, சுதந்திரத்தை சாத்தியமாக்குகின்றன. கண்காணிப்புக்கு வெளியே நிகழும் முறை மீறல்கள் சுதந்திரத்தின் செயல்களாகின்றன. ஆனால், அறிவின் கண்டுபிடிப்பும் திறமையும் சுதந்திரத்தை மீறலை ஒடுக்கும் கருவிகளாகின்றன. எந்த ஓர் அமைப்பிலும் இறுதிவரை நசுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் பெண்மை என்பது செவனிக்குப் பேய் ஓட்டும் நிகழ்ச்சியில் வெளிப்படையாக வைக்கப்படுகிறது.

உடன் கட்டை ஏறும் நிகழ்ச்சியை ஒரு கலாச்சாரத்தின் பகுதியாக விவரிக்கும் பிரதியும் (கோபல்லபுரத்து மக்கள்: எங்க்கச்சி) சுடுமணலில் கால்களைப் புதைத்து மனைவியைத் தண்டிப்பதை விவரிக்கும் பிரதியும் (கண்ணீர் : செவத்தம்மா) இணையாக வாசிக்கப்படும் பொழுது பெண்மையின் சாபமும், தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் சுயவதையும் இந்த மண்ணைச் சுட்டுப் பொசுக்கக் கூடியவை என்னும் பெண் மரபு சார்ந்த இடையீடடுச் சொல்லாடல்களாக அமைகின்றன.பால் வேறுபாட்டு ஒடுக்குதல் மற்றும் வன்முறை பற்றிய முக்கியமான கேள்விகளை உடைய பிரதிகள் இங்கு விரிக்கப்பட்டிருக்கின்றன.

கோமதி கதையில் பால் மாறுபாடு என்பது கலாச்சாரத் தளத்தில் ஏற்படுத்தும் உடைப்பு என்பதாக முன் வைக்கப்படுகிறது. மொழிக்கு வெளியே உள்ள ஓர் இருப்பை மொழிக்கு உள்ளே கொண்டு வருவதன் மூலம் பொது அழகியல் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஜீவன் கதையில் குடும்பம் என்பதற்குள் உள்ள தேர்ந்தெடுத்த உறுப்பினர் பற்றிய மதிப்பீடும்,முழுமையடையா மனிதர்கள் என சிலரை தண்டிக்கும் பாசிசக்கூறு சிறு அலகான குடும்பத்திலிருந்து தொடங்குவது பற்றியுமான பிரச்சினைப்பாடு முன் வைக்கப்படுகிறது. பாலுறுப்பை துண்டிப்பது என்பது; பாலியல் மையமானதே வாழ்வு பற்றிய குடும்பம் பற்றிய மதிப்பீடுகள் என்பதைப் பழிதீர்ப்பாக முன்வைப்பதென உள்ளது.

பேதை கதை தாய்மையின் உள்ளீடான மிருகத்தன்மை, பயங்கரத் தன்மை, கொடூர வதைத் தன்மை இவற்றைப் பற்றிய குறியீட்டுத் தளத்தில் இயங்குவது. இவையனைத்தையும் உள்ளடக்கிய மேற்பரப்பு மௌனம் உடைய தாய்மை பற்றிய சில சிக்கலான கேள்வியை கேள்விகளையும் இது எழுப்புகிறது.வனத்தேவதைகளை மனதிற்குள் அடக்கி வைத்திருக்கும் பெண்மையின் நினைவிலி விழிக்கும் இடமாக இந்த சீண்டுதலுக்குள்ளாகும் தாய்மை முன்வைக்கப்படுகிறது.

நிலைநிறுத்தல் கதையில் இடம்பெறும் மாசானம் என்ற பாத்திரம் பயனின்மையின் ஒதுக்குதலுக்கு ஆளாகும் ஒரு தன்னிலை கொள்ளும் அசாதாரண மாற்றம் பற்றிய குறியீடு. ஒருவித பித்து நிலை எடுத்துக்கொள்ளும் சுதந்திரமும் வலிமையும் இக்கதையின் முக்கிய கூறுகள்.

ஜடாயு கதையும் நெருப்பு கதையும் மிகச் சிக்கலான சூழலில் மனிதர்கள் கொள்ளும் வடிவ மாறுபாடு மிகைத்தன்மையை நோக்கிச் செல்வதை பேசுபவை. கலாச்சாரங்கள், இனங்கள் பல இந்த வகை மிகைத்தன்மைகளால் காப்பாற்றப் படுவதை இவை சுட்டுகின்றன

கிடை கதை தனக்குள் ஒற்றை உண்மை என்று எதையும் கொண்டிராத நுண்கதையலகுகளை உடைய, சட்டகமற்ற கதையாடலைக் கொண்ட கதைப்பரப்பு. இக்கதை வரலாறு மறுப்புத் தன்மையுடைய, தேசியம் வழுவிய கதையாடலுக்கு எளிய உதாரணம். வரலாறும் தேசியமும் ஆயிரக்கணக்கான வேறுபாடுகளை நுண்மைகளை மறுத்து ஒற்றைக் தத்துவ ஒழுங்குபடுத்தல் மற்றும் மைய உண்மை என்பதால் கட்டப்படும் நினைவு மற்றும் மொழிபு அமைப்புகள். எல்லா எளிய மற்றும் சிறு அமைப்புகளின் அர்த்தமும் இருப்பும் இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அமையவேண்டும் என்பதும்; இதற்கு இன்மையும் சிதைவுமே உள்ளது என்பது இவற்றின் வன்முறை. வரலாற்றாக்கம் ,வரலாறு படுத்தல், வரலாற்றுக்குள் இருத்தல் என்பவற்றின் கொடுங்கோன்மைக்கு எதிரானதே நுண் கதையாடல் மொழிகள். கிடை கதை

இவ்வகையில் வரலாறு கடத்தல் தன்மையுடைய, வெளிப்பரப்பு தன்மையுடைய குறிப்பீட்டுகளின் பரப்பை பதிவு செய்கிறது.

கிடை கதையில் கிராமம் என்பதற்குள் அடங்காத வெளியே மேயும் ஆடுகள் சமூகம் - மனிதர்களின் சமூகத்திற்கு இணையாக காட்சிப்படுத்தப்படுகிறது. மனித மயப்படுத்தப்பட்ட, ஆனால் மனித மையப்படுத்தப்படாத இயற்கையின் ஒரு பகுதியாக கிடை அமைகிறது.

கவனம் கொள்ளப்படாத ஆடுகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது ஆயிரக்கணக்கான தனித்தன்மைகள் தெரிவது விளக்கப்படுகிறது.அவை விலங்குகள், ஆடுகள் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே உடையவைகளாக இல்லை என்பதும் வேறுபாடுகளை உடைய தொகுப்பு என்பதும் காட்சியாக்கப்படுகிறது. பெயரிடல் மூலம் ஆடுகளுக்கு மாறுபட்ட சிறப்பு அடையாளங்கள் அளிக்கப்படுகிறது. 'எட்டுத் திசைகளிலும் கிடை கலைந்து மேய்ச்சலுக்குப் புறப்படுதல்' என்ற வாக்கிய அலகு; நிலம், திசை, விலங்குச் சமூகம்,தாவர சமூகம் என்ற கலப்பிற்கு நடுவே மனிதர்கள் ஒரு சிறு பகுதியினரே என்பதை தெளிவுபடுத்தி மனித மையக் கலைப்பு செய்துவிடுகிறது.

இக்கதையின் பகுதிகள் பின்வருமாறு அமைகின்றன. கிடைப்பற்றிய விவரிப்பு கிடையிலிருந்து சில ஆடுகள் விளைச்சலை மேய்ந்ததனால் ஏற்படும் சிக்கல் பருத்தியில் மேய்ந்தது யாருடைய ஆடுகள் என்பதைக் கண்டுபிடிக்க ஊர்க்கூட்டம் செய்யும் முயற்சி. மூன்று பேர் கொண்ட குழு உண்மையை அறியும் விபரம். திம்மய நாயக்கர் என்ற திறமைசாலி பற்றிய தகவல்களும் அவர் நடந்ததை கண்டுபிடிக்கும் முறையும். எல்லப்பன், செவனி இருவருக்கும் உள்ள நெருக்கமும்; முதல் நாள் அவர்கள் சேர்ந்திருக்க நேர்ந்தபோது ஆடுகள் மேய்ந்துவிட்ட நிகழ்சசியும், ஊர்க்கூட்டம் குறிகேட்டு ஒரு முடிவுக்கு வருதல். எல்லப்பனுக்குத் திருமண ஏற்பாடுகள் செவனிக்கு உடலிலும் மனதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள். எல்லப்பனின் திருமண நிகழ்ச்சியும் செவனிக்குக் கோடாங்கி பேய் ஓட்டும் நிகழ்ச்சியும் இந்த கதை அலகுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது போல் தோன்றுகின்றன. அதே சமயம் தொடர்பற்ற வேறு வேறு அர்த்தப் பரப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆடுகள் தமக்கு விதிக்கப்பட்ட விதிகளையும் கண்காணிப்பையும் மீறும்போது பயிர்கள் மேய்ச்சலுக்கு உள்ளாகின்றன. இது விவசாய அமைப்பில் அழிவாக வருகிறது. ஒரு பெண்ணும் ஆணும் தமக்கு விதிக்கப்பட்ட குடும்ப விதிகள், சாதி விதிகள், பாலியல் விதிகளை மீறும்போது அதே பயிர்கள் மேய்ச்சலுக்கு உள்ளாகி அழிக்கப்படுகின்றன. இங்கு கலவி என்பது குடும்ப கட்டமைப்புக்கும் சாதிக் கட்டமைப்புக்கும் இடையே நேரும்போது அழிவு சார்ந்ததாகவும்,இவற்றிற்கு வெளியே நேரும்போது அழிவு சார்ந்ததாகவும் இயங்கும் ஓர் அமைப்பின் குறியீடுகள் மோதவிடப்படுகின்றன.


பயிர்ப் பெருக்கம் என்பதற்கும் கலவி என்பதற்கும் குறியீட்டு உறவுகள் உண்டு. விதிமீறல் நிகழும் பொழுது இவை எதிர்க்குறியீடுகளாகின்றன. இதற்கு காரணமான பெண் - செவனி. கடவுள் நிலைக்கு எதிரான தீய சக்தி (காற்று தோஷம்) யின் இருப்பிடமாக அடையாளப்படுத்தப்படுகிறாள். பாலியல் விதிகள், உற்பத்தி விதிகள், சாதிய விதிகள் இவை இயற்கை விதிகளுடன் மோதும் பொழுது உருவாகும் நாடகம் சமூக விதிகளின் கலவை உருவாக்கும் ஓர் இடைவெளி இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.

கிடை கதையில் நீதி அமைப்பு, துப்பறியும் அமைப்பு, தண்டனை அமைப்பு என்பவை பேரமைப்பு சார்ந்தவைகள்.குறி கேட்பதன் மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப் படுவதும், தண்டனை வேறு ஒருவருக்கு வழங்கப்படுவதும், 'உண்மை' பற்றிய புனைவை உடைத்து; நம்பிக்கை மற்றும் பொது யூகம் என்பதற்கு அழுத்தம் தருபவை. அதேசமயம் விளிம்பு நிலை அறிதல் முறை சார்ந்தவை.

கிடைக் ததையின்  'கிராமம்' ஒரு பேரமைப்பிற்குள் அழிக்கப்பட்ட மொழிப்பரப்பாக முதல் கட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. உலகம், தேசியம், இனம், வரலாறு என்ற பெருங்கதையாடல் பரப்புகளில் இது அழிக்கப்பட்ட நுண் அலகாக உள்ளது. அதே சமயம் செவனியின் 'கதைப்பாட்டு' இந்த கிராமம் என்ற சிறு பரப்பிற்குள்ளும் அழிக்கப்பட்ட மொழியாக மீந்து நிற்பதால்; நுண் பரப்பிற்குள் மௌனமாக்கப்படும் உப நுண்  பரப்புகள் பற்றிய சுட்டுதலுடன் கிடை கதை முற்று பெறுகிறது. துஷ்ட தேவதைகளை இஷ்ட தேவதைகளாக  மாற்ற நிகழும் தொடர் சடங்குகளின் களமாக மொழியும்; ஓயாமல் மீறிச் செல்லத் துடிக்கும் புலன்களையும் ஆடுகளையும் அடைத்து வகைப்படுத்தும் தொடர் விதிகளின் களமாக சமூகமும் இணை அமைப்புகளாக வைக்கப்படுகின்றன.

இதே பின்னணியில் பிஞ்சுகள் கதையின் அலகுகள் ஒன்றுடன் ஒன்று மைய அர்த்தமற்று தொகுதியாக்கப்பட்டிருப்பதை காணலாம். சிறுவர்கள் என்ற அடையாளம் வரலாற்று வெளியில் இருப்பது. சமூகம், கலாச்சாரம் என்பவை இளவயது மனம், நினைவு, மொழி என்பவற்றை உள்ளே வைத்திருந்தாலும் அவற்றை ஓயாமல் கண்காணித்து வேறு ஒழுங்குக்கு உட்படுத்துவதாகவே அந்த உறவு அமைவது. குழந்தை நிலை கண்காணித்தல், ஒழுங்குபடுத்தல், தண்டித்தல், நிலைமாற்றல் என்ற விதிகளுக்கு எப்பொழுதும் உட்படுவதாக உள்ளது. பாலியல், குடும்ப, சாதிய, இன ஒழுங்குகளை உடலில் பதியவைக்கும் இடைக்கால நிலையாக குழந்தைப் பருவம் சமூக நியதிகளால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த 'இடைக்கால' தன்மையை மறுத்து; தனித்த நிலையும் அர்த்தமும் உடைய நிகழ்வாக அதனை அனுமானிக்க மிகவும் அடிப்படையான தத்துவ மாற்றங்கள் நிகழ வேண்டி இருக்கிறது. பொதுமக்கள் மொழி ஒரு வகையில் 'பெருஞ்  சமூக வகைப்பட்ட குழந்தை நிலை' யை மட்டுமே அங்கீகரிக்கக்கூடியது. அதை மட்டுமே உருவாக்கக்கூடியது. 'புறநிலை மொழிக்களம்' என்ற வகையில் குழந்தைகளின் மொழி தனித்த வரலாறுகளையும்,தத்துவங்களையும் உடையது. இனப்பெருக்க அடையாளமின்மை, போர் உறுப்பாக இயங்காத தன்மை போன்றவற்றால் பெருஞ் சமூகப் பரப்பில் குழந்தைகள் உருவமற்ற நிலையில் வைக்கப்படுகின்றனர்.

பிஞ்சுகள் கதையில் குழந்தை பருவத்தினர், அவர்களின் வெளியும் இடமும், அவர்களைச் சூழ்ந்த கதைகள், பொருள்கள், அவர்களின் சூழலில் அமையும் பெரியவர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என ஒரு புனைவு வலை பின்னப்படுகிறது. எந்த பொது அர்த்தத் தன்மையும் அற்று நினைவுகளும் நிகழ்வுகளும் அடுக்கப்படுகின்றன. 'தனது ஊரும் தான் பிரியமாக சேகரித்த பறவை முட்டைகளையும் பிரிந்து ஓர் அந்நிய இடத்திற்கு போகிறான்' என முடியவரும் இக்கதை; ஊர், பறவை, முட்டை அந்நிய இடம் பற்றி ஆரம்பத்திலிருந்தே பேச்சைத் தொடர்கிறது. 'கதவு' கதையில் வரும் குழந்தைகளின் கனவும் நினைவுமாக உள்ள கதவை 'அரசு விதி' என்பது அழிப்பதின் வன்முறையும்; ஜெயில் கதையில் ராமசாமி என்ற சிறுவனின் நினைவுகளை, ஏக்கங்களை, விடுதலையை அழிக்கும் கல்வி என்ற கண்காணிப்பு வன்முறையும்; ஒரு சிறிய தவறு கதையில் வரும் சிறுவனை பள்ளி என்ற அடைபாட்டில் பொருத்த செலுத்தப்படும் குடும்ப வன்முறையும் என குழந்தைகளின் அமைப்பும் கண்காணிப்பின் அமைப்பும் தனித்தனி அமைப்புகளாக விளக்கப்பட்டு அவற்றின் இணைவு இயல்பாக அன்றி அடிப்படை வன்முறைகளை உடையதாக முன்வைக்கப்படுகின்றன. இவையும் 'பிஞ்சுகள்' கதைப்பரப்புடன் உறவுடையவை.

தேசம் சாரா, பேரினம் சாரா விலகிய கதையாடல்களை போலவே 'விதி மையம்' சாரா மதிப்பீடுகளின் கதையாடல் பாசிச மறுப்பும் கொடுங்கோன்மை மறுப்பும் உடையது. இந்த பொது விதி மறுப்புச் சொல்லாடல் விளிம்புநிலை, ஒதுக்கப்படு நிலை இரண்டையும் பார்வைக்குக் கொண்டு வருதல் மூலம் பேரமைப்பின் அழகியலைக் கலைத்துப் போடும் தன்மை உடையது. குழந்தைகள் போலவே சமூக அர்த்தம் 'நிறுத்தி' வைக்கப்பட்டவர்களாக சிலரை கி.ரா கதைகள் அடையாளம் காட்டுகின்றன. முக்கியமின்மை,பெரும்பொருள்  இன்மை என்பவை முற்றர்த்தங்களின் வன்முறைக்கு எதிராக மொழிப்படுத்தப்படுகின்றன.தேசிய, அரசியல் பொருளாதாரத் தளத்தில் முக்கியமின்மை, பொருளின்மை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு மறுக்கப்பட்டதாக கிராமம் என்ற சிறு வாழிடம் என்ற தனிப் பிரதேசத்தையே கூறலாம். இந்த தனிப் பிரதேசத்திற்குள்ளும் முக்கியமின்மை, பொருளின்மையின் வன்முறை செயல்படும் தடங்கள் பல மாயமான்,கரண்டு, ஒரு செய்தி, அவுரி போன்ற கதைகள் முக்கியமற்றவைகளாக, பொருளற்றவைகளாகிப் போன விவசாய மனிதர்களின் இருப்புகள் உலகுசார், அரசு விதிகள் சார் சொல்லாடலின் வன்முறையின் முன் இடப்படுத்தப்படுகின்றன.

கோமதி கதையில் வரும் பால் மாற்றத் தன்மையுடைய கோமதி செட்டியார், நெருப்பு கதையில் வரும் மனம் பேதலித்த பிச்சைக்காரி, பேதை கதையில் வரும் வலசை வந்த பெண்களில் ஒருத்தி, ஜீவன் கதையில் வரும் ஊமை இளைஞன், கறிவேப்பிலைகள் கதையில் வரும் இரு முதியவர்கள், விளைவு கதையில் வரும் பாவய்யா என்ற அனாதை, பூவை கதையில் வரும் அனாதைப் பெண், சுப்பன்னா கதையில் காரணமின்றி ஊர் மீது பற்று கொண்டு அலையும் இளைஞன், நிலைநிறுத்தல் கதையில் வரும் மாசானம், அந்தமான் நாயக்கர் நாவலில் ஊடுகதையாக வரும் விரலக்கா என வெற்று மற்றும் பொருளின்மை என்ற பொது விதி மதிப்பீட்டுச் சொல்லாடலின் முன் உருவழிக்கப்பட்ட அடையாளங்கள் - தனித்த ஒப்பீடுகளை மறுக்கும் அடையாளங்களாக உருவமாக்கப்படுகின்றன.

இவை குறுகிய வெளிக்குள்ளும் குறுகிய அடையாளங்களாக தனித்து நின்று எவ்வளவு குறிப்பான களத்திற்குள்ளும் கூட பொது தன்மையும் பொதுவிதியும் முழுப்பொருளும் மைய உண்மையும் சாத்தியமில்லை என்பதை மொழியாக்குவதுடன்; அமைப்பின் மொழிசார் கட்டமைப்புக்குள் நுண்கள வன்முறை மற்றும் இருப்பு முரண்போர் பற்றிய தொடர் நினைவூட்டலையும் செய்கின்றன.

அந்தமான் நாயக்கர் நாவலில் 'பின்னுரையாகக் கொஞ்சம்' என்ற பகுதி; இந்திய சமூகங்களின் தன்னழிவுத் தன்மைக்கான மூலத்தைக் கூறுவதாக அமைந்து மொத்த கதையையுமே மாறு அர்த்தம் கொள்ள வைக்கிறது. நேர் இருமைகளின் மோதலாக வரலாற்றையும் சமூக முரண்களையும் விளக்க முனையும் கோட்பாடுகளிலிருந்து விலகி பல்வேறு முரண்களின் களமாக சமூகப் பரப்பை இக்கதை விளக்க முனைகிறது. இது இந்திய பெருங்கதையாடல் மரபில் வராத விலகிய, மறக்கப்பட்ட மரபுகளின் வம்சாவழி உடையது. பெரும் விளைவுகள் பற்றிய கனவுக்காக மிகச் சிறு கூறுகளும், அவற்றின் இருப்பும் பலியிடப்படலாம் என்ற அரசியல், கலாச்சார மதிப்பீடுகளின் கொடுங்கோன்மை மீது தாக்குதல் தொடுப்பது. விரலக்கா - கதை, முற்றாகத் தன்னைப் பகிர்ந்து அளித்து விடும் அரசியலற்ற தாய்மைக்கு இந்திய சமூகங்கள் தந்த கொடூர தண்டனை பற்றியதாக நினைவை விரிக்கக் கூடியது. அதன் சாபமும் கொதிப்பும் வரலாற்றுப் பரப்புகளை நிர்மூலமாக்கிவிடும் சக்தியுடையது என்பது ஒடுக்கப்பட்ட, பூர்வகுடி மற்றும் இனக்குழு மக்களின் பழிவாங்கப்பட்ட சிதைவு நிலையின் கால சாபமாக வேறுபொருள் படக்கூடியது. அங்கங்கே தோன்றி சாவை நிகழ்த்தும் 'கைகள்' பேரமைப்பு விதிகளின் முன் மர்மமான பழி தீர்ப்பின் பைசாசத் தன்மையாக கதைப் படுத்தப்படுகின்றன.

நகர்ந்து மழையும் தற்காலிகக் குறியீடுகளால் அமைந்த கி.ரா வின் கதையாக்கப் பரப்பு பலவற்றை முரண்படுத்தியும் பலவற்றை மையம் விட்டு வெளியேற்றியும் பலவற்றை வரலாற்று வன் விதிகளிலிருந்து வெளியெடுத்தும் பொருள் மாறுபாடு செய்கிறது. பெருங்கதையாடலின், பேரமைப்பின் உண்மைகளை மறுக்கும் இக்கதைகள் இனக்குழு, குடும்பம் என்பதைத்தான் மையமாக, வன்முறையற்றதாக அடையாளப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் சில பக்கங்களில் தோன்றக்கூடும். ஆனால், அப்பா பிள்ளை அம்மா பிள்ளை கதையின் முடிவு வரிகளில் தோன்றும் சிறுமியின் மௌனமான 'ஊமை அழுகையும் நெடுமூச்சுக் குலுங்கலும்' வேறு ஒரு அறம் சார் நெடிய உறுத்தலை நினைவுப்படுத்தி பிறவற்றை கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.

கி.ரா வின் கதையாக்கம் சற்றே நெகிழ்ந்த நினைவு அடுக்கும் தன்மை உடையது. ஆனால் இதில் எது மூல நினைவு என்பதோ, எது முழுமையான நினைவு என்பதோ, எது மைய நினைவு என்பதோ ஆன சட்டக ஒழுங்கு இருப்பதில்லை. பல சமயங்களில் சொல்லும் பொருள் பற்றிய நினைவும் மறந்து சொல்லுதல் (பேச்சு அல்ல) மட்டுமே நிகழ்வாக மாறும் சொல்லுதல் முறையுடையது. வாசிப்பும் கூட ஒரு வகையில் அவ்வாறே.

சில குறியீட்டுக் குறிப்புகள் :

கி.ரா வின் எழுத்துக்கள் இந்துப் பெருமத, பெருந் தேசிய, மொழித் தேசிய பேரடையாளங்களின் வன்முறையை ஏற்காத சிறு கலாச்சார விலகல் உடையது. நாட்டார் வழக்குகளுக்குள் உள்ள மையப்படாத தன்மையின் தீவிரத்தைத் தனது விலகல் மொழிதலுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டது. தனித்த வரலாறு, தனித்த நினைவு உடைய சமூகப் பரப்பில் இவை நிகழ்வதுடன் புறச் சொல்லாடல்களை புறத்தில் வைத்தே அணுகுவது. கதைகளை கதைகளால் எதிர்கொள்வது. இந்திய முற்றொருமைகளுக்கு எதிரானது இந்தக் கதையாடல். நவீன அரசுகள் உருவாவதன் மூலம் சிறு சமூகங்களின் இயற்கை நாசமாக்கப்படுவதை பல கதைகள் சொல்வதுடன்; இந்திய புராதன மரபையும் மறுத்து கானகத் தன்மையை தமது விளிம்புகளில் கொண்டிருக்கின்றன.

ஒற்றைத் தன்மை அறிவியலை, அகிலம் சார் பகுத்தறிவை மறுத்து தனித்தனியான அறிதல் முறை, அறிவமைப்பு பற்றிய கதையாடல்களை பதிவு செய்வன இந்த எழுத்துக்கள்.

வரலாற்றாக்கம் என்பதற்கு மாறாக சிதறிய நினைவாக்கம் என்பதை உடையவை இந்த எழுத்துக்கள். பெரும் வரலாறுகளுக்குள்ளும் விடுபட்ட விபரங்களை, மறைக்கப்பட்ட கதைகளை ஊடுருவ வைத்து அவற்றின் வன்முறையை புலப்படுத்தக் கூடியவை. (உதாரணம்: கோபல்லபுரத்து மக்களில் வரும் இந்திய விடுதலைப் போரின் மறைக்கப்பட்ட செய்திகள் ஒரு நாடோடிப் போராளி மூலம் கிராமத்திற்குள் நுழைவது)

அகிலம் சார் நவீனத்துவப் புனைவுகளான இயந்திரமயமாதல், ஒட்டுமொத்த மாற்றம், விஞ்ஞான காரணவாதத்தின் விடுதலை நோக்கிய நுகர்வு, பொது முன்னேற்றம், அரசு மற்றும் பெரும் நிறுவனங்கள் மனித பரிணாமத்தின் தேவைகள் என்ற கருத்தாக்கங்கள் போன்றவற்றை மறுத்து பன்மையான கனவும் நினைவும் கலந்த கருத்துக்கூறுகளை உடையவையாக இந்தப் பிரதிகள் உள்ளன.

கி.ரா வின் எழுத்துக்கள் பின்நவீனத்துவ எழுத்துக்கள் இல்லை. அவை அகமரபு சார்ந்த தனிக் கதையாடல் சார்ந்தவை. அதனால் பின்நவீனத்துவ வாசிப்புக்கு நெருக்கமானவை.

கி.ரா வின் மொழிபுகளில் உருவாகும் சில உள்ளீடான அழகியல் கூறுகள் பின்நவீனத்துவ ர்களுக்கு முக்கியத்துவம் உடையவை. அவற்றில் சிலவற்றை இவ்வாறு பட்டியலிடலாம்: மைய மறுப்புத் தன்மை, பொது அறிதலுக்குச் சவாலாக அமையும் தன்மை, பயனற்றவை விலக்கப்பட்டவை என்பவை எதுவுமில்லை அனைத்தும் வரலாறும் கதையும் உடையவையே என்னும் தன்மை, மனிதர்களும் அவர்களின் மாறுபாடுகளும் முழுமையாக விளக்கவோ அறியவோ முடிவுபடுத்தவோ முடியாதவை என்னும் நம்பிக்கை, கோட்பாட்டு லட்சிய நிறுவனங்கள் - அமைப்புகள் அனைத்துமே வன்முறையை உள்ளடக்கியவையே என்னும் சுட்டுதல், அரசு மைய - கண்காணிப்பு மையத் தன்மைக்கு எதிரான  வெறுப்பு, பால் மைய ஒழுக்கவியலுக்கு எதிரான கதையாக்கத் தேர்வு, நாடோடித் தன்மை, அடையாள மறுப்புத்தன்மை மீதான ஆவல், நித்திய முற்றொழுக்கம் பற்றிய வெறுப்பு, விலங்குத் தன்மை மற்றும் தாவரத் தன்மைகளுடன் பிணைந்த புலன் உணர்வு சார்ந்த நுண்ணுணர்வு - இவை எல்லாவற்றையும் விட கானகத் தன்மையுடன் கரையும் கவிதையியல். 

இவை தமிழில் சாத்தியப்பட்டிருப்பது பற்றியும் வேறு எந்தெந்த கதையெழுத்துக்களில் எவ்வகையாக இவை ஊடாடி இருக்கின்றன என்பது பற்றியும் இனி நம் வாசிப்பைத் தொடரலாம்.

நன்றி காவ்யா சண்முகசுந்தரம்

1.Jacques Derrida Act of Literature
Edited by Derek Attridge
Roultledge, Network, London,1992.

2.டாக்டர் க.பஞ்சாங்கம்,
மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன்

குறிச்சொற்கள்

மேல் செல்