கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

எரிந்தும் நூராத் தணல் - தில்லையின் தீரா 'விடாய்'

பொதிய வெற்பன்

பகிரு

(நூரா = அவியா, விடாய்= தணியாத் தாகம். எரிந்தும் நூராத் தணல் = நீறு பூத்த நெருப்பு)

தில்லையை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் குட்டிரேவதியே. தொகுப்பேதும் வாரா நிலையில் தில்லையின் உதிரிக்கவிதைச் சேகரத்திலிருந்து அறிமுகத்தை 'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகளி'ல் முன்வைத்தார் குட்டிரேவதி. இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இத்தலைப்பை மாற்றித்தருமாறு 'வம்சிபுக்ஸ்' கேட்ட போது மாற்றிட மறுதலித்தே அந்நூல் 'நாதன் பதிப்பக' வெளியீடாக வெளிவர நேர்ந்தது. 'லிங்கமையச் சொல்லாடல்' என்பது பின்னைநவீனத்துவ முறையில் ஆணாதிக்கத்தைச் சுட்டிநிற்கக்கூடிய பதப்பிரயோகமே. இத்தொடர்பிலேயே 'ஆண்குறி மையப் புனை'வெனப் பாவித்துள்ளார் குட்டிரேவதி.  சக்திக்குள் சிவமொடுங்குஞ் சங்கதியைத்தான் சிவலிங்கமாகச் சைவ வழிபாட்டுக் குறியீடாகவும்; பெண்குறியையும், கருப்பையையும் தந்திர வழிபாட்டுக் குறியீடாகவும் சமைத்தனர் நம் மூதாதையர். ஆனால் குறிகள் என்பன பாவிக்கப்படக்கூடாத சொற்பாடுகளாகக் விலக்கப்படும் தடைவிலக்காகப் பதிப்பகத்தாரால் கருதப்படுதல் விபரீத முரண்நகையே!

"முழுநூலை வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்பிற்குப் பின்தான் அக்கவிஞர் தன்னுள் சாணையேற்றி வைத்திருக்கும் கவித்துவம் நம்முள்ளும் பாய்ந்து சிராய்ப்புகளையேனும் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். அக்கவிஞரை நூல்பிடித்தும் போகலாம் என்றாலும் ஒட்டுமொத்தக் கவிதைத்தொகுப்பு கொடுக்கும் பெருவெளி அனுபவம் மெய்மையானது" - குட்டிரேவதி தில்லையின் 'விடாயை' வாசிக்கையில் இது நமக்கும் அனுபவமாகின்றது.

"பெண்ணுடல் அரசியல் ஈடுபாடுடைய பெண்கவிஞர்கள் கூட மனித இருப்பின் ஆதார உணர்ச்சிகளாகப் பிரிவு, காத்திருத்தல் பற்றிய கவிதையாக்கத்தில் சங்கமரபைப் பின்பற்றியுள்ளனர்." - ந.முருகேச பாண்டியன் ('நவீன இலக்கியங்களில் செவ்விலக்கியங்களின் தாக்கம்')  

"பெண்கவிஞர்கள் உடல்சார்ந்தும் அறிவுசார்ந்தும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படுவதை உணர்ந்த ஒரு கட்டத்தில்/ சங்க இலக்கியத் தொடர்பும் மரபு சார்ந்த தொடர்ச்சியும் தங்களுக்கு ஒரு பாதுகாப்பைத் தரும் எனக் கருதிய பெண்கவிஞர்கள் சங்கமரபின் தொடர்நீட்சியாகக் கவிதைகளை எழுதினர்" - ரமேஷ் பிரேதன் (மேலது)

இத்தொடர்பில் பிரிவு, காத்திருத்தல் பற்றியதாகத் தில்லையின் சூல், வசந்தத்தில் உதிரும் இலைகள் ஆகிய இருகவிதைகளையும் இனங்காணலாம். இத்தொடர்பில் வெள்ளிவீதியாரை முன்வைத்து பூரணச்சந்திரன் குறிப்பிடுவன இங்கே எண்ணத்தக்கன :

“வினையே ஆடவர்க்கு உயிரே ;

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

என்னும் சங்ககாலப் புனைவுச்சட்டகம் இவரது (வெள்ளிவீதியார்) கவிதைகளிலும் உடைக்கப் பெறவில்லை. தலைவி காதலனது இருப்புக்காகவே வாழ்பவள் என்னும் சங்ககாலக் கருத்துப்புனைவு, அனைவரது பாக்களிலும் போலவே இவரது பாட்டுக்களிலும் வெளிப்படவே செய்கிறது. இப்புனைவு ஆணுக்கு மிக இன்பம்தரும் ஒன்றாக வரன்முறையான கருத்தமைவுக்கு உட்பட்டு வாழும் பெண்ணுக்கும் இன்பம் தரும் ஒன்றாக இருப்பினும் இன்று உடைக்கப்பட வேண்டியது என்பதும் தெளிவு.” - க.பூரணச்சந்திரன் ('கவிதைமொழி: தகர்ப்பும் அமைப்பும்')

இத்தொகுப்பிலுங் கூட ஓரிரு கவிதைகள் காதலன் இருப்புக்காகவே வாழும் அச்சட்டகத்தை உடைத்திடாமலே காணக்கிடக்கின்றன: 

"நான் உனக்காகவே மணம் பரப்புகிறேன்

நீ என்னுள் அழியாத வாசம்"

"அவனை நினைத்து

எனது சூல் முட்டைகள்

உறங்கிவிட்டன.

கர்ப்பத்தின் கதவுகளை

மூடிவிட்டன"

அப்பாலாக ஆணாதிக்கத்திற்கு எதிராக உருமாற்றியுள்ள கவிதைகளைக் காண்போம்:

ஆணலையிடம் தோற்றுப்போன பெண்ணலையல்ல தான் என அவனின் கையாலற்ற செயலைக்

காறி உமிழ்ந்தே, 

'என்னிடமும் சுரந்தெழுகிறது பொய்கை

 ஆள்மாறாட்டம் செய்யும் 

சிறுபட்டிகளின் நீச்சலுக்கு

எப்போதுமே திறக்காத சுனை என்பதைக்

 களவாணிகள் அறிந்தும் முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

 ஆ...ஊ... என அலறுவேன்

என நினைத்தீர்களா?" 

என ஔவையை உருமாற்றுகின்றார்.

தன் கனவுகளில் தோற்றுப்போன புனிதர்களைத் துவம்சம் செய்து தன் இதயத்தில் கசிந்து கிடக்கும் திமிர்க்கீற்றை, "உடல்புக்கா/ காப்பற் ரோட்டால்/ தலைகீழாக/ நடந்து போகிறேன்/"

"நான் ஒற்றை முலை திருகி/ பூ, பிஞ்சு,காய், கனி பற்றி திசைகளில் கூய்போடும்/ வக்கற்றவளல்ல" எனக் காரைக்காலம்மையையும், கண்ணகியையும் உருமாற்றித் தான் கலங்காத் தாய்மண்ணின் சுட்டுவிரல் மீதெழுந்திருக்கும் ஒற்றைச் சன்னமெனத் தொடர்கின்றார். சகோதரிகள் விரும்பாத மொழியைத் தான் பேசுவதற்காக அவர்களிடம் மன்னிப்பு வேண்டுமவர் தான் ஒளித்து வைத்திருக்கும் கருவறை ஆண்கள் பேசமறுக்கும் சொற்களில் இருந்து உயிர்த்தெழும் என்கின்றார்.

'அசகு' என்றால் விறகு பாய் போன்றவற்றை அடுக்கி வைக்கப் பயன்படுவது எனக் குறிப்பிடுவதால் நம்மாலதைப் பரண் எனப் புரிந்து கொள்ள முடிகின்றது. முதுசம் எனில் நான் பாவாணர் பாசறையில் பயின்ற பயிற்சியால் அதனை முதுசொம்(பிதுரார்ஜித சொத்து)என எனக்கு வாய்க்கின்றது. இவ்வாறே வளரி எனில் பூமராங் என்றும் எனக்குப் புரிகின்றது. 'சீரழிவும் சிறுமானியமும்' எனும்போது பனுவற் சூழமைவால் அது அவமானம் எனப் பிடிபடலாயிற்று. ஆனால் பதக்கடை, ஓங்காளம், உப்பட்டி, கச்சான், கக்கிசம், சுணங்கன் என்பனவற்றின் பொருள் காணேன். அசவுக்கிட்டாற் போல் குறிப்புரை இட்டிருக்கலாந்தானே?

"குறைந்த சொற்களால் ஆழமான விஷயங்களால் அந்தத் தளர்ச்சியை வாசிப்பிற்குப் பின் மறக்கச் செய்கிறார். ஆகச்சிறந்த கடினமான சிந்தனைகளை, சொற்களால் செதுக்கி வைப்பதற்கான வெளியே கவிதை. இந்நிலையில் தில்லையின் கவிதைகள், ஆழமான பரப்பிலிருந்துஉருவெடுத்து வருகின்றன. உடலை அயராது பிம்பமாக்குகின்றன. தான் வதையுறும் அரசியல் சிந்தனையையும், வாழ்வையும் பிணைக்கும் சித்திரங்களையும் மெல்லிய கீற்றாக வரைந்து செல்கின்றன." – குட்டிரேவதி

'காணாமற் போனோரை' எங்கெலாந்

தேடுவதோ பங்கரிலா?

வனாந்தரத்திலா? வதைமுகாமிலா?

புதைகுழி தோண்டும் அனுமதியோ,

சாம்பலோ கொடு! இனந்தெரியார்,

துரோகி யார்? யார்?

"மக்களை நம்பவைக்கும் சொற்கள்

உண்மையெனில் / நான் கட்டியிருக்கும்

கந்தல்துணியில் எழுதுங்கள்/

நான் துரோகி என்று/ நீங்கள்

விரும்பும் தேசக்கொடிக்கம்பத்தில்

அது பறக்கட்டும்"

- இது அத்தகையதோர் மெல்லிய கீற்றுச்சித்திரமே!

'Are you fresh?' ஓர் அருமையான உருவகச்சித்திரம். தான் பாம்புகள் தீண்டத் தவணை போட்டிருக்கும் தேரையாகப் பாறைகளுக்குள் பதுங்கிப் பதுங்கி வாழ்ந்ததும்; பயங்கொண்ட பாம்பொன்று 'நீ பிரஸ்' ஆகவா இருக்கிறாய் எனத் தீண்டியதும், தேய்ப்பதற்குப் 'பிரஸ்ஸா' எனத் தன்னில் எழுந்த ஆத்திரங்கள் சுக்கு நூறாகச் சிதறியதும் ஆன உருவகச்சித்திரம். இடிஇடித்து மின்னுகையில் அர்ச்சுனனை விளித்து அபயக்குரல் எழுப்பும் தொன்மத்தை 'மின்னொளி' என இன்னுமொரு உருவகக்கதை ஆக்கிவிடுகின்றார்:

"அருச்சுனனுக்கு அபயம்

அடைக்கலம் என்ற/ என் ஓசை எழும்

போதெல்லாம்/ என்னைக்

குலைநடுங்க வைத்து/

கிழடு, வாலிபன், என் சமவயதானவன்

என அடைக்கலம் கொடுத்து

நான் புகும் இடமெல்லாம்

என் பூப்படையா மேனியை

நாசமறுத்தவனுகள் என்னையே...

நான் என் பூஞ்சிறகினை

மழித்தெறிகிறேன்."

இப்படித்தான் அயராது தில்லை உடலை விம்பமாக்குகின்றார்.

போர்ச்சூழலில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான கலகக்குரலாக ரேவதியின் கவிதை அமைந்துள்ளது.

'வீரர்களே வாருங்கள்/ உங்கள்

வக்கிரங்களைத் தீர்த்துக்

கொள்ளுங்கள்/

என் பின்னால் எனது

பள்ளித்தங்கையும் உள்ளாள்./

சமாதானத்திற்காய்ப் போரிடும்

புத்தரின் வழிவந்தவர்களுக்காய்

உங்கள் யோனியைத் திறவுங்கள்

பாவம்/ அவர்களின் வக்கிரங்களை

எங்குக் கொட்டுதல் இயலும்/

எங்கள் யோனிகளின் ஊடே/

நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்/

ஆகவே வெடிவைத்தே சிதறடியுங்கள்"

ஔவை, இச்சூழலில் இருந்தே வஞ்சினம் கூறுகிறார். இத்தகு கவிதைகளை வஞ்சினக் காஞ்சி எனும் துறையோடு ஒப்பிட்டுக் காணவியலும். - க. ஜவகர் ('நவீன இலக்கியங்களில் செவ்விலக்கியத் தாக்கம்')

"வரலாற்றின் தடங்களில்

தாய்மறைத்ததையும்

சகோதரி அழித்ததையும்

நானும் செய்தேன்/ தயவுசெய்து/

நான் இறந்தபின்/ என் யோனியைத்

திறந்து வையுங்கள்/ அவர்கள்

சொல்வார்கள்/ கடைசியாக

என் கவிதைக்கு என்ன மதிப்பென்று?"

- தில்லை

மேல் செல்