கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மிளகு

வசுமித்ர

பகிரு

தானொரு காலத்தில்
குரங்காய் இருந்ததை
வெறுக்கவும் மறக்கவும்தான்
மரங்களை வெட்டுகிறோமோ
காடுகளை அழிக்கிறோமோ

மிருகக்காட்சி சாலையில்
குரங்குகளைக் கண்டதும்
இளித்தும்
பழித்தும்
குச்சியாலும் கற்களாலும்
எரிகிறோமோ

காடே
நீ
எங்கிருக்கிறாய்
குரங்கின் கருவறைக்குள்ளா?

‘மலை என்பது நீளமான மரம்’ எனத் தொடங்கி இடையில் ‘புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்’ எனச் சொல்லி ‘நானொரு வெட்டப்பட்ட மரம்’ என்றவாறு தன் கவிதைளை (வடிவரீதியில்) முடித்திருக்கிறார் சந்திரா தங்கராஜ். ‘மலை என்பது நீளமான மரம்’ என்று சொல்லும்போதே அது பூர்ஷுவா வர்க்கப் பார்வை என்பது விளங்குகிறது.

கவிதைகளில் புள்ளினங்கள் விலங்கினங்களோடு ஏகப்பட்ட இயற்கை உயிரினங்கள் காணக் கிடைக்கின்றன. சமீபமாக இயற்கை சார்ந்து கவிதைகள் எழுதப்படுவது ஒரு பேஷனாக இருக்கிறது என்பதற்கு இத்தொகுதியே சாட்சி. அதன் மூலம் கவிஞர் இயற்கையை எழுதியவர் என்பதாகவும், இயற்கை நேசிப்பாளர் என்கிற இரு தகுதிகளும் கவிஞர் என்ற தகுதியுடன் தானே இணைந்து கொள்கின்றன.

இயற்கையைப் பாட வேண்டுமா? பாடக்கூடாதா? என்ற கேள்விகளை இங்கு விட்டுவிட்டுடலாம். மனிதன் இயற்கை செயற்கை என்று பிரித்ததன் மூலம் தன்னையும் ஒரு செயற்கையாகக் கருதிக்கொண்ட அவலத்தையும் நாம் அறிவோம். சந்திரா தங்கராஜின் மிளகு கவிதை நூலில் இயற்கை வெறுமனே பெயர்களாக மினுங்கிக் கொண்டிருக்கிறது.

கவிதை வடிவத்தில் இது இயற்கைப்பாடினியின் கவிதைகளென முன்மொழியப்படும் என்ற ஆவல் மட்டுமே சந்திரா தங்கராஜின் வார்த்தைளை தறிகெட்டு ஓடச்செய்திருக்கிறது. விளைவு உருவத்திற்கேற்ற உள்ளடக்கமோ உள்ளடக்கத்திற்கேற்ற உருவமாகவோ இல்லாமல் கண்டபடி வெட்டிச் சமைக்கப்பட்டிருக்கிறது வரிகள்.

கவிதைகள் முழுக்க முழுக்க ரொமான்டிக் மனநிலையோடு நீக்கமற நிறைந்திருக்கிறது. செயற்கையான, அதே சமயம் நினைவில் தங்காத தனது வலிகளைத் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட தனிமையில் வலிந்து நினைத்துப் பார்த்து, கொடூர வலிகளாக, மீற முடியாத, மறக்க முடியாத வரிகளாகத் தொடர்ச்சியாக ரொமான்டிசத்தின் வழியாகவே வார்த்தைகளை இறைத்திருக்கிறார்.

வலி,மரணம், பறவைகள், விலங்குகள், நிலம் இப்படி எதற்கும் அதன் சொந்த மணமில்லை. செயற்கைச் சாயமேற்றப்பட்ட வார்த்தைகள் கவிதைகள் முழுக்க அப்பியிருக்கிறது. மண்ணையோ, மண்ணின் மணத்தையோ (வீச்சத்தையோ) உணரமுடியவில்லை. இயற்கையில் மனிதன் உழைப்பைச் செலுத்திய கணம் எந்த இடத்திலும் பதியவில்லை. கவிதையில் பறக்கும் பறவைகள் முதற்கொண்டு சாவு உட்பட அனைத்திலும் பிளாஸ்டிக் மணமே வீசுகிறது.

உழைப்பின் செயலூக்கமான பாத்திரத்தை எள்ளிநகையாடும் குரல்களினூடே ரசனையான குரல் மட்டும் முன்னிலையாகக் கொண்டு ஓங்கி ஒலிக்கும் வரிகள். இத்தகைய செயற்கை நினைவில் ஏற்றப்பட்ட ஞாபகங்களால் கவிதைகளில் புலப்படும் வலிகளும் வேதனைகளும் செயற்கையான வலிகளாக மட்டுமே தோற்றம் கொள்கின்றன. நகரவாழ்க்கை தனிமையில் இருக்கும்போது அலுத்துப்போகிறது. கூட்டமாக இருக்கையில் கொண்டாட்டம் கொள்கிறது. தனிமை நேரும்போது வேறு வழியில்லாமல் சொந்த ஊரை நினைத்துப் பார்க்கும் வெற்றுச் சொற்களே இக்கவிதைத் தொகுதி முழுக்க நிறைந்துகிடக்கிறது.

அதன் விளைவாகத்தான் மரணம் கூட ரொமான்டிச மனநிலையில் அலுப்போடு விவரிக்கப்படுகிறது. இடையிடையே புரட்சிகரக் குரல் வேண்டி எழுதப்பட்ட வரிகளும் வலிந்து எழுதப்பட்டவையாகவே இருக்கின்றனவே அன்றி, உள்ளார்ந்த புரிதலுடன் இல்லை. அப்பா அழைக்கும் போதும், அம்மா அழைக்கும் போதும் கவிதையில் இருக்கும் பெண் தூங்கிக் கொண்டே இருக்கிறாள். கண் விழிக்கும்போதோ காதலனை வேண்டியும், அவனது செயற்கையான பிரிவை வேண்டியும் அலுத்த குரலில் பேசுகிறாள். தனது தனிமையை மலையின் தனிமையாகவும் தனது சோகத்தைப் பூக்கள் புள்ளினங்கள் வாயிலாகச் சொல்வதன் மூலம் அவற்றைத் தன் வரிகளின் துணைக் கருவிகளாக்குவதைத் தவிர இதில் மேலதிகமாக எதையும் காண முடியவில்லை.

கவிதைகளில் ஓரிடத்தில் கூடக் காக்கையைக் கூடக் காணவில்லை. காரணம் நகரத்தில் அவருக்குக் காக்கை பழகிப்போன பறவையாக இருக்கிறது. மனிதர்கள் இருக்காத ஒரு காட்டைத் தோற்றுவித்துத் தனது சொந்த அலுப்பின் ரசனையால் வரைந்த ஒரு செயற்கைக் காட்டில் காக்கைகள் வாழ்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

கவிதைகளில் வரும் பெண் தனக்குப் பிரியமான மிருகங்களைச் சாப்பிடுகிறார். பழங்களை, காய்களை உண்ணுகிறார். பின் கவலையும் கொள்கிறார். அதுவோ முன்னர்க் குறிப்பிட்ட ஏற்படுத்தப்பட்ட சோகமாக இருக்கிறது. கவலையே இல்லையே என்கிற கவலைதான் கவிதை முழுக்கச் சோகமாகப் பாவுகிறது.

காடு குறித்த அவரது புலம்பல்கள் ஒருபுறம் இருக்க, அகத்தனிமையும் செயற்கையாக ரொமான்டிச மனநிலையிலேயே முன்வைக்கப்படுகிறது. நானறிந்து முழுக்க முழுக்க இதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெற்று வார்த்தைகளால் படைக்கப்பட்ட நவீன கால நூலென்று இதை முன்வைக்கலாம். ரொமான்டிசம் கூடாதா என்றொலிக்கும் கேள்விகளை வரவேற்கிறேன். அதே சமயம் ரொமான்டிசத்தையும் ரொமான்டிசம் செய்யும் கவிதைகள் சம்பவங்கள் இதில் இருக்கிறது என்பதையும் கவனிக்கச் சொல்வேன்.

90 சதமான கவிதைகளில் வேண்டுமென்றே பறவைகளும் விலங்குகளும் வலிய வரவைக்கப்பட்டு அலைய விடப்படுகிறன்றன. கவிஞர் அவைகளை இப்படிக் கட்டாயப்படுத்தி அழைத்துவருவது தனது சூழலியலின் போலி மனநிலையைத்தான் சித்தரிக்கிறது. இயற்கை குறித்த சூழலியலாளரின் பார்வை இயற்கையைக் கவனிக்கவும், பாதுகாக்கவுமாக இருக்க, சந்திரா தங்கராஜின் கவிதைகளோ விடுமுறைக்கு மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பானங்களை அருந்திவிட்டு பிளாஸ்டிக் குவளைகளைக் காட்டில் வீசும் சுற்றுலாப்பயணிகளின் மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது. மிளகும் இரப்பர் மிளகாய்த்தான் இருக்கிறது.

கவிதையில் வரும் அப்பத்தாள் ‘சாவதற்கு நிலம் வேண்டுமென’ மகனிடம் சொல்கிறார். மகனோ வேறொரு கவிதையில் ‘நிலமற்றவனாய்ச் சாகக்கூடாது மகனே’ என்கிறார். நிலம் முழுக்க முழுக்க ஆணுக்குச் சொந்தமான ஒன்றாகவே இங்குச் சித்தரிக்கப்படுவதை நாம் காணலாம். இவ்விடத்தைச் சந்திரா தங்கராஜின் கவிதைகள் தொடவே இல்லை. மேலதிகமாக இன்னொரு கவிதையில்

‘என் தந்தை உயிருடன் இல்லை
இப்போது நான் நிலமற்ற மகள்’

என்ற வரி காணக்கிடைக்கிறது. இதையே கவிஞர் தன் நிலத்தின் மீதான பற்றாக விவரிக்கிறார். முடிவாக அந்த விவரமோ நிலத்தை ஆணின் சொத்தாய் கருதும் மனநிலையில் வந்து முடிகிறது. இந்த வாழ்வதற்கும் சாவதற்குமான நிலத்தில் பீன்ஸ்கள் பயிரிடுவது குறித்து எழுதும் கவிஞர், அதன் காரணமென்ன என்பதை ஓரிரு வரிகளில் உணர்த்தியிருக்கலாம். ஆனால் வெறுமனே ஒரு சாட்சியாகவும் வெற்றுப் பார்வையாளராகவும் கடந்து செல்கிறார்.

‘நன்னிலக் கடவுள்’ என்று தலைப்பிடப்பட்ட கவிதையிலும் தொடர்பற்ற சித்திரங்களே காணக்கிடைக்கிறது. ‘இரண்டு போகம் விளையமாட்டாயா’ என்று தாய் தனது நிலத்தில் வேண்டிக்கொண்டிருக்க ‘விசயங்கள் அப்படித்தான் இருக்கிறதென’ சம்பந்தமற்று ரெட் ஒயினையும் அந்நியனோடு பப்பில் ஆட்டம் போடுவதையும் அதே கவிதை குறிப்பிடுகிறது. அதற்கான தேவையோ காரணமும் கவிதையில் இல்லை. இப்படி ஆட்டம் போடுவதற்கான நிர்பந்தத்தைக் கவிதை கூறவேயில்லை. வலியை விரும்பி ஏற்கும் மனநிலைதான் காணக்கிடைக்கிறது.

வெறும் ரசனை சார்ந்த அணுகுமுறையே வார்த்தைகளெங்கும் காணப்படுகிறது. இடையே ஆண்களின் ஒழுக்கக் குரலில் ஒலிக்கும் ஆணாதிக்கக் கவிதையொன்றும் காணப்படுகிறது.

தொகுதியில் ‘இருபெண்கள்’ என்ற தலைப்பிடப்பட்ட கவிதை ஒரு பெண்ணுக்குள்ளேயே நிகழும் சக்களத்தி சண்டையாகக் காட்டப்படுகிறது. பெண்கள் ஆண்களுக்காக அடித்துக்கொள்ளும் வரைதான் அவர்களது சுதந்திரம் சுதந்திரமாக இருக்கிறது என்பதையே அக்கவிதை சுட்டி நிற்கிறது.

இரு பெண்கள்

நாணயத்தின் இரு பக்கமென அவள்
தலை குடும்பத் தலைவி
பூ நாடோடிப் பெண்
இருவரும் குழாயடிச் சண்டைக்காரிகளாய் மோதிக்கொள்கிறார்கள்
நாடோடிப் பெண்ணின் பாஸ்வேர்டைத் திருடி
அவளின் ரகசிய காதலனை எச்சரித்துத் துரத்துகிறாள் குடும்பத்
தலைவி
இவளின் மளிகைச் சாமான்களை
குப்பையில் கொட்டுகிறாள் நாடோடிப் பெண்
தலைவன் வருகைக்காய்
சீரியல்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் தலைவி
(அது திராபையான சக்களத்தி சண்டைக்கதை)
தலைவன் அணைக்கும்போது சிணுங்குகிறாள்
(அது வழமையான புளிச்ச ஏப்பம் போல ஒன்று)
சமைக்கிறாள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறாள்
இஸ்திரி போடுகிறாள்
பெருக்குகிறாள்
பாத்திரம் தேய்க்கிறாள்
கடைசியில் வியர்வை பொங்க சோஃபாவில் சாய்ந்து
oh my god இது எவ்வளவு பழைய கதையென்று
தன்னையே கட்டிக்கொண்டு அழுகிறாள்

நாடோடி தோள்பையோடு மலையேறுகிறாள்
அந்நியனோடு உணவருந்துவாள்
திரையரங்கில் பாப்க்கார்ன் சிதறச் சிதறச் சிரிக்கிறாள்
(துணையேதும் இல்லாமல்தான்)
ஆண்நண்பனுடன் உறவு கொள்கிறாள்
(பாதுகாப்பு நடவடிக்கையோடுதான்)
குடும்பத் தலைவி லிப்ட் கதவைத் திறக்கும்போதுதான் சரியாக
நாடோடிப் பெண் ஒருவனுக்கு அழுத்தமாக முத்தமிட வேண்டுமா?
அந்நியனின் தொடுதலறியாத தலைவி
தன் உதடுகளைத் தடவிப்பார்க்கிறாள்

தலைவன் ஒருநாள் தன்மனைவியென்று
இருட்டில்
நாடோடியின் பின்பக்கத்தைத் தடவ
எதுவும் நடவாதது போல் கடந்துவிட்டாள்
இவளின் பாய்பிரண்ட் வண்டியில்
தவறிப்போய் ஒருநாள் தலைவி ஏறிவிட்டாள்
அப்புறம் எல்லாம் தலைகீழ்
இருவரும் ஒன்றுபோல் ஆகிவிட்டார்கள்
நாணயம் எங்கோயோ உருண்டோடித் தொலைந்தது.”

ஆகப் பெண்கள் ஆணுக்காக அடித்துக்கொள்வதில்தான் சுயவாழ்வில் இருநாணயங்களாக இருக்கிறார்கள் என்பதைத்தான் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். அப்படிப் பெண்கள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு ஆணிடம் இருக்கும் தகைமை என்ன? வெறுமனே பொருளாதாராப் பாதுகாப்பா? அன்பா? அரவணைப்பா? அக்கவிதையில் ஆண் என்ன செய்துள்ளான் என்பதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. மேலதிகமாகப் புணர்தலைப் பாதுகாப்பாகச் செய்வதில் ஒரு நக்கல் தொனியும் உள்ளது. சிரிப்பதற்குக் கூடத் துணை தேவைப்படும் நிலையில்தான் நாடோடிப்பெண்ணின் மனம் கட்டமைக்கப்படுகிறது. செயற்கையான நாடோடி. இது சுத்தமான ஆணாதிக்கக் கவிதை.

இது மட்டுமல்ல பல கவிதைகளில் வெளிப்படும் பெண், ஆணின் முன்னால் சிறுத்துப்போன உயிரியாகவே கட்டமைக்கப்படுகிறாள். ஆணின் கைகளுக்குள் பாதுகாப்பாக உறங்குவதைச் சுதந்திர உணர்வாகக் கருதும் ஆணின் பெண்ணே ஏங்கவும் அழவுமாக எங்கும் காணப்படுகிறாள்.

இதன் இணையாக ‘வாழ்வென்னும் தேநீர்’ கவிதையில் வரும் ஆணோ, தன்னைத் தனிமனிதனாகக் கட்டமைத்துக்கொண்டு வாழ்நாள் முழுக்கத் தனித்து வாழ்வதாகக் கற்பனை வலியை அனுபவிக்கிறான். ஆனால் அங்கு அவனுக்கு இருப்பது வெறுமனே புணர்ச்சி சார்ந்த தனிமைதான். புணர்ச்சி இருந்தால் தனிமை மறைந்துவிடும் என்பதாக அக்கவிதை தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

எழுதிய அனைத்தையும் தொகுதியில் இட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகச் சம்பந்தமில்லாத தொடர்ச்சியோடு வேறு சில கவிதைகளும்(?) இருக்கிறது. உதாரணத்திற்கு,

காமத்தின் தொலைவு 180 ml

எறும்பு தூக்கிச் செல்லும் என் உணவே
என்னிலிருந்து நீயிருக்கும் தொலைவு
முடிவுறா நெடிய ரயில்பாதை
சாவு முத்தத்தைச் சூடிய என் உதடுகள்
முற்பனி ஈரமாய்ச் சலசலத்துக் கிடக்கிறது
நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் யாமத்திலும்
அழுக்கில்லா வீட்டைச் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறேன்
அழுக்குத்துணி நிரம்பிய அறையில் நீ குடித்துக்கொண்டிருப்பாய்
இப்போது குவார்ட்டர் என்ன விலை?
தினம் என்னை மறக்க உன்னிடம் காசிருக்குதானே
மறக்க முடியவில்லையென்றால்
பேரம் பேசாமல் ஏதாவது ஒரு பெண்ணிடம் ஆசைதீர போகம்கொள்
நினைவுகளை வெட்டி வெட்டி துண்டாக்கி
நான் இங்கே ஒரு கட்டங்காப்பியை சுவைத்துக்கொள்கிறேன்.

மேற்படி கவிதையில் ‘முற்பனி ஈரமாய்ச் சலசலத்துக் கிடக்கிறது’ என்பதோடு அவ்வரிகள் முடிவடைந்திருக்கிறது. ஆனால் கவிஞர் சம்பந்தமற்ற இன்னொரு படிமத்தை இணைத்திருக்கிறார். இது போக, அக்கவிதையில் ஆண் தன் காதலியை மறக்க இன்னொரு பெண்ணைப் புணர அனுமதியும், பெண் மட்டும் சுத்தத்தோடு கட்டங்காப்பியை குடித்துக் கற்பு நிலை பேணுவதாகவும் முடிவடைகிறது. இது மிக மிக மோசமான சித்திரத்தையே வழங்குகிறது. காதலி அழுக்கில்லா வீட்டைச் சுத்தம் செய்யக் காதலன் அழுக்குத்துணி நிரம்பிய அறையில் இருக்கிறான். இது அழுக்கு- புணர்ச்சி, கற்பு-தூய்மை என்ற இரட்டை நிலைப்பாட்டை ஆண்மையப் பார்வையிலேயே முன்வைக்கிறது. இக்கவிதையில் பெண் தனக்கு வழங்கப்பட்ட ஆண்மையை நிலைநிறுத்துகிறாள் அவ்வளவே.

வரிகள் முழுக்க முழுக்கக் கற்பனைகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலும் முன்வைக்கப்படுகிறது. உள்ளடக்கமற்ற உருவத்தால் விகாரமாகிப் போன சித்திரங்களே காணக்கிடைக்கிறது. முன்னரே பார்த்தது போல் கவிதையில் வரும் மிளகும் மிருகங்களும் பறவைகளும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் முக்கியமாக உணர்வுகளும் அத்தகைய தன்மையுடனேயே காட்சியளிக்கிறது.

இக்கவிதைகள் எடிட் செய்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அப்படி இருந்திருந்தால் காடு குறித்த அனுபவங்கள் ஏதுமற்ற கரங்கள் அதைச் செய்திருக்க வேண்டும் என்பது என் முடிபு. வார்த்தைகளில் மட்டுமே கவனம் கொள்ளப்பட்ட தொகுதியாக ‘மிளகு’ இருக்கிறது.

‘தானியங்களுக்குக் காவலிருக்கும் பட்சிகள்’ கவிதையில் மனிதர்கள் செய்வதை விலங்குகளும் விலங்குகள் பறவைகள் செய்வதை மனிதர்களும் செய்து பார்க்கிறார்கள். கிளிகள் கிளிகளாக இல்லை. மனிதர்கள் மனிதர்களாக இல்லை. பாவம்! இட்டிலியைத் தின்ற ஆடு விக்கலெடுத்து அலைகிறது. அங்கும் அது ஆடாக இருந்திருந்தால் கவிதை இன்னும் வெகு தூரத்திற்குப் பாய்ந்திருக்கும். வெண்கொக்குகளின் கைகளில் மனிதர்களின் துப்பாக்கியை கவிஞர் தந்ததன் மூலம் அங்குக் கொக்கும் மனிதனாகத்தான் இருக்கிறது. இடம் மட்டுமே அக்கவிதையில் மாறியிருக்கிறது. வாழ்வு எப்போதும் போல ஒன்றாகத்தான் இருக்கிறது. வேறொன்றுமில்லை.

வாசிப்பில் ஒரு கவிதை என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தி, கவிஞரின் போதாமையால் அதுவும் விவரிக்கப்பட்ட வார்த்தைகளாய் மாறிய ஒரு கவிதை இருக்கிறது.

தேன்குளவி

தேன் குடித்த போதையில்
ஜன்னலில் மோதி மோதி
நடனமாடிக்கொண்டிருந்தது மலைத்தேனீ
ஜன்னலைத் திறந்து நாக்கை நீட்டினேன்
சுள்ளென்று விசமும் தேனும் உள்ளிரங்கியது
நான் தேனைச் சுரக்கும் சிசுக்களைப் பெற்றெடுத்தேன்
பின் பூக்கள் என் சிசுக்களைத் தேடிப் பறந்து வந்தன.

இக்கவிதை அற்புதம் நிகழ்த்தவேண்டிய ஒன்று. கவிஞரின் ரொமான்டிச மனநிலையால் வெறுமனே வரிகளாகிப் போகிறது. தேனீயா? குளவியா? என்பதில் கவிஞருக்குக் குழப்பம் இருக்கிறது. ஆனால் கவிதையில் ‘மலைத்தேனீ’ என்கிறார். மேலும் தேனைத் தேடி வரும் பூக்கள் விசத்தை என்ன செய்யப்போகிறதென்ற படிமமும் விசாரணையும் அங்கில்லை. நிகழவேண்டிய அற்புதம் மேலதிக விளக்கத்தால் அங்கேயே முடிந்துபோனது.

‘நான்’ என்ற தலைப்பிடப்பட்ட கவிதையின் இறுதியில் பெயரற்ற பழங்குடி எனத் தன்பெயரை அறிவிக்கும் பெண்ணின் அவஸ்தையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. பழங்குடி என்பதே மூத்த பெயர்தான். மேலும் அக்கவிதையிலும் பழங்குடிகள் வெறுமனே இயற்கையை ரசிப்பவர்கள் என்கிற மேட்டுக்குடி மனநிலைதான் கவிதை முழுக்க வர்ணனையாகக் காணப்படுகிறது.

இறுதியாக மிளகால் அடிமைப்பட்ட இந்தியா குறித்தான நினைவுகள் எங்கும் காணவில்லை. ஆனால் தங்கள் சொத்தை காவல்துறை கொள்ளையடிப்பது குறித்த பெண்ணின் புலம்பகள் கவிதைக்குள்ளிருக்கின்றன. அவ்வளவே. கருத்த உடலான மிளகை கருப்புத் தங்கமென்றழைத்து கடல்வழியே நாட்டைச் சுரண்டிக் கொழுத்த உடல்களின் கனவுகளாக மட்டுமே இக்கவிதைகள் காணப்படுகிறது.

மிளகில் ஹைபிரிட் பப்பாளி விதைகள்தான் மிதந்து கொண்டிருக்கிறது. பப்பாளிவிதையும் இயற்கைதான்! என் செய்வது? மிளகு கலப்படக்கவிதைகள் மட்டுமல்ல போலிக்கவிதைகளும் கூட.

சந்திராவின் கவிதைகளில் ஆடம்பரமான வார்த்தைகளுக்காகத் தோரணமாகத் தொங்கவிடப்பட்ட மிளகுக்கு வேற்றுருவமும் இருக்கிறது. நிர்வாணமாக்கப்பட்ட அடிமைகளின் உடலில் தூவப்பட்டு, காலம் காலமாய் எரிந்து, அரசர்களின் அந்தப்புரங்களில் மிதந்தலைந்த அசல் மிளகினை கடைவாயில் கடித்து நுனிநாக்கில் ஏந்தி அதன் எரிச்சலை உணர வேண்டுமா? மிளகால் அடிமைத்தனமும் அதே மிளகால் வளமும் அடைந்த வரலாற்றின் காரத்தைச் சச்சிதானந்தனின் ‘குறுமிளகு’ காவியத்தை வாசிப்பதன் மூலம் உணரலாம்.

குறுமிளகு

  1. குறுமிளகிடம் எச்சரிக்கையாய் இருங்கள்

இவள் வெறும் பச்சை மிளகல்ல
கடலிலும் கரையிலும் இவள் படை நடத்துவாள்
மக்கள் இருப்பிடங்களைக் கொள்ளையடிப்பாள்
அரண்மணைகளுக்குத் தீ வைப்பாள்
குடிமக்களில் ஆண்களை அனாதையாக்குவாள்
பெண்களை விதவைகளாக்குவாள்
அரசர்களை அடிமைகொள்வாள்

ஹெலன் – பயனில்லை
கிளியோபாட்ரா – சாரமில்லை
இவள் உறுமிமேளங்கள் கண்ணில் சுமந்த
கடும் பச்சை உண்ணியார்ச்சை *
குறிஞ்சி நிலத்தில் முளைவிட்டு
கடல் முழங்கும் முசிறியின் களஞ்சியங்களில்
விளைந்து பெருகியவள்

பூக்களின் மகரந்தமாய் அரும்பி
பாட்டுகளின் செருக்குண்டு விம்மி விளைந்தவள்
கொடி ஊஞ்சலாடி இலையாடை நீக்கி
‘என்னைச் சுவை’ என்று கண் சிமிட்டுபவள்
கண்ணகியின் சிலம்பிலிருந்து தெறித்துச் சிதறிய
பகை பழுத்த செம்பவளம்
முறங்களிலும் பாய்களிலும்
சூரியனோடு தூங்கி எழுந்தவள்
தன் கறுப்புத் தோலுக்குள்
ஒரு வெப்ப மண்டலத்தை அடக்கிவைத்திருப்பவள்
சுருங்கி வற்றிய போதும் காரத்தால்
வெயிலின் நாக்கை வேக வைத்தவள்

  1. குறுமிளகிடம் எச்சரிக்கையாய் இருங்கள்

இவள் உண்ணுநீலியின்**
வெப்பம் தணியாத இல்லத்திலிருந்து
மணக்கும் ஏலம் மெய்க்காப்பாளனாக
ஏழு கடல் தாண்டி
வெள்ளைக்காரனைக் கொள்ளையிட்டவள்

பீனீசியர்களின் கப்பல் பாய்களுக்குப்
போதை தந்த வேகம்,
பிளினிக்கு வழிகாட்டிய
கறுப்பு நட்சத்திரம்
மார்கோ போலோவின் கண்களுக்குப்
பச்சை மின்னல் கொடி

அரபுக் கதைகளில் வன நர்த்தகி
பசிய மலைகளிலிருந்து பாக்தாதுக்கு
மந்திரக் கம்பளத்தில் பறந்து போனவள்

கொல்லத்திலிருந்து ரோமானிய
சிம்மாசனங்களுக்குப் போகும் தூரத்தை
முதலை முதுகேறி அளந்து பார்த்தவள்
கோழிக்கோட்டுக் கன்னியர் வடிவங்களுக்குச்
சீனத்துப் பட்டின் மென்மை போர்த்தவள்

யவனனின் தங்கத்தையும்
சீனனின் வெள்ளியையும்
தரையில் உட்காரும்படி
ஆணையிட்ட மணிமகுடம்

தவமுனிவர் குகைவாசலில்
ஒலித்த நம்பூதிரி நங்கையின் சலங்கை
தென் மலைக்குப் பச்சைகுத்திய
குறத்தியர் தலைவி
துறைமுக நிலவறைகளில்
சிறைபட்ட ராணி

வைசிக தந்திரத்தில் வரும்***
மகா கெட்டிக்காரி
பேர் கேட்ட வீரரையெல்லாம்
இடுப்பு வேட்டி அவிழ்க்க வைத்தவள்
உடுத்த ஆடை பணயமாகக் கேட்டவள்
பறங்கியின் மரகதம்
பிரெஞ்சுக்காரனின் இந்திர நீலம்
அரபியனின் நீலமணி
ஆங்கிலேயனுக்கு ஏழு ரத்தினங்களையும்
அறுக்கும் கறுப்பு வைரம்

ஐந்து கணவர்களையும் இவள்
ஆட்டி வைக்கும் பாஞ்சாலி

பூந்தானத்தையும் மாறுபடச் செய்த
கடத்த நாட்டு லலிதா

ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு
இன்ப நறுமணக்காரி
உணவு மேசைகளில் தங்கத்துகள்
கண்ணாடிச் செப்புகளின் சிறுதுளை வழியே
புல்லாங்குழல் கீதம் போல் கீழிறங்கி
கொம்பும் குளம்புமாயிருந்த துள்ளல்களுக்கு
உணவுத் தட்டுகளில் சுவையூட்டி
உயிர்ப்பிக்கின்றவள்

‘ப்ளூ’ சங்கீதத்தின் முட்டை
கனிவில்லாத காரமான’ஜாஸ்’

  1. குறுமிளகிடம் எச்சரிக்கையாய் இருங்கள்

நமது சுதந்திரத்தைக் கவர்ந்தவள்
நமக்கு மீண்டும் சுதந்திரம் தந்தவள்
உலகம் முழுவதையும் எரித்தே அடக்கியவள்
திரும்பி வந்து மறுபடியும்
முற்றத்து மாமரத்தில் தொற்றிக்கொள்பவள்

கடனை அடைக்கும் பவுன்களுக்காக
இன்னும் தூங்காமல் இருப்பவள்
வலிமை மிக்க ஒரு புதுக்காதலனுக்கு
புது எஜமானனுக்கு
மறுபடியும் விருந்து தயாரிப்பவள்

காத்திருப்பவள்
கறுத்திருப்பவள்.
(கேரள வரலாறு சார்ந்தது)
*உண்ணியார்ச்சை:வடக்கன்பாட்டின் வீரநாயகி
**உண்ணுநீலி: ஒரு மலையாள தூது பிரபந்தத் தலைவி. இங்குக் கேரளத்தின் உருவம்.
*** வைசிகத் தந்திரம் விறலி விடு தூது போன்ற மலையாள நூல். தாய் வேசி மகளுக்குத் தந்திரங்கள் கூறுவது.

மேற்கண்ட சச்சிதானந்தனின் கவிதைகள் ‘ஆலிலையும் நெற்கதிரும்’ -தேர்ந்தெடுத்த கவிதைகள் -என்ற தொகுப்பில் உள்ளது. பக்கம்- 93. மலையாளத்திலிருந்து தமிழில்:சிற்பி. சாகித்ய அகாதெமி வெளியீடு, விலை: 250

மிளகு
சந்திரா தங்கராஜ்
எதிர் வெளியீடு
பக்கங்கள்:144.
விலை:170

குறிச்சொற்கள்

மேல் செல்