கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கவிதையை இனம் காணுதல்: இந்த நூற்றாண்டிற்கான கேள்விகள்

ஞா. தியாகராஜன்

பகிரு

கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை

அது எளிய விஷயங்களை நேசிக்கிறது.

சற்றே தயக்கத்துடன் உங்கள் தோட்டத்தில் முளைத்திருக்கும்

நீங்கள் விதைத்திராத புதிய தாவரம்;

சுவர் மீது கால் வைத்து நீங்கள் பந்து விளையாடுவதையே

தலைசாய்த்துப் பார்க்கும் பக்கத்து வீட்டு நாய்;

ரயிலில் மடியில் உறங்கும் சிறுமியைத்

தட்டிக்கொடுத்துக்கொண்டே

மறு கையில் புத்தகம் படிக்கும் அன்னை;

பிளாட்பாரத்தில் வடை விற்பவன்

பின்னால் நடந்து போகும் காகம்;

கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை. ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய அற்புதத்தைக் கைசுண்டிக் காண்பிக்கிறது. கவிதையைப் பற்றிப் பொதுவாக ஏதேனும் சொல்லத் தோன்றும்போது நினைவுகளில் முதலில் பொறி தட்டுவது போகன் சங்கரின் இந்தக் கவிதைதான். கவிதை எளிய விஷயங்களை நேசிக்கக் கூடியது மற்றும் அடையாளம் காட்டக்கூடியது. கவிதையைப் பற்றிய ஏனைய முடிவுகள், கோட்பாடுகள், அபிப்ராயங்களைப் போலவே இதுவும் கூடக் கவிதையைப் பற்றிய முடிபான பார்வை கிடையாதுதான். ஏனெனில் எத்தனையோ துயரங்களும், கொந்தளிப்புகளும் முயங்கி வெளிப்படும் தருணங்களாகவும் கவிதையே இருக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அர்த்தமாகக் கூடிய கலவையான வஸ்துதான் கவிதை. அதிலேதேனும் ஒன்றை மட்டும் கவிதையின் தொழிற்பாடாக எடுத்துக்கொள்வது கவிதைக்கு எதிரானதாகவும் அமைந்துவிடும். ஆனால் போகன் சங்கரின் இந்தக் கவிதையில் பெறப்படும் வெளிச்சத்திலேயே நான் கவிதைகளை அடையாளம் காண விரும்புகிறேன். உண்மையில் தமிழ்க்கவிதைப் போக்கினை பருந்து பார்வையாகத் திரும்பிப் பார்க்கும்போது அது எத்தனையோ போக்குகளால் கிளைவிட்டுப் பிரிந்ததாகக் காணக் கிடைக்கிறது.

தமிழில் கறாராகக் கோடு கிழித்துக் கவிதையின் போக்குகளை வகைப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். கவிதை முயற்சிகள் தமிழில் பொதுவாக இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டதைக் காட்டிலும் தனிமனித ரசனைகளாலும், விருப்பங்களாலும்தான் விளைந்துள்ளன. (வானம்பாடி, எழுத்து என்ற பகுப்புகளை இங்கே கணக்கில் கொள்ள வேண்டாம்) என்றாலும் அங்கங்கே காணக் கிடைக்கும் சில தகவல்களின் வழியாக இதனைப் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்.

எண்பதுகள் வரையிலான கவிதைப்போக்கு பெரும்பாலும் ஆன்மீக தரிசனங்கள் சார்ந்ததாகவும் கால, இடைவெளி குறித்த பிரக்ஞைகளை இடையீடு செய்பவையாகவும் ஒருவித தத்துவார்த்தமான எம்புதலுக்கான முயற்சிகளாகவுமே தமிழில் தென்பட்டுள்ளன. இதனைப் பிரவீன் பஃறுளி ‘அகவயத் தீவிரம், இறுக்கமான மொழி, கவிஞனின் தன்னிலை, சுயத்தின் அழுத்தம், மனமே ஒரு நிலப்பரப்பாக இருப்பது, துயருணர்வு மேலோங்கி இருப்பது’ எனச் சில பொதுவியல்புகளைக் கொண்டு வரையறைப்படுத்துகிறார். வாழ்விற்கும் சாவிற்கும் விடைதேடும் முயற்சிகளாகவும், ஒருவித ஞானத் தேடலாகவுமிருந்த கவிதைகளில் ஞானக்கூத்தன் ஒரு வெள்ளி முளைப்பாகத் தோன்றுகிறார். இருத்தலியல் சார்ந்த நெருக்கடிகளுடன் அதனைப் பகடியாக உருமாற்றம் செய்து நவீன கவிதைகளின் போக்கில் ஒரு திசைமாற்றத்தை தொடங்கி வைத்தவர் ஞானக்கூத்தன். பொதுவாக ஞானக்கூத்தனுக்குப் பின்னரே லௌகீக வாழ்வின் அனுபவங்கள் கவிதைக்குரியனவாக அடையாளம் காணப்பட்டன எனலாம். இப்படியொரு போக்கினை எண்பதுகள் வரை பகுத்துக்கொண்டால் அதன் பின்னர்க் குறியியல், அமைப்பியல் போன்ற கோட்பாட்டு வருகைகளின் பின்பாகக் கவிதைகளை மொழியின் விளையாட்டாகக் கவிஞனிடமிருந்து அந்நியப்படுத்திக் காணும் விமர்சனப் போக்கு உருவாகிறது. இதிலிருந்து கவிதைகள் பெரும் கனவுகளைச் சுமக்கக் கூடியதாக மாறுகிறதெனலாம்.

ரமேஷ் – பிரேம் இருவரும் ‘கிரணம்’ என்னும் குறுங்காவியத்தின் வழியாகக் கவிதை தனிமனித நிகழ்வல்லவென அழுத்தமாகப் பதிவு செய்தனர். வரலாற்றாலும், பண்பாட்டாலும் உணர்வூட்டி வளர்க்கப்படும் மனிதன் அதன் பிரஜையாக இருக்க முடியுமேயன்றி அதிலிருந்து விலகிய தனித்த தன்னிலையாக இருக்க முடியாதென வலியுறுத்தினர். கவிஞன் சமூகத்தின் பொது ஒழுங்குகளுக்குள் பொருந்திப் போக முடியாமல் ஏகாந்தவாதியாகத் தனித்திருப்பவன் என்னும் முந்தைய தலைமுறையின் விளக்கங்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இது அமைந்தது. கவிதையில் வானம்பாடி × எழுத்து மரபிற்குப் பின்னர் இருவேறு பிரிவினருக்கிடையில் நிகழ்ந்த மிகப்பெரிய விவாதமாக ரமேஷ் – பிரேம் இரட்டையரின் வருகையினைக் கூறலாம். இதன் வழியாக உண்டான இலக்கியம் சார்ந்த விழிப்புடன் தொடங்கப்பட்ட ‘கல்குதிரை’ இதழை மையமிட்டே தற்காலக் கவிதைப் போக்குகள் வளர்ந்து வந்துள்ளன.

தமிழில் கல்குதிரையின் வருகைக்குப் பின்னர் நவீன கவிதைகள் மேலும் ஒரு வாசகனுக்கு எளிதில் புலப்படாத இருண்மையுடன் வெளிப்படத் தொடங்கின. தமிழில் ஏதேனும் ஒரு இலக்கிய இயக்கத்தையொட்டி நவீன இலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதனை ‘கல்குதிரை’யிடமிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. கவிதை மட்டுமல்லாது சிறுகதை நாவலெனப் புனைவிலக்கியப் போக்கில் தொண்ணூறுகளுக்குப் பிந்தைய கால் நூற்றாண்டு போக்கிற்கு வடிவம் கொடுத்ததில் ‘கல்குதிரை’ இதழுக்கு அளப்பரிய பங்குண்டு. எனினும் அதனோடிணைந்த சில பாதகமான அம்சங்களும் இல்லாமலில்லை. குறிப்பாக ‘கோணங்கி’யின் இருண்மையான எழுத்தின் மீது ஏற்றப்பட்ட பிரமை பல தவறான புரிதல்களுக்கும் இட்டுச்சென்றுள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் மொழியை மட்டுமே பிரதானமாகக் கருதும் போக்கு. இது மொழியின் கோட்பாடு சார்ந்த புரிதலாக மலராமல் வெறுமனே ‘புரியாத வகையில்’ எழுதுதல் என்பதாக மலினப்படுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது. தமிழில் எழுத வரும் பலரிடமும் இந்தத் தாக்கம் பரவலாக இருப்பதை உணர முடிகிறது. மொழி சார்ந்து கோணங்கியின் எழுத்தை மிமிக் செய்ய முயல்வது ஒருபுறமென்றால் மறுபுறம் தன்னையொரு குறிப்பிட்ட நிலத்திற்கான படைப்பாளியாக முன்னிறுத்திக் கொள்வதும் தற்போதைய பரவலான போக்காக மாறுகிறது. குறிப்பாக ச. துரை, முத்துராசா குமார் போன்றோரை சுட்டிக்காட்டலாம். இம்மாதிரியான போக்கும் ‘கோணங்கி’யிடமிருந்து உருவாவதாகவே அமைகிறது. கீரனூர் ஜாகிர்ராஜா கோணங்கியை நேர்காணல் செய்து வெளியாகியுள்ள சிறிய புத்தகத்தின் தலைப்பு ‘பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்’ என்பதாகும். கோணங்கி இலக்கியத் தளத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயன்ற அதே அம்சங்களை இன்றைய படைப்பாளர்கள் கபளீகரம் செய்து தனது அடையாளங்களாகச் சூடிக்கொள்ள முயல்கிறார்கள். சமீபத்தில் மௌனன் யாத்ரிகாவின் வேட்டுவம் நூறு என்னும் கவிதை தொகுப்பு வெளியானது அதன் முன்னுரையில் கூறியிருப்பதாவது:

“வேட்டுவம் நூறு எழுதப்பட்ட அந்த நூறு நாட்களும் தொல் பழங்குடி வேட்டைச் சமூகக்காலத்திற்கே நான் போய்விட்டதாகப் பலரும் சொன்னார்கள். “நீங்கள் எந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்? என்று என்னை அழைத்துக் கேட்டவர்களும் கூட உண்டு. உண்மையில் எனக்கும் கூட அந்த எண்ணம் நாளடைவில் உருவானது”

ஆனால் அது எந்த அளவிற்குக் கவிதையில் பொருந்தி போயின என்பதை வசுமித்ர எழுதிய விமர்சனக் கட்டுரையின் மூலம் அறியலாம். இப்படியாக எப்போதும் தன்னையொரு பழங்குடிப் பாங்கான மனிதனாக வெளிக்காட்டிக்கொள்வது தனது கவிதைகளும் கூட அவ்வாறானதென வலிந்து நிரூபிக்க முயல்வது போன்றவையெல்லாம் சமகாலத்தின் மிகப்பெரிய சரிவுகளாகும். சரியாகச் சொல்ல வேண்டுமெனில் எண்பதுகள் வரை கவிதை எவ்வாறு வாழ்க்கைக் குறித்த ‘ஆன்மீகத் தேட’லாக அமைந்ததோ அந்த இடத்தை இன்றைக்கு ‘தொன்ம மீட்டுருவாக்கம்’ பதிலீடு செய்ய முயல்வதாகப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் தொண்ணூறுகளுக்குப் பின் ஏற்பட்ட பின்நவீனத்துவப் புரிதலில் உலகமயமாக்கலின் சிதைவுகளுக்கெதிராக முன்னிறுத்தப்பட்ட கதையாடல் இந்தத் ‘தொன்ம மீட்டுருவாக்கம்’ ஆகும். ஆனால் அது அதன் சாரத்துடன் உள்வாங்கப்படாமல் வெறுமனே மேற்கோள்களாக மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதுதான் இப்படியான புறத்தோற்ற காட்சிகளை விளம்பரம் செய்வதற்கான முகாந்திரங்களாக அமைகிறது.

அடுத்ததாக மொழி சார்ந்து வரும்பொழுது தமிழின் நீண்ட கவிதை மரபின் முன்னால் ஒரு எழுத்தாளனுக்கு ஏற்படும் மயக்கங்கள் இன்னும் அதிகமானது. பிரமிளின் படிமம் சார்ந்த மொழி, ஞானக்கூத்தனின் உரைநடையும் பகடியும் கலந்து வெளிப்படும் மொழி, கண்டராதித்தனின் புராணீகங்கள் முயங்கும் மொழி, தேவதச்சனின் எளிமை தொனிப்பது போல் தோன்றும் இலகுவான மொழி, அதிகக் கவனத்தையும் உழைப்பையும் கோரும் யவனிகா ஸ்ரீராம், பாலைநிலவன் ஆகியோரின் மொழி, இவற்றிற்கெல்லாம் வெளியே நிற்கும் மனுஷ்யபுத்திரன், இசை ஆகியோரின் மொழியென வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த எத்தனயோ மொழிபுகள் கவிதைப் புலத்தில் சாத்தியமாகியுள்ளன. அவற்றுள் தனது பொருண்மைப் பாட்டிற்கு உகந்த மொழியைத் தேடிக் கண்டடைவதே சமகாலத்தின் மற்றொரு பிரச்சினைப் பாடாக மாறுகிறது. இத்தனை விரிவான வகைமைகள் ஏற்படுத்தும் குழப்பங்களுங்கு நடுவே ஏற்படும் ஊசலாட்டங்கள் தமிழில் வெளிப்படையாகக் காணக் கிடைக்கின்றன. உதாரணத்திற்குச் ச.துரையின் பின்வரும் கவிதையினைப் பார்க்கலாம்.

அதிகாரி

பிரகாசத்தை வெளிப்படுத்தாத எந்த வார்த்தையும்

இருளை நோக்கியதுதான்

அன்று அணுகுண்டை வீசவேண்டிய நாள்

முகாமின் நரைதாடி வீரன்

நற்காலையிலே அணுகுண்டை எழுப்பிக் குளிப்பாட்டினான்

வெண்ணைத் தடவிய ரொட்டிகளால் உபசரித்து

அதன் சர்க்கரை அளவை சோதித்தான்

மூச்சை நன்கு இழுத்துவிடச் சொல்லி சில

மாத்திரைகளைக் காலையிலே விழுங்க வைத்தான்

பிறகு வழக்கமான தேசப் பாடலும்

சில நன்னெறி இறைமைக் குறிப்புகளைப் போதித்த பின்னர்

விழத் தயார் எனக் கத்தினான்

பிற வீரர்கள் ஒன்று கூடினார்கள்

அணுகுண்டு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது

எல்லோரும் அதன் முன் கைகட்டி நின்றார்கள்.

மிகவும் முதிர்ந்த தத்துவவாதியின் குரலில் கவிதை தொடங்குகிறது. அன்று அணுகுண்டை வீச வேண்டிய நாள் என்பதில் இன்னமும் கவிதை தீவிரங்கொள்கிறது. அணுகுண்டு, பிரகாசம், இருள் என்ற பிரயோகங்கள் வாசகனை நிமிரச் செய்கின்றன. ஆனால் அணுகுண்டு குளிப்பாட்டி, சோறூட்டப்படுகிறது. கவிதை திடீரெனக் கதையின் சாதகங்களை எடுத்துக்கொண்டு நகரத் தொடங்குகிறது. அணுகுண்டு உருவாக்கப் போகும் விளைவுகளுக்கு மனதைத் தயார் செய்திருக்கும் வேளையில் கவிதை பொருத்தமற்ற வகையில் பகடி செய்யும் பாவனையுடன் நிறைவுற்று விடுகிறது. அணுகுண்டை வீசுவதற்காக எடுத்ததும் அதனை என்ன செய்வதென்று உண்மையில் கவிதை சொல்லிக்கே தெரியவில்லை. அதனைச் சற்று நேரம் ஒரு உயர்திணைப் பொருளாக மாற்றி ஆட்டம் காண்பிக்கிறார். பிறகு பகடி போன்ற அம்சத்துடன் நிறைவு செய்து விடுகிறார். ஆரம்பத்தில் தோன்றிய தத்துவவாதியின் குரலுக்கு எந்த அவசியமும் தேவையுமில்லாமல் போகிறது. அதிகாரத்தைக் கிண்டல் செய்வது கவிதை சொல்லியின் முடிவாக இல்லை. முதலில் வேறெதோ ஞாபகத்தில் தொடங்குகிறார். பிறகு சட்டெனத் தனது கைக்கு அகப்பட்ட ஏதோவொரு வகையில் அதனைக் கவிதையாக்க முயன்றிருக்கிறார் அவ்வளவுதான். மேலோட்டமான பார்வையில் நவீனக் கவிதையின் அம்சங்களைக் பூண்டிருப்பதாகத் தோன்றுவதற்கு முதலிரண்டு வரிகளும் பிறகொரு போர்க்காட்சியுடன் தொடர்புடைய அணுகுண்டின் இருப்புமே போதுமானதாகக் கவிதையில் நம்பப்படுகிறது. ஆனால் குழந்தைகள் மணலில் உருவங்களைப் பிடிப்பது போன்ற விளையாட்டுக்கு மேல் கவிதை உண்மையில் எந்தத் தீவிரமான விஷயங்களையும் கையாள முயலவில்லை. ச.துரையின் பல கவிதைகளில் இதுபோன்ற குழப்பங்களைக் காணலாம். ஆனால் அவை விமர்சிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்ச்சூழலில் வேக வேகமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. பொதுவாக மொழியின் லாவகங்களால் மேலோட்டமாக அவை தீவிரமான பாவனைகளை வரித்துக்கொள்ளும். ஆனால் எடுத்துக்கொள்ளும் பொருண்மைகளில் தங்களுக்கே போதுமான தெளிவில்லாமல் ஏதேதோ பரிதாபகரமான முயற்சிகளுக்குப் பின்னால் கேலிக்கைக்குரிய விதத்தில் அவை முற்றுப் பெற்றுவிடும். பொதுவாக இந்தப் பாவனைகள் தான் தமிழ்ச் சூழலில் கவிதைகள் அடையாளம் காணப்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. போகன் சங்கர் ‘கனலி’ இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில், சமகாலத் தமிழ்க்கவிதைகள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருப்பார், ‘வழக்கம்போல அது அதன் அசட்டுதனங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது’.

அடுத்ததாகக் கவிதைகள் நவீன கவிதைகளாக மலர்ந்த பின்பும் இரண்டாயிரங்கள் வரையிலும் அது சொற்களின் சிக்கனத்தில் மிகுந்த கவனம் கொள்வதாகவே இருந்துள்ளது. ஆனால் அதன்பின்னர் இலகுவான உரைநடைப் பாங்கில் அவை தன்னைத் தளர்த்திக்கொள்வதில் முக்கியமான திசைமாற்றம் நிகழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன். குறிப்பாக ஆன்மீக விசாரம், மறுமை குறித்த தேடல், மரணத்தின் மீதான விசாரணை போன்ற வேதாந்த பார்வையிலிருந்து விலகி லௌகீக வாழ்க்கையும் அதனை எதிர்கொள்வதற்கான சிக்கல்களும் கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகியோரின் வழியாகத் தமிழ்க் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கிய பின்னர்க் கவிதைகள் பருண்மையான உலகை எதிர்கொள்ளத் தொடங்குகின்றன. இது தொண்ணூறுகளில் முகிழ்த்த தலித்திய உரையாடல்கள், பெண்ணியக் கருத்தாக்க எழுச்சிகள் அதனோடு எழுத வந்த பெண்ணிய எழுத்தாளர்களால் மேலும் கூர் தீட்டப்பட்டுக் கவிதைகள் முழுக்கவும் உயிர்த்திருத்தலுக்கான தேவையில் கவனம் செலுத்த தொடங்கின. இந்தியக் கலாச்சாரம் கற்பித்திருந்த உடல்ரீதியான புனிதங்களைக் கலைந்து, பாலியல் மனித உடலின் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகப் பின்நவீனத்துவத்தின் வழியாகத் தலைகீழாக்கம் செய்யப்பட்டதும் வாழ்க்கையை முழுக்கவும் சுதந்திரமாகப் போகிப்பதற்கான உரிமை இருப்பதாகச் தமிழ்ச் சிந்தனைப் போக்குக் கண்டுகொண்டது. பொதுச் சமூகத்தின் வழியாகக் கட்டப்பட்டிருந்த தளைகள் யாவும் புதிய சிந்தனை முறைமைகளால் மறுகோடலும், மீளாய்வும் செய்யப்பட்ட பின்னர் ஆன்மீக விசாரங்கள் பின்தள்ளப்பட்டு வாழ்வினை இன்பம் சார்ந்த நுகர்வுகளால் துய்ப்பதற்கான கட்டற்ற சுதந்திரவெளி திறந்துவிடப்பட்டது. இப்போக்கினையும் துல்லியமாக அறுதியிட்டுப் பிரிக்க முடியாதெனினும் இரண்டாயிரங்களுக்குப் பின்னரான படைப்பாக்கங்களில் அதீத காமம், மது போன்ற லாகிரிகளைக் கொண்டாடும் மனநிலை, சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களைப் பிரதானமாக்குதல், கேளிக்கை அம்சங்கள் போன்றவை முக்கியத்துவம் பெறுவதை மேலோட்டமான பார்வையிலேயே அடையாளம் காண இயலும். இவ்வாறாக மறுமை சார்ந்த சிந்தனைகள் அதன் வழியாகப் பாவிக்கப்பட்ட பக்குவமடைந்த மனதின் முதிர்ச்சி போன்ற மேலான வாழ்வியலினை மறுதலித்துவிட்டு, உடல்ரீதியான புனிதங்களைச் சுமக்காமல் புலன்களின் வழியே துய்த்தறிவதற்கான வாய்ப்பாக வாழ்வினைக் கண்டடைந்ததன் விளைவாக ஏற்பட்ட முரண்களையும், மோதல்களையும், கொந்தளிப்புகளையும் எழுதுவதற்கு முந்தைய கவிதைகள் பாவித்திருந்த செறிவான மொழியென்பது போதாமையுடையதாக உணரப்பட்டுக் கவிதைகள் கதையின் அணுகூலங்களை எடுத்துக்கொள்ளும் தளர்வான உரைநடை தொனிக்கு மாறின. ஸ்ரீநேசன், பெருந்தேவி, இசை ஆகியோரை உதாரணமாகச் சுட்டலாம். ஸ்ரீநேசனின் ‘காலத்தின் முன் ஒரு செடி’ தொகுப்பிற்கும் தற்போதைய ‘மூன்று பாட்டிகள்’ தொகுப்பிற்கும் இடையில் இந்த வேறுபாட்டினை புரிந்துகொள்ள இயலும். இம்மாற்றத்தின் பரிணாமம் அடைந்த மொழியாகச் சபரிநாதனின் செவ்வியல் பண்பும், லேசான அங்கதமும் கூடிய கவிதைகளைக் கூறலாம். இத்தனை தூரம் பரிணாமம் அடைந்த மொழியின் போக்கினைப் புரிந்துகொள்ளாமல் தொண்ணூறுகளுக்கு முன் கற்றுத்தரப்பட்ட கற்பிதங்களையே வாய்ப்பாட்டுச் சூத்திரமாக எடுத்துக்கொண்டு கவிதைகளை யாக்கும் முயற்சிகளும் சமகாலத்தில் நிகழ்கின்றன. பிரதாப ருத்ரனின் முழுக் கவிதைப் போக்கும் கிட்டத்தட்ட இந்த வழியில் பயணிப்பதாகவே உள்ளது. உதாரணத்திற்கு ஒரேயொரு கவிதையினை இங்குப் பார்க்கலாம்.

ஆப்டிக்கல் மாயை

நான்காம் வேற்றுமையில்

பிருஷ்ட முகம்

சிறுத்தைப் போல் பிம்ப

ஆப்டிக்கல் மாயை

முதல்வாத அர்த்தத்தில்

பூ விரிக்கும் தென்னம் பாலை

கிழமேல் பொதுவழியில்

தென்வடலாய் திறக்கும் தேகமனம்

பாறைகள் நிற்கும் இடைபெருவெளி

இலைகள் சிரிக்கும் சவரக்கத்தி

முகம் துடைத்துக்கொண்டவன் கந்தர்வன்

அவன் உறங்கா சிசு உறங்கும் கவிதை

குரல் ஏறிய பாரத்தில் சர்க்கரைக் கப்பல்

எறும்புப் புற்று வட்டங்கள் வரைய

பெருநதி வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது

மரம் நிறையத் தங்கக் கிளிஞ்சல்கள்

ஃப்ரீஸ்டாண்ட் ஃபிரேமில்

நான் போல் நிழல் பட்ட புத்தி

நாக்கிலிருந்து தலைகீழாய் தேள் இறங்க

முகம் நோக்கிய ஆவுடை மறைக்கும் பச்சை ஆப்பிள்

மங்கல் காட்சியில் கோணம் குறைந்த கோபுரம்

ரீங்கரிக்கும் சூரியன்

மை பூசிய ஒரு ஜோடி ரெட்டைவால் குருவி

கம்பிகள் குறுக்கிடும் ஜன்னல்

கான்கிரீட் காலம்

பெயரற்று மிதக்கும் படகு

ஸ்வரம் மீறி அலையும் வயோதிகச் சமுத்திரம்

பயமும் நடுக்கமுமாய் இருக்க

உடைந்த வில் முறியாக் கரும்பு

நாரை புரியும் சௌக்கார் நடனம்

குதிரைகள் கால் பதித்த பள்ளத்தில்

விசுவாசம் அறுத்த நாய்

குளிர்கால உடையில் துணையுடன் வருகிறது மீன்கொத்தி

யூகலிப்டஸில் சுருதி இணைக்கிறது

பீத்தோவன் தொப்பியணிந்த மரம்கொத்தி

இரட்டைக் கனவில் சுதந்திர வாசல்

நீலநிறப்பெண் இழுப்பறைகளாய் திறந்து நிற்க

செவ்வானவேளையில் மலைகள் உறங்க.

மொத்தமாகக் கவிதைக்குள் ஏதேனும் பொதியப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. துண்டு துண்டான படிமங்கள் மட்டுமே கவிதையாய்ச் சமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கவிதையும் தமிழ்நிலம் சார்ந்த வாழ்வியலாக இல்லாமல் ஏதோவொரு மேற்கத்திய கற்பனையில் மிதக்கிறது. யூகலிப்டஸ் மரம், பீத்தோவன் இசையென வரும் குறியீடுகள் தனது ரசனையை மேம்படுத்திக் காட்ட விரும்பும் அறிவுஜீவி பாவனையாகவே கவிதையில் அமைகின்றன.

கவிதை எதனைச் சிறப்பாகச் செய்யக் கூடியதென்ற போகனின் கவிதைக்கு வருவோம். நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதங்களைக் கைசுண்டிக் காண்பிப்பது எளிய விஷயம்தானா? உண்மையில் இந்தக் கவிதையே அதற்கான விடையையும் பொதிந்து வைத்திருக்கும் அற்புதமான விளையாட்டாக மாறுகிறது. கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை என்பதைப் போலவே கவிதை குறித்தான தப்பிதமான கற்பனைகளையும் இக்கவிதை சுமக்கவில்லை. குறிப்பாகப் பிரதாப ருத்ரனின் தேங்கிப் போன மொழியுடன் ஒப்பீட்டுப் பார்க்கும்போது போகனின் கவிதை தனித்து மிளிர்வதை உணரலாம். எளிமையானதைப் போலத் தோற்றம் கொண்டாலும் அதில் அமைந்திருக்கும் விசாலமான அவதானிப்புகள் முக்கியமானவை. பிளாட் பாரத்தில் வடை விற்பவன்/ பின்னால் நடந்து போகும் காகம் போன்றவை எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் கவிதைக்குரிய காட்சிகளாய் நாம் உணர தவறிய தருணத்தைக் கவிதை அற்புதமாகச் சுட்டிக் காண்பிக்கிறது. தான் சொல்ல வந்த கவிதைக்குச் சிறந்த உதாரணமாகவும் அக்கவிதையே அமைந்து விடுகிறது. இந்தப் பார்வையின் தீர்க்கம் இல்லாதபோது கவிதை வெறும் ஆன்மா உறிஞ்சப்பட்ட சதையாகவே காணக் கிடைக்கும். சமீபத்திய கவிஞராக அறியப்படும் யதிராஜ ஜீவாவின் கவிதையொன்று,

ஏதோவொரு செடியில் பூத்த

மலர்கள்தான் மயிலிறகுகள் என்றே

நான் நினைத்திருந்தேன் நெடுங்காலம்

பிறகொரு சபிக்கப்பட்ட

பங்குனி மாதத்தின் மாலை நேரத்தில்

ஒரு பறவை போன்ற உருவத்தின் பின்னேகி

அவை காட்சியளித்த போது

ஒரு முற்றிய பித்தனின்

கற்பனை என்றே அதை நம்ப விரும்பினேன்…

தொலைதூரம் சென்று

நான் தங்க நேர்ந்த

ஒரு வயலிடை வீட்டின்

ஜன்னல் வழியே

இரு திமிர் பிடித்த பறவைகள்

நடந்து சென்றபோது

ரசனையின் விஷமேறி

இருதயத்தின் நரம்புகளில் நீலம் பாரித்த ஒருவன்

எனக்கேயுரிய அப்பூக்களை

இப்படி இவற்றின் பின்னே

வைத்துவிட்டானே என

எதிர்ப்படும் எல்லோரிடமும்

பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தேன்

உன் நினைவு ஒரு பெருமழையென ஸ்பரிசிக்க

இத்தியான மண்டபத்தின் பின்புற மரத்தடியில்

நான் தலை சாய்ந்து படுத்திருக்கும் அந்திவேளையில்

மயிலெனும் இப்பறவைகள்

என் கண்முன் ஆடும் நடனம் கண்டு

உளம் சகியாது உடைந்தழுகிறேன் அன்பே…

மஹா கர்விகளாய் திரியும்

இந்த மயில்களை எல்லாம்

பூஞ்செடிகளாய் எனக்காக

மாற்ற மாட்டாயா அன்பே..

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே

தலைக்கேறி வழியும்

மனமோக ஓடையின் கரைகளில்

உன்னைப் பழிவாங்குவதற்காக நிகழ்த்தப்படும்

என் சம்போகங்களை

அப்படியே நிறுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே

நச்சுப் பாம்புகள் நெளியும்

என் மொழியின் கூடாரங்களை

தீயிட்டுக் கொளுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே

இப்பூமியெனும் கிரகத்தில் நிகழ்ந்து வரும்

எல்லா வன்கொடுமைகளுக்கும்

நானே காரணம் எனப் பொறுப்பேற்று

அழிவறியா என் தனிமையின் வனத்தில்

மொழிப்புற்று ஒன்றிலேகி

தன்னந்தனியனாய் மரித்துப் போகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே

உன் வல்லமைக்கு நிகரென

நீ பொறாமை கொள்ளும்

என் எல்லாக் கவிதைகளையும்

இப்பெருமழைக்காற்றில் கைவிட்டுவிட்டு

நான் அறைக்குத் திரும்பி விடுகிறேன்

பிறகு நான் நிம்மதியாகப் புன்னகைப்பேன்

பிறகு நீயும் நிம்மதியாகத் தூங்குவாய்.

இயற்கை ததும்பும் காட்சிகளின் வழியே மனதைப் பறிகொடுப்பது அதன் அமைதியில் தியானத்தில் ஆழ்வது அவ்வனுபவங்களைக் கவிதையாக்க முயல்வதுமான இத்தகைய போக்குகளுக்குச் சமகாலத்தில் இடமில்லையென்றே நம்புகிறேன். ஏனெனில் இயற்கையின் லயிப்பு, அதனோடு கரைவது போன்ற மனநிலைகள் முற்றிலும் காலியாக்கப்பட்ட காலமிது. மனிதனின் ஆதார உணர்வுகள் நீக்கப்பட்டு அதிகாரத்திற்குரிய முகவர்களாக, நிறுவனங்களின் பிரஜைகளாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தின் சூழலை கணக்கில் கொள்ளாமல் கவிஞர்கள் குறித்து உருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் கற்பனைகளில் சிக்குண்டு இன்னமும் இயற்கையின் ஆராதகனாக வெளிப்படுத்திக்கொள்பவர்களைப் பரிதாபத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

கடந்தவொரு தசாப்தங்களுக்குள்ளாக எழுத வருபவர்கள் பரந்துவிரிந்த தமிழின் நவீன கவிதைப் பரப்பினுள் திசை தெரியாமல் தடுமாறுகின்றனர். இந்த நூற்றாண்டின் சரியான சரடினைப் பற்றிக்கொள்வது அவர்களுக்கு இயலாத காரியமாக மாறுகிறது. கலாப்ரியா, வண்ணதாசனை மீறி மத்தியதர வர்க்கத்தின் அலாதியான மனிதர்களை இனி எழுத முடியாது அது முடிந்துபோன அரை நூற்றாண்டு காலத்தின் புகையாகக் கரைந்துவிட்டதென நினைக்கும் போது வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ தோன்றி அவர்களை மீண்டும் அம்முடிவை பரிசீலிக்கச் செய்கிறது. மறுபுறம் மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மீது கவியும் வெளிச்சம் அவர்களை மயக்குகிறது. இன்னொரு புறம் இசையின் பகடிக்கும் தனி ரசிகர்கள் அமைகிறார்கள். இதிலெல்லாம் பொருந்தாமல் தேவதச்சனும், தேவதேவனும் இன்னும் தனித்த அடையாளங்களாக மின்னுகிறார்கள். இதெல்லாம் கலந்து கிடக்கும் கதம்பமாகவே இன்றைய எழுத்துகள் அமைகின்றன. தேய்ந்து போன வழக்குகளில் அவை சிக்கித் தடுமாறுகின்றன. ஒன்று, மீண்டும் மீண்டும் இந்தியக் குடும்ப வாழ்வியலை மீற முடியாமல் அதனையே சுற்றி வரும் எழுத்துகள் மற்றொன்று இவற்றிலிருந்து வேறுபட்டவையாகத் தங்களை உணர்த்த விரும்பி மேற்கத்திய பாவனைகளைத் தம்முடைய அனுபவங்களாக வரித்துக்கொள்ளும் பாசாங்குகள். இவை இரண்டிற்குமிடையில் அசலான கவிதையின் பயணத்தைச் சாத்தியப்படுத்துவதற்குப் போகன் சங்கரின் கவிதை வெளிப்படுத்தும் எளிமையே தேவையாகிறது.

கவிதைகளுக்கு நூற்றாண்டின் சுமையை ஏற்றுவதிலும் அதற்கொரு கடிவாளம் சமைக்க முயல்வதிலும் என்னளவில் சில தயக்கங்கள் இருக்கின்றன. நூற்றாண்டின் கேள்விகள் என்பதும் கூடப் பெரிய இலட்சியங்களை நோக்கிய இலக்கு போலத் தோன்றுகிறது. மொத்த உலகச் சந்தையுமே தங்கள் செலவாணிகளைப் பெருக்கிக்கொள்ளும் இலக்குகளை நோக்கிதானே எல்லா அறிவுத் துறைகளையும் முடுக்கி விடுகின்றன. இலக்கியமும், கலையும் அதற்கு நேரெதிராகக் கைவீசி நடக்கவேண்டுமென விரும்புபவன் நான். எந்த நூற்றாண்டிலும் காணப்படாத அளவிலான நுகர்வுப் பெருக்கம் அதன் உச்சத்திலிருக்கும் ஒரு காலப் பகுதியில் கலைகளையும் அதேவிதமான பார்வை பீடிப்பதாகத் தோன்றுகிறது. எண்ணிக்கை அளவில் காணும்போது பதிப்பகங்கள் உயர்ந்துள்ளன, எழுத்தாளர்கள் பெருகியுள்ளனர். அதனாலேயே தன்னுடைய எழுத்து இந்தப் பெருவெளியில் வெளிச்சம் படாமல் புகழ் மங்கிப் போய்விடுமோ என்ற அச்சம் ஒவ்வொருவரையும் நெருக்குகிறது. தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பொதுவெளியின் கவனத்தைத் தன் பக்கமே குவித்துக்கொள்ள விரும்பும் தன்முனைப்பு வாதம் மிதமிஞ்சியுள்ளது. இதன் விளைவாகவே எந்தவொன்றின் அசல் தன்மையினையும் அறிவதற்கு எதிராகத் தன்னை மற்றொரு ஆளுமையின் நிழலோடு பொருத்திக்கொண்டு அடையாளம் தேட முயலுதல் ஆகியவை அரங்கேறுகின்றன. என்னளவில் இந்த நூற்றாண்டின் கேள்வியென்பது இத்தகைய வயது முதிராத பாவனைகளைக் கலைந்துவிட்டு எப்போது நாம் இலக்கியத்தை நெருங்கப் போகிறோமென்பது மட்டுமே. இறுதியில் தரப்போகும் பெருந்தேவியின் கவிதையினையும், போகனின் கவிதையினையும் ஏனைய இளம் கவிஞர்களுடன் ஒப்பீட்டுப் பார்க்கலாம். மூத்த படைப்பாளிகளின் கவிதையில் இளமை ததும்புகிறது மாறாக இளைய தலைமுறையின் கவிதைகளோ பென்சிலால் மீசை வரைந்து கொண்டு முதியவராகப் பார்க்கும் வேடிக்கையையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சோகையான இளம் தலைமுறையின் பிரதிநிதியை வைத்துப் பெருந்தேவி புனைந்துள்ள கவிதையினை இங்கே தருவதுடன் இதனை நிறைவு செய்யலாமென நினைக்கிறேன்.

கன்றின் கண்கள்

பேசிக்கொண்டிருந்தோம்

அவன் கண்கள் மின்னின

குட்டிச் சூரிய பிரகாசங்கள்

பார்த்த படங்களைப் பற்றி

உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டிருந்தான்

ஸ்கார்செஸி, டேரண்டினோ

திராகராஜா குமாரராஜா

பதின்ம வயதின் இறுதி

இதே வயதில் நானும் இருந்தேன்

எதிர்காலத்திடம் அஞ்சிக்கொண்டிருந்தேன்

வேலை கிடைக்குமா

வேற்றுச் சாதிப் பையனுடனான காதல்

வீட்டில் தெரிந்துவிடுமோ

வேதியியல் இன்டெர்னல் மதிப்பெண்ணைச்

சொட்டைத்தலையன் முழுசாகப் போடுவானா

கன்று மேலே படிக்க லண்டனுக்குச்

செல்லப்போவதாகக் கூறியது

கன்றுகளை அடிக்கடி சந்திக்கிறேன்

வசதியான வீட்டுப்பிள்ளைகள்

வெட்டிக்கொண்டு வரச் சொன்னால்

கட்டிக்கொண்டு வருவார்கள்

பெரும்பாலும் காலூன்றியதும்

செக்குமாடுகளாகிவிடும் கன்றுகள்

வீடு, வேலை, வெளிநாட்டுப் பயணம்

வீடுகள், வேலைகள், வெளிநாட்டுப் பயணங்கள்

ஆபத்தில்லாத கள்ள உறவுகள்

தவறாமல் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை

அவன் கண்களை மறுபடி பார்த்தேன்

தீர்மானமான எதிர்காலத்தை

அடைத்து வைத்திருக்கும் தோல் பைமீது

மின்னும் பொத்தான்கள்

ஒருவேளை எனக்குப் பொறாமையாக இருக்கலாம்

எனக்கு எதுவும் எளிதாக இருந்ததில்லை

நாய் படாத பாடு

இப்போதெல்லாம்

என் கன்னத்தின் சொரசொரப்பில்

ஒவ்வொரு நாளும்

தடங்கித் தடங்கிச் செல்கிறது.

மேல் செல்