எழுத்து இலக்கியம் என்பது மன்னர்களைப் பற்றியும், வீரதீரர்களைப் பற்றியும், பெருங்கடவுளர்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் மய்யப்படுத்தி விதந்தோதும் எழுத்துகளாகச் சமைந்துகிடந்த ஒரு காலம் இருந்தது. அப்படியான எழுத்து இலக்கியங்களுக்கே செல்வாக்கும் மன்னர்களின் அதிக ஆதரவும் இருந்திருக்கும். வரலாறும் பதிவுகளும் கூட இவர்களை மய்யப்படுத்தியதாகவே இருந்து வந்தது.
அன்று எழுத்திலக்கியத்திற்குள் சாதாரண மக்களின் வாழ்க்கை, அனுபவங்கள், அன்றாடப் பிரச்சினைப்பாடுகள் என்பன எழுத்துப் பிரக்ஞையை அடையாமல் வெளியே வைக்கப்பட்டிருந்தன. இப்படி வெளியே வைக்கப்பட்டிருந்தவைகளுள் ஒன்றாக ‘எழுதுபவர்களின் தன்னிலைகளையும்’ குறிப்பிடலாம். எழுதுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, சுயஅனுபவங்கள், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகள் என்பன எழுத்துக்குள் அக்கறை கொள்ளப்படவில்லை. அல்லது மிகவும் அரிதாகவே அக்கறைகொள்ளப்பட்டன எனலாம். (பக்தி இலக்கியங்கள் பாடியவரின் தன்னிலை அனுபவங்கள் தான்)
எழுத்திலக்கியப் பிரதிகள் கணக்கில் எடுக்காத ஒன்றாக; எழுத்திலக்கியத்தின் ‘பிறன்மையாக’ எழுதுபவரின் ‘நான்’கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன. அன்று வெளிப்பட்ட இலக்கியப் பிரதிகளின் கதைசொல்லிகள் அல்லது கவிதைசொல்லிகள் அதிகமும் மூன்றாம் நபராகவே (third person narrator) இருந்து வந்தார்கள்.
காலப்போக்கில் இது படிமுறை வளர்ச்சியாக மாற்றம் கண்டது. அரசாட்சி முறை கவிழ்ந்தமை, ஆட்சிபீடத்தில் இருந்து மதங்கள் இறக்கப்பட்டமை, அச்சு ஊடகம் உருவாகிப் பரவியமை, கல்விமுறை கீழ்தட்டு மக்களுக்கானதாகவும் அறிமுகமானமை, மக்களாட்சி முறை உருவெடுத்தமை, தத்துவவியலில் நிகழ்ந்த மாற்றங்கள், விஞ்ஞான முறைமை மேலெழுந்தமை, தொகுத்தறிவு ஆய்வுமுறைகள் உருவாகியமை, தனிமனித உளவியல் துறை உருவாகியமை போன்ற இன்னும் பல காரணங்களால், தனிநபர்களினதும் சாதாரண மக்களினதும் வாழ்வும் அனுபவங்களும் கூட எழுத்துப் பிரக்ஞையை எய்தியது. எழுத்து இலக்கியத்தில் கண்டுகொள்ளப்படாமல் வெளியே வைக்கப்பட்டிருந்த ‘நான்’கள் உள்ளே கொண்டுவரப்பட்டன.
ஏனைய இலக்கிய வகைமைகளை விடக் கவிதைகளிலேயே இந்த ‘நான்’கள் கவிதை சொல்லிகளாக (first person narrator) அதிகமும் வைக்கப்பட்டன. இன்னும் அப்படித்தான். கவிதைகளின் மையமாக ‘நான்’களின் சுய-அனுபவங்களே மாறிவிட்டிருக்கின்றன.
இன்றைய நவீன கவிதைகளில் வைக்கப்படும் ‘நான்’களை, அதாவது கவிதை சொல்லிகளாக வைக்கப்படும் தன்னிலைகளை ஓரளவு அவதானித்து வருகிறேன். கவிதை மீதான எனது வாசிப்பும் விமர்சன அணுகுமுறைகளும் கூடக் கவிதைசொல்லியைப் பின்தொடர்வதாகவே அமைந்திருக்கும். ஒரு கவிதைப் பிரதியில் வைக்கப்படும் கவிதைசொல்லிக்கும் அந்தப் பிரதியில் கொண்டுவரப்படும் பிறன்மைக்குமான உறவும் ஊடாட்டமும் என்னவாக இருக்கிறது என்பதை ஆராய்வதனூடாகவே எனது வாசிப்பினை நிகழ்த்துகிறேன். இங்குக் குறிப்பிடும் பிறன்மை (others) என்பது கவிதையில் வைக்கப்படும் கவிதைசொல்லியான ‘நான்’இற்குப் புறம்பாக உள்ளவர்களை அல்லது உள்ளவைகளை.
பொதுவாக நவீன கவிதைப் பிரதிகளில் வைக்கப்படும் ‘நான்’கள் (கவிதைசொல்லிகள்) என்னவாகக் கட்டமைக்கப்படுகிறார்கள் அல்லது எதனைச் செய்யும்படி கட்டமைக்கப்படுகிறார்கள் என்பதை இப்படித் தொகுத்துக்கொள்ள முடியும்:
1. கவிதையில் வைக்கப்படும் ‘நான்’கள் எழுதுபவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.
தமிழில் கவிதை எழுதுபவர்களுக்குள், தாங்கள் ஒரு பிரதியைச் செப்பனிட்டு வடிவமைக்கிறோம் எனும் பிரக்ஞையை ஒத்துக் கொள்பவர்கள் குறைவு. நான் எழுதும் கவிதை கணப்பொழுது உணர்வு; திடீரெனக் கிடைத்த அருள். என்னூடாகக் கவிதை தன்னை எழுதிக்கொள்கிறது எனும் பிரம்மைதான் அவர்களைப் பீடித்திருக்கிறது.
கவிதைப் பிரதியை தான் பிரக்ஞைபூர்வமாகக் கட்டமைக்கிறேன் என்பதையே ஏற்காதவர்களிடம், கவிதையில் வைப்பதற்கான கவிதைசொல்லியையும் தெரிவு செய்து வைக்கவேண்டும் எனும் சிந்திப்பு எப்படி வரும்? எனவேதான் நம் கவிஞர்களின் கவிதைகளது கவிதைசொல்லியாக (‘நான்’களாக) குழந்தைகள் வருவதில்லை. ஆண்களின் கவிதைகளில் பெண்களோ, பிற பாலினரோ வருவதில்லை.
இலக்கியப் பிரதிகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ‘நான்’கள் உள்ளே கொண்டுவரப்பட்டு மய்யமாகி பல தசாப்தங்களைக் கடந்துவிட்டது. இருந்தும் நம் கவிஞர்களால் அந்த ‘நான்’களுக்குள் பிறன்மைக்கான இடத்தைக் கொடுக்கவும் கற்பனை செய்யவும் முடியாமலே இருக்கிறது.
2. பெருவாரியான ‘நான்’கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
தன்னலமற்ற அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தவறு செய்யும் தன்மை கொண்ட ‘நான்’களை அல்லது செய்யும் தவறினை எதிர்கொள்ளும் ‘நான்’களைத் தேடிச் சலித்துதான் கண்டடைய வேண்டும்.
3. இந்த ‘நான்’கள் எல்லோருமே ஞானிகளாகவே இருக்கிறார்கள்.
தங்களின் அனுபவங்களின் வாயிலாக உண்மைகளையும் ஞானங்களையும் பொதிந்து வைத்திருப்பதாகவே காட்டிக் கொள்கின்றனர். பொய்சொல்லும், அறிவீனத்தை வெளிப்படுத்தும் ‘நான்’களைக் காணவே முடியாது.
கவிதைகளின் மய்யத்தில் தன்னை நிறுவிக்கொன்ட ‘நான்’கள், தங்களின் நிலைப்பாடுகளைத் தவறுக்கு அப்பால் சரிகண்டன. எனவேதான் தாங்கள் கண்டடைந்த அனுவபவங்களை, முற்றிலுமான உண்மைகளாகவும் ஞானங்களாகவும் முன்வைக்கின்றன. பிறன்மைகளைத் தங்களின் நிலைப்பாடுகளின் அடியாக வரையறுத்துப் புரிந்துகொள்ளவும், அவர்களைக் கையாளவும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் முனைகின்றன.
இந்த ‘நான்’கள் எவரும் சுற்றுச் சூழலில் இருப்பவற்றையோ மற்றமைகளையோ நுணுகி உற்றுநோக்கினால், அதனை வைத்து வாசகர்களுக்குச் சொல்வதற்கான ஞானம், கவிதையின் இறுதிப் பகுதியில் இடம்பெறப் போகிறது என்பதை வாசித்து முடிப்பதற்கு முன்பே ஊகித்துவிடலாம்.
தமிழுக்கு மிகவுமே ஒரு நீண்ட கவிதை மரபு உண்டு. சங்க காலத்திற்கும் முன்பிருந்தே தமிழ் தனது தத்துவங்களையும் ஞானங்களையும் கவிதை வடிவத்திலேயே சேமித்து வைத்து வந்திருக்கிறது. கதைகளையும் புராணங்களையும் வரலாற்றையும் கூடக் கவிதை வடிவத்திற்குள்தான் அதிகம் வைத்தது. அதனால்தான் உரைமரபும் கதைமரபும் எழுத்து இலக்கியத்தில் தோன்ற வெகுகாலமெடுத்தது. இதனொரு நீட்சிதான் ஞானப் போதனைகளை வெளிப்படையாகவும் மறைவாக உட்பொதிந்த வகையிலும் கவிதைக்குள் வைப்பது நிகழ்கிறதோ என யோசிக்கத் தோன்றுகிறது. அதாவது, ஞானம் எனபது கவிதை போசித்து வந்த ஒன்று. வரிவரியாக உடைத்து எழுதும் ஒரு பிரதிக்குள் அதனை வைத்துவிடுவதனூடாக அப்பிரதியை கவிதையின் சாயலுக்குள் கொண்டு வந்துவிடலாம் எனவும் அபிப்பிராயங்கள் இல்லாமல் இல்லை.
எப்படியும் ஒரு பிரதி வாசகர்களுக்குக் கடத்த முனையும் அர்த்தங்களும் கருத்தமைவுகளும் இருக்கவே செய்யும். ஆனால் பிரதியில் வைக்கப்படும் கவிதை சொல்லிகளாக வரும் ‘நான்’கள் ஏன் அதிகம் ஞானிகளாகவே காட்டப்படுகின்றனர்?
அந்த ‘நான்’கள் ஜீவகாருண்யம் கொண்டவர்கள். அன்புள்ளம் கொண்டவர்கள். மெல்லிய மனம் கொண்டவர்கள் என்பதாகவே காட்டப்படுகின்றனர். (விமர்சன இடையீட்டு வாசிப்பினூடாக உண்மையில் அப்படியாகவா இருக்கிறார்கள் அல்லது இல்லையா என்பதைக் கண்டடைந்துவிடலாம் என்பது வேறு விசயம்). ஆனால், ஏன் நல்லவர்களாகவே காட்டப்படுகின்றனர்?
4. ரசனை உள்ளம் கொண்ட ‘நான்’கள்
இந்த வகை ‘நான்’கள் அழகை ஆராதிப்பவர்கள். உருவக உவமைகளை நுணுகித் தேடி அடைபவர்கள். அரிய அனுபவங்களை நுணுக்கமாகச் சொற்களில் வடிக்க முனைபவர்கள். “நிசப்த வெளி. ஆறிக்கொண்டிருக்கும் இரு தேனீர்க் குவளைகள். அருகருகே நானும் உன் நினைவுகளும். முன்னால் இருக்கும் நீர்த்தடாகத்தில் விழுந்துகிடக்கும் நிலவுக்கு உன் முகச்சாயல்.” என ஒரு லிஸ்டினை வரிவரியாக அடுக்கிவைத்தலைச் செய்துவிடும் இந்த ‘நான்’கள்.
5. பரிதாபத்தைக் கோரி நிற்கும் ‘நான்’கள்
இது நவீன கவிதைகளுக்குள் வைக்கப்படும் கணிசமானளவு இன்னொருவகை ‘நான்’கள். இதில் இருவகை உண்டு. ஒன்று தன் மீதான பரிதாபத்தைக் கோரும் ‘நான்’கள். மற்றையது, பிறன்மையின் மீது பரிதாபத்தைக் காட்டிநிற்கும் அல்லது பரிதாபத்தைக் காட்டக் கோரும் ‘நான்’கள். இந்த ‘நான்’கள் பெரும்பாலும் பிரதிக்குள் பரிதாபத்தை மட்டும்தான் காட்டுவார்கள். வேறொன்றும் செய்வதில்லை.
தான் துன்புற்றிருப்பதை, நிராதரவாகக் கிடப்பதை, கைவிடப்பட்டிருப்பதை, தனிமையில் உழல்வதை, வஞ்சிக்கப்பட்டிருப்பதை எனப் பாடிப்பிரஸ்தாபிக்கும் ‘நான்’களைத் தாராளமாகவே பார்க்கமுடியும். இந்த வகையான ‘நான்’கள் தமிழ் நவீனக் கவிதையின் ஒரு அங்கம். நவீனக் கவிதையால் போசிக்கப்பட்டு வருபவை. துயரமும் தனிமையும் நவீனக் கவிதையின் முக்கிய இரு பாடுபொருள்கள் (Themes). தெகுட்டத் தெகுட்ட எழுதப்பட்டுவரும் இரு பாடுபொருள்கள் அவை.
எழுதுவதற்குத் தன்னிடம் துன்பமும் சோகமும் இல்லாமல் போனால், உடனே பாவப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் மீது வாசகர்களின் பரிதாபத்தைக் கோரும்படி செய்துவிடுவார்கள் நம் கவிஞர்கள். இவர்கள் சோகத்தை தேடி அடைபவர்கள் அல்லது அடைபவை உண்மையிலேயே சோகமாகத்தான் இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் அக்கறை முனைப்புக் கூட அவர்களிடம் இருப்பதில்லை. முள்கம்பியில் பொலித்தீன் உறை சிக்குப்பட்டுக் காற்றில் படபடத்தாலும், பிரதிக்குள் வரும் இந்தக் கவிதை ‘நான்’கள் அந்தப் பொலித்தீன் உறைகளுக்காக அழுதுகாட்டும். ஒரு குயில் தனியாக நின்று கூவுவதைக் கண்டால் போதும், ‘தன் ஜோடிக்காகச் சோகம் சொட்டக் கூவும் குயிலின் தனிமை’ எனக் கவிதைக்குள் கசிய ஆரம்பித்துவிடுவார்கள்.
பரிதாபத்தைக் கோருதல் என்பது ஒரு சமூக உளவியல் நடத்தைக் கோலம். சமூகத்தில் அதற்கொரு மவுஸ் உண்டு. சமூக உளவியல் கோட்பாடுகளில் ‘social exchange theory’ என்றொரு கருத்தமைவு உண்டு. அது என்ன சொல்கிறது என்றால், மனிதர்கள் பிறருடன் ‘உணர்ச்சிப் பரிமாற்றத்தை’ (emotional transection) மேற்கொள்கின்றனர். சமூக அங்கீகாரம், அந்தஸ்து அல்லது அன்பு போன்ற சமூக வெகுமதிகளுக்காக மக்கள் தங்களின் கஸ்டநஸ்டங்களை, துன்பதுயரங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகைய பரிதாபத்தைக் கோரும் உணர்ச்சிகளைக் கடத்துவதனூடாகச் சமூகத்தின் கவனயீர்ப்பைப் பெறுகின்றனர்.
சமூகவெளியில் ஒருவர் கொள்ளும் சந்தோசத்தைப் பொருட்படுத்துவதை விட, துன்புற்றுப் பாவப்பட்டுக் கிடப்பவர் மீதுதான் சமூகத்தின் அக்கறையும் பரிதாபமும் உருவாகும். பாவப்பட்டிருப்பவர்களைப் பார்த்து, தங்களுக்குள் உருவாகும் அந்தப் பரிதாபம் தங்களை நல்லவர்களாகவும் அன்புள்ளம் கொண்டவர்களாகவும், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும் உணரச் செய்யும். அதிலும் அப்படிப் பாவப்பட்டிருப்பவர்களுக்குச் சின்னதான ஒரு உதவி செய்துவிட்டாலே, தங்களின் தாராண்மை மனதை நினைத்து அதிகம் பெருமைப்பட்டுக் கொள்வர். பார்த்திருக்கிறீர்களா? சந்தோச மனோநிலைகளைப் பகிர்ந்துகொண்டால், பொறாமைப்பட்டுவிடுவார்கள் அல்லது கண்பட்டுவிடும் என்பதற்காகவே பிறரிடம் சந்தோசங்களைச் சொல்லாமலே மறைப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா?
இந்தத் துன்பத்தைக் கவிதைக்குள் பாடுவதில் இன்னொரு சமூக உளவியலும் தொழிற்படுகிறது. தான் வஞ்சிக்கப்பட்டிருப்பதை, தனித்துவிடப்பட்டிருப்பதைக் கவிதைக்குள் பாடுகின்றபோது, அது அப்பிரதியை வாசிக்கும் வாசகர்களுக்குள் இருக்கும் அப்படியான சுயானுபவங்களுடன் ஒன்றித்துவிடுகிறது. என் சோகத்தை எழுதியிருக்கிறான் இந்தக் கவிஞன் எனும் கிறக்கம் உருவாகிறது. இது சரக்கடித்துக் கொண்டு சோகப்பாடலைக் கேட்டபடி தன்மீதே பரிதாபப்பட்டு ஏங்கும் மனோநிலையை ஒத்தது. வாசகர்கள் துயர அனுபவத்தை அடையும் பொழுதெல்லாம், இந்தக் கவிதைகளை மீண்டும் வாசித்துப் பார்க்கிறார்கள். நினைவுகூர்கிறார்கள்.
6. எதிர்ப்பை வெளிப்படுத்தும் ‘நான்’கள்
தன்மீது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பழி சுமத்தப்பட்டிருக்கிறது. தன் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. தன் உடலும் வெளியும் சுருக்கப்பட்டிருக்கிறது. எனது அனுபவமும் வாழ்வியலும் தவறாக வைக்கப்பட்டிருக்கிறது அல்லது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என அரசியல் பிரக்ஞை கொண்டு எழும் குரல்களைக் கொண்ட ‘நான்’கள் இவை.
இந்த வகை ‘நான்’களில் (கவிதைசொல்லிகளில்) கணிசமானவை கவிதைப்பிரதிகளில் என்ன செய்யுமென்றால், தான் முன்வைக்கும் உண்மை மாத்திரமே சரியானது. பன்மையான உண்மைகள் இருக்க முடியாது என்பதாக அறுதியிட முனையும்.
***
மேற்குறிப்பிட்டிருக்கும் இந்த ‘நான்’கள் தனித்தோ அல்லது இணைவுற்ற நிலையிலோ தான் பெரும்பாலான கவிதைகளின் கவிதைசொல்லிகள் கட்டமைந்திருக்கிறார்கள்.
நவீன தமிழ்க் கவிதைகளில் வைக்கப்படும் இப்படியான ‘நான்’கள் அதனொரு மரபாகவே மாறியிருக்கிறது. அந்த மரபை மீளச் செய்துகாட்டுவதனூடாகக் கவிதையின் வகைமைக்குள் குறித்த பிரதிகளை இலகுவாகத் தள்ளிவிடலாம் என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அல்லது இப்படியான கவிதை ‘நான்’களே பழகும் கவிதைகளில் இருப்பதால் அதுவே கவிதைகளின் இயல்பு, மரபென ஏற்றுத் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றதாகவும் இருக்கலாம்.
இந்த வகையான கவிதைசொல்லிகளான ‘நான்’களைப் பயன்படுத்துவது தவறு எனச் சொல்லவில்லை. எல்லாப் புனைவுச் சாத்தியங்களுக்கும் இடம் தரும் கவிதை மொழிப் பிரதிக்குள், இந்த மரபுகளை மீறுவதற்கான கற்பனைகளை ஏன் கண்டடையாமல் பின்வாங்கி நிற்கிறோம் என்பதுதான் நான் முன்வைக்க விரும்பும் கேள்வி.
இலக்கியப் பிரதிகளை வடிவமைக்கும் போது தன்நிலைகளை (‘நான்’களை) முன்னிலைப்படுத்தி எழுதுவதா அல்லது பிறன்மைகளை முன்னிலைப்படுத்தி எழுதுவதா, எவற்றின் மீது தனது கவிதைகள் அதிகம் அக்கறைகொள்கின்றன என்பதை ஒரு காணொலியில் எம்டிஎம் விபரிக்கிறார். அந்த விபரிப்பினை, மிகெயில் பெக்டின் ஏன் தஸ்த்தொயெஸ்கியை உச்சம் தொட்ட இலக்கியவாதியாகக் குறிப்பிட்டார் எனச் சொல்வதில் இருந்து தொடங்குகிறார்.
தஸ்த்தொயெஸ்கி தனது ‘Notes from underground’ என்ற நாவலில் குற்றவாளிகளின் வாழ்வைப் பற்றி எழுதுகிறார். தன்னுடைய உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிறமனிதர்களின் உலகைப் பற்றி எழுதுகிறார். அவர்களின் இருப்பு, அவர்களின் தரப்பு நியாயம் பற்றி முன்வைத்து எழுதியிருப்பார். அதாவது தனது கற்பனையால் இன்னொரு குழுமத்தின் இருப்பை உணர்ந்து, அவர்களின் தரப்பில் இருந்து முன்வைக்கும் பிரதி. அதனை மிகெயில் பெக்டின் தனது ‘Dialogic Imagination’ எனும் கருத்தமைவினூடாக விளக்குவதாகவும், அப்படிப் பிறன்மையைப் பற்றி எழுதியதால்தான் தஸ்தொயெஸ்கியை அப்படிக் கணித்தார் எனச் சொல்கிறார்.
இந்த உரைப்பகுதியைப் பார்க்கும் போது, ஒருவர் இன்னொருவரைப் பற்றி அல்லது தான் சாராத மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் பிறன்மையைப் பற்றி எழுதல் என இலகுபடுத்தி உள்வாங்கிக் கொள்ளக் கூடாது.
ஒருவர் இன்னொருவரைப் பற்றிப் புனைவுகளுக்குள் பேசுவதுதான் பிறன்மையைப் பற்றிப் பேசுவதாகக்கொள்ள முடியுமா? ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம். தஸ்த்தொயெஸ்கி ஒரு அரசரின் அல்லது ஒரு வீரதீரரின் வாழ்க்கை குறித்து நாவலொன்றை எழுதுகிறார் எனில், அந்த நாவல் பிரதியையும் பிறன்மையைப் பேசும் நாவல் எனக் கொள்ள முடியுமா? ஆம் எனில், அவர் மட்டுமல்ல அதற்கு முன்வந்த பல காவியங்களும் கூட அரசர்கள், மகான்கள், வீரசூரர்கள் எனப் பலரையும் முன்வைத்து முதன்மைப்படுத்தியே புனையப்பட்டிருக்கும். அவையும் பிறன்மையைப் பேசுபவைதான் என்றே கொள்ள வேண்டியாகிறது.
ஆனால் பெக்டின் அந்த வகையான epic literature மீது ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்:
“The epic world is constructed in the zone of absolute past, a world of ‘beginnings’ and ‘peak times’ which is perceived as the source of all authority and all value.”
காவியப் பிரதிகளில் dialogic imagination நிகழ்வதில்லை. ஏனெனில் அந்தப் பிரதிகள் ஒரு படித்தான விழுமியங்கள், தீர்மானகரமான உண்மைகள் எனும் வரையறுப்பில் இருந்து அதன் சொல்லல்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். பெக்டின் குறிப்பிடும் Dialogic imaginationனினூடாகப் பிறன்மையைப் பேசுதல் என்பது, ஒரு எழுத்தாளர் தனது சிந்திப்பின் வழியாகப் பல்வேறு பிறன்மையின் குரல்கள் நிறைந்த ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பிரதிக்குள் ஒலிக்க வைக்கும் எழுத்துமுறை பற்றியது. பிரதிக்குள் வைக்கப்படும் ஒவ்வொரு கதைமனிதர்களும் தங்களின் மாறுபட்ட சுய கண்ணோட்டங்கள், விழுமியங்கள் மற்றும் புறவுலகப் பார்வைகளுடன் தன்னிச்சையாக இயங்கும்படி விட்டுவிட ஏற்பாடு செய்யும் எழுத்துமுறை பற்றியது. இதில் ஆசிரியர் தனது சொந்த ஞானம், உண்மை, அல்லது நியாயத்தை அவர்கள்மீது சுமத்தாமல், அவர்களின் குரல்களுக்கு முழுமையான தன்னாட்சி அளிக்கும் வெளியைப் பிரதிக்குள் கற்பனை செய்துவைப்பது பற்றியது.
இலக்கியப் பிரதிகளில் இந்தப் பிறன்மையைப் பேசுதல் என்பதை Dialogic imagination கருத்தமைவிலிருந்து கொஞ்சம் விலகி, வேறொரு கோணத்திலிருந்து புரிந்துகொள்ளவும் விபரிக்கவும் முனைகிறேன்.
தஸ்த்தொயெஸ்கியின் அந்த நாவலானது யாரைப் பற்றி எழுதப்படுகிறது எனப் பார்த்தால், குற்றங்கள் எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி. அவர்களின் வாழ்வும் இருப்பும் பற்றி. அதுவரை இலக்கியங்கள் பெரிதாக அக்கறை கொள்ளாத மனிதர்களின் தரப்பிலிருந்து எழும் குரல்கள் பற்றியது. சமூகத்தாலும் இலக்கியங்களாலும் விளிம்பில் வைத்துப் பேணப்படும் மனிதர்கள் பற்றியது. அதாவது, இருக்கும் இலக்கியங்களும் சமூக உரையாடல்களும் அவர்கள் மீதான ஒதுக்கி ஓரங்கட்டும் பார்வையினையே மய்யநீரோட்டமாகக் கொண்டிருப்பதால், அவர்களின் இருப்பை அக்கறை கொள்வதும் அவர்களின் தரப்பைப் பேசவைப்பதும் பிறன்மையைப் பேசவைத்தல் என்றாகிறது.
சமூகக் கதையாடல்களுக்குள் விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் தரப்பில் நின்று பேசுவதனையும் கூடப் பிறன்மையைப் பேசுதல் எனக் கொள்ள முடியும். அவர்கள் சமூகக் கதையாடல்களால் அக்கறை கொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள், இங்கிருக்கும் சிஸ்டம்களாலும், சிந்தனை அமைப்புகளாலும், மய்யநீரோட்டக் கதையாடல்களாலும் எற்கெனவே ‘பிறன்மைகளாகத்தான்’ கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர். (பெக்டின் அந்தக் கருத்தமைவினூடாக விளிம்புநிலை மனிதர்களை ஒரு கருப்பொருளாகக் கொள்ள வெளிப்படையாகக் கவனம் செலுத்தவில்லை. அவருடைய கோட்பாடு அடையாள அரசியலை விடத் தத்துவார்த்தரீதியில் பிரதிக்குள் பன்மையான குரல்களையும் பன்மைத்துவமான சிந்திப்பையும் உள்வாங்கிக் கொள்வது பற்றியது.)
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒரு ஆசிரியர் இன்னொருவரைப் பற்றிப் புனைவுக்குள் கொண்டுவருதல் என்பதைத் தாண்டி, எத்தகைய விளிம்பு மனிதர்களைக் கொண்டு வருகிறார் என்பதும், அப்படிக் கொண்டுவருவதனூடாக எத்தகைய கருத்தமைவுகளை அவர்கள் சார்ந்து பேசுகிறார் அல்லது பேச வைக்க முனைகிறார் என்பதைப் பொறுத்தும் பிறன்மையை அக்கறைகொண்டு பேசுதல் என்பதும் பிரதிக்குள் நிகழ்கிறது எனும் ஒரு இடத்தில் வந்து சேர்கிறேன்.
இதனடிப்படையில் பார்த்தால், ஒரு எழுத்தாளர் தான் சார்ந்திராத விளிம்பு மனிதர்களின் தரப்பில் நின்று எழுதுவதை மட்டுமே பிறன்மையைப் பேசுதல் என்பதாகக் கொள்ள முடியாததாகிறது. குறித்த விளிம்புநிலை மனிதர்களில் ஒருவராக இருப்பவர் கூடத் தன்னிலை ‘நான்’களாக (narrative self) தன் தரப்பை, தனது சமூக இருப்பைப் பற்றி எழுதுவதும் பிறன்மையைப் பற்றி எழுதுவதுதான் எனக் கரிசனம் கொள்ள வேண்டியாகிறது.
சிறைவாசி ஒருவர் தன்னைப் பற்றியும் தன்சிறைவாசிகளின் இருப்பையும் வாழ்வியலையும் எழுதுவது கூடப் பிறன்மையைப் பற்றி எழுதுவதுதான் என்பது என் நிலைப்பாடு. தலித் இலக்கியம் அப்படித்தான் தலித்களால் தங்களின் தரப்பை முன்வைக்கும் இலக்கியமாக வெளிக்கிட்டது. தலித்களின் தரப்பில் நின்று தலித் அல்லாதவர்களும் தங்களின் இலக்கியப் பிரதிகளுக்குள் தலித்களின் குரலை ஓலிக்க வைக்க முயன்றிருப்பர். அப்பிரதிகளை எல்லாம் சமூக இலக்கிய வெளியில் வைத்துப் பார்க்கின்ற போது, அவை பிறன்மை பற்றிய பிரதிகளாகவே பார்க்க முடியும்.
எம்டிஎம் தனது கவிதைகளில், தன்னிலையான ‘நான்’களைத் தாண்டி பிறன்மையின் தரப்பைப் பேசும் எழுத்துமுறையை உள்வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறார். தனது கவிதைகளில் பிறன்மையை அக்கறை கொள்ள ‘நீ’ தரப்பினை உள்வாங்கிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார். ‘நீ’ தரப்பு வருகிறதென்றால் அங்கு நான் தரப்பும் உள்ளது. நான் தரப்பின் அடியாகவே ‘நீ’ தரப்புப் பிரசன்னமாகிறது. எனவே அக்கவிதைகள், நான்-நீ-யிற்கிடையிலான உரையாடலாகவும் வடிவம் கொள்கிறது. அதனையும் எம்டிஎம் சுட்டிக் காட்டுகிறார்.
நீ தரப்பை உள்வாங்கும் கவிதைப் பிரதிகளை, பிறன்மையை அக்கறை கொள்ளும் பிரதியாக எப்படிப் பார்ப்பது எனச் சிந்திக்கிறேன்.
பொதுவாகக் கவிதைப் பிரதிகள் எல்லாம் ஒரே ஒரு கவிதைசொல்லியின் (Narrator) குரலினூடான விபரிப்பாகவே கட்டமைக்கப்படுகிறது. அந்தக் கவிதைசொல்லி ‘நான்’ ஆகவோ அல்லது நாம் ஆகவோ வருவதை அவதானிக்கலாம். அங்கு வைக்கப்படும் ‘கவிதைசொல்லி’ என்பது அதனை எழுதிய கவிஞரைக் குறிப்பது அல்ல. ஆனால், தமிழில் பழக்கப்பட்டிருக்கும் பெருவாரியான வாசிப்பு முனைப்பானது, குறித்த பிரதியை வடிவமைத்த கவிஞரையே அப்பிரதிக்குள் வைக்கப்படும் கவிதை சொல்லியாகவும் பார்க்கிறது.
இது வாசகர்களின் தரப்பில் நிகழும் ஒரு போக்கு மட்டுமல்ல, கவிஞர்களின் தரப்பும் அந்தப் போக்கில்தான் கவிதைகளை வடிவமைக்கின்றன. கவிதைகளில் வைக்கும் கவிதை சொல்லிகளைத் தங்களின் பிரதிமைகளாகவே அல்லது representative ஆகவே பார்க்கின்றனர். கவிதைகளை வடிவமைக்கும் போது, அதில் வைக்க வேண்டிய கவிதை சொல்லியினையும் பிரக்ஞைபூர்வமாக வடிவமைக்க முனைவதில்லை. அல்லது தெரிவு செய்வதில்லை. கவிஞராகிய நான் பேசுகிறேன் என்ற நிலையில் இருந்தே எழுதப்படுகிறது.
வெவ்வேறு கவிதை சொல்லிகளைப் பிரக்ஞை பூர்வமாகத் தெரிவு செய்து (அல்லது கற்பனை செய்து) உருவாக்கப்பட்ட கவிதைகளும் தமிழில் உண்டு. அப்படியான கவிதைகளை அரிதாகவே அவதானித்திருக்கிறேன். சிவனுமனோகரின் ‘மலைகளின் பாடல்’ எனும் கவிதைத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளிலும் வரும் கவிதைசொல்லிகளான ‘நான்’கள் வெவ்வேறானவர்கள். அந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் கவிதைசொல்லிகளாக ஒரு யுவதி வருவாள். ஒரு சிறுமி இருப்பாள். மாணவன் இருப்பான். கூலித் தொழிலாளி இருப்பார். கற்பிக்கும் ஆசிரியரும் இருப்பார். சிவனு மனோகரன் ஆசிரியராகப் பணிபுரிபவர். Dialogic imaginationனை அவரின் கவிதைகளில் வரும் கவிதைசொல்லிகளில் அவதானிக்கலாம்.
குழந்தைக் கவிஞர் என ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொண்ட கவிஞர் ஜெமீலின் மொத்தக் கவிதைகளும் குழந்தைகளைப் பற்றியது தான். ஆனால் அவர் எழுதிய எந்த ஒரு கவிதையின் கவிதைசொல்லியாகவும் சிறுவர்கள் வருவதில்லை. அனைத்துக் கவிதைசொல்லிகளுமே ஒன்று தந்தை அல்லது பாடசாலையில் பணிபுரிபவர். இப்படிச் சொல்லும் போதே கவிஞர் ஜெமீல் பாடசாலையில் பணிபுரியும் ஒரு தந்தை என்பதை ஊகித்திருப்பீர்கள்.
இப்படியான ஒரு பொதுப் போக்கு நிலவும் கவிதைச் சூழலில், பிறன்மையின் தரப்பினை அக்கறை கொள்ள ‘நீ’யினை உள்ளெடுப்பதனை மாற்றுப் பார்வையாகவும் பிறன்மையை அக்கறை கொள்பவைகளாகவும் கருதலாம் தான். ஆனால் அங்கு ‘நீ’யின் தரப்புப் பேசவைக்கப்பட்டிருக்க வேண்டும். ‘நீ’தரப்பின் இடையீட்டுப் பார்வையும் செயலும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், அங்கு நான் எனும் கவிதைசொல்லியின் தரப்பினூடாகவே ‘நீ’ பிரசன்னமாகிறது. எனவே அங்கு நான் தரப்பின் புரிதலும், பார்வைக் கோணமும்தான் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்த நான்-நீ ஃபோர்மெட்டில் எழுதப்பட்ட பல கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவற்றில் சில சிக்கல்களையும் அவதானித்திருக்கிறேன். அக்கவிதைகள் குறித்துச் சில விமர்சனக் கட்டுரைகளையும் முன்வைத்திருப்பேன். அத்தகைய கவிதைகள் எல்லாம் ‘நான்’ தரப்பிலிருந்தே எழுதப்பட்டிருக்கும். ‘நான்’ தரப்பினது புரிதலின் அடிப்படையிலேயே கவிதையின் சொல்லல்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். அவற்றினை இப்படி வகைப்படுத்தியும் பார்க்கலாம்:
• ஒன்று: உன்னால் நான் என்னவானேன், உன்னால் எனக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா எனப் பேசும் கவிதைகள். (இது நான்-நீ ஃபோர்மெட்டில் எழுதும் காதல் கவிதைகளின் போக்கு)
• இரண்டு: நான் தரப்பானது நீ தரப்பிற்கு அறிவுறை கூறும்; உபதேசம் செய்யும்; வழிகாட்டல் வழங்கிக் கொண்டிருக்கும். அதைச் செய் இதைப் பார் எனக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கும். அங்கு நீ தரப்பானது மௌனமாக இருந்து செவிமடுப்பவராக மாத்திரம் வைக்கப்பட்டிருப்பார். நான் தரப்பு ஒரு போதகராகவும் ஞானியாகவும் வைக்கப்பட்டிருப்பார். எல்லாம் தெரிந்த ஞானியவர்.
• மூன்று: நீ தரப்பின் மீதான முறைப்பாடுகளாக அமைந்திருக்கும். நீ தரப்பு தனக்கு அநீதி இழைத்ததாக நான் தரப்பு சாடும். வாசிக்கும் நமக்கோ இந்த ‘நான்’கள் முன்வைக்கும் விசயங்கள் பற்றி நீ தரப்பு என்ன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறது என அவதானிக்க அக்கவிதைகளில் எதுவும் இருக்காது. ஒரு மௌனமான நீ தரப்புதான் அங்கும் வைக்கப்பட்டிருக்கும்.
• நான்கு: நீ தரப்பின் மீது தனது அவதானத்தை மேற்கொண்டு விபரித்தல். நீ தரப்பு என்ன செய்கிறது எதனை உணர்கிறது, என்ன யோசிக்கிறது என விபரித்தல். அந்த விபரிப்பின் அடியாக நீ தரப்பிடம் இருந்து ஞானத்தை உய்த்தறிந்து முன்வைத்துக் காட்டல். அந்த ‘நீ’கள் எதுவும் தன்னைப் பற்றிய ‘நான்’தரப்பின் அவதானிப்பையோ புரிதலையோ இடையூறும் செய்வதில்லை. இடையீடும் செய்வதில்லை.
எம்டிஎம் தனது கவிதைகளில் ‘நீ’க்களை எப்படிக் கையாள்கிறார் என்பதை அவதானிக்க அவரது முகநூல் பக்கத்தில் தேடியதில், நீ-யினை உள்ளெடுத்துக் கொண்ட பல கவிதைகள் கிடைத்தன. அத்தனையும் அவரது ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பவைதான். இந்தக் கவிதைப்பிரதிகள் தனது எல்லைக்குள் நிகழ்த்திக்காட்ட முனையும் ஏனைய அரசியல் கதையாடல்கள் மீது நான் கவனம் கொள்ளவில்லை. ‘நீ’தரப்பு எப்படிக் கையாளப்படுகிறது என்பதை மாத்திரமே கவனப்படுத்த முனைகிறேன்.
அவரின் கவிதைகளில் வைக்கப்பட்டிருக்கும் ‘நீ’க்களும் கூட மேலே குறிப்பிட்டிருக்கும் வகைப்பாட்டிற்குள் அடங்குபவையாக(வும்) அமைந்திருக்கின்றன. இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்:
ஏதேனும் ஒரு வான் மூலையை
எப்போதும் கருமையாக்கும்
மேகங்கள் எங்குதான் இல்லை?
உண்மையில் மேகம் என்று
எதையும் அழைக்கலாம்
கம்பா நதி மண்டபத்தில்
உன் கண் கட்டி அடர்ந்திருக்கும்
நீலக்குவளை மலர்களை
நம் கண்ணாடிகளில்
படிந்திருக்கும் புகைமூட்டத்தை
உன் கண்களடியில் அடர்ந்திருக்கும்
தூக்கமின்மையின் கருவளையத்தை
நம்மிடையே இப்போது
கனத்திருக்கும் மௌனத்தை
வெட்கத்தினால் முன்பு
நீ மறைத்த கட்கத்தினை
நீ பதறி விலகிய
அரவாணியின் முகத்தினை
உன்னிடம் யாசித்த
சிறுமியின் கைகளை
நடைபாதையில் உறங்கும்
கிழவனின் கம்பளியை
நடுச்சாலையில் தூர் வாறும்
பெண்ணின் தலைக்கட்டை
ஆசுவாசம் கொள்
கோபுரங்களையும் சூழும்
மேகங்களுக்கு
வடிவமில்லை எனினும்
அடர்வதில்தான் அவற்றின்
பொருண்மை
துணுக்காவதில் இல்லை
இந்தக் கவிதையில் வைக்கப்பட்டிருக்கும் நான் தரப்பானது ஒருவரை முன்னிலைப்படுத்தி ‘நீ’ தரப்பாக மாற்றுகிறது. மாற்றியதும் முதலில் தான் கண்டடைந்த ஒரு ஞானத்தை, கேள்வியொன்றைக் கேட்பதனூடாக முன்வைக்கிறது. “ஏதேனும் ஒரு வான் மூலையை எப்போதும் கருமையாக்கும் மேகங்கள் எங்குதான் இல்லை? உண்மையில் மேகம் என்று எதையும் அழைக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு, நீண்ட பட்டியலை நீ தரப்பிடம் செய்யும்படி (ஆசுவாசம்கொள்ளென) உபதேசம் செய்கிறார். அப்படிக் கட்டளை பிறப்பித்துக் கொண்டுவந்து அதற்கான காரணத்தைச் சொல்லும் ஒரு கவிதைசொல்லியான ‘நான்’ தரப்பினையே இப்பிரதிக்குள் பார்க்கிறோம். அப்படி இறுதியாகச் சொல்வதையும் கூட ஞானமாக முன்வைக்கிறது. அக்கட்டளைகளுக்கு அந்த ‘நீ’ எந்தப் பதிலும் சொல்வதில்லை. எந்த மறுப்பையும் செய்வதில்லை. உடன்பாடையும் தெரிவிப்பதில்லை. ஒரு மௌனமாக்கப்பட்ட நீ-யின் மீது வினைபுரியும் ஒரு ‘நான்’னினை இதில் அவதானிக்கலாம்.
இக்கவிதைப் பிரதியானது, எம்டிஎம் குறிப்பிடும் பெக்டினின் dialogic imaginationனை உள்வாங்கிய பிரதியல்ல. இக்கவிதையில் வைக்கப்பட்டிருகும் ‘நீ’யானது பிறன்மையின் தரப்பினை உள்ளெடுத்து வடிமைக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இது மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டாவது வகையான ‘நீ’யினை உள்ளெடுத்ததாக அமைந்திருக்கிறது. அவருடைய இன்னொரு கவிதையோ முதலாவது வகைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
நான் எல்லோருடைய எல்லா
கவிதைகளையும்
தாரதம்மியமின்றிப் பாரபட்சமின்றி
ஒரு கணத்தையும் நழுவ விடாமல்
வாசிக்கிறேன்
ஒரு புதிய சொல்
திகைக்க வைக்கும் பதச்சேர்க்கை
ஒரு கண் சிமிட்டல்
ஒரு கை சொடுக்குதல்
ஒரு தோளில் தலை சாய்த்தல்
ஒரு சிறகடிப்பு
விரல்கள் பின்னிய ஒரு தருணம்
நீ இருக்கிறாய் எல்லாம் இருக்கிறது என்ற அறுதி
வெண் பளிங்குத் தரையில் சரிந்து சிதறும் பழங்களின்
கோர்வையின்மையில் ஒரு சித்திரம்
இரு காற்புள்ளிகளுக்கிடையே கனத்திருக்கும் மௌனம்
ஒரு சோப்பு நுரை நேர மெய்மை
அவிழ்ந்த கூந்தல்
பிரிந்த உதடுகள்
கனிந்த பார்வை என ஏதோ ஒரு பலவீனத்தின் சைகை
இருந்தால்
இந்தச் சாகரத்தின்
மெய்தீண்டிய விழிப்பிற்குப் போதும்
இந்தக் கவிதைப் பிரதியும் கூட ஒரு நெடிய லிஸ்ட்டை வரிவரியாக அடுக்குகிறது. இந்தப் பட்டியலிடலின் இடையே ‘நீ’யினையும், ‘நீ’யின் செயல்களையும் கவிதைசொல்லி உள்வாங்குகிறார். அந்த ‘நீ’யின் தரப்புத் தன்னிடம் என்ன செய்துவிடுகிறது தெரியுமா என விபரிக்கப்படுகிறது. ‘’சாகரத்தின் மெய்தீண்டிய விழிப்பிற்கு” அந்த ‘நீ’யின் தரப்பும் போதும் என்றாகிறது எனக் குறிப்பிடுகிறார். இங்கும் அந்த ‘நீ’ எதுவும் பேசுவதில்லை. கவிதைசொல்லியின் மெய்த்தீண்டிய விழிப்பிற்குப் பயன்படும் ஒன்றாகவே ‘நீ’ வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி வைக்கப்படுவதற்குப் பிரதான காரணமே நாம் வடிவமைக்கும் கவிதைப்பிரதிகளில் வைக்கும் கவிதைசொல்லியான ‘நான்’களை என்னவாகப் பேணிவருகிறோம் என்பதுதான்.
வாசிக்கக் கிடைத்த எம்டிஎம்-மின் கவிதைகள் அனைத்திலுமே வைக்கப்பட்டிருக்கும் கவிதைசொல்லி ஒரு ஞானியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். எங்கும் எதிலும் ஞானத்தைத் கூட்டிவாரிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். பிறன்மையின் தரப்பினை உள்வாங்க ‘நீ’தரப்பினை தனது கவிதைப் பிரதிகளுக்குள் உள்ளெடுத்துக் கொண்டதாகச் சொல்லும் எம்டிஎம் என்ன செய்திருக்கிறார் என்றால், பிரதிக்குள் வைக்கும் கவிதைசொல்லியான ‘நான்’னினை ஒரு ஞானியாகவே கட்டமைத்து வைக்கிறார். இந்த ஞானியான ‘நான்’ என்ன செய்கிறார் என்றால், ஒன்றில் தனக்குத் தெரிந்திருக்கும் ஞானத்தை நீ தரப்பிடம் அவதானித்துச் சொல்கிறார். அல்லது நீ தரப்பின் செயல்களில் இருந்து ஞானத்தைப் பிழிந்தெடுத்துக் காட்டுகிறார். அவரின் கவிதைப் பிரதிகளில், நீ தரப்பானது கவிதைசொல்லியான நானிற்கு ஒரு செயற்படுபொருளாகவே(Object) அமைந்திருக்கிறது. ‘நீ’தரப்பு எந்த மாற்றுக் கருத்தையும் சொல்வதில்லை.
தனக்குத் தெரிந்த ஞானத்தை நீ தரப்பிடம் அவதானிக்கும் ஒரு கவிதைப் பிரதிக்கு உதாரணமாக இதனைச் சொல்லலாம்:
நிறை கர்ப்பிணிப் பூனை ஒன்று
உன் வாசலருகே, அடுக்கக மாடிப்படி கீழே
சிறார் சைக்கிள்கள் சப்புச் சவறுகள் நடுவே
தளர்ந்து குடியேறிருக்கிறது
அதற்கு நீ வட்டிலில் சோறும் பாலும் கொடுத்தாய்
அவற்றைப் பூனை ஏறிட்டும் பார்க்கவில்லை
அடுக்கக சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்துப் படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்
ஓடிவிட்டார்கள்
பூனையின் ரோமம் உதிர்ந்தால் கூடப் பாவம்
என்று சொல்லிப் போனார் முதியவர்
உனக்கு இப்படியொரு பொறுப்பு
தலைமேல் ஏறிவிட்டதேயெனத் திகைத்திருக்கிறாய்
எலும்பில்லா மீன், கோழி இறைச்சி வாங்கி
வட்டிலில் வைத்து நீட்டுகிறாய்
அதையும் சீந்துவதில்லை பூனை
என்ன செய்ய என்ன செய்ய
பூனைக்கு ஒரு வாழ்க்கை ஏழு ஜென்மங்கள் என்கிறார்கள்
சுகப்பிரசவத்திற்குப் பௌர்ணமி தாண்டவேண்டுமாம்
எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும்
பூனை பிழைத்துக்கொள்ளுமாம்
பூனையோடு உறவு ஏற்படப் பூனையாகவேண்டும்
புத்தரோடு உறவு ஏற்படப் புத்தராக வேண்டும்
உன் அடிவயிற்றில் நோவு
அலை அலையாய் எழுகிறது
எந்தத் திட்டமிடுதலுமின்றி
பூனை உன்னைத் தன் இமைகளற்ற கண்களால் வெறிக்கிறது
மெதுவே நெருங்கி வந்து சிணுங்கி
மீனிறைச்சியைக் கடிக்கிறது
நீ அதன் தலையை வருட ஒப்புக்கொடுக்கிறது
ஒரு ஒளிர்வின் பிரகாசத்தில் நீ பிறக்கிறாய்
எது எந்த ஜென்மத்தில் என அறியாதபடிக்கு
சிதறிய அரி நெல்லிக்காய்கள் போலப் பட்டுக்குட்டிகள்
“பூனையோடு உறவு ஏற்படப் பூனையாக வேண்டும். புத்தரோடு உறவு ஏற்படப் புத்தராக வேண்டும்”. இப்படியொரு ஞானத்தைக் கவிதைசொல்லி நமக்கு அறியத் தருகிறார். இதனை counselling துறையில் ‘empathy’ எனச் சொல்வார்கள். பிரச்சினைக்குரியவரின் தரப்பில் நின்று உணர்தலும் உரையாடுதலையும் இப்படிக் குறிக்கிறார்கள். இதனை இக்கவிதையில் வைக்கப்பட்டிருக்கும் ‘நீ’ தரப்பு தன் அடிவியிற்றில் நோவாக உணர்கிறது எனச் சொல்கிறார். உண்ண முடியாமல் உப்பிய வயிற்றுடன் இருக்கும் பூனையின் அவசத்தைத் தானும் உணர்ந்ததன் பிற்பாடே, நீ தரப்பு வைக்கும் உணவை அப்பூனை உண்கிறது.
இந்தப் பிரதியினைப் பெக்டின் குறிப்பிடும் dialogic imagination ஆகக் கருதக் கூடிய ஒன்றுதான். அது கவிதையில் வைக்கப்பட்டிருக்கும் ‘நீ’ தரப்பானது அந்தப் பூனையின் தரப்பில் நின்று மேற்கொள்ளும் ஒரு விடயம் தானே ஒழிய, கவிதை சொல்லியான ‘நான்’ தரப்பிற்கும் ‘நீ’ தரப்பிற்கும் இடையிலானது அல்ல. பெக்டின் விபரிக்கும் dialogic imagination ஆனது, கதாப்பாத்திரங்களின் செயல்களைப் பிரதியாசிரியர் தனது நிலைப்பாடுகளுகளிலிருந்து நியாயப்படுத்தாமல் விலகிநிற்பதும் பிறன்மையை இயங்க விடுவதையும் பற்றியது. ஆசிரியரின் விழுமியங்களுக்கு முரணாகக் கதாபாத்திரங்கள் பேசவும் முடியும். ஆனால் இக்கவிதையில், ‘நீ’யின் அனுபவம் கவிஞரின் ஞானத்திற்குக் கீழ்ப்படிகிறது. அதன் வலி ஒரு பாடம் ஆக மாற்றப்படுகிறது.
ஆனால், கவிதை என்பது ஞானபோதனைக்கான மரபாகவே தமிழ் கவிதைகள் பேணிவரும் விடயத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் எம்டிஎம்-மினால், பெக்டின் குறிப்பிடும் dialogic imaginationனை ‘நீ’ தரப்பில் நிகழ்த்த முனையும்போது கிடைக்கும் பக்கவிளைவான பிரதிகள்தான் அவரிடம் சாத்தியமாகியிருக்கிறது எனலாம்.
உன் நந்தவனத்தின் மாயையில்
பூத்திருக்கிறது ஒரு அபூர்வ மலர்
அது
சிவனுக்கு ஆகாத தாழம்பூ
லட்சுமிக்கு ஆகாத தும்பை
சரஸ்வதிக்கு ஆகாத பவளமல்லி
யாருக்கும் ஆகாத அடுக்கரளி
என விலக்குதலின்
அருள் மூலையில்
உன் போலவே நின்று
உலகு அறியா
கருணையைத் தியானிக்கிறது
அதன் இதழ்கள்
எல்லையற்று விரிகின்றன
அதன் மௌனம் தீவிழியாய்
அனைத்தையும் ஊடுருவி பார்க்கிறது
அதன் இருப்பில்
அந்தி அதிர்ந்து அடங்குகிறது
அதன் ராம சோகம்
முக்தியின் வெட்டவெளி
உந்தன் இறுதி பற்றுதல்
உன் நரம்புகளின் இசை அதிர்வு
உன் தனிமையின் நித்தியம்
இந்தப் பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் ‘நீ’ தர்ப்பினை கவிதைசொல்லியான நான் தரப்பு அவதானிக்கிறது. அந்த அவதானிப்பிலிருந்து தனக்கான ஞானத்தைப் பிழிந்தெடுத்துக் காட்டுகிறார். அங்குக் கவிதைசொல்லியினால் ஞானத்தைக் கூட்டிவாரிக் காட்டுவதற்கான ஒரு செயற்படுபொருளாகவே ‘நீ’தரப்பு வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். ‘நீ’யின் செயல்களுக்கு விரிவுரை நிகழ்த்தி ஞானத்தைத் தருவித்துக் காட்டுகிறார். நீ தரப்பினையும் பேசவைத்தால்தான் என்ன? கவிதைசொல்லியாகிய ‘நான்’ தரப்பு ஞானப்பழமாக இருப்பதைக் கொஞ்சம் தவிர்த்துக் கொண்டால்தான் என்ன?
வாசிக்கக் கிடைத்த எம்டிஎம்-மின் ‘நீ’தரப்பினை உள்வாங்கிய கவிதைகள் எல்லாம் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. அவரின் கவிதைகள் எதுவும் நீ தரப்பினைப் பற்றியது அல்ல. நீ தரப்பின் மீது நிகழ்த்தும் ‘நானி’ன் அவதானங்கள் பற்றியது. அந்த அவதானங்களில் இருந்து தான் முன்வைக்கும் ஞானம் பற்றியதுதான்.
அவரின் கவிதைப் பிரதிகளில் வைக்கப்பட்டிருக்கும் ‘நீ’க்கள் மீதான வாசிப்பினை நிகழ்த்தியதில், கவிதைகள் கையாளும் நான்காவது வகையாக இன்னொரு ‘நீ’ யினையும் முன்வைக்கலாம்:
எம்டிஎம்மின் கவிதைப் பிரதிகளில் வரும் ‘நீ’ தரப்பானது, ‘நான்’ தரப்பின் செயற்படுபொருளாகவே (Object) அமைந்திருக்கிறது. ‘நான்’ தரப்பின் ஞானடைவுகளுக்குப் பயன்படும் பொருளாகவே வைக்கப்பட்டிருக்கிறது. நானின் அறிவொளிக்கு உதவுகிறது. இக்கவிதைப் பிரதிகள் பெக்டின் குறிப்பிடும் பிறன்மையின் தரப்புக் குரல்கள் அல்ல. தமிழ் கவிதை ‘பிறன்மைகளை’ பிரதிக்குள் குறுக்கிட்டு இடையீடுசெய்ய அனுமதிக்கும் வரை, பிறன்மைகள் தன்னிலையை எய்தும் வாய்ப்பு கிட்டப்போவதில்லை.