கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கருவிகளின் வழியே அவதானிக்கப்படுகிற கரங்களின் கதைகள்

வருணன்

பகிரு

பழைய போர்கருவிகளைச் சேகரிப்பவன்
ஆசிரியர் : ஜீவன் பென்னி
சால்ட் பதிப்பகம் ; ப :125 / வருடம் : 2023

“வரலாற்றை மிக நேர்த்தியாக ஆக்கிக் காண்பிப்பதை விட அதற்குள்ளிருக்கும் மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகளை நேர்மையாகச் சொல்ல வேண்டிய தேவை கலைக்கு எப்போதும் இருக்கிறது.” இத்தொகுப்பின் ஆசிரியர் குறிப்பிலிருக்கும் கவிஞர் ஜீவன் பென்னியின் வார்த்தைகளிவை. “அதிகாரத்தை எதிர்த்துப் பேசுவதென்பது அது தாங்கி நிற்கும் ஆயுதத்தின் கூர்மையை நோக்கி பேசுவதில் தான் துவங்குகிறது” என்பதாக அக்குறிப்புத் தொடங்குகிறது.தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளின் அடிநாதத்தையும் அவற்றின் நோக்கத்தையும் இவ்வாக்கியங்களே கச்சிதமாய் உணர்த்திவிடுகின்றன.

நினைக்கும்போதே கிளர்ச்சியூட்டும் நிரந்தரப் பேரதிகாரமெனும் பெருங்கனவின் மீது இச்சை கொள்கிற தலைமைகளுடைய தனிமனித வேட்கைகளே யுத்தங்களை வடிவமைக்கின்றன. அதற்கான காரணங்களையும் அவையே கண்டுபிடித்துக் கொள்கின்றன. பின் யுத்தம் ஒரு தேவை என்றாக்கப்படுகிறது. யுத்தம் தவிர்க்க இயலாத ஒரு தேர்வு என மக்கள் திரளை நம்பச் செய்கின்ற அளவிற்கு ராஜதந்திரங்கள் செயலாக்கம் பெறுகின்றன. யுத்தங்களே ஆயுதங்களை வழிநடத்துகின்றன. அதிகாரத்தின் கைகளுக்கு வந்து சேர்கிற ஆயுதங்கள் எளியவர்களின் சுயமழித்து மண்டியிடவும், கேள்வி கேட்க எழுகிற நாவுகளைத் துண்டாடவும் செய்கின்றன. உலகெங்கிலும், எக்காலத்துக்குமானது எனச் சொல்லத்தகுந்த, அழிவிற்கான முன்கதை இதுதான். அதிகாரத்தின் அரியணைக்கான கைகாட்டிகளாக என்றுமிருப்பவை ஆயுதங்களே எனும் தீவிரமான நம்பிக்கையின் விளைவாக அதிகார பீடத்தைக் கைப்பற்றுதலுக்கான செயல்திட்டங்களின் ஒவ்வொரு அடியும் ஆயுதங்கள் கொண்டே நகர்த்தப்படுகின்றது.யுத்த தர்மம் என்றொரு தனித்த தரும நியதியை அப்பெருவேட்கையே எழுதிக் கொள்கிறது.

யுத்தங்களின் வரலாற்றை அதில் வென்றவர்களின் ஆயுதங்களே எழுதுகின்றன. களிப்பூறிய அவைகளின் வெற்றி முழக்கங்களுக்கு மத்தியில் அவற்றின் பெருந்தேர்க்கால்களின் கீழே இழந்தவர்களின் நசிந்த குரல்கள் பெருமூச்சுகளாகக் காற்றில் கரைந்து காணாமலாகாமல், அவற்றைக் கலைஞன் கதைகளாகவும், துயர்மிகு பாடல்களாகவும் மாற்றி வைக்கிறான். மொத்தத் தொகுதியும் மூன்று பகுதிகளாகக் பகுக்கப்பட்டிருக்கின்றது.

உயிர் குடிப்பத்தைக் காட்டிலும் ஆயுதங்களின் முதன்மையான நோக்கமாக இருப்பது பயம் கிளர்த்துதல்தான். தூரப்பயணத்தின் இறுதியில் ஒரு அந்நிய நிலத்தில் கால்பதிக்கிற ஒருவனுள் கூட நினைவுப் பாதைகளின் வழியாக ஆயுதங்களால் பயத்தைச் சுரக்கச் செய்ய முடியுமென்பதை,

“எல்லோரும் உயிர் துறந்து விட்ட அந்நிலத்தில்

… கருகி விழுந்த முள்ளொன்று

என்றோ மணல் மூடிய ஒரு உடலைக் குத்திக் கொண்டிருக்கிறது.

அதன் துன்பம் வலியற்றது,

அதன் வாழ்வு துடிப்பற்றது,

அது ஏற்படுத்திடும் அச்சம் நெருடலானது.”

எனும் வரிகள் எடுத்துச் சொல்கின்றன. மனிதர்களுக்கும் தங்களது பெருந்தாகங்கொண்ட கனவுகளுக்கும் இடையில் சரியான இடத்தில் சரியான விதத்தில் அதிகாரம் ஆயுதங்களைப் பொருத்தி ஒரு பெரு நாடகத்தை நிகழ்த்தியபடியே இருக்கிறது. அதில் தலைமையைத் தவிர யாதொருவரும் துணைப் பாத்திரங்களே. கரிசனத்தின் திருவுருவென முளைவிடுகையில் தம் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்கிற அது தனக்குப் பாதகமான எதையும் அழிக்கிற போதும், தனது பாதைகளில் குறுக்கிடுகின்ற எதனையும் தகர்க்கிற போதும் அதற்கு ராஜதந்திரமென்றோ, ராஜ்ஜிய நலனுக்கென்றோ ஒரு பொது ஏற்புக்கான அழகான சொல்லாடல் கொண்டு அலங்கரித்துக் கொள்கிறது. ஆனால் அதன் செயல்பாடுகளின் பின்னணியை,

“அழுத்துவதற்குக் கடினமான அதன்

விசையில்

கொஞ்சம் எண்ணைகளிட்டு

மென்மைப்படுத்தியிருந்தான்.

சிறு சொல்லின் இனிமையைப்

போல,

தனக்கு முன்னால் நிற்பவரை

மென்மையாகத் துளைப்பதற்கே

எல்லாவகையிலும் தயார்

செய்கிறான்

தன் துப்பாக்கியை.

அதன் ரவைகளை.”

எனத் திரைவிலக்குகிற அதே வேளையில், ஆயுதத்தை அதனை ஏந்தியிருக்கிற கரங்களின் நோக்கங்களைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டுமெனும் சரியானதொரு அறிதல் முறையையும் அறிமுகம் செய்கிறது.

“கோபம் ஒரு துப்பாக்கியை உருவாக்குகிறது!

மன்னிப்பு ஒரு நீண்ட வரலாற்றை உருவாக்குகிறது!?

அழுத்தப்பட்ட ஒரு துப்பாக்கி அவ்வரலாற்றில்

மூடி மறைக்கப்பட்டிருக்கும் எலும்புகளை வெளியேற்றி,

அதன் கதைகளைக் கொஞ்சம் சொல்ல வைக்கிறது.”

என ஆயுதங்கள் ஒடுக்குவதற்கு மட்டுமின்றி ஒடுக்குதலுக்கு எதிர் குரலாகும் பயன்பாட்டையும் உடையவை என்பதனையும் கவனப்படுத்துகிறது.

“கணேஷ் மற்றும் பாரத் பீடிகளைச்

சுற்றிப் பழக்கப்பட்ட கைகளுக்கு

வந்து சேர்ந்த யிந்த ஆயுதங்களை

முதலில்

இறுக்கமாகப் பிடிப்பதற்குக் கற்றுக்கொண்டோம்.

பிறகு,

இத்தேசத்தில் யாருக்கெதிராக அதைச் சுழற்ற

வேண்டுமென்பதையும்.”

என்கிற கவிதை வரிகள், ‘நான் என்ன ஆயுதங்களை எடுக்க வேண்டுமென்பதை எனது எதிரிகளே தீர்மானம் செய்கிறார்கள்’ எனும் வாசகத்திற்கு இணையான செய்தியைச் சொல்கின்றன.

தொகுப்பில் உள்ள கவிதைகளின் பல வரிகள் வன்முறையினை மீண்டும் மீண்டும் வலிந்து எடுத்துக் காட்டுவதாக வாசிப்பவர் உணரலாம், ஒரு வேளை. பிரயோகிக்கப்படுகிற ஆயுதங்கள் மனித உயிர்களைக் குடிக்கின்றன என்பதைக் கவனப்படுத்துவதோடு ஒரு சம்பிரதாயச் செய்தி வாசிப்பைப் போன்று நிறுத்திக் கொள்ளாமல் அவற்றின் கோரத்தின் வீரியத்தையும், அவை தரும் உளவியல் தாக்கத்தையும், அவை செயல்படுகிற விதங்களையும் நுணுகிச் சொல்வதன் மூலமாக வாசகருக்கு வேறு செய்தி கடத்தப்படுகிறது. வன்முறையின் ஊற்றுக் கண்களான ஆயுதங்களைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற குரூரத்தின் நுண் சித்தரிப்பு வாசிப்பவருக்கு அதன் பாதிப்பின் ஆழத்தை உணர்ச்சிப்பூர்வமாகக் கடத்தவும், அதன் மீதான வெறுப்புணர்வை (aversion) உருவாக்குவதையும் உள்நோக்கமாகக் கொள்கிறதெனும் கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

****

நம்மைச் சுற்றி நடக்கிற பெரு நிகழ்வுகள் எல்லாமே பல பரிமாணமுள்ளவை. ஒற்றைக் கண்ணோட்டத்தில் அவற்றை அணுகுதல் அவை குறித்தான நமது புரிதலை மட்டுப்படுத்துவதாக அமைந்துவிடும். ஆயுதங்கள் கொண்டு அதிகாரம் பெருந்திரளான மக்களை அடக்கியாள்கையில், அந்த வல்லதிகாரம் ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை அல்லது இனக்குழுவை பாதிப்பிற்குள்ளாக்குவது ஒரு பக்கம் இருக்க, அது நுட்பமாக ஒரு தனிமனிதரின் உளவியல் மீது எத்தகைய தாக்குத்தலை நிகழ்த்துகிறது என்பதும், அது அவர் மீது என்னென்ன உள நெருக்கடிகளை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதுவும், அதனால் மனித உறவு நிலைகளில் ஏற்படுகிற சரி செய்ய முடியாத சிடுக்குகள் உருவாகும் விதங்களையும் ஆராயத் தொடங்கினால் அது முடிவற்ற துயரங்களைத் தன்னுள் தேக்கியிருப்பதை உணரலாம்.

ஆயுதங்களால் வழிநடத்தப்படுகிற ஒரு யுத்த களம் பிணங்களை மட்டுமல்ல, எண்ணிக்கையளவில் அதனைக் காட்டிலும் அதிகமான நடைபிணங்களை உற்பத்தி செய்கிறது. அவைகளுக்கு நாம் ஏதிலிகள் எனப் பெயரிட்டு வருந்திக் கொள்கிறோம். இனி ஒரு போதும் நினைவுகளில் இருந்து மீட்டெடுக்கவியலாத வசந்தத்தின் நாட்களைச் சுமந்தலைவது எத்தனை பெரிய வாதை என்பதை நம்மால் உளப்பூர்வமாக முழுமையாக உணரவே முடியாது. அடையாளமிழத்தலின் பெருவலியை ஏதோ சொல்லத்தக்க ஒரு அடையாளத்திற்குள் வாழுகிற சாமானியராக நாம் இருக்கும் பட்சத்தில் அனுதாபப்படலாமே ஒழிய ஒரு போதும் அசலாகப் பச்சாதாபப்பட இயலாது என்பதே யதார்த்தம்.

இப்படியாக ஆயுதங்களால் தங்களது கடந்த கால வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டு அநாதைத்தனம் முதுகிலேறி அமர்ந்த ஒருவரது துயரமும், அவரது அன்பிற்கான நிரந்திர ஏக்கமும், கடந்த காலத்தில் சுவைத்திருந்த அன்பின் ஞாபகமும் ஒரு சேர அழுத்துகிற மனநிலையையே பெருவாரியாக ‘மனிதன் -சகமனிதன் – ஆயுதம்’ என்கிற தொகுப்பின் இரண்டாவது பகுதி கவிதைகளில் பார்க்க முடிகிறது. அப்படியான ஒருவனின் மனக்குரலையே

“ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை

அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,

எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்

சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான்!”

என்கிற வரிகளில் உணர முடிகிறது. குரூரத்தின் எல்லைவரை சென்று மீண்ட ஒருவனின் மனதின் முன்பாக இரண்டு பாதைகள் பிரிந்து நீளும். ஒன்றில் அக்குரூரத்தின் அடர்சாயல் அவனையும் தொற்றும். இதன் மறுமுனையாகப் பிரிதொரு பாதையில் பயணப்பட்டு விடத்தின் அடிக்கசப்பை தீண்டிய நாவுடைய தன் வாயிலாக யாதொருவரும் அதனைச் சுவைத்துவிடக் கூடாது எனும் உள உறுதி உடையவராய் ஆகக் கூடும். அது மிகக் கடினம். (ஒப்பிடுகையில் உணர்வுகள் மறத்து நடைபிணமாதல் அதனிலும் எளிதுதான்.) ஆனாலும் துயரைத் திகட்டத் திகட்டப் பருகிய ஒருவனுக்கு இக்கடினமான மறு எல்லையைத் தொடுவது சாத்தியமற்றது என்றாகிவிடாது.

“எல்லாவற்றிலும் தலைகீழ் வடிவங்களையும்

புரிந்துகொள்பவன்

தன் வாழ்விலிருந்து வழிந்திடும் கசப்பின் துளிகளை

யாருக்கும் தெரிந்திடாத மன்னிப்புகளில் புதைத்திருக்கிறான்.

அதிலிருந்த மலரின் சுகந்தத்தைப் பாதைகளில் பரவ

விடுகிறான்.

சிறு சிறு வெறுப்புகளின் துளிகளை மிக இயல்பாக

சிறு புன்னகைகளின் கடந்து செல்வது போலிருக்கிறதது…”

தன்னிடம் திணிக்கப்பட்ட துயரின் கோப்பைகளைப் பிறிதொரு கரத்திற்குக் கைமாற்றாமல் இருப்பதென முடிவெடுப்பது துயரங்களின் தொடர்ச்சியின் இறுதி கண்ணியாய் தன்னைப் பாவித்துத் தன்னோடு அதனைத் துண்டித்துக் கொள்கிற பேரன்பின் வெளிப்பாடு.

அதிகாரத்தின் ஒப்புமை கூற முடியாத மூர்க்கத்திற்கு முன்பாக எவ்வளவு திட மனதும் சின்னாபின்னமாக்கப்படும். தனித்தன்மையினை முன்வைத்து அதன் தாக்குப்பிடிக்கிற திறன்கள் வேண்டுமாயின் கால அளவில் மாறக்கூடும். ஆனாலும் தன் இயலாமையை ஏற்றுக் கொள்ளாமல் தனது இறுதி மூச்சிருக்கும் வரை அம்மனதிட்பமானது தனது எதிர்ப்பை ஏதோ ஒரு விதத்தில் பதிவு செய்து தனது இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதைச் சொல்லும் விதமாகப் பின்வரும் வரிகள் இருக்கின்றன.

“சிரித்துக் கொண்டே காப்பகத்தின் மதில்களை

இடைவெளியில்லாமல் முட்டிக்கொண்டிருப்பது தான்

இந்த உலகில்,

அதிகாரத்திற்குக் கையளிக்கப்படும் மிக நிறைவான

தண்டனை.”

ஒரு வகையில் இது ஒரு பகடித்தன்மையுடைய கவிதை போலத் தோற்றம் காட்டினாலும், ஆழத்தில் அது மிக அடிப்படையான யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது.

அர்த்தம் புரியாவிடினும், குறைந்தபட்சம் காரணங்களை விளங்கிக் கொள்கிற வயது வந்தோர் யுத்த இழப்புகளை எதிர்கொள்ளும் விதத்திற்கும், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதே விளங்காத குழந்தைகள் அச்சூழலையும் அதனால் ஏற்படுகிற இழப்புகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதிலுள்ள வேறுபாடுகளை அவதானிப்பதென்பது மிக முக்கியமான ஒரு அம்சம். “யுத்தம் / சற்றே பெரிய பிடிவாதத்தின் இறுகிய மறுமொழி” எனச் சொல்கிற கவிஞர் வேறோர் இடத்தில்,

“… நமக்கு யுத்தங்கள் பற்றி முழுவதுமாகத் தெரிந்திடும்

வரையிலாவது,

சிறிய இடைவெளிகளில்,

நம் பெற்றோர்களைக் கைவிட்டிருக்கலாம் அந்தத் தோட்டாக்கள்.”

எனத் துல்லியமாய் அப்பிஞ்சு மனவோட்டங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளால் அதற்கு மேல் தர்கிக்க இயலாது என்பதைத் தாண்டி, இத்தகைய எளிய கோரல்களுக்கு மேலாக அவர்களின் சின்னஞ்சிறிய உலகிற்குள் எதுவுமே இல்லை என்பதே இதன் சாராம்சம்.

****

மானுடம் எத்தனையோ முறை அழிவின் விளிம்புகளில் நின்று தத்தளித்திருக்கிறது. மீளலின் எல்லா வழிகளும் அடைபட்டதாகத் தோற்றமளித்தாலும் ஒரு வழியைக் கண்டுபிடித்து – அல்லது உருவாக்கியேனும் - மீண்டெழுந்திருக்கிறான் மனிதன். வாழ்தலில் மீதான இச்சையே உயிர்களின் ஆதார சக்தி. அதுவே உயிர்களின் இருப்பிற்கான எரிபொருளாகிறது. கலை அவலத்தில் உழல்வோரின் பக்கமிருந்து பேசி அவர்கள் எதிர்கொள்கிற கோரங்களை எடுத்துக் காட்டுகிற அதே வேளையில், அவர்களுக்கான நம்பிக்கையின் கைவிளக்கையும் அளிந்து மீட்சியின் பாதையில் வழிநடந்திட ஜீவனூட்டுக்கிறது. பெருந்துயரங்களையே பிரதானமாகப் படையலிடும் இது போன்ற அடர்த்தியான ஆக்கங்கள் வாதைகளை, அது தருகின்ற வலிகள் மற்றும் ரணங்களைக் கவனப்படுத்துவதோடு சேர்த்தே ஒரு சிறிய சன்னலைத் திறந்து நம்பிக்கையின் காற்று உள்நுழைந்து ஆசுவாசப்படுத்தவும் வழி செய்கிறது. தொகுதியில் வருகிற மூன்றாவது பகுதியான ‘சகமனிதர்கள் ஆறுதல் ஆயுதம்’ இத்தகைய சன்னல்களைத் திறக்கிற கவிதைகளை நமக்குக் கையளிக்கிறது.

முழுமுற்றான நம்பிக்கையளித்தலோ, எல்லாமே மாறிவிடும் எனும் விளம்பல்களோ எப்போதுமே புனைவு மிகைகளே. அவை ஆறுதலளிக்கக்கூடும். ஆனால் அசலை உரசிச் செல்லாது. நிகழ் யதார்த்தத்திற்கு ஏற்கனவே அடிபட்டுத் துவண்டிருக்கும் மனங்களைத் தயார் செய்யாது. ஆனால் இப்பகுதியிலுள்ள கவிதைகள் மிகையற்ற எளிய நம்பிக்கைகளை, இனியும் உடன்வந்து நம்மீது கவியப் போகிற அதிகாரத்தின் அழுத்தமான நிழலையும் சேர்த்தே எடுத்துக் காட்டுகிறது.

“கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி

உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்?

எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச்

சொல்லிக் கடந்து செல்கிறானவன்.”

என்பது போன்ற நிறைய வலிகளையும், தொடர் வலிகளை மாத்திரமே தம் அனுபவ சேகராமாகக் கொண்டதால் மறத்துப் போகிற கட்டத்திலிருக்கிற மனிதர்களின் மிகையுணர்வுகள் வடிந்த குரல்களை இப்பகுதியின் கவிதைகளுக்குள் நம்மால் கேட்க முடிகிறது.

‘மனதிற்கான களிம்பொன்றைத் தேடுபவன்’, ‘அறத்தின் மிகச்சிறிய வடிவம்’, ‘எதுவுமே தெரியாதவர்களின் சந்தோசங்கள்’ போன்ற தலைப்புகளின் கீழ் வருகின்ற கவிதைகள் மேற்சொன்னது போன்ற ஆறுதலின் சாமரத்தை மெலிதாய் வீசுகிற அதே வேளையில்,‘புதிய அரசர்’ தலைப்பின் கீழ் வருகிற கவிதைகள் வடிவரீதியில் மட்டும் புத்தாக்கமடைந்து நீடிக்கும் அதிகாரத்தின் ஒடுக்கும் கரங்களையும் அதையும் எதிர்கொள்வதன் வழியாகவே வாழ இயலுமென்கிற நிலையிலுள்ள மனிதர்களைக் குறித்தும் பேசத் தொடங்குகின்றன. இவை எல்லாம் இருக்கவே போகின்றன. இவைகளுக்கு மத்தியில் நாமும் இருந்தே ஆக வேண்டும் என்பதையே இறுதியில் வைக்கப்பட்டுள்ள ‘சிறு துண்டு இனிப்பு’ம், கசப்பின் சிறு துண்டு’ம் சொல்ல வருவதாகக் கொள்ளலாம்.

“… அடைக்கலத்திற்கென ஏதோவொரு வாசலைத்

தட்டிக்கொண்டிருந்தவர்கள்,

போரில் சரணடைந்த உடல்களின் காயங்களுக்கு மருந்து

கட்டிக் கொண்டிருக்கின்றனர்.”

என்பதாக இத்தொகுதியின் கவிதை வரிகள் தொடுகிற இடங்கள் அத்தனை நுட்பமானவை.

போர்கள் சூழ் உலகமாக மாறிவிட்டிருக்கிற நிகழ்காலச்சூழலோடு பொருத்திப் பார்க்க இத்தொகுதியின் பல கவிதைகள் மிக உகந்ததாக இருக்கின்றன. அதே வேளையில் வேறெப்போதையும் விட அர்த்தம் பொதிந்த வாசிப்பை இதன் வழியாக ஒரு வாசகராய் நாம் கண்டடைய ஏதுவான காலகட்டமும் இதுதான் என்பதில் ஐயமில்லை.

மேல் செல்