கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ஒரு வெள்ளையன் கடல்வழியாக ஒரு கறுப்பனுடன் இணைக்கப்படாதவரை இருவருக்கும் தங்களது நிலப்பரப்பு என்பது ஒரு கிரகமாகவும் மற்றொரு நிலப்பரப்பு அந்நிய கிரகமாகவும் மட்டுமே புனைவாகிறது…

(தனது கட்டுரைத் தொகுப்பிலிருந்து ஜமாலன்)

மொழியும் நிலமும் என்ற கட்டுரைத் தொகுப்புக்குப் பிறகு 2010இல் வெளிவந்த ஜமாலனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற புலம் வெளியீட்டுப் புத்தகம்.

ஏறக்குறைய உலகின் அனைத்து நிகழ்வுகளும், புதிய கட்டமைப்புகளும் நிகழ்ந்துவிட்ட 19ஆம் நூற்றாண்டு தொடங்கி சமகாலம் வரை உருவான பல்வேறு மாற்றங்களின் ஊடாக கருதுகோள்களையும், சம்பவங்களையும், பிரதிகளையும், நவீன அரசியல் எழுச்சிகளையும் கலை இலக்கியத்தோடு சினிமாவரை எழுதிச் செல்கிறது இத்தொகுப்பு.

உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், சினிமா, ஈழம் எனும் வகைப்பாட்டில் கடந்த அறுபது வருட உரையாடல் மற்றும் போராட்டங்கள் யாவற்றையும் மனித மறுமதிப்பீடு செய்யும்வகையில் எதன் பிரதிநிதியாகவும் இல்லாமல், தனக்குமுன் பேசியவர்களின் குறிப்புகளையும் தோதான இடத்தில் இணைத்து வாசகர்களோடு ஒரு உரையாடலை நிகழ்த்திய விதத்தில் உழைப்புக் கூடிய மிக முக்கியமானதொரு அறிவு நூலாக இதைக் கருதலாம்.

இயற்கையை நனவிலியாகக் கொண்டு பரந்துபட்டு மனித மனம் தங்கள் புகலிடங்களை உருவாக்கிக் கொள்வதற்காக போராடிய வரலாறு மதம், தேசியம், காதல், யுத்தம் எனும் இவை மறுமலர்ச்சி யுகத்தில் எவ்வாறு குதர்க்கத்துடன் கட்டமைந்தது என்பதை அல்லது இப்பூமண்டலம் எவ்வாறு மனிதமையவாதமாகத் திரிந்தது என்பதையும் ஞாபகப்படுத்துகிறது இப்புத்தகம்.

அதிகார நிர்வாகத்துக்காக கெட்டிதட்டிப்போன நிறுவனங்கள், சீர்திருத்தப் போலி அமைப்புகள், தீவிர அரசியல் முயற்சிகள், வன்முறைகள், பாலியல் நம்பிக்கைகள் யாவும் தத்தம் யதார்த்தத்தை எப்படி இன்று இழந்துநிற்கின்றன, லட்சியவாதங்கள் எப்படி, எதற்காக திரிக்கப்பட்டன. மதம் மற்றும் அரசுப்பிடியில் இன்னும் அலைக்கழிக்கப்படும் சாமான்ய மக்களின் விளிம்புநிலை அவலங்கள், மரணங்கள், பெண்களின் நவீன இருப்பு, கலை இலக்கிய ஆதார உணர்ச்சிகள் போன்றவற்றை வர்க்கப் பார்வையோடு அணுகும் ஜமாலன், இத்தொகுப்பை ஒரு பின்மார்க்சியத் தளத்தில் அலசிப் பார்க்கிறார்.

’கலச்சார கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள்’, ‘குடிக் கலாச்சாரமும் கலாச்சாரக் குடிகளும்’, ‘மண்டோ பற்றிய வெள்லை அறிக்கையும் பெண் எனும் பேரச்சம்’, ‘வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள்’, ‘கற்றது தமிழ் கற்காதது’, ‘உலகமய காலனியத்தின் சோதனை விளையாட்டுகள்’ போன்ற கட்டுரைகள், மிகச் சமகால முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஜூடித் பட்லரின் பாலினமாதலில் தொடங்கி இஸ்லாமிய பெண்ணியம் வரை நீளும் விவாதங்கள், சமப்பால் தன்மைக்கான சீரிய ஆய்வாகவும் பகுத்தறிவு மற்றும் சூஃபியியல் சார்ந்த ஒரு பற்றற்ற தன்மையையும் பெண்களிடத்தே காண விழைகிறது. தொன்மங்களும் கதையாடல்களும் மறைவதில்லை என்ற பிரடெரிக் ஜேம்ஸனின் ஆய்வுக்கொப்ப, பெண்களுக்கு ஒரு தொன்ம அரசியல் வெளியை உருவாக்குவதில் ஜமாலன் கடினமாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். மிகப் பொறுப்பான, ஆண்நீக்கம் செய்துகொண்ட பன்மைத்துவமான கோர்ப்பு தொகுப்பின் இப்பகுதிகள்.

‘கலவரம் என்பது பெண்ணுக்கு அதீத பாலியல் ஆற்றல் உள்ளது என்பதையே தனது நினைவாகக்கொண்ட ஒரு வாக்கியம் ஆகும்’ என்ற, தனது முத்தாய்ப்புக்குள் ஆண்+பெண் இருமை எதிர்வுகளின் நெடிய போராட்டத்தை ஆதிக்க வெறுப்பின் அரசியலை, அமுக்கப்படும் பாலினத்தின் துயரங்களை உள்ளடக்குகிறார். இங்கே காலகாலமான மொழி, எழுத்து, பேச்சு யாவும் தற்காலிகமானது என்பதும் நம் ஞாபகத்தில் நிழலாடுகிறது. இத்தொகுப்பு முழுவதும் உடலரசியலின் தொடர்பாடல் என்றும்கூட கவனப்படுத்தலாம்.

‘பயங்கரவாதம் என்கிற பக்கவாதம் – வரலாறு நிகழ்த்தும் வன்முறை விளையாட்டுகள்’ என்ற கட்டுரை ஜமாலனின் ஆழ்ந்த உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடு. இந்திய இஸ்லாமியர்கள் தங்களின் அன்றாட லெளகீக யதார்த்த வாழ்வின் பாத்திரங்களின்மீது சுமத்தப்படும் பயங்கரவாத அடையாளத்தை எதிர்கொண்டு வாழவேண்டிய அவலத்தை இன்னுமான பலவேறு எண்ணங்களை வாசிப்பவருக்காகத் தூண்டும் இக்கட்டுரைகள் வாசிக்க எளிதான மொழியிலும் ஞாபகத்தின் அடுக்குகளில் பறக்கும் விடுதலைப் புள்ளினங்களின் நீட்சியாகவும் இருக்கிறது.

‘மண்ட்டோவின் கடித இலக்கியம்’ வழியாக அமெரிக்கமயம் என்னும் உலகமயப்போக்கு அதன்மீது அபத்த ஆசைகொண்ட உலக நடுத்தர மக்களின் வெட்கங்கெட்டத் தன்மையை மட்டுமல்ல; அமெரிக்காவின் சந்தை தொடாத இடமே இல்லை என்றளவில் பூரித கலசாரமும் எவ்வாறு பரவி வருகிறது, அது மற்றைய பூர்விக கலாசார வேறுபாடுகளை சீரழித்து மறையச் செய்கிறது என்பது நீளக்கூடிய பெரும் அச்சுறுத்தலையும் விவரிக்கிறது.

குறிப்பாக கவனிக்கும் பட்சத்தில், இக்கட்டுரைகளில் பெண் உலகின் முதிர்ந்த பேசப்படாத மொழித் தொனிகள் மறைந்திருப்பதைக் காணலாம். உரத்துப் பேசாத உலகின் பாதிப் பேச்சொலிகளை எழுத்துகளை பெண் மொழியின் வாயிலாகவே ஜமாலன் நிறுவ முயல்கிறார். மேலும் ‘ஒரு மனிதனின் நடோடி உணர்வு எல்லா கலாசார விழுமியங்களையும் தூக்கிப்போட்டு உடைப்பதன்மூலம் மட்டுமே நிலையான குடிமக்களை எதிர்க்கமுடியும்’ என்றும் இந்த நூற்றாண்டை அகதிகளின் நூற்றாண்டாகவும் வரையருக்கும் ஜமாலனின் கதையாடல்கள் சுவாரசியமானவை. வேறொரு மாற்றுக் கோட்பாட்டுக்கான முன்நகர்வுகள் எனவும் கூறலாம்.

தமிழவனின், ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பாலியல் வரலாறு பற்றிய அரசியல் புனைவையும் ஐரோப்பிய ரொமான்டிச, கீழைத்தேய மீட்சியையும் லூயிபுனுவலின் சினிமாவையும் இணைத்துப் பேசியிருப்பது அருமை. பல இடங்களில் கட்டுரையாளர் முதலாளித்துவ சமூகத்தின் நவீன கருத்துருவாக்கங்களின் செயலூக்கமற்ற முடிவு மூலதனத்தால் தள்ளிப்போடப்பட்டிருப்பதையும் நவீன முதலீட்டியப் பார்வைக்கும் பின்நவீன விளிம்புநிலைக் கதையாடல்களுக்கும் இடையே நிலவும் சமகாலத்தையும் பிரதிகளாக்குகிறார்.

பலவகையான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தொகுத்து பலதையும் உடைத்துக்காட்டும் கட்டுரையாளர், மார்க்சியநோக்கில் இந்திய வரலாறு காலத்தில் தவிர்த்திருக்கக்கூடிய, சுலபமான ஒரு வேலை இன்று எவ்வளவு மோசமான மதவிரோத, விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் புள்ளிவிபரங்களாக்குகிறார். பிரிட்டிஷ் சூழ்ச்சி தொடங்கி நவீன இந்திய ஆளும் வர்க்கத்துக்கு மத அடிப்படைவாதங்கள் எப்படித் துணைபோகின்றன என்பதை துல்லியமாக விளக்கும் இக்கட்டுரை பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்விஷின் (இத் தொகுப்பில் உள்ள மற்றொரு கட்டுரையின்) தொடக்க வரிகளுக்கு நம்மை கொண்டுசேர்க்கிறது.

‘நான் பன்மைவாதத்தை நம்புகிறேன். எல்லா மதத்துக்கும் பாலஸ்தீனத்தில் இடமுண்டென்று நம்புகிறேன். நான் ஜியோனிஸத்துக்கு எதிரானவன். அதே சமயத்தில் நம்பிக்கை இருப்பின், அடிப்படைவாதிகளைவிட மதச்சார்பற்றவர்கள் வலுவாகலாம் என்று நினைக்கிறேன். பார்க்கப்போனால், இப்போது மதச் சார்பற்றவர்கள் அடிப்படைவாதிகளைவிட வலுவாகவே உள்ளனர். நம்பிக்கை இருந்தால் அவர்கள் இதைவிடவும் வலுவாகக்கூடும். இதுவே இஸ்ரேலுக்கும் பொருந்தக்கூடிய உண்மை’

இந்த பரந்துபட்ட உணர்வின் நனவிலி மனிதன்தான் ஜமாலன். வாதப் பிரதிவாதங்களையும் தர்க்கங்களையும்விட வாழ்ந்துகாட்ட எத்தனிக்கும் பண்புநிலை நோக்கமே அறமாகும் என்பதன்வழி எதன்மீதும் குழு மனப்பான்மையற்று, அதைத் தூண்டாமலும் எழுதும் வலிமை ஒரு மார்க்சியருக்கு அன்றி யாருக்கு வாய்க்கும். அன்பின் வழியது உயிர்நிலை.

இப்படியாகத்தான் ‘மனிதமையவாதத்தின்’ அழுக்காறுகள், ஆவலாதிகள் கரைக்கப்பட்டு, பன்மைத்துவமான, எவ்வுயிர்க்குமான இடமாக பூமியை விட்டுச் செல்லும் வழிகளை எதிர்காலத்தில் இடப்படுத்தமுடியும். யாவும் வர்க்கத்தின்பாற்பட்ட நலன்களுக்கான முன்யூகமேயன்றி முரணியக்கத்தின் மனம் ஆதியில் கட்டமைக்கப்படாத உற்பத்திக்கான தொன்மம்தான். இதில் புத்துயிர்ப்புக் காணாத மனிதம் என்ன மனிதம். இந்த உலகை உடமைச் சமூகத்தின் பெருவளர்ச்சி என்றும் அதன் சொத்துகள் மிகப் பிரம்மாண்டமானதாக, சாதனையாக, ஒளி நிறைந்ததாக ஆக்கியிருப்பது எது, எதற்கு, ஏன் இப்படி என்ற கேள்விக்கு அதை உண்டாக்கியவர்கள் சிறுத்து நிற்கத்தான் வேண்டும்.

ஜமாலனின் இத்தொகுப்பு மேற்கு மற்றும் கிழக்கு, கூடவே அராபியத் தொன்மங்களின் நாகரிகக் கலவையாகவும் வித்தியாசங்களின் பன்மைத்தன்மைகளுக்குரிய செவ்வியல் பண்புகளையும் அவற்றின் உற்பத்தி உறவுகளுக்குமான இருத்தல் பற்றிய அவதானங்களையும் பன்மைக் கலாசாரங்களின் நுண் அரசியல் பிடிமானங்களையும் ஆவணப்படுத்துகிறது. சோசலிச வீழ்ச்சியெனும் மாயையை நீக்கி கம்யூனிசத்தின் லட்சிய பாவங்களின் நடைமுறையை பலவற்றுக்கும் விசாலப்படுத்துவதோடு, அதற்கான தொன்வரைவுகளையும் ஆய்ந்து செல்கிறது. நவீனத்துவ காலகட்டத்தின் தலையாய எழுச்சி மார்க்சியமே!

வளைகுடா, இந்தியர்களின் உழைப்பு பூமியாகவும் அதன்வழியே உண்டாகும் எதிர்கால நம்பிக்கைகள் மற்றும் பாதுகாப்பின்மைகள் பற்றிய விவரணைகள் சொல்லில் எழுதமுடியா சிக்கல்களை கொண்டிருப்பதாகக் காண்கிறோம். யூரோவும், டாலரும் காரைக்குடி இந்தியர்களை தினாரில் கவலைப்படவைக்கும் கதைகளைப் படிக்கிறோம். அமீரகமயமாக்குதல், சவுதிமயமாக்குதல் போன்றவற்றால் எதிர்கால கூலி இந்தியர்களின் வீடு திரும்புதல் என்னவாகும் என்பதும் டாலர் கேள்விதான். ஹேராம் படம் நாவலில் இருந்து சினிமாவாக இல்லாமல் சினிமாவே நாவலாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நுட்பமான அவதானிப்பு. நவீன வாழ்வின் பிரமாண்டத்தின்முன்பு தனது ஆற்றலை இழந்துவரும் மனிதன் மனப்பிறழ்வு மற்றும் வன்முறை பழமைக்கான ஏக்கம் முதலியவற்றால் பீடிக்கப்படுகிறான் என்பதையும் கொலை, பாலுறவு வன்முறை போன்றவை பின்நவீன காலத்தின் கேளிக்கையாகவும் மூலதனத்துக்கு முன்பான வேடிக்கையாகவும் மாறி வருவதை ‘கற்றது தமிழ்’ பட விமரிசனம் மூலம் ஜமாலன் நிதர்சனப்படுத்துகிறார்.

இந்த முழு நூலையும் படிப்பது சமகாலத்தில் தனி மனிதத் தன்னிலைக்கு ஒரு வரலாற்று அறிவைக் கொடுக்கிறது. இன்றைய புத்தகச் சந்தைகளின் நூலகங்களின் புழங்குமிடங்கள், கலை இலக்கியம், அரசியல், உலக நடத்தைகள், அதன் பண்பாட்டு விஞ்ஞான வளர்ச்சிகள், பயங்கரவாதங்கள், ஏகாதிபத்திய சக்திகள் வழியாக ஒரு பிரதேச மனிதனை உலக மனிதனாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த உலக மனிதன் யார் எனும் இடத்தில்தான் தொடங்குகிறது ஜமாலனின் இக்கட்டுரைகள். மிக விரிவாக எழுதவேண்டிய பல அம்சங்கள் இதில் இருக்கின்றன என்றாலும் இத்தகைய தொகுப்புகள் கவனம்பெறாமல் போவது தமிழ்ச்சூழல் பற்றிய அயர்ச்சியத்தான் தருகிறது.

ஏறக்குறைய 1990களில் தொடங்கி 2010 வரை சுமார் இருபதாண்டுகளில் ஜமாலனால் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் மதம், பாலியல்பு, பெண், பொருளாதாரம், கலை போன்றவற்றின் பூர்ஷ்வா மாயைகளைக் களைந்து மார்க்சிய அறிவுத்தோற்ற விளக்கத்தில் நவீன மனிதமையை மீளுருவாக்கம் செய்வதாகக் கூறலாம். நவீனத்துக்கான அறம் பற்றிய உரையாடல்கள்.

மனிதன் தன் இறப்பை முன்கூட்டியே அறிந்தவன் என்ற முறையில், அதன் இடைவெளியில் ஏதோ கோட்பாட்டுக்கு உள்ளாகவேண்டிய நிரூபணமும் அனைத்துக்கும் பிறகு ‘நான் யார்’ என்ற கேள்வி மீள்வதும் மனிதன் மீது ஒரு ஆன்மீகத் தீர்ப்பை எழுதுவதற்கு காரணமாகிவிடுகிறது. ஆன்மீகத்தின் தர்மகர்த்தா முறையை வர்க்கநலனில் வைத்து கருவறுத்த மார்க்சின் விஞ்ஞானப் பார்வையை நடைமுறைக்குக் கொண்டுவரவும் நவீன கோட்பாடுகளை அரசியலில் அறத்துக்கு நிபந்தனையாகவும் மக்கள்வழி பூமியின் யதார்த்தத்துக்கு ஒரு பாலமாக செயலாற்றுவதற்கும் இத்தகைய நூல்கள் வழி செய்கின்றன.

மிக விரிவான எடுத்துரைப்புகள், பின்நவீனத்துவ நியாயப்பாடுகளின், எடுகோள்கள், நவீன புதிய சமூகத்துக்கான அறிவுஜீவித ஒத்துழைப்புகள் என விரிந்தாலும் கிரிக்கெட், நீலப்படங்கள் (சாருவின் பனுவலாக்கம் என) இளைஞர்களின் ஈடுபாட்டின் மீதான விஞ்ஞானப் பார்வையோடு இன அழிப்புதான் என்றும் ஏகாதிபத்திய வெறிகளால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலம், சாதிய உள்முரண்களின் கோளாறுகள் என பருந்துப் பார்வைகளும் இதில் இருக்கிறது. குடியைப் பற்றி இவ்வளவு விரிவான செய்திகள் வாசகர்களை ஆச்சரியப்படுத்தும். நிதானமாக உள்வாங்கவேண்டிய புத்தகம். பல்வேறு உலகச் சிந்தனையாளர்களின் எண்ணங்களை கலைத்து அடுக்கி நமது நவீன இருப்பைத் தூண்டும் ஜமாலனின் இத்தொகுப்புக்கான மதிப்புரை அவரின் சொற்களில் முடிவதுதான் பொருத்தம்.

‘வானம் பொய்த்துவிட்டது என்பதைப்போல மார்க்ஸியம் பொய்த்துவிட்டது என்ற தவளைக்கூச்சலில் எனக்கு நம்பிக்கையில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறையும் இருக்கும்வரை மார்க்ஸியத்தின் இருப்பு என்பது தவிர்க்கமுடியாதது. உண்மையில் சோவியத், சீனா சீஸோலிங்க்விஸ்புக் வரை அல்தூஸர் முதல் ஃபூக்கோ, தெல்யூஸ் கத்தாரிவரை மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள்தான்’

‘பன்னாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியிருக்கும் அரைக்காலனிய பண்பாட்டுச் சூழலில் நாம் பழைய வகையில் இன்றைய பிரச்னைகளை எதிர்கொள்ளமுடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப் பிரச்சினைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்ஸிய நோக்கிலிருந்து பேசவேண்டியதுள்ளது’

பின்குறிப்பு: வாழ்வுறுதி, விருப்பவேட்கை போன்றவற்றில் தாபத்துடன் இயங்கும் ஒரு தன்னிலையின் மீது லட்சியவாத பெருஞ்சுமையை சுமத்தி வழிநடத்துவது, அதன் நடத்தையின் மீதான கண்காணிப்பு ஆகிறது. அரசு வடிவம் என்பது குற்றம், தண்டனை, உற்பத்தி, காதல், பொருட்சேதம் அனைத்திலும் ஒரு ரெவின்யூ இன்கம் வருகிறதா எனப் பார்க்கும் நிறுவனமாகவும், மக்கள் உளவியலின் மீது பாராமுகத்தையும் கொண்டு இயங்குவதால், அனைத்துக்கும் எதிர்வடிவம், விளையாட்டுத்தனம், அனார்க்கிசியப்பண்பு உருவாகிக்கொண்டு வருவது, விளக்கத்தை மறுத்தல் போன்றவற்றின் மூலம் நவீனத்துவத்தின் பல நூற்றாண்டுகால முழுமையை, பின்நவீன தன்னிலைகள் நிராகரிக்கின்றன. மக்களின் வாழ்வை ஒழுங்கின்மை என்று வர்ணித்த, மதமரபான அரசுகளே மிகக் கேவலமாக இழிந்தபின்பு, அவை குற்றங்களை ஒடுக்கும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதற்கிடையே தோன்றும் பின்நவீனத்துவப் பகடிகளை ஜமாலனின் கட்டுரையில் மெலிதாகக் காணமுடிகிறது. இத்தகைய பகடிகளை இன்றைய விளிம்புநிலை மனிதர்கள் கூட்டிணைவின்றி உலகின் பல இடங்களில் நிகழ்த்துகிறார்கள். முழுமையடைய விரையும் நவீனத்துக்குள்ளேயே அதன் அதிகாரம் விரிசல்விடும் போக்குகளைத்தான் பின்நவீனத்துவம் அரசியல்படுத்துகிறது. மற்றபடி, அது எதையும் முழுமைப்படுத்துவதில்லை என்பது அதற்கான குற்றச்சாட்டு இல்லை.

ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும்  காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும்  உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால்  ஒருவகையில்  தன் வலியின்  மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக  வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும்  போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன.

 அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் எதிரெதிர் நிற்கும் பரிவர்த்தனைகளும் வாசிப்பு மனதில் அல்லது கடந்து போகும்  வாசக வாழ்க்கையில் வழித்துணையாகவோ அல்லது மறந்து போதலின் நினைவாகவும் உறவு கொள்வதன் மூலம் கவிதைகள்  மொழியில் பலவாறாகத் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதும் நேர்கின்றன. அந்த வகையில் கவிதைகள் அன்றாடத்திற்கு அப்பால் பெரும் தத்துவத்திற்கோ நீண்ட கால உண்மைகளுக்கோ அல்லது அதன் அதிகாரத்திற்கோ ஒருபோதும் முகம் கொடுப்பதில்லை.

இன்றைய நவீனமய சூழலில் நமது வாழ்விடத்தின் மூலை முடுக்குகளில் இருந்து ஒரு மொழியை ஒரு கவிஞர் சேகரித்துக் கொண்டிருக்கிறார் எனில் அது தன் சூழலாகவோ அல்லது தான் ஈடுபட்ட ஒன்றோ அல்லது தப்பிச்செல்லும் பாவனையாகவோ பிறரை அழைத்துச் சொல்லும் இருப்பின் கதைகளாகவும் அவை வடிவம் பெற்று விடுவதைத்தான் பல நாள் சேகரித்து எழுதிய ஒரு தொகுப்பாக நாம் வாசிக்க துவங்குகிறோம்.

நாகர்கோவில் வில்லுக்குறியச் சேர்ந்த கவிஞர் ஆர்த்தி அமுதா ஏற்கனவே ஒரு சிறுகதை தொகுப்பை எதிர் வெளியீட்டில் கொண்டு வந்துள்ளார் .அவரின் முதல் தொகுப்பான உறுமீன் காலத்துக் கொக்குகள் எனும் இக்கவிதை நூலுக்கு ஒரு முன்னுரை கேட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக அதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

எந்த ஆழ் நுட்பங்களையும் பெண் மனம் ஒரு சிறுமியை போல நம்மிடம் ஒப்பித்து விடுகிறது இயற்கையை அழித்தும் வளர்த்தும் வாழ்ந்த வகையில் பெண்தான் அதன் மீது  மிகுந்த பொறுப்புணர்வுடன் அல்லது குற்றங்களின் ஈவாகவும் நடந்து கொள்கிறார் என தோன்றுகிறது.

இவரது கவிதை  எங்கிலும் மழைக்காலமும் பசும் தாவரங்களும் பறவைகளும் வீடும் வெளியும் தெய்வ சங்கற்பங்களும் ஊடாடிச் செல்வதைக் காண முடிகிறது.

காதலும் கனிந்த மனமும் அச்சமும் ஆவலும் புறவயத்தின் அமைதியில் அல்லது நெருக்கடியில் அகம் காண்கின்றன.

ஒருவர் தன் வாழ்வின் அனுபவத்திலிருந்து கவிதையை முன் வைக்கிறாரா அல்லது அதை மறக்க முயல்கிறாரா பிறகு அவரது தேடுதல் என்பது ஏன் இனம்புரியா வெளியின் மர்மமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிக்க தோன்றுகிறது.

குடும்பத்தின் அத்தனை பாடுகளையும் குழந்தைகளையும் கொண்டிருக்கும் போதே தான் இங்ஙனம் பெண்களுக்கு நேர்கிறது.

"வாசல் அளவே தெரிகிறது வானம் சின்னத் துவாரங்கள் வழியே வந்து போகிறது காற்று"

"செல்லும் வழியெல்லாம் முட்களைப் பரப்பி சென்றான் பாதங்களைக் காயப்படுத்த"

"மைனாக்களுக்கும் அவளுக்கும் நெல் பொறுக்கும் பந்தயம்"

"காற்றாடியின் சிறகில் அடிபட்டு விரித்த சிறகுகளோடு தத்தளித்து அடங்கிய பூச்சிகளையும் நினைவுகளையும் எடுத்து வெளியில் ஊற்றினேன்"

என்றெல்லாம் ஊர்ந்து பரவும் கவிஞரின் மொழி முழுவதும் இருப்பின் நினைவுத்தடங்களாய் மறைக்குறிப்புகளாய் ஆயினும் வலிமையான ஒரு தன்னிலையாய் கவிதைக்குள் தடம் பதிக்கவே முயன்றிருக்கிறது.

இரவு அதன் தனிமை மெல்லிய சப்தங்கள் நாய் குறைப்பு அன்றாடம் புழங்கும் வீதி அனைத்துடனும் தன்னுணர்ச்சியை கலக்கும் இவரது கவிதைகள் இன்றைய  நவீன வாழ்வின் உளவியல்ப்பாங்கை மென்மையாகவே எடுத்துரைக்கின்றன.

நீண்டகால குடும்ப அமைப்பின் வரலாற்று தொடர்ச்சியில் ஆர்த்தி அமுதாவின் இக்கவிதைகளும் நவீனத்துவத்தின் போதாமையை அரசியலாய் அங்கலாய்ப்பாய் முணுமுணுக்கின்றன. தன் வாழ் இடத்தில் தன்மானமிக்க மனிதர்களையும் மனுஷிகளையும் கூட இவர் கவிதையாக்கி இருக்கிறார். குடும்பத்திற்கு வெளியே பிறரை நேசிக்க முடியாத எல்லைகள் குறுக்கப்பட்ட இடத்தின் துக்கமும் இளமையான அல்லது இளமைக்கான மறுபரிசீலனையும் இவரது கவிதைகளின் சிறப்பு என்று சொல்லலாம்.

அமைப்புகளின் வேரோடிப் போனவரைவெல்லைகளை மீறி தற்சார்பான சுயமரியாதைக்கு தன் கவிதைகளைப் பழக்கிக் கொண்டுள்ளன இக்கவிதைகள் என்றாலும் மிகையாகாது "மழை வெயில் காற்றுக்கும் தன்னை பதப்படுத்தி வேறு இடம் கூடி முளைக்கத் துவங்கின தானியங்கள்"

"திண்ணைகள் இல்லா வீடுகளில் அவள் உட்காருவதில்லை ஒவ்வொரு வீட்டின் முன் நின்று சாபமிட்டு செல்கிறாள் உக்கார இடம் தராதவீடு ஒய்யாரத்தில் தொங்குகிறது"

"கூரைகளில்லா என் வீட்டில் பறவைகளின் எச்சங்கள் நிறைய உண்டு தடுமாறிய போதகர் கண்களால் மொட்டுக்களை மிரட்ட சொல்லிக் கொண்டார் குழந்தைகள் என்னிடத்தில் வர தடை பண்ணாதிருங்கள்"

நாம் வாழும் வழியில் சூழலில் எத்தனையோ  எண்ணங்கள் வலிகள் கோபங்கள் பொறாமைகள் பிறகு நட்புகள் உறவுகள் அண்டை அயலார்கள் பயணங்கள் வாசிப்புகள் என்றெல்லாம் நீளும் போது அவற்றை அனுசரித்து அதற்கு மேலும் தன் சுயமறிய வேண்டியது நற்செயலாகிறது. அந்த வகையில் அமுதா ஆர்த்தி தன்னுடைய முதல் தொகுப்பு மூலம் நவீனக் கவிதைக்குள் முக்கியமான சலனங்களை நிகழ்த்தியுள்ளார்.

அனுபவத்திற்கும் வாசிப்பிற்கும் இடையே சில கவிதைகளில் பிரத்தியோகமான உள் மன உணர்வுகள் பொதுத்தன்மை பெறுவதில் இருந்து வாசக பரப்பைத் தாண்டி செல்கிறது. அதை தவிர்க்கத்தான் முடியாது என்றாலும் அடுத்தடுத்த தொகுப்புகளில் இன்னும் பன்முகம் காண அவருக்கு வாய்ப்பு இருக்கிறது . உணர்வுகளின் எழுச்சிகளில் அல்லது மற்றவரோடு கொள்ளும் உறவில் எளிமையும் இயற்கையும் கலந்த அற்புதமான ஒரு பெண் வடிவம் அமுதா ஆர்த்தி ஆண் பெண் உறவுகள் காதல் காமம் போன்ற விவகாரங்களில் இன்றைய தீவிரவாத தன்மை அல்லது  அதன்சாயல் இவர் மீது படியவில்லை என்றாலும் உள் நடுங்கும் வீரியம் கொண்டவர் மற்றும் எதிர்மறைகளில் கேள்விகளை வைப்பவர் என்கிற வகையில் நமது வாசிப்பிற்கு தோதாகிறார்

இயற்கையின் புதிர்களில்  இருந்து அனைத்திற்கும் மறை மனம் கொடுக்கும் கவிஞர் இத்தகைய தன்னுணர்ச்சி பாடல்களில்  முறையாகவும் ஆழ்ந்த நுட்பத்துடனும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இயற்கையும் பெண் மனமும் கலந்து உறவாடி இன்பம் கண்ட இக்கவிதைகள் நமக்கும் ஒரு நல்லறத்தை போதிக்கின்றன அல்லது நட்பை பெருக்குகின்றன. அவர் மேலும் எழுதிச் சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்.

செல்வ சங்கரனின் ஆறாவது தொகுப்பான ‘மத்தியான நதி’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘பறவை பார்த்தல்’ தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது. கவிதையெழுத முனைபவர்களின் ஆரம்பகாலப் பிரயாசைகள் எத்தனங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாமென்றாலும் இரண்டாவது தொகுப்பான ‘கனிவின் சைஸ்’லிருந்து கவிதையின் நெடிய போக்கில் தன் இடத்தை உறுதிப்படுத்த விரும்பும் அவருடைய முயற்சிகள் தொடங்கியதெனலாம். சொற்களின் குறைவான பயன்பாடும் அதன்மூலமான எல்லையற்ற அர்த்தவிரிவும்தான் கவிதையின் பொது அடையாளமாகக் கூறப்படும் சூழலில் அதற்கு நேரெதிரான வகைமாதிரியாகச் செல்வசங்கரன் தனது கவிதைகளை வெளிப்படுத்துகிறார். ஒரு இலக்கியத்தின் போக்கில் அரிதாக எழும்பும் குரலை அவதானிப்பதும் மதிப்பிடுவதும் இன்றியமையாததாகிறது.

செல்வசங்கரனின் கவிதைகளைக் குறிப்பிடும்போது பொதுவாக அதன் சலசலப்புத்தன்மையை முதலில் அவரையறிந்த வாசகனுக்கு நினைவில் எழக்கூடும். கவிதையின் பண்பாகவும் குணாம்சமாகவும் யாராலும் மொழியப்படாத தமிழ்க் கவிதைப்பரப்பில் இதற்கு முன் கண்டிராத இத்தகைய குரல்தான் செல்வசங்கரன் குறித்த முதல் படிமமாக வாசகனிடம் படிந்திருக்கும். கவிஞனை அவனுடைய வரிகளாலேயே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கும் பொதுவான வாசிப்புப் பழக்கத்திலிருந்து செல்வசங்கரனின் இந்தப் போக்கு அத்தகைய வகைமைக்கான நேரெதிர் போக்காக அமைகிறது. நவீன கவிதையின் பண்பே வாசகனின் பங்கேற்பையும் உழைப்பையும் கோருவதாக இருக்கும் பட்சத்தில் செல்வசங்கரனின் இந்த லாவகமான நிகழ்த்துதல்களை மீறி கவிதையின்   வாசகனிடம் ஏதேனும் ஒரு சாராம்சமாகச் சேகரமாகிறதா என்ற கேள்வி அவரை வாசிப்பதிலிருந்தே எழுகிறது.

கண்ணாடிச் சத்தம் தொகுப்பிற்குப் பெரு.விஷ்ணு எழுதியிருக்கும் விமர்சன உரையிலிருந்து சில அவதானிப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.

1. சலித்துப்போன யதார்த்தங்களிலிருந்து விலகலை வேண்டும் அகமானது தனது வினோத தன்மைகள் மூலமாக உலகைக் காண விரும்புகிறது.

2. இந்த வினோதத் தன்மைக்காக அவர் எடுத்துக்கொள்ளும் அபத்தமானது சாதாரணங்களின் மிகைப்படுத்தலாக அமைகிறது.

இந்த இரண்டும் செல்வசங்கரன் தனது எழுத்தில் புனைந்துகாட்ட விரும்பும் அவரின் படைப்புலகத்தைப் புரிந்துகொள்வதற்கான சரியான புள்ளியாகும். பொதுவான ஒழுங்குகளாலும், கட்டுப்பாடுகளாலும், நிபந்தனைகளாலும் சமூக நிறுவனங்களுக்கு உகந்த பாவனைத் தன்மையே வாழ்வாக மாறிவிட்ட சூழலில் அத்தகைய பாவனைகளைப் பல இடங்களில் தனது எள்ளல் மூலமும் பகடி மூலமும் செல்வசங்கரன் எதிர்கொள்கிறார். இக்கவிதைகளை வாசிக்கும்போது பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் ஒவ்வொரு காட்சியையும் பிரமிப்புடன் உணர்த்துவதற்காகவே பெற்றோரிடம் நாடகப் பாங்கில் விஷயங்களை விளக்கிக்கூறும் பாவனைதான் நினைவுக்கு வருகிறது. கவிதையின் எடுத்தல் முறைகளில் நவீன கவிதைகளின் தீவிர பாவனையை முதலில் கலைக்கிறார்.

இந்தக் கலைத்தலின் இலக்கிய நோக்கு அல்லது திட்டமென்பது என்னவாக இருக்கிறதென்ற கேள்வி அவரின் எழுத்து முறையிலிருந்து தொடர்ந்து எழுகிறது. உணர்வுகளையோ அல்லது அரூபத்தன்மைகளையோ ஒரு திடப்பொருளாக மாற்றிக் கவிதைக்குள் புழங்கவிடுவதன் மூலம் தன்னுடைய எடையின்மையை மறைத்துக்கொள்ள அவை முயல்கின்றன. தொடர்ந்து பார்க்க முடியாத தொட்டுணர முடியாதவற்றைத் திடப்பொருட்களின் தன்மையில் வரித்துக்கொண்டு கவிதைகள் தொடர்ந்து தன்னுடனேயே தருக்கித்துச் செல்கின்றன. இது பொதுவான நவீன கவிதை முறைகளுக்கு எதிரான ஒரு கலகச்செயல்பாடாக இருப்பதற்கான பிரஞ்ஞை பூர்வ சட்டகங்களை இம்முயற்சிகளில் காண முடிவதில்லை.  உரையாடல் தொனியில் அவை தனக்குத் தானே தர்க்க நியாயங்களை விளக்கிக்கொண்டு வாசகனுக்கு எப்படி வேண்டுமானாலும் என்னைப் புரிந்துகொள் என்பது போல ஒருவித தோற்ற மயக்கத்துடன் முற்றுப்பெற்று விடுகின்றன.

சொறி

வீட்டுப்பக்கத்தில் தெரு நாய் போட்ட நான்கு குட்டிகள்

யார் வீட்டில் சாப்பாடு கிடைக்குமென அலைந்து கொண்டிருக்கின்றன

நான்கில் ஒன்று சொறிப் பிடித்தது

அது ஓயாமல் என் காலுக்குள்ளே சுற்றி சுற்றி வருகிறதென

கல்லை எடுத்து குறி பார்த்து அதன் மீது ஒன்று விட்டேன்

கீழே விழுந்தது எழுந்திருக்கவேயில்லை

பதற்றத்தில் கை கால் வெடவெடத்துச் செய்வதறியாமல் முதலில்

ஓடி ஒளியத்தான் தோன்றியது

மனசு கேட்காமல் வெளியே வந்து செடியை விலக்கிப் பார்த்தால்

படுத்துக்கொண்டே அதன் சொறியை அது நக்கிக்கொண்டிருந்தது

யாருடைய உதவியும் இல்லாமலேயே

அதனுடைய சொறியை வைத்து அது அதனைப் பண்டுவம்

பார்த்துக்கொண்டது

அதன் சொறி தான் அதனைக் காப்பாற்றியிருக்கிறது

கருணை பொங்குகிற கை கூப்பலை சொறியால் பார்க்க இயலாததால்

இப்பொழுதுள்ள இதே மனநிலையில்

ஒரு நாயின் உடம்பில் ஒரு சொறியாகப் படர வேண்டும் போலிருந்தது

சொறி நாயாகச் சொறியை நக்கிக்கொண்டிருப்பதை விட

ஒரு சொறியாக நக்கினை ஏற்றுக்கொள்வது

அவ்வளவு இம்சையில்லாதது.

கவிதையென்பதை விட ஒரு சிறார் கதை சொல்லல் முறையாகதான் இதனை வாசிக்க முடிகிறது. ஒரு நாயும் அதன் சொறியும் மட்டுமே கவிதையை ஆக்ரமித்துக்கொள்கின்றன. எது கவிதையாக வேண்டும் ஆகக்கூடாதென்பதற்கு யாரும் வரையறை கொடுக்க முடியாதுதான். எனினும் கவிதை என்ற வடிவத்தை ஏற்கும் போது அப்படைப்பு எங்குத் தன்னைக் கவிதையாக ஸ்தாபித்துக்கொள்கிறதென்ற அடிப்படை கேள்வியை அப்படைப்பு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். வெறும் சம்பவம் என்பதற்கு மேலாக ஒரு தெரு நாயின் மீதான கரிசனமாகக் கூடக் கவிதை எழும்பவில்லை.

அங்கு நிகழும் அச்சமும் கூடக் கல்லை எறிந்ததற்கான பரிகாரமே தவிரத் தனது சொறியால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நாயின் வழியாகக் கவிதை கூற வருவதென்ன. ஒரு அருவருப்பின் மீதான பதிவு என்பதைவிட மேலதிக அழுத்தம் கவிதையில் எவ்விதமாகவும் செயல்படவில்லை. அருவருப்புடனான எத்தகைய வினைபுரிதலுமின்றி வேடிக்கை காணும் மனோநிலையில் மட்டுமே சொறிபிடித்த நாய் பதிவாகிறது. வெறுமனே ஒரு சொறியாக மாறலாமென்பதும் கூடப் படைப்பாக்க உத்தியாக வெளிப்படுகிறதேயன்றி அந்த அருவருப்பின் மீதான வேறுபட்ட பார்வைகளுக்கு அவை இடங்கொடுக்கவில்லை. கவிதை என்ற வடிவத்தை எடுத்துக்கொள்கிறதே தவிரக் கவிதை என்பதற்கான பொதுவான அமைதிகளை கவிதையில் உணர முடிவதில்லை. அசமந்தமான பொழுதின் எண்ணத் தெறிப்பு என்பதற்கு மேலாக இதற்கு முக்கியத்துவமும் ஏற்பட இயலாமல் போகிறது.

செல்வசங்கரனின் கவிதைகளெங்கும் சொற்களின் தொடர் இரைச்சல்தான் பெரிதாகக் கேட்கிறது. குறிப்பிட்ட வார்த்தைகளே தெவிட்டி விடுமளவிற்கு கவிதைகளை தொடர்ந்து நிரப்புகின்றன. கிடைக்கின்ற சொற்களே போதும் முடிந்தவரை அதை வைத்தே தனது ஆழமின்மையே மறைத்துவிடலாமென்பதே அவற்றின் சாதுர்யமாக மாறுகிறது. சொற்களுக்கும் அர்த்தப்படுத்தலுக்கும் இடையில் நிரப்பப்பட்டிருக்கும் போலித் தனங்களை அல்லது முரண்களைச் சரியாக அடையாளப்படுத்தும் முயற்சியில் அவற்றின் கூச்சல்தான் மிகுதியாக வெளிப்படுகிறது. ‘லலிதா அக்கா’ என்னும் கவிதையில் ‘சின்ன வயது’ ‘பெரிய வயது’ என்னும் இரண்டு சொற்கள்தான் காலத்தின் இடைவெளியையும் அதன் பரிணாமத்தையும் விளக்குவதற்கு அவருக்குப் போதுமானதாகப் படுகிறது.

ஒரு வீட்டிலிருந்த இரண்டு சகோதரிகளிடமும் காதல் புரிய முயன்றதோ அல்லது புரிந்ததோ கவிதையின் மையப் பொருளாக வாசிப்பிற்கு நகரவில்லை. லலிதா அக்கா குறித்த வேறு சித்திரங்களும் அங்குக் கடத்தப்படவில்லை. சிறுவயதில் இறந்து போன லலிதா அக்காவின் சாவை மீண்டுமொரு முறை நிகழ்த்துவதுடன் கவிதை நிறைவு பெறுகிறது. சில சமத்காரமான புனைவம்சங்களைத் தாண்டி இறப்பின் வலி, சப்தமில்லாமல் காலம் அதை எதிர்கொள்ளும் விதம் போன்ற அம்சங்களைப் படைப்பாளர் ஏனோ கழித்துவிடுகிறார். சில கனதியான உணர்வுகளுக்குப் பதிலாகப் பல இடங்களிலும் வேடிக்கையை அதிகம் நிகழ்கிறது. இந்த வேடிக்கையும் விளையாட்டும்தான் தன்னுடைய தனித்துவமாகப் படைப்பாளரால் நம்பப்படுகிறது போலும். இதுவொரு சம்பவத்தை விவரிப்பதற்கும் அதனால் பாதிப்புறுவதற்கும் இடையிலான படைப்பின் வேறுபாடுகளை மிகவும் மலினப்படுத்திப் புரிந்துகொள்வதற்கான எத்தனங்களாகவே படுகின்றன.

உண்மையில் நெடிய வாக்கியங்களோ அதில் வெளிப்பட முயலும் எள்ளல் தொனியோ வாசகனின் பிரச்னையல்ல. அது எந்த அளவிற்கு ஒரு கவிதையைச் சாத்தியப்படுத்துவதற்கான எல்லைகளைத் தொடுகின்றன என்பதுதான் கேள்வி. ஞானக்கூத்தனின் ‘அவரவர் கைமணல்’ தொகுப்பு வெளியான போது அப்போது கறாரான விமர்சகராக அறியப்பட்ட வெங்கட்சாமிநாதன் அவற்றைத் தரிசனமற்ற கவிதைகளின் வீழ்ச்சியெனக் கூறினார். வெறும் கோணல்பார்வையைத் தவிர எந்தக் கவித்துவமுமில்லையென விமர்சித்தார். ஆனால் ஞானக்கூத்தனின் படைப்புகள் தங்களுக்கான இடத்தைக் காலப்போக்கில் நிரூபித்துக்கொண்டன. (வெங்கட்சாமிநாதன் தனது விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்ட கவிதைகள் அப்படியில்லையெனினும் ஞானக்கூத்தனின் வேறு சில கவிதைகள் மீது இவ்விமர்சனத்தை வைப்பதற்கான இடமுண்டு) செல்வசங்கரன் படைப்பாக்கம் குறித்த சில விமர்சனங்களை முன்வைக்கும் போது இச்சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருவேளை காலப்போக்கில் எனதிந்த விமர்சனமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம் எனினும் செல்வசங்கரனை வாசிப்பதில் எழும் சிக்கல்களைப் பேசிதான் ஆக வேண்டியுள்ளது. பொதுவாக பால்யங்களின் சிதைவுகளை நினைவூட்டும் படைப்புகள் மீது இயல்பாகவே ஒரு சாய்வுநிலை ஏற்படுவதை தமிழ்ச்சூழலில் எத்தகைய நவீன மனதாலும் தவிர்க்க இயலாது. அப்படியான சில ரசனைகளுக்கும் இத்தொகுப்பில் வாய்ப்பிருப்பதால் அவற்றை மட்டுமே கொண்டு முழு தொகுப்பையும் மதிப்பிடுவது சரியானதாக அமையாது.  செல்வசங்கரனின் முக்கியமான சிக்கல் அவை இல்லாதவற்றின் மீதான உருவகித்தலின் வழியாகத் தனது தர்க்கங்களை அடுக்கிச் செல்கின்றன.

மதியத்திற்குள் வண்டியை திருப்புதல், மமதை கூடாதேயென ஒரு மரத்திடம் மற்றொரு மரத்தினைக் காட்டுதல், மேற்சொன்ன ‘லலிதா அக்கா’ கவிதையில் இடம்பெறும் ‘என்னுடைய சிறிய வயது என்னுடைய பெரிய வயதிடம் எப்படியோ சொல்லிவிட்டது’, ‘ஆச்சரிய வெங்காயம்’, ‘கழிவறையின் பாடல்’, முகத்தில் தெரியும் அமைதியை வாசித்துக்கொண்டிருங்களென ஒரு பிணமே கூறுவதாகப் புனைவது எனக் கவிதைகளில் முக்கால்பாகம் இல்லாத ஒன்றினை உருவகித்து அதன்மீது தனது கவிதையை நிகழ்த்துவதாக மட்டுமே உள்ளது.

இந்த உருவகித்தலை நிறுத்திவிட்டால் கவிதைகள் வெறும் பீங்கான் சில்லுகளாக உடைந்துவிடக்கூடும். கவிதையின் எண்ணற்ற சாத்தியங்களை அவை வடிவ ரீதியாகவும், சொல்லல் முறை வழியாகவும் தொட்டுப்பார்க்க முனையவில்லை. (தொடர்ந்து வேறுவேறு முறைகளை முயற்சிக்க வேண்டும் அதுதான் ‘வெற்றிகரமான’ படைப்பாக்க உத்தி என்பதாக இதைக் கூறவில்லை) தான் கண்டறிந்திருக்கும் இந்த விவாத முறையும், ஒருவகையான நிகழ்த்துதல் முறையும் மட்டுமே போதுமானதெனக் கருதுவது பிரதியுடனான வாசகனின் வினையை விரைவில் சலிப்புறச் செய்கிறது.

பிற கவிஞர்களிடமிருந்து பாடுபொருள் அளவில் மட்டும் தனித்துத் தெரிந்தால் போதுமென ஒரு முடிவுக்குச் செல்வசங்கரன் வந்துவிட்டதாகதான் நினைக்கத் தோன்றுகிறது. தற்காலத்தைய எழுத்து முறைகளையும், வகைமைகளையும் அடையாளப்படுத்த முடியாததினாலேயே அவற்றின் அங்கீகாரத்தை மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது மறைமுகமான நிர்பந்தமாகிறது. செல்வசங்கரனுக்கும் அப்படியான ஒரு இடம் உருவாகுவதாகத் தான் நான் சந்தேகிக்கிறேன். முடிவாக ‘சிறிய கவிதை தெய்வம்’ என்ற அவருடைய கவிதையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

‘சிறிய கவிதை தெய்வம்’

வாசிக்கவென ஒரு சிறிய கவிதை போதும்

பத்து வரிகளுக்குள் இருந்துவிட்டால் தெய்வம்

அதன் கை கால்களை அமுக்கிவிடுவேன்

பதினைந்து வரிகளுக்குள் சாகாவரம் பெற்ற ஒரு கவிதையை

இன்றைக்குக் கவிஞர்கள் எழுதிவிடுகிறார்கள் என்பதால்

பதினைந்து வரி சாமி வந்து எனக்கு அருள் பாலிக்க வேண்டும்

அவகாசம் கிடையாது புரிந்து கொள்ளுங்கள்

சிறிய கவிதைகளே எங்கு வசிக்கிறீர்கள் காது கேட்கவில்லையா

கடல் உங்கள் மீது சரிந்து கிடக்கிறதா

பேட்டரி ஸ்கூட்டர் போலச் சத்தமில்லாமல் வந்துகொண்டிருக்கிறீர்களா...’

கவிதைகளுக்குத் தேவையான சொற்களைப் பொருத்துவதும் தேர்ந்தெடுப்பதும் கவிதையாக்கத்தின் முக்கியமான அம்சம். அதுவே கவிஞன் மேற்கொள்ளும் பொருண்மை மீதான அவனது பிடிப்பையும் அனுபவ ஆழத்தையும் வெளிப்படுத்துவதற்கான முதல் பொறியாக இருப்பது. கவிதையின் ஆழத்திற்கேற்ப சொற்கள் சரியாகப் பொருந்தி வரவேண்டும். கவிதைகள் சப்தமில்லாமல் வருவதற்கு ‘பேட்டரி ஸ்கூட்டர்’ தான் கிடைத்ததா.. குறைந்தபட்சம் ‘மின்வாகனம்’, ‘மின்கலம்’ போன்ற சொற்களால் அதனை மாற்றீடு செய்யவாவது கவிதை முயன்றிருக்கலாம். இத்தகைய மேம்போக்கான சொற்பிரயோகம் படைப்பாளரின் கவனமின்மையையும் மெத்தனத்தையுமே காட்டுகிறது.

கவிதையின் அமைதியை முழுவதும் நிராகரித்துவிட்டு அங்கே வெறும் சிறுவர்களின் பிள்ளை விளையாட்டினையே பதிலீடு செய்கின்றன செல்வசங்கரனின் கவிதைகள். இந்தப் பிள்ளை விளையாட்டும் கவிதையின் வரலாற்றை அவதானித்து எழும் மொழி வழியிலான அரசியல் விழிப்பாக இல்லாமல் போகிற போக்கில் நிகழும் விட்டேற்றிதனமாகத் தான் உள்ளது. உருவகித்தல், தர்க்கித்தல், நிகழ்த்துதல் போன்ற சில அம்சங்களைக் கழித்துவிட்டால் இவை கவிதையாக மிஞ்சுவதற்கு என்ன இருக்கிறதென்பது இக்கவிதைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளாகும். மேலும் எவ்வித தீவிர மனஎழுச்சிக்கோ, தொந்தரவுகளுக்கோ இடங்கொடாது பொதுவான தன்னிலைகளின் மீது மோதும் அதிர்வாகவோ கூட இல்லாமல் கவிதையின் தீவிரத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் அதன் எதிர் வடிவமாகவே இம்முயற்சியினைக் கருதுவதற்கான ஒரு இடமும் உருவாகிறது. நவீன கவிதைகளின் மாதிரிகளைக் கொண்டு இன்றைக்கு தன்னையொரு தரமான படைப்பாகக் காட்டிக்கொள்ளும் தொகுப்புகளின் வெளியீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கெதிரான உதிரிகளின் முயற்சியென்பது இத்தகையை பிரஞ்ஞை பூர்வ பிடிமானமற்றதாக இருக்கும் பட்சத்தில் அவையும் விமர்சனத்திற்குரிய ஒன்றேயாகும்.

மார்க்வெஸ் – மென்டோசா (ஆசிரியர்), பிரம்மராஜன் (தமிழில்) 2023 ₹350

னித மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக் கொள்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால்  மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத் தன்மைக்கு பங்கம் வராது சுய விருப்பம் கொண்டு முடமாக்கி விடுகிறான். ஏதோவொரு வகையில் அசெளகரியமானதாக கருதப்படும் படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்புத்திறன் இல்லாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகள் மீது மட்டுமே செலுத்துகிகிறான்.

தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் எவ்வகையிலும் அதிர்ச்சியளிக்கும் நாவல்களை விரும்பாது ஒதுக்கி வைத்தக் காலங்கள் சற்று மாறிவிட்டதாகவே கருதுகிறேன். இதன் விகிதாச்சாரம் குறைவாக இருப்பினும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதியாகக் கூறமுடியும்

முன்னெப்போதையும் விட தமிழ் வாசகப்பரப்பில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்புகள், சொல்லப்படும் விஷயத்தில் மட்டுமல்லாது சொல்லப்படும் விதத்திலும் வாசகனை கவர்வதோடு அவனது அட்ரினலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. 

ஒரு ஜெயிண்ட் வீலில் அமர்ந்து சுழலும் போதும் கூட அட்ரினலின் அதிகம் சுரக்கவே செய்கிறது. ஆனால் நாவல் வாசிப்பு என்பது வாசகனின் சுரப்பு தூண்டியாக மட்டும் செயல்படுவதென்பதை ஒரு வளர்ச்சியாக கருத முடியுமா...? ஒரு நாவலை தரிசனத்தின் மூலமாக செயல்பட வைப்பது அரிதாகவே நிகழ்கிறது, என்றாலும் குறைந்தபட்சம் எந்தவொரு படைப்பும் அதற்கான ஒளிக்கீற்றுகளை தன்னகத்தே கொண்டதாக திகழவேண்டும்.

உண்மையில் தற்கால தீவிர வாசகர்களின் ஒரு பகுதியினர் தரிசனங்களுக்கான ஒளிக்கீற்றுகளை மறைத்து வைத்திருக்கும் நாவல்களை தேடுவதில் அயற்சியுறாமல் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அமைப்புவாதத்தின் அடையாளம் கொண்டு இயங்கி வரும் பல எழுத்தாளர்கள் தங்கள் நுண்ணுணர்வின் மீது எப்பொழுதோ சமாதி எழுப்பி விட்டார்கள். அவர்கள் வரையறுக்கும் எல்லைக்குட்பட்ட பெளதீகத் தன்மையின் சுதந்திரம் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அது இலக்கியத்தில் பல ஆண்டுகளாக உறைந்து போன அருங்காட்சியகத்தின் கொண்டாட்டம். நுண்ணுணர்வில்லாத எழுத்தாளர்கள் இருண்ட மூலையில் உழல்கிறார்கள். அப்படியிருப்பினும் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். கருத்துரைக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழலில் இப்பொழுது இது தான் பிரச்சனை.

நாம் நகர வேண்டியது அகவிடுதலைக்கான மையம் நோக்கி... கண்ணாம்மூச்சு விளையாட்டு போல் வாசகனை சுழலவிடும் குழந்தைத் தனமான படைப்புகளை விட விளிம்பிலிருந்து மையம் நோக்கிய பயணத்திற்கான சரியான வரைபடங்களை ஒரு நாவல் உருவாக்க வேண்டும். அது சிக்கலானதாக இருந்தாலும் சரி.

இல்லறவாசிகள் போன்று ஆழமான வாசிப்புக்கு வித்திடும் மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய பரப்பில் துணிச்சலாக கொண்டு வருவதற்கு காரணம் மேம்பட்ட வாசகப் பார்வையின் தேடல் தீவிரமாகி விட்டதற்கான அடையாளம்.

ஒரு நாவல் எழுத்தாளனின் சேகரிக்கப்பட்ட காட்சி படிமத்திலிருந்து விரிவடைகிறது. ஒரு நாவலில் கையாளும் எதார்த்தம் நிஜவாழ்விலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அது மனிதனின் அகத்துடன் நெருக்கமாக வினைபுரிகிறது. உலகெங்கும் நுண்ணுணர்வு மிக்க எழுத்தாளர்கள் சேகரிக்கும் காட்சிப் படிமங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அது இணையும் புள்ளி புனைவின் விகாசிப்பை ஒன்று போலவே எதிரொலிக்கும்.

லத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த தொன்மவியல் எழுத்தாளர் கேப்ரியேல் கார்சியோ மார்க்வெஸ் தனது உலகப் புகழ் பெற்ற ஸ்பானிய செவ்வியல் நூலான தனிமையின் நூறாண்டுகள் நாவலில் மெக்கேந்தோவில் [கற்பனை நகரம்] நுகர்வு கட்டமைப்புகளின் அங்கமாகவும் கனவாகவும் இருந்த இரயில் வரவைக் குறித்து இப்படி எழுதுகிறார்.

 "அது வந்து கொண்டிருக்கிறது. பயங்கரமாக ஒரு சமையலறை தனக்கு பின்னால் ... ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல வந்து கொண்டிருக்கிறது. அந்த நொடியில் அச்சமூட்டும் எதிரொலி எழுப்பும் சீழ்க்கை ஒலியாலும் உரத்த மூச்சிறைப்பாலும் நகரமே அதிர்ந்தது. முந்தைய வாரங்களில் இருப்புப்பாதை பணியாளர்கள் கட்டைகளையும் தண்டவாளங்களையும் அமைத்துக் கொண்டிருந்த போது கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. அது நாடோடிகளின் புதிய விந்தையாக இருக்கும் என்றே நினைத்தார்கள்."

தனிமையின் நூறாண்டுகள் 1967-ல் வெளியானது. ஆனால் மூலம் 2013-ல் தான் தமிழ் மொழியாக்கமாகிறது.

காட்சி படிமங்களின் சேகரிப்பு ஒரே மாதிரியாக நிகழ்த்தாலும் இங்கு நாம் கொண்டாடும் தமிழ் எழுத்தாளர் கரிசல் இலக்கிய ஞானி கி.ராஜநாராயணன் அவரது கோபல்ல கிராமத்து மக்கள் நாவலில் ரயிலின் வரவு குறித்து இப்படியாக விவரணப்படுத்துகிறார்.

... "ரெயிலையே பாக்காத 

சனங்க அது.

எப்பிடி இருக்கும்னுட்டும்

தெரியலெ"

..என்னம்மா வந்ததுங்கா.."

" வந்தது... பாரூ... கைகள் ரண்டையும் ஒசத்தி, தேவலோகத்திலிருந்து யானைக் கூட்டம் ஏறங்கி வரீசயா வந்த மாதிரி …" உடம்பைக் கொஞ்சம் பின்வாங்கி சாய்ந்துக் காட்டி ஓடும் கிராமவாச மனிதரோடு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகுண்னு நாமும் ஓட வைக்கும் எழுத்து.

"... இப்படி முதல்ல வந்த ட்ரெயினிலிருந்து வர்ற சத்தமும் பொசல்க்காத்து எறைஞ்சி வார மாதிரி நெருப்பும் புகையும் கக்கிக்கிட்டு வர்த பாத்துட்டு என்ன செய்றதுன்னு தெரியலெ.., "

விழுந்தாம் பாரு.., "

தற்கால வாழ்க்கை சூழலானது பெளதிக வாழ்வை மனிதனின் அகவெளியிலிருந்து பிரித்து முற்றிலும் அவனை அந்நியப்படுத்துவே முயற்சிக்கிறது. நாம் கண்களை திறந்து வைத்திருந்தாலும் காட்சிகளை உள்வாங்குவதில்லை.

கேப்ரியேல் கார்சியோ மார்க்வெஸ் குறித்து புரிந்து கொள்வதற்கும் மட்டுமல்ல தீவிர இலக்கியம் மற்றும் அரசியல் அடிநாதத்தின் அதிர்வை உணர்ந்து கொள்வதற்கும் இப்புத்தகம் சிறப்பான தேர்வு. கொய்யாவின் வாசனை (El Olor de la Guayaba) 1982-ஆம் ஆண்டு ஸ்பானிய மொழியில் வெளியானது. இதன் முதல் ஆங்கில மொழியாக்கம் ஆன் ரைட் (Ann wright) என்பவர் மூலம் 1983-ல் வெர்சோ (Verso) பதிப்பகம் வெளியிட்டது. கேள்விகள் மற்றும் விடைகளுக்கு இடையே நிலவும் ஆழமும் ஒளிவு மறைவற்றத் தன்மையும் மார்க்வெஸ் - மெண்டோசா இடையே நிலவிய நீண்ட காலம் நட்பின் கொடை. நாற்பது வருட கால உரையாடலின் குறிப்புகள் மார்க்வெஸ் பிம்பத்தின் மீது  நிழல் தராத வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இந்நூல் மார்க்வெஸின் வம்சாவளி, குடும்பம், கல்வி, வாசிப்புகள், அவரது எழுத்தின் நுட்பம், அவர் எழுதிய நூல்கள், வாழ்க்கை சூழல், அவருக்கும் பெண்களுக்குமான தொடர்புகள், புராதான தொன்மை வழியும் மாயங்கள், அரசியல் தொடர்புகள், நட்பு என பல படிமங்களை ஆவணப்படுத்துகிறது.

மார்க்வெஸ் தனது துவக்கத்தை இவ்விதமாக கூறுகிறார். "நான் மிகவும் சந்தர்ப்பவசமாக எழுதத் தொடங்கினேன். என் தலைமுறையை சேர்ந்தவர்களால் ஒருவேளை எழுத முடியும் என்பதை ஒரு நண்பனுக்கு நிரூபிக்கும் பொருட்டும், பிறகு அது தரும் சந்தோஷத்திற்காகவும், இறுதியாக இந்த உலகத்தில் நான் நேசித்தது எழுத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதற்காகவும் இப்பொறியில் வீழ்ந்தேன்.

ஒரு நாவலை என்றைக்கோ அவருள் உறைந்து போன படிமச் சித்திரத்திலிருந்து துவங்குவதாகக் கூறும் மார்க்வெஸ்தனிமையின் நூறாண்டுகள் [One Hundred Years of Solitude]  நாவலுக்கு பதினைந்து வருடங்களும், மூதந்தையின் அந்திமக் காலம் [Autumn of the Patriarch] நாவலுக்கு பதினெழு வருடங்களும், சாவின் முன் கூறப்பட்ட சரித்திரம் [Chronicle of a Death foretold] என்கிற நாவலுக்கு முப்பது வருடங்களுக்கு மேலாகவும் தனது தாங்கவியலாத கருபொருள் அவருக்குள் தாங்கி நின்றதாக கூறுகிறார்.

"சிறுகதை எனும் பணி பாலத்தைப் போல, உங்கள் பார்வையில் படாத பகுதியினால் ஆதரவாக பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்னும் ஹெமிங்வேயின் கருத்தை தூக்கிப் பிடிக்கும் மார்க்கெஸ் அவரைப் பொறுத்தவரை ஹெமிங்வே ஒரு நாவலாசிரிர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவரை ஒரு அற்புதமான சிறுகதை ஆசிரியர் என்கிறார்.

இளம் எழுத்தாளர்களுக்கு தனது அனுபவத்தால் ஒரு அறிவுரையைத் தருகிறார். "நீங்கள் உங்கள் எழுத்துக் கலை, உத்திகள், வடிவமைத்தல்களின் வழிகள், நுணுக்கமான உள் வயமான பயணம் போன்ற யாவற்றையும் உங்கள் இளமையிலே நீங்கள் கற்றுக் கொண்டு விட வேண்டும். எழுத்தாளர்களாகிய நாம் கிளிகளைப் போன்றவர்கள் வயதான பிறகு நம்மால் பேச கற்றுக்கொள்ள முடியாது.

எழுத்தாளர் கி.ரா ஒருமுறை இசையைக் குறித்து பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. "இசை மீதான விருப்பத்தையும் திறனையும் கல்வி மூலம் திணிக்க முடியாது. காலையில் வீட்டில் ஊதுவத்தி ஏற்றி வைக்கும் போது நல்ல இசையையும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தூபப் புகை காற்றில் பரவுவது போல இசையின் அழகியல் சிறுவர்கள் மனதில் மெல்ல மெல்லக் கலந்து விடும். கல்வி முறையில் இசையின் நுட்பங்களில் திறன் பெற்றவர்கள் இயல்பான ரசிப்புத்தன்மையை அது அகற்றி விடுகிறது..."

ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்தோட்டத்துக்கு தடையற்ற சூழலையே நாடுவார்கள். மார்க்வெஸ் காலையில் அமைதியாகவும் இரவில் களியாட்டம் நிறைந்ததாகவும் இருக்கும் வேசிகள் விடுதியே ஒரு எழுத்தாளன் எழுதுவதற்கு உகந்த பொருத்தமான இடம் என்கிறார். "எழுத்தாளர்கள் யாவருமே தனிமையானவர்கள். கடலின் மத்தியில் கப்பல் கவிழ்ந்து போன மாலுமிகள். எழுதுவது என்பது உலகிலேயே தனிமைப்பட்ட ஒரு தொழில். நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்களோ அதை எழுதுவதற்கு எவர் ஒருவரும் உதவ முடியாது."

எழுத்தின் மேலான நுட்பத்தை ஒருவர் வாசிப்பின் வழியாக கண்டடைய முடியும். வாசிப்பின் ரசிப்புத் தன்மையும் புரிதலும் ஒத்திருக்க வேண்டிய அவசியம் கிடை யாது." எனக்கு பிடித்திருக்கிற புத்தகங்கள் அனைத்தும் அவசியமானது. சிறந்தது. என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. எனக்கு அவை வேறுபட்ட காரணங்களுக்காக பிடித்திருக்கின்றன. அவற்றுக்கான விளக்கத்தை அளித்து விடுவது எளிதானதல்ல."  தீவிர வாசிப்பு உலகம் விதந்தேந்தும் ஒரு எழுத்தாளனை உருவாக்கவும் செய்கிறது.  தான் எழுத்தாளனாகப் போகிறேன் என்பதைக் காஃப்காவின் மூலமாக கண்டுகொண்டதாகக் கூறும் மார்க்வெஸ் தனது பதினேழாவது வயதில் 'உருமாற்றம்' நாவலை படித்த போது அது தன்னை ஒரு எழுத்தாளனாக உருவாக்கப்போகிறது என்பதை அறிந்தார்.

'ஒருநாள் காலை அசெளகரியமான கனவுகளிலிருந்து கிரிகோர் ஸாம்ஸா விழித்தெழுந்த போது தனது படுக்கையில் ஒரு அரக்கத்தனமான பூச்சியாக தான் உருமாற்றம் அடைந்திருப்பதைக் கண்டான்.'

 "அடக் கருமமே..."

"என் பாட்டி இதுபோலத்தான் பேசிக் கொண்டிருப்பாள்" என நான் நினைத்தேன். அப்பொழுது தான் நான் முதன்முறையாக நாவலில் ஈடுபாடு கொண்டது…

மார்க்வெஸ் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தை அதிர்ஷ்டமானதாக கருதினாலும் அது தங்க நிறம் அல்ல என்கிறார். அவர் தங்கத்தை மலத்துடன் அடையாளப்படுத்துகிறார். தனிமையின் நூறாண்டுகள் நாவலில் ஹோஸே ஆர்கேதியோ புயந்தியா உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கான சூத்திரத்தை கண்டுபிடித்தவுடன் தன் மகனிடம் அந்த பரிசோதனையின் விளைவை காட்டுகிறான். மகன் சொல்கிறான் அது நாயின் மலத்தை போல் தோன்றுகிறது என்று.

அவரது முதல் நாவலான  'இலைப்புயல்' [Leaf Storm] மிகப்பெரும் தோல்வியடைந்து பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளிவந்த 'தனிமையின் நூறாண்டுகள்' நாவல் ஒட்டு மொத்த இலக்கிய உலகையும் அவர் மீது திருப்பியது. உண்மையில் இந்நாவல் மீதான அங்கீகாரத்தை அவர் விரும்பவில்லை இந்த நாவல் மார்க்வெஸ்ஸால் அடிக்கடி தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட ஒன்று.

அவர் எழுதியதில் அவருக்கு பிடித்தமானது 'மூதந்தையின் அந்திமக்காலம்' (Autumn of the Patriarch) ஆனால் இந்நாவல் குறித்து தமிழ் சமூகம் இதுவரை அறியாதது பெரும் குறையே. கொய்யாவின் வாசனை தமிழ் இலக்கிய சமூகத்தின் நாசி வழியாக சென்று அதன் வதனத்தில் ஏற்படுத்தும் மாற்றம் இனிவரும் காலங்களில் மார்க்வெஸ் குறித்த மொழியாக்கங்கள் நிறைய வருவதற்கு நல் வரவேற்ப்பாக இருக்கும். 

ஃபிடல் கேஸ்ட்ரோவுக்கும் மார்க்வெசுக்கும் இடையே நீண்ட காலம் (1960 முதல்) நெருங்கிய உள்ளார்ந்த நட்பு இருந்து வந்ததை யாவரும் அறிவர். ஃபிடல் கேஸ்ட்ரோ கூறுகிறார், "மறுபிறவி எடுத்தால் நான் ஒரு எழுத்தாளனாகவே விரும்புகிறேன்" இதன் உந்துதலை அவரது தீவிரமான புத்தக வாசிப்பு பழக்கம் வழங்கியிருக்கிறது. மார்க்வெஸ்  "ஃபிடல் கேஸ்ட்ரோ பெருவேட்கை கொண்ட வாசகர். தனது வினோத உதிரி நேரத்தை நிரப்புவதற்கான ஒரு நல்ல புத்தகத்தை எப்போதும் தன்னிடம் வைத்துக் கொண்டிருப்பார். ஒருமுறை இரவு வணக்கம் சொன்னபோது வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் அவரை அடுத்த நாள் காலை பண்ணிரெண்டு மணிக்கு சந்திக்கும்போது அவர் அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து இருந்தார். அவர் அவ்வளவு கவனம் மிக்க விடாமுயற்சியுடைய வாசகராக இருப்பதால் முரண்களையும் தகவல் பிழைகளையும் நீங்கள் அதிகம் எதிர்பார்த்திறாத இடங்களில் கண்டுபிடிக்கிறார். கப்பல் தகர்வுக்கு ஆளான கடலோடியின் கதையில் (The story of a ShipwrecKed Sailor)  அவர் படித்த பிறகு நான் படகின் வேகத்தை தவறாக கணக்கிட்டு இருக்கிறேன் என்றும் படகு வந்து சேரும் சமயம் நான் சொன்னது போலிருக்காது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக  நான் தங்கியிருக்கும்  விடுதிக்கே  வந்து விட்டார்.  அவர் சொன்னது சரி. சாவு முன் கூறப்பட்ட சரித்திரம் நாவலை வெளியிடுவதற்கு முன் அவரிடம் எனது கை பிரதியை எடுத்துச் சென்றபோது அவர் வேட்டை துப்பாக்கியின் அளவுகளில் இருந்த பிழையைச் சுட்டிக் காட்டினார். ஒருமுறை நல்ல இலக்கியங்களை நான் அவருக்கு பரிந்துரைத்த போது ஏற்கனவே அவற்றையெல்லாம் படித்து முடித்து விட்டார் என்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இலக்கிய உலகினை அவர் உண்மையாகவே விரும்புகிறார்.

மார்க்வெஸின் அரசியல் நிலைப்பாடு குறித்து மெண்டோசா கச்சிதமான குறிப்புகளைத் தருகிறார். பல ஐரோப்பிய அறிவு ஜீவிகள் செய்வது போல ஒரு இறுக்கமான வகையில் நீங்கள் கார்சியா மார்க்வெஸ்ஸை அணுகுவீர்களானால் அவரது அரசியலை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அவர் காஸ்ட்ரோவின் நண்பர் ஆனால் சோவியத் அரசமைப்பையோ அல்லது கம்யூனிஸ்ட் உலகினை சாம்பல் நிற உடை அணிந்து ஆளும் அதிகாரமான பண்புடையவர்களையோ வியந்து போற்றுபவர் அல்ல... மேலும் பிற்போக்கு வாத, ராணுவ மைய, அமெரிக்க சார்புள்ள, வலதுசாரித் தன்மை மற்றும் சமரசமற்ற கன்சர்வேட்டிவ் தன்மை, சோவியத்சார்பு இடதுசாரித் தன்மை ஆகிய விஷ வட்டம் போன்ற மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு கண்டத்தில் இவற்றுக்கிடையே பிற வகைகளான பொதுமக்கள் சார் ஜனநாயக தேர்வுகளையே விரும்புகிறார்.

உலகம் கொண்டாடும் எழுத்தாளர்களின் சுயவாழ்வில் இல்லறம் என்பது கசப்பாகவும், இல்லையெனில் மனைவியின் மீது துன்பத்தின் நிழலையும் கவிழ்த்து விடுகிறது. மார்க்வெஸ் தனது மனைவி மெர்ஸிடஸ் பற்றி பகிர்கிறார்.

"பணம் தீர்ந்து போனவுடன் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவள் எப்படி செய்தால் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கசாப்புக்காரன் எங்களுக்கு இறைச்சியை கடனாக தரும்படி செய்திருந்தாள். ரொட்டி சுடுபவன் எங்களுக்கு ரொட்டியை தரும்படி செய்திருந்தாள். வீட்டு உரிமையாளரை ஒன்பது மாதங்கள் வாடகைக்கு காத்திருக்கும் படி செய்திருந்தாள். என்னிடம் எதையுமே சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள். அப்போதைக்கு அப்போது ஐநூறு தாள்களையும் கூட கொண்டு வந்தாள். நான் என்றுமே அந்த ஐநூறு தாள்கள் இல்லாமல் இருந்ததில்லை. புத்தகம் முடித்தவுடன் (தனிமையின் நூறாண்டுகள்) கையெழுத்து பிரதியை தபாலில் பதிப்பகத்திற்கு அனுப்பியதும் மெர்சிடிஸ் தான்..."

மார்க்வெஸ்ஸின் படைப்புகள் வழியே பிரதிபலிக்கும் தனிமையின் கதிர்வீச்சுக்கு பின்னால் அவரது சொந்த வாழ்வின் அனுபவங்கள் மூலகமாக புதைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளனின் படைப்புகளுக்குள் ஆழ்ந்து பயணிக்கவும், பல்நோக்கு பார்வை புலனுக்கு உரித்தான காட்சியை காணவும் இந்த கொய்யாவின் வாசனை ஜாலம் புரியும். லத்தீன் அமெரிக்க படைப்புகள் வழமையாக கொண்டிருக்கும் மொழியாக்கத்தின் சவால்களை மீறி பிரம்மராஜன் நிறைவான நூலைத் தந்துள்ளார்.

நான் தான் ஔரங்ஸேப் ₹1145 சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)

காத்திப்  என்றழைக்கப்படும்  எழுத்தாளன், ஒரு அகோரியின் உடலில் பாபரின்  ஆவி வந்து புகுந்திருக்கும்போது,  அதனுடன் உரையாடலாம் என்று திட்டமிட்டிருக்கையில், ஔரங்கஸேப் ஆவி வந்து பேசுகிறது எனும் கற்பனையும் எதிர்பாராமையும், கிண்டலுடன் வரலாறு பார்க்கப்படுவதும்,  ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு படிப்பவரை தயாராக்கிவிடுகிறது.

ஔரங்கஸேப், உரையாடும் காத்திப், நாவல் எழுதும் சாரு என்று மூன்று வாசகப் பிரதேசங்கள் நாவலில் உள்ளன. முகலாய மன்னன், சமகால விஷயங்கள் கிண்டல் தொனிக்கும் இடங்கள், போன்றவை முன்கதைத் துவக்கத்தில் ‘சோ’ வின் ஒரு நாடகத்தை நினைவூட்டினாலும் பிறகு வெகு விரைவாக அது முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கிறது.

இந்த நாவலை எழுதுவதற்கு, ஔரங்கஸேப் குறித்த நேரடியான தரவுகளுக்கு போகாமல், சம்மந்தப்பட்ட  பிற சரித்திர ஆக்கங்களில் சொல்லப்பட்ட ஔரங்கஸேப் குறித்த தகவல்களை பிரித்தெடுத்து, உருவாக்கப்பட்ட ஔரங்கஸேப் வடிவம் இது. அதனால், உயர்நவிற்சிகளின் நிறம் ஏறாத ஒன்றாக இருக்கும் என்று நம்ப இடமுண்டு.

வெவ்வேறு காலங்களை ஊடாட்டமாக வைத்து  முன் பின் நகர்த்தி எழுதிப்போதல்; ஒரு ஹெடானிஸ்ட் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும்  காத்திப், கறாரான தூய்மைவாத முஸ்லீம் ஔரங்கஸேப்பிடம் பேட்டி காணுதல்;  வரலாற்றை நிகழின் நையாண்டியுடன் கலைத்துப்போட்டு பேசுதல், பேட்டியின்போது ஔரங்கஸேப் மராத்திய சிவாஜியை ஒருவகையில் தன்னுடைய மற்றைமை (Other) என்று குறிப்பிடல்;  கடந்த காலத்தை, நிகழில், கடந்தகால ஔரங்கஸேப் பேசுவது போன்ற அம்சங்கள் ஒரு பின் நவீனத்துவ கூறுகளை கொண்டிருக்கும் நாவலாகவே அணுக வைக்கிறது

சாரு எம் வி வெங்கராமின் மறைவின்போது தினமணியில் எழுதிய பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையில் லூயி போர்ஹேவின் தந்தை சொல்வதாக ஒரு விஷயம் எழுதியிருப்பார். அதில் காலையில் பார்த்த காட்சியை மாலையில் நினைக்கும்போது நமக்குத்தோன்றுவது காலைக் காட்சி அல்ல. அதைப் பற்றி மனம் நினைத்துக்கொண்ட ஞாபகத்தில் படிந்திருக்கும் முதல் காட்சியை  என்பதாக. ஒவ்வொரு முறை நினைக்கும்போதும் இறுதியாக நினைவு கூர்ந்ததையே நினைவுகூர்கிறேன் என்பதாக. அது ஒரு பின் நவீனத்துவ அம்சம் எனும்போது ஆவியாக வரும் ஔரங்கஸேப்பின் நாவல் குரல் இதைப் போன்றதாகவே இருக்கிறது. அந்தப் பார்வையும் இறுதிக்கால குரலாக கனிந்து வெளிப்படுகிறது.   மேலும், நாவலை ஒருமையை நோக்கி செலுத்தாமல், ஒருவித குற்ற உணர்வின் ஓரிரு சுவடுகளை, வாத பிரதிவாதங்களின்  நூற்றுக் கணக்கான சுவடுகள் நடுவே சுண்டித் தள்ளி உலவவிடுகிறார்.

உதாரணமாக, தனது சகோதரன் தாராவின் மனைவி நஸிரா, பாலூட்டுவதற்கு நிகராக, தன் மார்பகத்தைக் கழுவி ஒரு தாய்மை உணர்ச்சியுடன், ஸ்வருப்சிங்கிடம் கழுவிய நீரைத்  தந்து ஒரு மகனைப்போல கருதி நடத்துகிறார். அவனிடம் தங்களுக்கான ஆதரவைக் கோருகிறார். ஆனால் பின்னால் அவன் என்னிடம் வந்து சேர்ந்து கொண்டான் என்று  கண் கலங்கும் ஆவி ஔரங்கஸேப்,  அரசோச்சியபோது  அவனைக் குற்ற உணர்ச்சி இன்றியேதான் ஏற்றுக்கொண்டார். இவ்வாறாக சம்பவங்கள் நடந்தகாலமும், அதை நினைவில் மீட்டிப்பார்க்கும் காலமும் வெவ்வேறாக இருக்கும்போது, அவற்றின் புரிதல்கள் வெவ்வேறு தரத்தில் வெளிப்படுகின்றன.

***

ஔரங்கஸேப் சரித்திரத்தில் தான் வில்லனாக்கப்பட்டு விட்டதாக சொல்லி, அசோகரை இந்தியா கொண்டாடுவதை ஒப்பீட்டுக் குறிப்புப் புள்ளியாக கொண்டு நாவல் முழுதும் வாதிடுகிறார். மேலும் தனது முந்தைய, மற்றும் பிற அரசர்களை நினைவூட்டியும் வாதிட்டுக் கொள்ளுகிறார் நூறு சகோதரர்களை கொலை செய்துவிட்டுதான் அசோகர் அரசர் ஆகிறார். அவர் உயிரோடு இருக்க விட்ட ஒரே தம்பி அவர் உடன்பிறந்தவன் என்பதுதானே உண்மை என்று கேட்கிறார். 

அவர் பௌத்தம் தழுவியது எல்லாம் போலி. அப்படி என்றால் ஏன் சிறைக் கைதிகளை விடுவிக்கவில்லை.  கலிங்கப் போரின் பிறகும் படையெடுப்புகள் இருந்தன போன்ற சரித்திர ஆதாரங்களை வைத்து ஔரங்கஸேப் கேட்கிறார். தன்னை கெட்டவனாக சித்தரித்து, போதாக்குறைக்கு தகுதியற்ற அசோகரை பேராளுமையாக உயர்த்தி வைத்திருக்கும் இந்திய வரலாற்று மற்றும் அரசியல் தலைவர்கள் மேல் தனது ஆதங்கத்தை சொல்கிறார். அசோகரின் சிங்கங்களை சின்னமாக வைத்திருப்பதும், தாஜ்மகால் என்பட்தை காதலி சின்னம் கேலிக்குரியது என்கிறார். 

தாராவை  திறனற்றவன் என்றும், ஆளும் தகுதி அற்றவன் என்றும் சொல்லி, அப்துல் லஹோரி வரைந்த ஓவியத்தில், சுதாகர் எனும் யானையை தான் எதிர் நின்று போரிடுகையில், குதிரையில் பயந்து ஒதுங்கும் தாராவை ஓவியத்தில் உள்ள காட்சியின் மூலம் காட்டி ருசுப்படுத்துகிறார்.

தந்தை ஷாஜஹான் - ஆறு கொலைகள் செய்தவர். மகளையே (ஜஹானாரா) மனைவி போல ஆக்கிக்கொண்டவர் என்றும் அதனால் மார்க்த்துக்கு எதிராக செயல்பட்ட அவருடைய நடத்தைக்கு அந்த தண்டனை சரியானதுதான் என்று நிறுவ முயல்கிறார். இப்படியான ஒழுக்க மீறல்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் தகுதி கொண்ட ஒழுக்கமிகு ஆளுமையாகவே அவர்  இருக்கிறார். அல் குரானை மனனமாக தெரிந்தவர்.

அக்பர் - மார்க்கத்தை கைவிட்டவர் என்றும், சிவாஜி ஒரு  கொள்ளைக்காரன் என்றும் காரணங்களோடு முத்திரையிடுகிறார். ஆனால் சிவாவை (சிவாஜிக்கு, ஜி என்ற மரியாதை விளியை தராமல் எப்போதும் சிவா என்கிறார்) ஏன் தன்னால் இறுதிவரை தீர்த்துக்கட்ட முடியவில்லை என்ற ஆச்சரியம் அவரிடம் இருக்கிறது.

இந்த குரல் மூலம் கூடு பாய்தலில் தன் கருத்துக்களை காத்திப் அல்லது சாரு வைக்கிறார், விளையாட்டாகவே.

***

இன்றும் பொருத்தப்பாடு கொண்டிருக்கும் சில சரித்திர நிகழ்வுகள் நாவலில் சுவார்சியமானதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஏனென்றால் கேளிக்கைக்குரிய ஒன்றாக வரலாற்றைக் கையாளும் நாவல் அல்ல இது.

தகவல்கள்

நாவல்களின் மற்றொரு முக்கிய உபயம், அது நடந்த காலம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும். அப்படி இந்த நாவலின் போக்கில் பல தகவல்கள் வெளிப்படுகின்றன.

ஆன்மீகம்

நாவலின் பாத்திர உரையாடல்கள் இடையே, ஆங்காங்கே, தெளிவான ஆன்மீக அம்சங்கள் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.

ஆசிரியரின் குரல்

புனைவுகளில் படைப்பாளனின் இடம் என்பது ஆற்று மணலில் நீர், ஈரத்தின் உருவில் இருப்பது போன்றது. குறிப்பாக வரலாற்றுப் புனைவுகளில், வரலாறு என்பது காலத்தால் அழுத்தப்பட்ட பழமை என்றாலும், பூமிக்கடியில் மறைந்திருக்கும் படிவுப் பழமையாக இல்லாமல்,  கண்ணில் தெரியும் மலையின் பழமை போல காட்டுவது படைப்பாளியின் கலையாகிறது.  வெறும் குறிப்புகளின் தொகுப்பாக இல்லாமல், அது ஒரு படைப்பாக மாறுவது இவ்வித பொருட்படுத்தல்கள்தான். அதற்கான பிரதேசங்கள் அதில் கிடைக்கின்றனவா என்பதே கவனம் கொள்ளத்தக்கது.

ஔரங்கஸேப் சொல்லும்  மதநல்லிணக்கம்  என்னவென்றால் -  நீங்கள் வேறு. நான் வேறு. நாம் இணக்கமாக இருப்போம் என்பதே.  ஆனால் அக்பர் முதல் இன்று வரை இதை குழப்பியும் தவறாக சித்தரித்தும் வருகின்றனர்   என்று நாவலின் ஔரங்கஸேப் குரலில் சொல்கிறார்.

தன்னைக் கெடு ஆளுமையாக சித்தரிக்க, அசோகரை பொருத்தமற்று பேராளுமையாக மாற்றியதன் வரலாற்றாளர்களின்/ அரசியலின் உள்ளரசியலை சொல்லும் அதே சமயம் - மதப்பிடிப்பு, ஆவேசம் மற்றும் மார்க்க நெறிகளை சமரசமின்றி மேற்கொள்ளும் பாங்குகளால்,  அவற்றை காக்க குருதி சிந்துவதை, சிந்தவைப்பதை    உயர்விக்கும் போக்குகளால்,  ஔரங்கசீப் - தலிபான்களின் குறியீடு ஆகிறார்.  ஆகவே இதற்கு எதிராகவும், தமது அடையாளங்களை காத்துக்கொள்ளும் பொருட்டும் எழுச்சி கொள்பவர்களுக்கு, சிவாஜி (அப்சலை கொலை செய்த தீரத்தின் பொருட்டு ) தேசீயவாதத்தின் குறியீடு ஆகிறார். இப்படியான ஒரு பார்வையின் மூலம் சமகால அரசியல் மாற்றுப் புள்ளிகளை கவனப்படுத்துகிறார்.

அக்பர் ரஜபுத்திர பெண்களை மணந்தது நல்லிணக்கம் அல்ல. நல்லிணக்கம் என்றால், பிறகு ஏன் ரஜபுத்திர வீரர்கள் முஸ்லிம் பெண்களை மணந்தால்  வீரர்களுக்கு தண்டனை ? என்கிறது ஒரு குரல். 

ஐரோப்பிய அறிவு லௌகீக வெற்றிகளை குறித்தது. ஆனால் இந்துஸ்தானிய அறிவு மனித சாராம்சத்தை நோக்கிய அறிவு;  என்றும்,  மராட்டியருக்கு வெற்றி முக்கியம். ரஜபுத்திரர்களுக்கு வழி முக்கியம் போன்ற,  ஒப்புமைப்படுத்தி அறிய முயலும் குரல்கள் அவை குறித்து யோசிக்க வைக்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே,  தமிழ்திரைப்பட நடிகர்கள், அவர்களது சமூக பிம்பங்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசியல்கள் போன்று, பலவற்றையும் கிண்டல் பண்ணிக்கொண்டு போகும் எழுத்தாளர் - மேலும் சொல்லத்தவிர்த்துவிட்டு, தமிழின தலைவர் இறப்பு - சே குவாரா முகத்தோடு ஒப்பிட்டு சொல்லும் இடத்தில் தனக்கு உயிர் பத்திரமாக வேண்டும் என்கிறார்.  இந்த எள்ளல் கனம் மிக்கது.

ஔரங்கஸேப் காலத்தில் கிடைத்த நல்ல விஷயங்களாக இருப்பவை பல உண்டு.  ஆண்கள் காயடிக்கப்பட்டு  கோஜாக்களாக ஆவதை தடை செய்கிறார். செயற்கையாக இப்படி ஆக்கப்பட்டவர்களை உணர்ந்து கொள்ளும் படியான சில இடங்கள் நாவலில் உண்டு.

அரசாங்க கஜானா பணம், ஆள்பவர்களின் விருப்பத்துக்கும், புகழுக்குமாக, ஜோசியர்கள் மற்றும் கவிஞர்களுக்காக செலவழிக்கப் படுவதை, பெரிதும் குறைக்கிறார். இத்தனைக்கும் அவர் ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவராகவே தெரிகிறார்.

மிக முக்கியமாக அவர்   மிக எளிமையாக வாழ்ந்தார்.  குல்லா தைத்து, குரான் எழுதி அதில் வரும் வருமானத்தை வைத்தே தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார். அப்போதிருந்த, பிற முகலாய மன்னர்களை ஒப்பிடுகையில் இவர் மிக ஒழுக்கமானவர். உண்மையாகவே சதி என்ற சமூகக் கொடுமையை தடுக்க முயன்றார்.

மற்றவர்களைப்போல கொள்ளையடித்துக் கொண்டு போக வந்தவர்கள் அல்ல நாங்கள். இங்கே இந்த மக்காளோடு சேர்ந்து வாழும் விருப்பம் கொண்டவர்களே தாங்கள் என்கிறார்.

கலைக்கும் கைகள்

இந்த நாவலில் மிக சுவாரசியமாகவும், விளையாட்டாகவும், கூர்மையாகவும் ஒரு உத்தி செயல்படுகிறது.  அகோரியின் உடம்பில் வந்து பேசுவது ஔரங்கஸேப் மட்டுமல்ல.  அவர் காலத்திய வேறு சில ஆவிகளும். அவை பேசும்போது, ஔரங்கஸேப் ஒதுங்கி  நம்மோடு சேர்ந்து  அவற்றுக்கு காது கொடுக்கிறார்.

இதில் ஔரங்கஸேப்பின் குரல் தன் தரப்பை, கோணத்தை, எழுதிச்செல்லும்போது, அவர் காலத்தில் வாழ்ந்த வெறொரு குரலின் கை அவற்றை அழித்துவிட்டு, அதன் மேல் மாற்று உண்மை ஒன்றை எழுதிப்போகிறது. இந்த உத்தியின் மூலம் ஒற்றைப் படையான புரிதல்கள், சார்புகள் கலைக்கப்படுகின்றன. மைக்ரோஸ்கோப் போல வாசகன் நுணுகி கவனிக்க முயலும்போது, கலைடாஸ்கோப் போல அசைவுகளின் மூலம் காட்சியைக் கலைக்கிறார். வெறொன்றை தருகிறார்.

எளிமையாக இருப்பதாகவும்  குல்லா விற்று தன் வாழ்க்கையை நடத்துவதாகவும் ஔரங்கஸேப் குரல் சொல்ல, பீம்சிங் சக்ஸேனாவின் குரல் அதைக் கலைத்துவிட்டு,  ஔரங்கஸேப் செய்த ஒரு பெரும் கொலைப் பழிக்காக, ஒரு  சூபி சாபம் தந்துவிட,  அந்த சாபம் நீங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட பரிகார வாழ்க்கை முறைதான் அது என்று எழுதிப் போகிறது. 

இந்துக்களுக்கு கோவிலை கட்டினேன் என்று சொல்லி இந்து வெறுப்பு இல்லை என்று ஔரங்கஸேப் குரல் எழுத, அவருக்கு ஆதரவாக இருந்த ஜஹானாரா  குரலே அதைக் கலைக்கிறது.   சிறுவனாக இருந்தபோதே, இந்துக்கள் மீது இருந்த அக்பரின் கனிவை ஔரங்கஸேப் வெறுத்தார்.  அதிகமும் ராஜ்புத்திர வீரர்கள் படையில் இருந்ததையும், அவர்கள் பழக்கவழக்கங்கள் இயல்பாக அனைவருக்கும் பரவி இருந்ததையும் குறிப்பிட்டு, ஜஹாங்கிர் போருக்கு செல்லும்போது திலகம் வைப்பதை இவர் வெறுத்தார். கிருஷ்ணர் கதைகளை நாங்கள் கேட்பதை வெறுத்தார் என்று மாற்று உண்மையை எழுதிப்போகிறது.

மேலும், கோவில் முன்னே ஒரு முஸ்லிம் சென்று சிலை வணக்கம் பற்றி அவதூறு பேச, அங்கிருந்தவர்கள் அவனை அடிக்க அவன் இறக்கிறான். அவர்களுக்கு மரண தண்டனை தரும் ஔரங்கஸேப்பிடம் ஜஹானாரா வாதாடும்போது,  அப்படி அவர்கள் சொன்னது தப்பில்லை. ஆனால் அதை அவர்கள் கோவிலில் சென்று சொன்னதே தவறு. ஆகவே வெறும் தண்டனை போதும் என்கிறாள்.  ஆனால் இவர் சாதாரண மரண தண்டனை என்பதை, கழுவேற்றும் தண்டனையாக மாற்றும் குரூரம். மதவெறி இருந்தது எந்த மாற்று உண்மையை மற்றொரு குரல் எழுதிப்போகிறது.

உங்கள் வழிபாட்டை நான் செய்ய முடியாது. என் வழிபாட்டை நீங்கள் செய்ய இயலாது என்று சமாதானமாக சொன்னதாக ஔரங்கஸேப் குரல் சொல்ல, ஜாடுனாத் சர்கார் குரல் அதை கலைக்கிறது.

ஷியா  இந்து இருவரையும் அவர் அடியோடு வெறுத்தார்  என்று மாற்று உண்மையை எழுதிப் போகிறது.

தன் போட்டி  சகோதரன்  தாரா திறனன்றவன். போரின்போது யானையில் இருந்து இறங்கி ஓடினான் என்று ஔரங்கஸெப் குரல் எழுதுகிறது. ஆனால்  கலிலுல்லா சதி செய்து தாராவை அப்படி இறங்கி ஓட வைத்தான் என்று மாற்று உண்மையை பீம்சென் சக்ஸேனாவின் குரல் எழுதுகிறது. (ஔரங்கஸேப் பற்றி எழுதிய ஒரே இந்து இவர்) 

***

நவீன படைப்புகள் படிப்பவனுக்கு அது ஏதேனும் சிறப்பு  அந்தஸ்தை  தரக்கூடும் என்றால் அது கேள்விகளையோ, பதில்களையோ தேடலையோ, முரணையோ - ஏன் புரிதல்பாற்பட்ட அதிருப்திகளையோ, குறிப்புணர்த்த வல்லதாக இருப்பதே. அவ்வகையில் இந்த நாவலில் ஔரங்கஸேப் குரல் தரப்படுத்திச்சொல்லும் பார்வைகளில், படிப்பவனுக்கு,  நாவலை ஒட்டி, அதற்குட்பட்டு, எழும் கேள்விகள்  சில உள்ளன. 

 ஆலம்கிர்  ஔரங்கஸேப் ஆவியிடம்   சில கேள்விகள்

1. உங்கள் மகள் கவிதாயினி செபுன்னிஸாவுக்கு 21 ஆண்டுகள் சிறை. ஏன் ?

2.முறையற்ற நெறிமீறிய உறவு என்பதால் ஷாஜஹானை சிறை வைத்து மரணத்தை நோக்கி தள்ளிய நீங்கள் அந்த உறவில் பங்கெடுத்த, அவரது பெண் ஜஹானாராவை (ஷாஜஹான் இறந்த பின்) பரிசு பொருள் தந்து வரவேற்றது ஏன்? முறையற்ற இணை உறவுகள் சட்டத்துக்கு முன் வரும்போது பெண் தண்டனைக்கு உள்ளாவதில்லைதான். ஆனால் உங்கள் வரவேற்பு,  அங்கீகாரமாகிறதே?

3.தீ விபத்தில் சிக்கி மீண்ட சாஹிபாவிடம், தந்தை ஷாஜஹான் ‘உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க - சகோதரன் ஔரங்கஸேப்பான உங்களை   மன்னித்து ஏற்க சொன்னது உங்கள் வாழ்வில் பெரிய திருப்பம் என்று நீங்களே சொன்னீர்கள்.  ஆனால் அதேபோலவே, சகோதரன் முகம்மது அக்பருக்காக, சாபுனிசா ஆதரித்தால் சிறையா?

4. இந்துக்களை சமமாக பாவிப்பதாக சொல்லும் நீர் - அவர்கள் யானை மீது அமர கூடாது. பல்லக்கு கூடாது. அரேபிய குதிரைமேல் ஏறக்கூடாது என்றதெல்லாம் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது?

5. இந்துக்கள் மேல் நான் ஜிஸ்யா வரி போட்டதாக சொல்வது புரட்டு. நான் முஸ்லிம்களுக்கும்தான் ஜகாத் வரி போட்டேன். அது ஜிஸ்யா விட அதிகம்.  இந்த உண்மையை கொட்டை எழுத்தில் போடுங்கள் என்று காத்தீபிடம் சொல்ல, ஜீரோ டிகிரியும் உங்களுகு மதிப்பளித்து பதிப்பித்துள்ளது. ஆனால் அக்பர் நீக்கியிருந்த ஜிஸ்யாவை மீண்டும் கொண்டுவந்தது  நீங்கள்தானே?  உங்களுக்கு பிறகு அது நீக்கப்பட்டதுதானே? அது போகட்டும்.   முஸ்லிம்களுக்கு ஆறு கடமைகளில் ஜிஸ்யாவும் ஒன்று.  அது வரி அல்ல. மதக் கடமை.  ஆனால் இந்துக்களுக்கு அப்படியான மதக் கடமை எதுவும் இல்லையே? எப்படி  வரியையும், கடமையையும் ஒப்புமைப் படுத்துகிறீர்.? நெறியும் வரியும் எப்படி ஒன்றாகும் ?

6. பக்கீராகத்தான் விரும்பினேன் என்று அடிக்கடி சொல்கிறீர்கள்.  ஆனால்  உங்கள் இளைய     சகோதரன் முராத். தலைமறைவாக இருந்தவனுக்கு ஓலை அனுப்பி, பணம் அனுப்பி, வரவழைத்து அவனிடம் பசப்பு பேச்சுகள் பேசி, நான் பக்கீராக போகிறேன், அரசு உனக்குத்தான் என்று சொல்லி மரணத்தை பரிசாக தந்தீர்கள். அது நம்பிக்கை துரோகம்தானே? வாரிசு போட்டிகளில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால் நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவன், பக்கீராகாவே விரும்பினேன் என்று நீங்கள் சொல்லி வந்ததையெல்லாம் எதில் சேர்க்கவேண்டும் ?

காட்சிச் சிறப்புகள்

நாவலில் ஒருசில சம்பவங்களை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பாக வந்திருக்கிறது.

சம்பா வதைப்படலத்தில் சிவாஜியின் மகன் சாம்பாஜியை விலங்கிட்டு ஔரங்கஸேப் அவையில் கொண்டுவந்து நிறுத்தி, எங்கள் மார்க்கத்துக்கு மாறி விடு, விட்டு விடுகிறேன் என்று சொன்னதற்கு, உன் பெண்ணைக் கொடு, மாறுகிறேன் எனும் சம்பா  சித்திரவதை ஆதல் படிப்பவரின் சமன் குலைக்கக் கூடியது. ஒவ்வொரு அங்கமாக துண்டிக்கப்படுகிறான். ஆனாலும் அவன் சிரித்துக்கொண்டே நிற்கிறான். அவனது கண்கள் அவரை நையாண்டி செய்கிறது.  ஔரங்கஸேபை தடுமாற வைக்கிறது. அவன் கண்களை தோண்டுங்கள் என்கிறார். கண்கள் தோண்டப் படுகின்றன. அப்போதும் அவன் சிரித்துக்கொண்டே இருக்கிறான். இங்கு சீலேவின் கம்யூனிஸ்ட் ஹாரா நினைவூட்டப்பட்டு , மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட போதும் கிதாரில் வெற்றி நமதே என்று பாடியதை ஒப்பிட்டு காத்திப் உரையாடுகிறார். 

மற்றொரு சம்பவம். ஒரு சூபி சுயம் மறந்து நிர்வாணமாக இருப்பதால், அது குற்றச்செயல் என்று அறிவித்து அவருடைய தலை துண்டிக்கப்பட,  வெட்டப்பட்ட தலையுடன் சூபி நடனமாடுதல் அமானுஷ்யமும் ஆன்மீகமும் கலந்த  காட்சி  (சதாசிவ பிரம்மேந்திரரை நினைவூட்டுவது).

***

இளவயது முதல் வீரனாகவும், துணிந்தவனாகவும், மத நெறி முறையை அணுக்கமாக பின்பற்றுவராகவும், சகோதரர்களுக்கு நடுவே அவர்களை வலுவிழக்கவைத்து, ஆட்சியை நிறுவி, திட்டங்ளும் சூழ்ச்சிகளும் கொண்டவனாக அரசை நிறுவி, நாற்பத்தொன்பது ஆண்டுகள் நெடிய ஆட்சியை தந்தாலும், கெடுமதியாளனாக, மூர்க்கனாக வரலாற்றால் சித்தரிக்கப்பட்டு, தனது 89 வயதிலும் போர்க்களத்தில் நின்று போராடவேண்டிய நிலையே அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

எல்லா வெற்றியாளனும் மரணத்தின்போது அர்த்தமற்றவனாக ஆகிவிடுகிறான் என்றாலும், அதை அவனே உணர்ந்தவனாக சமாதியின் புழுதியில் இருந்து எழுந்துவந்து, தனது வரலாற்றின் பக்கங்களை ஒரு அந்நியனாக பார்த்துவிட்டு பேசும்படியான ஒரு புனைவு, விவரிக்க இயலாத ஒரு உணர்வைத் தருகிறது. 

தான் இறந்த பிறகு எந்த ஆடம்பரமும் இல்லாமல் ஒரு சாமானியனின் மண் சமாதி போலவே முழங்கால் உயரத்துக்கு குறைவாக  தனக்கு இருக்கவேண்டும் என்று கோரி அப்படி அமைந்திருக்கும் ஔரங்கஸேப்பின் சமாதியை பார்க்கவேண்டும் என்று ஆசையூட்டுகிறது  இந்நாவல்.

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.

இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.

பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.

ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.

ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.

நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.

ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.

ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.

1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.

2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.

ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.

தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.

படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.

வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து https://azhiyasudargal.blogspot.com

(ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்)

நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் இருந்திருக்கின்றன. சூழல் கழுத்தை நெரித்தபோது ஒருசில வருடங்கள் எழுதாமலும் இருந்திருக்கிறேன். எழுத்தை விட்டு விடுவோமா என்றும் யோசித்திருக்கிறேன். பிழைப்புக்கான வேலை நிர்ப்பந்தங்கள் எழுத்துக்கான நேரத்தை ஒழித்துக் கட்டிவிட்ட காலமும் உண்டு. எழுத்தைக் குறைந்த பட்ச வாசகர்களிடம்கூடக் கொண்டு போக முடியாத திணறல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. என் எழுத்துகள் பலவும் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்படும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.

இப்போது நிலைமையில் சில மாற்றங்கள். முழு நேரமும் எழுத்து அல்லது வாசிப்புத்தான். வேறு பொறுப்புகள் இல்லை. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் முன்னைவிடவும் எவ்வளவோ மேல். வயது ஆக ஆக ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகிறது. ஆகச் சிறிய வயதில்தான் ஆக மோசமான நோயாளியாக இருந்தேன்.
எதிர்மறையான விமர்சனங்களையும் அவற்றின் சூட்சுமம் பார்த்துத் தரம் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். எழுத்தாளர்களின் தலைநகரமான சென்னையிலிருந்து வெகு தொலைவில் ஒரு வித்தியாசமான பின்னணியில் வாழ்ந்து வருவதால் இலக்கிய அரசியலின் சூட்சுமங்களை வெகுவாகப் பிந்தித்தான் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துப் பார்க்க இப்போது கற்றுக்கொண்டு விட்டேன். மிகுந்த நம்பிக்கையுடன், நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன். ஆசைகள் நிறைவேற சூழலின் ஒத்துழைப்பும் வேண்டும்.

  நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த தமிழ்ச் சூழலுக்கும் பின்வந்த காலங்களில், தமிழ்ச் சூழல் அதை எதிர்கொண்ட சவால்களையும் முகம் கொடுத்து முன் சென்றிருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மாற்றங்கள் சிறுகச் சிறுக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய பாய்ச்சல் என்று சொல்ல முடியாது. தமிழ் இனி 2000 இலக்கிய அரங்கில்கூட நீங்கள் கவனித்திருக்கலாம். யுவன் சந்திரசேகர் என்ற கவிஞர் கவிதை பற்றிய அவரது ‘விசேஷத் தத்துவத்தைப்’ பேசும்போதுகூட இருநூறு, முன்னூறு பேர் அதைக் கேட்கிறார்கள். என் சிறுவயதில் ம. பொ. சி., ஜீவா, அண்ணா போன்றவர்கள் இலக்கியத்தை அரசியலுடன் கலந்து பேசும்போதுதான் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆழமான, கடினமான இலக்கியக் கட்டுரைகளின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெறத்தான் ஒரே கூட்டம். எதற்கெடுத்தாலும் புரியவில்லை என்ற பேச்சு குறைந்து கடினமான விஷயங்களையும் அதிக உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தலைதூக்கி இருக்கிறது. 

நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு – அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை – இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்.

‘பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற படைப்பு, படைப்பாளியின் ஆளுமை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்றைத் தந்தவர் நீங்கள். இப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தொகுத்து மிகவும் கனதியான தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். தமிழ்ச் சூழலில் இவ்விரு ஆளுமைகளின் தேர்வுக்கான காரணம் என்ன?

புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சிறப்பாகப் பதிப்பித்திருப்பவர் ஆ. இரா.வேங்கடாசலபதி. நான் அதற்கு முன்னுரை மட்டுமே எழுதியிருக்கிறேன். புதுமைப்பித்தன் சிறுவயதிலேயே என்னை ஆட்கொண்டவர். இதைப் பற்றிப் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது கதையான மகாமசானத்தைப் படித்தபோது அது தந்த எதார்த்த உணர்வு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைப் பாதித்தது. மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். எதார்த்தத்திற்கும் மொழிக்குமான உறவில் கூடிவந்த அழகியல் தந்த கிளர்ச்சி அது. ரொமான்டிசிஸத்துக்கு எதிரான ஒரு மனோபாவம் சிறுவயதிலிருந்து தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறது.

தமிழ்ச் சூழலின் வகைமாதிரிகளைப் புதுமைப்பித்தன்போல் பதிவு செய்தவர் எவரும் இல்லை. இந்த வகைமாதிரிகளின் வீச்சும் விரிவும் எனக்கு மிக முக்கியமானவை. மேலேயிருந்து கீழே இருப்பவர்கள் வரையிலும் மேன்மைகளிலிருந்து தாழ்வுகள் வரையிலும் இலக்கியப் படைப்புக்கு உகந்த விஷயம் என்பதை அவர்தான் நிரூபித்தார். பகுதிகள் என்றில்லாமல் மொத்த வாழ்க்கையையும் முக்கியத்துவப்படுத்தினார். அவர் படைப்புகளில், ‘வாழ்க்கையை நேரடியாகப் பார்’ என்ற செய்தி இருக்கிறது. இந்தச் செய்தியும் எனக்கு முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் தாழ்வு கனவும் கற்பனையும் சார்ந்த பார்வை. நீண்ட கவிதை மரபின் பின்விளைவு இது. சமயம், புராணம் ஆகியவையும் இவற்றில் கலந்து கிடக்கின்றன. தமிழர்களின் ரொமான்டிக் மனோபாவத்தைத்தான் சகல வணிகச் சக்திகளும் – இதழ்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், தொலைக்காட்சி – சுரண்டிக்கொண்டிருக்கின்றன. மொழி உருவாக்கும் ரொமான்டிசிஸம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. புதுமைப்பித்தனின் பார்வை இன்றையத் தேவை என்று நான் நம்புகிறேன்.

எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை.  அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெற முடியும். இவ்வகையான சிந்தனைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மன நிலையில் வாழ்ந்தவர் ந. பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்து போவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல. கனமான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தவர் பிச்சமூர்த்தி. ஆனால் அவர் தன் வாசிப்பை விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை. தான் எழுதியுள்ள படைப்புகளை முன்னிலைப்படுத்த தானே உழைப்பது எழுத்தாளனுக்கு அவமானம் என்று அவர் நம்பினார். நாளிதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிபவர்களுக்குக்கூட அவர் ஒரு கவிஞர் என்பது தெரியாது.

இன்றையச் சூழலைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியைப் போன்ற ஒரு கலைஞர் வெகு சமீபத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார் என்பதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. அவருடன் உறவு கொண்ருந்தவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். பண்டாரங்கள், பைராகிகள், கைரேகை பார்ப்பவர்கள், ஜோசியர்கள், அரைகுறை வைத்தியர்கள், பிச்சையெடுப்பதற்காகத் துறவறம் பூண்டவர்கள், கோயில், குளம், மண்டபங்களில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள், சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான பாலத்தை நிர்மாணித்தவர் அவர்தான். அலட்டிக்கொள்ளாமல் அதை லெகுவாகச் செய்தார். இன்று எனக்கு அவர் கவிதைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சிறுகதை ஆசிரியர்களில் இன்றும் அவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

உங்கள் படைப்பு வாழ்வில் நீங்கள் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, மொழிபெயர்ப்பு போன்றவைகளில் காலூன்றி நின்றிருக்கிறீர்கள். இவற்றில் உங்கள் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்த ஏற்ற உலகமாக எதை அதிகமாகக் கருதுகிறீர்கள்?

முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது வேறு இலக்கிய உருவம் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்பா என்னை உதவாக்கரை என்று நினைத்தார். அதை நியாயமான மதிப்பீடு என்றுதான் சொல்வேன். இலக்கியத்தில் ஒன்றைச் சாதித்து, வெளி உலகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அப்பாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இடதுசாரி இயக்கத் தொடர்பும் அவர்களுடைய தத்துவங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் படைப்புக்கு ஒரு சமூக நியாயத்தை உருவாக்கித் தந்திருந்தன.

அதன் பின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எழுதினேன். க. நா. சு. வின் தூண்டுதலால்தான் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். இலக்கிய உருவங்கள் சார்ந்த நம்பிக்கைகள் எனக்கு முக்கியமானவை. ஒரு உருவத்தை மற்றொரு உருவத்துடன் பொறுப்பின்றிக் குழப்பியடிப்பதில் விருப்பமில்லை. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அழுத்தம் இருக்கிறது. ஒரு முன்னுரிமை இருக்கிறது.  ஆனால் எந்த உருவத்தில் அதிக நம்பிக்கை என்று கேட்டால் என் குறிக்கோள் சார்ந்து எல்லா உருவங்களிலும் என்றுதான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நோக்கம் அல்லது விஷயம்தான் உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இருப்பினும் வாழ்வின் புதிர்களை ஆராய நாவல் தரும் வசதியைப் பிற உருவங்கள் தராததால் நாவல்மீது தனியான மரியாதை வைத்திருக்கிறேன்.

தமிழில் நீண்டகாலமாக ஒரு எதார்த்தவாதப் பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த எதார்த்தவாதப் பண்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் ஒரு எழுத்தாளன் தான் நினைத்ததை முற்று முழுதாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை என்கிறார்கள். இந்த எதார்த்தவாதம் என்பது ஒரு தேர்வுக்கு உட்பட்ட அல்லது சமூக மனோபாவத்தை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட இலக்கிய முயற்சிகள்தானா?

படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மானிக்கக்கூடியது அல்ல. ஒரு எதார்த்தத்தளத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். எதார்த்தத்தளம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்தி வருகிறது. அதன் மீதான என் விருப்பம் தமிழ் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் சார்ந்தது.

தமிழில் எதார்த்தவாதிகள் எவரும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும் இல்லை. ‘ஆறில் ஒரு பங்கு’, ‘சின்னச் சங்கரன்’ போன்ற கதைகளை எழுதிய பாரதிதான் ‘ஞானரத’த்தையும் எழுதியிருக்கிறான். ‘பொன்னகரம்’, ‘கவந்தனும் காமனும்’ போன்ற கதைகளை எழுதிய புதுமைப்பித்தன் தான் ‘ஞானக்குகை’, ‘பிரம்மராக்ஷஸ்’ போன்றவற்றையும் படைத்திருக்கிறான். கு. ப. ரா., ந. பிச்சமூர்த்தி போன்றவர்களும் எதார்த்தவாதத்தைத் தாண்டிப் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மௌனி எதார்த்தவாதத்துக்குள் நுழையவே இல்லை. எதார்த்தம் தாண்டிய படைப்பு நம்பிக்கைகளைப் புதிய கண்டுபிடிப்புகள்போல் இப்போது சிலர் பேசுவது உண்மை அல்ல.

என் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புகூட எதார்த்தவாதக் கதைகளைச் சேர்ந்தது அல்ல. இப்போதைய என் கதைத் தொகுப்பின் தலைப்பான ‘காகங்கள்’ கதையையும் ஒரு எதார்த்தவாதக் கதை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் மேல்நாட்டுத் தத்துவங்களைப் படித்துவிட்டுப் போலி செய்தவையும் அல்ல. இந்திய மரபில் இல்லாத மாந்த்ரீக எதார்த்தம் வேறு எந்தத் தேசத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எதார்த்தவாதத்தின் பாதிப்பைப் பெற்ற ஒரு மூளையால்தான் அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். எதார்த்தவாதம் வழியாகத்தான் நீங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லும் தத்துவங்களுக்கும் போக வேண்டும். நம் வாழ்வின் ஸ்திதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத, மிகச் சிக்கலான தத்துவங்களைப் பேசுவதன் மூலம் பேசுபவர்களுக்கு உபயோகப்படும் அதிகார மையங்களை உருவாக்கலாம். தமிழ் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் நிகழ்த்த முடியாது. தமிழ்ச் சூழலில் அரசியல் சார்ந்த இன்டெலச்சுவல் வர்க்கத்தின் அதிகபட்ச எல்லை பாரதிதாசன். புதுமைப் பித்தன் இன்றும் அவர்களுக்கு ஒரு புதிர். இவையெல்லாம் தமிழ் எதார்த்தங்கள். புதிய சிந்தனைகளின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்டவையெல்லாம் காலாவதியாகிவிட்டன என்ற பாவனை உண்மையில்லை. ஆசிரியர் ‘இறந்துவிட்டார்’ என்று கூறுகிறவர்கள் ஆசிரியருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் விமர்சனங்களைத்தான் இப்போதும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி அதீத முக்கியத்துவம் பெற்று வருகிறான் என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பிரதியும் ஒன்று என்று சொன்னவர்கள் பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் இன்றையப் படைப்பாளிகளில் பொருட்படுத்தத் தகுந்தவர்களைப் பற்றியுமே பேசுகிறார்கள்.

தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் உங்கள் ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ ஒரு முக்கியமான திருப்பம். இது இயல்பாக நடந்ததா அல்லது முற்கற்பிதத்துடனான எழுத்துச் செயல்பாடா?

பெருமளவு இயல்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை எழுதி முடித்த நிலையில் தமிழ் நாவல் மரபில் அது வித்தியாசமானது என்ற உணர்வு மட்டும்தான் எனக்கு இருந்தது. நண்பர்களும் முன் பின் தெரியாத வாசகர்களும் சாதகமான அபிப்பிராயங்களைக் கூறத் தொடங்கிய போது நான் எதிர்பாராத காரியம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். விமர்சகர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். வாசகர்களின் வரவேற்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அபிப்பிராயங்களை விமர்சனம் சிறிய அளவில்கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது என் அனுபவம்.

மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா?

பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம்.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப்  பற்றிச் சொல்கிறது.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான்.

படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம்.

அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான்.

உங்கள் எழுத்தை வாசிக்கும்போது முரண்பாடுகள் மீதான உணர்வுகளையே காண முடிகிறது. தனிமனிதர்கள்மீதான முரண்பாடு, தத்துவங்கள் மீதான முரண்பாடு. உங்களுக்குத் தனி மனிதன், சமூகம், சமூக நிறுவனங்கள், தத்துவங்கள் எதுவுமே திருப்தியைத் தரவில்லையா?

சமூக வாழ்க்கையில் எனக்குத் திருப்தி இல்லை. தத்துவங்கள் சார்ந்தும் சமூக ஒழுக்கங்கள் சார்ந்தும் மனிதன் போடுகிற வேஷம் மிகப் பெரிய சீரழிவை உருவாக்குகிறது. உயர்வானவையும் மனித ஸ்பரிசம் படும்போது கீழிறக்கம் கொள்கின்றன. பதவியைப் பிடிக்கத் தத்துவங்களைப் பயன்படுத்தும்போது உபயோக மதிப்பு உள்ளார்ந்த சாரத்தை அரித்து விடுகிறது. பார்வையற்றோர் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவை ஆசிரியர்கள் திட்டமிட்டுத் திருடுகிறார்கள். மனிதன் மேலானவன் என்பதை ஒரு ஸ்லோகமாக்க நான் விரும்பவில்லை. மனிதநேயம் படைப்பாளி நம்பித் தீர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அல்ல.

படைப்பாளியிடம் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன. மனித ஸ்திதியை அது எவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையிலும் புரிதல் சார்ந்து மேலெடுத்துச் சென்றுவிட முடியும். பிரக்ஞைபூர்வமான வேஷதாரிகளைத் திருத்துவது மிகக் கடினம். வேஷதாரி களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம்.  கபடமற்ற ஜனங்களின் சரிவு அல்ல பிரச்சினை. திட்டமிட்டு ஏமாற்றும் சக்திகளின் கூட்டு ஒப்பந்தம்தான் பெரிய பிரச்சினை.

நீங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்கள் மொழி ஆளுகையில் அறிவின் மொழியினூடாக உங்கள் சிந்தனை வெளிப்படுவது எப்படி சாத்தியமாகிறது?

தமிழ்ச் சூழலில் உணர்ச்சியின் பீறிடல்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழும் பணமும் பதவியும் தேடித் தர ஏற்ற விற்பனைப் பண்டமாகவே உணர்ச்சியின் பீறிடல் தமிழ்ச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் மேடைக் கத்தல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கண்ணீரின் பிரவாகம், வணிக எழுத்தாளர்களின் நெகிழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் எதிராக நான் என் உணர்ச்சியைச் செம்மை செய்துகொள்ள விரும்பினேன். வாசகர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் சுயமான விமர்சனம் உருவாகும். இந்த விழிப்புநிலையிலிருந்துதான் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் செயல்பாடுகள் தோன்றுகின்றன. அறிவு சார்ந்த மொழி உருவாகும்போது இன்னும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும். இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.

மதங்களில், தத்துவங்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பது உங்கள் குரலாக உள்ளது. மனிதர்கள் பற்றிப் பிடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் தேவையில்லையா? உங்கள் அனுபவம் சார்ந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மனிதர்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவன் விரும்பும் சமயத்தில் அல்லது தத்துவத்தில் அல்லது சிந்தனைகளில் நம்பிக்கை கொள்ளட்டும். எவற்றினூடாகவும் மனித வாழ்க்கை சார்ந்த விமர்சனமும் கனவும் ஒருவனுக்கு இருக்குமென்றால் அவனுடன் விவாதம் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் எந்தத் துறையைச் சேர்ந்த போலிகளுடனும் நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. அது என்னையே அழித்துக் கொள்வதாகும். முற்போக்கு, பிற்போக்கு சார்ந்த பழைய இலக்கணங்கள் எல்லாம் சுக்கு நூறாகத் தெறித்துவிட்டன. சங்கராச்சாரி ஜாதி புத்தி கொண்ட பிற்போக்குவாதி என்பது என் எண்ணம்.  ஜெயலலிதா பக்தி கொண்ட வீரமணி எந்த விதத்தில் முற்போக்குவாதி? பொதுவுடைமைவாதிகள் – இவர்களில் பலர் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் – கால் நூற்றாண்டேனும் சகல மனித ஒடுக்கல்களையும் அறிந்த நிலையில் சோவியத் சர்வாதிகாரத்துக்குத் துணை போனவர்கள். தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்காமலே அவ்வாழ்க்கை புதைந்துபோய்விட்ட திருப்தியில் இப்போதும் ஜனநாயகம் பற்றியும் சமூக முன்னேற்றம் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதனாகவும் இருக்கிறான் என்பது எனக்கு முக்கியம். எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்கிறவனாகவும் இருக்கிறான்? சமூகப் பிரக்ஞையுடன் செயல்படுகிறானா அல்லது ஏமாற்றுவதற்காகச் செயல்படுகிறானா? படைப்பாளியின் எழுத்து எந்தவிதமான வாழ்க்கையைச் சென்றடைய அவன் கனவு காண்கிறான் என்பதைக் காட்டுகிறது. மனித சாரத்தைப் பேண முற்படுகிறவர்களுடன் நான் மானசீக உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஊரையும் உலகத்தையும் தழுவிய உறவு இது.

நீங்கள் முதல் எழுதத் தொடங்கிய நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. 38, 40களில் அக்கதை நடக்கிறது. ஆனால் இடையில் உங்களுடைய இரு நாவல்கள் வெளிவந்தன. மூன்றாவது நாவலாகத்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் ஏன் அந்த நாவல் அதிகக் கவனம் பெறாது போய்விட்டது. இதுவே உங்கள் முதல் வெளிவந்த நாவலாக இருந்தால் நீங்கள் தமிழில் அதிகக் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பீர்களா?

நான் 1978, 79 காலங்களில்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை எழுதத் தொடங்கி னேன். (இப்போது வெளிவந்திருப்பது அதிலிருந்து வெகுவாக விலகிவந்த ஒரு எழுத்துருவம்.) ஆகவே இது என் முதல் நாவல் அல்ல. முதல் நாவலாக வந்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கும், மூன்றாவது நாவலாக வந்ததால்தான் கவனம் பெறாது போய்விட்டது என்பது உண்மை என்றால் அது கவனம் பெறாமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அதன் உயிர்ப்பு சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறதே தவிர அதன் வரிசை சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. 

என் மூன்று நாவல்களில் மிக முக்கியமான நாவலாக நான் கருதுவது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’தான். அதுதான் வாழ்க்கையை அதன் முழுமையான தளத்திற்கு விரித்துப் பார்க்க முயல்கிறது. அது காட்சியளிக்கும் வகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் அது எனக்கு ஒரு இழப்புத்தான். அந்த நாவலில் வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை என்று நம்புகிறேன். அவற்றைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்க சிரத்தையான, ஆழமான வாசிப்புத் தேவை. அதை ஊடுருவி வாசித்த பின்பும்  ஏற்கவில்லையென்றால் அதை நான் மதிக்கிறேன். இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை. மோஸ்தர் சார்ந்த புறக்கோலங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அது உதாசீனப்படுத்தப்பட்டால் வாசகனுக்கு அது ஒரு இழப்பு என்றே சொல்வேன்.

உங்கள் எழுத்துக்களின் பின்னால் ஒரு தொனி இருக்கிறது. இப்போது இருப்பவன் புரிந்துகொள்ளா விட்டாலும் எதிர்காலத்தில் என்னைப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் வருவான். அவனுக்காகவே நான் எழுதுகிறேன் என்கிறீர்கள். அப்படியான வாசகன் வந்துவிட்டானா?

திட்டவட்டமாக அப்படி சொல்ல முடியாது. வாழும் காலத்தில் அங்கீகாரம் பெற முடியாத எழுத்தாளன் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ வாக்கியங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இன்று இல்லையென்றாலும் நாளை ஒளி வரும்’ என்பது.  சமூக ஸ்திதி¬யும் எழுத்தாளனின் ஆதங்கத்தையும்தான் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. பலருக்கு ஒளி வராமல் போயிருக்கிறது. புல் முளைத்து மண்டியிருக்கிறது. எதிர்மறையான சூழலில் நம்பிக்கை கொண்டு செயல்பட பல மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. போன நூற்றாண்டு முழுக்கப் பல படைப்பாளிகள் வெவ்வேறு வகைகளில் இந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். சிலருக்குக் காலம் துணை நின்றும் இருக்கிறது.

உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார் மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது.

நீங்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறீர்கள். பின்னால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இவ்விடைவெளி மார்க்ஸியத்தின் போதாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது மார்க்ஸிய நிறுவனங்களின் பலவீனங்களின் அடிப்படையில் ஏற்பட்டதா?

மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான். சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காக தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் ‘ஜே. ஜே : சில குறிப்புகளில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப் பெரிய நாகரீகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் என் பிரச்சினை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது.

சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை, ஆளுமையை உருவாக்குவதில் மலையாளச் சூழலுக்கு எந்தவிதமான பங்களிப்பு உள்ளது?

பெரிய அளவில் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இடதுசாரிச் சிந்தனைகளில் கவனம்கொள்ள என்னைத் தூண்டியவை மலையாள எழுத்துகள்தான். மார்க்ஸிய பார்வை கொண்ட சிறுகதைகளை நான் ஆரம்பகாலத்தில் எழுதத் தூண்டுதல் பெற்றதும் மலையாளப் படைப்பிலக்கியத்தின் பாதிப்பாக இருக்கலாம். 

ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்கு நாடுகளுக்கான தமிழ் புலம் பெயர்வு அதிகமாக நடந்திருக்கிறது. அங்கு போய் தமிழில் எழுதுகிறார்கள். தமிழில் புலம் பெயர் இலக்கியம் என்ற ஒரு அம்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?


என்னை மிகவும் பாதித்த விஷயம் இது. இருபத்தைந்து வருடங்களாகவே எனக்கு ஈழத்து எழுத்தாளர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் இவர்களைப் பற்றிய என் ஞாபகங்கள் வழியாகத்தான் பார்க்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. கசப்பான பல உண்மைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை அங்கு நீடிக்கும் என்றால் அவர்கள் குடும்பங்களிலிருந்து தமிழ் வெளியே போய்ச் சூழலில் இருக்கும் மொழி உள்ளே வந்து விடும். குழந்தைகளால் தமிழைக் காப்பாற்ற முடியாது. இது வரலாற்றின் கட்டாயம். இந்தத் தலைமுறையில் ஏதேனும் தமிழ் எழுத்துகள் வந்தால்தான் உண்டு. படைப்பு உருவாவதற்கு மொழியறிவு மட்டும் போதாது. மொழி சார்ந்த வாழ்க்கையும் வேண்டும்.

பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்?

பின் நவீனத்துவக் கோட்பாடும் தமிழ்ச் சூழலும் இன்றுவரையிலும் பொருந்தாமல்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்புகள் வழியாக அதன் பாதிப்பு குறிப்பிடும்படி நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. சகல முனைகளிலும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிக்க வேண்டும் என்றாலும் கூட நடைமுறையில் பாலியல் விவரணைகளில் மட்டும்தான் விரிக்கப்படுகிறது. இது அதிர்ச்சி மதிப்புக்குத் தரும் முக்கியத்துவம் தவிர வேறு அல்ல. பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் இணைத்துக் காட்டும் படைப்புச் சிந்தனை தோன்றும் என்றால் அந்தச் சிந்தனை  இன்னும் அதிகக் கௌரவத்தைப் பெறும். படைப்பிலக்கியத்தையும் பாதிக்கும். 

தமிழ் சிற்றிதழ் வரவில் காலச்சுவடு மிக முக்கியமானது. அச்சிற்றிதழ் வருகைக்கான குறிக்கோள்கள் எட்டப்பட்டு விட்டனவா? இப்போது எங்கே நிற்கிறது?

இப்போது காலச்சுவடை உருவாக்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கண்ணனும் மனுஷ்ய புத்திரனும் அவர்களது நண்பர்களின் உதவியுடன் செய்து வரும் காரியம். நான் நடத்தி வந்த காலச்சுவடின் எல்லைகள் இப்போது பெரிய அளவுக்கு விரிந்திருக்கின்றன. குறிக்கோளைச் சென்றடைந்துவிட்டோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் வாசகர்களிடையே மிகப் பெரிய விழிப்புநிலையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்க வேண்டும். வாழ்க்கையை மதிப்பிடவும் மறுபரிசீலனை செய்யவும் புதியவற்றை ஏற்கவும் பழையவற்றைக் கழிக்கவும் அவர்களால் சாத்தியப்பட வேண்டும்.

தமிழ் இனி 2000 சந்திப்பில் எதைச் சாதிக்க வேண்டுமென விரும்பினீர்கள்?

தமிழ் இனியை உருவாக்கியவர்களின் நோக்கம் எல்லோரும் கூடி கடந்து வந்த பாதையைப் பற்றியும் இனி நடக்க வேண்டிய பாதையைப் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பது என்பதுதான். அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிற்று என்று நினைக்கிறேன். இதன் மூலம் பல நல்ல விளைவுகள் கூடி வரவேண்டும்.

அண்மைக்காலமாக ஈழத்துடன் உங்களுக்கான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய ஈழத்துத்  தமிழ் இலக்கியம் தொடர்பாக உங்கள் மனநிலை என்ன?

ஈழத்து இலக்கியம் பற்றிச் சொல்வதென்றால் கவிதைப் படைப்புகளிலும் விமர்சனச் சிந்தனைகளிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை. அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்து கொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது. தங்களைப் பற்றித் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும் பிறர் உருவாக்கும் மிகையான அபிப்பிராயங்களையும் மறுபரிசீலனை செய்ய அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் படைப்புகளைத் தரும் உத்தேசங்களில் உங்களை ஈடுபடுத்தியிருக்கிறீர்களா?

நிச்சயமாக. ஒருசிலவேனும் கூடி வரும் என்று நம்புகிறேன்.  

நன்றி : மூன்றாவதுமனிதன்இதழ் 10 ஜனவரி–மார்ச் 2001

சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிக்கையாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), “யார் அவர்?” என்று விசாரித்தேன். “யோவ், சி.மணிய்யா அது!” என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு போன்ற உருவகக் காட்சியோ என்று தோன்றுகிறது. உருவகத்தின் ஒரே ஒரு விவரம் தான் மாறுகிறது. நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரைந்தேன். இன்று தமிழ் நாடு அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியம் கொண்டதல்ல.

சி. மணிதான் தன்னை இன்றைய தமிழ்க் கவிதையின் ஒரு புது அத்தியாயத் தொடக்கத்தில் பங்கு கொண்ட கவிஞர் என்று தன்னை தமிழுக்கு நினைவுபடுத்தவேண்டும். தமிழ் இலக்கிய உலகம் கேட்குமோ கேட்காதோ எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம், அவர் யார் என்று எனக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் என் நினைவில் சுமார் முப்பது முப்பதைந்து வருடங்களுக்கு இடையில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத காரணம் தான்.

எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் ஒரு நாள் நான் சென்னையில் விடுமுறையில் வந்திருந்தபோது ந.முத்துசாமிதான் கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு சி.மணி, வி.து.ஸ்ரீனிவாசன், இன்னும் ஒரு சேலத்துக்காரர், பெயர் மறந்து விட்டது, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எல்லோரும் சென்னையில் கல்லூரித் தோழர்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு சின்ன நண்பர்கள் கூட்டம் எழுத்துக்கு ஒருமுகமாக அறிமுகமானது. அவர்கள் எல்லோரிலும் சி.மணி தான் ஒரு ராஜ தோரணையும், நெடிய உருவமும் கொண்டு தனித்துத் தெரிந்தார். அன்று astral bodies பற்றி முதன் முறையாக அவர் பேசக் கேட்டேன். இலக்கியம் பற்றியோ, கவிதை பற்றியோ பேசவில்லை. வி.,து. ஸ்ரீனிவாசனும் நிறையப் படித்தவராகத் தோன்றியது. ஸ்ரீனிவாசன் தத்துவ உலகில் சஞ்சாரம் செய்தார்.
சி.மணியைப் பார்த்த போது அவரை நான் எழுத்து பத்திfரிகையில் அவர் எழுதியிருந்த நீண்ட நரகம் கவிதையில்

கால் பட்டமணலிலும்
கண்பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது
குதித்தோடும் ஒரு கும்பல்;
அதைத்தொடரும் மற்றொன்று
இன்னல் தனித்தே வராதா?

என்று எழுதக்கூடும் ஒருவரைப் பார்த்தேனே ஒழிய

கலைந்த மழையுள, மறைந்த பூவுள 
தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள 
ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள 
சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள,

என்று எழுதியிருந்த, அதை சாத்தியமாக்கும் ஆழ்ந்த, பரந்த தமிழ்ப் பாண்டித்யமும் அதை நினைத்த கணத்தில் எடுத்தாளும் திறனும் கொண்ட ஒரு தமிழ் பண்டிதத் தோற்றத்தை நான் காணவில்லை.

மிகுந்த தோழமையோடும் பழகினார். ஒரு சில மணிநேரங்கள்தான். பின் அவரை நேரில் பார்க்கவில்லை. நடை பத்திரிகையில் எங்கள் நெருக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கலிங்கத்துப் பரணியில் ஒரு பகுதிப் பாடல்களை (கடைதிறப்பு – மிக சுவாஸ்ய்மான பகுதி) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததைப் பார்த்தேன். கைப் பிரதியில் தான். எனக்குத் தெரிந்து அவை எங்கும் பிரசுரமாகவில்லை.

சி.மணி ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமிழிலும் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் எழுத்து பத்திரிகையில் அதன் தொடக்க வருடத்திலிருந்தே எழுதிய கவிதைகள், மரபும், மரபு மீறலும், அம்மீறலில் தனக்கென ஒரு தனித் தடமும், கொண்டவராக, அதிலும் இவை கவிதை, தமிழ், யாப்பு என்ற வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாது, ஒரு பரந்த உலகையும், பல துறைகளையும் ஒன்றிணைத்த , எள்ளலும், சமூக விமர்சனமும், ஒரு இளைஞனின் தான் அந்நியப்பட்டுவிட்ட நிலையில் தந்திருப்பது ஒரு புதிய வருகையை, தமிழுக்கு வந்துள்ள வளத்தைக் கொண்டாடுவதுதான்.

பல விஷயங்களில் பழமைப் பிடிப்பும் பிடிவாதமும் கொண்ட செல்லப்பா அந்த நாட்களில் சி.மணியின் புதிய பார்வையையும் குரலையும் இனங்கண்டு கொண்டாடி ஆர்ப்பரித்தது அப்போது மட்டுமல்ல, இப்போதும் நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சி.மணியின் பார்வையும் எழுத்தும் கஷ்டப்பட்டு யோசித்து வலிந்து பெற்ற ஒன்றல்ல. அது தாமாக சட்டென வெளிப்படுவது. சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும், கூடியிருக்கும் கூட்டம் பஸ்ஸில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் காட்சியைக் கண்டு இதை எதற்கு ஒப்பிடலாம், பழம் இலக்கியத்தில் தான் பண்டிதன் என்று காட்டிக்கொள்ள எந்த வரியை எடுத்தாளலாம் என்று யோசிக்கும் காரியமில்லை. “யோவ் பொம்பிளைங்கள ஏறவிடுய்யா முதல்லே” என்று ஆரம்பித்துத் தொடரும் கூச்சலையும் முண்டியடித்து ஏறும் காட்சியையும் பார்த்த உடனேயே சி.மணி உதட்டில் நகையேற,

சேவலே முன்னென்போரும், இல்லை
பெடையே முன்னென்போரும், இல்லை,
வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால், யாவரே
தெரியக்கண்டார்.

என்று மனதுக்குள் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும்.

நரகம், வரும் போகும் போன்ற நீண்ட கவிதைகளில் வரும் இன்றைய நடப்புலக நகரக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது மதுரைக் காஞ்சியில் வரும் நகரக் காட்சிகள். அதிலும் ஆடவர்கள் கவனத்தைக் கவர கணிகையர் தம்மை வண்ணக் கோலங்களில் அலங்கரித்து வரும் இரவு நகரக் காட்சியும் அடக்கம். ரோமானினர்களும், கிரேக்கர்களும் தம் நாட்டு உடைகளில் உலாவருகிறார்கள். நகரம் என்றால் எல்லாம் தான் அதில் அடக்கம்.

பழந்தமிழ் பா வரிகளை அப்படியே கையாண்டுள்ளதை நான் பாரதிதாசனில் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர் தானே. ஆனால் அவர் அந்த வரிகள் வசதியாகச் சேர்ந்தவை. அதற்கு மேல் அதற்கு மாறிய, வேறுபட்ட பயனோ, அர்த்தமோ இருந்ததில்லை. ஆனால் சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதை மாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமரிசிக்கும் பொருளில் கையாள்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சனமும் பொதிந்தது. ஒரு ஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட ஆழமும், முரணே போன்ற உண்மையும், கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும்.

முதல் கவிதையே
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்(1959).
தோற்ற முரண் கொண்ட உண்மை.
இந்த விசாரம் கடைசி வரை தொடர்கிறது.
சிந்திப்பதற்கு மிகச் சிறந்த முறை எது
என்றால் சிந்திக்காமல் இருந்து விடுவது தான். (1994)

இரண்டுமே ஏதோ ஒரு epigram மாதிரித் தோன்றினாலும் முன்னது இரண்டு வரிகளிலேயே கவிதையாகியுள்ளது. பின்னது ஒரு கவிதையின் தொடக்க வரியாகக் கொள்ளாமல், இரண்டு வரிகளினுடனேயே நின்று விட்டால் epigram- ஆக நின்று விடுகிறது.

எழுத்துக்கு இப்படி ஒரு கவிதைக் குரல் கிடைத்ததில் செல்லப்பாவுக்கு சந்தோஷமே. அதைக் கொண்டாடவும் செய்தார். சி.மணிக்கு தன் கவித்துவ வெளிப்பாட்டிற்கு ஒரு மேடை கிடைத்தது பற்றி சந்தோஷமே. ஆனால் எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையின் பிரயாணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மரபை வரித்துக்கொண்டோரிடமிருந்து எதிர்ப்பு. தாம் புரட்சிக்காரர்களாக்கும் என்று கோஷமிடுவோரிடமிருந்தும் எதிர்ப்பு. அத்தோடு இவ்விரு சாராரையும் சேராத, செல்லப்பா போல புதுமை இலக்கியக்காரர்களிடமிருந்தும் எதிர்ப்பு. எல்லா எதிர்ப்பும் கிண்டலோடுதான். அதெல்லாம் பழைய கதை. இப்போது ஜஸ்டீஸ் பார்ட்டிக்காரர்களும், செஞ்சட்டை வீரர்களும், திராவிட கழகங்களும் அவர்களுக்கு அன்று வெறும் காந்தியாக இருந்தவரை, அண்ணல் காந்தியாக்கி அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, இப்போது எல்லோரும் புதுக்கவிதைக் காரர்கள் தாம். ஆனால், சி.மணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த எதிர் வினை தான் தமிழ் இலக்கிய உலகத்தின் குணங்களில் குறிப்பிடத்தக்க விசேஷமான ஒன்று.

க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் வந்த எதையும் அங்கீகரிக்கத் தயாராயில்லை. “டி.எஸ். இலியட் செய்ததைத் திரும்பச் செயவதில் என்ன இருக்கு?” என்றார். காரணம் எழுத்து பத்திரிகையின் மீதும் செல்லப்பா மீதும் இருந்த பகைமை உணர்ச்சி. எழுத்து கடை மூடிய பிறகு வெகு காலம் கழிந்த பின்னர் அவர் எழுத்துவையும் செல்லப்பாவையும் பாராட்டி எழுதியவர்தான். க.நா.சுவுக்கு என ஒரு தனி சிஷ்ய கோடிகள் இருந்தார்கள். அவர்களும் அவர் வழியொட்டி சி.மணியைக் கண்டு கொள்ளவில்லை. ஷண்முகசுப்பையாவைக் கொண்டாடியவர்கள் சி.மணியைக் கண்டு கொள்ளாத வேடிக்கை எங்கு நடக்கும்? தமிழ் நாட்டில். மெத்தப் படித்தவர்களுக்கு டி.எஸ்இலியட்டின் Waste land-ஐ பிரதி செய்ததாகச் சொல்வது தம்மை உயர்த்திக்கொண்டதாகவும் இருக்கும், தாம் காணச் சகிக்காத சி.மணியை மட்டம் தட்டியதாகவும் இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெறும் உத்தியையும் ஒரு உத்தி தந்த சிருஷ்டியையும் குழ்ப்பிக்கொள்பவர்கள். தம்மில் குழ்ப்பம் இல்லாவிட்டாலும் குழ்ப்பம் இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.

இந்திய மொழிகள் பலவற்றில் waste land-ன் பாதிப்பைக் காணலாம் என்று பார்தீய சாஹிக்தயவின் ஆசிரியர் என்னிடம் சொன்னார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் அய்யப்ப பணிக்கர் இருக்கவே இருக்கிறார். இதில்லாம் தெரியாதென்று இல்லை. வேண்டுமென்றே புரளி செய்பவர்களை என்ன செய்யமுடியும்?. சி.மணியின் நரகம் சொல்வதை டி.எஸ் இலியட்டும் சொல்லவில்லை. அய்யப்ப பணிக்கரும் சொல்லவில்லை.

எழுத்து பத்திரிகை தன் கவிதையை நிராகரித்தது என்ற காரணத்தால், சி.மணி மட்டுமல்ல, தர்மூ சிவராமூ, சுந்தர ராமசாமி என்று சகட்டு மேனிக்கு எல்லோரையுமே நிராகரித்தவர்களும் உண்டு. சி.மணி நடை பத்திரிகையில் வே.மாலி என்று இன்னொரு புனை பெயரில் எழுதிய கவிதைகளைக் கண்டு ஆர்ப்பரிப்பதில் க.நா.சு.வுக்கு தயக்கமிருக்கவில்லை. வே.மாலி என்று எழுதுவது சுந்தர ராமசாமி என்று அவர் நினைத்தார். நான் அவரிடம் இது அவர் நிராகரிக்கும் சி.மணி என்று சொல்லவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்றில்லை. செல்லப்பாவை வெளிப்படையாக அங்கீகரிகக் கூடாது என்ற ஒரு தீர்மானம். அதில் இரையானது சி.மணி.

1964-65-ல் தில்லியில் என்னுடனான நேர்பேச்சில் அவர் சொன்னது, “எழுத்து மூலம் செல்லப்பா வெளிக்கொணர்ந்த இரண்டு முக்கிய பெயர்கள்: ஒன்று தருமூ சிவராமூ, இரண்டு வெ. சாமிநாதன்:”

மற்றொரு சமயம், “செல்லப்பா எதைப் பற்றி எழுதினாலும், அதை நான் கட்டாயம் பார்த்தாகணும். நான் அவரிடமிருந்து அதில் புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதும் இருக்கும்” ஆனால் இதையெல்லாம் அவர் எழுதியதில்லை. க.நா.சு போலத்தான் அன்று சி.மணியெல்லாம் ஒரு கவிஞரா என்று எழுதியவர்களும். எழுபதுகளில் பிரக்ஞை, தாமரை போன்ற இதழ்களில் ஒரு campaign- என்றே அதைச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காட்டமான தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.

·ப்ராய்டிய மனப் பிறழ்ச்சி, அந்நியமாதல், எக்ஸிஸ்டன்ஸியலிஸம்,, இதெல்லாம் முதலாளித்வ சமூகத்தின் சீ£ர் கேடுகள்” என்று சோவியத் துண்டுப் பிரசுர பொது உடமைத் தத்துவ நோக்கில் நா.வானமாமலை எழுதலானார். இது முன் தீர்மானிக்கப்பட்ட கட்சிப் பார்வை. நா.வானமாமலை ரொமப விஸ்வாசமான கட்சிக் காரர். மற்றக் கட்சிக்காரர்கள் போல இலக்கியம் இன்னும் மற்ற சமாச்சாரங்கள் பற்றி ஏதும் தானே அறிந்து கொள்ளாதவர். மேலும் சி.மணியின் கவிதைகளில் பாலியல் ரொம்பவும் பச்சையாகப் பேசப்படுகிறது என்று வேறு குற்றம் சாட்டியிருந்தார். வேறு எதற்கும் யாருக்கும் பதில் சொல்லாத சி.மணி பழம் இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கிறதே ஐயா, நான் அவ்வளவு தூரம் போகவில்லையே என்று பதில் சொல்லியிருந்தார். நா. வானமாமலை, இலக்கியத்தில் கொள்ளப்பட வேண்டுவதும், கொள்ள வேண்டாததும் எல்லாம் தான் இருக்கும். கூளப்ப நாயக்கன் காதலும் இருக்கிறது. விறலி விடு தூதும் இருக்கிறது. அதையெல்லாம் ஒதுக்க வேண்டும்”. என்றார்., ஆண்டாளும் கம்பனும், குறுந்தொகை இன்னும் மற்ற அகப் பாடல்களும் இருக்கின்றனவே, அவற்றையும் ஒதுக்கிவிடலாமா? என்று சி.மணி கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை என்று தான் நினைக்கிறேன். அவருக்கு இந்த வாதங்கள் புரிவதில் நம்பிக்கை இல்லை. நீ எழுதுவதெல்லாம் கவிதையா என்று கேட்டவர்களுக்கே பதில் எழுதவில்லை. க.நாசு.வுக்கு அவர் பதில் சொன்னதில்லை.

அவரது இயல்பு அது. ஆனால், எழுத்திலும் நடையிலும் மற்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும் தன் காலத்தில் எழுதிய மற்ற புதுக்கவிஞர்கள் ஆரவார வரவேற்பு பெற்ற இடங்களில் கூட சி.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. Personal rivalry என்ற தளத்தில் மற்ற கவிஞர்களிடமிருந்தும், கண்டு கொள்ளாமல் ஒதுக்குவது என்ற வகையில் இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு இலக்கிய தளத்தில் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. இது அந்த ஆரம்ப கால நோய்க்கூறுகளில் ஒன்று என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட, அவர்கள் தமக்குள் தாம் தான் பெரியவன் என்ற மிதப்பில் மிதந்தவர்கள் ஒருவரை ஒருவர் நிராகரித்துக் கொண்டார்கள். அது போல் தானே சி.மணிக்கும் நேர்ந்தது என்று கேட்டால், இவர்கள் அனைவரும் ஒன்று போல சி.மணியை நிராகரித்தார்கள் என்பதுதான் வேடிக்கை. பின்னர் அந்த ஆரம்பக் கால காட்டம் எல்லாம் மறைந்த பிறகு அன்று எதிர்த்தவர்களே சி.மணியைப் பாராட்டவும் செய்தார்கள். தம் மனதுக்குள் தம் அந்நாளைய எதிர்ப்பை எண்ணி வருந்தியுமிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், எனக்குத் தெரிந்து வேறு சில எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வருந்தியது எனக்குத் தெரியும்.

தமிழ் இலக்கியம் அறிந்த எந்த யாப்பின் வகைப்பட்டதும் அல்ல இது என்ற பண்டித கண்டனத்திற்கு மாத்திரம் அவர் விரிவாக ‘செல்வம்’ என்ற பெயரில் பதில் தந்தார். அது அவசியமா என்ன? அதை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதன் காரணமாக இதென்ன யாப்பு வகை? என்ற கேள்வியையும அவர்கள் அன்று நிறுத்தவும் இல்லை. காலவோட்டத்தில் அந்த்க் கேள்வி தானாகவே மறைந்தும் விட்டது. ·ப்ராய்டிஸ் மனப் பிறழ்ச்சி, முதலாளித்துவத்தின் சீரழிவு போன்ற கண்டனக் குரல்களும் மறைந்து விட்டன.
ஆனால் நம் இருப்பின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் தமிழ் உலகம் நாமும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும். நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் ஒரு காலத்தில் இருந்த தடையமும் மறைந்து விடும். சத்தமிட்டுக் கேட்கும் குரல்களின் குணம் என்ன தரம் என்ன என்ற கேள்விகளை தமிழ் உலகம் கேட்பதில்லை. சத்தமே தரம், சத்தமே குணம் அதற்கு. இப்படித் தான் சார்வாகன் என்ற கவிஞரும் மறக்கப்பட்டு விட்டார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நான் இருக்கிறேன் என்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழ் இலக்கிய உலகம் சி.மணியை அங்கீகரிக்கவில்லை. அவரைக் கண்டுகொண்டது அமெரிக்கா வாழ் தமிழ்ர்கள் அளித்த விளக்கு விருது. தமிழ் நாடு எல்லை தாண்டி கேரளம் தந்த குமரன் ஆசான் பரிசு. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று நாம் சற்று யோசித்தால் .

எழுத்து நின்றபிறகு, சி.மணி அதிகம் எழுதியவரில்லை. கணையாழி பத்திரிகையில் அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதி வந்திருக்கிறார். ஆனால் அறுபதுகளின் மணி அல்ல அவர். எழுபதுக்களுக்குப் பின் அதுவும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது.

ஆனால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு இருந்த கார்லோஸ் காஸ்டனாடா, குர்ஜீ·ப், ஜென், ஈடுபாடுகளில் அவர் மன்ம் முழுதுமாகத் தோய்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு புத்தகம் அவரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கொடை. மொழிபெயர்ப்பு தான். சீன மொழியிலிருந்து ஒரு சீனரே ஆங்கிலத்தில் தந்துள்ள பிரதியிலிருந்து பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு இது. சி.மணிக்கு இம்மாதிரியான விசாரணைகளில் உள்ள ஈடுபாடு, கவித்துவ மனம், மொழி வல்லமை எல்லாம் இம்மொழிபெயர்ப்பில் சாட்சியம் பெறுகின்றன.

வாசலைத் தாண்டிப் போகாமலே
உலகம் அனைத்தையும்
ஒரு மனிதன் தெரிந்து கொள்ள முடியும்
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காமலே
வானத்துத் தாவோவை
பார்க்க முடியும்
அதிகம் பயணிக்கும் ஒருவன்
மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்கிறான்.

ஆரம்பத்தில், 1959 வெளிவந்த அவர் முதல் எழுத்திலிருந்தே இத்தகைய விசாரணைகளோடு தான் அவர் பயணம் தொடங்கியதை திரும்ப நினைவுக்குக் கொள்ளலாம். பயணத்தின் முடிவிலும் அதே முரண்பட்ட உண்மைகளை அடந்திருப்பது பயணத்தின் தொடக்கமா, முடிவா, பயணம் தானா என்று சிலருக்குக் கேள்விகள் எழும். இன்னொரு கவிதை சி.மணியினது

ஒரு உண்மை தேடி நச்சரித்தான்:
ஓ குருவேஇறப்புக்குப் பிறகு என்ன?
குரு சொன்னார், 
பார்வையில் குறும்புடன், ஓ அதுவா,பிறப்புக்குப் பிறகு என்ன?

70-க்களிலிருந்து அவர் அறுபதுக்களில் தெரியவந்த சி.மணியாக இல்லையே என்று எனக்கு வருத்தம் ஒரு பக்கம். அவரது கவித்திறனின் முழு வியாபகத்தை அவரது நீண்ட கவிதைகளில் தான் காண்கிறோம். புதுக்கவிதை தோற்றத்திற்குப் பிறகு நீண்ட கவிதைகளை யாரும் எழுதுவதில்லை. வெற்றிகரமாக அதைச் சாதித்தவர் சி.மணி தான். அவரது கவித்துவ வாழ்வு கடைசி வரை ஏதோ வகையில் தொடர்ந்தது தான். தாவோ தேஜிங் சாட்சியப்படுத்துவது போல். ஆனால் அறுபதுகளில் அவரது கவித்வம் கண்ட வீச்சு காணப்படவில்லை. இதற்கு காரணம் சி.மணியின் ஆளுமை இயல்பா அல்லது தமிழ் இலக்கிய உலகின் குணவிசேஷங்களா? எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு கவிஞனை மூச்சடைக்கச் செய்துவிட்டோமோ என்று. இயல்பான பயணம் அல்ல இது. தடைக்கற்களை பாதை எங்கும் கொட்டி விட்ட பயணம்.

இலக்கிய பயணத்தில் மாத்திரம் இல்லை. தொடக்கத்தில் நெருங்கியிருந்த நண்பர்கள் கூட கால கதியில் ஒவ்வொருவராக விலகி தூரச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இனி சி.மணியால் என்ன பயன் என்றோ என்னவோ? சி.மணியின் முதல் கவிதைத் தொகுப்பை (அவரது மூன்று நீண்ட கவிதைகளையும் கொண்ட – வரும் போகும்) எழுபதுகளில் வெளியிட்ட க்ரியா ராமகிருஷ்ணன் தான் சி.மணியின் முமுக் கவிதைத் தொகுப்பையும் (இது வரை) பின் தாவோ ஜிங் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு இன்னும் பல தளங்களில் அவரது ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்து நட்பும் ஆதரவும் தந்தவர் எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணன் மாத்திரம் தான். தனித்து விடப்பட்டிருந்த சி.மணிக்கு இந்த நட்பு இதம் தந்திருக்கும்.

நன்றி: நவீன விருட்சம் இதழ் 17.04.2009

                                                       

வெய்யில், '"அக்காளின் எலும்புகள்", (2018),, கொம்பு பதிப்பகம், நாகப்பட்டினம். அலைபேசி:9952326742. பக்.80. விலை ரூ 100/-.

            "அட! இத நம்ம கூட எழுதியிருக்கலாமே"     என்று எந்தக் கவிதை வாசிக்கிற வாசகனின் வாயை முணுமுணுக்க வைக்கிறதோ அது நல்ல கவிதை என்கிற ஒரு கணிப்பு முறை எனக்குள் என்றும் உண்டு. வெய்யிலின் "அக்காவின் எலும்புகள்" என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் பலவும் எனக்குள் அப்படி ஒரு எண்ணத்தை வாசிக்க வாசிக்க விதைத்த வண்ணம் இருந்தன. நான் பிறந்து வளர்ந்து விளையாடிய பூமியும் இராஜபாளையத்திற்கு அருகில் உள்ள புத்தூர் என்ற தெற்கத்திய கிராமம் என்பதனால் இவர் கவிதைகளுக்குள் விரியும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு நெருக்கமான, பரிச்சயமான ஒன்றாகத் தோற்றம்  தந்தன.  அக்காட்சிகளை மொழிப்படுத்தும் விதத்தில் நவீனத் தமிழ்க் கவிதை ஆக்கத்தில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லும்படி, வியப்பில் ஆழ்த்தி விடுகிறதொனிகளோடு கூடிய ஒரு வகையான கவித்துவத் திரட்சியை இத்தொகுப்புக் கொண்டிருப்பதால் வாசிப்பின் பெருங்களிப்பை முழுமையாக அனுபவிக்க வாய்த்தது.

    ****

             ஊரைச் சுற்றிலும் கிணறுகள்; ஒவ்வொரு கிணற்றுக்கும், நீச்சல் தெரியும் ஆதலால் காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து  மாண்ட பெண்களின் கதைகள் மட்டும் அல்ல, மரணக் காட்சிகளும் உண்டு. அந்தக் கிணறுகளில் ஒவ்வொரு ஆண்டும் கண்ணீர்க் கோலங்களோடு வழிபாடுகள்,படையல்கள். இது போலவே ஊரைச் சுற்றியுள்ள மரங்களுக்கும் இப்படியான கதைகள், காட்சிகள் ஏராளம் உண்டு .இன்னும் அப்பன், அண்ணன், தம்பிமார்களால் வீட்டுக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்ட குமரிகளின் ஓலம், கணவன்மார்களால் கொலை செய்யப்பட்ட மனைவிமார்களின் சத்தம் எல்லாம் மின்சாரம் வராத அந்தச் சிற்றூரில் இரவு வந்துவிட்டால் இப்படித் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட பெண் ஆவிகளின் நடமாட்டம் சார்ந்த கதைகள் ஊர்க் காற்றில் நிறைந்து கிடக்கும். இப்படிப்பட்ட இந்தக் கிராமத்தில்தான் என் பதின்பருவம் கழிந்தது. பிழைப்பிற்கான போராட்டக் களத்தில் மறைந்து எங்கேயோ மூலையில் பதுங்கிக் கிடந்த அத்தனைக் காட்சிகளும் வெய்யிலின் அக்காவின் எலும்புகள் கவிதைகளை வாசிக்க வாசிக்க மேல் எழுந்து வந்து என்னைப் படாத பாடு படுத்தி விட்டன. கவிதையில், வேதனைகள் அழகியலாக மாறும் என்பதை இந்தக் கவிதைகளில் தரிசிக்க முடிந்தது.

                    "கழுத்த நெரி காலப்புடி

                     கழுத்த நெரி காலப் புடி 

                     கழுத்த நெரி காலப்புடி

                     "இந்த மைனாவுக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கு"

                      என்றார் அப்பா.

                      பொருனையின் சூல்குழி பார்க்க

                       மேற்குத் தொடர்ச்சி மலை போன போது

                       கூட்டி வந்தார்கள் இந்தப் பேசும் குருவியை

                       அக்காவின் மடிச்சூட்டிலயே வளர்ந்தது

                        குறிஞ்சிப் பூக்களை அறிந்தது

                        கர்ப்பமாக இருந்தபோது

                        அம்மா நடந்து செல்வதைப்போல நடந்தது

                       அக்காவும் மைனாவைப் போலவே

                       நடக்கத் தொடங்கியதில் இருந்து 

                      காணாமல் போனாள்.

                       தங்கையும் நானும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் 

                       அக்கா எங்கே 

                       அக்கா எங்கே 

                       அம்மா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.              

இந்தக் கவிதையில் இடம் பெறும் "கழுத்தை நெரி,கழுத்தை நெரி"  என்ற தந்தைமார்களின் குரலை என் பதின் பருவத்தில் என் இரு காதாலும் கேட்டிருக்கிறேன். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நானும் என்னை மதுரையில் இருந்து பார்க்க வந்திருந்த என் வகுப்புத் தோழன் உசேனும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த யாமத்தில் "பஞ்சு, எழுந்திரு ,யாரையோ அடித்துக் கொலை செய்வது மாதிரி இருக்கு" என்று எழுப்பினான் நண்பன். எதிரே இருந்த அடுத்த தெரு பண்ணையார்  வீட்டுக்குள் இருந்து சத்தம் வருகிறது. இவ்வளவிற்கும் அந்தச் செல்ல மகள் சாதி மாறி கூட விரும்பவில்லை; பரம்பரை பரம்பரையாகப் பகைக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை விரும்பி விட்டாள். அதற்குத்தான் இவ்வளவு கொடூரமும் .கருவேல மரங்கள் நிறைந்த நெல்மேனிக் கம்மாய்க்குள் எனக்கு ஒன்று விட்ட அந்த அக்கா இரவோடு இரவாகச் சாம்பல் ஆனாள். பிறகு காலம் ஓடியது; ஆனால் அவள் துடியாய் நின்று குடும்பத்தை அலக்கழித்தாள். எனவே அவளைத் தெய்வமாக்கினரார்கள்.

"அக்காவுக்கு அன்னாடம் விளக்கு வைத்தனர் .

முட்டை வீசினர் ;

பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தனர்;

ஆண்டுக்கு ஒரு முறை படையல் செய்தனர்"

.ஆனாலும் அக்கா அடங்குவதாக இல்லை.அவளை அலற அலற அடித்துக் கொன்ற வீடும் பாழ் அடைந்து போயிற்று. பண்ணையார் வாழ்வும் ஊரே பரிதாபப்படும்படி விழுந்து போனது.

இப்படித்தான் கிராமங்கள் முழுவதும்  செல்லத்தாய் அம்மன், இசக்கி, வனப்பேச்சி, நீலி,  மாடத்தி என்ற   பெயர்களில் தெய்வங்களாக எழுந்து நிற்கிறார்கள்.

****

         பெண்களை இந்த ஆண்  மையச் சமூகம் கிணற்றில் தள்ளலாம், மரத்தில் தொங்க விடலாம், நெருப்பில் எரிக்கலாம், விஷம் கொடுத்தும் அடித்தும் கழுத்தை நெரித்தும் சூளையில் தூக்கி எறிந்தும் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானையைப் பிடிக்கத் தோண்டிய  குழியில் தள்ளிக் கதற கதற உயிரோடு புதைக்கலாம்; ஆனாலும் அவர்களை இந்த ஆண்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்பதுதான் வரலாறு.

           பஞ்சாங்கம் என்ற எனது பெயரில் கூட இப்படி ஒரு கதைதான் உள்ளது. எங்கள் ஊரில் ஒற்றை வீடு; உள்ளே ஐயர் குடும்பம்; பஞ்சாங்கம் பார்த்துச் சொல்வதால் அவருக்குப் பஞ்சாங்கம் ஐயர் என்று பெயர் 'அவரை இழுத்துக் கொண்டு ஒரு பனையேறி மகளான வீரமாகாளி கருமலைக் காட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கிறாள். விடுவார்களா பனை ஏறிகள். தேடிப்பிடித்து இழுத்து வரும் வழியிலேயே பதநீர் காய்ச்சும் பண்ணைக்கருகில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காய்ந்த பனைமட்டைப்போரில் இருவரையும் கையும் காலையும் கட்டித் தூக்கி எறிந்து தீ வைத்துவிட்டு ஊருக்குள் சத்தம் இல்லாமல் திரும்பி விடுகிறார்கள். ஆனால் பெண் அவர்களை எளிதாக விட்டுவிடுவாளா?

மலையின் அடிவாரத்தில் இருக்கும் கூப்புக்குள் கோடைகாலத்தில் விறகு எடுக்கப் போகும் மனிதர்களைப் பயம் காட்டுகிறாள்; ஊர் மக்கள் காய்ச்சலில் படுக்கிறார்கள்; கோடாங்கி ஆடி அருள் வாக்குத் தருகிறார். பஞ்சாங்க அய்யருக்கும் வீரமாகாளிக்கும் அவர்களை வெட்டிக் கொன்ற அந்தக் காட்டில் கோயில் கட்டிக் கும்பிட வேண்டுமாம்; அப்படித்தான் நடந்தது;

எனக்கு விவரம் தெரிய கிழக்கே பார்த்து இருக்கும் பஞ்சாங்க அய்யருக்குச் சைவப் பொங்கல்; வடக்கே பார்த்து இருக்கும் வீரமாகாளிக்குக் கோழி அல்லது கிடாய் பலியிட்டு வழிபடும் மரபு இருந்தது. ஆனால் பனையேறிகளின் பிள்ளைகள் தராசு தூக்கி  வணிகர்கள் ஆயினர்; அவர்களின் பிள்ளைகள் படித்துப் பதவியில் அமர்ந்தனர்; இப்பொழுது கோயில் நஞ்சை, புஞ்சை, நிலம் என்று பணக்காரக் கோயில் ஆயிற்று. பிறகு என்ன?

சங்கராச்சாரியார் வருகையும் நடந்தது; கடந்த 20 ஆண்டுகளாக அது சைவக் கோயிலாயிற்று; உயிர்ப்பலியிடுவது தடை செய்யப்பட்டு விட்டது

       பெண்களிடம் அடங்கிப் போவதுதான் நல்லது என்று திரும்பத் திரும்ப ஆண்களின் மூஞ்சியில் அனுபவம் அடித்துக் கூறினாலும் ஆண்களின் ஆதிக்கமும் கொடூரமும் அணுவளவும் குறைந்தபாடில்லை; ஆண்களின் மொழி கட்டமைத்திருக்கும் புனைவு அவ்வளவு வலுவானதாக ஆழ்மனத்திற்குள் இறங்கி இருக்கிறது.

       ****

.        தாய்மைக்குத் தவிக்கும் பெண்ணின் காம உடலையும் உள்ளத்தையும் ஒரு சிறிதும் ஆண்களால் அசைக்க முடியாது; அவள் எத்தகையக் கொடூரச் சூழலிலும் தன்னையும் தன் காமத்தையும் தாய்மையையும் நிலைநிறுத்திக் கொள்ளும் இயற்கை மயமானவள் என்பதையும் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. எவ்வளவு அடக்கி ஒடுக்கிக் கண்காணிப்பின் கீழ் அமுக்கி வைத்திருந்தாலும் தாய்மை தேடும் அவள் காம உடல் ,ஒரு மைக் செட் காரனை (ப.37) இடுப்பில் அரிவாளோடு போகிறவனை (30) புதுக் கூரை மேயவந்தவனை (22) குடை ரிப்பர்க்காரனை (70) மாட்டு லாடம் அடிக்கிறவனை (64) பகல்வேசக்காரனை (58) உப்புக்காரன் மகனை என்றெல்லாம் எப்படித் தேடி அடைவது என்ற நுணுக்கம் அறிந்தது என்பதையும் வெய்யிலின் கவிதைகள் அழகியல் தரும் சுவை குறையாமல் காட்சிப்படுத்துகின்றன. பிரஞ்சுப் பெண்ணியல் படைப்பாளி ஹெலன் சீக்ஸ் இப்படி எழுதுகிறார்:

      "நாங்கள்  நாங்களாகவே கடல், மணல், பவளம், கடற்கரைகள், கடல் கொந்தளிப்புகள், அலைகள், நீந்துபவர்கள், குழந்தைகள் எனப் பன்முகப்பட்டவர்களாக இருக்கிறோம்; ஆமாம் அப்படித்தான் கலந்தபடிக் கிடக்கிறோம்; பெண் காமக் களிப்பில் மகிழ்ந்து மாழ்கிறாள்; அவள் பன்முகமாய்  விரியும் காமக் களிப்பில் மூழ்கியுள்ளாள்; அவள் காற்றில் விமானம் போல் பறந்து நீந்துகிறாள்; அவள் தன்னைத்தானே பற்றிப்  பிடித்துக் கொள்வதில்லை; அவள் சிதறிப் பரவுகின்றாவளாக, பெரும்  வியப்பிற்குரியவளாக, ஆசையில் துடிப்பவளாக இருக்கிறாள். அதே நேரத்தில் மற்றவர்களைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவளாகவும் விளங்குகிறாள்"

(மேடுசாவின் புன்னகை, மொழிபெயர்ப்பு க.பஞ்சாங்கம்.,).

மேலும் ஹெலன் சீக்ஸ் எழுதுகிற மற்றொரு இடமும் இந்த இடத்தில் குறிக்கப்பட வேண்டிய ஒன்று.

"இந்தப் பூமியில் எந்த ஒன்றும் அவர்களைப் புண்படுத்தி விட முடியாது; தூரங்களும் பிரிவுகளும் அவர்களின் இயங்கியலுக்கு முட்டுக்கட்டை போட்டு விட முடியாது; ஷேக்ஸ்பியருடைய கிளியோபட்ரா இத்தகைய வெற்றி பெற்ற சுதந்திரமான பெண்மைக்குச் சரியான எடுத்துக்காட்டு" என்கிறார் . இப்படியான ஒரு பெண்மையை வெய்யில் இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ளார் .ஆண் மையச் சமூக  வெளியில் எத்தனை எத்தனைக் கொடூரம்; ஆனாலும் வெய்யில் கவிதை ஒன்று,

        "அக்கா எறிந்த எலும்பு வளரி சீவிய

        பாளைகளிலிருந்து  தீராமல் கொட்டுகிறது

        யாவருக்குமான கள்"

என்று மனித உடம்பின் உச்சபட்ச உற்பத்தி எனச்சொல்லத் தக்கக் கருணையின் ஊற்றுக் கண்ணாகப் பெண்தான் விளங்குகிறாள் என்பதையும் பதிவு செய்து விடுகிறது.

        ****

                  ஆதிகாலத்தில், பெரிதும் அறியாப் பருவ காலத்தில் இருந்தே மாதந்தோறும் இரத்தம் கொட்டுவதும் திடீரென வயிறு வீங்குவதுமாக இருந்த பெண்ணின் உடம்பைப்  புதிராகப் பார்த்து மிரண்டு போன ஆண்கள், அவளுக்குத் குறைந்தவன் ஆண் அல்ல என்பதை நிரூபிக்கவே தனது குறியையும் சுன்னத்து என்ற பெயரில் வெட்டி இரத்தம் கொட்ட வைத்துக் காட்டி  இருக்கின்றான் என்கின்றனர்  மானுடவியல் அறிஞர்கள். இவ்வாறு அருகிலேயே புதிர் நிறைந்த மற்றொரு உடம்போடு வாழ நேர்ந்ததிலிருந்து விளைந்த அச்சமும் மருட்சியும் இயலாமையும் புரியாமையும் சேர்ந்து அவனை, அவளுக்கு எதிரான வன்முறையாளனாக வளர்த்தெடுத்துவிட்டன. அந்த ஆதி வன்மத்தையும் அதைப் பெண் எதிர் கொண்ட விதத்தையும் தனக்குப் பரிச்சயமான கிராமத்து நிகழ்வுகளாலும் சடங்குகளாலும் தொன்மக் குறியீடுகளாலும் அதன் மொழி வாகினாலும் வெய்யில் "அக்காவின் எலும்புகள் "மூலம் அற்புதமாக வாசகன் முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார்.

**முளையிட்ட விதை நெல்லில் விழிப்பது 

    எவ்வளவு நல்ல குறி (54)

**நல் நிமித்தம் சாமியோ...

 கிழக்கிலிருந்து வீசி வருகிறது , பதனி காய்ச்சிய வாசனை. (67)

**அந்தத் தாயோளி சூரியன் வேறு. (32 )

**உலக்கையில் பொடி மண் இட்டு

 மேலும் கீழுமாய் 

அரிவாளை மீட்டிக் கொண்டிருக்கிறான். (36)

**கூரையில் பூத்திருக்கும் பூசணிப்பூக்கள்.(55)

** எளங்குருத்து திங்கனுமுன்னு காயிதா அக்கா. (30)

**சாரை ஒன்று உளுந்தங்காட்டைப் போட்டு உலுப்புகிறது.

**முற்றத்தில் முயங்குகிற  பூரான்களைக்

கொத்திக்கொத்தித் தின்கிறது கோழி. (53)

இவ்வாறு இந்தப் பிரதி முழுவதும் நிறைந்து கிடக்கும் ஊர் மண்ணின் வாசனையோடு கூடிய மொழியும் காட்சிகளும் அவை எழுப்பும் ஓயவே ஓயாத தொனிகளும் வெய்யில் என்கிற புத்தம் புதிய நவீனக் கவிஞனின் தனித்த அடையாளங்களாக வெளிப்பட்டு நமக்குள் ஒளிபரப்புகின்றன. வெய்யிலின் "மகிழ்ச்சியான பன்றிக் குட்டி" என்ற தொகுப்பில் உள்ள ஒரு கவிதையோடு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்:

        "நசுக்குதல் எனும் சொல் எறும்புகளால் 

         தூக்கிச் செல்லப்படுகிறது "

இந்தக் கவிதையின் தலைப்பு "மகிழ்ச்சி."

இந்த இரண்டு வரியில்தான் எத்தனை எத்தனைத் தொனிகள். வெய்யில் தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலை பெற்றுவிட்டார்...

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது.

நவீன இலக்கிய ஆக்கங்களில் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகும். உள்ளொளி, தரிசனம் போன்ற பேறுகளிலிருந்து தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை புதிய கதியில் இயங்க தொடங்கியது. பெண்ணியமும், தலித்தியமும், பிற நவீன கோட்பாடுகளும் மனிதனைச் சுற்றி கவியும் அரசியலை படைப்புக்கான தளமாகக் கண்டறிந்தன. இதன்மூலம் கடந்தகாலங்களில் ‘எழுத்து’ மரபு படைப்பாளர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அம்மரபில் ஆர்வங்கொண்டோரே அழித்தெழுதினர்.

யவனிகாஸ்ரீராமின் கவிதைகள் ஒரு பெரு வெடிப்பு போலச் சர்வதேச அரசியல் பரிவர்த்தனைகளைக் கவிதைகளில் புழங்கு பொருளாக்கின. வெவ்வேறு பாட்டைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட நவீன படைப்பாளர்களிடையையும் அரசியல் விழிப்பென்பது செயல்படத் தொடங்கியது. ‘இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது’ என்ற வரிகள் மூலம் ஆத்மநாம் இந்த மாற்றத்தின் முன்னவராகத் தன்னை நிறுத்திக்கொண்டார். இதன்மூலமே ‘புதுக்கவிதை’ ‘நவீன கவிதையாக’ உருமாற்றம் அடைந்ததெனக் கொள்ளலாம். தேவதச்சன் போன்றவர்களின் தத்துவார்த்த பாதைக்கும் வரலாற்றுக் காரணங்களை முன்வைக்கிறார் சபரிநாதன்.

ஆக, தீவிர சிற்றிதழ் மரபில் தழைத்த கவிதைகள் தன்னொடுக்கமான நசிந்த இலக்கியம் என்ற பழைய விமர்சனத்தைத் தாண்டி தன் மெய்மையை இன்று நிரூபித்துள்ளன. தற்போதைய மார்க்சிய விமர்சகர்களாகக் கருதப்படும் ஜமாலன் போன்றவர்களும் நவீன இலக்கியத்தைச் சரியாக அடையாளப்படுத்தி வருகின்றனர்.

நவீன கவிதைகளுக்குப் பொதுவான அடையாளப்படுத்தல் என்பது சாத்தியமல்ல. அதன் இயங்குகதி எவ்வித மையப்பொருண்மைகளையும் ஏற்க மறுப்பது. வாழ்விற்கு வெளித்தெரியாத எத்தனை நிறங்களும் ஓசைகளுமுண்டோ அந்த எல்லைகளுக்குத் தனது அறிதல்களை விரித்துக்கொள்கின்றன நவீன கவிதைகள்.

என்றாலும் அவை அரசியல் சரி, தவறுகளின் மீது போதுமான கவனம் செலுத்தாதவை என்பது சமூகப் பார்வைக் கொண்டவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனமாகும். ஆனால் ‘நவீன கவிதை’ என்ற வகைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதே இன்று பெரிய அரசியல் செயல்பாடாகக் கருததக்கதாகும்.

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது.

முதலில் ‘சால்ட்’ பதிப்பகத்தின் வெளியீடாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்ரீநேசன், அகச்சேரன் கவிதைகளைப் பார்க்கலாம். இருவரும் சிறுபத்திரிக்கை அளவில் காத்திரமாக இயங்கிவரும் படைப்பாளிகளாவர்.

அகச்சேரனின் ‘கற்கை’ சமீபத்தில் வெளியாகியுள்ள கவிதைப் பிரதிகளில் குறிப்பிடத்தக்கதாகும். அத்தொகுப்பில் இடம்பெறும் ‘சாந்தி’ கவிதை பின்வருமாறு.

சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்

என்றதற்காக முதலில் தொலைத்த என் இரண்டு ரூபாயை

சாதாரணமாகவே எடுத்துக்கொண்டேன்

கூடவே தொலைந்து வரும் இரண்டு ரூபாய்களை

எங்ஙனம் புரிந்து கொள்வேன்

நவீன அரசாங்கம்

கல்விக்கூடங்கள்

மருத்துவமனைகள்

பெரிய பெரிய மால்கள்

ஒருபக்க விளம்பர நகைக்கடைகள்

உறங்குவதில்லை

அவை கபடமற்ற வரவு செலவுக்காரனை

ஏளனம் செய்கின்றன

சொந்த நாணயத்தை ஏவிவிட்டு பரிக

சிக்க வைக்கும் வல்லமைக்குமுன்

எதுவும் புரிவதற்கில்லை

ஆகவே இரண்டு ரூபாயாக வைத்து

விடுங்கள்

என் நெற்றியில்.

பண மற்றும் செலவாணிகள் மின்னணு முறையில் மாற்றப்பட்டுவிட்ட காலத்தில் சுரண்டல்களும் அதே அளவிற்கு நவீனமாக்கப்பட்டுள்ளன. பொதுவாக நவீன பொருளியல் கொள்கைகள் சாமான்யனின் சேமிப்புகள் மீதும் வரவுகள் மீதும் சுதந்திரமான அத்துமீறலை அனுமதிக்கின்றன.

இன்றைய பணமென்பது இயந்திரங்களில் அச்சடிக்கப்பட்டுத் தேவையான முனையங்களுக்கு எடுத்துச்செல்லப்படவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு கணினியில் சில எண்களைத் தட்டுவதன் மூலம் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை வழங்கிவிடமுடியும். ஆனால் அதே வேகத்தில் அதை இந்தியாவின் பெரும் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் எளிதாகத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும் முடியும்.

தொட்டு உணர்ந்து, கண்ணுக்குப் புலப்படும் வகையிலான பரிவர்த்தனையைத் தவிர்ப்பதன் முக்கியப் பின்னணியில் சர்வதேச முதலாளித்துவம் செயல்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அந்த முதலாளிய வர்க்கங்களைத் தேடிச்செல்வது சாமான்யனுக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும்.

மேலும் பொறுப்புகளைத் தட்டிகழிக்கும் வண்ணம் இதன் வலைப்பின்னல்கள் ஒவ்வொரு படிநிலையிலும் மிகக்கவனமாகப் பின்னப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பிரதிபலிக்கின்றன அகச்சேரனின் ‘சாந்தி’ கவிதை. நவீன கவிதை தன் இயல்பு போக்காகவே உரைநடையின் தன்மையை அடைந்திருக்கும் சமகாலத்தில் கவிதையில் சொற்களுக்கான இடத்தை இக்கவிதைகள் திடமாக வலியுறுத்துகின்றன.

சொற்களைக் குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் அழுத்தங்களை அதிகரிக்கிறது கவிதைமொழி. ‘ஒருபக்க விளம்பர நகைக்கடைகள்’ என்ற சொல்லாட்சி முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. ஏனெனில் தினசரிகளில் காணப்படும் விளம்பரங்களை எந்த விழிப்புமில்லாமல் புரட்டுகிறோம்.

ஆனால் அவற்றிற்குச் செலவு செய்யப்படும் தொகையானது லட்சங்களில் புரளக்கூடியது. இன்றைய ஊடகங்களின் முக்கிய அதிகாரம் வாய்ந்ததும் இத்தகைய விளம்பரங்கள்தான். விளம்பரத்திற்குப் பெருந்தொகை செலவு செய்யும் நிறுவனம் தனது எளிமையான வாடிக்கையாளன் மூலமே அதற்கான லாபத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறது.

இப்படியாக ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முன்வைக்கப்படும் கவர்ச்சிகரமான பிற்போக்கு அரசியலின் விளைவுகளைச் சாதாரணப் பிரஜையின் குரலாகப் பதிவுசெய்கிறது அகச்சேரனின் கவிதை.

ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ தொகுப்பில் காணப்படும் ‘கூத்தாட்சித் தத்துவம்’ விளம்பரம் மூலம் உருப்பெருக்கப்பட்ட அரசியல் பிம்பத்தைக் கேலிசெய்வதாக அமைகிறது. கவிஞர் கண்டராதித்தனின் ‘பாடிகூடாரம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘உதுமான் நான் உலகளந்த பெருமான் பேசுகிறேன்’ கவிதை கொரொனோ பெருந்தொற்றுக் காலத்தில் அரங்கேறிய அவலங்களைப் பேசுவதாக அமைகிறது.

கவிதை என்ற பொது மதிப்பீட்டில் இவை சம்பவங்களை விவரிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஸ்ரீநேசனின் கவிதை கூத்தின் தொடக்க முகமாகத் தோன்றி நடைபெறவிருக்கும் கூத்து பற்றிய அறிமுகத்தை வழங்கும் பஃபூன் மூலம் கூறப்படுவதாகத் தொடங்குகிறது. ஆனால் எடுத்துக்கொண்ட துறைசார்ந்த போதிய பரிச்சயமின்மை கவிதையை வெற்றுடலாகக் காண்பிக்கிறது. பிறகவிதைகளில் காணப்படும் பூடகப்படுத்தல், காட்சி மயக்கங்கள், வாசகனுக்குப் பிரதியில் இடங்கொடுத்தல் போன்ற அர்த்தச்செயல்பாடுகளற்ற நேரடி விவரிப்பு முறையுடன் அமைகிறது கவிதை.

கவிதைக்கான ஆழ்ந்த மனவியக்கமோ மனவெழுச்சியோ இல்லாமல் வெறும் உருவகத்தைப் பற்றிக்கொண்டு அதன் உடலில் எண்ணவோட்டத்தைத் திணிக்கும் முயற்சியாகவே எழுதப்பட்டுள்ளது. நேரடியாகத் தனிநபர் ஆளுமையை மட்டுமே முன்னிறுத்தி நடைபெறும் இன்றைய இந்திய அரசியல் குறித்த பதிவாகவே கவிதை நின்றுவிடுகிறது.

தனிநபர் துதி மூலம் முன்வைக்கப்படும் அதீத தேசியவாதம், நடைமுறையில் அவை செயல்படுத்தும் ஃபாஸிச அரசியலின் கருத்தியல் திணிப்பு போன்றவற்றின் கனபரிணாமங்களை ஆழ்ந்துணர்வதற்கான விழிப்புநிலை கவிதையில் தவறுகிறது.

கண்டராதித்தன் கவிதையில் நேர்ந்திருப்பதும் இவ்வாறான பிழைதான். கண்டராதித்தனின் கவிதை பதினோரு பகுதிகளைக் கொண்ட நீள்கவிதையாகப் புனையப்பட்டுள்ளது. தன்மீது சுமத்தப்பட்ட செவ்வியல் தொடர்பான மதிப்பீட்டை எப்படியாவது தக்கவைக்கும் வலிந்த முயற்சியாகவே ‘பாடிகூடாரம்’ அமைந்துள்ளது.

அதன் காரியார்த்தமான எத்தனிப்பு கவிதைச் சுவையைக் குன்றச்செய்கிறது. கொரொனோ பெருந்தொற்றுக் காலத்தில் கங்கையில் மிதந்த பிணங்களும், கால்நடைகளைப் போல மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்பியதும் பெரும் சோகமாகவே அரங்கேறியது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இயல்பு வாழ்க்கையின் நெருக்கடிகளுடன் சேர்த்து சகமனிதர்களுக்குக் கண்ணுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளையும், பொறுப்பினை தட்டி கழிக்கும் ஆணவம் மிகுந்த அரசின் அலட்சியத்தையும் வெறும் சாட்சியாகப் பார்க்க வேண்டியிருந்தது.

‘உதுமான் நான் உலகளந்தப் பெருமான் பேசுகிறேன்’ நீள்கவிதை மூலம் இந்தச் சாட்சியத்தைப் பதிவுசெய்ய முற்படுகிறார் கண்டராதித்தன். ஆனால் செவ்வியல் தன்மையுடன் புனையப்பட்டுள்ள சில பகுதிகளைத் தவிர்த்து நடப்பரசியலை பேச விழைந்திருக்கும் பகுதிகள் இலக்கிய நயமற்றே அமைந்துள்ளன.

புலனுக்குப் பரிச்சயமான தளத்திலிருந்து மொழியை வேறொரு அர்த்தத்திற்கு நகர்த்துவதே கவிதையின் செயல்பாடாக முன்வைக்கப்படுகிறது. மேற்கூறிய கவிஞர்களில் அகச்சேரன் கவிதை அத்தகைய வினைபுரிதலை கொண்டியங்குகிறது.

தான் மையப்படுத்த எடுத்திருக்கும் பொருண்மை மீதான அவதானிப்புச் சரியாக அமைந்துள்ளது. இந்தத் தன்மையின் நீர்த்துப்போன வடிவமாகவே கண்டராதித்தன், ஸ்ரீநேசன் கவிதைகளுள்ளன.

இவ்விமர்சனத்திற்காக மட்டுமே இக்கவிதைகள் இங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. நவீன கவிதைகள் அரசியல் விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கினாலும் பெரும்பாலும் அவை தொழில்நுட்ப பெருக்கம் மழுங்கடிக்கும் மனித உணர்வுகள், நகர உருவாக்கங்கள் மூலம் நடந்தேறும் பண்பாட்டு நசிவுகள், சமூகக் குடும்ப உறவுகளில் நிகழும் அந்நியமாதல் போன்றவற்றை மையப்படுத்தியே இருந்துள்ளன.

நேரடியான அரசியல் கட்சி சார்ந்த விமர்சனங்களை நவீன படைப்பாளர்கள் வானம்பாடிகளின் தரப்பாகவே கருதிவந்துள்ளனர். அதனைப் பிரஞ்ஞைப் பூர்வமாகவே தவிர்க்கவும் செய்துள்ளனர். இவ்வரம்பினை மீறி எழுதப்பட்ட சில கவிதைகளும் திமுக எதிர்ப்பு மனநிலையிலேயே அதிகம் வேரூன்றி இருப்பதைக் காணலாம்.

சிறுபத்திரிகை தரப்பிலிருந்து மெல்ல விலகி வெகுஜன பரப்போடு தன்னை இணைத்துக்கொண்ட மனுஷ்யபுத்திரன் மட்டுமே இதற்கு விதிவிலக்காகத் தென்படுகிறார். றாம் சந்தோஷின் ‘சொல்வெளித் தவளைகள்’ தொகுப்பையும் இங்கு நினைவுகூறலாம். எழுதப்படாத இலக்கிய விதியுடன் தொடருமிந்த கன்னியில் நிகழ்ந்திருக்கும் சிறு விலகலை அல்லது மாற்றத்தை வரவேற்கத்தக்கதாக அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

பொதுவாக ‘கல்குதிரை’ வழியிலான படைப்பாளர்கள் வெகுஜன ஊடகங்கள் பிரதானப்படுத்தும் அரசியலிலிருந்து விலகியே இருந்துள்ளனர். ஆனால் அடிப்படை மனிதவாதத்திற்கு எதிரிடையாக இன்றைய ஒன்றிய அரசு செயல்படுத்தும் மனிதபயங்கரவாத சிந்தனைகளும் கூட்டு நனவிலியில் அவை பதியவைக்கப்படும் விதமும் சிந்திக்க தெரிந்த எந்தவொரு மனிதனையும் உறக்கமிழக்கச் செய்வதாகும். அதன் பாதிப்பு நவீன கவிஞர்களிடையே அங்கங்கே மெல்ல தலை காட்டுகிறது.

மாநில அரசைத்தாண்டி விரியாத அவர்களின் விமர்சனப் பார்வை ஒன்றிய அரசை நோக்கி நீண்டிருப்பது இந்தியா சந்தித்திருக்கும் அரசியல் நெருக்கடிக்கான இலக்கியச் சாட்சியாக இருக்கும். ‘கூத்தாட்சித் தத்துவம்’ என்ற சொல்லாடல் வழியாக மத்திய – மாநில உறவுகள் குறித்த உரையாடல் இன்று பொதுத்தளத்திற்கு நகர்ந்திருப்பதை அறியமுடிகிறது (எனினும் மாநில அரசியல்வாதிகளைச் சாடும் கவிதையும் ஸ்ரீநேசன் தொகுப்பிலுள்ளதுதான்). தமிழ்ச்சூழலில் இதுவொரு இயக்கமாகத் தலையெடுக்குமென்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் அப்படியொரு எதிர்பார்ப்பு எனக்குள்ளது.

உலகளவில் பெரும் மக்கள்தொகை கொண்டிருக்கும் தேசத்தில் வெளிப்படையாக நடந்தேறும் அரசியல் ஃபாஸிச வெறியாட்டத்தை ஒப்பீடும்போது இக்கவிதைகள் அவற்றுக்கெதிரான ஒரு துளிகூடக் கிடையாதுதான். மேலும் மேற்கூறிய கவிதைகளின் போதாமை வழியாக நேரடியான அரசியல் கருத்து மோதலை எழுதுவதில் நவீன படைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கலைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பேற்படுகிறது. இதனைக் களைவதற்கும் சில அழுத்தமான முன்னோடிகள் தேவைப்படுகிறார்கள்.

மேல் செல்