1
செழிப்பும் வளமும் நிறைந்த புலத்தினருகே உரிய நிறைவையும் உணர்ச்சி ஊசலாட்டங்களையும் உழைப்பையும் பேசும் தன்மைகொண்ட கதைகளை எழுதியவர் சி.எம்.முத்து. அவரது சமீபத்திய வரவான ‘புளிப்புக் கனிகள்’ என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கதைகள் அவர் எழுத வந்த ஆரம்பநாள்களில் வெளியானவை. சற்றொப்ப நாற்பதைம்பது கால இடைவெளி கொண்டவை. ஒரு எழுத்தாளரின் ஆரம்பகாலக் கதைகள், அவரது எழுத்தின் வளர்ச்சிப் போக்கை உணரப் பெரிதும் உதவுபவை எனும் நோக்கில் முக்கியமானவை. அதேவேளை இத்தொகுப்பில் அவர் சமீபத்தில் எழுதிய கதைகளும் இணைக்கப்பட்டே வெளிவந்துள்ளன. இவற்றுள் எவை தான் சமீபத்தில் எழுதியவை என்று நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிடவில்லை (இக்கட்டுரை சி.எம்.முத்துவின் கதை வளர்ச்சிப் போக்கு, கதைப்புலம், கதாபாத்திர வளர்ச்சி, கதைக்களன் மாற்றங்கள் போன்றவற்றை மையப்படுத்த போவதில்லை என்பதால், எவை சமீபத்தியவை எனும் மேலதிக விசாரணையை மேற்கொள்ளவில்லை.)
அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதியிலுள்ள ஞாயம் வேண்டும், போராட்டங்கள் ஆகிய கதைகளை இத்தொகுப்பிலும் இணைத்துள்ளார். இரண்டுமே எண்பதுகளின் கிராம சாதிய-அதிகாரப் படிநிலையையும் உட்சாதி வர்க்க முரணையும் பேசுபவை. இரண்டிலும் அநியாயமாக நடந்துகொள்ளும் பண்ணையார் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஞாயம் வேண்டும் கதையில் இடம்பெறும் பஞ்சாயத்துக் கூட்டம் தொடர்பான சித்தரிப்புகள், நயமானவை. அம்மாசிக் கிழவன் என்ற பறையரின் நீதி வழங்கும் முறையை அடிநாதமாய்க் கொண்ட கதை அது. ஆனால் அவராலும் தன் மகளுக்கு, தம்மைவிடச் சாதியிலும் வசதியிலும் மேலான வாண்டையாரிடமிருந்து நீதி பெற்றுத்தர முடியவில்லை என்பதாகக் கதை முடிகிறது. சுயசாதியை மீறிய திருமணத்திற்கு ஆதரவாக அவர் பஞ்சாயத்தில் தீர்ப்பளித்ததையும் ஓர் காரணமாகக் கொண்டு அவருக்கெனத் துணைக்கு வராத சுயசாதி மக்கள்; தனக்கு நீதி கிடைக்காது என முன்பே அறிந்துவிட்டதுபோல் தற்கொலை செய்துகொள்ளும் அம்மாசிக் கிழவரின் மகள் அஞ்சலை எனப் பல கோணங்களில் விரித்து வாசிக்க இடம் தரும் கதை அது.
பண்ணைச் செங்கான் நிலவுடைமையாளனின் தயவில் வாழ்வதுபோல் இக்கதை எழுதப்பட்டிருக்கவில்லை. அம்மாசிக் கிழவன் வாண்டையாருக்குத் தளைப்பட்டிருந்தாலும் அவரை எதிர்க்கும் திராணிகொண்ட ஒருவராகவே வெளிப்படுகிறார். மேல்தட்டின் இரக்கத்திற்குக் காத்திருக்கவில்லை. அவ்வகையில் கு.ப.ராவின் ‘பண்ணை செங்கான்’ கதையில் இருக்கும் ஒப்பனை இதில் இல்லை எனலாம். போராட்டங்கள் கதையிலும் தன்னை இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முயலும் பண்ணையாரைக் கதைநாயகி கொலை செய்கிறாள். வலிந்து தலித்தின் கைகளை அல்லது வர்க்கத்தில் தாழ்த்தப்பட்டோரின் கைகளைக் கட்டி வைப்பவராகச் சி.எம்.முத்து இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். இவ்விரு கதைகளும் எண்பதுகளின் சினிமாக்களைப் போல் ஏழைகள் நல்லவர்கள் என்ற கோணத்தில் எழுதப்பட்டிருப்பவை.
மண்சார்ந்த கதைகள் பொதுவில் இரு வகையான செல்விசையில் எழுதப்பட்டிருக்கும். முதலாவது, அந்நிலம் சார்ந்த மதிப்பீடுகள், சாதியக் கட்டமைப்பு, உட்சாதி முரண், வர்க்க ஏற்றத்தாழ்வு, உழைப்பு, ஊதியமின்மை எனச் சமூகச் சீர்த்திருத்தங்களை மையமாய்க் கொண்டு நகரும். இவ்வகையான கதைகளுக்குச் சோலை சுந்தரம் பெருமாளை உதாரணமாகச் சுட்டலாம். இரண்டாவது வகையில் இத்தகைய சிக்கல்கள் பேசப்பட்டாலும், கதை முன்னகர்விலும் மையத்திலும் இப்பாடுகளே முதன்மையாய் மாறுவதில்லை. இதற்கான ஆதாரங்களாகச் சி.எம்.முத்துவின் கதைகளைச் சுட்டலாம்.
2
‘இசைக்க மறந்த பாடல்,’ ‘நமக்கென்றொரு நதி,’ ‘ஆண்டவா மழை நிக்கப்படாது’ போன்ற கதைகளில் கையாளப்பட்டிருக்கும் பிராமண மொழி வழக்கு, அந்நியத்தன்மையற்ற மொழி நுட்பத்துடனும் லாவகத்துடனும் வந்துள்ளன. குறிப்பாக, தஞ்சைப் பகுதியின் காவிரிவாழ் பிராமணர்களின் புழங்கு மொழியை முத்து மிக இயல்பாக எழுதிச் செல்கிறார்.
நமக்கென்றொரு நதி எனும் கதை அரை நூற்றாண்டுக் காலக் காவிரியின் போக்கை முன்வைப்பதாக உள்ளது. நீர் வராத சூழலிலும்கூட ஆற்றில் புதரோ, நாணற்காடுகளோ, நெய்வேலி காட்டாமணக்கு செடிகளோ இருக்காது என்பவர், ‘அத்தனை எழிலாய் மணற்காடு ஜொலிக்கும். அதன் நேர்த்தியையும் அழகையும் பார்க்கும்போது மணலை அள்ளித் தின்ன மாட்டோமா என்று ஆசை தகிக்கும்’ (ப.25) என்று எழுதுகிறார். அக்குறிப்பே ஒரு சித்திரமாய் விரிந்து, மணல் களவுபோகாத காலகட்டத்தின் ஆற்றுச் சூழலை உணர்த்திவிடுகிறது. முப்போக விளைச்சல் குறைந்து, முறைப்பாசனம் வகுக்கப்பட்டதும் மறைந்து, ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கும் காலகட்டத்தில், தன் மகன் மருமகளின் மண மாலையை ஆற்றில் விட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டிய சடங்கிற்கென நீரில்லாக் காவிரியைப் பார்த்து முதிய பிராமணரும் அவர் மனைவியும் ஏங்குவதே இக்கதை. காலந்தோறும் காவிரி எப்படியிருந்தது என்பதைக் காட்சிப்படுத்துவதற்கெனவே இக்கதையை எழுதியிருக்கிறார் என்று படுகிறது. தனது எல்லாச் சடங்கிற்காகவும் நதியை நம்பியிருக்கும் பிராமணரது ஏக்கம் என விரியும் பின்னணியில் வலுவான சூழலியல் கதையாகவும் நிற்கிறது.
பிராமண மொழி வழக்கு என்றல்லாது கதைப்புலத்திற்குத் தேவையான வேதத் தொன்மப் பின்னணி, உரையாடற் புழங்குச் சொற்கள் (விடாக்கண்டன், பிதுரார்ஜித, தூர்த்தம், ரசாப்சம், பரோபகாரம், அஸ்டாவதானம்) போன்றவற்றின் மூலமாக ஒரு எடுத்துரைப்பு நிகழ்கிறது. அது கதையின் நம்பகத்தன்மைக்கும் கதாசிரியரின் நுட்பமான உள்வாங்குதலுக்கும் சான்றுபோல் அமைகிறது. ஒருசாரார் சார்ந்த கதை என்பதாலே அவர்கள் பற்றிய மொத்தச் சித்திரத்தையும் வழங்க முனைதலே, ஆசிரியரின் பலமாகவும் பலகீனமாகவும் கொள்ள இடம் தருகின்றன.
’பாம்பு திங்கிற ஊருக்குப் போயிட்டா நடுக்கண்டம் நம்பளுக்குன்னு இருந்துக்கணும்’ (பக்,14,156,160) என்ற பழமொழி சி.எம்.முத்துவின் கதைகளில் தாராளமாக வருகிறது. அது அவரது பெரும்பான்மைக் கதைமாந்தர்களின் குணநலனை ஒத்ததாக உள்ளது. சொல்லப்போனால் பெரும்பாலான மனிதர்கள் சாமர்த்தியத்திற்கும் வசதிக்குட்பட்ட ஏற்புக்கும் அன்றாடச் சகித்தலுக்கும் பழக்கப்பட்டவர்கள்தானே! சாமான்யம் என்ற சொல்லின் ஊற்றுக்கண் அதுதான். சி.எம்.முத்து அத்தகு சாமான்யத்தைச் சூடிக் கொண்டவர்களையே மணக்கச் செய்கிறார்.
மொல்லமா, பிறத்தியார், அப்பாரு, தவுசல், ஜவ்வுக்கடுதாசி (பாலிதீன் பை) போன்று தஞ்சை மண்டலத்தில் பெரிதும் புழங்குகிற; பயன்பாட்டிலிருந்து மங்கி வருகிற சொற்களை, அவரது எழுத்தின் வழி அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
3
பந்தி என்றொரு கதையில், தன் பசியைப் பொறுத்துக்கொண்டு நாள் முழுவதும் பங்காளியின் திருமண விசேஷ வீட்டில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார், தஞ்சிராயர். இறுதியில் வீட்டிற்கு வந்தபின், ‘பாப்பா, என்ன சாப்பாடு என்னா கொளம்பு எதாருந்தாலும் போட்டாந்து வையி ரொம்பதான் பசி கண்டு போயிருச்சி’ (ப.110) என்று தன் பசியை மனைவியிடத்தில் வெளிக்காட்டி முறையிடுகிறார். தஞ்சிராயர் போன்ற மனிதர்களை எல்லா விஷேச வீடுகளிலும் காண முடியும். உறவுக்காரர்களில் சிலர் திருமண வேலைகளைக் கையிலெடுத்துச் செய்வதைப் பெரிதும் மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதுவார்கள். அதைத் தங்களது வாழ்நாளுக்கான கிரீடம் சூட்டலாக எண்ணுவாரும் உளர். இந்த விஷேசம் தன்னால்தான் நிகழ்ந்தது என்று சொல்லும் வார்த்தைகளுக்குப் பின், தான் ஒரு வேண்டப்படும் ஆள் எனும் பேருக்கான ஏக்கம் உள்ளது. பசி கதையில் வரும் தஞ்சிராயர் தன்னை வருந்தி கேட்டதற்காகப் பங்காளி வீட்டுத் திருமண வேலைகளைக் கவனிக்கச் செல்பவராகக் கதைக் காட்சிப்படுத்தினாலும், அவரது ஓட்டத்திற்குப் பின் தான் என்னவாக அடையாளப்படப் போகிறோம் என்ற ஆர்வம் இருக்கிறது. சின்னச் சின்னக் காரியங்களில் தனி மனிதர்கள் தங்களது அடையாளங்களையும் சமூக இருப்பையும் ஆழமாய் வேரூன்றிக் கொள்ள முயலும் பிரயத்தனங்களைச் சொல்லுகிறது பந்தி.
‘மாப்பிள்ளை விருந்து’ எனும் மற்றொரு விருந்து சம்பந்தப்பட்ட கதையில், தன் மருமகனை விருந்துக் கூடத்தில் வைத்து நைய்யாண்டிச் செய்யும் இளைய மகளின் செயல்கள் கண்டு பதற்றம்கொள்ளும் தந்தையின் கோணம் மையப்பட்டுள்ளது. தன் மாப்பிள்ளை எந்தச் சொல்லில், எந்தச் செயலில் அல்லது எந்தப் பரிகாசத்தில் கோபமுற நேரிடும் என்றும் அந்தக் கோபம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பரிதவிப்போடும் அவர் கதைமுழுவதும் தனக்குள் பொருமுகிறார். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை பொறுத்துப் போகிறவர் என்பது தெரிந்தபின், அவருக்காகச் சங்கடப்படுகிறார். மனசு எனும் கதையிலும், அண்ணனுடன் வீட்டிற்கு முதல்முறையாக வரும் பட்டணத்து அண்ணிக்கு தன் வீடும் சூழலும் வசதி குறைவாய் இருக்குமே; அவர் எப்படி இசைந்துபோவார் என மைத்துனன் ஒவ்வொரு நகர்விலும் வருந்துவது பகடியாய்ச் சொல்லப்படுகிறது. அக்கதை முழுவதும் அண்ணி எதிர்கொள்ள நேரிடும் கிராமத்து வாழ்முறை சிக்கலுக்காக மைத்துனன் கவலைப்படுகிறான். அவளது தங்கலைக் குறித்து அண்ணன் கொள்ளும் கவலையைவிட அவனது கவலை அதிகமாய் விவரிக்கப்படுகிறது. அடுத்தவர் வசதி, மனவோட்டம், சங்கடம் பற்றி நித்தம் யோசித்து வருந்தவும் இரங்கவும் சரிசெய்ய முனையவும் முயலும் பாத்திரங்கள் கொண்ட கதைகளைச் சி.எம்.முத்துக் கணிசமாக எழுதியுள்ளார். இத்தகைய கதைகள் விருந்தோம்பல் எனும் பண்பையும் மீறி பிறர் காயத்தைக் கிரகிக்கக்கூடிய, கரிசனை கொள்ளக்கூடிய தன்மை இருத்தல் வேண்டும் எனும் தளத்தை நோக்கி நகர்த்துவதாக உள்ளன.
சி.எம்.முத்து மக்களது வாய்மொழிகள், நாட்டார் பாடல்கள், தெய்வங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றைப் பின்னியே கதை சமைக்கிறார் என்றாலும் அவரது பெருவாரியான மண்வாசனை கதைகள் என்னும் மையத்தைச் சுற்றியதல்ல. அவரது எழுத்தை கி.ராவைப் போல் கதைசொல்லி எனவும் நாஞ்சில் நாடன் போல நாட்டார் பண்புகள் செரித்துக்கொண்டு நுட்பமாய்க் கதை நிகழ அனுமதிக்கும் எழுத்தாளர் எனவும் ஓர் எல்லைக்குள்ளும் அடக்க முடியாது. இரண்டும் ஊடுபாவிய தன்மையில் அவரது எழுத்து நிலைகொள்கிறது. சில தருணங்களில் இவ்விரண்டு எல்லைக்கும் அவர் தன் கதைகளின் (ஏழு முனிக்கும் இளைய முனி; உயிரின் ருசி) மூலம் பயணப்பட்டுத் திரும்புவதையும் அவதானிக்கலாம்.
சி.எம்.முத்து, கிராம வாழ்விற்கு இணையாக நகரமாதலையும் தன் சிறுகதைகளில் கணிசமாக எழுதியிருக்கிறார். நகர வேலைக்காகவும் வாழ்க்கைக்காகவும் கிராமத்தை விட்டுப் புறப்படும் ஒரு தலைமுறையின் பின்னணி அவரது கதைகளில் வந்துகொண்டே இருக்கிறது (ஆண்டவா மழை நிக்கப்படாது). முழுவதும் நகரப் பின்னணிகொண்ட கதைகளும் (ஒரு ரோஜாப்பூ கண் சிமிட்டுகிறது, நினைவுகள் இழந்தபின்) இத்தொகுப்பில் உள்ளன.
4
‘புளிப்புக்கனிகள்,’ ‘ஒரு நாற்காலி காத்திருக்கிறது,’ ‘ஆண்டவா மழை நிக்கப்படாது,’ ‘நினைவுகள் இழந்தபின்’ போன்ற கதைகள், காமத்தின் அந்தந்த நேரத் தவிப்புகளை, தீர்த்துக்கொள்ள விளையும் உடல்தூண்டல்களை, விரும்பி அடையும் ஏமாற்றங்களை, கிடைத்தபின் திறக்கப்படும் புதிய கதவுகளை, ஆசைக்கென எல்லாவற்றையும் இழக்கவும் விட்டுவிடவும் துடிக்கும் உணர்ச்சிகளை எனப் பல கோணத்தில் பேசுபவையாக அமைந்துள்ளன. காமம் சார்ந்த மதிப்பீடுகளை மையப்படுத்திச் சி.எம்.முத்துவின் கதைகள் நகர்வதில்லை. உரையாடல்களிலும், கதை நகர்விலும், மையப் பொருளிலும் காமம்சார் அறவிழுமியங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. காமத்தின் இயல்பே அது தன்வசப்படாமைதான் எனும் எதார்த்தத்தை நோக்கியே தன் கதைகளை நகர்த்துகிறார். குறிப்பாக, அவர் பேசியுள்ள காமம் எங்குமே குற்றவுணர்வை நோக்கிப் பாய்வதில்லை.
‘புளிப்புக்கனிகள்’ கதையில் தான் வயதுக்கு வருவதை அறியாத சிறுமியான கோக்கிலா, ஒன்றாய் வளரும் உறவுக்காரத் தம்பியான சுந்தரம் எனும் சிறுவனிடம் தன் யோனியில் இருந்து இரத்தம் வழிவதைக் காட்டுகிறாள். பயந்துபோனவன், ‘கோக்கிலியக்காளுக்கு இரத்தம் ஊத்துது, கோக்கிலியக்காளுக்கு இரத்தம் ஊத்துது’ (ப.52) என்று தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை கத்திக்கொண்டே ஓடுகிறான். பெரியவர்கள் அவன் சொல்லி வருவதை உணர்ந்து அதட்டும்வரை அறிவித்தல் தொடர்கிறது. பூப்படைதலுக்கு உரிய புனிதங்கள் எல்லாவற்றையும் தூரவீசி எறியும் தருணம் இது. முத்து இதுபோல் மரபாய்ச் சுமந்து வரக்கூடிய புனிதங்களையும் தயக்கங்களையும் மிக இயல்பாய் தன் கதைகளில் உடைத்துச் செல்கிறார். அல்லது அவற்றை அப்படி இயல்பாய் பாவிப்பவர்களைத் தன் கதைகளின் மூலம் முன்வைக்கிறார்.
‘ஆண்டவா மழை நிக்கப்படாது’ எனும் காதல் கதையில், காதலை அறிவித்துக்கொள்ளும் முதல் சந்திப்பிலேயே தன் காதலனான சேஷாத்ரியிடம் ‘முரட்டுத்தனமான காதல்னு சொன்னேனோல்லியோ அதோட அடையாளம்தான் இன்னிக்கிக் காத்தாலே பஸ்ஸுக்குள்ள நடந்த விவகாரமெல்லாம். என் பால்குடங்களைக் கொண்டு உங்க முதுகை முட்டித் தள்ளினேனே!’ (ப.118) என்கிறாள் ராதா. காதலுடனான முதல் சந்திப்பிலேயே எப்படி ஒரு பெண் தனது பாலியல் உறுப்புகளைப் பால்குடம் எனச் சொல்லி பேசுவாள்? என்று சி.எம்.முத்துவிடம் கேட்டேன். அவர் சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தார். இதற்கு இன்னும் எத்தனை சந்திப்புகளை உண்டாக்க வேண்டும்; உடலை வைத்து ஏன் இத்தனை பூடகம் என்று நினைத்து அவர் அந்த உரையாடலை வடித்ததாக எண்ணிக்கொள்கிறேன். அக்கதையில் இடம்பெறும் ராதாவின் கூற்று ஒரு குறிப்பிடத்தகுந்த மீறல்.
‘ஒரு நாற்காலி அமர்ந்திருக்கிறது’ எனும் கதை ஜி. நாகராஜன் பாணியிலானது. இக்கதையில் விலைமாதரிடம் செல்லும் நாகராஜன் ஒரு பெண்ணைப் பேருந்தில் உரசி விடுகிறார். அந்தப் பெண் கூச்சலிட்டு அவரை அவமானப்படுத்திவிடுகிறாள். அவரும் அடுத்த நிறுத்தத்திலே பேருந்தை விட்டிறங்கி தனது இலக்கான குடிலை முதல்முறையாகத் தேடி அடைகிறார். அங்கு அவர் உடல் தேவையைத் தணிக்க அறையில் காத்திருப்பவளும் பேருந்தில் தன்னை வசைபாடியவளும் ஒருத்தியே என்பதைக் கண்டு முகஞ்சுளித்து உடல் விழைவை வெறுத்து மீண்டும் தன் நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்கிறார். தன் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பெண்ணுடல் மீதான ஆர்வமின்மையிலும் வெறுப்பிலும் கழித்த ஒருவன், மத்திய வயதைக் கடந்தபின் பெண்ணுடலுக்கு ஏங்குதலும் அதை அடையும் தருணத்தில் எழக்கூடிய மனக்கசப்பால் விட்டு விலகித் திரும்புவதுமாய்க் கதை பயணிக்கிறது.
காமத்தை முன்னகர்த்த நிறைவான, அமைதியான மனோலயம் தேவை என்ற தொனியில் கதை நிறைவுறுகிறது. ஆனால் கூடுதலாக முத்து ஒரு வரியைச் சேர்த்து ‘நாளை மற்றுமொரு நாளை போலத்தானே அமைந்துவிடுகிறது வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டார்’ (ப.145) என முடிக்கிறார். அவ்வரியில் தான் ஜி. நாகராஜனைப் பேசியிருப்பது வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. கதை ஏற்கெனவே முழுமை பெற்றிருக்க, அவ்வரி அனாவசியமாய்த் தொக்கி நிற்கிறது.
பொதுவில் அவரது கதைகளின் மையம் கடந்துபோதல், கரிசனையோடு பிறரை அணுகுதல், மறத்தல், மன்னித்தல், இரங்குதல் என மானுட உன்னதம் பற்றியதாகவே இருக்கின்றது. இந்தப் பண்பினால் சில கதைகளுக்கு (நொண்டிப் பெண், அவன் செய்தது நியாயம் என்றால்) நீதிக் கதையின் சாயல் வந்து சேர்ந்துவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் சி.எம்.முத்துவின் நீண்ட நெடிய கால எழுத்தில், வகைப்படுத்துதலை மீறிய புத்துயிர்ப்புடன் வித்தியாசமான கதைகளும் ஈர்க்கும் தருணங்களும் அரிய மனிதர்களும் வாசிக்கக் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.