கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கூர்மையான கண்ணாடித்துண்டுகளில் சித்தாந்தத்தின் பெரும் சுமை

றியாஸ் குரானா

பகிரு

ஆசிரியர் : பெருந்தேவி, காலச்சுவடு பதிப்பகம் ,வ 2013 / ப 104 / ரூ 124.00

இருபத்தோராம் நூற்றாண்டின் மனித இருப்பு என்பது, கணினித் திரைகளின் நீல ஒளிச்சுடரில் கரைந்தும், சமூக வலைத்தளங்களின் எண்ணற்ற பிம்பங்களால் சிதறுண்டும், மொழியின் மீது கொண்ட நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்தும் போன ஒரு புதிர்ப்பாதை. இந்த டிஜிட்டல் பெருவெளியில், மனிதனின் அகவுலகம் அனுபவிக்கும் தனிமையையும், அந்நியமாதலையும், அர்த்தமின்மையையும் பதிவுசெய்யப் பழைய கவிதை மொழிகளும், மரபான அழகியல் மனோரதிய நினைவுகளும் போதுமானதாக இல்லை. இந்தச் சவால் மிகுந்த வரலாற்றுத் தருணத்தில், சமகாலத் தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய திசையையும், தீவிரமான மொழியையும் கையளிக்க முயன்ற ஒரு படைப்பாகப் பெருந்தேவியின் ‘உலோகருசி’ (2010) தொகுப்பை அவதானிக்க முடியும். இந்தத் தொகுப்பு, வெறும் அவதானிப்புகளின் திரட்டல்ல. அது தொழில்நுட்பப் பெருக்கின் விளைவான மீயதார்த்த வெளியிலும், பாலின பாவனைச் செய்தலின் சிக்கலான பரப்பிலும், மொழிதலின் நிலையற்றத் தன்மையிலும் பயணித்து, சமகால மனிதனின் சிதறுண்ட சுயத்தை ஒரு புதிய, கூர்மையான கவிதை மொழியின் வழியே மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு கலை முயற்சி.

நம்முடைய சமகால உலகம் ‘நகலிகளாலும் பாவனைகளாலும்’ ஆனது என்ற சிந்தனை இன்று பரவலாகியுள்ளது. இங்கு உண்மையை விட உண்மையைப்போலக் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களும், நகல்களுமே நமது யதார்த்தத்தை வடிவமைக்கின்றன. இந்த ‘மீயதார்த்த’ நிலையில், மூலத்திற்கும் நகலுக்கும் இடையேயான கோடு அழிந்துவிடுகிறது. பெருந்தேவியின் கவிதைகள் இந்த மீயதார்த்த உலகின் சுயத்தைப் பிடித்து, அதன் குளிரையும், அபத்தத்தையும், அவலத்தையும் நம்முன் விரிக்கின்றன. ‘தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில்’ என்ற கவிதையானது, இந்த மீயதார்த்த வாழ்வின் ஒரு மிக நுட்பமான சித்திரத்தைத் தருகிறது. கவிதையின் நாயகிக்கு, “மயக்கம் தராத மாலை / இன்றும் வந்தது”. இந்த வாழ்வின் மாலைப்பொழுதுகள் மயக்கங்களையோ, காதலின் கிளர்ச்சிகளையோ தருவதில்லை. அவை வெறும் கடமைப்பட்ட வருகைகளாக உள்ளன. இதன் உச்சமாக, விடியல் என்பது இயற்கையின் பேரெழுச்சியாக அல்லாமல், “விடியலின் கிரணத்தை / ஸன்ரைஸ் காப்பி விளம்பரத்தில் / அருமையாய் எடுத்திருந்தான்” என்று ஒரு வர்த்தகப் பிம்பமாகச் சுருங்கிவிடுகிறது. இங்கு, காப்பி விளம்பரம் என்பது சூரிய உதயத்தின் பிரதிநிதி அல்ல. மாறாக, சூரிய உதயமே அந்த விளம்பரத்தின் ஒரு நகலாக மாறிவிட்டது. ஒரு நகல் மூலத்தை முந்திக்கொள்ளும் இந்தக் கோட்பாட்டின் துல்லியமான கவிதை வடிவமாக இது அமைகிறது. இதேபோல, மெகாசீரியலில் வரும் ஒரு கணவன், “உருண்டு படுக்கக் / கற்றுத்தந்தான் / இப்படி இப்படி” எனும்போது, நம்முடைய தனிப்பட்ட துயரங்கள், அந்தரங்க அசைவுகள்கூடத் தொலைக்காட்சித் திரைகளால் பயிற்றுவிக்கப்படுகின்றன என்ற கசப்பான உண்மை உறைக்கிறது.

இந்த மீயதார்த்த நிலையின் ஆகக்கொடூரமான உச்சத்தை ‘நேற்று’ கவிதையில் காண்கிறோம். ஒரு பொறியியல் மாணவன், “வெப்காமின் / நீலச்சுடர் / முன்னிலையில்”, ஒரு பொது நிகழ்வாகத் தன் தற்கொலையை அரங்கேற்றுகிறான். இங்கே மரணம் என்பது ஒரு தனிப்பட்ட, அந்தரங்கத் துயரமாக இல்லாமல், இணையத்தில் நுகரப்படும் ஒரு காட்சிப் பொருளாக மாறுகிறது. அந்த நீலச்சுடர், பழைய உலகின் கடவுளுக்குப் பதிலாக, உணர்ச்சிகளற்ற, அனைத்தையும் பதிவுசெய்யும் ஒரு புதிய தொழில்நுட்பக் கண்ணாக அமர்ந்திருக்கிறது. தற்கொலைக்கான ஆயுதங்களாக அமிலம், கயிறு, கத்தி, மாத்திரைகள் என ஒவ்வொன்றையும் அவன் கேமரா முன் நீட்டுவது, இது ஒரு சுயத்தின் சிதைவல்ல, மாறாக, பார்வையாளர்களுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் என்பதைப் போலிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்த நண்பர்களின் எதிர்வினைகள், துயரத்தின் மொழியில் அல்லாமல், “LOL: உரக்கச் சிரிக்கிறேன்”, “OMFG: அட என் புணரும் கடவுளே”, “Loser: தோற்றாங்குளி” என டிஜிட்டல் குறியீடுகளின் வறண்ட மொழியில் பதிவாகின்றன. இது மனித உணர்வின் சிதைவு மட்டுமல்ல, மனிதனை மனிதனாக இணைத்திருந்த பந்தத்தின் சிதைவுமாகும். ஆயினும், தொழில்நுட்ப மீயதார்த்த உலகின் மீதான இந்தக் கவித்துவ விமர்சனம் மிகக் கூர்மையாக வெளிப்படும் அதேவேளை, ஒரு நுண்மையான கேள்வியும் இங்கே எழுகிறது. அந்த உலகின் குளிரையும், அந்நியமாதலையும் இவ்வளவு துல்லியமாகப் பதிவுசெய்யும்போது, கவிதையின் குரலும் சில சமயங்களில் அந்த உலகத்தைப் போலவே உணர்ச்சிகரமான விலகலுடன் ஒலிக்கிறதா? ‘நேற்று’ கவிதையில், வெப்காம் தற்கொலையின் ஒவ்வொரு படியையும் ஒரு மருத்துவரின் நிதானத்துடன் விவரிப்பது, அந்த நிகழ்வின் கொடூரத்தை உணர்த்தினாலும், அந்த விவரிப்பே மற்றொரு அடுக்கிலான காட்சிப் பொருளாக மாறும் அபாயம் அதில் உள்ளது. அந்த நிகழ்வின் அதிர்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மனிதக் குரலைக் காட்டிலும், அதை ஆய்வுசெய்யும் ஒரு அறிவுஜீவிக் குரல் ஓங்கி ஒலிக்கிறதா? இது வாசகனை அறிவுபூர்வமாகத் தூண்டிவிட்டாலும், உணர்வுபூர்வமாக அரவணைக்கத் தவறுகிறதா என்ற விவாதத்திற்கும் இங்கு இடமுண்டு. இந்த அந்நியமாதல், ‘68வது பிரிவு’ கவிதையிலும் தொடர்கிறது. காதலர்கள் பிரிவதுகூடத் தொழில்நுட்பத்தின் அலகுகளால் அளக்கப்படுகிறது. கந்தசாமி நேரில் சந்திக்காமல் “மின்னஞ்சல் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான் / அது 1/2” பிரிவு எனும்போது, உறவின் ஆழம் சுருங்கி, அது பரிமாறப்படும் ஊடகத்தின் தன்மையாக மாறிவிடுகிறது. ‘டெஸ்க்டாப்பில் பொரியுண்ணும் மீன்’ கவிதையில், கணினித் திரை என்பது வெறும் கருவி அல்ல. அதுவே ஒரு வாழ்விடமாகிறது. அங்கே மெய்நிகர் மீன்கள் நீந்துகின்றன, அவற்றிற்கு உணவாகக் கவிஞரின் “உரத்த கடிதங்களும் / அற்ற கவிதைகளும்” இடப்படுகின்றன. நம்முடைய கோபமும், காதலும், கவிதையும் ஒரு டிஜிட்டல் மீனுக்கு உணவாகும் இந்த அபத்த வெளியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தி, முடிவற்ற தொடர்புகளால் சூழப்பட்டும், முன்னெப்போதும் இல்லாத தனிமையால் வாடும் சமகால மனிதனின் இருத்தலியல் குளிரை வாசகனின் சுயத்தில் உறையச் செய்கிறது கவிதை.

இந்தத் தொகுப்பின் மற்றொரு முக்கியப் பரிமாணம் அதன் பெண்ணியப் பார்வையாகும். அது நவீன உலகில் பெண் தன் இருப்பை உணரும் நுட்பமான தருணங்களையும், தனக்கு விதிக்கப்பட்ட பாலின பாத்திரங்களை அவள் கலைத்துப் போடும் அதிர்ச்சிகரமான கணங்களையும் ஆராய்கிறது. பாலினம் என்பது இயற்கையானதல்ல, அது சமூகம் நமக்களித்திருக்கும் ஒரு வேடம், அதை நாம் தொடர்ந்து நடித்து, பேசி, செயல்பட்டு நிலைநிறுத்துகிறோம் என்ற கருத்தியல் பின்புலத்தில் இந்தக் கவிதைகளை அணுகலாம். ‘புஷ்பா சேலையணிந்த முதல் நாள்’ கவிதை, இந்தப் பாலின பாவனைச் செய்தலின் அரசியலை மிக இயல்பாக, ஆனால் கூர்மையாக வெளிச்சமிடுகிறது. புஷ்பா சேலை அணிந்த அந்த ஒற்றைக் கணத்தில், அவள் ஒரு தனிப்பட்ட மனுஷியாக இல்லாமல், ஒரு பொதுப் பொருளாக மாற்றப்படுகிறாள். அண்ணன் குளியலறைக்குச் சென்று நேரங்கழித்து வருவதும், அப்பா “கண்ணடிபடுமென்றார்” என்பதும், காதலன் அவள் சேலையைக்கூடப் பார்க்காமல் வேறு எதன்மீதோ பார்வையைச் செலுத்துவதும், புஷ்பாவின் உடல் ஒவ்வொரு ஆணின் பார்வைக்கு ஏற்ப வெவ்வேறு அர்த்தம் கொள்ளும் ஒரு மேடையாக மாறுவதைக் காட்டுகிறது. இந்த அன்றாட நிகழ்வில் பொதிந்திருக்கும் நுண் வன்முறையை, பெண்ணுடல் எப்படிச் சமூகத்தின் பார்வைகளால் சிறைப்படுத்தப்படுகிறது என்பதை இந்தக் கவிதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஆனால், இந்தப் பாலின நடிப்பை வன்முறையாகக் கலைத்துப் போடும் ஒரு தீவிரமான தருணம் ‘இருத்தல் நிமித்தம்’ கவிதையில் நிகழ்கிறது. கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு பெண், அவனுக்காக ஆப்பிளை நறுக்கும்போது, அந்தக் கத்தியால் தன் முலையையே அறுத்துக்கொள்கிறாள். “என் ஒரு முலை துடிக்க இன்னொன்று / அதற்குச் சாட்சியாகிறது” என்ற வரிகள், வாசகனை உலுக்குகின்றன. இந்தச் செயல், தாய்மை, காமம், மனைவியின் கடமை எனப் பெண்ணுடலின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அத்தனை அர்த்தங்களையும், அந்த உடலின் ஒரு பகுதியையே சிதைப்பதன் மூலம் கேள்விக்குள்ளாக்கும் ஒரு உடலின் புரட்சியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், இந்தக் குறியீட்டுச் செயலின் சக்திக்குள்ளேயே அதன் கலைத்துவப் பலவீனம் குறித்த ஒரு ஆழமான விவாதம் அடங்கியுள்ளது. இங்குப் பேசப்படும் பெண்ணியம், வாழ்வின் சூட்டிலிருந்தும், அனுபவத்தின் ரத்தத்திலிருந்தும் பிறக்காமல், கல்விப்புலத்தின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, முன் தயாரிக்கப்பட்ட ஒரு கருத்தியல் சட்டகமாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கவிதை, ஒரு கோட்பாட்டை விளக்கப் பயன்படும் அதிர்ச்சி மதிப்பீட்டைக் கொண்ட ஒரு குறியீடாக நிற்கிறதா? காரணம், அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான உளவியல் ஆழமோ, கடந்த காலமோ, தனிப்பட்ட துயரமோ கவிதையில் இல்லை. அவள் ஒரு பெயர் குறிப்பிடப்படாத ‘அவள்’, அவளது கணவன் ஒரு பொதுவான ‘ஆம்பிளை’. இந்தச் சூழலில், அவளது செயல், ஒரு நீண்டகால ஒடுக்குமுறையின் விளைவாக ஏற்படும் தவிர்க்க முடியாத வெடிப்பாக இல்லாமல், ஒரு கருத்தியலை நிரூபிப்பதற்காக மேடையேற்றப்பட்ட ஒரு அதிர்ச்சி நாடகமாக மட்டுமே எஞ்சுகிறது. ஒரு பெண்ணின் வலியையும், அவளது உடலையும் ஒரு அரசியல் கருத்தை விளக்கும் கருவியாகப் பயன்படுத்துவது, பெண்ணின் வலியைப் பேசுவதற்குப் பதிலாக, பெண்ணின் வலியைப் ‘பயன்படுத்துகிறது’. மேலும், பெண்ணியப் பிரக்ஞையின்படி, ஒரு பெண்ணின் தனிப்பட்ட வலி, அவளைச் சுற்றியுள்ள அரசியல் அமைப்புகளின் விளைவே. ஆனால் இங்கு, அந்தப் பெண் யார், அவளது சமூக, பொருளாதார அழுத்தங்கள் என்ன என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. அவள் ஒரு வெற்றிடத்திலிருந்து தோன்றி, கோட்பாட்டை விளக்கி, மறைந்துவிடுகிறாள். ஆணாதிக்கத்தின் மாபெரும் வெற்றி என்பது, ஒரு பெண் தன் கோபத்தை அந்த அமைப்பின் மீது செலுத்தாமல், தன் சொந்த உடலின் மீதே திருப்பிக்கொள்வதுதான். அந்த வகையில், இந்தக் கவிதையின் செயல், ஒரு இருண்ட சரணடைதலாக, ஒரு அரசியல் தோல்வியாகவே தோன்றுகிறது. அது வலியை ஆராய்ந்து ஆற்றலாக மாற்றாமல், அதை ஒரு அதிர்ச்சிகரமான, பேசாத பிணமாக மட்டுமே விட்டுச்செல்கிறது.

இந்தக் கருத்தியல் எளிமைப்படுத்தல், ‘பூமிபோலும் வலிய’ கவிதையிலும் தொடர்வதாகத் தோன்றுகிறது. “ஆண் காலாக / பெண் மைதானமாக / உருவங்கொள்கிறார்கள்” என்ற உருவகம், பாலின உறவுகளின் சிக்கலான பரப்பை மலிவானதாகச் சுருக்குகிறது. நிஜ வாழ்வில் அதிகார உறவுகள் இவ்வளவு எளிமையானவை அல்ல. பெண் எப்போதும் மைதானமாக இருப்பதில்லை. அவளும் ஆடுகளத்தில் ஒரு வீராங்கனையாக, சில சமயம் விதிகளுக்கு உடந்தையாக, சில சமயம் விதிகளை உருவாக்குபவளாக இருக்கிறாள். இந்த யதார்த்தத்தின் எந்தச் சிக்கலையும் பேசாமல், ‘ஆண்-தாக்குகிறான், பெண்-தாங்கிக்கொள்கிறாள்’ என்ற ஒரு சுவரொட்டி வாசகத்தை இது முன்வைக்கிறது. இது கவித்துவ அவதானிப்பு என்பதை விட, சோம்பேறித்தனமான சித்தாந்தக் குறுக்கலாகவே படுகிறது.

இந்த நிராகரிப்பிலிருந்து எழும் புதிய ஆற்றலை, உடலிலிருந்து பிறக்கும் ஒரு புதிய மொழியை ‘என் புனல்’ கவிதையில் காணலாம். “என் புனல் வலிது / கொப்பும் நுரையும் நிறைந்தது” என்று தொடங்கும்போதே, அது அடக்கமான, மென்மையான பெண்மையின் குறியீடு அல்ல என்பது தெளிவாகிறது. அந்தப் புனல், “ஒழுக்கத்தின் திண்தோள்கள் குலைகின்றன”, “சரியின் புதைகுழிகள் அடித்துச் செல்லப்படுகின்றன” என நிறுவப்பட்டிருக்கும் அத்தனை விதிகளையும் அடித்துச் செல்கிறது. அதன் உச்சமாக, “பேராண்மையின் சில கூரைகள் தடுமாறுதல் கண்டு / ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது” எனும்போது, அது ஆணிய அதிகாரத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறது. இது உடலிலிருந்து, உள்ளுணர்விலிருந்து பிறக்கும் ஒரு புதிய பெண்ணிய ஆற்றலின் மொழியாக மிளிர்கிறது. ஆனால், இந்தப் பிரமாண்டமான உருவகத்திற்குள், தனிப்பட்ட, பலவீனங்களும் முரண்களும் கொண்ட ஒரு பெண்ணின் குரல் கரைந்து போகிறதா? அதாவது, ‘பெண்’ என்ற கருத்தியல், நிஜ வாழ்வின் சிக்கலான ‘பெண்கள்’ என்பதைவிட முதன்மை பெற்றுவிடுகிறதா என்ற மென்மையான விமர்சனத்தையும் இங்கு முன்வைக்கலாம்.

இந்தத் தொகுப்பின் பெண்ணியப் பார்வை குறித்த விவாதத்தின் உச்சபட்ச முரண், சில கவிதைகள் பெண்ணியத்தின் பெயரால், பெண்ணியத்திற்கே எதிரான கருத்துகளை முன்வைப்பதாகத் தோன்றுவதில்தான் உள்ளது. ‘சில ஆலோசனைகள்’ என்ற கவிதை இதற்கு ஒரு முக்கியமான உதாரணம். ஒரு ஆண் தன்னை விரும்ப வேண்டுமென்றால், ஒரு பெண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று இது பட்டியலிடுகிறது: “நீ அவ்வப்போது பொய் சொல்ல வேண்டும்”, “ஒருபோதும் உண்மையை… நேசிப்பவளாகக் / காட்டிக்கொள்ள வேண்டாம்”, “அறிவில் அவனில் நீ பாதிக்குக் கீழ் எனவும் / அன்பு தருவதில் நிரம்பித் ததும்பியும் / உன்னை அறிவித்துவிட வேண்டும்”. இதை ஒரு அங்கதப் படைப்பு என்று வாதிடலாம். ஆனால், ஒரு வெற்றிகரமான அங்கதம், அது எதை விமர்சிக்கிறதோ, அந்த அமைப்பின் அபத்தத்தை அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் கவிதையோ, ஆணாதிக்க அமைப்பின் விதிகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த விதிகளுக்குள் எப்படி வெற்றிகரமாக வாழ்வது என்று ஒரு தந்திரக் கையேட்டை வழங்குகிறது. இதன் தொனி, எள்ளல் தொனியாக இல்லாமல், ஒரு நேரடியான அறிவுரையின் தொனியாகவே இருப்பதால், இது ஆணாதிக்கத்தை விமர்சிக்கவில்லை. மாறாக, அதன் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, அதற்குள் பெண்கள் தங்களை எப்படித் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவித விரக்தியான ஞானத்தை வழங்குகிறது. ‘பொய் சொல்வது’, ‘அறிவில் குறைவாகக் காட்டிக்கொள்வது’ போன்ற உத்திகள், ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் மீது சுமத்தியுள்ள அதே வார்ப்புருக்கள்தான். அவற்றை உடைப்பதற்குப் பதிலாக, ஒரு தந்திரமான ஆயுதமாகப் பயன்படுத்த சொல்வது, அந்த அமைப்பை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகும். இது விடுதலைக்கான பாதை அல்ல. இது சிறைக்குள் இருந்துகொண்டே சலுகைகளைப் பெறுவதற்கான ஒரு தந்திரம். பெண்ணியத்தின் அடிப்படைக் கொள்கையான ‘உண்மையைப் பேசுதல்’ என்பதற்கே இது எதிரானது. ஒரு பெண்ணின் முழுமையான, அறிவுபூர்வமான, நேர்மையான சுயத்தை வெளிப்படுத்தினால் அவள் நேசிக்கப்படமாட்டாள் என்ற ஆழமான அவநம்பிக்கையை இது விதைக்கிறது. ஆக, இது விடுதலைக்கான இலக்கியம் அல்ல. இது அடிமைத்தனத்தின் தர்க்கத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியம்.

இறுதியாக, ‘உலோகருசி’யின் உலகம், பிம்பங்களால் நிரம்பி வழிவது போல, அர்த்தமிழந்த சொற்களாலும் நிரம்பியுள்ளது. விளம்பரங்கள், அரசியல் கோஷங்கள், தேய்வழக்குகள் என மொழி அதன் உயிர்ப்பை இழந்துவிட்ட ஒரு சூழலில், கவிதை எப்படிப் புதிய அர்த்தத்தை உருவாக்க முடியும்? சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இடையே ஒரு நிலையான உறவு கிடையாது, அர்த்தம் எப்போதும் தள்ளிப்போடப்படுகிறது என்ற தத்துவார்த்தச் சிக்கலை ‘சொல் பொருள் நியதி’ என்ற கவிதை ஒரு வாழ்வனுபவமாக மாற்றுகிறது. “வேண்டாத சொல்லின் கருநிழல் / பொருளின் மேல் படிவது இப்படித்தான்” என்று தொடங்கும் கவிதை, நினைவு, சூழல், உறவுநிலை ஆகியவை எப்படி ஒரு சொல்லின் அர்த்தத்தையே மாற்றிவிடுகின்றன என்பதை ஆராய்கிறது. “ஒரு பொருள் உனக்கும் அவளுக்கும் / ஒரே அர்த்தத்தை வேறு அர்த்தங்களில் தரும்போது” என்ற வரி, உறவுகளின் மையத்தில் இருக்கும் மொழிசார்ந்த புரிதலின்மையின் வலியைச் சுட்டுகிறது. இப்படிச் சிதைந்துபோன மொழியிலிருந்து கவிதை, புறவயமான பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைத்து, உணர்ச்சிகளை மீட்கிறது. ‘எப்படி இருக்கீங்க?’ கவிதையில், உறவின் தேக்கத்தையும், உள்ளத்தின் தவிப்பையும் சொல்ல, “வைன் க்ளாஸில் / ஒரு ஈ துடிக்கிறது” என்ற ஒற்றைப் பிம்பம் போதுமானதாக இருக்கிறது. அந்தத் துடிக்கும் ஈ, பேச்சாளரின் சிக்கிக்கொண்ட சுயத்தின் துல்லியமான புறவய இணைக்கூறு. அதேபோல, ‘காரின் கண்ணாடித்துடைப்பான்’ கவிதையில், “இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு / நகர்ந்து திரும்புமுன் / ஒரு நூறு மழைத்துளிகள் / மறைத்தது / பாதையையா விழியையா” என்ற வரிகள், வெளி உலகின் மழைக்கும், அக உலகின் கண்ணீருக்கும் இடையேயான ஒரு கண நேரக் குழப்பத்தை, அந்தரத்தில் நிற்கும் மனநிலையை அபாரமாகப் பதிவு செய்கின்றன. கவிஞர் நேரடியாக உணர்ச்சிகளைப் பெயரிட்டுச் சொல்வதில்லை, ஆனால் அந்த ஈயின் துடிப்பிலும், கண்ணாடித்துடைப்பானின் அசைவிலும் நாம் அந்த உணர்வுகளை ஆழமாக அனுபவிக்கிறோம். அர்த்தமிழந்த சொற்களின் பெருக்கிலிருந்து விலகி, கூர்மையான, அடர்த்தியான பிம்பங்களின் வழியே உணர்ச்சியின் உலகை மீட்டுருவாக்கம் செய்வதே பெருந்தேவியின் கவிதை உத்தியாக உள்ளது. ஆனால், இந்தத் துல்லியமான பிம்பங்கள் மற்றும் கட்டுடைக்கும் அங்கதத்தின் மீதான அதீத கவனம், கவிதையின் இயல்பான இசைமையையும், உணர்வெழுச்சியையும் சில இடங்களில் கட்டுப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. அங்கதமும், அறிவின் கூர்மையும் ஒரு கவசத்தைப் போல மாறி, கவிஞரின் நேரடியான, பாதுகாப்பற்ற, பலவீனமான குரலை மறைத்துவிடுகின்றனவா? எல்லாவற்றையும் கட்டுடைக்கும்போது, எதன்மீதும் நம்பிக்கை கொள்ளமுடியாத ஒரு வெறுமை வாசகனுக்குள் மிஞ்சுகிறதா? தர்க்கங்களைக் கடந்த ஒரு கவித்துவச் சுயத்தின் தேடலுக்கோ, முழுமையான அர்ப்பணிப்பின் பரவசத்திற்கோ இந்தக் கவிதைகளில் இடம் குறைவு என்ற வாதத்தையும் முன்வைக்க முடியும்.

முடிவாக, ‘உலோகருசி’ தொகுப்பு, வாசித்து முடித்தவுடன் எளிதாகக் கடந்து சென்றுவிடக்கூடிய படைப்பல்ல. அது நம்முள் தங்கி, நாம் வாழும் உலகின் மீதும், நம்முடைய இருப்பின் மீதும், நாம் பயன்படுத்தும் மொழியின் மீதும் புதிய, அசௌகரியமான கேள்விகளை எழுப்புகிறது. நம்முடைய டிஜிட்டல் வாழ்வின் அபத்தமும் தனிமையும், அன்றாட நிகழ்வுகளில் மறைந்திருக்கும் பெண்ணிய அரசியலும், உடலின் புரட்சிகரமான எழுச்சியும், சிதைந்த மொழியிலிருந்து கவிதை எப்படிப் புதிய அர்த்தத்தை உருவாக்குகின்றது என்பதும் இந்தக் கவிதைகளில் தெளிவாகின்றன. பெருந்தேவியின் கவிதைகள் வசதியான, மென்மையான கண்ணாடிகள் அல்ல. அவை ஒரு விபத்தில் சிதறிய கூர்மையான கண்ணாடித்துண்டுகள். ஒவ்வொன்றும் நம் சிதறுண்ட பிம்பத்தின் ஒரு பகுதியைக் கூர்மையாகவும், வலியுடனும், தவிர்க்கமுடியாத நேர்மையுடனும் நமக்குக் காட்டுகின்றன.

அதே சமயம், இந்தக் கவிதைகளின் பெரும் பலமாக விளங்கும் அறிவுபூர்வமான கூர்மையும், கோட்பாட்டுத் தெளிவுமே அவற்றின் விவாதத்திற்குரிய பலவீனங்களாகவும் அமைகின்றன. மீயதார்த்த உலகின் குளிரை விவரிக்கும் குரல், சில சமயம் அந்த உலகின் உணர்ச்சியற்ற தன்மையையே உள்வாங்கிக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெண்ணிய விடுதலையைப் பேசும் தீவிரமான குறியீடுகள், சில சமயங்களில் உயிர்ப்புள்ள பாத்திரங்களின் உளவியல் ஆழத்திலிருந்து எழாமல், ஒரு கருத்தியலை விளக்கும் கருவிகளாக மாறிவிடும் அபாயத்தையும் கொண்டிருக்கின்றன. பொய்யையும் வஞ்சகத்தையும் ஆயுதமாகப் பரிந்துரைக்கும் வரிகள், அங்கதத்தின் மெல்லிய கோட்டைக் கடந்து, ஆணாதிக்க யதார்த்தத்தின் முன் மண்டியிடும் விரக்தியின் குரலாக ஒலிக்கும் சாத்தியத்தையும் மறுக்கமுடியாது. இறுதியாக, மொழியைக் கூர்மையான பிம்பங்களால் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி, சில தருணங்களில் கவிதையின் இயல்பான உணர்வெழுச்சியையும் இசைமையையும் கட்டுப்படுத்தி, ஒரு அறிவுஜீவிக் கவசத்திற்குள் கவிக்குரலைப் புதைத்துவிடுகிறதா என்ற விவாதமும் முக்கியமானது.

இவை அனைத்துக்கும் அப்பால், ‘உலோகருசி’ என்ற கவிதைத் தொகுப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பு. அந்தச் சிதறிய கண்ணாடித்துண்டுகள் காட்டும் பிம்பங்களின் வலியும் தெளிவும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அந்தக் கண்ணாடித்துண்டுகளின் கூர்மை சில சமயங்களில் நம்மைக் காயப்படுத்தி, உணர்வுகளை விலக்கிவிடுகிறதா என்ற கேள்வியும். அந்தச் சிதறல்களிலிருந்து பிறக்கும் வலியையும், தெளிவையும், விவாதங்களையுமே பெருந்தேவி தனது கவிதைக்கான பாதையாக ‘உலோகருசி’ இன் மூலம் நமக்குத் திறந்து காட்ட முயல்கிறார். கருத்தியல் சார்ந்த தீவிரத் தாக்கத்தால் ஆட்கொள்ளப்படும்போது கவிதை சார்ந்த உலகம் சற்று தொலைவுக்குச் சென்றுவிடுவது உலகளவில் புதியதொரு விசயமல்ல.

மேல் செல்