கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

அதிகார நுண்களமும் பாசிச எந்திரமாகும் உடல்களும் : பெருமாள்முருகன் படைப்புகளில் உடலரசியல்

இரா. சண்முகப்பிரியா,

பகிரு

மனித இயக்க ஆற்றலின் முக்கிய உற்பத்தியாக அமைவது மொழியே. காலந்தோறும் இலக்கிய, இலக்கண உருவாக்கங்கள் யாவும் மொழியின் ஊடாக, மொழிச் சமூகத்தில் இயங்கும் உடல்களைக் குறிப்பிட்ட அதிகார ஒழுங்கில் கட்டமைக்கின்றன. இங்கு அதிகாரத்தை எதிர்ப்பது அதன் முதல்நிலையில் மொழியை எதிர்ப்பதாகும். பின்காலனிய இலக்கிய வகைமைகள் மொழியைக் கைக்கொள்ளும் அரசியலையும், சொல்லாடல்கள் எனும் குறித்திறப்புச் சொற்களை அழகியலாக மையப்படுத்தியதையும் இப்பின்னணியினின்று விளங்கிக்கொள்ளலாம். மொழியின் வழியாக அதிகாரக் கருத்துருவங்கள் பாவிநிற்கும் உடல்களை வெளிக்கொணர, மொழியில் ஓர் உடைப்பினை நிகழ்த்தவேண்டியது இன்றியமையாதது.

செவ்விலக்கியங்களில் மெலிதாக நிகழ்த்தப்பட்ட இவ்வுடைப்புகளை, நவீன இலக்கியங்கள் முழுநிலையில் எடுத்துச் செல்கின்றன. அவை, மொழியின் உட்குழிவாகக் கிளைத்துள்ள ‘ஓரமைவாக்கும்’ அதிகாரக் கருத்தியல்களை மீளமைப்புச் செய்து, அதன் செயல்தளங்களை முடக்கிப்போடும் முக்கிய அரசியல் நகர்வை மேற்கொள்கின்றன. அதன்வழியாகப் பாலினம், சாதி, மதம், இனம், வர்க்கம் என்று பலவாகிச் சிதறிப்போகும் உடல்களையும், ஒடுக்குமுறை கருத்தாக்கங்களின் கூட்டிணைவாகச் செயல்படும் அதிகார உடல்களையும், அதன் இயங்குமுறைகளையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் இயற்கையின் பருப்பொருளாக உருப்பெற்ற மனித உடல்கள், உற்பத்தி சக்திகளின் மாற்றங்களுக்கு ஏற்பத் தோன்றிய கருத்தியல்களின் அடிப்படையில் அரசு எந்திரத்தின் பாசிச உடல்களாக மாறி, ஒடுக்கப்பட்ட உடல்களின் மீது வன்முறையை நிகழ்த்துவதைத் தம் எழுத்துகளின் மூலம் புலப்படுத்தும் பெருமாள்முருகனின் படைப்புகளில் வெளிப்படும் உடலரசியல் சிந்தனைகளை இக்கட்டுரை ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

குறியீட்டு மொழி- குறியியல் வர்க்கப் போராட்டம்:

பெருமாள்முருகனின் ‘பீக்கதைகள்’ தொகுப்பில் கதைத்தலைப்பே மொழிக்குள் கரைக்கப்பட்டுப் புனிதமாகி நிற்கும் மொழியின் கற்பிதத்தை உடைக்கிறது. குறிச்சொற்களின் மாயவினைகளையும் கட்டுடைக்கிறது; புனிதம் x அசுத்தம் எனும் இருமைச் சிந்தனையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ‘கருப்பணார் கிணறு’ என்னும் சிறுகதை இத்தொகுப்பில் மிக முக்கியமானது.

யாரையும் புழங்கவிடாத வெள்ளக்கவுண்டன் கிணற்றில் குளிக்கும் நான்கு சிறுவர்கள் பற்றிய கதை, ‘கருப்பணார் கிணறு’. வெகுநாட்களாக ஒடுக்கப்பட்டுவரும் உடல் தன் எதிர்ப்புணர்வைச் சிறுசிறு வழிகளில் வெளிப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டே இருக்கும். “குழந்தைப் பருவத்திலிருந்து சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்படும் மனிதத் தன்னிலை சமூக ஒழுக்கச் சட்டகங்களிலிருந்து வெளியேறித் தப்புவதும், இச்சமூகக் கட்டுமான அமைப்பைக் குலைக்கவும் முற்படுகிறது என்பார் ஜூலியா கிறிஸ்தவா” (ந. இரத்தினக்குமார் 2016: 48). அந்த வகையில் சிறுவர்கள் வெள்ளக்கவுண்டனைப் பழிவாங்கும் விதமாகக் கிணற்றுத் தண்ணீரில் எச்சில் உமிழ்ந்தும், சிறுநீர் கழித்தும் வைத்ததாகக் கூறும்போது, மற்றொரு சிறுவன் அக்குழுவிலிருந்து விலக்கப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில், கிணற்றுக்குள் தானும் மலம் கழித்துவிட்டதாகக் கூறுகிறான்.

செய்தி ஊர்முழுக்கப் பரவிவிட, கருப்பணசாமிக் கிணற்றில் களங்கம் ஏற்பட்டதால் ஊர்ப்பஞ்சம் நேரிடும், அதனைத் தடுக்கப் பரிகாரம் செய்தாக வேண்டும் என வெள்ளக்கவுண்டன் மிரட்டிச்செல்கிறான். சிறுவனின் தந்தை ஊர் மக்களின் கை, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செல்கிறார். ஊராருக்கும் குடும்பத்திற்கும் பயந்து ஊரைவிட்டே தப்பியோட முயல்கிறான் அச்சிறுவன். அப்போது, தான் மலம் கழித்ததாகச் சொன்ன வெள்ளக்கவுண்டனின் கிணற்றைக் கடக்கும்போது, அக்கிணற்றில் கருப்பணார் சாமி ‘மொச்மொச்சென்று’ நீரருந்தும் சத்தம் கேட்டதாக எழுதுகிறார் பெருமாள்முருகன். சுத்தம், அசுத்தம் என்னும் கருத்துகளை எள்ளலாக ஒரே வரியில் கலைத்துப்போடுகிறது இக்கதை.

அதிகாரம் தன் தந்திரோபாயங்களைச் செயல்படுத்திக்கொள்ளவும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் மொழியைத் தடை செய்யவும், சூட்சமமான புதிர்த்தன்மையான கதையாடல்களை உருவாக்கும். பார்ப்பனிய ஆண்மைய அரசதிகாரம் தன் நலன் சார்ந்த ஒழுங்குகளை, அனைவருக்குமான ஒழுங்குகளாக வரையறுத்து நிலைப்படுத்திக்கொள்ள, அவற்றைப் புராணங்களாகவும் தொன்மங்களாகவும் மொழிவழியே நிலைநிறுத்தியதை வரலாற்றில் காண முடியும். அதனூடாக உடல்களைச் சமனற்ற தன்மையில் நிலவச் செய்யவும், அதனை நியாயப்படுத்தி ஏற்புக்குள்ளாக்கவும் கேள்விகளற்ற நிலையில் மொழிக்குள் அதனை உறையவைக்கும் திட்டத்தை அது செயல்படுத்துகிறது. இத்திட்டத்தை வெகு இலாவகமாக ‘கருப்பணார் கிணறு’ உடைக்கிறது.

தன்னளவில் பாசிசத்தின் வடிவமாக மொழி இயக்கங்கொள்ளும்போது அதன் குறியீட்டுத் தன்மையை மாற்றியமைத்து அதனை அர்த்தமிழக்கச் செய்வது அவசியம். பெருமாள்முருகன் படைப்புகளில் இத்தகைய எதிர் அரசியலை, மொழிக் குறிச் சொற்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாகக் ‘கருதாம்பாளை’ எனும் கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கழிப்பறையின் கிரகப்பிரவேசம்’ என்ற சொல்லாடலும், ‘வறுகறி’ கதையில் இடம்பெறும் ‘பன்றிப்பல்லக்கு’ என்ற சொல்லாடலும் மொழியின் வழமையான நினைவுகளை அழித்தெழுதுவதுடன், மொழிக்குள் திணிக்கப்பட்டிருக்கும் புனிதங்களைச் சத்தமில்லாமல் திரிக்கிறது.

பண்பாட்டு அந்நியமாகும் உடல்கள்:

நிறத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையால் காலம் முழுவதும் உள்ளொடுங்கிக் கிடக்கும் தன்னிலையின் கதை ‘உள்ளத்தில் எழுதிய முகம்’. ஓர் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும் தன்னிலை, அவ்வுடலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் போராட்டமாக இக்கதையை அணுகமுடியும்.

ஆரிய/ காலனியப் பண்பாட்டுப் படையெடுப்பின் முக்கியமான கூறு நிறங்களின் மீதான மதிப்புருவாக்கம். இயற்கையின் உயிரியல் உடல்களுக்குள் பண்பாட்டு அதிகாரம் தன் கருத்தியல்களைப் பதிவேற்றி, அப்பண்பாட்டு அதிகாரக் கருத்தியல்களால் விசைப்படுத்தப்படும் உடல்களாக அவற்றை மாற்றியமைக்கின்றன. இதனால் ‘அந்நியமாதல்’ பண்பு தோற்றம் கொள்கிறது. அதாவது தன் சொந்தப் பண்பாட்டின் மீதே/ தன் சொந்த உடலின் மீதே நம்பிக்கையிழக்கச் செய்கிறது.

இக்கதையில் வரும் சரஸ்வதியின் பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் தங்களைவிட அவள் அடர்கருப்பு நிறத்தில் இருப்பதாகக் குறைபேசுவது, அழகு சார்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் படிநிலை ஒடுக்குமுறையாகத் தன் முதல் உறவு வட்டத்திலேயே அவள் உடல் மீது திணிக்கப்படுவதைக் காட்சிப்படுத்துகிறது.

இதன்வழி மதிப்பழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தன் உடலின் மீது நிகழும் மொழிவினைகளை மங்கலாக்கிக்கொள்ள, அவ்வுடல் மதிப்புறு உடலுடன் தன்னைத் தொடர்புறுத்திக் கொள்கிறது. பாவனை உடலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இக்கதையில் வரும் சரஸ்வதி கருப்புத்தோலினால் தனக்கு நிகழ்த்தப்படும் உளப் பாதிப்புகளிலிருந்து சற்றே மடைமாற்றிக்கொள்ளும் உத்தியாக ‘அழகு’ என்று சொல்லப்படும் கற்பிதங்களுக்குள் பொருந்திப்போகும் வெள்ளை உடலுடன் தன்னை இணைத்துக்கொள்கிறாள். “விடுதியில் அவளையும் அவள் கருப்புத் தோலையும் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக அரவிந்த் சாமியைப் பற்றிப் பேசும்படி ஆயிற்று. அது அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது” (பெருமாள்முருகன் 2016: 37) எனும் வரிகளின் மூலம், காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் ஓர் உடல், சமூகமதிப்பைப் பெற்ற மற்றொரு உடலுடன் தன்னை எவ்வகையிலாவது இணைத்துக்கொள்வதும், ஆதர்ச பிம்பமாக அறிவித்துக்கொள்வதும் ஒடுக்கப்பட்ட அதன் உள் மனவெளியின் செயலாக வெளிப்படுகிறது.

தன்னைப் போலவே தன் குழந்தைகளும் கருப்பாகப் பிறந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியை எதிர்கொள்ள நேரிடும்போது, “எங்க அப்பா, அம்மா என்ன வளத்துனாப்புலதான் நானும் வளத்துவன்” (பெருமாள்முருகன் 2016: 36) என்று சொல்ல நினைக்கிறாள். ஆனால், அதனை விடுத்து “அரவிந்த் சாமியக் கலியாணம் பண்ணிக்குவண்டி. அப்புறம் பாரு கொழந்தைங்க எல்லாம் அப்பிடிக் கலராப் பொறக்கும்ல” (பெருமாள்முருகன் 2016: 36) என்று பதில் கூறுகிறாள். இங்குத் தன் உடல்மீது ஏற்றப்பட்டு வைத்திருக்கும் குறைமதிப்பை, வெளிப்படையாக அவளே ஏற்றுக்கொள்கிறாள். தனக்கான உடனடிச் சமாதானத்தைச் ‘சமூக ஏற்பைப் பெற்ற’ ஒடுக்கும் உடல்களிடமிருந்தே பெற விழைகிறாள். அதற்கான தேடல் கதையின் இறுதிவரையிலும் அவளைப் பின்தொடரச் செய்கிறது.

அவளது ஆதர்ச உடலைப் பற்றிய பேச்சை வேண்டுமென்றே குறிப்பிட்டு, ‘எல்லாம் தனக்கேத்த ஜோடியத்தான் பாக்குறாங்களா’ என்று கதையில் இடம்பெறும் வரி சமனற்ற உடல்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் மொழியின் பாசிசத் தன்மையைக் குறிப்பிட்டுச் செல்கிறது. “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காமவாயில்…” (தொல்.1215) எனும் நூற்பா கூறும் பத்து வகை ஒப்புகள் இங்கு நினைவுக்கூரப்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்னின்ன தகுதிகளைக் கொண்ட உடல்/ இன்னின்ன வரையறைகளுக்குள் பொருந்திப்போகும் உடல், அதன் சமநிலையில் அமைந்த இன்னொரு உடலுடன்தான் இணைந்தாக வேண்டும்; இல்லையெனில், நிபந்தனைகளில் ஒன்றிரண்டைக் குறைவாகப்பெற்ற உடல் ஒடுக்கத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. குறைவுபட்ட அந்தத் ‘தகுதிகளை’ பெற்றுக்கொள்வதிலும், இயலாத நிலையில் காலம் முழுவதும் குறைமதிப்பீட்டைப் பெற்ற உடல் எனும் தாழ்வு மனப்பான்மையிலுமே வாழ வேண்டியதாக விதிக்கப்படுகிறது.

வயதான பிறகு தன் ஆதர்ச உடல், அழகு எனும் வரையறைகளிலிருந்து விலகிச் சென்றுவிடுமோ எனும் எண்ணம், மீண்டும் தனது மதிப்பழிக்கப்பட்ட உடலை உறைந்த நினைவுகளிலிருந்து மீட்டெடுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துவதன் பதற்றமாகச் சரஸ்வதியிடம் வெளிப்படுகிறது. சமூக ஏற்புக்குள்ளான உடல் அதன் மதிப்பளவீடுகளில் குறைந்துபோவது, அவ்வுடலுடன் தொடர்புறுத்தப்பட்ட உடல்களின் பிரச்சனையாக உருப்பெறுவதை இங்குக் கவனிக்க முடியும். சரஸ்வதியின் ஆதர்ச உடலைப் பற்றிக் குறிப்பிடும்போது “அது சாதாரண முகமல்ல. அவள் மேற்கொண்டு படிக்கவும் உற்சாகமாக முன்னேறவும் ஊக்கம் கொடுத்த முகம்” (பெருமாள்முருகன் 2016: 39) என்று கதையில் விளக்கப்படுகிறது.

தனக்குள் இருக்கும் முகத்தை அழித்துக்கொள்ள முற்படுவதன் மூலம் தனது உடலை விடுவித்துக்கொள்ளச் சரஸ்வதி முயல்கிறாள். “அந்த முகம் இன்னும் தேவைப்படுகிறதா” (பெருமாள்முருகன் 2016: 40) என்று தனக்குள் அவள் கேட்டுக்கொள்ளும் இடமே, தன் உடலை மீட்டெடுக்கும் இடமாக அமைகிறது. தனக்கான வேலையும், பொருளாதாரச் சுதந்திரமும், வாழ்தலுக்கான புதிய நோக்கமும் அதனைச் சாத்தியப்படுத்துகின்றன.

அதிகாரத்தின் பண்பாட்டையும் அதன் அழகியலையும் புறக்கணிப்பது முக்கியமான எதிர்ப்பு அரசியல் செயல்பாடு. ஏனெனில் அதிகாரத்தின் இந்தப் பண்பாடும், அழகியலும் ஒடுக்கப்படும் உடல்களின் மீதான ஆகப்பெரும் வன்முறை செயல்பாடாக அமைகின்றன. இந்த வன்முறை பெரும்பாலும் பெண்ணுடல் அதிகளவு நிகழ்த்தப்படுவதைப் பெருமாள்முருகனின் புனைவுகளில் காணமுடிகிறது. சாதிமறுப்புத் திருமணத்தால் விளையும் ஆணவக்கொலையை மையமிட்டு எழுதப்பட்டுள்ள அவரது ‘பூக்குழி’ புதினத்தை இங்குக் குறிப்பிட வேண்டும். சரோஜா என்னும் ஒரே உடல் சாதியினால் இழிவுற்றதாகவும், வெண்மை நிறத்தினால் ஒருவித ஏற்பையும் உயர்வுத்தன்மையையும் பெறுவதாக இக்கதையில் அமைகிறது. ஆனாலும் இந்த ஏற்பினைச் சிதைக்கவும், இல்லாது ஆக்கவும் சாதியினால் முடிகிறது. இங்குப் பண்பாட்டு உடலாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் பெண்ணுடல், அவளிடமிருந்து அந்நியமாக்கப்படுகிறது. உள்ளத்தில் எழுதிய முகம் கதையில் சரஸ்வதியால் இப்பண்பாட்டு அந்நியமாக்கலைச் சிதைத்துத் தன் உடலை மீட்டெடுத்துக்கொள்ள முடிகிற சாத்தியங்களைக் கதை வழங்குகிறது. ஆனால் பூக்குழிப் புதினத்தில் சாதி எனும் கருத்தியல் சரோஜாவுக்கு இந்த வாய்ப்பை வழங்கவில்லை.

பாசிசமாகும் உடல்கள்:

இந்தியச் சூழலில் பாசிசம் சாதியாகவும், மதமாகவும், மொழியாகவும், இன்னும் பல்வேறு கூறுகளாகவும் நிலைபெற்றிருக்கிறது. பாசிச உடல் பிற உடல்களின் மீதான ஒடுக்குமுறைகளின் மூலமும், அழிவின் மூலமும் தனது இருப்பைச் சாத்தியப்படுத்திக்கொள்ள முனைகிறது. உடலின் மிகைமீறிய இப்பாசிசத் தன்மையை ‘வறுகறி’, ‘மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ’, ‘கோம்பைச் சுவர்’ போன்ற சிறுகதைகளில் பெருமாள்முருகன் படைத்துக் காட்டுகிறார். சாதிய உடல்களாகத் திரியும் குழு உடல்கள், பிற உடல்களின் மீது நிகழ்த்தும் வன்முறையே ‘மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ’ கதை. நூதனமான நோயினால் ஊரில் வரிசையாக இறந்துபடும் பால்மாடுகள், குடியானவர் தெருவில் உள்ளவர்களுக்குப் பெரும் துயரத்தை விளைவிக்கின்றன. இறந்துபட்ட மாடுகள் உணவாவதன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நோய்க்கான காரணம் தெரியாத குழப்பம், பால்மாடுகள் இறந்துபோன துயரம் மற்றும் ஆற்றாமையினால் தோன்றிய குடியானவர் கோபத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்காகின்றனர். அதிகார உடல்களின் இயலாமை, இங்கு ஒடுக்கப்படும் உடல்களின் மீதான வன்முறையாக உருமாற்றம் அடைகிறது. ஆனால், தன் உடலின் மீது நிகழும் வன்முறைக்கு எதிராக ஒடுக்கப்படும் உடலிலிருந்து வெளிப்படும் சிறு எதிர்ப்புக்கூடக் குற்றச் செயலாகவும், தண்டனைக்குரியதாகவும் மாறிவிடுகிறது.

இதே கதையில் செங்கானின் கிணற்றில் நீச்சல் அடித்ததற்காகக் கை, கால்கள் கட்டப்பட்டுச் சாட்டை வாரால் அடிக்கப்படும்போது, ராசு என்னும் ஒடுக்கப்பட்ட உடல் தனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறது. ராசுவின் அப்பாவும், அம்மாவும் இதற்காக மன்னிப்புக் கேட்டு அழுதாலும், மன்னிக்க முடியாத குற்றமாக அது மாறிவிடுகிறது. ஏனெனில், சாதிய உளவியலுக்குள் சிக்குண்ட அதிகார உடல், தனக்குக் கீழானதாகக் கருதும் எதிருடலின் மிகச்சிறிய எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ள இயலாததாகி விடுகிறது. இது அவ்வுடலின் மீது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் செலுத்துவதற்கான தர்க்கங்களாக வருவிக்கப்படுகிறது.

குழந்தைகள், பெண்கள், வயதானோர் என ஒருவரையும் விடாமல் அடிக்கும்போது ‘மாப்புக் குடுக்கோணும் சாமீ’ என்பதாக மட்டுமே வெளிப்படுத்தப்படும் எதிர்வினைகள் அதிகாரத்தின் கோர முகத்தைக் காட்டுகின்றன. ‘‘வட்டத்திற்கு வெளியே நின்றிருந்த பெண் குரல் ஒன்று, இப்பிடிக் கேட்டாச் சொல்லுவானுங்களா? கையக் கால முறிச்சுப் போட்டுக் கேளுங்க என்றது” (பெருமாள்முருகன் 2016: 141) என்னும் வரிகளின் மூலம், அதிகாரத்தின் நுட்பமான இயங்கியலையும் இக்கதை உணர்த்தி நிற்கிறது. பெண்ணாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஓர் உடல், சாதிய உடல் தொகுப்புக்குள் ஒடுக்கும் உடலாக மாற்றம் பெறுகிறது. அப்பெண்ணின் குரல் தனி உடலின் குரலாக அன்றிக் கூட்டுடல்களின் குரலாக/ சாதியின் குரலாக வெளிப்படுகிறது; அவ்வுடலை உருவாக்கிய சாதியக் குழுவினது குரலாக அமைகிறது. உண்மையில், சாதியாக உடல்களை வடிவமைத்த மொழியின் பாசிச உடலாக வெளிப்படுகிறது.

பாசிசமாக ஒவ்வொரு உடலுக்குமான கருத்துகளையும் அவ்வுடலினுள்ளே உறைந்த நிலையில் மொழி இருத்தி வைக்கிறது. உடல் அந்தச் சட்டகங்களுக்குள்ளேயே சுழலும்படியான அமைப்பு உருவாக்கப்பட்ட பின்பு, அதே தன்மையான பல உடல்களின் உருவாக்கம் தொடர்கிறது. உடல்களுக்குள்ளான இறுகிய மனஅமைப்பை, அதிகார நுண்களங்கள் ‘இயல்பானதாக’ மாற்றியமைக்கின்றன. அதன்வழி வன்முறைக்கான நியாயங்கள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய இறுகிய மனஅமைப்பு அனைத்து உடல்களிடத்தும் காணப்படுவதைக் ‘கோம்பைச்சுவர்’ கதை வெளிப்படுத்துகிறது. கிராமத்து மக்களை வெள்ளந்திகளாக, அன்பே வடிவான எளிய மனிதர்களாகச் சித்தரிக்கும் கருத்துகளை இயல்பாகவே மறுக்கும் எழுத்துகளாய் பெருமாள்முருகனின் படைப்புகள் அமைகின்றன. அவை, உடல்களின் அகவெளி அழுக்குகளையும், குரூரங்களையும் பூச்சுகளின்றிப் பதிவு செய்கின்றன.

‘கோம்பைச்சுவரில்’ வரும் முத்துப்பாட்டார், சிறுவயதிலிருந்தே எதற்கும் கவலைப்படாது இரவில் உறங்கக்கூடியவர். ‘எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத மனுசனப்பா அவரு. அதான் இப்பிடி ஆனந்தமாத் தூக்கம் வருது’ என்று ஊர்மக்களிடம் பெயரெடுத்தவர். ஆனால், தன் பேரன் வயதையொத்த முருகேசன், அவரது கண்முன்னே வில்லை வீடு கட்டுவதைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் தூக்கத்தைத் தொலைக்கிறார். வீடு கட்டுவதற்கான ஆலோசனைகளை உரிமையுடன் பாட்டாரிடம் கேட்டுப்பெறும் முருகேசனைப் பார்த்து, தனக்கு இப்படியொரு பையன் இல்லையே என்று நினைத்துப் பொருமுகிறார். வீட்டின் வளர்ச்சியை நாளும் கவனித்துக்கொண்டே இருக்கும் பாட்டாருக்கு, இவ்வளவு சின்னப்பையன் இந்த வயதிலேயே வில்லை வீடு கட்டுகிறான், தன்னால் தனது குடிசைக்குச் சரிவர ஓலை வேயக்கூட முடியவில்லையே என்ற எண்ணம் அவரது நிம்மதியைக் குலைக்கிறது.

முருகேசனை அவனெதிரே வாயார வாழ்த்தும் பாட்டாருக்கு மனம் இறுக்கமடைந்துகொண்டே வருகிறது. தனக்கு எதனால் தூக்கம் தொலைந்தது என்பதுகூடப் புரியாமல், பல வகையான மருத்துவங்களை மேற்கொள்ளும் அளவுக்குப் பெரும் நோயாக அது உருப்பெறுகிறது. தூக்கமின்மைக்கான காரணத்தை அவர் கண்டறியும்போது, அதுவரையிலான பாட்டாரைப் பற்றிய வருணனைகளும், கிராமத்து மனிதர்க்கே உரித்தான ‘வெள்ளந்தி’ மனம் கொண்டவராகக் காட்சிப்படுத்தப்பட்டு வந்த அவரைப் பற்றிய பிம்பமும் சட்டென உடைக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக முற்றுப்பெறுகிறது. ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த கோம்பைச்சுவரைத் தனது காய்ப்பேறிய கைகளால் இடித்து, செங்கற்கள் சரிந்து விழுந்து மொட்டையாய் நின்ற சாரத்தைப் பலமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தபின்னரே, வெகுநாட்களாய்க் கைவிட்டிருந்த தூக்கம் அவரிடம் திரும்புகிறது. மனித உடல்களுக்குள் உறைந்து கிடக்கும் குரூர மனப்படிவை இச்சிறுகதை வெகு இயல்பாக வெளிக்காட்டுகிறது.

கோம்பைச் சுவர் கதையைப் போலவே மனித உடல்களுக்குள் ஊறிக் கிடக்கும் சாதிய உள்முரண்களைப் பன்றிக்கறியின் மூலம் ‘வறுகறி’ கதை பேசுகிறது. மிகப்பெரும் அரசியலான ‘உணவுப் பண்பாட்டு அதிகாரம்’ இக்கதையில் மிக நுணுக்கமாகப் பேசப்பட்டுள்ளது. ’ஒடக்கானையும் பல்லியையும் தவிர எல்லாத்தையும் சாப்பிடுபவன்’ என்று உணவின் பெயராலும், அதன் உள்ளூறிய சாதியின் பெயராலும் அடையாளப்படுத்தப்படும் உடல்கள், நிராகரிக்கப்பட்ட உடல்களாக மாற்றப்படும் வன்முறை இக்கதையில் காட்சிப்படுத்தப்படுகிறது. பன்மைத்தன்மை கொண்ட வாழ்நிலைகளையும், பழக்கவழக்கங்களையும் மறுத்து அதிகார உடல்களின் ஒற்றைப் பண்பாட்டை முன்வைத்து, அதுவே மதிப்புறு வழக்கமாக அடையாளப்படுத்துவதை ‘வறுகறி’ கதை உணர்த்துகிறது.

மொழி தனக்குள் அதிகாரத்தைப் பொதிந்து வைத்துள்ளது என்பதை, கதையில் பயின்றுவரும் சொற்களைக் கையாளும் உடல்களின் வழியாகக் கண்டுகொள்ள முடிகிறது. கதையில் வரும் குடியானவப் பெண்கள் பன்றிக்கறி சமைக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். அதனால் பன்றிக்கறி சாப்பிடும் தங்கள் வீட்டு ஆண்களை வசைபாடுகின்றனர். வெள்ளையனின் மனைவி அவரைத் திட்டும்போது, “எந்தக் குடியானச்சியாச்சும் முருவான பன்னின்னு சொல்லுவாளா” (பெருமாள்முருகன் 2016: 55) என்று அவன் கேட்கிறான். கதையில் ஆதிக்கச்சாதி உடல்களின் பேச்சுமொழியில் பன்றி ‘முருவானாகவே’ வலம் வந்துகொண்டிருக்க, ஒடுக்கப்பட்ட உடல்களின் மொழி அதனைப் பன்றியாகவே உலவவிடுகிறது. அதனினும் மேலாக, பன்றியை எடுத்துச் செல்கையில், ரங்கன் அதனை ‘எஞ்சாமி பல்லக்குல போகுது’ என்று கூறுவது மொழியின் பொருள்தளங்களை மாற்றியமைக்கும் எதிர் வழக்காற்று அழகியலாக அமைகிறது.

பன்றிக்கறி சாப்பிட விருப்பமிருக்கிறது என்பதை நேரடியாகக் கூற முடியாத ஆதிக்க உடல்கள், ‘ஒடம்பு சூடாயிருச்சு, ஒழுங்கா வெளியில போவ முடியல’ முதலிய காரணங்களைக் கூறிக்கொண்டு, மருந்துக்காகச் சாப்பிடுதல் என்ற தோற்றத்தைப் போலியாக உருவாக்கிக்கொள்கிறது. ஆதிக்கசாதி உடல்கள் மாட்டுக்கறி அரசியலின் எதிர்முகத்தைப் பேசுவதைப்போல, பன்றிக்கறி அரசியலைச் செய்யும் உடல்களைப் பெருமாள்முருகனின் கதை அடையாளங்காட்டுகிறது.

சாதிய ரீதியில் பன்றிக்கறி உண்பவர்களைக் கீழானவர்களாக்க விரும்பும் அதே உடல்கள், அதனை உண்ணவும் விரும்புகிறது. ஆயினும் ஆதிக்க உடலுக்கான ஒழுங்குகளையும்(!) மீறக்கூடாது என்பதால், அது தனக்கான சமாதானங்களை உருவாக்கிக்கொள்கிறது. பன்றியை வெள்ளாட்டுக்கிடாவுடன் ஒப்பிடுவதும், குச்சிக்கிழங்கும் சோறும் தின்று வளர்ந்த பன்றி என்பதாலேயே அதைச் சாப்பிடுவதாகவும் தனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொள்கிறது. தாம் சாப்பிடவிருக்கும் கரும்பன்றியை வெள்ளாட்டுடன் ஒப்பிடுவதும், ‘தீட்டுப் போவ நல்லா தேச்சுக் கழுவுங்கப்பா’ (பெருமாள்முருகன் 2016: 67) என்று கூறுவதும் (புனைவின் மொழியிலேயே கூறுவதானால் ‘மஞ்சள் குளியல் நடத்தப்பட்ட’ பன்றி), அசிங்கமானது, இழிவானது என்று தாம் கட்டமைத்து வைத்திருக்கும் மொழியின் முற்றுகையைத் தேவையின் பொருட்டுத் தாமே மங்கலாக்கிவிட்ட ஆசுவாசத்தைப் பெற்றுக்கொள்கிறது.

பார்ப்பனிய, ஆணாதிக்க மனம் தன்னை மையமிட்டே மொழி நடவடிக்கைகளை வரையறுக்கிறது. இம்மொழி நடவடிக்கைகளைக் குறுக்கீடு செய்யும் எழுத்துகளே மாற்று எழுத்துகளாக நிலைபெற்று இயங்கும். ‘மொழி பாசிசத் தன்மை கொண்டது’ என்பார் ரோலாண்ட் பார்த். ஒரு குழந்தை பிறக்கும்போது அது உருவாக்கிக்கொள்ளும் முதல் அறிதல் செயல்பாடு பாலின, சாதிய, வர்க்க உடல்களுக்கான மன அமைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட மொழியுடல்கள்சூழ் உலகிலிருந்து பெறப்படுவதாகவே அமைகிறது. அறிவு வளர்ச்சியும், மொழி வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைநிலையில் உருவாகும் என்று குழந்தை உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வகையில் அறிவு வளர்ச்சி/ மொழி வளர்ச்சி என்பதே ஒழுங்குறுத்தலுக்கான அதிகாரச் செயல்பாட்டுக் களனாகக் குழந்தை உடலைக் கட்டமைப்பதாக மாறுகின்றது. இங்கு, அதிகார உறவுகள், மொழியைக் கண்காணித்துக் கைப்பற்றுவதன் மூலம் தம் இருத்தலைச் சாத்தியப்படுத்திக்கொள்கின்றன. அவ்விருத்தலின் மீதான கேள்விகளை எழுப்புபவையாகப் பெருமாள்முருகனின் படைப்புகள் அமைந்துள்ளன.

உடலரசியலின் மிக முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய தன்மையிலேயே பெருமாள்முருகனின் புனைவெழுத்துகள் அமைந்துள்ளன. இவை குடும்பம், பண்பாடு, சாதி, பாலினம் முதலான ஒடுக்குமுறை கருத்தாக்கங்கள் யாவும், மொழியின்வழி ஒடுக்கப்படும் உடலின் ‘இயல்புகளைக்’ கட்டமைக்கும் தந்திரத்தைப் பதிவுசெய்கின்றன. இதற்கு அடுத்த நிலையில் அக்கட்டமைப்புகளுக்கு எதிரான குரலை எழுப்ப முயலும் உடல்களின் அசைவுகளைக் காட்சிப்படுத்தும் அவ்வெழுத்துகள், உடல்களை அதிகாரமற்ற வெளியாக மாற்றியமைக்கும் முயற்சிகளையும் புனைவினூடே மேற்கொண்டுள்ளன. முன்பே குறிப்பிட்டதுபோல, அதிகாரத்தின் நுண்ணியக் கருத்தியல்களுக்கு ஏற்ப உடல்களைக் குறியீட்டு உடல்களாக ஒழுங்குறுத்தும் பாசிசப் பண்பை, அதன் எதிர் குறியீட்டு வடிவில் மாற்றியமைக்கும் எழுத்துகளே இன்றைய உடலரசியலின் தேவையாக உள்ளது. பெருமாள்முருகனின் படைப்புகள் இத்தேவையை நிறைவுசெய்ய முயல்கின்றன. ஆனால், காலங்காலமாக ஒடுக்கப்பட்ட உடல்கள்மீது மொழி நிகழ்த்தும் வன்முறையைப் பதிவுசெய்கையில் ஒருவகையான வரலாற்று நினைவைத் தன்னையும் மீறி மொழிக்குள் இருத்திவிடுகின்றன. புனைவாக்கத்தை வெறுமனே சமகால எதார்த்தத்தின் பதிவுகளாக மட்டுமே கொள்ளும்போது, உடல்களின் மீதான வன்முறையைச் சமகால வரலாறாகவும், ஒற்றை உண்மையாகவும் மொழிக்குள் புகுத்திவிடும் / மாற்றிவிடும் அபாயமும் நிகழ்ந்து விடுகிறது.

இவ்வாறு மொழிவழியாக நினைவுகளாகவும், படிமங்களாகவும் அதிகாரக் கருத்துகள் உடல்களுக்குள் படிய வைக்கப்பட்டு, சாதியாகவும், பாலினமாகவும், நிறமாகவும் உருவாக்கப்படும் பாசிச உடல்களாக இயக்கம் கொள்கின்றன. பெருமாள்முருகன் எழுத்துகள் மறைமுகமாக ஒடுக்கப்படும் உடல்களுக்கான குறியீடுகளையும், வரையறையையும் விட்டுச் செல்கின்றன. ஒடுக்கப்படும் உடல்களின் மீது காத்திரமாக வெளிப்படும் மொழியுடல்களின் முன், ’சரிங்க சாமி, ஆமாங்க சாமி’ என்பதாக மட்டுமே வெளிப்படும் எதிர் குரல்கள் தன்னையும் மீறி ஒடுக்கப்பட்ட உடல்களுக்கான மொழியாகத் தன்னைக் காட்டிக்கொள்கின்றன. அவை மீண்டும் மீண்டும் ஒடுக்கப்படும் உடல்களை மொழிக்குள் உற்பத்தி செய்தவண்ணம் உள்ளன. ஆதிக்க உடல்களை அடையாளங்காட்டும் பெருமாள்முருகனின் எழுத்துகள் ஒடுக்கும் உடல் x ஒடுக்கப்படும் உடல் எனும் எளிமையான இணைமுரண்களுக்குள் நின்றுகொள்வதன் மூலம் ஆதிக்க உடல்களின் மொழி சுழற்சியில் சிக்கிக் கொள்கின்றன. ஒடுக்கப்படும் தன்னிலைகளை முதன்மைப்படுத்தும் எழுத்துகளே மாற்று வரலாற்றை முன்னெடுக்கும் ஆயுதம். ஏனெனில், இங்குக் கருத்துகளாக மட்டுமன்றி நினைவடுக்குகளில் குறிப்பானாகவும் மொழி சேகரமாகிறது. நினைவுகளே உடலின் அடிப்படையான செயலாகவும் உள்ளன.

எனவே சமகாலத்தைப் பதிவு செய்தல் என்பதுடன் நின்றுவிடாமல், எழுத்துகளைத் தனதாக்கிக்கொள்வதும், மாற்று வரலாற்றை எழுதுவதும் தேவை. இங்குப் ‘பதிவுகள்’ என்பதும், யதார்த்தவாதம் என்பதும் ஆதிக்க உடல்களால் கட்டமைக்கப்பட்ட மொழியுலகின் வினைகளே எனும் நிலையில், மொழியின் வரையறைகளை உடைப்பதே அரசியல் முதன்மையாகும். பெருமாள்முருகனின் புனைவுகள் ஒடுக்கப்பட்டவர்களின் நோக்குநிலையிலிருந்து அதனைச் செய்ய முயல்கின்றன. எனினும், ஆதிக்க உடல்களுக்கு எதிரான கலகத்தைச் செய்ய முயலும் அதேநேரம் ஆதிக்க உடல்களின் மொழி வரையறைகளுக்குள்ளாகவே அவை நின்றுவிடுவதையும் காண முடிகிறது. அவ்வகையில் ஒடுக்கப்படும் உடல்களுக்கான அரசியல் சார்புநிலைக்கும், அதிகாரக் கருத்துருவங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் மொழிக்கும் இடையில் பெருமாள்முருகனின் எழுத்துகள் பயணிப்பதைக் காண முடிகிறது.

(கட்டுரையாளர் இரா.சண்முகப்பிரியா திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.)

துணைநின்ற நூல்கள்:
  1. இரத்தினக்குமார் ந., 2016, திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும், சென்னை: கயல் கவின் பதிப்பகம்.
  2. எட்வர்ட் ஸெய்த், ரவிக்குமார் (மொ.ஆ.)., 2010, அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், புதுச்சேரி: மணற்கேணி பதிப்பகம்.
  3. கூகி வா தியாங்கோ, அ. மங்கை (மொ.ஆ.)., 2021, அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்- ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல், பொள்ளாச்சி: எதிர் வெளியீடு.
  4. பஞ்சாங்கம்., 2011, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், தஞ்சாவூர்: அன்னம் பதிப்பகம்.
  5. பாலசுந்தரம் ச (உ.ஆ.)., 2022, தொல்காப்பியம் – பொருளதிகார ஆராய்ச்சிக் காண்டிகையுரை, சேலம்: பெரியார் பல்கலைக்கழகம்.
  6. பெருமாள் முருகன்., 2024, பீக்கதைகள், புத்தாநத்தம்: அடையாளம் வெளியீடு.
  7. பெருமாள் முருகன்., 2016, பெருமாள் முருகன் சிறுகதைகள், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
  8. முத்துமோகன் ந., 2011, தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  9. ஜமாலன்., 2023 (இ.ப.), உடலரசியல், சென்னை: காலக்குறி பதிப்பகம்.
  10. ராபர்ட் ஜே.சி. யங், அ.மங்கை (மொ.ஆ.), 2007, பின்காலனியம் மிகச் சுருக்கமான அறிமுகம், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்

மேல் செல்