கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ஷோபா சக்தியின் இச்சா : அரசியல் நீக்கப்பட்ட ஓர் அபலையின் வாழ்வு

றியாஸ் குரானா

பகிரு

போர் சார்ந்த கதைகளை இலக்கியப் புனைவுகளாக மாற்றும்போது, மிக ஆழமான கவனம் தேவை. வெறுமனே ஒரு கதையைச் சொல்லும் சாகசங்களில் இறங்கிவிடக் கூடாது.

சம்பவங்களை ஒருங்கிணைக்கும்போது உருவாகும் கதையாடல் “ஒரு வீரத்தின் கதை”யாக மாறிவிடக்கூடாது .

கட்டளையிடும் நபர்களைவிட, ஒரு சிப்பாயைப் “பாதிக்கப்பட்டவர்” என விவாதிப்பதில் கடினமான எண்ணம் கொண்ட பார்வை அவசியமானது. அது தவறவிடப்படும் தருணங்களில் ஏதோ ஒன்றை மகிமைப்படுத்தும் இழைகள் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டிவிடும்.

யுத்தத்தை நினைவுகூர்வதில் ஏக்கம் மற்றும் உணர்ச்சிகளின் அபாயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இதுவே, ஒரு நாவலினை உருவாக்கப் பாடுபடும் எழுத்தாளர் அதிகக் கவனத்தைச் செலுத்த வேண்டிய இடம்.

எழுத்தாளர் நினைவு கூர்வது குறித்துச் சந்தேகம் எழுப்புவதற்கு வாய்ப்புகளை அந்த நாவல் வழங்க கூடாது. எழுத்தாளர் நினைவுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நினைவுகளைத் தொகுத்துச் சிந்திக்கும்போது உருவாகும் மையக் கதையோட்டம் சந்தேகங்களைத் தர முயலக்கூடாது.

இது போர் என்ற உரிமைக்கும், உரிமைமீறல்களுக்கும் இடையிலான சிக்கலான அம்சங்களால் பின்னப்பட்டிருக்கும் விசயம். ஆகவேதான், போர் குறித்த எழுத்துக்களுக்கு இத்தனை தேவைகளும் இருக்கின்றன.

போர் அனுபவத்தின் சாராம்சத்திற்கு வருவதற்கு, நினைவுகள் மிக நெருக்கமானவை என்பதாலேயே சாத்தியமாகிறது. அந்தச் சாத்தியங்கள் புனைவையும், எதார்த்தத்தையும் ஒன்றிணைக்கும் புள்ளிகளின் அவசியங்களை எளிதில் கண்டடைகிறது. அது நினைவுகளாலேயே சாத்தியப்படும் ஒன்று. இந்தத் தருணத்தில்தான், போர் குறித்த நாவலில் முன்வைக்கப்படும் வரலாற்று ரீதியிலான குறிப்புக்களையும், அதை நெருங்கும் தகவல்களையும் தனித்தனியே வாசிக்கத் துாண்டுகிறது.

எதார்த்தங்களாக ஒரு புறமும், புனைவாக மறுபுறமும் வாசிக்க வழியேற்படுத்தித் தருகிறது. இப்படியாக ஏற்படும் வழி என்பது, நாவலில் பொதிந்திருக்கும் நினைவுகளை ஒருங்கிணைத்து வாசிக்கும் முறையில் வெளிப்பட்டு விடுகிறது.

நாவலில் அடுக்கப்படும் நினைவுகளை நாவல் வளர்த்துச் செல்லும் திசையில், அதன்பாட்டிலேயே விட்டுவிடும்போது, திரட்சியுறும் மையக் கதையாடல் ஏதோ ஒரு சாய்வுகொண்ட அரசியல் தளத்தை உருவாக்கிவிடுகிறது. அதுதான் நான் முன்பே சொன்ன அபாயத்தை விளைவிக்கிறது.

‘இச்சா’ போர் சார்ந்த நினைவுகளைக் கவனமின்றிப் பதிவுசெய்த ஒரு பிரதி. ஈழத்தின் அநேக நாவல்கள் இந்த வகையானவைதான்.

போர்ப் பேரழிவின் அனைத்து மட்டங்களிலும், நிலைகளிலும் மனித அனுதாபத்தின் நிலை புனைகதைகளில் பொருத்தமற்றது. அனுதாபத்தைக் கடந்த ஒரு பார்வைதான் அவசியமானது. ஏனெனில், போரில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பும் யோக்கியமற்றவைதான் இல்லையா?

ஒப்பீட்டளவில் சிறுபான்மையான ஒரு மக்கள் கூட்டத்திற்கு என்ன நடக்கிறது என்றோ, அது போரில் ஈடுபடும் போது எந்தவகை நிலவரங்களைக் கடைப்பிடிக்கிறதென்றோ ஷோபா சக்தியின் “இச்சா“ நாவல் என்றழைக்கப்படும் பிரதி ஆராயவில்லை. ஒரு பெரிய, அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசாகத் திரட்சியுற்று உலகளாவிய ரீதியில் ஏற்கப்பட்ட ஒரு நாட்டின் மக்கள் கூட்டம், பலவீனமான சிறுபான்மை மக்கள் கூட்டத்தினையும், அவர்களிடம் தோற்றம் பெற்றிருக்கும் உலகளவில் இன்னும் அங்கீகாரம் பெறாத ஒரு இராணுவக் கட்டமைப்பையும் அழிக்க நினைத்துச் செயற்படும் முயற்சிகளை எப்படி எதிர்கொள்கின்றது என்றோ, அதற்காகத் தமது மக்கள் கூட்டத்தை இரு தரப்பும் எப்படிப் பாவிக்கிறது என்றோ இந்த நாவல் என அழைக்கப்படும், இச்சா எனும் பிரதி ஆராயவில்லை.

போரினால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் இருக்கும் ஏமாற்றங்கள், நன்மைகள் பற்றிய சாத்தியங்கள் குறித்தும் இந்தப் பிரதி கவனங்கொள்ளவில்லை. ஒரு சிப்பாய் ஒரு சிவில் உடலில் வசிப்பது பற்றிக்கூட இந்தப் பிரதி கவனங்கொள்ளவில்லை. சாதாரணமான ஒரு பெண் சிப்பாய் உடலினுள் புகுந்து உருமாறும் சராசரிப் பெண்ணின் விளையாட்டுகளைக் கூட இந்தப் பிரதி கவனத்திற்கொள்ளவில்லை. ஆனால், ஒரு பெண் கதை சொல்வதாக இந்தப் பிரதி நகர்கிறது. உலகளவில் போரைப் பெண்ணின் கோணத்திலிருந்து வியாக்கியானம் செய்த நாவல்கள் அதிகமில்லை. மிகக் குறைவாகவே அவை உள்ளன. ஷோபாசக்தியின் இச்சா நாவலின் கதையை ஒரு பெண் சொல்வதாகக் கூறினேனே தவிர, அது பெண் கதாபாத்திரத்தின் கண்களால் போரைப் பார்க்கத் துாண்டும் வழிமுறைகளைக் கொண்ட ஒரு கதை சொல்லலாக வளர்த்தெடுக்கப்படவில்லை. வெறுமனே ஒரு பெண் கதையைச் சொல்லுதல் என்று சுருங்கிவிடுகிறது. பெண் கதாபாத்திரத்தின் கண்களால் வாசகர்கள் போரைப் புரிந்துகொள்வதாக அமைந்திருந்தால் இருக்கக்கூடிய பெண்ணியப் பார்வையின் நுணுக்கமான நோக்குகள் இந்தப் பிரதியை நிறைத்திருக்கும்.

பெண் போராளிகளைப் போராட்ட இயக்கம் எப்படித் தொந்தரவு செய்தது, பெண் என்ற உடற்சார்ந்த பொருளை எப்படி அணுகியது என்பன தொடங்கி மிக விரிவான சம்பவங்களின் தொகுப்பாக இந்த நாவல் முக்கியப்பட்டு எழுந்து நின்றிருக்கும். ஆனால், அவை எதுவும் இந்த நாவலில் இல்லை. அப்படி இருந்திருக்குமானால், போரின் போது, அல்லது போராட்ட இயக்கமொன்றில் பெண்ணாக இருப்பதற்கான சவால்களையும், நெருக்கடிகளையும் புரிந்துகொள்வதற்கான சிறந்த இலக்கியப் பிரதியாக அது மாற்றமடைந்திருக்கும். அவை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. போரில் பங்கேற்கும் பெண்ணாக இருப்பதன் சவால்களைச் சிறந்த இலக்கியமாக உருவாக்கிய நாவல்கள் சிலதை இங்குச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. இது ஷோபா சக்தியின் அடுத்த நாவலுக்கான துாண்டுதலாக அமைந்துவிடலாம். அப்படியேனும் அவர் போன்ற முக்கியமான கதைசொல்லிக்கு உதவாமல் போனால் நான் ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியாது அல்லவா? Sand Queen என்ற Helen Benedict எழுதிய நாவலும், One Hundred and One Nights என்ற Benjamin Bucholz எழுதிய நாவலும், The Watch என்ற Joydeep Roy-Bhattacharya எழுதிய நாவலும் சமகாலத்தில் முக்கியமான நாவல்கள். இந்த நாவல்கள் பெண்ணிய நோக்கில் போர்க் காலத்தைக் குறித்து வெவ்வேறு கோணங்களில் பேசுபவை.

ஷோபா சக்தியின் இச்சா நாவலில் ஒரு பெண் சிப்பாய் கதை சொல்வதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் அதில் முக்கியமானவையாகக் கவனத்தை முன்தள்ளவில்லை. ஓர் ஆண் எழுதினால் எப்படி இருக்குமோ (ஆண்மையப் பார்வையை அதிகமாகவும், பெண்மையச் சிந்தனையை ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஓர் ஆண் என எடுத்துக்கொள்ளவும்) அப்படி அமைந்துவிடுகிறது. இந்நாவல் வீரகேசரி (ஈழத்து நாளிதழ்களில் ஒன்று) தொடர்கதைகளின் சாயலை அதிகம் கொண்டிருக்கிறது.

இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இருக்கும் வாய்ப்பான, ஒரு பொருளை வாங்கும் முன்பு அதைப் பயன்படுத்திப் பார்க்கும் முறைமை என்பது புத்தகங்களுக்கும் இருக்குமானால், நிச்சயமாக அதிகமான புத்தகங்கள் வாங்கப்படாமலே வீசப்பட்டுவிடும். அப்படி என்னால் வீசப்படும் புத்தகங்களில் இச்சா நாவலும் அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இச்சா நாவல் பாக்கியம் செய்த ஒன்றுதான்.

நாவல் என்று அழைக்கப்படும் இச்சா என்ற பிரதி குறித்து எனது பார்வைகளை முன்வைப்பதற்கு முன்பு அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது நல்லது எனக் கருதுகிறேன். அதனோடு இச்சா பிரதியின் பிரதானமான கதை ஓட்டம் அதாவது, அதன் மையத்தில் உள்ள ஐடியா வேறொருவருடையது என்ற விமர்சனங்களும் பரவலாக வெளிவந்திருக்கின்றன. சேனன் என்ற மற்றுமோர் ஈழத்து எழுத்தாளரின் கதை ஐடியாவை ஷோபா சக்தி ஆட்டையைப் போட்டுவிட்டதாகச் சேனனே தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, நாவலின் மையமாக முன்னெடுக்கப்படும் “பெண் போராளி ஒருவரின் கதையைச் சொல்லும் கோணம்” என்ற ஐடியாவைதான் ஷோபா திருடியதாகச் சொல்கிறார். இந்த ஐடியாவைக் கொண்ட சேனனின், “சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்” என்ற நாவல் இன்னும் கைவசம் வந்து கிடைக்கவில்லை. கிடைத்ததும் அவை குறித்து அலசலாம். நிச்சயமாக அது குறித்தும் ஒரு கட்டுரையை எழுதுவேன்.

பெண் போராளி கதை சொல்லியாக அமைந்த கோணத்தில் நாவலின் மைய ஓட்டத்தை யாரும் தேர்வு செய்யலாம், ஆனால், அந்தக் கதை சொல்லியான பெண் போராளி வெளிப்படுத்தும் அனுபவங்களும், சம்பவங்களும் இரண்டு நாவல்களுக்குமிடையே உருவாக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் போன்ற கதைச் சம்பவங்களிலிருந்தே இந்த மைய ஐடியா திருட்டா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளும் வாசிப்பை முன்னெடுக்க முடியும். எனவே, சேனனின் நாவல் வரும்வரை காத்திருப்பதுதான் நல்லது. எனக்கு அந்த நாவல் அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. என்னிடம் இன்னும் வந்து சேரவில்லை.

ஷோபா சக்தியின் இச்சா நாவல் பிரதானமான இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. வெள்ளிப்பாவை என்ற சிறுமியாக இருந்து, ஆலா என்ற பெண்போராளியாக உருமாறி, கரும்புலியாகப் பதவி உயர்வு பெற்று ஒரு தற்கொலைச் சம்பவத்தில் இயக்கக் கட்டுப்பாட்டை மீறி, பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, இந்திய மற்றும் இலங்கைப் புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் முன்னுாறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வரையான காலம்.

இரண்டாவது பகுதி, அந்தச் சிறையிலிருந்து புலம்பெயர் ஊடகவியலாளரான ஒரு புத்திஜீவியால் மீட்கப்பட்டுத் திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டு, கணவராலேயே சித்திரவதை செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தனது குழந்தையோடு எங்காவதொரு நாட்டுக்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் கொல்லப்பட்டு இறந்துபோகும் வரையான காலம். முதலாவது காலம், ஆலா என்ற பெண் போராளியின் எதார்த்தமான காலமாகவும், இரண்டாவது காலம் ஆலா என்ற பெண் போராளியின் புனைவான காலமாகவும் நாவல் முன்வைக்கிறது. இதை வெளிப்படையாக நாவல் குறிப்பிடாது போயினும், ஒரு தேர்ந்த வாசகரால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த இரண்டு காலத்திலும் நடைபெறும் நிகழ்வுகளால் பிணைந்திருப்பதுதான் இச்சா நாவலின் கதையாடல். இந்த இரண்டு பகுதிகளைச் சம்பவங்களாக உருவாக்கும் போது, ஷோபாசக்தி கொஞ்சம் பலவீனமான சம்பவங்களையும், அடிப்படையான தவறுகளையும் முன்வைத்தே நகருகிறார். அவர் உருவாக்கும் நாவலுக்கான மையக் கதையின் ஓட்டம் நகரும் அச்சு கதைகளைக் கோர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை, மையக் கதையோட்டத்தை உருவாக்குவதில் வெளிப்படுத்தவில்லை. இதை, இந்த நாவலைக் குறித்து எழுதிய எவரும் சுட்டிக்காட்டவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டைச் சேர்ந்த, “ஈழ உணர்ச்சியும் அனுதாபங்களும்” மூளையில் நிரம்பி பலரால் காணமுடியாது என்பதும் முக்கியமான விசயங்கள். கட்டுரையின் பிற்பகுதியில் நான் இது குறித்து விமர்சனங்களைப் பதியும்போது நீங்கள் வாசிக்கலாம்.

நாவலின் இரண்டு பகுதிகளை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது கதைச் சுருக்கத்திற்கு வரலாம்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலுப்பங்கேணி என அழைக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக, “மடுப்பகம்” எனப் பேர் மாற்றப்பட்ட அறுபது குடும்பங்களே வசித்து வந்த ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் வெள்ளிப்பாவையாகப் பிறந்த ஒரு பெண், தனக்குக் கிடைத்த வாய்ப்பாக ஆறாம் தரம் வரை சிங்கள மொழியில் ஆரம்பப் படிப்பை மேற்கொண்டு, பின்னர்த் தமிழ்மொழியில் இலுப்பங்கேணி ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்பாறை என்ற சிங்கள நகரத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்கிறாள். (இந்தப் பாடசாலையில்தான் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கல்வி கற்றார். இந்தத் தகவல் ஷோபா சக்திக்குத் தெரிந்திருந்தால் அதையும் இணைத்திருப்பார்). இந்தக் கிராமத்திற்கு அருகிலிருந்த ஊறாப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திலிருந்து சிங்களக் குடும்பங்கள் முப்பத்தி ஐந்தை அவர்களின் ஊருக்குள் புலிகள் புகுந்து கொன்றதினால், அவர்கள் வெளிவந்து இலுப்பங்கேணியைத் தாக்குகின்றனர். அதன் பின் இலுப்பங்கேணி நான்கு தமிழ்க் குடும்பங்களாகச் சுருங்கிப்போகிறது.

யுத்த நிறுத்த காலம் வருகிறது. வெள்ளிப்பாவையின் அம்பாறைத் தமிழ்ப் பாடசாலைக்கு இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் இரண்டு பெண்கள் வந்து உரையாற்றுகிறார்கள். அதைக் கேட்டு சில பெண்கள் இயக்கத்தில் இணைகின்றனர். அப்போதும் வெள்ளிப்பாவை இயக்கத்தில் இணைந்து கொள்ளவில்லை. இலுப்பங்கேணி என்ற கிராமம், பட்டிப்பளை ஆறு எனப் பேர் போன ஆற்றின் வலது கரையோரத்தில் ஆற்றின் அருகாக அமைந்திருக்கிறது. அந்த ஆற்றைத் தமிழர்கள் களியோடை ஆறு எனக் காலங்காலமாக அழைத்து வருகின்றனர். இன்று அதன் உத்தியோகபூர்வமான பெயராகக் கல்லோயா என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதுவும் சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக வந்தது.

வெள்ளிப்பாவை தனது பதினைந்தாம் வயதில் பத்தாம் ஆண்டுப் படிக்கும் காலமான 2004 வைகாசி பூரணை அன்று, (2004.06.03 ஆங்கில மாதப்படி இன்றுதான் அந்தப் பூரணை தினம் வருகிறது) அம்பாறையில் கோவில் திருவிழாவில் கலந்துவிட்டு தம்பியோடு சைக்கிளில் வரும்போது, காட்டுப் பகுதியில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய சிலரைச் சந்திக்கின்றனர். அதில் ஒரு சிறுவன் கடும் சோர்வாக இருக்கிறான். இவர்களிடம் தண்ணீர் கேட்கிறார்கள். வீடுவந்து சேர்ந்து தண்ணீரும், தேநீருமாக எடுத்துச் சென்று அந்தச் சிறுவர் புலிப் போராளிகளுக்கு வெள்ளிப்பாவையின் (பிறகு ஆலாவாக மாறும் வெள்ளிப்பாவை) தம்பி கொடுத்துவிட்டு வருகிறான். இந்தச் செய்தியை கஞ்சா அடித்த போதையில், தம்பி அவனது நண்பர்களான ஊர்காவற்படையைச் சேர்ந்தவர்களிடம் சொல்லி விடுகிறான். காலையில் வெள்ளிப்பாவையின் தம்பி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் செத்துக் கிடக்கிறான். அவனைக் கொன்றது ஊர்காவற்படையைச் சேர்ந்த தம்பியின் நண்பர்கள்தான் என வெள்ளிப்பாவை அறிந்துகொள்கிறாள். தாங்க முடியாத வேதனையிலும், கோபத்திலும் ஊர்காவற்படை சிப்பாயை ஏசுகிறாள். உன்னைப் பல துண்டுகளாக வெட்டிப்போடுவேன் என்ற வார்த்தைகளும் வெளிவந்து விடுகிறது.

அடுத்த நாள் ஊர்காவற்படையினர் வெள்ளிப்பாவையைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். கொல்லப்பட்டுவிடுவோம் என்ற எண்ணத்தில் போகும்போது, வெள்ளிப்பாவையும், தம்பியும் உதவி செய்த சிறுவர் புலிப் போராளி வருகிறான். துப்பாக்கியால் ஊர்காவற் படையினர் அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறான். அதன் பின்னர், அம்பாறையில் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் காட்டுவழியாக வெள்ளிப்பாவை சென்று சேர்கிறாள். அவரின் ஏற்பாட்டில், சம்மாந்துறையைச் சேர்ந்த ஒய்த்தாமாமி என்ற முஸ்லிம் பெண் ஒருவரோடு, முஸ்லிம் பெண்ணாக மாறுவேடமிட்டு திருகோணமலைக்குத் தனது சொந்தக்கார வீட்டுக்குச் செல்கிறாள்.

அங்கு நல்ல நிலையில் வெள்ளிப்பாவை கவனிக்கப்படவில்லை. அந்த வீட்டிலுள்ள முதியவர் ஒருவர் (இவர் வெள்ளிப்பாவை சிறுமியாக இருந்தபோதும் பாலியல் தொந்தரவுகளைச் செய்தவர்தான்) பாலியல் தொந்தரவு செய்கிறார். தடுமாற்றத்தில் வெள்ளிப்பாவையின் கை இடித்துவிடுகிறது. அந்த முதியவர் கிணற்றினுள் விழுந்து விடுகிறார். அவரைக் காப்பாற்றுவதற்கான பதட்டத்தில் துணைக்கு ஆள்தேடி வீதிக்கு ஓடிவருகிறாள். அந்த நேரம் பார்த்துத் தமிழ் சினிமாவில் ‘ஹீரோக்கள் என்ட்ரி’ ஆவதைப்போல, இரண்டு பெண் போராளிகள் மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். வெள்ளிப்பாவையின் பதட்டத்தைப் பார்த்துவிட்டு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என ஊகிக்கிறார்கள். வெள்ளிப்பாவை நடந்ததைச் சொல்லி முதியவரைக் காப்பாற்ற அழைக்கிறாள். வந்த பெண் போராளிகள் கிணற்றுக்குள்ளேயே வைத்து, ஜேம்ஸ் போண்ட் ஸ்டைலில் முதியவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

வெள்ளிப்பாவைக்கு “ஆலா” எனப் பெயர் மாற்றப்படுகிறது. அன்றிலிருந்து புலிப் போராளியாக மாறிவிடுகிறாள். ட்ரெயினிங் காலத்தில் அனைத்திலும் சிறந்தவளாக வருகிறாள். ஒருமுறை சிங்களத்திலிருந்த ஒரு செய்தியை மொழிபெயர்த்ததின் காரணமாகக் கிளிநொச்சியிலிருந்து புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரால் பாராட்டு மடலொன்று வருகிறது. அதன் பின் ஆலா என்ற பெண் போராளிச் சிறுமி, கிளிநொச்சியில் இயங்கும் புலி முக்கியஸ்தரின் தலைமைச் செயலகத்தில் பணியில் அமர்த்தப்படுகிறாள். அந்தத் தலைமைச் செயலகத்தின் பொறுப்பாளரை அவள் காதலிக்கிறாள். ஒரு நாள் அதைக் கவிதையாக அவரிடம் வெளிப்படுத்திவிடுகிறாள். அவரோ மீண்டும் அவளைப் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுகிறார். 2006ம் ஆண்டுச் சமாதானம் முறிவடைந்து புலிகளுக்கும் அரசுக்கும் போர் ஆரம்பிக்கிறது. ஒரு போரில் கலந்துகொண்ட ஆலாவுக்கு வயிற்றில் செல்லின் இரும்புத் துண்டு ஒன்று சிக்கிவிடுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.

கிளிநொச்சி புலித்தலைமைப் பொறுப்பாளரால் ஆலாவுக்கு “கரும்புலி” எனப் பதவியுயர்வு வழங்கப்பட்டுத் தற்கொலைப் போராளியாக மாற்றப்படுகிறாள். அதற்காகத் தயார்படுத்தப்பட்ட பின்பு, கொழும்புக்கு வருகிறாள். அங்கு ஒரு சிங்களவரின் பார்மசியில் தொழிலில் இருக்கிறாள். அவளுக்கான வேலை மிக வேகமாகவே வந்துவிடுகிறது. மேம்பாலம் ஒன்றின் திறப்புவிழாவில் தற்கொலை செய்து வெடித்து அதில் கலந்துகொள்ளும் அரச அமைச்சர்களையும், இராணுவ முக்கியஸ்தர்களையும் கொல்வதுதான் புலிகள் இயக்கத்தால் கரும்புலி ஆலாவுக்கு வழங்கப்பட்ட கண்ணியமான வேலை. எதிர்பாராதவிதமாக அந்த மேம்பாலத் திறப்புவிழாவிற்கு, வெளிநாட்டு துாதுவர் ஒருவர் வந்துவிடுகிறார். எனவே, அந்த இடத்தில் வெடித்துச் சாகக்கூடாது. அருகில் இருந்த பாலத்தின் சுவர்களில் மோதி, தனியாகவே வெடிக்க வேண்டும். வேறு பாதிப்புகள் வரக்கூடாது எனப் புலிகள் இயக்கத்தின் உயர்பீடம் முடிவெடுக்கிறது. ஆனால், போரில் ஒரு மாட்சிமை தாங்கிய மரணத்தைக் கனவு கண்டிருந்த கரும்புலி ஆலாவுக்கு இது பிடிக்கவில்லை. தற்கொலை செய்து வெடிக்காமல் அரச படையிடம் சரணடைந்துவிடுகிறாள்.

அதன் பின் விசாரணைகள் என்ற பேரில் நடைபெறும் சித்திரவதைகளும், மரணதண்டனை வழங்கப்பட்டு முன்னுாறு ஆண்டுச் சிறைத்தண்டனைக்குள்ளும் வருகிறாள். சிறையில் இருக்கும் தருணத்தில் புலிகள் இயக்கமே அழிந்து விடுவதை அறிந்துகொள்கிறாள். தான் வெடிக்காமல் சரணடைந்ததன் காரணமாகத் தப்பித்த வெளிநாட்டு அதிகாரி சிறையில் ஆலாவை சந்திக்க வருகிறார். அவரின் கூடவே மொழிபெயர்ப்பாளராகப் புலம்பெயர் ஊடகவியலாளரான புத்திஜீவியும் வருகிறார். அந்தப் புத்திஜீவி, ஆலாவைத் திருமணம் முடிக்க விரும்புகிறார். முன்னுாறு ஆண்டுச் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வாமன் என்ற ஊடகவியலாளரோடு கற்பனையான ஒரு நகரத்துக்குப் போகிறாள். போகும் வழியில் விமானம் மாறும் இடைவெளியில், மத்திய கிழக்கில் ஒரு ஹோட்டலில் வைத்து தனது கணவனான வாமனால் மோசமான உடலுறவுக்குள் சிக்குகிறாள். மூன்றுமுறை நடைபெறுகிறது. அதன் பின் அவர்களுக்கிடையில் எப்போதும் உடலுறவு நடைபெற்றதில்லை. இதனால், கர்ப்பமுற்று ஓர் ஆண் குழந்தையைப் பெறுகிறாள்.

ஊடகவியலாளர் வாமன், முன்னாள் போராளியைத் திருமணம் முடித்து மீட்டு வந்ததாகத் தான் நடாத்தும் வானொலியில் அடிக்கடி பேசுகிறார். பிற புலம்பெயர் சமூகத்தை நோக்கி விமர்சனங்களையும், அவர்களின் பாராட்டுகளையும் பெறுகிறார். ஆனால், ஆலாவைச் சிறையில் வைத்திருப்பதைப்போல் மோசமாக நடத்துகிறார். குழந்தையைப் பிரித்தெடுத்துவிட்டு ஆலாவை நாட்டுக்கு அனுப்புவது என்ற தீர்மானத்தில் தந்திரமான வழிகளில் செயற்படுகிறார். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். அந்தப் புலம்பெயர் கற்பனையான நகரத்தில், யாரோடும் ஆலாவுக்கு உறவுகள் இல்லை. அங்குத் தற்செயலாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வொன்றில் சிறிய ரகத் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது. அவளுக்கு ஒரு தைரியம் வருகிறது. இறுதி வாரத்தில் சுதந்திரமாகத் துப்பாக்கியோடு அந்தக் கற்பனையான நகரத்தில் தனியாக வெளியேறி நடமாடிய போதும், தனது பிரச்சினைகளை யாரோடும் சொல்வதற்கோ, அந்த அரசிடம் எடுத்துக் கூறுவதற்கோ, அல்லது வாமனின் வானொலி ஒலிபரப்பு நடைபெறும்போது, தடாலடியாக நுழைந்து கத்துவதற்கோ ஆலாவின் சிறிய மூளைக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கதை நகருகிறது. இறுதியில் தனது குழந்தையோடு தப்பிச் செல்லும் முயற்சியில் குழந்தையோடு சுடுபட்டு செத்துப்போகிறாள். இதுதான் கதைச் சுருக்கம்.

இந்த நாவலின் கதைச் சுருக்கத்தின் சாரத்தை இலக்கியக் கதையாடலின் அர்த்தத்தில் இப்படிச் சொல்ல முடியும். இலுப்பங்கேணி என்ற சிறு கிராமத்தில் பிறந்த அப்பாவியான வெள்ளிப்பாவை, சிறுவர் போராளியாகப் புலிகளில் இணைந்திருந்து, புலம்பெயர் சமூகப் பிரதிநிதி ஒருவரால் இப்படிச் சாகடிக்கப்படுகிறாள். தனது நான்கு வருட போராட்ட வாழ்வில் ஒருவரைக் கூடக் கொல்லாத அப்பாவிச் சிறுமி அவள். இவளுக்கு நடந்த கதையைப் பாருங்கள் என இந்த நாவல் சொல்ல முற்படுகிறது. வாசகர்களிடமிருந்து ஓர் அனுதாப உணர்வை வேண்டிநிற்கிறது. இது ஈழத் தமிழர்கள் மீதும், போராளிகள் மீதும் அனுதாபங்களைக் கொட்டித் தீர்ப்பதற்குக் குழுமியிருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு வாய்ப்பை வழங்கி புனைவாகத் திறந்துவிடுகிறது. இன்று “ட்ரென்டாக” மாறியிருக்கும் இந்த அனுதாப அலையைப் புனைவு என்ற பெயரிலும், நாவல் என்ற பெயரிலும், பிற முன்னாள் போராளிகளின் ஒப்பாரிகள் பெற்றுக்கொள்ளும் ஆதரவையும் பாராட்டுகளையும் இடையில் புகுந்து தட்டிச் செல்லும் ஒரு வழிமுறையின் தந்திரமான பக்கமே இந்த இச்சா நாவலினுாடாக ஷோபாசக்தி செய்திருப்பது.

ஒரு புனைபிரதி குறித்து இப்படியான குறுகிய பார்வையை ஒரு பந்தியில் விமர்சனமாக வைத்துவிடக்கூடாது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவர், அதற்கான உதாரணங்களை நாவலை முன்வைத்து வியாக்கியானம் செய்வதுதான் நேர்மையான பார்வையாக அமையும். எனவே, அந்த நேர்மையான பார்வையை இனி காணலாம்.

முதலில் நிலவியல் சார்ந்த ஒரு விசயத்தைக் கவனிப்போம். ஆலா என்ற போராளிச் சிறுமி, பிறந்த ஊராக இலுப்பங்கேணி சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தக் கிராமத்தைப் பற்றிய சில தகவல்கள் நாவலில் முன்வைக்கப்படுகின்றன. ஆலா பிறந்த போது, களியோடை ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வந்ததாகக் குறிப்பிடுகிறது. அதுபோல், களியோடை ஆற்றின் வலது கரையில் இலுப்பங்கேணி இருப்பதாகவும் கூறுகிறது. அது பின்னர்க் குடியேற்றக் கிராமமாக இருந்ததாலும், ஆலாவை ஊர்காவற் படையினர் பிடித்துச் செல்லும்போதும் வளைவில் மாடிவீடொன்றைக் கட்டுவதாகவும் தகவல் இருக்கிறது. இந்த இலுப்பங்கேணி என்ற ஊர் எனது ஊரிலிருந்து சுமார் 20 கிலோமீற்றருக்குள்தான் இருக்க வேண்டும். அது குறித்த தகவல்களை ஆராய்ந்தால் அப்படி ஒரு ஊர் இல்லை. களியோடை ஆற்றின் வலது கரையில் அதுவும் ஆற்றுக்கு நெருக்கமாக ஒரு ஊர் இல்லை. இந்தச் சம்பவங்கள் நடந்த பின்னர்ப் புலிகள் அழிந்துபோனதாலும், அந்த ஊரில் ஊர்காவற்படைகள் இருந்ததாலும் இன்றும் கூட அது ஒரு சிங்களக் கிராமமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு ஊர் நாவலில் குறிப்பிடுவது போன்ற நிலவியலில் இல்லை. இதை ஒரு நிலவியல் சார்ந்த பிழை என்றே எடுத்துக்கொள்ள முடியும். இப்போது அப்படியே எடுத்துக்கொள்வோம்.

இலக்கிய அர்த்தத்தில் வேறுமொரு கோணத்தில் இதைப் புரிந்து கொள்ளலாம். இது ஒரு புனைவான ஊரும் நிலவியலும் எனக் கருதி வாசிப்பைத் தொடரலாம்.

புனைவு என்ற வகையில் நாவலில் முன்வைக்கப்டும் சம்பவங்கள், உருவாக்கும் அரசியல் சார்புகள் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சம்பவங்களால்தான் கதையாடலே உருவாகிறது என்பது முக்கியமில்லையா?

ஆலா தனது ஊரிலிருந்த பல குடும்பங்கள் வெளியேறிச் செல்வதற்கு, ஊறாப்பிட்டிய என்ற சிங்களக் கிராமத்திற்குள் புலிகள் நுழைந்து முப்பத்தைந்து பேரைச் சுட்டுச் சாவடித்ததாகச் சொல்லும் அதே நேரம், வீர முனைக்கிராமத்தை ஊர்காவற்படையினர் அழித்ததாகப் போகிற போக்கில் சொல்ல வைக்கப்படுகிறார். வீரமுனைக் கிராம கலவரம் அப்படி, சும்மா இருந்த கிராமமொன்றுக்கு நிகழ்ந்த அழிவு அல்ல. 1985 தொடங்கித் தமிழ் இயக்கங்களால் சம்மாந்துறைக் கிராமத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட கொலைகள், கொள்ளைகள், சொத்துப் பறிப்புகளின் அடியாக வளர்ந்து தொண்ணுாறுகளின் தொடக்கத்தில், வயலுக்குச் சென்ற முஸ்லிம்கள் புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட உச்ச நிகழ்வில் உருவான உணர்ச்சி சார்ந்த ஒரு நடவடிக்கை என்பதே விசயம். (அதற்காக அதை நான் ஆதரிக்கவில்லை). சும்மா இருந்த வீரமுனைக் கிராமத்திற்கு நடந்ததுபோல் ஒரு சிறு தகவலாக அது முடிவடைகிறது.

அதுபோல், வெருகல் பகுதியில் புலிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்த குழுக்களிடையே மோதல்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுவார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மாபெரும் வெருகல் படுகொலைகள் பற்றி ஏதும் சொல்லாமல் மறைக்கும்படி ஆலா என்ற கதாபாத்திரம் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது. கருணா அணியைச் சேர்ந்த பலநுாறுபேர் கொல்லப்பட்டும், புதைக்கப்பட்டும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கொன்றும் பெரும் அழிச்சாட்டியமே நடைபெற்றிருக்கும். இது நடைபெற்றது 2004.04.10ம் திகதி, இதன் பின்னர்க் கிழக்கைச் சேர்ந்த பொதுமக்களைக் கூடப் புலிகள் இயக்கம் சந்தேகத்தோடே அணுகியது என்பது முக்கியம்.

இச்சா நாவலின் பிரதான கதாபாத்திரமான ஆலாவின் தம்பி கொல்லப்படுவதும், ஆலா கொலை செய்யப்படுவதற்காக ஊர்காவற் படையினரால் கூட்டிச் செல்லப்படுவதும், ஊர்காவற்படையினர், புலிச் சிறுவர் போராளியால் கொல்லப்படுவதும், ஆலா புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும், இலங்கையின் அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுபவை. ரணில் அரசும், புலிகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் போரைக் கைவிட்டுச் சமாதானப் பேச்சை தொடர்ந்த காலம். அதுபோல. புலிகள் அமைப்பு இரண்டாகப் பிளந்து கிழக்குப் புலிகள் என்ற வகையில் கருணா தலைமையிலும், பிற புலிகள் பிரபாகரன் தலைமையிலும் இயங்கிய காலம். அதிலும், சொந்த இனத்தின் மீதே, கிழக்குப் புலிகள் என்ற தோரணையில் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலம்.

ஆக, இலுப்பங்கேணி கொலையும், ஊர்காவற் படைக் கொலைகளும் சமாதான கால மீறல் சம்பவங்களாக எங்கும் பதிவாகவில்லை. நாவலில் சொல்லப்படும் சம்பவமான புலிகள் காட்டுக்குள் ஒளிந்த சம்பவமும், ஆலாவின் தம்பி புலிகளுக்கு உதவிய சம்பவமும் சமாதான காலத்தில் நடைபெற்றவை ஆகையால், ஊர்காவற்படையினர் புலிகளுக்கு உதவி செய்தார் என்ற போர்வையில் கொன்றது என்பது கேள்வியை எழுப்புகிறது. சமாதான காலத்தில், அரச பாடசாலையான அம்பாறை தமிழ்ப் பாடசாலையில் இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் நிலையிலுள்ள ஒரு சூழலில் புலிகளுக்குத் தண்ணீரும் தேநீரும் கொடுத்தது என்பது எப்படி “புலிக்கு” உதவியதாக நாவலில் சம்பவமாக ஆனது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

நாவலின் பிரதான கதாபாத்திரமான ஆலா, வடக்கு – கிழக்குப் புலிகள் எனப் பிரிந்த பின்னரே புலிகள் இயக்கத்தில் இணைகிறார் என்பது நாவலின் முக்கியமான விசயம். அந்தக் கதாபாத்திரத்தின் வழியேதான் நாவலே உருப்பெறுகிறது. அதுதான் நாவலின் மைய ஓட்டம். இப்படியான சமாதான காலத்தில் மாறுவேடம் பூண்டு ஆலா திருகோணமலையைச் சேர்வது ஏன்? இது கூடப் புரியவில்லை.

கிழக்கிலுள்ள மக்களைச் சந்தேகத்தோடு அணுகும் வடக்குப் புலிகள் – கிழக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணை இயக்கத்தில் சேர்த்தும், அவளுக்குத் தனிப் பாதுகாப்புத் துப்பாக்கி ஒன்றை கிளிநொச்சியில் இயங்கும் புலிகளின் முக்கியஸ்தர் வழங்குவதும் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்?

அப்படி நிகழ்ந்திருக்கிறது என நாவல் உருவாக்கும் சம்பவங்கள், கிழக்கு மக்களையும், முன்னாள் இயக்கப் போராளிகளையும் விரோதமாகப் புலிகள் பார்க்கவில்லை என்பதை முன்னிறுத்தும் ஓர் அரசியல் செயற்பாடாக மாற்றப்படுகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

யுத்தநிறுத்த காலத்தை எடுப்போம். புலிகள் தான் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்த மீறலை, சொந்த மக்களுக்கு எதிராகச் செய்தனர். 2002-2005 நவம்பர் வரையான காலத்தில், யுத்த நிறுத்த மீறலாக யாரால் என்று இனம் காணப்பட்டுப் பதிவுக்கு வந்தது 3560யாகும்;. இதில் புலிகள் மீறியது 3424 ஆகும். இது அனைத்தும் சொந்த மக்களுக்கு எதிராக இருந்தது. அதுவும் கிழக்கு மக்கள் மீது சந்தேகப்பட்டு நிகழ்ந்தவை. அரசு மீறியது 153 ஆகும். பதிவுக்கு வராது போனது, பல ஆயிரம். ஆனால் கணக்கில் இல்லை. சொந்த மக்களுக்கு எதிராகப் புலிகளால் நிகழ்த்தப்பட்டவைதான் அதிகம்.

இந்தக் காலத்தில் இடம்பெற்ற அதிகக் கொலைகள் கிழக்குத் தமிழர்களை, புலிகளையும், மக்களையும் கொன்றொழித்த நிகழ்வுதான். குறுகிய நேரத்திற்குள், ஒரு பெரும் நிலப்பரப்பில் அதிகக் கொலைகளும், இரத்தப் பெருக்கும் நடைபெற்று இலங்கைப் போர் வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் கிழக்கில்தான் நிகழ்ந்தது. அப்படியான சம்பவத்தை இச்சா நாவல் பதிவு செய்யவில்லை.

ஆனால், இத்தனை பெரிய அழித்தொழிப்புக்கும் பிறகு, கிழக்கைச் சேர்ந்த ஒருவரைப் போராளியாகப் பிரபாகரன் தலைமையிலான வடக்குப் புலிகள் சேர்த்துக் கொண்டனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. புனைவுசார்ந்த பெரும் கேள்வியையும் எழுப்புகிறது. ஆலா வடக்குப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது, ஆயுதங்களுடன் நின்ற புலிகள் சோதனை செய்யவில்லை என்றும் புன்னகையோடு உலவித் திரிந்தனர் என்றும் நாவலின் சம்பவம் கூறுகிறது. ஆனால், இராணுவப் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நாவலில் பிறிதொரு சம்பவம் முன்வைக்கிறது. சமாதான கால மீறல்கள் அதிகமாகப் புலிகளாலேயே நடந்தேறின. அதுவும் தனது சொந்தத் தமிழ் மக்கள் மீதுதான். அதுவும் கிழக்கு மக்கள் மீதுதான் என்பது வேறு. இதை மறைக்கும் ஒரு கதைச் சம்பவத்தைப் புனைவாக்குவது பற்றியே எனது இந்தக் கேள்வி எழுகிறது.

நாவலில் புனையப்படும் கதை நடைபெறுவதாக நாவலே கூறும் காலச் சூழலையும், பிரதான கதாபாத்திரமான ஆலாவின் ஊரும், கதை நடைபெறும் கால அரசியல் நிகழ்வுகளில் அந்த ஊர் என்னவகையான அடையாளத்தைக் கொண்டு அணுகப்படுகிறது என்பதையும் அறிந்த, அல்லது அனுபவரீதியாகத் தெரிந்த ஒருவருக்கு இச்சா நாவல் ஒரு நகைச்சுவையான அம்சமாகவே தோன்றும்.

ஆகவே, இச்சா நாவல், தனது கதை எல்லைக்குள்ளாகச் சேகரிக்கும் கதைச் சம்பவங்கள், கதை நடக்கும் கால அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்க முயல்கிறது அல்லது, அறியாமையின் வழியாக ஒரு கதையைப் புனைகிறது. இந்த இரண்டில் ஒன்றாகவே “இச்சா“ இருக்கும்.

சரி, பெண்ணின் கோணத்திலிருந்து இந்த நாவல் கதையைச் சொல்கிறது என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பேன். அது பெண்ணிய நோக்கிலிருந்தல்ல என்றும் இந்தக் கதையை ஒரு பெண் சொல்வதாகவுமே அமைவதாக முன்வைத்திருப்பேன். எனவே, இந்த நாவலில் உருவாக்கப்படும் அல்லது வரும் பெண்களைப் பற்றிச் சிறிது பேச வேண்டும்.

ஷோபா சக்தியின் இச்சா நாவலில் விரித்துச் சொல்லப்படும் பாத்திரங்கள் அதிகமில்லை. எனினும், அவர்களின் பண்புகள் வெளிப்படும் வகையில் சம்பவங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதிகமான பெண் கதாபாத்திரங்கள் வந்துபோகின்றன. அதில், பண்புகளின் அடிப்படையில் பெண் பாத்திரங்களே மோசமானவர்களாக இருக்கின்றனர். ஒரே ஓர் ஆண் கதாபாத்திரம் புலம்பெயர் ஊடக அறிவுஜீவியாக வரும் வாமன் மட்டுமே மோசமான கதாபாத்திரமாக வருகிறார். அரச புலனாய்வு அதிகாரியாக வரும் குமாரநாயக்கா கூட அவரின் பாத்திர வெளிப்பாட்டின் அடிப்படையில் நல்லவராக மாறி நிற்கிறார். விசாரணைகளின் போது சித்திரவதை செய்பவர்கள் பால் அடையாளங்களினுாடாக நாவலில் வெளிப்பட்டு நிற்கவில்லை.

இலுப்பங்கேணிக் கிராமத்தில் பேய்களைத் துாஷணம் சொல்லி விரட்டும் மரபு இருக்கிறது. இருந்தும், பெத்தாப்பா என்ற ஆண் கதாபாத்திரத்தினால் சொல்லப்படும் துாஷணங்களால் அவரைப் பின்தொடரும் பேயை விரட்ட முடியவில்லை. அந்தத் துாஷணங்கள் அத்தனை மென்மையானவை. ஆனால், பெத்தாச்சி என்ற பெண் கதாபாத்திரம் சொல்லும் துாஷணத்தைக் கேட்டுப் பேய் தலைதெறிக்க ஓடுகிறது. ஆலா புலிகள் அமைப்பில் இணைந்து பயிற்சி எடுக்கும் முகாமின் பொறுப்பாளராக இருக்கும் பெண் கதாபாத்திரமான செந்துாரி அக்காவும் இதைப் போல் கடுமையான துாஷணங்களைச் சொல்பவராக இருக்கிறார். அதுபோல், சிறைக் காவலாளியாக இருக்கும் பெண் கதாபாத்திரமான ஆந்தை நோனாவும் கடுமையான பெண்ணாகக் கதையில் வருகிறது. அதுபோல், வாமனின் சகோதரியும் மோசமான பெண்பாத்திரமாக வருகிறார்.

சிறை மேலதிகாரியும், ஆலா சிறையில் எழுதிய குறிப்புக்களை, நாவலுக்கு வெளியே கதை சொல்லியாக இருப்பவருக்குக் கொடுப்பவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் இறப்பவருமான லொக்கு நோனா என்ற கதாபாத்திரம் இரக்கமுள்ள பெண் கதாபாத்திரமாகக் கதையில் நடமாடுகிறார். அவரோர் அரச அதிகாரி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்படி நினைவில் கொள்வது நாவலில் கதையாடப்படும் பிறிதொரு சம்பவத்தைப் புரிந்துகொள்ள உதவும். அரசு சார்பாக இந்த நாவலில் உருவாக்கப்பட்டிருக்கும் எந்தக் கதாபாத்திரங்களும் மோசமானவர்களல்லர் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். அதாவது, இன்றுவரை சாதாரணமான அரசியல் கைதிகளாக இருக்கும் எவரையும் கூட மன்னித்துச் சிறையிலிருந்து வெளியேற்ற விரும்பாத அரசு, அந்த அரசின் தலைவர் பொது மன்னிப்பின் பேரில் ஒரு கரும்புலி தற்கொலைப் போராளியை விடுதலை செய்யுமளவு நல்லவராக உருவாகி நிற்கிறார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாகவே நாவலினுள் நடமாட விடப்பட்டுள்ளனர். அறாப்பிட்டிய கிராமத்திற்குள் நுழைந்து முப்பத்தைந்து பேரைக் கொன்றதும், சிறுவர்களை இயக்கத்தில் இணைத்ததும் தவிர, (கட்டாயமாக இணைத்தல், வந்தவர்களைச் சேர்த்துக்கொள்ளல்) வேறு குற்றங்களற்ற அப்புராணிகளாக அவர்கள் உலவுகின்றனர். இலங்கை அரசையும், இராணுவத்தையும் நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகச் சோதனைச் சாவடியில் இறக்கிச் சோதனை செய்வதைத் தவிர வேறில்லை. (விசாரணைக்காலச் சித்திரவதைகளை இங்குச் சேர்க்க முடியாது). ஆனால், இதற்கு முந்திய அரசுகள் குடியேற்றம் என்ற வகையில் தமிழ்க் கிராமங்களை அபகரித்ததாக வருகிறது. ஆனால், நாவலின் கதை நகரும் கால எல்லைக்குள்ளாக இருக்கும் இலங்கை அரசுகள், நேர்மையானவை போல உருவாக்கப்படுகின்றன. அதேநேரம் புலிகளும் அப்பாவிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

பெண் கதாபாத்திரங்களைக் கடுமையோடும், துாஷணத்தோடும் இணைக்க வேண்டிய தேவை என்பது, ஆண்மைய சிந்தனையின் வெளிப்பாட்டில் கதை உருவாக்கப்படுகிறது என்பதன்றி வேறென்ன? ஆயினும், பெண்மைய நோக்கில் சொல்லப்படாது, ஒரு பெண் கதை சொல்வதாக இருந்தாலும், இந்த நாவலில் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறு மூளையுள்ள, அப்பாவியான, முட்டாள் பெண்ணாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தி இருக்க வேண்டிய தருணங்கள் இந்த நாவலில் அவசியப்பட்டிருக்கிறது. அதைக்கூடக் கவனத்திற் கொண்ட மாதிரி தெரியவில்லை. அந்தச் சந்தர்ப்பங்களை இங்குச் சுட்டிக்காட்டுவது அவசியமானது.

முதலாவது சந்தர்ப்பம், சுல்தான் பப்பா என்ற கிளிநொச்சி தலைமையகத்தின் பொறுப்பாளரை ஆலா காதலித்த சம்பவமாகும். தனது காதலை வெளிப்படுத்திய நேரத்தில் சுல்தான் பப்பா, ;உனக்குப் பதினெட்டு வயசாகட்டும்’ எனப் புத்திமதி சொல்லும் தருணத்தில், எந்தவொரு கிறுக்குப் பெண்ணாக இருந்தாலும், தனது காதலை மேலும் வலுவாக்க எதையாவது கூற வேண்டியிருந்திருக்கும். ஆலாவுக்குப் புலிகளின் தலைவரோடு பேசுவதற்குக் கூடத் தயங்காத மனநிலை கொண்டவர் என நாவல் மேலும் சொல்கிறது. எனவே, ‘பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட என்னைப் போரில் பங்குபற்றுவதற்கு ஏற்றுக்கொண்ட நீங்கள், காதலிப்பதற்கு ஏன் வயது பார்க்கிறீர்கள்?’ என நகைச்சுவைக்குக் கூடக் கூறவில்லை.

இரண்டாவது சந்தர்ப்பம். புலம்பெயர் கற்பனையான தேசத்தில் சிறைக் கைதிபோல் ஒரு வருடமாக அடைத்து வைத்து நடாத்தியதை எதிர்க்கும் வழிமுறைகள் எதையும் முன்வைக்கவில்லை. இறுதி வாரமான ஆறு நாட்களில் கூட, அதாவது ஆலாவிற்குத் தைரியம் கொடுக்கும் குறளி என அழைக்கப்படும் ஆயுதம் கையில் கிடைத்த பின்னர்கூட ஆலா மேற்கொள்ளவில்லை என்பது இரண்டாவது சந்தர்ப்பம்.

ஆக, பெண்களை மோசமானவர்களாகவும், சூழ்நிலைக்கேற்ப யோசிக்கும் திறனற்ற சின்ன மூளையுள்ளவர்கள் என்றும், அதிகமாகத் துாஷணங்களைக் கக்கும் நாகரிகமற்றவர்களாகவும் நாவலிலுள்ள கதைச் சம்பவங்களால் ஒரு கதையாடலை ‘இச்சா’ உருவாக்குகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

மொத்தத்தில், அரசு மற்றும் புலிகள் என்ற பாசிச அமைப்புகளின், முழுமையான தன்மையை மறைத்து, பெண்கள் சிந்திக்கும் திறனற்றவர்கள், சிறிய மூளை உள்ளவர்கள் என்ற வழமையான ஆணாதிக்கச் சிந்தனையின் பிரதான கூறை எடுத்து, கதை நடக்கும் காலத்தின் அரசியல் சூழலை மறந்து, ஜனரஞ்சக பத்திரிகைகளில் தொடர்கதையாக வரும் கதைகளின் ஆழத்தைத் தாண்டிவிடாமல் எழுதப்பட்ட ஒன்றுக்கு, பின்நவீன புனைகதைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெயரான பிக்ஷன் என்பதையும், நவீன இலக்கியத்தின் முக்கியப் பேசுபொருளான நாவல் என்றும் கூறி அச்சிட்டு விடுவது அவ்வளவு பொருத்தமானதல்ல. இதைச் சில இலக்கியக் குஞ்சுகள் துாக்கிப்பிடித்து நிற்பது தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய அவல நிலையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

உங்களுக்குச் சில கேள்விகள் எழக்கூடும். பின்நவீன பிக்ஷன்களிலும், நவீன இலக்கியத்தில் நாவல் எனப் பயன்படும் சில அம்சங்களும் இந்த ‘இச்சா’ பிரதியில் காணப்படுகிறதுதானே என நீங்கள் நினைக்கக் கூடும். அப்படித் தென்படும் சிங்கள மற்றும் தமிழ்க் கதைகள் இன்ரடெக்சுவாலிட்டியாக வருவதும், சில சொலவடைகளும், பாடல்களும் இணைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கலாம். அதில் இன்ரடெக்சுவாலிட்டியாக (Intertextuality) வரும், மந்திரி குமாரியின் கதை, இச்சாவின் இறுதியில் மீண்டும் வந்து நின்று தனது வகிபாகத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது குறித்தும் சிறு அலசலை இங்குச் செய்யலாம்.

மந்திரிகுமாரியின் கதை இதுதான். கண்டி அரசனின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்த ஒருவன் (எஹலேபொல), அரசுக்கு எதிராக நடந்துகொள்கிறான். அதனால், அந்தக் குடும்பத்தையே கண்டி அரசன் கொன்றொழிக்கிறான். அதில், பத்து மாதமே ஆன குழந்தையை உரலில் இட்டு இடித்து, அந்தக் குழந்தையின் தாயே கொல்ல வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கிறான். தப்பிக்க வழியேதுமற்ற நிலையில் அந்தத் தாய் கட்டளையை நிறைவேற்றுகிறாள். இச்சா நாவலின் இறுதியில், ஆலா தனது குழந்தையோடு சுடுபட்டு இறந்துவிடுகிறாள்.

குழந்தையைக் கொல்ல வேண்டும் என யாரும் கட்டளை இடாத சூழலில், குழந்தை தந்தையோடு அல்லது அந்த நாட்டு அரசின் பாதுகாப்பில் வளரக்கூடிய வாய்ப்பிருந்தும் குழந்தையையும் சேர்த்தே கொல்லப்படக் கூடிய நிலையை ஆலா உருவாக்குகிறாள். இது மந்திரிகுமாரியின் சந்தர்ப்பத்திற்கு நேரெதிரானது. ஆலா ஊர்காவற்படையால் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுத் திருகோணமலைக்குப் போகும்போது கூட, அவளின் அம்மா தனது குழந்தை எங்காவது உயிர் வாழட்டும் என்றே விட்டுவிடுகிறாள் என்பதையும் இந்த நாவல் கதைச் சம்பவமாக முன்வைக்கிறது. ஆனால், ஆலா ஒரு தாயாக மாறியபின் தனது குழந்தை எங்காவது, எப்படியாவது வாழட்டும் என விட்டுவிடவில்லை. மந்திரி குமாரியின் கதைகூட ஆலாவுக்குத் தெரிந்திருக்கிறது. வாழ்வில் எதிர்கொண்ட, அனுபவித்த, அறிந்த சம்பவங்களைக் கொண்டும் ஒரு முடிவை எடுக்குமளவு திறனற்ற பெண்ணாக, சிறு மூளையுள்ளவளாக ஆலா என்ற பெண் மாற்றப்படுகிறாள்.

மாட்சிமையுடைய மரணத்தை எதிர்பார்த்து, இயக்கக் கட்டுப்பாடுகளைக் கூட மீறும் திறனுள்ளவளாக, தற்கொலை வெடிப்பைத் தவிர்க்கும், ஆலா நாவலில் இத்தனை மோசமான பெண்ணாக வளர்த்தெடுக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த இடத்தில்தான் பின்நவீன பிக்ஷனில் உருவாக்கப்படும் இந்த இன்ரடெக்சுவாலிட்டி என்பது, அந்தக் கருத்தியலைப் புரிந்துகொள்ளாதவர்களால் எப்படி எல்லாம் மோசமாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதுபோல், ஏசுவின் இறுதி உணவு போன்ற கதைகள் இன்ரடெக்சுவாலிட்டியாக வளரவில்லை. சாதாரணமான சம்பவமாகவே சுருங்கி விடுகிறது.

அரச பாசிசம் மற்றும் புலிப் பாசிசம் போன்றவற்றின் பின்னணியில் இருந்து உருப்பெற்று, அதன் கதையாடல்களைத் தடங்காட்டியபடி, நாவலின் கதைக்களம் விசாரணைக்குட்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஆலா என்ற கதாபாத்திரத்தை ஓர் அப்பாவித்தனமான பெண்ணாக உருவாக்குவதென்பது விமர்சனத்துக்குரியது. தனிநபர்களின் வரலாற்றையே ஒரு காலகட்டத்தின் வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வந்த நவீன காலத்து எழுத்துக்கள் இன்று பரிசீலனைக்குட்பட்ட காலத்தில் இலக்கிய மற்றும் சிந்தனைச் செயற்பாட்டாளராக இருப்பதின் விளைவுகள் பிரதிகளில் வெளிப்பட வேண்டியது முக்கியமான ஒன்று.

ஹிட்லரின் இலட்சக்கணக்கான கொலைகளோ, ஸ்டாலினின் சரித்திரமே ரஷ்யாவின் சரித்திரமாகவோ, அல்லது அந்த நாட்டு மக்களின் சரித்திரமாகவோ எழுதப்பட முடியாது. இவர்களின் கொலைகள் அனைத்துமே அவர்களின் தனிச்சொத்து அல்ல. இவர்களின் பாசிசம், ஹிட்லர், ஸ்டாலின் என்ற தனிநபர்களின் பாசிசம் அல்ல. அந்த மக்கள் கூட்டத்தின் பாசிசமும் கூட. எனவே இலங்கை அரசினதும், புலிகள் இயக்கத்தினதும் தலைவர்களின் பாசிசமல்ல. இந்த நிறுவனங்களை ஆதரித்து ஊக்குவித்த மக்கள் கூட்டத்தின் பாசிசம். ஒரு மக்கள் கூட்டத்தின் பாசிசத்தில், அந்தப் பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் இயக்கத்தின் உறுப்பினர், ஓர் அப்பாவியாகத் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டுப் புனைவாக்கப்பட முடியாத நிலையிலேயே இருக்கிறார். ஆக, இந்த மக்கள் கூட்டத்தின் பாசிச ஆதரவையும், பங்களிப்புக்களையும் உள்ளடக்கி, அதைத் தலைமையேற்று வழிநடாத்திச் செல்லும் புலிகளின் இயக்க உறுப்பினர் என்றவகையில் ஒருபோதும் அப்பாவியாக மாறிவிட முடியாத நிலையில் உள்ளவர் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இச்சா நாவலில் உள்ள கதைப்படி, ஆலா புலிகள் இயக்கத்திற் சேருவதற்கான தருணமாக முதியவரொருவர் ஆலாவை பாலியல் தொந்தரவு செய்த நேரத்தில் தற்செயலாகக் கையால் தட்டுப்பட்டுக் கிணற்றில் விழுகிறார். பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் கொலைத் தண்டனை. அந்தத் தண்டனையை வழங்கியவர்களுக்கோ, அல்லது இன்னும் புலியாக மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆலாவுக்கோ அது பற்றி எந்தக் குற்ற உணர்வையும் எழுப்பவில்லை. ஆனால், ஆலா அரச இராணுவத்தால் பிடிபட்டு விசாரிக்கப்படும்போது சித்திரவதை செய்வது மனித உரிமைக்கும், சட்டத்திற்கும் விரோதமானது எனத் தனது கருத்தை முன்வைக்காமலில்லை. அதேநேரம், பெரும் பாசிச அரச நிறுவனம் கூட, ஒரு தற்கொலைப் போராளியை விசாரணைகளின் பின்பு கூடக் கொன்றுவிடவில்லை என்றும், அவருக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாகவும் கதைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றன. புலிகள் இயக்கத்தைவிட அரச பாசிசம் ஒப்பீட்டளவில் குறைவானது. நல்லது. கடுமை குறைந்தது என்ற தொனி இதனூடே மேலெழுந்து வருகிறது.

இலட்சியமாகக் கருதப்படும் ஒரு விசயம், உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்திப் பாசிசச் செயற்பாடுகளைக் கூட இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான போராட்ட அறம் சார்ந்த வழிமுறையாகப் போராளிகளிடமும், இராணுவச் சிப்பாய்களிடமும், அவை சார்புள்ள மக்கள் கூட்டத்திடமும் நிலைகொண்டு விடுகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு மாற்றிவிடுகிறது. தமது இலட்சியங்களுக்கு எதிரானவர்களைக் கொன்று குவிப்பது அறம் என்றே அரசு, மற்றும் புலிகள் இயக்கம் இரண்டிலும் பொது உளவியலாகவும், புனிதப் போராட்டமாகவும் மாற்றமடைந்து விடுகிறது. எனவே, கருத்தியல் ரீதியில் புரிதலுள்ள, தேர்ச்சியுள்ள ஒரு புனைவு எழுத்தாளர் இந்த அடிப்படையைத் தனது புனைவு உத்திகளில் எப்போதும் கவனப்படுத்திய படியே கதையை வளர்த்துச் செல்வார். இப்படிச் செய்பவரே, இந்தக் காலத்திற்குரிய எழுத்தாளராகவும் ஆகிவிடுவார். ஆனால், இது ஷோபா சக்தியிடம் நிகழவில்லை. பாசிச இராணுவ நிறுவனங்களான அரசும், புலிகளும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அதேநேரம், புலிகள் இயக்கத்தின் பாசிச வெளிப்பாட்டின் திரட்சியான பெரு உருவம் நீக்கப்பட்டு, ஓர் அப்பாவிச் சிறுமியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகச் சம்பவமாக மாற்றம் செய்யப்படுகிறது. தனது “தற்கொலைப் போராளி” என்ற அரசியல் கதையாடலின் பின்னுள்ள “அரசியல்“ நீக்கம் செய்யப்பட்ட ஓர் அபலையின் வாழ்வு பற்றிய சம்பவங்களாக நாவலின் கதைச் சம்பவங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

அரசு மற்றும் புலிகள் என்ற பாசிச இராணுவ நிறுவனங்களின் மக்களைக் கொன்று குவிக்கும், அதனுாடாகத் தமது இலட்சியத்தை அடையும், வழிமுறைகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் என்பதையும், அதை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்தின் ஒரு தன்னிலைதான் ஆலா என்ற கதாபாத்திரமும் என்பது மேலெழா வண்ணம் மறைக்கப்படுகிறது.

இப்படி ஆழமான ஒரு கோணத்தை ஷோபா சக்தி தனது நாவலில் முன்வைக்கத் தவறிவிடுகிறார் என்பது விமர்சனமல்ல. அதை அவர் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். ஈழத்துப் போராட்ட இலக்கியங்கள் ஏன் பெரும் இலக்கியங்களாக வளரவில்லை என்றால், இப்படி ஆழமான பார்வைகள் அற்றவைகளாக அவை இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். எனது இனம், எனது இயக்கம், எனது மொழி என இலட்சிய வரையறைகளை உருவாக்கி, எனதல்லாத மற்றமைகள் கொல்லப்படலாம், அழிக்கப்படலாம், வெறுக்கப்படலாம் என்ற நிலைக்கு உருமாறி, ஏன் நாமே அவற்றைச் செய்வது அறம்தானே என்ற பெரும் லட்சியமாக மாறிப்போவதால், பாசிசமாக நிலைபெற்றுவிடும் சமூகச் செயற்பாட்டைத் துல்லியமாகக் கவனிக்கும் பிரதிகள் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

வெறுமனே தனது இனம், மொழி, தனது இயக்கம் என்ற கோணத்தில் மாத்திரமே அக்கறை கொண்டு அங்கே உருவான பாசிச வெளிப்பாடுகளை மறைத்தொதுக்கும், இலக்கியப் பிரதிகளே மலிந்து கிடக்கின்றன. கதை இயங்கும் சூழலையும், காலத்தையும் அதன் அரசியல், சமூகவியல் அம்சங்களையும் பன்மையான கண்ணோட்டத்தில் முன்வைக்கும் பிரதிகள் இல்லை. அதை எழுதும் அளவு கருத்தியல் சார் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்களும் இல்லாது போய்விட்டனர். வெறுமனே கதை சொல்லத் தெரிந்தவர்கள்தான் அதிகம். அதில் ஷோபா சக்தி திறமையான ஒரு கதை சொல்லி.

சுருக்கமாக ஏதாவது சொல்வதெனில், ஷோபா சக்தி நாவல்களையோ , இலக்கியப் பிரதிகளையோ வாசிப்பதைவிட அதிகம் “தெலுங்குப் படங்களை” பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். இது அவரின் இலக்கியச் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

குறிச்சொற்கள்

மேல் செல்