கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

‘ழ என்ற பாதையில் நடப்பவன்’- பேசப்பட்டதும் பேசப்படவேண்டியதும்

ஞா.தியாகராஜன்

பகிரு

தனது வரம்பென ஏதாவது ஒன்று சொல்லப்படும் போது அதை முதலில் மீறி தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொள்வது இலக்கியத்திற்கு மட்டுமே உரிய ஒன்று. இந்த சுதந்திரத்தை தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொள்வதில் மற்ற வடிவங்களை விட  கவிதை முதன்மை வகிக்கிறது. அதற்கேற்றாற் போல் தமிழில் கவிதை இயற்றும் படைப்பாளர்களின் வீரியம் சமகால பிறமொழி இலக்கியங்களுக்கு சளைத்தது அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து கவிதை அதன் முகத்தை புதுப்பித்துக்கொள்ளும். இலக்கியத்தின் அயராத எதிர்ப்புகுணம் வெளிச்சத்திற்கு அப்பால் இயங்கக்கூடிய படைப்பாளர்களிடம் தொடர்ச்சியாக வருவது மாறாத மரபைப் போன்றே உள்ளது. இலக்கியத்தின் நித்திய மதிப்பாக ஏதாவது உயர்த்தப்படும் போதெல்லாம் அது யாரோ ஒருவர் வழியாக உடைக்கப்பட்டிருக்கிறது.

பலதரப்பட்ட அரசியல் தளங்களும் மையமற்று சிதறிய பின்னர் மனிதர்களின் கூட்டு மனப்பான்மை என்பதற்கு எந்த கொடிக்காலும் இல்லாது போய்விட்டது.  இதன் பின்னர் ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்டவன் என்பதை உணர்வதே அடுத்த நூற்றாண்டின் நகர்வாக இருக்கும் பட்சத்தில் இதனை சரியாக பிரதிபலிக்கும் கவிதைகள் தமிழில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப வாசகனாக எனக்கு விஷ்ணுவின் கவிதைகளை பரிச்சயம் செய்துகொள்வதில் தடுமாற்றம் இருந்தது. இன்றும் இருக்கிறதென்றாலும் அது ஓரளவிற்கு சமன்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு முதலில் முந்தைய படைப்பாளர்களை செரிக்க வேண்டியிருந்தது. இதன் முதல் கவிதை ‘நூதனக்கிறுக்கனை’ தனிப்பட்ட முறையில் இதன் ஆசிரியருக்கு பிடித்திருப்பதாகவே தோன்றுகிறது. காலகிரமப்படி தொகுக்கப்பட்டிருக்கும் கவிதைகளாகவே ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ தொகுப்பு அமைந்திருக்குமென யூகிக்கிறேன். முதலில் இதை அணுகும் போது கவிதைகள் குறித்தான கவித்துவ வாசிப்பால் ஒவ்வாமை நிறைந்த ஒன்றாகவே பழக நேர்ந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் சமகால படைப்பின் அடையாளமாக என் முன்னால் நிறுத்தப்பட்ட விஷ்ணுவை புறந்தள்ளிவிட்டு மேலே செல்ல முடியவில்லை. முதலில் எனக்கு விஷ்ணுவை வாசிப்பதற்கான திறப்பு ‘ஜூம் வைத்தல்’ கவிதையில் கிடைத்தது. அதிலிருக்கும் பூடகத்தைப் பயில்வதன் வாயிலாகதான் விஷ்ணுவை வாசிக்கும் பக்குவத்திற்கு தயார்ப் படுத்திக்கொண்டேன். அதற்கு ஊடகத்துறை சார்ந்த அனுபவம் தேவைப்பட்டது. இந்த கவிதை எழுதப்பட்ட காலக்கட்டத்திற்கும் என்னுடைய இந்த அனுபவத்திற்கும் சில மாதங்கள் இடைவெளி இருந்திருக்கலாம். பிறகுதான் ‘ஜூம் வைத்தலின்’ வழியாக கிட்டத்தில் அது காட்சிப்படுத்தியிருப்பது எதுவென புரிந்துகொண்டேன். ஆனால் என்னுடைய புதிர்கள் அவிழ்ந்ததும் இறுதியில் திருடனை வாழ்த்தும் அந்த தாயோடு அதன் பூதாகரப்படுத்துதல் நின்றுவிட்டதாகதான் தோன்றியது. என்றாலும் காட்சி ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும் சிறுமைக்குறித்த விளைவுகளுடன் அடையாளப்படுத்திக்கொள்ள என்னால் வேறு கவிதைகளை நினைவுகூற முடியவில்லை. நுகர்விய பெருக்கத்துக்குப் பிறகு கவிதைகளின் புழங்குபொருளாக ‘ஊடகவெளி’யின் தாக்கம் அங்கங்கே காணக்கிடைத்தாலும் அவை இந்த லென்ஸை பயன்படுத்தவில்லை என்பதில்தான் விஷ்ணு மேலே வருவதாக தோன்றுகிறது.

பிறகு ஆழ்ந்து சொறிதல் என்னும் அனுபவத்தில் திளைப்பவராக இருப்பின் அதற்காகவும் ஒரு கவிதை இருக்கிறது. இதற்கெல்லாம் வரைவிலக்கணம் எழுத முடியுமா என்பதில் தான் இந்த தொகுப்பு தனது வெற்றியை புதைத்து வைத்திருப்பதாகப் படுகிறது. சொறிதலை அனுபவிக்கும் ஒரு சிறுபிள்ளை மனதின் விளையாட்டை கவிதையாக்குவதன் மூலம் கவிதையின் பிரமாண்டம் தீடீரென மறைகிறது. அந்த சொறிதலில் தாய்மொழியைக் கேட்க நிச்சயம் ஒரு கவிதை நுகர்வாளன் பழகியிருக்க மாட்டான். ஆனால் அங்கேதான் கவிதையின் சுதந்திரம் ஸ்திரமாக தன்னை பறைசாற்றிக்கொள்கிறது. விவஸ்தை கெட்ட நாணயங்களில் ஆபாசம் உணர்வே மேலிடுவதாக கடலூர் சீனு எழுதியிருந்ததைப் படித்தபோது உண்மையோ என்று கூட தோன்றியது. அது உண்மையாவே இருந்தால் கூட என்ன பிரச்னை. கவிதையின் பேறுநிலைக்கான உணர்வுகளுடன்தான் மனித மனம் இயங்குகிறதா என்ற கேள்வியுடன் இதைப்பார்த்தால் இதில் ஆபாசம் எங்கு வருகிறது. அந்த ஆபாசம் கலையாக அதில் உருமாறியிருக்கிறதா என்பதுடனும் இந்தச் சிக்கல் தொடரும். ஆனால் அந்த ஆபாசம் என்னளவில் ஒரு விரசத்தை எப்படி உடனடியாக தவிர்ப்பேனோ அதை சரியாக படம்பிடித்திருக்கிறது. அது ஆபாசமாக இருந்தாலும் வலிந்து திணிக்கப்பட்ட ஆபாசமில்லை என்பதுதான் அதில் பார்க்கப்பட வேண்டியது.  

உண்மையில் நம்முடைய இந்த கறாரான மனநிலைக்கு எதிராகதான் இந்த தொகுப்பு பகடிப்பதாக அமைகிறது. ‘ஒற்றுப்பிழை தீர்ப்புகள்’ என்று இத்தகைய பார்வைக்கு ஒரு சரியான பதிலடி இந்த தொகுப்பிலேயே இருக்கிறது.

‘ஒளிந்துகொள்வதற்கு வரிகளும்

வசதியானவையில்லைதானே..’

என்ற வரிகள் மேற்படி கூற்றுரைப்பவரின் சித்திரத்தைக் காட்டுகிறது.

‘இப்போதெல்லாம்

சில வரிகளைக்கூட

தடைசெய்துவிடுகிறார்களாம்’

என்னும் போது இதன் எள்ளல் தொனி தனது பணியை சிறப்பாகச்செய்கிறது. 

இந்தத் தொகுப்பை அணுகுவதற்கான சரியான சாவி இதன் முதல் கவிதைதான் தலையனையுறைக்குள் மாடியை திணித்துக்கொண்டிருக்கும் ஒரு நூதனக் கிறுக்கனிடம் சராசரியான எந்த வரையறைகளை எதிர்பார்க்க முடியும். இப்படி பலவாறாக வாசிக்கும்போது தான் ஒரு தொகுதியினை மதிப்பிட முடியும். அதற்கு தயாராயில்லாத எவரொருவருக்கும் இந்த தொகுப்பு ஒருவித முகசுழிப்பைக் கொடுப்பது தொகுப்பின் பிழையாக இருக்க முடியாது. இதில் தெரிவது நமது முகமூடிகள் அல்லது அசல் முகங்கள். ‘வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்குதல்’ என்னும் கவிதையில் இருப்பது ஒரு அசல் முகத்தின் அரிதாரம்தான். உரையாடல்களில் நிகழும் மேதமைத் தனமான முகப் பூச்சுகளை அங்கேங்கே காண முடிகிறது. நேரடியான அனுபவங்களின் வாயிலாக எழுதப்படும் கவிதைகள் எப்போதும் அதன் சரியான கனத்துடன் வாசகனுக்கு கடத்தப்படும்.

இப்போது வரையுமே கூட வாசிப்பில் அதிக கனத்தை கடத்தக் கூடிய ஒரே இலக்கிய வடிவம் கவிதை மட்டும்தான். கவிதை அப்படிதான் வாசிப்பிற்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்புடன் வாசிப்பனுபவத்தில் சிறந்த ஒருத்தர் ஒட்டாமல் போனாலும் அதனை குறையாகக் கூற முடியாது. ஏனெனில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்ட எந்த விதத்திலும் தன்னுடைய வாழ்வாதராத்திற்கு போராட தேவையற்ற ஒருவனின் குரல் தான் இவையனைத்தையும் பேசுகிறது. உண்மையில் இந்த தொகுப்பில் இருப்பவனிடம் ஒரு விளையாட்டுத்தனம் சற்று மேலோங்கி இருக்கிறது. ‘எதற்காக எழுதுகிறீர்கள்’ என்ற விகடன் பத்திரிக்கையின் கேள்விக்கு இதன் ஆசிரியர் அளித்த பதிலிலேயே இதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ளலாம். இங்கே எங்காவது ஒரு உண்மையான கண்ணீரைக் காண முடியுமா என்றால் ஒரு நூதனக் கிறுக்கனிடம் அந்த கேள்விக்கான வழியேயில்லை. ஆனால் என்னதான் மறைத்தாலும் இந்த பழமை நமக்கே தெரியாமல் தொடர்ந்து வருவதை நிராகரிக்க முடியாது. இந்த தொகுப்பில் அப்படியான ஒரு கவிதைதான் ‘புகைத்தூண்கள்’. மரபுவழி நடத்தப்பட்ட மனதின் பண்பாட்டமைப்புடன் தன்னை பிணைத்துக்கொண்டிருக்கும் ஒரே கவிதை இதுவாகதான் இருக்குமென நினைக்கிறேன். இறந்த மனிதனின் சுபாவத்தை காண்பனவற்றுடன் ஒப்புமைக்கூறி அதை குறியீடாக மாற்றும் ஒரு கலாச்சார மனம் இதில் மட்டும்தான் தொழிற்படுகிறது. மற்ற கவிதைகளுடன் ஒப்பீடுகையில் காலத்தால் சற்று முந்தியதாக தொனிக்கும் கவிதை இது. 

இந்த தொகுப்புக்கு முன்பே விஷ்ணுவை அடையாளப் படுத்திய ஒரு கவிதை ‘சாவிகள்’. எனது போதாமையின் காரணமாக இந்த கவிதையுடன் கூட கொஞ்ச காலம் போராடி வந்தேன். ஆனால் அதன் உள்ளர்த்தம் விளங்கியதும் தமிழ் கவிதைப் பரப்பு எவ்வளவு தூரம் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது என்பது தொடர்ந்து அதை அசைபோடும் போது விளங்கியது. வெறும் சமத்காரமான சொல்லாடல் என்பதன் மூலம் இதனை எளிமையாக கடக்க நினைப்பவர்கள் தங்களை கவிதையுணர்வுக்கு திறந்து வைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

‘நனைந்த ஆடைகளை மழை நனைப்பதில்லை’ கவிதையில் தலைப்பிலேயே தேவதச்சனின் சாயல் இருப்பது உண்மைதான். இந்த தேவதச்சன் சாயல்தான் ‘ழ என்ற பாதை நடப்பவன்’ எதிர்கொண்ட அதிகப்படியான விமர்சனமாக இருக்கும். சில இடங்களில் இதனை உணர நேர்ந்தாலும் இதை மட்டுமே காரணமாகக்கொண்டு ஒரு படைப்பு முயற்சியை முதல் தொகுப்பிலேயே எளிதாகக் கடந்துபோக நினைப்பது ஆரோக்யமான படைப்புச்சூழலுக்கு எதிராகவே அமையும். இந்த தொனிதான் கடலூர் சீனுவின் விமர்சனத்தில் இருப்பது. ஆனால் அதுதான் படைப்பாளர்களின் எண்பதுகளுக்கு(முன்னுமிருக்கலாம்) பின்னான மனநிலையென இலக்கியச் சர்ச்சைகளை நினைக்கும்போது தோன்றுகிறது. ஆனால் சீனுவின் ஒரே ஒரு வாதத்தை விஷ்ணு பரிசீலனை செய்வது எதிர்வரும் தொகுப்புகளில் கவிதைகளை இன்னும் செம்மைப் படுத்திக்கொள்ள உதவும். கவிதைகளில் உணர்வைக் கடத்தாமல் உள்ளடக்கத்தை கடத்துதல் என்பதுதான் அது. ‘வீசியெறிதல்’,தோழியின் பருவ வயது புகைப்படம் பார்த்தல்’ போன்ற இன்னும் சில கவிதைகளில் இது உறுதிப்படுகின்றன. நேரடியான அனுபவம் சார்ந்த கவிதைகளில் கவிதைக்கான அம்சங்கள் காணப்படுகின்றன என்றுதான் இதனை குவித்துப்பார்க்கும்போது புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

   ஆனால் ஒன்றை வெளிப்படையாக கூறப்போனால் இந்த தொகுப்பில் முன்னிலை, படர்க்கை சார்ந்த விஷயங்களுக்கு மதிப்பில்லை என்றும் கூறலாம். ‘தன்மை’க்கே முழு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் கவிதைகள் இவை. இதில் அங்கங்கே தோன்றும் புறவிஷயங்களும் ‘நான்’ என்ற மையத்திலிருந்தே எதையும் விவரிக்க முயல்கின்றன. ஒரு சமுதாய மதிப்பீடாக இதனை நோக்க வேண்டுமென்றால் இந்த மனநிலையை பொதுவான கருதுகோளாக எடுக்கவேண்டும். ‘நூதனக் கிறுக்கன்’ என்பதை பாவனை கிறுக்கன் என்று அர்த்தப்படுத்துவதாக இது முடியும். இது ஒரு புறமிருக்க ஒரு பரந்துபட்ட பார்வையாக தொடர்ந்து சிற்றிதழ் சார்ந்த கவிதை இயக்கத்தை அவதானிக்கும்போது ழ என்ற பாதையில் நடக்க அடுத்தடுத்து சிலபேர் முயல்வார்கள் என தோன்றுகிறது. ஒருவிதத்தில் நரன், வெய்யில், கதிர்பாரதி என்று அரசியல் கவிதைகளின் அலைக்குப் பின்னால் கவிதை முயற்சியை மேற்கொள்பவர்களுக்கான மாற்றுப்பாதையாக விஷ்ணுவின் இந்த தொகுப்பு அமைகிறது. மேலும் மேலும் கவிதைப் புலத்தில் புழங்கி சலிப்பவர்களின் சுதந்திர மனநிலைக்கு புதிய திறவுகோல்களை தருவதாக ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ இருக்குமென நம்பலாம். இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் வகையில் ஒரு வெற்றியாக இதனைக்கொண்டாலும் அது படைப்புச் சார்ந்த ஆரோக்கியமான வெற்றியா என்பதற்கான விடை கொஞ்சம் நெருடல் அளிப்பதாகவே இருக்கிறது.  இதனை மேலும் நீட்டிக்கொண்டு போக தொகுப்பில் சமாச்சாரங்கள் இருக்கிறதென்றாலும் தொழில் தேர்ந்த வேறு எவரேனும் அவிழ்த்துக்கொட்டினால் சிறப்பாக இருக்கும்.

குறிச்சொற்கள்

மேல் செல்