கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

யாத் வஷேம்: ஹிட்லர்களுக்கு வதையும் இல்லை; மரணமும் இல்லை!

ஷாராஜ்

பகிரு

யாத் வஷேம் (நினைவுத் தலம் - ஹீப்ரு), கன்னட நாவலாசிரியை நேமிசந்த்ராவின், சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். புனைகதை என்று அட்டைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தாலும், இது ஆவணப் புனைவு வகைதான். சிறுமியாக இருந்தபோது ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பிலிருந்து தப்பி, தந்தையுடன் இந்தியாவில் அடைக்கலமாகி, இந்துவை மணந்து இந்துவாக வாழும் ஒரு பெண், தன் முதுமைக் காலத்தில், நாஜிகளிடம் சிக்கியிருந்த தாய் மற்றும் சகோதர - சகோதரிகளைக் குறித்த விபரம் அறிய தாய்நாடு சென்று வருவதினூடே, இனம், வரலாறு, போர்கள், மதங்கள், கடவுள்கள், மனிதம் உள்ளிட்டவை தொடர்பான, நூற்றுக் கணக்கான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுதான் இந்த நாவலின் மையக் கதை. இந்தக் கதை மைய கதாபாத்திரம் அனிதா (எ) ஹ்யானா மற்றும் அவளின் காதல் கணவர் விவேக் மூலம் மாறிமாறிச் சொல்லப்படுகிறது.

உலகை உலுக்கிய சர்வாதிகார பயங்கரவாதம் என்றாலும், இனவெறியாட்டக் கூட்டப் படுகொலைகள் என்றாலும் உடனடியாக நினைவுக்கு வரும் முதல் பெயர் ஹிட்லர். அதே போல் ஹிட்லர் என்றதுமே நாஜி வதை முகாம், ஆஷ்விட்ஸ், விஷ வாயுக் கூட்டப் படுகொலைகள் ஆகியவைதாம் நினைவுக்கு வரும். மகா கொடூரமான இந்த இனவெறிப் பெருங்கூட்டப் படுகொலைகள் குறித்த விபரங்களை உலகம் விரைவிலேயே அறிந்துவிட்டது. அது தொடர்பாக உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்களும், பல நாவல்களும் வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் நாவல்கள் எதையும் வாசிக்க எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் Life is beautiful, The boy in the striped pijamas, Downfall, Schindler's List ஆகிய திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் முந்தைய இரு படங்களும் வாழ்வில் என்றென்றும் மறக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்துபவை. மூன்றாவது படம் ஹிட்லரை நாயகனாகச் சித்தரிக்கக் கூடியது.

ஹிட்லரை கொடூர சர்வாதிகாரியாக உலகின் பெரும்பான்மையர் வெறுக்கும் நிலையில், அவரை வீர நாயகனாகப் போற்றவும் மக்கள் இருந்தனர், இன்னமும் இருக்கின்றனர், இனவாதிகளுக்கு அவர் என்றும் ஆதர்ஷமாகவும் இருப்பார் என்பது சிந்திக்கத் தக்கது.

ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வெறி, அவரது தனிப்பட்ட கொள்கை வெறியாலோ, கொலை வெறியாலோ மட்டும் உண்டானதல்ல. ஒட்டுமொத்த நாடும் அதற்கு ஆதரவாக இருந்தது. அவர்களுக்குள் இருந்த வெறியை அவர் தூண்டினார், யூத இன அழித்தொழிப்புக்குத் தலைமை தாங்கினார். 60 லட்சம் (75 லட்சம் என்றும் சொல்லப்படுகிறது) யூதர்களைக் கொன்று குவித்த அந்த அதி பயங்கரவாதிக்கு நாட்டு மக்கள் துணை நின்றதுதான் பெரிதினும் பெருங்கொடுமை. தொடர்ந்து கூட்டப் படுகொலைகள். 60 - 70 லட்சம் மக்கள் கொல்லப்படுதல். என்ன விதமான மனிதர்கள் இவர்கள்?

போர் தொடர்பாகவும், இன ஆதிக்கம் மற்றும் இனவெறி தொடர்பாகவும் சில உலகத் திரைப்படங்களைப் பார்த்த அனுபவமும், சில உலக நாவல்கள் மற்றும் அபுனைவு நூல்களை வாசித்த அனுபவமும் எனக்கு உண்டு. கலை ரீதியாகச் செவ்வியல் அந்தஸ்த்தைப் பெறும் இத் திரைப்படங்களைப் பார்ப்பதும், நாவல்களை வாசிப்பதும் உவப்பானதல்ல. அவை மனதை மிகவும் பாதிக்கக் கூடியவை, சில சமயம் நமது உணர்வுச் சமநிலையை இழக்கச் செய்து, நீண்ட நாட்களுக்குத் தொந்தரவுபடுத்த கூடியவை. பயங்கரவாதம், அராஜகம், பல வித வன்கொடுமைகள், துயரம், அவலம் ஆகியவற்றையே பார்த்துப் பார்த்தும், நினைவுகூர்ந்தும், துக்கமே எஞ்சும். அதுவும் நாஜிகள் குறித்த நாவல் என்றால் வதை முகாம் குறித்த எண்ணமே நம்மை வதைக்கத் தொடங்கிவிடும். யாத் வஷேம் 358 பக்க கனமான நாவல். இதில் வதைப் படலங்களும் அதிக அளவுக்கு இருக்குமோ என்ற தயக்கம், இதுவரை அறியாததையா சொல்லியிருக்கப்போகிறார் என்ற சுய தைரியமூட்டல் ஆகியவற்றோடுதான் நாவலை வாசித்தேன். அந்த அளவுக்கு வதைப்படலங்கள் இடம்பெறவில்லை என்பது ஆறுதல்.

விமர்சனத்துக்காக இந்த நாவல் தரப்பட்டிருந்தாலும், வழக்கமாக எந்தப் படைப்பிலக்கிய நூல்களையும் வாசிப்பது போலவே, முதலில் வாசகன், பிறகு சக படைப்பிலக்கியவாதி, இறுதியாக விமர்சகன் என்ற நிலையிலிருந்தே வாசித்தேன். ஒரு வாசகனாக இந்த நாவலில் உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் ஒன்ற முடிந்தது. சமீபமாக நானும் நாவல்கள் எழுதிக்கொண்டும், நாவல் கலை குறித்துத் தொடர்ந்து கற்றுக்கொண்டும் இருப்பவன் என்ற நிலையில், இந்த நாவலின் எளிய - ஆனால், வலுவான கலை நுட்பங்கள் மகிழ்ச்சியும், வியப்பும் தந்து, கற்கை செய்யவும் வாய்த்தது. இறுதியாக, விமர்சகன் என்ற முறையிலும் இந்த நாவல் குறித்து எனக்கும் பெருமளவு பாராட்டுணர்வே உள்ளது. ஓரிரு இடங்களில் மட்டுமே மாற்றுக் கருத்துகள் உள்ளன. இறுதிப் பகுதியில் சிறு குறையையும் உணர்கிறேன். மற்றபடி இது ஒரு சிறந்த படைப்பு என்பது மட்டுமல்ல; நேமிசந்த்ரா இந்தப் படைப்பாக்கத்தில் உள்ளும் புறமுமாக எதிர்கொள்ள நேர்ந்த சவால்களைத் திறம்படச் சமாளித்திருக்கிறார் என்பது வியக்கத் தக்கதும் கூட.

அதில் முக்கியமாகவும் முதலாவதாகவும் குறிப்பிட வேண்டியது, இந்த நாவலின் கதைக் கரு மற்றும் களம், தேய்வீரியம் (cliche) ஆகிவிடக் கூடிய அபாயம் கொண்டவை என்பதுதான். உலக அரங்கில் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு மற்றும் நாஜி வதை முகாம்கள் ஆகியவை குறித்த திரைப்படங்கள், நாவல்கள் பலவும் ஏற்கனவே வந்திருப்பினும், இந்திய அளவில் அப்படி எதுவும் இதற்கு முன் இருந்திராது எனக் கருதுகிறேன். என்றாலும், இப்போது எந்த நாட்டிலிருந்து இந்த உள்ளடக்கத்தை எடுத்துக்கொண்டாலும், உலகளாவிய அளவில் பல காலமாக அறிந்தவற்றைத் திரும்பக் கூறுவதாகவே ஆகிவிடும். அதனால் வாசகர்களுக்கு அலுப்புத் தட்டும் என்பது மட்டுமன்றி, ஒருவேளை அந்த நாவல் படைப்பளவில் தோற்று விடக்கூடிய அபாயமும் உள்ளது. நேமிசந்த்ரா இதை அறிந்தே அப்படிச் செய்தாரா, அல்லது தற்செயலாக அது அவ்வாறு அமைந்ததா என்று தெரியவில்லை; இந்த அபாயம் இந் நாவலில் மூன்று வகைகளில் தவிர்க்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, நாவலின் முற்பகுதியில் ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பு, நாஜி வதைகள் ஆகியவை குறித்த கூடுதல் விபரங்கள் எதுவும் இடம்பெறாமல், ஹ்யானாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் விவேக் குடும்பம், அவர்களின் ஆதரவு, அரவணைப்பு ஆகியவையே இடம் பெறுகின்றன. (அதை வாசிக்கும்போதே அவளுக்கு எத்தனை அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதும், நாஜி வதை முகாமில் வன்கொடுமைகளுக்கும் அழித்தொழிப்புக்கும் ஆட்பட்டவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்கும் இரங்கலுக்கும் உரியவர்கள் என்பதுமான எண்ணங்கள் நமக்குத் தானாகவே ஏற்படும்). இரண்டாவதாக, நாவலின் மத்திய பகுதியிலேயே நாஜி வதைகள் குறித்த கூடுதல் விபரங்கள் இடம் பெறுகின்றன. எனினும் அவை சுருக்கமாகவே சொல்லப்படுகின்றன - அவை பற்றி உலகம் அறியாதது எதுவும் இல்லை என்பதையும் சொல்லிவிட்டு. இதனாலேயே அது கூடுமானவரை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதிலும், அந்திமத்தில் ஹ்யானா சந்திக்க நேர்கிற அவளது அக்கா ரெபெக்கா, நாஜி வதை முகாமிலிருந்து உயிர் தப்பியவள், பட நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள், உயிர் பிழைத்திருத்தலுக்காக அவற்றைத் தாங்கிக்கொள்ளும் அவலம், அந்தச் சூழலில் அவள் கொண்டிருந்த - நியாயமான - சுயநலம், பிறகு அது குறித்து அவள் கொள்ளும் குற்ற உணர்வு உட்பட அனைத்தும் உணர்வுபூர்வமாக அவளாலேயே சொல்லப்படுகின்றன. ஹ்யானாவுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் சுக வாழ்வுக்கு மாறாக, அவளது உடன் பிறந்த சகோதரிக்கு வன்கொடுமை வாழ்வு என்கிற முரணும், வதை முகாம் குறித்த க்ளிஷேத் தன்மையை மட்டுப்படுத்துகிறது.

மூன்றாவதாக, தொடக்கம் முதலே ஹிட்லரையும், அவரது இனவெறி மற்றும் அழித்தொழிப்புகளையும், அவை குறித்த ஒற்றை நோக்கில் மட்டும் நேமிசந்த்ரா பார்ப்பதில்லை. ஹிட்லரை அனைத்து சர்வாதிகாரக் கொடுங்கோலர்களின் குறியீடாகவும், பயங்கரவாதத்தின் பிரதிநிதியாகவுமே பார்க்கிறார். ஹிட்லர் எல்லா நாடுகளிலும் மீண்டும் மீண்டும் பிறக்கிறான், அவன் நமக்குள்ளும் இருக்கிறான், அவனுக்கு அழிவு இல்லை என்பதே நேமிசந்த்ரா தொடர்ந்து முன்வைக்கும் நாவலின் மையச் செய்தி. முக்கியமாக இதன் காரணமாகவே நாவல் க்ளிஷே தன்மையிலிருந்து தப்பிப்பதோடு, தள நகர்வு என்பதையும் சாத்தியமாக்குகிறது.

போர்கள், மதக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், அடிமைத் தளைகள், விடுதலைப் போராட்டங்கள் உள்ளிட்ட யாவும், அதில் சம்மந்தப்படாதவர்களுக்கு வெறும் வரலாற்றுச் செய்திகள். சம்மந்தப்பட்டவர்களுக்கோ, அது கொடுமை, வலி, வதை, துன்பம், துக்கம், அவமானம் உள்ளிட்ட எதிர்மறைகளால் மட்டுமே நிறைந்த அவல வாழ்வு. யாத் வஷேம், வரலாற்றை ஆவணப்படுத்தியும், வாழ்வைக் காட்சிப்படுத்தியும் ஆவணப் புனைவாக வலுப் பெறுகிறது.

சிறுகதை, நாவல் ஆகிய புனைவெழுத்தின் 'தங்க விதி'களில் ஒன்று, 'சொல்லாதீர்கள்; காண்பியுங்கள்' என்பது. முக்கியமான கட்டங்களைக் கதை கூறல் முறையில் அல்லாமல், கதை நிகழ்த்துதல் முறையில் காட்சிப்படுத்துவதே சிறப்பு என்பதே அது. இந்த நாவலிலோ, கதைசொல்லிகளான ஹ்யானா, விவேக் ஆகியோராலும், இவர்களிடம் பேசும் மற்ற சில பாத்திரங்களாலும், கதையும் வரலாற்றுச் செய்திகளும் கட்டுரைத்தன்மையோடு சொல்லப்படுவதே அதிகமாக உள்ளது. எனினும் அது சலிப்பாக இல்லை. கதைத் தன்மை குறைவுபடுகிற உணர்வை மீறி, வரலாற்று ரீதியான அதன் முக்கியத்துவம் நம்மைக் கட்டிப்போடுகிறது என்றே சொல்லலாம். ஆவணப் புனைவின் தன்மை மற்றும் பலம் இதுதான்.

நாவலை வாசிக்கும்போது முக்கிய வரிகளுக்கு அடிக்கோடும், முக்கியப் பத்திகளுக்குப் பக்கவாட்டுக் கோடும் இட்டபடியே சென்றேன். அடுத்தடுத்த பக்கங்களுக்கு இது தொடர்ந்துகொண்டே சென்றது. ஓரிரு பக்கங்களுக்கோ, அதிகபட்சம் ஆறேழு பக்கங்களுக்கோ இந்தக் கோடுகள் இடம்பெறாமல் போகலாம். பிறகு, மீண்டும் இட. வேண்டி வரும். அந்த அளவுக்கு முக்கியமான வரிகள் அதிகம்.

நாவலின் கதையை விரிவாகவோ, முழுதாகவோ சொல்வது விரும்பத் தக்கதல்ல. இன்னும் வாசித்திராத வாசகரின் வாசிப்புச் சுவாரஸ்யத்தை அது மட்டுப்படுத்திவிடும். இதனாலேயே நாவலாசிரியர்களும் அதை விரும்புவதில்லை. எனவேதான், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கதை விவாதத்தின்போது 'ஒன் லைன்' எனக் கதைச் சாராம்சத்தைச் சொல்கிறபடி, நானும் இங்கே ஒற்றை வாக்கியத்தில் கதை மையத்தைச் சொல்லி நகர்ந்துவிட்டேன்.

எனினும் கதைக் களம் குறித்துச் சற்றுக் கூடுதலாக அறியத் தருவதில் தவறில்லை. மேலும், நாவலின் முக்கியத்துவத்தை உணர, அது அவசியமும் கூட.

ஹ்யானாவும் தந்தையும் தஞ்சமடைகிற ப்ரிட்டிஷ் இந்தியாவில் அரசியல், சமூகம், ஜாதி - மத வேற்றுமைகள், மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மாண்புகள் ஆகியவை எப்படி இருந்தன என்பது நாவலின் முற்பகுதியில் விரிவாகவும், கருப்பு - வெள்ளைச் செவ்வியலாகவுமே இடம் பெறுகிறது எனலாம். நாவலின் சத்தான கதைப் பகுதி இது. அதுவும், வேற்று நாட்டிலிருந்து அகதியாக வந்து சேர்ந்தவளும், முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம், சமய நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தவளுமான பதின் வயது சிறுமியான ஹ்யானாவுக்கு, இந்திய மற்றும் இந்து கலாச்சாரம், வாழ்வியல், 33 கோடி கடவுள்கள் ஆகியவை புதிதாகவும் புதிராகவும் இருந்தாலும், ஆயிரக் கணக்கான ஜாதி - மத - இன வேற்றுமைகளுக்கிடையிலும் இந்தியர்களின் ஒற்றுமை, மாற்று மதக் கடவுள்களையும் தம் கடவுள்களுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் இந்துக்களின் பெருந்தன்மை ஆகியவை மதமற்ற மானுடத்தின் சிறப்பையும் சாத்தியத்தையும் உணர்த்துகின்றன. வந்த இரு வருடங்களிலேயே தந்தை இறந்துவிட, அண்டை வீட்டினரான விவேக்கின் குடும்பத்தார் அவளைத் தம் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டு, தங்களுள் ஒருவராகவே வளர்க்கின்றனர். விவேக்கின் பாமரத் தாய் அவளுக்கு அனிதா என்று பெயர் மாற்றி, இந்துப் பெண்ணாக வளர்த்து, விவேக்கிற்கே மணம் முடித்தும் வைக்கிறாள். அவர்களின் பூஜை அறையில் ஹ்யானாவின் கடவுள் படத்தையும் வைத்துக்கொள்ளச் சொல்கிறாள். இந்த மாண்புதான் ஹ்யானாவின் பிற்காலப் பார்வைகளை உருவாக்கும் மையப் புள்ளியாக அமைகிறது எனலாம்.

தனது குடும்பத்தாருக்கு என்ன ஆயிற்று என்பதை அறிவதற்கான ஹ்யானாவின் ஆயுட்கால வேட்கைக்கு, கணவர் பணி ஓய்வு பெற்று, மகனும் கை நிறையச் சம்பாதிக்கிற நிலையிலேயே வாய்ப்பு. நெதர்லாந்து, அமெரிக்கா எனத் தொடரும் அவளின் தேடல் பயணம், யூதர்களின் பூர்வீக நாடான ஜெருசலேமில், அக்காவை சந்தித்து, கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்து நிறைவுறுகிறது. ஆனால், இந்த அனுபவத்தின் விளைவாக அவளுக்குள் ஏற்படும் மாற்றம், தாய்நாடு திரும்பிய பின், இனவாதம், மதவாதம், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடச் செய்கிறது.

இங்கே ஒரு முக்கிய விஷயம். பின்னுரையில் ஆசிரியை எழுதுகிறார்: 'என் கதாநாயகி ஒரு இஸ்ரேல் பெண்ணாக இருந்து யோசிப்பதற்குப் பதிலாக, இந்தியப் பெண்ணாக யோசிக்கிறாளா? அவள் ஒரு யூதளாக யோசிக்கிறாளா, இல்லை, இந்துவாக அவளுடைய நிலைப்பாடு இருக்கிறதா? இந்தக் கேள்வி எழுந்ததும் நாவலை பல மாதங்கள் மூலையில் வைத்துவிட்டேன்.'

இதன் விளைவு யூகிக்கக் கூடியதே! ஆசிரியையின் இத்தகைய படைப்பாக்க அக்கறையும் மதிக்கத் தக்கது.

வரலாறுகள் ரத்தத்தாலும் கண்ணீராலுமே எழுதப்படுகின்றன. நாம் அவற்றை அச்செழுத்துகளில் வாசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தினத்திலும், நம்மைச் சுற்றி வரலாறு உருவாகிக்கொண்டே இருக்கிறது. இன்றைய தினம், நாளைய வரலாறாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

யூத இன அழித்தொழிப்பு குறித்த இந்த நாவலை, வேறு எந்த நாட்டின், எந்த இன / மத அழித்தொழிப்புகளோடும் பொருத்திப் பார்த்துக்கொள்ள இயலும். மதப் போர்கள், மதக் கலவரங்கள், இந்தியாவின் ஜாதி ஆதிக்க வன்கொடுமைகள் ஆகியவற்றையும் இதோடு இணைத்தும் ஒப்பிட்டும் பார்க்கலாம் என்பதோடு, இந்த நாவலை வாசிக்கையில் இவை யாவுமே வாசக மனதில் தாமாகவே கிளறப்படும். ஹிட்லர் சாவதில்லை. அவன் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு உருவங்கள் மற்றும் பெயர்களில் பிறந்துகொண்டே இருக்கிறான். கொடூரக் கொலை வெறியோடும், சித்ரவதை மனநோய்மையோடும். அரசியல் தலைவனாக மட்டும் அல்ல; இன, மத, ஜாதி மற்றும் பிற துறைத் தலைவர்களாகவோ, தோற்றுவிப்பாளர்களாகவோ. அதற்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே நாவல் எழுப்பும் இறுதி மற்றும் அடிப்படைக் கேள்வி.

இந்த நாவல் உருவான விதம் பற்றி, 'கதையைத் தேடி அலைந்த கதை' என்ற தலைப்பில், பின்னுரையாக ஆசிரியை விரிவாக எழுதியுள்ளார். வாசகர்களையும் விமர்சகர்களையும் விட நாவலாசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதி இது.

கே. நல்லதம்பியின் கவனம் மிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு, வாசிப்பை இதமும் சுவையும் கொண்டதாக ஆக்கியுள்ளது. யூதள் என்ற, பொதுப் புழக்கத்தில் இல்லாத பெண்பால் சொல்லைக் கூடப் பயன்படுத்துகிறார்.

எனினும் மொழிபெயர்ப்பில் எனக்குக் குறையாகப் பட்ட இடம், யூதப் பெண்ணான ரெபெக்கா (பக். 237), யூத மொழியில் பேசும்போது, 'மார்கழிக் குளிர்' என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிடுவது. கிழமைகளை மொழிபெயர்ப்பது போல மாதங்களை மொழிபெயர்ப்பது பொருத்தமாகாது. குறிப்பாக, வேறுபட்ட இனம், மதம், நாடுகள், கலாச்சாரங்களில் இவ்வாறு செய்வது தவறாக இருக்கும். தேதிகளிலும், பருவங்களிலும் கூட வித்தியாசம் வரும். பக்கம் 348, நான்காவது வரியில், 'தில்லி, கொச்சின்களில்' என இடம்பெறுகிறது. ஊர்களுக்குப் பன்மை உண்டா? தில்லிகள், கொச்சின்கள், கோயமுத்தூர்கள் என ஊர்களைப் பன்மையில் குறிப்பிட இயலுமா? 'தில்லியிலும் கொச்சினிலும்' என்றோ, 'தில்லி மற்றும் கொச்சினில்' என்றோ குறிப்பிடுவதுதானே இந்த இடத்தில் சரியானது!

வரலாறுகள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மைப்படுத்த உதவக் கூடியவை. அது, நாம் அவற்றிலிருந்து எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. யாத் வஷேம் அதையே உணர்த்தி நிற்கிறது.


விலை:ரூ 399/- பக்கம்:358; எதிர் வெளியீடு 

குறிச்சொற்கள்

மேல் செல்