கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நொய்யல் – கரைகளைக் கடந்து செல்லும் பேரன்பின் பிரவாகம்.

ஜீவன் பென்னி

பகிரு

‘நொய்யல் – நாவல் – தேவிபாரதி – தன்னறம் பப்ளிகேஷன் – ஆகஸ்ட் 22 – விலை- ரூ.800.

   காலத்தை அதன் போக்கில் வரையறுப்பதில், வெறுமனே சமன் செய்து காண்பிப்பதில் தேவிபாரதி அவர்களுக்கு எப்போதும் ஆர்வமிருந்ததில்லை. வரலாற்றாய்வாளர்கள் குவித்திருக்கும் புதைமேடுகளின் புழுதிகளுக்குள் சென்று அதன் ஆழ்மனதில் நிலைபெற்றிருக்கும் காய்ந்த ஒரு வலியின் தடத்தையும், பெரும் வாழ்வையும் தீவிர மொழியில் படைப்புகளாக்கவே அவர் முயல்கின்றார்.

தினசரிகளின் வாசல்களில் சதா முட்டிக்கொண்டிருக்கும் கடந்த காலத்தின் மிச்சங்களில் சொல்வதற்கெனயிருந்திடும் கணக்கற்ற கதைகளையும், படிமங்களையும், அவைகளுடன் இணைந்திருந்த மனிதக்கூட்டங்களின் மென் நரம்புகள் அறுக்கப்பட்டக் கோரத் தருணங்களையுமே தன் கதைகளில் பிரதிபலித்திருக்கிறார்.

வாழ்வின் முடிவற்றத் தன்மையில், ஒரு நொடிப்பொழுதில் புதைக்கப்பட்ட மனிதர்களின் இருளையும், ஒரு திருப்பத்தில் கைவிடப்பட்ட அதன் ஆன்ம நெருக்கத்தையுமே படைப்பின் வாதமாக தொடர்ந்து அவர் முன்னிறுத்திக் காண்பிக்கின்றார்.

ஒரு மனிதன், கதை சொல்லும் போது தன்னுடன் சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஒரு முறை தலைகீழாக்கிக் காண்பிக்கிறான். அதன் எண்ணற்ற சிக்கலான பாதைகளில் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்களைத் திறந்து விடுகிறான். இருட்டடிப்புகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் புதிர்களை அவிழ்த்து மானுடத்தின் குருதிகளை பரவச்செய்கிறான்.

கதைகள் தான் எப்போதும் ஒரு சமூகத்தின் அந்தரங்கமான வாழ்விடங்களை, மறைக்கப்பட்ட உருவங்களை, நிராதரவாக நின்றிடும் எளிய மனிதர்களை, ஆர்வமூட்டும் பரப்பினாலான பிறழ்வுகளின் சாகசங்களை, சமூக முரண்களின் பாதிப்புகளை நெருக்கமாக அழைத்துச் சென்று காண்பிக்கும் உபகரணமாக இருந்திருக்கிறது. தமிழில் தேவிபாரதியின் எழுத்துக்கள் வழியேயான அச்சுவடுகள் மிகவும் நிறைவானது.   

   கடந்த கால மரபின் விழுமியங்களைச் சதா சேகரித்தபடி, தன் கதைகளின் சாராம்சங்களில் அதை தகவமைத்து வைத்திருக்கும் தேவிபாரதியின் எழுத்துக்களின் ஆழங்களில், நிலைகொள்ளமுடியாதவாறு இருந்திடும் ஆழமான உணர்ச்சி மொழியும், படிமமும், மானுடத்தருணங்களுக்கான அர்த்தச்செறிவும், மாய உருவக அனுபமும், பகடியும் தீவிர மனநிலையின் உச்சங்களைக் கொண்டிருப்பவை.

மரபின் நீட்சிகள் என்பவை நிகழ்காலத்தில் உருமாறியிருக்கும் வடிவத்தையும், தன்மையையும், அவலத்தையும், வாதைகளையும் நேரடியாக தன் எழுத்தில் காணத்தருபவர் தேவிபாரதி. சொற்களின் வீரியத்தில் கதை நிகழ்வின் நிலத்தையும், சூழலையும், கதையில் ஊடாடிக்கொண்டிருக்கும் மனித முகங்களையும் அபூர்வமாக மாற்றிக் காண்பித்திடும் லாவகத்தைக் கொண்டிருப்பவை அவரின் புனைவுகள்.

ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் மனநிலையையும், அதன் அழுத்தத்தையும், சிக்கல்களையும் பிரவாகமாக கொண்டுசென்று ஒரு திருப்பத்தில் அதன் எளிய அதிசயங்களைத் திறந்து காண்பிப்பதும், உருவகத்தின் நேரடியான அடையாளச் சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்து காண்பிப்பதும் அவரது இதுவரையிலான நாவல்களான ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ மற்றும் ‘நீர்வழிப் படூஉம்’ ஆகியவற்றில் பிரதானத் தன்மையெனக் கொண்டிருந்தவை.

நொய்யல் ஆற்றின் சிறிய பரப்பும், காய்ந்த தடமும் இந்நாவல்களில் சிலயிடங்களில் வெளிப்பட்டு மறைகின்றன. எளிய மனிதர்களின் மேல் படர்ந்திருக்கும் புழுதிகளைச் முழுவதுமாகத் துடைத்தெறிந்து அம்முகங்களின் எளிமையும், உண்மையுமான வாழ்வியல் குறித்த பேசுபொருளை உள்ளடக்கியவையாக தேவிபாரதியின் எழுத்துக்கள் இருக்கின்றன. சமூகம் சார்ந்த போலியான மதிப்பீடுகளை,

அதன் அடியாழக் கசடுகளை நோக்கி தீர்க்கமான கேள்விகளை, உரையாடல்களை நிகழ்த்துபவையே தேவிபாரதி எழுத்துக்களின் சாரம்சம். கால்நூற்றாண்டு காலமாக எழுதிவந்த இந்’நொய்யல்’ நாவல், அதீத புனைவின் உட்சத்தையும், நாட்டார் வழிபாட்டு தெய்வங்களின் பேரன்பின் வாழ்வியலையும் கொண்டு தீவிர மொழியில் படைக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வின் தீர்ந்திடாத மாற்றங்களுக்கிடையில் ஒரு ஆற்றின் ஆன்மாவான பெண் தெய்வத்தின் ஆழமான, நிறைவான, மாயங்கள் நிறைந்திருக்கும் வாழ்வுகளையும், வீழ்ச்சிகளையும் புனைவாக இதில் விரித்திருக்கிறார். யதார்த்தவாத, நவீன கதைசொல்லல் முறையிலான புனைவுகளிலிருந்து தன் பாதையைத் துண்டித்துக் கொண்டு, அகன்றதும் ஆழமானதுமான வழியில், நாட்டார் மரபின் மானுட புனைவுகளின் சொற்களாக இக்கதைகளை கட்டமைத்திருக்கிறார்.

மாய யதார்த்த / அதீத புனைவின் லாவகத்தை சிக்கல்களின்றி மிக நேர்த்தியாக வடிவமைத்து, வாசகன் நுழைவதற்கான எளிய திறப்புகளை உருவாக்கியிருக்கிறார். வாழ்நாளில் மிகத்தாமதமாக உணர்ந்திடக் கிடைக்கும் வாழ்வின் நிறைவை மிக அருகாமையில் தெளிவாகக் காணத்தந்திருக்கிறது ‘நொய்யல்’.

கற்பனையின் வடிவத்திற்கும், கடந்த கால நிகழ்வுகளின் துரோகங்களுக்கும் அன்றாடத்தின் பிரக்ஞைபூர்வமான நிகழ்வுகளுக்குமானத் தொடர்ச்சிகளைச் சிறுசிறு பிண்ணலில், முடிச்சுகளில், புதிர்களில், உரையாடலின் சுவாரசியமானத் தன்மைகளால் முழுவதுமாக உணர்ந்து கொள்ள வைத்திருக்கிறார்.          

   ‘காரிச்சி’யும் ‘தேவனாத்தா’வும் ஒன்றுபடும் புள்ளியின் வீரியத்திலிருந்தே இக்கதையின் மையப்புள்ளி

தொடங்கி முழுவதுமான கதைநிகழ்வில் நிறைவாகப் பரவிக்கிடக்கின்றன. ‘நொய்யல்’ கரைகளில் சுதந்திரமாகச் சுற்றி வந்தே அந்நிலத்தையும், மனிதர்களையும் அறிந்து கொண்டு வாழ்ந்து முடிந்திருக்கும் அவலட்சணமான! ‘காரிச்சி’யின் பிறப்பும், பேரன்பும், ஞாபகங்களின் வடுக்களும், வலியும் ‘நொய்யலி’ன் தீவிரமான வெள்ளப்பெருக்கை அவள் அனுபவிக்கச்செய்திடும் தருணங்களுமே இக்கதையை அனுபவப்பரப்பின் எல்லைகளைத் தாண்டி அதீத உணர்ச்சிகளுடன் நேரடியாக நிலைகொள்ளச் செய்திருக்கிறது.

வாழ்நிலத்தின் சகலத்திலும் படித்திருக்கும் அவள் தான் அந்நிலத்தின் மக்களுக்கான காவல் தெய்வமாக உருக்கொண்டு தொடர்ச்சியான புதிர் நிகழ்வுகளால் அதை மீட்டெடுக்கிறாள். தொன்மத்தில் ஆதிக்க சாதிகளால்  நிகழ்த்தப்பட்ட இழிவுகளுக்கான பதிலீடாக, எதிர் வினையாக அவள் நிகழ்த்தும்/நிகழ்ந்திடும் காரியங்களின் மர்மச்சரடொன்றின் இறுக்கத்தினால் இந்நாவலின் உள்மையத்தில் கிடைத்திடும் பூரணகதியின் நெகிழ்வான அனுபவங்களின் அம்சங்களே இந்’நொய்யல்’ நாவலை செவ்வியல் தன்மையின் அடையாளத்துடன் தனித்துவமாகப் பிரித்துக் காண்பிக்கிறது.

காமத்தின் ஈரம் படிந்திருக்கும் பிறழ்வுறவுகளின் வலியும், கதைமாந்தர்களின் தனிமையும், ஏக்கமும், குரோதமும், மனிதத்தன்மையின் எஞ்சியிருக்கும் வடிகால்களும், அவர்களின் உறவுச்சிக்கல்களும், உரையாடல்களாக தொடர்ந்திருக்கும் இக்கதையில், அவர்களனைவரும் இயற்கையின் முன்பு மண்டியிட்டு கதறும் படியாக சூறைக்காற்றின் நிகழ்வுகளுக்குள் சுற்றி வருகின்றனர்.

உடல் எரிந்திடும் காமத்தில் பெண்களும் ஆண்களும் நிலையற்று மேற்கொள்ளும் பிறழ் உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பமான சமூக சிக்கல்களின், ஏற்றத்தாழ்வுகளின் படிநிலைகளை மிகவும் கச்சிதத்தன்மைகளோடு ஒன்றிணைத்து விட்டிருக்கிறார் தேவிபாரதி.

காலத்தின் வழிகளில் நிகழ்ந்திருக்கும் ஒரு பிரிவினருக்கான பாதிப்புகளை, நிகழ்காலத்தில் காலம் எவ்வாறு சமப்படுத்திக் கொள்ளும் என்னும் அறம் சார்ந்த விசாரனையின் ஒரு பகுப்பாய்வாகவே இதிலுள்ள சில நிகழ்வுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். யதார்த்த பார்வைகளுக்குள் அடங்கிடாத மாயத்தருணங்களின் உருவமாக சாமியாத்தாவும், காரிச்சியும், பாருவும் கரையில் புலப்படுத்தும் விசித்திரங்களுக்கான விவரனைகள் ஆழமும், பயமும், ஆர்வம் கொள்ளும் படியாகவுமிருக்கின்றன.

நொய்யல் கரைகளிலும், சுற்றுப்புறங்களிலும் நீளும் பெரும் வாழ்வுகளின் அடியாழத்தின் சதைகளைக் கீறி அதன் குருதி படிந்திருக்கும், ஈரம் நிறைந்திருக்கும் ஒரு வடிவத்தின் அப்பட்டமான நிழற்படத்தை இக்கதைகள் கூர்மையாக வழங்கியிருக்கின்றன.

   கதை நிகழும் நிலம், காலம், சமூகச் சூழலின் பின்னணிகள், ஆங்கிலேயர்கள் மற்றும் உள்ளூர் ஜமின்தாரிய அரசர்களின் நெருக்கங்கள், அவர்களின் ஒடுக்கு முறைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இவற்றுடன் முழுவதுமாக இணைக்கப்பட்டிருந்த எண்ணற்ற மனித உடல்களுடனான சிக்கல்கள், இழிவுகள், நம்பிக்கைத் துரோகங்கள், அன்பின் வடுக்கள், காமத்தின் அடர்த்தியான ரேகைகள் என எல்லாவற்றையும் அதன் எல்லா முனைகளிலிருந்தும் ஆராய்ந்திருக்கிறது இந்நாவல்.

கதைகளைச் சுமந்து வைத்திருந்த ஒருவரையும் / ஒன்றையும் விடாமல் எல்லோரையும்/எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி நுட்பமாகக் கொண்டுவந்திருக்கிறார் தேவிபாரதி. இவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும், தொன்மங்களின் நினைவிலிருக்கும் பேரன்புகளையும், காரை மதில்களுக்குள்ளிருக்கும் பெரும் வேதனைகளையும், குறுக்குவெட்டில் நொய்யலின் சீற்றம் நிறைந்த பெருவெள்ளமென மாற்றிக் காணத்தருகிறார்.

சென்னி மூப்பனும், ஆறுமுகப் பண்டாரமும் சொல்லிச்செல்லும் தேவனாத்தாவின் அதீத சாகசங்கள் நிறைந்திருக்கும் கதைகளின் காட்சிகளும், விவரணைகளும் இந்நாவலுக்கான சாளரத்தை திறந்து விடுகின்றன. காரிச்சிக்கும், கிரிக்கவுண்டருக்குமான குழந்தை மன நிகழ்வுகளும், உரையாடல்களும், நொய்யலுடனான அவர்களின் நெருக்கமானத் தொடர்புகளுக்குள் இருந்நிடும் புதிர்களடங்கிய தொன்மங்களும், காட்சிகளும், அழுத்தங்கள் நிறைந்திருக்கும் மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன.

குமரப்ப பண்டிதனின் வேதனைகள் நிறைந்த வாழ்வும் பிறகு அவன் அந்நிலத்தில் நிலைபெறும் புள்ளியும், நிகழும் கதைச்சூழலில் மிகவும் முக்கியமான ஒரு குறியீடாக நிலைகொள்கிறது. அரண்மனையின் ராஜவாழ்வு முறையும், காமமும் கள்ளும் நிறைந்த கொண்டாட்டங்களும், துரோகக் குத்தல்களும், சதி வலைகளும், தண்டனைகளும், எளிய மனிதர்கள் சுரண்டப்பட்டத் தருணங்களும் மிக நேரடியாகப் பேசப்பட்டிருக்கின்றன. நொய்யல்கரை மனிதர்களின் வனப்பும் செழிப்புமான வாழ்வியல் தருணங்களின் ஒரு பகுதியையும், வறட்சியும், சாதி இழிவுக்கொடூரங்களும் கலந்திருந்த அதன் வேறு முகத்தின் தடங்களையும் இதிலுள்ள சில பகுதிகளில் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

   இந்நாவலில் முழுவதுமாக நிறைந்திருக்கும் கொங்கு மொழியின் வீச்சும், உரையாடல்களில் வரும் பேச்சு மொழியின் அனுபவ வனப்பும் அந்நிலத்திலேயேத் திரிவதான நெருக்கமான உணர்வைத் தருகின்றன.

நொய்யல் கரைகளில் வாழ்ந்திருந்த மனிதர்களின் தனித்த அடையாளங்கள் நிறைந்த வாழ்வு, வேட்டை முறை, கொண்டாட்டங்கள், அவர்களுக்கெதிரான சுரண்டல்கள், ஆதிக்க சாதிகளின் இழிவுகள் மற்றும் அண்ணன்மார்சாமி கதைகள் என அனைத்தையும் ஏதோ அவர்களின் முன்பாக அமர்ந்து பாட்டுக்காரன் சொல்வதைக் கேட்கும் படியாகவே விரிகிறது இக்கதைகளம். கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களான வேம்பன கவுண்டர், சாமியாத்தா இணையின் வாழ்வும், நொய்யலை விட்டு இடம்பெயர்ந்து அவர்கள்  பொருளாதார வளர்ச்சியடைவதும் பின்பு வேம்பன கவுண்டர் ஏதுமற்று ஆண்டியாகி திரும்பும் நிலையும்,  ஆன்மிகத்தில் அவரடையும் மனமாற்றமும், அவர் வம்சத்தினர் சாபம் பெறும் புதிர்களடங்கிய இடமும், அதற்கு முன்னும் பின்னுமான கதைகளின் மூர்க்கம் நிறைந்த வெளியின் சாரம்சமும் உட்சமாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கின்றன.

வெறுமனே குடும்ப நிகழ்வுகளின் உறவுச் சிக்கல்களும், துரோக வடிங்களும் மட்டுமேயானதாக இக்கதையை அவர் சொல்லிச் செல்லாமல், அச்சமூக வடிவத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த அனைத்து மாற்றங்களின் நிரூபணமாகவே இதை கட்டமைத்திருக்கிறார். 

செட்டிகளும், முதலியார்களும் பருத்திச் சந்தையில் வெள்ளிப்பணங்களைக் குவிக்கத்தொடங்குவதும், புதிய சந்தைகள் உருவாகி பதுக்கலும், ஏமாற்றமும் துவங்குவதுமான ஒரு வடிவமும், செம்பாலான ஒரு ஓட்டைக்காசை என்ன செய்வதெனத் தெரியாமல் காகத்தின் அலகில் மாட்டிவிடும் இன்னொரு சமூகத்தின் எளிய வடிவத்தையும் இக்கதைகளுக்குள் நீங்கள் காண முடியும்.    

   வன்முறையின் நேரடியான அனுபவங்களின் ஒரு பகுதியால் நிறைந்திருப்பது தேவிபாரதி அவர்களின் வாழ்வு. சமூகத்தின் எல்லா இருட்டின் பாதைகளையும், நிகழ்வுகளையும் அவர் கதைகளாக்கிய போதும் அவற்றுள் வன்முறையின் சாயல் எதையும் அவர் திணித்ததில்லை.

படைப்பின் நுட்பத்தில் அந்த வன்முறைகளை அவர் கையாண்டு வருகின்ற அனுகுமுறை மிகவும் தெளிவானது. மேலும் தொன்மங்களை கதைகளின் வழியே பரவவிடும் அசாத்திய எழுத்து மொழியும், நாட்டார் வழக்காற்றின் உரையாடல் தொனியும், அதீத / மாயப் புனைவுகளின் தருணங்களை உட்சபட்ச சாத்தியத்தில் குழப்பங்களின்றி வெளிப்படுத்தும் முறையும் தேவிபாரதியின் எழுத்துக்களை தனித்துவம் நிறைந்ததாக மாற்றிக் காண்பிக்கின்றன. (கோணங்கி எழுத்து முறையிலிருந்து வேறுபடும் இப்புள்ளி மிகவும் கவனிக்கக் கூடியது)      

துரத்தப்பட்டிருக்கும் எளிய வாழ்க்கையினூடே, கனவுகளினூடே நொய்யலில், வெடத்தலங்காட்டில் அலைந்து திரிந்த அம்மனிதர்கள் சார்ந்திருந்த தொன்மங்கள் குறித்த பேருண்மைகளை, நிகழ்காலத்தில் வற்றியதும், குப்பைகளடங்கியதுமான அந்த ஆற்றின் ஆழமான படிமங்களில் புதைந்திருப்பவைகளையும், அமானுஷ்யங்களையும், புதிர்களடங்கிய செயல்பாடுகளுக்குள் நிலைகொண்டிருந்த மாய யதார்த்த வடிவங்ளையும் தன் நுட்பமான எழுத்தின் மூலம் பெரும் வாழ்வாக நமக்கு கடத்தியிருக்கிறார் தேவிபாரதி. அவர்களின் கதைகளும், வாழ்வியல் அனுபவங்களும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன, நமது அன்றாடத்தின் அமைதியை சீர்குலைக்கின்றன.

நமது சராசரியான வாழ்வின் போதாமைகளை நிர்மூலமாக்குகின்றன. இதுவே எப்போதுமிருந்திடும் வாழ்விற்கான அறத்தின் கேள்விகளை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. அத்தனை வனப்பாகவும், செழிப்பாகவும் இருந்த ஆற்றின் வழித்தடத்தில் நிகழ்ந்திருக்கும் இத்தனை மானுட சிக்கல்களையும், அவர்களின் விரோதத்தினாலான அற்ப செயல்பாடுகளையும் குறித்து நம்மை அச்சமடைய வைத்திருக்கிறது இந்நாவல்.

மனித குலத்தின் நேசிப்பிற்கும், வெறுப்பிற்கும் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும் ஒரு பொறியின் தீவிரத்தை வாசிப்பவர்களிடத்தில் கையளித்திருக்கிறது தேவிபாரதியின் இவ்வெழுத்துக்கள். நெடுங்காலமாக ஆற்றமுடிந்திடாத துயரத்தின் ஒரு துண்டிக்கப்பட்ட வாசலையும், மானுடத்தின் மிக நீண்டதும் உறுதியானதுமான மனிதத்துவத்தின் சாளரத்தையும் திறந்து வரவேற்கிறது ‘நொய்யல்’ நாவல்.   

குறிச்சொற்கள்

மேல் செல்