கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

திரைமேதை அலெயாந்த்ரோ ஹோடோரோவ்ஸ்கியுடனான உரையாடல்

இலன் ஸ்டாவன்ஸ்
மொழியாக்கம்: வளவன் தங்கவேல்

பகிரு

இலன் ஸ்டாவன்ஸ்: என் பெயர் இலன் ஸ்டாவன்ஸ்,ரெஸ்ட்லெஸ் புக்ஸின் பதிப்பாளர். ‘பறவை மிகச்சிறப்பாய் பாடுமிடத்தில்’ புத்தகம் இப்போது இங்கு என்னிடம் உள்ளது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை நான் சொல்லியாகவேண்டும். கூடவே, பல வருடங்களுக்கு முன்பு மெக்ஸிகோவில் உங்களுடன் நாடகம் நிகழ்த்திய ஆப்ரகாம் ஸ்டாவன்ஸ் அவர்களின் மகனுமாவேன். தங்களது அரங்காற்றுகையான ‘நாம் அனைவரும் ஆடும் ஆட்டம்’ கண்டிருக்கிறேன். என் குடும்பத்தில் இன்னுமொரு தலைமுறை உங்களுடன் இணைந்து செயல்பட வாய்த்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழ்வான ஒன்று.

அலெயாந்த்ரோ ஹோடோரோவ்ஸ்கி: இன்னும் அவர்கள் அதே இடத்தில் நாடகம் நிகழ்த்துகிறார்களா?

இலன்: ஆம் நிகழ்த்துகிறார்கள். அலெயாந்த்ரோ, உங்களுக்காக என்னிடத்தில் நிறைய கேள்விகள் உள்ளன. 50, 60 களில் காத்திரமாக இயங்கிய எழுத்தாளர்களுடன் அதாவது கார்சியா மார்குவேஸ், வர்கஸ்யோசா மற்றும் போர்ஹேஸ், கோர்த்தசார், ஃபுயூண்டஸ், சீலேயைச் சேர்ந்த மேலும் சில எழுத்தாளர்கள்.... நீங்கள் நாடகங்கள் தயாரித்து நிகழ்த்துவதின்வழி வெளிப்பட துவங்கியிருந்தீர்கள். அன்றைய லத்தீன் அமெரிக்க இலக்கியச் சூழலில் உங்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

ஹோடோ: பாருங்கள், அவ்வெழுத்தாளர்கள் லத்தீன் அமெரிக்க நாட்டாரியலில் இருந்து வந்தவர்கள்.மேலும் ஒரு அரசியல் ஒட்டுதல் அவர்களுக்கிருந்தது. ஏனென்றால் அக்காலத்தில் நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ அனுதாபியாக இருக்கவேண்டும். ஏதேனும் ஆதாயம் பெறும் பொருட்டு அவர்களுக்கேற்றார்போல் செயல்படவேண்டியிருக்கும். நான் எப்போதுமே அரசியலற்றவன். கவிதைப்புரட்சியை நம்பினேன், அரசியல் புரட்சியை அல்ல.

இலன்: எனக்கு புரிகிறது.

ஹோடோ: அரசியல், ம்... முன்பொரு காலத்திய அவசிய அமைப்பு போன்றது, ஆனால் இப்போது முற்றிலும் பிறழ்வடைந்துவிட்டது. மேலும் அது தொழில்துறை மாஃபியா ஆட்களின் கூடாரமாகிவிட்டது.

இலன்: தொழில்துறை மாஃபியா என்று நீங்கள் சொல்ல வருவது?

ஹோடோ: பொருளியல் சார்ந்த மாஃபியாக்களைக் குறிக்கிறேன். ஆகையால் நான் எப்போதுமே அரசியலில் ஈடுபாடு கொண்டதில்லை. அதே சமயம் நான் நாட்டாரியலுக்கு எதிரானவன். எனக்கு அந்த லத்தீன் அமெரிக்க நாட்டாரியலில் நம்பிக்கையில்லை. வழக்காற்றியலை ஒரு சிதைந்த மருளியல் / மறைஞான மரபாகவே எண்ணுகிறேன். ஆம், அது சில மெய்மைகளைப் பேணுகிறது.

இலன்: மாய யதார்த்தவாதம் போன்ற விஷயங்கள்?

ஹோடோ: மாய யதார்த்தவாதம் எனை எப்போதும் ஈர்த்ததில்லை. ஆகையால் நான் லத்தீன் அமெரிக்கர்களாக மாறிய யூதர்களைப் பற்றி எழுதினேன்.

இலன்: ஏன் யூதர்கள்?

ஹோடோ: ஏனென்றால் அடிப்படையிலேயே லத்தீன் அமெரிக்கா ஒரு யூத விரோத நாடு. அதில் நாம் முற்றிலும் தெளிவாக இருப்போம். நான் வாழ்ந்த சீலேயை எடுத்துக்கொள்ளுங்கள். போர்க்காலங்களில் நாட்டின் பாதி பேர் நாஜிகளுக்கு ஆதரவளித்தனர். மேலும் கணிசமான ஜெர்மானியர்கள் தெற்கு சீலேயை வந்தடைந்தனர்.

இலன்: இன்னுமுமா?

ஹோடோ: ம்... அப்படிதான் இருந்தது. அவற்றையெல்லாம் துணிந்து எழுதினேன். விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது பிரதிகள் விற்பனையாக வில்லை. நான் வழமைக்கு எதிராகப் போய்க்கொண்டிருந்தேன்.

இலன்: அலெயாந்த்ரோ, உங்கள் படைப்புகள் மீதான எதிர்மறையான விமர்சனங்களுக்கு யூத எதிர்ப்புவாதம் தான் காரணம் என நிஜமாகவே எண்ணுகிறீர்களா? ?

ஹோடோ: ஆம். மேலும் இது போன்ற ஒரு பொருளை பற்றி எழுதுவதென்பது மிகவும் வினோதமானது.

இலன்: மிகவும் வினோதமானதா?

ஹோடோ: அப்படித்தான் இருந்தது. E.T. உடனான ஒரு திரைப்படத்தைப் போன்றது அது. புவிக்கப்பாலான ஒன்று உள்வருவதைப்போன்றது. அது புதிய அலையாகவும் இருந்தது. பெக்கெட் இயொனெஸ்கோ போன்று, நிறைய அதி புதிய அலைத்தன்மைக்கொண்ட விஷயங்களை நான் செய்தேன். நான் சொல்லவருவதென்னவென்றால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் நாட்டார் வழக்காற்றியல் தன்மையோடு எனக்கு ஒரு தொடர்புமில்லையென்பதுதான்.

இலன்: அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளிலிருந்து வரும் விமர்சனங்கள் உங்களை ஒரு மாயயதார்த்தவாதியாகக் கருதுவது உங்களுக்கு கவலையளிக்கிறதா?

ஹோடோ: அது எனக்கு கவலையளிக்கவில்லை. ஆனால் நான் செய்வது மாய யதார்த்தவாதமல்ல. நான் யதார்த்தமான மாயம் செய்கிறேன். பாருங்கள், மக்களுக்கு யாராவது புதிதாக எதையாவது செய்யும் போதெல்லாம் அவர்களுக்கு முன்பு என்ன விசயங்கள் தெரியுமோ அதோடு ஒப்பிடவேண்டும். அதனால், நாம் என்னதான் புதிது புனைந்தாலும், கடந்தகாலத்தோடு தொடர்புபடுத்துவதில்தான் போய்முடிகிறது. நான் திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கும்போது எனை ஃபெலினி, புனுவலுடன் தொடர்புபடுத்தினார்கள். இப்போது புது இயக்குனர்களை ஹோடராவ்ஸ்கியர் என அழைக்கிறார்கள்.

இலன்: சீலேயுடனான உங்கள் உறவு என்ன? அதாவது எது உங்களை சீலேயுடன் இணைக்கிறது. அந்நாடு மாறிவிட்டதா?

ஹோடோ: எனக்கும் சீலேவுக்குமான உறவு மாறியுள்ளது. காலம் எதையும் தீர்மானிக்கும். அதன் போக்கில், மக்கள் உங்களை மதிக்க தொடங்கி விடுகின்றனர். மேலும் தேசிய பண்பாட்டின் தவிர்க்க முடியாத கூறாக நீங்கள் ஆகிவிடுகிறீர்கள்.

இலன்: அது உண்மையில் நிகழ்ந்ததா? நீங்கள் சீலே தேசிய பண்பாட்டின் கூறா? அப்படியெனில் எவ்வழிகளில் சீலே உங்களை வரையறுக்கிறது?

ஹோடோ: அது கடினமான ஒன்று. நீங்கள் நாட்டுபற்றற்றவராக நன்றி கெட்டவனாகவோ இருக்கவேண்டியதில்லை. ஆனால் நான் செய்வது ஆன்மீகமான வேலை. ஆகையால் அங்கிருந்து தொடங்குவோம். எனது ஆன்மாவில், எனக்கு இனமும் கிடையாது தேசமும் கிடையாது. நான் ஆள்புலங்கடந்தவன். மேலும் எனக்கென்று ஒரு குறிப்பிட்ட வயது கிடையாது. என் வயதுக்குட்பட்டு நான் வாழவில்லை. என் வயதொத்தவர்களைப்போன்று நான் நடந்துகொள்வது கிடையாது. வயதும் இல்லை நாட்டுரிமையும் இல்லை.

இலன்: ஆனாலும் கூட....

ஹோடோ: ஆனாலும், என் வாழ்வின் மிக முக்கியமான பகுதியை நான் சீலேயில்தான் கழித்திருக்கிறேன். அங்குதான் நான் பிறந்தேன் மேலும் மிகச்சிறப்பானதொரு வளரிளம்பிராயத்தை கொண்டிருந்தேன். அதுதான் நான் தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் (முடிவில்லா கவிதைகள்). நான் ஒரு கவிஞனாக இருந்தேன், எனக்கு கவிதைகள் தெரியும். அது சீலேயில் கொடுமையான விஷயங்கள் நடப்பதற்கு முன்பு, பினோசெட் வருவதற்கு முன்பு.அவ்விதமாய் என் வேர்களையொற்றிய ஒரு நினைவேக்கம் உண்டு, எனினும் அந்த வேர்கள் எனது யூத வேர்களோடு பிணைந்துள்ளது. பள்ளியில் நான் ஒதுக்கப்பட்டேன். யாரும் என் அருகில் அமர விரும்பவில்லை.

இலன்: ம்... நீங்கள் ஃபிரான்ஸ் அல்லது மெக்ஸிகோவை பற்றியும் இதேவிதமாக உணர்கிறீர்களா? அதாவது நாட்டோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியாமல் சில கணங்கள் அவ்விடங்களில் வசித்ததற்கான நினைவேக்கம் கொள்வது?

ஹோடோ: ஆம். நிச்சயமாக எனக்கு வெவ்வேறு இடங்களோடு வெவ்வேறு உறவுநிலை உண்டு. சீலேயைப் பொறுத்தவரை என்னுடைய வளரிளம்பருவம் உணர்ச்சிகரமான ஒரு உறவுநிலையைக் கொண்டிருந்தது. அதாவது என்னுடைய ஆரம்பகால படைப்புகளின் வளர்தன்மை, உற்சாகம், இளமை. பிறகு, எனக்கு தெரியும் மெக்ஸிகோவில்தான் முதன்முதலில் என் சிந்தனை வடிவுற ஆரம்பித்தது. ஃபிரான்ஸில், மார்செல் மார்செவுடன் மைம்கலை பயின்றேன். ஆந்தேரெ ப்ரெத்தானுடன் செயல்பட்டேன், சர்ரியலிசத்துடன் தொடர்பு கொண்டேன். காஸ்டன் பல்லார்த்-உடன் இணைந்தேன் தத்துவம் பயின்றேன்.

இலன்: மெக்ஸிகோவைப்பற்றி வேறென்ன?

ஹோடோ: மெக்ஸிகோவுடன் எனக்கு வலுவான தொடர்பு உள்ளது. என் பிள்ளைகள் அங்குதான் பிறந்தார்கள். அங்குதான் எனது அரங்க செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளமுடிந்தது. மெக்ஸிகோவின் கலைத்திறன் பண்பாடு மாற நானும் உதவினேன். அந்நாடு என் அதிவிருப்பமாயிருந்தது.

இலன்: சீலேயை விட மேலாக?

ஹோடோ: அதுபோன்று இல்லை, சீலே எனக்கு சொர்க்கம்.

இலன்: அலெயாந்த்ரோ, நீங்கள் பேசும் மொழிகளுடனான - (ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஆங்கிலம்) உங்கள் உறவு எப்படி?

ஹோடோ: என் கணிணியை சுற்றித் திருப்பினால், நான் ஒரு நூலகத்தில் வசிப்பதைக் காணலாம். சுவர்கள் முழுவதையும் புத்தகங்கள் மறைத்துள்ளன. நான் இத்தாலியன், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷில் வாசிக்கிறேன். ஆனால் நான் ஸ்பானிஷில்தான் சிந்திக்கின்றேன், பின்பு ஃப்ரெஞ்ச், அதன் பின்பு ஆங்கிலம். நான் ஸ்பீடிகொன்சாலெ போன்று ஆங்கிலம் பேசுவேன். படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்டேன். உண்மையில் என் ஆங்கிலத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.

இலன்: உங்கள் கனவுகளில் மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள்?

ஹோடோ: ஸ்பானிஷ் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் ப்ரெஞ்ச்.

இலன் : சீலே உச்சரிப்பிலான ஸ்பானிஷா?

ஹோடோ: இல்லை. ஏனெனில், சீலே உச்சரிப்பில் நான் பேசுவது கிடையாது. ஒரு நாட்டிலிருந்து வருபவனல்ல நான். ஐம்பது வருடங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் வசித்துவருகிறேன். மேலும் மொழிகள் மாற்றமடையக்கூடிய உயிர்ப்பொருட்கள். எனது ஸ்பானிஷ் எனக்கே எனக்கானது. மேலும் அண்மைய வெளிப்பாடுகளை என்னால் உபயோகிக்க முடியாது. ஸ்பெயினில் பார்த்தீர்கள் என்றால் மக்கள் என் புத்தகங்களை வாசிக்கிறார்கள் ஆனால் ஸ்பானிஷ் வழக்கை பயன்படுத்தமுடியாது.

இலன்: பல காலங்களாக நீங்கள் சீலேயை விட்டுவெளியே வாழ்வதால், உங்கள் ஸ்பானிஷ் இறுக்கமானதாகவோ அல்லது உறைந்துபோனது போன்றோ உணர்கிறீர்களா? ஸ்பானிஷில் வார்த்தைகளற்றுபோனது போன்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஸ்பானிஷை எவ்வாறு பேணுகிறீர்கள்?

ஹோடோ: கவிதைகள் எழுதுவது மூலம். தினந்தோறும் நான் கவிதைகள் எழுதுகிறேன். ஒரு அரூப ஓவியர் தன் ஓவியத்தை வரைவதுபோன்று ஒரு கவிதையைச்செய்கிறேன். அதனோடு செப்பனிடுவேன். இங்கு எனது வலப்பக்கத்தில் அகராதிகளின் அடுக்கு உள்ளது. நிறைய அகராதிகள் மேலும் என் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பதான உணர்வு. எனவே மொழி ஆன்மாவாகும். ம்... சுயத்தின் ஆன்மா ஏனென்றால் நமது அடிப்படை இருப்பிற்கு மொழி கிடையாது. அதற்கு உணர்வுகள் உண்டு. ஆனால் எனது சுயம் ஸ்பானிஷாலானது, மேலும் எனது சுயம் உயிரோடு இருப்பதனால், எனது மொழியும்.

இலன்: ஆனால், உங்களிடம் மொழியைத்தாண்டி கூடுதலானவை உள்ளன.

ஹோடோ: நான் நிறைய கதவுகளை திறந்திருக்கிறேன். உதாரணத்திற்கு நனவுக்கும் நனவிலிக்குமான கதவு. தெரபி, உளப்பகுப்பாய்வு ஆகியவற்றில் ஈடுபட்டேன். மறைஞானம், நான் திறந்த இன்னுமொரு கதவு. நான் ஒரு மறைஞானி. சமய அர்த்தப்பாட்டில் அல்ல, ஆனால் கடவுள் என நாம் அழைக்கும் பெயரிட முடியா உளப்பொருளோடு இயங்கும் அர்த்தத்தில்.

இலன்: விளக்கவும்.

ஹோடோ: ஒரு வேளை பண்டைய ரப்பீக்களின் (யூதகுருக்களின்) பாரம்பரியத்தில் இருந்து எனக்கு வந்திருக்கலாம், தெரியவில்லை. சொற்பொருளியலில் நிறைய இயங்கியிருக்கிறேன், குறிப்பாக ஆல்ஃப்ரட் கார்ஸ்ப்ஸ்கியின் அரிஸ்டால் அல்லாத சொற்பொருளியலில். ‘நாய் வார்த்தைகளை உண்பதில்லை’ மற்றும் ‘வரைபடம் பிரதேசமாகாது’ போன்ற விசயங்கள். எனக்கு, மொழி என்பது இருப்பிலிருந்து வேறுபட்டதாகும். வார்த்தைகள் பொருட்களில்லை.

இலன்: நீங்கள் வேண்டுவது?

ஹோடோ: நான் அப்பொருளைத் தேடுகிறேன். ஆகவே மொழி ஒரு கருவி, ஏதோவொன்றிற்கு எனை எடுத்துச்செல்லும் வானூர்தி. என் இலக்கத்தை சென்றடையும் போது, நான் ஊர்தியிலிருந்து இறங்கிக்கொள்வேன்.

இலன்: ஒரு பேசுபொருள் மாற்றம். நான் யூதர்களைப் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும், நமை இணைக்கும் இன்னொருபொருளது. ஏனென்றால் நானொரு மெக்ஸிகோவைச் சேர்ந்த யூதன் எங்களின் (ரப்பிக்களின்மரபு) யூத குருமரபைச் சேர்ந்த மூதாதையர் மெக்ஸிகோவிற்கு வந்தவர்கள். உங்கள் குடும்பத்தவர்கள் எப்போதாவது யித்தீஷ் பேசினார்களா?

ஹோடோ: பேசினார்கள். எப்போதுமே எனது தந்தையும் தாயும் யித்தீஷ் பேசினார்கள். என்றைக்கும் எனக்கு கற்பிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தார்கள், வாதிட்டார்கள் மேலும் எனக்கு பயிற்றுவிப்பதை விரும்பவில்லை.

இலன்: அப்படியானால் அவற்றை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என அவர்கள் யித்தீஷ் பேசினார்கள். ஆனால் யூத இலக்கியத்தின் உடனான உங்களின் தொடர்பு என்ன? சற்றுமுன்தான் நாட்டாரியலில் உங்களுக்கு விருப்பமில்லையென சொன்னீர்கள், அப்படியானால் யூத சமயச்சார்பற்ற எழுத்துகள் மற்றும் யூதகுருமரபிலான எழுத்துகள் பற்றி? அவை உங்களிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹோடோ: அது என்னுடையது. அது இங்குதான் எனக்கருகிலேயே உள்ளது. நீங்கள் இங்கு சுற்றி பார்த்தீர்களேயானால், நான் ஒரு யூத நூலகம் வைத்திருப்பதைப் பார்க்கலாம். ம்ம்.... சைனீஸ் மற்றும் ஜப்பானிய புத்தகங்களும் என்னிடமுண்டு. அரேபிய புத்தகங்கள், மேலும் மாயாஜாலம் மற்றும் தத்துவ சம்பந்தமான புத்தகங்கள். அனைத்தும் அதனதன் இடத்தில் இருக்கின்றன.

இலன்: எனக்கும் அவற்றைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.

ஹோடோ: எனக்கு நிறைய யூத புத்தகங்கள் பிடித்திருந்தது. உதாரணமாக ஷோலெம் ஆஸ்சுடையதிருடன் மோட்கே. மேலும் பெரெஸ் மற்றும் ஷோலெம் அலெய்கெம்.

இலன்: அந்த எழுத்தாளர்களை நீங்கள் ஸ்பானிஷில் வாசித்தீர்களா? இல்லை யித்திஷிலா?

ஹோடோ: ஸ்பானிஷில், ஏனெனில் யித்தீஷில் வாசிக்கக்கூடிய பொறுமை என்னிடமில்லை. எனக்கு அந்த அளவுக்கும் தெரியாது. எனக்கு உண்மையில் தெரிந்ததெல்லாம் என் அப்பா அம்மா சண்டைகளின் போது வந்து விழும் சில வார்த்தைகள்தான். அவை விதைகள்போன்று விழுந்தன. வசைகள் எனக்கு நினைவிருக்கின்றன. எனினும் நான் யூத இலக்கியத்தை வாசித்தேன், மேலும் ஒரு காலத்தில் அது எனை உண்மையில் ஆர்வமடையச் செய்தது.

இலன்: சில விமர்சகர்கள் உங்களை யூத மரபைச் சேர்ந்த எழுத்தாளராக காண்கின்றனரே.

ஹோடோ: மிகவும் சரி. நான் புத்தகம் எழுத படிக்கவேண்டும். எனக்கு சரியாக தெரியவில்லை, நான்கோ அல்லது ஐந்தாண்டுகளோ எடுத்துக்கொண்டேன் ‘பறவை மிகச்சிறப்பாய் பாடுமிடத்தில்’ எழுத. என் குடும்பத்தைப்பற்றி ஆய்வை மேற்கொண்டேன். ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தனர், மேலும் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து வைத்திருந்தனர். நான் அனைவரையும் மீண்டும் இணைத்தேன். மேலும் குடும்பத்தினரிடமிருந்து சில விஷயங்களை கண்டுப்பிடிக்க முடியாதபோது நான் வரலாற்றிடம் திரும்பினேன் - உதாரணத்திற்கு, யூதர்கள் ஸ்பெயினை விட்டுச்சென்றபோது என்ன நடந்தது? ரஷ்யாவிலிருந்து விலக்கப்பட்ட யூதர்களுக்கு என்ன ஆனது? இப்படி அனைத்தையும் படிக்கவேண்டி இருந்தது. யூதகுரு மரபுச்சிந்தனையைப் படிக்கவேண்டி இருந்தது அதனால் ரப்பியாகிய ஒரு பாத்திரத்தை உருவாக்க முடிந்தது.

இலன்: எப்போது நீங்கள் யூத மறைஞானம் மற்றும் யூத மாந்திரீகத்தில் (கப்பாலா) ஈடுபட்டீர்கள்?

ஹோடோ: நான் பாரீஸில் இருக்கும்போது டாரட் சீட்டுகளைப் படிக்கத் தொடங்கினேன். டாரட் சீட்டுகள் என்று வரும்போது ஒரு நிபுணனாக இருந்தேன்.ஆனால் எதிர்காலத்தைக் குறிச்சொல்வதில் இல்லை. எனக்கு, டாரட் சீட்டு என்பது காண்பதற்குரிய ஒரு மொழியாகும். மேலும் மேஜிக், எலிபாஸ் லெவி மேலும் தொடர்புடைய பொருள்களில் மூழ்கியபோது எனைத் தொடக்கிவைத்த கப்பாலா வல்லுநர்களை நான் கண்டுகொண்டேன். பின்பு, யூதகுரு மரபின் விளக்கவுரைகளுடன் ஐந்து தொகுதிகள் கொண்ட தோராவினுள் (The Torah) சென்றேன்.

இலன்: ஹாசிடிஸம்.

ஹோடோ: ஜப்பானிய அல்லது சீன இலக்கியம் எனை எவ்வாறு ஆர்வம் கொள்ளச்செய்ததோ அவ்வாறே அவையனைத்தும் எனை ஆர்வம் கொள்ளச்செய்தன. அது, உலகளாவிய இலக்கியத்தின் உள்ளிருக்கும் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் இலக்கியமாகும்.

இலன்: அலெயாந்த்ரோ, உங்களின் இந்த நிலைப்பாடு, எந்த ஒரு தேசத்தையும் சார்ந்தில்லாதிருப்பதற்கும் பிரபஞ்சவாசியாக இருப்பதற்கும், வயது, பண்பாடு, பூகோளம் கடந்திருப்பதற்கும், நீங்கள் யூதராக இருப்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளது என எண்ணுகிறீர்களா?

ஹோடோ: கண்டிப்பாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஆரம்பம் முதலே, லௌகீக உடைமைகள் கொண்டிருக்கும் எண்ணத்தை நிராகரித்திருக்கிறேன். இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை. எப்பொழுதும் வாடகைக்கே இருந்திருக்கிறேன். எனக்கு நிலையான தங்குமிடம் கிடையாது. மேலும் சீலேவில் என்னை சீலேக்காரனாக ஒருவரும் நினைத்தது கிடையாது. சில சமயங்களில் நான் ஒரு யூதன். மக்கள் என் பின்னால் அப்படி பேசுவதை பிற்பாடு கண்டுகொண்டேன்.

இலன்: அவமதிக்கும் தொனியில்?

ஹோடோ: யூதர்கள் அவர்களுக்கு துருக்கியர்களைப் போன்று. அரபு துருக்கியர்கள் மற்றும் எபிரேயர்களை அவர்கள் யூதர்கள் என்றே அழைத்தனர். மேலும் அங்கு மரபியல் வேறுபாடுகள் இருந்தன அவற்றை நான் நேரடியாக பார்த்தேன். நான் மிகச்சிறுவனாக இருந்தபோதே, ஏனெனில் நான் வெளிர்நிறத்திலிருப்பேன் மேலும் சுன்னத்து செய்யப்பட்டிருந்தது மற்றைய சிறுவர்கள் செய்திருக்கவில்லை. நாங்கள் குளிக்கும் சமயம், அவர்கள் குறிகளை அளவிடுவார்கள், அப்பொழுதுதான் என்னை அவர்கள் கேலிச்செய்யத் தொடங்கியது. அப்படியாக அங்கு ஒரு வேறுபாடு இருந்தது, அதற்கு நான் நன்றியோடு இருக்கிறேன். மேலும் அப்போதங்கு எனது தந்தை இருந்தார், அவர்தானொரு யூதரென்ற உண்மையை மறைத்து வந்தார்.

இலன்: அவர் சமயப்பற்றற்றவராக இருந்தார்.

ஹோடோ: அவர் சொல்லுவார், “கடவுள் இல்லை. நீ இறப்பாய், மேலும் நீ அழுகுவாய், மேலும் அது அவ்வளவுதான்”. சமயம் மற்றும் பிறவனைத்தையும் கடுமையாக எதிர்த்தார். ஒரு புனித நாளையும் அவர் என்றுமே கொண்டாடியதில்லை. எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவாக தன்வயமாக்கினார். ஆனால் எந்தவொரு மீபொருண்மையிலும் சார்ந்திருக்கா வண்ணம் எனைத் தடுத்துக்கொண்டார். தேசிய விஷயங்களானாலும் சரி நம்பிக்கைச் சார்ந்த விஷயங்களானாலும் சரி எனக்குப் பிடித்துக்கொள்ள எதுமே இல்லை. நம்பிக்கைகளே அற்று நான் வளர்ந்தேன். நான் ஒரு நாத்திகன். எனது தந்தை ஒரு ஸ்டாலினியவாதி. சற்று கற்பனை செய்து பாருங்கள். அதைப் பற்றியெல்லாம் என் திரைப்படத்தில் கூறுகிறேன்.

இலன்: எனவே நீங்கள் சீலேவைச்சேர்ந்த ஒரு E.T.

ஹோடோ: சரியே. எனை இந்த உலகைச் சேர்ந்தவனல்லாதவனாகவே நினைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் இந்த உலகுக்குரியவன் ஏனெனில் எனை இந்த பூமிக்கோளின் குடிமகனாகவே கருதுகிறேன், குறைந்தபட்சம் இந்த கணத்திலாவது.

இலன்: கடவுளைப்பற்றி? அவர் இருக்கிறாரா?

ஹோடோ: என்னைப்பொறுத்தவரை அது ஒரு எளிமையான கேள்வி?

இலன்: கேட்டதற்கு எனை மன்னிக்கவும்.

ஹோடோ: ஏனெனில் கடவுள் - அவர் இருக்க முடியாது, ஏனென்றால் அவர் இருப்புக்கு அப்பால் இருக்கிறார். மைமொனிடேஸ், என்ற தலைச்சிறந்த யூத தத்துவஞானி கடவுளை வரையறுக்க முயன்று ‘குழப்பமடைந்தவர்களுக்கான ஒரு கையேடு-ஐ எழுதினார். ‘கடவுள் என்ற பொருளைப்பற்றி நம்மால் எதுவும் சொல்ல முடியாது’ என முடித்துக்கொண்டார். அவரைக் குறிக்க ஒரு வார்த்தைகளும் இல்லை. கடவுள் என்பது சிந்திக்க முடியாதது.

இலன்: ஆகவே நீங்கள் நம்புகிறீர்கள்.

ஹோடோ: நான் கடவுளை நம்புவது கிடையாது, ஆனால் நான் அவரை உணர்கிறேன். இந்த அகண்டபிரபஞ்சம் உயிர்க்கொண்டிருப்பதை உணரவில்லையென்றால் நான் ஒரு முட்டாளாவேன். மேலும் அதைப் படைத்தவன் இருக்கிறான்.

இலன்: புரிகிறது.

ஹோடோ: என்னிடமும் மற்றும் பிறரிடமும் காண்கிறேன், அதை ஒரு படைப்புக்கொள்கை என கொள்ளலாம். ‘நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா’ என பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்து மறைஞானியான ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘இல்லை’ என பதிலளித்தார். ‘எப்படி நீங்கள் கடவுளை நம்பாமல் இருக்க முடியும்?’ என்றனர். ‘என்னால் முடியாது ஏனென்றால் எனக்கு அவரைத்தெரியாது’ கடவுளைப்பற்றி பேச நாம் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் பிரபஞ்ச பேரளவைப்பற்றிய ஒருவரது உணர்வுதான் கடவுளை அறிவதென்பது. எனக்கு அந்த உணர்வு உண்டு, ஆனால் அதை அடைய எனக்கு வருடங்கள் பல ஆனது. நான் தேடினேன்.

இலன்: உங்களுடையது முற்றிலும் சுதந்திரமான வாழ்வு என கூறுவீர்களா? இல்லை முற்றிலும் தீர்மானிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்திருக்கீறீர்களா?

ஹோடோ: இரண்டையும் ஒரே சமயத்தில். ஏனென்றால் இந்த சமூகத்தில் சுதந்திரமானவர் யாருமிலர். நாம் அனைவரும் பொருளாதாரத்தின் அடிமைகள். நாம் அனைவரும் கடனில் இருக்கிறோம். நாம் அனைவரும் அடிமைகள் மேலும் நாம் பணம் சம்பாதிப்பதன் மூலம் வாழ்கிறோம். நமது கடவுள் என்பது டாலர் ஆகும்.

இலன்: நாம் கடவுளைத் தொழுவதற்குப் பதிலாக கடவுளை டொலுகிறோம்.

ஹோடோ: அவ்வளவுதான். ஆக நாம் கட்டற்றவர்கள் கிடையாது. எல்லாமும் வங்கிக்கு செல்கிறது, அங்கு நாம் வரி நோக்கங்களுக்காக கண்காணிக்கப்படுகிறோம். இன்னும் பலப் பலவற்றிற்காக நாம் கண்காணிக்கப்படுகிறோம். அப்படியிருக்கையில் எப்படி நாம் சுதந்திரத்தைப்பற்றி பேசலாம்? நாம் அனைவரும் தளைகளற்று இருக்கும்போதுதான் சுதந்திரம் என்பது நிகழும். ஒரு யூத பொன்மொழியிலிருந்து என்னிடம் வந்ததது ‘ மீட்பர் என்பவர் ஒரு மனிதனல்ல. மீட்பு என்பது மனித இனம் முழுதும் அறிவொளி பெறும் நாளாகும்.’

இலன்: மைமொனிடஸ் கூறுவார் கடவுள் மட்டுமே அதிகாரபூர்வமாக சுதந்திரமானவர், ஆனால் அவருக்கும் சாத்தியமற்றதின் மேல் கட்டுப்பாடு கிடையாது.

ஹோடோ: ஆனால் சாத்தியமற்றது என்பதே இல்லை.நாம் அது இருப்பதுபோன்றே பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அது கிடையாது. அது முடியாது. வெறுமையை போன்று, அது இல்லை. நீங்கள் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையைப்போன்று வெறுமை என்ற ஒன்று இல்லை. சாத்தியமற்றதென்பது வெறும் மனக்கட்டமைப்புதான்.

இலன்: நீங்கள் உங்களை ஒரு மீட்பர் உருவாக எண்ணிக்கொள்கிறீர்களா? மீட்பராக அல்ல, ஆனால் நாம் அனைவரும் ஒரு நாள் கட்டற்றவர்களாக ஆவதற்கு அல்லது வேறுவகையான பிரக்ஞையை அடையவதற்கான நம்பிக்கையாக.

ஹோடோ: பாருங்கள், நமது பூமி, நமது சமூகம் வன்முறையானதல்ல. இந்த உலகில் வன்முறை உள்ளது, ஆனால் சாரம்சத்துடன் நடப்பவற்றை நாம் குழப்பிக் கொள்ளவேண்டாம். மனிதர்கள் முழுதாக தெளிந்துணரப்பட்ட உளப்பொருட்கள், ஆனால் அது அவர்களுக்கு தெரியாது. நாம் அறியாமையால் துன்புறுகிறோம். ஆகவே நீங்கள் மீட்பரென குறிப்பிடுவது ஏற்கனவே நம்மிடம் உள்ளது. நமது சமூகம் ஒரு மாயை. நீங்கள் அமர்ந்திருக்கும் அறை செவ்வகமாக இருக்கிறது, ஆனால் அது ஒரு மாயை. வடிவிசைவான சமூகத்தின் ஒரு கூறு அது. இயல்பிசைவான சமூகத்தில் அப்படியான ஒரு அறை இருக்காது. அது வேறு வடிவங்களில் இருக்கும். ஆர்கானிக் மனிதர்களாகிய நாம் வடிவியலான, தர்க்கரீதியான, ஒரு அச்சில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அந்த அச்சு மெய்மை ஆகாது. நான் மீட்பாளரென, நீங்கள் வினவினால், நான் யாரென்று எனக்கு தெரியாது என்று கூற வேண்டியிருக்கும். எனைப்பற்றிய வரைமுறை என்னிடமில்லை ஏனென்றால் அது என்னை ஒரு வார்ப்பில் அடைப்பதுபோலாகி விடும். என்னில் நான் எவ்வளவு நம்புகிறோனோ அதுபோல் உங்களிலும் நம்புகிறேன். ஆனால் அங்கு சிலருக்கு கொஞ்சமதிகமான வரையறை இருக்கலாம் மேலும் சிலருக்கு கொஞ்சம் குறைவாக. அப்போது எல்லாமே ஒரு மாயை என்றால், கோரமான மாயைகளும் உண்டு. ஆகவே நாம் செய்ய வேண்டியது மிக அழகான ஒரு மாயையை நாடிச்சென்று அதிலேயே வாழ்வதுதான்.

இலன்: அது என்னவாக இருக்கும்?

ஹோடோ: கடவுள்தான் மாயைகளிலேயே மிகவும் அழகானது. நாம் ஏன் அதை வேண்டக்கூடாது? மிருகமாகவோ கொலைகாரர்களாகவோ அல்லாமல் நல்லவையாக இருப்பது.

இலன்: அல்லது படைவீரர்கள்?

ஹோடோ: நான் மனிதர்கள் போர்வீரர்கள் என எண்ணவில்லை. மக்கள் சலிப்புற்றமையால் அல்லது பிழைப்பிற்காகவோதான் படைவீரர்களாக ஆகியுள்ளனர். ஆனால் நாம் எந்நேரமும் பார்க்கும் இத்தகைய மிருகங்கள் அல்ல மனிதர்கள் என எண்ணுகிறேன். நாம் பரிணாமித்து வருவதாக எண்ணுகிறேன். மனிதர்கள் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள், மேலும் ஒரு நாள் நாம் உண்மையில் எதுவோ அதுவாக இருப்போம்.

இலன்: ஆனால் அதிர்ஷ்டம் அல்லது தற்செயல்களைப்பற்றி?

ஹோடோ: பிரபஞ்சம் நம்மைப் படைத்தது சில காரணங்களுக்காகவே என எண்ணுகிறேன், தற்செயலாக அல்ல. ம்.... அது தற்செயலாக இருக்கக்கூடாது என குறைந்தது நான் மட்டுமாவது விரும்புகிறேன்.

இலன்: அப்படியானால் இந்த பிரபஞ்சத்திற்கு ஓரு திட்டம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

ஹோடோ: பிரபஞ்சத்தின் தோற்றம் என்பது பிரக்ஞைதான். உலகளாவிய பிரக்ஞையை உருவாக்குவதற்குத் தான் பிரபஞ்சம் உழைத்துக்கொண்டிருக்கிறது. அதைச் செய்துமுடிக்கும்போது, மொத்த பேரண்டமும் பிரக்ஞையைக்கொண்டிருக்கும்.

இலன்: இந்த திட்டத்தில் தீமை எவ்வாறு பொருந்துகிறது?

ஹோடோ: நல்லவை மறக்கப்படும்போது தீமை உண்டாகிறது.

இலன்: நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கின்றீர்கள், ஆனால் உங்கள் நேரத்தை களவாட நான் விரும்பவில்லை.

ஹோடோ: நீங்கள் யாருடைய நேரத்தையும் களவாடமுடியாது ஏனென்றால் நேரம் என்பது ஒரு பொருளல்ல. உண்மையில் நீங்கள் நான் நேரத்தை உருவாக்க உதவுகிறீர்கள்.

இலன்: கர்ஜிஃப்பை எப்போது கண்டுகொண்டீர்கள்?

ஹோடோ: மர்செல் மார்செவுடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மிகவும் ஏழ்மையில் இருந்தேன். நானும் எனது மனைவியும் விடுமுறைக்கு தென்கிழக்கு ப்ரான்ஸிலுள்ள புனித பால் தி வென்சிற்கு சென்றோம். அங்கு ஒரு பெண்மனி கனிவாக நாங்கள் ஓய்வெடுப்பதற்கு ஓரு அறையை ஒதுக்கித்தந்தார். அவ்வறையில் ஒரு புத்தக அடுக்கு இருந்தது, நானும் வாசிப்பேன் ஆகையால், சுற்றி நோட்டமிட்டேன், லூயி பாவெல்ஸ் எழுதிய மான்செயர் கர்ஜிஃப் என்ற புத்தகத்தை கண்டேன். பேரார்வத்தோடு அதைப் படித்தேன். அப்படித்தான் நான் கர்ஜிஃபிடம் வந்து சேர்ந்தேன். அந்தப் புத்தகம் எனக்கு மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலன்: எவ்வழியில்?

ஹோடோ: எனக்கு மிகப்பிடித்தமான கருத்துகள் அவற்றில் இருந்தன. கர்ஜிஃப் சுயத்தைப்பற்றிப் பேசினார். அதில் சுயம் இருந்தது மேலும் அதில் அடிப்படை இருப்பு இருந்தது. ஒரு சுயம் மட்டும் அல்ல நமக்கு தொடர்ந்து மாறக்கூடிய நிறைய சுயங்கள் உள்ளன. அது நாம் உறக்கத்திலிருப்பது போலும் மேலும் விழித்தாகவேண்டும் என்பது போல.அது என் பார்வைக்குபட்டது. நான் யார், எனது சுயங்கள் என்னவாய் இருக்கிறது மேலும் அடிப்படை இருப்பு என்றால் என்ன என்பனவற்றை பார்க்கத் தொடங்கினேன். நாம் பல விஷயங்களாக இருக்கிறோம், ஒரு இதயம், ஒரு உணர்ச்சிகரமான மொழி, ஒரு உடலுறவு, ஒரு பாலியல் மொழி, ஒரு உடல், செய்கைகளிலான ஒரு மொழி. நாம் ஒன்றில் நான்காய் இருப்பதில், தொடங்கலாம். மேலும் என் உணர்வுகளோடு உரையாடும்போதும், எனது விருப்பங்களோடு உரையாடும்போதும், எனது தேவைகளோடு உரையாடும்போதும் நான் பன்மையாவதை பார்க்கத் தொடங்கினேன். ஆகவே என்னை வகுத்துக்கொள்ளவும் என்னை சேர்த்துக்கொள்ளவும் என்னால் முடிந்தது. அதில் கடுமையாக உழைத்தேன்.

இலன்: ஆக கர்ஜிஃப் உங்களின் ஆசிரியர்களில் ஒருவர்?

ஹோடோ: எனக்கு இரண்டு பாட்டன்கள் உண்டு. ஒருவர் கர்ஜிஃப் மற்றொருவர் ஆழ்நிலை மாயம் - கோட்பாடும் சடங்கும் எழுதிய எலிபாஸ் லெவி

இலன்: ஆனால் இது சாதாரண மாயம் கிடையாது.

ஹோடோ: இல்லை, அது உள்ளுணர்வறிவுக்கான தேடலாகும்.

இலன்: அலெயாந்த்ரோ, முடிந்தால் உங்கள் படைப்பு களுக்குத் திரும்பலாம் என விரும்புகிறேன். அதெப்படி ஒரு கரு படமாகவும், பிற புத்தகங்களாகவும் இல்லை நாடகத் தயாரிப்புகளாகவும் மாறுகின்றன ?

ஹோடோ: என்னுடைய புறப்பாட்டுப்புள்ளி கவிதைகள்தான். என்னுடைய கருத்துகள் எவ்விதமான வடிவெடுத்தாலும், அவையெல்லாம் கவிப் பிரகடனங்களே. கவிதைகளின் இறுதித்தன்மைக் குறித்து நாம் பேசியாக வேண்டும்.

இலன்: அதைச்செய்வோம்.

ஹோடோ: கவிதைகளின், கலையின் இறுதித்தன்மையென்பது அழகிற்கான தேடலே. என் படிப்பினைகள் அனைத்தையும் தொடரும்போது, அழகென்பதையோ, இல்லை என் விஷயத்தில் மெய்மையையோ அடைவது சாத்தியமற்றதாகிறது. ஏனென்றால் மொழியைப் பயன்படுத்தி நீங்கள் மெய்மையை அடைய முடியாது. ஆகவே மெய்மை என்பது மனிதர்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. நமக்கு அதற்கான சாமர்த்தியம் இல்லை.

இலன்: எனக்கு உறுதியாகத் தெரியவில்லை...

ஹோடோ: பாருங்கள், நாம் முடிவிலியை, நித்தியத்தை, தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத ஏதோவொன்றை கவர விரும்புகிறோம், ஆனால் நம்மால் அது முடியாது. அதிகபட்சம் நம் மூளையால் கவரமுடிவது அழகைத்தான். கவிதைகளைக்கொண்டு என்னிடம் என்ன விழுமியங்கள் இருக்கின்றன என தேட முயற்சிக்கிறேன். அவற்றைக் காட்சிப்படுத்த இல்லை, ஆனால் அவற்றின் அழகை பிறரிடம் காண்பிக்க - மக்களிடமும் வாசகர்களிடமும். நான் இங்கு வந்திருப்பது நீங்கள் கொண்டிருக்கும் அழகை உங்களிடம் காண்பிக்கத்தான், மனிதராக இருப்பதென்பது எவ்வளவு நேர்மறையான, ஆக்கபூர்வமான, அற்புதமான விசயம் என்பனவற்றை சொல்வதுபோன்றுதான். அதுதான் என் பொறுப்பு. அதைச்செய்வதற்கு பல்வேறு வழிகள் உண்டு. நான் நிலையான பிம்பங்கள் மற்றும் குறீயீடுகளை கொண்ட க்ராபிக்ஸ் வேலைப்பாடுகள், காமிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். திரைப்படமும் அதையே செய்கிறது அசைவினூடே.

இலன்: எனவே உங்கள் படைப்புகள் அணுகும் புள்ளிகளாகும்.

ஹோடோ: வேறுபட்ட நடைமுறைகளுடன் ஏனைய பிரபஞ்சங்களுக்கான வழிகள். ஒருவர் க்ராபிக்ஸ் நாவலை படிக்கும்போது, அவர்கள் பக்கங்களைத் திருப்புகிறார்கள், அதனால் அவர்கள் செயலாற்றுகிறார்கள். ஆனால் நீங்கள் திரைப்படம் பார்க்கும்போது மந்தமாக இருக்கிறீர்கள். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அவையெல்லாம் மாறிவருகிறது.

இலன்: என்ன சொல்லவருகிறீர்கள்.?

ஹோடோ: எதிர்காலத்தில் புத்தகங்கள், நாவல்கள் எல்லாம் குட்டி திரைப்படங்கள், இசையைக் கொண்டிருக்கும். திரைப்படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அனைத்தையும் அவைக்கொண்டிருக்கும். வெளிப்பாட்டுமுறைகளில் மிகப்பெரிய மாறுதலுக்கான ஆரம்பக்கட்ட நிலைகளில் இருக்கிறோம். நான் குழந்தையாக இருந்த போதிருந்த ஃப்ளாஷ் கோர்டன் உலகத்து விஷயங்கள்.

இலன்: அறிவியல் புனைவு.

ஹோடோ: ஆம். ஃப்ளாஷ் கோர்டன் தொலைபேசியில் பேசிக்கொண்டே தன்னுடன் பேசுபவரை பார்ப்பார். அவையெல்லாம் அந்தக்காலத்தில் சாத்தியமில்லாதது ஆனால் நாம் இங்கு வந்துவிட்டோம்.

இலன்: ஆனால் அரங்கக்கலை உயிருள்ள நடிகர்களை ஈடுபடுத்துகிறது. அது உயிர்ப்புடன் உள்ளது மேலும் சம்பிரதாயமானதுமாகும்.

ஹோடோ: மிகத் துயரமானதும்கூட ஏனென்றால் நிகழ்த்துதல் முடிவடைவதோடு அதுவும் மறைந்து போகிறது. நினைவுகள் மீந்திருக்கும், மேலும் நிகழ்த்துதலின் காணொளிகளும் இருக்கும் ஆனால் அவை உண்மையில் அரங்கக்கலையல்ல. நிகழ்வின் ஊடே விபத்துகள் நடக்கலாம், ஆனால் திரைப்படங்களில் ஒரு நடிகரும் உயிரிழந்தது இல்லை. அரங்கக்கலையில் ஒரு நடிகன் மேடையிலேயே இறந்துவிழலாம்.

இலன்: நீங்கள் இன்னும் அரங்கக்கலையில் ஈடுபடுகிறீர்களா?

ஹோடோ: ஆம். என்னுடைய புத்தகம் முடிவில்லா அரங்கக்கலை ஃப்ரான்சில் வெளியாகிறது. அவை என்னுடைய நாடக நிகழ்வுகளின் தொகுதிகளாகும். அவை பெல்ஜியத்திலுள்ள வென்ரிலோகுயிஸ்ட் பள்ளியில் நிகழ்த்தப்படுகின்றன. கொரில்லா என்ற ஓரங்கவுரையை எனது மகன் ப்ராண்டிஸ் ஐநூறுமுறைக்கும் மேலாக நிகழ்த்தியுள்ளார். நேரம் அமையும்போதெல்லாம் நானும் நிகழ்த்திவருகிறேன். ஆனால் திரைப்பட உருவாக்கம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு படமும் ஒரு வருடத்தை எடுத்துக் கொள்கிறது.

இலன்: நீங்கள் நேரக்கூற்றைப்பற்றி கூறியதில் உவகைக்கொள்கிறேன். நீங்கள் எப்போது வேலையை முடிப்பீர்கள், ஒரு கவிதையை காலையில் எழுத ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஹோடோ: ஒரு கவிதையை எழுதுவேன். பின்பு அதை ஒதுக்கி வைத்துவிடுவேன். மீண்டும் அதை திருத்திஎழுதுவேன். ஓவியர் வேலை செய்வதுபோன்றே. திரும்பச்செய்வேன் மீண்டும் மீண்டும் மீண்டும். கடைசியில் எனக்கு எடுத்துக்கொள்ளவோ இல்லை சேர்த்துக்கொள்ளவோ ஒன்றுமில்லாதவரை. பிறகு அது முடிவுறும்.

இலன்: அப்படியானால் அது ஒரு நாளையோ அல்லது ஒரு வருடத்தையோ அல்லது உங்கள் மொத்த வாழ்நாளையோ எடுத்துக்கொள்ளலாம், சரியா?

ஹோடோ: ஆம், ஆனால் வேறு சிலவும் இருக்கிறது. கவிதைகள் பணத்தை உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால் ஒருவரும் கவிதைப்புத்தகங்கள் வாங்குவதில்லை. கவிதைகளுக்கு அவர்கள் பரிசளிக்கிறார்கள், ஆனால் ஒருவரும் வாசிப்பதில்லை.

இலன்: ஏன்?

ஹோடோ: ஏனென்றால் கவிதை என்பது, சிறப்பாக இருப்பின், பொருளை நிறைசெறிவாகக்கொண்டிருக்கும் ஒரு கலையாகும். அது அவற்றை புரிந்துகொள்ளமிகக் கடினமானவையாக்குகிறது. அதே சமயம், ஏதாவது பழைய விசயத்தை எழுதிவிட்டு மேலும் அதைக் கவிதை என அழைக்கும் மோசமான கவிஞர்கள் இந்தப் பூமி முழுவதுமே இருக்கிறார்கள்.

இலன்: மொழிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு குறித்தும் உங்களிடம் கேட்க எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் உங்களை வாசிப்பவர்கள் உண்மையில் உங்களைத்தான் வாசிக்கிறார்களா?

ஹோடோ: நீங்கள் ஒன்றைத்தேர்வு செய்தாக வேண்டும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியவேண்டுமா அல்லது வேண்டாமா? வீனஸ் திமிலோக்கு கைகள் கிடையாது, இருப்பினும் அது ஒரு கலை வேலைப்பாடுதான். நீங்கள் சொல்ல வருவனவற்றிற்கு ஒரு மதிப்பு இருக்குமாயின் அது மொழிபெயர்ப்பில் கடந்துவிடும். மேலும் மொழிபெயர்ப்பாளர் சிறப்பானவராயின், மொழிபெயர்ப்பாளரின் படைப்பாற்றலுக்கான அடையாளங்கள் அங்கு கொஞ்சம் இருக்கும்.

இலன்: ஆகையால் மொழிபெயர்ப்பு என்பது அவசியமான தீங்காகிறது.

ஹோடோ: அவை அவசியமானவை என்றே நினைக்கிறேன். நாமெல்லாரும் மொழிபெயர்க்கப்படுவர்கள்தானே நான் உங்களிடம் சொல்லுவதென்ன வென்றால், நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைதான். நாம் இன்னும் தொலையுணர்வை அடையவில்லை. அதை நாம் பெறும்போது, நாம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.

இலன்: வாசிப்பதையும் மொழிபெயர்ப்பைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் டாரட் சீட்டுகளை படிக்க நியூயார்க் வருவது உண்மைதானா?

ஹோடோ: அது சரிதான். அக்டோபர் என்று நினைக்கிறேன், மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸில் வருகையாளர்களுக்கு டாரட் சீட்டுகளை படித்துக் கொண்டிருப்பேன்.

இலன்: இதற்கிடையில், உங்கள் ட்வீட் பதிவுகள் மூலம் லட்சக்கணக்கானவர்களுடன் தொடர்பில் உள்ளீர்கள்.

ஹோடோ: ட்வீட்டர் எனக்கு இன்னுமொரு வாயில். ஒரு ட்வீட் பதிவானது இன்னுமொரு வகையான கலைவெளிப்பாடாகும். அது ஒரு கலை. கவிதை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றில் சொற்றொடர்களை அமைப்பேன் என்னைப்பொறுத்தளவில் அது ஒன்றும் வெற்றுப்பேச்சல்ல.

இலன்: ஒரு நாளைக்கு எத்தனை இடுகிறீர்கள்?

ஹோடோ: பதினைந்து. எப்பொழுதுமே பதினைந்திடுவேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. பன்னிரெண்டு மணிக்கு அமர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு அவற்றை எழுதுவேன். சில சமயங்களில் நேரமிருப்பின் பதிலளிப்பதுமுண்டு.

இலன்: இங்கு அமெரிக்காவில், ஸ்டீவ் மார்டின் என்ற நகைச்சுவையாளர் ட்வீட் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

ஹோடோ: 365 ஞான ட்வீட் பதிவுகள் மற்றும் 365 காதல் ட்வீட் பதிவுகள் என நானும் இரண்டை வெளியிட்டிருக்கிறேன். ஆனால் நான் இப்போது வேலைக்கு திரும்பவேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

• அலேயாந்த்ரோ ஹோடோரோவ்ஸ்கியுடன் இலன் ஸ்டாவன்ஸ் நடத்திய ஸ்கைப் உரையாடலின் ஆங்கில வடிவின் தமிழாக்கமிது. (Jodorowsky on God, - Anti- Semitism And The Uses of Poetry - A Conversation with the Man Who Didn’t Make Dune)- அது ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது. அலேயாந்த்ரோவின் நாவலான “Where the bird sings best” ஐ மொழியாக்கம் செய்வதரான ஆல்ஃப்ரெட் மெக்காடம்ஸே இந்த உரையாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதன் சுட்டி இதோ https://lithub.com/alejandro-jodorowsky/

• நமக்கு வ்ஸ்கிகள் புதிது கிடையாது, ஏற்கனவே தஸ்தாயேவ்ஸ்கி, தார்க்கோவ்ஸ்கி என புளங்காகிதம் அடைந்து கொண்டிருப்பவர்கள். ஹோடோவும் ஏற்கனவே சாருவால் இங்கு (சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல், சாருநிவேதிதா உயிர்மை பதிப்பகம்) அறிமுகப்படுத்தப்பட்டவரே. தான் “நள்ளிரவு சினிமாக்களின் தந்தை” என அழைக்கப்படுவதாக ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ஹோடோ, இரண்டாயிரத்து பத்துக்கு முன்பு வரை அதுதான் அவரது பிரதான அடைமொழியாக இருந்திருக்கிறது, ஹோலி மவுண்டைன், எல் தோபோ,சான்தா சான்ங்ரே வழியாக அவர் அவ்வாறே அடையாளப்படுத்தப்பட்டார், இடையில் காமிக்ஸ், சைக்கோமேஜிக், டாரட் சீட்டுகள் என்று செயல்பட்டபோதும்.

• பௌண்டட் ஸ்கிரிப்டுகள், திட்டமிடல், ப்ரொஃப்சனிலசம் என்று ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் இயங்கிய காலம், ஹோடோவின் ‘டுயூன்’ எடுக்கும் முயற்சிகள் கடைசிவரை நிறைவேறவேயில்லை, ஹோடோ தனக்கிசைவான (டாலி, ஆர்சன் வெல்லஸ், ஹெச்.ஆர். மொபியஸ், பின்க் ஃப்ளாய்ட், மாக்மா) ஆளுமைகள் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு மொத்தப்படத்தையும் ஸ்டோரிபோர்ட் செய்து தலையணை அளவில் ஸ்டூடியோக்களுக்கு அனுப்பி வைத்தார். ஸ்டூடியோக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, ஆனால் ஹோலி மவுண்டைன் எடுத்தவரிடம் டைரக்ஷனை ஒப்படைக்கச் சம்மதிக்கவில்லை. இவைப் போன்ற தகவல்களுக்கு இந்த சுட்டியைப்பார்க்கவும் http://www.jodorowskysdune.com/ மேலதிகமாக டாகுமெண் ட்ரியின் டொர்ரெண்ட் லின்க் தேடுபவர்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடும்.

• டாகுமெண்ட்ரியின் ஓரிடத்தில் தடுமாற்றத் துடன் தன் பர்சில் உள்ள பணத்தை எடுத்து வசைப்பாடுவார், அதையேதான் தன் படத்தில் வேறு ஒரு காட்சியாகவும் வைத்திருப்பார், தன் நரகலை தங்கமாக்கும் ரசவாதம், ஹாலிவுட் அவர் கனவைநிராகரித்ததற்குக்காரணமாக அதையே சொல்லக்கூடும் - வருடக்கணக்கில் நேரத்தை எடுத்துக்கொண்டு செலவை பன்மடங்காக்கிவிட வாய்ப்பு அதிகமல்லவா.ஆனால் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் ஜிகெர் முதற்கொண்டவர்களை வைத்துக்கொண்டு ஏலியன் முதல் ப்ரொமொதியஸ் வரை ஹோடோவின் கற்பனையை அபகரித்து லாபம் ஈட்டின.

பின்னாளில் டுயூன் படமாக எடுக்கப்பட்டது, ஆனால் மற்றொரு ஜாம்பவனான டேவிட் லின்ச்சை வைத்து, ஹோடோவுக்கு பயம், படம் பார்க்க அழைத்த மகன்களிடம் வர மறுத்தார், லின்ச்சுக்கு டுயூன் எடுக்க முழுதிறமையுள்ளது, அவர் எடுத்து விடுவார். அதை தன்னால் திரையில் பார்க்க இயலாது என மறுத்தார். ஆனால் படம்பார்க்க ஆரம்பித்த கொஞ்சநேரத்தில் பயம் விலகி சந்தோசம் கொள்ள ஆரம்பித்தார். டேவிட் லின்ச் என்ற ஜாம்பவனால் தன்னுடைய டுயூனை எடுக்க இயலவில்லை என குதூகலம் கொள்கிறார். பணம் பொருட்டல்ல, தன் கற்பனையை தன் படைப்புத்திறனை சக படைப்பாளியும் எட்டிவிடகூடும் என்பதுதான் அவரது அச்சத்துக்குக் காரணம். நாம் அனைவரும் கடனில் உழல்வதை நன்கு அறிந்தவர், நாம் எல்லாரும் பொருளாதாரத்தின் அடிமைகள் என்பதை உணர்ந்தவர். நம் தமிழ்சினிமா சூழலை பிரதிபலிக்கக்கூடிய ஒரு நிலைதான் எனினும் இங்கு நமக்கு நிகழ்த்திக்காட்டும் வல்லமைபெற்றோர் அறவே இல்லையென்பதும், அதற்கானமுயற்சிகள் இந்த நிலப்பிரதேசத்தில் சாத்தியமில்லையென்பதும் கண்கூடு. திரைப்பட கலைஞன் என்ற மேதை என்பதோடு ஏன் ஹோடோவிடம் மீட்பருக்கான தகுதியைப்பற்றி தொடர்ந்து கேள்வி கேட்கப்படுகிறது. கிட்டதட்ட திரை வாழ்க்கை முடிவடைந்தது என்ற நிலையில்தான் ஹோடோ தன் வரலாற்றுப் படமாக நிதர்சனத்தின் நடனம் (Dance of the reality), மற்றும் அதைத்தொடர்ந்து முடிவில்லா கவிதைகள் (Endless Poetry)  என களமிறங்குகிறார். அதற்குள் Jodorowsky’s Dune டாகுமெண்ட்ரியும் வெளியாகிவிட்டியிருக்கிறது. அத்துடன் Blood into Gold: The Alchemy of Alejandro Jodorowsky  என்று ஹோடோவின் மொத்த திரைப்படங்களையும் Museum of arts and design ன் முன்னெடுப்புடன் திரையிடப்படுகின்றன, கூடவே அவரது நாவல்களுக்கும் மறுபதிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் வருகிறது. கிறுக்குக்கிழவனை அடையாளம் கண்டது உலகம். அப்பொழுதுமுதல் அவரை மீட்பராக்குவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம் நாம்.

• 8 லு மற்றும் ஆந்த்ரே ரூப்ல்வை (Andrei Rublev) விட சிறந்த சினிமாக்களை உருவாக்கியவரல்ல, மாதுளைகளின் வண்ணம் (The colors of Pomegranates)  போன்ற சிக்கலான குறியீடுகளைக் கொண்டதல்ல அவர் படங்கள். பல நூறு யேசு பொம்மைகளை அடித்து நொறுக்கிவிட்டு ஒரு யேசுவை மடியில் அமர்த்தி முகத்தை பிட்டு தின்னும் காட்சியாகட்டும் (Holy Mountain), இறந்த யானையொன்றின் இறுதி ஊர்வல மாகட்டும் (Santa sangre), காட்சிப்படுத்துதலில் முன் எடுத்துகாட்டின்றி கற்பனைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்பட்ட ஒளிக்குறிப்புகள் அவை. ஃபெலினி, தார்க்கோவ்ஸ்கியை விட ஒரு படிகூட சென்றிருக்கும் காட்சிகள் அவை. ஹோடோவின் முதல் முயற்சியான (La Cravate)  மாற்றப்பட்ட தலைகள், ஒரு மைம் வடிவிலான குறும்பட முயற்சி. அது தாமஸ் மன்னின் The Transposed Heads  என்கிற ஒரு குறுநாவலின் மைம் வடிவம். தான் புழங்கிய, தனக்கு கூடிவரும் ஒரு வடிவில் அதை செய்து பார்த்தார். பின்பு அதையே தன் முழு நீள திரைமுயற்சிகளிலும் திறம்பட செய்தார். (El topoவில் குள்ளப்பெண்மணியோடு வித்தையில் ஈடுபடும் காட்சிகள்).

நமது பொன்னகரத்தையோ, ரத்னாபாயின் ஆங்கிலமோ நமது திரைமேதைகளுக்கு தொட்டுப்பார்க்கும் சிறு ஆவல்கூட ஏற்படாதது குறித்துதான் “நாம் பொருளாதார அடிமைகள்” என்று ஹோடோ குறிப்பிட்டது பொருந்தும் என்றேன்.

• மேலே உள்ள உரையாடலில் கார்ஸ்ப்ஸ்கியின் Non Aristotelian Semanticsல் கூறியிருப்பவற்றினால் தான் அடைந்த தாக்கத்தை சொல்லியிப்பார், “நாய் வார்த்தைகளை உண்பதில்லை” அதற்கு ஒரு பின்கதை உள்ளது தன் வகுப்பின் இடையே மாணவர்களிடம் தனக்கு சட்டென்று பசிப்பதாகவும் தான் பிஸ்கட்டுகளை உண்ணப்போவதாகவும் தன் பையில்இருந்த ஒரு பாக்கெட்டைப் பிரித்து சாப்பிட ஆரம்பிக்கிறார் கார்ஸ்ப்ஸ்கி, முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் கொடுக்கிறார், அப்போது சட்டென்று பாக்கெட்டின் மேலட்டையைக் காண்பிக்கிறார், மாணவர்கள் வாந்தியெடுக்கும் விதமாக குமட்டுகின்றனர். அது நாய்களுக்கான ரொட்டி. ஆதலால்தான் நாய்கள் வார்த்தைகளைத் தின்பதில்லை என்பது உருவானது. நான் வார்த்தைகளைத் தேடித்தேடி உண்பவன் டாப் டென் வரிசை மீது அபரிதாமான நம்பிக்கை உண்டு. ஃபெலினி தார்க்கோவ்ஸ்கி என்றால் ஒழுகும். இப்போது ஹோடோரோவ்ஸ்கியென்றால் ஒழுகுகிறது. ஸ்பீடி கொன்சாலே, ஃப்ளாஷ் கோர்டன் என்றவுடன் கூகிளில் தேடி ஏமாந்து அமர்ந்திருக்கிறேன்.

• Naked lunch எழுதிய வில்லியம் பர்ரோசும் கோர்சிபியின் மாணவர்.

• கர்ஜிஃபின் (Gurdjieff)  ‘கொசுறு’ என்ற குறுங்கதை பிரமிளால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. (பிரமிள் விடுதலையும் கலாச்சாரமும் - விருட்சம்)

• ஹோடோவின் சொற்பப் படங்களும் ஐந்தாறு படைப்புகள், காமிக்ஸ் புத்தகம், டொரண்டினோ போன்ற புகழ்பெற்ற இயக்குனர்கள், லத்தீன் அமெரிக்க எழுத்துலக ஜாம்பவான்களை, வழக்காற்றியலைக் இடதுகையில் ஒதுக்கும் உரையாடல்கள், பேட்டிகள் போன்றவை என்னைப்போன்ற ரசிகக் கண்மணிகளின் விசிலடிக்கும் விரல்களை வாயில் இருந்து பிடுங்கச் செய்வன. இவை அனைத்தும்தான் ஹோடோ குறிப்பிடும் ‘மீட்பரு’க்கான மெட்டீரியல் அல்லது கருப்பொருட்கள்.

• தற்காலத்தில் மனிதக்கூட்டத்துக்கு ஒரு மீட்பரும், தூதுவரும் தேவைப்படுவதுபோன்று எந்த ஒரு நிர்ப்பந்தமும் தெரியவில்லை. அப்படியில்லை நீங்கள் எங்களுக்கான மீட்பரை அடையாளப்படுத்த வேண்டும் ப்ளீஸ் என்று கேட்பீர்களானால், நான் வழிமொழிவது ஹோடாவைத்தான். அவர் கலை நமக்களித்த புத்தம்புது மீட்பர்.

• அப்படிச்சொல்லி நானும் தப்பித்துக்கொள்ளலாம்.

மேல் செல்