கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

செந்நீராலும் கண்ணீராலும் கட்டமைக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு – கே.வி. மோகன்குமாரின் “உஷ்ணராசி”

முனைவர் இரா. செங்கொடி

பகிரு

இரண்டாம் உலகப் போர் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போருக்குப்பின் பொருளாதார சீர்குலைவு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் ஒருபுறமும், மக்களை வாட்டி வதைத்தன. மறுபுறம் பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சமூக விரோத செயல்களும் செழித்துப் பெருகின. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அன்றைய சமூகத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினர். வங்காளத்தில் தெபாக போராட்டம், தெலுங்கானாவில் நிஜாம்களுக்கெதிரான விவசாயக் கூலிகளின் போராட்டம், ஓர்லி பழங்குடி மக்களின் எழுச்சி என ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள் அந்தந்த மாநிலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதே காலகட்டத்தில் அண்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சர்.சி.பி.ராமசாமிக்கு எதிராகவும், பண்ணையார்களுக்கு எதிராகவும் நடைபெற்ற புன்னப்புரா-வயலார் போராட்டம் இந்திய விடுதலைப்போரின் பகுதியாக மட்டுமல்லாமல், அது கேரளாவின் வரலாற்றிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றிலும் சிறப்புமிக்கப் போராட்டமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டமே அன்றைய திவானின் கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தப் போராட்டமாகும்.

1938-இல் கயிறு உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், மீனவத் தொழிலாளிகள், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் என ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களிடையே கல்வியையும் கம்யூனிச சித்தாந்தத்தையும் ஊட்டி அவர்களை ஒன்றிணைத்து ஆளும் வர்க்கத்தை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்து மக்களுக்கான ஆட்சியைக் கட்டமைத்த கம்யூனிசத்தின் வரலாற்றை நமக்கு அறிமுகப்படுகிறது கே.வி. மோகன்குமாரின் உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம் என்னும் இந்நூல்.

நூறாண்டு கால கம்யூனிச வரலாற்றில் புன்னப்புரா-வயலார் போராட்டத்தில் ஓடிய பல்லாயிரக்கணக்கான மக்களின் செங்குருதியையும், வயலில் கதிரறுக்கும் பெண்கள், தெருவில் கதிர் அரிவாளோடு ‘ஜிந்தாபாத்’ முழக்கத்தை முன்னெடுத்த போராட்டங்கள், எதிரியை நோக்கி ஈட்டியை எறிவதற்குக்கூட வயதில்லா சூழலில் கற்களைக்கொண்டு களம்கண்ட சிறுவனின் உயிரிழப்பு, வன்புணர்வு, சிறைச்சாலைக் கொடுமை என அனைத்து வரலாற்றுச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர்.

கேரளாவின் ‘சத்தியதாஸ்’ என்னும் கம்யூனிசத் தோழருக்கும், வங்காளத்தில் சினேகலதா சாட்டர்ஜி என்ற எழுத்தாளருக்கும் மகளாகப் பிறந்து தில்லிப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி அபராஜிதா தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அவளது வேர்களைத் தேடி கேரளாவின் கரைப்புறத்தை நோக்கிப் பயணிக்கிறாள். அபராஜிதாவின் ஊடாக, அவளின் எழுத்தினூடாக இந்நாவலின் கதை சொல்லப்படுகிறது. அபராஜிதாவின் நிகழ்காலம், அவள் தந்தையின் கடந்த காலம் என நாவல் முன்னும் பின்னுமாகப் பயணிக்கிறது. இதன் வழியாக, 1930 முதல் 2014 வரையிலான கால கட்டத்தின் அரசியல் சமூகச்சூழலை இந்நாவல் பிரதிபலிக்கிறது.

கேரளாவின் அன்றைய விவசாயக் கூலிகளின் நிலையையும், ஜமீன்களின் அராஜகப் போக்கினையும் பெலத்தரை கேௗன், பனையேறி தானவன், வாடையில கொச்சாப்பன் போன்ற கதாபாத்திரங்களின் வாயிலாக நாவலாசிரியர் கே.வி. மோகன்குமார் பதிவு செய்துள்ளார்.

ஆதிக்க சக்திகளின் பிடியில் புழுக்களைப்போல நடத்தப்பட்ட புலைய, ஈழவமக்கள் எவருக்கும் நிலம் உரிமையானதாக இல்லை. பண்ணையார்களால் ஒதுக்கப்பட்ட நிலங்களிலேயே அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். குத்தகை நிலத்தின் விளைச்சல் முழுவதையும் பண்ணையார்களுக்கே கொடுத்துவிட வேண்டும். ஜமீன் கொடுக்கும் சிறிதளவு நெல்லை ஜமீன்தார்களின் கருணையாக நினைத்து அவர்களுடைய காலில் விழுந்து அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாழையைக் தவிர வேறெதையும் பயிர் செய்யும் உரிமை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இரண்டு மாதத்துக்கொருமுறை தேங்காய் பறிப்பதும் மட்டை உரிப்பதும் குடியானவர்களின் வேலையாகும். அவர்களுடைய மனைவியர்கள் இதனை ஜமீன்களின் வீடுவரை தலைச்சுமையாகவே சுமந்துகொண்டு செல்ல வேண்டும். இதில் அவர்கள் செய்யும் எந்த வேலைக்கும் அவர்களுக்கு கூலி வழங்கப்படாது. இதுதான் அன்றைய விவசாயக் கூலிகளின் ஒட்டுமொத்த வேலையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் பெலத்தரை கேளன், தனக்காக ஜமீனால் ஒதுக்கப்பட்ட குத்தகை நிலத்தில் இருக்கும் தென்னை மரத்தில், காய்பிடிக்காததால் பக்கத்திலிருக்கும் ஜமீனின் தென்னை மரத்திலிருந்து இரண்டு தென்னங்காய்களைப் பறித்ததற்காக, அதே தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொல்லப்படுகிறான்.

விவசாயக் கூலிகள் விலங்குகளை விடவும் கீழாக நடத்தப்பட்ட சூழலில், விவசாயக் கூலிப் பெண்கள் உழைப்புச் சுரண்டலோடு கூடுதலாகப் பாலியல் சுரண்டலுக்கும் வன்புணர்வுக்கும் ஆளாக்கப்- பட்டனர்.

‘கல்லுவீட்டு குஞ்சச்சன்’ என்னும் பெயர்கொண்ட ஜமீன், பனையேறிதானவன் மனைவி கொச்சுத் தங்கத்தைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயலும்போது, கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்தால் அவள் மீது கோபம் கொண்டு இரண்டுமாத கர்ப்பிணியான கொச்சுத் தங்கத்தை, கழுத்து வரை மண்ணில் புதைத்து வேட்டை நாய்களை ஏவிவிட்டு கொலை செய்கின்றான். இதனால் பனையேறி தானவன் மனநோய்க்கு ஆளாகின்றான்.

ஜமீன்களின் விவசாயக் கூலிகளில் யார் திருணம் செய்துகொண்டு வந்தாலும், அந்தப் பெண்களுக்கான முதலிரவை ஜமீனுடன்தான் கழிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இதற்கு அந்தக் கணவன்மார்களும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை, வெட்டய்கல் கடற்கரைக்குத் திருமணம் முடித்துவரும் கன்னிப்பெண், அன்று மாலைக்குள் கரைப்புறத்து ஜமீன் வெட்டய்க்கல் கோச்சாவின் அரண்மனைக்கு அழைத்துவரப்பட வேண்டும். இது கரைப்புறத்தின் நடைமுறையாக இருந்துள்ளது. இதற்காக ஒரு கணக்குப் புத்தகமே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு வந்த முதல் கன்னி ஒளரோன் கூட்டிக்கிட்டு வந்த பொண்ணு வெரொனிக்கா. கடையில் இப்பதிவேட்டையும் புதிதாக வருகின்ற பெண்களைத் தயார்படுத்துபவளாகவும் மாறுகின்றாள். அந்த மாளிகைக்கு 64-வது கன்னி கொச்சு நீலாண்டன் கூட்டிக்கொண்டு வந்த குஞ்ஞுநீலி தொடர்ந்து 7 மாதங்கள் கோச்சாவின் மாளிகையில் குடியமர்த்தப்பட்ட நிலையில், கர்ப்பினியான குஞ்ஞுநீலி கொலை செய்யப்பட்டு மாளிகையின் பின்புறத்து வாய்க்காலில் பிணமாக மிதக்கிறாள். அவளது கணவன் கொச்சு நீலாண்டனும் கொலை செய்யப்படுகின்றான்.

ஜமீன்தார்களின் உழைப்புச் சுரண்டலும் பாலியல் சுரண்டலும் தலைவிரித்தாடுகின்ற சூழலில், ஆங்காங்கே சில மாற்றங்கள் அச்சமூத்தில் ஏற்படுகின்றன. ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் கல்வி அறிவினைப் பெற்றுவிடக்கூடாது. அவ்வாறாக, அவர்கள் கல்வி பெறுவது தங்களுக்கான சவக்குழியை உருவாக்கும் என்ற அச்சத்தால் காலங்காலமாக கல்வியை மறுத்து வந்துள்ளனர்.

ஓர் ஆசிரியர் நினைத்தால் எத்தகைய மாற்றங்களை இச்சமூத்தில் உருவாக்க முடியும் என்பதையும், கல்வியறிவு எவ்வாறு ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலிகள் உரிமைகளைக் கேட்கவும், ஜமீன்களின் சுரண்டலை எதிர்க்கவும் எவ்வாறாக உதவியது என்பதை, பல்வேறு நிலைகளில் பதிவு செய்துள்ளார்.

விவசாயக் கூலிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வியைப் போதித்து, அதன் வழியே, நிலபிரபுத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கம்யூனிஸ்டுகள் போதிக்கின்றனர். இந்நாவலில் ஈழவக் குழந்தைகளுக்கும் புலையக் குழந்தைகளுக்கும் கொச்சு குட்டனாசான் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார். இப்புதினத்தின் பதினான்கு வயது சிறுவன் அனகாசயன் மிக முக்கியமான பாத்திரமாக நூலாசிரியரால் படைக்கப்பட்டுள்ளான். இதன் விளைவாக, காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட இவர்களின் குரல் அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கிறது. இதனை அனகாசயனின் கேள்வி வழியாக முன்வைக்கிறார்.

நாம வேல செய்யற வயல்லருந்து நம்மோட கஞ்சிக்குள்ள கதிருகள அறுத்தெடுக்கக் கூடாதா? தேங்காயும் இளநியும் எடுக்கக் கூடாதா?" பசியின் பிடியில் துவண்டுபோய் தூக்கம் வராமல் படுத்திருந்த ஒரு ராத்திரியில் அவன் கேட்டான். “அதிக பிரசங்கம் பேசாத பையா. தம்புரான்க கேட்டுடப் போறாங்க. அம்மா காளிக்குட்டி அவனைத் திட்டினாள். கரைப்புறத்து பூமி முழுவதும் இந்த ஜமீன்களிடமிருந்தன. நிலம் முழுவதும் ஜமீன்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்? மனுஷங்களோட, பறவைகளோட மிருகங்களோட ஒட்டுமொத்த உயிரினங்களோட பொதுசொத்து தானே இந்த பூமி?” அனகாசயனின் மனதில் அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் கொதித்தபடி இருந்தது.

ஒருநாள் கயிறு உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து திரும்பி வருகிற வழியில் அவன் அப்பாவிடம் கேட்டான். நாமெல்லாம் எப்பவும் பாவங்களாகவே வாழுறோம். எவ்வளவு வேலை செஞ்சாலும் நமக்குன்னு ஒரு கதியும் இல்ல. என்னைக்கும் பட்டினியும் தந்திரமும்தான் மிச்சம். மொதலாளிங்க மட்டும் பணக்காரங்களாகவே இருக்காங்க. அவங்கல்லாம் ஆடம்பரமா வாழறாங்க. ஏம்ப்பா நாம மட்டும் கதியில்லாம இருக்கோம்?

நம்மோட தலைவிதி அப்பா ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். அவன் அதே கேள்வியைக் கயிறு உற்பத்தி தொழிற்சாலைத் தொழிலாளர் பிரபாகரனிடன் கேட்டான்.

என்னையும் உன்னையும் எல்லா முதலாளிகளும் ஏமாத்தறாங்கடா. வயல்லயோ தோட்டத்திலயோ கயிறாபிஸலயோ நமக்குத் தர வேண்டிய சரியான கூலிய அவங்க தர்றதேயில்ல. நம்மளப் போட்டு புழுஞ்செடுத்துட்டு நாலுகாசு குடுத்திட்டு அவனுங்க சுகமா இருக்கானுங்க

நாம அதைக் கேட்கக் கூடாதா மொதலாளிகிட்டா?” கயிறு பாக்டரியில எவ்வளவு தொழிலாளிகள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தா முதலாளியின் ஆட்களால என்ன செய்ய முடியும்? துடைப்பக் குச்சிகளைப்போல ஒவ்வொரு குச்சியையும் சுளுவாக ஒடிக்கலாம். துடைப்பத்தை உடைக்க முடியுமா?”

விவசாயக் கூலித் தொழிலாளர்களைப் போலவே மீனவத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதையும் மீனவப் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல்களையும் மதத்தின் பெயரால், மதத்தலைவர்களால் துண்டாடப்பட்டு தூண்டப்பட்ட மனிதர்களின் நிலையையும், மதவெறியையும் சைமன் ஆசான் என்னும் பாத்திரத்தின் வாயிலாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

கிறித்தவ திருச்சபையில் வேதபாட வகுப்பெடுக்கும் சைமன் அந்தோணி பாதிரியார் அடிப்படையில் பொதுவுடைமை சித்தாந்தத்தில் மிகுந்த நம்பிக்கைக்கொண்டவர். இயேசு கிறிஸ்துவையே அவர் ஒரு கம்யூனிஸ்டாகத்தான் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வேதபாட வகுப்பெடுக்கும் அந்தோணி பாதிரியார் திருவசனத்துடன் கம்யூனிசத்தையும் கலந்து வகுப்பெடுத்ததால் தெய்வத் துரோகியென பட்டம் சுமத்தப்பட்டு திருச்சபையிலிருந்து விரட்டப்படுகின்றார். சைமன் ஆசான் அம்மீனவ மக்களுக்கு அடிப்படைக் கல்வியையும் கம்யூனிசத்தையும் போதிக்கின்றார். அன்றைய சூழலில் மதகுருமார்களும், படகு உரிமையாளர்களும் மீனவர்களின் உழைப்பைச் சுரண்டியதையும், மீனவப் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல்களையும் இதற்குத் தீர்வாக கல்விப் பெறுவதன் அவசியத்தையும், சைமன் ஆசான் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட மீனவச் சங்கத்தையும் சைமன் ஆசான் பாத்திரத்தின் வழி நாவலாசிரியர் கே.வி. மோகன்குமார் எடுத்துரைக்கின்றார்.

சைமன் ஆசான் கடலைப் பார்த்துக்கிடந்தார். மீனவத் தொழிலாளர்களை இந்தச் சுரண்டலிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். அவர்களைத் தெளிவடையச் செய்ய வேண்டும். கிடைக்கும் நேரங்களில் உட்கார வைத்து எழுதச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கூடவே, உரிமையுணர்வையும் மீனின் விலையைக்கூட கணக்குப் போடத் தெரியாதவர்கள்".

நீங்க எழுத கத்துக்கணும், எழுதவும், படிக்கவும் கத்துக்கணும். அப்பதான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும். அப்படியாக சைமன் அந்தோணி சைமன் அசான் ஆனார்.

கம்யூனிச சித்தாந்தத்தால் ஒன்றுபட்ட கூலித் தொழிலாளர்கள் ஒன்றுகூடி விவசாயச் சங்கங்கள், கயிறு பாக்டரி சங்கம், மீனவர் சங்கம், பனையேறும் தொழிலாளர் சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தி அதிகாரத்திற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினர். உழைப்புச் சுரண்டலுக்கெதிராக அனைத்துச் சங்கங்களிலும் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் குரல் எழுப்பினர். யுத்தக் காலத்தில் நெல்லுக்கு விலை ஏறியது. நிலவுடைமையாளர்கள் பணமாகக் கொடுத்திருந்த கூலியை நெல்லாகவே தரவேண்டும் என்றனர் தொழிலாளர்கள். கைனக்கரி, தகழி போன்ற இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் கிளைகளை உருவாக்கினர். தோழர் பி.கே. வர்கிஸ் வைத்தியர் தலைமையில் திருவிதாங்கூர் விவசாயத் தொழிலாளர் யூனியன் உருவானது. தொழிலாளர் சங்கங்களின் வாயிலாகப் போராடி பல வெற்றிகளையும் பெற்றனர். நிலபிரபுக்களுக்கெதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் வெற்றிபெறும் போதெல்லாம் நிலச்சுவான்தாரர்கள் அதனை ஒடுக்குவதற்காக சில விஷமச் செயல்களை முன்னெடுப்பர். கீழவெண்மணியில் ஜமீன்தார்கள் மேற்கொண்டதைப்போல அறுவடைக்கு வேறு ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வருவதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைவாய்ப்பினை மறுத்து, வறுமையினை முன்னெடுத்து முதலாளி வர்க்கத்தின் ஆணைக்கு தொழிலாளிகளைக் கட்டுப்பட வைக்க முற்பட்டனர்.

விவசாயத் தொழிற்சங்கத்தினர் போலவே, கயிறு உற்பத்தி தொழிற்சாலைத் தொழிலாளர்களும் உரிமைக்காகப் போராடினர். இவர்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கு ஜமீன்களுள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சர்.சி.பி.ராமசாமியின் ஆதரவை நாடினர்.

கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கு ஜமீன்தார்களோடு கைகோர்த்துக் கொண்டு பட்டாளத்தையும், ஐந்து ரூபாய் போலீசையும் ரெளடிகளையும் ஏவிவிட்டனர். திவான் சர்.சி.பியின் அரசு எந்திரம் தொழிலாளிகளுக்- கெதிராகப் பேயாட்டம் ஆடியது. அடக்குமுறை, வன்புணர்வு, கொலை, கொள்ளை, சிறைச்சாலை சித்ரவதைகள் என ஏராளமான வரலாற்றுத் தரவுகளை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

சர்.சி.பியின் கொடுங்கோன்மையையும், அதனால் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளையும் தோழர் கிருஷ்ணப்பிள்ளை, தொழிலாளர் தோழர்களுக்கு வகுப்பெடுப்பதாக அமைந்துள்ள உரையில் நுலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சர்.சி.பி.ராமசாமியின் அரசு பயங்கரவாதம் பட்டாளத்தையும் காவல்துறையையும் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களைக் கசக்கிப் பிழிந்தது. மறுபுறம் ஒன்றிணைந்த ஜமீன்கள் ரௌடிகளின் மூலமாகப் போராட்டத்தை முன்னெடுத்தத் தோழர்களைக் குறி வைத்து உயிர் வேட்டையையும், கணவன்மார்களின், சகோதரர்களின் கண்முன்னே வன்புணர்வுகளையும் அரங்கேற்றியது. பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, குளங்களிலும் குட்டைகளிலும் வீசப்பட்டனர். குடிசைளைத் தீக்கிரையாக்கி கட்டாயமாகக் குடிபெயர நிர்பந்தித்தனர். இவ்வடக்குமுறைகள் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வடிவத்தை, வேறு வடிவத்திற்கு எடுத்துச்செல்ல வழி வகுத்தன. பட்டாளத்தின் பீரங்கி மிரட்டலும் காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகளும் தொழிலாளர் தோழர்களைச் செங்கொடியுடன், குத்தீட்டி ஏந்த வைத்தன. ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்ட இத்தொழிலாளர்கள் அழித்தொழிப்பு வேலைகளிலும் ஈடுபட வழி வகுத்தது. தோழர்களின் இவ்வணுகுமுறையை எதிர்பார்க்காத ஜமீன்தார்களும் சர்.சி.பியும் செங்கொடி இயக்கத்தைக் கண்டு அச்சமுற்றனர். தங்களது வீட்டில் படுத்துறங்கவே அச்சப்பட்ட ஜமீன்தார்களைக் காப்பாற்ற திவான் சர்.சி.பியின் அரசு கம்யூனிஸ்டு இயக்கத்தை முற்றிலுமாக அழிக்கத் திட்டமிட்டது. ஏற்கெனவே தன்னுடைய அமெரிக்கன் மாடலுக்கு எதிராக இருந்த கம்யூனிஸ்டுகள் மீதான கோபம் சர்.சி.பிக்கு கம்யூனிஸ்டு இயக்கத்தினை முற்றிலும் தடை செய்வதற்கு ரெகுலேஷன் 1 சட்டமுறையை அமல்படுத்தியது.

கம்யூனிஸ்டு கட்சியின் பத்திரிகை, துண்டறிக்கை பொதுக்கூட்டம் போன்றவற்றிற்குத் தடை விதித்ததோடு பொது வேலைநிறுத்தத்திற்கும் தடை விதித்து இராணுவ ஆட்சியை நிலைநாட்டினர். இரண்டு மாதங்களில் 12 துப்பாக்கிச் சூடுகளை வெறும் குத்தீட்டிகளால் மட்டுமே எதிர்கொண்டு நிறையத் தோழர்களையும் பலிகொடுத்து பெண்களும் குழந்தைகளும் அனாதையாக்கப்பட்ட நிலையிலும் அடக்குமுறைக்கெதிராகச் செங்கொடி இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. உலகெங்கும் உரிமைக்கான போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினைப் பொறுத்தே அவ்வியக்கங்களின் வெற்றித் தோல்விகள் அமைந்துள்ளது. அந்த வகையில் புன்னப்புரை–வயலார் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மகத்தானதாக இருந்துள்ளதை வரலாற்று ஆதாரங்களோடு பதிவு செய்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். குட்டநாட்டில் கரம்பி, செந்திலைப் போன்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த கூலிக்கதிர் போராட்டம் வெற்றிப் பெறுகின்றது. இது தொழிலாளி வர்க்கத்தின் முதல் வெற்றியாகக் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். போராட்டமும் ஊர்வலமும் சர்.சி.பி.ராமசாமியால் தடைசெய்யப்பட்டிருந்த சூழலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் தங்கள் கதிர் அருக்கும் அரிவாளையும், நெல் அடிக்கும் கோலின் நுனியில் செங்கொடி கட்டிக்கொண்டும் மதர் என்பவர் தலைமையில் முன்னெடுத்த வரலாற்றினையும் நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். கூலித் தொழிலாளர்கள் வசித்த குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு குடிபெயர நிர்பந்திக்கப்பட்டபோது, ஜமீன் ஆண்களுக்கு எதிராக அரிவாளுடன் களம் இறங்கும் வீரப்பெண் கரம்பியின் வரலாறும் காட்டப்பட்டுள்ளது.

ஜமீன்களாலும் காவல்துறையாலும் விரட்டப்பட்ட தொழிற்சங்கத் தோழர்கள் முகாம்களை உருவாக்கி அதிலிருந்து தங்களது போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட முகாமை வளைத்துக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தும் காவல்துறைக்கெதிராக வெறும் குத்தீட்டிகளோடு போராடும் தோழர்களின் போராட்டத்தை ஒரு போர்க்களக் காட்சியைப்போல் கண்முன் விரிய காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர்.

கண்மூடித்தனமான காவல்துறையின் தாக்குதலில் குற்றுயிரும் குலைவுயிறும் ஆக்கப்பட்ட நிலையிலும் தோழர்களின் ‘ஜிந்தாபாத்’ முழக்கம் அவர்களின் மனஉறுதியைக் காட்டுகின்றது. அரசின் ஆவணங்களில் புன்னப்புரை–வயலார் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 என்று சுருக்கப்பட்ட நிலையிலும், அங்கு வீசிய காற்றில் பிணத்தின் வாடை வீசியது என நாவலாசிரியர் குறிப்பிடுவதன் வாயிலாக, அங்கு கொன்று குவித்து எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானத் தோழர்களின் உடல்களும் அதனை உரைப்பதற்கு நூலாசிரியர் எடுத்துக்கொண்ட மொழியும் குறிப்பிடத்தக்கது.

கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றுப் பதிவே இந்நூலின் பிரதானமாக இருந்தபோதிலும் இந்நாவலின் ஊடாக ஈழவர் குறித்த வரலாற்றையும், கேரள மக்களிடம் நிலவிய பண்பாட்டுக் கூறுகளான மருத்துவமுறை, உணவுமுறை போன்றவற்றையும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் கேரளாவில் ஏற்பட்ட உணவுப்பஞ்சம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

1938-இல் நான்காயிரம் தொழிலாளர்களால் ஆலப்புழையில் தொடர்ந்து மூன்றுவாரம் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம், இரண்டாம் உலகப்போரினைத் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சத்தால் சர்க்கரை, மண்ணெண்ணெய் இல்லாத காரணத்தால், கடுங்காப்பி அருந்து பழக்கப்பட்ட கேரள மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக காரம்மிக்க காந்தாரி மிளகாயை அரைத்து நாவில் தடவிக்கொண்டு கடுங்காப்பி அருந்திய வரலாறு போன்றவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

அனைத்துப் போராட்டங்களிலும் அரசின் அடக்குமுறை, சிறைச்சாலைக் கொடுமைகள் என்பவை தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. சிறைச்சாலைக் கொடுமைகள், அடக்குமுறையின் மூலமாக அடக்குமுறையின் மூலமாகப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது.

இப்புதினம் வரலாற்றுப் புதினம் என்பதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது.

இன்றைய இனவிடுதலைப் போராட்டங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாகச் சில போராளிக் குழுக்களின் மீது விமர்சனங்கள் எழுவதுண்டு. ஆனால் உரிமைக்கானப் போரில் சிறுவர்களை நிர்பந்திக்கத் தேவையில்லை. வறுமை மறுக்கப்பட்ட சூழலில் வாழும் சிறுவர்கள் இயல்பாகவே உரிமைக்கானப் போராட்டத்தில் ஈர்க்கப்படுகின்றனர் என்பதே வரலாறாக உள்ளது. இந்நாவலில் பதினான்கு வயது அனகாசயன் வாயிலாக இக்கருத்தினை வெளிப்படுத்தியிருப்பார். இந்நாவலாசிரியர் அனகாசயன் குறித்து குறிப்பிடும்போது, “அனகாசயன் புன்னைப்புரை-வயலார் போராட்டத்தின் சிவப்புத் தாள்களில் ஒருவன். மேனாசேரி முகாமோட முதுகெலும்பு, மகாபாரதத்தின் அபிமன்யுவைப்போல என்றெல்லாம் குறிப்பிடுவார். போராட்டத்தில் குத்தீட்டியுடன் தன்னைப் பங்கேற்க அனுமதிக்காத சூழலில் கல்லெரிந்து போராடும் அனகாசன், உரிமை மறுக்கப்பட்ட மண்ணில் வாழும் ஒவ்வொரு குழந்தையின் குறியீடாகும்.

அரசியலில் அனைத்து இயக்கங்களிலும் அர்ப்பணிப்போடு கூடிய தலைவர்களை நாம் அடையாளம் கண்டதுண்டு. கம்யூனிச இயக்கத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான தோழர்கள் தொழிலாளர் வர்க்கத்தில் தோன்றியவர்களே. இவர்களின் சித்தாந்தமும் செயல்பாடும் பெரும்பாலும் வேறுபடுவதில்லை. மானிடவியல் ஆய்வாளர்களைப்போல மக்களோடு மக்களாகப் பயணிப்பவர்களே. இப்புதினத்தில் தோழர் பத்ரோசும் கிருஷ்ணப்பிள்ளை தோழரும் இதற்குச் சான்றாக உள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தின் சூழ்நிலைக்கும், தோழர் பத்ரோசின் சூழ்நிலைக்கும் எந்தவொரு பொருளாதார மாறுபாடும் இருக்கவில்லை. தோழர் பத்ரோசின் தம்பி வறுமையின் காரணமாகப் புண்ணாக்குத் தின்பவனாகக் காட்டப்படுகின்றான். இத்தகுச் சூழலிலும் பத்ரோசின் தாய் மார்க்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் தாயைப்போல வீட்டில் இருப்பதை வைத்தும், மற்றவர்களிடம் இருந்து பெற்றும் இயக்கத் தோழர்கள் அனைவரின் பசியையும் போக்குபவராகவே உள்ளார். இன்றைய சூழலில், இரு வார்டு உறுப்பினர் கூட ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் மேம்பாடடையும் சூழலில் தோழர் பத்ரோஸ் தான் கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுபவராகவே இருந்துள்ளார். தான் கொண்ட கொள்கைக்காக உழைத்த கம்யூனிஸ்டு கட்சி, ஆட்சிக்கட்டிலில் இருந்தபோதும் கட்சிக்காக குடும்ப இழப்பு, சிறைவாசம் என அனைத்தையும் மேற்கொண்டு கட்சியும் கைவிட்ட நிலையில் தனது இறுதி நாட்களிலும் சைக்கிளில் கயிற்றுத் தடுக்குகளை அடுக்கிக்கொண்டு வியாபாரம் செய்கின்றார்.

ஒரு கூட்டத்தில் தோழர் கிருஷ்ணப்பிள்ளை உரையாற்றும்போது தொழிலாளி ஒருவன் பசியோடு புண்ணாக்குத் தின்பதைப் பார்த்த தோழர், அச்சமூகத்தின் ஏழ்மை நிலையை எண்ணி கண் கலங்குவார். அத்தோடு மட்டுமல்லாமல் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம் இங்குப் பக்கத்தில் தான் உள்ளது. அதில் ஏராளமான நெல்மணிகள் சேமித்து வைக்கப்- பட்டிருக்கின்றது. இருப்பினும், ஏழைக்கு உணவில்லை என்றுரைத்து கண் கலங்குவார்.

இப்புதினத்தில் பெண் பாத்திரங்கள் அனைவரையுமே புரட்சி தீபங்களாகத்தான் நூலாசிரியர் படைத்துள்ளார். கைத்தரை பாப்பி அழகும் அறிவும் வீரமும் நேர்மறை எண்ணமும் சிக்கல்களைத் தீர்க்கும் திறமும் கொண்ட பெண்ணாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இப்புதினத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் பாப்பியோடு சேர்ந்து மரோட்டிக்காய் பறிப்பர், பாட்டுப்பாடுவர், மகிழ்வுக் கொள்வர். அவரின் முடிவு நமக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவர் யார் என்பதில் தான் இப்புதினத்தின் கடைசி முடிச்சு உள்ளது.

கடவுளின் சொந்த நகரம், குழந்தைகளின் பூமி என அனைவராலும் விரும்பப்படும் கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அங்குக் கொஞ்சும் இயற்கை அழகினையும் தாண்டி இந்நாவலை வாசிப்பீர்களே- யென்றால் உங்களால் உஷ்ணராசியை உணர முடியும்.

“அவுட்லுக் ஏட்டின்” கட்டுரையாளர் அஜித்குமார் இவ்வாறாகக் குறிப்பிடுகின்றார். வேளாண்மை சட்டத்தை எதிர்த்து தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் போராட்டத்தைத் தெலுங்கானா போராட்டம், தெபாகா போராட்டம், கேரளாவின் புன்னப்புரா-வயலார் போராட்டம், தமிழகத்தில் நடைபெற்ற கீழத்தஞ்சை விவசாயிகளின் எழுச்சிக்கு இணையானவையென குறிப்பிடுகின்றார். இன்னும் நாம் விவசாயிகளின் நிலை குறித்து கவலைகொள்ளாமல் நமது பங்கேற்பினைத் தவிர்ப்பதன் வாயிலாக மீண்டுமொரு வரலாற்று நாவல் உருவாக மட்டுமே வழிவகுப்போம். இன்றைய சூழலில் விவசாயிகளின் சிக்கல்களை உணர்வோம். விழித்துக்கொள்வோம். பங்கேற்போம்.

முனைவர் இரா. செங்கொடி, 
உதவிப் பேராசிரியர், 
சர் தியாகராயர் கல்லூரி,சென்னை – 21
[email protected]

குறிச்சொற்கள்

மேல் செல்