கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ஐந்தவித்தான் நாவல் குறித்து…

வே. மு. பொதியவெற்பன்

பகிரு

4. ஆங்கிலேயப் பின்நவீனத்துவ அல்மார்க்ஸிய விமர்சகராக டேவிட்லாட்ஜை இனம்காணும் நோயல் Modes of Modern Writing (1977) நூலில் அவர் வகுத்தளித்த ஆறு நவீனத்துவ உத்திகளைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

“ஆங்கிலேய, அமெரிக்க ஐரோப்பிய பின்நவீனத்துவப் புதினங்களின் ஆறு பொதுமைக் கூறுகளாக Contradiction, Permutation, Discontinuity, Randomness, Excess, Shortcircuit எனப்படும் முறையே முரண்ஆக்கம், விகாரசேகர வாய்ப்பாட்டாக்கம், தொடர்பின்மை, தீவிர ஒழுங்குமுறையின்மை, மிகை மின்சுற்றுமறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வடிவ இயல் சடாங்க வருணனைச் சட்டகம் வகுத்தார்” - நோயல் ஜோசப் இருதயராஜ் (கோட்பாட்டு விமர்சனயுகம் விமர்சனக் கோட்பாட்டுயுகம்’ ப.200) இவற்றைக்குறித்த விளக்கங்கள், தத்துவார்த்தப் பரிமாணம் ஒடுங்கிய அல்லது தவிர்த்த அழகியல், வடிவஇயல், பூர்வீக அமைப்பிய வருணனைத்தளங்களில் இயங்கியதால் கோட்பாடாகாமலே
முடங்கிப் போய்விட்டன என்பாரவர். இவற்றையே முறையே முரண்படுத்தல், வரிசைப்படுத்தல், தொடர்ச்சியின்மை, துழாவும் தன்மை, மிகை, குறைச்சுற்று எனக்குறிப்பிடும் க.பூரணச்சந்திரன் இவற்றை விதந்தோதி விளக்குவார். (பின்நவீனத்துவம் ப.101)

`4.1. யதார்த்தத்திற்கும் மொழிக்குமான தொடர்பை அறுப்பதே முரண்படுத்தலெனும் எடுத்துரைப்பு உத்திக்கான காரணம் என்பார் பூரணச்சந்திரன். இத்தகு உத்திகள் ஐந்தவித்தானுக்கு ஊடாக எவ்வாறு காணக்கிடக்கின்றன எனக் காண்போம்.“புதுச்சேரியின் பின்-காலனிய மழைக்கென்று தனித்த ஈரமும் வாசனையுமுண்டு. வெள்ளைநகரத்தில் பெய்யும் பிரெஞ்சு ஓதெகொலாஞ்மழை கறுப்புநகரத்தின் சாராயநெடி கொண்ட மழை” (ப.13) “நான் குரூர ரசனை கொண்டவள், அது போலவே எளிய நகைக்சுவை துணுக்கையும் கண்களில் நீர்வரச்சிரித்து ரசிப்பவள்” (123) இங்கு வாசனையும் நெடிகப்பிய வாடையும், குரூர ரசனையும், கண்ணீர் கசிய ரசிக்கும் எளிய நகைத்துணுக்கு ரசனையும் முரணாக்கமாய்ச் சங்கமிக்கின்றன.

4.2. மிகை என்பது வாசகனுக்குத் தேவையற்ற விதமாக மேலும் மேலும் தகவல்களை அளித்துக்கொண்டே சென்று அதன் மூலமாக அவனது விளக்கத்தைத் தவிர்க்கக் காரணமான உத்தி என்பார் பூரணச்சந்திரன். இன்னொரு விதமாகவும் இதனை அணுகலாம். “குறிப்பாக வன்முறை - செக்ஸ் - இவற்றை மிகவும் பெரிதுபடுத்திக்காட்டும் உத்தி. சமூகம் தார்மீகத்தோடு இருக்கின்றது என்று யார் சொன்னாலும் அது பாசாங்குத்தனத்தின் வெளிப்பாடுதான் என்பதை அப்பட்டமாகச் சொல்லத்தான் Excess பயன்படுத்துகிறார்கள்” - ஆ. விஜயகணேஷ் (‘சிற்றேடு’ ஜூலை 2015)

மக்கள்தொகையைவிட புதுச்சேரியில் பூனைகளின் எண்ணிக்கை அதிகம், அவற்றின் பாலியல் குரோதங்களைப் பற்றிப் பேசவேண்டும், குருதி நசநசத்த யோனிகளை மோப்பமுற்று பாம்புகள் அவற்றில் அடையும் என்றெல்லாமும், நகர விரிவாக்கத்தால் பாம்புகள் மறைய கடற்கரையில் ஒதுக்கப்படும் உணவாக மீன்கள் உள்ளவரை புதுச்சேரியில் பூனைகளுக்குப் பஞ்சமில்லை எனவாங்கும் இடைப்பிறவரலாய் ஊடறுத்து நீளும் தகவல் விவரணையை மிகை உத்தியின் பாற்படுத்தலாம்.

இன்னொரு வகையில் அம்மாவின் குரூர வன்முறை, செக்ஸ் செயல்பாடுகளையும் மிகை உத்தி எனலாம். அம்மா பிம்ப உடைப்பாக இவ்வுத்தி கையாளப்பட்டுள்ளது. ஏலவே அம்மா பிம்ப உடைப்பு தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவலிலும், எம்.வி.வெங்கட்ராமின் ‘பைத்தியக்காரப்பிள்ளை’ சிறுகதையிலும் காணக்கிடக்கின்றது.

4.3. மின்சுற்று மறிப்பென்பது பிரதியில் ஆசிரியனின் திடீர்ப் பிரவேசக் குறுக்கீடு. இதனைப்புனையப்பெற்ற பாத்திரங்களோடு சேர்ந்து நிஜமான ஆசிரியனும் கதையில் பங்கேற்பது என்பார் பூரணச்சந்திரன். இருவேறு கூறுமுறைகளாலான கதைமையின் முதற்பிரதிச்சொன்மையில் கதைசொல்லி எழுத்துருவான மாதவன் மற்றொரு எழுத்துருவான தேவகியிடம் கூறுமுகமாக இடம்பெற்றுள்ள கூற்றுக்கள் ஊடே இத்தகு உத்தி காணக்கிடக்கின்றது.“அப்பாவின் கருணை, அம்மாவின் குரூரம், இவை இணையும் புள்ளியிலிருந்து எழுத எத்தனித்தேன். எழுத்து ஒரு கலை. என்னிடம் எல்லோரையும் போல ஒருகதை இருக்கிறது. ஆனால், கலை இன்னும் கைகூடிவரவில்லை. எழுத இயலவில்லை” (ப.79) மற்றைமையைச் சந்தேகித்துவிட்டு சுயத்தைக் கொண்டாடியது போதும். சுயத்தின் மேல் ஐயுறவுகொள் என்பது பின்நவீனத்துவம் என்பார் எம்.ஜி.சுரேஷ் (‘பறை - 2016’ ப.119). இவ்வகையில் சுயத்தின் மீதான ஐயுறவாகும் ஆசிரியனின் சுயஎள்ளல் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். “நான் ஓர் உயிருள்ள கதை. என் அப்பா ஒரு பிரதி. அப்பிரதி தந்த அலுப்பால் அதை உயிரோடு கொளுத்தியவன் நான். அம்மா என்ற பிரதி புனல்வாதத்திலும் அப்பா என்ற பிரதி அனல்வாதத்திலும் அழிந்தன. என்னை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதும்போதே வாசிக்கிறேன். கடைசிச்சொல்லை எழுதவும், என் உயிர் பிரியவும், அதாவது, நான் என்னை வாசித்து முடிக்கவும் மிகச்சரியாக இருக்கும். தேவகி என்னைத் தொடுத்து ஒரு நாவலாக்கிவிடு”(ப.81) முதற்பிரதிச்சொன்மையில் கதைசொல்லியாக மாதவனே இடம்பெற்றிருக்க - இரண்டாம் பிரதிச்சொன்மை மாதவன் - தேவகி உரையாடலாக நிகழ்த்தப்படுவதாகின்றது. அதற்கான ஒரு ‘கொளுவாக - முன்னுற உணர்த்தும், சூசகபீடிகையாக இக்குறைசுற்றுக்குறுக்கீட்டை வாசிக்க இடந்தருகின்றது. “உன்னை யாரோ எங்கிருந்தோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இது ஒருவித மனநோய். இந்நோய் சிறுவயதிலிருந்தே உனக்கு இருக்கிறது. உன் அக்காவை வாசித்தாய். அம்மாவை அப்பாவை வாசித்தாய் உன் மனம்போன போக்கில் அவர்களின் இயக்கவிதிகளைத் தீர்மானித்தாய்” (ப.91) - என பூமிதா அப்பாவை வாசிக்கிறாள்.

4.4. பூமிதா அப்பாவிற்கு ஒரு கதையைச் சொன்னாள். அதனை தன்னிடம் சொன்னதேன் எனக்கேட்கும் அப்பாவிடம் காரணமில்லாமல்தான் சொன்னேன் என்கிறாள் அவள். என்றபோதிலும் அக்கதையை அவள் சொன்னதற்கான காரணம் தொடரும் உரையாடலுக்கு ஊடாகப் பிடிபடலாகின்றது. “அப்பா, கதைகளைக் கலைத்து அடுக்கி நமக்கான வாழ்க்கையைக் கட்டுகிறோம். கதையாகச் சொல்ல சாத்தியமற்ற ஒரு வாழ்க்கையை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். திருப்பிச்சொல்லும் சாத்தியமற்ற ஒரு கதைகூறலாக இருக்கிறாய். வாழ்ந்து முடித்ததை நாவலாக எழுதலாம். ஆனால் ஒரு நாவலை வாழ்ந்து பார்க்க முடியாது” எனத்தொடர்கின்றபோதுதான் அப்பாவை வாசிக்கும் அவள் வாசிப்பு நீட்சி கொள்கின்றது. இச்சொல்லாடல் களம் இருபிரதிகளிலுமே திரும்ப வரலாகின்றது.

“கதைக்குள் வாழும்போது வலியுமில்லை, கண்ணீருமில்லை. வரலாற்றில் வாழும்போது தன்னிலை என்பது இல்லை (116)  கவிதையில் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றை, வாழ்தலில் சோதித்துப் பார்க்கமுடியாது. (140) மனவெளி என்பது கலைகளில் தவிர வேறெங்கும் பதிவாவதில்லை.” (143-144) 

இங்கு நான் கையாண்டு கொண்டிருப்பது துழாவும் உத்தியைத்தான். குறைசுற்று உத்தியை எடுத்துரைப்பதன் ஊடாகவே நான் துழாவி எடுத்ததை எனக்கேற்ற முறையில் கலைத்து அடுக்கி என் பிரதிவிளையாட்டைத் தொடர்கின்றேன்.

“வாசகன் பல்வேறு சம்பவங்களுக்குள் ஏதொன்றையும் துழாவியெடுத்து தனக்கேற்ற வரிசைமுறையில் அமைத்துக்கொள்ளலாம். ஒரு விளையாட்டு போல் பல்வேறு வரிசைமுறையில் அமைத்துப் பார்க்கலாம்” - க.பூரணச்சந்திரன் (‘பின்நவீனத்துவம்’ ப.101)

நாவலை வாழ்ந்து பார்க்க முயலும் மனவெளி மனிதனான மாதவனிடம் அவன் மனநோயைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் முகமாகவே ஒரு பெண்ணுடன் மூவருமாகக் கூட்டுவாழ்க்கை நெறியில் வாழ்ந்து பிரிந்த இரட்டையரின் கதையை எடுத்துரைக்கின்றாள். இத்தகு கூட்டுவாழ்க்கை நெறிக்கதை இருபிரதிகளிலும் வேறுவேறு ஊடிழைப்பிரதியாக இழையோடிக் கிடக்கின்றன. பூமிதா சொன்ன கதை கன்னட மண்ணில் நடப்பதாக அமைந்தது. ஓர் இருபாலுறவுக் கவிஞனை அவன் காதலியும் கவிஞனின் காதலனான ஒரு நடிகனும் சேர்ந்தே உயிருடன் எரிக்கின்றனர். பேராசிரியையும் ஆகிவிட்ட அவளுக்கு ஒரு தீக்குச்சியைக் கூடச் சரிவரப் பற்றவைக்கத் தெரியவில்லை. இச்சூழலிலுங்கூட அவளுக்கு இங்கும் கவிஞன் எப்படிப் பற்ற வைப்பதென சொல்லித்தருகின்றான். அவளும் அப்படியே அவனுக்கு கொள்ளி வைக்கின்றாள். சத்தமின்றி எரியத் தொடங்கும் முட்டாள் கவிஞனின் ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ’ முணுமுணுப்பும் மெல்லமெல்ல இல்லாமலாகின்றது. கதைகேட்ட மாதவன் எந்தவொரு காலத்திலும் கவிகள் ஏமாளிகளாகவே இருக்கிறார்களெனச் சொல்லிக்கொண்டே போகலாம் எனவும், பிரெஞ்சு புதியஅலை இயக்குநர் ஒருவரின் கருப்பு வெள்ளை படத்திலும் இப்படி ஒருகதை இருக்கின்றதெனவும் தொடர்கின்றான். “இந்த நாடகத்தின் ஆரம்பக்கதைப் போக்கிலிருந்து நாம் விலகி வந்துவிட்டோம். இந்தக் கடலோர நகரத்திற்கு நாம் வெளியிலிருந்து வந்தவர்களாக இந்த நாடகத்தை ஆரம்பித்தோம். பிறகு நாடகப்போக்கில் நமது சொந்த வாழ்க்கையை நுழைத்துவிட்டோம்” (116)

“நாம் நடித்துக்கொண்டிருக்கும் இந்நாடகத்தில் ஆங்காங்கே பிரதிக்கு வெளியே செல்கிறோம். சொந்த சொல்லாடல்களைப் பிரதியில் சேர்க்காதீர் என்று இயக்குநர் எச்சரித்தாலும், நாமும் எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும் சுனை சுரக்கும் பேச்சு நம்மைப் பெருவெள்ளமாய்ச் சூழ்ந்து காலத்தில் என்றோ மறைந்துபோன ஆற்றின் தடத்தில் அடித்துக்கொண்டு செல்கிறது” (130) இவையும் குறைச்சுற்று வெளிப்பாடுகளேயாகும். இவை இரண்டாம் பிரதிச்சொன்மையில் இடம்பெற்றுள்ளன. ஆண் பெண் இருமை எதிர்வு கடந்த இருப்பு சாத்தியமா என பேசுமுகமாக மாதவன் தேவகியிடம் கேட்பதாக இரட்டையர் கதை திரும்பவரலாக மீண்டும் இங்கே ஊடிழைப் பிரதியாகின்றது. 1864இல் மிலனில் வாழ்ந்த சிம்பொனியிலான இரட்டைக் கலைஞர்கள் ழியோவனி அந்தோணியோ இரட்டையர்களும் ழியோவனிக்கு ஒலிவியாகவும் அந்தோனியோவிற்கு ஒளிவியாகவும் வாழ்ந்த அவளும் ஆகிய மூவரின் கதைதான் இது. இக்கதை ‘பியானோ’ எனும் பெயரிலான திரைப்படமாகவும் வெளியாகியுள்ளதாம்.
இக்கதையினையும் கலைத்துப்போட்டு மீளஅடுக்கி நம் வாசிப்பின் கதையை உருவாக்கிக்கொள்ளலாம். ஊடிழைப்பிரதி எனும் கருத்தாக்கம் பிரதிச்சொன்மைக்கு ஊடே வெறும் இடைச்செருகலாக ஏதோ ஒன்றைச் செருகி வைப்பதன்று. மாறாக அச்சொன்மையின் பிரதியியல் தளத்துடன் பொருந்தி வரக்கூடியதுமாகும், புத்துரு கொள்ளும் திரும்ப வரவியலாக மீளாக்கம் பெறக்கூடியதுமாகும். கவிதையை, நாவலை, கலையை வாழ்ந்துபார்க்க முயலும் மனவெளி மனிதர்கள் என்பதே இருவேறு ஊடிழைப் பிரதிகளின் மையச்சரடும் - இத்தகைய மனவெளி மனிதர்களை எழுத்துருகளாகக் கொண்டியலும் மூலப்பிரதிச் சொன்மையின் பிரதியியல் தளத்துடன் பொருந்தக்கூடியதாகவே அமைந்தியல்கின்றது.

“இரண்டு ஆண் - ஒரு பெண், இரண்டு பெண் - ஓர் ஆண் என்பதாகக் கூட்டமைப்பை உருவாக்கத்தனியுடைமை எனும் மனவிழைவு தடையாக உள்ளது. குடும்பம் என்ற தனியுடைமை அமைப்பை வைத்துக்கொண்டு பொதுவுடைமை என்ற சமூக அமைப்பைக் கட்டமுடியாது. மார்க்ஸ் ஏங்கெல்ஸ்போல வேறு இரட்டையர் யாரும் இதுவரை உருவாகவில்லை. பொதுவுடைமை போலவே இரட்டை மூளையில் ஒற்றைச் சிந்தனையும் பெருங்கனவாக அடைய முடியாத ஏக்கமாக மயானத்தில் பெருமூச்சாக உலவுகிறது” ஆண் பெண் இருமை எதிர்வு கடந்த இருப்புச்சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை
என்பதற்கான நிரூபணங்களாகவே ஊடிழைப்பிரதிகள் இரண்டும் காணக்கிடக்கின்றன. இத்தொடர்பிலான மேலதிக விசாரத்தை எழுப்புவதாகவே ஐந்தவித்தானின் பிரதியியல் தளம் அமைந்துள்ளது இது பற்றி இறுதியில் காண்போம்.ஒப்புமை’ எனும் ஃபூக்கோவின் ஒரு தனிக்கருத்தாக்கம் பொருள் கோளியலைப் புரிந்துகொள்ள சிறந்த வாயிலாக அமைந்துள்ளது. இத்தொடர்பிலான ஃபூக்கோவியப் பார்வைகளைப் பற்றி காண்போம். “பதினாறாம் நூற்றாண்டின் இறுதிவரை ஒப்புமை என்ற சிந்தனை மேற்கத்தியக் கலாச்சாரத்தில், ஒரு தனிப் பெருஞ்சிந்தனையாய் செயல்பட்டுள்ளது” - மிஷேல்ஃபூக்கோ (ப.அ.கு. ப.54)

“ஒப்புமை (Resemblance) மூலம்தான் நாம் நூல்களின் உரைகளைப் புரிந்துகொள்கிறோம் என்றும், கண்ணுக்குக் காணக்கூடியதும் காணக்கூடாததுமான பல உண்மைகளைப் புரிந்துகொள்கிறோம் என்றும் கூறுகிறார் (ப.54)”

“மொழி என்ற அடையாளத்திற்கும் அர்த்தத்திற்கும் நடுவில் ஓர் உறவு உள்ளது. அந்த உறவு ஒப்புமையின் அடிப்படையில் செயல்படுகிறது என்பது ஃபூக்கோவின் எண்ணம்” - தமிழவன் (மே.து.55)

ஒப்புமைச் சிந்தனையானது மொழிமூலம் வெளிப்படுகையில் மொழி பயன்படுத்தும் சில அடையாளங்களே குறிகள் (Signs) ஆகுமென்றும், மொழியைக்குறிகளின் தொகுப்பு என்று நினைப்பவர்களுக்கு உரையையும் குறிகளின் தொகுப்பை ஏற்கமுடியுமென்றும் தமிழவன் குறிப்பிடுகிறார்.ஆதிமுதல் அந்தம்வரை இப்பிரதியாக்கத்தில் வாசனைகளின் வாசிப்பும் (மணங்கமழ்தல்) வாடைகளின் நெடியடிப்பும் கலந்த மயக்கமாகவே காணக்கிடக்கின்றன. வாடைகளும்கூட வாசிக்க (வாசம் கமழக்கூடியனவாகவும் மலர் மணங்களில்கூட பிணவாடை வீசுவனவாகவும் தன் உரைமொழியின் ஆதிக்கத்தின் கீழ்க்கொணர்ந்து விடுகின்றான் இப்பனுவல் ஆசிரியன். புதுச்சேரிப் பின்காலனிய மழையின் தனித்தவாசனை, மொழிவாசனை, கடவுளின் வாசனை, நட்சத்திரவாடை, புராதனவாடை, கருவறையில் குமையும் வௌவால்வாடை, மாதவிலக்குநெடி, விந்தின்மணம், குங்குமத்தின் வாடை, மீன்குழம்பின் வேதியல் வினையூக்கி வகிபாகம் எனவாங்கு எல்லாவற்றிற்கும் உரை காணும் பிரதிவிளையாட்டை நிகழ்த்துகின்றான் பனுவலாசிரியன்.

“பசியின் அழகியலை மீன்குழம்பின் மணத்தைக்கொண்டுதான் வரையறை செய்யவேண்டும். அதேபோல பசியின் மூர்க்கத்தை மீன்குழம்புச் சோற்றைக்கொண்டுதான் அளவிடமுடியும். மீன்குழம்பிற்குப் புலன்களை விகசிக்கச் செய்யும் காமமார்ந்ததன்மை அதிகம். புதுச்சேரிப் பெண்களின் அபரித வன்முறைக்கும் மீன்குழம்பே கிரியாஊக்கியாக இருக்கிறது. மீன்குழம்பு செய்த அன்று காமம் பொய்த்தால் இல்லறம் சிறக்காது” (ப.36)

இவ்வாறு நவீன பரிமேலழகரின் பாரித்துரைப்பில் பசியின் அழகியலுக்கும், மூர்க்கத்திற்கும் (பசி என்றால் குடற்பசி உடற்பசி இரண்டையுமே குறிக்கும்) மீன்குழம்பே  வேதியல் வினையூக்கியாகிவிடுகின்றது.“கோயில் கருவறைக்குள் குமையும் வௌவால் நெடி உனது அல்குல் பரப்பெங்கும் கமழ்கிறது. என்னை அடைகாப்பவர் மீது ஒருவித குமைந்த நெடிவீசும். இந்நெடி என் அம்மாவின் கருவறைக்குள் நானிருந்தபோது முதன்முதலில் பழக்கமானது. அது கடவுளின்நெடி. உனது மாதவிலக்குக் குருதியிலும் அதேநெடி வீசுவதை முகர்ந்திருக்கிறேன். ஆணின் விந்திற்கும் அதே மணம் தெரியுமா?” (ப. 106)

வாசனை (நறுமணம்)/ வாடை (வீச்சம்), புனிதம் /தீட்டு இத்தகு இருமை எதிர்வுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைச் சமரசப்படுத்தும் இடைநிற்றல் (Meditation) என்றிதனைக் குறிப்பிடலாம். கோகிலாம்பாள் கோயில் கட்டும்பணியில் அவன் குடும்பம் ஈடுபட்டிருந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான அம்மாவின் கருப்பைக்குள் இருந்தபோதே மாதவனின் பிரக்ஞை விழித்துவிட்டது. இத்தகைய கருவிலேயே திருவுடைய பிறவியான தொன்மமாகவே மாதவன் எழுத்துரு காணக்கிடக்கின்றது. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலில் வரும் எழுத்துருவின் காதுகளில் விதவிதமான ஒலிகள் கேட்பதுபோல் என் ‘மீய்காய் கெரு’ சுழல் நெடுங்கதையின் எழுத்துருவின் மூக்கில் விதவிதமான வாசனை வாடைகள் நுகரப்படுவது போல் மாதவனின் மோப்பசக்தியும் விசித்திரமாக வெளிப்படலாகிறது. அவன் தாயின் கருவறையில் அடைகாக்கப்பட்டபோதே அவனால் முகரப்பட்ட கோயில் கருவறை வௌவால்களின் நெடி அவன் வாழ்நாள் முழுதும் அவனால் வெவ்வேறு வடிவிற் கூடாகவும் முகரப்படுவதாய் தொன்மப்படுத்தப்படுகின்றது. “லெவிஸ்ட்ராஸ் புராண மனிதன் சிந்தனைக்கும் நாகரிகமனிதன் சிந்தனைக்கும் உள்ள ஒரு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார்.

நாகரிக மனிதனின் கருத்தமைப்புகள் சூட்சுமமானவை, புராண மனிதன் பயன்படுத்தும் எதிர்மறைகள் புலனுணர்வுத் தன்மையும், புலனுணர்ச்சித்தன்மையும் வாய்ந்தவை. அவை பிரத்தியட்சம் கொண்டவை என்கிறார். அவற்றைத் தொடமுடியும், காணமுடியும், உணரமுடியும், ஆனால் புராண மனிதனும் சரி நமதுகால மனிதனும் சரி எதிர்மறைகளின் மூலம் சிந்தித்தனர். முரண்பாடுகளின் தீர்வுகளைத் தேடினர். இடைமைகளின் மூலம் அவர்களின் சிந்தனை வளர்ந்தது இந்த அம்சங்களில் அவர்களுக்கிடையில் வேறுபாடு இல்லை என்கிறார்” -ந.முத்துமோகன் (‘மார்க்சியக் கட்டுரைகள்’ ப. 596)

‘பொதுவாக புராணக் கதைகள் எதிர்மறைப்படுத்தல் மூலம் இயங்குகின்றன, இடைமைப்படுத்தல் மூலம் முரண்பாட்டின் உக்கிரத்தன்மையை படிப்படியாக அகற்றுகின்றன’ - லெவி - ஸ்ட்ராஸ் (‘மேலது’ ப.594)

இத்தொடர்பில் இடைநிற்றல் என்பது அமைப்பு மையவாத நோக்கில் ஓர்மை பூர்வமாக கையாளப்படும் சில உத்திகளோ செயல்முறைகளோ அல்ல மாறாக அவற்றால் நாம் கையாளப்படுகிறோம் என்னும் பூரணச்சந்திரன் அதன் சைவ சித்தாந்தக் கருத்தாக்கத்தையும் குறிக்கின்றார். இடைநிற்றல் (Meditation) குறுக்கிடல் (சைவ சித்தாந்தச் சொற்களில் ‘திரோதானம்’) இடை நிற்றல் என்பது விளக்குதல், மறைத்தல், ஆகிய இரு பொருள்களும் கொண்டது. எந்த ஓர் ஊடகமும் இந்த இருபண்புகளையும் பெற்றதுதான். ‘ஒளிதரும்’ பகுதியையும் ‘நிழல்தரும்’ பகுதியையும் கொண்டதே விளக்கு.

மொழியும், அர்த்தத்தைத் தெளிவுபடுத்தவும், அதேசமயம், செய்தித்தொடர்பில் இடைவெளி ஏற்படுத்தவும் செய்கிறது. எனவே இடைநிற்றல் என்ற சொல், குறுக்கீடு என்றும் சொல்லலாம்” - க.பூரணச்சந்திரன் (‘அமைப்பு மய்யவாதமும், பின் அமைப்புவாதமும்’ ப. 49)இன்னொரு வகையில் அழகியல் நோக்கில் இதனை அருவருப்பின் அழகியலின் பாற்படுத்தலாம். மற்றொரு கோணத்தில் தத்துவநோக்கில் இதனை தந்திரமகாசமய அணுகுமுறையின் பாற்படுத்தலாம். இந்துமத நோக்கில் விலக்குகள் என தடை செய்யப்படுவனவே தந்திரமகாசமய நோக்கில் கொண்டாட்டத்திற்கு உரியன. “குங்குமத்தின் வௌவால்வாடை என் சுவாசத்தை இடறியது. நூற்றாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வரும் அந்த வாடை கடவுளின் வாசனையா?” (ப. 119)

குங்குமம் என்பது தந்திராவில் மாதவிலக்கின் குறியீடு. பெண்குறியும், கருப்பையும் (பூரணகடா) தந்திராவில் வழிபாட்டிற்கு உரியனவே.

5.3. இவற்றிற்கு எல்லாம் அப்பாலாக இனி நாம் ஃபூக்கோவிய நோக்கிலான ‘ஒப்புமை’க் கருத்தாக்க வகைமைகளுக்கு வருவோம். “அவள் வந்து சென்றபிறகு வீட்டுக்குள் பழைய மூத்திரவாடை கமழ்கிறது. இது அக்காவின் அந்தக்காலத்துமணம். நட்சத்திரவாடை” (ப.92)

“அவள் நட்சத்திரமண்டலத்திலிருந்து கீழிறங்கி என்னைத்தேடி விளையாட வருவாள். அவள்மீது மூத்திரவாடை வீசும். அது கோகிலாம்பாள் கோயிலின் இருண்ட பிரகாரத்து வௌவால்களின் குமைந்த வாடையை ஒத்ததாய் இருக்கும்” (ப.167)

இது பிரதிச் சொன்மையின் இறுதி வாசகம். இதிலுள்ள ‘ஒப்புமை’யை ஃபூக்கோவிய நோக்கிலான ஒப்புமைச் சிந்தனைக்கு ஊடாகக் காண முற்படுவோம். ‘ஒரு சித்திரத்தில் முகம் ஒன்று நட்சத்திரம்போல் ஒளிவீசும்படி சித்திரிக்கப்பட்டால் ஃபூக்கோ அதில் மனித ராசிக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒப்புமை வெளிப்படுகிறதென்கிறார். இப்படி நான் குறித்த ஒப்புமைகள் மேற்கத்திய சிந்தனைமுறையைத் தீர்மானித்தன என்பது அவரது எண்ணம்.’ - தமிழவன் (ப.அ.கு.ப.55)

முதல்வகை Convenientia 2. இரண்டாம்வகை Acumulatio 3. மூன்றாம்வகை Analogy 4. நான்காம்வகை Sympathy என நால்வகைத்தாகும் என்கிறார் தமிழவன்.

இப்பிரதிச் சொன்மையின் மூத்திரவாடை நட்சத்திரவாடை ஆகிவிடுவதனைப் ஃபூக்கோவிய நோக்கிலான ‘Analogy’ எனும் மூன்றாம்வகை ஒப்புமையின் பாற்படுத்தலாம்: “முதல்வகையின் ஓரிட ஒருங்கிணைப்பையும், இரண்டாம் வகையின் ஈரிட இணைவையும் ஏற்றுச்செயல்படுகிறது. இவ்வொப்புமை தொடராகவும் வட்டமாகவும் செயல்படுவதால் கண்ணுக்குத் தென்படாத ஒப்புமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது செடிக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒப்புமை இந்த மூன்றாம் வகை ஒப்புமைச் சிந்தனையாகும்.” – தமிழவன் (மேலது ப. 56)

“ஒரு பிரதியின் தளத்திற்குள் மற்ற பிரதிகளிலிருந்து கொள்ளப்படும் பல்வேறு உரைகள் வசனங்கள் வெட்டிக்கொண்டு தமக்குள் ஒன்றை யொன்று சமன் செய்துகொள்கின்றன.” - ஜுலியாகிறிஸ்தெவா (ப.149)

“ஜுலியாகிறிஸ்தெவாவின் பல்பிரதித்துவம் (Intertextuality) என்பது வரன்முறையான செல்வாக்கு மரபு - என்னும் கருத்துகளை உடைக்கிறது. அது பல்வேறு குறித்தல் ஒழுங்கமைவுகளை உடைக்கிறது. அது பல்வேறு குறித்தல் ஒழுங்கமைவுகளின் இடமாற்றங்களுக்கான களம் என்பது கிறிஸ்தெவாவின் கருத்து” - க.பூரணச்சந்திரன் (அமைப்பு மய்யவாதமும்… ப.179)

ஊடிழைப் பிரதிகள் குறித்து மீளவும் தொடர்வோம். ஆண்பெண் இருமை எதிர்வு கடந்த இருப்பு சாத்தியமா எனும் கேள்விக்கு அது சாத்தியமில்லை என்பதற்கான நிரூபணங்களாகவே ஊடிழைப்பிரதிகள் இரண்டையும் கண்டோம். இத்தொடர்பிலான மேலதிக விசாரத்தை எழுப்பக் கூடியதாகவே பிரதியியல்தளம் அமைந்துள்ளவற்றை இனி காண்போம். “ஆணும் பெண்ணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் சேர்ந்தே இயங்கமுடியாது. எதிர்காலத்தில் உலகப்போர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அணிபிரிந்து மூள்வதாக இருக்கும்.” (ப.139)

இக்கூற்றின் தொடர் நீட்சியாகவே சிம்பொனியிலான இரட்டையர் கதை ஊடிழைப்பிரதியாக இடம்பெறலாகின்றது. இத்தொடர்பில் உலகளாவிய
மனஅலசல் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், ழாக்லெக்கானின் கருத்தரங்கக் கட்டுரைகளை வெளியிடுபவரும், லெக்கானின் மருமகனும் ஆன ஜாக்குவஸ் அலென்மில்லர் உடனான அவார் (ஹவா) உடைய செவ்வியிலான பதிவுகளையும் ஒருசேரக் காண்போம்:

“ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் சொற்களால் ஆன (சொல்லாடல்) உலகில் வாழ்கின்றனர். அச்சொற்கள்தாம் அவர்களுக்கான உறவை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது. அன்புகொள்ளும் முறைமைகள் (Modalities) அவை சார்ந்துள்ள பண்பாட்டுச்சூழல்களோடு அதீத உணர்வு நிலையினால் பிணைக்கப்பட்டுள்ளன” - ஜாக்குவெஸ் அலன்மில்லர் (‘மற்றமை: 7’ மே2016. ப.70)

மேலை சமூகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் ‘ஒருவருக்கொருவர் என்பது புறம் தள்ளப்பட்டு’ ஒன்றிற்கு மேலான (Multiple) என்பது நன்முறையில் நடந்தேறி வருகின்றதெனவும் ‘பெருமைக்குரிய வாழ்நாள் முழுதுமான அன்பு’ ‘Ideal Model’ மெதுவாக தோல்வியைத் தழுவ ஆரம்பித்துள்ளதென்றும் தொடர்கின்றார்.

“ஒரு பாலினத்திற்கும், மற்றொரு பாலினத்திற்கும் இடையேயான உரையாடல் என்பது சாத்தியமில்லாததுதான் என்பதை ஏக்கப்பெருமூச்சுடன் விளக்குகிறார் லெக்கான்” - அலன்மில்லர் (மேலது ப.71)

‘தாய்மை’ எனும் கீழைமரபின் கருத்தாக்கமும் ‘தந்தைமை’ (Motheror) எனும் மேலைமரபின் கருத்தாக்கமும் முயங்கும் வெளியில் உடம்பெனும் பிரதியைஒற்றைப் பாலடையாளத்திலிருந்து பன்முகப்பால் பிரதியாக வாசிக்க முயலும் புதிய பொருள்கோடலைக் காண்போம்.

“ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் என்றானபிறகு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் தாய்மையாதல் என்றவினை மட்டுமே வேறுபட்டு நிற்கிறது என்பதை அறிந்தேன். தாய்மைக்குள் ஒடுங்குவதே பெண்ணைக் கடக்கும் பெருவழிப்பயணம்”

“அறிவை என்றாகி நின்ற மணிமேகலை என்ற உருவகமே பெண்ணிலையின் உச்சம். தாய்மை என்பது உடம்பின்நிலை அன்று, அது அறிவின்நிலை. மணிமேகலையே அறிவின் உச்சம். அவளே தாய்மையின் எல்லையின்மை.” (ப.156-157)

இங்கே தாய்மை எனும் கருத்தாக்கம் வள்ளலாரியமும் தந்திராவும் கார்ல்யுங்கும் முயங்கும் வெளியில் உருப்பெறுகின்றது எனலாம். மணிமேகலையின் ‘மைத்ரிபாவம்’ புத்தபோதப் பேறேயாகும்.

“அடிப்படையில் யாருடைய உடம்பும் ஒற்றை இருப்பால் ஆனது இல்லை. அறிவுமட்டும் அன்று உடம்பும் காலத்தின் பல அடுக்குகளாலும் வரலாற்றின் பல பதிவுகளாலும் மேலே மேலே படிந்து உருவான படிவுப் பாறைகளைப் போலச் சமைந்தது” (ப.158)

“தந்தைமை என்ற சொல் ஆழமும் கனமும்கூடியது. தாய்மை என்ற பதத்திற்கு எதிர்ப்பதமாக தந்தைமையை நீ கூறவில்லை. ஆணையும் பெண்ணையும் எதிரெதிராக நிறுத்துவதில் எனக்கும் உடன்பாடில்லை. ஓர் உடம்பை ஒற்றையாக நிறுத்தி எதிர்கொள்வதில் வரும் பிரச்சினை இது.” (ப.115)

இங்கே தந்தைமை எனும் பதப்பிரயோகம் தாய்மைக்கு எதிர்ப்பதமாக அல்லாமல் மடைமாற்றமாக பாவிக்கப்படும் ஒரு கருத்தாக்கமாகும். தமிழில் ‘தாயுமானவர்’ எனும் பெயரீடும். மனஅலசலில் ‘Motheror’ எனும் கருத்தாக்கமும் முயங்கும் வெளியில் இது உருப்பெறுகின்றது எனலாம். உடல்மொழி எனும் புனைவைபோலவே உடலியல் என்பதனையும் புனைவாகக்கொண்டு பிரதியைக் கலைத்துப்போட்டு வாசிப்பதுபோல் உடம்பையும் கலைத்துப்போடும் வாசிப்பாய் இது நிகழ்த்தப்படலாகின்றது. “நேர்கோட்டு வாசிப்புக்குப் பழக்கப்பட்டுவிட்ட நம்முடம்பை கலைத்துப் போடவேண்டும்.

புலன்களாகப்பிரித்து அவற்றை திசைமாற்றிக் கோர்க்கவேண்டும். ஐம்புலன்களும் ஐந்திணைகளும் திரிந்து புதிய பொருண்மைகளை உருவாக்கவேண்டும். உடம்பை புதிய வாசிப்புக்கும் பொருளுரைப்புக்கும் உள்ளாக்கும்போது, இயற்கை நம் உடம்புமீது செலுத்திவரும் ஒற்றைப்பாலடையாள வன்முறைக்கு எதிராகப் பன்முகப் பால்பிரதியாக அதை முன்நிறுத்த முடியும்.”(ப.115)

இத்தொடர்பில் ‘லக்கானும் இலக்கியமும்’ பற்றிய ஒருநூலின் முன்னுரையிலிருந்து ஒருபதிவையும் இத்துடன் காண்போம்.

“உடல் என்ற சொல்லை மொழிக்கான உருவகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது உடனடியான, பயனுள்ள கருதுகோளாக உள்ளது. இக்கருதுகோள் பல்வகைப் பயன்பாட்டை வெளிப்படுத்தவும் கூடும். உடல்அரசியலுடன், சமூகச்செயல்பாடுகளை, சான்றுகளை, தகவல் தொகுப்புகளை, பிரதியின் உள்ளடக்கங்களை நமக்குத் தெரியும் அனைத்தும் மொழியின் அனுபவங்களின் கொள்கலன்களே ஆகும். என்னுடல் குறித்த கதை எனது வாழ்க்கையின் வரலாறே ஆகும். நான் எழுதுகின்ற ஒவ்வொரு பிரதியும் அந்த வரலாற்றின் ஒரு பகுதியே ஆகும்” - Benstolzfus (Purlioned Pretext  - Lacan and Literature மற்றமை: 4 செப்-2013 ப.47) 

இவ்வாறு ஊடிழைப்பிரதிகளான இரட்டையர் கதைகளுக்கு ஊடாக வெளிப்பட்ட பால்பேதங் கடந்த இருப்பு சாத்தியமா என்ற ஏக்கப் பெருமூச்சும், இரு பாலினங்களுக்கிடையிலான உரையாடல் சாத்தியமா என வெளிப்பட்ட லக்கானின் பெருமூச்சும் இப்பிரதிச் சொன்மையின் பிரதியியல் தளத்துடன் பிரதிவயமயமாக்கப்பட்டுள்ளன.

7.1. உபபிரதியான குறளுரை காணும் பிரதி விளையாட்டில் பிரதிச் சொன்மையின் பெயரீடு பற்றி காண்போம். இரு குறட்பாக்களில் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்றும் ‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்றும் இடம்பெற்றுள்ள சொல்லே பெயரீடாக்கப்பட்டுள்ளது “பொறிகள் வாயிலாக அறியப்பெறும் புலன்களாக இருந்து மக்களால் உணரப்படும் நிலைமையைக் கடந்தவர் என்பதாய். பொறிகளால் அறியப்பெறும் அறிவு சுட்டறிவு. அவற்றை அவித்தல் என்பது அவை தன்மாட்டுக் காணப்படாதவாறு அவற்றைக் கடந்திருத்தல்” - ச.தண்டபாணிதேசிகர் (திருக்குறளில் மெய்ப்பொருட்சுவடுகள்’ ப.49)

இது ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ எனும் குறளில் இந்திரன் எதிர்மறை எடுத்துக்காட்டாகும். ஐந்தவித்தான் முதற்பிரதியின் எழுத்துருவான மாதவனை பொறி வாயில் ஐந்தவித்த மாதவனாகவும் இரண்டாம் பிரதியின் மாதவனை எதிர்மறை எடுத்துக்காட்டாகும் இந்திரனாகவும் கொள்ளலாம்.

“சுவரில் பதித்த விநாயகர் சிற்பம், ஓராயிரம் எலிகள், ஒற்றையாய் திரியும் பாம்பு, இரவில் நடமாடும் அக்கா நட்சத்திரம் இவற்றை மட்டுமே ஞாபகத்தில் இருத்த முடிந்தது. அசைவற்ற பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கிய மாதவனின் மீது தரையிலிருந்து தலைநோக்கிப் புற்று வளர்ந்து முகத்தையும் தன்னுள் மூழ்கடித்தது. மாதவன் மாதவன் ஆனான் (ப.93)

மிகையதார்த்த இயல்பான மாதவனின் மாயாஜால வாழ்க்கை தியான ஒடுக்கத்தில் உறைபுள்ளியாகி நிறைகின்றது. ஒடுங்குகின்றது, விகசிக்கின்றது. புதுமைப்பித்தனின் ‘அவதாரம்’ கதையில் பிறந்த உடனே தொப்பூழ்க்கொடியை தோளில்போட்டு நடந்த எழுத்துருவைப்போலவே தன் தாயின் கருப்பையிலேயே பிரக்ஞை விழித்த மாதவன், புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனத்தில்’ கல்லாகி உறைந்த அகலிகையைப் போலவே நிர்விகற்ப சமாதியில் உறை புள்ளியாகின்றான். இந்த ஒடுக்க விகசிப்பென்பது ஓர் அசையும் அசைவின்மை. கிறங்கிச் சுழலும் பம்பரத்தை ‘உறங்கு’கின்றது என்னுமாப்போலவே. முதற்பிரதியின் இறுதிவாசகமான ‘மாதவன் மா தவன் ஆனான்’ என்பது இரண்டாம் பிரதியின் இரண்டாம்பத்தி இறுதியின் தேவகியின் கூற்றான தவம் என்பது ஒடுங்குவதன்று விகசிப்பது என்பதுடன் மாட்டெறியப்பட்டுள்ளது. “(உரையாசிரியர்கள்) விளக்கத்தை சற்று விரித்து நாவல், சிறுகதைத் திறனாய்வுக்கும் பயன்படுவதுபோல் மாட்டு என்பதை எழுதப்பட்ட வடிவத்திற்கு அருகில் வரும் பொருள் சற்று தூரத்தில் இருக்கும் பொருள் என பொருள்கொள்வதில் தவறில்லை” - தமிழவன் (ப.அ.கு.91)

இந்த மாட்டெறிதல் என்பது ஒரே பிரதிச்சொன்மைக்கு ஊடாகவே காணக்கிடப்பதால் இது அகச்சான்று. இனி இதே பிரதியாசிரியனின் வேறு பிரதிச்சொன்மைகளுக்கு ஊடாகவும், ஏனைப்பிரதியாசிரியன்மார் தம் வெவ்வேறு பிரதிச் சொன்மைக்கு ஊடாகவும் புறச்சான்றுகளைக் காண்போம்:

“உறக்கத்தில் ஒடுங்கும் உலகு, ஒடுக்கத்தில் விகசிக்கும் முத்து.” “தியானம் என்ற பெயரில் புத்தனும் தூங்கிக்கொண்டுதான் அதிகாரத்திற்கு எதிராகத் தன் உடம்பை எதிர் - மெய் ஆக நிறுத்துகிறான்” – ரமேஷ்பிரேதன் (‘அயோனிகன்’ ப.21-57)

‘Stirring Still’-இல் இரு முரண்களின் இருப்பு உறுதிபடுகின்றது. அசைவு, அதன் இன்மை. அதாவது பெக்கெட்டின் இறுதிப் பிரதியில் ஓர் அசையும் அசைவின்மை உள்ளது. Stir என்பது அசைவை குறைக்கும். Still என்ற வார்த்தை (அமைதி, அசைவின்மை என இருபொருள் சொன்னாலும்) அசைவற்ற நிலையைக் குறிக்கும் - ரேமண்ட் ஃபெடர்மன் (‘மேற்கோள்’ ‘புதுப்புனல்’ அக்.நவ.2015)

“பல ஆராய்ச்சிகள் என் முனைவர் பட்ட மாணவர்களுடன் செய்துள்ளேன். கதைகளின் உள்ரகசியம் ஸ்டில்னஸ் என்று அப்போது கண்டுபிடித்தேன். ஆயிரக்கணக்கான பிரிவுகள் இந்த ஸ்தம்பித்த நிலைக்கு உண்டு” - தமிழவன் (‘சிற்றேடு’ ஏப்ரல்-ஜீன் 2016)

“யோகநிலையின் இறுதிப்படியே சமாதி – நிர்விகற்ப சமாதி நினைவொழிந்த நிலைப்பாடு. இதனையே ‘சொல்லிறந்த தூவெளி’ ‘சொருகிக் கிடக்கும் துறை’, ‘தூங்கிக் கண்டார் நிலை’ என்றெல்லாம் பேசும் திருமந்திரம். டி.எஸ்.எலியட்டின் உறைபுள்ளியோடும் (Still Point) இதனை ஒப்பிடுவார் த.ந.கணபதி” -  .மு.பொதியவெற்பன் (‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து…’ ப.156)

7.1.2. ஒன்றைக் கடத்தல் என்பது அதனைத் தாண்டிச்செல்வதன்று. அதில் ஊடாடி அப்பாலாக வெளியேறிக்கடப்பதே. என்பதனாலேயே அவித்தல் என்பதற்குக் கடந்து இருத்தல் எனப் பொருளுரைத்தார் தேசிகர். எனவே கடக்காமல் ஒன்றைத் தாண்ட முயன்றால் மீளவும் அதற்குள்ளேயே கிடக்கவும் நேரும். எத்தனையோ ‘பிரம்மச்சரிய ஆனந்தாக்களுக்கு’ எல்லாம் நேர்ந்த கதி இதுதானே? இதனால்தான் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கின்றது ஓஷோவின் வாமதந்திர மார்க்கம்.

“காமத்தை வென்றவன் என்ற சொற்றொடரே பிழையானது. பொய்யானது, போலியானது. நான் நடிக்கிறேன். வெயில் உறைப்பதுபோல் காமம். காமம் பொய்த்த மனம் பைத்தியமாகும்” (ப.83) – இதுதான் மாதவனின் ஒப்புதல் வாக்குமூலமும். அவன் மாதவன் ஆகுமுன்பு கொடுத்த வாக்குமூலம். கொன்றை இருக்க, தேவகியைத் தழுவுவது அறமாகாதெனப் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளனாக இருக்கவே எத்தனிக்கிறான் அவனும். காமம் பொய்த்தமனம் பித்தாகின்றது. மாதவன் தன்னிலிருந்து தானே தொலைந்து போவதற்கான ஊடகமாக கனவையே கையாளுகின்றான்

“கனவு வழியே ஞானத்தை அடைந்தான். பாற்கடலைக் கடைந்துதான், போகத்தை மடை திறந்தான், செல்வத்தை வாரி இறைத்தான்.

கைலாயம் சென்று சடையனுக்கு முடிதிருத்தினான். இலங்கையில் கால்நீட்டி இமயத்தில் தலைசாய்த்தான். வெள்ளை மாளிகையின் சுற்றுச்சுவரில் கரியால் ஆபாச வார்த்தைகளை எழுதினான். லூவர் அருங்காட்சியகத்தில் மோனலிசாவின் மேலுதட்டில் மீசை வரைந்தான். நைல் நதியில் நீந்தினான். சஷாபிளங்காவில் ஒருத்தியிடம் பேரம் பேசினான். வரலாறு செய்த மனிதர்களைச் சந்தித்தான்”(ப.85) - இவ்வாறெல்லாம் மனவெளி மனிதனான மாதவன் தன் பொய்த்த காமத்தை, கனா சஞ்சார இடப்பெயர்ச்சிகளூடே மடைமாற்றிக்கொள்கின்றான்.

“இடப்பெயர்ச்சி (Displacement) என்பது குறித்தல் ஒரு படிமத்திலிருந்து அதற்கு நெருங்கிய இன்னொன்றிற்கு இடம்பெயர்வதை குறிக்கிறது” - க.பூரணச்சந்திரன் (அமைப்புமையவாதமும் பின்னமைப்பு வாதமும்’ ப.74)

“சொன்மைகள் பொருண்மையை இடப்பெயர்ச்சி செய்துள்ளன. இதன் மூலம் ஆகுபெயரன் (Metonymy) என்ற மொழிச்செயல்பாடு கனவில் நடந்திருப்பது நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு இடப்பெயர்ச்சியை ஆகுபெயரனோடு இனம்கண்டார் லெக்கான்” - தமிழவன் (ப.அ.கு.-ப.85)

இத்தகைய பிராய்டின் கனவுப்படிமச் செயல் முறைகளுள் ஒன்றான இடப்பெயர்ச்சி எனும் கருத்தாக்க விளக்கங்களின் ஊடாக இதுபற்றி உணரலாம். இனி இரண்டாம் பிரதி மாதவனுக்கு வருவோம். “எனது காலம் நெடுகிலும் எண்ணிலடங்கா பெண்களை புணர்ந்திருக்கிறேன்” (ப.115)

காமம் ஒரு பெண்ணின் உடம்பில் இல்லை. எனக்கான காமம் என்னுடம்பிலேயே இருக்கிறது. அது ஒரு பெண்ணின் மூலமாக என்னிலிருந்து வெளியேறுகிறது. வெளியேறிய பிறகு ஒரு வெற்றிடம் கொஞ்சநேரம் என்னில் துலங்குகிறது. பிறகு ஒரு புதுவெள்ளம் நதித்தடத்தில் சுழித்துக்கொண்டோடுகிறது” (ப.138)

கடக்காமல் காமத்தை அடக்கினால் மெய் அசேதனமாகும். அதாவது உயிர்த்துவமற்ற சடத்துவமாகவே ஆகும். ‘ஐந்தும் அடக்கின் அசேதனம் ஆகும் என்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந்து இருந்தேனே’ என்பதுதான் திருமூலரின் வாமதந்திர திருமந்திரம். இந்த மாதவனின் தவமே வேறு. ‘ஐம்புலன்களடக்கி பெண்குறியுள் ஒடுங்கிய அயோனிகனே’ இவன். வாமதந்திரத்தின் குரலையே தேவகி மாதவனுக்கு மறுமொழியாக்குகின்றாள்.

“அன்பும் கருணையும் சுரக்காத மனத்தில், காமத் தீ அணைந்து தேகம் கரிக்கட்டையாகிவிடும். உடலுறவு என்பது ஒருவித நிகழ்த்துகலை, அது இசையாலானது. யாழும் குழலும் பியானோவும் வயலினும்போல
ஒன்றுடனொன்று இழைந்து உச்சத்தில் ஒலி மங்கி ஒளி அரும்புவது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் போகத் திளைப்பால் நிரம்பவேண்டும். யோனியும் லிங்கமும் கோத்த குறியீட்டைக் கடவுளாய் வழிபடும் குடியைச் சார்ந்த நாம் காமத்தை ஒரு சமயநெறியாக வளர்த்தெடுக்கவேண்டும். வள்ளுவம் அதைத் தொடங்கிவைத்தது. அறம், பொருள், இன்பம், இன்பம் என்பது இனப்பெருக்கம் அன்று; அது ஒரு வாழ்வியல் மார்க்கம்” (ப.138)

8.1. அன்றைய பரிமேலழகர் முதலாக இன்றைய நவீன பரிமேலழகர்கள் வரையிலுமாக குறளைக் குறைத்தும், மறைத்தும், திரித்தும் தத்தம் உரைமொழியின் ஆதிக்கத்தின் கீழ்க்கொணர முயல்வாராயினர். மறு
பக்கமாக அத்தகு உரைமொழிகளை தத்தம் தலையீட்டு மொழியால் தகர்த்தும், அவற்றால் ஒடுக்கப்படுகின்ற ஆதிக்க எதிர்ப்புக்கூறுகளான மொழிச்செயல்பாடுகளை இனங்காட்டியும் காத்திரமான புதுப்புது பொருளுரைப்புகளை நிகழ்த்துகின்ற நவீன பொருள் கோளாளர்களின் பங்களிப்புகளும் தொடர்வதாகின்றன. இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கு என் ‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’ நூலிலும் மணல்வீட்டில் வெளியான நீட்சே பற்றிய என் கட்டுரைகளிலும் காண்க. வள்ளுவத்தை இனங்காண மாட்டாத நவீன பரிமேலழகர்களின் இன்றைய காலக்கட்டச்சூழலில், இப்பிரதிச் சொன்மையின் உபபிரதியான குறளுக்கு புனைவிற் கூடாகப் புதிய பொருள்கோடல்களை நிகழ்த்தும் பிரதிவிளையாட்டுகள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன எனக் கண்டோம். இன்னும் கயமை அதிகாரத்தின் இரு குறட்பாக்களுக்கு இப்புனைவினூடான உரைகோடல்களைக் காண்போம்.

“மரணதண்டனைக்கு எதிரான இயக்கங்களில் நான் பங்காற்றியிருக்கிறேன்,  உலக சமாதானம் பேசும் ஆயுத வியாபாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் என்னிடம் உள்ளன, மார்க்ஸிலிருந்து தெரிதா வரையிலான யூத அறிவுஜீவிகளிடம் நேரடித்தொடர்பில் நான் இருந்ததுண்டு, நம்மரபில் முதன்முதலில் குற்ற உணர்வில் நம்மை நிறுத்தி தூக்கத்தைக் கெடுத்த திருவள்ளுவரை நான் சந்தித்த ஐரோப்பிய ஆப்பிரிக்க அறிவுஜீவிகளிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். முடிவில் எல்லாம் வெறும் கதைகூறல்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.” மார்க்ஸ் - ஏங்கல்ஸ் - இந்த இரட்டையருக்கு இணையான கதைசொல்லிகள் வேறு யாரும் இன்னும் பிறக்கவில்லை (ப.125)

‘நெஞ்சத்து அவலம் இலர் ஆதலால் கயவர் திருவுடையர்’ ஞாலத்து அவலம் எல்லாமுந்தாம் நன்றறிவார்க்கு நெஞ்சத்து அவலங்களாகி நீடிக்க அவை தணிக்கும் வாய்நாடி, அத்தகையோர் தூக்கத்தைக் கெடுப்பனவாகின்றன. இத்தகு அவலம் ஏதும் அற்றவர்களே ஆதலால், கயவர் திருவுடையராக வீற்றிருக்கின்றனர். அறநூல்கள் யாவற்றையுமே புனைவாகக் காணும் எழுத்துருவான கதைசொல்லி அப்புனைவுகளை புனைவாலேயே எதிர்கொள்ளுமுகமாகத் திருவள்ளுவரை தாம் சந்தித்த ஐரோப்பிய, ஆப்பிரிக்க அறிவுஜீவிகளிடம் அறிமுகம் செய்து வைப்பவராகின்றார். திருவுடைய கயவரை எளிதில் இனங்காண இயலுமா என்ன? ‘மக்களே போல்வர் கயவர் அவரனைய ஒப்பார் யாங்கண்டது இல்’ “கயமை என்பது ஆரோக்கியமற்றது ஆபத்தானது, கயமை உண்டாக்கும் வலி அனைத்தின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்துவிடுகிறது. கயமையின் ஆதாரப் பண்பு சுயநலமாகும். ஆனால் சுயநலம் வெளிப்படையானது. விளிம்பில் நிற்கிறது. கயமையோ மையத்தில் இருப்பது. கண்டறிவது கடினம். அது தன்னைத்தானே இனம்காட்டும் போதுதான் அறிய முடியும். தெய்வங்களின் கயமை, மதங்களின் கயமை, தத்துவங்களின் கயமை, அரசுகளின் கயமை, தனிமனிதர்களின் கயமை என பரந்துபட்ட களங்களில் இந்தமரபு அமைப்பு இயங்குவது” - ரமேஷ்பிரேதன் (‘அவன் பெயர் சொல்’ ப.64)

விளிம்பில் நிற்கும் சுயநலம் வெளிப்படையாக தெரியக்கூடியது. உட்கிடையான கயமையோ அதுவாக தன்னை இனங்காட்டிக் கொண்டாலல்லது இனங்காண முடியாத ஒன்றாக உள்ளது என்பதனாலேயே மக்களே போல்வர் கயவர் என்றார் வள்ளுவர். ஒருவகையில் கயமை எனும் மனஅமைப்பு அகங்காரமெனும் மனஅமைப்புக்கு மாறாக இயங்கக்கூடியதாக இருக்கின்றது. அதனை ‘கணவனும் அறியாக் கற்பென்பார் உமாபதிசிவம். சைவசித்தாந்த நோக்கில் தற்கொண்டானுக்குத் தவிர மற்றவர்க்கெல்லாம் தன்னை காட்டிக் கொள்ளக்கூடியதாக ஆணவத்தை அவர் சுட்டுகின்றார். மாறாக இங்கு கயமை எனும் மன அமைப்போ மற்றவர்க்கு தன்னை இனங்காட்டாமலே கரைந்துறைவதாக அமைந்தியங்குவதாகின்றது.

8.2. “நமது மூளை காலனியமூளை. மின்சாரம், மார்க்சியம், பெட்ரோலியம், நவீனமருத்துவம் இவை புதியமனிதரை உருவாக்கித் தந்திருக்கின்றன. பௌத்தமும் மார்க்சியமும் உலகுதழுவிய பொது அறத்தை வடிவமைத்திருக்கின்றன. இந்த இரண்டிற்கும் அப்பால் மூன்றாம்நிலையில் நின்று ஓர் அறச்சட்டகத்தைப் பின்நவீனத்தால் வடிவமைக்க முடியுமா? இன்றைய அறிவு என்பது பின்நவீனத்துவ மூளையால் அமைந்ததே அல்லாமல் தூய தமிழ்த் தொல்லறிவால் விளைந்தது அன்று” (ப.132)

இத்தொடர்பில் பின்நவீனத்துவ மூளையால் தூயதமிழ்த் தொல்லறிவை மதிப்பிடக்கூடிய ஏனைப்பின்நவீனத்துவ வாசிப்புகளிடம் இருந்து இப்பிரதிச்சொன்மையின் பொருள்கோளியலான பிரதி விளையாட்டுகள் எந்தவிதத்தில் வித்தியாசப்படலாகின்றன என்கிற கேள்வி இங்கு முதன்மையானதாகின்றது. இதற்கான விடையாக எனக்குப்படுவது இதுதான். இப்பிரதிச்சொன்மை பாசிசத்தை துறப்பதையே தன் பின்நவீனத்துவ அறமாக உயர்த்திப் பிடிக்கின்றது.  “அறிவு ஓரிடத்தில் தேங்கும்போது அது அதிகாரமாகிறது. எதற்குள்ளும் அடங்காத நாடோடி அறிவு பாசிசத்திற்கு எதிரானது” (ப.155)

“நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்வது எளிது, ஆனால் நான் ஒரு பாசிஸ்ட் இல்லை என்று சொல்வது அரிது. பாசிசத்தைத் துறத்தல் என்பதே பின்நவீனத்துவ அறவியலாகவும் மெய்யியலாகவும் இருக்கிறது” - ரமேஷ்பிரேதன் (‘பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி’)

மற்றைமையை நோக்கி அதற்கும் அரணாக நிற்க வல்லதுதானே பின்நவீனத்துவ அறமாகும். இதனைத்தானே ஒத்ததறியவல்ல ஒப்புரவறிதலாகவும், பிறிதின் நோய் தனதாகப் போற்றவல்ல அறிவுப் பயனாகவும், மக்கட்பண்பாகவும் பேசி நிற்கின்றது வள்ளுவ அறம். மற்றைமையின் இருப்பையே ஏற்கமாட்டாத மதவாதக்கயமைக்கு எதிரானவையாக மற்றைமையை நோக்கி அதற்கும் அரணாகவல்ல வள்ளுவ அறத்தையும், அதற்குள்ளும் தேங்காத நாடோடி அறிவான ‘ழௌவரின’மெனும் புனைவுலகையும் இப்பிரதிச்சொன்மை முன்நிறுத்துவதாக அமைந்தியல்கின்றது. மொழியாலும் மதத்தாலும் கட்டமைக்கப்பட்ட மனித வரலாற்றைக் கட்டவிழ்த்தும், கடவுளை மையப்படுத்திய பாமரத்தனமான மதங்களிலிருந்து விடுவித்தும், கடவுளிடமிருந்து வெளியேறுவதையே ஆகப்பெரிய விடுதலையாக முன்மொழிந்தும், தாய்மடி அறியாக் குட்டிகளாய் பூதகி முலைகளில் மோதிக்கிடக்கும் தமிழர்களுக்கு, கடவுள் இல்லாத ஒரு மதமான வள்ளுவத்தை இப்பிரதிச் சொன்மையின் உபபிரதியான பிரதிவிளையாட்டு பரிந்துரைக்கின்றது. குறளின் மெய்மைகளைத் தன் உரைமொழி ஆதிக்கத்தின் கீழ்கொணர முயலும் பரிமேலழகரின் உரைவிளக்கங்களுக்குப் பின்புலத்தில் கரைந்துறையும் அரசியலைப்போலவே, நவீன பரிமேலழகன்மார் தம் பின்நவீனத்துவத்தின் பேரிலான குறிமவிளையாட்டுகளின் பின்புலத்திலும் அவரவர்க்கான அரசியலே கரைந்துறையலாகின்றது.

‘ஐந்தவித்தான்’ மூன்று மையவிளிம்புச் சுழலாட்டங்களின் ஆடுகளமாகும். (1)குடும்ப வட்டம் (2)‘சித்த’அமைப்பு வட்டம் (3)அதிகார இச்சை வட்டம்.

9.1. “அப்பா விளிம்பு. அம்மா மையம். குடும்பம் ஒரு வட்டம். வட்டத்திற்கு வெளியே யாருமில்லை.மையம் விளிம்பு வரை விரிவதும் விளிம்பு மையத்தில் குவிவதுமே வாழ்க்கை” (ப.81) இக்குடும்ப வட்டக்கதையை முதற்பிரதிக் கூடாக ஏலவே கண்டாயிற்று.

9.2. இரண்டாவதான சுயநல விளிம்பு கயமை மையம் என்றான ‘சித்த’ அமைப்பு வட்டத்தின் ஏலவே சுட்டிக்காட்டப்பட்ட வெவ்வேறு பரந்துபட்ட களங்களில் இயங்கும் கதைமை, இப்பிரதிச்சொன்மையின் இருவேறு பிரதிகளுக்கு ஊடாகவும் வியாபித்திருக்கின்றது. “ஜின்னாவைப்போல் தன்னலமற்ற இனநலம் பேணிய அரசியல் தலைவர்கள் திராவிடத்தில் இல்லை. இந்தியத்தமிழர்க்குத் தனிநாடு அமையாதவரை ஈழத்தமிழர்க்குத் தனிநாடு சாத்தியமில்லை. தனிஈழத்திற்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஈ.வே.ரா. சொன்னதைத்தான் அன்று பாரீசில் பேசினேன். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படிக் குரல் கொடுப்பான்?” (ப.126)

“குருவி மட்டுமன்று வௌவால் கள் குடிக்கும். குரங்கு, மரநாய் போன்றவையும் குடிக்கும். ஈ.வே.ராமசாமிப் பெரியார், கள் இறக்கும் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த அன்று, நானொரு மரமேறியின் மகள் என்ற வகையில் வருத்தப்பட்டேன். தென்னங்கள் மனிதர்க்கு மட்டும் உரித்தானது அன்று, அந்த வட்டாரத்துக் குருவியும், குரங்கும் ஈ.வெ.ரா.வின் செயலால் வருத்தப்பட்டிருக்கும்” (ப.149)

“கள் தமிழரின் பண்பாட்டு அடையாளம், பனை ஈழத்தமிழரின் தேசிய அடையாளம். தென்னையும் பனையும் இல்லாத நிலை, தமிழ் வழக்கொழிந்து தமிழர் மட்டும் வாழ்வதை ஒத்தது” (ப.150)

“கருப்பும் சிவப்பும் கலந்த இருட்டில் தமிழ் நிலம் மிதந்து கொண்டிருக்கிறது இந்த நூற்றாண்டில் தமிழர் இனம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆரியம் வரலாற்றில் தன்முழுவெற்றியை ருசித்துவிடும். - ரமேஷ் பிரேதன் (‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ ப.161)

- இது அரசுகள் எனும் தளத்தில் இயங்கும் கயமை எனும் சித்த அமைப்பின் கதை. ஈ.வே.ரா.வின் தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்ததின் மீதான பகடி அதற்கப்பாலும் பண்பாட்டு அடையாள மீட்பு நோக்கிலான எதிர்ப்பரசியல் வெளிப்பாடாக விசையூன்றுகிறது. இது இந்திய, தமிழக, ஈழ அரசுகளின் தளத்திலானதென்றால், இன்னொரு கதை பிரெஞ்சிந்தியக் காலனிய பின்புலத்திலமைந்த சர்வதேசிய தளத்திலியங்கும் கயமைச் சித்த அமைப்பின் கதை. “உலகிலுள்ள மொழிகளில் புதைக்கப்பட்ட கதைகளைத் தோண்டினால் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளுமே மிஞ்சும். தரங்கம்பாடியிலிருந்து டச்சுக்காரர்கள், பொந்திஷேரியிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிழக்கிந்தியக் கும்பெனியார் குதிரைவண்டிகளில் வந்து ஏலம் கேட்பார்கள். (மண்டை) ஓடுகளைக் கப்பல்களில் தங்களுடைய தேசங்களுக்கு ஏற்றியனுப்புவார்கள். அவற்றை இழைத்து, வண்ணங்கள் தீட்டிக் கலைப்பொருட்கள் செய்யப்பட்டனவாம். வீடுகள், கோட்டை மதிற்சுவர்களின் விளிம்புகளில் வரிசையாகப் பதிப்பதற்கும் பயன்பட்டனவாம். தோட்டங்களில், புல்வெளிகளில் ஆங்கங்கே நிறுத்தி ஓட்டிற்குள் மெழுகுவத்தி ஏற்றிவைக்க கண்கள், வாய் முதலான ஓட்டைகள் வழியாக ஒளி வெளிப்பட்டுப் பார்க்க அழகாக இருக்குமாம். கபாலிகனுக்கு மண்டையோடு பிச்சைப்பாத்திரமாகப் பயன்பட்டது. அதன் உருப்படியான பயன் வரலாற்றில் இதுமட்டும்தான். உண்மையில்
மண்டையோடுகளை அல்ல, அவை கூறும் கதைகளையே இந்நிலப்பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளனர்.” (112-113)  ஏனைப்பிற தளங்களில் இயங்கலாகும் கயமை எனும் சித்த அமைப்புகளின் கதைகள் ஏலவே இனங்காணப்பட்டுள்ளன.

9.3. மூன்றாவதான அதிகார இச்சை மையமும் விளிம்பும் இல்லா வட்டமாகும். இம்சையின் முப்பரிமாணத்திற்கு ஊடாக இதுபற்றிக் காண்போம். “பசி, காமம், அதிகாரம் இவற்றில் ஒன்றை இச்சித்தலில் இம்சை உருப்பெருகிறது. பசியும் காமமும் உனது உடம்பில் ஊறித்தணியும். ஆனால், அதிகாரத்தின் மீதான இச்சை தணியாது, அது மையமும் விளிம்பும் இல்லாத வட்டம். பசி பருண்மையானது. காமம் அரூபமானது, ஆனால், ஒன்றினுள் அடங்கக்கூடியது. அதிகாரம் எல்லையற்றது, எல்லையற்ற ஒன்றை அளவிடமுடியாது. இவை திடதிரவ வாயு நிலையிலானவை. இம்சையின் முப்பரிமாணம்” (ப.134)

அதிகாரம் எனும் சொல் எவ்வெவற்றை அர்த்தப்படுத்தக் கூடியது? அதிகார உற்பத்தி எவ்வாறு நிகழ்கின்றது? அது எத்தகைய செயல்பாடு? எதனை அது தேடுகிறது? “அதிகாரம் என்ற வார்த்தை பல்வேறு வகை சக்திகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் எந்தப்பிரதேசத்தில் இவ்வுறவுகள் இயங்குகின்றனவோ அப்பிரதேசத்தையும் அதன் ஒழுங்கு அமைப்பையுமே அர்த்தப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு புள்ளியிலும் அப்புள்ளிக்கும் இன்னொரு புள்ளிக்குமான உறவிலும் அதிகாரம் தன்னைத்தானே உற்பத்தி செய்துகொள்கிறது. அதிகாரம் எங்கும் இருக்கிறது (எல்லாவற்றையும் அதிகாரம் அணைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லவில்லை) எல்லா திசைகளிலிருந்தும் புறப்படுகிறது என்கிறேன். அதிகாரம் என்பது ஒரு நிறுவனம் அல்ல. ஒரு குறிப்பிட்ட அமைப்பல்ல. குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் வெவ்வேறு சூழல்களில் செயல்படுகின்ற ஒரு சிக்கலான சமூகச் செயல்பாட்டின் பெயரே அதிகாரம்” – மிஷல்பூக்கோ (‘அறிவிற்கான மனோபலம்’ - பிற்கால அமைப்பியலும் குறியியலும்
மேற்கோள். ப.62-63)

“அதிகாரத்திற்கான மனோபலம் எதிர்ப்புகளுக்கு எதிராகவே வெளிவர முடியும். எனவே அது தன்னை எது எதிர்க்கிறதோ அதையே தேடுகிறது” – நீட்ஷே (‘மேலது’ ப.64)

9.3.1. மாதவனின் அம்மா நல்லசாதிக்குப் பிறந்த வன்னியச்சிங்கம் என்ற செருக்கு மிக்கவள். அப்பாவோ முகங்களையே பார்க்காமல் முடிகளைப் பார்த்துப்பேசும் நாவற்ற நாவிதர். இருவர்க்கும் இடையிலான வாய்ச்சண்டை அம்மாவின் வசைமாரியில் முற்றுகையில் அவளுடைய இறுதி ஆயுதமாக சாதியைச் சொல்லியே திட்டுவாள். மாதவனிடம் அவர் உழைப்பைத் தேர்ந்தெடுக்க வல்ல உரிமையைத் தரவல்ல கல்வியைக் கற்குமாறும், பெண்களிடம் சாதி பார்த்தே பழகுமாறும் ஆற்றுப்படுத்துகின்றார். அவன் சாதி பார்த்துப் பழகிக் காதலித்த தாமரை வர்க்கம் பார்க்கத் தெரியாமல் பழகி மற்றொருவனிடம் ஏமாந்து தற்கொலை செய்துகொள்கிறாள். அவனது அடுத்த தேர்வான தேவகியோ மரமேறி மகள். அவளோ பணம் பதவி வாய்த்ததும் சாதி பார்த்துக் கொன்றைவேந்தனை மணம்புரிகின்றாள். “இது சாதியத்தால் ஊனமுற்ற தேசம். சாதியப்பண்பாடு சாதிய அரசியல், சாதியப் பொருளாதாரம் இம்மூன்றும், இத்தேசத்தை ஒருபோதும் ஈடேற்றா. பொது இடத்தில் இரண்டுபேர் இரண்டு சாதியத்தன்னிலைகளாகத்தான் நிற்கிறார்கள்” (ப.146)

இத்தொடர்பில் இதனை முதலில் பயன்பாட்டு மனஅலசலுக்கு உட்படுத்தியும் பூக்கோவியச் சொல்லாடல்களுக்கு ஊடாகவும் முறையே காண முற்படலாம். “சாதியம் கலாச்சாரமாக, சித்தமாக, நடத்தையாக, திருவிழாவாக, குலதெய்வ வழிபாடாக, சடங்காகவும் கல்விநிறுவனமாகவும் நீடித்து நிலவுகிறது.” “மமஹாரமும், அகங்காரமும் சாதியின் படிநிலைகளில் உறைந்திருக்கின்றன. சாதியத்தை உருவகப்படுத்தினால், அது உள்வெளி, பகல், இரவு கடந்து, தூண் துரும்பில் வசிக்கும் நரசிம்மம்” “இங்கு மனிதர்களின் அடையாளம் பெயர் மட்டுமல்ல. அருவமான சாதிப்பெயரும்தான்”-மற்றமை:7 (மே.16.  ப.99-100)

“சமூகத்தின் அடிப்படையான நெசவில் அதிகாரம் கலந்து இருக்கிறது. இவை அரசிற்கும் குடிகளுக்குமுள்ள தொடர்பு, வர்க்கங்களுக்கு இடையிலான எல்லை, அரசாங்கத்தின் சட்டங்கள் எல்லாவற்றிலும் பரிணமிக்கிறது… உள்ளூர் அதிகாரவகைகளின் இயல் நுட்பங்கள் அதிகாரத்தை செயல்படுத்தும் பிராந்திய விசேஷம்” -எம்.டி.முத்துக்குமாரசாமி (‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ ப.64)

“ஒழுங்குபடுத்தும் நோக்கு ஒருவகையில் அரசின் இயல்பாக ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட ஒழுங்குபடுத்தல்கள் வரலாற்றில் பல கட்டங்களில் பலவிதங்களில் நிகழ்ந்துள்ளன. சாதியாக ஒழுங்குபடுத்துதல், மதமாக, வர்க்கமாக, பாலினமாக ஒழுங்குபடுத்தல்கள் நடந்தேறி வந்திருக்கின்றன என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும்” - சோ.அறிவுமணி (‘அறனெனப்படுவது யாதெனின்’ ப.45)

ஒவ்வொரு புள்ளியிலும் அப்புள்ளிக்கும் இன்னொரு புள்ளிக்குமான உறவிலும் அதிகாரம் தன்னைத்தானே உற்பத்தி செய்துகொள்கின்றது எனும் பூக்கோவிய நோக்கு வெகு நுட்பமானது. இதுதான் அதிகாரத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டே அரசியல் எனும் அதன் உற்பத்திகேந்திரத்தை நமக்கு இனங்காட்டுவதாகின்றது. இந்தியச்சூழலின் சாதியச்சமூகம் வர்ணப்படி நிலையானதென்கின்ற முறையில் அதன் ஓர் அடுக்கிற்கும் மறுஅடுக்கிற்கும் இடையே அதிகாரம் தனக்குதானே உற்பத்தியை நிகழ்த்திக்கொண்டவாறே இருக்கின்றது. மட்டுமல்லாமல் மையவிளிம்பு விளையாட்டுக்களிடையே ஒரு மையத்திற்கு விளிம்பாக நிற்கும் ஒன்றே மறுவிளிம்பிற்கு மையமாகி விடுகின்றது. இனி இதனையே சர்வதேச அரசியலினூடே இது எவ்வாறு வியாபிக்கின்றது எனக்காண்போம்.

“அதிகார உறவுகளின் களம் ஒருகுறிப்பிட்ட முடிவை நோக்கியதாகவும் மக்களைப்பற்றிய கவலையின்றியும் உண்டாக்கப்படுவதில் அடங்கி இருக்கிறது. கணக்காகத் திட்டமிடுதல், குறிக்கோளினை நோக்கி நகர்தல் ஆகியவை அதிகாரத்தின் குணங்களாகும்” - எம்.டி.எம். (மேலது 63) நாட்டின் வளர்ச்சி, உயர்தொழில்நுட்ப வளர்ச்சி, உலக முன்னேற்றம் என்ற முழக்கங்களின் ஊடே கரைந்துறையும் அரசியல் உட்கிடை என்னவாக அமைந்துள்ளதெனக் காண்போம். இங்கே நாட்டின் வளர்ச்சி / மக்கள் வாழ்வாதாரம் என முன்னிறுத்தப்படும் இருமை எதிர்வினைக் கட்டுடைப்பதன் மூலம் இதுபற்றி அணுகத் தலைப்படலாம். வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி? எதற்கான வளர்ச்சி? என்கிற கேள்விகளுக்கு விடை காண்பதன் மூலம் இதனைத்தொடங்கலாம். உதாரணத்திற்கு அணுஉலை சிக்கலை எடுத்துக்கொள்வோம். இது மின் உற்பத்தியின் வளர்ச்சி என்பதான சொல்லாடல்கள் மூலம் பேச்சுக்களங்கள் குவிமையப்படுத்தப்படுகின்றன. இதன் மௌனத்தில் மக்களின் வாழ்வாதாரம் - உயிர் வாழும் நிகழ்தகவு – காலமும் வெளியும் கடந்த கற்பனைக்கெட்டாத பாதிப்புகள் என்பவை புதையுண்டு கிடக்கின்றன. ஊடகநாடகங்கள் யாவும் வளர்ச்சி என்பதனையே குவிமயப்படுத்தக் கூடியனவாகின்றன. “தற்போதைய அரசியலில் ‘மாமாவேலை’யான இல்லாததை இருக்கும்விதமாக எழுதும் அரசியல்ரீதியான விளம்பரமும் (Spindoctors) அரசியல் விளம்பரப்படுத்தல்களும் கேவலமான வணிகமயமாக்கலின் உச்சபட்ச வடிவமாக உள்ளது” - மற்றமை: 4 (செப்.2013) இது நுகர்வியத்தைப் பேசுமுகமாக முன்வைக்கப்பட்ட பயன்பாட்டு மனஅலசல் பார்வை. எனினும் வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களைக் கட்டுடைக்கவும் இது பொருந்தக்கூடியதே. இவ்வாறு இல்லாததை இருக்கும்விதமாகப் பூதாகரப்படுத்தியும், இருப்பதை இல்லாமல் இருட்டடித்து திசைதிருப்பியும் இத்தகு நாட்டின் வளர்ச்சி மக்கள் வாழ்வாதாரம் எனும் போலிமையான இருமை எதிர்விற்கு ஊடாக ‘மக்கட்போலி’களின் போலி அரசியல் முன்னெடுக்கப்படலாகின்றது. மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி அதன் புதைகுழிமேல் கட்டி எழுப்பப்படும் எந்த ஒன்றும் எப்படி வளர்ச்சியாக இருக்க முடியும்? எனவே வளர்ச்சி என்பது யாருக்கானதென்றால் ஆளும்வர்க்க அரசியல் தரகர்களுக்கான வளர்ச்சி, அணுஉலை ஒப்பந்தத்தால் ஆதாயமுறும் அயல்நாட்டுப் போர்ப்பொருளாதாரத்திற்கான வளர்ச்சி என்பதுதான், யாருக்கானது எதற்கானது எனும் வினாக்களுக்கான விடையாகும். “மரணத்தைத் திட்டமிடுவதில்தான் உலக அரசியல் பொருளாதாரம் அர்த்தமடைகிறது. சிலுவைப்போர்கள், உலகப்போர்கள், வளைகுடாப்போர்கள், இஸ்லாமியப்போர்கள் இவையாவும் திட்டமிடப்பட்ட மரணத்தை நிகழ்த்துகின்றன. உலக முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் மரணத்தை அடித்தளமாகக் கொண்டவையே” (ப.166)

“மக்களை கொல்வதைத் தடுப்பதும் முறைப்படுத்துவதும் தள்ளிப்போடுவதும் எண்ணிக்கையைக் குறைப்பதும் பற்றிய பேச்சுவார்த்தையே உலகநாடுகளுக்கான அரசியல்” (ப.161-162)

“இனத்தொடர்ச்சியை வேரறுப்பதற்கென்றே திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலைகள் எல்லா கண்டங்களிலும் நிறவேறுபாடின்றி நிகழ்த்தப்படுகின்றன. பொது அறம் என்பது இனி இல்லை. வெளிப்படைத்தன்மை போர் அறம் இன்றைய ஏகாதிபத்தியங்களிடம் இல்லை” (ப.128)

மக்களைப்பற்றிய கவலையேயின்றி, பொது அறம், போர் அறம் என யாதொன்றையும் பேணாமல் கணக்காகத் திட்டமிடுதல், இலக்கை நோக்கி நகர்தல் என்பதே அதிகாரத்தின் குணங்களாக மரண வணிகர்களின் உற்பத்தியை அது நிகழ்த்தியவாறே உள்ளது. எத்தகைய தேவைகளின் நிமித்தம் இவை நிகழ்த்தப்பட்டன? இனியும் நிகழ்த்தப்பட உள்ளன? வேறு எதற்காக? உற்பத்திசெய்து குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை வேறு எவ்வாறு விநியோகித்துச் சந்தைப்படுத்தித் தீர்வது? என்கிற எதிர்க்கேள்வியை இதற்கு மறுதலையாக நம்மிடையே அவர்களின் போர்ப்பொருளாதாரம் எழுப்புகின்றது”

9.3.3. “பெட்ரோலியத்தின் பயன்பாட்டுத் தேவையை குறைக்கவே அப்பெட்ரோலியம் கிடைக்கும் நிலப்பகுதியில் மக்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். நாளை குடிநீருக்காக ஆசியர் கொல்லப்படுவார்கள். இனியான இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தண்ணீரால் எழுதப்படும்” (ப.145)

‘நீரின்றி அமையாது உலகு’ எனும் குறளுக்கான உரைகாணும் பிரதிவிளையாட்டு தொடர்ந்திடக்காண்போம். “எதிர்கால பூமியின் ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்த வெள்ளை இனத்தவர் மட்டுமே வாழவேண்டும் என்ற திட்டமிடல் புதிய நிலப்பகுதிகளைத் தேடிய வெள்ளைக் கடலோடிகளின் காலத்திலேயே வகுக்கப்பட்டது” (ப.145)

“நவகாலனியமும் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் தொழிற்புரட்சியும் அதைத்தொடர்ந்த மூலதனமும் மார்க்சியமும் இன்னபிற தத்துவ அரசியல் மார்க்கங்களும் கடலால் ஆனவை. நீரின்றி அமையாது உலகு. நதிக்கரையில் உள்நாட்டு நாகரிகம் தோன்றினாலும் அகிலம் என்ற கோட்பாடு கடலால் ஆனது” (ப.84)

‘ஆழிநீரில் கோடுகிழித்தே எல்லை பிரித்தவன் எவன்’ எனும் மௌனியின் கேள்வி விஸ்வரூபிக்கும் காலக்கட்டத்தில் வாழ்கின்றோம் நாம். என்னதான் நாகரீகங்கள் நதிக்கரை சார்ந்தவை என்ற போதிலும் நீரின் வரலாற்றை நிலம் பிரிக்கத்தானே செய்கின்றது. நாடுகளை ஊடறுத்துப் பாய்கின்றன நதிகள், அத்துக்களை மீறி அகலித்து விரிகின்றன கடல்கள். நதிநீரையும் ஆழிநீரையும் வாழ்வாதாரமாகக் கொண்ட உழவர்கள், கடலோடிகளின் வாழ்க்கைதான் இக்கரையிலும் அக்கரையிலும் இழுபறிகளால் வினாக்குறியாகி நிற்கின்றது. இப்படியாகத்தானே நீரின்றி அமையாது உலகு என்பதனைப் ‘போரின்றி அமையாது உலகு’ என மாற்றி எழுதிச் செல்வதாகின்றன இருபுள்ளிகளுக்கும் இடையில் உற்பத்தியாகும் அதிகாரத்தின் உற்பத்தியான அரசியல் விளையாட்டுகள். அகிலக்கோட்பாட்டின் ஆகப்பெரிய ஆடுகளமாகிவிட்டது கடல்.

9.3.4. இந்தியாவிற்கு அயலாக ஐரோப்பிய அமெரிக்கப் பொதுப்புத்தியில் தமிழ், தமிழர், தமிழகம் பற்றிய மனச்சித்திரம் எவ்வாறு பதியவைக்கப்பட்டுள்ளது? உலகவரலாற்றில் தமிழின அங்கீகாரம் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது? “உலக வரலாற்றில் தமிழினம் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதும், திட்டமிட்டே இனம் ஒதுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதும் திண்ணம்” (ப.152)

“இந்திய வரலாறு பற்றிப் பேசும் பல நூல்களைப் பல்வேறு மொழிகளில், அந்தந்த மொழிகள் பேசும் நிலப்பகுதியிலேயே வைத்துப் படித்திருக்கிறேன். எங்கும் எதிலும் தமிழர் பற்றிய செய்தி இருக்காது. இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்திய வரலாற்றில் தமிழரிருப்பு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசுபவர் இந்தியர் என்றும் சமஸ்கிருதமே இவர்களின் அறிவுமொழி என்றும் வெளியில் இருப்பவர் அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழ்நாடு என்றால் இந்தியாவின் தென்கடலில் பாறைமீது கட்டப்பட்டிருக்கும் விவேகானந்தர் மண்டபம் இருக்கும் இடம் என்ற தகவலை மட்டுமே அறிந்துள்ள ஐரோப்பிய அமெரிக்கப் பொதுப்புத்தி என் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளது” (ப.165)

குறைந்தபட்சமாய் விவேகானந்த மகரிஷியுடன் நூற்றிமுப்பதடியில் நுசுப்பொசித்து நுடங்கி நிற்கும் அய்யன் வள்ளுவனும் வீற்றுநிற்கும் இடம் என்றேனும் அயலவர் பொதுபுத்தியில் படவைக்கப்பட்டிருக்கக்கூடாதா? ஏனிந்த திட்டமிட்ட இருட்டடிப்பு? தமிழகத்து அயலிலும் இந்தியாவிற்கு அயலிலுமாக இவற்றை அறிமுகப்படுத்தும் பீடத்தில் வீற்றிருப்போர் எவரெவர்? “வங்காளத்தில் பிறந்து இன்று உலக அமைப்பியல் சிந்தனைமீது தன்முத்திரை பதித்துள்ள காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவக் என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் சமஸ்கிருத நூல்களை ஒழுங்குபடுத்திப் பதிப்பிக்க அவர்கள் உற்சாகம் கொடுத்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது அறிவை ஒழுங்குபடுத்தும்போது அங்கு அதிகாரம் செலுத்துபவர்கள் அச்செயலோடு இணைந்து கொள்கிறார்கள் ஒழுங்கு ஏற்படும்போது அதிகாரம் செலுத்துவது எளிதாகிறது” - தமிழவன் (ப.அ.கு. ப.64)

“அகில உலகளவிலும் இந்திய அளவிலும் இன்று தமிழ்ப்பிராமணர்களே தமிழை அறிமுகப்படுத்தும் நிலையில் உள்ளனர்” - தமிழவன் (‘தமிழவன் கட்டுரைகள் மிமி’ ப. 587)

இத்தொடர்பிலான தமிழர் வகிபாகம் எத்தகையது? தமிழர் பொதுப்புத்தி எத்தகையது? விதிவிலக்குகள் ஆனோர் எவர்? “அனைத்துலக உயர்பதவிகளில் இருக்கும் தமிழ்ப்பிராமணர்கள் தமிழோடு காட்டும் உறவை பிறசாதிகளைச் சார்ந்த தமிழர்கள் காட்டுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஈழத்தமிழர்களும், மலேசியத் தமிழர்களும். தமிழகம் மட்டுமே பிராமணர்களுக்குக் கொடுக்கும் வெளிச்சத்தைப் பிறருக்குக் கொடுப்பதில்லை” - தமிழவன் (மேலது பா. 587)

“தமிழ்த்தொகையறிவு என்பதில் ஒவ்வாமையை விலக்குதல் என்ற மனப்போக்கு காலகாலமாகப் பொதுபுத்தியில் மிக இயல்பான ஒன்றாக ஆகிப்போனது. அனல்வாதம், புனல்வாதம் என்ற அறிவு அழித்தொழிப்பு இங்கு நடந்ததுபோல் உலகச் சமூகங்களில் வேறெங்கும், நடந்ததில்லை” (ப.152)

“அரசியல் உணர்வோ வரலாற்று உணர்வோ இல்லாத தம் தாய்மொழியைப் பொதுவிடத்தில் பேச வெட்கப்படும் இந்த அல்லைக்கை கூட்டம்போல உலகில் வேறெங்கிலும் நான் கண்டதில்லை” (ப.165)

ஆக இவ்வாறு ஒருபக்கம் இல்லாததை இருப்பதாகப் பூதாகரப்படுத்தியும் இருப்பதை இல்லாததாக இருட்டடித்தும் திசைதிருப்பியும் திட்டமிட்டு இலக்கை நோக்கி காய்நகர்த்தும் அதிகார அரசியல், மறுபக்கம் தம் சொந்த மரபின் முதுசொத்துக்களையும் அருமை பெருமைகளையுமே உணரமாட்டாமல் சுய அழித்தொழிப்பு நிகழ்த்தும் தமிழர்தம் பொதுபுத்தி என விமரிசனமும் சுயவிமரிசனமுமாய் இருபக்க உண்மைகளும் பிரதிச் சொன்மையில் காணக் கிடக்கின்றன. ‘இடதுசாரிகள் இதுவரை அணு ஆயுதத்தைக் கையாண்டதில்லை’ என்பது என்னவோ உண்மைதான். என்றாலும் இங்கும் ஒரு கேள்வி எழத்தானே செய்கின்றது. அணு உலைகளைத் தம் நாட்டிலும் பிறநாடுகளிலும் ஒரு பொதுவுடைமை அரசே நிறுவுவதனை என்னென்பது? ஏந்த வேண்டிய ஆயுதமும் எதிர்கொண்டாக வேண்டி வகுத்தாக வேண்டிய வியூகமும் எதிரியைப் பொறுத்தே தகவமையக்கூடுமென்றால் எதிரி நச்சுவேதி ஆயுதமேந்தி ‘நட்சத்திரப்போர்வியூகம்’ வகுத்திடுகையில் நம்மால் என்னதான் செய்ய இயலும்? இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதிலேதும் இல்லை.

ஈழ விடுதலைப்புலிகளுக்கு நேர்ந்த தோல்வியிலிருந்து 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய விடுதலைக் கருத்தியலை வளர்த்தெடுக்குமுகமாக அத்தோல்விக்கான காரணங்களை பேரரசியல்தளத்தில் அல்லாமல் நுண்ணரசியல் தளத்தில்வைத்து விவாதிப்பதே இந்நூற்றாண்டில் தமிழ் அறிவுஜீவிகளின் ஆகப்பெரிய கடமையென முந்தைய பிரதிச் சொன்மை ஒன்றில் வலியுறுத்திய இப்பனுவலாசிரியன் அதனையே இப்பிரதிச் சொன்மையிலும் மாட்டெறிந்து பாவிக்கின்றான். “மகாத்மா வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது தோழர்களிடமும் உலகத்தாரிடமும் கடைசியாகச் சொன்ன வாக்கியம் மிக முக்கியமானது. ‘இனி எங்கள் ஆயுதங்கள் மௌனித்திருக்கட்டும்.’ மௌனித்திருக்கட்டும் என்றசொல் அடர்ந்த அர்த்தம் நிரம்பியது. இனிவாய்கள் பேசட்டும் என்று பொருள். நாம் பேசியாகவேண்டும். உலக சமூகங்களிடையே பேசவேண்டும். பேச்சுதான் உலகிலே மிகப்பெரிய போராயுதம். பேசு, பேச்சிலிருந்து மொழி தழைக்கும். மொழிகொண்டு இனம்செழிக்கும், இனம் தனக்கான புதிய சொல்லாடல்களை உருவாக்கிக்கொள்ளும்” - ரமேஷ்பிரேதன் (‘அவன்பெயர் சொல்’ ப.117)

“பக்கத்து நாடான இலங்கையில் தனிநாடு கேட்டு போராடிய தமிழர்கள் முப்பது ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேல் செத்தார்கள். பதினைந்து லட்சம் பேர் நாடற்றவர்கள் ஆனார்கள். சொந்த மண்ணில் மிச்சம்மீதி இருப்பவர்கள் இன்று தனிநாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு ஒருவித சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டார்கள் தொடர்ந்த போரில் செத்தவர்கள் அர்த்தமற்றுப் போய்விட்டார்கள். புரட்சியாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செத்து விட்டாரா? உயிரோடு இருக்கிறாரா? இந்திய மறத்தமிழர் பட்டிமன்றம் நடத்துகிறார்கள்” - (ப.121)

ஏலவே இப்பனுவலாசிரியன் தமிழ் அறிவுஜீவிகளுக்கான ஆகப்பெரிய கடமையென வலியுறுத்திய பேச்செனும் பேராயுதத்தால் புதிய சொல்லாடல்களை உருவாக்குமுகமாகவே இப்பிரதிச் சொன்மை கட்டமைக்கப்படலாகின்றது என்பதனாலேயே திருக்குறளெனும் உபபிரதி, ‘ழகர’மெனும் அமைப்பு, ‘ழௌவம்’ எனும் தலைமறைவு இனக்குழு, ‘ஒற்றைக் கண்தமிழர்’ எனும் குறியீடு, புலியெனும் தமிழ்த்தேசிய அரசியல் விலங்கு, வேற்றுக்கோளகர் உடனான புதிய
சொல்லாடல் கடவுள் இல்லா மதம் எனவாங்கு சொல்லாடல்களால் இப்பிரதிச் சொன்மையின் கதையாடல் கட்டமைக்கப்படுவதற்கு ஊடாகவே நவீன தமிழ்த்தேசமென்னும் புனைவுச் சொல்லாடலும் கட்டமைக்கப்படுவதாகின்றது. “புதுச்சேரி விடுதலை பெற்று தனிநாடாக அமையாமல் இந்திய துணை கண்டத்தில் மீண்டும் ஒரு காலனிப் பகுதியாக மாறிய கதை மூலம் தமிழர்களை இளிச்சவாயர்கள் பட்டியலில் உலக வரலாறு குறித்துக்கொண்டது. புதுச்சேரியின் விடுதலை இயக்கங்கள்யாவும் தெலுங்கர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டன. அதனால் தமிழர்க்குத் தனிநாடு என்ற ஒற்றைக்கண் கனவு காணப்பட்டும் நடைமுறைக்கு வராமல் தவிர்க்கப்பட்டது. புதுச்சேரித் தமிழர்க்கு ஒற்றைக்கண் தமிழர் என்ற பெயர் இதற்குப் பிறகே வரலாற்றில் நிலைத்தது” (ப.165)

ஒற்றைக்கண் தமிழர் எனும் குறியீடு புதுச்சேரி மண்ணின் பூர்வகுடிகளான ஒடுக்கப்பட்ட இனமக்களுக்கானது எனலாம். இதற்கூடாகத் தீண்டத்தகாதோர் எனும் ஒரு பிரிவினர் இடங்கண், வலங்கண் என்றிரு பிரிவுகளிலுமாக நீக்கமறக் கலந்து தீண்டத்தகாதார் எனும் அடையாளம் அழிந்து சமூகப் பொதுத்தளத்தில் வரலாற்றில் முதன்முதலாகக் கலந்த ஒற்றைக்கண் புரட்சியும் அதற்கப்பாலாக பிரெஞ்சுக்காரர்களின் காலனியாதிக்க அரசியல் மோசடிகளை அம்பலப்படுத்தி அவர்களை வெளியேறச் செய்த உள்ளூர் வரலாறும் உட்பொதியப்பட்டுள்ளது. புதுவைக்கே உரிய இத்தகு பிரத்தியேகச் சூழலைப் புரிந்துகொள்ளுமுகமாக குறிப்பிடத்தக்க ஓர் உள்ளூர் வரலாற்று ஆவணப்பதிவு நூலுக்கூடாகவும் காணக்கிடக்கும் பதிவுகளையும் இத்துடன் காண்போம். “புதுச்சேரி நகரத்தையே வெள்ளையர் நகரம், கறுப்பர்கள் பகுதி என பிரெஞ்சியர் பிரித்து வைத்து
ஆட்சி நடத்தியதும், புதுச்சேரி பூர்வகுடிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது” (ப.255)

“பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இந்திய தேசியத்தில் இணைந்தாலும்கூட புதுச்சேரி பூர்வகுடிமகனின் ஒவ்வொரு இதயத்திலும் ஒரு வார்த்தை துடித்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் தனித்தன்மை” (ப.32)

“சுதந்திரம் பத்திரிக்கை விவரித்த காட்சிகளில் இருந்து… புதுச்சேரியின் பூர்வகுடிகளான தலித் மக்கள் இணைப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்ததும் தெள்ளத்தெளிவாகிறது” - பி.என்.எஸ்.பாண்டியன் (‘ஊரடங்கு உத்தரவு’ ப.163)

அடுத்து ‘ழௌவர்’ எனும் தலைமறைவு இனக்குழு சிந்துசமவெளி தொட்டே வாழ்ந்து வருவது அவர்களின் தேசியம் அவர்களின் உடம்பு தானே தவிர மண் இல்லை என்பதன் வாயிலாக அது புதையுண்டுபோன பூர்வகுடி மரபுகளை அகழ்ந்தெடுப்பதாகவும் இந்திய, ஈழ, அயலகத்தமிழர் யாவரையுமே அகப்படுத்துவதாகவும் அமைந்தியல்வதாகின்றது.

“இன்றும் புலிகளுக்கு இந்தியாவில் தடை உள்ளது. புலி ஒரு திராவிட விலங்கு. குறிப்பாக தமிழ்தேசிய அரசியல் விலங்கு (ப.131) புறநானூற்றுப் புலி, சோழர்களின் புலி, ஈழப் புலி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்ப் புலி உலக வரலாற்றில் தன்னை மீள்பதிவு செய்யும்” (ப.132)

“பரந்த இந்தியாவில் கைப்பிடி நிலத்தில் வாழும் இவர்கள் (ழௌவர்) தனிநாடு கேட்கிறார்கள். உலகமெங்கும் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடும் தேசிய இனங்களுக்கு நடுவில் இவர்களின் போராட்டம் வேறுபட்டது.” (ப.151)

ஓர் இனம் வரலாற்றில் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டால், அது பூமியில் என்றேனும், எங்கேனும், தனக்கென்று ஒரு பிடிநிலத்தைச் சொந்தமாகக் கொண்டுவிடும். யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் நேற்றைய நிலம், தமிழர்க்கு ஈழம் என்னும் நாளைய நிலம்.” (ப. 154)

பூக்கோ சொல்லுமாப்போலே தோற்றுப்போய் புதையுண்டுபோன பூர்வகுடி மரபுகளை மீட்டெடுப்பது, நானிங்கே தொட்டுக்காட்டியுள்ளனவும் பனிப்பாறை நுனியளவினவே. தமிழின் முதல் மற்றும் தொடக்ககால நாவல்களையும், தமிழின் முதல் மாயாஜால நாவலையும் முன்வைத்து தமிழவன் குறிப்பிடுவன, தேசங்கட்டுவதிலும் கதையாடல் கட்டுவதிலும் Nation building and Narration building ஆன புதினப்படுத்தல் உத்தி இங்கே நோக்கத்தக்கதாம்.
“சொல்லாடல்களால் கதைகட்டப்பட்ட போதே ‘தமிழ்த்தேசம்’ என்ற சொல்லாடல் கட்டப்பட்டது. வினோதம் என்னவென்றால் ஒரு வெள்ளாளராலும் இரு பிராமணர்களாலும்தான் நவீன தமிழ்தேசிய புனைகதைச் சொல்லாடல் தமிழில் அறிமுகமாகிறது. இதில் தலித்துக்கு இடமில்லை இவ்விருவகை நாவல்களிலும் வரும் ஓரநிலையினர்களான (Subaltern) தலித்துகள் ஓரக்கதைகளுக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் அதீதபுனைவு மூலம் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் தலித்துகள், கடையில் முக்கியகட்டமாக இறுதியை தீர்மானிக்கிறார்கள். நாடு விட்டு நாடு வாழ்பவர்களும், நாடற்றவர்களாய் வாழ்பவர்களும், ஊரின் இடப்பரிமாணத்தில் ஓரத்தில் வாழ்பவர்களும் (சேரிகள் தலித்துகளுடையது) புனைவான தங்கள் நாடுகளைப் படைக்கும் அடிப்படை இதுதான்” – தமிழவன் (‘தமிழவன் கட்டுரைகள் 11’ ப.587)

நமது மரபார்ந்த புரிதல்களும் அயலக வரவான கருத்தாக்கங்களும் பொருந்தியும் பொருதியும் சங்கமிப்பதால் ஏற்படும் புதிய திறப்புகளும் புதிய உடைசல்களுமே நமது அடுத்தகட்ட நகர்வை சாத்தியமாக்குகின்றன.

“இன்றைய தமிழர்அறிவு என்பது பின்நவீனத்துவ மூளையால் அமைந்ததே அல்லாமல் தூய தமிழ்த்தொல்லறிவால் விளைந்ததன்று. புத்தர், மார்க்ஸ் இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் அறவோர் பெண்ணாக இருப்பார்.” (ப.132)

“ஒரு சமூகத்தின் நிலைபெற்ற கருத்தோடு வெளியில் இருந்து உட்புகும் கருத்து மோதலால் ஏற்படும் விளைவே நம்மை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. ஐரோப்பாவின் ஊடுருவலுக்குப் பிறகே இன்றைய உலகவரைபடம் உருவானது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய உலகம் அன்று இல்லை. அது போலவே வேற்றுக் கோளகர்களின் ஊடுருவலுக்குப் பிறகே இப்புவியில் தலைகீழ் மாற்றங்கள் உண்டாகும்”. வேற்றுக் கோளகர்களுடன் இனியான புதிய சொல்லாடல் தொடங்கும் (ப.163)

வேற்றுக்கிரக உயிரினம் பூமிக்குவந்து திருக்குறள் படிக்கிறது” (ப.107)

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தம்நோய் போல போற்றாக் கடை”

மேல் செல்