கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

இந்திரா பார்த்தசாரதியின் புலம் இல்லாத நாவலும் கலையாகாத விமர்சனமும்

சு.வேணுகோபால்

பகிரு

இந்திரா பார்த்தசாரதியின் படைப்புலகக் களங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். தஞ்சை பகுதி சார்ந்து, தில்லிபுலம் சார்ந்து, மேல்நாடு சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் அவருடையவை. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் தில்லி, கும்பகோணம் பின்னணியில் எழுதப்பட்ட படைப்புகள் அதிகம். பின்னணி என்று சொல்வதைவிட தோராயமான இடப்பின்னணி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. கதை எங்கே நடக்கிறது என்பதற்குக் கதை மயிலாடுதுறையில் நடக்கிறது என்று பெயர்களை வைத்து சொல்லிக் கொள்ளும்படியான பின்னணி என்று கூடச் சொல்லலாம்.

நாசகாரக்கும்பல்’, ‘ஒரு கப் காப்பி’, ‘பதி பசி பாசம்’ ‘தொலைவு’, ‘பயணம்’, ‘குதுப்மினாரும் ஒரு குழந்தையின் புன்னகையும்’ போன்ற அவரின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் கதை நிகழ்கின்ற இடங்களாக ஓரிருவரிகளில் கும்பகோணமோ தில்லியோ தெரியவரும். அதற்கு மேல் அந்த இடங்கள் மங்கி மறைந்து கதையின் பிரச்சனை மட்டுமே தலைதூக்கி நிற்கும். நாசகாரக் கும்பல்’, ‘ஒரு கப் காப்பி’, ‘பதி பசி பாசம்’ கதைகள் கும்பகோணத்தில்தான் நடக்கின்றன. கும்பகோணம் என்ற வார்த்தைக்குப் பதிலாக மதுரை என்று போட்டாலும் சிறு குந்தகம் கூட நேராது. ஆனால் தி.ஜானகிராமனின் ‘வீடும் வெளியும்’ சிறுகதையைக் காவேரிக்கரையிலிருந்து தூக்கி மதுரையில் வைத்து விட முடியாது. காவேரி ஆற்றின் சலசலப்பு, ரீங்காரம், ஆற்று மணல்வெளி, நெல்வயல், பட்சிகளின் குரல் என பல்வேறு புற உலகின் நாளங்களைக் கதையிலிருந்து பிரித்துவிட முடியாது. நெய்தல் திணைக் கதையென்றால் உப்பங்காற்றும் மீன்நாற்றமும் கடல் அலையும் இல்லாமல் இருக்குமா? இல்லாமல் இருப்பது நெய்தல்கதை ஆகுமா?

இ.பா.வின் சிறுகதைகளைப் பொறுத்தவரை ஒரு சிக்கல் அல்லது ஒரு நிகழ்வு நடக்கும் போது அது சார்ந்து கடந்து செல்லும் மனிதர்களிடம் பொய்மைகள் எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன என்பதைச் சொல்வதாகப் பெரும்பாலும் அமைகின்றன. பேருந்தால் கால் நசுக்கப்பட்ட ஏழைச்சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது பக்கத்துவீட்டார், நடத்துநர், ஓட்டுநர், முதலாளி, நர்ஸ் என பலர் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை; சரியாகப் படிக்காமல் வைதிக சடங்குகளுக்குத் துணையாகச் சென்று பிழைப்பு நடத்துகிறவனை, வீட்டாரும், உறவுகளும் நடத்தும்விதம்; இந்த வேசத்தை உண்மை என நம்பும் பழைய நண்பன் பார்க்கும் விதம்; இறந்தவரை எடுத்துச்சென்று எரியூட்டுவதற்கு மருத்துவமனை, மயானம் வரும் மனிதர்களின் கோணல் புத்திகள்; ஆட்டோ ஏறி வீடு வரமுடியாத ஏழை தந்தையின் விமர்சனங்கள், என்பதாக இவரின் கதைகளின் பார்வை புறமனிதர்கள் மீதே விழுகின்றன. இவையெல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு நேரக்கூடிய எளிய அனுபவங்கள்தான். இதைத்தான் கதையுலகிற்குள் கொண்டு வருகிறார். வாசகன் அறியாத ஒரு புதிய அனுபவத்தை வென்றெடுப்பதில்லை இவரின் கதைகள்.

இரண்டாவதாகப் பிரச்சனையை அறிவார்த்த தளத்தில் இடையிடையே வியாக்கியானம் செய்து விளக்குவது இவரின் கதை கூறலாக இருக்கிறது. இந்த வியாக்கியானங்கள் பல சமயங்களில் கட்டுரைநடையில் இருக்கின்றன. பிரச்சனையின் கோலங்களை அனுபவமாக மாற்றுவதற்குப் பதிலாக அறிதலாக எழுதிச்செல்கிறார். அதில் படித்த கோட்பாடுகளை தமிழ்மாந்தர்களின் செயல்பாடுகளுக்குத் தத்துவவீக்கமாக ஆசிரியர் எழுதிவிடுகிறார். தமிழ்வாழ்க்கை சார்ந்த அனுபவம் ஒரு சிந்தனையாக வடிவம் கொள்ளவில்லை.

இந்திரா பார்த்தசாரதி தமிழ் இலக்கியம் கற்ற தமிழ்ப்பேராசிரியர் என்றாலும் அவரின் படைப்புகளில் சங்கதிணையிலக்கியச் சாரம் இறங்கவில்லை. தமிழ் இலக்கியம் படிக்காத தஞ்சைமாவட்டத்து கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் எழுத்துக்களில்தான் தஞ்சைநிலம் உயிரோட்டமாக உயிர்பெறுகிறது.

இ.பா. ‘காலவெள்ளம்’ என்ற நாவல் தொடங்கி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ வரை பதினேழு நாவல்கள் எழுதியிருக்கிறார். இந்த நாவல்களில் நிலம் ஒரு தோராயமான வார்த்தைகளால் தொட்டுக் காட்டப்படுகிறது. நிலக்காட்சி துல்லியத்தன்மை பெறுவதில்லை. இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ‘வேர்பற்று’ நாவலின் கதை கும்பகோணத்திலும், சிதம்பரத்திலும் நடக்கிறது. பார்த்தசாரதி இளமைக்காலத்தில் வாழ்ந்த, படித்த இடங்கள் இவை. ஒருவகையில் அவரது சுயசரிதைக்கு நெருக்கமானதும்கூட இந்நாவலை முன்வைத்து தஞ்சை பிரதேசத்து வாழ்க்கை எவ்விதம் காட்டப்படுகிறது என்று ஆராயலாம்.

‘வேர்பற்று’ என்ற நாவலின் கதை கல்லூரியில் படிக்கும் கேசவன் என்ற ஐயங்கார் இளைஞனைச் சுற்றி இயங்குகிறது. அவன் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் இளங்கலையும், சிதரம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியமும் படித்து வெளியேறி வேலைக்குச் செல்கிறான். இக்காலகட்டத்தில் (1946 - 1952) குடும்பத்திலும் கல்லூரியிலும் முற்போக்கு எண்ணம் கொண்ட ஐயங்கார் இளைஞன் எதிர்கொண்ட வாழ்க்கை நிகழ்வுகளை விமர்சன கண்ணோட்டத்தில் சொல்லிச் செல்கிறார். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஐயங்கார் குடும்பவாழ்க்கை அமைப்பில் இருக்கும் தில்லாவரித்தனங்களை, கல்லூரி வாழ்க்கையில் காணநேரும் பொய்முகங்களை வெளிப்படையாக முன்வைக்கிற நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பிரச்சனைகள் மானிட உள்ளத்தை உலுக்கும் பிரச்சனைகள் அல்ல. அல்லது உலுக்கும் பிரச்சனைகளாக உருக்கொள்ளவில்லை. மோசமான மனிதர்கள் மத்தியில் மிக மிக சொற்பமான நல்லவர்களே இருக்கிறார்கள் என்று சொல்லவும் வருகிறது. குடும்ப அமைப்பில் கேசவனின் அப்பா நடாதூர் ஸ்ரீவத்ஸன், கல்விச்சூழலில் சுப்ரமணிய ஐயர், வைப்பாட்டிற்குப் பிறந்த ஒரு பெண். அவ்வளவுதான்.

வேர்ப்பற்று நாவலின் முன் அட்டையில் ‘சாதியத்துக்கு எதிரான ஓர் இளைஞனின் மனப்போராட்டம்’ இந்நாவல் என்றும், பின் அட்டையில் ‘சாதிகளற்ற சமுதாயமே அவனது கனவு உலகம். ஆனால் இறுதிவரையில் அவனது கனவு. கனவாகவே இருந்து வருகிறது’ என்ற குறிப்புடன் கிழக்குப் பதிப்பகம் மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது.

நாவலில் அங்கங்கே கேசவனை முற்போக்கு எண்ணம் கொண்டவன் என்றும், மார்க்சிஸ்ட் என்றும் சொல்கின்றனர். அப்படி பார்த்தசாரதி சொல்ல வைக்கிறார். கேசவன் தன் கல்லூரி நாட்களில் இரண்டு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கிறான். தாத்தாவின் சிரார்த்த நாளன்று அதில் கலந்து கொள்ளாமல் அப்பாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு வரவேற்புரை தருகிறான் (இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைந்துவிட்டதால்) மணலி கந்தசாமி, சேலம் தாமோதரன், பாலதண்டாயுதம் முதலிய மூவர் ரயிலில் இரண்டாம் வகுப்பில் வருகின்றனர். மோகன் முதல் வகுப்பு கிடைக்காததால் காரில் தாமதமாக வருகிறார். பாலதண்டாயுதம் மாணவர்களிடம் தோழமையுடன் பழகுகிறார். மாணவர்கள் ஏற்பாடு செய்த உணவை சேர்ந்து சாப்பிடுகிறார்கள். மோகன் மதிய உணவிற்கு அவருடன் இங்கிலாந்தில் படித்த நண்பர் வீட்டிற்குப் போய்விடுகிறார். இது கேசவனைப் பாதிக்கிறது. இந்த சாதாரண சம்பவத்திற்காக கேசவன் கட்சி பணியிலிருந்து மதியத்திற்கு மேல் ஒதுங்கிக்கொள்கிறான். கேசவனின் செயல் மாநாட்டிற்கு வரவேற்புரை வழங்கியது மட்டும்தான். இந்தப் புரடசியும் மோகன் எளியவர்களுடன் சேர்ந்து சாப்பிடாமல் வசதியான நண்பர் வீட்டிற்குப் போய்விட்டார் என்ற காரணத்தால் பாதியில் முறிகிறது. கம்யூனிச இயக்கம் சார்ந்து இந்நிகழ்விற்கு முன்னும் பின்னும் கேசவன் வேறு எந்த துரும்பைக்கூடத் தொட்டதில்லை. அது இருக்கட்டும். நாவலில் ஒரு ஏழையானவனிடம் கூட கேசவனுக்கு நட்பு இல்லை. அப்படியான உலகமே இல்லை.

அடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதிபக்கம் மாணவர்கள் வரும் பாதையை மறித்து சுவர் எழுப்பிவிடுகிறார் பகுத்தறிவு வழியில் வந்த துணைவேந்தர். இதற்கு முற்போக்கு எண்ணம் கொண்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த எதிர்ப்புக் குழுவினருடன் கேசவனும் சேருகிறான். இந்தப் பிரச்சனையை முன்னிட்டு வரலாற்றுத்துறை பேராசிரியர் நல்லமுத்துவை திராவிட இயக்க மாணவர்கள், வெளியாட்கள் அடித்துவிட்டதாக செய்தியும் வருகிறது. இந்த இரு பிரச்சனையை துணைவேந்தரிடம் முற்போக்கு மாணவர்கள் கொண்டுசெல்கின்றனர். இவர்களது பேச்சை அவர் பொருட்படுத்தாமல் வளர்ப்பு நாய்களைத் தடவுகிறார். மாணவர்கள் கொண்டு வந்த பிரச்சனையைப் பிசுபிசுக்க வைக்க பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுகிறார். திராவிட கட்சி சார்பான துணைவேந்தரை ஒரு குண்டராகவே காட்டுகிறார். 1950-லேயே தி.க. அராஜகம் பல்கலைக்கழகங்களில் ஊடுருவிவிட்டது என்று சொல்லவருகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கேசவன் ஈடுபட்ட பொதுப்பிரச்சனை இது. நாவல் முழுக்க கேசவன் காம்ரேட் என்ற சொல்லால் உயர்த்தப்படுகிறான். எல்லோரும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதுபோல கேசவனும் வேறுவழியில்லாமல் மன்னிப்பு கடிதம் கொடுத்து படிப்பைத் தொடர்கிறான்.

வைணவ சடங்காசாரங்களை அக்கறையுடன் கடைபிடிக்கிற நேர்மையான ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன் கேசவன். அவனுடைய அப்பா மரபு வழி வந்தவர் என்றாலும் பிராமணர்களின் பொய்பித்தலாட்டங்களை, நிலவுடைமை பிராமணர்களின் சல்லாபங்களை, ஒழுக்கக்கேட்டை எதிர்ப்பவர். மனிதாபிமானம் உடையவர். அவர் மரபில் நின்றபடி உயர்ந்த மனிதத்துவத்தை மீட்டியெடுப்பவராக இருக்கிறார். உண்மையில் இந்த நாவலில் இயல்பூக்கத்துடன் எழுந்து வந்த சரியான பாத்திரம் கேசவனின் அப்பா ஸ்ரீவத்ஸன்தான். அவர் குறித்துப் பின்னால் பார்க்கலாம்.

ஆனால் முற்போக்கு, காம்ரேட் என்ற அடையாளங்களுடன் வரும் கேசவன் சாதியத்துக்கு எதிரான ஒரு கலகக்காரன் அல்ல. அப்படி அட்டையில் குறிக்கப்படுகிறது. ராமானுஜரைப்போல கல்லூரி நாட்களில் தனித்த புரட்சியேதும் செய்யவில்லை. அல்லது கும்பகோண அக்கிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்களைக் கேசவன் அழைத்தும் வரவில்லை. அல்லது கும்பகோணத்தில் சாதியத்திற்கு எதிராக நடந்தபோராட்டங்களில் அவன் கலந்து கொண்டதாகவும் இல்லை. ஒன்றே ஒன்று செய்கிறான் கல்லூரிக்குப் போகும்போது பூணூலை கழற்றி ஒளித்துவைத்துவிட்டுச் செல்கிறான்.

இந்திரா பார்த்தசாரதி வைணவத்தில் தோய்ந்தவர். தமிழ் வைணவம் வடகலை ஆரியமரபையும், தென்கலை திராவிட மரபையும் இணைத்து வளர்ந்தது; எழுந்தது என்பது ஒரு எளிய வரலாறு. ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்ற பொருளில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர் இந்திரா பார்த்தசாரதி. வர்ணாசிரம தர்மத்தை வற்புறுத்திய வடகலையில்தான் கேசவன் நிற்கிறான். சாதியை மறுதலித்த மானிட ஒற்றுமையைப் பேணிய, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை முன்னெடுத்த தென்கலை வைணவத்திற்குக் கேசவன் நாவலில் வந்திருந்தாலே போதும். அவன் உண்மையான புரட்சிவாதியாக மாறியிருக்கலாம். பூணூலைக் கழற்றிவைக்க வேண்டிகூட வந்திருக்காது, பசவண்ணார் சாதியற்ற சமுதாயம் காண எல்லா உதிரிசாதிகளையும் ஒன்றிணைத்து வீரசைவம் கண்டதுபோல வைணவத்தில் நம்மாழ்வார் தென்படுகிறார். தென்கலை வைணவரான நம்மாழ்வாரின் பாசுரங்கள் அத்தகையத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு உரை கண்ட அழகிய மணவாள நாயனார் ‘ஆசாரிய ஹிருதயம்’ எழுதுகிறார். அதில் முழுக்க முழுக்க வடகலை வைணவத்தை மறுத்து தென்கலை வைணவத்தின் சாதிமதபேதமற்ற சமத்துவக் கொள்கை மேலோங்கி இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். அழகிய மணவாள நாயனார் பிராமணராக இருந்தும் நம்மாழ்வாரின் தென்கலை வைணவமே உயர்ந்தது; சாலச்சிறந்தது எனப் போற்றுகிறார். எனவே பிராமணரான அழகிய மணவாள நாயனார் உண்மையான புரட்சிவாதியாகிறார். கேசவன் கல்லூரிக்குச் செல்லும்போது பூணூலைக் கழற்றிவைத்து விட்டுச் செல்கிறான். வீட்டிற்கு வந்ததும் போட்டுக் கொள்கிறான். இவ்விடத்தில் வள்ளலார், நாராயணகுரு பழையதடத்தை தூக்கியெறிந்து புதிய பக்தி இயக்கத்தை உண்டாக்கியது நினைவிற்கு வருகிறது. அங்கும் இங்கும் அவன் நேசத்தைக் காட்ட இப்படி செய்கிறான் என்றே எடுத்துக்கொள்வோம். வைணவத்தை ஆழ்ந்துகற்ற இ.பா. ஆசாரியஹிருதயம் சாதி, மத, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவக் கொள்கையை வற்புறுத்துகிற உரை நூல் என்று தெரிந்திருந்தும் அது பற்றிய பார்வையை நாவலுக்குள் விவரிக்காமல் இ.பா.மறைத்துவிட்டு வடகலை வைணவ கேசவனைச் சாதிகடந்தவன் என்று கட்டமைக்கப் பார்ப்பதுதான் ஏமாற்றுத்தனம். உண்மையில் சாதியை கேசவன் கடக்கவில்லை. சாதியின் இறுக்கத்தை, பின்னலை உணர்கிறான். அதுவும் திராவிட கட்சி எழுச்சியின் காரணமாக, வீட்டிற்குள் அல்ல வெளியில். ஆனால் இ.பா. இந்த விதத்தில் காட்டவில்லை. பிராமணர்களின் ஒழுக்ககேடுகள் பிடிக்காமல் பிராமண ஆசாரங்களைக் கடைப்பிடிக்க மறுப்பதுபோல காட்டுகிறார்.

வேர்பற்று நாவலின் அட்டையில் எடுத்துரைக்கப்படும் சாதியைக் கடக்க முயன்றவன் என்ற வாசகமானது வடகலை வைணவத்து கேசவனுக்குப் பொருத்தமாகப்படவில்லை. இந்த நாவலை இ.பா. எழுதும்போது வயது 60. மாணவர் அல்ல. தமிழ் வைணவத்தை அறிந்தவர். அறிந்திருந்தும் கேசவனை காம்ரேட், முற்போக்கு என்று காட்டி பூணூலை மட்டுமே கழற்றிவைக்கிற பையனாகக் காட்டிவிட்டார் வைணவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கேசவனுக்குத் தென்கலை என்பது என்னவென்று தெரியாமலா இருக்கும்! தென்கலை வைணவம் மறைக்கப்பட்டு எழுதப்பட்ட நாவல் ‘வேர்பற்று’. தெளிவாகத்தான் வடகலையில் வேரூன்றி நிற்கிறார் என்றும் சொல்லலாம். பொதுவாக ‘ஆசாரிய ஹிருதயம்’ உரை நூலின் சிறப்பு குறித்து வடகலையினர் ‘மூச்’ விடுவதே இல்லை. ஆனால் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலில் வைணவத்தில் உன்னதத்தை (தென்கலை) இ.பா.வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அது நிகழ்கால பிராமணர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் அல்ல. ஆயர்குலத்தின் வழிவந்த கண்ணனின் உலகம் என்பதால் சாத்தியமாகியிருக்கிறது. புராணிய கதையை மாற்றுக்கோணத்தில் காணமுற்பட்ட நாவல். வேர்பற்று நாவலின் துவக்கத்தில் திருவாய்மொழியில் புறநடை எனக் கருதப்படும் இறைவாழ்த்தான தனியன் பாடலைப் பாடுகிறார். சமத்துவத்தை வற்புறுத்தும் பாடலைப் பாடவில்லை. கேசவனின் அப்பா துயில் எழுப்புகிறார். நாவலின் இறுதியில் பெருமாள் திருமொழி தமிழ்பாசுரம் சொல்லி வேலையைப் பிடிக்கிறார்.

வடகலை வைணவராயினும் கேசவனின் அப்பா நடாதூர் ஸ்ரீவத்ஸன் ஒரு மனிதராக நேர்மையானவர். சடங்குகளை மதித்தாலும் பொய்மைகளுக்கு எதிரானவர். கேசவன் தமிழ் படிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவனுடைய தேர்வில் பெரிய நெருக்கடியை அவர் தருவதில்லை. கேசவனின் சித்தப்பா பெண்பித்தன். ஊர் ஊருக்கு வைப்பாட்டிகளை வைத்து நாசமானவர். அவர் ஒரு வைப்பாட்டி வீட்டில் இறந்துவிடுகிறார். நல்ல காரியம் செய்ய யாரும் முன்வராதபோது கேசவனின் அப்பா நடாதூர் முன்நின்று செய்கிறார். ஊர் எதிர்ப்பையும், கேலிப்பேச்சையும் மீறி பூணூல் போடாமல் காரியம் செய்கிறார். கேசவனைக் கொள்ளிவைக்கச் செய்கிறார். இந்த சித்தப்பனின் வைப்பாட்டிக்குப் பிறந்த பெண் ஈமச்சடங்கிற்கான பெரிய தொகையைக் கேசவனின் அப்பாவிடம் தர முனைகிறபோது வாங்க மறுக்கிறார். 20 ஆயிரத்தை வங்கியில் போட்டு உன் மகன் உப்பிலிக்குப் பயன்படும்படி செய் என்கிறார். அது சித்தப்பா ஈமச்சடங்கிற்காக சேர்த்து வைத்த பணம் தான் என்று அவள் சொன்னபோதும் மறுத்துவிடுகிறார்.

அதேபோல கேசவனின் பெரியப்பா திருமணம் முடித்து குழந்தைகள் பிறந்த பின் ஒரு வெள்ளைக்காரி மீது காதல் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். பல்வேறு இடங்களில் அழைந்து திரிந்து சொத்துக்களை இழக்கிறார். அவரது குடும்பம் ஏழ்மையில் வாடி வளர்கிறது. ஆங்கில இலக்கியம் படித்த அவர் இறுதி காலத்தில் கோயிலில் பிச்சை எடுக்கிறார். இதனைக் கண்ட கேசவனின் அப்பா வீட்டிற்கு அழைத்துவந்து பராமரிக்கிறார். அவர் திண்ணையில் மௌனமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கும் ஊர் மக்கள் மகாஞானியாகப் பார்க்கின்றனர். இவரை வீட்டை விட்டுத் துரத்துங்கள், எங்களை ஏழ்மையில் வாடவிட்ட இவன் அப்பனா என்று சண்டையிட்ட பெரியப்பாவின் மகன் இவரை ஞானியாக ஊர்மக்கள் பார்ப்பதைக் கண்டதும் தன் வீட்டிற்குக் கொண்டுசெல்ல நினைக்கிறான். அவன் வக்கீல் வைத்து அழைத்தும் அவர் மறுக்கிறார். இவரை வைத்து காசு பார்க்கலாம் என்று துடிக்கிற மகனைத் தடுக்கிறார் கேசவனின் அப்பா. அவர் ஒரு மனிதர். ஞானியல்ல. இந்த பொய் புனைவுகளை அனுமதிக்கமாட்டேன் என்று காசுபார்க்க முயலும் கூட்டத்தை விரட்டியடிக்கிறார். இப்படி பல வகையில் வடகலை வைணவராக இருந்தும் பொய் சடங்குகளுக்கு, பித்தலாட்டங்களுக்கு இடங்கொடுக்காத மனிதராக உயர்ந்தபடி இருக்கிறார்.

கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஜானகி என்ற பெண் மீதும், சிதம்பரத்தில் படிக்கும் போது சுபத்திரா என்ற பெண் மீதும் காதல் கொள்கிறான் கேசவன். கண்டதும் காதல் போலத்தான். ஜானகி ஒரு முற்போக்கு குடும்பத்தில் இருந்து வந்தவள். (ஜானகியின் அண்ணனும் கம்யூனிஸ்ட் மோகனும் உடன்படித்தவர்கள்) அவள் ஆங்கிலமோகம் கொண்ட ஜெய்சந்திரனை வளைய வருவதைக் கண்டதும் இவன் ஏமாறுகிறான். கிருஷ்ணன் என்ற அறைத்தோழனின் உறவுக்காரியான சுபத்ரா ஒரு டாக்டர். ஒரு கருத்தரங்கிற்காக சிதம்பரம் வருகிறாள். கிருஷ்ணனுக்குப் பதிலாக கேசவன் கிருஷ்ணனாகப் போகிறான். பின் ஆள்மாறாட்டத்தைக் கேசவனே சொல்லிவிடுகிறான். அவள் மீது காதல் கொள்கிறான். அவள் இவன் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதாமலேயே அமெரிக்கா போய்விடுகிறாள். வாழ்க்கை வெறுத்து புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சேர்ந்துவிட போகிறான்.

ஜானகி, சுபத்ரா இருவர் மீது கொண்ட காதல் ஆழமற்று விளையாட்டுத்தனமாக இருக்கிறது. இ.பா.என்ன சொல்ல வருகிறார் என்றால் பெண்கள் புத்திசாலிகள், விழிப்பானவர்கள், சொகுசான நவநாகரிகமான வாழ்க்கையைத் தேர்வு செய்பவர்கள் கேசவனைப்போன்ற தமிழ்ப்படிக்கும் மாணவனை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள் என்பதாகக் காட்டுகிறார். இரு பெண்களும் படித்தவர்கள், வசதியானவர்கள் இவனைப் பொருட்படுத்த மாட்டார்கள். முக்கியமாக இந்த ஆண்களின் கன்னித்தன்மையைக்கூட வெகுளித்தனமானது என்றே காட்டுகிறார். கேசவன் போன்றோர்கள் அவர்களுக்குக் கோமாளிகளாகத் தெரிகின்றனர். இப்படியான பார்வை 1947, 49-ல் பெண்களிடம் உருவாகி இருக்குமா? சரி அப்படியே கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் பெண் மீதான ஒரு மனிதனின் காதலாக இல்லை. படித்தப் பெண்கள் புத்திசாலிகள், காதல் உணர்வை பொருட்படுத்தாதவர்கள். கேசவன் போன்ற வெகுளிகள் காதலை வெளிப்படுத்தி, தலைகுனிவைச் சந்திப்பார்கள் என்ற தெளிவான கோட்டின்மீதே இவர்கள் வருகிறார்கள். ஆண்களின் இந்த அசட்டுத்தனங்களைக் கேலியோடு ரசித்து கடந்து விடுவார்கள் என்று சொல்ல வருகிறார். காதலை ரொம்ப ரொம்ப மேலோட்டமான கூத்து என்றே நகர்த்துகிறார். சுபத்திரா மீதான காதல் தோல்வியைத் தாங்கமுடியாமல் அரவிந்தர் ஆசிரமத்தில் சேர ஓடுவதென்பது நம்பும்படியாக இல்லை. கேசவனின் மனவுணர்வுகள் அப்படியான தத்தளிப்புகளுக்குள் இறங்கவே இல்லை. அது மட்டும் அல்லாமல் சுபத்திராவுடனான பழக்கம் ஒன்றரை நாள்தான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு ஓடவைப்பதற்கு ஒரு காரணம் உண்டு. இம்மாதிரியான ஆசிரமம் என்பது கோடீஸ்வரர்கள் பணத்தைக் கொட்டித் தங்கும் கூடாரம். கேசவன் போன்ற சாதாரண பையன் அங்கு தங்க இடம் இல்லை என்பதை விமர்சிக்க ஆசிரமத்திற்கு ஓடவைக்கிறார்.

ஒரு பெண்ணுடன் பழகிய இரண்டு மூன்று நாட்களிலேயே காதல் கொள்வதும் ஏமாறுவதும், நட்பை முட்டாள்தனமாகக் காதல் என்று புரிந்துகொள்ளுவதும் அபத்தம் என்று சொல்லவருகிறார். ஆனால் கேசவன் மார்க்சியம் படித்தவன். மார்க்சியம் குறித்து வந்த புது புது புத்தகங்களைத் தேடிப் படித்தவன். டி.எஸ்.எலியட், தாமஸ்மன், சேக்ஷ்பியர், டால்ஸ்டாய் படித்துவிட்டு விவாதிப்பவன். (டி.எஸ்.எலியட்டின் அந்த ஒரு வரி ப்ரிலியண்டான வரி என்பான் உரையாடலில்) பொய்சடங்குகளை விமர்சிப்பவன். அவன் ஒன்றரைநாள் காதலில் விழுந்து ஏங்குவானா? பாத்திரவார்ப்பிற்குப் பொருத்தப்படாக இல்லை. அது மட்டுமல்லாமல் காதலை இ.பா. ஒரு தியரியாகத்தான் பார்க்கிறார். சுபத்திராவிற்கு இவன் மீது காதல் இல்லை என்பதை ‘Unspoiled mother’s virgin boy’ என்று அவள் சொன்னதாக வருகிறது. இம்மாதிரி மேற்கோள் தொடர் எல்லாம் பிராய்டின் மூலத்திலிருந்து எடுத்துக்கொண்டது. சுபத்திராவிடமிருந்து அல்ல. மட்டுமல்லாமல் கேசவனைக் கற்புக்கரசன் என்று சொல்வதில் உள்ளூர ஒரு பிரியம் இ.பா.விற்கு இருக்கிறது. காதலைக் காதலாகப் பார்க்கிற மனம் இல்லாமல் விமர்சன கண்கொண்டு பார்த்தால் அப்பகுதி காதலாக இருக்காது. கன்றாவியாக இருக்கும்.

ஐயங்கார் வீட்டுப் பையனான கேசவன் சமஸ்கிருதமோ, கணிதமோ, ஆங்கிலமோ படிக்காமல் தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறான். இந்தத் தேர்வை படித்து முடிக்கும்வரை அவன் குடும்பத்தினர், சுற்றத்தினர் எதிர்க்கின்றனர். விமர்சிக்கின்றனர். மறுபக்கம் திராவிட கட்சி அனுதாபிகளான ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் (துணைவேந்தர் உட்பட) இவன் எதற்குத் தமிழ்ப்படித்தான் / படிக்கிறான் என்று வெறுக்கின்றனர். தமிழ் இலக்கிய உலகில் நுழைய இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கடுகடுக்கின்றனர். இரண்டு பக்கமிருந்து வந்துவிழும் விமர்சனங்களை, காயங்களை ஏற்றபடி அவன் தமிழ்ப்படித்து முடிக்கிறான். இதுதான் நாவலில் வலுவான பகுதியாக உண்மையான நெருக்கடியை எதிர்கொண்டதாக இருக்கிறது என்றாலும் அவன் தமிழ்ப்படிப்பதைக் குடும்பத்தினர் எதிர்ப்பதில் உள்ள உண்மை அளவு பிராமணர் அல்லாதவர் அவ்வளவு வெறுத்திருப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இ.பா.பிராமணர் அல்லாதவர்கள் அப்படி வெறுத்ததாகப் பாவிக்கிறார். ஒரு பலியை அவர்கள் மீது போட்டுக்கொண்டு ஒரு திருப்தியை நாடுகிறார். திராவிட & ஆரியப்பகை உச்சம்பெற்ற அறுபதுகளின் பின்புகூட பிராமண மாணவன் தமிழ்ப்படிப்பதை வெறுத்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிராமணத்துவத்திற்கு எதிரான & மாற்றான சிந்தனைபோக்கு உள்ள இலக்கியச் சான்றுகளை மறைத்தார்கள் என்ற கோவம்தான் இருந்திருக்கிறது. இருக்கிறது.

பல்வேறு இடங்களில் நிலவுடமை சார்ந்த ஐயங்கார்களின் வைப்பாட்டி உலகத்தைத் தொடர்ந்து விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். கோயில் சொத்துக்களைத் தின்னுகிற, பொய்கணக்குச் சொல்லி பிழைக்கிற, துலுக்கனுக்குக் கூட்டிக்கொடுத்து பிழைக்கிற, பொய் சொல்லுகிற ஐயங்கார்கள் எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கப்படுகிறார்கள். சாதி, மதம், அரசியல், உறவு, பண்பாடு என பல்வேறு அம்சங்கள் சார்ந்து மனிதனிடம் வெளிப்படும் பம்மாத்துக்களை விமர்சித்தபடியே இருக்கிறார். ஆனால் பெரும்பாலும் இந்த விமர்சனங்கள் எல்லாம் வாழ்வின் இயக்கத்திலிருந்து உருவாகி வராமல் உரையாடல்கள் இடையே இந்த மோசடி பேர்வழிகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு நாவலில் எல்லாப் பிரச்சனைகளையும் விமர்சனப்படுத்திவிடவேண்டும் என்ற நோக்கை பிரதானமாக கொள்கிறார். விமர்சனபாணி எழுத்துவகை என்பது ஆழங்காலுக்குள் செல்லாமல் மேற்பரப்பிலேயே மிதக்கக்கூடியது.

கோவிழியார், இராமசாமிப்பிள்ளை என்ற இரண்டு தமிழாசிரியர்கள் பாடம் நடத்தும்முறை சொல்லப்படுகிறது. முதலாமவர் இலக்கியநுட்பம் தெரியாதவர். இரண்டாமவர் இலக்கணப்பிழை பார்ப்பவர். வெள்ளைக்காரனுக்கு எண்சீர் விருத்தம் பாடியிருப்பதில் உள்ள இலக்கண சுத்தத்தை மெச்சுபவர். இருவரும் இலக்கியத்தின் உட்பொருள் காணாது வெற்று ஆரவாரம் செய்பவர்களாகக் காட்டப்படுகின்றனர். இப்படியான வறட்டுத்தனமான தமிழ்பேராசிரியர்கள் இருப்பது உண்மைதான். அதே சமயம் நல்ல தமிழறிஞர்கள் இல்லாமலும் இல்லை. அவர்கள் குறித்து பேச்சே இல்லை. அதே சமயம் சமஸ்கிருத டுபாக்கூர் பேர்வழிகள் நிச்சயம் இருக்கக்கூடும். அவர்கள் நாவலில் சந்திக்கு வருவதில்லை. மேலைநாட்டினர் இந்திய தத்துவம் குறித்து எழுதிய கட்டுரைகளைக் கேசவனின் அப்பா கடுமையாக ‘இந்து’ ஆங்கில நாளிதழ்களில் விமர்சிக்கிறார். சமஸ்கிருதத்தை நேரடியாகப் படிக்காமல், அதன் ஆழங்கால் தெரியாமல் எழுதுவதாக விமர்சிக்கிறார். இப்படியான தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த தமிழறிஞரை இ.பா.வால் சொல்ல முடியவில்லை. அப்படியான விருப்பம் அவருக்கு இல்லை.

சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், முதலாளிகளின் காங்கிரசாக மாறுவது; கல்வி நிறுவனங்களில் திராவிட குண்டர் ஆதிக்கம் கோலோச்சுவது; பிராமணர்களுக்கு எதிராக வசைபாடுவது; கம்யூனிஸ்டுகள் 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது - பின் மாறுவது; பிள்ளையார் போன்ற சாதிகளின் மேலாதிக்கம் வருவது; காந்தி சுடப்படுவது; சுடப்படுவதற்கான காரணங்கள், காந்தி மீது மக்களுக்கு இருந்த நல்லெண்ணங்கள், காந்தியகொள்கைக்கு எதிரானவர்களிடமும் காந்தி குறித்து இருந்த நன்மதிப்பு, (பாகிஸ்தானுக்கு பேசியபடி 56 கோடியைத் தர வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த உறுதி) என்று பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படுகின்றன. திராவிட கட்சியின் ஆதிக்கத்தால் துணைவேந்தர்கள் அமர்வது போன்ற அரசியல் ஆதிக்கப் பிரச்சனைகள் நாவலின் ஓட்டத்தில் பேசப்படுகின்றன. இந்த அரசியல் பேச்சுக்கள் எல்லாம் பொதுவானதளத்தில் ஒருவகையில் தெரிந்த விசயங்கள் மேலோட்டமான நிலையிலேயே வருகின்றன. கும்பகோணம், சிதம்பரம் என்ற நிலப்பரப்பிலிருந்து எழுந்த அரசியல் இயக்கங்களாக இல்லை. சமூகத்தில் தந்தை பெரியார் நிகழ்த்திய எந்த மாற்றமும் நாவலுக்குள் வரவில்லை. திராவிட கட்சி ரௌடிகளைக் கல்வி நிறுவனத்திற்குள் ஏவிவிடும் கட்சியாக மட்டுமே காட்டப்படுகிறது.

பெரியார் சமூக மாற்றத்தில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தார். கேசவன் சொல்கிறான் நானும் முற்போக்குவாதிதான். இதோ பாருங்கள் எனக்குப் பூணூல் இல்லை. ஆனால் திராவிட கட்சிக்காரர்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பழியை அவர்கள் மீது போட்டுவிட்டு தப்பிக்கிறார். பூணூல் இல்லை என்பது புரட்சியாகுமா? மட்டுமல்ல, கேசவன் மார்க்சிய மாணவனாக சொல்லப்படுகிறானே தவிர அவன் அதன் வழியில் எந்த செயல்பாடும் அற்றவனாக இருக்கிறான். கதைத்தலைவனைக் காம்ரேட் என்று சொன்னாலே போதும்போல, மார்க்சிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும் நாவலாகிவிடும் நம்மவர்களுக்கு என்று இ.பா.அறிந்திருக்கிறார். உண்மையில் - நடைமுறையில் வைணவ சடங்குகளைக் கறாராகக் கடைபிடிக்காத ஒரு ஐயங்கார் இளைஞன் என்பதே சரியானது. வைதீகத்தைக் கடைபிடித்தால் திராவிட இயக்க மாணவர்களிடையே கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் உள்ளாவோம் என்ற நிலையிலேயே அக்கால பிராமண மாணவர்கள் திருமண் இடுவதையோ, பூணூல் போடுவதையோ தவிர்த்திருக்கவேண்டும். இவ்விதம் அணிய தயங்கியவர்களை புரட்சிவாதியாக்கி காட்டுகிறார் இ.பா. தனது பார்ப்பன அடையாளங்களைப் பொது இடங்களில் வெளிப்படுத்திக்கொள்ள தயங்கி வேறு வழியில்லாமல் அப்பா, அம்மா நிர்பந்தத்தினால் கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் இடங்களில்தான் அசலான கேசவனைக் காணமுடிகிறது. அந்தக் கணங்களில் உண்டாகும் கூச்ச உணர்வு மெய்யானவை. இந்த உண்மைதான் படைப்பின் உண்மை என்பது. தன் பக்கத்து நியாயங்களையும் விமர்சனங்களையும் தன் வாழ்க்கை சார்ந்து உருவாக்குவதுபோல மாற்றுபக்கத்து நியாயங்களையும் விமர்சனங்களையும் மீட்டிக்கொண்டு வரும்போதுதான் எழுத்து கலையாக மாறுகிறது. நாவலில் இன்னொரு முகம் துலங்கவில்லை.

கேசவனுக்கு எந்தத் தலைமறைவு இயக்கத்தோடும் தொடர்பில்லை. அவனுக்கு ரகசியதிட்டம் என்று ஒன்றுமில்லை. புரட்சியாளர்களுடன் சந்திப்பும் இல்லை. கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாநாட்டுக்கு வந்தபோது வரவேற்பு வாசிக்கிறான். எதற்காக என்றால் நாவல் முழுக்க காம்ரேட் என்ற சிலுவையைச் சுமப்பதற்கு. பிறத்தியாரை விமர்சிக்கிறான். தனக்குள் தன்னை விமர்சித்துக் கொள்ளவில்லை. கேசவன், தன்னைப் பார்ப்பனன் இல்லை என்று சொல்லிக் கொள்கிற நவீனபார்ப்பான் என்று கூறலாம்.

தி.க.காரன் சாமியில்லை என்பான், மனைவியைக் கோயில் மண்டகப்படிக்கு அனுப்பி வைப்பான், மார்க்சியன் மானுடத்தை நேசி என்பான், ஆனால் காதலிக்கக்கூடாது என்பான். பக்தி அபின் என்பான் இவனுக்கு மார்க்சிய பக்தி அபினாக உண்டு. இப்படி மேலோட்டமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நாவல் 1946 - 1952 காலத்தைப் பேசினாலும் 1990ன் மனநிலையிலிருந்தே அக்கால அரசியல், சமூக வாழ்க்கையை அளப்பதாக இருக்கிறது. அந்தக்கால பதற்றம், தெளிவற்ற எதிர்காலம், கட்சிகளின் போக்குகள், வாழ்க்கைப்பாடுகள் என உருவாகவில்லை. இன்று வந்தடைந்திருக்கின்ற நிலையிலிருந்து தெளிவிலிருந்து எடுத்துப்போட்ட விளக்கங்களாக இருக்கின்றன. அந்தக் காலத்திற்கே உரிய கொதிப்பு இல்லை. ரொம்ப சாவகாசமாக உஷ்ணமில்லாமல் அமர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. உதாரணமாக கேசவன் மாணவர் தேர்தலில் கம்யூனிச இயக்கம் சார்பாக நிற்கிறான், தோற்கிறான் என்ற அடிப்படையில் விவாதிக்கப்படுகிறது. அந்த நிகழ்வு எப்படியெல்லாம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக இருந்தது என்ற சித்திரம் உருவாகவில்லை. தி.க.காரர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். சுயமரியாதை பிரச்சாரத்திற்குப் பெரியார் வரும் நாளில் பிராமணர் வீடுகளில் என்ன மாதிரி பேசிக்கொண்டார்கள் என்பதான சலசலப்பு இல்லை. கும்பகோண தெருவில் ஒரே ஒருமுறைகூட சுதந்திரம் கேட்டு காங்கிரஸ்காரர்கள் ஊர்வலம் போவதுகூட இல்லை. காந்தி சுடப்பட்டார் என்றதும் உண்டாகும் சொல்லமுடியாத பதற்றச்சூழல், கையறுநிலை மக்களை எப்படி அப்பியது என்று இல்லை. மாறாக, அவர் சுடப்பட்டதும் அவர் குறித்து பல்வேறு தரப்பினரின் தெளிவான எண்ணங்கள்தான் எடுத்து வைக்கப்படுகின்றன. கட்சிகளின் இன்றைய வீழ்ச்சியின் அடிப்படையிலேயே அன்றைய நிலை பார்க்கப்படுகிறது. 1948-லேயே காங்கிரஸ், முதலாளிகளின் கைகளுக்குப் போய்விட்டது என்ற கருத்து இன்று திரண்டுவந்த ஒன்றுதான். அன்று முதலாளியாக இருந்த காங்கிரஸ்காரர்களிடம் ஒரு யோக்கியதை இருந்தது என்பது மறைக்கப்படுகிறது. இதுமாதிரி பல இடங்களைச் சொல்லமுடியும்.

கேசவனுக்குத் தமிழ்விரிவுரையாளர் பணி கிட்டுகிறது. அவன் ஐயங்கார் என்பதால் அவனுடைய அப்பா வடகலை ஐயங்கார் என்பதால். இவன் வைணவ பாசுரங்களை விரும்பி மனனம் செய்திருந்ததால் அவன் சாதிசார்ந்த கல்வி உலகம் தனது சாதி இளைஞனுக்கு அந்த வாய்ப்பை நல்குகிறது. இதுதான் இன்றைய உண்மை என்பதை இறுதி பகுதி சரியாக எடுத்து வைக்கிறது. அவன் விரும்பவில்லை என்றாலும் அவனுடைய வேர்தான் அவனுக்கு ஒரு பற்றுக்கோடாக அமைகிறது. இந்த சுயசாதி விமர்சனம்தான் பொதுதளத்தில் அனைத்து சாதிகளின் நிலைப்பாடாகவும் இருக்கிறது என்பதைச் சொல்கிறது. சாதி அதிகார மையத்திற்கு வரும்போது சுயசாதியைத் தூக்கிப் பிடிக்கிறது என்று சொல்லவருகிறது.

தன் சமூகத்திற்கு வந்த அரசியல் விமர்சனங்களுக்கு நிகராக பிறசமுகத்தினரின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்கிறான். இதில் சுயசாதியினரின் மொல்லமாரித்தனங்களும் சேர்த்தே விமர்சனம் செய்யப்படுவதால் நாவல் ஒரு வித சமநிலையைப் பெற்று விளங்குகிறது.

கும்பகோணத்தை ஒட்டிய சாளக்குளம் என்ற கிராமம் நாவலில் உருவாகவில்லை. கும்பகோணத்து நிலப்பரப்பு ஓரிடத்திலும் விரியவில்லை. இ.பா.வின் இளமைக்காலம் முழுக்க கும்பகோணத்தில் கழிந்திருக்கிறது. இந்த நாவல்கூட அவரின் கல்லூரி வாழ்க்கை சார்ந்த நாவல்தான். இந்த பலமான அம்சம் இருந்தும் கும்பகோணத்துப் பின்னணி உருவாகிவரவில்லை. கேசவன் படித்த கல்லூரியில் இருப்பிடங்கள் சார்ந்த சித்திரங்கள் இல்லை. காவிரி ஆறு இல்லை. நெல்வயல் இல்லை. மகாமகம் குளம் இல்லை. கோயில் திருவிழா இல்லை. விளைந்த நெல்வயலின் வாசம் இல்லை. அறுவடை இல்லை. வைக்கோல் போர்கள் இல்லை. கொம்பு தீய்த்த பனங்காரி குட்டைக்காளைகளின் வண்டிச்சத்தம் இல்லை. தொழி கலக்குவது இல்லை, நடவு இல்லை. ஆனால் குடவாசலில் குத்தகைப்பணம் சரிவர வரவில்லை என்கிறார் கேசவனின் அப்பா. நாலைந்து இடங்களில் குத்தகைக்காரன் ஏமாற்றுகிறான் என்கிறார் கேசவனிடம். கம்யூனிஸ்டான கேசவன் அதைக்கேட்டுக் கொள்கிறான். பிராமணன் விவசாயம் செய்யப்போனால் குடியானவன் விடமாட்டான். விரட்டியடிப்பான் என்கிறார் 1948-ல் இந்தப் பழியையும் குடியானவர் மீது போடுகிறார் இ.பா.

கூரை வேய்ந்த குடியான தெருக்கள் இல்லை. விவசாயமே நிகழவில்லை. காவிரியில் வெள்ளம் வந்ததா? வறண்டதா? அறுவடைகாலத்தில் மழை விழுந்து சீரழிந்ததா? எதுவும் இல்லை. சாமிதரிசனம் வந்ததா? கோபுரம் பார்த்தார்களா? எதுவுமில்லை. கும்பகோணத்தில்தான் எத்தனை கோயில்கள் இருக்கின்றன! குமரிப்பெண்கள் தண்ணீர் எடுக்கச்செல்லும் கோலாகலம், கோயிலுக்குப் போகும் குதூகலம்; நாட்டிய கச்சேரி, இசைக்கச்சேரி எதுவும் இல்லை. கேசவன் வாழ்ந்த தெரு எப்படிப்பட்டது. வீடுகள் எப்படிப்பட்டவை. பக்கத்து வீடு யாருடையது. எதிர் வீட்டு பெண் எப்படி இருந்தாள். அல்லது அடுத்த தெருவில். கேசவன் இளைஞன். சைக்கிள் வைத்திருப்பவன். புற உலகம் என்ற ஒன்று நாவலில் உருவாகவே இல்லை. இந்த மருதநிலம் 1946-1952- ல் எப்படியெல்லாம் இருந்தது? எப்படியெல்லாம் விளைந்தது; எப்படியெல்லாம் மனிதர்கள் உழைத்தார்கள் என்பது எட்ட நின்று பார்த்தப் பார்வைகூட இல்லை. கும்பகோணத்து சிறு வாய்க்கால்களில் ஒரு காகமோ, குருவியோ குளிப்பதுகூட இல்லை. கும்பகோணத்து தெருவில், கும்பகோணத்து வயல் பாதைகளில் கேசவன் நடப்பதே இல்லை. அல்லது சைக்கிளில் போவதே இல்லை. கேசவன் படிக்கிற காலத்தில் என்னதான் நிகழ்ந்தது. ஒன்றுமே நிகழவில்லை. ஒரு பொம்மலாட்டம், ஒரு நாடகம், ஒரு சினிமா, ஒரு திருடு, எதுவுமே நாவலில் இல்லை. கும்பகோணத்து நாவலில் கும்பகோணம் இல்லை. இதை எப்படி தஞ்சைபுலத்து நாவல் என்று சொல்ல!

அதே சமயம், ஐயங்கார் குடும்பத்து வாழ்க்கைமுறை போதுமான அளவு சிறப்பாகவே வந்துள்ளது. துகில் எழுப்பும் அப்பாவின் திருவாய்மொழி பாசுரம், மார்கழிகுளிர், கட்டுக்குடுமி, பஞ்சகச்சம், அழுக்குகோட்டு, ஆணி அவிட்ட ஊர்வாரம், சாவு, சடங்கு, சல்லாபம், பொறணி, சீட்டுக் கச்சேரிகள், மன்மதலீலைகள், சமஸ்கிருதபடிப்பு, கிணற்றடி குளியல், இந்து ஆங்கில நாளிதழ், கிரிக்கெட் விளையாட்டு, ஆங்கிலமோகம், பெரியவர்களுக்கு உள்ள சமஸ்கிருத ஆர்வம் என பிராமணர்களின் வாழ்க்கை சார்ந்த அம்சங்கள் நிரவி வந்து நாவலை நம்பும்படி ஆக்குகிறது.

குறிச்சொற்கள்

மேல் செல்