கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

வலியையும், வாழ்வியலையும் பற்றிப் பேசுகின்ற சொல்லில் உறைந்து போதல்

நஸார் இஜாஸ்

பகிரு

இருத்தலுக்கான அழைப்பு, அவாவுறும் நிலம் ஆகிய இரு கவிதைத் தொகுதிகளின் பின்னர் கவிஞர் முல்லை முஸ்ரிபாவின் மூன்றாவது தொகுதியே 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதியாகும். வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் அரங்கேறிச் சென்ற நாளாந்த செயற்பாடுகளில் பிரித்தறியப்பட்ட துயரங்களை அப்பட்டமாக எழுத்துக்களில் கொண்டு வந்ததன் ஒட்டு மொத்த சேர்க்கையாகவே 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதி எமது கண் முன்னே விரிந்து நிற்கின்றது. 

சொந்த தேசத்தை விட்டு வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு, தான் பிறந்து வளர்ந்த, தனது உடலில் ஒட்டியுறவாடிய புழுதி மண்ணை விட்டு விட்டு கால் போன போக்கில் பதறப்பதற உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பினாத்தியபடி பயணிக்கின்ற கொடுமையிருக்கின்றதே, அதை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. அது தாயினது பிரசவ வலிக்கும் அப்பாற்பட்டது. தாயினது பிரசவ வலியின் பின்னரான பொழுதிலும் ஒரு பலமான சந்தோசம் நிலைத்திருக்கும். ஆனால் துரத்தியடிக்கப்பட்டவனின் துயரம் அவ்வாறானதல்ல. அதை வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கு ஆயிரம் தொன் கண்ணீர் துளிகளாவது தேவைப்படலாம். 

இடம் பெயர்ந்த முஸ்லிம் சமுகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளை அனுபவித்த சமுகம் அடக்குமுறை வாழ்க்கைக்குள் அகப்பட்டு அகதியாக ஒரு வட்டத்திற்குள் தமது கனவுகளை புதைத்து விட்டு, இடம் பெயர்ந்து வலிகளோடு நாளாந்தம் வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பதைக் கவிதை மூலமாக எமது மனக்கண்ணில் காட்சிப்படுத்துகின்றது முல்லை முஸ்ரிபாவின் 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதி.

இவரது முதலாவது கவிதை நூலான இருத்தலுக்கான அழைப்பு 2003 இலும், இரண்டாவது கவிதைத் தொகுதி 2009 இலும் வெளிவந்தது. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியான அவாவுறும் நிலம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒவ்வொரு நூலையும் வெளியிடுவதற்காக சில கால அவகாசத்தை எடுத்திருக்கின்றார் முல்லை முஸ்ரிபா. எவ்வளவுதான் காலம் ஆனாலும் சொல்லின் சுவை மாறாமல் படிப்பதற்கு கிளர்ச்சியூட்டும் வகையில் தனது கவிதைத் தொகுதிகளைத் தந்துள்ளார் முல்லை முஸ்ரிபா. 

முல்லை முஸ்ரிபா முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீர் ஊற்று என்ற கிராமத்தில் பிறந்தவர். தனது 13ஆம் வயதின் ஆரம்பம் தொட்டே பேனாவைப் பற்றிப் பிடித்து எழுதி வந்த இவருடைய எழுத்துக்கள் இன்று வரை பலரால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை கல்வி நிறுவகத்தின் பாடத்திட்டத்திலும் இவருடைய கவிதைகள் சேர்க்கப்பட்டு, மாணவர்களுக்கு முன்மாதிரிக்காக கற்பிக்கப்படுகிறது. இவர் தனது இலக்கியப் பயணத்தின் வேகத்தில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இளம் படைப்பாளிகளுக்கான கௌரவ விருது, தேசிய சாஹித்ய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வன்னிச் சான்றோர் விருது, கொடகே சாஹித்ய விருது, தேசிய சாஹித்ய சான்றிதழ், வடமாகாண இலக்கிய விருது, யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் மூத்த படைப்பாளிகளுக்கான சிறப்பு விருதினையும், விஷேடமாக 2015 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது விழாவின் போது 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதிக்காக அரச இலக்கிய விருதை பெற்றுக் கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

முல்லை முஸ்ரிபா வெறுமனே கவிதைகளோடு மாத்திரம் கைகோர்த்துப் பயணிக்காமல் திறனாய்வு, பத்தி எழுத்துக்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாளராகவும் செயற்பட்டு வருகின்ற இவர் பாடசாலை அதிபர், விரிவுரையாளர், வளவாளர் மற்றும் முதன்மையாசிரியராகவும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். 

நாம் எமது அன்றாட வாழ்வில் எவ்வளவோ விடயங்களை ஒருவருடன் பறிமாறுகிறோம், செயற்படுகின்றோம். ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் நல்லதாகப் பார்ப்பதில்லை. அதன் வழி நடப்பதுமில்லை. அவரவர் மனோநிலைக்கேற்பவே செயற்படுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு செயற்பாடும் ஒருவருடைய கண்களுக்குள் சாதாரண நிகழ்ச்சியாகவே தென்படும். எவ்வளவு அக்கிரமம் நடந்தாலும் எதையுமே பொருட்படுத்தாதவர்களாகவே செல்வர். ஆனால் முல்லை முஸ்ரிபா ஒவ்வொரு நிகழ்வுகளையும் சாதாரண நிகழ்வாகப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் சமுகத்திற்கான முன்னோடியாகவும், சமுக முன்னேற்றத்தின் வழி வகைகளாகவும் பார்த்துள்ளார் என்பதை அவரது கவிதைகளைப் வாசிப்புச் செய்கின்ற போது எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வெறுமனே கற்பனைகளோடு மாத்திரம் நின்று விடும் எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் முல்லை முஸ்ரிபா தனது எழுத்துத் தொழிற்சாலையினூடாக புதுமையானவற்றை யதார்த்தமாகவும் இயல்பாகவும் படைத்திருக்கிறார். உண்மையில் இவ்வாறான எழுத்துக்கள் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவருடைய சொற்களில் வழிகின்ற துயரம் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்த சமுகத்தின் ஆவணக்காப்பகமாகும். அநீதிகளுக்கெதிராக உயிர்த்துடிப்போடு வீறு கொண்டு எழுகின்ற கவிதைகளாகவே எனது கண்களுக்குள் முல்லை முஸ்ரிபாவின் சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதி தென்படுகின்றது. சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதியில் மொத்தமாக உள்ள 59 கவிதைகளும் ஆரோக்கியமான சொற்பிரயோகங்களுடன் இலகுவாக வாசிப்புச் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதை எவரும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ளலாம். 

எமது நாட்டின் வடக்கு, கிழக்கில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு தமது உடைமைகளையும் விட்டுவிட்டு உயிரைக் காப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் எண்திசைகளிலும் விரண்டோடியது எல்லோருக்கும் தெரியும். பல்வேறுபட்ட இன்னல்களை மாத்திரமே எமது சமுகம் காலாகாலமாக மூட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் முல்லை முஸ்ரிபா தனது கவிதைகளினூடாக முடிச்சவிழ்த்துள்ளார். 

உம்மம்மாவின் கண்கள் 
குழி விழுந்து பச்சையாயின.
அருகிலிருக்கும் பொருளையோ குரலையோ
அடையாளம் காண முடிவதில்லை அவளால்
ஆனாலும் ஆலச் சந்தியடியில் தொடங்கி
அதனது உயிர்ப்புச் சிதறாமல்
ஊரினது வரைபடத்தை முழுதாய்
கவ்வியிழுத்து வருகின்ற
அவளது முகத்திலும் அகத்திலுமான
உணர்வின் ரேகைகள்
என் கண்களுக்குள் வெளியாயின.

மாத்திரமன்றி திணைக்கவிதைகள் ஐந்து என்று பிரதான தலைப்பிட்ட ஐந்து உப கவிதைகளை முல்லை முஸ்ரிபா சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதியினூடாகத் தந்துள்ளார். முல்லைத்தலைவி, கடல் பறை, உழத்திப்பாட்டு, நந்தியாற்றுப்படை மற்றும் கொடிநிலம் ஆகிய ஐந்து கவிதைகளும் பிரதான தலைப்பிடப்பட்டு ஐவகை நிலங்களை மையப்படுத்தி போரின் உக்கிரத் தன்மையை வரைந்துள்ளது. நிச்சயமாக இக்கவிதைகள் அத்தனையும் மீள்வாசிப்புச் செய்யப்படவேண்டியவையே.

முல்லை முஸ்ரிபாவின் குறித்த கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகளில் கவிதையின் காட்சிகளில் சோகம், சந்தோசம், எதிர்பார்ப்பு, கவனிப்பாரற்ற தன்மை, வடுக்கள் விடுதலைக்கான போராட்டங்கள், ஏக்கத்திற்கான காலகட்டங்கள் எனப் பல கண்ணீரின் விலையாக விற்க முடியாத நிலையில் நெஞ்சில் குடியிருந்து கவிதைகளைப் படிப்போரது உள்ளங்களில் தோசப்பிரதிஷ்டனம் செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவருடைய கவிதைகளைப் படிக்கின்ற போது எனக்குள் அவ்வாறான சிந்தனைதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

மனித நேயத்தின் மனச்சிருஷ்டிப்புகளை கவிதைக்குள் அடக்கி அற்புதம் செய்துள்ள முல்லை முஸ்ரிபா தனது சூழலைச் சுற்றி நடக்கின்ற விடயங்களை கவிதைகளாக சல்லடை செய்துள்ளார். ஊரோடு ஒன்றித்துப் போன விடயங்களையும், ஊரின் பாரம்பரியங்களையும், கலாசாரத்தையும் ஆவணப்படுத்த முனைந்துள்ளமையும் இவரது கவிதைகளில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

வாழ்வில் அன்றாடம் சிக்கித்தவிக்கும் மனங்களை திருப்தி கொள்ளக் கூடிய தீர்வுகள் எதுவாகவிருக்கும். தவிர்க்க முடியாத சூழலுக்கும், நியதிக்கும் முன்னால் உட்கார்ந்து கொண்டு தவிக்கின்ற மனிதனின் மனோநிலை மாற்றத்தில் கட்டமைக்கக் கூடிய மாற்றங்கள் என்னவென்பதற்கான பதில்களைச் சொற்குருதியாக கொப்பளித்துக் கொண்டிருக்கிறது 'சொல்லில் உறைந்து போதல்' என்ற இவருடைய கவிதைத் தொகுதி. 

எல்லா விதமான வினாக்களுக்கும் ஏதோவொரு வகையில் விடை கிடைப்பதைக் காட்டிலும், யதார்த்தத்தைக் கைக்கொண்டு ஒரு வினாவுக்கான தீர்வினைப் பெறுவது, மனதில் நிறைந்துள்ள துயரங்களை பனிக்கட்டிகளாய் உருகச் செய்யும். யதார்த்தத்தோடு எழுதப்பட்டுள்ள சொல்லில் உறைந்து போதல் என்ற கவிதைத் தொகுதியில் உள்ள முல்லை முஸ்ரிபாவின் அத்தனை கவிதைகளும் யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை எமக்குள் நிலையாக நிரூபிக்கிறது.

சொல்லும் சொல் நிமித்தமும் உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை பார்த்துப் பக்குவமாக செதுக்கியிருக்கும் முல்லை முஸ்ரிபாவின் கவிதைகள் அத்தனையும் காலம் காலமாக சமுகம் எதிர்நோக்கிய துயரத்தினை ஒட்டு மொத்தமாக உச்சாடணம் செய்யப் போகின்றது. வடிவமற்ற ஒவ்வொன்றையும் வடிவம் கொடுக்கும் நோக்கில் தனக்கான இன்னொரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கும் வெள்ளாப்பு வெளியின் பதிப்பகத்தினால் இவருடைய இக்கவிதைத் தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

கவிதையில் வாழ்தல் என்பது ஆத்மாவின் துடிப்பாய் இருப்பதனால் அடிக்கடி சொல்லில் உறைந்து போகிறேன் அல்லது சொற்கள் எனக்குள் உறைந்து போகின்றன என கவிஞர் முல்லை முஸ்ரிபா தனது கருத்தினை குறித்த நூலில் அப்பட்டமாகவே முன்வைத்துள்ளார். அக்கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் கவிதை என்பது வெறுமனே சொற்களல்ல. அது இரத்தத்தின் சொல், வியர்வையின் சொல், கண்ணீரின் சொல், இதழின் சொல், சில வேளைகளில் பன்னீரின் சொல்லாகவும் காட்சி தருகிறது. மண்ணின் சொல்லும் கவிதைதான் என தொடர்ந்தேர்ச்சையாக தனது மனக்கருத்தினை முன்வைத்துள்ளார் முல்லை முஸ்ரிபா. 

மரணம் என்பது எல்லோரையும் சந்திக்க இருக்கின்ற இறுதி விருந்தாளியாவான். அந்த மரணத்திடமிருந்து எவருமே தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய இரும்புக் கோட்டைக்குள் உட்கார்ந்திருந்தாலும் மரணம் எம்மை வந்தடைந்தே தீரும் என்பதை பின்வரும் கவிதை குறித்து நிற்கின்றது.

சர்வமும் அடங்கியுறைய எனக்குள்
காண்டா மிருகங்களையும் கழுகுகளையும்
திணித்துவிட்டுத் திமிறுகிறாய்
சில போது
கரடிகளையும் கருங்குரங்குகளையும் 
ஏவி விட்டு விருப்பம் பார்க்கிறாய்
ஒரு வெள்ளைப்புறாவின் சிறகு நுனியில்
இரத்தம் சொட்ட
உன் கூடத்தின் அர்த்தப்பாடு குறித்து
காலத்திடம் இறந்து கிடக்கிறேன் நான்
என்னைத் துரத்திய சாத்தானின் மரணம்
எனது காலடியில் நிகழ்ந்தது

ஜனநாயகம் அல்லது வைன் கொடுக்கப்பட்ட பொம்மை, பூர்வீகத்தின் வசீகரம், மரணம் எனும் வீடு, புல்லாங்குழலில் நரம்புகள் உயிர்த்தன, மனம் தேக்கம் காடு, தாயன்பைப் பாடுதல்,  மேய்ந்து திரிகிற காடு மற்றும் 2010.10.31 அன்று தீயிடப்பட்ட தமது பூர்வீகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கண்டல்காடு முஸ்லிம்களின் கண்ணீரின் வலிகளுக்காக எழுதப்பட்டுள்ள மனம் கண்டல்காடு என்ற கவிதைகள் மென்மேலும் வாசிப்பச் செய்யப்பட வேண்டியவையாகும். மனதில் பதியமிடப்பட்ட வலிகளை மனதினுள் புதைத்து வைத்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா.

வலிகளையும், இன்னல்களையும் எமது மனக்கண்ணில் காட்சிப்படுத்திய முல்லை முஸ்ரிபாவின் சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதியைப் படிக்கின்ற போது கண்ணிமைகளின் ஓரத்தில் கண்ணீர் கசிகின்றது. கண்களின் ஓரம் வெள்ளையாய் ஈரம். வெறுமனே கற்பனையோடு எழுதித் தள்ளுகின்ற கவிஞர்களுக்கு மத்தியில் யதார்த்தத்தை உணர்ச்சி பூர்வமாகப் பின்னி வலிகளை வார்ப்புச் செய்துள்ள முல்லை முஸ்ரிபாவின் இக்கவிதைத் தொகுதி நிச்சயமாக காலவோட்டத்தின் யதார்த்தச் சாரமாகும். காலம் முல்லை முஸ்ரிபாவின் சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதியை காலம் காலமாக உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் என்பது மாத்திரம் எமது கண்களுக்குத் தென்படும் தெளிவான உண்மையாகும்.

மேல் செல்