கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

வாழ்வின் நவீன வெளிகளில் ஒரு அந்தப்புரப் பறவை

றியாஸ் குரானா

பகிரு

கதையையே கவிதையாகச் சொன்ன காவிய மரபின் தொடர்ச்சியிலிருந்து, கவிதையைக் கதையாகச் சொல்லும் எடுத்துரைப்பு முறைமைகளின் புதிய திசைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இது கவிதையின் மாறக்கூடிய பகுதிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று. இது பின்நவீனத்துவக் கவிதைகளின் நிலை. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் கவிதையில் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிகளுக்குள் நின்றுதான் கவிதையை இன்று அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், அலறியின் கவிதைகள் நவினத்துவப் பண்புகளையே அதிகம் கொண்டிருப்பதால், இத்தனை நெருக்கடிகளையும் ஒரு புறத்தில் வைத்துவிட்டு, என்ன சொல்கிறது? என்ன செய்ய முற்படுகிறது? அதன்வழியாகத் தன்னை எப்படிக் கவிதையாக நிகழ்த்துகின்றது என்ற ஒரு பார்வையை, அலறியின் கவிதைகள் மீது உருவாக்கலாம் என்ற ஒரு சிறிய முயற்சியே இந்த உரையாகும். அலறியின் கவிதைகள் குறித்த முரண்பாடுகள் மற்றும் விமர்சனங்களை முற்றாக எனது உரை தவிர்த்துவிடவில்லை. ஆயினும், பொதுவாகத் தடங்காட்ட வேண்டிய சில அம்சங்களைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கவிதைகளோடு வினைபுரிய இருக்கும் பல அணுகுமுறைகளில் இதுவுமொன்று. இது தோளில் கைபோட்டுக்கொண்டு காட்டுவழியில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் தோழரைப்போல, கவிதையைப் பாவிப்பதாகும். பயணக் களைப்பு, தனித்துவிடப்பட்ட அச்சம், பரஸ்பர ஒத்தாசை, பயணத்தை நிறைவேற்ற உதவியாய் முரண்பாடுகளை மென்மையாகப் பொருட்படுத்தும் ஒத்துழைப்பு எனப் பல அம்சங்களை முன்னிறுத்தி அலறியின் கவிதைகளோடு எனது பயணத்தைத் தொடங்குகிறேன்.

கவிதைகளுக்கிடையிலான பொதுத் தன்மையைச் சாரமாக வடித்தெடுத்து, அதுவே அலறியின் கவிதை அக்கறை கொள்ளும் “கவிதை உலகம்” என ஒரு வரையறையைத் தீர்மானிப்பதற்கு எனது அணுகுமுறையைப் பயன்படுத்தும் நோக்கமில்லை. அது சற்றுப் பழமையானதும் கூட. எனவே, தனித் தனிக் கவிதையாக அணுக விரும்புகிறேன். எனவே, கவிதையின் தலைப்புகளைப் பயன்படுத்தி இந்த உரை அமையும். தலைப்பு குறிப்பிடும் கவிதையை உதாரணமாகவும் தரப்போவதில்லை. பக்கங்களைப் புரட்டி நீங்களே வாசித்துவிடுங்கள்.

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தத் தொகுப்பு வெளிவருகிறது. இந்தக் கவிதைகள் எழுதப்பட்டதும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகுதான். கொரோனா கால வீடடடைப்புக் காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்கள், அவசங்கள், அந்நியப்படல்கள், இயல்பான நடவடிக்கைகளின் மீது ஏற்பட்ட கட்டுப்பாடுகள் என்பன, உலகளவில் ஏற்படுத்திய மாற்றங்கள் பல. அவைகளில் பிரதானமான இரண்டு விசயம். சனத்தொகை அதிகரிப்போடு தொடர்புடைய பாலுணர்வு நடவடிக்கைகள் மற்றும் அதிகமான கவிதை உற்பத்தி. இதில் இரண்டாவது விசயம் அலறியையும் மீள இலக்கியக் களத்திற்குள் இழுத்துவிட்டிருக்கிறது. மன அவசங்களுக்கான ஒரு விடுதலையாகவும், உணர்வெழுச்சிக்கான ஒரு வடிகாலாகவும் இவை அமைந்திருக்கின்றன. ஏலவே பழக்கமான தமிழ் நவீன கவிதையின் எடுத்துரைப்பு முறைமையைத்தான் அலறிப் பயன்படுத்தியிருக்கிறார். நேரடியான சொல்லுதல் முறை. மிக எளிமையான கவிதை அமைப்பு. இவரின் பழைய கவிதை கையேற்றிருந்த நீளமான வாக்கிய அமைப்புகளை முடியுமானவரை தவிர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதேநேரம், சிறுகதைகளில் உள்ளடக்கக்கூடிய நீளமான கதைகளை மிகச் சுருக்கமாகக் கவிதையின் எல்லைக்குள்ளாக நடமாடவிட்டிருக்கிறார். இது இவரின் கவிதைச் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய மாற்றம் எனலாம். மிகக் குறைவான சொற்களிலும், சொற்றொடர்களிலும் ஒரு கதையைத் தங்கவைக்க முடிந்திருப்பது வெற்றி என்றே சொல்ல வேண்டும். நவீன கவிதையின் முக்கிய அம்சமாகச் சொற்தேர்வை கருதும் இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கோணத்தில் சொல்வதாக இருந்தால் மிக நேர்த்தியான கவிதை நகர்வும், தேர்ந்தசொல் தேர்வும் அலறியின் கவிதைகளை உச்சத்திற்குக் கொண்டு போயுள்ளது.

அவசியமற்ற சொற்கள் என ஒன்றையும் காண இயலாது. அதனால், கவிதையை நேரடியாகச் சந்திக்கும் பதட்டத்தை வாசகர்களிடம் உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை. போர்க்களத்தில் தனித்துவிடும் போது, எதிரில் நிர்வாணமாக வாளைச் சுழற்றிக்கொண்டு நிற்கும் போர் வீராங்கனையை எப்படி எதிர்கொள்ளவது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கழுத்தை நோக்கி சுழற்றப்படும் வாளைக் கவனிப்பதா, மனதைக் கலைக்கும் நிர்வாணத்தைக் கவனிப்பதா என்ற பதட்டம் போல அலறியின் இந்தக் கவிதைகள் வாசகரை அலைக்கழிக்கக்கூடியவை. காற்றைக் கிழித்தபடி இரையும் வாளையும், மனதின் உள்வெளிகளைச் சலனப்படுத்தும் நிர்வாணத்தையும் ஒருசேர கவனிக்கும் ஆற்றல் கொண்ட வாசகர்களைக் கோரும் கவிதைகளாக இவை இருக்கின்றன. இரண்டில் ஒன்றை மட்டும் கவனிக்கும் வாசகர்களை இந்தக் கவிதைகள் இலகுவாக வீழ்த்தி விடக்கூடியவை. கவிதையில் குடியேறக்கூடிய அலங்காரமான விபரிப்புகளைத் தவிர்த்ததின் ஊடாக, நேரடியாகவும், வேகமாகவும் கவிதையின் எதிரே வாசகர்களைப் பிரசன்னமாகச் செய்கின்றன. இது தயாராவதற்கு முன்பே, எதிர்பாராத விதமாகக் கவிதையைக் களத்தில் சந்திப்பதற்கு நிகரானது. எந்தவித அவகாசத்தையும் வாசகர்களுக்கு அலறியின் இந்தக் கவிதைகள் கொடுக்கவில்லை. சட்டென்று தோன்றி மிக அருகில் நின்றபடி, தன்னைப் புரிந்துகொள்ள அழைக்கும் கவிதைகள் இதற்கு முன்பும் தமிழில் எழுதப்பட்டிருபினும், அவை வாசகர்கள் சுதாகரித்துக்கொள்ள அவகாசத்தை வழங்கியிருகின்றன. விக்கிரமாதித்தன், கலாப்ரியா என்று முன்னோடிகள் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் கவிதைகளில் இல்லாத பதட்டமும், பரபரப்பும், அலறியின் கவிதைகளில் உண்டு.

மிதமான அளவில் மிதந்து அலையும் தன்மையை அவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. அலறியின் கவிதைகள் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடத்தை நோக்கி நகரும் வேகமும், அதனுள்ளே கைபிடித்து இழுத்துச் செல்லும் ஆவேசமும் ஒப்பீட்டளவில் கூடுதலானது. அலறியின் கவிதையினுள்ளே இருக்கும் “அக்கினிக் குஞ்சு” கணத்தில் பற்றி எரியக்கூடியது. இது இவரின் வழமையான கவிதை சொல்லும் எடுத்துரைப்பிற்கு மாற்றமானது. நவீன கவிதை விமர்சகர்கள் இதை, கவிதை சொல்லும் முறையில் அலறி கடந்துவிட்ட நெடுந்துாரம் எனச் சொல்ல முடியும் என்று வர்ணிப்பதற்கு நிகரானது. இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு கவிதையாகச் சந்திப்போம்.

குளிர் பறவை

இந்தக் கவிதை, குளிர் பறவையாக மாறி தனிமையில் உழலும் ஒரு மனிதனைச் சந்தித்து, அந்தச் சந்திப்பில் நிகழும் உறவுகளில் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் உஷ்ணமாக உருமாறிவிடுவது பற்றியது. மனிதர்களின் மிகத் தொன்மையான நோயான “காமம்” தனித்துவிடப்பட்ட இன்றைய நாகரீக மனிதனை எந்த ரூபத்தில் தாக்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிவிடுகிறான் என்பதைத் தனது உள்ளார்ந்த கதையாடலாக முன்வைக்கிறது. கவிதைக் குரலாக அந்த நாகரீக மனிதனின் கோணத்திலிருந்து காம நோயைக் கடக்கும் குரலாக இந்தக் கவிதை தன்னை நிகழ்த்திக்காட்டுகிறது.

குளிர் தன்னோடு காமத்தையும் கொண்டுவரும் என்ற வரலாற்றுரீதியிலான பழைய புரிதலையே, இந்த நாகரீக மனிதனும் பயன்படுத்துகிறான். காலம் முழுதும் குளிரோடு வாழ்வை பகிர்ந்துகொள்ளும் மனிதனல்ல என்பதை இலகுவாக உணர முடியும். இது நாகரீக மனிதனின் நிலவியலை அடையாளம் காட்டுகிறது. அலைகள் அடிக்கும் கும்மிருட்டில் குளிர் தாங்க முடியாமல், போர்வையால் மூடிக்கொள்கிறான். குளிர் அவனை விடுவதாக இல்லை. பறவையாக மாறி அவனுடைய போர்வைக்குள் நுழைந்துவிடுகிறது. சிறகுகளால் உடலை நீவி, பதட்டத்தை ஏற்படுத்துகிறது. பறவையாக மாறிய குளிருக்கும் அவனுக்கும் போர்வைக்குள் நடக்கும் போராட்டத்தில், பறவையை வெளியேற்றி வெற்றிப் பெற்றுவிடுகிறான். குளிரின் எதிர் வடிவமான உஷ்ணமாகப் பறவை வெளியே போய்விடுகிறது. இந்த நவீன உலகில் வாழும் நாகரீகமான மனிதன், குளிரால் தாக்கப்படுகிறான். தனிமையும் குளிரும் காமத்தை உடலில் ஏற்றிவிடுகிறது. ஒரு “சுயமைதுனத்தில்” அந்த நோயைத் தீர்த்துவிடுகிறான். இன்றைய நாகரீக மனிதனின் எளிமையான வழிமுறை இது. காமம் உடலும் மனதும் சார்ந்தது என்றோ, அதுவும் ஒரு கலை என்றோ சிந்திப்பதற்கும், அணுகுவதற்குமான அவகாசமற்ற இன்றைய நாகரீக மனிதனின் நிலையை “குளிர் பறவை” என்ற கவிதையில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் அலறி. காமத்தையும், தனிமையையும் நவீன கவிதையில் அதிகமாகப் பாவித்தவர்கள் ரமேஷ் – பிரேம் மற்றும் இரா.செயராமன். இதில் இரா.செயராமனின் கவிதை உலகு முழுவதும் காமத்தாலும், தனிமையாலும் மாத்திரம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கவிதையில் ஆண்பால் தன்மையை ஏற்றி வாசிக்க எது காரணமாக அமைந்தது என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படிச் சந்தேகம் கொள்ளுபவர்களுக்கு அதைச் சொல்லிவிடுகிறேன். குளிர் உடலைத் தீண்டியதும், “தண்ணீரில் ஆடும் தண்டு” என்று கவிதை குறிப்பு உணர்த்திவிட்டது.

நடைபாதைகளிலும், தனித்த வீடுகளிலும் உடலைச் சுமந்துகொண்டு அதன் இயற்கை இயல்பூக்கத்தை ஒரு நோயாகக் கருதி, அவதியுறும் இன்றைய நாகரீக மனிதனின் குரலாக ஒலிக்கும் இந்தக் கவிதை முக்கியமானது. இப்படியான மனிதர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அதைக் கவிதைக்குள் கொண்டுவந்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது. பாடமறந்த, பாடுவதற்கு வெட்கப்படும் ஒன்றை கவிதைக்குள் கொண்டுவந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதே. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் இந்தக் காமமும், தனிமையும் மிக முக்கியமானது. வாழ்வுக்கான உடலுழைப்பு மாத்திரமல்ல, உடலின் இயல்பான தேவைகளும் இப்படித்தான் நிறைவேற்றப்படுகிறது. அதைக் கவிதைக்குள் மிக நுணுக்கமாகவும், கவித்துவமாகவும் அமர்த்தியிருக்கிறார் அலறி. இந்தத் தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கவிதைகளில் இதுவும் ஒன்று. ஆனால், பறவையாக மாறிய குளிர் பெண்ணுடல்களின் காமத்தையும், தனிமையையும் என்ன செய்யும் என்பதைச் சொல்ல மறந்துவிடுகிறது. ஏன் இதைச் சுட்டிக்காட்டுகிறேன் எனில், இந்தத் தொகுப்பிலுள்ள மேலும் பல கவிதைகள் பெண்கள் பற்றி என்ன பேசுகின்றன என்பதிலிருந்து புதியதோர் கேள்வியை எழுப்பலாம். அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது, அவைகளுக்கிடையில் திரட்சியுற்று மேலெழும் கதையாடலைக் கண்டு கொள்ளலாம். மனிதர்கள் குளிரைக் கடப்பதும், குளிரினுள்ளே வாழ்வதும் கடுமையானது. ஆனால், எப்போதாவது குளிரைச் சந்திக்கும் நிலப்பரப்பில் வாழும் மனிதர்களுக்குக் குளிர் காமத்தைக் கொண்டுவரும் ஒரு சேவகராக மனதில் பதிந்துபோய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுஜனவெளியில் குளிரைக் காமத்தோடு தொடர்புபடுத்தி ஒரு சிந்தனையாகத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தமிழ் சினிமாவும் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமானதே. இப்படியான மெல்லிய விமர்சனங்களைக் கடந்தும் இந்தக் கவிதை முக்கியமாகிப்போய்விடுகிறது என்பது உண்மைதான். பறவையாக மாறிய குளிர், கவிதையின் இறுதியில் உஷ்ணமாக மாறும் வேதியலை வாசகர்களுக்கான இறுதி விளைவாக இந்தக் கவிதை தந்தாலும், மழையின் சூட்டை மயிர்கால்களில் சுமந்து வரும் பறவையாக ஐந்தாவது வரியிலேயே காட்டியிருப்பது, கவிதையின் இறுதி விளைவை சலனப்படுத்திவிடுகிறது. அதாவது, குளிர் போர்வைக்குள் நடந்த இரசாயண மாற்றத்தினால் மாத்திரம் உஷ்ணமாக மாறியிருந்தால் அதன் அழுத்தம் முழுமையாக இருந்திருக்கும். ஆனால், ஏலவே தன்கூடச் சூட்டையும் குளிர் போர்வைக்குள் கொண்டு வந்தது என்பது, ஒரு முழுமையான பண்புமாற்றத்திற்கான காரணியாகக் கருத இடந்தரவில்லை. இது கவிதை உருவாக்கத்தில் நிகழ்ந்த பிழையாக்க கூட இருக்கலாம். வண்ணத்துப் பூச்சியையும் பறவையாகக் கருதுகிறது கவிதை சொல்லியின் குரல். அது கூடச் சற்று உறுத்தலாக நம்முன் வந்து நிற்கிறது.

மருவும் மருதம்

வாழ்வியல் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். அதைத் தடுத்துவிட முடியாது. அப்படித் தடுத்து நிறுத்துவதற்கு முயல்வது வாழ்வை உறையச்செய்துவிடும். பண்பாடு, காலாச்சாரம், வாழ்வியல் அமைப்பு முறைகள் என்பன, சிந்தனை மாற்றத்தினால் பெரும் தாக்கத்திற்குள்ளாகும்போது, சிலர் அதைக் கண்டு கலங்குவர். பண்பாட்டு அழிவை நினைத்து ஏங்குவர். சிலரோ வரவேற்பர். இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். அந்தப் பழமை ஏக்கத்தையும், புதுமையின் மாற்றத்தை வரவேற்பதையும் இலக்கியப் பிரதிகளின் வழியாகக் கதையாடுவர். ஆனால், புதிய மாற்றத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் பழைய வாழ்வியலையும், தவிர்க்க முடியாமல் தோளில் சுமக்க வேண்டி ஏற்படும் மனிதர்களையும் அவரது வாழ்க்கையையும் வரவேற்காமலும், பழமை ஏக்கத்திற்குள் தள்ளிவிடாமலும் இலக்கிய வழிகளில் ஒரு பிரதியை உருவாக்குவது, கவனமாகச் செய்துவிட வேண்டிய ஒரு செயல். அப்படி மிகக் கவனமாக மருவி செல்லும் காலவெளியில் எஞ்சியிருக்கும் வாழ்வியலை முன்வைக்கும் கவிதைதான் இது. புதிய மாற்றங்களுக்குள் நுழைய முடியாமல், நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை அதன் அழகியலோடு இந்தக் கவிதை பேச முற்படுகிறது.

தனது வாழ்வாதாரத்திற்காக வண்டில் மாட்டை நம்பியிருக்கும் ஒருவரின் வாழ்வியலும், சிறியதொரு வயல் காணியைத் தனது வாழ்வாதாரத்திற்காக வைத்திருக்கும் ஒருவரின் வாழ்வியலையும், மருதநிலத்தோடு இணைந்ததாக வாழ்வைக் கொண்ட பறவைகளையும் சிறியதொரு கவிதைக்குள் வாழவைத்துவிடுகிறார். மாடுகளின் நிறம், அதை ஓட்டிச் செல்லும் வழிமுறை, அதில் ஏற்றிச் செல்லும் பொருட்கள், மருதநிலத்தோடு தொடர்புடைய வயல், ஒட்டு வட்டை, வைக்கோல், அதன் விளைச்சல், வண்டியில் தொங்கும் லாந்தர் விளக்கு, என ஏகப்பட்ட விசயங்களைச் சிறியதொரு கவிதைக்குள் அடுக்கிவைத்துவிடுகிறார்.

மருத நிலத்தோடு தொடர்புடைய ஒரு ஆவணம்போல் மேலெழுந்து வருகிறது கவிதை. அந்த மருத நிலத்தோடும், அதைச் சார்ந்த மக்களினதும், பறவைகளினதும் வாழ்வும் இந்தக் கவிதைக்குள் வாழ்கிறது. ‘வைக்கோல் கற்றைகளில் நிரம்பியிருந்தன.- வயல் – வயிறு – வாழ்வு-’ என்ற வரிகளினால், பல வாழ்கையை ஒருகொடியில் கோர்த்துவிடும் கவிதையின் செய்நேர்த்தி மிகவும் அலாதியாக இந்தப் பிரதியெங்கும் விரிந்து செல்கிறது. பீடிப்புகை மணத்தை அருந்தியபடி நகரும் மாடுகளைக் கேட்டிக் கம்பு கொண்டு அடித்து, எந்தக் குற்றவுணர்வுமற்ற வண்டியோட்டி ஒய்யாரமாக வண்டியை ஓட்டுவது அந்த மனிதனுடைய வாழ்வியல் சார்ந்த அறத்தை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது. அமோக விளைச்சல் இல்லாத போதும், வேறு வழியின்றி அதையே தமது வாழ்வாதாரத்திற்கான தொழிலாகத் தொடர நிர்பந்திக்கப்பட்ட ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களின் இயலாமையையும் சுட்டிக்காட்டுகிறது. அது, அவருடைய வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என்ற தோற்றப்பாட்டைச் சிந்திப்பதற்கு வாசகர்களுக்கு இடம்விட்டு வண்டிலைப்போல மெல்ல நகர்கிறது. இந்தக் கவிதை அதன் உள்ளர்த்தங்களை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தேவையான அம்சங்களைக் கவனத்திற்கொள்ளாது இடைநடுவே நம்மைக் கைவிட்டு விடுகிறது. இதனளவில், மிகச் சிறந்த கவிதை என்பதை முதலில் கூற வேண்டும். ஆனால், கவிதைப் புனைவு என்பது வெறுமனே நமக்குத் தெரிந்த அம்சங்களுக்குள் சுருங்கிவிடும் ஒன்றல்ல. சூழலியல், உயிரியல், வேதியியல், அரசியல், நிலவியல், தத்துவவியல் எனப் பல தளங்களில் இருந்து பெறப்படும் சாரங்களையும் உள்ளெடுத்துத் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என நம்பினால், அது அதிக உழைப்பைக் கோரும் விசயம்தான். அப்படிப் பார்க்கும்போது இந்தக் கவிதை மேலும் விரிவு கொள்வதற்கான சில வாய்ப்புகளைத் தவறவிட்டுச் செல்கிறது என்று கூறலாம்.

மருத நிலத்தோடு அதாவது, வயலும் வயல் சார்ந்த வாழ்வோடும் தொடர்புபடும் பறவைகளாக, “சட்டித்தலைக் குருவிகளும், கொக்குகளுமே” தொடர்பு படுத்தப்படுகின்றன. இது பிறபறவைகள் தானிய உணவும், வயல் சார்ந்த வாழ்வுக்கும் வெளியே வைக்கப்படும் ஆபத்தை உணர்த்துகிறது. குறைந்த பட்சம் “தானியம் உண்ணும் பறவைகள்” என்றேனும் வரும் பட்சத்தில், வயலோடு வாழ்வை அமைத்துக்கொண்ட ஏராளம் பறவைகளின் வாழ்வை கவனத்திற்கொள்வதினடியாகக் கவிதையின் உள்ளே அலைவுறும் வாழ்வியல் நெருக்கடி இன்னும் விரிவுகொள்ளும் என்பதில் ஐயமில்லை. இது இந்தக் கவிதையின் உள்ளார்ந்த வாழ்வியல் நெருக்கடியை சில பறவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதால், வரிகளையும், சொற்களையும், அதனுாடாகக் கதையாடும் இரக்கத்தையும் தாண்டி விரிந்து செல்லத் தடையாக அமைந்துவிடுகிறது. அருகிச் செல்லும் பண்பாட்டை, வாழ்வியலை மொழிவழியாக ஒரு நினைவகமாக மாற்றிவிடுகிறது என்ற வகையில், இன்றைய இயந்திர உலகில் ஒரு முக்கியமான பிரதி என்பதில் மாற்றமில்லை. ஆனால், அதன் செழுமையும், பிரதிக்கு வெளியே விரிந்து செல்லும் கவிதையின் அதீத புனைவாக்கச் செயற்பாடும் நதியை அணைகட்டி தடுத்துவிடுவதைப்போல் நின்று விடுகிறது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். மிக அற்புதமாக நெய்யப்பட்ட சாரியில் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் ஒரு நுாலை, பிடித்து இழுத்துவிட்டால் முழுச்சாரியுமே நுாற் குவியலாக மாறிவிடும். அப்படியான வாய்ப்பை தன்னிடம் கொண்டிருக்கிறது இந்த அற்புதமான கவிதை.

கவிதையின் கடைசி வரிகள், மிகச் சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நமது தொன்மையான பழமொழி ஒன்றை, மெருகூட்டி அதற்குள் கவித்துவத்தை ஊற்றி ஆழத்தை கூட்டியுள்ளது. ‘மாடு வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழியை இந்தக் கவிதைக்கான பிரதான எடுத்துரைப்பாக மாற்றித் தந்திருக்கிறது. அதாவது, அருகிவரும் பழமையான வாழ்வியலை, அதன் பழமை குறையாமல் எப்படி நவீனப்படுத்தலாம் என்பதை இறுதியில் கவிதையின் எடுத்துரைப்பினுாடாகச் செய்து காட்டுகிறது. மணியோசையின் அதிர்வை வைத்து வண்டியின் சுமையை அறிந்துகொள்ளலாம் என்பதைத் தடங்காட்டுவதினுாடாகவும், அந்த மணியோசைதான் அந்த வண்டிலை இழுத்துச் செல்வதாகச் சொல்லி வாசகர்களின் மனங்களிலும் பாரத்தை ஏற்றிவிடுகிறது.

அந்தப்புரப் பறவை/நித்திய பறவை

ஒரு இலக்கியப் பிரதி இன்னுமொரு இலக்கியப் பிரதியை நினைவூட்டுவதாக இருந்தால், இரண்டு சந்தர்பங்களே உண்டு. இன்னுமொன்றை பாவனைச் செய்வதாக இருக்க வேண்டும். அல்லது, மற்றுமொரு இலக்கியப் பிரதி கதையாடும் அம்சத்திற்குப் போட்டியாக இருக்க வேண்டும். இந்தக் கவிதையும் ஒரு இலக்கியப் பிரதியை நினைவூட்டுகிறது. ஆனால், அது இரண்டாவது வகைமையைச் சார்ந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளில் மிகச் சிறந்ததொரு கதையின் உள்ளடுக்குகளோடு போட்டியிடத் தக்க கதையாடலை இந்தக் கவிதை முன்வைக்கிறது. “அலகில் விருட்சம் முளைத்த செம்பறவை” என்ற சிறுகதையே அது. அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொன்னால் இப்படி இருக்கும்.

உணவு தேடிச் செல்லும் ஒரு பறவை, பாறை இடுக்கிலிருந்து தானியங்களைக் கொத்திக்கொண்டிருக்கும் தருணத்தில், ஓர் தானியமணி பறவையின் அலகிலுள்ள ஓட்டையில் சிக்கிவிடுகிறது. பறவையின் இயல்பான பசியைப்போக்க உதவும் தானியம், அலகில் சிக்கி அந்தப் பறவையைப் பாடாய்ப்படுத்துகிறது. என்ன செய்தும், அந்தத் தானியமணியை அலகிலிருந்து வீழ்த்த முடியாது போகிறது. மழைக்காலம் வந்ததும் அலகிலிருந்தபடியே அந்தத் தானியமணி முளைக்கத் தொடங்குகிறது. அதனால் ஏற்படும் வலியும், அசௌகரியங்களும் சொல்லி மாளாதது. ஒருநாள் சிறு பையனொருவன் கல்வீசி அந்தப் பறவையின் இறகொன்றை உடைத்துவிடுகிறான். பறக்க முடியாமல் நிலத்தில் வீழ்ந்துவிடுகிறது பறவை. அலகிலிருந்த மரமோ, தன்னியல்பாகத் தரையோடு வேர் இறக்கி பெரும் மரமாக முளைத்து எழுகிறது. பறவை இறந்துவிடுகிறது. சாரம் என்னவெனில், வாழ்வுக்காக வயிற்றை நிரப்பப் போன பறவை, அதன் உணவினாலேயே மரணித்துவிடுகிறது.

அலறியின் “அந்தப்புரத்துப் பறவை” கூட்டிலிருந்து சுதந்திரத்தை நாடி பறந்து சென்று இறுதியில் நித்தியத்தில் நிறைந்துவிடுகிறது. இரண்டும் தனது இயல்பான செயற்பாட்டினை முன்னெடுத்து மரணித்துவிடுகிறது. என்பது ஒற்றுமையாக இருந்தால், அலறியின் கவிதையில் வசித்து மரணிக்கும் பறவையின் அவலங்களும், துயரங்களும் முற்றிலும் வேறானவை.

அரண்மனைதான். அங்கே இருந்தது கூடுதான், எனினும், அங்கிருந்து அது பறந்து செல்கிறது. அதன் கானகங்களைத் தேடிச்செல்கிறது. இந்தப் பயணம் இரண்டு முக்கிய விசயங்களைத் தடங்காட்டிச் செல்கிறது. அதன் பாதை நெடுகிலும் பாலைவெளியும், பாழ்நிலங்களுமே காட்சி தருகின்றன. பூமியின் வரைபடம் உருமாறிக் காடுகளற்றுப்போகின்றன. வலிக்கும் சிறகை ஆற்றிக்கொள்ள, கொஞ்சம் இளைப்பாற ஒரு மரங்கூடப் பறவையின் கண்களில் தட்டுப்படவில்லை.

ஆறு பகல்களையும், ஐந்து இரவுகளையும் கடந்த பின்னும் அமர ஏதும் கிட்டவில்லை. மந்திரப் பொழுதில் கண்களில் காட்சிதரும், மரஞ்செடிகொடிகள் கூட அதற்கு உதவுவதாக இல்லை. அனேகமாக அவை, பறவையின் இயலாமை காரணமாக எழும் நினைவிலிருந்து முகிழ்பவை. இறுதியில் பறவையின் இறகின் நிறங்களே பூக்களாகவும், பறவையின் ஒலிகளே அருவியாகவும் கண்முன்னே விரிகிறது. இறுதியில் அந்தப் பறவை நித்தியத்தில் நிறைந்துவிடுகிறது.

அரண்மனைக் கூட்டில் எத்தனை காலம் இருந்திருக்கும் தெரியாது. ஆனால், அந்தக் கூட்டில் இருந்த காலங்கள் பறவையின் இயல்பான விசயங்களை மாற்றிவிட்டிருக்கின்றன. கானகங்களும், மலைகளும் நிறைந்த அதன் இயல்பான இந்தப் பூமியில் வாழமுடியாமல் வானில் தவித்தபடி அலைந்திருக்க வேண்டும். கானகத்தோடும் ஒன்றித்துவிட முடியாமல், அரண்மனைக் கூட்டிலும் வாழ முடியாமல் பறவையின் வாழ்வு மரணத்தில் கலந்துவிடுகிறது. சுதந்திரமான ஒரு இயல்பை, வலுக்கட்டாயமாக மாற்றிவிடும்போது எதிலும் ஒன்றித்து ஒருவாழ்வை வாழ்ந்துவிட முடியாமல் தவிக்கும், இன்றைய தொழில்நுட்பங்களால் நிறைந்த, மனிதனின் சுதந்திரம் பறிக்கப்பட்ட அர்த்தமற்ற, நெருக்கடிகள் நிறைந்த வாழ்வை இந்தக் கவிதையில் வசிக்கும் பறவை இரக்கமற்ற வகையில் நினைவூட்டுகிறது.

அரசு என்ற பெயரிலும், நாகரீகம் என்ற தோரணையிலும், மதம் என்ற கட்டுப்பாடுகளிலும் சிக்கி, நிராதரவாகச் சலித்துப்போய் நிற்கும் மனிதனை, பறவையாக இந்தக் கவிதையின் எல்லைக்குள்ளே வாழவைத்திருக்கிறது இந்தக் கவிதைப் பிரதி.

அரண்மனையின் சுகபோகங்கள் நிறைந்த கூண்டில் வசிப்பதா? இல்லை இயல்பான சுதந்திரம் என்ற வகையில் அதைத்தேடிச் சென்று செத்து மடிவதா? என்ற தத்துவார்த்தக் கேள்வியை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிட்டு அமைதியாக இருக்கிறது இந்தக் கவிதை. விடை கண்டு பிடிக்க முடியாத மிகச் சிக்கலான ஒரு கேள்வியை நம்முன் எழுப்பிவிடுகிறது. இரண்டில் ஏதாவதொன்றைத்தான் தேர்வு செய்தாக வேண்டும். ஆனால், அதில் எது? இரண்டில் எதுவுமே மனதிற்கும், மனித இயல்புக்கும் ஒத்துவர முடியாத அம்சம்தான். வாழ்வு என்பது, இன்று இந்த இரண்டு திசைகளின் நடுவே நசுங்கி தன்னை இழந்துகொண்டுவருகிறது. இந்தக் கேள்விகள் தனிமனிதர் தொடங்கி, அரசுகள், எனக் கலாச்சாரங்கள் வழியாக நீண்டு.. உலகின் அனைத்து நிலப்பரப்புகளையும் வியாபித்துச் சஞ்சலப்படுத்துகின்றன. உலகளாவிய மனிதவாழ்வின் சாரத்தை நிறைத்து, உலக மனசாட்சியைத் தொந்தரவு செய்கின்றன. அதனுாடாக, இந்தக் கவிதை ஒரு உலகளாவியத் தன்மையைப் பெற்று தனது குரலை உயர்த்தி ஓலமிடுகிறது. இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, அலறி எழுதிய அனைத்து கவிதைகளிலும் இந்தக் கவிதைதான் உச்சமான கதையாடலையும், ஒரு உலகளாவியத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது எனச் சொல்லலாம். எஸ்ராவின் கதையில் வசிக்கும் பறவை, உணவைத் தேடிச் சென்று அதில் ஏற்பட்ட ஒரு சம்வத்தால் மரணிக்கிறது. அலறியின் கவிதையில் வசிக்கும் பறவை அப்படியானதல்ல, அதற்குக் கூடும் பிரச்சினை, அதிலிருந்து வெளியேறி சுதந்திரத்தை நாடிச் சென்றும் பிரச்சினை. வாழ்வதற்காக இருக்கும் இரண்டு வழிமுறைகளும், அமைதியான வாழ்வைத் தவிர்த்து, உளைச்சலையும், அலைச்சலையும் மரணத்தையுமே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்தப் பறவை மிக விரிவான கதையாடலை முன்வைக்கிறது. கவிதையை வரி வரியாகக் கடக்கும் போது, நம்மில் தொற்றிக்கொள்ளும் பதட்டம் ஒரு கட்டத்தில் அந்தப் பறவை நாமாகி பறக்க வேண்டி ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் பறவையாகவும், மனிதனாகவும் உணரச் செய்யும் கவிதைச் சம்பவங்கள் தனித்துவிடப்பட்ட வழியறியாத வனாந்தரத்தில் அச்சத்தோடு அலைவுறும் முடிவற்ற மனநிலையை உருவாக்குவதினால் சிறந்த கவிதையாக மாறிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஒரு கவிதை போதும் என்றே சொல்வேன். மாற்றிச் சொன்னால், அலறி ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

சில கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதியிருப்பதாலும், உரையின் அளவு நீண்டு செல்வதாலும் பிற கவிதைகள் தொடர்பில் சுருக்கமாகச் சில தகவல்களைப் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன்.

துளி அல்லது துகள் என்ற கவிதை மிகச் சாதாரணமான ஒன்று. ஐம்பூதங்களையும், திணைகளில் நெய்தல், பாலை, முல்லை என்ற மூன்று திணைகளையும் சுட்டிக்காட்டி, அவை அண்டத்தின் துளி அல்லது துகள் எனக் கூறி முடிவடைகிறது. பிறதிணைகள் துகளற்று போய்விடுகின்றனவோ என்னவோ? இந்தக் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வாக்கியங்கள் இரண்டு உள்ளன. “நுாற்றாண்டு காலம் முயற்சித்தும், வலைக்குள் சிக்காத கடல்” என்பதும், “சிறகுக்குள் சுருங்காத வானம்” என்பதும் கவிதை தன்மையை உள்ளே ஒளிரச் செய்கின்றன. ஆர். பாலச்சந்திரனின் கவிதைத் தொகுப்பின் பெயரான “சிறகுக்குள் வானம்” என்ற வாக்கியத்தை அதற்கு எதிரில் நின்று சவாலுக்கு இழுக்கிறது, இந்தக் கவிதையிலுள்ள அலறியின் இரண்டாவது வாக்கியம்.

கொரோனா என்றொரு கவிதை, கொரோனாவுடன் தொடர்புபட்ட விசயங்களிலிருந்து மாத்திரமல்ல, இன்னும் பல விசயங்களிலிருந்து தப்பிச்செல்ல விரும்புகிறார். இந்தக் கவிதையில் உருவாக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி. சூழலை எதிர்கொள்வதற்குத் தயங்கும் ஒரு கவிதை மனிதனை இந்தக் கவிதை நம்முன் கொண்டுவருகிறது. கொரோனா அச்சம் விரட்ட, ஏதும் செய்வதறியாத திகைப்பு ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு கணத்தில் இப்படித் தப்பிச் செல்லும் நிலைப்பாட்டைச் சிந்திக்கச் செய்தது என்பதை இங்குப் பதிவு செய்திருக்கிறார். இது ஒரு கவிதையாகத் தன்னை வெளிக்காட்டுகிறதா எனக் கேட்டால், பதில் சொல்ல தயக்கமாகவே உள்ளது.

பெருக்கு மற்றுமொரு சிறந்த கவிதை. இந்தக் கவிதை நினைவின் ஆழத்தில் புதைந்து கிடந்த ஒரு கதையை நினைவூட்டுகிறது. யார் எழுதியது என்பதை மறந்துவிட்டாலும், அந்தக் கதையின் சம்பவங்கள் மேலெழுந்து வருகின்றன. ஆணும் பெண்ணும் அதாவது காதலர்கள், புல்வெளியில் படுத்துக்கொண்டு வானிலுள்ள நட்சத்திரங்களை இருவரும் சேர்ந்து எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பூமியில் புல்வெளியில் அவர்களின் உடல்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து வேறு ஒரு விளையாட்டில் திளைத்திருக்கின்றன. விளையாட்டு ஓய்வுக்கு வந்த பின்னர், அதே புல்வெளியில் சலிப்புடன், தனித்தனியே நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கதை இப்படி எனில், இந்தக் கவிதை வேறுவகையானது. எந்த முன்னறிவித்தலுமின்றிக் கட கடவென்று கடந்து சம்பவங்கள் மாறிச்செல்லும் படியாக வரிகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கவிதை பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. வயதுக்கு வந்த வாசகர்கள் இலகுவாகப் புரிந்துகொண்டுவிடுவர். ஆனால், இந்தச் சிறந்த கவிதை இருவரும் உச்சத்தில் துவண்ட அடுத்தக் கணமே பெண்ணைக் கைவிட்டுவிடுகிறது. கவிதையில் வரும் ஆண் கதாபாத்திரம், உச்சத்தை அடைந்த பிறகு, தனது உடலில் பெருக்கெடுத்த வேர்வையை உலரச் செய்ய மறுபுறம் புரண்டு கொள்கிறது. அந்தப் பெரளுவையிலேயே மலையடிவாரம் வர்ணம்பெற்று ஒளிரத் தொடங்குகிறது.

நட்சத்திரங்களைப் பார்ப்பதில் தொடங்கி, உச்சத்தை அடையும் வரை மறுபாதியாகத் தனக்கு உதவிய பெண்ணை, ஆணின் இன்பம் முழுமையடைந்ததும் கைவிட்டுவிடுகிறான். இது, பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் “பெண் போகத்திற்கு” உதவக்கூடிய சரக்கு என்பதைப் பின்தொடரும் ஒரு விளைவை மாத்திரமே முன்வைக்கிறது. பெண்ணிய நோக்கில், இந்தக் கவிதை விமர்சனத்துக்குரியது. மற்றமையை இந்தக் கவிதையில் உருவாக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி பிரக்ஞையோடு எதிர்கொள்ளவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. அலறியின் கவிதைகளில் பெண் என்ற ஒரு சமூக ஜீவிக்கு அர்த்தம் நிரம்பியதும், சுதந்திரமானதுமான இடம் வழங்கப்படவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு தோப்புத் தென்னை என்ற கவிதையிலும், பருத்த பெண்ணின் முலையை அருந்துவதைப்போல இளநீர் அருந்துவதாக வருகிறது. பெண்ணைத் துய்க்கும் உடலாக மட்டுமே புரிந்துகொள்ளும் ஒரு பழமையான கருத்தை இந்த வகை வர்ணனைகள் தடங்காட்டுகின்றன.

சீனத்துப் பெண்/வல்லாதிக்கம் இது கொரோனா பரவலையும், சீனாவின் வல்லாதிக்கப் பரவலையும் இணைத்து, இழைத்து இழைத்துப் பின்னப்பட்டிருக்கும் நல்லதொரு அரசியல் கவிதை. கொரோனா பரவல் என்பது, ஒரு உயிரியல் ஆயுதம் என்ற ஒரு பார்வைக்கும் இட்டுச் சென்றது. உலகில் தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்குச் சீனாவின் தந்திரோபாய நடவடிக்கைகளால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் மூன்றாம் உலகப்போர் என்றுகூட வர்ணிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்த அரசியல் கருத்தாக்கத்தை மிகலாவகமாக ஒரு கவிதைக்குள் உருவாக்கிக் காட்டியிருப்பதை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். சமகாலத்தில் ஏற்பட்ட ஒரு உலகளாவியச் சிக்கலை, சிறந்த அரசியல் கவிதையாக மாற்றிக்காட்டியிருப்பது அலறியின் தேர்ந்த கவிதை வேலைபாடுகளுக்கான சாட்சியமாக மாறி நிற்கிறது. ஒரு நகரத்தில் பாடப்படும் பாடல், எல்லை கடந்து, பல கண்டங்களுக்கும் பரவி, இதற்கு முன்பிருந்த எத்தனையோ வகையானதும், ஆற்றல் நிறைந்ததுமான சங்கீதப் பாடல்களை எல்லாம் மேவி, எல்லைச் சுவர்களைத் துளைத்து பெருக்கெடுத்து அனைத்தையும் மூழ்கடித்துவிடுகிறது. ஒரு நோயை, பாடலாக மாற்றி அதைக் காற்றில் அலையலையாகப் பரப்பி, உலகையே ஆட்டத்திற்குள் கொண்டுவந்த அரசியலோடு இணைந்ததாக நம்பப்படும் ஒன்றை, கவித்துவமாகவும், அதனுள்ளே சுழலும் அரசியல் வீச்சும் குறையாமல் இந்தக் கவிதை தன்னை நிகழ்த்திக்காட்டுகிறது.

இத்தனை சிறந்த கவிதையில் கூட, அழிவுப்பாடல் பெண்ணிடமிருந்தே உருவாகிறது என்ற தொனியை அடித்தளமாகக் கொண்டுவருவது சங்கடத்தை உருவாக்குகிறது. கவிதையின் வீரியத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. பெண் என்றால் சூனியக்காரி, தீவினையின் பிறப்பிடம் எனக் காலங்காலமாக உலகெங்கும் பெண்களின் மீது ஆண்மைய சிந்தனை திணித்த மோசமான அடையாளங்களை இந்தக் கவிதையும், தனது அடித்தளமாக முன்வைக்கிறது. இது, ஒரு அற்புதமான அரசியல் கவிதையில், பிரக்ஞையற்ற பழமையான அட்சரங்களைக் கோர்த்துவிடுவதைப் போன்றது. இந்தக் கவிதையின் கவித்துவ ஆற்றலும், அரசியல் கதையாடலின் வீச்சும், பெண் பற்றிய பிற்போக்கான புரிதலினால் தனது வலிமையை இழந்தபடி அப்பாவித்தனமாக நிற்கிறது என்றே சொல்லலாம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியதே. பெண்ணிலிருந்தே உலகுக்கான மாபெரும் தீவினை வெளிப்படுகிறது என்ற தொனியை இந்தக் கவிதை உருவாக்குகிறது. இது கண்டிக்கத்தக்க ஒரு இடம் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இரு குருவிகள் என்ற கவிதை ஒரு சிறு காவியம். இரு குருவிகளைத் தொடர்ந்து கவனிக்கும் - ஒரு கவிதை சொல்லியின் கோணத்திலிருந்து விரிகிறது இக்கவிதை. வழக்கமாக மகிழ்ச்சியில் பாடித் திரியும் அந்த இரு குருவிகளில் ஒன்று ஓர்நாள் பெருங்குரலெடுத்துக் கத்துகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதைசொல்லிக்குக் காரணம் புரியவில்லை. குருவியின் மொழி தெரியவில்லையே என்று ஆதங்கப்படும் ஒரு நிலையை முதன் முதலாகக் கவிதை சொல்லிக்குள் ஏற்படுத்துகிறது. அந்தக் குருவியின் பாடலைத் தொடர்ந்து அதன் துணையும் துயரோடு வேகமாக எங்கோ பறந்துவிடுகிறது. குருவிகளின் துயரத்தை தானும் சுமந்தபடி வீட்டுக்குச் செல்கிறான் கவிதை சொல்லி. சாதாரணமான ஒரு நிகழ்வு எனினும், குருவிகளைத் தொடர்ந்து கவனிப்பவன் என்ற பாத்திரமும், அவைகளின் இன்ப துன்பங்களைக் கவனித்துத் தானும் பகிர்ந்துகொள்கிறவன் என்பதை முன்வைக்கும்போது, இக் கவிதைக்கு ஒரு காவியத் தன்மை வந்துவிடுகிறது. மனிதர்களின் மீதே அக்கறை கொள்ள அவகாசமில்லா உலகில் குருவிகளின் மீது இரக்கத்தைக் கொண்டிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. அழகான எடுதுரைப்பை இந்தக் கவிதை கொண்டிருக்கிறது.

கலாப்ரியாவின் மிகப் பிரபலமான கவிதை ஒன்றை இது உங்களுக்கு நினைவூட்டலாம். இரை தேடிப்போன குருவி ஒன்று திரும்பி வருகிறது. வானெங்கும் அலைகிறது. அதன் கூடும், குஞ்சுகளும் இருக்குமிடம் மறந்திருக்கலாம். அதில் வரும் கவிதை சொல்லியும், குருவியின் மொழி தெரியாதே என்று கலங்குகிறான். அதன் கூடும், குஞ்சுகளும் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிந்திருந்தும் குருவியின் மொழிதெரியாமல் துயரில் தவிக்கிறான். கலாப்ரியாவின் கவிதை, அலறிக்கு உந்து சக்தியாக இருந்திருக்கலாம்.

“குளத்தைத் தவளை சுமந்து செல்கிறது” என்று எனது முகப்புப் புத்தகத்தில் எழுதியிருந்ததாக நினைவு. வல்லபம் என்ற கவிதையில் “வாவிகள் தவளைகள் மீதேறி தப்பிச் செல்லும்” என்று அலறியும் கற்பனை செய்திருப்பது நிகழ்கிறது. அதுபோல், ரமேஷ்- பிரேம் அவர்களின் “நெடுநெல்வாடை” என்ற கவிதையில் முத்தம் புதினா இலையின் மணத்தை வெளிப்படுத்துகிறது. அதே தலைப்பில் இத்தொகுதியில் உள்ள கவிதை ஒன்று, மாதுளம் பூவின் வாசனையையும், நிறத்தையும் கொண்டுவருகிறது. கவிதை முன்புள்ள கவிதைகளோடு உறவுகளையும், விலகல்களையும் அணுக்கமாகக் கொண்டிருக்கக் கூடியதுதான். அவைகளுக்கிடையே ஒரு உரையாடல் சாத்தியமானதுதான். பரஸ்பர விவாதங்களும், தாக்கமுறல்களும் கவிதைகளிடையே நடந்தேறக் கூடியதே. ஒரே அலைவரிசையில் கற்பனையின் அலைகள் பயணிக்கும்போது, இப்படி நிகழ்வது சாத்தியம் உள்ள ஒன்றுதான். அப்படி உரசியும், விலகியும் கவிதையின் இயங்குதளத்தில் நடந்தேறும் உரையாடல்கள் இலக்கிய வெளியை மேலும் செழுமைப்படுத்த உதவும். இருந்தாலும் இதில் நுணுக்கமான கவனம்தேவை, சற்று அதிகமாகச் சறுக்கும் பட்சத்தில் தலைகீழான அபிப்பிராயங்களுக்கு இட்டுச் செல்ல வழிசமைத்துவிடும்.

இந்த இடத்தில் நின்று தொகுப்பிலுள்ள கவிதைகளைத் திரும்பிப் பார்க்கும்போது, மிகச் சிறந்த கவிதைகளும் அறவே சேர்த்திருக்கத் தேவையற்ற கவிதைகளும் ஒருங்கே இந்தத் தொகுப்பில் இருப்பதை உணரலாம். எடுத்துரைப்பு முறையில் பயில் நிலைக் கவிஞர்களை விடப் பலவீனமான கவிதை நகர்த்தும் முறையைக் கையாண்டிருக்கும் கவிதைகளுமுண்டு. இது தொகுப்பிற்கான பின்னடைவைப் பரிந்துரைக்கிறது. அதே நேரம் – அந்தப்புரத்துப் பறவை என்ற கவிதை உள்ளிட்ட பல கவிதைகள், தேர்ந்த உலகத்தரத்திலான கவிஞர்களின் கவிதை சொல்லும் முறைக்கு நிகராக மேலெழுந்து நிற்கின்றன. பெண்களை உடல் துய்பிற்கான ஒரு பெருளாக ஆண் மைய சிந்தனையின் நோக்கிலிருந்து அலறி உருவாக்கும் கவிதை சொல்லிகள் பிரக்ஞையற்று அணுகுவது ஒன்றையே இங்கு விமர்சனமாக முன்வைக்க விரும்புகிறேன். இது இவருடைய கவிதைகளைப் பிற்போக்கான நிலைக்குத் தள்ளிவிடக்கூடியவை. அவைகளைக் கவனத்திற் கொள்ளும்போது, ஈழத்தின் சமகாலக் கவிஞர்களில் முக்கியமான ஒருவராக மாறிவிட வாய்ப்புள்ளது. தனது கவிதைகள் குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதவும், சுயமான விமர்சனங்ளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளித்த அலறிக்கு நன்றிகள். அதற்கும் மேலாக, இந்த விமர்சனங்களுடன் கூடிய உரையைத் தனது தொகுப்பில் இணைப்பதற்குப் பெரும் மன தைரியமும், இலக்கிய நேர்மையும் வேண்டும். அது அலறியிடம் இருப்பது என்பது உண்மையான ஒரு இலக்கிவாதியை காண்பதற்கு நிகரானது. அதனால், மிகச் சிறந்த கவிஞனாக நிலை நிறுத்தப்படுகிறார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அலறியின் கவிதைகள்

குளிர் பறவை

பறவையென
ஜன்னல் வழி நுழைகிறது
குளிர்
வெயிலின் ஈரமும்
மழையின் சூடும் மயிர் கால்களில்
வௌவாலின் குருடும்
வண்ணத்துபூச்சியின் படபடப்பும் பார்வையில்
தீயின் சுவாலை எரிந்தும்
மகரந்த மணிகள் சொரிந்தும்
அகலச் சிறகை விரிக்கிறது
அசைக்கிறது
இறுகப் பின்னிய போர்வைக்குள்
இறகுகள் நீவி பறக்கின்றது
தகதகப்பு
தண்ணீரில் ஆடும் தண்டு
அலைகள் அடங்கும் இரவு
குலாவுகை
கும்மிருட்டு
குறுகுறுப்பு
கதவுகள் மெல்ல விரிய
வெட்கம் கூடி வெளியேறி விடுகிறது
உஷ்ணமாக

மருவும் மருதம்

பீடிப்புகை மணத்தை
அருந்தியபடி
அசைந்து நகர்கிறது பொணயல்
கேட்டிக் கம்பு இழுவையில்
தோலுரிகின்றன
சாம்பலும், செவலையும்
ஓட்டிச் செல்கிறான் ஒய்யாரமாக
ஏற்றிச் செல்லும்
வைக்கோல் கற்றைகளில் நிரம்பியிருந்தன
வயல்
வயிறு
வாழ்வு
இந்தப் போகம் முடிந்தது
அமோக விளைச்சல் என்றில்லை
பத்து பன்னிரெண்டு அவணம்
கதிர் பறித்த பருவம் முதல்
ஒட்டு வட்டை விட்டது வரை
சன்னதமாய்ப் பறக்கும்
சட்டித்தலைக் குருவி
கொக்கு
பதர்கள்
வண்டிக் கீழசையும் லாந்தர் ஒளிபோல
பிரகாசமாய்
மங்கலாய்
பொட்டாய்
மருதமும், வசந்தமும் தூர்ந்து போகின்றன
எச்சமும், சொச்சமுமாய்
வண்டில் பாரம் மாட்டைத் தொட
மாட்டையும், வண்டிலையும்
இழுத்துச் செல்கிறது
மணியோசை

அந்தப்புரப்பறவை/நித்தியப்பறவை
..………………………………………………………..
அரண்மனை கூட்டைக் கிழித்து
பறக்கிறது
அந்தப்புரத்தில் அடைபட்ட பறவை
தொலை தூரம் கடக்க, நீள்துயில் கலைக்க
இரு கால்களை நான்காக நீட்டியது
இரு கண்களில் நிலவினை ஊற்றியது
தப்பித்த பறவை
சாகரப் பாதையில் கானகத்தைத் தேடும்
அதன் கண்களுக்கு
பாலைவெளி
பாழ்நிலம்
பனிப்பாறைகளுமாக மாறி, மாறித் தெரிகிறது
பூமியின் வரைபடம்
கால்களில் காற்றை அள்ளிக் கொண்டும்
தலையில் சூரியனை சுமந்து கொண்டும்
தாழும் பறவைக்கு
தட்டுப்படவில்லை ஒற்றை மரமாவது
முடிவற்ற திசையில்
வானைத் தீய்க்கும் எரிமலைக் குழம்பு
தாகம்
கடும் குளிரும் வாட்டுகிறது
ஐந்து இரவுகளும், ஆறு பகலுமாக
அலைந்து சோர்கையில்
கூடு திறந்தது போலத் தாங்கிக்கொள்கிறதோர் பூர்வமலை
அதில்
அலையெறிந்தாற் போல மரஞ்செடிகொடிகள்
அருவிகள்
மந்திரப்பொழுதில் திளைக்கிறது பறவை
வசீகரம்
மென் இறகின் நிறங்களே
காட்டுப்பூக்களாக
தேன் குரலின் ஒலியே
மலையருவியாக
விரியக்கண்டு
நித்தியத்தில் நிறைகிறது பறவை

பெருக்கு

மலைகள்
வாசலாய் திறந்திருந்தன
சமவெளியின் விரிப்பில்
படுத்தபடி
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தாய்
என்னைப் பார்த்ததும்
அடர் இருளில்
கண்கள் ஊர்வதை
கவனிக்கத் தவறவில்லை
உடலில் காமத்தின் முடிச்சுகள்
வெடிக்கத் தொடங்கின
இதழ்கள் இறுக்கத்தில்
ஊறிய நீர்
உனதா
எனதா
ஒருவர் தாகம் ஒருவர் தீர்க்க
ஆடைகள் களைந்து போயின
முற்றும் துறந்து சங்கமித்தோம்
பாம்பின் இணையாய்
புரண்டு புரண்டு
புணர்ந்து புணர்ந்து
உச்சம் கடந்து துவண்டோம்
ஊற்றெடுத்த உவர்நீர்
பெருக்கை
உலரவிட
பக்கத்தில் புரண்டேன்
மலையடிவாரம்
எப்போதும் பெறாத வர்ணத்தைப் பெற்று
மோனத்தில் ஒளிர்ந்தது

சீனத்துப்பெண்/வல்லாதிக்கம்

சிவப்பில் நட்சத்திரங்கள் மின்னும்
பட்டாடை விரித்துப் பாடிக்கொண்டிருக்கிறாள்
சீனத்துப்பெண்
அவள் பாடலில்
தாழம்பூ வாசம்
பாம்பின் படம்
வூஹான் சந்தையில்
முகக்கவசம் அணிந்தபடி பலர் பாடலை அருந்துகின்றனர்
ஷாங்காய் தெருக்களைப் பாடல் நனைக்கிறது
சதுக்கத்தில்
திபெத்தின் பீடபூமிகளில்
மடாலயங்களில் துயரெனப் படிகிறது பாடல்
பொப்
கஸல்
ஹிந்துஸ்தானி
பைலா
ராகங்களை மிகைத்து ஆக்கிரமிக்கிறது அவளிசை
பேரிசை,
மூங்கிற்குழலிசை
கடலோரம்
நட்சத்திர விடுதியில் ஆடிக்கொண்டிருக்கின்றனர்
மலர்கொத்து ஏந்திய ஆடவர் கிறங்கிப்போகின்றனர்
அவளிசையில்
தீவின்
கரை கடலை நோக்கிப் பாய்கிறது
கடல் கரையை நோக்கி மடிகிறது
துறைமுகத்தில்
நங்கூரமிடுகின்றன போர்க்கப்பல்கள்
அசைகின்றன நாவாய்கள்
நோய் நொதிக்கும் காலமும்
எல்லைச் சுவர்களைத் துளைத்து
பெருக்கெடுக்கும் அவள் பாடலுக்கு
சிவப்பு
மஞ்சள்
வல்லாதிக்கம்
உட்பட ஏழு நிறங்கள்

குறிச்சொற்கள்

மேல் செல்