கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மழை வெளி காற்றுக்கும் தன்னைப் பதப்படுத்துதல்

யவனிகா ஸ்ரீ ராம்

பகிரு

ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும்  காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும்  உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால்  ஒருவகையில்  தன் வலியின்  மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக  வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும்  போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன.

 அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் எதிரெதிர் நிற்கும் பரிவர்த்தனைகளும் வாசிப்பு மனதில் அல்லது கடந்து போகும்  வாசக வாழ்க்கையில் வழித்துணையாகவோ அல்லது மறந்து போதலின் நினைவாகவும் உறவு கொள்வதன் மூலம் கவிதைகள்  மொழியில் பலவாறாகத் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதும் நேர்கின்றன. அந்த வகையில் கவிதைகள் அன்றாடத்திற்கு அப்பால் பெரும் தத்துவத்திற்கோ நீண்ட கால உண்மைகளுக்கோ அல்லது அதன் அதிகாரத்திற்கோ ஒருபோதும் முகம் கொடுப்பதில்லை.

இன்றைய நவீனமய சூழலில் நமது வாழ்விடத்தின் மூலை முடுக்குகளில் இருந்து ஒரு மொழியை ஒரு கவிஞர் சேகரித்துக் கொண்டிருக்கிறார் எனில் அது தன் சூழலாகவோ அல்லது தான் ஈடுபட்ட ஒன்றோ அல்லது தப்பிச்செல்லும் பாவனையாகவோ பிறரை அழைத்துச் சொல்லும் இருப்பின் கதைகளாகவும் அவை வடிவம் பெற்று விடுவதைத்தான் பல நாள் சேகரித்து எழுதிய ஒரு தொகுப்பாக நாம் வாசிக்க துவங்குகிறோம்.

நாகர்கோவில் வில்லுக்குறியச் சேர்ந்த கவிஞர் ஆர்த்தி அமுதா ஏற்கனவே ஒரு சிறுகதை தொகுப்பை எதிர் வெளியீட்டில் கொண்டு வந்துள்ளார் .அவரின் முதல் தொகுப்பான உறுமீன் காலத்துக் கொக்குகள் எனும் இக்கவிதை நூலுக்கு ஒரு முன்னுரை கேட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக அதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

எந்த ஆழ் நுட்பங்களையும் பெண் மனம் ஒரு சிறுமியை போல நம்மிடம் ஒப்பித்து விடுகிறது இயற்கையை அழித்தும் வளர்த்தும் வாழ்ந்த வகையில் பெண்தான் அதன் மீது  மிகுந்த பொறுப்புணர்வுடன் அல்லது குற்றங்களின் ஈவாகவும் நடந்து கொள்கிறார் என தோன்றுகிறது.

இவரது கவிதை  எங்கிலும் மழைக்காலமும் பசும் தாவரங்களும் பறவைகளும் வீடும் வெளியும் தெய்வ சங்கற்பங்களும் ஊடாடிச் செல்வதைக் காண முடிகிறது.

காதலும் கனிந்த மனமும் அச்சமும் ஆவலும் புறவயத்தின் அமைதியில் அல்லது நெருக்கடியில் அகம் காண்கின்றன.

ஒருவர் தன் வாழ்வின் அனுபவத்திலிருந்து கவிதையை முன் வைக்கிறாரா அல்லது அதை மறக்க முயல்கிறாரா பிறகு அவரது தேடுதல் என்பது ஏன் இனம்புரியா வெளியின் மர்மமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிக்க தோன்றுகிறது.

குடும்பத்தின் அத்தனை பாடுகளையும் குழந்தைகளையும் கொண்டிருக்கும் போதே தான் இங்ஙனம் பெண்களுக்கு நேர்கிறது.

"வாசல் அளவே தெரிகிறது வானம் சின்னத் துவாரங்கள் வழியே வந்து போகிறது காற்று"

"செல்லும் வழியெல்லாம் முட்களைப் பரப்பி சென்றான் பாதங்களைக் காயப்படுத்த"

"மைனாக்களுக்கும் அவளுக்கும் நெல் பொறுக்கும் பந்தயம்"

"காற்றாடியின் சிறகில் அடிபட்டு விரித்த சிறகுகளோடு தத்தளித்து அடங்கிய பூச்சிகளையும் நினைவுகளையும் எடுத்து வெளியில் ஊற்றினேன்"

என்றெல்லாம் ஊர்ந்து பரவும் கவிஞரின் மொழி முழுவதும் இருப்பின் நினைவுத்தடங்களாய் மறைக்குறிப்புகளாய் ஆயினும் வலிமையான ஒரு தன்னிலையாய் கவிதைக்குள் தடம் பதிக்கவே முயன்றிருக்கிறது.

இரவு அதன் தனிமை மெல்லிய சப்தங்கள் நாய் குறைப்பு அன்றாடம் புழங்கும் வீதி அனைத்துடனும் தன்னுணர்ச்சியை கலக்கும் இவரது கவிதைகள் இன்றைய  நவீன வாழ்வின் உளவியல்ப்பாங்கை மென்மையாகவே எடுத்துரைக்கின்றன.

நீண்டகால குடும்ப அமைப்பின் வரலாற்று தொடர்ச்சியில் ஆர்த்தி அமுதாவின் இக்கவிதைகளும் நவீனத்துவத்தின் போதாமையை அரசியலாய் அங்கலாய்ப்பாய் முணுமுணுக்கின்றன. தன் வாழ் இடத்தில் தன்மானமிக்க மனிதர்களையும் மனுஷிகளையும் கூட இவர் கவிதையாக்கி இருக்கிறார். குடும்பத்திற்கு வெளியே பிறரை நேசிக்க முடியாத எல்லைகள் குறுக்கப்பட்ட இடத்தின் துக்கமும் இளமையான அல்லது இளமைக்கான மறுபரிசீலனையும் இவரது கவிதைகளின் சிறப்பு என்று சொல்லலாம்.

அமைப்புகளின் வேரோடிப் போனவரைவெல்லைகளை மீறி தற்சார்பான சுயமரியாதைக்கு தன் கவிதைகளைப் பழக்கிக் கொண்டுள்ளன இக்கவிதைகள் என்றாலும் மிகையாகாது "மழை வெயில் காற்றுக்கும் தன்னை பதப்படுத்தி வேறு இடம் கூடி முளைக்கத் துவங்கின தானியங்கள்"

"திண்ணைகள் இல்லா வீடுகளில் அவள் உட்காருவதில்லை ஒவ்வொரு வீட்டின் முன் நின்று சாபமிட்டு செல்கிறாள் உக்கார இடம் தராதவீடு ஒய்யாரத்தில் தொங்குகிறது"

"கூரைகளில்லா என் வீட்டில் பறவைகளின் எச்சங்கள் நிறைய உண்டு தடுமாறிய போதகர் கண்களால் மொட்டுக்களை மிரட்ட சொல்லிக் கொண்டார் குழந்தைகள் என்னிடத்தில் வர தடை பண்ணாதிருங்கள்"

நாம் வாழும் வழியில் சூழலில் எத்தனையோ  எண்ணங்கள் வலிகள் கோபங்கள் பொறாமைகள் பிறகு நட்புகள் உறவுகள் அண்டை அயலார்கள் பயணங்கள் வாசிப்புகள் என்றெல்லாம் நீளும் போது அவற்றை அனுசரித்து அதற்கு மேலும் தன் சுயமறிய வேண்டியது நற்செயலாகிறது. அந்த வகையில் அமுதா ஆர்த்தி தன்னுடைய முதல் தொகுப்பு மூலம் நவீனக் கவிதைக்குள் முக்கியமான சலனங்களை நிகழ்த்தியுள்ளார்.

அனுபவத்திற்கும் வாசிப்பிற்கும் இடையே சில கவிதைகளில் பிரத்தியோகமான உள் மன உணர்வுகள் பொதுத்தன்மை பெறுவதில் இருந்து வாசக பரப்பைத் தாண்டி செல்கிறது. அதை தவிர்க்கத்தான் முடியாது என்றாலும் அடுத்தடுத்த தொகுப்புகளில் இன்னும் பன்முகம் காண அவருக்கு வாய்ப்பு இருக்கிறது . உணர்வுகளின் எழுச்சிகளில் அல்லது மற்றவரோடு கொள்ளும் உறவில் எளிமையும் இயற்கையும் கலந்த அற்புதமான ஒரு பெண் வடிவம் அமுதா ஆர்த்தி ஆண் பெண் உறவுகள் காதல் காமம் போன்ற விவகாரங்களில் இன்றைய தீவிரவாத தன்மை அல்லது  அதன்சாயல் இவர் மீது படியவில்லை என்றாலும் உள் நடுங்கும் வீரியம் கொண்டவர் மற்றும் எதிர்மறைகளில் கேள்விகளை வைப்பவர் என்கிற வகையில் நமது வாசிப்பிற்கு தோதாகிறார்

இயற்கையின் புதிர்களில்  இருந்து அனைத்திற்கும் மறை மனம் கொடுக்கும் கவிஞர் இத்தகைய தன்னுணர்ச்சி பாடல்களில்  முறையாகவும் ஆழ்ந்த நுட்பத்துடனும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இயற்கையும் பெண் மனமும் கலந்து உறவாடி இன்பம் கண்ட இக்கவிதைகள் நமக்கும் ஒரு நல்லறத்தை போதிக்கின்றன அல்லது நட்பை பெருக்குகின்றன. அவர் மேலும் எழுதிச் சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்.

மேல் செல்