கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

பிரதாப ருத்ரன் கவிதைகள் – ஒரு பார்வை :

ஜீவன் பென்னி

பகிரு

                                                                                       

1. மழை மியூசியம் (2014) – புது எழுத்து,

2. கடலாடும் கல் ஓவியம் (2017) – மையம் வெளியீடு ,

3. பியானோ திசை பறவை (2020) – சொற்கள் வெளியீடு.

தன் நிலத்தில் படர்ந்திருக்கும் உயிரினங்களின் மொழியை எழுதுதல் அல்லது அதன் பேரன்பைக் கட்டியிழுத்துக் கொண்டு பயணித்தல் :

‘அனுபவத்தை வடிவமைக்கும் போது கவிதை ஒரு முழு முற்றானதும் இதுவரை சாத்தியத்திற்கே வந்திராததுமான முழுமையின் ஒரு சிறிய பங்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறது’ - பிரம்மராஜன்.  

 நவீன கவிதைகள் அறிவின் தளத்திற்கு மிக நெருக்கமானதாக அறியப்பட்டாலும், அவை அறிவியல் சூத்திரங்களின் மிக இறுக்கமானத் தன்மைகளைக் கொண்டிருப்பதில்லை. தர்க்கவியலின் அடிப்படைகளை ஒரு கவிதை கொண்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட வேண்டிய அளவுகோல்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. நவீன கவிதையின் உள்ளார்ந்த தன்மைகளின் தீவிர மனநிலையை எந்தவொரு கோட்பாடும் தனியாக உருவாக்கிக் காண்பித்திடமுடியாது.

இப்பிரபஞ்சத்தின் கணக்கற்ற நிகழ்வுகளில் பதிந்திருக்கும் தனித்த நொடியொன்றின் சாரத்தை உற்றுநோக்க வைப்பது தான் நவீன கவிதையின் செயல் அறிவாக தொடர்ந்து இருக்கிறது. குறுங்கதைகளினும், உணர்வு / உணர்ச்சி சார்ந்த காட்சிப்படுத்துதல்களினும், நவீன கவிதையின் மொழி மிக அடர்த்தியானது. அதன் அர்த்தத்தில் நிறைந்து கொள்ளும் மனவெளி என்பது இன்னும் பிரம்மாண்டமான உலகைக் காண்பிக்கக் கூடியது.

அது உங்களின் நிகழ்காலத்திற்குள் புதிய காலம் ஒன்றை தனித்து இயங்கச்செய்திடும் ஆற்றல் கொண்டிருப்பது. மேலும் சிறு கீறலொன்றை உங்களுக்குள் மிக ஆழமாக உருவாக்கிவிடுவது. ஆனால் புனைவு வசீகரத்தின் மாதிரிகளில் விரிந்திடும் உலகம் என்பது, வெறுமனே அந்த கீறலின் வலியை நிகழ்வாக மட்டுமே கடத்திக் காண்பிக்கிறது. உணர்ச்சிகளின் வழியான நெகிழ்ச்சிகள் கலந்த இதுமாதிரியான சொற்கள் உடனடியாக கவனிக்கப் படுவதற்கும், மிக அதிகமாக உருவாக்கப்படுவதற்கும் இதுவே காரணம் ஆகின்றன.

மாய எதார்த்த புனைவின் புரிதல்களும், அதன் அதீதமான வெளிப்பாட்டு வடிவங்களும், அது சார்ந்த குழப்பங்களும் தமிழ் சூழலில் (கவிதை மற்றும் புனைவுகள்) மிகவும் வறட்சியானது. மட்டுமல்லாமல் அதற்குள் எந்தவிதத்திலும் வாசகனால் நுழைந்திட முடியாத நிறைய இறுக்கமான தடுப்புகளைக் கொண்டிருப்பவை. கவிதையின் மொத்த வெளிப்பாட்டு மொழியாக அது விரிவடையாமல் சிறு சிறு வார்த்தைகளாக, விவரணையின் பதிவாக, குறுகலாக மாறிவிடுகின்றன. அதன் இறுக்கத்தில் நுழைந்து திரும்புவதற்குள் வாசகனடையும் சோர்வு மிகுந்த கவனங்கொள்ளத் தகுந்தவை. இது ஏற்படுத்திடும் மிரட்சியில், நல்ல படைப்பு எது? வெற்று வாக்கியக் கூட்டம் எது? என்பதை அறிய முடிந்திடாமல் தவித்து வெளியேறுகிறான்.

என்ன தான் வாசகனுக்குப் பயிற்சி தேவைப்பட்டாலும் இது மாதிரி உருவாக்கப்படும் வெற்று விவரணைகளின், அர்த்தங்களேதுமற்ற, வெட்டப்பட்ட சொற்கள் எந்த புரிதல் அனுபவத்தையும் கொடுப்பதில்லை. தமிழ் சூழலில் இவ்வகையான படைப்பு கர்த்தாக்கள் நிறைய உண்டு. இவர்கள் நவீன கவிதைகளின் – மேல் சொன்ன - உள்ளார்ந்த தன்மைகளின் புரிதலிலிருந்து மாறுபட்டு, இதற்கு நேரெதிரான வகைமை கொண்ட – ஐரோப்பிய புறவடிவ மாதிரிகளை - ‘போல எழுதிச் செல்லும்’ வழியான கச்சாப் பொருட்களின் உற்பத்தியென இவைகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். – வாரிசுகளும் வந்து கொண்டிருக்கிறார்கள்! - நவீன கவிதைகளின் மையமான, பிரக்ஞைப் பூர்வமான நமது நிலம் சார்ந்த மற்றும் அதன் சாரம்சம் நிறைந்த மொழியனுபவம் என்பதற்கும், வெற்று சொற்கூட்டங்களின் கச்சாப் பொருளுக்குமான மெல்லிய, திடமான வேறுபாடுகளைப் புரிந்துணர முடியுமானால் ஒரு அசலான உயிர்ப்புள்ள ஒரு நவீன கவிதையொன்றை உங்களால் வாசித்தனுபவிக்க முடியும் என்றே நம்புகிறேன்.

பிரதாப ருத்ரனின் பல கவிதைகள் இதன் விசாலமான வெளியை உங்களுக்கு திறந்து காண்பிக்கின்றன. முதலில், தொடர்ச்சியாகத் தனது மூன்று தொகுப்பிலும் தனது கவிதை மொழியை மாற்றிடாமல் ( நிறைய கவிஞர்கள் இரண்டு தொகுப்பிற்கு மேல் தங்களது கவிதை மொழியை மாற்றி வந்திருக்கின்றனர் – நானும் ) அதனுள் சில நுட்பமான தகவமைப்பைக்கொண்டு மேம்படுத்தி, சூழல் சார்ந்த தனது அவதானிப்புகளை, அனுபவப்பிரயத்தனங்களை அவர் கவிதைகளாக சாத்தியப்படுத்தியிருப்பது மிக நெகிழ்வான, ஆழமான செயல்பாடாகவே நான் கருதுகிறேன். தன் நிலங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் சிறு உருளைக்கற்களையும், தாவரங்களையும், பூச்சிகளையும், சகமனிதனின் காதல்களையும் தன் பயணங்களில் கட்டி இழுத்துக் கொண்டு செல்லும் அவரது மனதின் மென்மையான முடிச்சுகள் போலவேயிருக்கின்றன இக்கவிதைகள்.  

   தான் சார்ந்திருக்கும் கவிதை மொழியில் எந்தவிதமான சமரசமுமற்ற, குழப்பமுமற்றத் தன்மை மிக நேர்மையானது. தன் நிலக்காட்சி சார்ந்த தனது பார்வைகளை, அதனுள் பரவிக்கிடக்கும் எண்ணற்ற உயிரிகளின் வாழ்வுகளை, அதன் அர்த்தங்களை, அவற்றின் நெருக்கடிகளைத் தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டிருப்பது தான் இவரின் படைப்பு மையமாக விளங்குகின்றன. சில கவிதைகளின் படைப்பமைதிகளில் நிகழும் பிரக்ஞைப்பூர்வமான செயல்பாட்டு வடிவங்கள் லயமிக்க உணர்வுகளின் கச்சிதங்களைக் கொண்டிருக்கின்றன. புனைவின் சிறு அலகுமற்ற கவிதை மொழியில் கடத்த முற்படும் இவ்வகையான வெளிப்பாட்டு முறை சற்று பிசகினாலும் அதன் அர்த்தங்களின் நீட்சியிலிருந்து கழன்று ஓடிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

ஆனால் இவரின் சிக்கனமான மொழிப்பிரயோக வெளிப்பாட்டு முறை கச்சிதத்தின் எளிய அடுக்கை நேர்த்தியாகக் கொண்டிருக்கின்றன. இக்கவிதைகளின் உணர்த்துதல் மொழி மிகவும் நுட்பமானது, இதன் அழகியல் தன்மை இசையின் லயங்களுடன் தொடர்பு கொண்டவை. படிமங்களில் நீளும் உள்ளர்த்தங்கள் மெய்மைக்கருகில் கொண்டு சேர்ப்பவை. ஆன்மத்தேடல்களின் வழியான வெற்றிடத்தை பிரித்துக் காண்பிப்பவை. நிம்மதி ஒன்று படிந்திருந்தத் தடத்தினை விடாமல் பாதுகாத்துக் கொண்டிருப்பவை. நிலத்தின் ஞாபகத்தை, ஒரு கலவியின் இறுதி நொடியைப் போல மயங்கிடும் தன்மையில் பேசிக்கொண்டிருப்பவை. சில கவிதை வரிகள்.

ஒரு நாளின் அடிக்குறிப்பு :

பொழுது புலர்ந்ததை

சொல்லிச் செல்லும்

பால்காரன்

சுப்ரபாதம்.

தனக்கொரு செய்தியின்றி

பிறருக்காய் சுமந்துவரும்

செய்தி தூக்கி.

தன் இருப்பை

உணர்த்துகின்றன

தாய்ப்பறவைகள்.

தபால்காரன்

பகிர்ந்து கொள்ளா

துக்கம்.

ஐஸ்கட்டியை சுமந்தபடி 

வியர்வையுடன் செல்லும்

ஐஸ்காரன்.

எங்கோ தொலைவில்

எஜமானனை அழைக்கும்

நாயின் குரைப்பொலி.

பூக்கள் சிரிக்கும்

கூர்க்காவின் வாளுறை.

உருக்குலைந்த

நிலா குழந்தை

வளர்கிறது

பௌர்ணமி.  

     மழை மியூசியம் – பக் 20.

நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளை அடுக்குவதில் இருக்கும் வேறுபாட்டை இக்கவிதையில் புரிந்து கொள்ளலாம், தினசரி சார்ந்த ஓராயிரம் கவிதைகள் தமிழில் காணக்கிடைக்கின்றன. - ஒவ்வொருவருக்கும் தனியான ஒரு படைப்பு மொழியிருக்கிறது – ஆனால் இதில் படர்ந்திருக்கும் கச்சிதமும், சொற்சிக்கனமுமே இவை தனியாகத் தெரிய காரணமாகின்றன.

‘பாஷை பேசும் மரங்கள்

புரிவதில்லை மரம் வெட்டியானுக்கு’     

-  மழை மியூசியம் – பக் 03.       

இவை விரித்திடும் மனப்பகிர்வே ‘மரக்கொலைகள்’ எனும் தலைப்பிட்ட கவிதைக்கு பின்செல்ல வைக்கின்றன.

‘நினைவின் முனை மழுங்கிய அந்திமத்தில்

நீ

கடந்து போனாலும்

விலகிப் போகாத

சொந்தம்.’                

- மழை மியூசியம் – பக்05.

என்று முடியும் ஒரு கவிதையில் நிகழ்ந்திடும் அன்பின் அளவற்ற தரிசனத்தின் உள்வெளிச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. காதல் சார்ந்த பெருவெளியின் தருணத்தைக் காண்பித்திடும் இதிலுள்ள சில கவிதைகளில் படர்ந்திருக்கும் ஜிகினாத் தனங்களற்ற இயல்பின் நீட்சியான சொற்கள் அலாதியான உணர்வுகளை மெலிதாகப் பகிர்ந்து கொடுக்கின்றன. இன்னும் சில வரிகள்..

‘உனக்கும் எனக்குமான

நேர்கோட்டு உறவில்

எவ்வித பிரக்ஞையுமற்று

சூழ்கொண்ட கருப்பையில்

முடிவில்லா நித்திரையில்

ஆட்கொண்ட கடலே கலை.’   

- மழை மியூசியம் – பக் 06.   

‘நான்

எனது எண்ணங்களை தூர்வாருகிறேன்:

உனக்கான நினைவு ஊற்று

தென்படவே இல்லை’    

 - மழை மியூசியம் – பக் 19.

  பழக்கப்பட்ட ஒரு சொல்லிலிருந்தும் அது உருவாக்கிடும் பொருளிலிருந்தும், தனது கவிதை மொழியின் இயல்பை மிக எளிதாக மாற்றுவதற்கு, சிக்கனமான சொற்சேர்க்கைகளை மிக லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். அடுத்தடுத்த வரிகளில், நிறைய சொற்களில் புரிய வைத்திட வேண்டிய இடங்களிலும் மிக நுட்பமான பிரத்யேகச் சொற்களைக் கொண்டு அதன் அசலான மூலத்தை எளிய வழியில் பதிய வைத்திருக்கிறார். மேலும் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயத்தையும் இதிலுள்ள சில கவிதைகளில் உடைத்திருக்கிறார்.

வெறுமையான இடைவெளிகளை அப்படியே வாசகனுக்கென விட்டிருக்கிறார். இக்கவிதைகளில் சில லதா ராமகிருஷ்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பில் இணைக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சியாகவேப்படுகிறது. இக்கவிதைகள் எழுதப்பட்டிருப்பதிலிருந்து தொகுப்பாக்கப்பட்டிருக்கும் காலத்திற்கான இடைவெளி சராசரியாக 10 ஆண்டுகள் என்பது உண்மையில் மிகவும் ஆச்சர்யமாகயிருக்கிறது. இந்த பொறுப்புணர்வில் நிகழ்ந்திருக்கும் படைப்பமைதியின் மாற்றங்களை இவரின் அடுத்தடுத்த தொகுப்புகளின் சில கவிதைகளில் கவனிக்க முடிகிறது.

   கவிதைகளைப் பொருள் சார்ந்து முழுவதுமாக ஒருவரால் எடுத்துக் காட்டிவிட முடியாது. அதன் அர்த்தங்களின் வாசல்களை வேண்டுமானால் சில குறிப்புகளால் காண்பிக்க முடிந்திடும், அதற்குள் நுழைந்து ஒவ்வொருவரும் அடைந்திடும் அனுபவப் புலன்கள் மிக வேறு வேறாகவே இருந்திடும். பன்முகத் தன்மை கொண்டிருக்கும் இப்புரிதல்கள் மற்றும் இதன் சுதந்திரமான வெளியுமே கவிதைகளைப் மற்றவற்றிலிருந்து பிரதிநிதித்துவமிக்கதாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.

தொடக்கமும், முடிவும் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயமும், நிர்ணயமும் நவீன கவிதைக்குக் கிடையாது தான். ஆனால் ஒரு காலத்தின் சிறிய ஞாபகத்தை அது அதற்குள் கடத்திக்கொண்டிருக்க வேண்டியது மிகமுக்கியமானது. அது தான் அதற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றின் வாழ்வை மையப்புள்ளியெனக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்குமான அர்த்தங்களை எளிமையாகப் புரிய வைப்பதற்கான இடைச்செருகல்கள் சற்றும் இல்லாமல் தன் கவிதை மொழியைப் பயன்படுத்தி, பண்படுத்தி வரும் பிரதாப ருத்ரன், குறியீடுகளின், படிமங்களின், உருவகங்களின் வழியே சொல்லிச் செல்லும் கவிதானுபவங்களில் உட்புறமாக சற்று இருளில் இருப்பதைப் போன்றிருக்கும் தனித்த, வறட்சியான சொற்களின் பிரயோகம் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்ள வேண்டும்.

அக்கவிதைகளை இன்னும் அசலானதாக மாற்றிவிடும் ஆற்றல் அதற்குண்டு. அடரிருள் என்பது நிறைய வண்ணங்களின் தொகுப்பாக இருந்திடும் போதும் அவற்றின் தனித்தனியான, அலாதியான உலகை நிலைநிறுத்திடும் புள்ளியைக் காணவிரும்பும் வாசகர்களுக்கும் அது மிகவும் உதவியாக இருந்திடும்.

அடரிருளில் பரவிக்கிடக்கும் நித்தியத்துவமும் இன்னும் அடர்த்தியானது தான் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். யோனி, கருப்பையின் வாசல்கள், ஒற்றை முலை, விரைத்த வாலிபம், ஆண்குறி ஆகிய சொற்களின் நிரந்தரத் தன்மையின் வாசனைகளை விட்டு அடுத்து வரும் கவிதைகளில் பிரதாப ருத்ரன் வெளியே வர வேண்டும்.

சில கவிதை வரிகள்,

‘நிலையாமை உணர்வாய்

எதிர்வரும் வாள் அறியும்

உறைக்கு முன்னொரு வாள் உண்டென்று

தந்தியின் நாதம் குறைந்தாலும்

கூடினாலும் இசைதல் இசைக்கும்.

மனம் சமன்படாது வனாந்திர யிரவில்

இருபத்து ஆண்டு வளர்முலைகள் ரம்யமாய்

மீட்டெடுத்து மீட்டத் தூண்டும் விரல்கள்

இசைபட அலைமகள் தாழ்ந்துயர

இசைந்தபடி கடலாடலாம் உன் மீட்பருடன்’ 

 - கடலாடும் கல் ஓவியம் – பக்14.

‘மேய்ப்பரின் மேற்பார்வையில்

திறந்தேயிருக்கிறது எனக்கான சமவெளி’    

- கடலாடும் கல் ஓவியம் – பக் 15

மீட்பரின் காவலுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவத்தின் அருகாமையை உணர்த்திவிடும் சாரம்சமுள்ள வரிகள் இவை.

‘நானோ பிரளயங்களுக்கு

அடியில்

நீறு பூத்த செங்காந்தள்

நீயோ கார்த்திகையில்

மொட்டவிழ்ந்த தனிச்சுடர்.

நானோ பித்தன்

ஆக

சித்தமே எனக்கு

உடைந்த வில்

வீழ்ந்த பன்றி

யாருக்குச் சொந்தம்.

நானோ நுணுக்கரிய உணர்ந்து

நீயோ நோக்கரிய நோக்கி

ஆதியில் இருந்து

வா

மெய்

பொருள்

காண       

- கடலாடும் கல் ஓவியம் – பக் 20.

ஆதியிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் காதல்களின் மெய்மையை உணரச்செய்யும் வரிகள் இவை.

‘பிரதிகளின் பிரதியில் நீர்த்துப்போவதில்லை

இத்தேசத்து விற்பன்னர்கள் 

பார்வை முட்டாள்

குளம் வெட்டி

மரம் நடுதல்

ராஜாங்கப் பணி என்றவர்

ஆயிரம் தலைகொய்து

படிப்புத் தந்தை

ஓடைப் புறம்போக்கு

கான்கிரீட் சுற்றுச்சுவர்

இனி நட்ட குளம் வெட்டிய மரம் குட்டிச்சுவர்’ 

- கடலாடும் கல் ஓவியம் – பக் 21.

‘நாகரீகத்தின் எச்சம்

எதுயில்லாது நீ

இல்லையென வானதோ

அது யதுவே யன்றி

வேறில்லை எனவானது

நிறை பசி உயிர் போம்

இலை நிறைந்த காசு

வா முடியும் எனில் பசியாறி

இரு கன்றுகள் நட்டு போ’       

- கடலாடும் கல் ஓவியம் – பக் 26.

நிகழ்காலத்தின் சூழலியல் சார்ந்த அக்கறையும், தேடலும் சேர்ந்து கொள்ளும் மௌனத்தின் திறப்பே இவ்வரிகள். மேலும் ‘தேரைக்குப் பழுக்காத கல்’, பிரயாணத்தில் ஒரு காட்சியும் கேள்வியும்’, ‘மினோட்டரின் சுருள்வட்டம், ‘விசையின் அலைவுக்கால ரம்யம்’ ஆகிய கவிதைகளில் படர்ந்திருக்கும் நிலம் சார்ந்த அக்கறையும், காதலின் நெருக்கமான கலவியின் சுவீகரமும் படிமங்களோடு சேர்ந்து புதிர் நிறைந்த உலகின் வாசல்களை திறந்துவிடுகின்றன.

   படிமங்களின் வழியே, ஒரு நிலத்தில் படிந்திருக்கும் வாழ்வின் அழகியலை, காமத்தின் ரேகைகளை, உயிரிகளின் இருப்புகளை இசையணர்வின் வடிவத்துடன் இணைத்து கவிதைகளாக்குவதற்கு பிரதாப ருத்ரன் தொடர்ந்து முயன்று கொண்டிருப்பது மிகவும் சவால்கள் நிறைந்திருப்பது ஆகும். போலியான மிகை உணர்வு சார்ந்த சுரண்டல்களிலான கவிதை மாதிரிகளினும் இது நம்பிக்கைக்குரியது தான். மேலும் இக்கவிதைகளில், நிகழ்ந்து கொண்டிருக்கும் உலகை புரிய வைப்பதற்குப் பதிலாக அதன் ஆழத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒளிச்சிதறல்களின் வடிவத்தை கூர்மையாகக் காண்பித்து, அச்சிதறல்களின் வழியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வண்ணங்களின் நெகிழ்ச்சிகளை உணர்ந்து கொள்ளக் கூடியதான சுதந்திரத்துடன் இவற்றை அமைத்து விட்டிருக்கிறார்.

   ‘இசை இறங்கிய அந்தரப்பெருமழை’, ‘திசைப்பறவையின் கனவுப் பாடல்’ ‘ஒப்புக்கொடுத்தல்’, ‘சம்போ ஸ்வயம் போ’, ‘உன்மத்த ஏகாந்தம்’, கடவுச் சொல்லே ஒரு சங்கீதம்’, ‘காட்சி’, ‘இல்லாமையின் வடிவக்குறிப்புகள்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘வெகு நாகரீகம்’, ‘இருப்பு’, கடவுள் விற்கப்படுகிறார்’. – பியானோ திசை பறவை, சமீபத்திய தொகுப்பு - ஆகிய கவிதைகளில் வெளிப்பட்டு வந்திருக்கும் சரளமான மொழியனுபவம் கவிதானுபவத்தின் சிறிய ஒளிக்கீற்றை பிரமாதமாகக் காண்பிக்கின்றன. பொருள் சார்ந்த விவரனைக்காக அதன் அகத்தைக் காண்பிப்பதற்கான நிறைய்ய சொற்களில்லாமல், அதன் திசையில் நிகழும் பயணத்தையே இவை காணத்தருகின்றன. தான் வாழும் பரப்பின் எல்லாவித நெருக்கடிகளையும் அதன் மீது குவிந்திருக்கும் எண்ணற்ற குரல்களின் மெலிதான ஒலிகளையும், நிராதரவுகளையும் படைப்பு மனதின் சுயமான வெளிப்பாடுகளாகக் கொண்டிருக்கின்றன இக்கவிதைகள்.

   மேலும், இத்தொகுப்பில் இறுதியாக இருக்கும், ’கேள்வியா பதில்? (இல்லை) கேள்வியே பதிலா? என்ற தலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளும், சதா நம்மைக் கடந்து கொண்டிருக்கும் காலத்தின் மீது நமக்கிருக்கும் பிரக்ஞைப்பூர்வமான கேள்விகளாகவும் அதற்கு அவைகளில் மிஞ்சும் மௌனத்தின் பெரும் புதிர் நிறைந்த முடிச்சுகளுடனான பதில்களாகவுமே இவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கவிதைக்குள் விரிந்திடும் எண்ணற்ற நிகழ்வுகளின் சாளரத்தை இவை இன்னும் பிரமிப்பாகக் காட்சிப்படுத்துகின்றன. தான் சார்ந்திருக்கும் நிலத்தில் ஒவ்வொன்றிற்குள்ளுமிருந்து கசிந்து உலகை நோக்கி ஓடி வரும் சிறு சிறு நினைவுகளின் மெல்லியத் தடயங்களையே இச்சொற்கள் பாதைகளாகக் காண்பிக்கின்றன. மேலும் இத்தொகுப்புகளில் பகிரப்பட்டிருக்கும் நவீன ஒவியங்கள் கவிதையின் மன அமைதியுடன் நுட்பமாக கைகோர்த்துச் செல்கின்றன.

   கடந்த நூற்றாண்டின் பாதியிலிருந்து நவீனத் தமிழ் கவிதைகளின் மொழியில், கட்டமைப்பில், உள்ளடக்கத்தில், வடிவத்தில் ஏற்பட்டு வந்திருக்கும் பெறும் மாற்றங்களுக்கான நேரடியான, அசலான சாட்சியங்கள் தமிழ் சூழலில் மிகவும் வெளிப்படையானவை. சிற்றிதழ்களின் வழியே மேற்கொள்ளப்பட்டு வந்த இம்மாற்றங்கள், அதன் அடிப்படைகள் சார்ந்த அறிவுப்பூர்வமான வாதங்கள் மற்றும் செயல்பாடுகளின் வழியே சாத்தியமாகின. பொதுவான வாசகர்களின் தளத்திலிருந்து, சொல்லும் படியான எண்ணிக்கையில் இவற்றை நோக்கிய நகர்வுகள் இப்போதும் இருக்கின்றன. மிக எளிதான குறுங்கதையின் வடிவத்திலிருக்கும், உணர்வுகளை அபரிமிதமாக வெளிக்காட்டிடும் கவிதைகளிலிருந்து வெளியேறி, நவீன கவிதைகளில் நிகழ்ந்திடும் பன்முகத்தன்மை கொண்ட புரிதலை, அனுபவத்தை நோக்கி வந்திடும் அவர்களை வெளித்தள்ளாமல் இருக்க வைக்கவேண்டியது ஒவ்வொரு நவீன கவிதை படைப்பாளிக்கும் சவாலானது. படைப்புகள் வாசகனுக்காகவே எழுதப்படுகின்றனவேத் தவிர, இன்னொரு படைப்பாளிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

   வட்டத்திற்குள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும் எல்லையற்ற அலைப்பண்பின் திரட்சியான வடிவமாகவே பிரதாப ருத்ரனின் கவிதைகள் இருக்கின்றன. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அலைகளெனவே, இக்கவிதைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சொற்களின் நுட்பங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு குளிர்ச்சியை, ஒரு சிப்பிபை, ஒரு இறந்த மீனை, ஒரு மாபெரும் வஸ்துவை கடலொன்றிலிருந்து வெளிக்காண்பித்திடும் தருணமும், ஆற்றலும், ஆகிருதியும் இவைகளுக்கு உண்டு. பெரும் அமைதியின் துயரம் மிகுந்த கணங்களை உட்புறமாகப் புதைத்திருக்கும் நேர்த்தியும் காணக்கிடைக்கின்றன. உயிரிகளின், தாவரங்களின், மனிதர்களின் வழியாக இச்சூழலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லையற்ற வாழ்வின் தடங்களையும், அவைகள் சந்திக்கும் நெருக்கடிகளையும் தனியாகத் தேடி எடுத்து, அவற்றில் கரைந்து விடும் உணர்வுகளை இசை நிரம்பிய சொற்களால் பகிர்ந்து கொண்டிருக்கும் லாவகமும் பல கவிதைகளில் துல்லியமாகயிருக்கின்றன.

   இம்மூன்று தொகுப்பிலும் பிரம்மராஜன், லதா ராமகிருஷ்ணன் மற்றும் கே.சி.செந்தில் குமார் ஆகியோரின் முன்னுரைகள் நவீன கவிதைகள் சார்ந்த முக்கியமான புள்ளிகளையும் மற்றும் பிரதாப ருத்ரனின் கவிதைகள் குறித்த தனித்தன்மைகளையும் நன்கு விளக்கியிருக்கின்றன. மேலும் இவற்றில் பயணம் செய்வதற்கானப் பாதைகளை வாசகனுக்கெனத் திறந்தும் விட்டிருக்கின்றன.

குறிப்புகள் :

1. அதீதப் / மாய எதார்த்தப் புனைவு சார்ந்து, திரு.பிரம்மராஜன் ‘கதைசொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும்’ என்ற தலைப்பில் 2008ல் எழுதிய கட்டுரை - ‘மீட்சி’ பிளாக்கில் வாசிக்கக் கிடைக்கும் - மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு படைப்பு எவ்வாறு அதன் உள்ளார்ந்தத் தன்மையை விட்டு விலகி வெறும் வார்த்தைகளின் அர்த்தமற்ற கூட்டமாக மக்கிப்போகிறது என்பதை அடுக்கடுக்கான உதாரணத்தோடு சொல்லி விளக்கியிருப்பார். அவரே சொல்வது போல - மழை மீயூசியம், முன்னுரையில் – ‘புனை கதையில் இடம் பெறும் அதீதப்புனைவும், கவிதை உலகத்தின் அதீதப் புனைவும் ஒன்றேயல்ல’ இந்த வேறுபாடு மிக முக்கியமானது. சிலர் இதைத் தான் நவீன கவிதையில் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இக்கட்டுரையை வாசிக்க விரும்புகிறேன்.  

2. இத்தொகுப்பிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் சில கவிதைகளும், வரிகளும் என்னளவிலான புரிதலின், வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தேர்வுகளும் விளக்கங்களும் நபருக்கு நபர் வேறுபடலாம், முற்றிலுமாக இணக்கம் கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டால், இன்னும் சில கவிதைகளில் உள்நுழைந்து அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் உலகினை அடையாளம் காணக்கூட முடியலாம்.

.           

    .

மேல் செல்