கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

பிரஞ்ஞை பூர்வ கலைகளின் மதிப்பு நீக்கம் – செல்வசங்கரன் கவிதைகள் குறித்து...

ஞா.தியாகராஜன்

பகிரு

செல்வ சங்கரனின் ஆறாவது தொகுப்பான ‘மத்தியான நதி’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘பறவை பார்த்தல்’ தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது. கவிதையெழுத முனைபவர்களின் ஆரம்பகாலப் பிரயாசைகள் எத்தனங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாமென்றாலும் இரண்டாவது தொகுப்பான ‘கனிவின் சைஸ்’லிருந்து கவிதையின் நெடிய போக்கில் தன் இடத்தை உறுதிப்படுத்த விரும்பும் அவருடைய முயற்சிகள் தொடங்கியதெனலாம். சொற்களின் குறைவான பயன்பாடும் அதன்மூலமான எல்லையற்ற அர்த்தவிரிவும்தான் கவிதையின் பொது அடையாளமாகக் கூறப்படும் சூழலில் அதற்கு நேரெதிரான வகைமாதிரியாகச் செல்வசங்கரன் தனது கவிதைகளை வெளிப்படுத்துகிறார். ஒரு இலக்கியத்தின் போக்கில் அரிதாக எழும்பும் குரலை அவதானிப்பதும் மதிப்பிடுவதும் இன்றியமையாததாகிறது.

செல்வசங்கரனின் கவிதைகளைக் குறிப்பிடும்போது பொதுவாக அதன் சலசலப்புத்தன்மையை முதலில் அவரையறிந்த வாசகனுக்கு நினைவில் எழக்கூடும். கவிதையின் பண்பாகவும் குணாம்சமாகவும் யாராலும் மொழியப்படாத தமிழ்க் கவிதைப்பரப்பில் இதற்கு முன் கண்டிராத இத்தகைய குரல்தான் செல்வசங்கரன் குறித்த முதல் படிமமாக வாசகனிடம் படிந்திருக்கும். கவிஞனை அவனுடைய வரிகளாலேயே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கும் பொதுவான வாசிப்புப் பழக்கத்திலிருந்து செல்வசங்கரனின் இந்தப் போக்கு அத்தகைய வகைமைக்கான நேரெதிர் போக்காக அமைகிறது. நவீன கவிதையின் பண்பே வாசகனின் பங்கேற்பையும் உழைப்பையும் கோருவதாக இருக்கும் பட்சத்தில் செல்வசங்கரனின் இந்த லாவகமான நிகழ்த்துதல்களை மீறி கவிதையின்   வாசகனிடம் ஏதேனும் ஒரு சாராம்சமாகச் சேகரமாகிறதா என்ற கேள்வி அவரை வாசிப்பதிலிருந்தே எழுகிறது.

கண்ணாடிச் சத்தம் தொகுப்பிற்குப் பெரு.விஷ்ணு எழுதியிருக்கும் விமர்சன உரையிலிருந்து சில அவதானிப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.

1. சலித்துப்போன யதார்த்தங்களிலிருந்து விலகலை வேண்டும் அகமானது தனது வினோத தன்மைகள் மூலமாக உலகைக் காண விரும்புகிறது.

2. இந்த வினோதத் தன்மைக்காக அவர் எடுத்துக்கொள்ளும் அபத்தமானது சாதாரணங்களின் மிகைப்படுத்தலாக அமைகிறது.

இந்த இரண்டும் செல்வசங்கரன் தனது எழுத்தில் புனைந்துகாட்ட விரும்பும் அவரின் படைப்புலகத்தைப் புரிந்துகொள்வதற்கான சரியான புள்ளியாகும். பொதுவான ஒழுங்குகளாலும், கட்டுப்பாடுகளாலும், நிபந்தனைகளாலும் சமூக நிறுவனங்களுக்கு உகந்த பாவனைத் தன்மையே வாழ்வாக மாறிவிட்ட சூழலில் அத்தகைய பாவனைகளைப் பல இடங்களில் தனது எள்ளல் மூலமும் பகடி மூலமும் செல்வசங்கரன் எதிர்கொள்கிறார். இக்கவிதைகளை வாசிக்கும்போது பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் ஒவ்வொரு காட்சியையும் பிரமிப்புடன் உணர்த்துவதற்காகவே பெற்றோரிடம் நாடகப் பாங்கில் விஷயங்களை விளக்கிக்கூறும் பாவனைதான் நினைவுக்கு வருகிறது. கவிதையின் எடுத்தல் முறைகளில் நவீன கவிதைகளின் தீவிர பாவனையை முதலில் கலைக்கிறார்.

இந்தக் கலைத்தலின் இலக்கிய நோக்கு அல்லது திட்டமென்பது என்னவாக இருக்கிறதென்ற கேள்வி அவரின் எழுத்து முறையிலிருந்து தொடர்ந்து எழுகிறது. உணர்வுகளையோ அல்லது அரூபத்தன்மைகளையோ ஒரு திடப்பொருளாக மாற்றிக் கவிதைக்குள் புழங்கவிடுவதன் மூலம் தன்னுடைய எடையின்மையை மறைத்துக்கொள்ள அவை முயல்கின்றன. தொடர்ந்து பார்க்க முடியாத தொட்டுணர முடியாதவற்றைத் திடப்பொருட்களின் தன்மையில் வரித்துக்கொண்டு கவிதைகள் தொடர்ந்து தன்னுடனேயே தருக்கித்துச் செல்கின்றன. இது பொதுவான நவீன கவிதை முறைகளுக்கு எதிரான ஒரு கலகச்செயல்பாடாக இருப்பதற்கான பிரஞ்ஞை பூர்வ சட்டகங்களை இம்முயற்சிகளில் காண முடிவதில்லை.  உரையாடல் தொனியில் அவை தனக்குத் தானே தர்க்க நியாயங்களை விளக்கிக்கொண்டு வாசகனுக்கு எப்படி வேண்டுமானாலும் என்னைப் புரிந்துகொள் என்பது போல ஒருவித தோற்ற மயக்கத்துடன் முற்றுப்பெற்று விடுகின்றன.

சொறி

வீட்டுப்பக்கத்தில் தெரு நாய் போட்ட நான்கு குட்டிகள்

யார் வீட்டில் சாப்பாடு கிடைக்குமென அலைந்து கொண்டிருக்கின்றன

நான்கில் ஒன்று சொறிப் பிடித்தது

அது ஓயாமல் என் காலுக்குள்ளே சுற்றி சுற்றி வருகிறதென

கல்லை எடுத்து குறி பார்த்து அதன் மீது ஒன்று விட்டேன்

கீழே விழுந்தது எழுந்திருக்கவேயில்லை

பதற்றத்தில் கை கால் வெடவெடத்துச் செய்வதறியாமல் முதலில்

ஓடி ஒளியத்தான் தோன்றியது

மனசு கேட்காமல் வெளியே வந்து செடியை விலக்கிப் பார்த்தால்

படுத்துக்கொண்டே அதன் சொறியை அது நக்கிக்கொண்டிருந்தது

யாருடைய உதவியும் இல்லாமலேயே

அதனுடைய சொறியை வைத்து அது அதனைப் பண்டுவம்

பார்த்துக்கொண்டது

அதன் சொறி தான் அதனைக் காப்பாற்றியிருக்கிறது

கருணை பொங்குகிற கை கூப்பலை சொறியால் பார்க்க இயலாததால்

இப்பொழுதுள்ள இதே மனநிலையில்

ஒரு நாயின் உடம்பில் ஒரு சொறியாகப் படர வேண்டும் போலிருந்தது

சொறி நாயாகச் சொறியை நக்கிக்கொண்டிருப்பதை விட

ஒரு சொறியாக நக்கினை ஏற்றுக்கொள்வது

அவ்வளவு இம்சையில்லாதது.

கவிதையென்பதை விட ஒரு சிறார் கதை சொல்லல் முறையாகதான் இதனை வாசிக்க முடிகிறது. ஒரு நாயும் அதன் சொறியும் மட்டுமே கவிதையை ஆக்ரமித்துக்கொள்கின்றன. எது கவிதையாக வேண்டும் ஆகக்கூடாதென்பதற்கு யாரும் வரையறை கொடுக்க முடியாதுதான். எனினும் கவிதை என்ற வடிவத்தை ஏற்கும் போது அப்படைப்பு எங்குத் தன்னைக் கவிதையாக ஸ்தாபித்துக்கொள்கிறதென்ற அடிப்படை கேள்வியை அப்படைப்பு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். வெறும் சம்பவம் என்பதற்கு மேலாக ஒரு தெரு நாயின் மீதான கரிசனமாகக் கூடக் கவிதை எழும்பவில்லை.

அங்கு நிகழும் அச்சமும் கூடக் கல்லை எறிந்ததற்கான பரிகாரமே தவிரத் தனது சொறியால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நாயின் வழியாகக் கவிதை கூற வருவதென்ன. ஒரு அருவருப்பின் மீதான பதிவு என்பதைவிட மேலதிக அழுத்தம் கவிதையில் எவ்விதமாகவும் செயல்படவில்லை. அருவருப்புடனான எத்தகைய வினைபுரிதலுமின்றி வேடிக்கை காணும் மனோநிலையில் மட்டுமே சொறிபிடித்த நாய் பதிவாகிறது. வெறுமனே ஒரு சொறியாக மாறலாமென்பதும் கூடப் படைப்பாக்க உத்தியாக வெளிப்படுகிறதேயன்றி அந்த அருவருப்பின் மீதான வேறுபட்ட பார்வைகளுக்கு அவை இடங்கொடுக்கவில்லை. கவிதை என்ற வடிவத்தை எடுத்துக்கொள்கிறதே தவிரக் கவிதை என்பதற்கான பொதுவான அமைதிகளை கவிதையில் உணர முடிவதில்லை. அசமந்தமான பொழுதின் எண்ணத் தெறிப்பு என்பதற்கு மேலாக இதற்கு முக்கியத்துவமும் ஏற்பட இயலாமல் போகிறது.

செல்வசங்கரனின் கவிதைகளெங்கும் சொற்களின் தொடர் இரைச்சல்தான் பெரிதாகக் கேட்கிறது. குறிப்பிட்ட வார்த்தைகளே தெவிட்டி விடுமளவிற்கு கவிதைகளை தொடர்ந்து நிரப்புகின்றன. கிடைக்கின்ற சொற்களே போதும் முடிந்தவரை அதை வைத்தே தனது ஆழமின்மையே மறைத்துவிடலாமென்பதே அவற்றின் சாதுர்யமாக மாறுகிறது. சொற்களுக்கும் அர்த்தப்படுத்தலுக்கும் இடையில் நிரப்பப்பட்டிருக்கும் போலித் தனங்களை அல்லது முரண்களைச் சரியாக அடையாளப்படுத்தும் முயற்சியில் அவற்றின் கூச்சல்தான் மிகுதியாக வெளிப்படுகிறது. ‘லலிதா அக்கா’ என்னும் கவிதையில் ‘சின்ன வயது’ ‘பெரிய வயது’ என்னும் இரண்டு சொற்கள்தான் காலத்தின் இடைவெளியையும் அதன் பரிணாமத்தையும் விளக்குவதற்கு அவருக்குப் போதுமானதாகப் படுகிறது.

ஒரு வீட்டிலிருந்த இரண்டு சகோதரிகளிடமும் காதல் புரிய முயன்றதோ அல்லது புரிந்ததோ கவிதையின் மையப் பொருளாக வாசிப்பிற்கு நகரவில்லை. லலிதா அக்கா குறித்த வேறு சித்திரங்களும் அங்குக் கடத்தப்படவில்லை. சிறுவயதில் இறந்து போன லலிதா அக்காவின் சாவை மீண்டுமொரு முறை நிகழ்த்துவதுடன் கவிதை நிறைவு பெறுகிறது. சில சமத்காரமான புனைவம்சங்களைத் தாண்டி இறப்பின் வலி, சப்தமில்லாமல் காலம் அதை எதிர்கொள்ளும் விதம் போன்ற அம்சங்களைப் படைப்பாளர் ஏனோ கழித்துவிடுகிறார். சில கனதியான உணர்வுகளுக்குப் பதிலாகப் பல இடங்களிலும் வேடிக்கையை அதிகம் நிகழ்கிறது. இந்த வேடிக்கையும் விளையாட்டும்தான் தன்னுடைய தனித்துவமாகப் படைப்பாளரால் நம்பப்படுகிறது போலும். இதுவொரு சம்பவத்தை விவரிப்பதற்கும் அதனால் பாதிப்புறுவதற்கும் இடையிலான படைப்பின் வேறுபாடுகளை மிகவும் மலினப்படுத்திப் புரிந்துகொள்வதற்கான எத்தனங்களாகவே படுகின்றன.

உண்மையில் நெடிய வாக்கியங்களோ அதில் வெளிப்பட முயலும் எள்ளல் தொனியோ வாசகனின் பிரச்னையல்ல. அது எந்த அளவிற்கு ஒரு கவிதையைச் சாத்தியப்படுத்துவதற்கான எல்லைகளைத் தொடுகின்றன என்பதுதான் கேள்வி. ஞானக்கூத்தனின் ‘அவரவர் கைமணல்’ தொகுப்பு வெளியான போது அப்போது கறாரான விமர்சகராக அறியப்பட்ட வெங்கட்சாமிநாதன் அவற்றைத் தரிசனமற்ற கவிதைகளின் வீழ்ச்சியெனக் கூறினார். வெறும் கோணல்பார்வையைத் தவிர எந்தக் கவித்துவமுமில்லையென விமர்சித்தார். ஆனால் ஞானக்கூத்தனின் படைப்புகள் தங்களுக்கான இடத்தைக் காலப்போக்கில் நிரூபித்துக்கொண்டன. (வெங்கட்சாமிநாதன் தனது விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்ட கவிதைகள் அப்படியில்லையெனினும் ஞானக்கூத்தனின் வேறு சில கவிதைகள் மீது இவ்விமர்சனத்தை வைப்பதற்கான இடமுண்டு) செல்வசங்கரன் படைப்பாக்கம் குறித்த சில விமர்சனங்களை முன்வைக்கும் போது இச்சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருவேளை காலப்போக்கில் எனதிந்த விமர்சனமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம் எனினும் செல்வசங்கரனை வாசிப்பதில் எழும் சிக்கல்களைப் பேசிதான் ஆக வேண்டியுள்ளது. பொதுவாக பால்யங்களின் சிதைவுகளை நினைவூட்டும் படைப்புகள் மீது இயல்பாகவே ஒரு சாய்வுநிலை ஏற்படுவதை தமிழ்ச்சூழலில் எத்தகைய நவீன மனதாலும் தவிர்க்க இயலாது. அப்படியான சில ரசனைகளுக்கும் இத்தொகுப்பில் வாய்ப்பிருப்பதால் அவற்றை மட்டுமே கொண்டு முழு தொகுப்பையும் மதிப்பிடுவது சரியானதாக அமையாது.  செல்வசங்கரனின் முக்கியமான சிக்கல் அவை இல்லாதவற்றின் மீதான உருவகித்தலின் வழியாகத் தனது தர்க்கங்களை அடுக்கிச் செல்கின்றன.

மதியத்திற்குள் வண்டியை திருப்புதல், மமதை கூடாதேயென ஒரு மரத்திடம் மற்றொரு மரத்தினைக் காட்டுதல், மேற்சொன்ன ‘லலிதா அக்கா’ கவிதையில் இடம்பெறும் ‘என்னுடைய சிறிய வயது என்னுடைய பெரிய வயதிடம் எப்படியோ சொல்லிவிட்டது’, ‘ஆச்சரிய வெங்காயம்’, ‘கழிவறையின் பாடல்’, முகத்தில் தெரியும் அமைதியை வாசித்துக்கொண்டிருங்களென ஒரு பிணமே கூறுவதாகப் புனைவது எனக் கவிதைகளில் முக்கால்பாகம் இல்லாத ஒன்றினை உருவகித்து அதன்மீது தனது கவிதையை நிகழ்த்துவதாக மட்டுமே உள்ளது.

இந்த உருவகித்தலை நிறுத்திவிட்டால் கவிதைகள் வெறும் பீங்கான் சில்லுகளாக உடைந்துவிடக்கூடும். கவிதையின் எண்ணற்ற சாத்தியங்களை அவை வடிவ ரீதியாகவும், சொல்லல் முறை வழியாகவும் தொட்டுப்பார்க்க முனையவில்லை. (தொடர்ந்து வேறுவேறு முறைகளை முயற்சிக்க வேண்டும் அதுதான் ‘வெற்றிகரமான’ படைப்பாக்க உத்தி என்பதாக இதைக் கூறவில்லை) தான் கண்டறிந்திருக்கும் இந்த விவாத முறையும், ஒருவகையான நிகழ்த்துதல் முறையும் மட்டுமே போதுமானதெனக் கருதுவது பிரதியுடனான வாசகனின் வினையை விரைவில் சலிப்புறச் செய்கிறது.

பிற கவிஞர்களிடமிருந்து பாடுபொருள் அளவில் மட்டும் தனித்துத் தெரிந்தால் போதுமென ஒரு முடிவுக்குச் செல்வசங்கரன் வந்துவிட்டதாகதான் நினைக்கத் தோன்றுகிறது. தற்காலத்தைய எழுத்து முறைகளையும், வகைமைகளையும் அடையாளப்படுத்த முடியாததினாலேயே அவற்றின் அங்கீகாரத்தை மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது மறைமுகமான நிர்பந்தமாகிறது. செல்வசங்கரனுக்கும் அப்படியான ஒரு இடம் உருவாகுவதாகத் தான் நான் சந்தேகிக்கிறேன். முடிவாக ‘சிறிய கவிதை தெய்வம்’ என்ற அவருடைய கவிதையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

‘சிறிய கவிதை தெய்வம்’

வாசிக்கவென ஒரு சிறிய கவிதை போதும்

பத்து வரிகளுக்குள் இருந்துவிட்டால் தெய்வம்

அதன் கை கால்களை அமுக்கிவிடுவேன்

பதினைந்து வரிகளுக்குள் சாகாவரம் பெற்ற ஒரு கவிதையை

இன்றைக்குக் கவிஞர்கள் எழுதிவிடுகிறார்கள் என்பதால்

பதினைந்து வரி சாமி வந்து எனக்கு அருள் பாலிக்க வேண்டும்

அவகாசம் கிடையாது புரிந்து கொள்ளுங்கள்

சிறிய கவிதைகளே எங்கு வசிக்கிறீர்கள் காது கேட்கவில்லையா

கடல் உங்கள் மீது சரிந்து கிடக்கிறதா

பேட்டரி ஸ்கூட்டர் போலச் சத்தமில்லாமல் வந்துகொண்டிருக்கிறீர்களா...’

கவிதைகளுக்குத் தேவையான சொற்களைப் பொருத்துவதும் தேர்ந்தெடுப்பதும் கவிதையாக்கத்தின் முக்கியமான அம்சம். அதுவே கவிஞன் மேற்கொள்ளும் பொருண்மை மீதான அவனது பிடிப்பையும் அனுபவ ஆழத்தையும் வெளிப்படுத்துவதற்கான முதல் பொறியாக இருப்பது. கவிதையின் ஆழத்திற்கேற்ப சொற்கள் சரியாகப் பொருந்தி வரவேண்டும். கவிதைகள் சப்தமில்லாமல் வருவதற்கு ‘பேட்டரி ஸ்கூட்டர்’ தான் கிடைத்ததா.. குறைந்தபட்சம் ‘மின்வாகனம்’, ‘மின்கலம்’ போன்ற சொற்களால் அதனை மாற்றீடு செய்யவாவது கவிதை முயன்றிருக்கலாம். இத்தகைய மேம்போக்கான சொற்பிரயோகம் படைப்பாளரின் கவனமின்மையையும் மெத்தனத்தையுமே காட்டுகிறது.

கவிதையின் அமைதியை முழுவதும் நிராகரித்துவிட்டு அங்கே வெறும் சிறுவர்களின் பிள்ளை விளையாட்டினையே பதிலீடு செய்கின்றன செல்வசங்கரனின் கவிதைகள். இந்தப் பிள்ளை விளையாட்டும் கவிதையின் வரலாற்றை அவதானித்து எழும் மொழி வழியிலான அரசியல் விழிப்பாக இல்லாமல் போகிற போக்கில் நிகழும் விட்டேற்றிதனமாகத் தான் உள்ளது. உருவகித்தல், தர்க்கித்தல், நிகழ்த்துதல் போன்ற சில அம்சங்களைக் கழித்துவிட்டால் இவை கவிதையாக மிஞ்சுவதற்கு என்ன இருக்கிறதென்பது இக்கவிதைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளாகும். மேலும் எவ்வித தீவிர மனஎழுச்சிக்கோ, தொந்தரவுகளுக்கோ இடங்கொடாது பொதுவான தன்னிலைகளின் மீது மோதும் அதிர்வாகவோ கூட இல்லாமல் கவிதையின் தீவிரத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் அதன் எதிர் வடிவமாகவே இம்முயற்சியினைக் கருதுவதற்கான ஒரு இடமும் உருவாகிறது. நவீன கவிதைகளின் மாதிரிகளைக் கொண்டு இன்றைக்கு தன்னையொரு தரமான படைப்பாகக் காட்டிக்கொள்ளும் தொகுப்புகளின் வெளியீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கெதிரான உதிரிகளின் முயற்சியென்பது இத்தகையை பிரஞ்ஞை பூர்வ பிடிமானமற்றதாக இருக்கும் பட்சத்தில் அவையும் விமர்சனத்திற்குரிய ஒன்றேயாகும்.

மேல் செல்